மு. முத்துக்குமார்

கவாஸ்கரும் கபில்தேவும்

மு. முத்துக்குமார்

பரபரத்துக் கொண்டிருந்த கடைவீதிக்கு, சற்றும் பொருந்தாமல் தூரத்தில் ஒரு வாழைமரம் தெரிந்தது. ஸ்டார் ஐஸ் பேக்டரி, ராஜேஸ்வரி ஹோட்டல், ஒரு வங்கி, பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை, மீன் அங்காடியின் நுழைவு வாயில் என அனைத்தையும் தாண்டி தூரத்தில் தெரிந்த வாழைமரத்திற்கு அருகில் வந்திருந்தார் கோவிந்தன். சற்றுமுன் பெய்த மழையால் சேறும் சகதியுமாய் இருந்த சாலையில் நடந்த அயர்ச்சியை, வாழையிலையில் அரும்பியிருந்த மழைத்துளி சற்று குறைத்து கோவிந்தனை ஆசுவாசப்படுத்தியது..

அந்தக் கடையின் பெயர் இப்போது கோவிந்தன் மருந்துக் கடையல்ல. ‘அஜாஸ் மெடிக்கல்ஸ்’ என்று மாறியிருந்தது. “என்ன அங்கிள் இவ்வளவு தூரம்?..மருந்த சொல்லி விட்டிருந்தா நடராஜன்ட்ட கொடுத்து விட்டிருப்பேன்ல…” என்ற ஜாகீரிடம், “பரவாயில்லப்பா…” என்று மருந்து சீட்டை கொடுத்து விட்டு விசாலமான அந்த கடையின் முகப்பிலிருந்த கண்ணாடிப் பெட்டிக்கு முன்னாலிருந்த வாடிக்கையாளர் நாற்காலியில் மெல்ல அமர்ந்தார்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை அக்கடையின் உரிமையாளராக இருந்த நினைவுகள் மேலெழும்பி வருவதை தவிர்க்க நினைத்தாலும், கோவிந்தனால் முடியவில்லை. அப்போதுதான் அஜாஸ் மெடிக்கலுக்கு புதிதாக வந்திருந்த மருந்துகளை சரிபார்த்து உள்ளே அடுக்கிக் கொண்டிருந்த அவர் பேரன் நடராஜன், தன் ஊதாரித்தனத்தால் இக்கடையை தன்னிடமிருந்து இழக்க வைத்த இறந்து போன தன் மகனை நினைவுக்கு கொண்டு வந்தான்.

கோவிந்தன் வாழும் தெரு தலைமுறைகளாக வெளியாட்களை சுவீகரித்துக் கொண்டதில்லை. அவர் ஃபார்மஸிஸ்டுக்கு படித்த காலத்தில் இருந்தே இத்தெரு இப்படித்தான் இருக்கிறது. எதிர் வீட்டில் இப்போதிருந்தால் 90 வயது தாண்டியிருக்கும் சீனிவாசய்யரின் மூன்றாம் தலைமுறை குடியிருக்கிறது. அவருடைய கொள்ளுப் பேரன்கள் நடராஜனுடன் தான் பள்ளி இறுதியில் படிக்கிறார்கள். இத்தெருவிலுள்ள பையன்கள் எல்லாம் கிரிக்கெட் மேல் மோகம் கொண்டு ஈடுபாட்டுடன் விளையாடுவதற்கு காரணம் சீனிவாசய்யர் குடும்பத்திற்கு விடுமுறை தோறும் வந்து போகும் அவருடைய உறவினர் ஒருவர்தான். பக்கத்து வீட்டு ஜாகீர் அவருடைய கண்டுபிடிப்புதான். இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை கபில்தேவ் பெற்றுத் தந்திருந்த காலக்கட்டமது. எண்பதுகளின் நடு. கவாஸ்கரின் ஆட்டம் சற்று தொய்வடையத் தொடங்கிய காலகட்டமும் கூட.

“இந்தாங்க கோவிந்தன் நீங்க கேட்ட ரெண்டு லட்சம்…” என்ற ஜாகீரின் தந்தையிடம், “அபுபக்கர் பாய், இன்னொரு யோசன எனக்குத் தோணுது…” என்றார் கோவிந்தன்.

” சொல்லுங்க கோவிந்தன்…”

” என் பையனும் ஊதாரியா போய்ச் சேந்துட்டான். இனிமே என்னாலயும் இந்த மருந்துக் கடய நடத்த முடியாது. இன்னும் மேல ரெண்டு லட்சம் குடுத்துட்டு நிலத்தோட அந்தக் கடய எடுத்துக்குங்க. உங்க ரெண்டாவது பையன் ஜாகிருக்கு ஒரு தொழில் அமைஞ்ச மாதிரி இருக்கும்…நானும் கடன்காரனாகாம இருப்பேன்…” என்றார் கோவிந்தன்.

நீண்ட யோசனைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு தகராறில் தன் கையையும், வாழ்க்கையையும் இழந்திருந்த தன் மகனுக்கு அது உகந்ததாக இருக்கும் என்று எண்ணி ஒப்புக் கொண்டார் அபுபக்கர்.

ஜாகிரின் பந்து வீச்சு அந்த ஊரில் உள்ள கிரிக்கெட் ஆடுபவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது. எதிரணிகளின் பேட்ஸ்மென்களுக்கு, அவனுடைய தெத்துப் பல்லும் நீண்ட தூரத்திலிருந்து ஓடிவந்து, பந்தை கையிலிருந்து விடுவிக்கும் முன் தேர்ட்மேன் திசையை கண நேரம் நோக்கும் அந்த பெரிய கண்களும் எப்போதும் கபில்தேவை ஞாபகப்படுத்தும். சீனிவாசய்யரின் அந்த உறவினர் தந்த பயிற்சியாலும், ஊக்கத்தாலும் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி அதன் கேப்டனாகவும் இருந்தான் ஜாகிர். கல்லூரியில் தன்னை செதுக்கிக் கொள்வதைவிட தன்னுடைய ரெயின்போ கிரிக்கெட் அணியைச் செதுக்குவதில்தான் நேரம் செலவழித்தான்.

கிரிக்கெட் பிடிபட்டதுபோல் மருந்து வியாபாரம் பிடிபடவில்லை ஜாகிருக்கு. கோவிந்தன் ஆறு மாதங்களுக்கு மேலாக அவனுடன் கடையில் இருக்க வேண்டியிருந்தது.

இலையின் நுனியிலிருந்து புழு தொங்கி ஆடுவது போல் தன் இடது தோளிலிருந்து சின்னதாய் தொங்கிக் கொண்டிருந்த வெட்டப்பட்ட கையின் அடிக்கூம்பு அங்குமிங்கும் ஆட பரபரப்பாய் இருந்த ஜாகிர், “இப்ப ஓரளவுக்கு எல்லாம் புடிபடுது அங்கிள்…” என்று கோவிந்தனின் நினைவுகளை கலைத்தான்.

சாலையில் நிலைகுத்தியிருந்த பார்வையை விலக்கி, மூக்கிலிறங்கியிருந்த கண்ணாடியை சற்று மேலேற்றியவாறு, ஜாகிரின் எஞ்சியிருந்த கையை நோக்கினார் கோவிந்தன்.

“பாழாப் போன அந்த கிரிக்கெட் சண்டைல என் ஊதாரிப் பையன காப்பாத்துறேன்னு, கையத் தொலைச்சுட்டயே ஜாகிரு…” என்று கலங்கியவரிடம், “அதெல்லாம் நான் எப்பவோ கடந்தாச்சு அங்கிள். கை போயும் அண்ணன காப்பாத்த முடியாம போச்சுங்குற வருத்தந்தான் இன்னு இருக்கு…சரி இந்தாங்க உங்க மருந்து. நட்டு, தாத்தாவ விட்டுட்டு வந்துர்ரயா…”

“இல்லப்பா…நானா போயிருவேன்…” என்று மெல்ல எழும்பியவர், “நட்டு, மதியம் சாப்பாட்டுக்கு வந்துரு…” என்று கிளம்பினார். தன் மகனுடைய இடத்தில் ஜாகிர் அமர்ந்திருப்பது தன்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும், அவனிடம் நடராஜன் வேலை செய்வது ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பெரிதும் சோர்வடையச் செய்தது.

