பி. ஆர். பாரதி

இரு குறுங்கதைகள் – பித்தன் பாரதி

பித்தன் பாரதி

1

அற்ப உலகம் 

 இரவு நேரங்களில் உலகம் சுழல்வது எனக்கு விநோதத்திலும் விநோதம். காற்று இழைந்துக் கொண்டிருக்கிறது வெளியே. கன்னி வயதை காற்று எட்டிவிட்டதா! இடையைச் சுழற்ற வைக்கும் தசை தரும் வலி! உள்ளபடியே பச்சையாக சொல்லி விட முடியுமா?

நான்கு திசைகளிலும் விதவிதமான மனிதர்களின் ஒலிகள். அவர்களின் கண் எது, காலெது? ஒலிகள் மட்டும் செவிகளுக்குள் ஓயாமல் விழுந்துக்  கொண்டிருக்கின்றன. கூடவே நாய்களும் கூடிக்கொண்டன. நாய்களும் மனிதர்களும் கலந்த காற்றின் ஒலி.

அறையில் விளக்கை  எரியவிட்டுக்கொண்டு இந்த ஜீவராசி. அருகே அரைலிட்டர் தண்ணீர். சம்மணமிட்டு மடித்து உட்கார்ந்துகொண்டு கூரையை தாண்டி எண்ணங்களை உலவவிட்ட படி தனக்குள்ளே பிதற்றிக்கொண்டிருக்கிறது.

வாழ்வது எப்படி? தனக்கு ஒரு நியதி, இயற்கைக்கு ஒரு நியதியா? பூனை  அல்ல, குழந்தை வீரிட்டழும் ஒலி!  நாயும் சேர்ந்து கொண்டது. இயற்கையின் அற்புத சக்தி மனிதர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறதா! வருகிறோம் மடிகிறோம்.

நட்சத்திரங்களை சிமெண்ட் தளக்கூரையின் ஊடாக பார்த்துவிட முடியுமா? எந்த ஐந்து பூதங்கள் வாழவைத்து பார்க்கின்றனவோ! அவையே கட்டுப்படுத்துகின்றன. ஏன்? இரவு  என்னை மட்டும்  விட்டுவைத்துவிடுமா? நகரம் மட்டும் இருட்டாகி விட்டதா! உலகத்தின் ஒரு பாதியே இருட்டாகியிருக்கும். இரவின் நியதியா இயற்கையின் நியதியா என குழம்பிக் கொண்டிருக்கிறது.

கையூன்றி எழுந்து தாளிட்டுக் கிடக்கும் கதவினை திறக்கச் செல்லுகிறது இந்த ரெண்டு கால் விலங்கு. கண்களுக்கே புலப்படாத சிறு துாசு மாதிரி  பூமி கவலையற்று என்னைத் தாங்கி சுழன்றுக் கொண்டிருக்கிறது.

மீண்டும் அந்த பழையவொலிகள்.

கோபம் கொண்டு கட்டிவைத்து அடித்து விட வேண்டும், முடியுமா? செல்போனின் அலறல் ஒலி… அத்தனை கடலையும் சுழற்றி ஒரு நீர்த்துளியாக ஆள்காட்டி விரலின் மீது வைத்து சுழற்றி விட முடியுமா? அவ்வளவு  தோள் வலிமை கொண்ட ஜீவனும் உள்ளதா? ஆசைக் கனவு, மனதின் லட்சியம், எல்லாம் ”உரு”வாக வந்த காதலி.

நட்சத்திரங்கள் மட்டுமா! அறையின் மூலையில் குப்பையும் சுழன்று கொண்டிருக்கிறது. அறை சூழ்ந்த அமைதி. வெளியும் அப்படி இருந்து விடுமா? காலை மடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டது.

உயிருக்கு உயிரான காதலியே. உலக பந்த வலையில் சிக்குண்டு என்னை விட்டோர் நக்ர்வு உனக்கு ஏனோ! நாய் குரைக்கிறது. வீரிட்ட குழந்தை இப்பொழுது கும்மாளமடிக்கிறது. இரயில் நிலையத்தில் இந்நேரம் காத்துக் கொண்டிருப்பாள். பறக்க முடியாத மனித தேகம், அலைந்து திரியும் எண்ணங்கள். எனக்கொரு நியதி, உனக்கொரு நியதியா? சொல்லடி ராவெனும் முண்டையே! எனக்கொன்று உனக்கொன்றா? கூத்தியா சண்டை மாதிரி இந்த மனித ஜீவனும் அந்த ஐந்து  பூதங்களும் மல்லுக்கட்டிக்கொண்டால் என்ன நடந்து விடும்.

