பால்கோபால் பஞ்சாட்சரம்

மெய்ம்மை கடப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

சாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர் (மொழியாக்கம் – பீட்டர் பொங்கல்) தொடர்பாய் சில குறிப்புகள்:

wicker-house

Post truth= ‘மெய்ம்மை- பிந்தைய’ என்பது அத்தனை பொருத்தம் இல்லாத மொழிபெயர்ப்பு.

சில குறிப்புகள் கீழே:

போஸ்ட் மாடர்ன் = நவீனக் கடப்பு நிலை. நவீன காலத்தைக் கடந்த நிலை. இதன் முன்னோடி, உடனோடியாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம்= அமைப்பியல் (வாதக்) கடப்பு நிலை. (வாதம் என்ற சொல் அபரிமிதமாகப் பயன்படுத்தப்பட்டு ஒவ்வாமை உண்டாகி இருக்கிறதால் அதைத் தவிர்க்கலாம்.)

அமைப்புகளால் தனிமனிதர் செலுத்தப்படுகிறார், தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ என்ற கருத்தாக்கம் அமைப்பியலின் அடிப்படை. தனிமனிதச் செயலதிகாரம் என்பது கிருஸ்தவ இறையியலில் ஒரு பகுதி. சமூக உறுப்பு என்ற நிலைக்குத் தனிமனிதச் செயலூக்கம்/ திறன்/ அதிகாரம்/ விருப்பம் ஆகியன அடிபணிய வேண்டும் என்ற சர்ச்சிய நிர்ப்பந்தத்தைத்தான் மேற்கண்ட அமைப்பியல் வாதமெனும் ‘செகுலர்’ கருத்தாக்கம் திரும்பச் சொல்கிறது.

சர்ச், என்பதன் வேர்ச்சொல், ‘வலிமையானது, ஆற்றல் வாய்ந்தது,’ எனப் பொருள்படும் keue என்ற பதம். ஆற்றலுக்கும் வலிமைக்கும் அடிபணிவதை அற/ ஒழுக்கக் கட்டாயமாக முன்வைக்காமல், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்களே (மனிதரே) உருவாக்கிய அமைப்புகள் பூதாகாரமாக, செடுக்காக, மிக நுண்ணிய தளங்களிலும், பரிமாணங்களிலும் கூட ஊடுருவி மனித வாழ்வை ஆள்கின்றன, இனி மனிதருக்கு மீதம் இருப்பதெல்லாம் அடிபணிவது, எதிர்ப்பது, உடனோடியபடி தம் தேவைகளை நிறைவேற்றும் சகஜபாவம் கொள்வது போன்ற ஒரு சிலதான் என்கிறது அமைப்பியல்வாதம். கெல்லி எறிவது, மறு உருவாக்கம் செய்வது, மேலாதிக்கம் செய்து நாமே (தனிமனித ஊக்கமே) செலுத்துவது போன்றன எல்லாம் கனவுகள், நடக்க வாய்ப்பில்லை என்ற ஒரு அகங்கார நாச வாதம், அல்லது தொடர் நசிவையே முன்வைக்கும் வாதம் அமைப்பியல் வாதம். இதன் ஒரு சமகால எதிர்ப்பு மரபு இருப்பியல் வாதத்திலிருந்து வந்தது. இருப்பியல் வாதமும் அமைப்பியல் வாதமும் பின்னிப் பிணைந்த நாகங்கள்.

