மு வெங்கடேஷ்

சுமை

மு வெங்கடேஷ்

“எங்கடி போயிருந்த, நாலு நாளா ஆளையேக் காணும்?” என்று புகையிலைத் துண்டை விண்டு வாயில் போட்டபடியேக் கேட்டாள் பேச்சியம்மாள்.

ஒரு இணுக்கை பிட்டு வாயில் அதக்கிய பொண்ணுத்தாயி, ” டவுணுக்குத்தேன். பெரியாசுபத்திரில ரெண்டு நா கெடக்க வேண்டிதாப் போச்சு. எல்லாம் நா வாங்கி வந்த வரம்”

“பெரியாசுபத்திரிக்கா? அடிப்பாவி. இப்படி சொல்லாமக் கொள்ளாம போயிட்டு வந்திருக்கியே. என்னத்தேன் ஆச்சு” எனப் பதறினாள் பேச்சியம்மாள்.

“என்னத்த ஆச்சு. நாளு தள்ளிப் போச்சுன்னு போயிட்டு வந்தேன்” விரக்தியோடு சொல்லிக் கொண்டிருந்தவள் சட்டென சுதாரித்துக் கொண்டு “யார்டையும் சொல்லிராதடி, மாரியப்பனுக்குக் கூட சொல்லல” எனக் கெஞ்சலோடு பேச்சியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“அடிப்பாவி” பேச்சியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“கெரகம்…. இந்தாள்ட்ட சொன்னாலும் கேக்க மாட்டிக்கிறாரு. காலம் போன காலத்துல இது வேற. மாரியப்பந்தேன் கெடந்து செரமபட்டுக்கிட்டு சின்னதுக ரெண்டையும் பாத்துக்கிட்டிருக்கான் . இதுல நாலாவதுன்னு ஒண்ணு நம்மாள முடியுமா?” சொல்லி முடிக்குமுன்னர் பொன்னுத்தாயின் கண்கள் தளும்பின.

“ஏய்… ஆனது ஆயிப்போச்சி. நீ ஏங்கெடந்து கண்ண கசக்குற? இனியாவது அந்தாளக் கொஞ்சம் அடங்கி நடக்கச் சொல்லு. உம்பையன நெனச்சா பாவமாத்தான் இருக்கு”

“என்னத்தப் பாத்து நடக்கிறது. ஒத்தப் பைசா சம்பாத்தியமில்ல. ஆனா அப்பப்ப காச மட்டும் பிடுங்கிட்டுப் போயி…’ சொல்லும்போதே பொன்னுத்தாயின் குரல் விம்ம, “ இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா…”

“விடு விடு. ஒன்னும் ஆகாது. ஆண்டவன் இருக்கான்” என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கிளம்பினாள் பேச்சியம்மாள்.

மூத்தவன் மாரியப்பன் அதற்கடுத்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து தனலட்சுமியும், காசிநாதனும் என இரட்டையர்கள். முத்துக்கருப்பனுக்கு வேலையென எதுவும் கிடையாது. குடித்துவிட்டுத் திரியும் ஊதாரி. பலமுறை சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மாரியப்பன்தான் ஒற்றை ஆளாக குடும்ப பாரத்தைத் தூக்கிச் சுமப்பவன். தன் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு தம்பி தங்கையை எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று பொட்டிக் கடை வைத்திருந்தான். தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அப்பாவிடம் ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. அப்பாவென்று சொன்னதுகூட கிடையாது. “அந்த ஆள்” தான். முத்துக்கருப்பனுக்கு தினமும் குடித்தாக வேண்டும். வாரத்துக்கு நான்கு நாட்கள் டவுணுக்குப் போய் ஆட்டம் என்றால் மீதி நாட்கள் செல்லத்துரை தோப்பில் போய் கும்மாளம். தினமும் பொன்னுத்தாயுடன் வம்பு வரத்துதான். சமயத்தில் அடிதடி வேறு. அவரைக் கண்டாலே மாரியப்பனுக்கு ஆகாது. அவருக்கும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை சாடைமாடையாக அவரை குற்றம் சொல்வது பற்றிக் கொண்டு வரும்.

தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பொன்னுத்தாயி, மகனுக்கு வீட்டிற்குள்ளும் கணவனுக்குத் திண்ணையிலும் சோறு வைத்துவிட்டு காத்திருந்தாள். ”அவன போலீஸ் கூப்டு போயிருக்காங்க” என்று முத்துக்கருப்பன் சொல்ல, “போலீசா எதுக்கு? என்னன்னு தெரியலயே” மனசு படபடத்தது. புலம்பிக் கொண்டிருந்தாள் மாரியப்பன் திரும்பி வரும் வரை.

“என்னப்பா ஆச்சு?எதுக்கு கூப்டாக?” மகன் வரவும் கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லம்மா நேத்து தெருல சின்ன சண்ட. அது விசயமா”

“ஒனக்கு ஒன்னுமில்லேலா?”

“ஒன்னுமில்லம்மா”

“எதுக்குப்பா தேவ இல்லாம ஊர்ப் பிரச்சன நமக்கு?”

“எம்மா நா போவல. எதும்னா ஒன்ட்ட சொல்ல மாட்டனா? இது வரைக்கும் ஏதாது மறச்சிருக்கனா? சரி அத விடு நீ மொத சோறப் போடு, சாப்ட்டு கடைக்குப் போனும்”

“ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா. நீ எந்த தப்பும் பண்ண மாட்ட, எதயும் என்ட மறைக்க மாட்டேன்னு தெரியும் இருந்தாலும் கொஞ்சம் சூதானமா இருந்துக்கோய்யா”

“சரிம்மா நா பாத்துக்குறேன். நீ பயப்படாத”

வெயிலுக்கு மறைப்பாக அஞ்சால் மருந்து பேனரை கடை முன் இறக்கி விட்டுவிட்டு, உட்கார்ந்திருந்தபோது, வட்டிப்பணம் கேட்டு பால்பாண்டி வந்தான்.

“அண்ணே குடுத்த இடத்துல இருந்து இன்னும் வரல. இன்னும் ரெண்டு நாள் டயம் குடுங்க. தந்துறேன்” என்றான். “ஏல என்னிய என்ன இளிச்சவாயன்னு நெனச்சியா? நாலு மாச தவணை தப்பிருச்சு. சாயந்திரம் வர்றேன். வட்டிப்பணமாச்சும் எடுத்து வை. ஏதோ கவுரவமா கடை வச்சிருக்கேன்னு சின்னப்பையன நம்பி பணம் கொடுத்தா இஷ்டத்துக்கு இழுத்து அடிக்கிறியே. அப்புறம் அசிங்கமாயிரும் பாத்துக்கோ” என்று மிரட்டி விட்டுச் சென்றான்.

கல்லாப் பெட்டியைத் திறந்து பார்த்தான். முழு பத்து ரூபாய் நோட்டும், சில்லறை நாலு ரூபாய் ஐம்பது காசும் கிடந்தது. இவன் சம்பந்தமே வேண்டாமென மொத்தத்தையும் திருப்பிவிடலாம் என்றால், முப்பதாயிரம் உடனடியாகக் கொடுக்க வேண்டும். என்ன செய்வது? இருந்த மொத்த பணத்தையும் வழித்து துடைத்து நேற்றுத்தான் தம்பிக்கும் தங்கைக்கும் ஃபீஸ் கட்டி ஆயிற்று. ஒன்றும் புரியவில்லை, தலை சுற்றியது. யார்யாரிடமோ கேட்டுப் பார்த்தான். ஐந்து ரூபாய் கூடத் தேறவில்லை. கடைசியாக டவுணில் இருக்கும் நண்பன் பழனிக்குப் போன் செய்தான்.

“தெரியும்டே. ஏதாச்சும் தேவைன்னாத்தான் இந்தப் பழனிய உனக்கு நெனப்பு வரும். சொல்லு” என்றான் பழனி.

“அப்டில்லாம் இல்லடா. ஒரு சின்ன உதவிதான்” என இழுத்தான் மாரியப்பன்.

” மேட்டர் என்னச் சொல்லு”

” அவசரமா ஒரு முப்பதாயிரம் பணம் வேணும்”

“போதுமா? நீங்க என்ன அம்பானிக்குப் போட்டியா எதும் தொழில் பண்ணப் போறீகளா?”

“லேய் விளையாடாத, அவசரம் அதான்”

“சரி வந்துத் தொல, தங்கச்சி கல்யாணத்துக்கு வச்சிருக்கதுடா. ஒரு மாசத்துல திருப்பித் தந்துரு”

“ஒரு வாரத்துல தந்துர்றேன்”

வெயில் இறங்கும் நேரம், கொஞ்சம் சுருக்கவே கடையை அடைத்து விட்டு, இருந்த பதினான்கு ரூபாய் ஐம்பது காசை எடுத்துக் கொண்டு டவுண் பஸ் ஏறினான். பால்பாண்டி தொல்லையை முதலில் தீர்த்து விடனும். மானம் போகிறது. பழனிக்குப் பணத்தைக் கொடுக்க இன்னொரு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னொரு வாரமாவது நேரம் இருக்கிறது. நேராக பழனி கடைக்குச் சென்றான். பூட்டி இருந்தது. அருகிலிருக்கும் டெலிபோன் பூத்திலிருந்து பழனிக்கு மீண்டும் போன் செய்தான்.

“மன்னிச்சிக்கோ மாப்ள. தங்கச்சியக் கூப்பிட மதுர போ வேண்டியதாப் போயிட்டு, நீ ஒண்ணு பன்னு, நம்ம சின்னதுரை அண்ணன்ட கடச்சாவி இருக்கு, வாங்கி அங்க படுத்துக்கோ. நா காலைல வெரசா வந்துருறேன்” என்றான்.

“சரி மாப்ள. பணம்?”

“அதான் சொன்னேன்ல காலைல வந்துருவேன்னு. வந்ததும் தாரேன்”

“கண்டிப்பா கெடச்சிரும்லா?”

“கண்டிப்பா”

ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்திருந்தது. போனை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். எதிரிலிருக்கும் மதுக்கடையில் தெரிந்த முகமாக இருக்கிறதே எனப் பார்த்தால், முத்துக்கருப்பனேதான். “இந்த ஆள்” எதுக்கு இங்க இருக்காரு என்று யோசித்தவாறே வெளியில் வந்தான். அவருக்கு பக்கத்திலே தொற்றிக் கொண்டாற் போலொரு பெண்மணி. அலட்டலும் அலப்பறையுமாக அவள் பேசிக்கொண்டே போவதைப் பார்த்ததும் மாரியப்பன் திடுக்கிட்டான். இதென்ன கூத்து என்றபடியே அவர்களைப் பின் தொடர்ந்தான். நேராகச் சென்ற அவர்கள் வலது பக்கம் திரும்பி பின் இடது பக்கம் உள்ள தெருவில் திரும்பினார்கள். அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு அந்த ஆள் ஒரு வீட்டிற்குள் நுழைய, அவருடைய அல்லாடலை கிண்டலடித்தபடியே கூடவே அந்தப் பெண்மணியும் சென்றாள்.

