சோழகக்கொண்டல்

உலர்ந்துருகும் வேனில்

சோழகக்கொண்டல்

இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்

இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை

இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்குகியபடி

இத்திசை
எரிந்துகொண்டே இருக்கிறது
காணலின் கைவெப்பம் தொடும்
துளிர்களையெல்லாம் கருக்கியபடி

இப்பயணம்
நீண்டுக்கொண்டே  இருக்கிறது
நேரமோ பாதமோ நெருங்காதபடி
நெடுந்தொலைவில் உறையும்
ஒரு நினைவின் நதியைத்தேடி

இக்கனவும்
அமிழ்ந்துகொண்டே  இருக்கிறது
ஒவ்வொருகணமும்
ஊழி ஊழியாய்
நீண்டபடி

இன்றிரவும்
முடியத்தான் போகிறது
முதல்மீன் முளைக்கும் இருளின் கரையில்
இந்த முற்றத்தில் படியும்
வெற்றுப் புழுதியோடு.

எதற்காக எழுதுகிறேன் ? – சோழகக்கொண்டல்

சோழகக்கொண்டல்

எதற்காக எழுதுகிறேன் ? – காலத்தைக் கருவுறும் விதைகளை கனவின் உலகங்களிலிருந்து சேகரித்தல்.

காலடி மண்ணில் கவனிக்கபடாமல் கிடக்கும் மகரந்தச் செறிவை, மண்துகளின் நுண்ணிடைவெளியில் தன் உடலால் அளந்து உமிழால் செரித்து உலகுக்குக் காட்டும் மண்புழுவைப் போலவே நான் எழுதுவதென்பதும். பூமிப்பரப்புக்கு மேலே கொஞ்சம் புடைத்துத் தெரியும் அந்தப் புழுவின் எருக்குமிழ் போல, உணர்வின், மொழியின் தரைத்தளத்திலிருந்து துருத்தித் தெரியும் குரல்.

அட்ச தீர்க்க ரேகைகளோடு வரைந்தளிக்கபட்ட வாழ்வும் அதன்மீது நாமே வலிந்து சுமந்துகொண்ட இலக்குகளுக்கும் பின்னே அலைகையில், தனக்கேயான உலகத்தை மனம் ஒரு கூட்டுப்புழுவென பின்னிக்கொள்கிறது. பணமாகும் பட்டுப்புழு எப்படி ஒருபோதும் தன் கூட்டை உடைப்பதே இல்லையோ அப்படியே சில்லறை வெற்றிகளுக்குப் பின்னால் அலையும் மனங்களுக்கும் சிறகு முளைப்பதேயில்லை.

திசைகளைத் திமிறிச்செல்லும் சிறகுள்ள மனங்கள் மட்டும், அழகும் வலியும் நிரம்பி வழியும் புதிய உலகங்களைக் கண்டுகொள்கின்றன. அந்தக் கனவு உலகங்கள், எப்போதுமே நிச்சயிக்கப்பட்ட மாறிலிகளால் இயங்கும் புழுவின் கூடுபோல இருப்பதில்லை. இந்தத் தரிசனம் தரும் திடுக்கிடல் கிளர்த்திவிடும் நிலைக்கொள்ளாமையையே எழுதி எழுதிப் பார்த்து மொழியில் தன் உலகத்தை வரையறை செய்யமுயல்கிறது மனம். உலகம் பிதுங்கி வழியும் மனித நெரிசலிலும் இந்த உணர்வின் உலகங்கள் மட்டும் எண்ணற்ற பரிமாணங்களில் பிரிந்தே கிடக்கையில், புனைவின்மொழி எனும் ஒற்றைச் சாத்தியமே இவற்றை ஒன்று கோர்க்க எஞ்சியிருக்கிறது.

