லட்சுமிஹர்

கிஃப்ட்

லட்சுமிஹர்

மேலும் கீழுமாக ஒழுங்கற்று அடுக்கப்பட்டிருந்த கிஃப்ட்கள் அவர்கள் பார்வைக்குத் தென்பட்டது. இதுவரை இருவரும் பேசத் தொடங்கி அதை எப்படித் தொடர்வது என்று தெரியாமல் இருந்த நேரம், கலர் கலர் பெட்டிகளான அந்தக் கிஃப்ட்களைப் பற்றிய பேச்சு ஆரம்பிக்க அது தன்னை இழந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருந்தாலும் அவ்வளவு நெருக்கம் என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு இடைவெளியை பேச்சு நிரப்பத் தொடங்கியிருந்தது . அவள் சூடியிருந்த பூவின் வாசனை இவனை ஒருவித போதைக்குள் தள்ளிவிட முயன்று கொண்டேயிருக்க முத்தங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவள் எளிதில் கையாண்டு விடலாம், என்ன பெரிய விசயம் . என்று தான் இருந்தாள். ஆனால் இங்கு, இப்போது கொஞ்சம் உதறல் . பட்டுக்குள் பறக்க முயன்றவளாய் . இந்த நிலையை எப்படிக் கையாள்வது என்று அட்வைஸ் கேட்டுத் திறமையாகச் செயல் படக்கூடிய இடமா என்ன?. எப்படியோ இதில் மற்றவர்களின் கேலி வேறு. “மொத ராத்திரி பொண்ணு, எவ்வளவு ரூபாய்க்கு புடவை எடுத்தா என்ன ” கலுக் சிரிப்பு.

கிஃப்ட்களை ஒவ்வொன்றாக, இருவரும் பிரிக்கத் தொடங்கினர். முதலில் தயங்கிய அவளை நீயும் பிரி நமக்கு வந்தது தான என்றான். பெரு மூச்சு விட்டுக்கொண்டாள். “எப்பயும் கொடுக்கும் பார்மாலிட்டி் கிஃப்ட்கள் தான ” என்றவனைப் பார்த்த இவள், ஒரு பச்சை நிற கிஃப்ட் பாக்சை எடுத்து நீட்டினாள்.

‘என்னவென்று’ மூஞ்சியை வைத்துக்கொண்டு பார்த்தவனின் முகப் பாவனை எப்படி மாறப் போகிறது என்பதை அறிய ஆவலாக அவளின் முகம் சிவந்திருந்தது.

பெயர் எழுதப்படாத கிஃப்ட். .

பச்சை கலரால் சுற்றப்பட்டு கைக்கு அடக்கமாக இருந்தது அது . அவனுக்குத் தெரியும், ஆனால் அவளுக்கு . என்ற பாவனையில் அதை வாங்காமல் பார்த்தான்.

” இத நீங்களே பிரிங்க ” என்றாள்.

அவன் அதைத் தயக்கத்தோடு வாங்கிக்கொண்டு பிரிக்க மனமின்றி, அதைக் கையிலேயே வைத்திருந்தான். அவன் முகம் பல நினைவுகளை இவளுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

இதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டுமா என்று கூட யோசித்தாள் . அப்பா சொல்வது இப்போது மீண்டும் காதிற்குள் . எல்லாத்தையும் (உச்சு) விளையாட்டா எடுத்துக்கக் கூடாது ( உச்சு ). மீண்டும் ஒரு முறை விளையாடி விட்டதாகத் தோன்றியது அவளுக்கு .

இந்த நிலை முன்னே இருந்த இடைவெளியை நிரப்பிய பேச்சிற்கும் விடுதலை கொடுத்தது.

அறை சுதந்திரமாக இருவரையும் கைது செய்திருந்தது.

கையில் அந்தக் கிஃப்டை வைத்திருந்தவனின் முகம் இப்போது அவளை நோக்கியிருந்தது , அவள் எதிர் பார்த்தது போலில்லாமல், நினைவுகளை அள்ளிவரும் சிரிப்பு அவன் முகம் எங்கும் பரவி இருந்தது, இவளுக்கு ஆச்சரியம். அவனைச் சுற்றி இவள் மண்டைக்குள் பின்னப்பட்டிருந்த காதல் கதைகள் சுக்குநூறாக உடைத்திருந்தது அந்தச் சிரிப்பு.

அப்போ இது காதல் கதை இல்லை போல இந்தப் பெயர் எழுதாத கிஃப்ட் பின்னால் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அவன் விலகிக் கிடந்த இடைவெளியை நிரப்பத் தொடங்கினான்.

” இத பிரிக்க பயமா இருக்கு ”

“. ”

” பயமா இருக்கு ” என்று அவன் மறுபடி சொல்லும் வரை அவனையே பார்த்துக்கொண்டே இருந்தாள் பதிலேதும் சொல்லவில்லை.

” எப்படி இத கரெக்டா எடுத்த ”

“. “.

” ஹே. என்னாச்சு ” என்று அழுத்தி கூறியவன், அவளின் மௌனத்தைக் களைத்தான்.

” ஆங். ஒன்னும் இல்ல ”

சரி என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு தலையாட்டினான். பின் பேச தொடங்கினான்.

அவனின் குரலுக்கு இருக்கும் தனித்த அடையாளத்தைக் கண்டு கொண்டாள். அவளோடு இறுதி வரை தன்னுடன் பிணைக்கப்பட்ட அந்தக் குரலை, அவள் உள்வாங்க . கோபமோ, பாசமோ எதுவானாலும், அவள் காதுகளில் கேட்கப் போகும் அந்தக் குரலை கவனித்தாள், அவளின் தந்தை குரலுக்குப் பதிலாக இருப்பதை. அப்பா எப்போதும் அதிர்ந்து பேச கூடியவர். கணவனின் குரலை அவள் எதனோடு ஒப்பிட போகிறாள். என்று யோசித்துக்கொண்டிருந்தவளை அந்த ஹே தடுத்தது. இதற்கடுத்து தான் அவன் கூற வந்த விசயத்திற்குள் உள் நுழைய வேண்டியிருந்தது.

” எதனால பயம்னு கேக்க மாட்டியாடி? ”

அவளுக்குச் சிறுவயதில் இருந்தே’ டி ‘ போட்டு பேசுவதோ, அவளோடு படிக்கும் பிள்ளைகள் ‘ என்னாலே ‘என்று பேசுவதோ சுத்தமாகப் பிடிக்காது. பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் இல்லை என்றாள் திரும்பி கூடப் பார்க்க மாட்டாள்.

” இந்து ” என்றாள்.

” அவன் ஓ. கேட்க மாட்டியா இந்து? ” என்றான் அவளை ஏற்று.

” என்ன ” என்பது போல ஒரு சமிங்கை.

கையில் வைத்திருந்த பெயர் இல்லாத கிஃப்ட் பின்னால் இருக்கும் பயத்திற்கு ஒரு கதையை ஆரம்பித்தான்.

‘ நிறையக் கதை சொல்லியே, உங்க அப்பா என்ன ஏமாத்திருவாரு ‘ என்று அம்மா சொல்வது ஞாபகம் வந்தது அவளுக்கு . ‘ அது கதைனு உனக்குத் தெரியும்ல , அப்பறோம் ஏன் கேக்குற.” என்பாள். ‘ அவரு சொல்றது நல்லாருக்கும் ‘ என்று அம்மா வெட்கப் பட்டுக் கொள்வாள். அப்பாவி ஜீவன்கள் தான் பெண்கள் என்று தோன்றும். ‘ நானும் தான்’ என்று மனதிற்குள் இல்லாமல் வெளியே கேட்கும்படி சொல்ல, கதையை ஆரம்பிக்கப் போனவன் ” என்ன நானும்தான் ” என்றான். அவள் மனதிற்குள் நினைத்ததை அவனிடம் சொல்ல சிரித்துக்கொண்டான்.

” ஆரம்பிக்கவா. ” என்றவனின் குரலில் நெருக்கம் கூடியிருப்பது இதழ் முத்தங்களுக்கான முன்னேற்பாடு, இன்னும் நெருங்கி வந்து அமர்ந்தான் தோள்கள் உரச.

” உங்க அப்பா பேசுறத கேட்டுருக்கியா. ” என்றாள் அம்மா ஒரு நாள் திடீரென்று.

” ஏன் திடீருனு, என்ன ரொமான்சா ” என்றதற்கு, அதெல்லாம் ஒன்னும் இல்ல என்பது போல மூஞ்சிய வைத்துக்கொண்டு அம்மா.

” ரெண்டு வார்த்தை நடுவுல ‘உச்சு ‘ கொட்டிப்பாரு ” என்று சொல்லி சிரித்துக்கொண்டாள். இதுவரை அவள் நினைத்தது கூடக் கிடையாது, அம்மா எதையெல்லாம் அப்பாவிடம் கவனித்திருக்கிறாள்.

” எதனால அப்படியாம் “.

” தெர்ல ”

” ம்ம்ம். ”

அம்மா சொன்னபின், அப்பா பேசும் போது கவனித்தவளுக்கு ” உச்சு ” தரிசனம் கிடைத்தது.

அம்மா மட்டும் தான் கவனித்திருக்கிறார் என்று பார்த்தாள். அப்பாவும் அப்படிதான் அம்மாவின் நகர்வை வைத்தே ” அவளுக்கு (உச்சு ) உடம்பு செரியில (உச்சு ) எப்பயும்) வாயத் தெறந்து (உச்சு ) சொல்ல மாட்டா ” என்பார்.

அம்மா உடம்பு வலியிலும் சிரிப்பதை பார்த்து ” ( உச்சு )என்ன கொழுப்பு இவளுக்கு (உச்சு ) பாரேன்” என்பார் அப்பா என்னைப் பார்த்து.

அம்மா என்னிடம் ” இரண்டு உச்சு ” என்று சொல்லிச் சிரிக்கத் தொடங்குவாள். கவனிப்பு வாழ்வில் எப்படிப்பட்டது ?. அடுத்தவர்கள் மீதான அக்கறையின் பித்தாகி எதையும் அதன் போக்கில் ரசிக்கத் தெரிந்திருந்த கவனிப்பு இன்னும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இறுக்கி கொள்கிறது. வாழ்வின் அடிப்படையாய். அந்த நிலையிலிருந்து ஒட்டிக் கொண்டது தான் இந்தக் குரல் கவனிப்பு .
அவன் சொல்லத் தொடங்கி இருந்தான் . இவள் கவனிக்கத் தொடங்கியிருந்தாள் .

” கண்டிப்பா என் பிரண்ட்ஸ் வேலையா தான் இருக்கும் ”

” ஏன் ”

” இதுக்குள்ள என்ன இருக்கும்னு நெனைக்குற ”

” பிரிச்சா தான் தெரியும் ”

” அவசர படுற ”

“.”

” இதுக்குள்ள நம்ம நெனைக்குற மாதிரி புதுசாலா எதுவும் இருக்காது ”

“அப்படி இல்ல, கிஃப்ட் கிஃப்ட் தான ”

“அதுவும் சரிதான், பேரு போடாம கொடுக்குறப்பவே நான் கண்டு புடுச்சுட்டேன் ”

“.”

அவன் மறைக்க என்னென்னவோ சொல்லி தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். கோமாளியாக . தன் நண்பர்களின் விளையாட்டு என்று .

ஆனால் அவனுக்குள் இந்த கிஃப்ட் ஆயிஷா கொடுத்தது என்று தெரியும். கல்யாண மேடையில் இந்த கிஃப்டை அவள் கொடுத்த போது பெயர் இல்லை என்பதை அறிந்தே இருந்தான். பழைய நினைவுகளின் சின்ன உரசல் . இதைத் தனியாக எடுத்து வைக்க முயன்றும், அவன் மனைவியின் கைப்பட்டு அவனிடமே வந்திருக்கிறது. இதைச் சமாளிக்கக் கதைகளை ரெடி தயார் செய்து கொண்டிருக்கிறான்.,

” இத பாத்தாலே தெரில “.

“தெரில “.

” எனக்குக் கூச்சமா இருக்கு ”

“. ” அவள் கண்டு பிடித்துவிட்டது போல நடிக்க. அவனின் குரல் எதையோ நினைத்து அதுக்குப் பொருந்தாத வேஷம் போட்டு மேடையில் ஆடிக்கொண்டிருந்தது. அவள் விட்டுவிட்டாள்.

அவன் அதைத் தள்ளி வைத்துவிட்டு அடுத்த கிஃப்ட்களைப் பிரிக்கத் தொடங்கி இருந்தான். அவள் கண்டுகொள்ளாததைக் கவனித்துத் தான் இருந்தான். கண்டுகொள்ளாமல் இல்லை. பெரிதுபடுத்தவில்லை.பின்னால் அதைப் பற்றி அவள் கேட்டாள் என்ன சொல்லுவது…

கிஃப்ட்கள் பிரிக்கப் பிரிக்கக் கம்மியானது. அவன் கையில் மற்றுமொரு பெயர் போடாத கிஃப்ட் .

ஆச்சரியமானவன் அருகில் இருந்தவளிடம் திரும்பி ” இது எனக்கு இல்ல ” என்றான் பதட்டமாக.இருவரும் சிரித்து விட்டனர். அமைதி நிலவியது. காலையில் இருந்து கல்யாண மேடையில் நின்றிருந்த களைப்பில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தவர்களுக்கு அது சொளகர்யமாக இருந்தது. ஏசி இருபதில் இருந்தது. முதல் இரவுக்காக அலங்கரித்து இருந்த மெத்தை உறங்கி கொண்டிருக்க கண்ணாடி அவளின் முகத்தை ஏந்தக் காத்துக் கொண்டிருந்தது. அறையெங்கும் கல்யாண மாலையின் மணம் புணர்ந்து கிடந்தது .

