மு வெங்கடேஷ்

நிழல் – மு. வெங்கடேஷ் சிறுகதை

மு வெங்கடேஷ்

 

அன்று வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சூரியன் மறைந்த பின்னும் சூடு தணியாமல் இருந்தது. உடல் முழுவதும் வியர்வை ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருந்தது. எத்தனை முறை குளித்தாலும் அதே நிலைதான். வெளியே புழுக்கம் அதிகமாக இருந்தது. அதைவிட வீட்டிற்குள்.

கட்டியிருந்த லுங்கியுடன் மேலே ஒரு அரைக்கை சட்டையை மட்டும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினேன். வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் வரைந்து வைத்த ஓவியம் போல் காட்சியளித்தன. நெற்றியில் இருந்த வியர்வைத் துளி வடிந்து வாய் அருகே வர, தட்டி விட்டேன். நடக்க நடக்கத் தொடைகள் இரண்டும் உரசி உள்ளே அணிந்திருந்த ஜட்டியும் நனைந்து ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியது. அந்த ஒன்பது மணி இருட்டிலும் விளக்கை ஏறிய விட்டு வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவர் சுத்தியலை வைத்து ஏதோ கம்பியை அடித்துக் கொண்டிருந்தார். அவர் அடிப்பது என் தலையில் அடிப்பது போல் இருந்தது. கால்கள் வேகம் எடுத்தன.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடிவிட்டுச் சென்ற பூங்கா தற்போதுதான் உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு இரண்டு விளக்குகள் மட்டும் எரியவிடப் பட்டிருந்தன. பின் வாசல் அருகே இருந்த விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. அதன் கீழே நின்று கொண்டிருந்த கருப்பு நிற நாய் ஊளையிட, அது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. பூங்காவின் தென்கிழக்கில் காலையிலிருந்து ஓயாது ஆடிக் கொண்டிருந்த இரண்டு ஊஞ்சல்கள் தற்போது அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் அருகில் கிடந்த சிமெண்ட் இருக்கையில் போய் அமர்ந்தேன். வலதுபுற பக்கவாட்டில் தலைக்கு மேல் எரிந்து கொண்டிருந்த விளக்கு என் உருவத்தை நிழலாகக் கீழே தரையில் காண்பித்துக் கொண்டிருந்தது. அங்கு என்னையும் என் நிழலையும் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பூங்காவிற்குள் வந்து அரை மணி நேரம் கடந்திருந்தும் புழுக்கம் தணியவில்லை. சட்டையின் மேல் பட்டன் இரண்டையும் கழட்டிவிட்டு, அரித்துக் கொண்டிருந்த ஜட்டியை கையை உள்ளே விட்டு சரி செய்தேன். இடது புறமாகத் தரையில் தெரிந்து கொண்டிருந்த நிழல் ஏதோ விசித்திரமாகத் தெரிய கீழே உற்றுப் பார்த்தேன். தலையில் இரண்டு கொம்புகள். அது ஒரு மிருகம் போன்று காட்சியளித்தது. கோபத்தில் மேலும் கண்களை விரித்துப் பார்க்க, தலையின் இரு புறமும் இருந்த முடி எழும்பி நின்று கொண்டிருந்தன. கைகளைக் கொண்டு தடவிப் பார்த்தேன். குளித்து எண்ணெய் தேய்க்காத முடி மொரமொரப்பாக இருந்தது. முடியைப் பல முறை சரி செய்ய முயன்றும் தோல்வி அடைந்தேன். அருகில் தண்ணீர் குழாய் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கண்ணில் படவில்லை. கையில் எச்சிலைத் துப்பி தலையை ஈரப்படுத்தி, முடியைப் பணிய வைக்க முயன்றேன். இரண்டு கொம்புகளும் கீழே பணிவதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்வது என்னை மேலும் மேலும் எரிச்சலூட்டி கோபமடையச் செய்தது. ஒரு கட்டத்தில் மொத்த முடியையும் பிய்த்து எரிந்து விடலாம் என்று முயற்சிக்கையில் முடிகள் அனைத்தும் மேல் எழும்பி மிருகம் போய் அரக்கன் ஆனது நிழல்.

சற்று நேரம் அமைதியாக இருந்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின் சட்டைப் பையில் இருந்த சிகரட் பாக்கெட்டை எடுத்தேன். காலை வாங்கிய பாக்கெட்டில் மீதம் இருந்தது இரண்டு சிகரெட்டுகள்தான். அது என்னை மேலும் எரிச்சலடையச் செய்தது. அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தேன். “ஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்துடன் உள்ளே இழுக்க, அது என் தொண்டை வழியாக வயிறு வரை உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது. இரண்டு நொடி உள்ளே சுழன்ற புகை வாய் வழியாக வெளியே வர, தலையை சற்று மேலே உயர்த்தி  வானத்தை நோக்கி ஊதினேன்.

வெளியே வந்த புகை வானத்தில் பெண் ஒருத்தி உள்ளாடை ஏதும் அணியாமல் வெள்ளை நிற சேலை போன்ற துணியை மட்டும் போர்த்திக் கொண்டு நளினமாக பாலே நடனம் ஆடுவது போன்று காட்சியளித்தது. அதைப் பார்த்த நான் பரவசம் அடைந்தேன். உடல் சிலிர்க்கத் தொடங்கியது.  அடுத்த இழுப்பிற்காக சிகரெட்டை வாயில் வைத்து, ஒரு இழுப்பு இழுத்து,வயிற்றுக்குள் புகையை அனுப்பி ஒரு சுழட்டு சுழற்றி வெளியே விட்டேன். மேலும் ஒரு பெண் அதே போன்று நடனம்  ஆடத் துவங்கினாள். அது என்னுள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் சிகரட் முடியும்பொழுது ஆறு பெண்கள் நடனமாடிக் காற்றில் கரைந்திருந்தார்கள்.

யாரும் இல்லாத அந்த இருட்டில் பெண்கள் அவ்வாறு நடனமாடியது எனக்குப் பிடித்திருந்தது. அரித்துக் கொண்டிருந்த ஜட்டியைக் கையை உள்ளே விட்டு மீண்டும் சரி செய்து கொண்டேன். இரண்டாவது சிகரெட்டையும் எடுத்து பற்றவைத்து, இழுத்து, ஊதி அதே பெண்களை மீண்டும் நடனமாட விட்டு ரசித்தேன். அது என்னுள் இருந்த மது போதையை விட அதிக போதையைத்  தருவதாக உணர்ந்தேன். நாக்கை வெளியே நீட்டி உதட்டை நனைக்க, உதட்டில் படிந்திருந்த சிகரெட்டின் கசப்பு ருசித்தது.

சிகரட் முடிந்திருந்த நிலையில் சற்று நேரம் கண் அசந்திருந்தது. ஏதோ ஒரு சிந்தனை மட்டும் என்னை ஆட்கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை அருகில் கேட்கும் சலசலப்பு நிதானத்திற்கு இழுத்து வந்தது. சுதாரித்துக் கொண்ட நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

ஒரு ஆண், ஒரு பெண். கணவன் மனைவியாக இருக்க வேண்டும். அவள் காலில் மெட்டி இருக்கிறதா என்பதை உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். அவன் சாயலில் என்னைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. பெண் மாநிறம், நல்ல அழகு. அவள் தலை முடிக்குக் கீழ் அணிந்திருந்த சட்டை நனைத்திருந்தது. அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்.

அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை .ஒருவரை ஒருவர் கடிந்து கொண்டிருந்தார்கள். ஆணின் குரலே மேலோங்கி இருந்தது. அவ்வப்போது கண்களை துடைத்தவாறே அவள் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டு கேட்பது தவறுதான், ஆனால் எனக்கு அப்போது வேறு வழி இல்லை. அமர்வதற்கு அந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடையாது.

இத்தன வருஷம் ஆகியும் நீங்க என்னப் புரிஞ்சிக்கலேல்ல?

என்ன புரிஞ்சிக்க?

………

அதான் நீ நடக்குற விதமே தெரியுதே.

கோவத்துல என்னனாலும் பேசாதீங்க.

அப்டி என்னத்த பேசிட்டேன்?

நா என்ன வேணும்னேவா வர மாட்டேங்குறேன்?

பெறகு?

இன்னைக்கு முடியாது.

அதான் ஏன்னு கேக்குறேன்?

ஐயோ இன்னைக்கு முடியாது…. புரிஞ்சிக்கோங்களேன்.

சாயந்திரம் கோவிலுக்கு போயிட்டு வந்த?

இப்போ மணி பத்து ஆவுது.

எனக்கு என்னைக்குத் தேவைப்படுதோ அன்னைக்குத்தான் வேணும்… உனக்கு தோண்ற நேரத்துல எல்லாம் முடியாது.

நா என்ன வேணும்னா செய்றேன்? என் வலி எனக்குத்தான தெரியும்,  என்று சொல்ல அழத் தொடங்கினாள். அவன் எதிர்த் திசையில் திரும்பி நின்று சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருந்தான். அவனைப் புகை சூழ்ந்திருந்தது.

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சாத்தியிருந்தது. ஜன்னல் வழியாகக் கையை உள்ளே விட்டு தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் பையில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன். விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்தது. சுவரில் கை வைத்துத் தடவியவாறே சுட்ச்சை அழுத்தினேன். விளக்கு எரிந்தது.

தரையில் கிடந்த பாயில் காலை மடக்கி கேள்விக்குறி போன்று வளைந்து வயிற்றில் கை வைத்து மனைவி படுத்திருந்தாள். அடுக்களை சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். பூசை அறையில் மாலை ஏற்றப்பட்ட குத்து விளக்கு குளிர வைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது.

 

காக்காக்குஞ்சு – மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

ஊரில் ஆலமரத்தடி ஸ்டாப் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரிய கோவிலுக்குச் செல்வதென்றால் அந்த நிறுத்தத்தில்தான் இறங்கிச் செல்ல வேண்டும். உள்ளூர்வாசிகள் மட்டுமில்லாமல் வெளியூர்வாசிகளும் அநேகம் வந்து செல்லும் இடம். பல நேரங்களில் வருபவர்கள் மரத்தடியில் விட்டுச் சென்ற வாகனங்களில் எச்சம் போட்டிருப்பதைக் கண்டு பறவைகளைத் திட்டுவது அங்கு உள்ளவர்களை எரிச்சலடைய வைக்கும். அப்படித் திட்டிய வெளியூர்க்காரருடன் ஒருநாள் கோமதி சண்டைக்கே போய் விட்டாள், “அக்கற உள்ளவுக வண்டிய மூடி வச்சிட்டுப் போனும், இல்ல வேற எங்கயாது விட்டுப் போனும்,” என்று.