நுண்மை, பிரம்மாண்டம் எனும் துருவமுடிவிலிகளுக்கு இடையில் நிகழும் முடிவற்ற தாவல்களே என் மனவெளி. அதீத்தால் மட்டுமேயான அந்த பெருவெளிக்குள் நிகழும் பயணங்களின் குறிப்புகளையே கவிதைகளாக எழுதுகிறேன். அவை நான் கண்டடைந்த கனவு உலகங்கள் பற்றிய அனுபவக் குறிப்புகள் மட்டுமல்ல. யாரும் எப்போது விரும்பினாலும் அங்கே திரும்பிச்செல்வதர்க்கான வரைபடமும் கடவுச்சொற்களும் அடங்கிய ரகசியமும் கூட. அந்தக் கனவுகள் சூல் கொள்ளும் காலத்தையும் உணர்வையும் கருவில் கொண்ட விதைகளே நான் எழுதிச்சேர்ப்பவை. நித்தியமும் அகாலத்தில் உறைந்திருக்கும் அந்த உலகங்களை அடையும் ஆயிரம் வழிகளையும் சொல்லிவிடவே முயல்கிறேன். அதை உணர்ந்து நெருங்கும் வாசிப்பு, வாசிப்பவர்க்கு ஒற்றைச் சாளரத்தையேனும் திறக்குமென்பதே என் நம்பிக்கை. அப்படியோர் சிறகு என் அந்தகாரத்தின் தனிமைக்குள் ஒலிக்குமென்றே காத்திருக்கிறேன்.

மேலும், தனிமையைப் பற்றியே நான் அதிகம் எழுதுவதாக சொல்லப்படுவதை அறிகிறேன். தனிமை மட்டுமல்ல இரவும் என் எழுத்தில் எப்போதுமிருக்கும் பாத்திரம்தான். ஏனெனில், இரவும் தனிமையும்போல நான் அணுகியறிந்தவை ஏதுமில்லை. பகலென்பதும் வாழ்வென்பதும் எனக்கென்றும் தெளிவற்ற கனவுகளே. தனிமைக்குள் உறையும் இரவென்பதும் கனவென்பதுமே எனது நித்திய சஞ்சாரம். அந்தக் கருவறையின் வாசனை என் மொழியில், குரலில், ஒலிப்பதை தவிர்ப்பது கடினம். மேலும் இந்தத் தனிமையின் நிறத்தை, மணத்தைப் பாடும் ஆயிரம் பாடல்களே என்னில் கிடந்து அலைக்கழிக்கும் விசைகள். அவற்றைப் பாடித்தீர்ப்பதொன்றே இந்தப் பறக்கத்துடிக்கும் புழுவிற்கு இறக்கை முளைத்து பட்டாம்பூச்சியாகும் வழி. அதுவே என்னை எழுதவும் செய்கிறது.

oOo

(கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இருக்கும் கோவிந்தபுத்தூர் சொந்தஊர். இளங்கலை முசிறியிலும் முதுகலை திருச்சி பாரதிதாசன் பல்கலையிலும். அதன்பிறகு சில ஆண்டுகள் இந்திய அறிவியல் கழகத்தில் பணி, தற்போது ஃபின்லான்ட் தாம்பரே தொழில்நுட்ப பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு. சொல்வனம், பதாகை, திண்ணை, இன்மை மற்றும் சில இணைய இதழ்களில் கவிதைகள் வெளியாகி வருகின்றன. புனைவு மற்றும் அபுனைவு எழுத்தில் தீவிர வாசிப்பு அறிவியலுக்கு நிகரான இணை வாழ்க்கையை எனக்கு அளிக்கிறது, என்று கூறும் சோழகக்கொண்டல் காந்திய சிந்தனை, ஆன்மீக, அரசியல் மற்றும் இயற்கை தத்துவங்களில் ஈடுபாடும் தொடர்ந்த பயிற்சியும் கொண்டவர். தற்போது, மக்களாட்சி எனும் தத்துவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்).

ஞானத்தெருநாய் (கவிதை)

சோழகக்கொண்டல்

 

வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்

திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்

கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
காவல்தெய்வமாகிவிடும்
தனிப்பெருங்கருணை இந்த
அருட்பெருஞ்சோதி

பால்குடி மறக்கும்முன்பே
பந்தம் அறுபட்ட பிக்கு
ஏந்தி அலைவதெல்லாம்
எச்சில் பொங்கி வழியும் ஒரு
யாக குண்டம் மட்டுமே

அதனுள் அவியிடும்
அருகதையில்லாதவர்
இல்லங்களுக்கு முன்னாலும்
வந்து நிற்பான்
இரக்கத்தின் கடைசி பருக்கையை
எதிர்பார்த்து

விரட்டும் கைகளையும்
விருந்திடும் கைகளையும்
விண்ணே அறியும்படி பார்க்கும் முகத்தில்
என்றுமே தரிசனமாவது ஒரு
நெடுந்தவத்தின் நிச்சலனம் மட்டுமே.

ஓம் ஓம் ஓம்.

