சேதுபதி அருணாசலம்

பெற்றுக் கொடுப்பவர்கள்-

சேதுபதி அருணாசலம்

IMG_2211

வீட்டிலிருந்து அடிலெய்ட் நகர் மத்தியிலிருக்கும் அலுவலகத்துக்குப் போக ரயிலில் அரைமணிநேரப் பயணம். அலுவலக அழுத்தத்துக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு ரயில் பயணத்துக்கு இணையான வேறொன்று இல்லை. புத்தகம் ஏதேனும் படித்துக்கொண்டே போகலாம். சக பயணிகளை கவனித்தபடி பயணிக்கலாம். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தால் தெரிந்த முகங்கள் மீண்டும் மீண்டும் வருவதை கவனிக்கலாம்.

ரயிலுக்குள் ஏறியதுமே கைப்பையிலிருந்து கண்ணாடியை விரித்து க்ரீம் தடவி அழகுபடுத்திக்கொள்ளும் அறுபது வயது பெண்மணி, பயணத்தில் கூட லேப்டாப்பில் படு தீவிரமாக ப்ரொக்ராம் எழுதுபவர் (எட்டிப் பார்த்தபோது டீபியன் லினக்ஸில் C++), ஒரே நாவலையே மூன்று மாதங்களாகியும் படித்து முடிக்காத, ஹெட்ஃபோன் மாட்டிய இளைஞர் – எனத் தெரிந்த முகங்கள் சிலவும், பல புதிய மனிதர்களுமாக அடிலெய்டில் சென்று இறங்குவோம். எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட ஏஸி ரயில் என்பதால் கொஞ்சம் தள்ளியிருப்பவர்கள் பேசிக்கொள்வது கூட தெளிவாகக் கேட்கும். மொபைல் மூலமாகவே ஓர் இளைஞர் நியூஸிலாந்து பயணத்துக்கு பெயர், வயது, முகவரி, க்ரெடிட் கார்ட் எண் உட்பட அத்தனையையும் சத்தமாகச் சொல்லி முன்பதிவு செய்து கொண்டார். பின் சீட்டிலிருந்த டீன் ஏஜ் சிறுமி, “பதினெட்டு வயது ஆவதற்காகத்தான் காத்திருக்கிறேன். அதற்கு அடுத்தநாளே வீட்டை விட்டுக் கிளம்பி உன்னோடு வந்துவிடுவேன். என் அம்மாவைப் போன்ற ஒருத்தியோடு இனியும் இருக்க முடியாது” என்று கிட்டத்தட்ட பயணம் முழுதுமே சத்தமாகப் புலம்பியபடி வந்தாள்.

இப்படி வழக்கமான ஒரு பயணத்தில்தான் அந்த இளம்வயது தம்பதியினரையும் பார்த்தேன். எனக்கு எதிர்வரிசை இருக்கைப். பெண் ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள். அவர்களுக்குள் ஏதோ தகராறு. அடங்கிய குரலில் வார்த்தைகள் தெளிவாக விளங்காத வகையில் சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். திடீரென்று ஒரு சத்தம் – ‘ச்சப்’. அவன் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்திருந்தான். புத்தகம், மொபைல், நியூஸ்பேப்பரில் மூழ்கியிருந்த அத்தனை பேரும் ஒரு கணம் தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. அதை அடக்கியபடியே இருந்தாள். அவசர அவசரமாக கருப்புக்கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டாள். அப்படி ஒரு விஷயம் நடந்ததை மறைக்கும் முயற்சி தெளிவாகத் தெரிந்தது. ‘Domestic Violence’ என்று யாராவது புகார் செய்தால் பல விளக்கங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் இருக்கலாம். அடுத்து வந்த ஸ்டேஷனில் அந்த இளைஞன் கோபமாக இறங்கிப் போனான். அடிலெய்ட் ஸ்டேஷன் வந்ததும் அந்தப் பெண் இறங்குவதற்காக இருக்கையிலிருந்து எழுந்து கதவருகே வந்தாள். அப்போதுதான் கவனித்தேன் – அவள் ஒரு கர்ப்பிணி. ரயிலிலிருந்து விறுவிறுவென்று இறங்கி ஜனத்திரளில் கரைந்து காணாமற் போனாள்.