நடராஜன் அவர் செல்வதையே சற்று நோக்கி விட்டு மீண்டும் வேலைகளில் தொலைய முயன்றான். அப்பா இறப்பதற்கு முன்னாலும் தாத்தாவின் மருந்துக் கடை வருமானம்தான் அவனையும், அவன் அம்மாவையும் காத்தது. அப்பாவின் அரசாங்க சம்பளம் முழுதும் கிரிக்கெட், சீட்டு விளையாட்டு என்று விரயம்தான் ஆனது என்பார் தாத்தா. அப்பாவிற்கு பிறகு தான் அந்த சம்பளம் அவர்கள் குடும்பத்திற்கு உதவியது, அம்மாவிற்கு கொடுக்கப்பட்ட அரசாங்க வேலை வழியாக. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் இந்த மருந்துக் கடைக்கு வந்துருவான். இங்கு வந்த முதல் கோடை விடுமுறையின்போது தாத்தா அமர்ந்திருந்த இடத்தில் இப்போது ஜாகிர் அங்கிள் இருக்கிறார். இங்கு கிடைக்கும் பணம், அவனுடைய கல்விச் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. அப்பா, இங்கு அமர்ந்திருந்தால் நான் இங்கு வரவேண்டியிருந்திருக்குமா? என்று அவனை எப்போதும் தொந்தரவு செய்யும் கேள்வி ஜாகிர் அங்கிளை பார்த்தவுடன் காணாமல் போய் விடுவது அவனுக்கு எப்போதும் ஆச்சரியத்தையும் விடுதலையுணர்வையும் ஒரு சேர அளிப்பது.

கவாஸ்கர் வரும் ‘ஒன்லி விமல்…’ விளம்பர ஈர்ப்பில் அந்தக் கம்பெனி சட்டையை அடுத்த வருடம் முதல் முறையா கல்லூரிக்கு போகும் போது போடவேண்டும் என்ற நினைப்பையும் ஜாகிர் அங்கிள் நிறைவேற்றுவார் என்று அதிகம் விற்பனையாகும் லோபரட் மற்றும் லாசிக்ஸ் மாத்திரைகளை எளிதில் எடுக்குமிடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான்.

கடையின் இரும்பு சுருள் கதவை நடராஜன் மேலிருந்து இழுத்து பூட்டியபோது, இரவு மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. கடைவீதி கிட்டத்தட்ட காலியாயிருந்தது. ராஜேஸ்வரி ஹோட்டல் மட்டும் திறந்திருந்தது. அங்குதான் பெரும்பாலும் இவர்களிருவருக்கும் இரவுணவு.

“அதென்னடா, கவாஸ்கர் மேல இவ்வளவு ஈர்ப்பு…” என்ற ஜாகிரிடம், ” வீடு ஃபுல்லா அவர் போட்டாவத் தான அஙகிள், அப்பா ஒட்டி வச்சிருந்தாரு… உங்களுக்கு தெரியாதா?… அப்பா போனதுக்கப்புறம் தாத்தா எல்லாத்தயும் கிழிச்சுப் போட்டுட்டாரு…அப்பாவும் கவாஸ்கரும் இன்னமும்…”

“… ம்ம்ம்… உங்கப்பா அசாருதின் மாதிரி உயரமா இருக்குற ஒரு கவாஸ்கர்டா. இவன் பேட்ல மேக்னட் எதுவும் வச்சுருக்கானாடாம்பாரு சீனிவாசய்யரோட வீட்டுக்கு வர்ர சொந்தக்காரர். அவன் பேட்டு போகுற இடத்துக்கெல்லாம் பந்து போகும்.. அதுவும் அந்த பேக் ஃபுட்ல போய் ஃபிளிக் பண்ற ஸ்டைல பாத்து அப்படியே அசந்து போயிருவோம். அவனோட பேட், சில சமயம் அவனோட கையோன்னு தோணும்… பௌலரோட ரன்னப், கையில பந்து வச்சுருக்கிற விதம் இத எல்லாத்தயும் வச்சு பந்து எங்க விழும்ங்கறத அவனால துல்லியமா கணக்கு போடமுடியும். உங்கப்பா ஒரு கிரிக்கெட் ஜீனியஸ்டா. உங்க தாத்தா கடைசிவர இத புரிஞ்சுக்கல. சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு, அவரோட விதவை தங்கச்சி பொண்ண. கவர்மெண்ட வேலயும் வாங்கி கொடுத்துட்டாரு. ரெண்டுலயும் உங்கப்பாவால ஒட்ட முடியல…

“உங்கப்பா போனதோட என்னோட ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் போயிடுச்சி… எளவு அன்னக்கு மட்டும் உங்கப்பாவுக்கு ரன் அவுட் கொடுத்துருந்தா, நார்த் ஸ்டார் கிளப்பு ஜெயிச்சுருப்பாங்க. உங்கப்பாவோட உயிரும், என்னோட கையும் மிஞ்சியிருக்கும். நம்ம ஊர் எம்எல்ஏ பேர்ல நடக்குற பிரமாண்டமான கிரிக்கெட் டோர்ணமென்ட் அது. பெரிய பெரிய ஊர்ல இருந்தெல்லாம் வந்து விளையாடுவாங்க.”

“என்னப்பா மேட்லாம் இல்லயா, டர்ப்லதான் ஆடணுமா? கிரிக்கெட் பாலா இல்ல கார்க் பாலா…” என்று ஏளனம் செய்யும் நகர அணிகளின் தொழில் முறை ஆட்டக்காரர்கள் ஒரு போட்டிக்குப் பின் ஆச்சரியமடைந்து ஜாகிரிடம் ஆடுகளம் தயாரிக்கப்பட்ட விதத்தை கேட்டறிந்து வியப்பார்கள். ஆறு மாத இடைவிடா பணியிது. ஜாகிரும், அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் இந்த டோர்ணமென்டில் ஆடுவது, அதை நடத்துவது, அதற்கான தயாரிப்பில் ஈடுபடுவது என்றே வருடம் முழுதுமிருப்பார்கள். படிப்பு, வீடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே.

ஒவ்வொரு முறையும் ரெயின்போ கிளப், இறுதி ஆட்டம் வரை வந்து விடும். ஆனால், கோப்பையை மட்டும் வென்றதில்லை. ஏதாவது ஒரு வெளியூர் அணிக்கே கோப்பையும் ரொக்கப் பரிசான 25001 ரூபாயும் கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகைக்காகவே, அந்த ஊர் எம்எல்ஏ பெயரில் இந்த டோர்ணமென்ட் நடத்தப்படுகிறது. நடராஜின் அப்பா கொல்லப்பட்ட அந்த ஆண்டும் இறுதி வரை முன்னேறியிருந்தது ஜாகிரின் ரெயின்போ கிளப்.

அந்தக் கண்மாயை போர்த்தியிருந்த இருளாடை, மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. எப்போதாவது வெள்ளம் வந்தால் மட்டுமே கிட்டத்தட்ட பத்து கி.மீ சுற்றளவுள்ள முழுக்கண்மாயும் நிரம்பும். ஊரையும், கண்மாயையும் ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தது ரயில் தண்டவாளம். அந்த அதிகாலையிலும், இருவர் மிகப் பெரிய இரும்பு உருளையை, மெதுவாக அக்கண்மாயிலுள்ள ஆடுகளத்தின் மேல் உருட்டிக் கொண்டிருந்தார்கள். நேற்றைய ஆட்டத்தின் சுவடுகள் அந்த உருளையின் கனத்தில் மறைய, சுற்றியிருந்த பசும்புல் பரப்பால் புதுப்பொலிவு கொள்ள ஆரம்பித்தது ஆடுகளம். ஒரு ஐந்தாறு பேர், எல்லைக் கோட்டிலிருந்து ஆடுகளம் நோக்கிப் பரந்திருந்த அப்பசும் புல்பரப்பில் குனிந்து தேவையற்ற கற்களையும், சிப்பிகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஊரின் முடிவில், இயற்கையாகவே அமைந்த இந்த கிரிக்கெட் மைதானம், மிகப் பெரிய கொடை. சாலையிலிருந்து ஏறி தண்டவாளத்தைத் தாண்டி இறங்கினால் ஒரு கி.மீ. தொலைவில் மைதானத்தின் எல்லைக் கோடு வந்து விடும்.

செயற்கையை பராமரிப்பதைவிட இயற்கையை பராமரிப்பது மிகக் கடினம். இதைச் செம்மையாகச் செய்வது, ஜாகிரும் அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் தான். இறுதி ஆட்டத்திற்கான ஆடுகளம் கிட்டத்தட்ட தயாராயிருந்தது. எல்லைக் கோட்டைத் தாண்டி உருட்டி நிறுத்தப்பட்டிருந்த, இரும்பு உருளை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. எல்லைக் கோடு முழுவதும், ‘V’ வடிவத்தில் ஆழமாக வெட்டப்பட்டு சுண்ணாம்பால் நிரப்பப்பட்டு, பல வண்ணச் சிறு கொடிகளை சீரான இடைவெளியில் ஏந்தியிருந்தது.

