தருணாதித்தன்

மாயா

தருணாதித்தன்

 “சார், கார்லுக்கு நம்ம பிலிப்பைன்ஸ் அலுவலகத்திலிருந்து கோபி லுவாக்  என்ற காபி வர வழைக்க வேண்டும் “ என்றான் ரகுராவ்.

“என்னது? நம் ஊரில் கிடைக்காத காபியா? உள்ளூர் காபி பிடிக்காது என்றால் ஸ்டார்பக்ஸ் காபி வர வழைக்கலாம்,“  என்றேன்.

“சார் அவர் அந்தக் காபிதான் சாப்பிடுவாராம் . அது என்ன சிறப்பு தெரியுமா, புனுகுப் பூனை உண்ட காபிப் பழங்கள் செரித்து , கழிவில் வெளியே வரும் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுவது. ஒரு கிலோ காபிக் கொட்டை ஆயிரம் டாலருக்கு மேல் விலை“

நான் முகம் சுளித்தேன்.

“தலை எழுத்து, கழிவுக் காபி, அந்தக் கழிவை நாம் வெளி நாட்டிலிருந்து வரவழைக்க வேண்டும் “

நாங்கள் கார்ல் ஷ்மிட் என்கிற எங்களுடைய பன்னாட்டு நிறுவனத்தின் உலக சி இ ஓ வின் வருகைக்குத் தயார் செய்து கொண்டிருந்தோம். அவர் சுமார் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு வருகை புரிவார். நம் பிரதமர் நாகாலாந்து ,அந்தமான் என்று விஜயம் செய்து அங்கே பழங்குடியினருடன் நடனம் ஆடி படம் எடுத்துக் கொள்வதைப் போல. நான் எங்கள் கம்பெனியின் இந்தியத் தலைவராக ஆன பிறகு  கார்ல் முதல் வருகை. ஒரு தவறும் இல்லாமல் கவனித்துக் கொள்ள  வேண்டும்.  சென்ற முறை கார்ல் வந்தபோது நடந்த சிறு சம்பவத்தினால் பெரிய பின் விளைவுகள் ஆயின. அவர் தங்கிய  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிறைய மரம் செடிகள் இருந்தன. இரவு ஜன்னலைத் திறந்து வைத்ததில் அவருடைய படுக்கையில் ஏதோ ஒரு பூச்சி வந்து அவரை பயமுறுத்தி விட்டது. எனக்கு முன்பு இந்தியத் தலைவராக இருந்தவர் திடீரென்று இங்கிருந்து ஆப்ரிக்காவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம் என்று பேசப்பட்டது.

எல்லா ஏற்பாடுகளையும் ரகுதான் கவனித்துக் கொண்டான். ரகுதான் சரியான ஆள்.

என்னை, “சார் இன்றைக்கு தொண்டை சற்று சரி இல்லை போல இருக்கிறதே, எதற்கும் வென்னீரே குடியுங்கள், நாளை டெல்லியில் உங்கள் பேச்சு இருக்கிறது,“  என்று கவனித்துக் கொள்ளுவான்

“சார், அடுத்த மாதம் உங்களுடைய மனைவி பிறந்த நாள், காலண்டரில் மீட்டிங் எதுவும் இல்லாமல் வைத்திருக்கிறேன், எம் ஜி ரோடில் புதிய நகைக் கடை திறந்திருக்கிறார்கள். வைர நகைகள் எல்லாம் பாம்பே டிசைன்,“ என்று நினைவுபடுத்துவான்.

என்னை மட்டும் மட்டும் இல்லை, எங்கள் கம்பெனி டைரக்டர்கள், விருந்தாளிகள், எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து மத்திய ஆடிட் குழு என்று முக்கியமான யார்  வந்தாலும், அவர்களை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவான்.

நான் இதுவரை கார்லை இரண்டு முறைதான்  நேரில் பார்த்துப் பேசி இருக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரம் மட்டுமே. கார்ல் ஆறு அடி உயர ஜெர்மன். முகத்தில் முதலில் பெரிய மூக்குதான் தெரியும்.  எப்போதும் தீவிரமாக நேற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசிப்பவர், ஏதாவது எங்களிடம் பேசும்போது கண்ணாடி மூக்குக்கு பாதியில் வந்து விடும். அவரைத் திருப்திப்படுத்துவது மிகக் கடினம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஜெர்மனியில் என்னுடைய நண்பர்களிடமிருந்து கார்லை எப்படிக் கையாள்வது என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். முக்கியமாக அவர் கேள்விகள் கேட்கும்போது. நமக்கு பதில் தெரிந்திருந்தாலும், வரிசையாக சரியான பதில் அளிக்கக் கூடாது. அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு இன்னும் கோபம் கொள்ளுவார். அவர் தோண்டித் துருவ ஆரம்பித்தால், முன்றாவது கேள்விக்கு மேல், அவருடைய மூக்கு சிவப்பதற்குள் பணிவாக தெரியவில்லை என்று சொல்வது நலம். கார்ல் மகிழ்ச்சி அடைந்து  நீண்ட விளக்கம் கொடுப்பார். கையில் ஒரு சின்ன நோட்டுப் புத்தகம் வைத்துக் கொண்டு குறிப்பு எழுதிக் கொண்டால் இன்னும் நலம்.

ரகு இருபத்து ஐந்து வயதானவன். மில்லனியல் எனப்படும் தலைமுறையைச் சேர்ந்தவன். தலையில் குடுமி மாதிரி கட்டிய போனிடெயில், ஒரு காதில் கடுக்கன், இந்தியச் சராசரிக்குச் சற்று அதிக உயரம். எப்போதும் கையில் மொபல், வாட்சப், இன்ஸ்டகிராம் என்று பார்ப்பதற்கு அடுத்த தலைமுறையாக இருந்தாலும், பழகுவதில் மிக அருமையானவன்.

அவன் சேர்ந்த புதிதில் நான் சொன்னேன், “ரகு உனக்கு வரப் போகும் மனைவி கொடுத்து வைத்தவள். இந்த மாதிரி பரிவுடன் கவனிக்கும் கணவன் எங்கே கிடைப்பான்? யார் அந்த அதிர்ஷ்டசாலியோ”

“ஸார், மயாதான் அந்தப் பெண், அவளை அடைவதற்கு நான்தான் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வேண்டும் “

“ஓ, ஒரு முறை அவளைச் சந்திக்க வேண்டும்,“ என்றேன்

சென்ற ஆண்டு புத்தாண்டு பார்ட்டிக்கு எங்கள் வீட்டுக்கு அவளை அழைத்து வந்திருந்தான். மிக நல்ல பெண்ணாக இருந்தாள். இரண்டு பேரும் இழைந்து, சிரித்து, ரகு கிடார் வாசிக்க அவள் சேர்ந்து பாட்டுப் பாடி எல்லோரையும் மகிழ்வித்து அந்தப் பார்ட்டியே கலகலப்பாக இருந்தது.

அவளிடன் சொன்னேன், “மாயா, ரகு மாதிரி ஒருவன் கிடைப்பது அபூர்வம். மிகவும் பரிவாக உன்னை வாழ் நாள் முழுவதும் கவனித்துக் கொள்ளும் நல்ல கணவனாக இருப்பான், வாழ்த்துகள்”

அவளும் பெரிய புன்னகையுடன் அவன்மேல் சாய்ந்து, “ஆமாம் சார், என் அப்பாகூட இப்படிக் கவனித்துக் கொண்டதில்லை,” என்றாள்

“ரகு,மாயா உங்கள் இருவரையும் பார்த்தால் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது திருமணம் ?’

“திருமணம் என்ன சார், அது உலகத்துக்காக, நாங்கள் மனதால் ஒன்றாகி விட்டோம். சென்ற மாதம் மாயா என்னுடன் வந்து விட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டோம்,“ என்றான்.

நான் அதை எதிர்பார்க்கவில்லை, இருந்தாலும் முகக்குறிப்பு மாறாமல் இருவரையும், “ ஓ அப்படியா, என்னுடைய வாழ்த்துகள்,“ என்றேன். அன்றிரவு நானும் என் மனைவியும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். என் மகளும் படித்து முடித்து வெளிநாட்டில் வேலையில் இருக்கிறாள்.

