லண்டன் பிரபு

சு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை

லண்டன் பிரபு

DSC_0177

சு வேணுகோபால்

சு வேணுகோபால் எழுத்துக்களுடனான அறிமுகம் எனக்கு  ஜெயமோகனின்  கட்டுரைகளின் வழியாகவே அமைந்தது. அதைத் தொடர்ந்து பூமிக்குள் ஓடுகிறது நதி(2000)மற்றும்  வெண்ணிலை(2006) சிறுகதை  தொகுப்புகளை  வாசிக்கும்  வாய்ப்பும் கிடைத்தது. இந்த கதைகளை மொத்தமாக படித்து முடிக்கும் போது ஒரு பெரிய மனச்சோர்வில் தள்ளப்பட்ட ஒரு உணர்வு. எளிதில் கடந்து விட முடியாத கதைகள் இவை. பெரும் துயர்களின் தருணங்கள். எல்லா கதைகளையும் கோர்க்கும் நூலாக துயர் மட்டுமே இருக்கிறது. மிக கொந்தளிப்பான வாழ்க்கையில் வெளிச்சத்திற்கான எந்த வழியும் இல்லாமல் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் கதைகள். அவர்களை மிக அருகில் சென்று காண்பதை போல தொந்தரவு செய்யும் வேறொன்று  இல்லை.  இவர்களுக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது? எதை நம்பித்தான் இவர்கள் வாழ்க்\கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளே இந்த கதைகளின் மனிதர்களைப் பற்றி வாசிக்கும் போது திரும்ப திரும்ப எழுகின்றது. ஒரு விதத்தில் அது தான் இந்த கதைகளின் வெற்றியும் கூட.

ஜெயமோகனால்   ‘பிரியத்திற்குரிய இளவல்’ என்று  அழைக்கப்படும் சு.வேணுகோபால்  தான் எழுத வந்து இருபது வருடங்களில் மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று நாவல்கள் மற்றும் சில குறுநாவல்கள் பதிப்பித்திருக்கிறார். ஜெயமோகனுக்கு அடுத்த தலைமுறையில் எழுத வந்தவர்களில் முன்னணி படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படுகிறார். கல்லூரியில் விரிவுரையாளராக பணி, முனைவர் ஆய்வேடு, விவசாயம் என்ற பல பணிகளிடையே இலக்கியத்திலும் மிக வலுவான தடத்தை பதித்துள்ளார். இவரை விஷ்ணுபுரம் விருது விழாவின் போது காணும் ஒரு வாய்ப்பு அமைந்தது. உரத்த குரலில் மிக சுவாரசியமான தகவல்களுடன்  உரையாடும் தன்மை உடையவர். விவசாய வாழ்க்கையைப் பற்றி பேசும் போது மிக உணர்ச்சி வசப்படுபவராக இருந்தார். தன சிறு வயதில் விவசாயத்தின் ஏறுமுகத்தை கண்டபின் தற்போது அது இறங்கு முகமாக ஆகி பின் முற்றிலும் சீரழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருப்பதைப் பற்றி பேசும் போது உடைந்து போய் விட்டார். தன் கதைகளைப் போலவே நேரிலும் ஒரு உணர்ச்சிகரமான கதைசொல்லி என்று தோன்றியது.

இவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ வெளிவந்த வருடம் ௨௦௦௦. அப்பொழுதே அவர் கதைகளின் பேசு பொருட்கள் உருவாகிவிட்டன. வெண்ணிலை தொகுப்பு வரை அந்த கருக்களையே அவர் கதைகளில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகைகளில்  தீண்டிப் பார்க்கிறார். விவசாயத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் கதைகள். அதன் காரணமாக நேரும் உறவுச் சிக்கல்கள். அவமானங்கள். பின்  விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள். செங்கற் சூளையின் அனலிலும் நெல் அறுப்பின் கடின உழைப்பிலும் கிடந்து அல்லாடும் பெண்கள். தோல் தொழிற்சாலையில் வேலை செய்து சீரழியும் சிறுவர்கள். உடலால் ஊனப்பட்டவர்கள். சமூகத்தால் புறந்தள்ளப்பட்டவர்கள். மனநிலை பிறழ்ந்தவர்கள். இவை எல்லாவற்றையுமே ஒரு விதத்தில் ‘உதிரிகளின் கதைகள்’ என்று வகைப்படுத்தலாம்.

