விஷால் ராஜா

அந்த நிறம் – ஜான் மெக்கிரகர் (தமிழாக்கம்- விஷால் ராஜா)

ஜான் மெக்கிரகர் (தமிழாக்கம்- விஷால் ராஜா)

ஜன்னல் பக்கம் நின்று அவள் கூறினாள், அம்மரங்கள் மீண்டும் அந்த அழகிய நிறத்திற்கு திரும்புகின்றன. அப்படியா என்று கேட்டேன். நான் வீட்டின் பின்புறம் இருந்தேன், சமையலறையில். பாத்திரங்கள் விளக்கிக் கொண்டு. தண்ணீர் போதிய வெப்பத்துடன் இல்லை. அவள் கூறினாள், அதை நீ என்ன நிறத்தில் அழைப்பாய் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் பேசிக் கொண்டிருந்தது சந்திப்பைத் தாண்டி சாலையின் மறுபுறத்தில் இருந்த மரங்கள் பற்றி. அது ஒரு ஆச்சர்யம், போக்குவரத்துக்கு மத்தியில் அவை தாம் இருக்கிற இடத்தில் அவ்வளவு நன்றாக வளர்வது. அவை என்ன மரங்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஏதோ வகை மாப்பில் அல்லது சிகமோர். ஒவ்வொரு வருடமும் இது நடக்கிறது அவளும் எப்போதும் எதிர்பாராது வியப்ப்புற்றவளாய்த் தெரிகிறாள். இந்த வருடங்கள் குறுகிக் கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு ஆண்டும். அவள் கூறினாள், நான் அவற்றை நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்க முடியும், நிஜமாகவே என்னால் முடியும். நான் தண்ணீரில் என் கையை ஓய்வாக பரப்பியபடி கவனித்தேன் அவள் அங்கே நின்றுக் கொண்டிருப்பதை. அவளது மூச்சை. அவள் எதுவும் சொல்லவில்லை. அவள் அங்கு நின்றுக் கொண்டேயிருந்தாள். நான் கழுவற்தொட்டியை காலியாக்கிவிட்டு மீண்டும் அதை சுடு தண்ணீரால் நிரப்பினேன். அறைக் குளிர்ந்திருக்க, நீரிலிருந்து ஆவி பெருகி பாத்திரங்களிலிருந்து வெளியேறுகிறது. நான் அதை என் முகத்தில் உணர முடிகிறது. அவள் கூறினாள், அவை வெறும் சிவப்பு அல்ல, அது அல்ல இது, இப்போது அதுவாகிவிட்டதா. பொரிக்கும் தட்டை கழுவிவிட்டு நான் அதைச் சுற்றி என் விரல்களை ஓட்டினேன், பிசுக்கை சோதிக்க. ஏற்கனவே என் விரல்மூட்டுகள் பழையபடி வலிக்க ஆரம்பித்திருந்தன. அவன் கூறினாள், ஒரு வெயில் தினத்தில் நீ கண்களை மூடுகிறபொழுது, அது கொஞ்சம் போல் அந்த நிறம்தான். அவளது குரல் மிகவும் சன்னமாக இருந்தது. நான் அசைவற்று நின்று கவனித்தேன். அவள் கூறினாள், அதை விவரிப்பது கடினம். ஒரு லாரி கடந்து சென்றதில் மொத்த வீடும் அதிர ஜன்னலைவிட்டு அவள் விலகி நிற்பது கேட்டது, அவள் எப்போதும் செய்வது போல். எதற்கு அவள் இவ்வளவு வியப்படைகிறாள் என நான் வினவினேன். நான் அவளிடம் இது இலையுதிர் காலம் என்றேன், இதுதான் நடக்கும் : பகல்கள் சுருங்குகின்றன, பச்சையம் உடைகிறது, இலைகள் வேறு நிறத்திற்கு மாறுகின்றன. நான் அவளிடம் சொன்னேன் ஒவ்வொரு வருடமும் இதை அவள் கடப்பதாக. அவள் கூறினாள், இது அழகாக இருக்கிறது, அவை அழகாக இருக்கின்றன, அவ்வளவுதான், உனக்கு இது தேவையில்லை. நான் பாத்திரங்களை தேய்த்து முடித்துவிட்டு நீரை வெளியேற்றி தொட்டியை கழுவினேன். அவள் அணிகிற ஒரு அசல் சிவப்புப் பாவாடை இருந்தது எங்கள் இளமைக்காலத்தில். அவள் தன் கூந்தலின் நிறத்தை அதற்கு பொருத்தமாக ஒருமுறை மாற்ற, ஊரில் இருந்த சிலர் அதை வர்ணித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். அப்போது ஜ்வாலை- சிவப்பு என்று அவள் அதை அழைத்தாள். ஒருவேளை அவள் விவரிக்க நினைத்த இலைகளும் அது போலவே இருக்கலாம். நான் என் கைகளை துடைத்துக்கொண்டு முன்னறைக்குச் சென்று அவள் அருகில் நின்றேன். அவள் கையை தேடித் தடவி பற்றிக் கொண்டேன். நான் சொன்னேன், இருக்கட்டும், மீண்டும் எனக்குச் சொல்.