அவர்களின் பொழுதுபோக்கே அந்த மரத்தடியில் உட்கார்ந்து கதை பேசி விளையாடி நேரத்தைச் செலவிடுவதுதான். வீட்டில் சமைத்ததை எடுத்து வந்து வட்டமாக மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட நாட்கள் ஏராளம். அந்த மரத்திற்கு வயது சுமார் அறுபது எழுபது இருக்கும். மரத்திற்கு அருகில்தான் வசந்தியின் வீடும். அதனால் அவளின் வீட்டை அடையாளம் காண்பதில் அத்தனை சிரமங்கள் இருந்ததில்லை. கூடுதலாக இன்று பந்தலும் மைக் செட்டும்.
விடிந்தால் தை 11. வெள்ளிக்கிழமை. இருபது வருடங்களையும் அந்த அழகான இடத்தில் கழித்துவிட்டு நாளை அமையப்போகும் புது வாழ்க்கையை எண்ணி உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் வசந்தி. மணி பன்னிரெண்டைக் கடந்திருந்தது. அருகில் படுத்திருந்த அம்மாவின் கையை எடுத்துத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். “என்னடி மேல் இப்படிச் சுடுது, சுகமில்லையா?” என்ற அம்மாவிடம் “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ பேசாம படு” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள், கண்களில் வடியும் கண்ணீரை மறைப்பதற்காக.

“ஏன்டி, இப்டிலாம் பண்ணக் கூடாது. பொழுது விடிஞ்சா மாப்ள வீட்ல இருந்து பொண்ணழைக்க வந்துருவாக, வெளில தாத்தா மாமாலாம் படுத்துருக்காக. சந்தோசமா இருக்கனும். மாப்ள பாக்குறதுக்கு நல்லவராத்தான் தெரியுது. உன்ன நல்லவடியா பாத்துக்குவாரு. பேசாம மனசப் போட்டு கொழப்பிக்காம படுத்துத் தூங்கு,” என்று அம்மா சொன்ன சமாதானம் அவளின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவளின் சிந்தனை எல்லாம் வேறெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. மாப்பிள்ளையை அவள் அதற்கு முன் ஒருமுறை பார்த்திருந்தும் மனதில் பதிந்திராத முகம்தான். அம்மாவும் மாமாவும் சொன்னதால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தாள்.

அம்மா அத்தனை அறிவுரைகள் சொல்லியும் அவளால் அதையெல்லாம் மறக்க முடியவில்லை. புது வாழ்க்கையை ஏற்பதற்கு ஒருவித தடுமாற்றம். எதனால் என்று சரியாகத் தெரியவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். தூக்கம் வராததால் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கையில் மரத்தடியில் தம்பி தனியாக அமர்ந்து எதையோ உற்று பார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவள் நினைத்தது சரிதான். அந்த காக்கா கூட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். காக்கா சாம்பல் காக்கா, வீட்டின் மூன்றாவது பிள்ளை.

மரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்ததால் எப்போதும் கீச் கீச் சத்தம்தான். தோழிகளுக்குள் பிரித்துக் கொண்டார்கள், ஆளுக்கொரு பறவையாக. “ஏய் என் கிளி வந்துட்டு”, “ஏய் இன்னைக்கு என் புறா குஞ்சு பொரிச்சிருக்கு”, “என் மைனா சாப்டுச்சு” என்று அவர்களின் பேச்சுக்களும் அந்த பறவைகளைச் சுற்றியேதான் இருந்தன. தன் குயில் வரவில்லை என்று கோமதி அழுததும், தன் கிளியைக் குறவன் பிடித்துச் சென்று விட்டான் என்று அமுதா காய்ச்சலில் படுத்த கதைகளும் உண்டு. அவ்வாறு பிரிக்கப்பட்டதில் அவளுக்கான பறவை ஒரு காகம்.

பிரிக்கப்பட்டு வந்தாலும் அந்த காகத்தின் மீது இயல்பாகவே அவளுக்கொரு ஈர்ப்பு இருந்தது. மற்ற காகங்களை ஒப்பிடுகையில் அது சற்று மாறுபட்டிருந்தது. அதன் மூக்குப் பகுதி வளைந்தும் கழுத்தில் சாம்பல் நிறக் கோடும் இருந்தது. குரலும் மாறுபட்டே ஒலித்தது. அதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

தினமும் காலை எட்டு மணிக்கு அவள் வீட்டுச் சுவரில் வந்து நின்று கொண்டு “கா கா” என்று கத்திக் கொண்டிருக்கும். அவள் அம்மா வைக்கும் இட்லியையோ சாதத்தையோ சாப்பிட்டு விட்டு நன்றி சொல்வதுபோல் “கா கா” என்று மீண்டும் ஒருமுறை கத்திவிட்டுப் பறந்து செல்லும். இதையே தினமும் வாடிக்கையாக வைத்திருந்த காகம் நாளடைவில் அவர்களின் வீட்டில் ஒருவராகவே ஒட்டிக் கொண்டது.

ஒரு நாள் வீட்டுச் சுவரில் வந்து நின்ற காகம், அவள் அம்மா வைத்த சாதத்தை எடுத்து உண்ணாமல் அதைத் தன் வாயில் கவ்விக் கொண்டு கூட்டை நோக்கிப் பறந்தது. “என்னடா சாதத்த சாப்பிடாம கூட்டப் பாக்கப் போதே” என்று எண்ணி அதைப் பின் தொடர்ந்தாள். வீட்டு மாடியில் சென்று அதன் கூட்டை எட்டிப் பார்க்கையில் உள்ளே புதிதாக இரண்டு குஞ்சுகள். சாதத்தை எடுத்துச் சென்ற அந்தத் தாய் காகம் அதைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது.

அந்தக் காட்சியை அவளோடு சேர்ந்து அவள் தம்பியும் ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த இரு குஞ்சுகளையும் பார்க்கையில் பிறந்த குழந்தைகளைப் பார்ப்பது போன்ற உணர்வு. உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தான். “எக்கா இது அம்மா காக்கா இது ரெண்டும் குஞ்சுக அப்போ அப்பா காக்கா எங்கக்கா?” என்று கேட்க, இதற்கெல்லாம் இவனுக்கு பதில் சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தவள் “நம்மளப் போல அதுகளுக்கும் அப்பா இல்லடா” என்று சொன்னாள். “ஓ அப்படியாக்கா? பாவம்” என்று சொன்னவனின் முகம் சோகமடைந்தது. பின் அவனாகவே “எவ்ளோ நாள்க்கா இந்த அம்மா காக்கா அந்த குஞ்சுகளுக்கு ஊட்டி விடும்?” என்றான்.

“அந்த குஞ்சுகளுக்கு றெக்க முளைக்கிறவர, தானா சாப்பிடத் தெரியிற வர” என்று சொன்னாள்.

“அப்புறம்?”

“அப்புறம் குஞ்சு ரெண்டும் தானா சாப்பிடும்”

“அப்புறம்?”

“அப்புறம் குஞ்சு ரெண்டும் பறந்து போயிரும்”

“அப்புறம் அம்மா காக்கா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே “பிள்ளைகளா மொட்ட மாடியில நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீக? கீழ இறங்கி வாங்க. சாமி கும்பிட நேரமாயிட்டு” என்று அம்மா அழைக்கும் சத்தம் கேட்கவே இருவரும் கீழ் இறங்கிச் சென்றார்கள்.

சந்தோசமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தவன், “எம்மா இனி தெனமும் காலைல கொஞ்சம் நெறையா சாப்பாடு வை. நம்ம வீட்டுக்கு ரெண்டு புது விருந்தாளி வந்துருக்காங்க,” என்று சொல்ல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள், “சரிடா கண்ணு, வச்சிட்டாப் போச்சு” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனுக்கோ சந்தோசம் பொறுக்க முடியவில்லை.

அன்று முதல் இன்று வரை அந்தக் காக்காவும் குஞ்சுகளும்தான் அவனுக்கு நண்பர்கள். விடிந்தாலும் அடைந்தாலும் அதே பேச்சுத்தான். அந்த காக்காவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவன் கேட்கும் ஒரே கேள்வி, “பாவம்லா அந்த குஞ்சுக, அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டம்? ” என்பதாகத் தான் இருந்தது.

ஆறு வருடங்களுக்கு முன்பு, இதே தை மாதத்தில்தான் தங்களின் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டுச் சென்றிருந்தார் அப்பா. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகளை காலை பள்ளி செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு டாட்டா காண்பித்தவாறே நெஞ்சில் கை வைத்து தரையில் அமர்ந்தவர்தான், இன்று வீட்டுச் சுவரில் மாலையுடன் தொங்கிக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து நின்று கொண்டிருந்த நாட்கள் அவை.

அன்று தனக்கு அத்தனை விவரம் தெரியவில்லை என்றபோதிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை நன்றாக உணர முடிந்திருந்தது அவளால். வீட்டில் கூட்டம் கூட, ஒரு பெண் தன் வாழ் நாளில் எதை அனுபவிக்கக் கூடாது என்றெண்ணி நித்தமும் வேண்டிக் கொள்வாளோ அதை அம்மா அன்று அனுபவித்துக் கொண்டிருந்தாள். தன் கண் முன்னே நடந்தவைகளைக் கண்ட போது அவளுக்குள் ஒரு பயம் தானாகவே தொற்றிக் கொண்டது. அம்மாவின் அழுகை சத்தத்தை அந்தப் பறவைகள்கூட பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பதாக எண்ணினாள்.

ஆதரவற்று நின்று கொண்டிருந்தவர்களை அரவணைத்துக் கொண்டது தாத்தாவும் மாமாவும்தான். உள்ளூரில் யாரும் இல்லை என்ற போதிலும் தங்களை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் என்றெண்ணினாள். கணவனைப் பிரிந்த தன் அம்மா படும் துயரங்களை தினமும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா இல்லாத பிள்ளைகளாகக் கூட தங்களால் இருந்து விட முடியும், ஆனால் கணவனை இழந்த பெண்ணாகத் தன் அம்மாவை அவளால் பார்க்க முடியவில்லை.

“அன்னைக்கே சொன்னேன் இந்த எடுபட்ட பயட்ட இதெல்லாம் நம்மக்கு ஒத்து வராதுன்னு, கேட்டானா?”, “சோசியக்காரன் சொன்னாம்மா இது வெளங்காதுன்னு”, “இவா பெரிய மைசூர் மஹாராணி இவளத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நெலயா நின்னுல்லா கெட்டுனான், இன்னைக்குப் போயி சேந்துட்டானே”, “போன சென்மத்துல என்ன வரம் வாங்கீட்டு வந்துச்சோ மூதேயி, நம்ம வீட்லல்லா வந்து கெடக்கு” என்று நித்தமும் வசை. தனி ஒரு பெண்ணாக இரு பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கரை சேர்ப்பதென்பது அத்தனை எளிதான செயல் இல்லை. அப்பா இருந்தவரை கோவில் வாசலில் பூக்கடை. தற்போது அதற்கும் வழி இல்லை. வீட்டிலேயே தீப்பெட்டி ஒட்டும் வேலை. அதில் வரும் வருமானத்தில்தான் இருவரையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் அம்மா. அவ்வப்போது ஏற்படும் பணப் பற்றாக் குறையை தாத்தாவும், மாமாவும் சரி செய்ய, அப்பா இருந்திருந்தால் எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் வளர்த்தாள். தான் சம்பாதிக்கத் தொடங்கிய பின்னும் அம்மா தீப்பெட்டி ஒட்டுவதை நிறுத்தவில்லை.

