மைத்ரேயன்

அப்பா ஹோ – உர்சுலா லெ குவின் (தமிழாக்கம் – மைத்ரேயன்)

(தமிழாக்கம் – மைத்ரேயன்)

நான் ஹோமரைப்[1] பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.  அவருடைய இரண்டு புத்தகங்களும் இரண்டு அடிப்படை அதிபுனைவுக் கருக்களைக் கொண்டவை என்று அப்போது தோன்றியது: போரும், நெடும்பயணமும்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும், இதே எண்ணம் பலருக்கும் தோன்றி இருக்கும். அதுதான் ஹோமர். ஜனங்கள் அவருடைய புத்தகங்களை நாடிப் போய், புதுப் புது விஷயங்களை அவற்றில் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அல்லது பழையவற்றை, அல்லது முதல் தடவையாக எதெதையோ, அல்லது ஏற்கனவே கண்டவற்றை மறுபடியும் ஒரு தடவையாகக் கண்டு பிடித்து அவற்றைப் பற்றிப் பேசுகின்றனர். இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஆண்டுகளாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எதுவுமே, இத்தனை காலமாக யாருக்காவது அர்த்தமுள்ளதாகத் தென்படுகிறது என்பதே ஒரு அதிசயம்தான்.

அது எப்படியானாலும், தி இலியட்[2] என்பது போர் (உண்மையில் அதன் ஒரு பகுதிதான் அப்படி, இறுதிப்பகுதிக்கு அருகில், ஆனால் இறுதிப் பகுதி அப்படி அல்ல). த ஆடிஸி[3] என்பதோ நெடும்பயணம் (அங்கே, பிறகு திரும்பி இங்கே- என்று பில்போ[4] சொல்கிற மாதிரி).

போரைப் பற்றி எழுதிய பல எழுத்தாளர்களை விட புத்திசாலித்தனமாக ஹோமர் நடந்து கொண்டிருக்கிறார், அவர் எந்த சாரியையும் சார்ந்திருக்கவில்லை.

ட்ரோஜன் போர் [5] நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடந்த போர் அல்ல, அதை அப்படி நாம் மாற்றி விடவும் முடியாது. அது ஒரு போர், அவ்வளவுதான். அழிவைக் கொணர்ந்த, பயனேதுமற்ற, தேவையற்ற, முட்டாள்தனமான, நீண்ட, கொடுமையான குழப்பம் அது. தனி நபர்களின் துணிகரமான செயல்களும், கோழைத்தனமும், மேன்மையுள்ள நடத்தையும், காட்டிக் கொடுக்கும் செயல்களும், கால்-கைகளை வெட்டி எறிவதும், குடலை உருவும் காட்சிகளும் நிரம்பிய போர்.

ஹோமர் கிரேக்க நாட்டவர்.[6] கிரேக்கர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கக் கூடும், ஆனால் அவரிடம் நீதி நாடும் அல்லது சமநிலை தேடும் புத்தி இருந்திருக்கிறது, அது கிரேக்கர்களுக்கே உரிய குணம் போலத் தெரிகிறது. ஒருக்கால் அவருடைய மக்கள் அவரிடம் இருந்து இந்தக் குணத்தின் பெரும் பங்கைப் படித்துக் கொண்டார்களா? அவருடைய சார்பின்மை உணர்ச்சிகளற்றதல்ல; அந்தக் கதை உணர்ச்சி பொங்கும் செயல்களும், தாராளமானதும், வெறுப்பூட்டுவதும், பிரமிக்கத் தக்கதும், பொருட்படுத்தத் தேவை இல்லாததும் பெருக்கெடுத்தோடும் வெள்ளம். ஆனால் அது சார்பற்றது. அது சாத்தான்- எதிர் -தேவதைகள் என்ற எதிரிடை இல்லாதது. புனிதப் போராளிகள்- எதிர்- நாத்திகர் என்பதாக இல்லாதது. அதில் ஹாப்பிட்கள்- எதிர்- ஆர்க்குகள் இல்லை. அதில் ஜனங்கள்- எதிர்- ஜனங்கள்தான் இருக்கிறது.

ஒருவர் ஒரு தரப்புக்குச் சார்புள்ளவராக இருக்கலாம், அனேகமாக எல்லாரும் அப்படிச் செய்கிறார்கள். அப்படிச் செய்யாமல் இருக்க நான் முயல்கிறேன், ஆனால் அது பயனற்ற முயற்சி. எனக்குக் கிரேக்கர்களை விட ட்ரோஜன்களைக் கூடுதலாகப் பிடிக்கிறது. ஆனால் ஹோமர் உண்மையிலேயே தரப்புச் சாய்வு கொள்ளவில்லை, அதனால் அவர் கதையை சோகக் கதையாக ஆக அனுமதிக்கிறார். சோகத்தால், ஆன்மாவும் மனமும் வருத்தப்படுகின்றன, பெரிதாகின்றன, உயர்த்தப்படுகின்றன.

அதனளவில் போர் என்பது ஒரு சோகக்கதையாக உயர முடியுமா, அது ஆன்மாவை விரிவடையச் செய்து உயர்த்துமா, இதையெல்லாம் போரில் என்னை விட உடனடியாகப் பங்கெடுத்திருப்பவர்களுக்குக் கேள்விகளாக விடுகிறேன். சிலர் அது அப்படிச் செய்யக் கூடியது என்று நம்புவதாக நான் கருதுகிறேன், அவர்கள் வீர சாகசங்களுக்கு அங்கு வாய்ப்பு கிட்டுவதாகவும், சோகங்கள் போருக்கான நியாயங்களைக் கொடுப்பதாகவும் சொல்லக் கூடும். எனக்கு அது தெரியவில்லை; எனக்குத் தெரிந்ததெல்லாம் போரைப் பற்றிய காவியம் என்ன செய்யக் கூடும் என்பதுதான். எப்படி இருந்தாலும், போர் என்பது மனிதர்கள் செய்வது, அவர்கள் அதை நிறுத்துவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, அதனால் அதைக் கண்டனம் செய்வதை விட, நியாயப்படுத்துவதை விட, அதைச் சோகமானதாகக் கருதுவது முக்கியமானது.

ஆனால் ஒரு முறை நாம் ஒரு தரப்பின் பால் சாய்ந்தால், அந்த விதமாக போரைக் கருதுவது நமக்கு இயலாமல் போகும்.

நல்ல மனிதருக்கும் தீய மனிதருக்கும் இடையில் போர் நடக்க வேண்டுமென்று நாம் விரும்புவதற்குக் காரணம் நம்முடைய பிரதான மதம்தானா?

நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போரில் தெய்வ அல்லது அமானுஷ்ய நீதி இருக்கலாம், ஆனால் மனித சோகம் இருக்காது. நியதிப்படியே அதுதான் வரையறை. நன் முடிவு: (டாண்டேயின் ‘த டிவைன் காமெடி’யை உதாரணமாகக் கொள்ளலாம்) நல்லவர்கள் வெல்ல வேண்டும். அதன் முடிவு மகிழ்ச்சியாக இருக்கும். தீயவர்கள் நல்லவர்களைத் தோற்கடித்தால் அது துன்பமான முடிவு, அது எதிரிடை, காசைச் சுண்டினால் மறுபுறம் விழுவது போல. படைப்பவர் இங்கு சார்பில்லாமல் இல்லை. சீர்கெட்ட உலகு என்பதே சோகக் கதையாகாது.