காலம் கடந்து கொண்டிருக்க இரயிலின் சக்கரம் எங்கு உருண்டு கொண்டிருக்கும் இந்நேரம்? எத்தனை மனிதர்களோ எத்தனை வாழ்வோ!  வெந்நீர் போட்டு வைக்காம போய்ட்டா, இந்த இரவில் அவசியம் வரணுமா, காலைல வந்தா என்ன?

இரயில் கூவும் சத்தம் நாய் குரைத்தலில் தனித்தறிய முடியவில்லை. அலறிக்கொண்டு ஒரு பெண் தண்டவாளத்திற்கு தலையை கொடுக்கிறாள். ஓலத்தோடு தலை நசுங்குகிறது.

இரயில் சத்தமிட்டு சக்கரத்தை சுழற்றுகிறது.

oOo

2

மாடிப்படிகள்

மழையோ, குளிரோ, வானிலையின் முடிவு எங்கே, தொடர்ச்சி எங்கே? ஒரு இருபது படிகள்தான் என் வாழ்வில் நான் கடக்க நிச்சயமாக விரும்புவது. கேவலம் இருபது படிகளா!. எத்தனை கால நேரங்கள்! துல்லியமாக இவ்வளவு நேரத்தில் நான் வருவேன் என்று கூறிவிட்டால் இந்தப் படிகள்தான் சுணக்கம் கொண்டுவிடுமா! கதிரவன் வருகிறது, தட்டி எழுப்பப்படுகிறேன். எட்டா துாரத்தில் கதிரவன். நேரம் ஆகிவிட்டது, அடடா, வெகுநேரம் ஆகிவிட்டது.

படிகள் மௌனமாக மடிந்து கிடக்கின்றன. இதோ நான் சென்று கொண்டிருக்கிறேன். காலை சென்றேன் மாலை சென்றேன். சற்று முன்பு இரவு உணவு வாங்கி வந்து இப்பொழுதுதான் அமர்ந்திருக்கிறேன்.

மாடிப்படி இருளுக்குள் ஐக்கியமாகி விட்டது. வெளியே குளிர். அதற்கான  போர்வை இருந்தால் நிச்சயமாக இந்த நாற்காலியை விட்டு எழுந்தோடி போர்த்து விடுவேன்.

என்னடா இது மடத்தனம் எவனாவது மாடிப்படியை போர்த்தி விடுவானா? ஒரு குரல். யாரா? இப்படிச் சொல்வது நான்தான், நானேதான்.

என்னைக் காலையில் அவை தாங்கும் என்பதால் இப்பொழுது அதனுடன் உறவாடுகின்றேனா! அல்லது இருபது படிகளைக் கெஞ்சுகிறேனா?

அது எப்படி கிடந்தால் என்ன?

எட்டிப் பார்க்கிறேன். படுக்கை விரிப்பு கசங்கி, எறும்புகள் ஊர்ந்தோடி, சுருண்டுக் கிடக்கிறது. இந்தப் படி, மாடிப்படி.

அது என்னவாக இருக்கிறது? மாடிப்படியாகவே இருக்கிறது.

உறங்கி எழுந்து நாளைக் காலை அதனை மிதித்துச் சென்றுவிடுவேனா! சந்தேகம்தான். இப்படி தோன்றினால் எப்படி? அய்யோ, மாடிப்படி, அய்யோ! அவள் துாங்கியிருப்பாள்.

நான் என்ன செய்வது? மாடிப்படியா குரைக்கிறது? தொலைதுார நாய், அந்த நாய்க்கு என்னவோ! வானம் இரவாகிப் போய் வெகு நேரமாக.

முதுகு மெத்தையோடு உறவாடச் செல்கிறது. நினைவில் மாடிப்படி உறங்கி விட்டது. மேல் மூச்சு, கீழ் மூச்சு, வானம் வெளுத்துவிட்டது. வெகு நேரம் ஆகிவிட்டது! கதிரவன் வானில் கரகோசத்தோடு வெறிபிடித்து வெப்பத்தைக் கக்குகிறது.

இலவச பிண ஊர்தியின் அலறல்? சாலையில் விரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  காய்ந்து போன தேக்கு இலைகளோடு மாடிப்படியினை  மிதித்துக் கொண்டு காலை உணவிற்கு சாலையோர கடைத்தெருவிற்கு விரைகிறான், தொண்டைமான்.