தான் சம்பாதித்து அம்மாவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடிகிறதை எண்ணி அவளுக்கு மிகுந்த சந்தோசம். அம்மாவுக்கும்தான். தம்பிக்கான படிப்பு செலவை தானே ஏற்றுக் கொண்டாள். அதற்கான அனைத்து வழிகளையும் செய்து வைத்திருந்தாள். இதை எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்கு சந்தோசம்தான். ஆனால் சில நாட்களாக அவள் ஏதோ கவலையில் இருப்பதைப் போன்று உணர்ந்தாள். கேட்டால் “உனக்குத் தான் காலகாலத்துல ஒரு நல்லது பண்ணிப் பாக்கணும்” என்றாள் அம்மா. தம்பி படிப்பு முடியும் வரை வேண்டாமென்று சொல்லியும் அவள் கேட்பதாகத் தெரியவில்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்திருந்தார்கள். மாப்பிள்ளை சொந்தமாக கடை வைத்திருக்கிறார். அவள் மாமா வழியில் தூரத்து சொந்தம். பார்த்துவிட்டுச் சென்றவர்கள் நல்ல செய்தி சொல்ல ஒரு மாதத்தில் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது தை பதினொன்று என. தாத்தாவும் மாமாவும் முன்னின்று நடத்தினார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் திருமணம். அவள் அம்மா சொன்னது போல் சரியாக ஏழு மணிக்குப் பெண் அழைக்க வந்திருந்தார்கள். குளித்துக் கிளம்பி வெளியில் வர மணி எட்டு. காகம் கத்தும் சத்தம் கேட்க, சென்று பார்த்தாள். வீட்டுச் சுவரில் அதே காகம். தம்பியிடம் சாப்பாடு வைக்கச் சொல்லிவிட்டு வண்டியில் ஏற, நல்ல நேரம் முடிவதற்குள் செல்ல வேண்டும் என்பதால் வண்டி உடனே மாப்பிள்ளையின் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்துக்குப் புறப்பட்டது.

வருபவர்களை வரவேற்றுக் கொண்டு மகளுக்கு உதவியாக சேலையை சரி செய்வதும், வியர்வையைத் துடைத்துவிடுவதுமாக அருகிலேயே நின்று கொண்டிருந்தாள் அம்மா. முகூர்த்த நேரம் வரவும், “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல இவள் மணமேடை சென்று அமர்ந்தாள். பூசைகள் பல செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர். பின்னர் சற்று நேரத்தில் “பொண்ணோட அம்மாவையும் தோப்பனாரையும் கூப்பிடுங்கோ” என்று சொல்ல சித்தியும் சித்தப்பாவும் அவள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் தன்னை அறியாமல் அவள் கண்கள் அம்மாவைத் தேடியது. கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள். அருகில் தம்பி.

பட்டறை

மு வெங்கடேஷ்

முன்னிருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பிய டிரைவர், “சார் நீங்க சொன்ன எடம் வந்துட்டு” என்றார்.

நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு லாலா கடையும் அதற்கடுத்து கல்யாணி காபி கடையும் இருந்ததாக ஞாபகம். மாலை நாலு மணி ஆகவும் லாலா கடை அல்வாவுக்கும் கலையணி கடை உளுந்த வடைக்கும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். எதிர் வரிசையில் இருந்த முஸ்தபா சாப்பாடு கடையின் சால்னாவின் ருசி இன்றும் என்னால் உணர முடிகிறது. அத்தனை சுவை. இன்று எல்லாமே மாறியிருந்தன. இருபது வருடங்களுக்கு முன் பார்த்திருந்த எதுவுமே கண்ணில் படவில்லை.

காரின் பின்னிருக்கையில் மனைவியும் மகனும் மகளும் உறங்கிக் கொண்டிருக்க, “சரி கார அந்த கட முன்னாடி விடுங்க நா போயி கேட்டுட்டு வந்துர்றேன்” என்று சொல்ல, அவரும் அதுபோலவே செய்தார்.

“அண்ணாச்சி இங்க காந்தி ஆசாரின்னு?…” நான் கேட்டு முடிப்பதற்குள், “ஓ அவுகளா, அவுகெல்லாம் இங்க இருந்து காலி பண்ணி வருசம் என்னாச்சு?” என்று சொல்லிவிட்டுத்தான் வைத்திருந்த பழைய புத்தகங்களை எடை போடுவதில் மும்முரமானார் கடைக்காரர்.

“எங்க இருக்காருன்னு….?”

“அந்த வெவரம் தெரியல”

“இல்ல யார்ட்ட கேட்டா?”

“நீங்க ஒன்னு பண்ணுங்க. இந்தானிக்கு மேக்க பாக்க ஒரு பர்லாங்கு போனா வலது பக்கம் ஒரு பாங்கு வரும். பாண்டியன் கிராம பாங்கு. அங்க போயி அப்ரைசர் தங்கவேல்னு ஒருத்தர் இருப்பாரு, அவரப் புடிங்க, வெவரம் சொல்லுவாரு” என்றார்.

“சரி அண்ணாச்சி, ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு காரில் அந்த பாங்கை நோக்கிச் சென்றோம்.

அன்று திங்கள் கிழமை என்பதால் பாங்க் கூட்டமாகஇருந்தது. உள்ளே சென்ற நான் அங்கு நின்று கொண்டிருந்தவரிடம், “இங்க அப்ரைசர் தங்கவேல்னு……?” என்று கேட்கத் தொடங்க, “அவரு உள்ளதான் இருக்காரு, நீரு வரிசையில வாரும். இங்க நிக்கிறவனுவெல்லாம் என்ன கேனப் பயலுவலா? நாங்க எல்லாம் அவரப் பாக்கத்தான் நிக்கோம்” என்று கோபமான பதில் வந்தது. நான் வந்த நோக்கத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கிறார். இனியும் அவரிடம் கேட்டால் சரி வராது என்று நினைத்துக் கொண்டு, நேராக மானேஜரிடம் சென்று நான் வந்த நோக்கத்தைச் சொல்லி, ஒரு இரண்டு நிமிடம் அவரைப் பார்த்துவிட்டு போய் விடுகிறேன், என்று அவரைச் சந்திக்க அனுமதிகேட்டேன்.

“என்னய்யா நீங்க? ஒங்களோட ஒரே ரோதனையாப் போச்சு. பேண்டு சட்டைய மாட்டீட்டு காலையிலேயே கூட்ட நேரத்துல வந்து படுத்துறீங்க. சரி அசலூருன்னு வேற சொல்லீட்டீங்க, உக்காருங்க வரச் சொல்றேன்” என்று சொல்லி எழுந்து சென்றார் மானேஜர். சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியை தற்செயலாகப் பார்த்தேன். நான் முதலில் பேசியவர் என்னை முறைத்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை, நெற்றியில் பட்டை சகிதமாக வந்தவர், “என்ன சார் வேணும்?” என்று கேட்க, “இல்ல தங்கவேல்….”

“நாந்தான். என்னன்னு சொல்லுங்க? கூட்ட நேரத்துல டயத்த வீணடிக்காதீங்க” என்றார் கனத்த குரலில்.

“இல்ல. காந்தி ஆசாரின்னு?”

“ஆமா அவருக்கென்ன?”

“இல்ல அவருக்கு ஒன்னுமில்ல. அவரப் பாக்கணும் அதான்” என்றேன் தயக்கமாக.

“அவரப் பாக்கணும்னா நேராப் போயி பாக்க வேண்டியதான? இங்க பாங்க்ல வந்து?” என்று அவர் முடிப்பதற்குள் இம்முறை நான் முந்திக் கொண்டேன்.

“அவர் அட்ரஸ் வேணும்”

“அட்ரசா அது கொஞ்சம்……” கண்ணை மூடிக் கொண்டே கழுத்தை சாய்த்து நெற்றியை தடவியவாறே “எதுல வந்துருக்கீங்க?” என்று கேட்டார்.

“கார்ல” என்றதும் மூடியிருந்த கண்ணைத் திறந்து கழுத்தை மேலும் சாய்த்து வெளியில் பார்த்தார். கார் நிற்பதை உறுதி செய்த பின்னர், “பையன அனுப்பி விடுறேன். வீட்டக் காமிப்பான்,” என்று சொல்லிவிட்டுச் சென்றவர் சட்டெனத் திரும்பி, “ஆமா நீங்க?” என்று கேட்டார். “அவருக்கு வேண்டப்பட்டவன் தான்” என்று சொல்லிவிட்டு அவர் அனுப்பி வைத்த பையனை அழைத்துக் கொண்டு காரில் ஏறினேன்.

டிரைவரை அந்தச் சிறுவன் வழி நடத்த கார் ஒவ்வொரு தெருவாக சென்று கொண்டிருந்தது. மனைவியும் மகளும் விழித்திருந்தனர். மகன் மட்டும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். ஒவ்வொரு சந்தாகச் சென்ற கார் கடைசியாக ஒரு குடிசைப் பகுதிக்குள் நுழைந்தது. “அண்ணே, அண்ணே, இங்க நிப்பாட்டுங்க, இதான் வீடு” என்று பையன் சொல்ல கார் நின்றது. “சரி சார் நா வாரேன். வேல கெடக்கு” என்றான் அவன். “தம்பி நில்லுப்பா, கார்லயே கொண்டு போயி விட்டுருவாரு,” என்று சொல்லி டிரைவரிடம் இருநூறு ரூபாய் கொடுத்து, “அவனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு நீங்களும் அப்படியே சாப்பிட்டு வந்துருங்க,” என்றேன். வீடு சரிதானா? அவரு இருப்பாரா? ஒருவித தயக்கத்துடன் கதவைத் தட்டினேன்.

“யாரது?இந்நேரத்துல?” என்ற குரல் கேட்கவும் வீடு சரிதான் என்று உறுதி செய்து கொண்டேன். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். வந்தவர் கண்களைச் சுருக்கி வலது கையை நெற்றியில் வைத்தவாறே ஒரு நிமிடம் ஒருவர் மாற்றி ஒருவராக எங்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின், “யாரு?” என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் “மொதல்ல உள்ள வாங்க புள்ளைகள வச்சிட்டு வெளிய நின்னுட்டு,” என்று சொல்லி எங்களை உள்ளே அழைத்தவர், மறுபடியும் “யாருன்னு தெரியலையே” என்றார் நாடியில் கை வைத்து தேய்த்தவாறே. “அண்ணாச்சி, நான் பொன்ராசு மகன் சக்தி” என்று சொல்லவும் “எந்த பொன்ராசு? புடிபடலையே” என்றார் தாடியைத் தடவிக் கொண்டே. “பொன்ராசு, பார்வதி, பஜார்ல மளிகை கடை வச்சிருந்தாங்களே” என்று நான் சொல்லி முடிக்கவும், “ஏ நம்ம நாடார் மவனா? எப்படிடே இருக்க? வருசம் என்னாச்சு? உங்க அப்பா அம்மா எல்லாரும் சௌக்யமாடே? நல்லா இருக்காகளா? எங்கடே இருக்கீக? இத்தன வருசம் தகவல் ஒன்னும் காணமேடே?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்க ஆரம்பித்தார், ஒருவித சந்தோசமும் உற்சாகமும் கலந்த குரலில். “எல்லாரும் நல்லா இருக்கோம்” என்று சொன்னேன்.