இதன் சில வடிவுகள் இந்திய தத்துவ மரபில் உண்டு. ஆனால் நிலைத்த ஆதிக்க, ஒற்றைப் பெரும் நிறுவனம் இல்லாத, பல்வகை மரபுகளுக்குரிய பாரதத்தில் இவை சர்ச்சிய அமைப்பு வாதமாக உருவெடுக்கவில்லை. மெய்நாட்டம் என்பது தனிமனித விடுதலையை இயற்கையின் பேராட்சியிலிருந்து விடுவிப்பதைப் பற்றிய விசாரங்களாக மட்டும் இருந்தது. தவிர இந்திய மரபுகள் தனி மனிதச் செய்கைகளின் விளைவான உறவுப் பின்னல்களுக்கும் விடை தேட முனைகின்றன. அவற்றைத் துறப்பது, எதிர்ப்பது, அழிப்பது போன்றவற்றோடு அவற்றில் முங்கியிருந்தபடி உலர்ந்த மனிதராவது எப்படி என்பதையும் இந்திய சிந்தனை மரபுகள் யோசித்திருக்கின்றன.

கோஷங்கள் போல அடிக்கடி முழங்கப்படும் யோக, ஞான, பக்தி, கர்ம இத்தியாதி மார்க்கங்கள் இந்த வகை யோசனைகளின் விளைவுகள்தான். எந்த நிலையில் என்ன மனப்பாங்குடன் என்ன அவசரத்துடன் இருந்தாலும் தனிமனிதனுக்கு விடுதலை கிட்டும் என்பதுதான் இந்திய மரபின் நல்ல செய்தி. அறம்/ ஒழுக்கம்/ நன்னயம்/ நற்சிந்தனை/ கருணை/ பேரன்பு என்ற சில தனிமனிதருக்குச் சாத்தியமான, ஆனால் அவர்தம் அதிகாரத்துக்கு மேற்பட்ட, காலம் காலமாகப் பெருகி ஓடும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட அவசிய இருப்பாக உள்ள, சில பொது மறைகளையாவது கவனித்து நடந்தால்தான் அது சாத்தியம் என்றும் உணர்த்துகின்றன.

இப்படி ஒரு சொல்லுக்கு,- அமைப்பியல் என்பதற்கு- நெடிய அர்த்தங்களின் ஆற்றுப்படல் உண்டு. அதைக் கவனிக்க தத்துவத்தைக் கவனித்தால் மட்டும் போதாது. வரலாறு, சமூக அமைப்பு, இறைமை நிறுவனங்கள், அரசமைப்பு போன்றனவற்றின் உடனிணைந்த இயக்கப் போக்குகள் பற்றியும் ஒரு சுதாரிப்பு தேவை. அதை எல்லாம் கடந்து விட அந்த அமைப்புகளை, அவற்றின் தர்க்க நியாயங்களை, நியாயப்படுத்தல்களை கேலிக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்குவதில் துவங்கி, அலட்சியம் செய்வதில் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்கும் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பதில் நீண்டு, வரலாறு என்பதையும் கடந்த கால சாதனைகள்/ சாதிப்புகள் எல்லாவற்றையும் வேரோடு (அ) கருவறுத்துக் கிடத்துவதன் மூலமும் நம்மால் விடுவிப்பைப் பெற முடியும் என்று பல தத்துவாளரும், இலக்கிய விமர்சகர்களும், வரலாற்றாளரும் நம்பினர். சாஸரின் எழுத்திலும் சர்ச்சுக்கு எதிரான இத்தகைய விமரிசனம் உண்டு, எங்கும் அதிகார அமைப்புகள் விவாதத்துக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும்போது இவ்வாறே எதிர்கொள்ளப்படுகின்றன.

தூல உலகின் அதிகாரம் வெறும் பொய்மைகளின் அடுக்கு, சீட்டுக்கட்டு மாளிகை, அதன் அடித்தளத்தையே தகர்க்க வெறும் கெக்கலிப்பே போதும் என்று கூட இருபதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்கள் சிலர் நினைத்தனர். அமைப்புகளின் நிர்வாகிகள் சிறிது காலம் அலங்க மலங்க விழித்து செயலற்று நின்றனர் என்பது உண்மை. ஆனால் வீழ்ந்தது என்னவோ இந்த நிர்வாகிகளும், அவர்களின் ஆணையகங்களும் இல்லை. மாறாக கருத்து வெற்றிடம் ஏற்பட்டு, முன்னேற்றம் என்ற சொல்லே கறை/ குறைப்பட்டுப் போனபின், பக்கவாட்டில் காத்திருந்த மிருக பலம் கொண்ட பழங்கதையாடல் எளிதே ஆணையகங்களைப் பிடித்து விட்டது.