oOo

(This is an unauthorised translation of the short story, “That Colour” by Jon McGregor included in the collection, “This Isn’t the Sort of Thing That Happens to Someone Like You“. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

​புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா

நரோபா

ஜீவா படைப்புலகம் வெளியிட்டுள்ள விஷால் ராஜாவின் முதல் சிறுகதை தொகுப்பு ‘எனும்போது உனக்கு நன்றி’ ஒன்பது கதைகளை கொண்டது. தொன்னூறுகளில் பிறந்து தமிழில் புனைவுகள் எழுதும் ஒரு தலைமுறை உருவாகியுள்ளது உவகையும் சற்றே பொறாமையும் அளிக்கிறது. தாராளமயமாக்கலுக்குப் பின்பான தலைமுறை எத்தகைய சிடுக்குகளை புனைவுகளில் கையாள்கிறது? தொழில்நுட்பம் புனைவில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னவாக இருக்கும்?  கிருஷ்ணமூர்த்தி, லூசிபர் ஜெ வயலட், விஷால் ராஜா, நாகபிரகாஷ், பாரதி என ஒரு வரிசை உருவாகி வருகிறது. விஷால் ராஜாவின் சிறுகதைகள் இறுக்கமான, செறிவான மொழியில் எழுதப்பட்டுள்ளன. கதைசொல்லி அல்லது மையப்பாத்திரம் உள்ளொடுங்கியவனாக, அதிகமும் பிறருடன் உரையாடாமல் தனக்குள் உரக்கச் சிந்திக்கும்/ விவாதிக்கும் தன்மையுடையவனாக இருக்கிறான். வேகத்தைக் கண்டு மிரட்சியடைகிறான். கதைமாந்தர்கள் பொருளின்மையால் மீள மீள சூழப்படுகிறார்கள். அச்சமும் தயக்கமும் கூச்சமும் நுண்ணுணர்வும் கொண்டவர்களால் நிரம்பியது அவருடைய கதையுலகம். பெரும் பிரியத்தை உள்ளத்தில் ரகசியமாக சுமந்தலைகிறார்கள். அவ்வகையில் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். ஒருவகையில் ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்து, நவீன தமிழிலக்கிய மையப் பாத்திரங்கள் உள்ளொடுங்கியவர்களின் குரலாகவே இருந்திருக்கிறது. சமூகத்தில் ஓங்கி ஒலிக்காத குரல்களே இலக்கியத்தில் ஆளுகையுடன் திகழ்கின்றன. அவர்கள் அலைக்கழிபவர்கள், கையறு நிலையில் முடிவெடுக்கத் திணறுபவர்கள், பொதுப் போக்கில் ஒழுக முடியாதவர்கள், பல வகைகளில் தாஸ்தாவெஸ்கி நாயகர்களை ஒத்தவர்கள்.

தொகுப்பின் முதல் கதை ‘கசப்பேறிய கோப்பைகள்’. நாகராஜ் எனும் கடைநிலை ஊழியன் மற்றும் கல்யாணி எனும் திருநங்கையை பாத்திரங்களாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. முதல் வாசிப்பில் எனக்கு அசோகமித்திரனின் ‘காந்தி’யை நினைவுறுத்தியது. ஏறத்தாழ அதே பேசுபொருள்தான்- காரணமற்ற வெறுப்பு, கசப்பு நம்முள் எப்படியோ தங்கி விடுகிறது. அன்பைப் போல் வெறுப்பும் தொற்றி பரவக்கூடியது. ஒரு கசப்பின் சுழற்சியை சொல்லிச் செல்கிறது கதை. நாகராஜிற்கு இருக்கும் திடத்தன்மை கல்யாணிக்கு இல்லை என வாசிக்கும்போது தோன்றியது. கல்யாணி அனுதாப உணர்விலிருந்து வார்க்கப்பட்டிருக்கிறாரோ எனும் ஐயம் எழுந்தது. கல்யாணி எனும் பாத்திரத்தின் வலுவின்மையின் காரணமாக இக்கதை எனக்கு நிறைவளிக்கவில்லை.

தொகுப்பில் உள்ள ‘நீர்க்கோடுகள்’ இதே போன்ற நிறைவின்மையை அளித்தது. அறக்குழப்பங்களும், ஊசலாட்டங்களும் கொண்ட ஆசிரியர் ஹென்றியின் பாத்திரம் வலுவாக உருவாகி இருந்தாலும்கூட, ‘மகள் வயதை ஒத்தவர் மீதான ஈர்ப்பு’ எனும் பழக்கப்பட்ட கதைக்களம் என்பதால் ஆர்வம் குன்றியது. ‘ஞாபகங்களின் கல்லறை’ லயம் கூடிய கவிதைக்கு அருகிலான நடையில் எழுத பட்டிருக்கிறது. ஆனால் கதையாகாத உதிரி துண்டுகளாகவே எஞ்சி நிற்கிறது.

கதாபாத்திரங்களின் பிரதேசம்’ ஜெயமோகன் தளத்தில் வெளியானபோதே வாசித்த நினைவிருக்கிறது. கற்பனையின் வலுவை நம்பி எழுதப்பட்ட கதை. எடுத்துக்கொண்ட கருவிற்கு நியாயம் செய்திருக்கிறது. வெவ்வேறு கதைகூறல் முறைகளை முயன்றிருக்கிறார் என்ற வகையில் சுவராசியமான வாசிப்பை அளிக்கிறது. ‘எனும் போது உனக்கு நன்றி’ வெவ்வேறு காதல் கதைகளின் ஊடுபாவு. ஒரு திரைக்கதைக்கான எல்லா வடிவ சாத்தியங்களும் கொண்டது. கதையே ஒரு காமிரா கோணத்தில் திரையில் காண்பிப்பது போல் வெட்டி வெட்டிச் சொல்லப்படுகிறது. நவீன கதைசொல்லிகள் பலரும் இந்த உத்தியைக் கையாள்கிறார்கள். தவறென்றோ இழிவேன்றோ அல்ல, எனினும் காட்சி ஊடகம் புனைவெழுத்தில் செலுத்தும் தாக்கம் என இதைக் கூறலாம். இக்கதை ஒரு மொட்டை மாடி குடியரட்டையில் கதைமாந்தர்களின் வெவ்வேறு வகையான காதலின் நினைவுகளைச் சொல்கிறது. ஆச்சரியமாக அவர்களின் காதல் கதைகளில் வன்முறை எட்டிப் பார்க்கவில்லை.

உடல்’ இத்தொகுதியில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி நவீன தமிழிலக்கியம் மரணத்தை பற்றியும், அதன் அப்பட்டமான அர்த்தமின்மை பற்றியும் மீள மீள பேசுகிறது. வேறெவரையும் காட்டிலும் எழுத்தாளன் மரணத்தைப் பற்றி அதிகமும் எண்ணுகிறான், அஞ்சுகிறான். ‘கதாபாத்திரங்களின் பிரதேசம்’ மரணத்தின் வன்மத்தை நேரடியாக சித்தரிக்கிறது. ‘உடல்’ பரகாய பிரவேசம் போல் ஒன்று நிகழ்ந்து கதைசொல்லி அவன் விரும்பும், அவனை நேசிக்காத பெண்ணுடைய காதலனின் உடலுள் எழுந்துவிடுகிறான். நடைமுறை சாத்தியமற்ற தளத்தில் வைத்து ஒரு மெய்யியல் கேள்வியை விசாரணை செய்கிறார் விஷால். எது நான்? உடலா உயிரா? கதை அங்கிருந்து இந்தச் சலுகையை அனுபவிக்கலாமா எனும் அறக் கேள்விக்கு செல்கிறது. இக்கேள்விகளுக்கு எந்த தீர்மானமான விடையையும் அளிக்காமல், அல்லது எதிர்கொள்ள இயலாமல் தப்பித்துச் செல்கிறான் கதைசொல்லி. எளிய தீர்வுகளை நோக்கிச் செல்லாததே இக்கதைக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. விஷால் ராஜாவின் கதைகளில் ஒரு பொதுப்போக்காக இதைக் குறிப்பிடலாம். எனினும் இக்கேள்விகள் எரியும் தீவிரத்துடன், தத்தளிப்புடன் கதையில் பதிவாகிறது.

தொகுப்பின் இறுதி கதையான ‘விலகி செல்லும் தூரம்’ கொஞ்சம் அலைவுற்றாலும்கூட ஒரு நல்ல கதை. ஜேக்கப்பின் கதையாக துவங்கி ஹர்ஷத்தின் கதையாக சடாரென மாறிவிடுகிறது. நவீன வாழ்வின் சிதைவுகளிலிருந்து மீட்க நமக்கோர் மீட்பர் வரமாட்டாரா எனும் ஏக்கத்தின் வெளிப்பாடாக இக்கதையைச் சொல்லலாம். நெரிசலான சாலையில், குழப்பமான மனதுடன் நிற்கும் ஒருவனிடம், ‘உன்னை எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்கிறேன் வா’ என ஜேக்கப் அவருடைய ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார். இக்கதையின் மீட்பர் பெரிய மாயங்களை நிகழ்த்திக் காட்டவில்லை, ஆனால் நன்கறிந்த பாதைகளில் விளைவுகளின் மீதான அச்சத்தால் இருக்கும் துணிவின்மையை, வினாக்களை எதிர்கொள்ளும் தயக்கத்தை உடைத்து அவற்றை எதிர்கொள்ள உந்திச் செலுத்துகிறார். ஜேக்கப்பும் கூட முகம் வெளிறி தனிமையில் உழலும் சலிப்படைந்த ஒரு மீட்பர்.