கார்ல் வருகைக்கு முன்பே, ரகு அவருடைய செக்ரெடரி மற்றும் உதவியாளனிடம் பேசி நிறைய தெரிந்து கொண்டு விட்டான். அவருக்கு விமான நிலையத்திலிருந்து என்ன கார், தங்கும் இடம், அறை, அறையிலிருந்து பார்த்தால் என்ன காட்சி  ( இந்த முறை மரம் செடி எல்லாம் பூச்சிகள் வராதபடி சற்று தூரத்தில்), தலையணை எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும், அறையில் குளிர்பதனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து ஒரு நீண்ட பட்டியலே தயாரித்து விட்டான். தவிர சென்ற முறை முன் இந்தியா வந்தபோது என்ன எல்லாம் குளறுபடி ஆயிற்று என்று  தெரிந்து கொள்ள அவருடைய உதவியாளனுடன் ஒரு வீடியோ கால் ஏற்பாடு செய்தான். “வீடியோ இருந்தால்தான் நல்லது, பேசுவதற்கும் மேலே முகத்தை பார்த்து நிறைய அறிந்து கொள்ளலாம்,“  என்றான்.

அவருடைய உதவியாளன், “அவர் பெர்ரியர் என்ற பச்சை பாட்டிலில் வரும் தண்ணீர்தான்  குடிப்பார்,” என்று ஆரம்பித்து வரிசையாகச் சொன்னான். அப்படித்தான் கோபி லுவாக் எங்கிற கழிவுக் காபி வரவழைத்தோம். இவை எல்லாம் தவிர மிக முக்கியமான  ஒன்று சொன்னான். அவர் சாப்பாட்டில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  அவருக்கு புதிதாக, “நட் அலர்ஜி” வந்திருக்கிறதாம். அதாவது நிலக் கடலை, பாதாம் என்று எந்தக் கொட்டையும் ஆகாது. சிறு அளவு உண்டால்கூட அவருக்கு மூச்சுத் திணறி மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு மோசமாக ஆகி விடுமாம்.  ரகு அவர் எந்த டாய்லட் பேப்பர் உபயோகிப்பார் என்று கேட்டான். நான் இது என்ன கேள்வி என்று பார்த்தேன்.

பிறகு  என்னிடம், “இல்லை சார் நாம் அலுவலகத்தில் கான்ஃபரன்ஸ் ஹால் அருகில் இருக்கும் டாய்லட்களில் அவர் வழக்கமாக  உபயோகிக்கும் டாய்லட் பேப்பர் வாங்கி வைக்க வேண்டும்,“ என்றான்.

நாங்கள் சில வாரங்களுக்கு முன்புதான் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்திருந்தோம். இங்கே நிறைய இடம் இருந்தாலும் மரம் செடிகள் எதுவும் இல்லை.  கார்லுக்கு இயற்கையின் பசுமை மிகவும் பிடிக்கும். ரகு அவர் வருவதற்குள் மரம் செடிகள் வேண்டும் என்றான்.

“செடிகள் சரி, கொண்டு வந்து தொட்டிகளில் வைக்கலாம், மரத்துக்கு என்ன செய்ய முடியும்>” என்றேன்.

“சார், இங்கே லால்பாக் அருகில் ஒரு நர்ஸரி இருக்கிறது. பிரதமர் வருகைக்கு அவர்கள் வளர்ந்த மரங்களை இடம் பெயர்த்துக் கொண்டு வந்து  நட்டார்கள் என்று செய்தி வந்தது, அவர்களிடம் பேசி விட்டேன். சற்று செலவு ஆகும், நீங்கள் ஒப்புதல் கொடுத்தால் செய்து விடலாம்,” என்றான். செய்தும் காட்டினான். இரண்டு நாட்களில் எங்கள் வளாகமே மரங்களுடன் மிக அழகாகி விட்டது.

மறு நாள் காலை அவர் சார்டட் விமானத்தில் வந்து இறங்குவார்.  நாங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பட்டியலை ஒருமுறை கடைசியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லாம் தயாராக இருப்பது போல இருந்தது. நான் ரகுவுக்கு என்னுடைய நன்றியைப் பல முறை தெரிவித்தேன்.

கார்ல் காலை அலுவலகத்துக்கு வரும்போது மகிழ்ச்சியாக இருந்தார். ரகு காலை உணவின்போது ஜெர்மன் பேக்கரியிலிருந்து  அவர் வழக்கமாக சாப்பிடும் செங்கல் மாதிரியான ரொட்டியும், சீஸும், கழிவுக் காபியும் ஏற்பாடு செய்திருந்தான். அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு நன்றி சொன்னார். நாள் முழுவதும் எல்லா  நிகழ்ச்சிகளும் கிரமமாக நடந்தன. எல்லோரும் சொல்லிக் கொடுத்தபடி மூன்றாவது கேள்விக்குமேல் தெரியாது என்று சொன்னார்கள். கார்ல் விளக்கம் கொடுத்தபோது குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். கார்ல் மிக உற்சாகமாக இருந்தார். மாலை விருந்தும்  நல்ல படியாக முடிந்தால் வெற்றி என்று நினைத்துக் கொண்டேன். வேறு எதுவும் குளறுபடி ஆகாமல் முடிய வேண்டும்.

ரகு இரவு விருந்து  ஒரு புதிய நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக ஹாலில் ஏற்பாடு செய்திருந்தான். நாங்கள் மொத்தம் பனிரெண்டுபேர்தான். இந்திய நிறுவனத்தின் தலைமை ஆட்கள் மட்டும்.  யார் எங்கே உட்காருவது என்று ரகு திட்டம் வகுத்திருந்தான். கார்லுக்கு நேர் எதிரே நான். அலுவலக விஷயங்களை விட்டு விட்டு உலக, நாட்டு நிலைமைகளைப் பற்றிப் பேசினோம். சைனா, அமெரிக்கா எல்லா விவகாரங்களையும் அலசினோம். மிக விரிவான மெனு. வரிசையாக உணவுகள் வந்து கொண்டே இருந்தன. ஏழு கோர்ஸ் என்றான் ரகு. நிறமும் அலங்காரமும் சுவையும் உணவு மிக அருமை. கார்லுக்கு இந்திய உணவு பிடிக்கும், காரம் இல்லாத வரை. அதனால்    கேரளத்து வாழை இலை சுற்றி சமைத்த மீன், அதிகம் மசாலா சேர்க்காத ஹைதராபாத் பிரியாணி என்று விதம் விதமாக அமைத்திருந்தார்கள்.  அந்த நட்சத்திர விடுதியின் தலைமை செஃப் தானே வந்திருந்து விசாரித்தார்.

கார்ல் அவரை பாராட்டி, திடீரென்று, “கார்லிக் நான் கிடைக்குமா?“ என்று விசாரித்தார். நான் ரகுவைத் திரும்பிப் பார்த்தேன்.  நாங்கள் அதை மெனுவில் சேர்த்திருக்கவில்லை.

ரகு என்னிடம் மெல்லிய குரலில் சொன்னான் “சார், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் போல, அப்படி இருந்தால்தான் பூண்டு எல்லாம் சாப்பிடுவார் என்று அவருடைய உதவியாளன் சொன்னான்,” என்றான்.

தலைமை செஃப் மகிழ்ந்து போய் உடனே கார்லிக் நான் செய்து கொண்டு வரச் சொன்னார். கூடவே ஷாஹி பன்னீர் காரம் இல்லாமல் நன்றாக இருக்கும் என்றார். நான், “பனீர் என்பது இந்திய சீஸ், தவிர பனீரின் மென்மை சுவையை வைத்தே ஒரு ரெஸ்டாரன்டின் தரத்தை மதிப்பிடலாம்,” என்று விளக்கம் கொடுத்தேன்.  கார்ல் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது.

கார்லிக் நான் பெரிதாக, அங்கங்கே தந்தூரில் சுட்ட கரியுடன், தாராளமாகத் தூவின பூண்டுத் துண்டுகளுடனும், உருகிய வெண்ணெய் ஒழுக பார்த்தாலேயே நாவில் எச்சில் ஊற வந்தது.  கூடவே ஷாஹி பன்னீர். அதுவும் அருமையான  ஆரஞ்ச் வண்ணத்தில், மேலே க்ரீமினால் செய்த அலங்காரத்துடன் வந்தது. கார்ல் அதற்குள் தானாக கார்லிக் நானை எடுத்து கையினாலேயே பிய்த்து சாப்பிட ஆரம்பித்தார். ஆச்சரியமாக இருந்தது. அவர் வெறும் கைகளால் எதுவும் சாப்பிட மாட்டார் என்று எங்கள் குறிப்புகளில் இருந்தது. நான் ரகுவைப் பார்த்து புன்னகைத்தேன். ஆனால் அவன்  மொபலைப் பார்த்து ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். நான் இளைய தலைமுறைக்கு ஐந்து நிமிடம் கூட மொபைலைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

செஃப் தானே வந்து பன்னீரை பரிமாற ஆரம்பித்தார். ரகு மொபைலைப் பார்த்தபடி ஓடி வந்து அவர் கையைப் பிடித்து தடுத்தான். “நிறுத்துங்கள், நிறுத்துங்கள் “ நாங்கள் எல்லோரும் துணுக்குற்றுப் பார்த்தோம். “இதில் முந்திரிப் பருப்பு அரைத்திருக்கிறீர்கள் அல்லவா?” செஃப் “ ஆமாம், அதனால்தான் வளமையான சுவை வரும்,“ என்றார்.