***

சு.வேணுகோபால் எழுதிய ’வட்டத்திற்குள்ளே’ என்ற ஒரு சிறுகதை. அவருடைய ’களவு போகும் புரவிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. கதையின் மையகதாபாத்திரம் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண். திருமணமாகியிருக்கிறது. ஒயர்கள், நூலிழைகள் எனப் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டே பல அருமையான கைவினைப் பொருட்களை உருவாக்கத் தெரிந்த, படைப்பூக்கம் கொண்ட அபாரமான கலைஞி. திருமணத்துக்குப் பின் அவள் படைப்பூக்கத்தின் ஒரே வடிகால் சாரதா கைவினைஞர்கள் நிலையத்தில் அவளுக்குக் கிடைக்கும் வேலை. சென்னை, பெங்களூரிலிருந்தெல்லாம் அவளுடைய கலைப்படைப்புகளுக்கு ஆர்டர் கிடைக்கிறது. கடை முதலாளியிலிருந்து உடன் பணிபுரிபவர்கள் வரை அனைவரும் பாராட்டும் அந்த வேலைக்கு இன்னும் நூறு ரூபாய் குறைத்துக் கொடுத்தால் கூடப் போகலாம் என்று நினைக்கிறாள் அவள்.

வெறும் நானூறு ரூபாய் அதிக சம்பளத்துக்காக அவளை அந்த வேலையிலிருந்து நிறுத்தி வலுக்கட்டாயமாக அவளுக்குச் சற்றும் விருப்பமில்லாத ஒரு நர்சரிப் பள்ளியில் டீச்சராகச் சேர்த்துவிடுகிறான் அவள் கணவன். முந்தைய வேலையைப் போலில்லாமல் டீச்சர் வேலைக்கு அவள் பிதுங்கி வழியும் கூட்டம் கொண்ட பஸ்ஸில் வேறு தினமும் செல்லவேண்டும்.

கதை முழுக்கவே அந்த ‘வட்டத்துக்குள்’ சிக்கிக்கொண்டுவிட்ட அந்தக் கலைஞி சுரண்டப்படுவதைப் பற்றி அவளுடைய பார்வையிலேயே நகர்கிறது. கதையின் உச்சகட்ட சுரண்டல் அந்தப் பெண்ணுக்கு அவள் கணவன் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்விப்பது. ஒருமுறை அல்ல இரண்டு முறை. இப்போது ஒரு கதைச் சுருக்கமாகச் சொல்லும்போது இது எந்த ஒரு பெண்ணியவாதியும் எழுதிவிடக் கூடிய கதை என்று தோன்றுகிறது. ஆனால் சு.வேணுகோபாலின் எழுத்தில் இது அபாரமான வேறொரு தளத்துக்கு நகர்கிறது. கதை இரண்டாம் முறை கருக்கலைப்பு முடிந்து அதற்காக எடுத்துக்கொண்ட விடுப்பும் முடியும் இரவு தூக்கம் வராமல் அந்தப் பெண் அவதிப்படுவதில் தொடங்குகிறது. கருக்கலைப்பு அந்தப்பெண்ணை எவ்வளவு பலகீனமானவளாக மாற்றிவிட்டது என்பதைக் காட்டுவது சு.வேணுகோபாலின் எழுத்து.

”மணி மூணேகால். பதினொன்றரைக்கு மேல்தான் தூக்கம் வந்தது. முதல் அபார்ஷனின் போது கூட உடல் சடவு இத்தனை இருந்ததில்லை. எல்லோரும் சொல்கிறார்கள் உடல் சடவுக்கு நல்ல தூக்கம் வருமென்று. எனக்கு ஏன் தூக்கம் வருவதில்லை. தூக்கம் விரைவாகக் கவியத் தோதான உடல்சடவு என்று ஒன்று இருக்கிறதா? வயிற்றுக்குள் புருபுருத்துக் கொண்டிருந்த நான்கு மாத சிசு இப்போது இல்லை. சூனிய வயிறு. அவ்வப்போது வயிற்று வலி கவ்விப்பிடிக்கிறது.”