இத்தொகுப்பின் சிறந்த கதைகள் என தயங்காமல் ‘குளிர்’, ‘மகிழ்ச்சிக்கான இரத்தப் புரட்சி’ ஆகிய கதைகளைச் சொல்வேன். குளிர்ந்து தோல் மரத்து போகும் அதிகாலையில் கதைசொல்லி தன்னைச் சுற்றி நிகழ்பவனவற்றை கதையாக்குகிறான். குளிர் என்பது இக்கதையில் indifferent coldness எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தின் குரூரத்தை முதன்முறையாக உணர்ந்து அதிர்வதே கதை. வேண்டுமென்றே தெறிக்கும் வன்மம் அல்ல அந்தக் குரூரம், உண்மையில் அது ஒருவிதமான விட்டேத்தி மனோபாவம். ஆங்கிலேயர்கள் காலத்து தாது வருட பஞ்சங்களின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளைப் பற்றிக் கூறும்போது,. பிரித்தானிய அரசு கொன்றொழிக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செய்ததல்லை, ஆனால் முடியரசின் குளிர்ந்த விட்டேதிதி மனோபாவத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் இரண்டாம் உலகப் போரில் மரித்தவர்களை காட்டிலும் அதிகம் என்றொரு செய்தி உண்டு. ஆயுதமேந்த வேண்டும் என்றில்லை, கண்டுகொள்ளாமல் இருந்தாலே குத்திக் கொன்றுவிடலாம். ஈழ படுகொலை சார்ந்த ஒரு குற்ற உணர்வை எனக்கு இக்கதை சட்டென எழுப்பியது. முடிந்தவரை குளிரைப் பொறுத்துப் பார்த்த கதைசொல்லி, இறுதியில் தன்னைக் குளிரிலிருந்து பாதுகாக்க பையிலிருக்கும் சால்வையைத் துழாவுவதோடு கதை நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக சூழலே குளிர்ந்திருக்கும்போது, நாம் என்னதான் செய்துவிட முடியும்? குறைந்த பட்சம் குளிரில் நாம் விறைத்து மரத்து போகாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதையே கதைசொல்லியும் தேர்கிறான். ஏதுமற்றவனின் படைக்கலம் என சால்வை அவனை சூழ்கிறது. இக்கதை துல்லியமான சூழல் மற்றும் பாத்திரச் சித்தரிப்புகளால் முக்கியத்துவம் பெறுகிறது.

விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள். ‘எனும் போது உனக்கு நன்றி’ விஷ்வா, அதே கதையில் வரும் மோகன் என இப்பாத்திரங்களில் ஒரு தொடர்ச்சி திகழ்கிறது. ஹென்றியும் கூட அவருடைய மாணவி மீரா அவளாக வேறொருவனை காதலிப்பதைப் பற்றி சொன்னவுடன் ஆசுவாசம் அடைகிறார்.

காதல் விஷாலின் பெரும்பாலான கதைகளின் பேசுபொருளாக வந்திருக்கிறது. போர்ன் வெகு சகஜமாக புழங்கும் ஒரு தலைமுறையிலிருந்து எழுத வந்ததாலும், நவீன தொழில்நுட்பம் உணர்வு ரீதியான பிளவை நிகழ்த்துவதாக இருப்பதாலும் காமத்தை எழுதுதல் பின்னுக்குச் சென்று மீண்டும் காதலை எழுதுதலை இத்தலைமுறை கைக்கொள்ளும் என தோன்றுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்து மனிதர்கள் அன்னியமாதல், கேளிக்கைகளுக்கு அடியில் உள்ள வெறுமை, அதன் உள்ளுறையும் வன்முறை, பரபரப்பான துய்தல் வழியாக மகிழ்ச்சியை அடைய முனைவது என நவீன வாழ்வின் எல்லா சிக்கல்களையும் பேசும் இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’. செய்தி மொழி, உரையாடல், மனவோட்ட விவரணை என மொழி பல்வேறு வகையில் கற்பனையின் பாய்ச்சலுக்கு ஈடாக பிசிறின்றி வெளிப்படுகிறது. மென்பொருள் துறை பணிச் சூழலை பின்புலமாக கொண்ட இக்கதை பணிச்சூழல் சார்ந்து அன்றாட வாழ்வின் வெறுமை, அழுத்தம், அன்பிற்கான ஏக்கம் என பலவற்றை தொட்டு செல்கிறது. ஒரு தொழில்நுட்ப பூங்காவின் ஊழியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைப் படையாக மாற்றப்படுகிறார்கள். துண்டு நிகழ்வுகளாக ஊழியர்களைப் பற்றிய கதையும், நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. அழுத்தங்கள் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் சென்று முடிகிறது. இக்கதையில் வரும் எதிர்பாத்திரம் ‘மிஸ்டர் நோ ஐடி’ என்று அழைக்கப்படுகிறார். உலமயமாக்கலுக்குப் பின்பான வாழ்வில் அடையாள சிக்கல் வலுவாக காலூன்றி இருக்கிறது.