அதற்குள் கார்லுக்குப் புரிந்து, ரகுவுக்கு மிகவும் நன்றி சொன்னார். நான் அவனை நன்றியுடன் பார்த்தேன். ரகு செஃபிடம் கார்லுக்கு நட் அலர்ஜி என்று விளக்கி,  வேறு கொண்டு வரச் சொன்னான். செஃப் காலாதால் எடுத்து வரச் சொன்னார். அந்த உணவகத்தில் அது பெயர் போனதாம். ஊற வைத்த கருப்பு உளுந்து பல மணி நேரம் நேரம் மெல்லிய தீயில் சமைக்கப் பட்டது. கார்லுக்கு அது மிகவும் பிடித்தது. தெற்கு ஜெர்மனியில் அவர்கள் சாப்பிடும் லின்ஸென் போல இருக்கிறது என்று நிறையச் சாப்பிட்டார். விருந்து தொடர்ந்தது.

எல்லாம் முடிந்து கார்ல் மிக மகிழ்ச்சியாக இருந்தார். இந்தப் பயணம் நன்றாக இருந்ததாக மனதாரச் சொன்னார்.கிளம்பும்போது ஏற்பாடுகள் மிகச் சரியாக இருந்ததாக பாராட்டினார். ரகுவைத் தனியாக அழைத்து மறுபடியும் நன்றி சொன்னார்.

ஒருவழியாக அவரைக் காரில் ஏற்றி, நல்ல இரவு ஆகட்டும் என்று சொல்லி வழி அனுப்பி பெரு மூச்சு விட்டேன். ரகுவின் கையைப் பற்றி நன்றி சொன்னேன். அவனும் நிறைவாக இருந்தான்.

அப்போதுதான் இன்னொரு பக்கம் பான்க்வெட் ஹாலில் நிறைய விளக்குகள், ஓசையுடன் பார்ட்டி நடந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். சிவப்பு நிறத்தில் இருதய வடிவத்தில் பலூன்கள். நிறைய இளம் ஜோடிகள் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஓ! காதலர் தினம். கார்ல் பயண சந்தடியில்   நினைவிலேயே இல்லை. அப்போதுதான் இன்னொன்று நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டுத் திரும்பினேன்.

“ரகு, இன்றைக்கு காதலர் தினம். நீ மாயாவுக்கு மோதிரம் கொடுத்து திருமணம் செய்து கொள்ளக் கேட்பதாக இருந்தாயே ? கார்ல் பயணத்தினால் தள்ளிப் போட்டு விட்டாயா ?”

ரகு என்னிடம் சென்ற மாதம் சொல்லி இருந்தான். இருவரும் இப்போது சேர்ந்து வாழ்ந்து, ஒரு மாதிரியாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு விட்டார்களாம். மாயாவுக்கு இப்போது பாரம்பரியப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையாம். ஒரு பெரிய சாலிடேர் வைர மோதிரம் காண்பித்தான். காதலர் தினம் அன்று கொடுப்பதாக இருந்தான்.

“இல்லை சார் கொடுக்கவில்லை,“ என்றான் எங்கோ இருளில் பார்த்துக் கொண்டு.

நான் உறைந்து போனேன். என்ன ஆயிற்று, ஏன் என பல கேள்விகள். இருந்தாலும் உடனே கேட்கத் தோன்றவில்லை.

அவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.

“சார், எங்கள் இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை, பிரிந்து விட்டோம்“ என்றான்.

 

 

மலர்ந்த முகம் அல்லது 1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதி

தருணாதித்தன்

“இதுதான்  நீங்கள் தேடும் ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் “ என்றான் ரகு ராவ்.

அந்தத் தெருவே ஒரு நூற்றாண்டு காலம் பின்னே சென்ற மாதிரி இருந்தது. மேலே துருப் பிடித்த தகரத்தில் வர்ணம் மங்கி “ப்ருந்தாவன் ஸ்டூடியோ”. முகப்பில் மங்கிய அரக்கு நிறத்தில் மடிப்புக் கதவு. மேலிருந்து கீழ் வரை முழுவதும் படங்கள். வித விதமான வடிவங்களில் நிறங்களில் வெள்ளி தங்க இழைகளுடன் ஃப்ரேம்கள். பழையகால கறுப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் இருந்தன. ஆனால் துல்லியமான படங்கள். ராஜ்குமார் ஒரு மாட்டு வண்டியில் கையில் சாட்டையுடன் சிரித்துக் கொண்டிருந்தார். மைசூர் மகாராஜா அம்பாரி யானையுடன் நின்றிருந்தார். ரோஜாப் பூக்கள் வண்ணம் வழிந்து கொண்டு இருந்தன. சரோஜா தேவி பக்க வாட்டில் திரும்பி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

“ தாத்தா இது தானா, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?” என்றேன். தாத்தா மேலே போர்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு வயது தொன்னூற்று நான்கு. அவர் ஒல்லியாக உயரமாக  இருந்தார். தலையில் உதிரியாக அறுவடை முடிந்த நிலம். வெண் புருவங்கள் மட்டும் நல்ல அடர்த்தி.  போன வருடம் வாங்கிய சட்டை, அது கூட சற்று தொள தொளப்பாக இருந்தது. டிமென்ஷியா, அதாவது வயதான பிறகு வரும் நினைவுக் கோளாறு. பெரும்பாலான சமயங்களில் நாம் பேசுவது புரிகிறதா என்று தெரியாது, முகத்தில் உணர்ச்சியே இருக்காது. தானாக திடீரென்று காஞ்சீபுரம் கருட சேவைக்கு போன போது என்று ஆரம்பிப்பார். கதை அய்ம்பது வருடங்களுக்கு முன் அப்போது சாப்பிட்ட கோவில் புளியோதரையாக இருக்கலாம் இல்லை கூட்டத்தில் காணாமல் போய் திரும்பக் கிடைத்த என்னுடைய அத்தையாக இருக்கலாம்.

“இதுதான்னு நினைக்கிறேன் “ என்று பக்கத்திலிருந்த ஹோல்சேல் பட்டுப் புடைவைக் கடையைப் பார்த்து பாட்டி சொன்னாள். பாட்டியைப் பார்த்தால் எழுபது என்று சொல்லலாம். உண்மையில் எண்பத்து ஏழு வயது. சற்று பருத்த உடல் வாகு. தாத்தாவுக்கும் சேர்த்து பாட்டி பேசுவாள்.  தாத்தாவையும் பாட்டியையும் ஒன்றாகப் பார்த்தால் லாரல் ஹார்டி நினைவுக்கு வரக் கூடும்.

“நாங்க கல்யாணத்துக்குப் பிறகு முதல்ல வெளியூருக்கு வந்தது இங்கதான். அப்பதான் இங்க வந்து ரெண்டு பேருமா சேர்ந்து படம் எடுத்தோம். கூடவே இங்க ஒரு மைசூர் சில்க் புடைவை வாங்கினோம், மயில் நீலம் மெல்லிசா அரை இன்ச்தான் ஜரிகை, ரொம்ப வருஷம் இருந்தது “

நாங்கள் போன இடம் பெங்களூரின் பழைய வணிக வட்டாரம். தாத்தா பென்ஷன் தொடர்ந்து வாங்குவதற்கு இரண்டு பேருடைய புகைப் படம் எடுத்து அனுப்ப வேண்டும். பாட்டிதான் திடீரென்று இந்தக் கடையைத் தேடி படம் எடுக்க வேண்டும் என்றாள். ரகு ராவுக்கு இந்த வட்டாரம் எல்லாம் தெரியும்.

ஸ்டூடியோவில் முகப்பில் சிறிய அறை இருந்தது. அதையும் தாண்டி படம் எடுக்கும் அறை தெரிந்தது. காலணிகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றோம். சிவப்பு நிற ரெட் ஆக்சைடு சிமென்ட் தரை குளிர்ச்சியாக இருந்தது.