“கண்கள் காந்தின. வயிறெல்லாம் ரணமாக இருப்பது போல் இருந்தது. கரண்டியை விட்டு ரேவதி டாக்டர் அழுத்தி சுரண்டி விட்டாளோ? விடிந்ததும் வேலைக்குப் போவதை நினைத்தால் வண்டியில் முட்டி ஏறுவதுதான் காட்சியாக வருகிறது. மூச்சை தம் கட்டி ஏறுவது போல் வயிற்றை இறுக்கினாள். முரட்டுபலம் எங்கோ நழுவிப் போய்விட்டது போல இருந்தது. பஸ்ஸைத் தவறவிட்டுவிடுவேனோ? கைகள் லேசாக நடுங்கின.”

”நேற்று சாயந்திரம் குடத்தைத் தெருக்குழாயிலிருந்து தூக்கி வந்தவள் வயிறு கவ்விப்பிடிக்க சந்துவராண்டா முன்பு வைத்துவிட்டுக் கூப்பிட்டாள். வயிற்றுவலி குடலோடு முறுக்கியது. ’எதுக்கு இந்த அலட்டு அலட்டற? யாருமே அபார்ஷன் பண்ணதில்லையா? நானும் ஊரு ஒலகத்துல பாத்திருக்கேன். ஒன்ன மாதிரி ஆக்‌ஷன் பண்றவள பாத்ததே இல்ல… ஹூம்..’”

இரண்டாம் முறை கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஒத்துக்கொள்ளவில்லை. ‘கர்ப்பப்பைச் சுவரைச் சுரண்டச் சுரண்ட மெல்லிசாகி ஓட்டை விழுந்துவிடும். அப்புறம் குழந்தை தரிக்காது. தரித்தாலும் அங்ககீனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என்று முதல் டாக்டர் மறுத்துவிட இன்னொரு மருத்துவரிடம் இது முதல் கர்ப்பம் என்று பொய் சொல்லிச் செய்யப்பட்ட கருக்கலைப்பு இது. அதில் ஏற்பட்டிருக்கும் அசதியையும், வலியையும் சற்றும் பொருட்படுத்தாத கணவன். அதைப் பொறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்தமே இல்லாத ஒரு வேலைக்கு அடுத்த நாள் காலை செல்ல வேண்டியிருக்கும் பெண்ணின் உறக்கம் வராத இரவின் எண்ண ஓட்டங்கள் கதையாக விரிகின்றன. குடும்ப வாழ்க்கையில் கணவனால் சுரண்டப்படும் இப்பெண், வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் காலை நேரப் பயணத்தில் பிற பயணிகளால் உடல்ரீதியாகச் சுரண்டப்படுகிறாள்.

பெண்களின் துயரம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே கூட மீள மீளப் பேசப்பட்ட ஒன்று. கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ (க்ருஹபங்கா) என்ற பிரபலமான நாவல் ஒரு மிகச்சிறந்த உதாரணம். மொத்த சூழலுக்கும் எதிராக ஒரு பெண் தன் குடும்பத்தை நிலை நிறுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பேசும் புத்தகம் இது. ‘வட்டத்திற்குள்ளே’ சிறுகதையில் சொல்லப்படும் பெண்கள் பஸ்ஸுக்குள் உரசப்படும் வக்கிரத்தனங்கள் கூட தி.ஜானகிராமன் (‘சிவப்பு ரிக்‌ஷா’ சிறுகதை), அசோகமித்திரன் (‘இன்று’ குறுநாவல்) போன்றோரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் எத்தனை எழுதினாலும் தீராத சுரண்டல்களைப் பெண்கள் இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் கால தேச கலாசார எல்லைகளே இல்லை. இச்சூழலில்தான் சு.வேணுகோபாலின் ‘வட்டத்திற்குள்ளே’ சிறுகதை விடாமல் தொடரும் பெண்கள் மீதான அக வன்முறையை நவீனச்சூழலில் பொருத்திக் காட்டுகிறது.