நார்த் ஸ்டார் கிளப்பும் உள்ளூர் அணி எனபதால், இந்த தடவையாவது வெற்றிபெற வேண்டிய அழுத்தம் ரெயின்போ கிளப்பிற்கு அதிகமாக இருந்தது. காலையின் மென்வெயில் தற்போது சுட்டெரிக்க, ஆடுகளம் இறுகி பந்துகள் இடுப்பளவு எகிற ஆரம்பித்தன. அதிலும், ஜாகிரின் அவுட் ஸ்விங்கர்கள் விசேஷமானவை. நார்த் ஸ்டாரின் விக்கெட்டுகள் சீரிய இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தன. ஆட்டத்தின் கடைசி ஓவர் வரைக்கும் கூட இரண்டு சிலிப்கள் இருந்தன. முதல் ஸ்லிப் எப்போதும் நடராஜின் அப்பாவுக்கானது. பேட்ஸ்மென்களின், பேட்டைத் தவிர வேறெங்கும் நோக்காத அவன் சிலிப் கேட்சுகளை தவற விடுவதேயில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவரில், எட்டு விக்கெட்டுகளை இழந்து, நூற்றி எழுபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது நார்த் ஸ்டார். எளிதான இலக்கை விரட்டிய ரெயின்போவினர் திணறினார்கள். ஒரு முனையில் விக்கெட்டுகளாக விழுவதை, மறுமுனையில் துவக்க ஆட்டக்காரனான நடராஜின் தந்தையால் வேதனையுடன் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. பெரும்பாலும் அவனை எதிர்முனையில் வைத்திருக்கவே நார்த் ஸ்டார் முயற்சித்தனர். இருந்தும், அவனுடைய கவர் டிரைவ்களாலும், ஃபிளிக்குகளாலும் நூற்றைம்பதை தாண்டியிருந்தார்கள் ரெயின்போ. ஆறு ஓவர்கள் மீதம் இருந்தது, கையில் இன்னும் மூன்று விக்கெட்டுகள் இருந்தது. வழக்கம் போல், தன்னை பேட்டிங் முனையில் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்த ஓவரின் கடைசிப் பந்தை, சார்ட் மிட் ஆன் திசையில் நளினமாக தட்டி விட்டு விரைந்து ஓடினான். அவன் எதிர்பாராத விதமாக, சார்ட் மிட் விக்கெட் திசையில் இருந்த ஃபீல்டர் பாய்ந்து அந்த பந்தை தடுத்தெடுத்து ஸ்டம்புகளை நோக்கி வீச, என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறி கிரீசைத் தொடுவதற்குள் ஸ்டம்புகள் சிதறியிருந்தன.

“அது ரன் அவுட் தாண்டா…. ஆனா நாங்க ஜெயிக்கணும்னு அம்பயர் தான் அவுட் தரல… அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்…” என்று கலங்கிய ஜாகிரின் பெரிய கண்களில் தானும் கலங்குவதை பார்த்தான். தன் தந்தையை கடைசியாக தாங்கிப் பிடித்த மிச்சமிருக்கும் அந்தக் கையை கலக்கத்துடன் இறுக்கிப் பிடித்தவாறு ராஜேஸ்வரி ஹோட்டலில் இருந்து வெளியேறினான் நடராஜன்.

செய்வலர்: செமிகோலன்

வெயில் சாலை – முத்துக்குமார் சிறுகதை

ஓங்கியெழுந்து அடங்கும் அலைகளை பாதியில் உறையவைத்தது போலிருந்தது, இருபக்கங்களிலும் உயர்ந்த மலைக்குன்றுகளை கரையாகக் கொண்டிருந்த அந்தச் சாலை. வாகன அரவமற்ற அந்த நண்பகல் நேரத்து நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு, இருபுற மலைக்குன்றுகளும் அவற்றை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போலிருந்தது. இந்தியத் தத்துவமரபின் மேல் திடீர் காதல்கொண்டு ஆதிசங்கரர் அத்வைதம் தியானம் என திழைத்திருந்த வைரவன் பெரும்பாலும் பயணங்களில் பயணிக்கும் வாகனத்தின் வெளியே தன்னை ஒன்ற வைத்துக்கொள்வார். ஆனால் அவற்றோடு ஒன்றமுடியாமல் இன்று சற்று நிலைதடுமாறியிருந்தார்.

என்ன சார், திடீர்னு பேசுறத நிறுத்திட்டீங்க? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?”

எதற்காக பிரகாசம் என்னிடம் அந்த கேள்வியை கேட்கவேண்டுமென்ற நினைப்பு, வாகனத்தில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியையும் தாண்டி எரிச்சலை உண்டாக்கியது வைரவனுக்கு.

ஒன்னுமில்ல பிரகாசம் . இன்னும் எவ்வளவு நேரமாகும்..?”

ஒரு 3 மணி நேரத்துல போயிடலாம் சார்..” என்ற பிரகாசம் சாலையிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

என் பொண்ணுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சுடுக்கு சார் என்று சொல்லிவிட்டு, உங்க பையன நீங்க ஏன் சார் மெடிக்கலுக்கு முயற்சி பண்ணச் சொல்லல என்று ஒட்டுநர் பிரகாசம் வெகுளித்தனமாகக் கேட்ட அந்த கேள்வி மீண்டும் நினைவில் வந்து வைரவனை எரிச்சலூட்டியது.

சரி. நான் கொஞ்சம் தூங்குறேன்” என்று அமர்ந்திருந்த முன்னிருக்கையை சற்று பின் தள்ளிச் சாய்த்து சாய்ந்தார். நண்பகல் வெய்யிலில் துளி மேகமுமின்றியிருந்த வெளிர்நீல வானத்தின் பிரகாசம் கார்க்கதவின் கண்ணாடியையும், வைரவனின் முகம் நிறைத்த குளிர் கண்ணாடியையும் தாண்டி அவர் கண்ணைக் கூசச் செய்தது. இந்த வானத்தைப்போல நிர்மால்யமாய்த்தான் தன் மனதும் இருந்ததாக தான் எண்ணியது தவறோ என்ற நினைப்போடு அருகிலிருந்த பிரகாசத்தை உற்றுநோக்கினார்.

இப்ப என் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கான். ஒண்ணும் வித்தியாசமா தோணலை. ஆனால் தன் மகள் நிவேதாவோடு வீட்டுக்கு வந்து அவளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை பெருமையாகச் சொல்லி என் பக்கத்தில் அமர முயன்றபோது மட்டும் எனக்குள் எழுந்த விலக்கமும் எரிச்சலும் வித்தியாசமாகத் தோன்றியது. “அப்பா..தள்ளிக்குங்க..” என்று பிரகாசம் அமருவதை நாசூக்காக தடுத்து என் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்றுக்கொண்ட நிவேதாவின் புரிதல் ஆச்சரியத்தையளி்த்தது. அவளுக்கு நம்முடைய உள்ளுணர்வு புரிந்திருக்குமோ என்ற அச்சவுணர்வு இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டிக்கு அதிக வேலை கொடுத்தது. சூரிய ஒளியில் கூசியிருந்த கண்களோடு சேர்த்து உடம்பும் கூசியது. கைகளும் குளிரில் சற்று மரத்துப்போனது போலிருந்தது.

இந்த குளிரூட்டிகளின் மேல் வைரவனுக்கு இருக்கும் காதல் அலாதியானது. பள்ளிகால கோடை விடுமுறை நாட்களில், குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைக்கு சென்ற மௌலானா பாயின் ஐஸ் ஃபேக்டரியில் ஆரம்பித்தது இந்த காதல். தண்ணீரை வெவ்வேறு வடிவங்களில் பனிக்கட்டிகளாகச் சிறைப்படுத்தி விற்பனை செய்யும் தொழிற்சாலைகள், குளிர்சாதன தொழிட்நுட்பங்கள் வளர்ச்சியுறாத 80ளில் மிகவும் பிரபலம். பெரும்பாலும் மீன் வியாபாரிகளும், கோடைகால நன்னாரி சர்பத் கடைகளும், மருத்துவமனை பிணவரைகளும் இத்தொழிற்சாலைகளின் வாடிக்கையாளர்கள். 24 மணிநேரமும் இயங்கும் மௌலானா பாயின் இந்த குட்டித்தொழிற்சாலையில் கிடைத்த 300 ரூபாய் வருமானம் வைரவனின் அடுத்த வருட ஒட்டுமொத்த கல்விச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது.

ஏன் சாதிக்மணி பத்தாச்சு இன்னும் வைரவன் கடைக்கு வரலை…”

இல்ல மௌலானா பாய்..நேத்திக்கு நைட் அவந்தான் டியூட்டி பார்த்தான். காலைல 8 மணிக்கு வந்து நான்தான் மாத்திவிட்டேன்..”

ஏண்டா..இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்.. காலைலயும் பார்த்துட்டு நைட்டும் எப்படிடா எளவு வேல பாக்கமுடியும்…”

பாய்அவனுக்கு இந்த வேல புடிச்சுப்போச்சு பாய். நைட்ல அசராம அத்தன பாக்ஸுலயும் தண்ணி ஊத்தி ஐஸாக்குற தொட்டில இறக்கி ஐஸானவொடனயே வெளிய எடுத்து..திரும்பவும் நிரப்பி… கையெல்லாம் மரத்துப்போய்என்னதான் இதுல அவனுக்கு ஆர்வம்னு தெரியல பாய்…”

மௌலானா சிரித்து அமைதியானார்.