மாரியப்பனுக்குக் கோபமும் கழிவிரக்கமுமாகப் பொங்கியது. தகப்பனை எந்த நிலையில் பார்க்கக் கூடாதோ அப்படிப் பார்த்தான். கண்களில் கண்ணீர் வழிந்தது, அம்மாவை நினைத்து. கோபத்தில் அருகிலிருக்கும் பலகையில் ஓங்கிக் குத்த, சத்தம் கேட்டு முத்துக்கருப்பன் பதட்டத்துடன் வெளியில் எட்டிப் பார்த்தார். திண்ணையின் குறை வெளிச்சத்தில், அவரை நன்றாக நிறுத்திப் பார்த்துவிட்டு மாரியப்பன் விறுவிறுவென நடந்தான்.

மறுபடியும் அதே போன் பூத் எதிர்ப்பட்டதும், கையில் இருந்த கடைசி ரூபாய் காய்னைப் போட்டு போன் அடித்தான்.

“அலோ யார் பேசுறது?”

“நாந்தாம்மா மாரி” குரல் தழுதழுத்தது.

“எங்கயா போன? பால்பாண்டி வந்தான். கொள்ளநாளா கடன் தவணை கட்டலன்னு ஒரே கூப்பாடு. சின்னவ என்னமோ வார்த்தய விட, ஏகத்துக்கு சண்டயா போயிட்டுப்பா. ஊரையே கூட்டிட்டு, ஒரே.அசிங்கமாப் போச்சு. என்னயா ஆச்சு? “

“அவனுக்குப் பணம் தரணும். ரெடி பண்ணிட்டேன்” மாரியப்பனுக்கு தொண்டை அடைத்தது.

“இருக்குல்லா? நீ எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டன்னு தெரியும்.ஒம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இருந்தாலும் சீக்கிரம் வந்துரு.சரி இப்போ எங்க இருக்க?”

“டவுண்ல”

“இந்தாள வேறக் காணும். எங்க போயித் தொலஞ்சாருன்னேத் தெரியல”

“இங்க தான் இருக்காரு”

“அங்கயா? ஒங்கூடையா?”

ற்று மௌனத்திற்குப் பின் “எங்கூட இல்ல. இன்னொருத்தி கூட” என்று சொல்லிவிட்டுக் குமுறி அழுதான். ஒரு ரூபாய்க்கான நேரம் முடிந்தது.

இரவு முழுவதும் தூக்கம் வராமல் அம்மாவையே நினைத்துக் கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் முகத்தை எப்படிப் பார்ப்பது, இப்படி போனில் போட்டு உடைத்திருக்கக்கூடாதோ? கேட்டு அவள் எப்படியெல்லாம் வேதனைப்பட்டாளோ என்று ஒன்றும் தெரியவில்லை. யோசித்துக் கொண்டிருக்கும்போதே கண் அசந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கே வந்த பழனி, அவன் கேட்ட முப்பதாயிரம் பணத்தைக் கொடுத்தான். உடனேக் கிளம்பினால் வெள்ளென ஊர் போய் சேர்ந்து விடலாம். அம்மாவை நினைத்தால்தான் மனம் ஆறவேயில்லை. அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பஸ்ஸில் இருந்து இறங்கியதும் வீட்டை நோக்கி ஓட்டமான நடைதான்.

மாரியப்பனின் தலை தெரிந்ததும், தம்பி காசி கத்தினான்.

“எப்பா இந்தக் கொலைகாரப் பாவி வாராம் பாரு”. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த தனமும் கூடவே கத்தினாள். ‘இப்படி கொன்னுப்போட்டியேண்ணே’.

“ஏல, நீ எல்லாம் நல்லாருப்பியா? கடன வாங்கிக் கூத்தடிச்சதுக்கு, ஆத்தாள காவு வாங்கிட்டியேடா,” என்றார் அந்த ஆள்.

“பொறுப்பானவன்னு பாத்தா இப்படி ஊதாரித்தனமா கடன வாங்கிப்புட்டானே…. அவ ரோசமுள்ளவா. அவமானம் தாங்க முடியாம தூக்குல தொங்கிட்டா,” என்று ஊரே ஒப்பாரி வைத்தது.

துக்க வீட்டின் அத்தனை அபத்தங்களுடன் சண்டை நடந்தேறியது. காசி கல்லை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். தனம் சுவற்றில் முட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். முத்துக்கருப்பன் ஆட்டம்தான் மிகவும் அதிகமாக இருந்தது. கண்டபடி ஏசிக்கொண்டே செருப்பை எடுத்துக் கொண்டு பாய்ந்து வந்தார். முந்தாநாள் மாரியப்பன் அவரை வெறுப்போடு பார்த்த பார்வை அவரால் மறக்க முடியவில்லை.

துக்கம் கேட்க வந்த கூட்டத்தில் பால்பாண்டியும் இருந்தான். பொறுக்க முடியாமல் அவனுடைய கணக்கை அங்கேயே பைசல் செய்தான் மாரியப்பன். அம்மாவின் முகத்தைப் பார்த்து பொங்கி அழக்கூட ஒரு நேரம் வாய்க்காமல் மாரியப்பன் மரத்துப் போய் நின்றிருந்தான்.

இரவு மசானக்காட்டில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்த வெட்டியான், “விடுப்பா. சொல்லு தாங்க முடியாம போயிட்டா புண்ணியவதி. அதுக்கும் ஒரு கொடுப்பினை வேணுமே” என்றான்.

ஒன்றும் பேசாமல் அம்மாவையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மாரியப்பன்.

எதற்காக எழுதுகிறேன் – மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

“எதற்காக எழுதுகிறேன்?” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து வரும் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிவிட்டு நழுவிக் கொள்வேன். இருந்தாலும் கேட்டு விடுவார்கள். “பணம் கிடைக்குமா?” “புகழ் கிடைக்குமா?” “அப்படியே சினிமாவுக்குப் போய்டலாமா?” என்று. உள்நாட்டில்தான் இப்படி என்றால் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “Congrats on becoming a writer and what are you going to do with the royalty?” என்று கேட்டார். சிரிப்பைத் தவிர வேறு எதையும் பதிலாக அளிக்கத் தோன்றவில்லை.

இப்படி எல்லோரிடமும் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பித்த எனக்கு பதாகையிடம் அவ்வாறு சொல்ல மனமில்லை. அதனால் வேறு வழியின்றி என்னிடமே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேன். “ழ” வை “ழ” என்றே சரியாக சொல்லத் தெரியாத, பழந்தமிழ் இலக்கியம் எதுவுமே தெரியாத, தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே இதுவரை சரியாக வாசித்திராத நான் எதற்காக எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டதற்கு கிடைத்த பதில் இதோ-

எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன் எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்று பார்த்துவிடலாம்.

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு சராசரி ஆள் நான். என்னை இந்த எழுத்துலகிற்கு இழுத்து வந்த பெருமை மாதவன் இளங்கோவைச் சாரும். என்னைப் பொறுத்தவரை எழுதுவதென்பது ஒருவகை போதை. மற்ற போதைப் பழக்கங்களைவிட மிகக் கொடுமையான எழுத்துப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கிய பெருமை மாதவன் இளங்கோவுக்கே உரியது (இதில் என்னை இப்போது ஊக்குவிப்பவர்கள் பலர்  உண்டு, ஆனால் நான் எழுத ஆரம்பித்ததற்கு முதல் காரணம் மாதவன் இளங்கோதான்).

நான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மேற்கூறிய மாதவன் இளங்கோவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அதற்கு முன்பிருந்தே எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். ஆனால் அதுவரை தமிழ்,இலக்கியம், சிறுகதை இப்படி எதைப் பற்றியுமே நாங்கள் பேசியது கிடையாது.

அப்போது அவர், தான் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டிற்கு எடுத்து வந்த நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். எனக்குண்டான ஒரு கெட்ட பழக்கம், ஏதாவது ஒன்று பிடித்துவிட்டால் அதைக் கடைசிவரைப் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அப்படித்தான் அன்றும் நடந்தது. அதிலுள்ள ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க அதற்குத் தொடர்புடைய, என் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பவம் ஞாபகத்துக்கு வர, நாம் ஏன் அதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அன்றுதான் என் எழுத்தார்வம் உதித்தது.

இவ்வாறு எழுதத் தொடங்கிய நான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். நான் ஒன்றும் பல கவிதைகளையோ கட்டுரைகளையோ சிறுகதைகளையோ இதுவரை எழுதிவிடவில்லை. இருப்பினும், “எதற்காக எழுதுகிறேன்” என்று பதாகை என்னிடம் கேட்டதே ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

எழுதத் தொடங்கிய புதிதில், நான் எழுதி அனுப்பும் கதை “நன்றாக உள்ளது” என்று நண்பர்கள் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். அவ்வாறு வரும் பதிலே எனக்கு “ஆஸ்கார்” விருது கிடைத்ததற்குச் சமமாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் இதுவரை நான் என்ன எழுதி அனுப்பினாலும் “நன்றாக இல்லை” என்று சொன்னதே இல்லை, மாறாக “நல்லா இருக்கு ஆனா….” என்று இழுப்பார்கள். அந்த இழுவையிலேயே எனக்குப் புரிந்துவிடும் அது தேறாது என்று. கதையை அவர்களிடம் ஓகே வாங்கிவிட்ட பின் அதை எப்படியாவது ஒரு இதழில் பதிப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதற்காக பல முயற்சிகள் எடுப்பேன். ஒரு காலத்தில் அதுவும் சாத்தியமானது (சிறகு, பதாகை, சில்சீ, அகம்) வாயிலாக.

இப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படியாவது அந்தக் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்று. கண்டிப்பாக இதுவும் ஒரு காலத்தில் சாத்தியமாகி விடும். இது அதோடு நின்று விடுமா என்ன? கண்டிப்பாக இல்லை. ஏன்?

இப்போது எதற்காக எழுதுகிறேன் என்பதைப் பார்த்து விடலாம்:

பணம் – இல்லை என்பது எதார்த்த நிலைமை அறிந்த எனக்குத் தெரியும். தமிழில் எழுதி எவ்வளவு சம்பாதித்துவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அப்போ வேறு எதற்கு?

புகழ் – ஓரளவிற்கு ஆம் என்றே சொல்லுவேன். ஏன் அந்த ஓரளவிற்கு என்று கேட்டால், தமிழில் தலை சிறந்த, உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுள் நமக்கு எத்தனை பேரைத் தெரியும்? அப்போ வேறு எதற்கு?

மனநிறைவு  – ஆம், என் மன நிறைவிற்காக மட்டுமே. நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்வதற்காக மட்டுமே. என் “passion” காக மட்டுமே. வேறு எந்தவொரு காரணமாகவும் இருக்க முடியாது.