புனைவெழுத்தின் நுண் விவரங்களும், உண்மைக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தும் உணர்வுச் சித்தரிப்புகளுமே அதை உயரிய இலக்கியமாக்குகின்றன. சு.வேணுகோபாலின் இச்சிறுகதையில் கைவினை கலைப்பொருட்களைச் செய்யும் விவரணைகள் அதை உயர்ந்த இலக்கியமாக்கும் இன்னொரு அம்சம்.

“இருவாச்சியின் நான்கைந்து இலைகளைப் பக்கவாட்டில் வைத்து அடுக்கினால் பிராக்கெட் போல உருவாக்கலாம். அதன்மீது கோவையின் நுனிக்கொடியைப் படரவிட்டால் கூட் அம்புதான். நாயுருவி இலைகளாலே மயிலில் அமர்ந்த பெண் அம்பை ஏந்த நாணோடு வில்லை காதுவரை இழுக்கும் காட்சி இப்போதும் நன்றாக நினைவுக்கு வருகிறது. எதிர்க்கிளையில் சிங்கம் வலதுகால் தூக்கி அமட்டுகிறது. கோவக்கொடியின் பூ, பிஞ்சு, காய், பழங்கள் உறுப்புகளாக மாறியிருக்கின்றன. சாதாரணமாய்ப் பார்த்தால் பச்சைக்கொடி இருவாச்சியில் அப்பியிருப்பதுதான் தெரியும். முதுகுபோர்த்திய இறக்கைகள் இருவாச்சியின் கொழுந்து இலைகளைப் புள்ளிவிட்டு அடுக்கி அடுக்கி உயிர் பெற்றன. பெண்ணின் காலில் தண்டையாக அடிக்கொடி சுற்றியது. ஐந்தைந்து இதழ்களைக் கொண்ட கொடி. இரு பூக்களில் ஒன்றின் இதழின் நாவு காதுவரை நீளக் கண்களாக பரிணமித்தது. தெய்வாம்சம் கொண்ட பாதி மூடிய இமைகள். காதுவரை எட்டிப் பார்க்கும் நீள்வடிவக் கண்கள். இருவாச்சியின் பழுப்பு இலைகளால் எதிர்க்கிளையில் கர்ஜிக்கும் சிங்கம். கிளிமூக்குப் பச்சைக் கைகளின் மஞ்சள் நுனியே நகங்கள். நுணுகி நுணுகிச் செய்த உருவங்கள். டேபிளில் நிறுத்தி பெண் நோக்கும் கோணத்தில் பார்த்தால்தான் இந்தப் பின்னல் தெரியும். கோணம் கொஞ்சம் பிசகினாலும் இருவாச்சி மரத்தின் மேல் கொடிகள் ஜப்பாலையாகப் படர்ந்திருப்பதைத்தான் பார்க்க முடியும்.

நாணிழுக்கும் வலக்கையின் மடக்கு மொழி பின்போக முதுகுப் பள்ளத்தில் துடியிடை வளைய கழுத்தை எட்டும் மார்புகள்.

இருவாச்சியின் பிஞ்சுகள் கர்ஜிக்கும் சிங்கப்பற்கள்.

ஆனால் வில் எப்படி முறிந்தது?”

சிறுகதையில் ‘கதை’ என்ற ஒன்றைக் காட்டுவதிலிருந்து விலகி, அது ஒரு காட்சிச்சித்தரிப்பாக மாறியிருக்கும் நவீன வடிவத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது ‘வட்டத்திற்குள்ளே’. அதே சமயம் சிறுகதையின் முடிவில் அப்பெண்ணின் படைப்பூக்கத்தின் வழியாகவே ஒரு படிமத்தை உருவாக்கி அதிலிருந்து கவிதை போன்ற உயர்தளத்தில் முடிக்கிறார் வேணுகோபால். அழகும், நுணுக்கமும், படைப்பூக்கமும் பொருந்திய தேவி, சூழல், விதி, சமூகம் இவற்றின் கலவையாகத் தன்னை நோக்கிப் பாயும் சிங்கத்தை குறிபார்க்கிறாள். ஆனால் வில் முறிந்திருக்கிறது.