மடக்கியிருக்கும் மடிக்கணினி வடிவிலிருக்கும் அந்த உறுதியான அலுமினியப்பெட்டிகளின் வாய்ப்பகுதியை விரல்களால் பற்றி அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ஒருசேர அமிழ்த்தியெடுத்து நிறைப்பதில் மடித்துக் கட்டியிருக்கும் ராசியான பச்சைநிற கட்டம் போட்ட கைலியும் தண்ணீரால் நிறைந்து நனைந்து சற்று உப்பியிருக்கும். கனத்திருக்கும் அப்பெட்டிகளை தூக்கிச் சென்று கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் குளிர்ந்த நீரால் நிரப்பட்ட மிகப்பெரிய மரக்கலனின் ஒரு நிரலில் அடுக்கிவிட்டு, அடுத்த நிரலுக்கான அலுமினியப் பெட்டிகளைத் தொடும்போது கைகளிரண்டும் முற்றிலும் மரத்தி்ருக்கும். அறையின் வெப்பநிலையிலி்ருக்கும் தண்ணீ்ரை மீண்டும் அப்பெட்டிகளில் நிரப்பும்போது மரத்திருந்த கைகள் அத்தண்ணீரின் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு தளர்வது ஒரு அலாதியான சுகம். ஆனால் இச்சுகம் அந்த மரக்கலனின் அடுத்த நிரலை இப்பெட்டிகளால் நிரப்பும்வரைதான். மீண்டும் அடுத்த நிரலுக்கான நடையெனத் தொடர்ந்து கடைசியாக 12வது நிரலை எட்டும்போது, இருகைகளிருக்கும் உணர்வே அற்றுப்போயிருக்கும்.

ஒருநாள் ஆர்வம் மிகுதியால் இந்த குளிரூட்டிகளுக்கு பின்னாலிருக்கும் அறிவியலை தெரிந்து கொள்ள முற்பட, அதற்கு மௌலானா பாய், என் உள்ளங்கையில் சிறு பனிக்கட்டித் துண்டை வைத்து கை குளிர்ந்ததும் “எதுடா குளிர்ச்சியா இருக்கு? கையா இல்ல ஐஸ்கட்டியா? “ என்று கண் சிமிட்டினார்.

ஐஸ்தான் பாய் குளிர்ச்சி…”

அப்ப கை ஏலேய் குளிருது…”

அப்போது எனக்கு ஆதிசங்கரர்லாம் தெரிந்திருந்தால் ‘என் கை குளிர்ச்சியானதால ஐஸ் குளிர்ச்சின்னு சொல்றேன் பாய்எனது புலன்கள் வேலை செய்வதால் ஐஸ் கட்டி குளிர்ச்சியா இருக்கு. இல்லன்னா உறைந்த இந்த கட்டியும் உருகும் இரும்புத்துண்டும் ஒண்ணுதா”ன்னு அத்வைதத்தை குழப்பியடிச்சிருப்பேன்.

ஆனால் தத்துவமோ அறிவியலோ அறிந்திராத அப்பருவத்தில் குழம்பி விழித்த என்னிடம், “இயற்கையோட விதிப்படி எல்லாமே தன்னோட சமநிலைக்கு வந்தாகனும். இதத்தான்லகார்ல் மார்க்ஸும் சொல்லுராரு…”

புரியாமல் முழித்த என்னிடம், கையின் அதிக வெப்பநிலை தன்னுடைய வெப்பத்தை, தன்னைவிட குறைந்த வெப்பநிலையிருக்கும் பனிக்கட்டிக்கு விட்டுக் கொடுத்து விடும் வெப்பக் கடத்தல் விதியைப் பற்றி விளக்கிச் சொன்னார்.

பாய்ட்ட எதக் கேட்டாலும் மார்க்ஸ்லெனின்னு புரியாத பாஷையிலயே பேசுவாரு. அவரோட பையன் ரஷ்யாவுல டாக்டருக்கு படிச்சதனால கூட இருக்கலாம். ஆனால் என்னையெல்லாம் ஒரு புழு மாதிரிதான் பார்ப்பாரு மௌலானா பாயின் டாக்டர் பையன். அவ்வளவாக படிப்பறிவில்லாத மௌலானா பாயிடமிருக்கும் சமத்துவ உணர்வு, அவரோட பையனிடமில்லையென்று அப்போதே விவரமறிந்த சாதிக் சொல்லுவான்.

எங்ககூட பாய் உட்கார்ந்து சாப்பிடறத பார்த்த நாள்ல இ்ருந்து, இந்த ஆளு பாயோட வீட்டுல சேர்ந்து சாப்புடுறதயே வுட்டுட்டுறார்னா பாத்துக்கயேன்…” என்ற சாதிக், இங்குள்ள சாதி சார்ந்த இடஒதுக்கீட்டு குழறுபடிகளால் அவர் +2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் இங்கு எந்தக் கல்லூரியிலும் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் விரக்தியுடன் இப்படிப்புக்காக ரஷ்யா வரை பய​​ணிக்க நேர்ந்ததையும் கூறினான்

சில வருடங்களுக்குப் பிறகு எனக்குச் சிறந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியை மௌலானா பாயிடம் பகிர்ந்துகொண்டபோது அங்கிருந்த அவருடைய டாக்டர் பையனின் முகத்திலிருந்த வெறுப்பு சாதிக் சொன்னதை எனக்குப் புரியவைத்தது. இது தனக்கு கீழே இருப்பவர்கள் எப்போதும் அங்கேயே இருக்க வேண்டுமென்றெண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலையின் எச்சம் என்பதையும் இப்போது வைரவனால் புரிந்துகொள்ள முடிகிறது.

காரின் இருக்கையில் சாய்ந்தவாரே குளிரூட்டியின் வேகத்தை குறைக்க மரத்துப்போன கையை நீட்ட முயன்று முடியாமல் “பிரகாசம், ஏசிய ஒரு பாயிண்ட் குறைப்பா…” என்றார்.

தன் கைகள் குளிரால் மரத்துப் போகுந்தோறும் மௌலானா பாயும், அவரின் ஐஸ் ஃபேக்டரியும்தான் இப்படி வைரவனின் நினைவடுக்களிலிருந்து மேலெழும்பும்.

அங்கு ஆரம்பித்த அந்த புரிதலும் உழைப்பும் தான் இந்த 50 வயதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெப்பமாற்றிகளை (Heat Exchangers) தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்க வைத்திருக்கிறது வைரவனை.

பிரகாசம் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே வைரவனுக்குப் பரிட்சயம். இன்னமும் கார் ஓட்டத் தெரியாத வைரவனுக்கு அப்போதிலிருந்தே பிரகாசம்தான் ஆஸ்தான ஓட்டுநர். ‘’என்ன சார் இன்னும் ஏன் ஆட்டோலயே வர்ரீங்க ஒரு கார வாங்குங்க..” என்று வைரவனுடைய முதல் காரை வாங்கத்தூண்டியதும் பிரகாசம்தான். கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவும் முடியாமல்; ஓட்டுநர்களும் சரிவர அமையாமல் மீண்டும் பிரகாசத்தின் ஆட்டோவையே நாடியபோது, தன் சொந்த ஆட்டோவை வாடகைக்கு விட்டு விட்டு வைரவனின் காரை நிரந்தரமாக ஓட்ட ஆரம்பித்து பத்து பண்ணிரெண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அகோர பசிகொண்டு எதிர்வரும் சாலையை உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது வண்டி. ‘நினைவோ ஒரு பறவை…’ என ராஜாவின் இசை சிறகடித்துக் கொண்டிருந்தது வண்டியினுள். வைரவனின் மரத்திருந்த கை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மறுபடியும் சமீப நாட்களாக பிரகாசத்தின் வழியாக தன்னுள்ளிருக்கும் அந்த ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுவதையுணர்ந்து சற்றுக் குறுக ஆரம்பித்தார். நான் மௌலானா பாயிடமிருந்து மட்டுமல்ல அவருடைய டாக்டர் பையனிடமிருந்தும் என்னையறியாமல் சிலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்த வைரவனுக்கு ‘நமக்குள்ளிருக்கும் ‘நாமறியாவற்றைப் பொறுக்கி எடுப்பதுதான் தியானம் என்கிறார்கள்’ என்று எங்கோ படித்த சொற்றொடர் நினைவுக்கு வந்தது.

மழைமாலைப் பொழுது

மு. முத்துக்குமார்

பக்கவாட்டில், பளிச்…பளிச்… என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களைத் துளைத்து வெட்டிச்சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரச் சாலை திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளைப் போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டின அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாளாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின் சற்று மேடிட்டிருந்த வயிற்றைத் தடவினேன்.