“இந்தா இருங்க வாரேன்” என்று சொன்னவர் உள்ளிருந்து ஒரு பாயை எடுத்து தரையில் விரித்து எங்களை அமரச் சொன்னார். நாங்கள் அமரவும் அவர் அருகில் கிடந்த ஒரு இரும்பு சேரில் அமர்ந்தார், “கீழ உக்காந்தா குறுக்கு புடிக்கி” என்று சொல்லிக் கொண்டே. அவர் அணிந்திருந்த பூணூல் கடந்த வாரம் ஆவணி அவிட்டம் வந்து சென்றதை நினைவூட்டியது. அவர் காலில் ஏதோ அடிபட்டு மஞ்சள் வைத்து வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாக அது வைத்தியரோ டாக்டரோ போட்ட கட்டு அல்ல என்பதை என்னால் உணர முடிந்தது.

“இது யாரு? உன் பொண்டாட்டியும் புள்ளைகளுமாடே?” என்று கேட்டார்.

“ஆமா அண்ணாச்சி இது என் பொண்டாட்டி கௌரி. இது பசங்க. மூத்தவ சாலினி, இளையவன் சஞ்சய்” என்றேன். மனைவி வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டார். “இப்போ பாம்பேல இருக்கோம். இவளுக்கும் பாம்பே தான். மராத்தி. தமிழ் தெரியாது” என்றேன். “ஏ பெரிய ஆளுடே நீ. பம்பாய்க்காரிய புடிச்சிட்டியா? கழுதை எதுன்னா என்ன? தமிழா இருந்தா என்ன மராத்தியா இருந்தா என்ன? எல்லாம் மனுசங்க தான?” என்றார் சிரித்துக் கொண்டே. இருபது வருடங்களுக்கு முன்பிருந்த அதே எடக்கு பேசும் குணம் இன்றும் குறையவில்லை. “வீட்ல தமிழா? இல்ல….?” என்று அவர் கேட்க வரும் கேள்வி புரிந்துவிட, “இல்ல இங்கிலீஷ். அப்ப அப்ப மராத்தி” என்றேன். சிரித்துக் கொண்டவர் “ஏ பேரப் புள்ளைகளா தாத்தாவத் தெரியுமா? உங்க அப்பன் ஏதாச்சும் சொல்லிருக்கானா? ஓல்ட் மேன்,தெரியுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். குழந்தைகள் இருவரும் என் முகத்தைப் பார்க்கத் தொடங்கினர். நான் “தாத்தா – கிரான்ட் பா” என்றேன். அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

“சரி உங்க அப்பா அம்மா எங்க இருக்காக? எப்படி இருக்காக ஒன்னும் சொல்ல மாட்டிக்கியே?” என்று கேட்கவும், “எல்லாரும் பாம்பேல தான் இருக்கோம். அவங்க நல்லா இருக்காங்க” என்றேன். “ரொம்ப சந்தோசம்டே கேக்குறதுக்கே சந்தோசமா இருக்கு” என்றார். “சரி இங்கனையே இருங்க இந்தா வாரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார். பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது. நான் அமர்ந்திருந்தவாறே வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். எழுந்து சென்று சுற்றிப் பார்க்கும் அளவுக்கு வீடு பெரிதாக இல்லை. ஒரு பெரிய ஹால். அதன் நடுவே ஒரு கயிற்றுக் கட்டில், அருகில் எச்சில் துப்புவதற்கு மணல் நிரப்பிய ஒரு டப்பா. அதைச் சுற்றி அணைக்கப்பட்ட பீடித் துண்டுகள். ஹாலுக்கு பக்கவாட்டில் ஒரு சிறிய அறை. கதவு சாத்தி இருந்தது. ஹாலின் ஒரு மூலையில் உமி மூட்டை ஒன்றும் கரி மூட்டை ஒன்றும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அதனருகே ஒரு உமி லோடு, பட்டறைக் கல், தராசுப் பெட்டி, சுத்தியல் என சில பட்டறை சாமான்கள். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு ஒன்றும் அங்கு இல்லை.

ஒன்றும் புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்த மனைவியிடம் அவர் யாரென்பதை விளக்கத் தொடங்கினேன், மராத்தியில்.

“அண்ணாச்சி பேரு காந்தி ஆசாரி. உண்மையான பேரு பட்டவராயன். காந்தி மீது அவ்வளவு பாசம். அதுனால அவர் பெயரையும் காந்தின்னு மாத்திக்கிட்டாரு. தீவிர காங்கிரஸ்காரர். வருசா வருசம் சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தி வெடி போட்டு முட்டாய் வாங்கித் தருவாரு. போடுறது எப்போதும் கதர் ஜிப்பாதான். அப்போல்லாம் நகை செய்யணும்னா ஊர்ல இவர விட்டா வேற ஆள் கிடையாது. இந்த ஊர்ல மட்டும் இல்ல, சுத்தியுள்ள எட்டு ஊருக்கும் இவரு ஒருத்தர்தான். பேருக்கு ஏத்த மாதிரி, செய்யிற தொழிலுக்கு ஏத்த மாதிரி, மனசும் கையும் அவ்வளவு சுத்தம். கைராசிக்காரர். அன்னைக்கு மட்டும் அண்ணாச்சி ஊர்ல இல்லைன்னா ஒருத்தருக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்காது. அண்ணாச்சி வந்து தாலிக்கு பொன் உருக்குனாத்தான் கல்யாணப் பேச்சே. மண்டபம் கிடைக்கோ இல்லையோ அண்ணாச்சிட்ட நாள் கிடைக்கணும். அந்தளவுக்கு பரபரப்பா இருந்தாரு. நம்ம பலசரக்கடைக்கு எதுத்த மாதிரிதான் அண்ணாச்சியோட பட்டறையும். பலசரக்கடைக்குப் போட்டியா அண்ணாச்சி பட்டறையில ஆள் நிக்கும். சனமெல்லாம் மூட்டையும் முடிச்சுமா வந்து நிக்குங்க, அண்ணாச்சி பட்டறை வாசல்ல. ஒன்னு நாளைக்கு எம்பொண்ணுக்கு கல்யாணங்கும், ஒன்னு மறுநாள் மகளுக்கு சடங்குங்கும், ஒன்னு அடுத்த வாரம் காது குத்துங்கும்… இப்படி வருச கட்டி நிக்குங்க. எனக்கு வெவரம் தெரிஞ்சு அண்ணாச்சி வாக்கு தவறினதில்ல. சொன்னா சொன்னபடி செய்வாரு. என்ன ஒரு சில நேரத்துல முன்னப் பின்ன ஆகும் ஆனா தங்கத்துல எந்தக் குறையும் இருக்காது.

“காலைல எந்திச்சு, குளிச்சு, நெத்தி நிறையா பட்ட போட்டு, ஒரு சில்வர் பிளஸ் பைக் வச்சிருந்தாரு, அதுலதான் பட்டறைக்கு வருவாரு. வரும்போதே கூட்டம் வரிசை கட்டி நிக்கும். அந்தளவுக்கு கிராக்கி உண்டு அண்ணாச்சிக்கு. இவரு வீட்டம்மா லட்சுமி அக்கா. அந்தக்கா அதுக்கு மேல. இவரு தங்கம்னா அவுக சொக்கத் தங்கம். ஜாடிக்கேத்த மூடி. எப்பவும் மஞ்ச தேச்சு குளிச்சு,நெத்தி நிறைய குங்குமப் பொட்டு வச்சு மங்களகரமா இருக்கும். இவ்வளத்தையும் குடுத்த ஆண்டவன் பாவம் புள்ளை ஒன்னுகூட கொடுக்கல. பாவம் அந்தக்கா அதுக்காக போவாத கோவில் இல்ல. ஆனா நம்மாளு எதுக்கும் கவலைப்பட மாட்டாரு. அஞ்ச மாட்டாரு. நல்லா ஞாபகம் இருக்கு, ஒருநாள் நான் கடையில இருந்தேன். அப்பா விளையாட்டுக்கு அண்ணாச்சிட்ட கேட்டாரு, “புள்ளைக ஒன்னும் இல்ல, இவ்ளோ சொத்து சுகம் இருக்கு, என்ன பண்ணப் போறீகன்னு?” அதுக்கு அண்ணாச்சி சொன்னாரு, “புள்ள இல்லன்னா என்னையா? பெரிய புள்ள? எனக்கு அப்புறம் எம்பொண்டாட்டி அனுபவிப்பா, அவளுக்கு அப்புறம் ஏதாவது அனாத ஆசிரமத்துக்கு எழுதி வைப்பேன். அங்க உள்ளதுக அனுபவிச்சிட்டு போவுது” என்று.

“அப்போல்லாம் அண்ணாச்சி வீட்ல அவ்ளோ வசதி. நாங்க எல்லாரும் அவரு வீட்லதான் போயிக் கெடப்போம். அந்த அக்கா எங்கள அப்படி பாத்துக்கும். விதவிதமா சாப்பிடுறதுக்கு செஞ்சு தரும். விடிஞ்சதுல இருந்து அடையிற வரைக்கும் அவுக வீட்லதான். அப்போ அண்ணாச்சி வீடு பெரிய தெருவுல இருந்துச்சு. எங்க வீடுந்தான். அண்ணாச்சி வீடே இருக்கும் ஒரு பெரிய கல்யாண மண்டபம் பெருசு. அப்படி இருந்தவரு.”