எழுதுவதென்பது எனக்கு “passion” ஆகிப் போனதால்.ஒவ்வொரு கதை எழுதும்போதும் எனக்கு கிடைக்கும் மன நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக மட்டும் எழுதுகிறேன். நான் எழுதும் கதை பெரும்பாலும் என் வாழ்க்கையில் நடந்ததோ அல்லது நான் கேள்விப் பட்டதாகவோ இருக்கும். அவ்வாறு எழுதும்போது நான் பல நேரங்களில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை கதைகளில் கொண்டுவர நான் மெனக்கிட்டிருகிறேன். இதெல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை கதை சொல்வதென்பது எளிது. ஆனால் கதை எழுதுவதென்பது?எண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவது? முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது? சவாலான விஷயம்தான். இந்த சவாலை சாத்தியமாக்குவதற்கு ஒரே வழி சிறந்த எழுத்தாளர்களை வாசிப்பது மட்டுமே. அவர்கள் எப்படி தாங்கள் சொல்ல வரும் கருத்தை, உணர்ச்சியை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று தெரிய வரும்.

மேலும் எழுதும்போது நாம் இவ்வுலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கி விடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். அதிலிருந்து எதை எடுக்கலாம், எதை கதையாக வடிவமைக்கலாம் என்ற எண்ண ஓட்டம் வந்து விடும். எழுதுவதற்கு முன் – பின் என என்னால என்னுள் பல மாற்றங்களை  உணர முடிகிறது. முன்பெல்லாம் சுற்றி என்ன நடந்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவேன். ஆனால் இப்போது எதைப் பார்த்தாலும், வாசித்தாலும், கேட்டாலும் என்னால் அதில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கும்பொழுது என்னுள் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.

இது அனைத்திற்கும் காரணம் “passion” ஆக இருக்க முடியுமே தவிர பணமோ, புகழோ இருக்க வாய்ப்பில்லை.

என் எழுத்தார்வத்துக்கு எடுத்துக்காட்டாக இப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

என் மனைவி சோகமாக இருந்திருக்கிறாள். உடன் பணிபுரியும் தோழி என்னவென்று கேட்க, “நேத்து வீட்ல எனக்கும் என் கணவருக்கும் சண்ட,” என்று சொல்லிருக்கிறாள்.” ஐயோ அப்படியா என்னாச்சு அப்புறம்,” என்று தோழி கேட்க, “என்னாச்சு? ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள்!.

 

 

 

 

 

மாட்டுக்கார வேலன்

மு வெங்கடேஷ்

அதிகாலை ஐந்து மணி, விடிந்தும் விடியாமலும் இருந்தது. கோவில் மூலஸ்தானத்தில் இருக்கும் சாமியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் பண்டாரம். ராசம்மாள் கோவிலுக்குள் இருக்கும் குப்பைகளைத் தூத்துப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாக இருந்த மகள் சங்கரி, எதையோ கையில் எடுத்துக் காட்டி அது என்னவென்று கேட்டாள். “அது ஒன்னுமில்லம்மா, பாம்புச் சட்டதான். கழட்டிப் போட்டு போயிருக்கு, நீ அதத் தூக்கித் தூரப் போட்டுட்டு வேலயப் பாரு” என்றாள் ராசம்மாள்.

அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் பண்டாரம் ராசம்மாளிடம்,“தங்கப் பாண்டி அண்ணாச்சி  தோட்டத்துல மோட்டார் ஓடுற சத்தம் கேக்கு, நீங்க ரெண்டு வேரும் போயி மொதல்ல குளிச்சிட்டு வந்துருங்க, நா செத்த நேரம் கழிச்சிப் போறேன்” என்றார். சரி, என்றவாறு ராசம்மாளும் சங்கரியும் சென்றனர்.

பண்டாரம் கோவில் திண்ணையில் தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது ஏதோ சத்தம் கேட்கவே, “யார்ல அது? வேலனா? என்ன சத்தத்தையே காணும்? காது கேக்குதா இல்லையா? ஏல ஒன்னத்தான கேக்கேன்,” என்றார்.

பதில் ஏதும் சொல்லாமல் வந்த வேலன் சுதாரித்துக் கொண்டு, “அண்ணாச்சி நாந்தான் வேலன். ஏதோ சிந்தனைல இருந்துட்டேன். மன்னிச்சிக்கோங்க,” என்று சொல்லிக்கொண்டே கோவிலைப் பார்க்க நடந்து வந்தான். உடன் அவன் வளர்க்கும் மாடும்.

“சரியாப் போச்சுடே ஒன்னோட, கேட்டா ஒடனேப் பதில் ச்சொல்ல வேணாமா? அந்தானிக்கு வார?” என்று கேட்ட பண்டாரத்திடம், “அதான் ச்சொன்னம்லா அண்ணாச்சி” என்றான் வேலன்.

பண்டாரம் விடுவதாக இல்லை. “எப்பச் ச்சொன்னடே? கேட்ட ஒடனேச் சொல்ல வேணாமா? சரி, இன்னைக்கு என்ன இவ்ளோ வெள்ளன?”

“ஆமா அண்ணாச்சி, மாட்டக் கூட்டிட்டு இன்னைக்கு பக்கத்துக்கு ஊர் வரப் போ வேண்டி இருக்கு, அதான்”

“சரிடே. பாத்து பைய சூதானமாப் போயிட்டு வா,” என்று சொல்லிவிட்டு பண்டாரம் எழுந்து கோவிலுக்குள் சென்றார்.

மாட்டைக் கூட்டிக் கொண்டு சிறிது தூரம் சென்ற வேலன் ஏதோ ஞாபகம் வர மீண்டும் கோவிலைப் பார்க்க வந்தான். வந்தவன் பண்டாரத்தைப் பார்த்து, “இந்தாரும், வர்ற வழில பேச்சியம்மங் கோயில்ல கொட, பொங்கல் குடுத்தானுவோ, ஒங்க ஞாபகம் வந்துச்சு. அதான் வாங்கியாந்தேன். மைனிக்கும் புள்ளைக்கும் குடுங்க,” என்று ஒரு பொட்டலத்தை நீட்ட, அதை வாங்கிய பண்டாரமோ “ஒனக்குடே?” என்றார்.

“நாந்தான் கோயில் ச்சாப்பாடு ச்சாப்ட மாட்டம்லா, விட்டுப் பல வருசமாச்சு” என்று சொன்ன வேலனிடம், ”வெளங்காமப் போச்சு. எக்கேடும் கெட்டுப் போ” என்றார் பண்டாரம்.

எதையும் கண்டுகொள்ளாதவன், “சரி அண்ணாச்சி சாந்தரம் வாரேன்,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சற்று நேரத்தில் ராசம்மாளும் சங்கரியும் குளித்து விட்டு வர, பண்டாரமும் குளித்துவிட்டு வந்தார். சாமிக்குப் பூசை முடித்துவிட்டு, வேலன் கொடுத்த பொங்கலைச் சாப்பிட்ட மூவரும் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது. நாலாபுறமும் மரங்களாலும் வயல்களாலும் சூழ்ந்து இருந்தது கோவில். ஆள் அரவமற்ற அந்த காட்டுக்குள் மொத்தத்தில் இருந்ததோ ஆறு வீடுகளும் ஒரு சின்ன பொட்டிக் கடையும்தான். கிழக்கு திசை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையைப் பிடித்தால் ஐந்து மைல் தூரத்தில் ஊர் வந்து விடும்.

ராசம்மாளும் சங்கரியும் அடுப்பு எரிப்பதற்காகக் கோவிலைச் சுற்றி விழுந்து கிடக்கும் சுள்ளிகளைப் புறக்கிக் கொண்டிருந்தனர். பண்டாரமோ சில நாட்களுக்கு முன் கீழே விழுந்து உடைந்த மணியை சரி செய்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, “மத்தியானத்துக்கு நேத்து வச்ச பழைய சோறு கெடக்கு தொட்டுக்குறதுக்கு ஊறுகா மட்டும் வாங்கியாரீங்களா,” என்று ராசம்மாள் கேட்க, சரி என்று சொன்ன பண்டாரம் எழுந்து கடைக்குச் சென்றார். மடியில் படுத்திருந்த சங்கரிக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் ராசம்மாள்.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல நமக்கு சொந்த வீடு வாசலெல்லாம் இல்லையாம்மா?”

“இருந்துச்சும்மா. அதெல்லாம் ஒரு காலம். ஒங்க அப்பாவுக்கு என்னைக்குக் கண் பார்வ போச்சோ அன்னைக்கே நம்ம வாழ்க்கையும் இருண்டு போச்சு”.

ஒன்றும் புரியாத சங்கரி, “ஏம்மா என்னாச்சு?” என்று கேட்க, குடும்பத்தில் நடந்த சண்டை, அதில் தாங்கள் ஏமாற்றப்பட்ட கதை என எதையும் கூற விரும்பாத ராசம்மாள், ”அத விடும்மா, அதெல்லாம் நமக்கு இனிமே இல்ல, இனி இந்த கோயில்தான் நமக்கு வீடு, இந்த நத்தமுடையார்தான் நமக்கு எல்லாமே” என்று பேச்சை முடித்தாள்.

சங்கரி யோசித்துக் கொண்டே ராசம்மாளின் மடியில் படுத்திருந்தாள்.

மணி ஒன்றைத் தொட்டிருந்தது. கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் ராசம்மாளிடம் தான் கொண்டு வந்திருக்கும் வெங்காயத்தைக் கோவிலுக்குள் காய வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க, ராசம்மாள் சரி என்றாள். இடுப்பிலிருக்கும் குழந்தையை இறக்கி விட்டு, வெங்காயம் காய வைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையின் தலை சற்று விநோதமாக இருக்கவே சங்கரி வைத்த கண் மாறாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். வேலை முடிந்ததும் குழந்தையை மீண்டும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ராசம்மாளிடம் சொல்லி விட்டு அப்பெண் கிளம்பிச் சென்றாள். சங்கரி அக்குழந்தையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, இடுப்பிலிருக்கும் அக்குழந்தையும் சங்கரியைப் பார்த்து சிரித்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல, அந்தப் பையனோட தல கொஞ்சம் ச்சாஞ்ச மாரி இருக்கே அதான் என்னனு” என்று கேட்டு முடிப்பதற்குள், “அதாம்மா,அது ஒரு பெரிய கத. இந்த பையன் வயித்துல இருக்கும்போது அவங்க அப்பேன் மூக்கன் இருக்காம்லா, ஒரு நா ச்சாராயத்தக் குடிச்சிட்டு இங்க வந்து தேங்காய ச்சாமி தலைல ஒடச்சிருக்கான். நாம வேற அந்த நேரத்துல இங்க இல்லையா, குடிச்சிட்டு வந்த மூதி தேங்காயப் போயி ச்சாமி தலைல ஓடச்சாம்லா, அதுல ச்சாமி தல லேசா ச்சாஞ்சிட்டு. பொறந்த கொழந்த தலையும் லேசா ச்சாஞ்சிட்டு. இந்த ச்சாமி அவ்ளோ சக்தி வாஞ்சதாக்கும். இந்தக் கோயில்ல இருந்து யாரும் ஒரு கல்லக்கூடத் திருட முடியாது” என்று பழைய கதையைச் சொல்லி முடித்தாள் அவள்.

சங்கரி ஓடிப் போய் பார்த்தாள், சாமி தலையும் லேசாக சாய்ந்திருந்தது.

கடைக்குச் சென்று திரும்பி வந்தார் பண்டாரம். வாங்கி வந்த ஊறுகாயை வைத்து மூன்று பேரும் சாப்பிட்ட பின்னர் சற்று நேரம் படுத்திருந்தனர். வெயில் இறங்கத் தொடங்கியது.

“அண்ணாச்சி இருக்கீகளா இல்லையா?” என்று கேட்டவாறே மாட்டுடன் வந்தான் வேலன்.

“இந்தக் கோயில விட்டுட்டு நா எங்கடே போ போறேன். இங்கனதான் இருக்கேன். ச்சரி அதவிடு. நீ போன காரியம்லாம் நல்லவடியா முடிஞ்சிச்சா?”

“முடிஞ்சிச்சு முடிஞ்சிச்சு. நீருதான் இந்தக் கோயிலே கதின்னு கெடக்கீரு. போய் ஊருக்குள்ள பாரும்யா மனுசங்கெல்லம் எப்படி இருக்காங்கன்னு, அதவிட்டுட்டு” என்று வேலன் சொல்லவும் பண்டாரத்துக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. “போடே நீயும் ஓ ஊரும், நன்றி கெட்ட ஊரு, தீயதான் வைக்கணும். அதுக்கு இந்தக் காட்டு வாழ்க்கையே சொகமாத்தாம்டே இருக்கு” என்றார் கோபமாக.

“ச்சாமி ச்சாமின்னு இந்தக் கோயிலையே கெட்டி அழும், கடைசியில கோட்டிதான் புடிக்கப்போவுது ஒமக்கு. இந்தச் ச்சாமியாவே ஒமருக்கு சோறு போடப் போவுது? பாவம் மைனியும் புள்ளையுந்தான்” என்றான் வேலன்.

கண்கள் சிவக்க, கைகள் நடுங்க, பல்லைக் கடித்துக் கொண்டு பண்டாரம், “செத்த மூதி வாய மூடுல. எடுபட்ட பய. கூறு கெட்டத்தனமாப் பேசிக்கிட்டு. என்னல பேசுற? நீ ச்சொன்ன அதே ஊருக்குள்ள இருந்துட்டுத்தாம்ல இங்க வந்து கெடக்கேன். ஊராம்லா ஊரு? மனுசன மனுசனாவாடே மதிக்கிறானுவ? வண்டிக்காரப் பய ரோட்டுல அவங் குறுக்க வந்துட்டு என்ன குருட்டுப் பயலேங்குறான், கடைல கொள்ளையடிக்கிற மூதிட்ட என்னன்னு கேட்டா குருட்டுப் பயலுக்கு இவ்ளோ ஆகாதுங்குறான், ஒரு திருட்டுப் பய, அந்த நாய் என்ன குருடேன்னு சொல்லுது, குடிகாரப் பயலுவோ அங்கயும் இங்கயும் நின்னுட்டு குருட்டுப் பயலுக்குப் பொண்டாட்டி புள்ள எதுக்குங்குறான். கொஞ்சோம் ஏமாந்தா கட்டிருக்க கோவணத்தக்கூட அவுத்துட்டு விட்ருவானுவடே. அவ்ளோ கேவலமா இருக்கு ஒங்க ஊரு. ஒங்க ஊருக்கு இந்த காடே மேலு. நல்லாக் கேட்டுக்கோ எனக்குக் கண்ணுதாம்டே இல்ல மானம் மரியாதையெல்லாம் நெறையவே இருக்கு. ஏங்கெட்ட நேரம் இங்க வந்து கெடக்கேன். ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குடே இந்த நிம்மதியான வாழ்க்க, கடவுள் புண்ணியத்துல குடிக்கிறதுக்கு கூழோ கஞ்சியோ கெடக்கி. இதவிட வேறென்னடே வேணும்? கோடி ரூவா குடுத்தாலும் இந்த சுகங்கிடைக்குமாடே ஒங்க ஊருல?” என்று தன் கோவத்தைக் கொட்டித் தீர்த்தார்.

இதனைத்தையும் கேட்டு பதில் ஒன்றும் சொல்ல முடியாத வேலன், மாட்டை அருகிலிருக்கும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு தலை குனிந்தவாறே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“ஏல வேலா, என்ன அண்ணாச்சி மேலக் கோவமாடே? பேசாமப் போற?”

“ச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணாச்சி. நீங்க சொல்றதும் நியாயந்தான”

“சரிடே அண்ணாச்சி ஏதாது தப்பாப் பேசிருந்தம்னா மன்னிச்சிக்கோ”

“அட விடுங்க அண்ணாச்சி, வயசுக்கு மூத்தவரு நீங்க போய் என்ட மன்னிப்பு கேட்டுட்டு” என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான்.

“பாவங்க வேலன். அவனப் போயி இந்த ஏச்சு ஏசிட்டீங்களே” என்றாள் ராசம்மாள்.

”இல்லம்மா, என்னன்னேத் தெரியல, அந்தப் பய அப்படிச் சொன்னதும் கோவம் ச்சுள்ளுன்னு வந்துட்டு அதான் மனசுல உள்ளத அப்படியே கொட்டித் தீத்துட்டேன். இப்போ ஏன்டா அப்படிப் பேசுனோம்னு ச்சங்கடமா இருக்கு” என்றார் பண்டாரம்.

“சரி விடுங்க நாளைக்கு வருவாம்லா பேசித் தீத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறிவிட்டு சாப்பிடக் கூப்பிட்டாள்.

மீதமிருந்த சோறையும் பழத்தையும் சாப்பிட்டு விட்டு மூன்றுபேரும் கோவில் திண்ணையில் ஒரு பாயை விரித்துப் படுத்தனர். சிறிது நேரத்தில் பண்டாரம் குறட்டை விடத் தொடங்கினார். ராசம்மாளுக்கும் கண் அசந்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

பதில் ஒன்றும் இல்லாததால் மீண்டும் “எம்மா… எம்மா…” என்றாள்.

தூக்கத்தில் இருந்து விழித்த ராசம்மாள், “என்னதும்மா கேளு” என்றாள்.

“இல்ல அங்க பாருங்களேன் வயக்காட்டுக்குள்ள ஏதோ கொள்ளிப் பிசாசு மாரித் தெரியுது”.

“அதெல்லாம் ஒன்னு இல்லம்மா. பேயும் கெடயாது பிசாசும் கெடயாது. பேசாம கண்ண மூடிட்டுப் படு தாயி” என்று அவள் பயத்தைப் போக்கச் சொன்னாள் ராசம்மாள்.

பயம் தெளியாத சங்கரியோ, “அப்போ அது என்னதும்மா?” என்றாள்.

“அதா…? அதா…? அது வயக்காட்டுக்குள்ள பன்னி வரக் கூடாதுன்னு இந்தப் பயலுவ தீப்பந்தத்த ஏந்திட்டுப் போறானுவ. பயப்படாம கண்ண மூடிட்டுத் தூங்கும்மா,” என்று சொல்லிவிட்டு அவளை அணைத்துப் படுத்தாள்.

என்னதான் சொன்னாலும் சங்கரிக்கோ பயம் போகவில்லை. “பயம்மா இருக்கும்மா,” என்று மறுபடியும் கூறிய சங்கரியிடம், ”கோயிலுக்குள்ள என்னம்மா பயம்? பேசாமப் படு” என்று சொல்லிவிட்டு ராசம்மாளும் படுத்தாள்.

சற்று நேரம் கழித்து, “எம்மா நா ஒன்னு கேக்கவா?” என்று மறுபடியும் ஆரம்பித்தாள் சங்கரி.

“நீ இன்னும் தூங்கலையா? என்னம்மா கேக்கப் போற? என்றாள் ராசம்மாள்.

“அங்க பாரும்மா ஏதோ அசையிற மாரித் தெரியுது. எனக்குப் பயம்மா இருக்கு”

“எங்கம்மா?”

“அப்பாவுக்கு அந்தப் பக்கம்”

“ஐயோ அது அப்பாவோட ச்சாரத்தத் தொவச்சிக் காயப் போட்ருக்கேன். அது காத்துல ஆடுது. அதுக்குப் போய் பயமா? இந்தா ச்சாமி தின்னாரப் பூசிக்கோ பயம் வராது” என்று தான் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் சுருக்கப் பையில் இருந்த திருநீரை எடுத்து சங்கரியின் நெற்றியில் பூசினாள்.

மூன்றுபேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

திடீரென்று “ச்சில் ச்சில்” என்றொரு சத்தம். திடுக்கென்று விழித்த சங்கரி அசையாமல் படுத்திருந்தாள். மீண்டும் “ச்சில் ச்சில்” என்ற சத்தம். பயத்தில், அசையாமல் “எம்மா எம்மா” என்று ராசம்மாளைக் கூப்பிட்டாள்.

“என்னம்மா வேணும் ஒனக்கு?”

“ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் கேக்குதும்மா. பயமா இருக்கும்மா,” என்று நடுங்கினாள் சங்கரி.

கண் விழித்த ராசம்மாளுக்கும் அதே “ச்சில் ச்சில்” சத்தம். சத்தம் நெருங்கிக் கொண்டே இருக்க, ராசம்மாளுக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

“என்னங்க என்னங்க,” பண்டாரத்தை எழுப்பினாள் அவள்.

பண்டாரம் என்னவென்று கேட்க, ஏதோ சத்தம் கேட்பதாகக் கூறினாள்.
“என்ன சத்தம்?” என்று தூக்கம் தெளியாத பண்டாரம் மீண்டும் கேட்க, ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் என்றாள். பண்டாரம் விழித்துப் பார்த்தார். எல்லாம் இருட்டாக இருந்தது. “ச்சில் ச்சில்” சத்தம் அவருக்கும் கேட்டது.

திடீரென்று சங்கரி “எம்மா அங்க பாரேன், ஏதோ வெள்ளையா” என்றாள்.

“அடி ஆமாடி” என்ற ராசம்மாளிடம் “என்னதும்மா?” என்று கேட்டாள் சங்கரி.

அதைப் பார்த்த ராசம்மாளுக்கும் பயம் வரவே பண்டாரத்திடம் “என்னங்க அங்க ஏதோ வெள்ளையா” என்று சொல்லி முடிப்பதற்குள் “அடப் பேசாமப் படுங்க. வெள்ளையாது நொள்ளையாது. நா போய் என்னன்னு பாக்குறேன்” என்று கூறிவிட்டு அருகில் வைத்திருந்த கட்டையை எடுத்துக் கொண்டு சென்றார் பண்டாரம்.

“யார்ல அது? ஏ ஒன்னத்தான கேக்குறேன் யார்ல அது இந்த நேரத்துல?” என்று கேட்டுக்கொண்டே சென்றார்.

“எப்பாஅந்தப் பக்கம் இல்லப்பா இந்தப் பக்கம்” என்றாள் சங்கரி.

பண்டாரம் திசையை மாற்றினார்.

“ச்சில் ச்சில்” சத்தம் இன்னும் நெருங்கியது.

“எப்பா பக்கத்துல போவாத, மாடு கயிற அவுத்துட்டு வருது. அதான் இந்தச் சத்தம்” என்று கத்தினாள் சங்கரி.

மாடு இவர்களை நோக்கி “ச்சில் ச்சில்” என்று புதிதாக கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சத்தத்தோடு நெருங்கியது.