கிருஸ்தவரான மில்டன், ஒரு புறம் சார்பு கொள்ள வேண்டியிருந்தது, அதனால் அவரால் மகிழ்வான முடிவைத் தவிர்க்க முடியவில்லை. சோகக் கதையாக ஆக்க, அவர் தீமையுருவான லூஸிஃபரை, பேருருவாக, நாயகக் குணம் கொண்டவனாக, பரிவோடு கூட அணுகிச் சித்திரிக்க வேண்டி வந்தது- அதை அவர் பொய்யாகத்தான் செய்ய வேண்டி வந்தது. அவர் நன்றாகவே பொய்ப் பாவனை செய்திருந்தார்.

ஒருக்கால் இந்தச் சிந்தனைப் பழக்கம், எதிரிடை வழி நோக்குவது, கிருஸ்தவத்துக்கு மட்டுமானதாக இல்லாமல் இருக்கலாம், மாறாக நாம் எல்லாருமே வளரும்போது எதிர்கொண்ட துன்பங்கள், நீதி என்பது நன்மையைச் சார்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவோராக நம்மை ஆக்கி இருக்கின்றன போலும்.

எப்படி இருந்தாலும், “சிறந்தவர் வெல்லட்டும்” என்று சொல்வதற்குப் பொருள் நல்லவர் வெல்லட்டும் என்பதில்லை. அதற்குப் பொருள், “இது ஒரு நியாயமான போராட்டம், ஒரு முன் முடிவும் இல்லாதது, இடையீடு ஏதும் இல்லாதது- எனவே சிறந்த போராளி வெல்வார்,” என்பதுதான். சதி செய்யும் முரடன் நேர் வழியில் நல்லவனைத் தோற்கடித்தால், சதிகார முரடன் வென்றவனாக அறிவிக்கப்படுவான். அது நியாயம்தான். ஆனால் இந்த வகை நீதியைக் குழந்தைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் அதற்கெதிராக ஆத்திரப்படுவார்கள். இது நியாயமில்லை! (என்பார்கள்).

ஆனால், அதைச் சகித்துக் கொள்ளக் குழந்தைகள் பழகிக் கொள்ளவில்லை என்றால், வெற்றி அல்லது தோல்வி என்பன, போர்க்களத்திலும் சரி, அல்லது முழுதுமே ஒழுக்கத்தையே பற்றி இராத எந்தப் போட்டியிலும் (அது என்ன போட்டியானாலும்) சரி, ஒழுக்கத்தில் மேன்மை என்பதோடு சம்பந்தப்படாதவை என்பதைக் கற்க மாட்டார்கள்.

வலிமை என்பதே சரியானதாகி விடாது- அப்படித்தானே?

அதனால் சரி என்பதே வலிமையாகாது. இதுவும் சரியா?

ஆனால் நாம் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதாவது “என் இதயம் சுத்தமாக இருப்பதால், என் வலிமை என்பது பத்துப் பேரின் வலிமைக்கு ஈடானது,” என்பதை.

நிஜ உலகில் இறுதியாக வெற்றி பெறுபவர் நல்லவராகத்தான் இருக்க முடியும் என்று நாம் வற்புறுத்தினால், நாம் நல்ல நடத்தையை வலிமைக்குப் பலியிட்டு விடுகிறோம். (போர்கள் முடிந்த பின் வரலாறு இதைத்தான் சாதிக்கிறது. வென்றவர்களை அவர்களின் மேலான நற்குணங்களுக்காகப் பாராட்டுவதையும், அவர்களின் மேம்பட்ட தாக்கும் சக்தியையும் பாராட்டும்போது வரலாறு செய்வது இதைத்தான்.) நல்ல மனிதர்கள் எப்போதும் யுத்தங்களில் தோற்கும்படியாகவும், இறுதிப் போரில் வெல்லும்படியாகவும் போட்டிகளை நாம் திரித்து அமைத்தால், நாம் நிஜ உலகை விட்டுப் போய், அதிபுனைவு உலகுக்குள் நுழைந்து விடுகிறோம்- நம் விருப்பத்துக்கு எல்லாவற்றையும் அமைக்கும் நாடாகி விடும் அது.

ஹோமர் அப்படி கற்பனைக்கு எதார்த்தத்தை வளைக்கும் செயலைச் செய்யவில்லை.

ஹோமரின் அக்கீலஸ் கட்டுப்பாடற்ற ஒரு அதிகாரி, முகம் கோணியவன், தன்னிரக்கத்தில் ஊறிய இளைஞன், மூக்குடைபட்டதால் தன் அணியின் சார்பில் போரில் கலந்து கொள்ள மறுப்பவன். அவனுடைய நண்பன் பாட்ரோக்ளொஸ் மீது அவன் கொண்ட அன்பு ஒன்றில் அவன் ஒரு நாள் வளர்ந்து மன முதிர்ச்சி பெற்றவனாக வாய்ப்பு இருக்கிறதாகச் சுட்டுகிறது. அப்படி வளர, அவனுக்குச் சற்று அவகாசம் தேவை. ஆனால் அவன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதற்குக் காரணத்தை நோக்கலாம்- அவனுக்கு வன் புணர்வு செய்து அடைவதற்கு ஒரு பெண் கொடுக்கப்பட்டிருக்கிறாள், அவளை அவன் தன் மேலதிகாரியிடம் திருப்பிக் கொடுக்கும்படி ஆகிறது என்பது அந்தக் காரணம். என்னைப் பொறுத்தவரை இது அவனுடைய காதல் கதையை (பாட்ரோக்ளொஸ் மீது கொண்ட அன்பை) ஒளியிழக்கச் செய்கிறது. என்னைப் பொறுத்தவரை அக்கீலஸ் நல்லவன் அல்ல. ஆனால் அவன் ஒரு நல்ல போர்வீரன், சிறப்பாக யுத்தம் செய்பவன் – ட்ரோஜன்களின் சிறந்த போர்வீரனான ஹெக்டரை விடவும் மேலான வீரன். ஹெக்டர் எப்படிப் பார்த்தாலும் ஒரு நல்லவன் – அன்பான கணவன், அன்புள்ள அப்பா, எல்லா விதங்களிலும் பொறுப்பானவன் – மேன்மை பொருந்திய கனவான். ஆனால் நல்ல குணம் என்பது வலிமையாகாது. அக்கீலஸ் அவனைக் கொல்கிறான்.