பாமரனையும் கவிஞனாக்கும் அந்த மழைமாலைப் பொழுது பயணத்தில் என் தோளில் சாய்ந்திருந்தாள் காவ்யா. ஒரு வாரத்திற்கு முன் நான் கல்யாணம் செய்து கொண்ட, என் இரு வருட சென்னை வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்து கொண்ட காவ்யாவை முதன் முதலில் சந்தித்ததும் இதுபோலொரு ஷிபுயாவின் மழைமாலைப் பொழுதில்தான்.

நெரிசல் மிகுந்த ஷிபுயாவின் பளிங்குத் தெருக்கள் வானுயர் கண்ணாடி கட்டிடங்களை சீராக வெட்டி இருபுறமும் பிரித்து குறுக்கும் நெடுக்குமாக வார இறுதியின் மக்கள் திரளை ஏந்தி நீண்டு கொண்டே சென்றது. அத்தனை பேரின் முகங்களும் ஏதோவொன்றை அடையப்போகிற எதிர்பார்ப்பில் அங்குமிங்கும் பரபரத்துக் கொண்டிருந்தன.

பெரும்பாலும் கேளிக்கை மற்றும் உணவு விடுதிகளே அங்குள்ள தெருக்களின் இருபுறமும் நிரம்பியிருந்தன. நான்கு வருட ஜப்பானிய வாழ்க்கையில் டோக்கியோவிலுள்ள ஷிபுயாவின் இத்தெருக்கள் மிகப் பரிச்சயமாகியிருந்தன. ஆரம்ப நாட்களிலிருந்த ஆச்சரியமும் பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இப்போது முற்றிலுமாக இல்லாமலாகியிருந்தது. இதற்கு இங்குள்ள தெருக்களின் ஒருமுகத்தன்மையும் ஒழுங்கும் ஒரு காரணமாயிருக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ தூரத்திலிருக்கும் கவாஸகி நகரை அப்படியே பிரதியெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த ஷிபுயா. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் சென்னை தெருக்களின் பன்முகத்தன்மை இப்போது மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

“ஹேய் கதிர்…” என்று என்னைக் கண்டு கொண்ட சுரேஷை நோக்கி கையசைத்தவாறே புன்னகையுடன் நெருங்கினேன். அந்த மழைநெரிசலில், கவிழ்ந்திருந்த கருமேகங்களை கூர்முனை கொண்ட தடித்த ஊசியால் ஏந்தியது போலிருந்த பெரிய குடையோடு அவன் நின்றிருந்த உணவு விடுதியை அடைவதற்குள் நிறைய பேரிடம் ‘சுமிமா-சென்’ (மன்னிப்பு) கோர வேண்டியிருந்தது. விடுதிக்குள் நுழைந்து கருமேகக் குடைகளை மடக்கி அதிலுள்ள நீர் வழிவதற்கு வசதியாக இருந்த இரும்பாலான கூடையில் வைத்துவிட்டு, மழை மேலாடைகளையும் அதற்கென பிரத்யேகமாக உள்ள தாங்கிகளில் விட்டு விட்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்ட மூவரமரும் மேசையில் அமர்ந்தோம்.

இன்னொரு இருக்கை சுரேஷின் மனைவி டகுச்சிக்காக காத்திருக்க, பணிவான புன்னகையோடு எங்களை நெருங்கிய கருப்புடையிலிருந்த சிப்பந்தியிடம், எங்களுக்கான பானங்களையும் உணவையும் வரவழைக்கச் சொல்லி காத்திருந்தோம். தன் கையிலிருந்த கையடக்க மின்னணுக் கருவி வழியாக அவற்றை சமையலறைக்குத் தெரிவித்துவிட்டு, தன் முழங்காலுக்குச்சற்று மேலிருந்து இடுப்புவரை நீண்டுபின்னோக்கி கட்டப்பட்டிருந்த வெள்ளைத் துணியின் பாக்கெட்டிற்குள் மிக இலாகவமாக அக்கருவியைச் செருகி மாறாத அப்பணிவான புன்னகையுடன் விலகினார் அச்சிப்பந்தி.

விடுதியின் தரைதளத்தில் அமர்ந்திருந்த எங்களுக்கு அங்குள்ள இரைச்சலும் கூச்சலும் அறையெங்கும் பரவி முதல்தள கூரையில் முட்டிச்சிதறி ஒருவித ஆற்றலைத் தந்தன. வாரநாட்கள் முழுவதும் ஆழ்ந்த தியானத்திலிருப்பது போன்ற நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு சூழல். தன்னை முழுவதும் திரட்டி எதையாவது விவாதித்துக் கொண்டேயிருந்தார்கள். அனைவரின் மேசைகளிலும் மகிழ்ச்சியும் மதுவும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இதையெப்படி நம்மூரில் கலாச்சார சீரழிவு என்கிறார்கள் என்ற வியப்பு இங்கு வந்த நாள்முதலே உண்டு.

“என்ன கதிர்… வழக்கம்போல சுற்றுப்புறத்தை கூர்ந்து நோக்கலா? “

“இல்ல… சென்னைக்கு திரும்ப போயிடலாமான்னு நினைக்கிறேன்…” என்றதும் சுரேஷ் சற்று திடுக்கிட்டு முன்னகர்வதற்கும், கண்ணாடி கோப்பைகளில் நுரைததும்ப எங்களுக்கான பீர் கொண்டு வரப்படுவதற்கும் சரியாக இருந்தது. கோப்பையை பற்றிக்கொண்டு “சியர்ஸ்…” என்றதற்கு “கம்பாய்…” என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு அதே திடுக்கிடலுடன் “ஏன் தீடீர்னு?“ என்றான்.

பேச எத்தனிப்பதற்குள் “ஹலோ கதிர்…” என்று கன்னக்குழி புன்னகையோடும், இடுங்கிய ஆர்வமான கண்களோடும் டகுச்சி எங்கள் மேஜையை நெருங்கினாள். நீண்ட தோள்பையை இலாகவமாகச் கழற்றி நாற்காலிக்கு மாற்றிவிட்டு அமர்ந்தாள். எனது பதில் புன்னகையை ஏற்றுக்கொண்டு, “மன்னிக்கனும்… வகுப்பு முடிய தாமதமாயிற்று,” என்றவாறு தனக்கான உணவுகளை வரவழைக்கச் சொல்லிவிட்டு “என்ன… ரொம்ப முக்கியமான விஷயம் பேசுறீங்க போல” என எங்களிருவரையும் நோக்கினாள்.

டகுச்சி ஒரு மொழி ஆராய்ச்சியாளர். இங்கு வேலைநிமித்தம் வரும் வெளிநாட்டவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்பிக்கும் ஆசிரியையும்கூட..தகுதியானவர்களிடமிருந்து முறையாக ஆங்கிலம் கற்றுக்கொண்டவள். சுரேஷூம் நானும் அவளிடம்தான் ஜப்பானிய மொழி கற்றுக் கொண்டோம். ஆனால் இதுவரை எனக்கு பேச வருவதில்லை. பேசும் தருணங்கள் வாய்க்கவில்லை, அல்லது வலிந்து வாய்க்கவிடவில்லை. இந்த விலக்கம் பொதுவாக எல்லா விஷயங்களிலும் உண்டு. இதுவே எந்த புதிய விஷயங்களோடும் ஒன்ற நீண்ட கால அவகாசத்தை கோரியது. செயலற்று சோம்பி்யிருப்பதைப் போலிருந்தது.

ஆனால் சுரேஷ் அப்படியல்ல. தான் வாழுமிடத்தோடு தன்னைக் கரைத்துக் கொள்ள தெரிந்தவன். இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு வார இறுதியில் சந்திக்கும்போதும் ஏதாவது ஒரு ஆச்சரியத்தில் என்னை ஆழ்த்தி விடுபவன். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ‘தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்தவர்களுக்குச் சமம்’ என்ற வாக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய சித்தாந்தங்களுக்கும் தத்துவங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவன்.

அவன் அறையெங்கும் ஜெ.கியின் புத்தகங்கள் நிறைந்திருக்கும். எனக்கு எப்போதுமே அப்புத்தகங்கள் புரிந்ததில்லை. சுரேஷைப் பொறுத்தவரை அப்புத்தகங்கள் அவன் வாழ்விலிருந்த அச்சத்தின் கூறுகளை முழுமையாக கலைத்து அழித்தவை. ரோபாடிக் துறையில் அவன் எட்டிய உயரங்கள் பிரமிக்க வைப்பவை. ஆனால் தன்னுடைய அந்த கடந்த கால வெற்றிச் சுவடுகளை சுமந்தலைபவனல்ல. இதுவே அவனை ஒவ்வொரு நாளும் புதிய சுவடுகளைப் பதிக்க வைத்து தேங்காமல் முன்னகரச் செய்கிறது.