விலகி செல்லும் தூர‘மும், ‘மகிழ்ச்சிக்கான ரத்தப் புரட்சி‘யும் அதன் எதிரெதிர் அக நிலைகள் காரணமாக ஒன்றையொன்று நிரப்பி கொள்கின்றன. அப்படி என்ன பொருளின்மையைக் கண்டுவிட்டாய், என நம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கிறது. விஷாலின் கதைகள் பொதுவாக இவ்விரு புள்ளிகளுக்கிடையிலான ஊசலாட்டம் என கூறலாம். ‘விலகி செல்லும் தூரம்’ ஏறத்தாழ ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யின் அதே மனநிலையை பிரதிபலிக்கிறது ஆனால் பிந்தைய கதை சென்று சேரும் வெறுமையை அடையவில்லை. இந்த அழுத்தங்கள், அலைக்கழிவுகள் ஒன்றும் அத்தனை முக்கியமல்ல எனும் நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது. இத்தொகுதியின் மனவோட்டத்திற்கு ஒரு சமரச புள்ளியென ஜேக்கப் மற்றும் ஜானின் கதாபாத்திரங்களை கூறலாம். ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யில் வரும் நோ ஐடி ஒரு மீட்பரைப் போலத்தான் தோன்றுகிறான், சிக்கல்களுக்கான காரணங்களை வெளியில் அடையாளப்படுத்துகிறான், வெறுப்பை விதைக்கிறான், அதனால் மொத்தத்தையும் அழிவில் அமிழ்த்துகிறான். ஜேக்கப் சின்ன சின்ன நேசங்களை வெளிப்படுத்துகிறான், அவனிடம் பெரிய திட்டங்கள் கனவுகள் ஏதுமில்லை, சிக்கல்களின் ஊதிப் பெருக்கபட்ட பிம்பங்களை உடைக்கிறான். தால்ஸ்தாயின் ‘Where Love is God is’ கதையை மனம் நினைவு கூர்ந்தது.

இத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான குரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன்.

விஷால் ராஜாவின் ‘குளிர்’

என்பில தனை வெயில்போலக் காயுமே
அன்பில தனை அறம்

என்ற குறள் நாமறிந்தது. இதற்கு நேரெதிர் தாக்கத்தை விஷால் ராஜாவின் குளிர் சிறுகதை தொடுகிறது.

எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் இருக்கும் என்றால், புரிந்துணர்வுக்கான புள்ளி எல்லாரிடமும் உண்டு என்றால், அன்பின் இயல்பும் அறனின் தன்மையும் எப்படிப்பட்டவை?

நாம் காணும் எதுவும் நம்மைத் தொடாது என்றால், அன்பும் அறனும் தம்மைத் தாமே நகைத்துக் கொள்பவையாகாதா?

அசாதாரண குளிர், அசாதாரண மனிதர்கள், அசாதாரண நிகழ்வுகள். இருந்தும் அந்த நாளின் காலைப் பொழுது சாதாரணமாகத்தான் துவங்குகிறது. உணர்வுகளின் ஒடுக்கம், மிகச் சாதாரணமானது. அதில் மிகைகளுக்கு இடமில்லை.

“மரங்களில் சாய்ந்து வீசிய மென் காற்றில் சாமந்தி மணமும் கலந்து வந்தது. அது நாசியில் மயக்கமாக தங்க இன்னொருபுறம் பனியில் தலையைச் சுற்றி குளிரேறிக் கொண்டிருந்தது. காதுகளை அழுந்த மூடி கால்களுக்கு நடுவே முகத்தை புதைத்துக் கொண்டேன். அருகில் யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. இயல்பாக திரும்பி பார்த்தேன். நல்ல உயரமும் கனமும் கூடிய வாட்டசாட்டமான மனிதர். மடிப்பு விழாத படு நேர்த்தியான உடை. பளபளவென்றிருந்த போலீஸ் காலணிகளில் சீராக அடிவைத்து நடந்து வந்தார்.”