அப்பா முதலிரவின் போது தன் காதல் தோல்வியின் கதையை அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மா இப்போதும் சண்டை வந்தாள், அதை இழுக்காமல் இருக்க மாட்டாள்.

” உங்களுக்கு அவளோட கம்மல் தான் பிடிக்கும் ” . அதே கவனிப்பு. ” ஏன் பா மொத ராத்திரில உன் காதல் படத்தை ஓட்டிருக்க ” என்று. சொல்லும்போது அப்பா சொன்ன ஒரே அட்வைஸ் இதான் ” நோ காதல் ஷோ “. .

” நோ, காதல் ஷோ ” .

இருந்தும்.

அவள் தன் தலையில் வைத்திருந்த பூவை எடுத்து அருகில் வைத்தாள்.’ ஏன் ‘ என்பது போலப் பார்த்தவனுக்குப் பதிலேதும் இல்லை.அவனிடம் பெயர் இல்லாத கிஃப்டை நீட்டும் போது. தன்னுடைய பின் கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட வேண்டும் என்று தான் இருந்தாள். ஆனால் அது வேறு விதமாகப் போனது. அவன் அதே பச்சை நிறத்தில் கை அடக்கப் பெயர் இல்லாத இன்னொரு கிஃப்ட் பாக்சை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

அவள் அதைப் பார்த்து விட்டு.ஏற்கனவே அவன் வைத்திருந்த கிஃப்ட் பாக்ஸ் பக்கத்தில் வைத்தாள். இரண்டும் ஒன்று போல இருந்தது . இருவரின் இடைவெளியில் .

ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். பின் இரண்டு கிஃப்ட்களையும் பார்த்தனர்.என்ன சொல்லவென்று தெரியாமல் இருந்தவர்களுக்கு ஏசி நடுக்கத்தைக் கொடுத்ததா என்று தெரியவில்லை.

அவள் பேச ஆரம்பித்தாள்.

” அந்தப் பிங்க் கலர் சாரில அவங்க அம்மா கூட வந்த முஸ்லீம் பொண்ணு தான ”

” ஆமா ”

“பேரு.? ”

” ஆயிஷா . ”

ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அவன் பேசத் தொடங்கியபின் ” அந்தப் பிளாக் குர்த்தால ட்ரிம் பண்ணி ஹைட்டா வந்தவன் தான ”

” இல்ல ”

” இல்லையா ”

” இல்ல ”

” அப்பறோம் ”

” கண்டு புடுச்சுக்கோங்க ”

இருவர் மனதிலும் இப்படி ஆரம்பித்திருக்கக் கூடாது என்பது போலத் தோன்றியது. அவனே ஆரம்பித்தான்

” ஏன் உனக்குப் பூ வைக்கப் பிடிக்கல ”

” பிடிக்காது. ”

” அப்பறோம் என்ன பிடிக்கும் உனக்கு.?. ” என்றான் .குரலில் இருந்த அக்கறையைக் கவனித்தவளாய் ” அது வந்து. ”

கவனிப்பாரின்றி, பிரிக்கப்படாமல் கிடந்தது இரண்டு கிஃப்ட்கள்.

***

 

 

விசிறி

லட்சுமிஹர் 

ஒவ்வொரு முறையும் அவள் திட்டிக்கிட்டு எழும்போதும் “முருகா” என்று தவறாமல் சொல்லிவிடுவாள். பதட்டமிருந்தாலும் போர்வையோடு அதை உதறிவிட்டு அப்பாவிடம் செல்வதுதான் வழக்கம்.  இரவானால்  முருகன் தன்னிடம் வந்து பேசுவதாக சொல்லுவாள். தினம் ஒரு கதை. கதைகள் எப்போது தொடங்கியது என்று மறந்திடும் அளவுக்கு முருகன் அவள் கனவுகளில் வந்து கொண்டிருக்கிறான்.

மரங்கள் நிறைந்த வனத்தின் ஊடாக நடந்து கொண்டே செல்கிறார்கள்.  கதையை முடிக்கும் வரை இடையில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது அவளின் நிபந்தனை. அதுவும் அப்பா எப்போதும் எதையோ கேட்டுக்கொண்டே இருப்பார். அதனால் கட்டளைக்கு பணிந்து அமைதி நிலவியது.

அவர்கள் அந்த வனத்தினை விட்டு வெளியேறும் பாதையை கண்டு பிடித்துவிட்டனர். உடன் வந்த முருகன் “இங்கிருந்து நீ உன் வீட்டுக்கு செல்லலாம்” என்றான். இதுவரை சிரித்துப் பேசி வந்தவளின் முகம் சுருங்கி விட்டதை  அறிந்த முருகன் அதற்கு பதில் சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது எதற்கு என்ற காரணங்கள் தெரியாது. முருகனை பற்றிக் கொண்ட பிஞ்சுக் கைகள் “எங்க வீட்டுக்கு வரியா” என்று கேட்டதற்கு தலையை வேகமாக ஆட்டி சிரித்துக் கொண்டான். “நாளைக்கு அவன கூட்டிட்டு வரேன்” என்று கதையை முடித்தவள் உடனே ஒரு கேள்வியையும் கேட்டாள். “உனக்கெல்லாம் முருகன் கனவுல வந்தது இல்லையா அப்பா” என்று சொல்லிக்கொண்டே தூக்கி கொள்ளுமாறும் கைகளை மேல் ஏற்றினாள்.

வாழ்நாளில் ஆறுமுகம் இதுவரை அப்படி கனவுகள் ஏதும்  கண்டதில்லை. அதுவும் அவர் மகளின் கனவுகளுக்கு எப்படி ஈடு கொடுக்க முடியும். கனவுகளில் முருகனுடன் பேசுவதாகச்  சொல்லும்போது “அப்பனுக்கு இதுவரை காது கொடுக்கலனாலும் மகளோட பேச்சப் பாரு” என்று விளையாட்டுத்தனமாக மனைவியிடம் சொல்லும் போது மகள் கோவித்துக் கொள்வதும் அழகு.அந்த முகத்தை பார்க்க எத்தனை வருடம் தவமிருந்தார்.  ஆறுமுகத்தின் ஐம்பது வயதில்தான் மகள் வள்ளியாய்  வந்து தோளை  அணைத்துக் கொண்டாள். அவளின் கனவுகள் பற்றிய பேச்சு எப்படி சலித்துவிடும்.

அலைகள் ஓயாத கடற்கரையில் அமைந்திருக்கும் கோவிலுக்கு காலையில் நடை திறந்ததும் ஆறுமுகம் கூடை நிறைய விசிறிகளை எடுத்துக்கொண்டு ஸ்பெஷல் தரிசனம் கவுன்ட்டர் அருகில் வியாபாரத்திற்காக நின்று விடுவது வழக்கம். “ஒன்னு பத்துரூபா ..ஒன்னு பத்து ரூபா” என்று கைகளில் அந்த விசிறியை வைத்து பெயர் தெரியாது லைனில் நிற்பவர்களுக்கு விசிறிக்கொண்டே இருப்பார். நேரம் ஆக ஆக அறுபது வயதை நெருங்கிய உடல் சோர்வைக் கொடுக்க நா வரண்டு போய் கைகளில் விசிறியை மட்டும் வைத்து லைனில்  நிற்பவர்களின் பார்வையில்  படும்படி நீட்டிக் கொண்டிருப்பார். அவரை போன்ற பலரை அங்கு காணலாம். பெரிய வருமானம் இல்லை என்றாலும் உடல் ஒத்துழைக்கும் வேலையாக அமைந்தது, அவ்வளவுதான். முதல் பூஜைக்கு வந்தால் இரவு நடை சாத்தும் வரை அந்த கவுன்ட்டர் தரிசனம் அருகிலேயே நின்று விற்றுக் கொண்டிருப்பார்.

கோவில் நடைபாதையில் தன் நண்பன் சாரதியினுடைய  சாமி படங்கள் விற்கக்கூடிய கடைக்கு கூட்டி போய் வள்ளியிடம் ஆறுமுகம் “உன் கனவுல வந்து பேசும்ல முருகன், இதுல எது கணக்கா இருக்கும்” என்று கேட்டவருக்கு பதில் சொல்வதற்காக  அங்கிருந்த படங்களை நின்று நிதானமாகப் பார்த்துக்கொண்டே சென்றவள் குழந்தை முருகனிடம் ரொம்ப நேரமாக நின்றிருந்தாள். ஆறுமுகம் “இது மாட்டமால” என்று கேட்க, காது கொடுத்து அதை கேட்காதவள் போல் அடுத்த போட்டோவுக்கு நகர்ந்தாள். சாரதி ஆறுமுகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார். “உன் புள்ள எப்புடி கத சொல்லுதுடே, எங்க முருகன்ல சொல்லுது” என்று சொன்ன சாரதி தான் திருச்செந்தூர் வந்ததிலிருந்து ஆறுமுகத்திற்கு சொந்தம் போன்ற ஆறுதல்.

“ஒண்டிக் கட்டையாவே காலத்த ஓட்டிரலாம்னு நெனைக்காதீங்க அண்ணா” என்று ஆறுமுகத்தின் மனைவி பேச்சு வாக்குல பொண்டாட்டி வேனுங்குரத ஞாபகப்படுத்துரேன்ற பேருல சாரதிக்கு அவங்க அம்மா அப்பா இல்லாத நினைப்ப இழுத்து விட்டுரும். சாரதி கடை திறக்காத நேரங்களை கடற்கரையில் கழிப்பது தான் வழக்கம். “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்ற ஆறுமுகத்தின் கேள்விக்கு  சாரதி எல்லாத்துக்கும் பதிலென சிரித்துக் கொள்வார். அதற்கு பின் இருக்கும் கதை சாரதிக்கு மட்டும் தெரிந்ததே. அதை இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டது இல்லை .ஆறுமுகத்தின் அந்த கேள்வியை  உள்வாங்கிக் கொண்டது போல கடல் வீச்சு. “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்பதை சாரதியின் காதிற்குள் கொண்டுவந்து சேர்த்தது மீண்டும் மீண்டும்.   .

மதிய சாப்பாட்டிற்கு எப்போதும் ஆறுமுகம் வீட்டிற்கு வந்து விடுவார். “முருகன் பாத்தா தெரியனும்ல அதுனால தான் கோவில் பக்கத்துலையே இருக்கோம்” என்ற அம்மாவின் பேச்சிற்கு ஊம் கொட்டும் வாய் அன்று நேரத்திற்கு வராத அப்பாவை பற்றி கேட்க “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு” என்று மட்டும் சொல்லி வைத்தவளுக்கு கோவிலில் ஆறுமுகம் மயக்கம் போட்டு விட்டார் என்று கூட்டி வந்தனர்.

“ஒன்னும் இல்லடே, வெயிலு” என்று சமாளித்தாலும் அன்றிலிருந்து ஆறுமுகத்திற்கு உடல் ரீதியாக தன் உடம்பில் இருக்கும் குறை என்ன என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை மயக்கம் போட்டு இருந்தாலும் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தார். வேண்டி உருகி தன் குறை நீக்கச் சொல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுள் ஆறுமுகமும் அந்த முருகனின் காதிற்கு தன் கஷ்டத்தை சொல்லாமல் இல்லை. எத்தனை முகங்கள் ஆறுமுகத்தை தினமும் கடந்து போகிறது எத்தனை வேண்டுதல்கள். எத்தனை நம்பிக்கைகள். எத்தனை எத்தனை ..எத்தனை.. என்று முருகன் நிரம்பிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் முருகனிடம் முறையிடுவதை நிறுத்திக் கொண்டார். “என் கவலைய தீக்கத்தான் முருகன் இத்தன பேர என்னத் தாண்டி சாமி பாக்க வைக்குறான்” என்று நினைத்துக் கொள்வார்.

திருச்செந்தூருல செத்தாலும் புண்ணியம் தாண்டே நீ ஏன் ஒலட்டிட்டு இருக்க என்ற சாரதியின் சிரிப்புக்கு “வாழ்க்க சத்துக்கு கொடுக்கலேனாலும் பரவால சோத்துக்கு கொடுக்கனுல” என்பார் ஆறுமுகம். வீட்டிற்கு தெரியாமல் சாரதியுடன் ஒருமுறை  மருத்துவமனை சென்று பார்த்து வந்தார். “ஒன்னும் இல்ல சரியாகிடும் சத்தா சாப்பிட்டு கவலை இல்லாம இருங்க” என்று டாக்டர் சொன்னதாக சாரதி வள்ளியிடம் சொன்னதற்கு அன்று அவள் கண்ட கனவை தன் பங்கிற்கு சாரதிக்கு சொல்லத் தொடங்கினாள்.