***

ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு பல நூற்றாண்டுகளாகவே ஆஸ்திரேலியத் தீவில் வசித்துவந்த பூர்வ குடியினரைக் குறித்த உறுத்தல் இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் பல விதங்களில் அழித்தொழிக்கப்பட்டார்கள். அவர்களை நவீன உலகின் ‘நாகரிகம்’ அறிந்த மக்களாக மாற்றுவதற்கும் பல முயற்சிகள் நடைபெற்றன. அதன் உச்சம் – ’திருடப்பட்ட தலைமுறையினர்’ (Stolen Generations).

பூர்வ குடியினரின் பெற்றோரிடமிருந்து அவர்கள் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்கள் இதற்காகவே உருவாக்கப்பட்ட ‘சிறப்புக் காப்பகங்களில்’ வளர்த்தப்பட்டார்கள். அப்படிப் பிடுங்கப்பட்ட குழந்தைகள், எங்கே எந்தக் காப்பகத்தில் இருக்கிறார்கள் போன்ற விவரங்கள் அவர்கள் பெற்றோர்களிடமிருந்து மறைக்கப்பட்டன. இந்தக் காப்பகங்களில் அக்குழந்தைகள் ‘நாகரிகப்படுத்தப்பட்டார்கள்’. வளர்ந்து பெரியவர்களானதும் அக்காப்பகங்களிலிருந்து அவர்கள் பொதுச்சமுதாயத்தில் விடப்பட்டார்கள். பொது உலகோடு என்று அறியப்பட்ட சமுதாயத்தோடு எந்த அறிமுகமும் இருக்காத இவர்கள் அதில் பொருந்திப்போகத் தெரியாமல் போதைப்பழக்கத்துக்கு அடிமையானார்கள். இதெல்லாம் நடந்தது – பழங்காலத்தில் அல்ல – இதோ நாற்பது வருடங்களுக்கு முன்பு – 1970கள் வரை கூட குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பெற்றோரிடமிருந்து பிடுங்கிச் செல்லப்பட்டார்கள்.

இந்தக் குழந்தைகள்தான் அந்தத் திருடப்பட்ட தலைமுறையினர். இதைக் குறித்து பல புத்தகங்கள், திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எழுத்தாளர் பில் ப்ரைஸனிடம் பூர்வ குடியினருக்காக வாதிட்ட ‘ஜிம் ப்ரூக்ஸ்’ என்ற வழக்கறிஞர் இதைக் குறித்துச் சொல்வதை இங்கே தருகிறேன். (Down Under என்ற புத்தகத்திலிருந்து.)

’உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?’

‘ஆம், நான்கு.’

‘இப்படியொரு காட்சியை யோசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டு வாசலில் ஒரு அரசாங்க வேன் வந்து நிற்கிறது. ஒரு இன்ஸ்பெக்டர் அதிலிருந்து இறங்கி வந்து உங்களிடம் உங்கள் குழந்தைகளை எடுத்துச் செல்லப் போவதாகச் சொல்கிறார். உங்கள் கைகளிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பிடுங்கி ஒரு வேனுக்குள் திணித்தால் உங்களுக்கு எப்படியிருக்கும் என்று மீண்டும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள். வேனுக்குள் குழந்தைகள் உங்களிடம் வரவேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார்கள். வேனின் பின் ஜன்னலிலிருந்து அவர்கள் உங்களைப் பார்த்து அழ அழ வேன் கிளம்பிச் செல்கிறது. உங்கள் குழந்தைகளை நீங்கள் அதுதான் கடைசி முறையாகப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு எப்படியிருக்கும்? உங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை. எந்த நீதிமன்றமும் உங்கள் பக்கம் நிற்காது. உங்களுக்கு எப்படியிருக்கும்?’

***

தொன்னூறுகளில் தமிழ் நவீன இலக்கியத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இறக்குமதியான ‘மாய யதார்த்தம்’ என்றொரு விஷயம் சிக்கிச் சீரழிந்தது. மரங்கள் பேசின; இலைகள் நெகிழ்ந்தன; வீடுகள் அழுதன; மேசைகள் பாடின. அடியோட்டமாகச் சென்று கொண்டிருக்கும் கதையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு இவை இலக்கியத்தின் ருசியை மாயம் செய்ததுதான் மிச்சம். ஆனாலும் வெகு அரிதாக சில நல்ல மாய யதார்த்தப் படைப்புகளும் இல்லாமல் இல்லை. சு.வேணுகோபாலின் ‘மாயக்கல்’ சிறுகதை அப்படிப்பட்ட நல்ல மாய யதார்த்தப் படைப்புகளில் ஒன்று.

போக்குவரத்தற்ற ‘பகலிலேயே கூட ஆள் நடமாட்டமில்லாத’ வண்டிப்பாதைக் கரையிலிருக்கும் ஒரு பெரும்புளியமரத்தை அறுத்துத் திருடுவதற்காக அடிமரத்தில் ரம்பம் போடும்போது மரத்திலிருந்து முணகல் சத்தம் கேட்கிறது; ரத்தம் கசிகிறது.

‘தடதட தவ்வலில் ரம்பத்தின் பற்கள் மரத்தின் அடிப்பாகப் பெருந்தண்டில் முதல் உராய்வை முழுமையாக நிகழ்த்தவில்லை. மூச்சு முட்டும் ஊமை முனகல் புளியமரத்தில் கிளம்பியது. லேசாக வேர்த்தது. மறுபடி ஒரு இழுப்பு இழுத்துத் தள்ளியதும் வாய் நிறைய துணிப்பந்து திணித்திருப்பவனின் உறுமல். […] எங்கோ நரி ஊளையிடும் ஓசை வந்தது. ஓசை நெருங்கிக்கொண்டே வந்தது. ‘பிச்சையனா பயப்படறது…’ தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டு ரம்பத்தை மறுபடி உராயவிட்டான். ரத்தக்கசிவோடு கெர் கெர் ஓசை கிளம்பியது. ரம்பத்தைத் தனியாக எடுத்தது. பற்களில் மினுமினுத்தது ரத்தம்.’

அந்த மரத்தில்தான் பன்றி மேய்க்கும் மூக்கம்மாவின் மகன் பெத்தனன் தூக்குப் போட்டு நான்கு வருடங்களுக்கு முன் செத்துப் போயிருந்தான்.

திருடர்கள் மூக்கம்மாவை எழுப்பி விசாரிப்பதில் கதை தொடங்குகிறது. அர்த்த ஜாமத்தில் வந்து அவர்கள் எழுப்புகையில் மூக்கம்மா கேட்கும் முதல் கேள்வி:
‘என்ன சாமியோவ் நீங்க? யாரும் செத்திடாங்களா?’

உள்ளூர் சாவுகளுக்கு மூக்கம்மாதான் ஒப்பாரி வைத்துப் பாடுபவள். ’மூக்கம்மாதான் எந்த இழவென்றாலும் மாரடித்துப் பாடுகிறாள். அவளும் போய்விட்டால்… ஒப்பாரியின் மூச்சும் முடிந்துவிடும்.’

திருடர்கள் மூக்கம்மாவிடம் ‘ஒம் மகன் எறந்த பின்னாடி ஒனக்கு ஏதாவது தோற்றம் பட்டுச்சா?’ என்று கேட்டு புளியமரத்திலிருந்து ரத்தம் கசிந்த விஷயத்தையும் சொல்லிச் செல்கிறார்கள்.

மூக்கம்மாவின் பதினைந்து வயது மகன் பெத்தனன் ‘ஸ்டாட்டர் பெட்டியைத்’ திருடிவிட்டதாக ஊருக்குள் சந்தேகப்படுகிறார்கள். போலிஸ் அவனையும், கூடவே மூக்கம்மாவையும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிப்போட்டுச் செல்கிறார்கள். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்கவேண்டி அடித்து உதைக்கப்படுகிறார்கள். ஒருநாள் முழுதும் சாப்பிட எதுவும் கொடுக்காமல் அடுத்தநாள் கொடுக்கிறார்கள்:

‘மூன்று மணிக்கு ரெண்டு பொட்டணத்தைத் தூக்கி எறிந்தார்கள். அழுக்கேறிய போணியில் மஞ்சள் தண்ணீர். வாய் வைத்ததும் உப்பு கரித்தது. யாருடைய மூத்திரமோ?’