தி இலியட் காவியத்தில், புகழ் பெற்ற ஹெலனுக்கு உள்ள பங்கு மிகச் சிறியது. அவள் மொத்தப் போரிலிருந்தும் அவளுடைய நன்கு கழுவி, சீராக வாரப்பட்ட தங்க நிற முடிகூடக் கலையாமல் மீண்டு விடுவாள் என்பது எனக்குத் தெரியும், அதனால் அவளை ஒரு சந்தர்ப்பவாதி, ஒழுக்கமற்றவள் என்றும், சுடும் உலையிலிருந்து சேதமில்லாமல் மீளும் உலோகத் தகட்டிற்கு இருக்கிற அளவு உணர்ச்சிகள்தான் அவளது உணர்வுகளின் ஆழம் என்றும் நான் கருதுகிறேன். ஆனால் நல்லவர்கள்தான் வெல்வார்கள் என்று நான் கருதினால், பரிசு நல்லொழுக்கம் உள்ளவர்களுக்கே போய்ச் சேரும் என்று நான் கருதினால், அவளை பழியற்ற அழகி, அவளுக்கு விதியிழைத்த கொடுமையிலிருந்து கிரேக்கர்கள் அவளை மீட்டனர் என்று நான் கருத வேண்டி வரும்.

மக்களும் அவளை அப்படியே பார்க்கின்றனர். ஹோமர் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி ஒரு ஹெலனை உருவாக்கிக் கொள்ள இடம் கொடுக்கிறார்; அவள் அதனால் இறப்பற்ற நித்தியம் உள்ளவளாக ஆகி விடுகிறாள்.

இப்படிப்பட்ட மேன்மை எந்த நவீன கால அதிபுனைவு எழுத்தாளருக்காவது சாத்தியமா என்பது (வாயுக்களில் ’மேன்மை’ பொருந்திய வாயுக்கள் என்று ஏதும் உண்டென்றால் அந்த வகை மேன்மை என்று எடுத்துக் கொள்ளுங்கள்) எனக்குத் தெரியவில்லை. நாம் வரலாற்றை புனைவிலிருந்து பிரித்து எடுக்க அத்தனை துன்பம் மேற்கொண்டிருப்பதால், நம் அதிபுனைவுகள் தீவிர எச்சரிக்கைகளாக, வெறும் இரவு வேளைக் கொடும் கனவுகளாக, அல்லது விருப்ப நிறைவேற்றல்களாக மட்டுமே ஆகி இருக்கின்றன.

வேறெந்தக் கதையாவது த இலியட்டோடு ஒப்பிடக் கூடிய போர்க்கதையாக இருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. ஒருக்கால் அந்த பிரும்மாண்டமான இந்தியக் காவியம், மஹாபாரதம் வேண்டுமானால் ஒப்பிடக் கூடியதாக இருக்கலாம். அதன் ஐந்து சகோதர நாயகர்கள் நிச்சயமாக பெருநாயகர்கள் எனலாம். அது அவர்களின் கதைதான் – ஆனால் அது அவர்களுடைய எதிரிகளின் கதையும் கூட, எதிரிகளும் நாயகர்களாகவே இருக்கிறார்கள், அவர்களில் சிலர் பிரமாதமான மனிதர்களாகவும் இருக்கிறார்கள் – அதில் எல்லாமே பிரும்மாண்டமாக, கடும் சிக்கல்கள் கொண்டதாக, ஏகமாக நல்லதும், கெட்டதும் அவற்றின் விளைவுகளும், கிரேக்கக் கடவுள்களையும் விட நேரடியாகவே எல்லாவற்றிலும் தலையிடும் கடவுள்களும் உண்டு- ஆனால் அதன் இறுதி முடிவு சோகமானதா, இன்பமானதா?  அதெல்லாவற்றையும் பார்த்தால் ஒரு பெரும் கொப்பரையில் அள்ள அள்ளக் குறையாத உணவு இருப்பது போலவும், நாம் நம் கரண்டியை அதில் போட்டு எடுத்து நமக்கு வேண்டும் உணவைக் கொண்டு நமக்குத் தேவையான சத்துணவைப் பெற முடியும் என்றும் தோன்றும். ஆனால் அடுத்த முறை அதுவே வேறு விதச் சுவையோடு இருக்கும்.

மொத்தமாகப் பார்த்தால் மஹாபாரதத்தின் சுவை தி இலியட்டிலிருந்து மிக மிக வேறுபட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், தி இலியட் (நியாயமற்ற தெய்வீக இடையீடுகளை விட்டு விட்டுப் பார்த்தாலும்) கடூரமான முறையில் எதார்த்தமாகவும், இரக்கமற்று ரத்த வெறியோடு போரில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதாகவும் இருக்கிறது. மஹாபாரதம் பிரமிக்க வைக்கும் வகையில் அதிபுனைவாக உள்ளது, சூபர்ட்யூபர் ஆயுதங்களின் அமானுஷ்ய சாதனைகள் பற்றியதாக உள்ளது. அவர்களுடைய ஆத்மத் துயர்களில்தான் இந்திய நாயகர்கள் திடுமென்று இதயத்தைப் பிளக்கும் விதமாக, மனதை மாற்றும் படியாக எதார்த்தமாக மாறுகிறார்கள்.

பயணம் பற்றி என்ன என்றால்:

தி ஆடிஸியின் நிஜமான பயணப் பகுதிகள், யாரோ ஒருவர் கடல் அல்லது நிலப் பகுதி வழியே பெரும்பயணங்கள் மேற்கொண்டு, அசாதாரணமான அதிசயங்களையோ, பயங்கரங்களையோ அல்லது ஆசை காட்டுதல்களையோ அல்லது சாகசங்களையோ எதிர்கொள்வதாகவும், அவ்விதத்தில் வளர்ந்ததாகவும், சில சமயங்களில் இறுதியாகச் சொந்த ஊருக்குத் திரும்புவதாகவும் அமையும் அதிபுனைவுகளை நாம் எல்லாரும் அறிந்திருப்போம், அவற்றை ஒத்தது.

ஜங்கியச் சிந்தனையைப் பின்பற்றுவோரில் ஒருவரான, ஜோசஃப் காம்ப்பெல், இந்த வகைப் பயணங்களை ஒரு சில ஆதி முன்மாதிரி சம்பவங்களாகவும், படிமங்களாகவும் பொதுமைப்படுத்தி இருக்கிறார். இந்த பொதுமைப்படுத்தல்கள் விமர்சனங்களுக்கு உதவலாம், ஆனால் அவை (சீர் தூக்கப்படும் விஷயத்தை) குறுக்குவதால், அழிக்கின்றன என்று நான் கருதுகிறேன், அதனால் அவற்றை நான் நம்புவதில்லை. “ஆ, இரவுப் பயணம்!” என்று நாம் கூவுகிறோம், முக்கியமான எதையோ நாம் புரிந்து கொண்டு விட்ட மாதிரி உணர்கிறோம் – ஆனால் நான் அதை அடையாளம் கண்டு கொள்வதை மட்டுமே செய்திருக்கிறோம். அந்தப் பயணத்தை நாமே மேற்கொள்ளாத வரை, நாம் எதையும் புரிந்து கொள்வதில்லை.