“ரெண்டு பேரு கடலுக்குள்ள தெரியாம மாட்டிக்கிட்டாங்க, அல பெருசு பெருசா அடிக்க யாராலயும் கடலுக்குள்ள போய் காப்பாத்த முடில, நேரம் போகப் போக அவங்களோட சத்தமும் கொறஞ்சு போய் தண்ணிக்குள்ள போய்ட்டாங்க. அவங்கள காப்பாத்த முடியாம கடலையே பாத்துட்டு  கரையில நின்னுட்டு இருந்த அவங்க பையன தூக்கிக்கிட்டு வந்து இனிமேல் நான் வளக்க போறேன்னு முருகன் சொன்னான்” என்ற வள்ளி சாரதியின் கை பிடித்து  “அந்த பையன நான் எங்கையோ பாத்துருக்கேன் சாரதி மாமா….”  என்றாள். சின்னப் புள்ள எப்படி வாயடிக்குது பாரு நேத்து டிவில போட்ட செய்திய அப்படியே சொல்றா என்ன முருகன் கனவு காணுதோன்னு அம்மா கிண்டலுக்கு சிறு வயதில் தாய் தந்தையை கடலுக்கு பலி கொடுத்து ஏதும் செய்ய முடியாமல் அதிர்ச்சியோடு  நின்றிருந்த அதே கண்களுடன்.   வள்ளியின் இறுக்கப் பிடியிலிருந்த சாரதியின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்ககையில் விசிறியுடன் நின்றிருந்த ஆறுமுகத்திற்கு மனதில் உடல் ரீதியான பயம் தொத்திக்கொண்டு “செத்துட்டா.. நம்ம குடும்பம் அடுத்து என்னா பண்ணும்,  நம்ம அவங்களுக்கு என்னத்த சேமுச்சு வச்சுருக்கோம், பொண்டாட்டி வள்ளிய பாத்துப்பா இருந்தாலும்.. இந்த விசிறிய வித்து இன்னும் எத்தனைய சம்பாரிக்க முடியும், நின்னு சம்பாதிக்கிற அளவுக்கு தெம்பு இருந்துருந்தா நான் ஏன் இத வித்துட்டு இருக்க போறேன், சொந்தமா ஒன்னும் இல்லையே” என்று அவருக்குள் பல கேள்விகள் எழும்பி அரட்டிக் கொண்டேயிருந்தது. ஆறுமுகம் கையில் வைத்திருந்த விசிறியை இன்னும் விற்காமல் இருந்த விசிறிகளுடன் கூடைக்குள் போட்டுவிட்டு நடுங்கும் கால்களுடன் கல்திட்டில் அமர்ந்தார். இப்படி ஒரு போதும் இதற்கு முன் ஆறுமுகம் நினைத்தது இல்லை. உடல் அவர் பேச்சை கேட்க நிறுத்தியது முதல்தான் இந்த பிரச்னை ஆரம்பித்தது.

“ஐயா ..விசிறி கொடுங்க” உட்கார்ந்திருந்தவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை இளைஞனின் வேகத்திற்கு ஈடாக கூடைக்குள் இருந்த விசிறியை எடுத்துக் கொடுத்து கையில் காசை வாங்கிக் கொண்டார். இன்று வீட்டிலிருந்து கிளம்பும்போதே வள்ளி கேட்ட அந்த மூக்குத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்ற முனைப்பின் உந்துதல் இதுவரை உலட்டிய அனைத்தையும் எட்டி உதைத்தது.

“ஒன்னு பத்து ரூபா.. ஒன்னு பத்துரூபா..” என்று சத்தமாக விற்கத் தொடங்கியதை சாரதி மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

எப்பொழுதும் விற்க வேண்டிய, விற்று முடித்,த கணக்கு வழக்குகள் பெரிதும் வைத்துக் கொள்வதில்லை ஆறுமுகம். இன்று இன்னும் எத்தனை இருக்கிறது, எத்தனை விற்றிருக்கிறது, கையில் எவ்வளவு இருக்கிறது,  என்ற நினைப்பும் புதிதாக சேர்ந்திருந்தது. அது என்ன ஏன் பிள்ளைக்கு நான் வாங்கிக் கொடுக்காத மூக்குத்தி என்று இன்னும் சத்தமாக விசிறியை விற்கத் தொடங்கினார்.

கையில் வைத்திருந்த கூடைக்குள்ளிருந்து விசிறிகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கி வெளிகொண்டு வந்த  மகிழ்ச்சி நீண்ட நேரத்திற்கு இல்லை. மீண்டும் மண்டைக்குள் ஓடிய விசயங்கள் குரல்வளையினை நெருக்கி  வார்த்தைகளை கொன்று கொண்டிருந்தது. கண்கள் மயக்கம் கொள்ளும் அறிகுறியாக உடல் வேர்க்கத் தொடங்கியிருந்ததை  அறிந்து மீண்டும் சாய்வுக்கு தோதான கல்தூனை துணைக்கு  அழைக்க கோவிலை அழகுற செய்யப்  பொருத்தப்பட்டிருந்த இரவுக்கான விளக்குகள் தலையில் இறங்குவது போல இருந்தது. முருகனைப் பார்க்க குறையாதக் கூட்டம் அனாதையாக ஆறுமுகத்தை ஒரு மூலைக்கு தள்ளியிருந்தது.  விற்காமல் மீதியிருந்தவைகள் கவலைகளையும் இன்னும் இன்னும் என்று ஓட வேண்டிய தூரத்தை நினைவுபடுத்தும் விதத்தில் கையில் எவ்வளவு வச்சுருக்க அந்த பணம் பத்துமா மூக்குத்திக்கு என்று எண்ணிப் பார்க்கச் சொல்ல பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கும் போதே மயக்கம் கண்களை சொருகியது.

உடல் முழுவதும் பரவத் தொடங்கிய வலி ஏனோ அவருக்கு  இன்று நாம் கண்டிப்பாக செத்து விடுவோம் போல தோன்றியது. எப்படியோ மிச்சமிருந்த விசிறிகளை விற்று வள்ளி கேட்டதை வாங்கிக்கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தாலும் நாளைக்கு நாம் இல்லாதபோது வேண்டியதை எதிர்பார்த்து அப்பா இருந்துருந்தா வாங்கி தந்துருப்பாருன்னு ஏமாந்து போகுங்கிற நெனப்பும் எந்திரிக்க விடாமா செய்ய கண்கள் சொருகியது. கண்கள் இருளுக்குள் போக போக அதை தடுத்திர முடியாமல் பிடிகூண்டினை ஒத்திருந்தவைகளை என்னவென்று தெரியாது அதனுள் கேட்பார் யாருமின்றி சுற்றிக் கொண்டிருந்தவரை நோக்கி வந்த காற்றை புயல் என்று தெரியாது அனுபவித்தவருக்கு அது எங்கிருந்து வருகிறது என்று அறிய வேண்டும் அல்லது அது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்து அதன் விசையை நோக்கி அவரால் எவ்வளவு வேகத்தில் செல்ல  முடியுமோ அதை அடைந்திட விரைந்தவருக்கு அப்புயல் பெரிய விசிறியின்  வெளியாய்  உருமாறிக்கொண்டிருப்பதை கவனிக்கத்  தொடங்கி திகைக்க வைக்கும்   அப்புயலின் விசையினை  கொண்டிருக்கும்   பிடியின் நுனி தோகையென நீண்டு ஆறுமுகத்திற்காக  விசிறுவது யாராக இருக்கும் என்று அறிந்திட விளைந்தவரிடமிருந்து விலகிக்கொண்டே இருக்க  ஆடும் மயிலேறி இதுவரை விளையாடிய அம்முகத்தை அறிந்தவராய் கண்கள் கூச்செறிய  “முருகா” என்று படுக்கையிலிருந்து அரண்டு எழ அருகில் ஏதும் அறியாது படுத்திருந்த மகள் முருகனுடன் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தாள் .அவளை மீறி ஆறுமுகத்திற்கு அவள் அணிந்திருந்த மூக்குத்தி கண்களை கவர்ந்தது.

 

 

 

 

போஸ்டர்

லட்சுமிஹர்

 “லோ கேக்குதா… ஹலோ,“ சிக்னல் கெடைக்காம அப்படியே நடந்து கேணிப் பக்கம் இருக்குற பம்பு செட்டு வரைக்கும் வந்துட்டான் அமுதன். வெயிலு அவனப் பாத்து ரொம்ப நேரமா பல்ல காட்டிட்டு இருந்துச்சு, சுளீர்னு.

செல்போன தலைக்கு மேல சிக்னல் கெடைக்க தூக்கிட்டு அலஞ்சவன் சடாலுனு காதுல வச்சு பதட்டப்பட்டுப் போனவனாட்டம், “ஹலோ..”

“சொல்லுங்க “

“ ராம் கடையா?”

“ஆமா“

“அப்பாக்கு எழவு போஸ்டர் அடிக்கணும், அதான் கூப்டேன் “

“போட்டோ அனுப்புங்க இன்னைக்கு மதியம் கொடுத்தரலாம்”

தன்னோட தீனிய பாதி புடுங்குன வேகமாட்டம், “ஐயோ.. நீங்க வேற இன்னும் எங்க அப்பேன் சாகல.. எதுக்கு இம்புட்டு அவசரம்!“

“நீதான்யா இப்ப போன் பண்ண“

“இல்ல.எம்புட்டுனு கேக்கலாம்னுதான்“

அமுதன் எம்புட்டு ஆகுன்றத மட்டும் கேட்டு வச்சுக்கிட்டான். ராத்திரி முழிச்சிருந்து ட்ரிப்பு கார் ஓட்டுன வலி பிக்க கை, கால நீட்டி நெட்டி புடுச்சு, பொறந்ததுலருந்து பீபேண்ட வீட்டு முன்வாசல்ல வந்து உக்காந்தான்.

கொடஞ்சதுல மிச்சமிருந்த மலை அடிவார கிராமம். எண்ணுனா ஒரு ஐம்பது வீடுகதான் தேறும், போனீங்கனா மதுர ரோடு திருமங்கலம் விளக்குல எறங்கிக்கலாம்.

கைல வச்சுருந்த செல்போன திண்ணையில வச்சுட்டு வீட்டுக்குள்ள போனான். நடுவீட்ல அவன் அப்பே மணிமுத்து படுத்துருந்துச்சு, விடுஞ்சப்போ மணியக்கா வச்சுட்டு போன சாதம் கம்முனு மணிமுத்து எந்திரிக்கட்டுமுனு இருக்க.

அப்பே படுத்துருந்த கட்டுலு பக்கம் போனவன் தட்டையும் தொனைக்கு கையில் எடுத்துகிட்டு அப்பே காது பக்கம் போய், ‘சாப்டலயா இன்னும்’

பதிலுக்கு, நீ சொன்னது கேட்டுச்சுன்ற மாதிரி தலைய ஆட்டி கண்ண தொறந்து மூடிக்கிட்டார் தொர.

தட்லருந்த சாதத்த கைக்கு இம்புட்டா எடுத்து ஊட்டுனான். இத்துனுண்டுதான் சோறு, ரெண்டு வாய்க்கு மேல உள்ள போல. தண்ணியக் கொடுத்து வேலைய முடுச்சுகிட்டான் .

‘எப்ப வந்த..?” மணியக்கா சவுண்டு உள்ள கேட்டுச்சு. கட்டுலுல உக்காந்திருந்தவன் எந்திருச்சு தட்ட ஓரமா போட்டு கைய கழுவிக்கிட்டான், “இப்போதா உள்ள நொழஞ்சே அத்த, சாப்டாம வச்சுருந்தாரு அதா எடுத்தே ஊட்ட, கொஞ்சூண்டு தான் சாப்ட்டாரு.”

மணியக்கா அமுதனோட அப்பாக்கு கூடப் பொறந்த கடைசி தங்கச்சி. அமுதனுக்கு வெவரம் தெருஞ்சது மொத மணியக்கா அங்க தான் இருக்கு. அத்துட்டு வந்தவன்னு ஊர் சொல்லுது, நான் சொல்லல.

“அமுதா.. அப்பனுக்கு நோவு கூடுதுடா“ மணியக்கா அத சொல்லி முடிக்கிறதுக்குள்ள அண்ணே படுத்திருந்த கட்டுலுக்கு கீழ போய் உக்காந்துகிச்சு.

அமுதன் மணிமுத்த ஒருக்கா பாத்த வாக்குல அதுக்கு பதில் சொல்லாம வெளிய கெளம்பிட்டான்.

திண்ணையில கெடந்த செல்போன பாத்த உடனே தான் விட்டு போன அப்பன் போட்டோ நெனப்பு தொத்திக்கிச்சு.

வெளிலருந்து திரும்ப நடுவீடுக்கு வந்தவன் மணியக்காகிட்ட, “அப்பா போட்டோ இருக்கா அத்த”

மணியக்கா, “அதெல்லாம் தெர்ல அமுதா. அண்ணே கல்யாணத்தப்ப எடுத்த போட்டோதான்.. அதயும் உங்க அம்மா…” உங்க அம்மானு மேல சொல்ல வந்தத வேணும்னே சொல்லாம விட்ருச்சு.

வீட்டுல இருந்த சாமான் ஒன்னையும் விடல எல்லாத்துலையும் போட்டோ இருக்கானு மூக்க நொழச்சுட்டான். ஒரு போட்டோனாது கைல மாட்டிக்கும்னு நெனச்சவனுக்கு, ஒன்னும் இல்லேன்றத ஏத்துக்க முடில. மிச்ச சொச்சம் விட்டுருந்த எடத்துலயும் தேடிப்புட்டான், ‘பெப்பே’.