அங்கே ஒரு பக்கம் கொக்கி வைத்த ஜன்னலுக்கு அருகில் பழைய தேக்கு மர மேசையில் ஏகப்பட்ட ஓசையுடன் ஒரு கம்ப்யூட்டர். பாதி பிய்ந்து தொங்கிய முனைகளுடன் ஒரு வயர் நாற்காலியில் ஒரு சிவப்புச் சதுர குஷன். அதன் மேல்  ஆழ்ந்து இருந்தவர் ஒரு கணம்  நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் மானிட்டரைப் பார்த்தபடி ஒற்றை விரல்களால் அடிக்க ஆரம்பித்தார். மானிட்டர் பின் புறம் புடைத்து மேசையிலிருந்து வெளியே நீட்டியபடி ஓரத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. நரைத்த நீண்ட தாடி, அடர்த்தியான மீசை, தடித்த கருப்பு ப்ரேமில் தடித்த கண்ணாடி, முகத்தில் ஒரு செயற்கையான புன்னகைகூட காட்டவில்லை.

ராகு ராவ் “ சார்” என்று நீட்டினான். அவர் திரும்பி பார்த்து இடது கை ஆள்காட்டி விரலை உதட்டில் மேல் வைத்து கண்களைச் சுருக்கினார்.

நாங்கள் சுவற்றில் இருந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். கொண்டை முடியுடன் மை இட்ட தவழும் குழந்தை, நாற்காலியில் கணவன் ,மனைவி அருகில் புடைவைத் தலைப்பைப் போர்த்தி நின்று கொண்டிருக்க அருகில் ஒரு பூந்தொட்டி, விதான் சௌதா மேகங்களுக்குள் சில்லவுட், காலை சூரியோத்தில் பசவங்குடி கோவில் கோபுரம், லால்பாக் பூக் கண்காட்சி வண்ண மயமாக என்று நிறைய  இருந்தன. அவர் சுமார் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு ஏதோ முடித்து விட்டு, ஆனால் திருப்தி இல்லாமல்  ம் ஹூம் என்று தலையை அசைத்து கடைசியாக ஓங்கி கீபோர்டில் தட்டினார். ஒரு பென் ட்ரைவைப் பிடுங்கி எடுத்தார். நாங்கள்தான் நடுவில் வந்து அவர் தவத்தைக் கலைத்து விட்டோமோ இப்போது ஏதாவது சாபம் விடக் கூடும் என்று தோன்றியது.

அவர் மறுபடியும் எங்களைப் பார்த்தபடி “ ம் “ என்றார்.

ரகு ராவ் தாத்தாவையும் பாட்டியையும் காண்பித்து, “ இவங்களுக்கு ஒரு படம் எடுக்க வேண்டுமாம் “ என்றான்.

அவர் நெற்றியைச் சுருக்கினார் “ படம் எடுக்க இங்கே எதற்கு வந்தீர்கள் ? “ என்று வாயால் கேட்கவில்லை.

அதற்குள் நான் “ இவர்கள் கல்யாணம் ஆன புதிதில் இங்கேதான் வந்து முதல் கலர்ப் படம் எடுத்துக் கொண்டார்களாம்” என்றேன். நான் பாட்டியைப் பார்த்து “ அய்ம்பது வருடங்களுக்கு மேலே இருக்குமா பாட்டி ? “ என்றேன். பாட்டி “ சரியாக அறுபத்து ஆறு வருடங்களுக்கு முன்” என்றாள். அப்போது பாட்டிக்கு வயது கணிசமாகக் குறைந்த மாதிரி தோன்றியது.

ஸ்டூடியோ ஆசாமி முகத்தில் புன்னகை எழும்பியது – மேகங்கள் விலகி ஒரு கணம் சூரியன் தெரிவது போல.

“ அப்போது என் அப்பா இருந்திருப்பார் “ முதல் முறையாக அவர் பேசினார். முகம் மலர்ந்தது. அப்போது இந்தப் பேட்டையிலேயே எங்களுடையதுதான் பெரிய ஸ்டூடியோ, நான்கூட விடு முறை நாட்களில் இங்கேதான் இருப்பேன் “

பாட்டி சந்தர்ப்பத்தைப் சரியாக பயன் படுத்திக் கொண்டார் “ ஆமாம் அப்போது நாங்கள் வந்து படம் எடுத்துக் கொண்ட போது, குடை வைத்து லைட்டிங்க் சரி செய்தது ஒரு சின்னப் பையன் தான், அது நீங்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் “ என்றாள்.  இந்த முறை சூரியன் மேகங்களுக்குள் அவசரமாக மறையவில்லை. பாட்டி விடாமல் “ உங்கள் அப்பா கூட அதிகம் பேச மாட்டார் என்று நினைவு- எல்லாம் கண்ணாலேயே குறிப்பு, அதிகம் போனால் ம், ம் ஹூம் தான் “ என்றாள். தாடிக்காரர் இப்போது நாற்காலியிலிருந்து எழுந்தார். உடல் அசைவில் விறுவிறுப்பு.

“என்ன மாதிரி படம் வேண்டும் ?” என்றார்

தாத்தா ஒரு நாய்க்குட்டி படத்தில் கவனமாக இருந்தார்.

“பென்ஷன் வாங்க புதிய போட்டோ கொடுக்க வேண்டுமாம், நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் படம், நான் தான் இங்கே வந்து எடுக்க வேண்டும் ஆசைப் பட்டேன்” என்றாள் பாட்டி.

தாடிக்கார் உற்சாகமாக “ சரி உள்ளே வாருங்கள் என்றார்.

உள் அறையில் இருட்டாக இருந்தது. நிழையும் போதே ஒரு மட்கிய வாசனை. மங்கலான ஒரு லைட் மட்டும் போட்டார். நான் சுற்றிலும் பார்த்தேன். தரையில் வெளுத்துப் போன கார்பெட், அங்கங்கே ஓட்டை.

“படம் எடுக்கும்போது லைட் வரும் “ என்று என்னைப் பார்த்தபடி காமிராவை எடுத்து ஏதோ லென்சைத் திருகிக் கொண்டிருந்தார்.

அந்த அறையில் ஒரு புறம் பாதி ரசம் போன கண்ணாடி ஆள் உயரத்தில் இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாண்ட்ஸ் பவுடர் டப்பா, சிந்திய பவுடர், கூடவே ஒரு நீள சீப்பு, உதிர்ந்த தலை மயிர்கள்.  இன்னொரு புறம் திரை போல கருப்புத்துணி , ஸ்டாண்டில் வெள்ளைக் குடை, ஒரு பக்கம் நைலான் கயிறு கொடி மாதிரி கட்டி இருந்தது, அதில் ஒரு நிறம் வெளுத்த கருப்புக் கோட்டு தொங்கியது.

தாடிக்காரர் ஒரு மர பெஞ்சு இழுத்து வந்தார். அந்த பெஞ்சு உட்கார்ந்து பழசு ஆனதிலேயே வழ வழப்பாக இருந்தது.

“இரண்டு பேரும் இதில் உட்காருங்க” பாட்டி மிக உற்சாகமாக ஆகி விட்டார்.

“இதே பெஞ்சுதான் என்று நினைக்கிறேன், உங்க அப்பா ஒரே நிமித்தில் எடுத்து விட்டார். எங்க வீட்டில ரொம்ப நாள் ப்ரேம் செய்து ஹாலில் மாட்டி இருந்தோம் “

பாட்டி, கையைப் பிடித்து தாத்தாவை உட்கார வைத்தார்.

“நான் இந்தப்பக்கம் தான் உட்கார வேண்டும் இல்லையா ?” தாடிக்கார் இது என்ன கேள்வி என்பது போல முறைத்தார்.

“அவரை இங்க பார்க்கச் சொல்லுங்க “

பாட்டி தாத்தாவிடன் மெதுவாக ஏதோ சொன்னாள். தாத்தா எதையும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

பாட்டியே அவர் முகத்தை காமிராவைப் பார்க்கும்படியாகத் திருப்பினார்.

தாடிக்காரர் இன்னும் நிறைய விளக்குகளைப் போட்டார். அறை வெளிச்சத்தில் மூழ்கியது. சற்று சூடு வாசனை வந்தது.

அவர் காமிராவில் கோணம் பார்த்து, ஃபோகஸ் சரி செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்குத் திருப்தி இல்லை. காமிராவை வைத்து விட்டு, பாட்டியிடம் “ அவரை முகத்தில் ஜீவனுடன் பார்க்கச் சொல்லுங்க” என்றார்.

