பெ. விஜயராகவன்

நான் இரையானேன்

– பெ விஜயராகவன்-

சின்னஞ் சிறிய சிறுத்தையது
கன்னங் கரிய உடல் கொண்டு
பதுங்கிப் பாயும் இரை மீது
நகங்களின் கூரோ நடுங்க வைப்பது
குத்தி கிழித்து குடலுருவ வல்லது
தின்று தீர்த்த பின்னாலும்
தீராப்பசி அதன் கண்களில்
மாம்ச ருசி மயக்கம் கொள்ள
மறு இரைக்கு அலைக்கழிப்பு
இரை தேடும் அதன் கண்களில்
பெரு விருந்தாய் நான் விழ
வேறென்ன வேண்டமென
கூர் காட்டும் பல்லினிடைய
உண்ட மாம்சத்தின் உதிரி மிச்சங்கள்
இமைக்காது இரை நோக்கும்
அதன் கண்ணிணூடே
குவிந்தும் விரிந்தும்
ஓர் கரும்பாழ் வழித்தடம்
தடம் பற்றி உள் நுழைந்தே
யுகம் யுகமாய் ஒரு பயணம்
பெரும்பயணம்
கால்கள் சலித்து களைத்து ஓய
கண்டேன் அங்கொரு ஆதியின்
பெருங்காடு
காடு கொள்ள கரும்பூனைகள்
பெரும்பூனைகள்
நான் இரையானேன்
சிறு எலியென

மௌனித்திருக்கிறது

– பெ விஜயராகவன்-

சதுர மதில் குளமது
இரவில் தனித்து
சலனமற்று
மௌனித்திருக்கிறது
பகலில் ரிஷிகளும்
முனிகளும்
இறங்காதிருக்கக்
கடவது.

 

தடதடக்கிறது

– பெ விஜயராகவன்-

ஒரு பின்னிரவில்
தாழிட்ட என் வீட்டுக் கதவுகளை
தடதடக்கிறது இரு கைகள்
தாழ் நீக்க மனமில்லை எனக்கு
அக்கைகள் எழுப்பும் ஓசை
மிகப் பரிச்சயம் என்பதனாலும்
அக்கைகள் கொணர்ந்துச் செல்ல
ஏதுமில்லை என்பதனாலும்

சர்ப்பச்சாறு

– பெ விஜயராகவன்-

வகை வகையென மதுக்குப்பிகள்
வகைக்கொன்றான நிறங்களில்
இன்னும் திறவாத இக்குப்பிகளுள்
எத்தனை சாத்தியங்கள்
இறுக பூட்டிய போத்தலில் உறங்கும்
துளித்துளியாய் சர்ப்பச்சாறு
சுவைத்துத் தீண்டிய நாக்குகள் உமிழும்
எண்ணற்ற விஷத்தின் வீர்ய ரகசியங்கள்

சப்பு கொட்டி சப்தமிட்டது

– பெ விஜயராகவன்-

வெட்டுண்ட விரலில் குருதிப்பிளவு
தக்கது கிடையாமல் தவித்த விரலை
கவ்விச் சப்பும் வாயினுள் கண்டேன்
கனிவாய் நாக்கின் இத ஒத்தடம்.
வெகுநேரம் விரல் ஊறி
சுருங்கி சிறுத்த விரலை இழுத்தேன்
விடுபட்ட வாயினுள்
சுவைத்த நாக்கோ
சப்பு கொட்டி சப்தமிட்டது.