ஹாலுக்கு வந்தவன் அத்தையப் பாத்து, “வேற எங்கயாச்சும் போன போது எடுத்தது இருக்குமா?“

மணியக்காவுக்கு அப்படி ஏதும் ஞாபகம் இல்ல, “நம்ம கல்யாணி வீட்டு விசேஷத்தப்போ போட்டோ எடுத்துட்டு இருந்தாங்கனு அண்ணே சொல்லுச்சு.“

கல்யாணி வீட்டு ஆளுங்க இங்கிருந்து கெளம்பி ரொம்ப நாள் ஆச்சு. எங்குட்டு போய் அமுதன் அத தேட. போனு அடிக்கும் சத்தம். அமுதனோட ஓனர் தான்.

“அமுதா வேலைக்கு வர முடியுமா நாளைக்கு ..?”

“அப்பாக்கு முடியாம இருக்குணா.. இந்த வாரம் முடு….” பாதியோடு நிறுத்திக்கிட்டான்.

“ஹாஸ்பிட்டல் போகலயா”

“வச்சு பாத்துட்டு வந்தாச்சுணா. கடைசி நேரம் தான். ஒன்னும் முடியல, அதான் கூட்டிட்டு வந்துட்டோம்.”

“எங்க பாத்த?.. ”

“நம்ம உசிலம்பட்டி பிரபாகரன் டாக்டர் கிட்டதாணா ”

“நல்லா பாப்பாரே. நல்ல மனுஷன் ஆச்சே.”

“ஆமாணா”

“அப்பனா எல்லா முடுஞ்சுதானா,” என இழுத்தார் ஓனர்.

….

“சரி அப்போ எந்த விசயனாலும் சொல்லு. கைல பணம் இருக்குல “

“வேணுனா கேக்குறேணா.“ பம்பு செட்டு நிழல் அமுதனுக்கு புடுச்சதுதான், அந்தப் பக்கம் இருக்குற கெணத்த எட்டிப் பாத்தான், அடி மட்டத்துல கெடஞ்சு தண்ணி அழுக்கேறி போய். இங்க சின்ன வயசுல வந்துருக்கான், அம்மா கூடத்தான். அமுதனோட அம்மா மணிமுத்தோட கோச்சுட்டு போனதுக்கு பின்னாடி கெணத்து பக்கம் வந்ததே இல்ல பம்பு செட்டோடையே நின்னுக்குவான். அதுக்கப்பறோம் அம்மா பத்தி அமுதனுக்கு ஒண்ணுமே தெரியாது .

“கடைசியா இங்க விழுந்துச்சு. கெணத்துல,“ அது தான் அம்மா பத்தி அமுதனோட கடைசி ஞாபகம்.

“அதோட சாபமோ என்னவோ அதுகப்பறோம் இந்த கேணி நெம்பவே இல்ல“.

அமுதன் அம்மா பத்தி யார்ட்ட கேட்டாலும் ஒழுங்கான தகவலே இல்ல.

அதான் மணியக்கா போட்டோ பத்தி சொல்லும் போது திக்குச்சு, ஒரு பயத்தோட. “அம்மா எடுத்துட்டு போயிருக்கும்னு.“ அது அண்ணனுக்கு கேட்டுப்புடும்னு, அதுக்கடுத்து சொல்ல வந்த வார்த்தைய முழுங்கிப் புடுச்சு. மணியக்காவும் அமுதனோட அம்மாவும் தான் எப்பயும் ஒண்ணா சுத்துவாங்க. அமுதனோட அம்மா போனதுல இருந்து மணியக்கா இந்த கெணத்துப் பக்கம் வாரத நிப்பாட்டிக்கிச்சு. சின்னாளப்பட்டி பக்கம் அவங்க அம்மா அப்பாவோடதான் அமுதனோட அம்மா இருக்காங்கனு ஒரு சேதி அவ்ளோதான்.

அப்பா போட்டோக்கு என்ன பண்ணணும்னு தெரியாம இருக்கான் அமுதன். இப்ப போய் இதெல்லா போட்டு மனசுக்குள்ள ஒளப்பிகிட்டு கெடந்தான் .

திடீருன்னு கட்டுல்ல படுத்துக்கெடக்கும் அப்பேன் எந்துருச்சு அமுதன் கைய புடுச்சு அந்த கெணத்துகிட்ட கூட்டி போய் ஒன்னும் பேசாம ஓஓன்னு அலறமாட்டம் கனா கண்டுருக்கான், அப்போ அவங்க அப்பேன் சின்ன வயசுக்காரனாட்டம் இருந்தாரு, அழுதுட்டிருந்தவர திடீருன்னு காணல, அமுதன் அந்த கெணத்தவே சுத்தி வந்துட்டு இருந்தான். சுத்தி வந்தான். சுத்தி சுத்தி, சுத்தி வந்துட்டே இருந்தான்.

“ஏன்டா எங்களுக்கலாம் டவர் கெடைக்க மாட்டிது பேசணுனா கூட. நீ மட்டும் எப்பயும் போனு கையுமா சுத்துற“

ஊர்ல இப்போ இருக்கவங்கள விரல விட்டு எண்ணிப்புடலாம். எல்லா இங்கிருந்து நகந்து போய்ருச்சுங்க, இல்ல இன்னும் பொழப்ப தேடி கெளம்பிட்டே தான் இருக்குங்க ஜனம். இளவட்டங்களே கொறஞ்சு போச்சு. அப்படிருந்தும் இங்கருக்கும் சிலதுகள்ல ஊமையன் மகன் வடிவேலு கொஞ்சம் ஊருக்குள்ள ஜோரா திரியிறவன், பையன் பசும்பொன்னு பாலிடெக்னிக் காலேஜில படிக்கிறான்.

“அண்னே இது டச் மொபைல். நா காலேஜில இருந்தே படம் ஏத்திட்டு வந்துருவேன் அத பாப்பே. இங்க வாங்க நாம செல்பி எடுப்போம்“

“எம்புட்டுடா. இது.”

“7000 ணா..”

“ஒக்காலோளி உனக்கெல்லா எவண்டா வாங்கித் தரது. ”

“எங்க மாமே வச்சுருந்துச்சு. அது புதுசு வாங்குனதும் எனக்கு பழச கொடுத்துடுச்சு.“

“ஏன்டா உங்கொக்காவ கட்டுனவன் அம்புட்டு க்ராக்கியாடா? சிருச்சு தொலையாத மாட்டுப் பல்லு தெரிது. இங்க வா எனக்கு ஒரு ஒத்தாச பண்ணு“

ஹால்ல நொழஞ்சதும் கட்டில்ல படுத்துருந்த மணிமுத்தை ரெண்டு பேரும் பாத்தாங்க. மணியக்கா அமுதனோட வந்த வடிவேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்தா. அமுதன் கட்டில மூலையில இருந்து கொஞ்சம் வெளிச்சம் மேல படுறமாட்டம் நகத்துனான்.

வடிவேலு கையில வச்சுருந்த மொபைல் போனுல கேமராவ ஆன் செஞ்சு மணிமுத்துக்கு பக்கத்துல போனவன், “அண்னே அப்பா கண்ண மூடி இருக்காரு “

கட்டில்ல உக்காந்திருந்த அமுதன், அப்பன் காதுக்கு பக்கத்துல போய். “எப்போய். அமுதே வந்துருக்கே, கண்ண தொறங்க“

ஒன்னும் கேக்காத மாட்டம் பெருசு இருக்க, பக்கத்துல நின்ன மணியக்கா, “நேத்துலருந்து ஒண்ணுமே உள்ள போகல.“

கொசுவம் போட்டு கட்டிருந்த சேலையோட மூக்க எடுத்து ஒப்பாரி பாடப் போன வாயப் பொத்திக்கிட்டா.

இன்னு கொஞ்சம் சத்தமா அதட்ற தொனில, “எப்போய் அமுதே வந்துருக்கே கண்ணத் தொற..”

இந்தா பொலச்சுப் போனு பெருசு மொகத்த கொஞ்ச அசச்சுக் காட்ட, பக்கத்துல இருந்த வடிவேல, “டேய். மாட்டுப் பல்லு மவனே, கரெக்டா எடு. என்ன பாரினா போற, பக்கத்துல வந்து எட்றா”

அமுதே அதுக்குள்ள அவங்க அப்பன் முகத்த தண்ணில தொடச்சுட்டு, கொஞ்சம் பவுடரையும் போட்டுவிட்டான் .

“எப்போய் இங்க பாரு.. இங்க பாரு…” அதுக்குள்ள வடிவேலு நாலு தடவ பட்டன அழுத்தி சத்தம் வெளிய கேக்குற அளவுக்கு போட்டோ எடுத்துட்டு இருந்தான்.

மணிமுத்துனால பாதி முடிது, ஆனா முழுசா கண்ணத் தொறக்க முடில. முடுஞ்ச அளவு பாத்தாங்க அப்பறோம் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு விட்டுட்டாங்க.

எடுத்த போட்டோவ பாத்த அமுதனுக்கு அதுல ஒன்னு கூட நல்லதா புடிபடல. ஏன்னா அப்பனோட பாதி கண்ணு மூடிதான் இருந்துச்சு.

“எதுவுமே நல்லா இல்லண்ணே “

மொகத்த உம்முன்னு வச்சுக்கிட்டு, “ஆமாடா,“ தலைய மட்டும் ஆட்டி, எடுத்த போட்டோவையே பாத்துட்டு இருந்தான் அமுதன்.

மண்டைய ஒடச்சுக்கிட்டு ஏதோ புது ஓசன வந்தகணக்கா வடிவேலு, “அண்ணே.. பேசாட்டுக்கு நம்ம கம்ப்யூட்டர்ல கொடுத்து கண்ண மட்டும் தொறக்குற மாட்டம் பண்ணிரலாமா?“

“இங்க யாருடா அப்டிலா பண்ணுவாங்க? உனக்கு யாராச்சு தெரியுமா?“

“தெரியு.. அப்பனா போட்டோவா மாத்திட்டு வரேன் மொதல நானு,“ சொல்லிகிட்டே அங்கேந்து கெளம்பிட்டான்.

ரெண்டு நாளா நீர் ஆகாரம் மட்டு உள்ள போய் மணிமுத்து உடல காப்பாத்தி வச்சுட்டு இருந்துருச்சு. வடிவேலு சொன்ன ஓசன சரியா வரல. அந்த போட்டோல கண்ண தொறந்ததும் வேத்து ஆளு யாரோ போல ஆகிட்டதால வேணாம்னு சொல்லிட்டான்.

ஹால்ல அப்பாவ பாத்தபடி அமுதனும் வடிவேலும் உக்காந்து இருந்தாங்க..

“இப்போ என்னாணே பண்றது.. ”

….

“போட்டோவும் சரியா வரலையேணே,“ அமுதன திரும்பி பாத்தான்.

“போஸ்டர் அடுச்சு நல்லா தூக்கி போடலாம்னு இருந்தேன். நடக்காது போலயே.”

அமுதன் மண்டைக்குள்ள இப்போ எழவுக்கு எவ்ளோ செலவாகுங்கிறது மனக்கணக்காக ஓடிட்டு இருந்துச்சு..

“அண்ணா பேசாட்டுக்கு வரஞ்சரலாமா? “

“அதுவு இப்போ கண்ண தொறந்த மாட்டம் தான இருக்கும்”.

மணியக்கா படுத்தே கெடந்த அவ அண்ணனுக்கு தண்ணி தொட்டு எடுத்தா. ஒடம்ப திருப்பாம ஒரே பக்கம் இத்தன நாளு படுத்தே கிடந்ததால பின்னாடி முதுகெல்லா தோல் பிஞ்சு சொத சொதனு கெணத்து பாசாம் பிடிச்சது போல இருந்துச்சு கூட பூஞ்சை வாசம். ஒத்தாசைக்கு உக்காந்துருக்க, மணியக்காக்கு எப்புடி இது அண்ணி விழுந்த கெணத்த ஞாபகம் படுத்தாம போயிரும்?.

பெருச கயித்து கட்டில்லருந்து இரும்பு கட்டிலுக்கு மாத்தியாச்சு. மாத்துன கட்டிலு பெருசுக்கு புடிக்கலங்குற மாதிரி அன்னைக்கு நைட்டே செத்து போச்சு.

ஒரு கட்டத்துல சுத்துரத நிப்பாட்டிட்டு ஈரம் வத்தி போயிருந்த கெணத்த அமுதன் எட்டிப் பாத்தான்.

அப்பனுக்கு தான் நெனச்சத எதுவும் பண்ணமுடியாம போன வருத்தம் முகத்துல தெருஞ்சாலும், அத காட்டிக்காம அப்பன் பக்கத்துல போனவனுக்கு என்ன தோணுச்சோனு தெரில, இதுவரைக்கும் அவர்கிட்ட சொல்லாத ஒன்ன சொல்லப் போரவனாட்டம் மரச் சேருல உக்கார வச்சு செவுத்தோட சாத்தி வச்சுருந்த மணிமுத்து காதுகிட்ட போய், யாரு பாத்தா என்னங்குற தொனியில அவன், “அந்த கெணறு இன்னும் ஆழம் போலப்பா”

அமுதன் வெளிய வந்து அடுத்த சடங்குக்கான வேலைய பாக்கப் போக, பெருசோட போட்டோ இல்லாம வெறும் எழுத்த மட்டும் வச்சு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிருந்துச்சு. அதுலயும் அம்புட்டு பெழ!