பாட்டி குனிந்து மறுபடியும் தாத்தாவிடம்

“ உங்களுக்கு ஞாபகம் இல்ல ? இங்கதான் நாம வந்து முதல் முதலா படம் எடுத்தோம்”

. தாத்தா முகத்தில் சற்று சலனம். ஆனால் எழுந்து போய் விடுவார் போல இருந்தது,

தாடிக்காரர் “ பாட்டி, இப்படி முகம் இருந்தால் எனக்கு படம் எடுக்க வராது. மனசு முழுக்க மலர்ந்து முகத்தில் வர வேண்டும் “

 

மலர்ந்த முகம்

பாட்டி இப்போது எழுந்தாள். தாத்தாவுக்கு எதிரே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பொய்க் கோபத்துடன் “ என்ன இது இப்படி அடம் பிடிக்கறீங்க ? ஒழுங்கா சிரிச்ச மாதிரி முகத்த வெச்சுக்குங்க,” குரலை மாற்றி நைச்சியமாக “ இல்லா விட்டால் நான் உங்கள் கூட பேச மாட்டேன் “ என்றாள்.

தாத்தாவின் முகம் இளகியது, திடீரென்று

“ அப்படிச் சொல்லாதேடி, உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் ?” என்றார்.

தாடிக்காரர் “தாத்தா அப்படியே கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம், பாட்டி நீங்க போய் அவர் பக்கத்துல உட்காருங்க “ என்றார்

பாட்டி குனிந்து தாத்தா காதில் ஏதோ சொன்னாள். சொல்லும்போதே முகம் வெட்கத்தில் சற்று சிவந்த மாதிரி இருந்தது. தாத்தாவின் காலரை சரி செய்து விட்டு உட்கார்ந்தாள், தாத்தா திரும்பி பாட்டியைப் பார்த்து புன்னகைத்து விட்டு இன்னும் நெருங்கி உட்கார்ந்தார். இரண்டு பேர் முகமும் மலர்ந்தன.

ஃப்ளாஷ் ஒலித்தது. தாடிக்கார் படம் எடுத்தார்.

——

அத்துடன் தாத்தா, பாட்டி, நான், ரகு ராவ், தாடிக்கார் என்று எல்லோரும் மகிழ்ச்சியாக சிரிக்க சுபம் என்று முடிந்திருக்கலாம்.

—–

 

1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதி

 

பாட்டி எழுந்தாள். தாத்தாவுக்கு எதிரே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பொய்க் கோபத்துடன் “ என்ன இது இப்படி அடம் பிடிக்கறீங்க ? ஒழுங்கா சிரிச்ச மாதிரி முகத்த வெச்சுக்குங்க,” குரலை மாற்றி நைச்சியமாக “ இல்லா விட்டால் நான் உங்கள் கூட பேச மாட்டேன் “ என்றாள்

தாத்தாவின் முகம் இன்னும் இறுகியது. உரத்த குரலில்

“போடீ” என்றார்.

இல்லா விட்டால் அவர் எழுந்து போய் விடுவார் போல இருந்தது.

தாடிக்காரர் பார்த்தார் “ பாட்டி நீங்க வெளியில போய் சற்று நேரம் இருங்க, ரெண்டு பேரையும் தனித் தனியாக எடுக்கறேன் “

நான் “ சேர்ந்து எடுக்க வேண்டும் இல்லையா ?” தாடிக்காரர் தேவை இல்லை என்பது போல கை அசைத்தார்.

பாட்டி கோபத்துடன் ஏதோ சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

தாடிக்காரர் “தாத்தா இப்ப நல்லா சிரிங்க “ என்றார்

தாத்தா முகம் மலர்ந்தது.

தாடிக்காரர் என்னிடம் திரும்பி இப்போது பார்த்தாயா என்பது போல பெருமையாக பார்த்தார். “ அவங்களையும் தனியா எடுத்துட்டு, டிஜிடலாக சேர்த்து விடுவேன் “ என்றார்.

தாத்தா தெளிவாக

“ அவசியம் இல்லை, தனித் தனியாக படம் கொடுக்கலாம். இதுக்குத்தான் கவர்ன்மென்ட் சர்குலரில் சி சி எஸ் 1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதிகளின் படி தனியாகவும் படம் அனுப்பலாம் என்று ஒரு விளக்கம் அனுப்பினார்கள். அவர்களுக்குத் தெரியாதா இது போல தேவை வரும் என்று ? வாத்வானி அப்படின்னு ஒரு டெபுடி செக்ரெடரி கை எழுத்து போட்டு அனுப்பி இருந்தான் “ என்றார்.

“  நீங்க எடுங்க “ என்று அழகாக போஸ் கொடுத்தார்.

ஃப்ளாஷ் ஒலித்தது. தாடிக்கார் படம் எடுத்தார்.

தாத்தா மறுபடியும் “ஓட்ட வைக்க வேண்டியதில்லை” என்றார்.

 

 

ஒற்றைச் சிலம்பு

தருணாதித்தன் – 

உமாவுக்கு உருளி என்று ஒரு பாத்திரம் உண்டே அந்த உருளியை வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக தீராத ஆசை. உருளி பழைய கால மீனாட்சியம்மாள் சமையல் குறிப்புகளில் திரட்டுப்பால் செய்ய “வாயகன்ற உருளியில் எட்டு ஆழாக்கு பாலை ஊற்றி, சுண்டக் காய்ச்சி, துருப்பிடிக்காத தோசைத்திருப்பி அல்லது தேய்ந்த சாதக் கரண்டியால் விடாமல் கிளறி ” என்று வரும். தற்காலத்தில் உருளியில் தண்ணீர் ஊற்றி வண்ணப்பூக்களை அதில் மிதக்க விட்டு அலங்காரமாக வைப்பது வழக்கமாகி இருக்கிறது. உமா அதற்கு பார்வையாக ஒரு நல்ல உருளி வேண்டும் என்று வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தாள்.

அவள் சினேகிதி லீலா அந்த மாதிரி வேலைப்பாடுள்ள நேர்த்தியான உருளி வேண்டுமானால் கேரளத்தில்தான் கிடைக்கும் என்றும், உள்ளூர்க் கடைகளில் கிடைப்பது எல்லாம் சரியான அமைப்பு இல்லை, அப்படி சமச்சீராக இல்லாமல் வார்த்த பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்தால் சீன வாஸ்து சாஸ்திரப்படி சொத்து நஷ்டமாகும் என்று கேட்காமலேயே ஆலோசனை கொடுத்தாள். டிஸம்பர் கடைசியில்தான் எல்லோருக்கும் லீவு அமைந்து கொச்சினுக்கு போக முடிந்தது.

ஃபெர்ரியில் ஏறி மட்டாஞ்சேரியில் இறங்கிய உடனேயே நிறைய கடைகள் ,ஆனால் ஏனோ ஒரு கடை ஈர்த்தது. வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த கடை ஆளும் காரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குளித்து விட்டு வந்தது போல ஒளி முகம், அதில் நிறைந்த புன்னகை, படிந்து வாரிய ஈரத்தலை, நெற்றியில் விபூதி, கை மடித்து விட்ட வெள்ளைச் சட்டை, அகலக் கரையுடன் வெள்ளை வேட்டி, எழுந்து வந்து வழியை மறித்து அவன் கடையைத் தாண்டிப் போக விடவில்லை.

ஒரு பாரம்பரியமான வீட்டையே கடையாக்கி இருந்தார்கள். வாசலில் திண்ணையிலிருந்து, உள்ளே ரயில் பெட்டிகள் மாதிரி நீளமாக இருந்த பல அறைகள் முழுவதும் பழங்காலப் பொருட்கள்தான். வண்ணக் கண்ணாடி தொங்கும் விளக்குகள், நிலைக் கதவு, பணப் பெட்டி, சிற்பத் தூண்கள், ஊஞ்சல் பலகை, அப்பக் காரை, பித்தளை வெற்றிலைப் பெட்டி, அளக்கும் படி, கிளிக்கூண்டு, நிற்கும் ஆளுயர கடியாரம், மரச் சிற்பங்கள், பெரிய மண் ஜாடிகள், சட்டம் போட்ட கட்டில், பித்தளை டெலிஸ்கோப் என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத பொருட்கள் இறைந்து கிடந்தன.