ஒடிஸீயஸின் பயணங்கள் அத்தனை பிரமாதமான சாகசங்களைக் கொண்டவை என்பதால், அந்தப் புத்தகத்தில் எவ்வளவு அவனுடைய மனைவியையும், மகனையும் பற்றியது – அவன் பயணத்தில் இருக்கும்போது அவனுடைய வீட்டில் என்ன நடக்கிறது, எப்படி அவனுடைய மகன் அவனைத் தேடிப் பயணம் மேற்கொள்கிறான் என்பதோடு, வீடு திரும்புவதில் ஒடிஸீயஸிற்கு என்னென்ன சிக்கல்கள் எழுகின்றன- போன்றவற்றை நான் மறக்கத் தலைப்படுகிறேன். டொல்கீனின் ’த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ புத்தகத்தில் எனக்குப் பிடித்த அம்சம், நாயகன் தன் ஆயிரம் முகங்களை உலகெங்கும் கொண்டு போகும்போது, நாயகன் பின்னே விட்டுச் சென்ற விவசாயப் பண்ணையில் என்ன நடக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை டோல்கீன் அறிந்திருக்கிறார் என்பதுதான். ஆனால் ஃப்ரோடோவுடனும், மற்றவர்களுடனும் நீங்கள் திரும்பி அங்கே போகும் வரையில், டோல்கீன் ஒரு போதும் உங்களை வீட்டுக்கு அழைத்துப் போவதில்லை. ஹோமர் அழைத்துப் போகிறார். அந்தப் பத்து வருடப் பயணம் பூராவும், வாசகரே பெனலபியை எப்பாடு பட்டாவது சென்றடைய முயலும் ஒடிஸீயஸ், மற்றும் எல்லா இடர்களையும் தாண்டி ஒடீஸீயஸுக்காகக் காத்திருக்க முயலும் பெனலபி- பயணியும், இலக்கும் அவரே. இது காலத்தையும் இடத்தையும் ஊடுபாவாகப் பின்னும் பிரமாதமான கதைப் பரப்பு.

ஹோமர், டோல்கீன் ஆகிய இருவருமே தொலை தூரம் பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணிக்கு வீடு திரும்புவது என்பது எத்தனை துன்பகரமானது என்பதை எழுதுவதில் கவனிக்கத்தக்கபடி நேர்மையாக இருக்கிறார்கள். ஒடீஸியஸோ, ஃப்ரோடோவோ நீண்ட நாள் வீட்டில் தங்கி இருப்பதில்லை. அரசர் மெனலேயஸ் தன் மனைவி ஹெலனைத் திரும்பப் பெறுவதற்காக மற்ற கிரேக்கர்களுடன் சேர்ந்து கொண்டு, ட்ராய் நகரைச் சுற்றிப் பத்தாண்டுகள் போர் புரிந்திருக்கிறார். அவர் மனைவி ஹெலனோ பத்திரமாக ட்ராய் நகரின் கோட்டைச் சுவர்களுக்குப் பின்னே இருந்திருக்கிறாள், எல்லா அலங்காரங்களுடனும், சுந்தர புருடனான பாரிஸுடன் காலம் கழித்திருக்கிறாள் (அவன் கொல்லப்பட்டபின் அவள் அவனுடைய சகோதரனைத் திருமணம் செய்து கொள்கிறாள்). இந்த மெனெலேயஸ் தன் மனைவி ஹெலனுடனும், இதர கிரேக்கர்களுடனும் தன் வீட்டுக்குத் திரும்புவது அவருக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஹோமர் எழுதி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றும்.

கொட்டும் மழையில் அந்தக் கடற்கரையில் நின்று காத்திருக்கும், தன் முதல் கணவர் மெனெலேயஸுக்கு, ஒரு மின்னஞ்சலோ, அல்லது ஒரு டெக்ஸ்ட் செய்தியோ அனுப்ப வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை போலிருக்கிறது. ஆனால் மெனெலேயஸின் குடும்பம், ஓரிரு தலைமுறைகளாகவே, கவனிக்கத் தக்க விதத்தில் நிரம்ப துரதிருஷ்டத்தில் சிக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அல்லது இன்று இதை நாம் சொல்கிறபடி வருணித்தால் அந்தக் குடும்பம் சீர் கெட்டக் குடும்பமாகவே இருந்திருக்கிறது.

ஹோமர் ஊற்றுக் கண்ணாக இருந்தது அதிபுனைவுக்கு மட்டுமல்ல என்று சொல்லலாமோ?

***

[1] ஹோமர்- உலகப் பிரசித்தி பெற்ற இரு கிரேக்கக் காவியங்களைப் படைத்தவர் என்று அறியப்படுபவர்

[2] தி இலியட் – ஹோமரின் இரண்டு காவியங்களில் ஒன்று.

[3] த ஆடிஸி- ஹோமரின் இரண்டாவது காவியம்.

[4] டோல்கீன் என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரின் புகழ் பெற்ற நூல்- ‘த ஹாப்பிட்’ என்பதன் நாயகன். டோல்கீனின் மற்றொரு புகழ் பெற்ற நாவலான, ‘த லார்ட் ஆஃப் த ரிங்ஸி’லும் பில்போ முதல் பகுதியில் ஒரு உப பாத்திரமாக வருகிறார். ஆடிஸி என்கிற காவியத்தின் நாயகன் ஒடிஸேயஸைப் போல பில்போவும் நெடும் பயணங்கள், சாகசங்கள், சாவிற்கு அருகில் கொண்டு போன பேராபத்துகளில் எல்லாம் தப்பி மீண்டு வந்து நெடுநாள் வாழ்ந்து மறைகிற பாத்திரம்.

[5] இலியட், ஆடிஸி காப்பியங்களின் மையத்தில் உள்ள ட்ரோஜன் போர் என்பது கிரேக்கர்களால் ட்ராய் நகரின் மீது இடப்பட்ட முற்றுகை, மற்றும் போரைப் பற்றியது. சுமார் பத்தாண்டுகள் நீடித்த இந்த முற்றுகையில் ஏராளமான கிரேக்க நாயகர்களும், ட்ராய் நகரைச் சார்ந்த நாயகர்களும் இறக்கிறார்கள். ட்ராய் என்பது ஸ்பார்டன் என்ற சமூகக் குழுவினரின் நாட்டுத் தலை நகர்.

[6] கிரேக்கம் என்பது லத்தீன் சொல். கிரீஸ் என்று இன்று அறியப்பட்ட நாட்டின் சொல் அல்ல. கிரேக்கர் என்று நாம் அழைக்கும் மக்களின் பண்டைப் பெயர் ஹெலெனி என்றிருந்தது. எப்படி இந்தியாவில் மக்கள் பலவேறு மொழிக்குழுக்களின் உறுப்பினர்களாக முதல் படியிலும் பின்புதான் இந்தியராகவும் தம்மை அறிகிறார்களோ அதே போல கிரேக்கர்கள் தம்மை ஸ்பார்டர்கள், அதீனியர்கள் என்று தாம் மையமாக வசித்த நகர நாட்டின் பிரஜைகளாகவே தம்மை அறிந்திருந்தனர்.

From ‘Papa H’, No Time to Spare, Ursula Le Guin

(This is an unauthorised translation intended for educational, non-commercial display at this particular web page only).

விளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்

தமிழாக்கம்: மைத்ரேயன்

[இங்கிலிஷ் மூலம் பிரசுரமானது ஹார்ப்பர்ஸ் மாகஸீன் மாதாந்திர சஞ்சிகையின் ஏப்ரல் 2018 இதழில். தமிழாக்கம்: மைத்ரேயன்/ மே, 2018]

அவர் மனைவி திருகுவெட்டுப் புதிர்களை[1]  விடுவிக்க முனைந்திருப்பதைப் பார்க்கையில் நீரெலிகள் (பீவர்கள்) இப்படித்தான் மரக்கட்டைகளை வைத்து வேலை செய்யும் என்று அவருக்குத் தோன்றியிருந்தது. நீங்கள் ஒரு பீவராக இருந்து, மரக்கட்டைகளை வைத்து வேலை செய்தால், இந்த மாதிரி வேலைகளை சாதாரணமாக எடுத்துச் செய்யாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க உங்களிடம் ஒன்றிரண்டு சொலவடை இருக்கும்: “இரவில் சந்திரனை நோக்கி இருக்கும் பக்கத்திலிருந்து துவங்கு- அப்போது உனக்கு மேலும் நன்றாகப் பார்க்க முடியும்- அங்கிருந்து உள்புறம் நோக்கி வேலை செய்.”

அவருடைய மனைவி சொன்னார், “விளிம்புகளைக் கண்டு பிடிக்கணும்.” விளிம்புகளில் துவங்கு, ஒரு மூலையைப் பூர்த்தி செய், பிறகு உள் நோக்கி நகர். புதிரே, விடையைச் சந்தி. இப்போது அவர் அமர்ந்திருந்த சமையலறையில்தான் (அன்று) அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். பையன்களோடு அவள் தீர்வு காண முயன்ற புதிர்கள் அந்த மேஜையை விடப் பெரியதாகத் தோன்றின.

இப்போது அந்த மேஜையில் நிறைய காகிதங்கள் இறைந்திருந்தன. கட்டணத்தைக் கேட்டுக் கோரிக்கைக் காகிதங்கள், தனக்கே எழுதிக் கொண்ட குறிப்புகள். மலர் வளையங்களுக்கு கோரிக்கை கொடுத்தாயிற்று.  தனக்குள் ‘நினைவுச்சின்ன மனிதன்’ என்று பெயரிட்டிருந்தவரைப் பார்க்க அவர் வெளியே போயிருந்த போது ரெண்டன் தம்பதிகள் இடையில் வந்து போயிருக்கிறார்கள் போல. அந்த மனிதன் ஒரு சுத்தியல் வைத்திருந்தார். பழைய காலத்து ஆள். ஆனால், அந்த மனிதர் வேலை செய்யும்போது இவர் பார்த்ததில்லை, அனேகமாக அம்மனிதர் அழுத்தப்பட்ட காற்றால் இயங்கும் துரப்பணம் வைத்திருக்க வேண்டும், அதுவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இதென்ன 1947 ஆ, இல்லையே. அவர் மனைவி பிறந்தது 1975 இல். அவரோ 1977 ஆம் வருடத்தவர்.

பொதிவுள்ள ஓர் அப்பம் காகிதங்களின் நடுவில் அமர்ந்திருந்தது. துயர் போக்கும் உணவு, என்று திருமதி ரெண்டன் இவரிடம் சொல்லி இருந்தார். அவளுடைய கார் இவருடைய வீட்டுக் கார் நிறுத்துமிடத்தில் அடிக்கடி நின்றது, அவள் இருந்த வீடு என்னவோ இருநூறு கஜம் கூடத் தள்ளி இருக்கவில்லை.  அவர் எதையும் ஃபுட்பால் மைதானங்களின் பரப்பளவால் அளப்பார், அவருடைய மகன்கள் இப்போது ஃபுட்பால் விளையாடுகிறார்கள் என்பதால் வந்தது அது. “திருமதி ரெண்டன் நடக்கத்தான் வேண்டும்,” என நினைத்தவர், பொதிந்த அப்பத்திலிருந்து ஒரு துண்டை எடுத்து உண்டார். அவருக்கு அப்போது தோன்றியது, கூடிய சீக்கிரம் ஒரு நாள் தான் வேலைக்குத் திரும்பிப் போக வேண்டி இருக்கும். தான் இன்னும் இறக்கவில்லை என்பதால், பிறர் நாம் உயிரோடு இருக்கிறோம் என்று பாவனையாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என நினைத்தார்.

மருத்துவ மனையில், எல்லாரும் தொலைக்காட்சிகளைப் பார்த்தனர். சிலர் சிரித்தனர். யாரும் சிரிக்கக் கூட முடியாத அளவுக்கு வாழ்வு நின்று போய் விடுவதில்லையே- அவரும் கூட ஒன்றிரண்டு தடவைகள் சிரித்திருந்தார். அப்படிச் சிரித்ததை நினைத்தபடி இருக்கையில், கழுவும் ஸிங்கின் மீது குனிந்து அப்பத்தை வாந்தி எடுத்தார். மருத்துவ மனையின் தொலைக்காட்சிப் பெட்டி எப்போதும் ஒரே அலைவரிசையைத்தான் காட்டும், ஏதோ கேளிக்கைத் தொழில் துறை விதிகளின் கட்டுப்பாட்டால் அப்படிச் செய்வது போலிருந்தது.

இந்த விஷயங்களில் தன் மனைவியின் அறிவுறுத்தல்களை நினைத்துக் கொண்டார்.  ஒரு சமயம், மகன் க்ளே நிமோனியாவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தான், இன்னொரு மகன் டானிக்கு ஒரு பிரச்சினை என்பதால் ஆலோசகரோடு சந்திப்புகள் தேவைப்பட்டன, அப்போது அவருக்கு வேலையும் போய் விட்டது, அதற்கு அவர் மனைவி சொன்னார், “இதையெல்லாம் கொஞ்சம் இலேசா எடுத்துக்குங்க, டெட்.” “நாம இதையெல்லாம் தாண்டிடுவோம்.” டானி பள்ளிக்குப் போய்ச் சேருமுன், குப்பைத் தொட்டிக்குப் பின்னே ஒவ்வொரு நாளும் அடித்துத் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அப்புறம் தெரிய வந்தது, அவனே மற்ற சிறுவர்களைக் கேட்டுக் கொண்டதால்தான், அப்படி அடிக்கப்பட்டான் என்பது. அவரோ, அவர் மனைவியோ ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை, அந்தக் குழந்தைகளுக்கும் புரியவில்லை, ஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி செய்தார்கள், காலம் முடிவுக்கு வரும் போது கூட குழந்தைகள் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள்.

அவர் தன் அம்மாவிடம் பேசுவதை நிறுத்திய பின் மூன்றே மாதங்களில் அவருடைய அம்மா இறந்து போன போது, “இப்ப இலேசா எடுத்துக்குங்க,டெட்,” என்றாள் அவர் மனைவி. அது ஒரு சிறிய வாக்குவாதம்தான், ஆனால் கடல் வாரிக் கப்பல்கள் அடித்தளத்தில் இருப்பதை, அங்கேயே இருந்திருக்க வேண்டியதை, வாரி மேலே கொண்டு வருவது போல ஆகியிருந்தது.

