ம. கிருஷ்ணகுமார்

இருளொரு பாதி

ம கிருஷ்ணகுமார்

 

இருளொரு பாதி
ஒளியொரு பாதி என
உயரத்தில் தகதகத்துக் கொண்டிருக்கிறாய்
உன் மூக்கின் நுனி வழி
பெருகும் ஒளியருவி சூரியனாகி
என் இரவுகளைக் கெடுக்கிறது
ஒவ்வொரு நாளும்
கட்டிலுக்கும் மார்கூட்டுக்கும் நடுவில்
தெருநாயைப் போல் இளைக்கும் இதயத்தை
கனவுகள் கொண்டு தேற்றுகிறேன்
சிறிதும் பெரிதுமென
பூத்து உதிரும் பொழுதுகளில்
உன் நினைவின் பிரதிகள்

நாம் தினசரி நடக்கும் பாதையில்
பலமுறை கடந்துவிட்டோம்
கண்கள் கூட சந்திக்காமல்
மீண்டும் நடப்போம்
மீண்டும் கடப்போம்
எப்போதும் போல் அப்போதும்
உடல் முழுதையும் கால் கட்டை விரலில் தாங்கி
கை நகத்து நுனியில் இதயத்தை ஏந்தி
உன்னிடம் மன்றாடுவேன்
இம்முறையேனும் பார்த்துவிடேன்?

 

யுகக் காதல்

ம கிருஷ்ணகுமார்

வெளியில் வீசப்பட்டு
அந்தரத்தில் வாசம் செய்யும்
சில நொடிக் காதலுக்காய்
யுகம் யுகமாய்
விண்ணோக்கி வளர்கிறது மரம்.

 

நிழல்கள் உண்மையின் குழந்தைகள் – ம. கிருஷ்ணகுமார் கவிதை

ம. கிருஷ்ணகுமார்

நிழல்கள் உண்மையின் குழந்தைகள்
உண்மை அன்றி வேறெதையும் பிரதிபலிக்க இயலாதவை அவை
படியில் எழும்போதும் பள்ளத்தில் விழும்போதும் அவை
பிரதிபலிப்பவை உண்மையின் பரிமாணங்கள் அன்றி வேறில்லை

என்றும் எனைவிட்டகலாத உண்மையின் குழந்தையொன்று
சாய வெளிச்சம் விழும் ஒவ்வொரு முறையும் பிறக்கின்றது
தூசி படிந்த என் கால்களின் அடியிலிருந்து.