தொடரும் போலிஸ் ‘விசாரணையின்’ உச்சகட்டமாக இருவரும் நிர்வாணமாக்கப்படுகிறார்கள்; பெத்தனனை அவன் தாய் மூக்கம்மாவை வன்புணர நிர்பந்திக்கிறார்கள். போலிஸ்காரர்களும் மூக்கம்மாவை வன்புணர்கிறார்கள்.

‘கையெடுத்துக் கும்பிட, தள்ளிவிட்டார்கள். மனதில் பயங்கர பயம் தவிர வேறெதுவும் இல்லை. ’கத்துன கொன்னுடுவோம்’ – ஊசியால் சிசுனத்தில் குத்தினார்கள். ’ஜோலி பண்ணு’ கண்களைத் திரட்டினார்கள். மறுபடி குத்தவிடாமல் மறைத்தான் சிசுனத்தை. கைகளைப் பிடித்ததும் சிசுனத்தில் இறங்கியது ஊசி.

அழுதவண்ணம் மேலே விழுந்தான் பெத்தனன். அவன் குழந்தையாகி ஒட்டுவதுபோல் இருந்தது. கண்களை மூடி மூச்சடக்க இறுகியது முகம். கட்டளை நிறைவேற… பின் ஆடை களைந்து மாறி மாறித் தாவிய போலிஸ் தடியன்கள்…’

பெத்தனன் திருடவில்லை என்பது தெரிந்ததும் அவர்களை வெளியே விடுகிறார்கள். வெளியே வந்த பெத்தனன் அவமானம் தாங்காமல் புளியமரத்தில் தொங்கிவிடுகிறான். ஊருக்கெல்லாம் ஒப்பாரி வைக்கும் மூக்கம்மா வாய்விட்டு ஒப்பாரி வைக்கமுடியாமல் வாய்க்குள்ளேயே முனகும்படி மருகிப் போகிறாள்.

‘நீல குளத்தங்கரை – நாங்க
நின்னழவும் மந்தாரை
நின்னழுது வீடு வந்தா
நீரு தண்ணி யாரு குடுப்பா
தூரத்தே பேஞ்ச மழை
தூத்தலோ என்னிருந்தேன்
வாசல்ல பேஞ்ச மழை
வரிக்கல்லை பேத்ததிப்போ
கண்டாருக்கு நல்ல மரம்
கணுக்கணுவா இந்த மரம்
உள்ளீடு அற்ற மரம்
உள்ளுக்குள்ள வெந்த மரம்’

கதை முழுதும் துண்டுத்துண்டு காட்சிகளாக முன்னும் பின்னும் நகர்கிறது. அப்படியே ஒரு குறும்படம் போல் விரியும் காட்சித் துளிகள். மூக்கம்மாவை திருடர்கள் நள்ளிரவில் எழுப்புவதில் ஆரம்பமாகிறது கதை. பெத்தனனைக் குறித்து அவர்கள் கேட்டதும் அவள் மனதில் வந்துபோவது ’லத்திகள் தொங்கும் கரங்கள்.’ ஒரு பேரவலத்தின் ஒரே ஒரு காட்சித்துளி. ஸ்டேஷன் மூலையில் பதுங்கியிருக்கும் மூக்கம்மாவின் கண் மட்டத்தில் போலிஸ் கையில் தொங்கும் லத்திகள் எத்தனை முறை வந்துபோயிருக்கும்! மரத்தை அறுத்துத் தள்ளும் நள்ளிரவின் மர்மம், மரத்திலிருந்து எழும் முனகல், தலை உயர்த்திப் பார்த்தால் மரத்தில் தொங்கும் பசுமாடுகளின் ‘மாசு’, குமிழாக எரியும் மஞ்சள் வெளிச்சத்தில் ரம்பத்தில் ஒட்டியிருக்கும் ரத்தத்தின் மினுமினுப்பு, மரத்தில் தூக்குமாட்டித் தொங்கும் பெத்தனின் ரத்தம் தரையில் சொட்டுச் சொட்டாக விழுவது எனக் கதை முழுக்க காட்சிச்சட்டகங்கள்.