அந்த மாதிரி விஷயங்கள் அப்படியே இருக்க விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் எப்போதுமே ரொம்ப கவலைப்படுபவராக இருந்தார், ரொம்பவே ஆர்வமுள்ளவராக, அனைத்தையும் மேம்படுத்த விரும்புபவராக இருந்தார். அவர் இன்னும் மேலான துணைவராக இருக்க விரும்பினார். அவருடைய மகன்கள் அம்மாவிடம்தான் எதற்கும் போனார்கள். அவர்களைப் பொறுத்த வரை அவருடைய கடமைகள் வேறெங்கோ இருந்தன. ஐஸ்க்ரீமுக்கான ஆள். அவர் மனைவி சிக்கல்களைத் தீர்த்து வைத்த பின், மகிழ்வு தரும் எதற்காவது அவர்களை அழைத்துப் போவது அவர். டெய்ரி க்வீன் ஐஸ்க்ரீம் கடைக்குப் போகும் அந்தப் பயணம் ஒரு புதுத் துவக்கம் என்று பாவனை செய்வது அவர் வேலை. இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அவர் மேற்பார்வையில் பாதி திருகுவெட்டுப் புதிர்ச் சில்லுகள் சரியாகக் கோர்க்கப்பட்டிருந்தன, ஆனால் அனேகமாக அவரது மனைவியின் அன்பாலும், ஆலோசனையாலும் நடந்ததால், அவளுக்கு நன்றி சொல்ல வேண்டி இருக்கும்.

கழுவுதொட்டியில் கிடந்த அப்பத்தின் மேற்புறத் துண்டங்களைப் பார்த்தபடி. “தொலையட்டும்,” என்றார். சிரித்தார். தனியாக இருப்பது நல்லது என்று நாம் ஒரு போதும் நினைப்பதில்லை, ஆனால் சிரிக்கக் கூடாத சமயத்தில் சிரிக்கும் சமயங்கள் மட்டும் விதி விலக்கு. அப்பொது நாம் தனியாக இருக்க வேண்டும். அத்தனை துணைதான் அப்போது நீங்கள் வேண்டுவது.

அவருடைய அம்மா இறந்த போது மிஸர்ஸ். ரெண்டன் ஒல்லியாக இருந்தார், பையன்களைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போயிருந்தார். ட்ரிவியல் பர்ஸூட் விளையாட்டின்போது எப்படி அவள் இவருடன் சரசமாடினாள் என்று சொல்லி இவர் மனைவி கேலி செய்தாள். அந்தப் பகுதியில் மிஸ்டர். ரெண்டன் அப்படி பல உறவுகள் கொள்வது உண்டு என்று பேச்சு இருந்தது. அவர் சார்ல்ஸ் அட்லாஸ் போல இருந்தார், தன் வீட்டுக் கார் வெளி வரும் பாதையில் தண்டால் எடுத்தார். பனிக்காலத்தில் அவரது கார் நிறுத்துமிடத்தில் அறையை உஷ்ணப்படுத்த ஹீட்டர் இருந்ததால் அங்கு தண்டால் எடுப்பார், ஆனால் அதைத் துவங்குமுன், காராஜின் கதவை முதலில் திறந்து வைத்துக் கொள்வார்.

அவர் மனைவிக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்கப் படுவதற்குச் சில தினங்கள் முன்னதாக டானி அப்படி மோசமாக மொத்தப்பட்டிருந்தான், சுத்தப்படுத்துமுன் அவனை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. சில பத்தாண்டுகள் முந்தைய காலத்தை நினைவுபடுத்திய, அவனுடைய ஸ்டார் வார்ஸ் சட்டை பூராவும் அவன் வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் கொட்டிய ரத்தம். அவர் தன் மகனைக் கட்டிக் கொண்டார், ஆனால் அவன் அவரைக் கட்டிக் கொள்ளவில்லை. அவருடைய மனைவி டானியை வேகமாக புறமகற்றி அழைத்துப் போனாள். அவள் அவனை வாழ்வு அறைக்கு (லிவிங் ரூம்) அழைத்துப் போனாள். தன் வாயைத் துடைத்துக் கொண்டு, ஸிங்கைக் கழுவி அதிலிருக்கும் கழிவைத் துகளாக்கும் எந்திரத்தை ஓட விட்டு திருமதி ரெண்டனின் பொதிவு அப்பத்தை இரண்டாம் முறையாக, ஒழித்துக் கட்டியபடி இருந்தபோது, அந்தப் பெயர், லிவிங் ரூம் என்பது, இப்போது அவருக்கு ஒரு அங்கதமாகத் தோன்றியது.

அவர் மனைவி, தன் தோளுக்கு மேலாக அவரிடம் ரகசியமாகச் சொல்லி இருந்தாள், ஏதோ டானிக்கு அது கேட்காது என்பதாகப் பாவித்தவளாக, சூடான, ஈரமான துண்டு ஒன்றைக் கொண்டு வந்து அறையின் கதவருகே வைக்கச் சொன்ன வார்த்தைகள் அவை.

அவர் அதனால் மனம் நோகவில்லை. அவர் ஒரு போதுமே மனம் புண்பட்டதில்லை. ஆனால் சில தினங்கள் கழித்து, பையன்களை சிறுவர் குழுக்களின் பேஸ்பால் பயிற்சிக்கு அழைத்துப் போக விரும்பி இருந்தார். பொதுவாக, அவளுக்கு வேறு வேலைகள் இல்லை எனில் அவர் மனைவி இவற்றுக்குப் போவாள். அப்போது பையன்கள் அவரிடம் பேசினார்கள், பின் இருக்கைகளிலிருந்து அரற்றியபடி இருந்தார்கள்- டானி கூட, அவனுடைய பல் ஒன்று உடைந்திருந்ததால், அவன் பேச்சில் இலேசான ஒரு விஸில் ஒலி கேட்டது. அவர் மனைவி இறந்த பின், அவர் ஒரு துண்டுப் பிரசுரத்தைப் படித்தார், அதில் சிறு குழந்தைகளுக்கு அன்றாடப் பழக்கவழக்கங்கள் சீக்கிரம் மறுபடி ஒழுங்காவது என்பது துரிதமாகத் தேறுவதற்கு எவ்வளவு அவசியம் என்று இருந்தது. ரிடர்ன் ஆஃப் தெ ரொடீன். அந்தச் சொற்களின் சுருக்கப் பெயர் அவருக்கு பிடித்திருந்தது ஆர் ஓ ஆர் (ROR). சிங்கம் உறுமுவது போல, ஒரு எழுத்துதான் குறைச்சல். கொஞ்சம் குறைக்கப்பட்ட சிங்கம்- ஆனால் இன்னும் சிங்கம்தான். அவர் முகச் சவரம் செய்து கொள்கையில் வெட்டிக் கொண்ட போது ஒரு முறை மெலிவாகக் கர்ஜித்திருந்தார், பிறகு முகத்தில் ஒட்டுப் போட்டுக் கொண்டு, பையன்களை அன்றைய சிறுவர் குழுப் பயிற்சிக்கு இட்டுப் போனார். திரும்பி ஒழுங்காகும் வழக்கம்.