திடீரென்று சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தேன். அண்ணாச்சி. கையில் ஒரு தட்டு அதில் நான்கு கிளாசுகள். “என்னம்மா உம்புருசன் உன்ன பயம்புருத்தீட்டு இருக்கானா? அவன் சொன்னதெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்” அவளுக்கு தமிழ் தெரியாது என்பதை அவர் மறந்திருந்தார். நான் ஞாபகப்படுத்தவும் “நா ஒரு கூறுகெட்டவன்டே. வயசு ஆக ஆக குண்டி மறந்து போயிருது” என்று சொல்லிக் கொண்டே காபியை நீட்டினார். விளையாடிக் கொண்டிருந்த என் குழந்தைகளிடம் “ஏ பேரப் புள்ளைகளா இங்க வாருங்க, வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு விளாடுங்க” என்று கூப்பிட்டார். சட்டென்று என்னிடம் “புள்ளைக இதெல்லாம் குடிக்குமாடே?” என்று கேட்டார். “என்ன அண்ணாச்சி இப்படி கேட்டீங்க? அதெல்லாம் குடிப்பாங்க” என்றேன். “இல்ல இப்ப உள்ள புள்ளைகெல்லாம் ரொம்ப சுத்தம் பாக்குமே. அதுவும் பம்பாய்ப் புள்ளைக வேற? அதான் இந்த கெழவன் போட்ட காப்பிய…….” என்று முடிப்பதற்குள், “ஐயோ அண்ணாச்சி அப்படி எல்லாம் சொல்லாதீங்க,” என்று சொல்லி ஒரு கிளாசை நான் எடுத்து, மற்ற மூன்றையும் மனைவியிடமும் குழந்தைகளிடமும் கொடுத்தேன். “ஏ பேரப் புள்ளைகளா இங்கன வாங்க, தாத்தா ஆத்தித் தாரேன்” என்று சொல்லி இரண்டு கிளாசு காபியையும் எடுத்து அருகில் கிடந்த விசிறியால் வீச ஆரம்பித்தார். நான் காபியை உறிஞ்சினேன். சீனி கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.

காபியை குடித்து முடித்த குழந்தைகள் “daddy it’s so boring here. come lets move” என்று ஆரம்பித்தனர். “என்னடே எம்பேரப் புள்ளைக என்ன சொல்லுதுக?” என்று கேட்டார். “அவங்களுக்கு போர் அடிக்காம், அதான்” என்று இழுத்தேன். “அட இவ்ளோதானா? சரி நீ ஒன்னு பண்ணு, பொண்டாட்டி புள்ளைகள வேணா நம்மூரு கோவிலுக்குப் போயிட்டு வரச் சொல்லு. நா வேணா ஒரு ஆட்டோ சொல்லவா?” என்றார். “இல்ல அண்ணாச்சி, கார் வெளில தான் நிக்கி அதுல வேணா போயிட்டு வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு டிரைவருக்கு போன் செய்தேன். “கோயிலுக்கு போயிட்டு நேரா இங்க வரச் சொல்லீரு. வெளில கண்டத கழுதையும் வாங்கிச் சாப்ட்ராம, மத்தியானம் இங்கதான்” என்றார். சரி என்று தலையாட்டிவிட்டு அவர்களை காரில் ஏற்றிவிட்டு நான் மீண்டும் வீட்டிற்குள் வந்தேன்.

“அண்ணாச்சி தப்பா நெனச்சிக்காதீங்க, வருமானத்துக்கு?” என்று கேட்கவும் “அது அப்படியே ஓடுதுடே, எல்லாம் அத நம்பித்தான்” என்று பட்டறைக் கல்லை நோக்கிக் கை காண்பித்தவர் “ஏதாவது பத்தவைக்கிற வேல வரும், அதுல கிடைக்குற அஞ்சு பத்த வச்சு அப்படியே வண்டி ஓடுது. ஓடுற வரைக்கும் ஓடட்டும் பாப்போம்,” என்று சொல்லி சிரித்தார். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு “ஆமா அக்காவ எங்கண்ணாச்சி?” என்று கேட்டேன். “அவளா இங்கதான் உள்ள தூங்கீட்டு இருக்கா,” என்று பூட்டிய அறையை நோக்கி கண்ணைக் காண்பித்தார். திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

சற்று நேரத்திற்குப் பின் “என்னாச்சு நல்லாத்தான இருந்தீங்க, இப்ப எப்படி இப்படி?” என்று தயங்கியவாறே கேட்டேன்.

“இப்ப என்னடே இப்பவும் நல்லாத்தான இருக்கேன். அப்போ கையில கொஞ்சம் காசு இருந்துச்சு இப்ப இல்ல அவ்வளவுதான? காசு தான் போச்சே தவிர மானம் மரியாதை எல்லாம் அப்படித் தான்டே இருக்கு” என்றார்.

“அது சரி அண்ணாச்சி, அதான் எப்படி போச்சு?” என்று நான் இழுக்க, “அட அதுவா? எல்லாம் ஒழுங்காத்தான்டே போயிட்டு இருந்துச்சு, எப்ப ஊருக்குள்ள இந்த வெளியூர்க்காரப் பயலுவெல்லாம் நகக் கட வைக்க ஆரம்பிச்சானுவளோ அப்ப ஆரம்பிச்சதுதான் இந்தக் கேடு. கட வச்சிருக்கானுவலாம் கட, பொல்லாத கட. ஒரு பயலுக்காவது தங்கத்த ஒரசிப் பாக்கத் தெரியுமா? இல்ல ஒரசிப் பாத்து எத்தன டச்சு இருக்குன்னு சொல்லத்தான் தெரியுமா? வேண்டாம்டே, கொறஞ்சது தங்கமா பித்தளையானாவது பாக்கத் தெரியுமா? ஒரு மயிரும் தெரியாது. இவனுவெல்லாம் யாவாரம் பண்ணி? எல்லாம் இந்த நாசமாப் போற வெளம்பரம் பண்ற வேலயாக்கும். வெளம்பரம் பண்ணிப் பண்ணியே சனங்கள ஏமாத்தீட்டானுவோ. சரி, அவந்தான் அப்படி பண்றான்னா அத வாங்குற கூதி புள்ளைகளுக்காவது அறிவு வேணாம்? என்னத்தையாவது ஃப்ரியா தாராம்னா பின்னாலயே போயிர்றது. தாயோளி நேத்தைக்கு சேதாரம் இல்லன்னான், இன்னைக்கு கூலி இல்லங்கிறான், நாளைக்கு அது தங்கமே இல்லங்கப்போறான். நடக்குதா இல்லையான்னு பாரேன். பட்டாத்தான் இந்தக் கூதிபுள்ளைகளுக்கும் ஓர்ம வரும்.

“என்னமோ ஹால் மார்க்குங்கான், 916 ங்கான் எதுவா இருந்தாலும் இந்த காந்தி ஆசாரி செஞ்ச நக கிட்ட வந்து நிக்க முடியுமாடே? இல்ல நிக்க முடியுமான்னு கேக்கேன்? என்னடே ஊமையா இருக்க? வாயத் தொறந்து சொல்லேன். ஒத்த காத்த அறுத்து வச்சிர்றேன் எவனாச்சும் குத்தம் கண்டு புடிச்சாம்னா. தங்கங்கிறது வீட்ல தங்கணும்டே. அதுக்கு ஒரு கை ராசி வேணும். என்னமோ இந்த பான்சி கடையில போயி வாங்குற மாதிரி வாங்குதுக இப்போல்லாம், அதான் எல்லா நகையும் பாங்குல இருக்கு. ஒரு மூதியாது ரோட்ல நக போட்டு போதா பாரு? அப்போல்லாம் பொம்பளைக வெளில வந்தாலே சும்மா தக தகன்னு மின்னுங்க. ஏன்னா நக வீட்ல தங்குச்சு. நாடு எங்கயோ போயிட்டு இருக்கு. அதுக்கு ஒரு அழிவு எப்போ வரும்னு தெரியல. ஒங்க அப்பாட்டப் போயி கேளு நம்ம கை ராசிய. சொல்லுவாரு. ஒங்க அம்மா போட்ருக்காளே தாலி அது நா செஞ்சதுதான். வருசம் என்னாச்சு? இன்னும் அப்படியே கெடக்கும் பாரு” என்றார்.

“எங்க அம்மா தாலிய செஞ்சது மட்டும் நீங்க இல்ல, அது இப்போ அவங்க கழுத்துல கெடக்குறதுக்கே நீங்க தான் காரணம்” என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

பேசிக் கொண்டிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. கோவிலுக்குச் சென்ற மனைவியும் குழந்தைகளும் திரும்பி வர, மணி மதியம் ஒன்றாகி இருந்தது. குழந்தைகள் உள்ளே வரவும் “எம் பேரப்புள்ளைகளுக்கு பசிக்கா?” என்று கேட்டார். “சரி நீங்க செத்த இருங்க நா போயி நம்ம ஐயர் கடேல சாப்பாடு வாங்கியாந்துறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு வயர் கூடையை கையில் எடுத்துக் கொண்டார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்பதாக இல்லை. அதற்குமேல் என்னால் அவரை வற்புறுத்தவும் முடியவில்லை. வெளியில் சென்றவர் திரும்பி வந்து, “நம்ம டிரைவர் தம்பியையும் உள்ள உக்காரச் சொல்லு, அவருக்கும் சேத்து வாங்கியாந்துறேன்,” என்று சொல்லிவிட்டு, “நம்ம பேரப்புள்ளைக பிஸ்கோத்து சாப்டும்லா?” என்று கேட்டவாறே சென்றார்.

உள்ளே வந்த டிரைவர் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு “யார் சார் இவரு?” என்று கேட்டார். “சுருக்கமாச் சொல்லனும்னா நா இன்னைக்கு இந்த நெலமைல இருக்குறதுக்கு இவருதான் காரணம்” என்றேன். அவருக்குப் புரிந்திருக்காது என்று எனக்குத் தெரியும். அவர் முகமும் அவ்வாறே காட்டியது.

“இவரு பட்டறைக்கு எதுத்த கடைதான் நம்ம கடை அப்போ. நல்லா வசதியாத்தான் இருந்தோம். இவரு அளவுக்கு இல்லனாலும், ஏதோ கொஞ்சம் சுமாரா வாழ்க்கை நல்லா போயிட்டு இருந்துச்சு. தேவையில்லாம லாரி ஒன்னு வாங்குனோம். அதுல புடிச்சது சனி. ஒவ்வொன்னா வித்து வித்து கடைசியில எல்லாத்தையும் வித்துட்டோம். வீடு, லாரி, காரு, தோட்டம், கடை எல்லாத்தையும். மிஞ்சுனது எங்கம்மா கழுத்துல கிடக்குற தாலி மட்டும்தான். ஊரு பூராம் கடன். வெளியில தல காட்ட முடியல. எங்கப்பா தற்கொலை செஞ்சுக்கக்கூடப் போனாரு. கடைசியா ஒருவழியா அவரப் புடிச்சுக் காப்பாத்தி, இருக்குற கொஞ்சநஞ்சத்தையும் வித்து கடன அடச்சிட்டு, அதுக்குமேல இந்த ஊருல இருந்தா நல்லாருக்காதுன்னு ராத்திரியோட ராத்திரியா ஊரக் காலி பண்ணீட்டு போலாம்னு கெளம்புனோம். எங்க போறது எப்படி போறது ஒன்னும் தெரியாது. எங்கப்பா கையிலயும் அஞ்சு பைசா இல்ல. ரொம்ப நேரம் யோசிச்சிட்டு வேற வழியே இல்லாம எங்கம்மா தாலிய கழட்டி இவர்ட்ட விக்கலாம்னு ராத்திரி ஒரு மணிக்கு இவரு வீட்டுக் கதவத் தட்டினோம்.

“கதவத் தொறந்து உள்ள கூப்பிட்டுப் பேசுனவரு எங்கள அந்த ஏச்சு ஏசுனாரு. அந்த அக்காவும் எவ்வளவோ சொல்லுச்சு. நாங்க பிடிவாதமா இருந்ததுனால அவங்களால எங்களத் தடுக்க முடியல. ஆனா தாலிய மட்டும் வாங்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. அந்தக்கா எங்கம்மாவ சாமி ரூம்குள்ள கூட்டீட்டுப் போயி எங்கப்பாவக் கூப்ட்டு தாலிய மறுபடியும் கட்டச் சொல்லி, திருநீருபூசி கையில ரெண்டாயிரம் பணம் கொடுத்துச்சு. அண்ணாச்சி கூடவே நின்னாரு. அந்தக்கா என்ன கட்டிப்புடிச்சு அழுத்துச்சு. போம்போது அண்ணாச்சி என் சட்டப் பையில நூறு ரூபாவ திணிச்சாரு. அன்னைக்கு இந்த ஊரவிட்டுப் போனவங்கதான் தெக்கு தெச தெரியாம எங்கெல்லாமோ போயி கடைசியா பம்பாய் போயி சேந்தோம். அதுக்கடுத்து தான் வாழ்க்கை இப்படி மாறிப் போச்சே.”

நான் சொல்லி முடிக்கவும் அண்ணாச்சி வரவும் சரியாக இருந்தது. எங்களை அதே பாயில் அமரச் சொல்லி, வாங்கி வந்த சாப்பாடு பொட்டலங்களைப் பிரித்தார். மூன்று சாப்பாடுதான் இருந்தன. டிரைவருடன் சேர்த்து நாங்கள் ஐவரும் அதைப் பங்கிட்டுச் சாப்பிட்டோம். குழந்தைகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கட்டும் வாங்கி வந்திருந்தார். அண்ணாச்சியோ, “எனக்குப் பசி இல்ல நா அப்பறமா சாப்பிட்டுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டார்.

“ஒனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியலடே நம்ம பானு சித்திய. நம்ம வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி இருந்துச்சுகளே”. என் முகத்தைப் பார்த்து அவரே கணித்திருக்க வேண்டும் எனக்கு ஞாபகம் இல்லை என்று. “என்னப்பா ஆளு நீ? அட நம்ம மொய்தீன் பழக்கட. பஸ் ஸ்டாண்டுல இருந்ததே” என்று சொல்ல, “ஆமா ஆமா” என்று ஞாபகம் வர தலையாட்டினேன். “ஒரு மாசத்துக்கு முன்னால வந்துருந்துச்சுகடே கொழந்த குட்டிகளோட. இப்போ எங்கயோ துபாய்ல இருக்குகளாம். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சுக, பழைய கதை எல்லாம். அது மக நிசா இருக்காளே சின்ன வயசுல கிளிஞ்ச சட்டையும் பாவாடையும் தான் போட்டுட்டு வந்து நிக்கும் நம்ம வீட்ல. பாதிநாளு நம்ம வீட்லயேதான் கெடக்கும். பாவம் அந்த காலத்துல அதுக வீட்ல குடிக்க நல்ல கஞ்சி கெடையாது. மொய்தீனும் என்ன பண்ணுவான்? நாலும் பொட்ட புள்ளைகளா பெத்து வச்சிருந்தான். பேசிச் சிரிச்சிட்டு இருந்துச்சுக. கடைசி போகேல பொசுக்குன்னு அழுதுட்டுக, நாங்க கெடக்க கெடையப் பாத்துட்டு. சும்மா சொல்லப்பிடாதுடே பாசக்கார சனங்கதான். பழச ஞாபகம் வச்சு தேடி வந்துட்டுக பாரேன். என்ன இருந்தாலும் பழைய ஆளுக பாத்தியா? தாயும் புள்ளயாவுமுல்லா பழகுனோம். சொல்லச் சொல்ல கேக்காம போகேல முழுசா 50,000 ரூவாவ தூக்கி கையில திணிச்சிச்சுக. வேணாம்னு எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். கடைசியில அந்த சாமி படத்துக்கு முன்னால வச்சிட்டுப் போயிட்டுக. இப்படிலாம் சனங்க இருக்கறதுனால தான்டே நாட்ல இன்னும் மழை பெய்யுது” என்றார்.

சாப்பிட்டுக் கை கழுவிய பின்னர் மணி பார்த்தால் இரண்டாகி இருந்தது. உடனே புறப்பட்டால் தான் இருட்டுவதற்குள் ஊர் செல்ல முடியும் என்று எண்ணி, “அண்ணாச்சி அப்போ நாங்க கிளம்புறோம்,” என்றேன். “என்னடே சாப்ட்ட ஒடனே கெளம்புறேங்குற? சாந்தரம் வர இருந்து காப்பி கீப்பி குடிச்சிட்டுப் போறது?” என்றார். “இல்ல அண்ணாச்சி அடுத்தவாட்டி கண்டிப்பா அம்மாவையும் அப்பாவையும் கூட்டீட்டு வாரேன். அம்மா, அப்பாட்ட உங்களப் பாத்ததா சொன்னா ரொம்ப சந்தோசப்படுவாங்க” என்றேன். “அட, எனக்கும் தான்டே சந்தோசம். அடுத்தவாட்டி அம்மா அப்பாவோட நாலு நாள் இங்க தங்குற மாதிரி வாங்க” என்றார். மேலும் “பேரப்புள்ளைகளுக்குப் போர் அடிக்காத மாதிரி பாத்துக்கலாம்” என்றார்.

“சரி அண்ணாச்சி” என்று சொல்லிவிட்டு “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்லி நாலு பேரும் அவர் காலில் விழுந்தோம். டிரைவரும் சேர்ந்து கொண்டார். “அட என்னடே இது? இதெல்லாம் எதுக்கு? நம்ம புள்ளைக எங்க இருந்தாலும் இந்த கெழவன் ஆசி உண்டுடே” என்றார். மனைவி ஓடிச் சென்று சாமி படத்தின் அருகில் இருந்த திருநீர் கிண்ணத்தை எடுத்து அவரிடம் கொடுக்க, அதிலிருந்த திருநீரை எடுத்து அனைவரின் தலையிலும் தூவி நெற்றியில் பூசி விட்டார். பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “பிள்ளைகளுக்கு கொடுக்க ஒன்னும் இல்லயேடே” என்று சொல்லி வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த சில்லரைக் காசுகளை எடுத்து அதிலிருந்து ஆளுக்கு ஒரு ரூபாய் விகிதம் “தாத்தா old man poor man” என்று சொல்லிக் கொடுத்தார், சிரித்துக் கொண்டே. வாங்கிய குழந்தைகள் என் மனைவியிடம் அதைக் கொடுத்தனர்.

நாங்கள் கிளம்புவதற்காகத் தயாராக நிற்கையில் பூட்டி இருந்த அறையிலிருந்து இருமல் சத்தம் கேட்கவே, “முழிச்சிட்டா போல, அவளுக்குத்தான் கொஞ்சம் ஒடம்புக்கு முடியல. சுகரு கூடி ஒத்தக் கால எடுக்க வேண்டியதாப் போச்சு. நாலு வருசம் ஆச்சு. எல்லாம் படுக்கையிலதான். இருந்த கொஞ்ச நஞ்ச காசும் அதுலயே போச்சு. அந்த கடவுள்ட்ட என்னெல்லாமோ வேண்டுனேன். கடைசியில இப்ப வேண்டுறதெல்லாம் ஒன்னுதான். எப்படியாது எனக்கு முன்னால அவளக் கூட்டீட்டுப் போயிருன்னு. பாவம் கழுத அவளுக்கு நம்மள விட்டா வேற ஆளு கெடையாது பாத்துக்கோ. மூதிக்கு ஒன்னும் தெரியாது. நாமளாது காசு பணம் சேக்கலாட்டியும் நாலு ஆட்கள சேத்து வச்சிருக்கோம். மண்டையப் போட்ட அன்னைக்கு தூக்கிக் கொண்டு போயி போட்ருவானுவோ. அனாதையா விட்ற மாட்டானுவன்னு நெனைக்கேன். நம்பிக்கை இருக்கு. அப்படி விட்டுட்டா அது என்ன மூதி பழக்கம்?” என்று சொல்லிவிட்டு, “எம்மா… எம்மாடி கொஞ்சம் தண்ணி குடிக்கியா?” என்று கேட்டவாறே அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். நாங்களும் பின் தொடர்ந்தோம்.

அறையை நெருங்க நெருங்க இருமல் சத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்க, உள்ளே சென்றவர் மூடியில் ஊற்றி ஏதோ மருந்தைக் கொடுத்தார். இருமல் மருந்தாக இருக்க வேண்டும். இருமலும் குறையத் தொடங்கியது. வெளியில் நின்று கொண்டிருந்த நானும் மனைவியும் உள்ளே சென்று அவளைப் பார்த்தோம். இருபது வருடங்களுக்கு முன்பு தலை நிறைய பூவும், நெற்றி நிறைய பொட்டும், மஞ்சள் பூசிய முகமுமாய் நான் பார்த்து வளர்ந்த அதே லட்சுமி அக்கா கண்களைத் திறக்க மனமில்லாமல் படுத்துக் கிடந்தார். முறுக்குச் செயின், கல் நெக்லஸ், ரெட்டவடச் செயின் என்று நிறைந்திருந்த அவர் கழுத்தில் இப்போதுமெலிதாய் ஒரு சரடு மட்டும்தான் மிஞ்சியிருந்தது.

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – உடன்பிறந்த அடையாளங்கள்- மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்கக்காரி‘, அமெரிக்காவில் குடியேறத் துடிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணின் கதை.

புலம்பெயர்தலை இரண்டு வகையாகப் பார்க்கலாம். முதல் வகை பணி நிமித்தமாக அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு. இரண்டாம் வகை உயிர் பிழைக்க வழி தேடி எந்த சுகங்களையும் கண்டிராது, உயிர் வாழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு. இந்தக் கதையை என்னால் அந்த இரண்டு கோணங்களிலும் பார்க்க முடிகிறது.

முதல் வகையின் புரிதல் முதலிலும் இரண்டாம் வகையின் புரிதல் இரண்டாவதுமாக.

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

முதல் காதலன் ஒரு நாள் இரவு தன்னுடன் வந்து தங்கும்படி சொல்ல, அவள் மறுக்கிறாள். விலகிச் செல்கிறான். இரண்டாம் காதலனுக்கும் அதே காரணம் தேவைப்படுகிறது அவளைப் பிரிய. மூன்றாமானவனுக்கும் அதே நிலைதான். அதற்கான காரணத்தை ஆசிரியரே சொல்லிவிடுகிறார்.

இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள்

ஆனால் அவளுக்கோ தான் எப்படியாவது ஒரு அமெரிக்கக்காரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆழ் மனதில் பதிந்து கிடக்கிறது. சிறுவயது முதல். தன் தாய் எத்தனை விளக்கம் கூறியும் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏமாற்றம் அடைகிறாள்.

இடையே தான் ஒரு அமெரிக்கக்காரி இல்லை இலங்கைக்காரி என்று விரக்தியோடு சொன்னாலும் (நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான்), இறுதியில் உண்மையான அமெரிக்கக்காரி யார் என்பதை தன் வயிற்றிலிருக்கும் குழந்தை மூலம் அறிகிறாள், அது வியட்நாமிய ஆணும், இலங்கைப் பெண்ணும், ஆப்ரிக்க உயிரணுவுமாக இருந்தாலும்கூட. அந்த மகிழ்ச்சியில் தன் தாய்க்கு ஒரு கடிதமும் எழுதுகிறாள். “எனக்கு ஒரு அமெரிக்க குழந்தை பிறந்திருக்கிறது” என்று ஒற்றை வரியில், அது ஆணா பெண்ணா என்பதைக்கூடச் சொல்லாமல். அவளைப் பொறுத்தமட்டில் அது ஒரு அமெரிக்கக்காரி. அவ்வளவுதான். அதுதான் அவள் விரும்பியதும்.

பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

கதை இறுதியில் ஆசிரியர் சொல்வது போலவே அந்தக் குழந்தை இருக்கும். ஏனென்றால் அது “அமெரிக்கக்காரி“. அதுதானே அவளுக்கும் வேண்டும்.

கலாச்சாரம் என்பது “jet lag” ஐ போல் சில நாட்களில் சரியாவதும், கைகடிகாரத்திலுள்ள முள்ளை மாற்றி வைப்பது போலவும், செல்லும் இடத்திலுள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடையை மாற்றிக் கொள்வது போலவும் அல்ல. அது நம் உடன் பிறந்தது. சாகும்வரை நம் அடையாளமாய் நம் உடன் வந்து கொண்டேதான் இருக்கும், sweetcandy என்றாலும், liftelevator ஆக்கினாலும். அவள் பிறப்பால் ஒரு இலங்கைக்காரி. இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் அவள் அவ்வாறே அறியப் படுவாள். அதை அவளால் அழிக்க முடியாது. அதுதான் சரியும் கூட.

ஊரில் நான் வெள்ளைக்காரத் துரையாக இருக்கலாம். ஆனால் இந்த பெல்ஜிய நாட்டில் நான் ஒரு இந்தியன். தமிழன். அது போலத்தான் அமெரிக்காவில் இருந்தாலும் அவள் இலங்கைக்காரிதான். நான் இங்கு வந்து ஜலதோசத்தின்போது மூக்கை உறிஞ்சுவதற்குப் பதில் சிந்தினாலும், தோழிகளைப் பார்க்கையில் கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்து வரவேற்றாலும், நண்பன் தோளில் கை போட்டு நடப்பதைத் தவிர்த்தாலும், பிறந்து ஒரு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையைத் தனி அறையில் படுக்க வைத்துவிட்டு மனைவியுடன் மற்றொரு அறையில் படுத்துறங்கினாலும், பள்ளி செல்லும் சிறுமி தன் உடன் பயிலும் சிறுவனிடம் நடு விரலை உயர்த்திக் காண்பிப்பதைக் கண்டும் காணாமல் சென்றாலும் நான் இந்தியன்தான். ஒருபோதும் பெல்ஜியன் ஆக முடியாது. அதுதானே எதார்த்தமும் கூட?

மதி மேற்கத்திய கலாச்சாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். மாற்றிக்கொள்ள முடிந்தும் ஏதோ ஒன்று அவளைத் தடுக்கிறது. அது அவள் வளர்ந்த விதம், வளர்ந்த சூழல் ஆக இருக்கலாம். ஆனால் தன்னுள் கனலாக எரிந்து கொண்டிருக்கும் “அமெரிக்கக்காரி” ஆசை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறச் செய்கிறது. என்னதான் மாறினாலும் அவளால் “அந்த” மாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கலாச்சார மாற்றத்தை முதல் முறையாகக் கடந்து செல்லும் பெண் (தலைமுறை) என்பதால்.

அதற்காக அவளுக்குக் கிடைக்கும் பரிசு, முதல் மூன்று காதலர்களை இழக்கிறாள். இறுதியாக அவள் தேர்ந்தெடுப்பது ஒரு “வியட்நாமிய” ஆண். ஏன்? அவளே சொல்கிறாள். “ஏய் இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணம் முடித்தாய்?” என்று அவன் கேட்பதற்கு அவள் அளிக்கும் பதில் “பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.” ‘துரத்தப்பட்டவள் துரத்தப்பட்டவனை முடிப்பாள்’ என்றும் முடித்திருக்கலாம். அவளின் எண்ணம் சரியாகத்தான் இருக்கிறது. லான் ஹாங்குக்கும் அதே எண்ணம் இருந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

மூன்று வயது சிறுவனை கட்டி வைத்தாலே சிசுவதை என்று கைது செய்யும் நாடு அமெரிக்கா. ஆனால் எப்போதும் போர், உயிருக்கு உத்திரவாதமில்லை, உடன் பிறந்த சகோதரர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள், மிஞ்சி இருக்கும் அம்மாவின் உயிரும் ஒவ்வொரு முறை கடிதம் எழுதும் போதும் “செத்து விடாதே” என்று சொல்லும் அளவுக்குத்தான். இப்பேற்பட்ட சூழலில் அவள் மனமுடைந்து போகாமல் அமைதியான சூழலில் வாழ நினைக்கிறாள். தன் அம்மாவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். அமெரிக்கக்காரியாக முயற்சி செய்கிறாள்.

இந்த “அமெரிக்கக்காரி” மோகம் மதிக்குத் தானாக வந்ததாகத் தோன்றவில்லை. அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தோன்றியதாக இருக்க வேண்டும், அம்மாவின் எண்ணமாக. தான் என்ன துன்பங்களை அனுபவித்தாலும் தன் மகளும் அவள் சந்ததியினரும் எங்காவது நல்ல சூழலில் அமைதியாக ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மூலமாக.

இறுதியாக மதி பெண் குழந்தை பிறந்ததும் மிகுந்த சந்தோசத்தில் அம்மாவிடம் இவ்வாறு சொல்கிறாள், இவள் முழு அமெரிக்கக்காரி. உன்னையும் என்னையும் போல் குறுகிய வட்டத்திற்குள் போர் சூழலில் சிக்கித் தவிக்காமல், அமைதியான வாழ்க்கையை, உலக அறிவுடன், எதை எப்படி கையாள வேண்டும் என்ற அறிவோடு சுதந்திரமாக வாழ்வாள், என்று. இந்த “அமெரிக்கக்காரி” ஆசை என்பது மதியின் அம்மாவிடம் தோன்ற, மதி பாதி அமெரிக்கக்காரி ஆகிறாள். பின் இறுதியாக தன் மகளை முழு அமெரிக்கக்காரி ஆக்கி மகிழ்ச்சி கொள்கிறாள்.

oOO

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்- ஸ்ரீதர் நாராயணன்

சீருடை

மு வெங்கடேஷ்

கொசுவத்தை நீவிவிட்டு வயிற்றை எக்கி செருகிக் கொண்ட பிறகு, மடிப்புக் கலையாமலிருக்க, அம்மா பற்களில் இடுக்கிக் கொண்டிருந்த ஊக்கை வைத்து மொத்த கொசுவத்தையும் சேர்த்து பிணைத்துக் கொண்டாள். உடலை அப்படி இப்படி திருப்பி புடவை சுற்றின் நேர்த்தியை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், மாரி மெதுவாக “அம்மா, பாவாடை தைக்கனும்மா. கிழிசல்ல ஊக்கை மாட்டிக்கிட்டு பள்ளியோடவத்துக்கு போ முடிலம்மா” என்றாள்.

“எல்லாம் பாத்துக்கலாம்டி. தம்பி இப்ப வந்திருவான். ஏதாச்சும் இட்லி கிட்லி வச்சுக் கொடு. வெளயாடிட்டு உள்ள வரும்போதே பசி பசின்னு பறப்பான். நான் மேலத் தெருவரை போயிட்டு வந்திடறன். சரசு பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்காளாம்”

அம்மாவின் பதில் மாரியை பெரிதாக பாதிக்கவில்லை. முத்து பிறந்தபோது அவளுக்கு ஒன்பது வயது. இரண்டாவதாவது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டுமென ஐயம்மாள் பட்ட பாடுகள் மாரிக்கு அத்துப்படி. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. கடைசியாக குலதெய்வம் முத்துமாரிக்கு பால்குடம் எடுப்பதாக மாரி வேண்டிப் பிறந்தவன்தான் முத்து. அம்மா, அப்பா பிரார்த்தித்ததை விட தம்பி வேண்டுமென்று மாரி பிரார்த்தித்தது அதிகம். பக்கத்துக்கு வீட்டு ஆயிஷா அக்கா மகள் நஸ்ரினுக்கு ஒரு தம்பி இருக்கிறான், அதனால் தனக்கும் ஒரு தம்பி வேண்டும் என்ற ஏக்கம். அதனால்தானோ என்னவோ மாரிக்கு தம்பி மேல் அவ்வளவு வாஞ்சை.

மாரி, ஊரிலிருக்கும் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பதென்பதோ எட்டாம் வகுப்பு, பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதே இல்லை. தம்பியைப் பார்த்துக் கொண்டு அவனுடன் விளையாடுவதிலேயே நேரத்தைச் செலவழித்தாள். அம்மா தம்பியை வளர்த்ததை விட இவள் வளர்த்ததுதான் அதிகம். சோறூட்டுவது முதல் தாலாட்டித் தூங்கவைப்பது வரை. அவளைப் பொறுத்தவரை இவ்வுலகத்தில் சிறந்த இடம் தன் வீடு, சிறந்த மொழி தம்பி பேசும் மழலை மொழி, சிறந்த விளையாட்டு தம்பியுடன் விளையாடுவது. மொத்தத்தில் அவள் உலகமே தம்பிதான். அவன் கைக்குழந்தையாக இருந்த போதிலிருந்தே, பால் கரைத்து கொடுப்பதாகட்டும், கஞ்சி வச்சுக் கொடுப்பதாகட்டும், எல்லாமே மாரிதான். “ரோ ரோ ரோ ரோ ரோ….. இந்தா அக்கா வந்துட்டேன் பாரு, அழக்கூடாது. எங்க ராசால்லா, எங்க ஐயால்லா. என்னைக்கு எங்க ஐயா ரெண்டு இட்லி திண்ணு ஒரு கிளாசு காபி குடிக்காரோ அன்னைக்குத் தான் எனக்கு நிம்மதி” என்று கொஞ்சியபடி பார்த்து பார்த்து செய்வாள்.