இந்த முறை அந்த பழமை வாதம் முன்பு இருந்த அளவு நெறி/ ஒழுக்கம்/ அறம் ஆகிய கதையாடல்களைக் கூட அவசியமாகக் கருதவில்லை. ஆனால் அலட்சியபாவம் கொண்ட ஒவ்வொருவரிடமும் உள்ளுறைந்த நீண்ட காலக் குழு அடையாள மனோபாவத்தை தூண்டி, அதன் அழிப்பு எத்தகைய இழப்பு என்று சுட்டிக் காட்டி, அவர்களில் கணிசமானவரை ‘முன்னேற்றம்’ என்ற பொய்க்கனவிலிருந்து விடுவித்து, தம் இருப்பைக் காப்பது என்ற புது வேலை/ கடமையில் பிணைக்கப் பணித்து அதில் வெற்றி பெற்று விட்டது. அல்லது ஒவ்வொரு நாடாக வெற்றி பெற்று வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் எதிர்ப்பு இயக்கமாக ‘கட்டுடைப்பைச்’ செய்தவர்களும் இதே அடையாளத்தைத்தான் கிளர்த்தியிருந்தனர். இவர்களே உண்மையை அதிகாரத்தின் கருவி என்று கட்டுடைத்து அதன் நம்பகத்தன்மையைக் குலைத்திருந்தனர்.

ஆக, கடப்பு என்ற சொல் பொருளற்ற சொல்லாக்கம் இல்லை. பிந்தைய என்ற சொல்லை விட கடப்பு என்பது கூடுதலான செறிவு கொண்டது. பிந்தைய என்பதில் எனக்குத் தெரிந்து பொருளேதும் பெற முடியாது. இது வெறும் காலம் தாண்டி புதிதாக வந்த நிலை மட்டுமல்ல.

போஸ்ட்- ட்ரூத் என்பதை- உண்மையைக் கடந்த நிலை என்று கருதிப் பேசுவது நல்லது. தற்போது புழக்கத்தில் உள்ள ‘ட்ரூத்தர்’ என்ற சொல் அவநம்பிக்கையாளர்களைக் குறிப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவர்களால் எந்த உண்மையும் நிறுவப்படுவதில்லை, அதிகாரப்பூர்வ உண்மைகள் சதிவலைப்பின்னல்களாய் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். பின் அதே அதிகார துஷ்பிரயோகம், தீவினைகள், அநீதி ஆகியன வேறு வடிவில் தொடர்கின்றன.

2. மெய்ம்மை என்பதோடு ட்ரூத் என்பதைப் போட்டுக் குழப்பலாமா என்பது என் இன்னொரு கேள்வி. மெய்ம்மை என்பதை நாம் தமிழ் மரபில் எப்படிப் பார்க்கிறோம் என்று யோசித்தல் நல்லது. உண்மை அனேகமாக புறத் தகவல்களின் நம்பகத் தன்மையையும், நம் சாதிப்புகளின் நம்பகத்தன்மையையும் சுட்டும். மெய்ம்மை என்பது நம் கொள்கையோடு, நம் ஒழுக்கத்தோடும், நம் செயல்பாட்டின் நம்பகத்தன்மையையும் சுட்டும். இவற்றில் உண்மை கருத்தளவில் நிற்பது அல்லது/ சிந்தனை அளவில் நிற்பது என்றும், மெய்ம்மை நடத்தையை (மார்க்கம்?) நம்புவது என்றும், இறுதியில் செயல்பாட்டை (கர்மம்?) நம்புவது என்றும் வைக்கலாம்.