அறிமுகமான இரண்டாவது நாளே மிக இயல்பாக என்னோடு ஒட்டிக் கொண்டான். கடலைப்பருப்பை துவரம்பருப்பு என நினைத்துசாம்பார் செய்து கொண்டிருந்த எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருநாள் நான் செய்த அசல் துவரம்பருப்புச் சாம்பாரை டகுச்சிக்கும் பரிமாறச் செய்து “ஒய்சி…” சொல்ல வைத்தான். புரியாமல் முழித்த என்னிடம், “அருமையான ருசி…” என்றாள் சுத்தத் தமிழில். “என் சாம்பாரும் உன் தமிழும் அவனின் கைங்கர்யம்,” என்றேன்.

ரோபோடிக் புரோகிராமராக இருந்தவன், தீடீரென அவற்றைப் பேசவைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கி வார்த்தைக் கட்டமைப்பு, அவற்றின் ஒலியமைப்பு மற்றும் இவையிரண்டும் சேர்ந்து உருவாக்கும் கருத்து அல்லது அர்த்தம் அல்லது பொருள் என டகுச்சியின் மொழியாராய்ச்சியில் மட்டுமல்லாமல் அவளுள்ளும் புகுந்து கொண்டான். கடந்த மூன்று வருடங்களாக அவளுடன் தன் அறையை பகிர்ந்து கொண்டவன் இரு வாரங்களுக்கு முன்தான் அவளைச் சென்னை அழைத்துச் சென்று தன் பெற்றோர் முன் கல்யாணம் செய்து கொண்டான். தம்பதிகளாக இப்போது தான் இருவரையும் முதன்முதலாகச் சந்திக்கிறேன்.

உணவு விடுதியின் அந்த இரைச்சல் மீண்டும் என் புலன்களை எட்டி நினைவுகளை கலைத்திருந்தபோது டகுச்சியிடம் நான் சென்னைக்கு திரும்பப் போவதைப் பற்றிச் சொல்லியிருந்தான் சுரேஷ். கூரிய முனை கொண்ட அந்த நீண்ட மரக்குச்சியில் முதலில் செருகப்பட்டு அடியில் எஞ்சியி்ருந்த கடைசி கோழி இறைச்சித் துண்டை தன் பற்களால் கவ்விக்கொண்டே, “உண்மையாகவா?” என்ற ஆச்சரியப் பார்வையோடு என்னை நோக்கினாள்.

“ரொம்ப அலுப்பு தட்ட ஆரம்பிச்சிருச்சு இங்க. நான் தேங்க ஆரம்பிச்சுட்டேன்” என்றேன்.

“நீ வேலை பார்க்கிற வங்கி திவாலாகப் போறதா?” என்றாள் சம்பந்தமேயில்லாமல்.

மென்று கொண்டிருந்த அந்த கடைசி இறைச்சித் துண்டை பருகிய பியரால் நனைத்துக் கொண்டே, “நீ ஏன் கதிர் எங்கள மாதிரி ஃப்ரீலேன்சரா மாறக்கூடாது?” என்று தொடர்ந்து கேள்விகளாக கேட்க ஆரம்பித்தாள்.

டகுச்சிக்கும், சுரேஷுக்கும் என்மேல் என்னைவிட அதிக நம்பிக்கையுண்டு. இருந்தாலும் எனக்கான இடம் இதுவல்ல என சில நாட்களாக தோன்ற ஆரம்பித்திருந்தது. டகுச்சி போன்ற ஒரு பெண் அருகிலிருந்திருந்தால் அல்லது சுரேஷ் போல இங்கு ஒன்ற முடிந்திருந்தால் என்ற எண்ணங்களும் கூடவே சேர்ந்து என்னை இயலாதவனாக காண்பித்து என்மேல் கழிவிரக்கம் கொள்ளச்செய்தன.

நமக்கு நெருக்கமானவர்களின் வெற்றி எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவு பொறாமையையும், சில சமயங்களில் வெறுப்பையும் அளிக்கிறது. இவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் தேங்கியிருப்பவனாகவே தோன்றுகிறது. ஒருவகையில் இந்த ஒப்பீடு என்னை வளரத் தூண்டினாலும், இந்த ஒப்பீட்டுப் பிரமையிலிருந்து வெளிவரவே மனம் விரும்புகிறது.

டகுச்சியின் தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்று தோற்று அங்கிருந்து கரைந்து நான் பேருறு கொள்ளும் கனவுகளில் மூழ்க ஆரம்பித்தேன்.

“இல்ல டகுச்சி. இப்போதைக்கு இந்தியாவின் நிதிச் சந்தை புதிதாக நிதி சம்பந்தமான தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமாக உள்ளது. சில முதலீட்டாளர்களிடம் என்னுடைய திட்டங்களை பகிர்ந்திருக்கிறேன். மிகப் பெரிய வங்கிகளைப் புரட்டிப் போடும் திட்டமிது. பெரிய முதலீட்டாளர்களும் அரசாங்கமும் ஒத்துக் கொண்டால் மூன்றே மாதத்தில்என் சிறிய நிறுவனத்தை சென்னையில் தொடங்கி விடுவேன்”. சுரேஷ் கண்விரித்து, “அந்த திறந்த வெளி வங்கித் திட்டமா?” என்றதற்கு “ஆமாம்” என்று கண் சிமிட்டினேன்.

புரியாமல் முழித்த டகுச்சியிடம், “ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்கள் எப்படி கூகுளின் வரைபடத் தகவல்களை உபயோகித்து மக்களுக்கான வாடகைக் கார் சேவையை எளிமைப்படுத்தியதோ, அதுபோலத்தான் இதுவும் “ என்று ரத்தினச்சுருக்கமாக திறந்த வெளி வங்கித்திட்டத்தை விளக்கினான் சுரேஷ்.

“கூகுள் மாதிரி வங்கிகளும் தன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வார்களா?” என்றாள்.

“இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வங்கிகளும் அரசாங்கங்களும் உணர்ந்துள்ளன.இது தகவல்களின் காலம். விளிம்பிலிருப்பவர்களும் மையமாகும் காலம்,” என்றேன்.

“இதெல்லாம் சாத்தியமா?”

“முடியும் டகுச்சி. மையத்திலிருப்பவர்கள், எப்போதும் அங்கேயே இருந்து கொண்டிருக்க முடியாது. விளிம்பிலிருப்பவர்கள், ஒருநாள் மையமாக மாறுவதுதான் ஜனநாயகத்தின் இயல்பு “ என்றேன்.

டகுச்சி சற்று குழம்பி தன் இடுங்கிய கண்களை மேலும் சுருக்கிக் கொண்டு, “ஆனால் கதிர்…” என்றவளை இடைமறித்து, “ஆனால், சமுதாயத்தில் மையம் என்ற ஒன்று இல்லாமல் போவதே கார்ல் மார்க்ஸின் கனவு” என்று அவளை மேலும் குழப்பி மகிழ்ந்தேன்.

மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. இரைச்சல் இன்னும் அதிகமாகியிருந்தன. டகுச்சியே உணவுக்கான தொகையைச் செலுத்த, மூவரும் வெளியே வந்தபோது தெருக்களில் நெரிசல் அதிகமாயிருந்தது. மழையும்கூட.

எதிர்பார்த்தபடியே கருமேகங்கள் தங்களின் மழைத்துளியை பிரசவிக்க ஆரம்பித்திருந்தன. வண்டியின் முகப்பு கண்ணாடியில் விழுந்த துளிகள் எதிர்த்திசைக் காற்றின் உதவி கொண்டு கண்ணாடியின் மேல்நோக்கி மீன்போல் நீந்த ஆரம்பித்தன. சற்றுநேரத்திற்கெல்லாம் மழைத்துளிகள் எடைமிகுந்து வேகமான மலையருவியாக வண்டியைச் சுற்றி சட.சடவென அறைய ஆரம்பித்து, காவ்யாவை அவளின் மேடிட்ட வயிற்றிலிருந்த என் கையை இறுகப் பற்றிக்கொள்ளச் செய்தது.

“கதிர் சூடா டீ சாப்பிடனும் போல இருக்கு…”

பெருமழைத் துளிகள் பட்டு வெடித்துக் கொண்டிருந்த சாலையிலிருந்து கண்களை அகற்றாமல்,
“அடுத்து வர்ற பெரிய கடைல நிப்பாட்டுரேம்மா” என்றார் ஓட்டுநர் பிரகாசம்.