சில பொருட்களுக்கு விலை ஒட்டி இருந்தது. உமாவுக்கு உருளிகளின் விலை அத்துப்படி ஆகி இருந்தததால், முதலில் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாள். திருப்திகரமாக இருந்தது. மிக அதிகம் இல்லை. அவற்றில் ஒன்றை எடுத்து நல்ல வெளிச்சத்தில் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். லட்சணமாக இருந்தது. ஓரங்கள் எல்லாம் சுத்தமாக இருந்தது. கைப்பிடிகளில் சித்திர வேலைப்பாடு அழகாக இருந்தது. பல நாட்களாக தேடிக்கொண்டிருந்தது இவ்வளவு சீக்கிரம், திருப்தியாக, அதுவும் நல்ல விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியினால் கண்கள் விரிந்து, குரல் சற்று மிகுந்தது, உடலில் ஒரு விசை ஏறியது. கடை ஆள், நுட்பமாக அதை கவனித்திருக்க வேண்டும். வேறு சில பொருட்களைக் காட்ட ஆரம்பித்தான். “இதோ பாருங்கள், உருளி வைக்கும் இடத்துக்கு மேலே தொங்க விட சர விளக்கு”. உமாவுக்கு அதில் அவ்வளவு இஷ்டமில்லை. அவள் பார்வை சுற்றிலும் அலைந்தபோது ஒரு கணம் அந்த பெரிய பெட்டியின் மேல் நிலைத்தது.

பித்தளைப் பூண் போட்டு, கரும் பழுப்பு நிறத்தில் எண்ணெய் தேய்த்தது மாதிரி மினுக்கியது. உடனே அவன் ஆரம்பித்து விட்டான். இப்போதெல்லாம் இந்த மாதிரி பெட்டி மிகவும் போகிறதாம். வீட்டில் ஹாலில் வைத்து அதன் மேல் சின்ன பித்தளைப் பொருட்களை வைக்கிறார்களாம். உடனேயே சில பொருட்களை வைத்து அலங்காரம் செய்து காட்டினான். ஒரு கஜ லக்ஷ்மி விளக்கு, தூபக்கால், ஒரு பாக்கு வெட்டி, ஒரு பித்தளைக் கரண்டி நடுவில் ஒரு இடம் காலியாக இருந்தது. அவன் சுற்றிலும் தேடி ஒரு வட்டமான பெரிய வளை போல ஒன்றை கொண்டு வைத்தான். வரி வரியாக மணிகளுடன் வேலைப்பாடுடன் அதுவும் நடுவில் பொருத்தமாக இருந்தது. இப்படியாக அந்த பெட்டி மிக அழகாக அமைந்தது. உமாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதிகம் பேரம் இல்லாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டாள்.

உமா வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலை உருளிக்கு நல்ல இடம் பார்த்து வைத்தாள். உள்ளே நுழைந்தவுடன் பார்வையான இடம். அதில் மலர்கள், நடுவில் வெள்ளி தீபம் மிதக்க, வீடே மங்களமாக இருந்தது. பெட்டிக்குத்தான் சரியான இடம் கிடக்கவில்லை. டெலிவிஷன், கண்ணாடி ஷோ கேஸ், டெலிபோன், பத்திரிகை வைக்கும் ஸ்டாண்டு என்று ஏற்கெனவே ஹால் அடைசலாக இருந்தது. ஒரு வேளை பெட்டியை அவசரப்பட்டு வாங்கி விட்டோமோ என்று தோன்றியது. கடைசியாக புத்தக அலமாரியை வேறு அறைக்கு மாற்றி, ஹாலிலேயே இடம் அமைந்தது. எல்லாம் சேர்ந்து வீடு பொலிவாக இருப்பதாக உமாவுக்குத் தோன்றியது. தானே வேறு வேறு கோணங்களில் நின்று, அமர்ந்து பார்த்து மகிழ்ந்து போனாள். அடுத்தது யாரிடமாவது காட்டாவிட்டால் மகிழ்ச்சி பூர்த்தி ஆகாது என்று தோன்றியது.

முதலில் பக்கத்து வீட்டு லக்ஷ்மி வந்திருந்தாள், முகத்தில் பவுடர் வியர்க்க, எங்கோ போகும் அவசரத்தில். சாவியைக் கொடுத்து விட்டு உள்ளே வராமலேயே போய் விடுவாளோ என்று உமாவுக்கு ஒரு சிறு கலக்கம். வந்தவள் வாசலிலேயே உருளியையும் பெட்டியையும் பார்த்து ஒரு கணம் நின்று விட்டாள். ” அட, எப்ப வாங்கின இதெல்லாம்? ” என்று கேட்ட உடனேயே, உமாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் போகிற போக்கில் லக்ஷ்மி “இங்க இருக்கற நிலமைல உருளிய தேய்க்கறத்துக்கு முடியுமா, வேலைக்கு ஆளே சரியாக இல்லை, நம்மால முடியாதுப்பா” என்றாள்.

முதலில் அவள் பொறாமையால் சொல்கிறாள் என்று தொன்றினாலும் சரிதான் என்று தோன்றியது. செல்வி தினமும் வருவதே லேட், அவள் கணவன் வேலுச்சாமி வேலை எதுவும் இல்லாமல் தினமும் குடித்து விட்டு அவர்கள் இருந்த பேட்டையில் ரௌடியாகத் திரிந்து கொண்டு இருந்தான். ஏதாவது காரணம் சொல்லி பாதி நாள் வரமாட்டாள். உமாவுக்கு அவளுடன் அதிக நாட்கள் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் பல வருடங்களாக பழகினவள், வேலை சுத்தம் என்று வேறு ஆள் பார்க்க இஷ்டம் இல்லை.

புதிய பொருட்களை மற்ற எல்லோருக்கும் காண்பிக்கலாம் என்று யோசித்து, வெள்ளிக்கிழமை அன்று நிறைய பேரை ஏதோ பூஜை என்று அழைத்தாள். லீலா உருளியைப் பார்த்து அதுவும் கேரளத்தில் வாங்கியதை உறுதி செய்து கொண்டு, நல்ல லட்சணமாக இருப்பதாக சொன்னாள். அடுத்தது பெட்டியின் மேல் இருந்த பொருட்களை பார்த்துக் கொண்டு வந்தவள், அந்த வளையைப் பார்த்ததும் ஒரு மாதிரி நெற்றியைச் சுருக்கினாள்.

” இது என்ன தெரியுமா? ” என்றாள்.

“ஏன், இது ஏதோ வளை போல வேலைப்பாடாக இருக்குன்னு வாங்கி வந்தேன்”

“இதெல்லாம் வீட்டில் வைக்க மாட்டார்கள். இது ‘செலம்பு’ன்னு சொல்லுவோம், வெளிச்சப்பாடு கையில வெச்சுட்டு ஆடறது” என்றாள். ‘செலம்பு’ என்றபோது ச்செலம்பு என்று அழுத்தியபடி. உமா சரி இது தமிழில் சிலம்புன்னு சொல்வோமே அந்த மாதிரி என்று புரிந்து கொணடாள். ஆனால் ஏன் சிலம்பை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டாள். ஒரு வேளை ஒற்றைச் சிலம்பினால் கண்ணகி கதை மாதிரி ஏதாவது இருக்குமோ என்று நினைத்தாள். லீலா விவரமாக ஆரம்பித்தாள். வெளிச்சப்பாடு என்பவன் பகவதி கோவில்களில் சாமியாடி மாதிரியாம். சிவப்பு ஆடை அணிந்து ஒரு கையில் மணி கட்டிய வாளும் இன்னொரு கையில் சிலம்பும் ஏந்தி விரிந்த கூந்தலுடனுடன் தாளத்துக்கு இசைந்து ஆடுவானாம். ஆட்டம் அதிகமாகி வெறி கொண்டு, வாளால் அவன் தன் தலையிலேயே ரத்தம் வரும்படி காயப்படுத்திக்கொண்டு ஆடுவானாம். ஆடும்போது அவன் பேசுவது பகவதி வாக்காம். இந்தக் காலத்திலெல்லாம் பகவதி கோவில்களில் திருவிழா முன் போல நடப்பதில்லையாம், பல வெளிச்சப்பாடு ஆட்கள் அதிக வருமானமில்லாமல் அந்தத் தொழிலையே விட்டு விட்டார்களாம். அவள் கடைசியாக அருகில் போய் தொடாமல் உற்றுப் பார்த்து, “இதோ பார் இதெல்லாம் ரத்தக் கறை, எந்த வெளிச்சப்பாடு சோற்றுக்கு வழி இல்லாமல் இதை விற்றானோ, இதெல்லாம் வீட்டில் வேண்டாம்” என்று அடித்துச் சொல்லி விட்டாள். உமாவுக்கு லீலா வழக்கம் போல ஏதோ கதை விடுகிறாள் என்றுதான் நினக்கத் தோன்றியது. அவள் அடிக்கடி யக்ஷிகள், மோகினி, குட்டிச் சாத்தன் என்று நேரில் பார்த்துப் பழகின மாதிரி பேசுவாள்.

உமா அன்று மாலையே ரமேஷிடம் அவன் அலுவலகத்திருந்து வந்தவுடன் சொன்னாள், அவன் மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டே அரை குறையாகக் கேட்டு, இதெல்லாம் என்ன பழங்காலம் மாதிரி கதை என்றான். உமாவும் அதிகம் கவலைப் படவில்லை.