குளிர் 

குளிர்

விஷால் ராஜா

train

எதிர்பார்க்காத குளிர். இன்று விடியற்காலை சென்னை வந்திறங்கியது முதல் உடல் குளிரில் நடுங்கி உதறியபடியே இருக்கிறது. நான் அணிந்திருந்தது அரைக்கை சட்டை வேறு. முழங்கைகளை பிணைத்துக் கட்டினால் உள்ளங்கை ஜில்லிட்டு கூசியது. ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லை. ரயில் வருகிறதா என்று தண்டவாளத்தோடு பார்த்தேன். கண் தூரம் வரைக்கும் வானம் இருள் பரப்பாக தாழ்ந்திருந்தது. அடுத்த ரயில் எப்போது என்று பயணச் சீட்டு கொடுக்குமிடத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய நேர அட்டவணையில் தேடினேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சோர்வுடன் கையில் பிடித்திருந்த துணிப்பையை கீழே வைத்தேன்.

குளிர் குறைவதுப் போல் தெரியவில்லை. பையில் அவசரத்திற்கென்று வைத்த ஒரு குளிர் சால்வை உண்டு. ஆனால் அதை தேடி எடுக்க வேண்டும். துவைக்காத அழுக்குத் துணிகள் சுருட்டிக் கிடக்கும் பையை பிரித்து துழாவுவதற்கு அசூயையாக இருந்தது.

குளிர் பொறுக்காமல் சூட்டிற்காக கைகளை உரசி கன்னத்தில் வைத்தேன். பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு பின்னால் , சந்தை தெருவில் கடை வாசல்கள் தோறும் கூட்டி பெருக்கி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள். சாலைக்கு மறுபக்கம் இருந்த பால் கடையில் அப்போதுதான் பால் வரத்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது. லாரியில் வந்த பால் டப்பாக்களை இறக்கி வைத்து வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கம் இறக்கிய டப்பாக்களை பையன்கள் வேகமாக சைக்கிளில் ஏற்றி வீடுகளுக்கு கொடுக்க விரைந்து கொண்டிருந்தார்கள். கடை முதலாளி போலிருந்தவர் ஒவ்வொரு டப்பாவையும் கணக்கெடுத்து ஒரு சின்ன சீட்டில் குறித்துக் கொண்டிருந்தார். அந்த கடையைத் தவிர சுற்றி வேறெங்கும் பெரிதாக சலனம் இல்லை.

பயண அசதியில் எனக்கு முதுகு வலிப்பது போல் இருந்தது. அங்கிருந்து விலகி அலைபேசியில் இயர்போனை பொருத்தி பாட்டுக் கேட்டவாறு ரயில் நிலையத்தின் சிமென்ட் இருக்கையில் வந்து அமர்ந்தேன். பக்கத்தில் தேநீர்க் கடையில் வானொலி சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. என் காதில் கேட்டுக் கொண்டிருந்த பாடலும் கடையின் ஒலிப் பெருக்கி பாடலும் ஒரு மாதிரி கலவையாகி வெறும் இரைச்சலாக மீந்தன. நான் என் அலைபேசியில் பாட்டு சத்தத்தை கூட்டினேன். ஒன்றிரண்டு நிமிடங்களில் காது வலிப்பது போலானது. இயர்போனை கழற்றி கால்சராயில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கதிர் எழும் தடயமே எங்கும் இல்லை. வானில் இருள் விலகி பனித் திரை விழுந்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் அசைவற்ற பெரும் உயிர் போல் பனி கண் நிறைய எங்கிலும் இருந்தது.

அப்போது மத்திம வயதை கடந்த இரண்டு பெண்கள் உயரமான நீல நிற பிளாஸ்டிக் பைகளை தூக்கியபடி வந்து எனக்கு அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். இரண்டு பேருமே குளிருக்காக தலையைச் சுற்றி கழுத்துக்குட்டை அணிந்திருந்தார்கள். விடிவதற்கு முன்பே அவர்கள் குளித்து முடித்து குங்கும முகத்தில் புத்துணர்ச்சியோடு இருப்பதை பார்த்ததும் தூக்கக் களைப்பில் என் முகம் காய்ந்து வாடியிருப்பது உணர்ச்சியில் தட்டியது. அனிச்சையாக கைக்குட்டையால் முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டேன். அவர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பைகள் பெரிதாக இருந்தன. ஆனால் கனமாகத் தோன்றவில்லை. முதலில் ஏதோ உடுப்புத்துணி என்று நினைத்தேன். பின்னர் அவர்கள் அவற்றை பிரித்தபோதுதான் உள்ளே சாமந்தி பூக்கள் குவிந்து கிடப்பது தெரிந்தது. இருவரும் முந்தானையில் பூக்களை கொட்டி வைத்து பேச்சுக் கொடுத்தப்படியே நூல் கோர்த்து அவற்றை தொடுக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திற்கு நூலோடு வேகமாக இழைந்து ஓடி பூக்களை இணைத்து விலகும் அவர்களின் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அதில் சுவாரஸ்யமிழந்து அலைபேசியை எடுத்து நேரம் பார்த்துவிட்டு திரும்பவும் பையில் வைத்தேன்.