 

 

 

போட்டோ சார் – லட்சுமிஹர் சிறுகதை

“குளிருதா,”

‘கொஞ்சம், “

“கொஞ்சம்னா,”

“இன்னொரு ஸ்வெட்டர் கூடப் போட்டுட்டு வந்துருக்கலாம்னு சொன்னே, அழகாயிட்டயோ ? “

“யாரு.. நானா? “

“அப்புறோம்… உம்னு இருக்கிறயா ? “

“இல்ல “

“அந்தப் பாலுப் பையன் என்ன சொன்னான் தெரியுமா,? “

“கம்முனு இருக்கமாட்டியா? “

“ரொம்ப நாளா அப்படித்தான இருக்கேன் “

……

“பேசு… “

“கூடவே தான இருக்க? “

“அதான்.. உன் நன்மைக்குத்தான் சொல்றேன்… “

“என்ன.. சொல்லு? “

“பாலுப் பையன் உன்ன இந்தக் கம்பெனி பார்க்ல இருந்து தூக்க பிளான் போடுறான் “

“நீயும்.. ஊரு வம்பு பேச ஆரம்பிச்சுட்டயா..? “

“தாடி வெட்டல “

“போய்தான் ஷேவ் பண்ணனும்.. “

“இன்னைக்குக் கூட்டமோ? “

“ஆமா.. சனிக்கிழமையில்ல !”

இப்படித்தான் சில காலங்களாகக் கையில் வைத்திருக்கும் கேமரா உடன் பேசத் தொடங்கிவிட்டார் யாசிர் பாய்.

கொடைக்கானல் பார்க்கில் தனியாக, கேமராவுடன் அமர்ந்திருக்கிறார் . மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க அவரின் மகிழ்ச்சியை அவைகள் விழுங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை.

மக்கள் நெருக்கமாக அங்கும், இங்கும் உட்கார்ந்து கொண்டும், நகர்ந்து கொண்டும் இருந்தனர்.

பாலு கூட்டத்திலிருந்து யாசிர் பாயை நோக்கி வந்து கொண்டிருந்தான்…

கழுத்தில் மாட்டிக்கொண்டார் கையில் வைத்திருந்த கேமராவை…

“ஐடி எங்க யாசிர் பாய்? கேமரா…

யாசிர் தன்னுடைய ஐடி யை எடுத்துவர மறந்தது அப்போது தான் நினைவுக்கு வர…

” யாசிர் பாய் இன்னைக்கு உங்கள மேனேஜர் பாக்கனுன்னு சொல்றாரு, சாயங்காலம் கொஞ்ச வெயிட் பண்ணுங்க ஆபீஸ்ல” எனச் சொல்லும்போதே இருமிக்கொண்டான். யாசிர் பாய் இருமலின் எச்சில் கேமராவின் லென்ஸ்ல் படப் போகிறது என்று நினைத்து கையால் முன்பகுதியை மூடியபடி தலையை ஆட்டினார்.

யாசிர், பாலு ஐடியை பற்றிக் கேட்கவில்லை என்று சந்தோசப்பட்டாலும் , மேனேஜர் என்ன சொல்லப் போகிறார் என்ற பயம் கேலிசெய்யத் தயாரானது ..

அன்றிரவு மேனேஜரிடம் பேசிவிட்டு வீட்டிற்குச் செல்ல 9மணி ஆகிற்று.. லென்ஸ் கிளோஸரைத் தேட ஆரம்பித்தார். அதை எங்கு வைத்தோம் என்ற நினைவும் இல்லை. வீட்டின் அனைத்து லைட்களையும் ஆன்செய்து தேடத் தொடங்கியவருக்குப் பரீதின் கல்யாணத்தின் போது எடுத்த போட்டோ பிலிம் ரோல்கள் இருந்த விரிசல் அடைந்த பெட்டி கண்ணில் படவே அதை எடுத்தார்.

யாசிர் பாய் தங்கி இருக்கும் வீடு, இரண்டு சின்ன அறைகளைக் கொண்ட வீடு.வாடகை ஒழுங்காகச் செல்வதால் பிரச்சனை இல்லை. தேடுவதற்கு எதுவும் இல்லாத அறைகள்தான் அவை.

தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டார் யாசிர். கேமரா பேக்கை காலியாக இருந்த துணிவைக்கும் கூடைக்குள் வைத்துவிட்டார். படுத்துக் கொண்டு அந்தப் பிலிம் ரோல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் யாசிர். அவருக்கு ஏன் இதைப் பிலிம் ரோல்களாகவே விட்டுவிட்டோம் என்று நினைவில்லை . போட்டோ ரோல்கள் அடிபட்டு கோடும், கீறலுமாகப் பல்லிளித்தது .

அடுத்தநாள் காலையில் ஷேவிங் கண்ணாடி டப்பாவில் இருந்த அவருடைய பார்க் ஐடி யை மட்டும் எடுத்துக் கொண்டு பார்க்கிற்குக் கிளம்பினார் .

மேனேஜர் சொன்னது இன்னும் மனதிற்குள் போட்டு உளட்டிக்கொண்டிருந்தார் யாசிர் பாய்… அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவருக்குள் பல நாட்களுக்குப் பிறகு எழுந்தது, இதுவரைஅவரின் வயது அவருக்குக் குறையாகத் தெரிந்தது இல்லை. இன்று அதை எண்ணி வருத்தப்படத் தொடங்கியிருந்தார் .நேற்று காலையில் பாலு சொல்லிவிட்டுப் போன பின்பு மாலை ஆறு மணிக்கு மேனேஜர் அறையில் கொஞ்சம் பதட்டத்துடன் தான் அமர்ந்திருந்தார் என்ன விசயமாக இருக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது ..

 அரை மணி நேரம் கழித்தே வந்தார் நந்தன்.

“பாய் நல்லாருக்கீங்களா? ” என்ற நந்தனிடம் தலையாட்டிச் சிரித்துக்கொண்டார் யாசிர் பாய்.

“பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல பாய்..? “

கேமரா வைத்திருந்த கை வேர்க்கத் தொடங்கியது, அதைப் பேண்டில் துடைத்துக் கொண்டு, இன்னொரு கையில் கேமராவை மாற்றிக் கொண்டார்.

இப்போதான் நமக்கு ரெண்டு, மூணு பார்க் இன்ச்சார்ஜ் வந்திருச்சு அதான் பாய் லேட் ஆகிருச்சு .

கையை நீட்டி பாலுவிடம் எதையோ கேக்க, பாலு உள்ளே ஓடிப் போய் ரெகார்ட் நோட்டை எடுத்து வந்தான்.. அதை வாங்கிப் பார்க்கத் தொடங்கிய நந்தன்.

“பாய், நம்ம பார்க்குல போட்டோ ஆளுங்க நிறைய இருக்காங்கள, அவங்கள மேல இருந்து குறைக்கச் சொல்லுறாங்க… ” என யாசிர் பாயைப் பார்த்தான் நந்தன்.. இடதுகையில் வேர்வையோடு இருந்தது கேமரா… மேலும் பேசிய நந்தன்.

“அதான்யா… இங்கிருந்து உங்கள அடுத்த இனிதல் பார்க்குக்கு மாத்தலாம்னு இருக்கோம் “என்றான்.. பாய் பதில் ஏதும் சொல்லவில்லை, எதிர்பார்த்ததுதான்.

என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியுடன் பார்க் வந்து சேர்ந்தார் பாய். ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடித் காணப்பட்ட பார்க்கை ஸ்வெட்டருடன் இறுக்கி அணைத்துக் கொண்டார் குளிருக்கு.

அங்கங்கே பனிமூட்டம் விலகாமல் நேற்று பெய்த மழையில் கொஞ்சம் பசுமை கூடி இருப்பதுபோலப் பட்டது.

என்ன யாசிர் பாயால்தான் அதை அனுபவிக்க முடியவில்லை. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் தொழுகையை முடித்து விட்டு யாசிர் பாய் வீட்டுக்கு வர மணி ஏழு.

மேனேஜர் பேசி ஒரு வாரம் ஆகிற்று , அவரின் எளிமையான சாராம்சம் வேலைக்கு வர வேண்டாம் என்பதே. கேமராவைத் தோளில்போட்டுகொண்டு, பார்க்பிளாட்பார்மில் இதற்கு முன் எடுத்த பழைய போட்டோக்களை நீட்டி.. “போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .” எனக் குரங்கு உணவை கண்டு பின் செல்வது போல மனிதர்கள் பின் தொற்றிக்கொள்ளத் தயாரானார் .. ” போட்டோ சார்.. போட்டோ சார்… “

பாலுவின் ” போட்டோ போட்டோ போட்டோ” என்கிற சத்தம் இங்கு வரைக்கும் கேட்டது.. இன்றைக்கு யாசிர் பாய்க்கு ஆறுபோட்டோக்கள்தான் கிடைத்தன..சனிக்கிழமையே இப்படி என்றால் வாரநாட்களில் ஒன்றோ, இரண்டோ தான்.

பலரும் யாசிர் பாயைக் கடந்து சென்று கொண்டுதான் இருந்தனர்.. போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .. என நடுங்கும் குரலில் யாசிர் பாயிடமிருந்து வெளிப்பட்டது.

போட்டோவாக மாற்றப்படாத போட்டோ பிலிம் ரோல்களை எடுத்து வீட்டில் அவருக்கென்றிருந்த ஒரே சேரில் அதைப் போட்டுவிட்டு , தான் வைத்திருந்த பழைய கேமராவைத் தேடத் தொடங்கினார்.சில நேரங்களில் நமக்கென்று எதுவும் இல்லாமல் ஆகிவிடக் கூடாது என யோசிப்பது வாழ்க்கை மீதான நம் பயத்தையே மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. நமக்கென இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் பழைய நினைவுகளுக்குள் செல்கிறோம். அதிலிருந்து நம் கையில் அகப்படுவது நம்மை முன் நகர்த்தவும் செய்கிறது. சில நேரங்களில் நம்மை ஒரே நிலையில் தேங்கிவிடவும் செய்கிறது.

இரண்டு அறைகளில்…அப்பா கல்யாணம் பண்ணிக்க வேண்டி எழுதின கடிதங்கள், பழைய சட்டைகள், இரண்டு, மூன்று போட்டோ பிரேம்கள், ரேடியோ காஸெட் சீடிக்கள் இருந்தன. அங்கிருந்து எடுத்த பொருட்கள் தூசிபடிந்து போய்க் கிடந்தன . தனக்கென இருந்த போட்டோ ஸ்டுடியோவை விட்டுவிட்டு வந்த யாசிருக்கு இவைகள் அதைப் பற்றிய கேள்விகள் கேட்பது போலவே இருந்தது. யாசிர் பாய் அவைகளிடம் தன் பக்கம் இருக்கும் காரணங்களைப் பேசத் தொடங்கினார் .யாசிர் பாய் பக்கம் இருந்த எந்தக் காரணங்களையும் அவைகள் ஏற்கவில்லை.பழைய பிலிம் ரோல் கேமராவைத் தேடிக் கண்டுபிடிக்க இரவு பதினொரு மணி ஆகிற்று..அதை எடுத்துக் கொண்டு.. கூடையில் இருந்த கேமரா பேக்கை எடுத்தார் யாசிர்..

“டேய்.. இத பாத்தியா உங்க தாத்தா… இப்பலாம் ஏதோ பொசுக்குன்னு கிளிக் பண்ணா படம் விழுந்துற நீயெல்லாம்.. அப்போ போட்டோக்கு ரோல் வாங்கி லேப்ல கிளீன் பண்ணி நெகடிவ்ல தான் பாப்போம்.. அப்ப அதெல்லாம் ஏதோ பெருசா செய்றமாதிரியிருக்கும்.. காத்துக் கிடந்து முந்தினநாளு எடுத்த போட்டோவ வாங்கிட்டுப் போவாங்க…

அப்போ நான் எவ்வளவு பெரிய கடை வச்சிருந்தேன்.. காலம் இப்படி வந்து தள்ளிருச்சு. இன்னும் எங்க எங்க ஓடப் போறேனோ ” எனத் தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.

இறுதியில் புதுக் கேமரா பதில் ஏதும் சொல்லவில்லை என்பதைப் பார்த்தார்.

” என்னாச்சு உனக்கு..? ஏன் அமைதியா இருக்க நீ..? பே கவர்ல குப்பையா இருக்கா? எனப் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். பழைய கேமரா தரையில் கொஞ்சதூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தது. யாசிர் பாய் கஷ்டத்தில் பங்கு கொண்டாலும் அவருக்கு உதவ முடிய வில்லையே எனப் பழைய கேமரா நினைத்துக் கொண்டது. அந்த டிஎஸ்எல்ஆர் கேமரா பேசவே இல்லை..

யாசிர் பாய் மேனேஜரிடம் பேசிவிட்டு வந்த பிறகிலிருந்து தான் பார்க்கில் கொடுத்த கேமரா பேசவில்லை என்பதை யூகித்துகொண்டவர் ..இந்த புது மாடல் டி எஸ் எல் ஆர் கேமரா யாசிர் பாயோடையது கிடையாது.. பார்க்கில் இருந்து கொடுத்ததுதான். யாசிர் பாய் பார்க்கை விட்டுப் போக நேர்ந்தால், அதை மேனேஜரிடம் கொடுத்துவிட்டுத் தான் செல்ல வேண்டும். அவர் பேசினதக் கேட்டிருப்ப. அதான் இப்படி உம்முனு இருக்க… தெரியும்.. அதான… உன்னத்தான்.. எனக் கேமராவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.அவருக்குக் கேமரா மீதான தனி அக்கறை இன்னும் சிறுவயது பையனைப் போல அதன் மேல் வண்ணம் அடிக்கச் செய்கிறது என்பதை அறிந்தவர்தான் .அதுவே அவரை இதுவரை உயிர்ப்போடு வாழ எத்தனித்திருக்கிறது.