பண்டாரமோ “ச்சூ ச்சூ” என்றவாறு எங்கோ சென்று கொண்டிருந்தார். ராசம்மாளும் “ச்சூ ச்சூ” என்று கூறிக் கொண்டே சங்கரியை கட்டி அணைத்துக் கொண்டாள். சங்கரியும் பயத்தினால் ராசம்மாளை இறுக்கி அணைத்துக் கொண்டு ராசம்மாளின் முந்தானைச் சேலையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள். வெள்ளை மாடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நெருங்கியது. சங்கரி பயத்தில் எம்மா என்று அலறினாள்.

திடீரென்று ஓடி வந்த வேலன் மாட்டைப் பிடித்து இழுத்து மரத்தில் கட்டி வைத்தான். மாடு திமிறிக் கொண்டிருந்தது.

“எப்பா வேலண்ணே வந்துட்டாக” என்றாள் சங்கரி.

“என்னப்பா வேலா இப்படிப் பண்ணீட்ட? ஒழுங்கா கட்டீருக்க வேணாமா?” என்றாள் ராசம்மாள்.

“ஏ அண்ணாச்சி மேல இன்னுங் கோவந்தனியலயாடே ஒனக்கு?” என்றார் பண்டாரம்.

பதிலொன்றும் சொல்லாமல் சென்றான் வேலன்.

“இந்தப் பய எப்பவும் இப்படித்தான் கேட்ட கேள்விக்கு பதிலே ச்சொல்ல மாட்டான். சரி இனி பயப்படாமப் போய்ப் படுங்க. அதான் அந்தப் பய வந்துட்டாம்லா. காலேல பேசிக்கலாம் அவன்ட” என்று சொல்லிவிட்டு “ஏல வேலா இப்பயாது ஒழுங்கா கட்டிருக்கியாடே” என்றார் கத்தினார்.

பதில் இல்லை.

காலை ஐந்து மணி, வழக்கம்போல் கோவிலை சுத்தம் செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தனர் பண்டாரமும் ராசம்மாளும். சங்கரி மட்டும் இன்னும் பயத்திலிருந்து மீளாமல் இருந்தாள் .சற்று நேரத்தில் மாட்டின் சத்தம் கேட்கவே, மூவரும் வெளியே வந்தனர்.

“ஏல கூறுகெட்ட மூதி, ராத்திரி இப்படியாடே பண்ணுவ? மாட்ட ஒழுங்கா கட்டாம அது அவுத்துட்டு வந்து எங்க தூக்கத்தக் கெடுத்து, கடைசியில வந்து கட்டிட்டுப் போற? என்னனு கேட்டா பதிலே ச்சொல்லல. அண்ணாச்சி மேலக் கோவமாடே? அதான் நேத்தே மன்னிப்பு கேட்டம்லா. இன்னும் கோவந்தீரலயா ஒனக்கு? வாயத் தொறக்க மாட்டிக்கிற?” என்று வேலனைப் பார்த்துக் கேட்டார் பண்டாரம்.

“என்ன அண்ணாச்சி கனவு கினவு கண்டீகளா? நானாது ராத்திரி வர்றதாவது? நேத்து ராத்திரி வீட்டுக்குப் போய் கட்டய சாச்சவந்தான், இப்பத்தான் எந்திச்சு வாறேன். என்ன மைனி, அண்ணாச்சிக்கு மண்டைக்குச் சரி இல்லமாப் போயிருச்சா? அப்போ நா சொன்னது சரியாப் போச்சு போல” என்று கூறியவாறே கயிற்றை அவிழ்த்து மாட்டை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“வேலா வேலா” என்று பண்டாரமும் ராசம்மாளும் கூப்பிட, வழக்கம்போல் பதிலேதும் சொல்லாமல் போய்விட்டான் அவன்.

கூலிக்காரன்

மு வெங்கடேஷ்

“ஏ கணவதியக்கா ஒரு நிமிஷம் இங்க ஓடியாங்களேன்” என்று கத்தினாள் மலர்.

கழுவிக் கொண்டிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள் கணபதி அக்கா.

“என்னடி மலரு எதுக்கு இப்படி அயம்போடுற?”

“இங்க வந்து உங்க மவன் ச்சங்கரு பண்ற வேலையப் பாருங்க.”

“என்னடி என்ன பண்றான்?”

“காலைல இருந்து நா மாத்தி சரசு, சரசு மாத்தி நான்னு இதுவரைக்கும் 37 தடவ இந்தக் கூலிக்காரன் கதைய சொல்லிட்டான்.”

“ச்சீ இம்புட்டுத்தானா? நாகூட என்னவோ ஏதோ பாம்புதான் வந்துட்டு போலன்னு பயந்துட்டேன்.”

“இம்புட்டுத்தானாவா? அந்தப் பாம்புக்கடியக்கூடத் தாங்கிக்கலாம் போல, இந்தப்பய கடியத் தாங்க முடியல.”

“அக்காளும் தங்கச்சியும் சேந்து எம்புள்ளைய எதுக்குடி கொற சொல்றீங்க? நீங்கதானட்டி போன வாரம் கூலிக்காரன் படம் பாத்துட்டு வந்த புள்ளய கத சொல்லுனு கேட்டீங்க?”

“ஆமாக்கா நாங்க கேட்டதுதான் தப்பாப் போச்சு. போன வாரத்துல இருந்து இதுவரைக்கும் ஓராயிரம் தடவ கத சொல்லிட்டான். காதுல இருந்து ரெத்தமே வந்துட்டு.”

“வரட்டும் வரட்டும் நல்லா வரட்டும்.”

“நல்லாச் சொல்லுவீகளே வரட்டும்னு, நாங்க படுற கஷ்டம் எங்களுக்குத் தானத் தெரியும். அந்தா சரசு படுற பாட்டப் பாருங்க கொஞ்சம்.”

இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். சரசின் மடியில் அமர்ந்திருந்த சங்கர், “டுமீல்னு வெடிக்குமா, தப்பு பண்ணிட்டு அந்த வில்லன் ஓடிப் போனானா, அப்போ கூலிக்காரன் பறந்து வந்து அடிப்பான். அப்போ டம்முன்னு கார் வெடிக்குமா அப்போ தீ வருமா, அப்போ அந்த தங்கமெல்லாம் உருகி வடியுமா” என்று கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

“எக்கா இதாது பரவா இல்ல இப்போ பாருங்க” என்றாள் சரசு.

“ஏ ச்சங்கரு நீ பெரியாளானப்புறம் என்னவா ஆகப் போறல?”

“நானா? நா கூலிக்காரன் ஆகப் போறேன். கூலிக்காரனா ஆகி தப்பு பண்ற எல்லாத்தையும் அடிக்கப் போறேன்” என்றான் ச்சங்கர்.

“அப்படியா? யாரல மொதல்ல அடிப்ப?” என்று கேட்டாள் மலர்.

“எங்கம்மாவத்தான்.”

“யாம்ல?”

“அவங்கதான் என்ன இங்க விடமாட்டேன்னு சொல்றாங்கள்லா, அதான்.”

“அடி சிரிக்கிகளா, எம்புள்ளைய இப்படி கெடுத்து வச்சிருக்கீங்கலேட்டி! ஏல ஐயா, நிறுத்துய்யா உங்கதைய, வா நாம தூங்கப் போலாம்” என்றாள் சங்கரின் அம்மா கணபதி.

“நா வரல, நா இங்கயே சரசக்கா கூடத் தூங்கிக்கிறேன். நீங்க போங்க.”

“ஒத வாங்கப் போற. ஒழுங்கா அம்மாகூட வந்துரு. காலைல பள்ளிக்கூடம் போனும்லா.”

“நா வரல.”

“சரிக்கா இங்கயே படுத்துக்கட்டும் காலைல நா வந்து விட்டுறேன்”, என்றாள் சரசு.

சரி, அப்படி என்னடி சொக்குப் பொடி போட்ட? எப்ப பாத்தாலும் சரசக்கா சரசக்கானே சொல்லிட்டு இருக்கான்?”

“அட போங்கக்கா நீங்க வேற” என்றாள் சரசு.

சற்று நேரத்தில் பாயை விரித்துத் தானும் படுத்துக் கொண்டு அருகில் சங்கரையும் படுக்க வைத்தாள் சரசு. 38வது முறையாக கூலிக்காரன் கதை தொடங்கியது.

ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடைசியாக இருக்கும் மூன்று வீடுகள். நடுவே சங்கரின் வீடு, இடதுபுறம் சரசக்காவின் வீடும், வலது புறம் சித்தி இராசம்மாவின் வீடும். ஊரிலுள்ள அழகான ஒரு சில பெண்களில் சரஸ்வதி என்ற சரசுக்கு முதல் இடம். பார்ப்பதற்கு சினிமா நடிகை ராதாவைப் போலவே இருப்பாள். ஒரு சிலர் அவளைக் குட்டி ராதா என்றே கூப்பிடுவார்கள்.

சங்கருக்குத் தன் சொந்த அக்கா மகேஸ்வரியை விட சரசக்காவைத்தான் மிகவும் பிடிக்கும். முறைக்கு அத்தையானாலும் சிறு வயதிலிருந்தே சரசக்கா சரசக்கா என்று கூப்பிட்டதால் சரசு அத்தை சரசக்கா ஆனாள். சங்கர் தன் வீட்டில் இருப்பதைவிட சரசக்கா வீட்டில் இருக்கும் நேரம்தான் அதிகம். ஒரு சில நேரங்களில் சரசக்கா மடியிலேயே தூங்கிய இரவுகளும் உண்டு.

சரசக்காவுக்கும் அதே போலத்தான். தனக்கு ஒரு தம்பி இல்லையென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. சங்கரைத் தன் உடன் பிறந்தத் தம்பியாகவே நினைத்தாள். அவனுக்கு சோறூட்டுவதும், குளிக்க வைப்பதும், தூங்க வைப்பதும் எல்லாமே அவள்தான்.

சங்கர் அந்த ஊரிலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். சரசக்கா தையல் பயிற்சிப் பள்ளியில் தையல் டீச்சர். தினமும் வேலைக்குப் போய்விட்டு வரும்பொழுது சங்கருக்கு 2 தேன் மிட்டாய் வாங்கி வருவாள்.

“ஏல ச்சங்கரு, இன்னைக்கு ஒனக்கு லீவுதான? அக்காகூடத் தையல் கிளாஸ் வாரியா?” என்றாள் சரசக்கா.

“ஓ வாரேனே” என்று குஷியாகக் கிளம்பினான் சங்கர்.

சரசக்கா தையல் கற்றுக் கொடுத்துவிட்டு வரும்வரை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தான்.

தையல் கிளாஸ் முடித்துவிட்டு வரும் வழியில், “ஏல ச்சங்கரு பேசாம குனிஞ்சிட்டே வால” என்றாள் சரசக்கா.

“ஏங்கா?”

“அங்க நிக்கிறானுவ பாரு, அவனுவ ரௌடிப் பயலுவ. அக்காவ கிண்டல் பண்ணுவானுவ.”

“அப்படியாக்கா?”

“ஆமால, பேசாம வா.”