முதல் சம்பவம் அடுத்த வெள்ளிக்கிழமை காலை நடந்தது. படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்தே சின்னப் பெண் சண்டி. வென்னீர் சூடு பற்றவில்லை என்று அழுகைக் குளியலுக்குப் பிறகு, ஸ்கூல் சீருடைக்குள் திணித்து, தலையை வாரி, பொட்டு வைத்து அவளைத் தூக்கி பெரிய கண்ணாடியில் காண்பித்து,

” அழாத கண்ணு, இதோ பார் , சின்னு எவ்வளவு அழகு தெரியுமா ?”
சொல்லி முடிப்பதற்குள், பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி திடீரென்று ஒரு ஓரத்திலிருந்து ஆரம்பித்து பெரிய விரிசல் விட்டு உடைந்து போனது. பயந்து போய் சின்னுவை இறக்கி விட்டு சுற்று முற்றும் பார்த்தாள், ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், கல் எதுவும் விழவில்லை. ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். உமாவுக்கு அதிர்ச்சியில் வியர்த்து விட்டது. அவசரமாக சின்னுவை கொண்டு போய் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் விட்டு விட்டு, வீட்டுக்கு வந்து அவளுடைய அம்மாவுக்கு ஃபோன் செய்தாள். அம்மா சந்தேகமில்லாமல் சொல்லி விட்டாள் – கண்ணாடி ஒரு மங்கலப் பொருள், வெள்ளிக்கிழமை அதுவும் தை வெள்ளிக்கிழமையில் உடைவது நல்லது இல்லை. ரமேஷ் குளித்து வந்தவுடன், அவனைத் தலை துடைக்கக்கூட விடவில்லை.

“ரமேஷ், இந்தக் கண்ணாடியப் பாருங்க, இப்ப நான் சின்னுவ ட்ரெஸ் பண்ணிட்டு அவளுக்கு காமிச்சிட்டிருந்தேனா, பார்க்கும்போதே விரிசல் விட்டு உடைஞ்சிடுச்சு ”

அவன் கண்ணாடி அருகே போய் ஆராய்ந்தான். விரிசல் ஆரம்பித்த்த இடம் கண்ணாடியை பொருத்தி இருந்த ஒரு ஸ்க்ரூவில்.

“இதோ பார் இந்த ஸ்க்ரூவை அதிகமாக அழுத்தி இருக்கிறது. இப்படித்தான் சமமா அழுத்தம் இல்லா விட்டால் ஒரு பக்கம் உடையும் ”

” இது நம்ம வீட்டில மூணு வருஷமா இருக்கு, எப்பவோ ஆகி இருக்கணுமே”

உமாவுக்கு ஒரு வேளை அந்தச் சிலம்பால் இருக்குமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

அடுத்த சம்பவம் ரமேஷின் பிறந்த நாள் அன்று நடந்தது. அவனுடைய அம்மாவும் அப்பாவும் முதல் நாளே வந்து விட்டார்கள், ரமேஷின் அண்ணா வீட்டிலிருந்து. காலையிலேயே எல்லோரும் குளித்து கோவிலுக்குப் போக வேண்டும் என்பதால் சீக்கிரமே எழுப்பி வரிசையாக குளிக்க அனுப்பி, கடைசியாக மாமியாரை அனுப்பினாள். அரை மணிக்கும் மேல் ஆயிற்றே என்று பாத்ரூம் கதவைத் தட்டினால் பதிலே இல்லை. கூர்ந்து கேட்டால் முனகும் சத்தம் கேட்டது. கதவை பலமாக தள்ளி, தாழ்ப்பாள் உடைந்து திறந்தால், ரமேஷின் அம்மா அலங்கோலமாக தரையில். கை கொடுத்தால் கூட எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு பேராக சேர்ந்து தூக்கி வந்து படுக்க வைத்து, டாக்டரை வரவழத்து, அவர் ஃப்ராக்சர் இருக்குமா என்று பார்க்க எக்ஸ் ரே எடுக்க ஆம்புலன்ஸ் வரவழைத்து, மாடிப் படிகளில் ஸ்ட்ரெச்சரைத் தூக்கி, கடைசியில் நல்ல வேளையாக மிக லேசான விரிசல்தான் எலும்பு உடையவில்லை, இரண்டு மாதம் ஓய்வில் இருந்தால் சரியாகி விடும் என்ற முடிந்த போதுதான் நிம்மதி ஆனது. ஆனாலும் ஒரு வாரத்துக்குள்ளேயே எல்லோரும் படாத பாடு பட்டார்கள்.

செல்வி வழக்கம் போல பாதி நாட்கள் வரவில்லை. வேலுச்சாமி கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். அவளுடைய வீட்டிலேயே நிறைய வேலையாம். வேலைக்காரி சௌகரியம் இல்லாததால், உமா கஷ்டப்படுவதைப் பார்த்து, அவர்கள் ஒரு ஆம்புலன்ஸ் வைத்துக் கொண்டு ரமேஷின் அண்ணா வீட்டுக்குத் திரும்பப் போய் விட்டார்கள். பேச்சு வாக்கில் லீலாவிடம் இதெல்லாம் விவரித்த போது அவள் சொன்னாள் “நான் சொல்றேன்னு தப்பா நினச்சுக்காத, எனக்கெனமோ எல்லாமெ அந்தச் செலம்பாலதான்னு தோணுது, வீட்டில வயசானவங்கள ரெண்டு நாள் கூட தங்க விடல பாரு, இங்க அய்யப்பன் கோவில்ல தந்த்ரி இருக்கார், அவர் சோழி உருட்டிப் பார்த்து சொல்லிடுவார், இப்படியே விட்டா உங்க வீடு மட்டும் இல்ல நம்ம அபார்ட்மென்ட்டுக்கே ஏதாவது வரும்’ என்றாள். உமாவுக்கு பயமாக இருந்தது. ரமேஷிடம் சொன்னபோது அவன் சோழி விவகாரத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

மூன்றாவது சம்பவம் விரைவில் வந்தது. அதுவும் லீலா சொன்னபடியே. ஒரு நாள் பைப்பில் தண்ணீரில் ஏதோ கெட்ட வாடை லேசாக ஆரம்பித்தது. முதலில் வழக்கம் போல ஒரு நாள் தண்ணீர் வராமல் இருந்து, பைப் எல்லாம் காலி ஆகி மறு நாள் வரும்போது, அழுக்கு, இரும்புத்துரு எல்லாம் சேர்ந்து வாடை வருவதுண்டு. அந்த மாதிரிதான் ஏதோ என்று நினைத்தாள். மறு நாள் அதிகமாகப் போகவே, உமா மேலே மொட்டை மாடிக்குப் போய் ஒவர் ஹெட் டாங்கைப் பார்க்கப் போனாள். டாங்கின் மூடி வைக்கும் ஸ்லாப் திறந்து கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் ஏதோ கருப்பாக மிதந்து கொண்டிருந்தது, கீழே போய் டார்ச் கொண்டு வந்து வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு காக்கை. லீலா பார்த்த உடனேயே சொன்னாள் ” அதுவும் பார் அண்டங்காக்கா, கழுத்து முழுக்க கருப்பா இருக்கு, நான் முதல்லயே சொன்னேனில்ல, இதுக்கு எங்க ஊரில என்ன சொல்வோம் தெரியுமா “, அதற்கு மேல் கேட்கவில்லை உமாவுக்கு கிலியாகி விட்டது.

வீட்டுக்கு வந்ததும் உமாவுக்கு அந்தச் சிலம்பைத் தொலைத்து விட வேண்டும் என்று தோன்றியது. தொடாமல், ஒரு குச்சியால் அதை எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டாள். அப்படியே பால்கனியிலிருந்து தூக்கி எறியலாமா என்று தோன்றியது. அது திரும்ப காம்பவுண்டுக்குள்தான் விழும். கீழே கையில் எடுத்துச் செல்ல பயமாக இருந்தது. குளியல் அறை பக்கத்தில் தூக்கி எறிய வைத்திருந்த பிற சாமான்களுடன் வைத்து விட்டு நன்றாக சோப்புப்போட்டு கை கழுவினாள். இத்தனை நாள் வீட்டில் இருந்தது, இன்னும் ஒரு இரவில் ஒன்றும் ஆகக்கூடாது என்று நினைத்தாள். காலையில் செல்வி எடுத்து கீழே மற்ற குப்பைகளுடன் போட்டு விடுவாள், வாரத்துக்கு ஒரு தடவை வரும் கார்ப்பரேஷன் லாரியில் எங்காவது போய்த் தொலைந்து விடும்.