இதில் எனக்கொன்றும் பிரமாதத் தெளிவு இல்லை. ஆனால் இரண்டு சொற்களும் ஒன்றே அல்ல என்று நம்புகிறேன்.

3. இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறது. “‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.” இதில் எங்கோ குறை இருக்கிறது. போஸ்ட் ட்ரூத் காலத்தில் புறத்திலிருந்து கிட்டும் வாதங்கள் அகத்தகவல்களை மீறுகின்றன என்று பொருள் கிட்டுகிறது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியைச் சோதித்தால் அதில் கிட்டும் வாக்கியம் இது: ‘Relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief‘. இங்கு ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பதை அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் என்று நீங்கள் ஆக்கியிருப்பது அத்தனை பொருத்தமானதல்ல. ஒப்ஜெக்ட் என்பது அகத்துக்கு அப்பாற்பட்ட புறநிலைப் பொருள். ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பன புறத்திலிருந்து நேரடியாகப் பெறக்கூடிய தகவல்கள், அதே நேரம் அவை வெறும் தகவல்கள் இல்லை, நிறுவப்படக் கூடிய, மாறாத நிலைப்பாடு கொண்ட தகவல்கள். உண்மை என்பதைச் சற்று மேல்நிலைச் சொல்லாகக் கொண்டால், நான் வருணித்த அளவோடு நிறுத்துவது பொருந்தும். அகராதி என்ன சொல்கிறது? புறநிலை கொடுக்கும் நம்பகமான தகவல்களை விட அகத்துறை நம்பிக்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் சுண்டல்களாக விடுக்கப்படும் எழுச்சித் தூண்டல்களே மிக்க தாக்கம் கொண்டு விடுகின்றன என்று சொல்கிறது.

பீட்டர் பொங்கலின் தமிழாக்கம் இதற்கு மாறாக, எதிராகச் சொல்கிறது.

உண்மையில் போஸ்ட் -ட்ரூத் அதாவது உண்மை கடந்த நிலை என்பது உண்மை உதாசீனப்படுத்தப்படுவது, அதுவே நம்பகத்தன்மை இழப்பது, உண்மையை நிலை நாட்ட வழக்கமாக இருக்கும் நிறுவனங்கள், அதிகார மையங்கள், ஆளுமைகள் போன்றாரெல்லாம் தம் செல்வாக்கிழந்து வீழ்ந்து போயிருக்க, பொய்யர்களும், சூதாடிகளும், கயவர்களும், நாடகமாடுவோரும் பரப்பும் எல்லாத் தூண்டல்களும் மிக்க உயிர்ப்பு பெற்று உலவும் நிலை. இந்தத் தூண்டல்கள் பற்பல தளங்களிலும், பல காலங்களிலும், கிட்டத் தட்ட எந்நேரமும் சாதாரணர்களைச் சென்று சேர்கையில் புறத்தகவலின் உண்மை நிறுவல் என்ற முயற்சி தன் செயலின் செடுக்காலேயே தோற்கடிக்கப்படுகிறது. யாரெல்லாம் அதிகாரத்தை நிலைகுலையச் செய்ய அதன் அடித்தளங்களையே சாய்ப்போம் என்று சாகசம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் இன்று நிலைகுலைந்து நிற்கின்றனர். முழுப் பொய் என்பது பாலைவனச் சூரியனைப் போல இரக்கமற்ற எரிப்பைக் கொணர்வது.

4. ஜியாஃப்ரி சாஸர் இல்லை. ஜெஃப்ரி சாஸர் என்ற உச்சரிப்புதான் சரி.