தினம் காலை பன்றிகளை மேய்த்துச் சென்று அவை மனிதமலத்தைத் தின்று போடும் விட்டையை எருவாக்கி விற்று வாழ்க்கையை ஓட்டும் மூக்கம்மாவின் வாழ்க்கையும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பன்றிகள் கூட காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

“ஒல்லிவால் வீசி ஓடும் மூணாம் ஈத்து கோணக்காது பன்றிக்கு இரண்டு காம்புகள் சோடை. ஜலதாரி கருஞ்சேறு உடல் முழுக்க. இந்த வம்சமே ஈத்துக்கு ஒரு காம்பு சோடையாகி வருகிறது. இறுதியில் மடியற்ற காம்புகள். போன ஈத்தில் யானமூக்கு குட்டி ஈண்டது. ஊரே அதிசயித்துப் பார்த்தது.”

இப்படிப் பன்றி மேய்த்து அவற்றின் விட்டையை எருவாக்கினால் ஒரு மூட்டைக்கு இருபத்தைந்து ரூபாய் கிடைக்கும். அந்தக் காசில் கூட பங்கு கேட்கும், அவளை வன்புணரும் மனிதர்கள். அத்தனையையும் சகித்துக் கொண்டு அவர்கள் வீட்டு இழவுக்கு ஒப்பாரி வைக்கும் மூக்கம்மா. ஆனால் அவளை உடைத்துப் போடுகிறது, திருடர்கள் சொல்லிச் செல்லும் விஷயம் – ‘மகன் பேயாகிவிட்டானா? அவன் தெய்வமாகவில்லையா?’

மகன் குடியிருப்பதாகச் சொல்லப்படும் அந்த மரத்தைப் பார்த்து ‘கட்டி அணைக்க முடியாத அடிமரத்தில் நெஞ்சைச் சாய்த்து கண்கள் கலங்கிவிட்டு’ அதன் கீழே கொஞ்சநேரம் உட்கார்ந்துவிட்டு வருகிறாள் மூக்கம்மா. இரவில் ரத்தம் வந்ததாகச் சொல்லப்படும் அந்த மரத்தடியில் அவளுக்குக் கிடைப்பது அதன் குளுமையும், பூத்துக் குலுங்கும் அதன் அழகும், கீழே உதிர்ந்து கிடக்கும் புளியம்பிஞ்சுகளும்தான்.

அது சரி, பேயானாலும், தெய்வமானாலும், ‘மாயக்கல்’லை நெஞ்சில் சுமக்கும் கூகையானாலும் மூக்கம்மாவுக்கு அது மகன்தானே?

***

ஆஸ்திரேலிய அரசாங்கம் ’திருடப்பட்ட தலைமுறையினர்’ குறித்து 2008-ஆம் வருடம் அதிகாரபூர்வமாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பூர்வ குடியினரிடம் மன்னிப்புக் கேட்டது.

சென்ற வருடம் டிசம்பரில் கான்பெர்ரா பாராளுமன்றத்துக்குச் சென்றிருந்தபோது அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, அரசாங்கம் நிறைவேற்றிய மன்னிப்புக் கடிதத்தைப் படித்தேன். அதன் அருகேயே அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு பூர்வகுடியினரின் பிரதிநிதிகள் எழுதிய கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தோடு சேர்த்து, மன்னிப்பை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக பூர்வகுடிகள் பயன்படுத்திய ஒரு பொருளையும் அவர்கள் அரசாங்கத்துக்குக் கொடுத்திருந்தார்கள்.

அது குழந்தைகளை ஏந்திச் செல்வதற்காக பூர்வகுடியினர் பயன்படுத்திய ‘Coolamon’ என்ற கண்ணாடிப்பேழை. ஆம், குழந்தைகளைத் ‘திருடிச்’ சென்ற ஒரு சமூகத்துக்கு அவர்கள் திருப்பிக் கொடுத்த பரிசு – குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏந்திச் செல்லும் பேழை.

IMG_2214