கையில் தனக்குத் துணையாக முதலில் இருந்த கேமராவை மட்டும் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் மலை ஏறிவிட்டார். அந்தக் காலக் கட்டம் யாசிருக்கு பெரும் துயரே . காதல் மனைவியின் பிரிவு, பரீதின் இறப்பு என்று பிடித்த பேய் அவரின் சொந்த ஸ்டூடியோ கை விட்டு போகும் வரை விடவில்லை .அவர் அதிலிருந்து விடுபட்டு வரவே பல காலம் தேவைப்பட்டது.

பார்க்கில் புது டி எஸ் எல் ஆர் யை மேனேஜர் யாசிரிடம் கொடுத்த போது, அதைப் பயன்படுத்த தெரியவில்லை.. பழைய கேமராவிலேயே எடுத்தவருக்குப் பாலுதான் புதுக் காமெரா இயக்கங்கள் பற்றிச் சொல்லித் தந்தான். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், பழகிக் கொண்டார் யாசிர்.. ஆனால் அந்தப் பெயர்களை மனப்பாடம் செய்து கொள்வதில்தான் சிரமம். ‘ ஐ எஸ் ஒ, ஷட்டர் ஸ்பீட், கான்ட்ராஸ்ட் லெவல் ‘….. .கடைசியில் பெயர்கள் தான் மாறியுள்ளது, எப்போதும் போலத்தான் போட்டோ எடுக்கும் விதங்கள் உள்ளன என அடிக்கடி யோசித்துக் கொள்வார்.ஆனால் பாலு அளவுக்குத் தெளிவாக அந்தப் பெயர்களை உச்சரிப்பதில் கொஞ்சம் கஷ்டப்பட்டார் யாசிர்.. தன்னோடு பதினைந்து வருடங்களாக இருந்த கேமராவை மட்டுமே கடனில் இருந்து மீட்டு யாசிரால் கொடைக்கானலுக்குக் கொண்டு வர முடிந்தது. அதையும் மடித்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்தார் யாசிர்.. எப்போதும் தொலைத்த பொருள் எளிமையாகக் கிடைத்து விடுகிறது.நாம் பத்திரமாக வைத்ததை எடுக்கத்தான் சிரமம்ஆகிவிடுகிறது. அப்படிதான் நேற்று யாசிர் அந்தப் பழைய கேமராவைத் தேடி எடுத்தார்.அதன் மேல் இருந்த குப்பை, நூலாம்படையைத் தட்டி விட்டு, துணியால் துடைத்து விட்டு அந்தச் சிறிய பெட்டிக்குள் இன்று காலையில் வைத்து விட்டு வந்தார்.

பார்க்கிற்குச் செல்லும் வழி நெடுகிலும் கேமரா உடன் பேசிப் பார்த்தும் பதில்சொல்லவில்லை.

‘போட்டோ சார் போட்டோ சார். . ‘இன்றைக்கு இரண்டு போட்டோ என்று ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டார் யாசிர்.அதில் யாசிர் பெயருக்கு மேல் எழுதியிருந்த பாலுவின் பெயருக்கு அருகில் இன்றைக்கு மட்டும் 10 போட்டோ என எழுதி இருந்ததைப் பார்த்தார். எப்போதும் பார்க்காத அவர்.. ஏன் பார்த்தார் என்பது அவருக்குத் தெரியவில்லை.. வாழ்க்கையின் அடுத்த நகர்வைப் பற்றிய கவலையிலேயே அன்றிரவு கண்கள் விழித்திருந்தார்…

போட்டோ சார் போட்டோ சார் ..

” எவ்வளவு “

” இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது ரூபா சார் .. “

” நாலு போட்டோ எடுங்க “என வயதான தம்பதி ஒருவர் யாசிர் பாய் உடன் பேசிக் கொண்டிருப்பதைப் பாலு பார்த்துக் கொண்டிருந்தான்.யாசிர் பாய் அவர்களைப் பார்க்கின் நல்ல ஸ்பாட் களில் எல்லாம் நிற்க வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.. அடிக்கடி அந்த அம்மா மட்டும் கால் வலிக்குது கொஞ்சம் பக்கத்திலேயே இருந்தா நல்லாருக்கும் எனக் கணவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் … ஒரு அரை மணி நேரத்தில் போட்டோ எடுத்து முடித்து அதை அவர்களிடம் கொடுத்தார் யாசிர்.அந்த அம்மாவுக்குப் போட்டோக்கள் ரொம்பப் புடித்துவிட்டன… ரொம்ப நேரமாக இருவரும் போட்டோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்… போகின்ற போது யாசிருடைய மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டனர்.. அவருக்கு மொபைலில் நம்பரை சேவ் பண்ணுவதில் பிரச்னை இருந்ததால்.. பாலு தான் வந்து உதவி செய்தான்.. அவர்களுக்குப் பேத்தி பிறந்துள்ளதாம்.. அவர்கள் வீட்டுக்கு வந்து போட்டோ எடுக்கணும் என்றார் அந்த அம்மா… அருகில் நின்றிருந்த கணவர், நாங்க எதுக்கும் பையன் கிட்ட கேக்கணும்.. அப்புறம் தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டுத்தான் நம்பரை பதிந்து கொண்டனர் .

அன்றைக்கு இரவு பாயில் ஓடிய கரப்பான்பூச்சியை அடிக்க நோட்டைத் தேடுவதற்குள் ஓடிவிட்டது.படுத்துக்கொண்டார்.. கால் எதுவும் அவர்களிடம் இருந்து வருமோ என நினைத்தவர் மொபைலைப் பக்கத்தில் வைத்து போன் ரிங்கிற்காகக் காத்திருந்தார். அப்படி வந்தாலும் இப்போது இருக்கிற பிரச்னையால் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் வர , கேமரா இல்லாமல் என்ன எடுப்பது? பாலு தனியாகக் கேமரா வாங்குவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனிடம் கேட்கலாமா என்று யோசித்தவர் வேணாம் என்று முடிவெடுத்தார். தன் மொபைல் போனில் இருக்கும் காண்டாக்ட் களைப் பார்த்துக் கொண்டே வந்தவர் .அதில் இருந்தது வெறும் எட்டு

நம்பர்களே..

பாலு

பரீத்

தமிழரசன்

தமீம்

கஸ்டமர் கேர்

வோடபோன் ஸ்பெஷல் அபெர்ஸ்

யமர்ஜன்சி காண்டாக்ட்

பாலு தான் அவைகளைப் பதிவு செய்து தந்திருந்தான் ..

பரீத்.. யாசிர் பாயுடன் அசிஸ்டன்ட் ஆக ஸ்டுடியோவில் வேலை பார்த்தவன்.. ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டான்… அவன் இறந்த பின் பரீத் மொபைலில் இருந்து கால் வர பதறிப் போய் விட்டார் யாசிர் பாய்… அது பரீத்தின் மனைவி

“வாப்பா.. நான் பேகம் பேசுறேன்…”

“சொல்லுமா… “

“இல்ல.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. “

“என்னமா… நான் கொடைக்கானல இருக்கேன்”

” இல்லப்பா… போன்லதான்… “

” என்னமா.. “

” நம்ம போட்டோ ஸ்டூடியோல இருந்து பரீத் கடைசியா வேல முடுஞ்சு கொண்டு வந்த கொட லைட்டு.. கலர் பேப்பர்ல இருக்கு.. அதல விக்கலாமானுதான் வாப்பா?.. இங்க பாப்பாவை வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியலப்பா… “

யாசிர் பாய் இப்போதும் நினைத்துப் பார்ப்பார் – “பாய் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் னு ” பரீத் சொல்றத..ஏண்டா அப்படிச் சொல்றனு? கேட்டா பதில் சொல்லமாட்டான். டேய் நான் அவ்ளோ கொடுமக்காரனாடா என்பார் யாசிர். ‘ இல்லபாய்… எங்க அப்பா பாய் நீ ‘ என்றான் சின்னச் சிரிப்புடன்.

பேலன்ஸ் இல்லாமல் கால் கட்டாகிவிட்டது என்று அடுத்த நாள் பேசினாள் பேகம்.எடுத்துக்கம்மா எனச் சொல்லி விட்டார்.. கையில் கொஞ்சம் காசு சேரும் போது பழைய போட்டோ ஸ்டூடியோ அட்ரஸ்க்கு காசு அனுப்பியும் வந்தார்… பேகத்திற்குக் கிடைக்கிறதா என அதை உறுதிப் படுத்தியும் கொள்வார். இனிமேல் அனுப்புவதில் தான் சிக்கல்கள் இருக்கும்.

பதினைந்து நாளாக ஷேவ் பண்ணாத தாடி யாசிருக்குப் புதுத் தோற்றத்தை கொடுத்துவிட்டது எனத் தொழுகை முடித்து வரும்போது சிலர் கூறினர். கையிலிருந்த போனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டார். அவர்கள் கால் பண்ணுவார்கள் என எண்ணி.. பாட்டு வர மாதிரி மொபைல் ரிங்க்டோனை செட் பண்ணி கொண்டார்.. அது பழைய போன் என்பதால் சத்தமாக அடிக்க.. பார்க்கிலிருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர்.. ஆன் செய்து காதில் வைத்தார்.. அது கஸ்டமர் கேரிலிருந்து வந்த கால். உடனே கட் பண்ணி விட்டார்…

“இன்னும் ஏன்டா அமைதியா இருக்க…? நீ பேச என்ன செய்யணும்னாதுசொல்லுடா!” எனக் கேமராவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்….

மேகமூட்டம் சட்டென நகர்ந்து வெயில் வந்தவுடன் யாசிர் பாய்க்குத் தலைச் சுற்றல் ஏற்பட்டது.

கொஞ்சதூரம் பார்க்கில் நடந்து சென்று தண்ணீர் வரக் கூடிய பைப்பை திறந்து… கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் பிடித்துக் குடித்துக்கொண்டார்.. அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொள்வதற்காக நடந்த யாசிர் பாய் பக்கத்தில் இளம் ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர், அவர்களை நோக்கிச் சத்தம் போட, இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.. அதில் அந்தப் பெண் யாசிர் பாயை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

சேரில் அமர்ந்து மதியச் சாப்பாடைச் சாப்பிடத் தொடங்கினார் யாசிர் பாய்.

மேனேஜரிடம் வேண்டும், வேண்டாம் என்ற பதில் எதுவும் சொல்லாமல் வந்தது தவறு . மாற்ற வேண்டாம் என்று நேரடியாகக் கூடக் கேட்டிருக்கலாமோ என்று யோசித்தவருக்கு இல்லை அவர்களின் முடிவு முன்பே எடுக்கப் பட்டதுதானே என்று வீடு வந்து சேரும் வரை மண்டைக்குள் நிறைய விஷயங்கள் ஓட பதிலாய் ‘ என்ன கவலை பாய்.. எது இருக்கு நம்மகிட்ட கவலைபட…. இப்போ எதுக்கு இவ்ளோ வருத்தம்… ‘ என்று மனதை கேட்க…இதயத் துடிப்பு ஓசை டப்.. டப்… ப்…

இரவு போன் அடிக்க, பழைய ரூமில் எதையோ தேடிக் கொண்டிருந்த யாசிர் பதறி அடித்துக் கொண்டு அதை ஆன் செய்தார்..

” ஹலோ யாசிரா..? ! “

“ஆமா…நீங்க…!? “என இழுத்தார் யாசிர் பாய்…

“அன்னைக்குப் பார்க்ல போட்டோ எடுத்தோமே நானும், மனைவியும்…”

” ஆமா சார். . நல்லாருக்கீங்களா… “

“நல்லாருக்கேன்.. யாசிர்.. ப்ரீயா “

” ப்ரீதான் சார்.. சொல்லுங்க “

“பேத்திய போட்டோ எடுக்கச் சொல்லிருந்தோமே ஞாபகம் இருக்கா…? ” எனச் சிரித்துக்கொண்டார் , தயக்கத்துடன் யாசிர் பாய் ‘ஆமாம் சார்’ …

” இந்த மாசம் எண்ட்ல அவங்க வெளி ஊர்ல இருந்து வராங்க.. நீங்க கொஞ்ச பிரீயா வச்சுக்கிட்டா நல்லாருக்கும்”

” கண்டிப்பா சார் .. வந்தவுடனே போன் பண்ணுங்க”

” ஷ்யூர் .. ” எனச் சொல்லி கட் பண்ணினார்…

யாசிருக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.. போட்டோ ஸ்டூடியோ வச்சுருந்தப்போ எடுத்த ஆர்டர் .. இப்பதான் பார்க்கினுடைய கேமராவில் வெளியே யாருக்கும் எடுக்கக் கூடாது, சிலருக்கு மட்டும் தான் வெளியே எடுத்துச் செல்லவே அனுமதி என்பது யாஸிர்க்குச் சட்டெனெ ஞாபகம் வர … தூரத்தில் அமைதியாக மூட்டையில் இருந்த கேமரா , பாவனையற்ற முகத்தோடு .

பார்க்கைச் சுற்றியும் புதிதாக விளம்பர பேனர்கள் வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே அன்று பார்க்கிற்குள் நுழைந்தார் யாசிர் பாய். . பார்க்கினுள் நுழைய நுழைய பத்து வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்தப் பார்க் அந்நியப்பட்டுப் போனது . அது பார்க்கில் நடந்திருக்கும் வெளி மாற்றத்தால் இல்லை என்பது அவருக்குத் தெரியும். பாலு யாசிரிடம் வந்து” ஆபீஸ்ல உங்கள கூப்டறாங்க” என்றான்..