“நா வேணா போய் கூலிக்காரன கூட்டீட்டு வரவாக்கா?”

சிரித்துக் கொண்டே, “பேசாம வா எங்கூட”, என்றாள் சரசக்கா.

“சொல்லுக்கா.”

“பேசாம வாய மூடிட்டு வால.”

மறுநாள், கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சரசக்கா துணைக்கு சங்கரையும் அழைத்தாள். சரசக்கா கூப்பிட்டு வராமல் இருப்பானா? அவள் கைபிடித்து நடக்கத் தொடங்கினான்.

“ஏல ச்சங்கரு இப்படி அக்கா காலயே சுத்திட்டு வாரயே, அக்காக்கு கல்யாணம் முடிஞ்சி வேற ஊருக்குப் போயிட்டேம்னா என்னல பண்ணுவ?” என்று கேட்டாள் சரசு.

“நானும் ஒங்கூட வருவேன்.”

“ஏல அதுக்கு எம்புருசன் சம்மதிக்கனும்லால?”

“சம்மதிக்கலேன்னா நா கூலிக்காரன கூட்டிட்டு வந்துருவேன்.”

“இதுக்கும் கூலிக்காரந்தானா?” சங்கரை அணைத்து, முத்தமிட்டு, இடுப்பில் தூக்கி வைத்து நடையைத் தொடர்ந்தாள்.

இப்படியே சரசக்காவுடன் சந்தோசமாக காலம் கழிந்து கொண்டிருந்தபோது ஒரு நாள், “ச்சங்கரு நம்ம ஆச்சிக்கு ஒடம்புக்கு முடியலையாம், நாம போய் பாத்துட்டு வரலாம் வா” என்று சங்கரை அழைத்தாள் அவன் அம்மா.

“இல்லம்மா நா வரல, நா சரசக்கா கூடவே இருக்குறேன்.நீங்க போய் பாத்துட்டு வாங்கம்மா.”

“நாலு நாள்ல வந்துரலாம்டா வா. ஆச்சி ஒன்னியப் பாக்கணுமாம்.”

“எம்மா நா வரலம்மா,” என்று அழுதான் சங்கர்.

“அதெல்லாம் முடியாது. ஒழுங்கா வந்துரு,| என்று அழுகின்ற பிள்ளையைத் தரதரவென்று இழுத்துச் சென்றாள் அம்மா. சங்கரோ, “சரசக்கா சரசக்கா” என்று அழுதவாறே சென்றான்.

மறுநாள், “ஏ ச்சங்கரு ஆச்சி ஒன்ன கூப்டுறா பாரு, இங்க வாயேன்” என்று சங்கரைக் கூப்பிட்டாள் அம்மா.

பதில் ஏதும் இல்லை.

“காதுல விழுதா இல்லையா? இங்க வந்துட்டுப் போயேன்” என்று மீண்டும் அழைத்தாள்.

விருப்பமில்லாமல் சென்று ஆச்சியைப் பார்த்துவிட்டு வந்து, மீண்டும் அதே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

சங்கர் சோகமாக இருப்பதைப் பார்த்த அவன் அத்தை செல்வி, “ஏல ஒங்க ஆச்சி ஒன்னும் பொட்டுன்னு போயிற மாட்டா, அவா யமனையே வந்து பாருன்னுலா சொல்லுவா. நீ கவலபடாத தங்கம்” என்றாள்.

சரசக்காவைப் பிரிந்து நரகத்தில் இருப்பதுபோல் உணர்ந்தான் சங்கர். எப்படா மீண்டும் ஊருக்குச் செல்வோம், சரசக்காவைப் பார்ப்போம் என்று ஏங்கிக்கொண்டிருந்தான் அவன். எப்போதும் துறுதுறுவென்று இருப்பவன் இப்போது அமைதியாக திண்ணையில் அமர்ந்து சரசக்காவையே நினைத்துக் கொண்டிருந்தான். திண்ணையில் அமர்ந்தவாரே ஒரு வாரம் கழிந்தது.

சிவந்திபுரம் வந்து பஸ் நின்றதுதான் தாமதம், இறங்கி ஓடத் தொடங்கினான்.

“ஏல வந்ததும் வராததுமா எங்கல ஓடுற?” என்றாள் அம்மா.

“சரசக்கா வீட்டுக்கு” என்று பதில் வந்தது.

சரசக்கா வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். எல்லோரையும் விலக்கிக் கொண்டு புகுந்து ஓடினான். மலரக்கா வந்து சங்கரைத் தடுத்து நிறுத்தி, தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“சரசக்கா எங்கக்கா?” என்று கேட்டான்.

“அவளுக்கு ஒடம்பு சரி இல்லப்பா. அப்பறம் பாக்கலாம்” என்றாள் மலரக்கா.

“இல்ல முடியாது, எனக்கு இப்பவே பாக்கணும்.”

“அது முடியாதுப்பா. சொன்னா கேளு.”

“இல்ல எனக்கு இப்பவே பாக்கணும்” என்று அழத் தொடங்கினான்.

சற்று நேரத்தில் சங்கரின் அம்மா அங்கு வர, வெளியே நின்று கொண்டிருந்த சுந்தரியிடம் என்னவென்று கேட்டாள்.

“அந்தக் கொடுமைய ஏங் கேக்குறீங்க மைனி, போன செவ்வாய் கெழம மத்தியானம் உச்சி வெயில்ல ஆத்துக்குப் போயிருக்கா சரசு. அப்போ ஆத்துக்குப் பக்கத்துல இருக்கானே சாணக்கட வடிவேலு, அவன் பொண்டாட்டி கருப்பாயி, போன மாசங்கூடத் தூக்கு போட்டு செத்துப் போனாளே, அவ வந்து நம்ம சரசு மேல அப்பிக்கிட்டா. பாவம் புள்ள அதுல இருந்து இப்படிதான் கெடக்கு. இன்னைக்குத்தான் கேரளால இருந்து ஏதோ ஒரு சாமியாரு வந்துருக்காரு ஓட்றதுக்கு. அன்னில இருந்து இன்னைக்கு வரைக்கும் யாரும் கிட்டப் போகல. போறதுக்கே பயமா இருக்கு” என்றாள்.

சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை யாரும் வீட்டினுள் விடவுமில்லை. வெளியே அழுது கொண்டிருந்த சங்கருக்கு, உள்ளிருந்து சரசக்காவின் அழுகுரல் மட்டும்தான் கேட்டது. அவ்வப்போது சரசக்காவை யாரோ அடிப்பது போலவும், இழுப்பது போலவும், அதற்கு அவள் “என்ன விட்டுருங்க என்ன விட்டுருங்க” என்று கத்துவதும்தான் கேட்டது.

சற்று நேரத்தில் சரசக்காவின் அழுகுரல் ஓய்ந்தது. விழுந்த அடியும்தான். வெளியில் வந்த சாமியார், “இன்னைக்கு ஒத்து வரல வர்ற வெள்ளிக்கிழம வாரேன் அது வரைக்கும் இந்த மூதிய கட்டியே போட்டுருங்க” என்று சொல்லிச் சென்றார்.

எல்லோரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்ற சங்கர், தன் வீட்டு பின்புறத்திலுள்ள தண்ணீர்த் தொட்டி மீது ஏறி, அங்கிருந்து சரசக்கா வீட்டை எட்டிப் பார்த்தான்.

சரசக்கா. குட்டி ராதா என்று அழைக்கப்பட்ட அதே சரசக்கா இப்போது தலைவிரி கோலமாய், ரத்தக் காயங்களுடன், கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டு அழுது கொண்டிருந்தாள். அருகில் ஒரு தட்டில் வைத்த சாப்பாடு அப்படியே இருந்தது.

“சரசக்கா, சரசக்கா…” என்றான் சங்கர்.

மெதுவாகத் தலையை நிமிர்ந்து பார்த்த சரசக்கா, “ச்சங்கரு, என் தங்கம், எங்கடா போன இவ்ளோ நாளா? அக்காவ விட்டுட்டுப் போய்ட்டேல்ல, இப்போ அக்காவப் பாரு, அக்கா நெலமையப் பாரு, நீ அக்காவ விட்டுட்டுப் போனதுனாலதான் இப்படி. நீ மட்டும் இங்க இருந்துருந்தேன்னா அக்காக்கு இப்படி ஆயிருக்குமா?” என்று அழுதாள்.

“அக்காக்கு ஒன்னும் இல்லடா. சொன்னா யாரும் கேக்க மாட்டேங்குராங்கடா. இங்க பாரு கால்ல சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்க பாரு, யாரும் கிட்டயே வர மாட்டேங்குராங்க. இந்த ரூம்ல போட்டு அடச்சி வச்சிட்டாங்கடா. அக்காக்கு ஒன்னுமில்லடா, நீயாது நம்புடா, என்ன விட்டுறச் சொல்லுடா கெஞ்சிக் கேக்குறேன்டா. அக்காவ விட்றச் சொல்லுடா” என்று சொல்லி மேலும் அழுதாள்.

இத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சங்கர், “இருக்கா நா போய் கூலிக்காரன கூட்டிட்டு வாரேன்” என்று ஓடினான். “ஏல ச்சங்கரு ச்சங்கரு” என்று கத்திய சரசக்காவின் குரலைக் கேட்காமல், கூலிக்காரனைக் கூப்பிட ஓடினான்.

இரவு 8 மணி வரை சங்கரை யாரும் தேடவில்லை. இரவு சாப்பாட்டைத் தயார் செய்து விட்டு கொஞ்சம் ஓய்ந்து உட்கார்ந்தாள் சங்கரின் அம்மா. அப்போதுதான் அவளுக்கு சங்கரின் ஞாபகமே வந்தது.

“ஆமா இந்த ச்சங்கருப் பயல எங்க?” என்றாள்.

வீட்டிலிருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு விழித்துக் கொண்டிருந்தனர். பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குச் சென்று சங்கரைத் தேடத் தொடங்கினர். சிலர் வீட்டில் தேட, சிலர் கடைத் தெருவில் தேட, சிலர் வயக்காட்டில் தேட, சிலர் காட்டுக்குள் தேட, எங்கு தேடியும் இரவு 10 மணி ஆனபின்பும் கிடைக்கவில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. யானை மிதித்திருக்குமோ, நரி கடித்திருக்குமோ, பாம்பு கொத்தியிருக்குமோ என்று.

திடீரென்று ஒரு சத்தம்.

“ஏ கணவதியக்கா ஒரு நிமிஷம் இங்க ஓடியாங்களேன்” என்று கத்தினாள் மலர்.

