நந்தாகுமாரன்

உரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்

உரையாட வரும் எந்திர இரவு

கண்ணுக்குச் சிக்கிய நட்சத்திரங்களிடம்
நலம் விசாரித்தபடி நகர்கிறது நிலவு
நகர்ந்து கொண்டேயிருக்கிறது

இரவின் தூரத்தைக் கடக்க
மின்விசிறிகளின் சிறகுகள் பறக்கின்றன
பறந்து கொண்டேயிருக்கின்றன

வௌவால்கள் திட்டமிடும் பாதையில் தான்
இப்போது பூமி சுழல்கிறது
சுழன்று கொண்டேயிருக்கிறது

ஜாமத்தின் பிரதிகளில்
ஆதியிரவைத் தேடி அலைகிறது
விழிப்பின் அஸ்தமனம்
அலைந்து கொண்டேயிருக்கிறது

தூக்கத்தின் தளத்தில் நுழைந்ததும்
விளம்பரக் கனவுகள் தாண்டி
உரையாட வரும் எந்திர இரவு
இதைத் தான் நாள்தோறும் சொல்கிறது
சொல்லிக் கொண்டேயிருக்கிறது

தூக்கம் விட்டதோ
விடியல் தொட்டதோ

பவழமல்லிகள் உதிர்கின்றன
உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன

அணில்கள் கீச்சிடுகின்றன
கீச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன

மாங்குயில் கூவுகிறது
கூவிக் கொண்டேயிருக்கிறது

 

கடலில் கலக்கும் கவிதை

வெறும் புல்லின்
சிறு கையின்
பனிக்கோளத்தில் இந்தப்
பெறும் பூங்காவின்
பேருலகை அடக்கி
பெரும்பாறாங்கற்களையும்
துளி உளி கொண்டு
உருமாற்றி
காணி நிலத்தில் நடக்கும்
ஜோடிக் குதிரைகளுக்கு
காதலையும் காலை உணவையும் அளித்து
வெந்து தணிந்த நாட்டில்
ஒரு குடம் குளிர் மழைக் காற்றை
நிதம் முகம் முழுவதும் ஊற்றி
அவமானப்படுத்தப்பட்ட இடத்திலேயே
அனுமதிக்கப் பணித்து
அன்பு புரிந்து
அதிகாலையில் பறவைகளை எழுப்பி
எமக்காகப் பாட வைத்து
என் இடது காதில் துடிக்கும்
கடலின் இதயத்தை
புல்லாங்குழலின் குழிகளில்
இசையாக்கிப் புதைத்து
அடர்ந்த காடுகளில்
இன்னும் பல கோடி நூற்றாண்டுகளுக்கான
இசையை உலவ விட்டு
என் வலது காதில் ஊளையிடும்
காமத்தின் கோரப் பற்களை
ஒரு ஆப்பிளுக்குள்
அடக்கம் செய்து
பறந்து போய் மரக்கிளையில் அமரும்
ஆட்டுக்குட்டிகளைப் பிரசவித்து
பிறகு
இந்தக் கவிதை
போய்க் கலக்கிறது
தன் கடலில்

நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின் நினைவு – நந்தாகுமாரன் வசன கவிதை

கறந்து நொதிந்த சாற்றின் மிடறுப் பாதையாக உருக்கொண்டான். காட்சிக்கென்ன கர்வமோ, சாட்சிக்கென்ன சர்வமோ, அப்படி ஒரு துய்தல் கருக்கொண்டது. கோப்பை, நாவின் நர்த்தன மேடையானது. ரசபாசம் பொங்கி வழியும் இந்த உணவுப் பண்டங்கள் எவ்வளவு சுவைத்தும் தீர்வதில்லை. அப்போதைக்கு பசியாற்றுகின்றன. எப்போதைக்கும் பசியேற்றுகின்றன. காலப் புதருக்குள் ஒளிந்திருக்கும் காவிய போதை எட்டி எட்டி மட்டும் பார்த்துத் தயங்குகிறது. முட்டி முட்டி வேர்த்து முயங்குகிறது ஆவி. கண்டதெல்லாம் பொக்கிஷம் உண்டதெல்லாம் மாமிசம் என்றாகிறது. பெரிதினும் பெரிது கேட்கிறது சிற்றின்பம். சிறிதினும் சிறிது காட்டுகிறது பேரின்பம். ஞானத்தின் மோனம் கானமாகிறது. கருந்துளை வாயிலில் சிக்கிய கலம் ஆளவும் முடியாமல் மீளவும் முடியாமல் பரிதவிக்கிறது. திரை விலகியதும் முப்பரிமாணத்தின் தாக்கம் நாவுகளின் இனத்தை இரண்டின் இலக்கங்களில் பெருக்கிக் கொண்டே போகிறது. கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் கண்ணாடிக்கு முன்னாடியும் தெரியவில்லை பின்னாடியும் தெரியவில்லை. இப்போது அறையெங்கும் நிறைந்திருக்கும் நாவுகள் தம்மையே சுவைத்துக் கொள்கின்றன. கண் திறந்தால் ஒரே பார்வை தான் ஆனால் மெய் மறந்தால் முடிவில்லா தரிசனங்கள் கிடக்கின்றன. ஆழம் நீளத்தை அகலம் பார்க்கிறது. உறிஞ்சுகுழல் மனித ரூபம் கொள்கிறது. அமைந்தாலும் விடாது அமைதி. கற்றது உலகளவு பெற்றது கையளவு. ஓதும் நாவு இன்னும் போதும் என்று சொல்லவில்லை. அவையடக்கம் என்றால் அவையை அடக்குவது என்று யாரும் அதிகாரத்தின் புதிராக்கத்தைச் சொல்லவில்லை. உள்ளிருக்கும் கள்ளிறக்கும் வித்தைக்கு தந்திரம் தான் துணை. ஞானத்திற்குப் பாதையே இல்லை. கடவுள் இல்லை என்றால் எல்லாம் கடவுள் என்பது போல. மாறு மனம் வேறு குணம் கேட்கிறது வாசிப்பின் வாழ்வு.