தவிர துவக்கத்தில் சரியாக ஹௌஸ் ஆஃப் ஃபேம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசிப் பத்தியில் ‘புகழ் வீடு’ என்ற கதை என்று உள்ளது. தவிர இந்தக் கவிதையில் மூன்று வீடுகள் பேசப்படுவதாக விக்கி சொல்கிறது. இவற்றில் மூன்றாவதை ஏன் புரளி வீடு என்று பீட்டர் பொங்கல் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. அது பெரும் சப்தம் நிறைந்த வீடாக மட்டும்தான் வருணிக்கப்படுகிறது. அதில் ஓசை திடுமென நிற்கக் காரணம் மிக்க கனம்பொருந்திய மனிதர் ஒருவர் அங்கு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இதை இந்தக் கட்டுரை விட்டுவிட்டது. விக்கியில் ஓரிடத்தில் சில உரையாளர்கள் இந்த நபர் எலியாஹ் என்று கருதுவதாகத் தெரிகிறது. எலியாஹு பற்றித் தெரிய இங்கே பார்க்கலாம். (ஹீப்ரூ உச்சரிப்பு எலியாஹ்/ எலியாஹு என்று வருகிறது. இங்கிலிஷில் இலைஜா என்று பயன்படுத்துகிறார்கள்.)

அந்த ஓசையான வீடு சுள்ளிகளால் ஆனது என்பது ஏற்கத் தக்க விவரணை. ஆனால் அது விக்கர் என்ற தாவரத்தால் ஆனது. விக்கர் என்பதை நாணல், பிரம்புக் கொடி என்று பல தமிழகராதிகள் குறிக்கின்றன. குறிப்பாகத் தமிழ் லெக்ஸிகன் அப்படிக் குறிக்கிறது.

இந்த எலியாஹ் போன்ற நபர் வந்ததும் ஆரவாரம் அடங்குவது என்பதில் நாம் சிறிது கவனம் செலுத்தலாம். அதை எப்படி அறிந்து கொள்வது?

இன்னுமோர் விசித்திரம்.

விக்கியை மேற்கோள் காட்டுகிறேன்- ‘Chaucer remarks that “if the house had stood upon the Oise, I believe truly that it might easily have been heard it as far as Rome.” நாம் ஓசை என்கிறோம், சாஸர் பயன்படுத்தும் சொல் oise.  அது ஃப்ரெஞ்சு, டச்சு உச்சரிப்புகளும், இங்கிலிஷ் உச்சரிப்பும் கொண்ட சொல். இங்கிலிஷில் வாஸ் என்பதாக ஒலிக்கிறது.

oOo

ஒளிப்பட உதவி – House of Fame Intro, GWU Chaucer Class S2015, Youtube

ஹெலன் சிம்ப்ஸன் கதைகள் பற்றி ஒரு சிறு குறிப்பு

பால்கோபால் பஞ்சாட்சரம்

41xpkc6xpdl-_sx331_bo1204203200_

மௌனம், பளிச்சென்றிருக்கும் சமையலறை மேடைகள், புது ஒளி- விழித்தெழுந்து வந்ததால் கண் துல்லியமாகப் பார்க்கும் என்பதால் இப்படி எல்லாம் தெரிகிறது போலிருக்கிறது, பாத்திரங்களைக் கழுவும் எந்திரத்திலிருந்து எடுத்த பளீரில் காஃபி ஃபில்டர்கள். தியானிக்க உதவியாக ஜன்னல் திரைகளை மேலே தூக்கி விட்டதில் இன்னும் பசேலென்று உள்ள தோட்டம், புல்வெளி. பற்பசையின் தாக்கத்தால், நாக்கு துழாவினால் சிறிதும் கொழ கொழப்பு இல்லாத சுத்தத்தில் பற்கள், வாடை இல்லாத வாய், தூய காற்றுக்குத் தயாராக உள்ள மூக்கு என்று உடல் இன்னொரு நாளைக்குத் தயாராக இருக்கிற நிலை.