ஓடிவந்தவளிடம், “எக்கா இங்க பாருங்களேன்” என்றாள் மலர். இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

சரசக்காவின் மடியில் அமர்ந்திருந்த சங்கர், “டுமீல்னு வெடிக்குமா, தப்பு பண்ணிட்டு அந்த வில்லன் ஓடிப் போனானா, அப்போ கூலிக்காரன் பறந்து வந்து அடிப்பான். அப்போ டம்முன்னு கார் வெடிக்குமா, அப்போ தீ வருமா, அப்போ அந்த தங்கமெல்லாம் உருகி வடியுமா” என்று கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

௦௦௦

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது

மு வெங்கடேஷ்

தற்போது பெய்து வரும் கனமழை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை ஞாபகப்படுத்துகின்றது, எனக்கும்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டின் ஒரு அறையில் மனைவியும் மகளும், மற்றொரு அறையில் மாமனாரும் மாமியாரும் தூங்கிக் கொண்டிருக்க, இன்னொரு அறையில் நான் இரண்டு நாளில் இன்னொரு குழந்தைக்கு அப்பாவாகப் போகும் மகிழ்ச்சியை பேஸ்புக் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

ஜன்னல் வழியாகக் காற்று சிலுசிலுவென வீசியது. சிறிது நேரத்தில் இடியும், மின்னலுமாய் மழை சோவென பெய்யத் தொடங்கியது. எழுந்து வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டுப் பார்க்கையில் மணி இரவு 11ஐத் தாண்டியிருந்தது. தூங்கலாம் என்று எண்ணத்தில் மடிக்கணினியை எடுத்து வைத்துவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றேன்.

மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்கவே, ஓடி வந்து பார்த்தால், “மது” என்று ஆங்கிலத்தில் என் மாப்பிள்ளையின் பெயர். மது – என் அக்காவின் கொழுந்தன். என் உயிர் நண்பன். சொந்தத்தையும் தாண்டி நாங்கள் நண்பர்களாகவே பழகினோம், பழகிக் கொண்டிருக்கிறோம்.

“இவன் எதுக்குடா இந்த நேரங்கெட்ட நேரத்துல போன் பண்றான்? ஒருவேளை போதையில் இருப்பானோ?”

அழைப்பை எடுத்தேன். சற்று மௌனம்….

“மாப்ள மாமா நம்மள விட்டுப் போய்ட்டாங்கடா”.

ஒன்றும் புரியாத நான், “லேய் என்ன சொல்ற???” என்று கேட்டேன்.

“மாப்ள மாமா நம்மள விட்டுட்டுப் போய்டாங்கடா” என்று மறுபடியும் கத்தினான். அப்போதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மாமா – என் மாமாவா (அவன் அப்பா) இல்லை அவன் மாமாவா (என் அப்பா) என்று ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன். மீண்டும் மௌனம். உடனே அவனிடம் “மொபைலை அக்காவிடம் கொடு,” என்றேன். கொடுத்தான்.

“தம்பி அப்பா நம்மள விட்டுப் போயிட்டுப்பா” என்று அழ ஆரம்பித்தாள்.

அப்பாவை – அப்பா வந்துட்டு, அப்பா போய்ட்டு, அப்பா சாப்டுட்டு என்று அக்றிணையில்தான் எப்போதுமே கூப்பிடுவோம். அப்பாவை மட்டும் அல்ல, மாமா வந்துட்டு, மாமா சாப்டுட்டு என்று அனைவரையும் அவ்வாறேதான் கூப்பிடுவோம். இன்று வரை ஏன் என்று தெரியவில்லை.

அதைக் கேட்டவுடன் என் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு அப்படியே நின்றது. பின் என்னையும் அறியாமல் “ஓ”வென்று கத்தினேன். அந்த இரவு நேரத்தில் ஊரே தூங்கிக் கொண்டிருக்கையில் என் ஓலம் என் மனைவியையும், மாமனார், மாமியாரையும் தூங்கவா விடும்? எழுந்து ஓடி வந்தார்கள், ஒன்றும் புரியாதவர்களாய்.

கத்தி அழுது கொண்டிருந்தேன். நான் அப்படி அழுது அவர்கள் இதுவரைப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. என் மனைவி என்னிடம் “என்னாச்சு, என்னாச்சு?” என்றாள். பதில் கூறக்கூட முடியாதவனாய் “அப்பா…அப்பா…” என்று மட்டும் சொல்லி அழுது கொண்டிருந்தேன். அவர்களுக்குப் புரிந்து விட்டது. மனைவியும் அழத் தொடங்கினாள்.

என் வாழ்நாளில் அப்படி ஒரு அழுகை அதுவரை நான் அழுததில்லை. ”ஓ” என்றும் “அப்பா” என்றும் கத்திக் கத்தி அழுததால் வாந்தியே வந்து விட்டது. அழுது கொண்டும், கத்திக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் இருந்தேன். இதற்கிடையில் மொபைலில் வேறு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. மூத்த சகோதரி, இளைய சகோதரி, சகோதரர்கள், மாப்பிள்ளை, அத்தான், மாமா, நண்பர்கள் இப்படி ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டே இருந்தார்கள். எப்போதெல்லாம் அழைப்பை எடுக்கிறேனோ அப்போதெல்லாம் அனைவரும் “அப்பா…அப்பா….” என்பதைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. அந்த இடத்தில் “அப்பா…அப்பா…” என்று கூறுவதிலேயே எனக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மணி 12 கடந்திருந்தது.

அடுத்து எப்படி இப்போது சென்னையில் இருந்து நெல்லை செல்வது என்ற ஏக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது. காரிலா, பஸ்சிலா, விமானத்திலா என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். மனைவியை இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னேன். விமானம் ஏதும் அப்போது இல்லை என்றாள். சரி தனியார் பேருந்தாவது இருக்கா என்றால் அதுவும் இல்லை. ஒரே வழி காரில் செல்வதுதான் என்று முடிவெடுத்தேன். அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் நான் மட்டும்தான் ஓட்டிச் செல்ல வேண்டும், சென்னையில் இருந்து நெல்லை வரை. இதுவரை அவ்வளவு தொலைவு ஒட்டியதில்லை. அப்பாவை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் நான் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

என் முடிவை மதுவிடம் சொல்லிவிட்டு காரை எடுக்கச் சென்றேன். மீண்டும் என்னை அழைத்த அவன், “மாப்ள இந்த நிலமையில காரைத் தனியாக ஒட்டிக் கொண்டு வர வேண்டாம்”, என்றான். மனைவியும் சேர்ந்து கொண்டாள். வேறு என்ன செய்வது? யோசிக்கக்கூட நேரமில்லை, பொறுமையும் இல்லை. கால் டிரைவர் யாரையாவது அழைத்துப் பார்க்கலாம் என்று கூறினாள் மனைவி.

நான் எதையும் கண்டு கொள்வதாக இல்லை. என்னமோ பண்ணுங்க ஆனா நான் இப்போ உடனே என் அப்பாவைப் பார்க்கப் போக வேண்டும், என்றேன்.

மணி 12ஐ கடந்திருந்ததால் ஒரு கால் டிரைவரும் வரவில்லை. யாரைக் கேட்டாலும் காலை 5 மணிக்கு மேல் வருகிறேன் என்றார்கள். எனக்கோ 5 மணி வரை காத்திருக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. மனைவி வேண்டாம் என்கிறாள், மாப்பிள்ளை வேண்டாம் என்கிறான், மாமனார் வேண்டாம் என்கிறார், அக்கா வேண்டாம் என்கிறாள். இது எதையுமே காதில் கேட்கத் தயாராக இல்லாத நான், காரை நானே ஓட்டி செல்கிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக கீழே வந்து காரை எடுத்தேன். நிறைமாத கர்ப்பிணி என்பதால் மனைவியும் என்னுடன் வர இயலாது. எனக்கோ அந்த நேரத்தில் யார் வருகிறார்கள் யார் வரவில்லை என்றெல்லாம் யோசிக்கக்கூடத் தோணவில்லை.

காரை ஸ்டார்ட் செய்தேன். என் மாமனாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “நானும் உடன் வருகிறேன்” என்றார். தனியாக என்னை அந்த நிலமையில் அனுப்ப மனமில்லை போலும். சரி ஏறுங்க, என்றேன். ஏறிக் கொண்டார். “பார்த்து மெதுவா போங்க” என்றாள் மனைவி. கார் வீட்டின் வெளியே வர, மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “ஏல சொல்லச் சொல்ல கேட்காம எதுக்கு கார்ல தனியா வார?”என்று ஏசினான்.

“மாமனாரும் வராங்க” என்றேன். அவன் அதற்கு சம்மதித்தபாடில்லை. கடைசியாக, எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், டிரைவர், சென்னையில் இருக்கிறான், அவனிடம் கேட்டுச் சொல்கிறேன், அதுவரை வீட்டிலேயே இரு, என்றான் மது. மறுக்கவும் முடியாமல் போகவும் முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். 5 நிமிடம் கழித்து மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “மாப்ள அவன் இப்போ சென்னையில் இல்லையாம் நீ தயவு செய்து காரில் வராதே ப்ளீஸ் பஸ்ல வா”என்றான். இதைக் கேட்ட உடன் அவன் மேல் எனக்கு கோபம் வந்ததே தவிர, என் மேல் உள்ள அக்கறையில்தான் கூறுகிறான் என்று தோனவே இல்லை. ஒருபக்கம் அவன் வேண்டாம் என்கிறான் மறுபக்கம் மனைவி வேண்டாம் என்கிறாள். எதையும் பொருட்படுத்தாத நான் காரை எடுத்துப் புறப்பட்டேன்.

மழை வேறு அடித்து ஊத்திக் கொண்டிருந்ததால் கார் மடிப்பாக்கம் ரோட்டில் மிதந்து சென்றது. இடை இடையே மனைவி, மது, அக்கா இப்படி பலரும் காரில் வர வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். போகிற வழியில் தாம்பரத்தில் சித்தப்பா மகன் சரவணனையும் காரில் ஏற்றிக் கொண்டேன். கார் பெருங்களத்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மழை அதிகமாக இருப்பதாலும், இந்த நிலைமையில் காரில் வர வேண்டாம் என்று எல்லோரும் கூறுவதாலும், சரி பஸ்சிலேயேப் போய் விடலாம், என்று முடிவு செய்தேன். சரவணனின் நண்பனையும் காரில் ஏற்றிக் கொண்டு பெருங்களத்தூர் சென்றோம். அங்கு என் அக்கா மகன் ரத்னகுமார் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

பெருங்களத்தூர் பேருந்து நிலையம் ஏதோ ஹார்பர் போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. ஒருவழியாக மதுரை செல்லும் அரசு பேருந்து ஒன்று வர, காரை சரவணனுடைய நண்பனிடம் கொடுத்தனுப்பிவிட்டுப் பஸ்ஸில் ஏறினோம். பஸ் மெல்ல மெல்ல மிதந்து சென்றது. எனக்கோ பொறுமையே இல்லை. காரில் சென்றிருந்தால் இந்நேரம் மேல்மருவத்தூரைத் தாண்டி இருக்கலாமே என்ற எண்ணம். தூக்கம் சிறிதளவும் வரவில்லை. அழுது அழுது கண்ணீரும் வற்றி விட்டது. பேசாமல் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

அப்பாவின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. குழந்தையாக இருக்கும்போது கிளாசில் ஸ்பூனைப் போட்டு கிலுக்கு ஆட்டியதும், நீச்சல் கற்றுக் கொடுத்ததும், மடியில் படுக்க வைத்து காதில் அழுக்கு எடுத்து விட்டதும், நடக்க முடியாதபோது தோளில் தூக்கிச் சென்றதும், தேனி நாடார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னை வந்து பார்த்ததும், அவருடன் சேர்ந்து குடித்த டொரினோ, சேர்ந்து சென்ற எவரெஸ்ட் ஹோட்டல், இப்படி எண்ணற்ற நினைவுகள் ஒவ்வொன்றாக வர என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, விடிய விடிய.