மாரியுடன் பக்கத்து வீட்டு நஸ்ரினுக்கு எப்போதுமே போட்டிதான். அனைத்து விளையாட்டிலும் நஸ்ரினைத் தோற்கடித்துவிடும் மாரி, தம்பி விளையாட்டில் மட்டும் தோற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் தம்பி பிறந்தபின் அதிலும் போட்டி போடுவாள். தனக்கும் ஒரு தம்பி இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாள். வருடா வருடம் பொங்கல் பண்டிகையன்று ஊரில் நடக்கும் “உப்பு மூட்டை” போட்டியில் தம்பியைத் தூக்கிக் கொண்டு ஓடும் மாரி தொடர்ச்சியாக மூன்று முறை வென்றாள். தம்பியைத் தூக்கிச் சுமப்பது அவளுக்கு சுகமாகவே இருந்தது.

சரசு வீட்டிலிருந்து வந்த அம்மாவிடம், “எம்மா, தம்பிய ஸ்கூல்ல போடனும்னிட்டிருந்தியே, இங்கிலீசு மீடியத்திலதானேம்மா” என்று ஆரம்பித்தாள். கொஞ்ச நாட்களாக இந்த இங்கிலீஷ் மீடியம் பேச்சு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்தது.

“ஏட்டி கூறு கெட்ட கழுத நமக்கெதுக்குடி அதெல்லாம்?” என்று அம்மா மீண்டும் மறுக்க ஆரம்பித்தாள்.

“எம்மா நீ செத்தப் பேசாம இரேன், இப்போ அதான் பேசன். பக்கத்து வீட்டு ஆயிஷா அக்காகூட அவுக ரெண்டு புள்ளைகளையும் அங்கதான் சேத்து விட்ருக்காம். தெரியுமா ஒனக்கு?”

“அது சரி, பேசனாம்லா பேசனு, வாரியக் கட்ட பிஞ்சிரும் பாத்துக்கோ. ஏழு கழுத வயசாவுது, பொட்டப் புள்ளைக்கு கொஞ்சமாது வீட்டு வனவருத்தம் தெரிய வேணாம்? பக்கத்து வீட்டு ஆயிசா புள்ளைங்கள சேத்துருக்கான்னா அவா புருசன் துபாய்ல இருந்து கத்த கத்தயா அனுப்புறாரு. அதுக இங்கிலீசு பள்ளிக் கூடத்துக்குப் போயி படிக்குங்க. உங்க அப்பா என்ன துபாய்லயா இருக்காரு? இல்ல பணம்தான் நம்ம வீட்டு மரத்துல காய்க்கா? இந்த பேச்ச இதோட விட்ரனும் பாத்துக்கோ. நானாது பரவாயில்ல ஏச்சோட விட்டேன், உங்க அப்பாக்கு தெரிஞ்சுச்சுன்னா கொன்னே போட்ருவரு பாத்துக்கோ” என்று ஏசினாள்.

“எம்மா நா என்ன என்னியவா சேத்து விடச் சொல்றேன். தம்பியத்தான சேக்கச் சொல்றேன்,” என்று மாரியும் விடுவதாக இல்லை. “அதெல்லாம் சரிதான் ஆனா உங்க அப்பாட்ட யாரு சொல்றது?” என்று அம்மா இழுக்க, “நீதான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் மாரி. “சரி, பாப்போம், மனுசன் என்ன சொல்றார்னு,” என்று சொல்லிவிட்டு அம்மா தூங்கப்போக, மாரி மனதிற்குள் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

மாரிக்குத் தன் தம்பியை எப்படியாவது இங்கிலீசு மீடியத்தில் சேர்த்து விட வேண்டுமென்ற ஆசை. அதற்காக அப்பாவிடமும் சென்று பேசினாள். “எப்பா எப்படியாது தம்பிய இங்கிலீசு மீடியத்துல சேப்பும்பா, எனக்கு இந்த வருசம் புதுத் துணிகூட வேணாம்பா. தம்பிக்கு மட்டும் கரார் கடைக்குப் போயி நல்ல துணி வாங்குவோம். எனக்கு அடுத்த வருசம் பாத்துக்கலாம்பா,” என்றாள்.

“ஏம்லா, பாவாட கிழிஞ்ச்சிருக்குன்னியே. புதுசு வேணாமா?” என்றார் அப்பா.

“அடுத்த வருசம் பாத்துக்கிடுவம்ப்பா.” அவளுடைய ஆர்வத்தைப் பார்க்க அப்பாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.

முதல் நாள் மாரி தம்பியைப் பள்ளிக்குக் கிளப்பிக் கொண்டிருந்தாள். தலைசீவி, பொட்டு வைத்து.

“அடியே மாரி என்னட்டி இது கோட்டிக்காரத்தனம்? ஆம்பள புள்ளைக்குப் போயி பொட்டு வச்சிக்குட்டு?” பக்கத்துக்கு வீட்டு வேணி அத்தை வந்தாள்.

“நீ ச்சும்மா கெடத்த, எந்தம்பிக்கு நா பொட்டு வப்பேன், பூ வப்பேன் ஒனக்கு ஏன் இப்படி பொத்துக்குட்டு வருது?”

“எம்மாடி நீ ஒந்தம்பிக்கு என்னத்தையும் வைம்மா. எனக்கு என்ன வந்துச்சு?” என்று அவள் கோபித்துக் கொள்ள, “அப்படிச் சொல்லீட்டுப் போவியா பேசாம? வந்துட்டா அங்கேருந்து வாய இம்புட்டு நீளம் வச்சிக்கிட்டு” என்றாள் மாரி.

“ஒன் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான, பாக்கத்தான போறோம். அரசங்காட்டுலேந்து ஒம்மாமன் பரிசம் போட வந்திட்டே இருக்கானாம்டி. சொடலமாடனுக்கு சோடி போட்டது போல வருவான் பாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் வேணி அத்தை.

மாரிக்கும் தெரிந்த விஷயம்தான். அடுத்த வருச முத்துமாரி கொடை முடிஞ்சதும் பேசி முடிச்சுப்புட வேண்டுமென ஐயம்மாள் துடித்துக் கொண்டிருந்தாள். “பொட்டப்புள்ளய பொழுதோட கட்டி வச்சிப்புடனும். மாசத்துக்கொண்ணுன்னு ஒர்த்தி குத்த வச்சிடறாளுக. அப்புறம் மாப்பிள்ள தேடி நம்மாள ஆகாது. முருகைய்யனுக்கு என்னா கொற. மொத்த ஜில்லாவும் அவனக் கண்டா மெரண்டு நிக்கும். இவள ராணி போல பாத்துக்கிடுவான்” மாரியைப் பற்றிய முடிவுகளில் மாரியை யாரும் கலந்து கொள்வதில்லை.

வேணி அத்தை இந்தப் பக்கம் போனதும் பக்கத்து வீட்டு சங்கரன் தாத்தா வந்தார்.

“இது என்னட்டி கூத்தா இருக்கு, வெள்ளக்காரத் தொரகணக்கா? சூவு, சாக்சு, கழுத்துல என்னது தொங்கீட்டு? மூக்கு வடிஞ்சா தொடைக்குறதுக்கா?”

“ஏ தாத்தா அது டையி, இதெல்லாம் ஒனக்கு எங்க தெரியப் போவுது? முன்னப்பின்ன பள்ளிக்கூடம் பக்கம் போயிருந்தாத்தான? பாரேன் இவன் பெரிய டாக்டர் ஆயி, நீ காச்சல்னு வந்து நிக்கும்போது பிட்டியில பெரிய ஊசியா போடச் சொல்றேன்”

“அடியாத்தி இவ ஏன் இந்த வரத்து வாரா. இன்னும் தொர பள்ளிக்கூடத்துக்கே போவல அதுக்குள்ளயும் டாக்டர்ங்கிறா இன்ஜினீயர்ங்கிறா,” என்று சொல்லிக் கொண்டே தாத்தா தான் வைத்திருக்கும் மூக்குப் பொடியை எடுத்து சற்று உறிஞ்சிக்கொண்டுச் சென்றார்.

ஒவ்வொருவரையும் பேசி சமாளிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை மாரிக்கு. ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து விட்டு பள்ளிக்கூடம் செல்லத் தயாரானார்கள். ”அடியே மாரி ஒனக்கும் தம்பிக்கும் ரெண்டு சம்படத்துல பழைய சோறும் ஊறுகாயும் வச்சிருக்கேன் பாரு. மறக்காம எடுத்துட்டுப் போங்க” என்று வீட்டினுள் இருந்து அம்மா ஞாபகப்படுத்தினாள். எரிச்சலடைந்த மாரியோ “எம்மா அவனுக்குப் போயி பழைய சோத்த குடுத்துட்டு? அந்த பிளாஸ்க்ல கொஞ்சம் பால காச்சி ஊத்து, நா போற வழில சூப்பர் கடைல ரெண்டு கூட கேக்கு வாங்கிக் குடுத்துக்குறேன்” என்று சொல்லி விட்டு ஒரு சம்படத்தை மட்டும் எடுத்து தன் பையில் திணித்துக் கொண்டாள்.

ஊரில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆங்கில வழி பள்ளிக்கூடம். அரசு பள்ளிகளையேப் பார்த்துப் பழகிய ஊருக்கு இது புது அனுபவம். குழந்தைகள் சூ, சாக்ஸ், டை அணிந்து வருவதை ஊரே கூடி நின்று வியப்பாகவும் வித்தியாசமாகவும் வேடிக்கை பார்த்தது. மாரியும் தன் தம்பியை அழைத்து வந்தாள், ஒருவித பெருமிதத்துடன். எதிரே தன் பிள்ளைகளுடன் வந்த ஆயிஷா அக்கா, “என்ன மாரி தம்பிய விட வந்தியா?” என்று கேட்க “ஆமாக்கா” என்று சொல்லி விட்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள். சுற்றியும் சிறுவர் சிறுமியர் புது சீருடையில் நின்று கொண்டிருந்தனர். வகுப்பறை வரை சென்று தம்பியை விட்டுவிட்டு மதியம் வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னாள். உள்ளே நுழையும்முன், “எக்கா இந்த டை கழண்டு கழண்டு விளுது” என்றான் முத்து.

“அதெல்லாம் ஒன்னும் ஆவாது,” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பாவாடை கிழிசலை கோர்த்து மாட்டியிருந்த ஊக்கை கழட்டி டையை சட்டையோடு சேர்த்து போட்டுவிட்டாள். “இனி சாயந்திரம் வீட்டுக்குப் போறவர கழளவே கழளாது” என்று சொல்லி, டாட்டா காண்பித்தவாறே வாசலை நோக்கி நடந்தாள்- “இனி பெரிய படிப்பெல்லாம் படித்து, டாக்டராவோ இன்ஜினியராவோ தம்பி வந்துவிட மாட்டானா என்ன,” என்று நினைத்தபடி.