பூவன்னா சந்திரசேகர்

துணையிழந்த கிழத்தியொருத்தி

பூவன்னா சந்திரசேகர்

துணையிழந்த கிழத்தியொருத்தி
இழுத்துப் போட்ட சுருட்டின்
பொறியெடுத்து கனல் கூட்டி
குளிர் காய்கிறான்
பருவம் ஏய்த்து உடைந்தொழுகும்
வானின் துளைகளையெல்லாம்
சாரம் கிழித்து திரையாக்கி
வேடு கட்டுகிறான்
நிரைத்தது போக
மீந்தவை யாவும்
எதுக்களித்து நிற்கும்
சுனை சுற்றி சுருண்டு கிடந்து
அணைக் கட்டுகிறான்
சேரேறி கரையான அவனுக்கு
கிடாயும் பொங்கலும்
எப்போதேனும் கிட்டும்
குறுகிக் கிடந்த உடல் நோக
நேர் நிமிந்தவன்
நெட்டியுடைக்கும் நாளில்
ஊரழியும்.

அப்பாக்களின் கட்டைவிரல் – – பூவன்னா சந்திரசேகர்

பூவன்னா சந்திரசேகர்

மறைந்து கொண்டிருக்கும்
இன்றைய தினத்தின் சூரியனிலிருந்து தான்
அடுப்புக்கு நெருப்பெடுத்து வருவார் அப்பா
சுள்ளிகளைக் கூட்டி
அம்மா வேகவைத்த மரவள்ளிக்கிழங்குகள்
தோலுஞ்சதையுமாய் அப்பாவின்
கட்டைவிரலைப் போலவே இருந்தது
வெந்தும் வேகாமலுமிருந்த அப்பாவின்
கட்டைவிரலை
நான்காய் பகுந்து தங்கைக்கொன்றும்
எனக்கொன்றும் தனக்கொன்றுமாய்
தின்னக்கொடுத்த அம்மா
அப்பாவுக்கான பங்கை மட்டும்
அவரின் புதைமேட்டில்
ஆழத்தோண்டிப் புதைத்துவிட்டாள்
முளைவிட்டச் செடியில் விளைந்திருந்தன
ஆயிரமாயிரம் அப்பாக்களின் கட்டைவிரல்கள்