அடிக்கடி விழிப்பு தட்டியிருந்தாலும்கூட, உறக்கமும் இரவில் கண்ட கனவுகளின் தடயங்களும் புத்தியில் இன்னமும் இருக்கும் பொழுது. நேற்று இரவு படுக்குமுன் சமையலறை மேஜையில் அமர்ந்து படித்த ஹெலன் சிம்ப்ஸனின் மூன்று கதைகள் புத்தியில் புரளும் காலை இன்று. இந்திய பெண்ணியம் மேலை பெண்ணியம் என்று பிரித்து நோக்க முனைந்தால் வேறுபாடுகள் தெரியும் அளவு வேறான எழுத்து. விக்கட் ஹ்யூமர் என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் உண்டு. அந்த வகை நகைச்சுவையைக் கையாள்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

இவருக்குக் கதை சரியாக அமையும் தருணங்களில், புள்ளி போன்ற காயத்தைக் கொடுத்து, ஆனால் உள் பாகங்கள் அனைத்தையும் துணித்து விட்டு வெளிவரும் மெலிய, உறுதியான கத்தி போன்ற நகைச்சுவையாக இருக்கிறது அது. அறுபடுவது ஆண் மையப் பார்வை மட்டுமா, அல்லது சமூக உறவுகளின் கேவலங்களா, அல்லது வாழ்வின் அவலங்கள் எல்லாமா என்று நாம் யோசிக்க வேண்டிய அளவு வீச்சு கொண்டது. அதே நேரம் மட்டுப்பட்ட களம், பாத்திரங்களின் விரிவட்டம், சொற்கூட்டம் என்று அடக்கி வாசித்து சஸ்திர சிகிச்சை செய்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.

நேற்று வாசித்த மூன்றில் ஒன்று சாவையும் நோயையுமே மையமாகக் கொண்டு யோசித்து பயணப் பாதை பூராவும் வாசகரின் கண்ணில் நீர் வழியும் வரை சிரிக்க வைக்கும் கதை.  இரண்டாவது, முதியவர்களைப் பராமரிக்கும் நடுவயதுத் தலைமுறையினரின் அவசரங்களால் ஏற்படும் அவமானமும் அதிர்ச்சியும் பற்றிய கதை. மூன்றாவது, 30களில் நுழைந்திருக்கும் தம்பதியினரின் பிணக்கம் நிறைந்த உரையாடலை, சற்று மறைவில் இருக்கும் நான்கு பதின்ம வயதினர் கண்காணித்து, அந்த உரையாடலில் இருக்கும் சாதாரண நிலை ஒவ்வொன்றையும் ஒரு எஎறிகுண்டைப் போல உணர்வதைக் காட்டும் கதை. தம் எதிர்காலம் இப்படி எல்லாம் அமையக்கூடாது, அமைய விடமாட்டோம் என்று நினைக்கும் அந்த நால்வரும், அந்த ஆபத்தை உணரும் அதே நேரம் உள்ளில் எங்கோ இதிலிருந்து தாம் விடுபட வழியே இல்லை என்றும் உணர்வது போலச் சித்திரிக்கும் கதை. கதை முடிவில் ஒளிந்த நால்வர் ஓட வேண்டிய நேரம் வருகிறது. அவர்கள் ஓடுவதை ஒரு பத்தியில் வருணிப்பவர், என்னவொரு விடுதலை வேட்கை அந்த ஓட்டத்தில் என்பதைச் சுட்டி விடுகிறார்.