இப்போது பின் இருக்கையிலிருந்து பையன்கள் அதிகம் பேசவில்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டபோது ரகசியக் குரலில் பேசிக் கொண்டார்கள். திருமதி ரெண்டன் வந்த போது அவளுடன் பேசுவார்கள். அவர்கள் குளித்த போது, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, கைகளைத் தன் மடியில் கோர்த்து வைத்தபடி, அவள் அறை வாயிலில் காத்திருப்பாள். க்ளே முழு வாக்கியங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருந்தான், அது இயற்கையானது போலத் தெரிந்தது: இன்னொரு மனித ஜீவனை எதிர் கொண்ட போது அவருமே சொற்களைப் பயன்படுத்துவதற்கு தன்னைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.

டானியின் முகம் இன்னும் கட்டுப் போடப்பட்டிருந்தது. அப்படி, மருத்துவக் காரணங்களை முன்னிட்டுத்தான், திருமதி. ரெண்டன் அவன் குளியலறையிலிருந்து வெளி வருவதற்குக் காத்துக் கொண்டிருந்தார் போலும். மம்மி திரைப்படங்களில் போரிஸ் கார்லாஃபாக அந்தப் பையன் இருந்திருக்க முடியும்- நிஜமாக ஒரு ஹாலோவீன் தினத்தன்று அவன் போரிஸ் கார்லாஃபாக வெளியே போயிருந்தான், அவனுடைய ஆசிரியர் ஒருவர் அப்படிச் செல்ல அவனை ஊக்குவித்திருந்தார். அந்த ஆசிரியர் குடிப்பார். டானி நிறைய நாட்களில், பள்ளி நேரம் முடிந்த பின்னும் பள்ளியில் தங்கி இருந்தான். அவன் எப்போதுமே படிப்பில் கஷ்டப்பட்டிருந்தான். அவர்கள் அவனிடம் நீ புத்திசாலி என்று சொன்னார்கள், ஏனெனில் சில வகைகளில் அவன் அப்படியும் இருந்தான். திருகுவெட்டுப் புதிர்களைப் பொறுத்தும், எண்கள் சம்பந்தப்பட்டவற்றிலும் புத்திசாலியாக இருந்தான். ஒரு விளையாட்டுக்காரரின் மட்டையடிகளின் சராசரியை மூன்று விநாடிகளுக்குள், பளிச்சென்று அப்படியே சொல்லி விடுவான்.

அந்த ஆசிரியர் டானிக்குக் குடிக்க எதையோ கொடுத்தார். அது சக்தி கொடுக்கும் பானம், அவனுக்குக் கவனம் கூடுவதற்கு உதவும் என்று அவர் சொல்லி இருந்தார். டானிக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. ஓய்வெடுக்கப் படுத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தான். ஒரு சோப்புக் கல் மேஜையில் அவன் படுத்திருக்கையில் ஆசிரியர் அவனுக்குக் கையடித்து விட்டார். என்ன நேர்ந்தது என்று அவருக்குத் தெரிந்த போது, அவர் அடுத்த நாள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரின் தலையை அந்த மேஜையில் மோதினார், அப்போது அந்த மேஜையில் இன்னமும் மகனின் விந்துவின் வெள்ளை தெரிந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தது, அல்லது விந்து அங்கு இருந்ததாக அவர் கற்பனை செய்திருந்திருக்கலாம். தன் மனைவியிடம் அவர் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு ஏதோ தண்டனையும் கொடுக்கப்பட்டிருந்தது. அது என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அது கேலிக் கூத்தாகத் தெரியலாம். உங்களுடைய பையனுக்கு இப்படி ஒன்று நேர்ந்தால், அந்த ஆசிரியருக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள நீங்கள் நிச்சயம் முயல்வீர்கள். அவர் அந்த ஆசிரியரைத் தன் கைகளால் தண்டிப்பதில்தான் கவனம் கொண்டிருந்தார். எல்லாரும் தம் கைகளால் ஏதாவது செய்கிறார்கள்.

அவருடைய மகன் அவரிடம் பிறகு அதிகம் பேசவில்லை. அப்போதுதான் குப்பைத் தொட்டிக்குப் பின்னே உதை வாங்குவது துவங்கியது. க்ளேயாவது அவரிடம் பேசுவான், இருவரும் குடும்ப அறையில் அமர்ந்து பேஸ்பால் விளையாட்டுகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள், டானியும் அவன் அம்மாவும் படுக்கை அறையில் இருப்பார்கள். நோய் கண்டு பிடிக்கப்பட்டது அவருக்கு முன்னமே, டானிக்குத் தெரிந்திருக்கலாம். அதனால்தான் அவன் தன் அம்மாவோடு நிறைய நேரம் தங்கினான் போலிருக்கிறது. மீதமிருக்கும் விநாடிகளை எல்லாம் உறிஞ்சிக் கொள்கிறவன். உங்களுக்குச் சில விஷயங்கள் தெரிய வரும்போது நீங்கள் நேரத்தைப் பதுக்கி வைக்க விரும்புகிறீர்கள்.

 

அவர்கள் மூன்று பேர்கள்தான் (வீட்டில்) என்றான பிறகு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வரும்போது ஒரு புது பொதிவு அப்பம் காத்திருந்தது. அவர்களுடைய தனிப்பட்ட அப்பம் தயாரிப்பவராக எத்தனை நாட்கள் ரெண்டன்கள் இருப்பார்கள் என்று அவர் யோசித்தார். நிச்சயமாக, அந்த அப்பம் (pie) முடிவில்லாததில்லை. அந்த ஜோக்கை ஒரு நாள் இரவு படுக்கை அறையில், தனக்குத் தானே, அவர் உரக்கச் சொல்லிப் பார்த்தார். அது சிகிச்சை போல இருந்தது. பையன்கள் முன்னறைக்குச் செல்வதைக் கை விட்டிருந்தார்கள். படுத்துக் கொள்ளப் போன பின்னர் அவர்கள் பேசுவதில்லை.

இப்போது இரண்டு கால்கள் குளியலறைக்கு நடந்து போயின, தண்ணீர்க் குழாய் திறக்கப்பட்டது, பிறகு இன்னும் இரண்டு கால்கள், நீர் இன்னும் வேகமாகத் திறக்கப்பட்டது. குளியலறையிலிருந்து ரகசியக் குரல்கள். அவர் தண்ணீர் கொட்டுவது நிறுத்தப்படுவதற்குக் காத்திருந்தார், அந்த நான்கு கால்களின் ஒலிகள் எழுவதைக் கேட்கக் காத்திருந்தார், ஆனால் அவர் கேட்டது தெளிவில்லாத தேய்வான அசைவின் ஒலிதான். படுக்கையறையின் கதவு சத்தப்பட்ட ஒலி மறுபடி கேட்டது.