“நன்றி பிரகாசம். ஆங்..கதிர்…சொல்ல மறந்துட்டேன். டகுச்சி கூப்பிட்டிருந்தா. மூணு வருஷமாச்சா எங்க நினைப்பு வர்றதுக்குன்னா”

”ம்ம்ம்… ஆமால்ல சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் நாம ஒன்னா தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டயே என்னோட கனவு திட்டமான திறந்தவெளி வங்கிக்கான நிறுவனமா மாத்தி, ஒரே வருஷத்துல பேர் வாங்கி, அதுக்குள்ள கர்ப்பமாயிட்ட உன்னை மீசையை முறுக்கிக் கொண்டும்; முகத்தை இறுக்கிக் கொண்டுமிருந்த நம்மிருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி… என இவ்வளவு செறிவான செயல்களோடு என் வாழ்க்கை இருந்ததில்லை. இந்த பரபரப்பில் சுரேஷும் டகுச்சியும் நினைவுக்கு வரவேயில்லை காவியா…”

“ஆனால் என்னால உன்னை முதன்முதலில் சந்தித்த அந்த மழைமாலைப் பொழுது சிபுயாவை மறக்கவே முடியவில்லை கதிர்’ என்றவளிடம், புன்னகைத்தேன்.

திடீரென மழையின் இரைச்சல் அடங்கி மனிதக்குரல்களின் இரைச்சல் பெருகியது. நானிருந்த சுற்றுப்புறம் தெளிவாக புலப்பட ஆரம்பித்தது. மடக்கி வைத்திருந்த குடையும், கழற்றி வைத்திருந்த மழை மேலாடையும் அங்கேயே இருந்தன.

டகுச்சியும் சுரேஷும் வெகு நேரமாக என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை கவனித்து இருக்கையிலிருந்து எழுந்து கொண்டேன்.

“என்னாச்சு கதிர்? நீ வேலை பார்க்கும் வங்கி திவாலாயிருச்சான்னு விளையாட்டா டகுச்சி கேட்டதற்கு, நீ ஏதோ ஒரு கனவுலகத்துக்குப் போயிட்ட…”

“ஆமாம் என் கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தேன்…”என்று சொல்லி இருவரையும் அணைத்து விடைபெற்று தெருவில் இறங்கினேன்.

மணி பத்தைத் தொட்டிருந்தது. கண்ணாடிக் கட்டிடங்களில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் தெருக்களைப் பகலாக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தன.நெரிசலும் மழையும் குறைந்திருந்த தெருக்களில் மிக நீண்ட வரிசையில் வாடகை டாக்ஸிக்காக நின்று கொண்டிருந்ததமிழ்ச்சாயல் கொண்ட அந்த இந்திய முகம், அறைக்கு திரும்பிய பின்னும் மனதைவிட்டு அகலமறுத்தது.உணவு விடுதியில் சாப்பிட்ட ஃபார்ஃபெல்லே வகை பாஸ்தா அவள் அணிந்திருந்த வெளிர் பச்சைநிற மழைமேலாடையில் அச்சிடப்பட்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளை ஞாபகப்படுத்தியது. சற்று அமிழ்ந்த மூக்கும், கண்களுக்கு கீழே அகன்றும் நாடிக்கருகில் சற்று ஒடுங்கியுமிருந்த அந்த கன்னங்களும், ஏனோ தெரியவில்லை திரும்பத் திரும்ப கண்முன் தோன்றிக்கொண்டே இருந்தன. அவள்தான் என் காவ்யா என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

பனி விழும் இரவு – மு. முத்துக்குமார் சிறுகதை

மு. முத்துக்குமார்

வானிலிருந்த மேகங்களை அத்தெரு முழுவதும் பரப்பிப் போட்டிருந்தது போலிருந்தது அந்த பனிப்பொழிவு. நீண்ட அகலமான தெரு. இருபக்கமும் பழங்காலத்து வீடுகள் மற்றும் சில உணவு விடுதிகள் அக்குளிரிலும் நடுங்காமல் கம்பீரமாக தன் கூரையின் உச்சியிலுள்ள புகைபோக்கி வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தன. அக்கூரைக்கடியில் இருந்தவர்கள் காய்ந்த மரக்கட்டைகளை அதற்கென உரிய அடுப்பில் எரித்து குளிர் காய்கிறார்கள் போலும்.

அங்குள்ள மிகப் பழக்கப்பட்ட உணவு விடுதியொன்றில் கிடைக்கும் சங்கு வடிவ பிரெட்டுக்காகவும், பாலில்லா தேநீருக்காகவும், மாலை நேரத்து தனிமையை விரட்டுவதற்காகவும் 2 கிமீ தள்ளியுள்ள என்னுடைய அறையிலிருந்து அடிக்கடி இத்தெருவிற்கு வருவதுண்டு.

மிகப் பழக்கப்பட்ட கட்டிடங்கள். தஸ்தவேய்ஸ்கியின் ‘வெண்ணிற இரவின்’ கதாநாயகன் போல் இக்கட்டிடங்கள் ஜன்னல் வழியே நம்மை உற்றுநோக்கி, மூடப்பட்டிருந்த கதவு வழியே நம்மிடம் ஏதாவது பேசுமா என்று நானும் உற்று நோக்கினேன். ம்ஹீம்… அப்படி எந்த விதமான பிரக்ஞையும் எனக்கில்லை. நான் இன்னும் அவ்வளவு தனியனாக ஆகவில்லை என்ற ஒரு திருப்தியோடு அவ்வுணவு விடுதியை நோக்கி விரைந்தேன், கைகள் விறைக்க. ஜெர்டாவின் கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து அவளுக்கு ஒத்தாசையாக அங்கு இருக்கக் கூடும்.

தூரத்தில் மேலெழும்பிச் செல்லும் அப்புகையை நோக்கியவாறு பொழிந்திருந்த பனியில் கால்புதைய நடந்தது, அணிந்திருந்த மூன்றடுக்கு உடை தக்க வைத்திருந்த வெப்பம் போதவில்லை என உணர்த்தியது. கொஞ்சம் வெப்பம் வேண்டி ஊரிலிருந்து எடுத்து வைத்திருந்த தங்க வடிப்பான் ஒன்றை கட்டில் இருந்து உருவி பற்ற வைத்துக் கொண்டேன். அவர்கள் மரக் கட்டைகளை எரித்து கனன்று கொண்டிருந்தார்கள். நான் என்னை எரித்து…

இரண்டு வார விடுமுறைக்கு இந்தியா சென்று விட்டு அப்போதுதான் எனிங்கன் திரும்பி இருந்ததால், இன்னும் ஒரு வாரத்திற்கு வரும். அதற்கப்புறம் மார்ல்ப்ரோவுக்கோ அல்லது இசைக்குயிலுக்கோ மாற வேண்டும்.

மாலை 6 மணி என்றது தெருமுனையில் வானைத் தொட்டுக் கொண்டிருந்த கூம்பு வடிவ மணிக்கூண்டு. ஒருவேளை இக்கூம்பு தான் அம்மேகங்களைக் கிழித்து பனிபொழியச் செய்ததோ என கவிஞனை போல எண்ணிக்கொண்டே ஜெர்டாவின் உணவு விடுதிக்குள் நுழைந்தேன்.

திடீரென இருளுக்குள் நுழைந்ததை உணர்ந்து உணவு விடுதியின் ஜன்னல் கண்ணாடியினூடாக இரவு கவிழ ஆரம்பித்து விட்டதா என தெருவை நோக்கினேன். ஆம். இரவுதான். பனியால் கொஞ்சம் வெண்மையாயிருந்தது. வெண்ணிற இரவு.

எதிர்பார்த்தது போல் உல்ரிக்தான் விடுதியை கவனித்துக் கொண்டிருந்தார். ஜெர்டா மேல்தளத்திலுள்ள அவர்களின் வீட்டிற்கு சற்று ஓய்விற்காக சென்றிருக்கக்கூடும். மிகச் சிறிய விடுதிதான். மரத்தால் செய்யப்பட்ட அங்கிருந்த சிறிய மேசைகளும் சாய்வு நாற்காலிகளும், குறைவானதே நிறைவு, அழகு என உணர்த்தியது. வழக்கமாய் பார்க்கும் அதே மனிதர்கள்தான். 20 பேர் இருக்கலாம்.

அங்கிருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள்தான். இந்த இரண்டு வருடத்தில் நானும் அவர்களில் ஒருவனாகியிருந்தேன். அவரவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துண்ட பின்பு உல்ரிக் அல்லது ஜெர்டாவிடம் அதற்குரிய பணத்தை அவர்களே கணக்கிட்டு கொடுத்துச் செல்வார்கள். கிட்டத்தட்ட இவ்விடுதியொரு சமுதாய சமையலறைக் கூடம்தான்.

