- விடலை ஜிலுஜிலுப்புகள் மட்டுமே கொண்ட சிறுகதைகள் தமிழில் மலிந்து இருக்கின்றன. முதற்பார்வைக்கு இந்த “மடத்து வீடு”ம் அப்படித்தான் தோன்றுகிறது. கதையின் மையம் அதையும் தாண்டி வாசக பார்வைக்கு வேறு எதுவும் வைக்கிறதா?
‘முதற்பார்வைக்கு’, என்று தெளிவாக வரையறுத்ததற்க்கு நன்றி. கதையின் மையத்தை படிப்பவர்கள் கண்டடைவார்கள் என்று நம்புகிறேன். அவர்களே சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன். இந்தக் கதையை படித்த என் நண்பர் ஒருவர் இப்படி சொன்னார். காமம் மனிதர்களை வேட்டையாடுகிறது. முற்றா இளம்புல்லை, முதிய பசு நாவால் தடவி இன்புறுவதைபோல், முடிவதாயில்லை காமம். பெண்ணுடலை காமத்துய்ப்புக்கான விளைபொருளாய் மட்டும் காணும் கண்களில், உணர்வுகளும், காயங்களும் படும் தருணங்களும் உண்டல்லவா? அப்படி ஒரு தருணமே இந்த கதையின் மையம் என்றார், இருக்கலாம்.
- இந்த மையக்கருத்துக்கான inspiration, உத்வேகம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
நான் பார்த்த மனிதர்களிடமிருந்தே இந்த கதை உருவாகியது. திருமண வயதைத் தாண்டிய பின்னரும், தமது கனவுகளை உண்டு செரித்தபடி தனித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு கிடைக்கும் வெளி, அந்த வெளியை பயன்படுத்திக்கொள்ளதான் எத்தனை வேடங்கள், சாதனங்கள். தீராப்பசியுடன் தனித்திருக்கும் மிருகமென காமம் என் மனதில் படிமம் கொள்கிறது. அந்த மிருகத்தின் நுட்பங்களும் தந்திரங்களும் சொல்லித் தீராதவை. அவையே இந்த கதை எழுவதற்க்கான உத்வேகமாக அமைந்தது.
- சிங்கப்பூர் இலக்கியம் பற்றி அண்மையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் கவனிக்கத்தக்கவை. அந்தக் கட்டுரைகளில் அவர் எழுதியவற்றில் எது உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது, ஏன்?- ஒன்றே ஒன்று மட்டும் சொன்னால் போதும்.
ஜெயமோகன், இலக்கியம் குறித்து எழுதிய எல்லா கட்டுரைகளுமே ஒரு துவக்க நிலை எழுத்தாளனுக்கு, இலக்கிய வாசகனுக்கு முக்கியமானவை. ஜெயமோகனின் சிங்கப்பூர் பயணத்தில் விளைந்த மிக முக்கிய நன்மை என்று இந்த கட்டுரைகளை கூறுவேன். அந்த கட்டுரைகளில் எனக்கு முக்கியமாக தெரிந்த ஒன்றை மட்டும் சொல்வதென்றால், ஏன் ஒரு கதை எழுதப்படவேண்டும் என்கிற நோக்கம் பற்றி அவர் கூறும் கருத்து. உணர்வு ரீதியாக, அறிதல் ரீதியாக முன்பில்லாத ஒன்றைச் சொல்வதே நல்ல சிறுகதை என்று சொல்கிறார். வெற்று கிண்டல்களையும், அன்றாட நிகழ்ச்சிகளையும், பொது உண்மைகளையும் சொல்லி முடிவது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. மிகச்சிறந்த சிறுகதையாளர்கள் எழுதிச்சென்ற மொழியில் நாம் எழுதுகிறோம் என்கிற கவனம் எழுத வருபவர்களுக்கு தேவை என்று நினைக்கிறேன். எழுதும் கதைகள் கலையாக அடையப்போகும் வெற்றி/தோல்வி பற்றி பதட்டம் தேவையில்லை. ஆனால், நேர்மையான நோக்கம் முக்கியம் என்று கருதுகிறேன்.
- நீங்கள் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்கள், விரும்பி வாசித்த படைப்புகள் சில?
ஜெயமோகன், அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி, எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களை தொடர்ந்து படிக்கிறேன். இளம் எழுத்தாளர்களில், கே.என். செந்தில், இசை, போகன் சங்கர் போன்றவர்கள் விருப்பமானவர்களாக இருக்கிறார்கள்.
டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, தாஸ்தோவெஸ்கியின் ‘கரம்சோவ் சகோதரர்கள்’, ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ முதலிய நாவல்கள் என்னுள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியவை.