ராஜேஷ் ஜீவா

பின்னால் வரும் நதி – ராஜேஷ் ஜீவா கவிதைகள்

ராஜேஷ் ஜீவா

பின்னால் வரும் நதி

குட்டி நிலாக்களைப் போலவோ
கோழிக்குஞ்சுகளைப் போலவோ
தன் குட்டிக் கால்களுக்குப்
பின்னால் ஏன் வருவதில்லை
நதியுமென்று அவள் வியப்புடன் கேட்கிறாள்
எல்லாமும் எல்லாரும்
தன் பின்னால்
வர வேண்டுமென்று
அனிதா விரும்புகிறாள்
நேற்று பின்மதியம்
கலரிங் புத்தகத்தில்
அவள் தீட்டியிருந்த
நதிப் பெருக்கில்
பழுப்பு வண்ண
வயோதிகச் சூரியன்
மூழ்கியெழுந்து
குடையாரஞ்சுப் பழமாகச்
சுழன்று கொண்டிருப்பதை
படுக்கையில் புரண்டு
கொண்டிருக்கும் அவளிடம்
இன்னும் சொல்லவில்லை

oOo

பொம்மை ஃபோன்

நீங்களும் என் நம்பரை
டெலீட் பண்ணிடுங்க என்றாள்
மறுமுனையில்
சத்தமே இல்லை
அழிக்கப்பட்ட ஆயிரம்
ஆயிரமாயிரம் எண்களை
தனது பொம்மை ஃபோனில்
டயல் செய்து ஹலோ சொல்லி சிரிக்கிறாள் குட்டி மாலினி

oOo

மிட்டாய்

ஆனை வேண்டும்
குதிரை வேண்டும்
என்றாலும்
வாங்கித் தருபவள்தான்
ஆனாலும்
கம்மென்றிருக்கிறது குழந்தை
மிட்டாய் மட்டும் போதுமென்று.

குமாஸ்தா பூனை – ராஜேஷ் ஜீவா கவிதை

ராஜேஷ் ஜீவா

அழுகின்ற குழந்தைக்கு
விளையாட்டு காட்ட
மியாவ் மியாவ் என்றவன்
பின்னர் உற்றார் ஊராரிடமும்
பூனை மொழியில் பேசினான்
கனைத்தும் செருமியும்
பெருங்குரல் எழுப்பியும்
பழைய குரல் திரும்பவில்லை
அவனைப் பார்க்கும் வேளைகளில்
தெருநாய்கள் உர்ரென்று முறைக்க
வீடு இருக்கும் காம்பவுண்டில்
எலித்தொல்லையே இல்லையென
மனைவி பெருமை பேசினாள்
மருந்துக்கும் புன்னகைக்காத
உயரதிகாரி சூத்தைப்பல் தெரிய
நேற்று சிரித்தே செத்தார்
வீட்டுப்பூனையொன்று
குளித்து தலைசீவி பவுடர் பூசி
அலுவலகம் போய் வருவதை
ஊர்ப்பூனைகளும்
காட்டுப்பூனைகளும்
பேசிக்கொள்வதாய் கேள்வி