ஜுனைத் ஹஸனீ

சூடு

ஜுனைத் ஹஸனீ

இது எத்தனையாவது முறையென்று
தெரியவில்லை
கதவைத் திறந்த நாழியில்
வாயிலோரம் அண்டிக்கிடந்த
சாம்பல் நிறப் பூனையை
காலால் உதைத்தெறிந்தான்
பக்கத்துவீட்டுக்காரன்
பின்னரும் ஒரு சிறு கல் கொண்டு
சில துர் வார்த்தைப் பிரயோகத்துடன்
அதன் திசையில் ஓங்கியடிக்க
காற்றில் கலந்து மறைந்த அப்பூனை
சில நிமிடங்களுக்கப்பால்
அதே கதவருகாமையில்
தஞ்சமடைந்துகொண்டது
அறிவில்லைதான்
மீண்டும் மீண்டும் வந்தமர்ந்துகொள்ளும்
அப்பூனைக்கும்
மீண்டும் மீண்டும்
அப்பக்கத்து வீட்டுக்காரனை
புன்னகைத்தபடிக் கடக்கும் எனக்கும்.

மழலையுடனான பயணம், மலை நெருப்பு – ஜுனைத் ஹஸனீ கவிதைகள்

ஜுனைத் ஹஸனீ

மழலையுடனான பயணம்

ஒரு முழு வாழ்வின்
ஜென்ம பிரயாசைகளை
மீட்டெடுத்துத் தருவது
பேருந்தின் முன்னால் அமர்ந்திருக்கும்
குழுந்தையின் பிரதியுபகாரமெனவும் கொள்ளலாம்.
அப்படித்தான் அக்குழந்தை என்னை வழிநடத்துகிறது
உருண்டு திரண்ட விழியில்
கழிந்து போகும் நிமிடங்களின் வனப்புகளை
பச்சைப் பசேலென்ற சமவெளியாய்
ஜன்னலுக்கருகாமையில் இறைத்து நிரப்புகிறது.
எத்துணை அரிய வெளிக்காட்சியனைத்தும்
காற்றில் படபடத்துப் போகும்
மழலையின் மயிர்க் கற்றைகளில்
முட்டி மோதி தாழ்ந்து வீழும் அத்தருணம்
ஒரு வரலாற்றுப் பேழையின்
பக்கங்களை ஒத்தது.
ஒரு குழந்தையாகவே அக்குழந்தையை
நான் பாவித்துக்கொண்டிருக்கையில்
அது என்னை ஒரு குழந்தையாகவோ
அல்லது மிருகக்காட்சி சாலையின்
கை கால் முளைத்த ஒரு ஜந்துவாகவோ
உருவகிக்க எத்தனித்து இருக்கலாம்.
இன்னுமின்னும் தன் சிறு கரம் நீட்டி
என்னை அது ஏதோ உணர்த்த முயலும் வேளை
அரைகுறை புரிதல்களிலேயே
என் இருப்பிடம் நோக்கி
என்னை
எறிந்துவிட்டுச் செல்கிறது
வாழ்க்கை.

oOo

மலை நெருப்பு

மொழிகளற்ற நெருப்பின் உரையாடல்கள்
காரணங்கள் அற்றுப் போன
சில நிராசைகளின் பொழுதுகளில்
நிகழ்த்தப்படுகின்றன.
தலைக்கருகாய் கொம்புகள் நீண்டிருக்கும்
ஒரு ராட்சதனைப் போல
அதனை நீங்கள் உருவகப்படுத்துகிறீர்கள்.
நீண்டு தொங்கும் நாவுகள் வழியே
நெருப்பள்ளிக் கக்கும் ஒரு ஆங்கிலப் பட ஜந்துவாய்
அதனை உலகிற்கு உவமைப்படுத்த முயல்கின்றீர்கள்
நடை பயின்ற ஒரு குழந்தையாய்
உங்களுக்கு முன்னால் அது
விழுந்து எழுந்து கொண்டிருந்தது,
வார்த்தைகளற்ற தன் மழலை மொழியில்
எதையோ உணர்த்த உங்களைத் தேடியலைந்துகொண்டிருந்தது.
பச்சை மாமிசங்கள் புசித்த
மனித விலங்குளை மெல்ல அது
மனிதனாய் மாற்றிவிட்டிருந்தது.
இருண்ட கோவில்களின் கருவறைகளை
தன் ஜோதியால் பிரகாசிக்கச் செய்தது
உங்களில்லச் சமையலறைகளை
அது அர்த்தமாக்கியது
உங்கள் பதார்த்தங்களில்
ருசி சேர்த்தது.
கொடுங் குளிருடைத்த பனி காலங்களை
அது இதமாக்கியது.
இறுகிய உலோகங்களை
உங்கள் ஆபரணங்களாக்கியது
உங்கள் சிகரெட்டை
கொளுத்தியது.
உயிரற்ற ஜடங்களை
அஸ்தியாக்கியது
இப்படியான உங்களின் இன்னொன்றாய்
கலந்து ஒன்றிய ஒன்றை
தன் ஆளுமைகளுக்குட்பட்ட வனாந்திரமொன்றில்
ஆடியோடித் திரிந்த வேளை
நெருப்பின் மிடரு வேண்டிய மனிதர்களுக்காக
தன் தாகம் தணித்ததாய்
கடும் பழி கொண்டு அணைந்து போனது
அந்த மலை நெருப்பு.