” இதலாம் உங்களுக்குத் தேவையா.. போட்டோ எடுக்குறதுனா.. அந்த வேலைய மட்டும் பாக்கவேண்டியதுதான? வயசானாலும் சின்னப் புத்தியா இருக்கீங்க” எனத் திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் பாலு..

“யாசிர், பார்க்குக்கு வரவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? ” என்றான் நந்தன்..

பாய்க்கு புரியவில்லை.

. “பாய்.. இந்தப் பொண்ணு உங்க மேல வந்து கம்பளைண்ட் பண்ணிருக்கு “எனப் போட்டோவைக் காட்டினார்…

யாசிர் யாராக இருக்கும் என்பதை அந்தப் படத்தைப் பார்க்கும் முன்பே யூகித்துவிட்டார்.

“அவங்களப் போட்டோ எடுங்கனு சொல்லி நீங்க கம்பெல் பண்ணிங்கனு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு இந்தப் பொண்ணு….”. சிறிது அமைதிக்குப் பிறகு நந்தன் “பாய் அங்க என்ன நடந்துருக்கும்னு எனக்குப் புரியுது…இப்ப காலம் மாறிபோச்சு.. சில விஷயங்கள ஏத்துக்கிட்டு..பாத்தும் பாக்காத மாதிரி போய்றனும் ” நந்தன்…

யாசிர் பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.. என்றைக்கும் இல்லாமல் கால் வலிக்க ஆரம்பித்தது.. இந்தப் பார்க் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே பிரஷர் மாத்திரை எடுக்க மறந்திருந்தார், இன்றும் அசதியில் தூங்கிப் போனார்..

காலையில் நேரம் ஆகிவிட்டது.. ஐ டி கார்டை மறந்திடாமல் எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு நடக்க ஆரம்பித்தார்.. காலையில் வாக்கிங் போறவர்கள் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.. பார்க்கிற்குச் சென்ற உடன்தான் தெரிந்தது. இன்றைக்குப் பார்க்கின் போட்டோகிராபர்ஸ் அனைவருக்கும் மேனேஜர் மீட்டிங் பத்து மணிக்கென்று. பக்கத்தில் இருந்த வெள்ளரிக்காயை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார்.மேனேஜர் சரியாகப் பத்து மணிக்கு ஆஜராகிவிட்டார்… பார்க்கின் விதிமுறைகளை மறுபடிமறுபடிச் சொல்லிக் கொண்டிருந்தார். தான் மேலும் இரண்டு பார்க்கிற்கு மேனேஜர் ஆகிவிட்டதையும் சொல்லாமல் இல்லை… பாலுவைக் கூப்பிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்து வரச் சொல்ல… ரெகார்ட் நோட்டிலிருந்து ஒரு கவரை எடுத்த நந்தன்.. அதைப் பிரித்து ஒரு லெட்டரை எடுத்தான்.. அதில் இங்கிருந்து வேற பார்க்கிற்கு மாற்றப் பட்ட பெயர்களைவாசித்தான் நந்தன்.. அதில் யாசிர் பாய் பெயருடன் இரண்டு பெயர்கள் இருந்தன… இது பிரைவேட் பார்க் என்பதால் போட்டோக்ராபர்ஸ் எனத் தனி அஸோஸியேஷன் கிடையாது. அதனால் எந்த முடிவும் எடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு உண்டு. வேலை செய்பவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இங்கிருந்து புதிய பார்க்கிற்குத் தினமும் செல்ல எவ்வளவு செலவாகும், பார்க் கொடுக்கும் சம்பளம்,அறுபது வயது எனப் பலவற்றயும் யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்.. இன்றைக்கு மேனேஜர் மீட்டிங் இருந்ததால் தொழுகைக்குச் செல்ல முடிய வில்லை.. சேரில் கிடந்த பிலிம் ரோல்களை எடுத்து பழைய கேமரா பெட்டிக்குள் திணித்துவிட்டார் யாசிர்.வெளியே மழை பெய்யத் தொடங்கி இருந்தது.. மழை என்பது கொடைக்கானலுக்கு வந்த பின்பு யாசிருக்குப் பழக்கம் ஆகிவிட்டது… இங்கு வந்து நிறைய மாறிவிட்டார்.. பச்சத்தண்ணியில் குளிக்கப் பழகிக் கொண்டார்.

ஒரு மாசம் ஷேவ் பண்ணாத தாடியைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார்.

அருகிலிருந்த ஐ டி கார்டை எடுத்துக் கொண்டு பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ஸார் ..’போட்டோ ஸார் ‘.. ‘போட்டோ ஸார் … ‘ ஜோடியாக வந்தவர்கள் யாசிர் பாயிடம்

“எவ்வளவு” என்றனர்

“இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது “

“நாப்பதா… இவ்வளவு அதிகமா சொல்றீங்க.. “

” இது நம்ம பிக்ஸ் பண்றது இல்லப்பா.. “

” முப்பது நா கூடப் பரவலா… “

“இல்லப்பா.. நாப்பது தான் ” என யாசிர் பாய் சொல்ல.. சரியான பொல்லாதவனா இருப்பான் போல என வாய்க்குள் முனங்கிக்கொண்டே நகர்ந்தனர் இருவரும்..

பெரும்பாலும் இந்தச் சனிக்கிழமைதான் இங்குக் கடைசி நாள் என யாசிர் பாய்க்கு தோன்றியது .. பாலு ‘ போட்டோ சார் போட்டோ சார் …’ எனக் கத்துவது இங்கு வரைக்கும் கேட்டது..

“தாத்தா.. அப்பா எடுக்குற போட்டோவ விட நீங்க எடுக்குறது தான்நல்லாருக்குனு ” பாலுவின் பையன் சொன்னது ஞாபகம் வந்தது யாசிர் பாய்க்கு…

பார்க்கில் அன்றைக்குப் பார்த்த ஜோடி யாசிரை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றனர்…

யாசிர் புல் தரையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்… பாலு உடன் ஏற்பட்ட சண்டை, அவன் மேனேஜரிடம் அதைப் பற்றிச் சொல்லியது…இங்கு போட்டோ வேலை செய்யும் அனைவரும் சேர்ந்து எடுத்த போட்டோ என எதை எதையோ யோசித்துக்கொண்டிருந்தார்யாசிர்..சற்றுத் தொலைவில் இருந்த பாலு சத்தமாக இருமிக் கொண்டிருந்தான்.. இறுமலும் பேச்சும் ஒரே அளவில் இருந்தது…. யாசிர் பார்க்கைச் சுற்றிப் பார்த்தார்.. முன்பெல்லாம் பார்க்கில் போட்டோ எடுக்க ஆர்வமாக இருந்தனர்.. ஒரு நாளைக்குச் சுமார்  இருபது பேர் போட்டோ எடுப்பாங்க… இப்பலாம் எவ்வளவு கொறஞ்சுருச்சு ஒரு நாளைக்கு மூணோ, நாளோ அவ்வளவுதான் ..

வெயில் அதிகமாக அடிக்கப் புல் வெளியில் இருந்த மரத்தின் அடியில் இருக்கும் சேரில் அமர்ந்தார் யாசிர். புதுசாகப் பார்க்கிற்குள் நுழைந்த டூரிஸ்ட் பஸ் சுமார் அறுபத்தைந்து பேரை இறக்கிவிட்டுவிட்டுப் பார்க்கிங் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது..

அங்கங்கு இருந்த போட்டோ நபர்கள் ஒன்றாக மொய்க்கத் தொடங்கினர்.. சிலர் காதுகொடுத்துக் கேட்டுவிட்டு வேண்டாமென நகர்ந்தனர்.. சிலர் பார்க்கை பார்த்துக் கொண்டே சென்றனர்… சிலர் கோவமாகக் கூடப் பார்த்துச் சென்றனர்.. ஆனால் அனைவரும் தன் கையில் வைத்திருந்த சிலேடு போல இருந்த போனை எடுத்துப் படம் பிடித்துக் கொண்டனர்… அந்தச் சிலேடு எவ்வளவை மாற்றிவிட்டது என யோசித்துக் கொண்டார்யாசிர். பார்க் குளோசிங் டைம் விசில் அடித்தும்.. அங்கும் இங்கும் டூரிஸ்ட் பஸ்சில் வந்தவர்கள் ஷெல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.. ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்க்கை விட்டு வெளியே வந்தார் யாசிர்.. மழை பிடிக்கத் தொடங்யிருந்தது…

“யாஸிற்குப் பேலன்ஸ் சம்பளத்தைக் கொடுத்தனுப்புங்க” என்றார் நந்தன்.யாசிர் பாய் பேசத் தொடங்கினார் தயங்கிக் கொண்டே .

“அவ்வளவு தூரம் போறது கஷ்டம் சார் “

“அப்படினா எப்படிப் பாய்.. ரெகார்ட்ல பேரு வந்துருக்கே “

“பரவால சார்.. “

“புரியல பாய் “

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்குறேன்… “

“அப்புறோம்.. என்ன செய்யப் போறிங்க பாய்.? “.

” தெர்ல சார்… “

லென்ஸ்உடைய கிளோஸர் மூடியைக் காணவில்லை என்று சம்பளத்தில் அதைப் பிடித்துக் கொண்டுதான் மீதி பணத்தைக் கொடுத்தான் நந்தன். அவன் பேசுவான் என்று கடைசி வரை எதிர்பார்த்தும் நடக்கவில்லை. கேமராவைக் கொடுத்துவிட்டு கிளம்பினார் யாசிர் பாய்..கையில் காசில்லாமல் போன வாரம், தான் வைத்திருந்த பழைய கேமராவை விற்கவேண்டிய நிலை . யாசிர் பாய் தனக்குள் எதை எதையோ முனங்கிக் கொண்டே வந்தார்.

மழை நின்றபாடில்லை. உடம்பு கொஞ்சம் ஜுரம் அடிப்பது போல இருக்க , பாயில் படுத்திருந்த பாய் மாத்திரை வைத்திருந்த டப்பாவை திறந்தார்.. அதில் காமெராவின் கிளோஸர் இருந்தது.அவரை அறியாமலே ஒரு சிரிப்பு அவருடன் ஒட்டிக் கொண்டது. அதைத் தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தார்…அவரிடம் இருந்த வெறுமையை அது தன்னுள் புதைத்துக் கொள்ள ! . அவர் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார். சுவரின் மூளையில் இருந்த கரப்பான்பூச்சி இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. வீட்டின் கதவை திறந்து மழை சாரலில் நனைய தொடங்கியவர் மனதிற்குள் எந்த விதமான iso, ஷட்டர் ஸ்பீட் ரேஞ் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டு கண்களைச் சிமிட்டினார் கொண்டாட்ட நிலையாகி போன வான் மழை துளிகள் யாசிர் பாய் சுமந்து கொண்டிருந்த யாவற்றுக்கும் விடுதலையாய் சிமிட்டல்களுக்குள் உறைந்து கிடந்தன…!

ஸ்டார்

லட்சுமிஹர்

 

இருள் கொஞ்சம் எட்டி பார்க்கத் தொடங்கியிருந்தது. ஹரிஷும், அருணாவும் பாலுவுக்கு பிறந்தநாள் கேக் வாங்க பேக்கரிக்கு வந்துள்ளனர். அருணா பள்ளி முடிந்து ஹரிஷை வீட்டுக்கு கூட்டி வரும் வழியில் இருக்கும் பேக்கரி பூட்டி இருந்ததால், கொஞ்ச தூரம் நடந்து இங்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடன் ஹரிஷ் ஓடிப் போய் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டான், அருணா அங்கிருந்தவரிடம் பிறந்தநாள் கேக்கை ஆர்டர் செய்தாள். இதில் எதிலுமே ஹரிஷ் பங்கெடுத்து கொள்ளவில்லை, அது அவனுக்கு பிடிக்கவும் இல்லை. கேக் தயார் ஆகி கொண்டிருக்க அருணா ஹரிஷ் உடன் வந்து சேரில் உட்கார்ந்து கொண்டாள். வரும் வழியில் தான் சர்பத் குடித்தனர், அது அருணாவுக்கு பிடித்த கடை.
ஹரிஷ் கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இது வரை இந்த சந்தில் அவன் வந்ததே இல்லை. கடை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிடலாம், இல்லை வேறு ஒன்றாகக் கூட மாறக்கூடும் என்ற தோற்றத்தில் இருந்தாலும், அவ்வளவு அழகாக இருந்தது அழுக்கு படிந்து போய். எல்லாம் எண்ணெய்ப் பிசுக்கு. ஆர்டர் செய்த கேக் வந்தது . அவனுக்கு பிடித்த ரெட் கலர். அதில் அவனுடைய பேரும், அப்பாவுடைய பேரும் சேர்த்தே எழுதி வாங்கினாள் அருணா.

சின்ன வீடுதான் என்றாலும் முன்னால் தோட்டம் இருப்பதால் அழகாக இருந்தது. கேக்கை டேபிள் மேல் வைத்த ஹரிஷ் பெட்ரூமுக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டிருந்தான். அருணா–ஹாலை டெகரேட் செய்தாள். இரவு மணி ஆகிக் கொண்டே இருக்க, அருணா பாலுவிற்கு தொடர்ந்து கால் செய்தாள். பாலு பதில் அளித்த மாதிரி தெரியவில்லை. ஹரிஷ் ஹாலில் டெகரேட் பண்ணியதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தான். அது எதுவும் கடையில் வாங்கி அழகுபடுத்தியது கிடையாது, அருணாவே பேப்பர் , சார்ட் என இருப்பதை வைத்து செய்தது, அவ்வளவு அழகாக இருந்தது.அதில் ஹாப்பி பர்த்டே பாலு என எழுதியிருந்தது.