எனக்கான சங்கு வடிவ பிரெட்டையும் தேநீரையும் எடுத்துக் கொண்டு ஒலிவர் அங்கிருக்கிறாரா என்று தேடினேன். ஜெர்டாவின் முன்னாள் கணவர் ஒலிவர். கடும் உழைப்பாளி. பெரும் குடிகாரரும்கூட. இரயில் தடங்களைப் பராமரிக்கும் அரசுத்துறையில் கண்காணிப்பாளர் வேலை. உல்ரிக்கிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம் கையசைத்துவிட்டு ஜன்னலோரத்திலிருந்த மேசையில் அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் புன்னகைத்துக் கொண்டே ஒலிவர் எதிரில் வந்தமர்ந்தார். அவர் தட்டில் சூடான சாஸேஜுகளும் அதற்கு தேவையான வெண்ணெய் மட்டும் வேகவைக்கப்பட்டிருந்த ப்ரோக்கோலி வகையறா காய்கறிகளும் ஒரு குட்டி மலை முகடென குவித்து வைக்கப்பட்டிருந்தன. மெலிதான சங்கு வடிவ பிரெட் என் வாயில் கடிபட்ட அதிர்ச்சியில் தன்னுடைய மறுமுனையிலிருந்த மேற்புற அடுக்குகளை இழந்து என் மேல் சிந்தியிருந்தது.

“என்ன குலோ, க்ரோய்சண்ட்ச இன்னமும் எப்படி சிந்தாம சாப்பிடறதுன்னு தெரியலயா?” என புன்னகை மாறாமல் கேட்டார் ஒலிவர். பற்களிலிருந்த கறையும், விழிகளின் வெளியோரங்களிலிருந்து காது நோக்கி நீண்ட சுருக்கங்களும் அவர் ஐம்பதுகளின் மத்தியில் இருப்பதை உணர்த்தின.

பருகிய தேநீர், மென்று விழுங்கிக் கொண்டிருந்த க்ரோய்சண்ட்ஸை நனைத்து நாவையும் தொண்டையையும் இதப்படுத்தியது.

புன்னகைத்துக் கொண்டே “கடைசிவரை சிந்தாமல் சாப்பிட கத்துக்க மாட்டேன்னு நினைக்கிறேன் ஒலிவர்” என்றேன்.

“புது வேலை கிடைச்சுடுச்சா குலோ?”

“இல்ல ஒலிவர். பழைய கம்பெனியே ஒரு புது ஒப்பந்தம் போட்டுருக்காங்க. ஒரு வருஷத்துக்கு”

ஒலிவருக்கு நடந்ததுதான் என் அப்பாவுக்கும் நடந்தது. அம்மா எங்கள் இருவரையும் விட்டுவிட்டு தனது முன்னாள் காதலனுடன் போய் விட்டார். என்னை சட்டச்சிக்கல்களால்தான் அப்பாவிடம் விட்டுவிட்டுப் போனார். ஐந்து வயதிருக்கலாம் எனக்கு. இரண்டாவது அம்மா சொல்லித்தான் எனக்கிது தெரியும். வழக்கம் போல் சுற்றம் வலியுறுத்த அந்த அப்பாவியை அப்பாவிற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

ஆனால் தன் முதல் மனைவி ஓடிப்போன ஆதங்கத்திலே வடிப்பான் இல்லாத கத்தரியையும், சார்மினாரையும் புகைத்துப் புகைத்து நுரையீரல் புற்றை வேண்டிப் பெற்றுக் கொண்டு, கிடைத்த இரண்டாவது அம்மாவையும் ஆஸ்துமா நோயாளியாக்கி மேலேயனுப்பினார் அப்பா. கொஞ்ச நாட்களிலேயே அவருமில்லை. பதினைந்து வயதிலிருந்து தனியனாய், செயின்ட் லூயிஸ் ஆதரவற்ற சிறுவர்களுக்கான உறைவிடப் பள்ளியால்தான் வளர்க்கப்பட்டேன்.

ஒலிவர் எப்பவுமே எனக்கொரு ஆச்சரியம்தான். அவர் ஜெர்டாவின் இழப்பையேற்று முன் நகர்ந்த அளவுக்கு அப்பாவினால் ஏன் நகரமுடியவில்லை என்பதற்கு வெறும் கலாசாரம் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பேயில்லை. அதையும் தாண்டிய ஏதோ ஒன்றுதான் அப்பா தன்னுள் சிதைந்து மடியவும், ஒலிவர் அச்சிதைவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் காரணமாயிருக்கக் கூடும்.

“என்ன புது வேலை எப்படி இருக்கும்கிற சிந்தனையா?” என்றென்னை கலைத்தார் ஒலிவர்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை ஒலிவர். வழக்கம் போல ஒரு ரோபாடிக் ஆட்டோமேஷன்தான். உல்ரிக் வேலை பார்க்கிற அலுவலகத்தில்தான் வேலை. கிட்டத்தட்ட திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான வேலைகளைச் செய்பவர்களுக்கு ஓய்வளிக்கப் போகும் ஒரு வேலை” என்றேன்.

“உல்ரிக் வேலை பார்க்குற நிறுவனத்துக்கு எப்பவுமே இதே வேலைதான். ம்ம்ம்…கார்ல் மார்க்ஸ் வேண்டியபடி தொழிலாளிகள் புத்திசாலியா மாறி முதலியத்த இல்லாம பண்ணிடுவாங்கங்றதெல்லாம் வறட்டு இலட்சியவாத கனவுதான். புத்திசாலியா மாறி முதலியத்தில் தங்களோட இருப்பைத்தான் உறுதி செஞ்சுக்குறாங்க.” என்றார்.

கொஞ்சம் புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது.

“என்ன மார்க்ஸியம் பேச ஆரம்பிச்சுட்டானா?” என்று உல்ரிக்கும் சேர்ந்து கொண்டார். அதற்குப்பின் அவர்கள் பேசியவை, அவை மார்க்ஸிய சித்தாந்தங்கள் என்பதைத் தாண்டி எனக்கொன்றும் புரியவில்லை.

அவர் அலுவலகத்திலேயே வேலை கிடைத்ததற்காக என்னை வாழ்த்தினார் உல்ரிக். அதுவரை சமையலறையிலிருந்த சாராவும் சேர்ந்து கொண்டாள். ஜெர்டாவின் மகள். பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு; செயற்கை நுண்ணறிவியல் பட்டப்படிப்பு படிக்கிறாள். அவளுடன் என் துறை சார்ந்து அடிக்கடி நிறைய பேசுவதுண்டு.

சாராவின் தீர்க்கமான கண்களும், மிஸ்டர் பீன் மூக்கும், தோளிலிருந்து மார்பு வரை புரளும் கேசமும், முகத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அந்த உடலமைப்பும் எப்போதும் மனதை குறுகுறுக்க வைப்பவை. நான் இங்கு அடிக்கடி வருவதற்கு இந்த குறுகுறுப்பும் ஒரு காரணம்.

ஜெர்டாவிடம் சொல்லிவிட்டு விடைபெறலாம் என மேல் தளத்திற்குச் செல்லும் சுழல்வடிவ மரப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்றேன். அணைத்து தோளில் தட்டி உல்ரிக் அலுவலகத்திலேயே வேலை கிடைத்ததற்குப் பாராட்டினார். எப்போதும் அந்த அணைப்பின் கதகதப்பு என் இரு அன்னையரையும் ஞாபகப்படுத்தும். நான் இங்கு அடிக்கடி வருவதற்கு இதுதான் முக்கிய காரணம். மற்றபடி இந்த சங்கு பிரெட், பாலில்லா தேநீர் எல்லாம் அடிக்கடி இங்கு வருவதனால் பழகியவை. இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே அவ்வணைப்பின் கதகதப்பில் நெகிழ்ந்து உருகி கண்ணீர் மல்க ஜெர்டாவிடம் என் அன்னையர் இருவரையும் பற்றி நினைவு கூர்ந்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக ஜெர்டாவின் இந்த கதகதப்பு சாராவின் அருகாமையை நினைவுறுத்தி மனதை மேலும் எளிதாக்குகிறது; சாரா தன்னுள் என்னை இழுத்துக் கொள்வதுபோலொரு பரவசம் தருகிறது.

கழற்றியிருந்த மூன்றாவதடுக்கு உடையை மேலிட்டுக் கொண்டு தெருவில் இறங்கியபோது அவ்விரவு மேலும் வெண்மையாக இருந்தது. ஓரிருவர் மட்டுமே சோம்பி நடந்து கொண்டிருந்தார்கள். வெப்பம் வேண்டி மீண்டுமொரு தங்க வடிப்பானை கட்டிலிருந்து உருவி பற்ற வைத்தேன்.

அறை நோக்கி மீண்டும் கைகள் விறைக்க நடந்தபோது, விடுமுறைக்கு இந்தியா செல்வதற்கு முன்பு சாராவை அவளுடைய ஆண் நண்பனுடன் மிக நெருக்கமாகப் பார்த்த காட்சி நிழலாடியது. ஒரே இழுப்பிலேயே கால்வாசி சிகரெட்டை சாம்பலாக்கிய நெருப்பு என்னை நோக்கி விரைந்தது. என்னுள்ளிருந்து வெளியேறிய புகையில் அப்பாவும் ஒலிவரும் கலந்தே இருந்தார்கள்.