எரிமலை நகரில் ஒரு நாள் – நந்தாகுமாரன் கவிதை

​என் முதற் கனவின்
மூலப் பிரதி தேடி
அங்கே வர நினைத்த
அப்பொழுதின் மீது
காலத்தின் அதிகாரம்
சொல்லின் அங்கமான
ஆணவத்தையும் மீறிய
செயலின் பங்கமாகப்
பரிணமித்து
எனைப் பரிதவிக்க விட்டது
ஒரு கொதி வந்ததுமே
காற்று தன் ஒட்டுண்ணியாக
எனைத் தேர்தெடுத்தது
வெப்பம்
கூட்டணிக் கட்சியினரைப் புசித்து
சுவாசம் நீர் தரை கூரை
எனத் தன் ஆதிக்க வெறியை
அரங்கேற்றிக் கொண்டாடிக்
களித்துத் தன் இயல்பில்
தானே சிறந்தது என்றது
அப்போது நான்
குளிரூட்டியற்ற ரயிலறையைத்
தேர்ந்திருந்தேன்
இந்தக் காலத்தின் வலியை
அனுபவிக்கவே என்பதில்
உள்ள அபத்தம்
உண்மைக்குச் சமமாகத்
திரண்டு நின்றதும்
தார்ச் சாலை மேலே
தவிக்கும் கானல் நீரே
தவிக்கும் கானல் நீரை
குடிக்கும் ஏழை விழியே
என்ற
வேர்வைப் போர்வையை
விலக்கியது
காவிரிக் குளிர்
விரித்த வாழை இலையின்
பச்சைப் புன்னகையின்
உயிர்நீர்
அது
எனை ஒரு கணம் மீட்டது
ஒரு கணம் தான்
பின் மீண்டும்
அதே
மாயப்புன்னகை
இத்தனைக்கும் பிறகும்
வீடடைந்த என்னை
உயர்ந்த இந்தத் தென்னை
மரத்தின் மேல் இருந்து பார்க்கிறது
கருகிய ஒரு மேகத்தின் பின்னே இருந்து
உருகிய ஒரு நிலா
பிறகு மழையும் பொழிந்தது என்றால்
அது தானே
இக்கவிதையின் மாய எதார்த்தம்

ஏணியில் ஏறும் ரயில்

நந்தாகுமாரன்

1. ரயிலுக்குக் காத்திருக்கும் இரும்பு இருக்கையில்
அமர்கையில் தடாலென விழப்போய் சுதாரித்து எழுந்து
அது உடைந்ததென உணர்ந்ததும் அதிர்ந்து சொன்னார்
“இந்த இருக்கை என்னை ஏமாற்றப் பார்கிறது,
உங்கள் எல்லோரையும் போலவே”, என்று என்னைப் பார்த்து
பின் சிரித்தபடி வேறு பக்கம் சென்று அமர்ந்தார் அமைதியாக (more…)

ஸ்தலபுராணம் IV : ஆடு தாண்டும் ஆறு

நந்தா குமாரன்

சிறுநீர் கழிக்கப் பதினைத்து ரூபாய்
கொடுத்துக் குடித்த ஹோட்டல் காஃபி
சுவை துடைத்து
மகவின் குரங்கு பயம் போக்கிச்
சுமந்து கடந்து
ஆற்று ஆலாக்கள் மீன் பிடிக்கும்
அர்காவதி இணையும்
காவிரி சங்கமம் தாண்டி
பள்ளத்தாக்கில்
பாயும் பஸ் பயணம் முடிய
நட்ட குழிப் பாறைகளில் வழுக்கப் பார்த்த
சாகசப்பெண் கண்ட சாகசஆண் தோன்றும்
வெய்யில் மூச்சு படர்ந்த
புவியில்
உடல் பசிக்க
புளி சாதம் கலந்து உண்ட
ஜிலேபி மீன் வறுவல் சுவை போற்றி
உள்ளூர் கைத்தடி தாத்தா வழிகாட்டியாகிக் காட்டிய
அருவி போற்றி
“இடையா இதை உன்
ஆடு தாண்டுமா …”
“மடையா இதை உன்
கவிதை தாண்டுமா …”
வேண்டாம் என்றால் கொடுத்து
வேண்டிக் கொண்டால் தடுத்து
ஆடும் லீலை நிறுத்து