செல்வசங்கரன்

எண் குறிக்காத டிக்கெட், கோச், துலக்கமானதொன்றின் – செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்

 

எண் குறிக்காத அந்த டிக்கெட்டை பாதியாகக் கிழித்து உள்ளே விட்டார்கள்

மேஜிக் ஷோவில் கையிலுள்ள டிக்கெட்டிற்கு
எந்த ச்சேரிலும் அமர்ந்து கொள்ளும் வாய்ப்புகளில்
எந்த ச்சேரில் அமர்வதெனத் தெரியாது
இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டதில்
அந்த ச்சேர் கிடைத்தது
இன்றைய நாளிற்கான ச்சேர் அது தான் போல
என்றதுமே
வேறு ஒரு ச்சேரில் என் குண்டி
தேமே என்று பொத்திக்கொண்டிருந்தது
அந்த ரெண்டு ச்சேர்கள் மட்டும்
டிக்கெட்டில் இன்பில்டாக செய்யப்பட்டிருக்குமோ
அய்யய்யோ வந்து விட்டதா
இனி என் குண்டியை பொத்திக்கொண்டிருக்க
வைக்க முடியாது யாராலும்
அந்த ச்சேர் இந்த ச்சேரென அது இஷ்டத்திற்குத் தாவ
திடீரென்று பாதியிலிருந்து துவங்கி
ஒரு மேஜிக் ஷோ அங்கு ஓடிக்கொண்டிருந்தது
அதுதான் அரங்கத்திற்கு வெளியிலேயே
பாதி கிழித்துவிட்டார்களே
காக்கா பிரியாணிக்கு காக்கா குரல் வராமல்
பின்னென்ன உன்னிகிருஷ்ணன் குரலா வரும்

******

கோச்

சர்வீஸ் லிருந்து கிளம்பும் ஃவெதர்
உள் விளையாட்டரங்கின் தரையில்
எங்கு விழுமென்பதை அறிய
கணித சூத்திரங்களுள் போனால் ஒரு வாய்ப்புள்ளது
அது மிக நீளமான பாதை
எதிராளியோடு கோர்த்து உள்குத்து செய்தால்
ஓரளவு கை கொடுக்கலாம்
ஆட்ட தர்க்கத்திலிருந்து விலகிய பங்கம்
வந்து சேருமென்பதால்
அதை அதிகம் பரிந்துரைப்பது கிடையாது
பிய்ந்து போன ஃவெதர்களை சதா பொறுக்கியபடி
வாய்ப்பு கிடைத்தால்
உடலைக் கோணித்துத் திருகி புரட்டி எம்பி
அக்கோர்ட்டிலே கிடையாய் கிடப்பது
மிகவும் உசிதம்
ரொம்பவே ட்ரெண்டியான இன்னொரு வழியுமுள்ளது
சைடில் குத்திட்டு அமர்ந்தபடி
இடதுபக்கம் நெளித்து அடி
இப்பொழுது தேர்ட் கோர்ட்டுக்கு தூக்கு
அவனது கால்கள் முன்னோக்கியுள்ளதால்
காக் ஐ தலைக்கு மேலே வீசு
உனது ஸ்டெமினா குறைந்து கொண்டு வருவதால்
ஒவ்வொரு பாய்ண்ட்டுக்கும்
எனது சைகையைக் கூர்ந்து கவனி
எனது சங்கேத பாஷைகள் பற்றி
நீண்ட காலங்கள் பேசியுள்ளதால் அது தெரியுமல்லவா
என அக்குளில் கைவிட்டு அரிக்கும் வழி
ஸ்மரணை இல்லாதவர்களுக்காக
மிகவே மெனக்கெட்டு செய்யப்பட்டது அது

******

துலக்கமானதொன்றின்

முதல் முறையா அழப்போகிறாய்
மறைப்பதற்கு இவ்வளவு சிரத்தை கொள்கிறாய்
உனக்கு அழத்தெரிவது
யாருக்கும் தெரியாதென நினைத்தாயா
புழுக்கங்களே இல்லையெனக் கூறிவிடுவாயா
காரணமென்ன மண்ணாங்கட்டி காரணம்
இவ்வளவு லகுவாய் மாற்றுவதற்கு
ஒன்றைக் காட்ட முடியுமா
ஆனந்தக் கூத்தில் நீ அமிழ வேண்டாமா
சுதந்திரத்தின் மகோன்னத நிலைக்குப் பொருள் வேண்டாமா
அதன் புரண்டோடுகையில் மிதப்பது வரை
மிதப்பதென்றால் யாருக்குத் தெரியும்
அறிவுப்பெருக்கால் வந்த இறுமாப்பென்று கூறுகிறாய்
இன்னுமா இது உன்னை சொறிந்து கொடுக்கிறது
சில்லரைத் துக்கடாவில் நின்று கொண்டு
சகிக்கமுடியாதவாறு பல்லைனாலும் காட்டுவாய்
அழ மாட்டாய் அப்படித்தானே