வேணுகோபாலின் கரிசனம் இயல்பாகவே பெண்களின் துயர்களில் சென்று படிகிறது. இந்த இரண்டு தொகுப்புகளிலும் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களை மையம் கொண்டே இருக்கின்றன. மனநிலை பிறழ்ந்த பெண் இவரை மிகவும் தொந்தரவு செய்யும் ஒரு கருவாக இருக்கிறாள். அவரது எல்லா தொகுப்புகளிலும் இதைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது.  மனநிலை பிறழ்ந்த ஆணை விட ஒரு பெண் ஏன் இத்தனை தொந்தரவு செய்கிறாள்? உடல் சார்ந்த கவனம் ஒரு பெண்ணில் மிகச்சிறிய வயதிலேயே  ஏற்றப்படுகிறது. மனநிலை தவறிய பெண்ணில் அது இல்லாமல் போவது ஒரு பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. மேலும் அந்த பெண்ணையும் உடல் உறவிற்கு உட்படுத்தி கருவுறச் செய்யும் கீழ்மை என்று சமுதாயத்தின் இருண்ட பக்கங்கள்மேலும் மேலும்  திறந்து கொள்கின்றன.. இந்த பெண்கள் இறுதியில், ஒன்று முற்றிலுமாக கைவிடப்படுகின்றனர்(விழுதுகளும் பாதுகாப்பு வளையங்களும்) அல்லது உறவினர்களாலேயே கொல்லப்படுகின்றனர் (தொப்புள் கொடி).

ஆனால் இவர் கதைகளில் வரும் குழந்தைகளின் சித்திரம் துயர் மிகுந்ததாக இல்லை. அவை எப்போதும் மகிழ்ச்சியும் துள்ளலுமாகவே உள்ளன. ‘பதனிட்ட பிஞ்சு கரங்கள்’ கதையில் தோல் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுவர்களைத் தவிர மற்ற கதைகளில் குழந்தைகள் மிக குதூகலமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் காட்சிகளே காணக்கிடைக்கின்றன.   ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்க நடையாய் நடக்கின்றனர்(புற்று). ஊருக்கு வரும் குதிரை மசால் தாத்தாவை சுற்றி கும்மாளமிடுகின்றனர். அவருக்காக  அம்மாவுக்கு தெரியாமல் உணவை எடுத்துக் கொண்டு செல்கின்றனர் (குதிரை மசால் தாத்தா). துர்நாற்றம் வீசும் பிச்சைக்காரனுக்காக தன்னிடம் இருக்கும் கொஞ்ச பணத்தை வைத்து  மேரி கோல்ட் பிஸ்கட் வாங்கி அளிக்கின்றனர்(நிரூபணம்).  “அங்கிள் உங்க நாயி பயங்கரமா காவக் காக்குமில்ல அங்கிள். திருடன் வந்தா லவக்குனு பிடிச்சிருமில்ல! என்ன அங்கிள்” என்று பேசும் சிறுமிகளாகட்டும்,”அக்கா நாக்குத்தி இப்பிதி இப்பிதி ஓதுது” என்று பேசும் மழலைகளாகட்டும்,  இவர் கதைகளில் எங்காவது ஒளி மிகுந்த இடங்கள் வருகின்றன என்றால் அது குழந்தைகள் உலகில் மட்டும் தான். அந்த களங்கமின்மையும் அப்பாவித்தனமும் மிக்க உலகில் இருந்து அவர்கள் காணும் பெரியவர்களின் உலகம் அவர்களுக்கு பொருள்படாததாக இருக்கிறது. ஆனால் படிப்பவருக்கு அந்த இரண்டு உலகங்களுக்கு இடையே ஆன முரண் முகத்தில் அறைகிறது. அந்த குழந்தைகள் வளர்ந்து சென்று சேரப்போகும் நரகமல்லவா இந்த பெரியவர்களின் உலகம்?

‘புற்று’ கதையில் ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்று சிறுமி பூமிகா தன தம்பி நிலவரசனை இடுப்பில் சுமந்து கொண்டு இரு நண்பிகளுடன்  நடையாய் நடக்கின்றாள். பெரிய கேட் போடப்பட்ட ஒரு வீட்டின் வாசலில் சென்று அங்கு இருக்கும் ‘அங்கிளிடம்’ அவர் நாய்க்குட்டியை தரச்  சொல்லி கேட்கின்றனர். நாயின் விலை  ஐந்து ருபாய் என்று அவர் சொன்னதை ஐயாயிரம் ருபாய் என்று புரியாமல் வெறும் ஐந்து ரூபாயை திரட்டிக் கொண்டு சென்று பேரம் பேசுகின்றனர். இறுதியில் பள்ளி அருகே ஒரு பெண் நாய்க் குட்டியை கண்டெடுத்து வீட்டிற்கு கொண்டு செல்கிறாள். ஆனால் பூமிகாவின் மாமாவோ “தங்கம், பொட்டக்குட்டியை யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு..” என்று அந்த நாய்க்குட்டியை தூக்கிசென்று எங்கோ கடாசிவிடுகிறான்.  பூமிகாவின் அம்மா, பூமிகாவிற்கு அடுத்து பிறக்கவிருந்த பெண் குழந்தையை கருக்கலைப்பு செய்த செய்தியும் கதையில் பூடகமாக வருகிறது. இது அத்தனையும் சேர்ந்து நாய்க்குட்டியைப் பற்றிய அந்த கதையை சட்டென்று சமூகத்தில் பெண்ணிற்கு அளிக்கப்படும் இடம் என்ன என்ற இடத்திற்கு  எடுத்துச் செல்கிறது.