மரங்களில் சாய்ந்து வீசிய மென் காற்றில் சாமந்தி மணமும் கலந்து வந்தது. அது நாசியில் மயக்கமாக தங்க இன்னொருபுறம் பனியில் தலையைச் சுற்றி குளிரேறிக் கொண்டிருந்தது. காதுகளை அழுந்த மூடி கால்களுக்கு நடுவே முகத்தை புதைத்துக் கொண்டேன். அருகில் யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. இயல்பாக திரும்பி பார்த்தேன். நல்ல உயரமும் கனமும் கூடிய வாட்டசாட்டமான மனிதர். மடிப்பு விழாத படு நேர்த்தியான உடை. பளபளவென்றிருந்த போலீஸ் காலணிகளில் சீராக அடிவைத்து நடந்து வந்தார். அவரைக் கண்டதும் பூக்கட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி “வணக்கம் சார்” என்று பூக்கள் விழாதவாறு முந்தானையை பத்திரமாக பிடித்துக் கொண்டு பாதிக் கையில் வணக்கம் வைத்தாள். மற்றவள் எதுவும் சொல்லாமல் மரியாதையாக சிரிக்க, காவல் அதிகாரி இருவரையும் பார்த்து “வணக்கம். வணக்கம்” என்று சொல்லிவிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார். அதுவரைக்கும் காலியாக இருந்ததுப் போலிருந்த சிமென்ட் பெஞ்ச் அவர் உட்கார்ந்ததும் அடைத்துக் கொண்டதுப் போலானது.

காவல் அதிகாரி என்பதாலேயே என்னில் ஒரு சின்ன ஜாக்கிரதை உணர்வு தொற்றிக் கொண்டது. அது ஜாக்கிரதை உணர்வா அல்லது பயமா என்று துல்லியமாக சொல்ல முடியவில்லை. அவரை பார்ப்பதை தவிர்த்தேன்.

நாங்கள் அமர்ந்திருந்த சிமென்ட் இருக்கைக்கு பின்னால் ரயில் நிலையத்தின் வெளிப்புறச் சுவர் சிதைந்து பிளந்திருந்தது. அதை ஒட்டிய புதர் சூழ்ந்த ஒற்றையடி பாதையில் ஒரு ஆள் விக்கி விக்கி நடந்துவருவதை பார்த்தேன். அவருடம்பில் இடது கை மட்டும் தான் தெரிந்தது. வலது கை சட்டைக்குள் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். காயம்பட்டு கட்டுப்போட்டிருக்கலாம். அல்லது வலது கையே இல்லாமலும் இருக்கலாம். சரியாக அனுமானிக்க முடியவில்லை. வெளிப்புற பாதைக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் நடுவே பள்ளமாக இருந்தது. கொஞ்சம் ஆழமான பள்ளம். அதனாலயே அந்த வழி பயன்படுத்தப்படாமல் பழக்கத்தின் சுவடற்று இருந்தது. வளர்த்தியான மனிதர் என்றால் பரவாயில்லை. அவர் குள்ளம். நடைமேடையில் ஒரு கையை ஊன்றி மூச்சுபிடித்து எக்கி மறுபக்கம் புரண்டு தவழ்ந்தே அவர் மேலே ஏறினார். சுற்றி நடந்து அவர் நேர் பாதையிலேயே வந்திருக்கலாம். ஒற்றை கையில்,இது வேண்டாத கஷ்டம். ஆனால் அவர் சிரமம் எதையும் காட்டிக் கொள்ளாமல் துள்ளலாக எழுந்து அழுக்கு சட்டையில் ஒட்டிய மணலை துடைத்துக் கொண்டார். இப்போது அவரை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. வலது கையை சட்டைக்குள் தான் மறைத்திருந்தார். அது துண்டுபடவில்லை. ஆனால் நடக்கும்போது லேசாக ஒரு பக்கம் தாங்கினார். சட்டை, கால்சராய்க்கூட நைந்து சாயம் போயிருந்தது. இருந்தும் உடல்மொழியில் ஒரு அசாதாரணமான உற்சாகம்.