பக்கத்து இருக்கையில் ஒரு சிறுவன் சொகுசுப் பேருந்தில் வந்த சந்தோஷத்தில் சீட்டை சாய்த்துச் சாய்த்து விளையாடிக் கொண்டிருந்தான். அரசு சொகுசுப் பேருந்து முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம். மற்ற பேருந்துகளைவிட இதில் டிக்கெட் விலை அதிகம். சிறு வயதில் திருவள்ளுவர் பஸ்ஸில் செல்வதென்றால் அவ்வளவு சந்தோசம். அம்மா என்ன ஏசினாலும் அப்பா எனக்காக அதில் ஏறுவார். நான் ஆசைப்பட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக.

பொழுது விடியவும் மதுரை வரவும் சரியாக இருந்தது. மதுரை, மறக்க முடியாத மதுரை. மதுரைக்கும் எனக்கும் என் அப்பாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. குடும்பத்தோடு எங்கு சென்றாலும் மதுரைதான் எங்களுடைய பொது இடம். அங்குதான் அனைவரும் சந்திப்போம். அப்பாவுடன் வந்து அடிக்கடி தங்கும் ஜுபிட்டர் லாட்ஜ், காளவாசல், நகைக் கடை பஜார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், ஜெயராம் பேக்கரி, முனியாண்டி விலாஸ், சினிப்பிரியா-மினிப்பிரியா- சுகப்பிரியா தியேட்டர்கள், ராஜ் மகால் சில்க்ஸ், பால் பாண்டி மாமா வீடு, அப்பா கைபிடித்துச் சென்ற மதுரை வீதிகள்.
முதன்முதலாக வேலை தேடிச் சென்னை வரும்போது அப்பாதான் மதுரையில் இருந்து சென்னைக்கு வழியனுப்பி வைத்து செலவுக்கு 5000 ருபாய் கொடுத்தார். பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தைவிட்டுப் பேருந்து வெளியே வரும்போது, ஜன்னல் வழியாக ஒரு கை வந்து 1000 ரூபாவை என் சட்டைப் பையில் திணித்தது. சென்னை போயிட்டு செலவுக்குப் பணம் வேணும்னா அப்பாக்குப் போன் பண்ணுடா, என்று சொல்லிவிட்டு சென்றார் அப்பா. இப்படி ஒவ்வொன்றாக மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பா மிகவும் கண்டிப்பானவர்.ஆனால் இதுவரை யாரையும் ஒருமுறை கூட அடித்ததில்லை. அவரைப் பார்த்தால் எங்களுக்கு ஒரு பயம், மரியாதை தானாக வந்து விடும். பாசமிக்கவர் ஆனால் வெளிக்காட்ட மாட்டார். என்னவென்றே தெரியவில்லை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுடன் அவ்வளவு நெருக்கமாகப் பழக மாட்டார். வேண்டியதை எல்லாம் வாங்கித் தருவார், பணம் தேவைக்கு அதிகமாகவே தருவார். ஆனால் அவ்வளவாகப் பேச மாட்டார். வளர்ந்தபின், அவருடன் அதிகமாக பேசியது, “நா ராஜேஸ் பேசுறேன், போன அம்மாட்ட குடுங்க” வாகத்தான் இருக்கும். பல நேரங்களில் “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கத் தோன்றியும் கேட்காமல் விட்டு விடுவேன். ஒரு மகனுக்கும் அப்பாவுக்குமான உறவும், உரையாடலும் அவ்வளவுதானா என்று பல நேரம் யோசித்ததுண்டு. எங்களுக்குள் எப்போதுமே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். கல்வியைத் தவிர. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அன்யோன்யமாகப் பேசிப் பழகும் அப்பாவையும் மகனையும் பார்த்தால் பொறாமையாக இருக்கும், எனக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று.

அடுத்து நெல்லை செல்ல வேண்டும். எனக்கோ பஸ் பிடித்து ஊர் செல்லும் பொறுமை இல்லை. உடனடியாக ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு நெல்லை புறப்பட்டோம்.

ஓட்டுனரிடம், அண்ணா கொஞ்சம் வேகமாப் போங்க, வேகமாப் போங்க, என்று கூறிக்கொண்டே வந்தேன். கோவில்பட்டி வந்தது. என் வாழ்நாளில் நான்கு வருடங்களைக் கழித்த இடம். நான் கல்லூரி பயின்ற இடம். நான் செய்த ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு முறையும் எனக்காக வந்து கைகட்டி மன்னிப்பு கேட்டுச் செல்வார் அப்பா. இரண்டாமாண்டு படிக்கும்போது அப்பாவை அழைத்த கல்லூரி முதல்வர், நான் செய்யாத தவறை நான் செய்தததாகக் கூறவே அப்பாவோ ‘என் பையனப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், அவன் இதைப் பண்ணிருக்க மாட்டான் நீங்க என்ன செய்யணுமோ அத செஞ்சிக்கோங்க’ என்றார். கல்லூரி வாசலில் இருக்கும் புளியமரத்தடி. அப்பா என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்லும்போதெல்லாம் பஸ் ஏற்றிவிடும் இடம். அந்த புளியமரத்துக்கு நன்றாகத் தெரியும் எனக்கும் என் அப்பாவுக்குமான பாசம்.

இத்தனை நாள் எங்களை வழி நடத்திய அப்பா இனி இல்லை, ஒவ்வொரு முறை நாங்கள் சறுக்கியபோதும் தூணாக இருந்துத் தாங்கிய அப்பா இனி இல்லை, பொருளாதார நெருக்கடியில் எங்களைத் தூக்கிச் சுமந்த அப்பா இனி இல்லை, வாழ்க்கையில் அடிபட்டுக் கீழே விழும்போதெல்லாம் கை கொடுத்துத் தூக்கி விட அப்பா இனி இல்லை, எத்தனை இடையூறுகள் வந்தாலும் ‘நான் இருக்கேன்டா’ என்று தைரியம் ஊட்ட அப்பா இனி இல்லை. துடுப்பை இழந்த கட்டுமரம் கடலில் தனியே தவிப்பதுபோல் தவிக்கிறோம்.

வண்டி கயத்தாரை நெருங்கிக் கொண்டிருக்கும்போது என் மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இம்முறை என் மாமியார். “சுதாவுக்கு வயிறு வலி வந்துட்டு, டாக்ஸிய வரச் சொல்லிருக்கேன், இப்போ ஆஸ்பத்திரிக்கு கிளம்புறோம்” என்றார். இதைக் கேட்ட எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சில தினங்களுக்கு முன் மனைவி கூறியதுதான் நினைவுக்கு வந்தது. “ஏங்க மூத்த பொண்ணு பிறக்கும்போதுதான் நீங்க கூட இல்ல, இப்போ ரெண்டாவது குழந்தைக்காது நீங்க கூடவே இருங்க”.

சரியாக 3 மணி நேரத்தில் நெல்லை வந்தடைந்தோம்.வீடு நெருங்க நெருங்க என் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது.

எங்கள் தெருவிற்குள் டாக்ஸி நுழையவும் ஊரே எங்கள் வீட்டில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். மனம் சோகத்தின் உச்சத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் அப்பா, தாத்தா என்ற அழுகுரல்கள். பல வருடங்களுக்கு முன் பார்த்த சொந்த பந்தங்கள். அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.

எப்போதும் போல் அப்பா வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி சகிதமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். என் முதல் சம்பளத்தில் நான் வாங்கிக் கொடுத்த அதே விலை உயர்ந்த வெள்ளைச் சட்டை. “இவ்வளவு பணம் கொடுத்து எனக்கெதுக்குடா வாங்குன” என்று சொல்லி போடாமல் பத்திரமாக வைத்திருந்த அதே வெள்ளைச் சட்டை. அவர் எப்போதும் சட்டையுடன் தூங்கும் பழக்கம் உடையவர். ஆனால் இம்முறை ஒரு சின்ன மாற்றம். அவர் தூங்கிக் கொண்டிருந்தது குளிரூட்டப்பட்ட அறையில் அல்ல, மாறாக குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள்.

அதற்குப் பின் அங்கு சொல்ல முடியாத சோகம் சூழ்ந்திருந்தது.

அவ்வப்போது மாமியாரிடம் மனைவிக்கு எப்படி இருக்கிறதென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து விட்டு அன்று இரவு அப்பாவின் அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். சரியாக இரவு 8.25 க்கு மாமியாரிடம் இருந்து அழைப்பு ‘மகன் பிறந்திருக்கான்’ என்று. பதில் ஒன்றும் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்தேன், கண்ணீர் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட என் அம்மா தன் சோகத்தையும் மறைத்துக் கொண்டு நான் அழக் கூடாது என்பதற்காக என்னிடம் வந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினாள்.

மகன் பிறந்திருக்கிறான் என்றேன். என்னைக் கட்டியணைத்து ஓவென்று கதறி அழுதாள். பின் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சந்தோசமும் பட முடியாமல், சோகத்தையும் அடக்க முடியாமல் ஒருவித குழப்ப நிலை வீடு முழுவதும் நிறைந்திருந்தது.

சற்று நேரம் கழித்து, வா வெளியே வா, இந்த ரூம விட்டு முதல்ல வெளியே வா, என்று கூறி முற்றத்திற்கு அழைத்துச் சென்றாள் அம்மா.

“நீ முதல்ல சென்னைக்குக் கிளம்பிப் போ. போய்ப் பையனப் பாரு.அங்க அவங்க தனியா இருப்பாங்க.”

“இந்த நிலைமையில நா எப்படிப் போறது?”

“சொல்றதக் கேளு, அழாதப்பா. நம்ம அப்பா நம்மள விட்டு எங்கயும் போகல. நம்மளோட தான் இருக்கார்.அப்பா செய்த புண்ணியத்திற்கு அவருக்கு நல்ல சாவு கிடைச்சிருக்கு.அலுந்தாம சந்தோசமாக் கடைசி வரைக்கும் யார்டயும் கை ஏந்தாம ராசா மாதிரிதானே போயிருக்கார்.அத நினைச்சு நாம சந்தோசப்படனும் அழக்கூடாது,” என்று கூறி அழுதாள்.

ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“பாரு நம்ம அப்பாவ இந்த ஊரே எப்படி வழி அனுப்புது பாரு.”

நான் தலை நிமிர்ந்து மேலே பார்த்தேன். ஊரே பிரகாசமாய் இருந்தது. வான வேடிக்கைகளாலும், விளக்குகளாலும் பிரகாசப்படுத்தி இருந்தனர்.

அன்று கார்த்திகைத் திருநாள். ஊரே விளக்குகளாலும், வானவேடிகைகளாலும் மின்னிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டைத் தவிர…..

இருள் சூழ்ந்திருந்த வீட்டில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்த அப்பா கேட்டார், “இங்க என்னடா பண்ணிட்டு இருக்க அங்க போய் உம்புள்ளையப் பாக்காம?” என்று.