நுண்தகவல்கள் சு.வேணுகோபால் கதைகளின் மிகப்பெரிய பலம். அதன் மூலம் ஒரு சூழலை அவர் எளிதாக கட்டமைத்து விடுகிறார். அதிலும் விவசாய சூழலை விவரிக்கும் போது அவருக்கு தகவல்கள் வந்து கொட்டுகின்றன. யதார்த்தவாத அழகியலை சேர்ந்த இவர் கதைகளுக்கு இது பெரும் பலத்தையும் சொல்லப்படும் சூழலைக் குறித்த நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டிட வேலையின் சூழலை சொல்வதாக இருந்தாலும் சரி,  தோல் தொழிற்சாலையின் வேலைகளை சொல்வதாக இருந்தாலும் சரி, இவரிடம் தகவல்களுக்கு பஞ்சமே இருப்பதில்லை. ஒரு மாட்டிற்கு மசால் உருண்டை போடுவதை விவரிக்கும் போதும் கூட அதை அதிகபட்ச விவரங்களோடு தான் சொல்கிறார்..

போல் மரத்திற்கு இந்தப் பக்கமாக நின்று கொண்டு செம்பூத்துக் காளையின் நாக்கை இடது கையால் பற்றி இழுத்தான். மாடு கீழ்த்தாடையை இருபுறமும் ஆட்டியது. நுனி நாக்கை மடக்கி இழுத்து உப்பைப் பெட்டியிலிருந்து அள்ளி நாக்கில் வைத்து கரகரவென தேய்த்தான். மறுபடி உப்பை அள்ளி அடி நாக்கு வரை கையை உள்ளேவிட்டு அரைக்கித் தேய்த்தான். சிறுவர்கள், வாய்க் குகைக்குள் சென்ற அவன் கையை பதற்றத்துடன் பார்த்தனர். மூக்கணாங்கயிறு பிடி தளர்ந்து அப்படியே பற்களால் மாடி மென்றால் கை நைந்து போகும்.

எச்சில் வடியும் கையை வெளியே எடுத்தான். பெட்டி மேல் வைத்திருந்த சொறி பிடித்த கடற்கல்லை எடுத்து வரட்டு வரட்டு என நாக்கில் வைத்துப் பறிக்க மாடு முன்னங்கால்களை மாற்றி மாற்றி வைத்தது. அந்தக்கல் உள்ளங்கையில் கச்சிதமாக அடைப்பட்டது. உல் நாக்கில் நத்தைக் கொம்புகள் போல் கருநிரத்தில் நீண்டிருப்பதை அருகில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் கவனித்தான்.

நாக்கை இடம் வலமாக திருப்பினான். உதட்டில் கவ்வியிருந்த கூர்மையான ஊசியால் கீழிறங்கி ஓடும் பச்சை நரம்பைக் குத்தித் துண்டித்தான். கேட்ட ரத்தம் குபுகுபுவென பொக்களித்து வடிந்தது. இடது கையால் நாக்கைப் பிடித்துக் கொண்டு வலக்கையை வாய்க்குள்ளே விட்டு பிசுறுகளை வசித்து வசித்து தள்ளினான் கிழவன். மாடு நான்கு கால்களையும் மாற்றி மாற்றி வைத்து வாளால் சுருட்டியடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தது. பாம்பு விரலிலிருந்து மணிக்கட்டுவரை நான்கு மருந்துருண்டைகளை வைத்து அங்களம் வரை நீட்டித் திணித்து திணித்து உள்ளே செலுத்தினான்.