அடுத்த நாள் செல்வி நேரத்துக்கு வந்து விட்டாள். வேலுச்சாமி இப்போது கார்ப்பரேஷன் தேர்தலில் மூழ்கி இருப்பதால் குடி எல்லாம் குறைந்திருக்கிறதாம். அவளிடம் மறக்காமல் அந்தக் ப்ளாஸ்டிக் கவரை குப்பையில் போடச் சொன்னாள். அதற்கு அடுத்த நாள் செல்வி வரவில்லை. நாலு தடவை ஃபோன் செய்த பிறகு எடுத்தாள். அவள் வேலுச்சாமி தேர்தலுக்கு நிறைய உதவி செய்கிறாளாம். அடுத்த வாரம் வருவதாக சொன்னாள்.

நடுவில் சின்னு ஸ்கூலில் ஆன்யுவல் டே போட்டிகள் என்று பிஸியாகி விட்டாள். சின்னுவுக்கு பாட்டுப் போட்டி, க்விஸ் இரண்டுக்கும் தயார் செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது. என்னதான் வீட்டில் பாடினாலும், கேள்விக்கு பதில் சொன்னாலும், சின்னு ஸ்கூலில் சொதப்பி விடுவாள். சாயங்காலம் அவளை தினமும் உட்கார்ந்து பாட வைத்து, வாங்கி வந்திருந்த புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டு – நடுவில் சிலம்பு விவகாரம் நினைவில் இல்லை. இந்த தடவை சின்னுவுக்கு இரண்டு போட்டிகளிலும் பரிசு.

ஞாயிற்றுக் கிழமை நிதானமாக எல்லோரும் அமர்ந்திருந்தபோது ரமேஷிடம் விவரமாகச் சொன்னாள்- குப்பையில் எறிய வைத்தது வரை. “ஒரு வழியா அந்தச் சிலம்பு தொலஞ்சுது, இனிமேலாவது வீட்டில கெட்டது எதுவும் நடக்காது, லீலா சொன்னபடி முதல்லயே தூக்கி எறிஞ்சிருக்கலாம், இப்ப பாருங்க நம்ம சின்னு பரிசு வாங்கி இருக்கா, இனிமே எல்லாம் நல்லதுதான் நடக்கும் ”

“அதெல்லாம் மடத்தனம், ஏதோ ஒரு பழைய மெட்டல் துண்டுக்கும், வெயில்ல கண்ணாடி உடையறது, ஈரத்தரையில அம்மா வழுக்கி விழுந்தது, திறந்து வெச்ச தொட்டித் தண்ணீரில காக்கா செத்ததுன்னு என்ன தொடர்பு? இப்ப பரிசு வாங்கினா அதுவும் அந்தச் சிலம்பு போனதுனாலயா? ஆஃபீஸில ரீஜனல் மேனேஜர் பொஸிஷனுக்கு என்னத்தான் ரெகமண்ட் பண்ணி இருக்கேன்னு எம் டி நேத்து சொன்னாரு, அதுவும் சிலம்பு போனதாலயா?” என்றான். “ஆமாம்“ என்றாள் உமா திடமாக, ஒரு வாரமாக அவளுக்கு முதுகு வலி கூட காணாமல் போயிருந்து.

ரமேஷ் அப்போதுதான் நினைவுக்கு வந்தவானாக, “அன்னிக்கு நீ கிளம்பிப் போன பிறகு செல்வி எதையோ காட்டி அம்மா தூக்கி எறிய வெச்சுருக்காங்க போல, நான் எடுத்துக்கறேன்” அப்படின்னு சொன்னா, அவசரத்துல நான் என்னன்னு கூட பார்க்கல. இப்ப நீ சொல்லறத கேட்டா அந்தச் சிலம்புதான்னு தோணுது” என்றான். செல்வி அப்படித்தான். கெட்டுப்போன ட்யூப் லைட், கார் பேட்டரி என்று தூக்கி எறிய வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வாள். உமாவுக்கு பயம் படர்ந்தது, பாவம் செல்வி அவளுக்கு ஏதாவது ஆகாமல் இருக்க வேண்டுமே என்று பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.

உடனே செல்விக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல அவள் எடுக்கவில்லை. விவரம் எதுவும் சொல்லி அனுப்பாமல் ஃபோனையும் எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வாரம் வராமல் இருந்ததில்லையே என்று கவலை அதிகமானது. ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு நேராக அவள் இருக்கும் தெருவுக்குப் போனாள். பஸ் ஸ்டாண்டுக்கு பின் புறம் ஒரு சந்து. பெட்டிக் கடையில் விசாரித்து வீட்டைக் கண்டு பிடித்துப் போனால், வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் இருந்து ஒரு சின்னப் பெண் ஒழுகும் மூக்குடன், வாயில் விரலுடன் எட்டிப் பார்த்து அம்மாவை அழைத்தது.

“என்னம்மா நீங்க என்ன தின மலரா, முந்தா நாள்தான் தந்திலேர்ந்து வந்தாங்க ” என்றாள். உமாவுக்கு எதுவும் புரியவில்லை, கலக்கம் அதிகரித்தது, தினப் பத்திரிகைகளில் வரும் அளவுக்கு ஏதாவது விபரீதமாக ஆகி விட்டதா, ” இல்ல, செல்வி எங்க வீட்டில வேல செஞ்சுட்டிருந்தா, ஒரு வாரமா வரலயேன்னு பார்க்க வந்தேன், என்ன ஆச்சு அவளுக்கு?”

” சொல்லல போல, அவ இனிமே வேலைக்கு வர மாட்டாளுங்க, “, உமா கர்சிப்பை எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள்.

“ஏன் என்ன ஆச்சு ?”

“ஒரே அதிர்ஷ்டம்தான் அவங்களுக்கு, வேலுச்சாமி கார்ப்பரேஷன் எலக்ஷனுல செயிச்சு நம்ம வார்டு கார்ப்பரேடர் ஆயிட்டாருங்க ” என்றாள்.

உமாவுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது, அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது, செல்வி சிலம்பைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும்,

“செல்வி வந்தா உமான்னு தேடிட்டு வந்தாங்கன்னு சொல்லு”, குற்ற உணர்ச்சி கணத்தில் நீங்கியது. திரும்பப் போகும்போதே பஸ் ஸ்டாண்ட் பிள்ளையாருக்குத் தேங்காய் வாங்கி உடைத்தாள்.

ஒரு வாரம் கழித்து செல்வி வந்தாள், முகம் வாடி சோர்ந்து இருந்தாள். வேலுச்சாமி எலக்ஷனை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறார்களாம். கள்ள ஓட்டு மற்றும் வன்முறையால்தான் அவன் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி வாதமாம்.

உமாவுக்கு வயிற்றில் கலக்கம், “அந்த சிலம்பை நீ ஏன் தூக்கி எறியல? உங்க வீட்டுக்கு எதுக்கு எடுத்துட்டுட்டுப் போன?“ குரல் குளறியது.

செல்விக்கு அவளது கலக்கம் புரியவில்லை, “எதும்மா, அன்னிக்கு நீங்க, அந்த பொட்டி மேல இருந்த சலங்கைய ஒரு கவருல போட்டு வெக்கிருந்தீங்களே, அதுவா ?“

“ஆமாம், அதேதான், தூக்கி எறியச் சொன்னா, ஏன் எறியல?” குரல் உயர்ந்தது.

“இல்லம்மா, நான் அத ஊட்டுக்கு கொண்டு போய், புளி போட்டு தேச்சனா, பளபளன்னு ஆயிடுச்சு. எங்க ஊட்டுக்காரரு, அம்மா ஏதோ தெரியாம தூக்கிப் போட்டிருப்பாங்க, மரியாதயா அவங்க ஊட்டுலயே கொண்டு போய் கொடுத்திடுன்னு திட்டினாரு”

“அன்னக்கே திரும்ப வந்து வெச்சுட்டேனுங்க,” உமா திடுக்கிட்டு கருப்புப் பெட்டியைப் பார்த்தாள், இடம் காலியாகத்தான் இருந்து.

“கீழ பொட்டி மேல இருந்தா தூசு படிஞ்சு துடைக்க கஸ்டமா இருக்குதுன்னு, கண்ணாடி அலமாரில வெச்சுட்டேனுங்க “

உமா திரும்பினாள், அங்கே கண்ணாடி ஷோ கேஸில் நடு நாயகமாக மற்ற அலங்காரப் பொருட்களுடன் அந்த ஒற்றைச் சிலம்பு வீற்றிருந்தது.