எல்லாம் உரையாடல்களும், இடைவெட்டும், அசரீரி யோசனையும் நடத்தும் கதைகள். உறவுகளே மையத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லாம் நம்மை விலகி நின்று கறாராகப் பார்க்க வைக்கின்றன. முடியும்போதுதான் கதைமாந்தர் வேறு யாருமில்லை நாமேதான், நாம் கடந்து வந்த பாதைகள் பலவும் இங்கு உள்ளன என்பது புரியும். ஆனால் உங்கள் வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்தப் பாதைகளில் நொடிக்காமல் ஓரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறதில் நீங்கள் ஆசுவாசம் பெற முடியலாம், அல்லது நொடித்துப் பாதியில் வீழ்ந்து போனதைப் புரிந்து கொண்டு கழிவிரக்கமோ, அல்லது சுயத்தைக் கனிவாகப் பார்ப்பதோ மேற்கொள்ளலாம். அல்லது இத்தனை இரக்கமின்றி அறுத்துச் சிகிச்சை செய்ய வேண்டுமா என்று எழுத்தாளரிடம் சற்றாவது பொருமலாம்.

டொமஸ்டிசிடி என்பது இந்தக் கதைகளின் கரு. இன் த ட்ரைவர்ஸ் ஸீட் என்ற கதைத் தொகுப்பு. அட்டைப் படத்தை இன்று காலை பார்த்தபோது பொருத்தமின்மை பார்வையைத் தடுக்கியது. இத்தனை நுட்ப புத்தி கொண்ட எழுத்தாளர் இந்தக் கதைத் தொகுப்புக்கு இப்படி ஒரு அட்டைப் படத்தைப் போட ஏன் ஒத்துக் கொண்டார் என்று யோசிப்பதால், இதில் வேறென்ன இருக்கும் என்றும் யோசிக்க வைத்தது. வெறும் மர நாற்காலி, பின்னே சுவரில் ஒரு வட்டமான கடிகாரம். அதிலும் கடிகாரப் படங்களில் எங்கும் காணும் வழக்கமான பத்து மணி, பத்து நிமிடங்கள் என்று நேரம் காட்டும் கைகள். பின்புலம் முழுதும் வெண் சாம்பலில் மிக இலேசான நீலம் பாவித்த நிறத் திரை போன்ற தோற்றம். நாற்காலியின் கால்கள் வளைந்து தரையில் பொருந்துவது கொஞ்சம் கோமாளித்தனமாக இருக்கிறது.

நிறைய கதைகளில் கார்களில் செலுத்தப்படும் பயணங்கள் வருகின்றன. ஆனால் படத்திலோ இருப்பது சாப்பாட்டு மேஜை நாற்காலி. இருக்கையில் குஷன்கூட இல்லை. ஒரு கதையின் தலைப்பு இன் த ட்ரைவர்ஸ் ஸீட். அதுதான் புத்தகத்திலேயே சிறிய கதை. ஆறு பக்கங்கள்தான். புத்தகமும் சிறிய அளவு புத்தகம்- உயர, அகல, கன பரிமாணங்களில் சிறியது. ஆனால் விண்ணென்று இழுத்துக் கட்டப்பட்ட கதை. கதை சொல்லும் பாத்திரம் இத்தனைக்கும் காரோட்டும் பாத்திரம் இல்லை. சரி, பொருத்தம்தான் என்று தோன்றியது.

இந்தப் படத்தால் நான் தண்டவாளத்தை விட்டு விலகி வந்திருக்கிறேன். மறுபடி பெட்டிகளைத் தடத்தில் ஏற்றினால், காஃபி போடும்போது, ஹெலன் சிம்ப்ஸனின் கதைகள் மனதில் இன்னும் உலா வந்து கொண்டிருந்தன. அவர் தன் பெண்ணியப் பார்வையில் இந்தச் சமூக அமைப்பு இப்படி பெண் எதிரியாக இருப்பதாகச் சித்திரிக்காமல், அதே நேரம் பெண் எதிர்ப்புத்தனம் அதில் ஊறி வருவதையும் மறுக்காமல் கதை சொல்கிறார். எப்படி பெண்கள் இந்த எதிரி நிலைக்குத் தாமும் துணை போகிறார்கள், அது எதனால் இருக்கும் என்பதையும் அவருடைய அறுக்கும் கத்தி பிளந்து பார்வைக்கு வைக்கிறது.

ஒளிப்பட உதவி- Amazon