வெளி உலகத்தை விவரிப்பது போலவே அவர் அக உலகத்தையும் அதன் நுண்தகவல்களோடு எளிதாக விவரித்து விடுகிறார்.  ‘தருணம்’ கதையில் கஞ்சா புகை புலனனுபவங்களில் ஏற்படுத்தும் மாற்றத்தை விவரிக்கும் போது

ராவான இரண்டாம் சிகரெட்டின் பின்பாதி புகைத்து கடைசி தம்மிற்காக உதட்டில் ஒட்டுகிறது துண்டு சிகரெட். பிடியற்று ஆடும் பூமியில் நான். சட்டென கவிழும் பூமி செங்குத்தாக நிற்கிறது. வரப்பைப் பிடித்து தொங்குகிறேன். ஐயையோ விரல் கவ்வும் வரப்பை விட்டால் நிற்கும் பூமியின் பாதாள அடியில் விழுந்து நொறுங்கிப் போவேன்.  விரல் அழுந்தப் பிடிக்கிறது வரப்பை. தட்டையான பூமி பிரமாண்ட மலையாய் எப்படி எழுந்து நின்றது? இதய ஒளி ஏன் உடலிலிருந்து வராமல் எங்கிருந்தோ வருகிறதே. உடலைவிட்டு கழன்று தூரே தனித்து பருத்திச் செடியில் இருந்து டிக்டிக்கிடுகிறது. வரப்பை பிடிவிட்டால் சிதையும் உடல். தனித்து உட்கார்ந்துகொண்டே டிக்டிக் துடிப்பை கால் நீட்டி விரலிடுக்கில் கவ்வ முடியாது மிரள்கிறேன். …கண்ணை மூடினால் நிமிர்ந்த பூமி கவிழ்கிறது. சுவர்ப்பல்லியாய் ஒட்டிக் கிடக்கிறேன். கண் தவிர்த்து ஏன் உடலில் எதுவும் ஒட்டியிருப்பதாக தெரியவில்லை. உடல் பதரா? மனசு பதரா? மனசு செண்டாக பருத்திச் செடியில் தொத்திக் கொண்டிருக்கிறது. லேசாக எழ முயற்சிக்க நிமிர்ந்த பூமி சாய்கிறது. வரப்பை மீண்டும் பற்றுகின்றன விரல்கள்...

மன நிலைகளை உரையாடல்களில்  கொண்டு வரும் வேணுகோபாலின் திறன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. அக்குபாரி கிழவியின் வீம்பும் சுயநலமும் கலந்த உரையாடல்களாகட்டும்(அக்குபாரி கிழவியின் அட்டகாசங்கள்), காமம் நிறைவேறாத பெண் தன் கணவனை நோக்கி கொள்ளும் ஆக்ரோஷமாகட்டும்(கொடிகொம்பு), கைவிடப்பட்ட கிழவியின் புலம்பல்களாகட்டும், அந்த கதாபாத்திரங்களின் தனித்தன்மையான குணங்களை வெளிப்படுத்தும் வண்ணம் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன.  வெண்ணிலை தொகுப்பின் ‘பாரம் சுமக்கிறவள்’  கதையில் பதின்ம வயதுச் சிறுமியின் காதல் குற்ற உணர்வு ஆகியவை  அந்த சிறுமியின் கூற்றாகவே அவள் மொழியிலேயே சொல்லப்படுகிறது.

சியாமளா என்னும் பதின்ம வயதுச் சிறுமியின் மீது காதல் கொள்கிறான் கிறிஸ்டோபர் என்னும் வெள்ளையடிக்கும் பையன். அதைப் பற்றி ஒரு சர்ச் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்பதாக இந்த கதை சொல்லப்படுகிறது. கிறிஸ்தோபர்  அவளை பார்க்க தினமும் காத்திருப்பது தொடங்கி, அவளுக்கு  ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்புவது என்று விடாமல் துரத்துகிறான். சிறுமிக்கே உரிய இயல்பினால் அவன் மேல் அவள் மனம் இரக்கம் கொண்டு அது ஒரு ஈடுபாடாக மாறுகிறது. ஆனால் இவள் வலுக்கட்டாயமாக அந்த உணர்ச்சியை விரட்டுகிறாள்.  அவனை பார்ப்பதை தவிர்க்கிறாள். கேபிடேஷன் பீஸ் கொடுக்க முடியாத தன் தந்தையின் வசதியின்மையினால் அவளுக்கு படித்து மார்க் எடுப்பது ஒன்றே வழி.அப்போது வேறு ஒரு காரணத்தால் அவன் இறந்துவிட அது இவளுக்குள் காரணமே இல்லாத குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.  ஒரு புயலில் சிக்கிய சின்னஞ்சிறு பூவை போல் அவள் பிஞ்சு மனம் அலைக்கழிக்கப்படுவதின் சித்திரம் வெறும் உரையாடல் மூலமாகவே இந்த கதையில் நிகழ்த்தியிருக்கிறார்..