அவர் மனைவி இறந்து கொண்டிருந்தபோது, அவர் அவள் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் அதெல்லாம் முடிந்த பிறகு, தான் எத்தனை நேரம் மருத்துவ மனையில் இருக்க வேண்டி வரும் என்று யோசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அங்கு என்ன விதிமுறை? இது தன் வாழ்வின் மிக மோசமான நேரம் என்பதால்- அவர் இதை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்பட்டார், ஆனால் தன் குழந்தை இறக்க நேர்வதை விடவும் மோசமான நேரமாகவே இது இருக்கும் –  சீக்கிரமாகப் போய் விடுவோமா? அது கெட்ட எண்ணம், அவர் முடிவுக்கு வந்தார். இதை யாரிடமும் சொல்ல விரும்ப மாட்டோம். க்ளே பதினோரு வயதே ஆன சிறுவன், ஆனால் அதற்குப் பிறகு, ஒரு தனியறையில், அவனைத் தன் மடியில் இரண்டு மணி நேரம் அமர்த்தி வைத்திருந்தார. தொடர்ந்து அழுததால் அந்தப் பையன் உடலில் நீர் வற்றிப் போன நிலை வரும் வரையில் அப்படி இருந்தார். டானியின் முகம் இன்னொரு தடவை அடிக்கப்பட்டு தையல்கள் போடப்பட்டிருந்த நிலையில் இருந்தது. அதுதான் கடைசித் தடவையாக இருந்தது. காலம் முடியும் நிலையில் கூட பையன்கள் பையன்களாக இருப்பார்கள்தான், ஆனால் சில காலம் கழித்துப் பையன்கள் கூட அப்படி நடந்து கொள்வதை நிறுத்தியும் விடலாம்.

ரத்தக் குழாய் மூலம் அவன் உடலில் நீர் ஏற்றப்படும் சிகிச்சைக்கு க்ளே அனுப்பப்பட்டபோது, ‘நான் ரெண்டன்களின் வீட்டில் தங்கிக் கொள்ளட்டுமா?’ என்று டானி கேட்டான்.  “நான் அந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை. உங்களோடு தனியாக நான் அந்த வீட்டில் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.” அவனோடு தனியாக அந்த வீட்டில் இருப்பது அவருக்கும் பிடிக்கவில்லை. அப்போது அவர் யாரும் சிரிக்க முடியாதபடி மோசமான ஜோக்குகளைச் சொல்லும் சிகிச்சை முறையைக் கண்டு பிடித்திருக்கவில்லை. “சரி,” அவர் சொன்னர், பள்ளத்தாக்கின் செங்குத்தான சுவர்களை விடத் தட்டையாக அவருக்கே தன் குரல் ஒலித்தது. அதனால் அவர் மறுபடி சொன்னார், “சரி. நீ போகலாம்.”

 

மறுபடி தனியாக ஆன அவர், ஆசிரியரைத் தான் அடித்த பள்ளிக்கூடத்துக்கு காரை ஓட்டிக் கொண்டு போனார், தன் மகனைத் தான் எங்கே இழந்ததாக அவர் முன்பு நினைத்தாரோ அந்த வகுப்பறையின் ஜன்னலைப் பார்த்தபடி காரில் அமர்ந்திருந்தார். தன் மனைவி எப்படி அந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்குத் தன்னை அழைத்துப் போவாள், அவர்களின் குழந்தைகள் செய்யும் சில சாதாரண விஷயங்களை, தரையிலிருந்து எதையோ பொறுக்கி எடுப்பது, தங்கள் நண்பர்களில் ஒருவரைப் பார்த்துக் கண் சிமிட்டுவது, இருமும்போது தங்கள் வாய்களைக் கையால் மறைக்க மறப்பது, ஆனால் அடுத்த தடவை சரியாகச் செய்வது இப்படி ஏதேதோ பொருளற்ற விஷயங்களைப் பார்க்கையில் அவள் எத்தனை பெருமிதம் அடைந்தவளாகத் தெரிவாள் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். அவள் அவரைப் பார்க்கும்போது அது வேறு விதமான பார்வையாக இருக்கும். அதை மேலும் நேசமுள்ள பார்வை என்று அழைக்க அவர் விரும்பவில்லை. அப்படிச் சொல்வது தவறாக இருக்கும். அது ஒன்று சேர்ந்ததைச் சொல்லும் பார்வை. என்னுடையவர்கள் அல்ல, உம்முடையவர்களும் அல்ல: நம்முடையவர்கள்.

அவர் அழுதார், இரைந்து கத்துவதற்கு எழும் உந்துதலுக்கு இடம் கொடுக்காமல் இருக்கப் போராடினார், அப்போது இன்னொரு கார் அவருக்குப் பின்னே வந்து நின்றது. அது போலிஸ் காராக இருக்கும் என்று கவலைப்பட்டார், ஆனால் அது பழக்கமான சுபரு வகைக் கார் என்பதை உணர்ந்தார். திரு. ரெண்டன் அந்தக் காரைக் கழுவிய பிறகு,  தன் வீட்டுக் கார் நிறுத்துமிடத்தின் ஒரு கோடியில் நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  அப்போதுதான் அவர் தண்டால் எடுப்பதை எல்லாரும் பார்க்க முடியும்.

அவர் தன் மகன்களின் தலைகளை அந்தக் காரின் பின் இருக்கையில் பார்த்தார். ரெண்டன்கள் காரின் விளக்குகளை அணைத்தனர், எல்லாரும் அவரவர் இருந்த இடத்திலேயே இருந்தனர். வேறு யாரும் இப்படித் தன் மகன்களை எதிர் கொள்ளுமுன், அழுவதை நிறுத்துவதற்குத் தனக்கு நேரம் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் எல்லாருக்கும் இப்படி ஒரு ரெண்டன் ஜோடி கிட்ட மாட்டார்கள். அவர்கள் மறுபடி காரை ஓட்டிக் கொண்டு போவதைக் கூட அவர் கவனிக்கவில்லை. திடீரென்று டானி காரின் பயணிகள் பக்கக் கதவைத் திறந்தான், அவனும் க்ளேயும் முன் இருக்கையில் ஏறிக் கொண்டனர்.

டானி தன் சகோதரனைத் தாண்டித் தன் மூடிய கையை முஷ்டியாக்கி நீட்டினான். அவனுடைய அப்பா, அந்தக் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். நடுவில் இருந்த பையன் தன் கண்களை மூடுவதை மட்டும் செய்தான். அவர் மனைவி இந்தக் காரில் இந்த நேரத்தில் இருந்திருந்தால், இப்போது பேசி இருக்க மாட்டாள், அவர் பேச வேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்க மாட்டாள், அது குறித்து அவருக்கு நிச்சயமாக இருந்தது. மையம் இல்லாத இடத்தில் விளிம்புகளும் கிடையாது. இடம் இடத்துக்கு வழி விட்டு, அது மேலும் இடத்துக்கு வழி விட்டு- தன் மகன்களைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஒரு அப்பா, வேறெதுவும் படிவங்களால் மூடப்படாமல், எந்த வண்டலும் இல்லாது, அங்கே ஒரு கடலின் அடித்தளம் மட்டும் இருந்தது.

***

[1] ஜிக்ஸா பஸில்

oOo

நன்றி : Find the Edges, Colin Fleming, Harper’s Magazine

(This is an unauthorised translation of the short story, “Find the Edges” by Colin Fleming, published at Harper’s Magazine . The Tamil translation is intended for educational, non-commercial display at this particular web page only).