தனிமையின் தேநீர் விருந்து

சோழகக்கொண்டல்

பின்னிரவிலும் அணைக்கப்படாமல்
விளக்கெரியும் ஜன்னல்களுக்குப் பின்னே
விழித்திருக்கிறது தனிமை

எட்டிவிடமுடியா ஆழம்கொண்ட
அதன் தேநீர்கோப்பையை
பகிர்ந்து பகிர்ந்து பருகியபடியே
தனிமையை தக்கவைக்கின்றன
முகிழா காதலும்
முயலா காமமும்
முந்தையநாள் சோறும்
மூப்பும் பிணியும்

சாக்காடு படிந்திருப்பதோ
சர்க்கரையோடு அடியில்
இனிப்புக்கு ஏங்கி
எத்தனை பருகினாலும்
இறங்குவதாய் இல்லை
தேநீர்மட்டம்

இளமை மிச்சமிருக்கும் ஜன்னல்களுக்குப் பின்னே
மதுப்புட்டிகள்
இன்னும் சில ஜன்னல்களுக்குப் பின்னே
மருந்துப் புட்டிகள்

திறந்துதான் இருக்கும்
ஜன்னல்களைவிட்டு
வெளியே நிற்கிறது காற்று
உள்ளேயே உறைந்துவிட்டது காலம்
இவை ஒன்றையொன்று
தொடவும் கரையவும் இயலாதபடிக்கு
திரையொன்றை இட்டுவிட்டு
பொய்ப்பாலம் கட்டுகிறது
இமைக்காமல் எரியும் விளக்கு

அந்த அணையாவிளக்குகள்
எரிக்கும் அறைகளுக்குள்ளே
உறக்கம் நுழைய முடியாதபோது
எஞ்சியிருக்கப்போவது
வெக்கையும் ஈரமும் சேர்க்கும்
பெருமூச்சும் கண்ணீரும் மட்டுமே.

ஒளிப்பட உதவி – Yezi Tea

நத்தை வீடு

சோழகக்கொண்டல்

எந்த இரவிலும் தவறவிடாமல்
எப்படியும் திரும்பிவிட வேண்டும்
என்று நினைக்கும் வீடு
எல்லோருக்கும் ஒன்று உண்டு

இரவில்தான் இருப்பை முகிழ்க்கும் என்றாலும்
இடமோ காலமோ லட்சியமில்லை
இந்த வீட்டிற்கு

யாருடைய பயணத்திலும்
முதலில் மடித்து வைக்கப்படும் முகவரியும்
திட்டமிடாத நிச்சயத்துடன்
உடனழைத்துச் செல்லப்படும்
சகபயணியும் இதே வீடுதான்

களைப்பின் மீதும்
கனவுகளின் முன்னேயும்
கூடிக்கலைந்தும்
குளிருக்குள் சுருண்டும்
கணக்கற்ற வழிகளில் தன்னையே
கட்டியமைத்துக் கொள்ளும்
இப்படியான ஒரு வீடுதான்
எல்லோருக்குமான கனவு

தானே மூடிக்கொள்ளும்
இமைகளுக்குப்பின்னே தாழ்திறக்கும்
களைப்பின் பசியை
கனவுகளின் ருசியால் நிறைக்கும்
நித்திரையின் நத்தை வீடு

பசியும் பிசாசுகளும்
வாடகைபாக்கியும் பள்ளிக்கட்டணங்களும்
பணிமுடிப்பு அவகாசங்களும்
பிரிவும் காமமும்
சதா எரித்துக்கொண்டே இருக்கும்
இதை நெருங்குவதென்றால்
யாரேனும் வந்து இந்த வீட்டின்மீது
அன்பின் நிழலை விரித்து
இருப்பின் குளிரை நிறைத்து
அணைப்பின் தகிப்பை மூட்டவேண்டும்

பிறப்புக்கும் முன்பிருந்தே
பிரியாமல் சுமந்தலையும்
இந்த வீட்டாலும் கைவிடப்படுபவர்களின்
அறையின் விளக்குகள் அணைக்கப்படுவதில்லை

காலத்தின் கைவிரல்வந்து
உடலைத்தொடும் ஒருநாளில்
விருட்டென்று சுருட்டிக்கொண்டு
அந்த வீட்டுக்குள் பதுங்கிக்கொள்வோம்
என்றைக்குமாக.

000

ஒளிப்பட உதவி – www.saumag.edu