பாலுவிற்கு ஸ்டூடியோவில் ஷூட்டிங் போய்க் கொண்டிருப்பதால் வரமுடியாது என்றும் கூடவே சாரியும் கேட்டு விட்டார். பாலு பிறந்த நாள் முடிய 3 மணி நேரம் தான் இருந்தது, இப்படி நடக்கும் என்று ஹரிஷிற்கு தெரியும் அதனால் தான் இதில் எதிலும் பங்கு எடுத்து கொள்ளவில்லை. அருணா இரவு சாப்பாடு சமைக்காதலால், பாலு பிறந்தநாளுக்கு வாங்கின கேக்கை வெட்டி கொடுத்தாள். ஹரிஷ் டிவியை ஆன் செய்து பார்க்க தொடங்கினான், கேக்கை தின்று கொண்டே. சேனலை மாற்றும்போது ஒரு சண்டை காட்சி ஓடிக் கொண்டிருந்தது, சட்டென நிறுத்தி விட்டான். ஸ்டண்ட் பாலு. அந்த காட்சியை பார்க்க விருப்பமின்றி ஓடிப்போய் படுத்துக் கொண்டான் முகத்தை பெட்டில் புதைத்தபடி.

போன சண்டே டிவியில் போடப்பட்ட அப்பா அடிவாங்கி இருந்த படத்தை பார்த்து விட்டு கிளாசில் இருந்த கவுதம் ஹரிஷை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான். அதனால் அம்மா, அப்பாவிடம் சண்டை. அவர்களுக்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.

ஒரு நாள் பாலுவை வைத்து கிளாசில் கவுதம் ஒரு ஜோக் சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர்.

‘ silent don’t listen to gautham. Gautham stop that…’

என மேடம் கூற அந்த சிரிப்பு சத்தம் அடங்கிப் போனது. ஹரிஷ் அந்த கிளாசில் தலையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அதன் பிறகு இன்டெர்வலில் ஹரிஷ் கவுதமை போய் அடிக்க இருவரும் சண்டை போடத் தொடங்கினர், ஹரிஷுக்கே அதில் அடி பலமாக விழுந்தது. அதிலிருந்து ஹரிஷை “ஸ்டண்ட்மேன் “என கூப்பிடத் தொடங்கி விட்டனர், சிரித்து கொண்டே.

ஆட்டோ வை மிஸ் பண்ணியதால், பாலு வந்து ஸ்கூலில் விட நேர்ந்தது, ஸ்கூலில் பாலுவும் ஹரிஷும் நடந்து கொண்டிருக்கையில் நந்தன், “ஸ்டண்ட் மேன் ,” என கத்தி விட்டு சென்றான். ஹரிஷுக்கு கோவம் தாங்க முடியவில்லை, ஆனால் பாலு திரும்பி அவனுக்கு தன்னுடைய ஆர்ம்ஸ் -ஐ மடித்து காட்டி விட்டு போனார். அதை நந்தன் கிளாசில் வந்து, “அவரோட ஆர்ம்ஸ் எவ்வளவு பெருசா இருந்துச்சு தெரியுமா, நம்ம பென் டென் -ல் வரும் ஃபோர் ஆர்ம்ஸ் மாதிரி இருந்தது,” என சொல்ல அவனுக்கு பெருமையாக இருந்தது. ஹரிஷுக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டரும் அது தான். அருகில் இருந்த கவுதம் நடு பெஞ்சில் அமர்ந்திருந்த ஹரிஷ் காதுக்கு விழுகும்படி, “வில்லனுக்கே இவ்வளவு பெரிய ஆர்ம்ஸ் னா அவங்கள அடிக்கிற ஹீரோஸ்க்கு எவ்வளவு பெருசு இருக்கணும்,” என சொல்லவும் சுத்தி இருந்தவர்கள் சிரித்து கொண்டே தலை ஆட்டினர்.

அன்றிரவு ஹரிஷ் அப்பா சாப்பிடுவதற்கு முன் தண்டால் எடுத்து கொண்டிருந்தார், அருணா சாப்பிட எல்லாத்தையும் கூப்பிட பாலு கைக்கு போனது ரிமோட். அதில் கே டிவி யை வைத்தார், அதில் அவர் நடித்திருந்த சண்டைக் காட்சி வர போவதாகவும், அதை எடுக்கையில் எப்படியெல்லாம் இருந்தது, டைரக்டர் சார் குட் னு மைக்குல சொல்ல, யூனிட் முழுக்க கை தட்டுனாங்க, அதுக்கப்புறம் தான் எங்க மாஸ்டரு என்ன கூடவே வச்சுக்கிட்டாரு என சொல்லி கொண்டிருக்கையில், அந்த சண்டைக்காட்சி வந்ததும் பாலு அதோ பாரு என கை காட்ட அதில் ஒருவர் தீப்பற்றி அலறும் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. அதை தான் பாலு சொல்லுகிறார் , ஹரிஷ் தடாலென சாப்பாடை தட்டி விட்டு ரூமுக்குள் போய் விட்டான். அந்த சண்டைக் காட்சியில் பாலுவின் மூஞ்சி கூட தெரியவில்லை. பாலுவிற்கு என்னவென்று புரியவில்லை, அருணா, பாத்து பயந்திருப்பான் என சொல்ல பாலு தலை ஆட்டிக்கொண்டார். இரவு ஏ வி ம் இல் ஷூட்டிங் இருப்பதால் வேகமாகவே கிளம்பிவிட்டார்.அருணாவுக்கு தெரியும் எதனால் ஹரிஷ் அப்படி நடந்து கொண்டான் என்று. என்ன சொல்ல அவனிடம், பாலு சென்றதும் பெட்ரூம் க்கு சென்ற அருணா ஹரிஷ் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து விட்டு அந்த அறை கதவை சத்தம் இல்லாமல் மூடினாள். அந்த படத்தை தொடர மனமில்லாமல் டிவியை அணைத்து விட்டாள்.

“டேய் இந்த கேக்க முழுசா சாப்பாடலையா நீ,” எனக் கேட்டு பக்கத்தில் அமர்ந்தவளுக்கு ஹரிஷ் அழுதது தெரியாமலில்லை. “எதுக்கு இப்போ அழகுற,” என்ற கேள்விக்கு ஹரிஷ் இடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. “என்னாச்சுன்னு சொன்னாதான தெரியும்,” என்றதும் ஹரிஷ் தலையை அருணா தோல் மீது புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தவன், “என்ன ஸ்கூல்ல ஸ்டண்ட் மேன், ஸ்டண்ட் மேன் னு கூப்பிட்றாங்க, அசிங்கமா இருக்கு” என்றதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை அருணா.

அழுகையை நிப்பாட்ட அருணா பீரோவில் இருந்து ஏதோ போட்டோ வை எடுத்து தன் பின்னால் மறைத்து கொண்டாள், “சரி, அம்மா சொல்றதுக்கு பதில் சொன்னேனா ஒனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”.

“சர்ப்ரைஸா?” என டல் ஆக கேட்ட ஹரிஷ்ன் தலையை நிமிர்த்தி, “ஆமாம்,” என்றாள் அருணா.

“என்ன கேள்வி?”

“ஹரிஷுக்கு கஷ்டமா கேக்கலாமா இல்ல ஈஸியா கேக்கலாமா?”
“ஈஸியா,” என சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் ஹரிஷ்.

“ஹரிஷுக்கு புடுச்ச ஹீரோ யாரு?

சட்டென, “விஜய்,” என தலை ஆட்டினான்.

“விஜய் தான் புடிக்குமா?”

“ஆமா”

“உண்மையா விஜய்தான?”

“ஆமா 100 வாட்டி ப்ரோமிஸ் விஜய்தான்,” என்று கட்டிலில் குதித்தான்.

அருணா கட்டிலை விட்டு எழுந்த தான் மறைத்து வைத்திருந்த போட்டோவை மெதுவாகக் காட்டினாள் ஹரிஷிடம். அதை ஹரிஷால் நம்ப முடியவில்லை. அது அப்பாவும், விஜயும் சேர்ந்து நிற்கும் போட்டோ, அதில் விஜய் அப்பாவை அடிக்கவில்லை. இருவரும் சிரித்து கொண்டிருக்கும் போட்டோ அது.

அதை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த ஹரிஷ் அம்மாவைப் பார்த்து, “இது உண்மையிலே எடுத்ததா?”

“ஆமா”

“ஏன் கேக்குற?”

“இவ்வளவு நாளா ஏன் என்கிட்ட நீங்க காட்டவே இல்ல?”

உனக்குதான் அப்பாவ பிடிக்கவே இல்லையே,” என சொன்னவுடன் என்ன சொல்லுவது என தெரியாமல் தலையை கீழிறக்கி அந்த போட்டோ வை பார்க்க தொடங்கினான். அதில் நிஜமாகவே விஜயும், அப்பாவும் சிரித்து கொண்டிருந்தனர்.

“அப்போ அப்பா விஜய் கிட்ட அடி வாங்கலயா?”

“அது சும்மா டிஷ்ஷியும் டிஷ்யூம, விஜய் சார் அடிக்கற மாதிரி இவரு அடிவாங்குற மாதிரி நடிப்பாங்க. அதெல்லாம் சும்மா,” என சிரித்து கொண்டே ஹரிஷின் தலையில் முத்தமிட்டாள்.

“அப்பனா நான் இந்த போட்டோவ ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகவா ?”

சரி என்பது போல தலையாட்டினாள் அருணா. ஹரிஷை விட அருணாவே மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். ஆனாலும் பிறந்த நாளான இன்றைக்கும் பாலு வர வில்லை என்பதை மனதில் போட்டு அலைக்கழித்து கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு அந்த ராத்திரிகள் அவ்வளவு எளிதாக கடப்பதில்ல.

காலை எழுந்திருக்கையில் பாலு வீட்டில் தான் இருந்தார். ஹரிஷ் ஸ்கூலுக்கு போகும் முன் பாலுவை கூப்பிட்டு, “நேத்து எங்க போயிருந்தீங்க?” என அதட்டும் தொனியில் கேட்டான்.

பாலு அருணாவை பார்த்து சிரித்து விட்டு, “ஷூட்டிங்… டிஷ்ஷியும் டிஷ்ஷியும் ஷூட்டிங்,” என அவனை அடிப்பது போல செய்து காட்டினான்.

“விஜய் உங்கள அடுச்சாரா?”

“ஆமா”

ஹரிஷ் அழுவது போல அருணாவை பார்த்தான். அருணா ஓடிவந்து ஹரிஷை கட்டி பிடித்துக் கொண்டு பாலுவை கையால் தோளில் தட்டினாள். “அப்பா பொய் சொல்றாரு ஹரிஷ், நீ அழாத. அழக்கூடாது. இன்னொரு தடவ கேள” என கண்ணீரை துடைத்த, பாலுவை பார்த்து முறைத்து கொண்டாள்.

“இப்போ நீ அழுகாம இருந்தா உண்மைய சொல்லுவேன்”

ஹரிஷ் நிமிர்ந்து பாலுவை பார்த்தான்.

பாலு சிரித்துக் கொண்டே கை, கால்களை காட்டி, “இங்க பாரு ஒண்ணுமே இல்ல. அடிவாங்குனேன்ல டிவி ல, அதெல்லாம் சும்மா,” என சொல்லி சிரித்துக் கொண்டார்.

அருணா , “நீ போட்டோ எடுத்துக்கிட்டயா?” என கேட்க, “எடுத்துட்டேன்,” என தலை ஆட்டிக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான் ஹரிஷ்.

அவன் எடுத்து வந்த போட்டோவை அனைவரும் ஆச்சரியதுடன் பார்த்து கொண்டிருந்தனர். நந்தன் ஓடி வந்து, “விஜயும் உங்க அப்பாவும் பிரண்ட்ஸா?” என கேட்டதற்கு, “ஆமா,” என சத்தமாக சொன்னான், கவுதம் காதிற்கு விழும் அளவிற்கு.

“அப்போ அடிக்கிறது எல்லா?”

“அது சினிமா, வெறும் டிஷ்ஷியும் டிஷ்ஷியும்தான்,” என பாலு செய்தது போலவே செய்து காட்டினான் ஹரிஷ்.

“அப்டினா விஜய பாப்பயா நீ?”

ஆமா எங்க அப்பா அடுத்தவாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு நானும் விஜய் கூட நின்னு போட்டோ எடுத்துப்பேன்”

அன்று சாயங்காலம் படுத்து கொண்டிருந்த அப்பாமேல் ஏறி விளையாடி கொண்டிருந்த ஹரிஷ், “அப்பா விஜய பாக்க கூட்டிட்டு போவையா ?” என கேட்டதற்கு, “கண்டிப்பா” என சொல்லி சிரித்துக் கொண்டார் பாலு. ஹரிஷ் சந்தோசத்தில் பாலுவின் நெஞ்சின் மேல் சாய்ந்து கை வைக்கையில், மேல் சட்டையின் அடியில் ஒரு பெரிய தழும்பு கையில்பட்டது, அது முன் பக்கம் கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை சென்றது.