வேணுகோபாலின் கதைகளில் உன்னதங்களுக்கும் மன எழுச்சிகளுக்கும் இடமே இல்லையா?  யதார்த்தத்தின் இருளை சொல்வது மட்டும் தானா அவர் கதைகள்? பெரும்பாலும் அப்படித்தான். ஒரு சில கதைகளில் மட்டுமே யதார்த்தத்தின் அத்தனை அழுத்தங்களையும் தாண்டிய ஒரு நெகிழ்வின்   தருணம் காணக் கிடைக்கிறது. ‘நிகரற்ற ஒளி’ மற்றும் ‘ஒரு துளி துயரம்’ ஆகியவை இந்த வகையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகள்.

‘ஒரு துளி துயரம்’ கதையில் வரும் விமலா இளமையிலேயே கால் ஊனமுற்றவள். கல்யாண மேடையில்  நிமிர்ந்து நிற்க முயற்சி செய்து தோற்பது, லவக் லவக் என்று குறுகி நிமிர்ந்து நடப்பது என்று சிறு சிறு தகவல்களில் அவள் ஊனத்தின் வலியை சு வேணுகோபால் உணர வைத்துவிடுகிறார். பலரால் நிராகரிக்கப்பட்டு கடைசியில் ராஜேந்திரன் அவளை மணக்க சம்மதிக்கிறான். அவனுடைய பால்ய கால நண்பனும் பைனான்சியருமாகிய கிருஷ்ணனுக்கு அவன் மொய் வசூலிக்கும் பொறுப்பை அளிக்கிறான். ஆனால் முதலிரவு முடிந்து மறுநாள் கிருஷ்ணனிடம் மொய் பணத்தை கேட்கும் போது அவன் கடனுக்கும் வட்டிக்கும்  கழித்துக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறான். ஏற்கனவே வெள்ளாமையில் நஷ்டங்களை சந்தித்து வரும் ராஜேந்திரனுக்கு இது இடியாக விழுகிறது. மொய் பணத்தை வைத்து தீர்க்கலாம் என்று இருந்த மற்ற கடன்களின் அழுத்தமும் நண்பனின் துரோகமும் வதைக்க  அவன் தற்கொலை செய்து கொள்கிறான்.

அதன் பின் விமலா சில காலத்திற்குப் பின் பைனான்சியர் கிருஷ்ணனுக்கு திரும்ப தர வேண்டிய மீதி பணத் தொகையுடன் அவனை சந்திக்கச் செல்கிறாள். “செத்து போ” என்றும் “எந்தப் பைத்தியமாவது இப்படி செய்யுமா” என்றும் வசவிக் கொண்டே வரும் அப்பாவுடன் சேர்ந்து சென்று கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய மீதிப் பணத்தையும் வட்டியுடன் திரும்ப கொடுக்கிறாள். “நீங்க உலகத்தில் அந்த மனுஷன் கிட்டயாவது முழு நம்பிக்கை வைக்கலையேன்னு கொண்டு வந்தேன்.  ஏன் அத கேட்காம எடுத்துக்கிறீங்க..எத்தனை பேருடைய அன்பளிப்பு” . என்கிறாள். அவளின் இந்த செயலுக்கு யதார்த்த உலகில் பொருளேதும் இல்லை. “உண்மையா என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று இவள் முதலிரவில் கேட்க  “உன்னை மட்டுமில்ல; உன் குழந்தைக் காலும்  பிடிச்சிருக்கு” என்று சவலையாகத் தொங்கும் பாதத்தில் ராஜேந்திரன் இட்ட ஒரு முத்தம்;  அந்த கணம்..ஏதோ ஒன்று பிரவாகமாக இறங்கி உராய்ந்து அவளுள் உருகிய அபூர்வகணம். அந்த கணத்தில் அவள் உணர்ந்த அன்பிற்கு செய்யும் கைம்மாறா இது ?

இது போன்ற மிகச்சில கதைகளில் மட்டுமே வேணுகோபால் யதார்த்த உலகின் கால் தளைகளை அறுத்து  சற்றே வானில் எழுகிறார். மனித அற்பத்தனங்களின் சகதியில் ஒரு மலரை முளைக்க வைக்கிறார். அது நம்மில் ஒரு  நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது. அதுவும் கூட இல்லாவிட்டால் அவரது உலகம் தாங்கிக் கொள்ளவே முடியாத இடமாக இருந்திருக்கும்.