பழக்கமானவர் போல் அவர் நேராக காவல் அதிகாரிக்கு பக்கமாக சென்றார். செல்லும்போது வழியில் என் துணிப்பையை அவர் மிதிப்பதுப் போல் வர நான் அதை தள்ளி வைத்தேன். காவல் அதிகாரி அவரை கண்டுகொள்ளவில்லை. அவர் இன்னும் பக்கத்தில் போய் கூன் போட்டு குழைந்து சிரித்தார். காவல் அதிகாரி முகம் கொடுக்காமல் “என்னடா?” என்றார்.

“ஆங்…ஆங்” அவருக்கு குரல் வரவில்லை. ஊமை வாய் முழுக்க சிரித்து ஒற்றைக்கையில் வணக்கம் மட்டும் வைத்தார். “ஆங்…ஆங்”

“சரி போ”. காவல் அதிகாரி விரட்டுவது போல் சொன்னார்.

அவர் அகலவில்லை. ஒரு அடி பின்னால் நகர்ந்து பரிதாபமாக பார்த்தார். பின் பொறுமையாக சட்டைக்குள் கை நுழைத்து வலது கையை எடுத்து வெளியே தொங்கவிட்டார். முட்டி எலும்பில் இணைப்பு முறிந்திருப்பது போல் முழத்திற்கு கீழே வலது கை தனிச் சதையாக ஆடியது. என்னை தாக்கியது குரூரமா அருவெறுப்பா என்று பிரித்து சொல்ல முடியவில்லை. உடனேயே அதை மறைத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் மனம் அடங்கவில்லை. கண்களை விலக்க இயலாமல் மறை பார்வையில் அவருடைய வலது கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். வெளிக்காயம் எதுவும் இல்லை. ஆனால் அவரது முழங்கை உடைந்து துவண்டிருந்தது. சுண்டிவிட்ட எலாஸ்டிக் நூல் கடைசி விசையில் மெல்ல அதிர்வது போல் அது முன்னும் பின்னும் ஆடியபடி இருந்தது. அவர் அதை இன்னும் அதிகம் அசைத்தவாறு காவல் அதிகாரிக்கு அருகாமையில் சென்றார். “ஆங்…ஆங்”. அவர் குரல் இரைந்து யாசித்தது. காவல் அதிகாரி அதை கேட்காததுப் போல் அமர்ந்திருக்க, அவர் சற்று குரலை உயர்த்தி மறுபடியும் “ஆங்…ஆங்” என்றார். காவல் அதிகாரி அவரை பொருட்படுத்தவே இல்லை. உடனே அவர் இடது கையால் தன் வலதுப் புற முழங்கையை வேகமாக ஆட்டிவிட்டார். அது தானாக ரப்பர்த் துண்டு போல் வேகமாக ஆடியது. எந்த நொடியும் பிய்ந்து தனியே கீழே விழுந்துவிடும் என்பது போல். எனினும் அவரிடம் வலி தெரியவில்லை. பொம்மை விளையாட்டு என திரும்பவும் அவரே முழங்கையை பிடித்து நிறுத்தினார். காவல் அதிகாரி துளிக்கூட அசைந்துக் கொடுக்கவில்லை. எனக்கு தான் அக்காட்சியை பார்க்கவே மனம் திணறியது. இன்னொரு பக்கம் பனி வேறு. குளிருக்காக மீண்டும் கைகளை இணைத்து கட்டிக் கொண்டேன். என் முழங்கைகளின் ஆரோக்கியத்தை திடத்தன்மையை உணரும்போதே எதிரே அவர் பஞ்சுப் பொதிப் போல் தன் கையை அசைத்து இரைஞ்சுவது கண்களிலேயே தேங்கிக் கொண்டிருந்தது.

“ஆங்…ஆங்”.

நடுங்கி ஒடுங்கும் மிருகத்தின் சத்தம். ஆனால் அவர் குரலில் வலியின் துடிப்பே இல்லை. அதுதான் என்னை கூடுதலாக அச்சமூட்டியது. பையில் இருந்து காசை எடுத்து கொடுக்கலாமா என்று எனக்கே உறுத்தியது. ஆனால் அவர் என்னை கடந்தே காவல் அதிகாரியின் பக்கம் சென்றார். ஏன் என்னிடம் பிச்சை கேட்கவில்லை? காவல் அதிகாரியிடம் தெரியும் பிடிவாதமும் பரிச்சயமானத் தோரணையும் கூட என்னை குழப்பின. பூக்காரப் பெண்கள் சாமந்தியை தொடுத்தபடி அவ்வப்போது இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சர்க்கஸ்காரன் அடுத்த வித்தைக்கு நகர்கிற மாதிரி அவர் இம்முறை தன் முழங்கையை பின்பக்கமாக மடக்கி பிடித்து பிறகு கீழே தொங்கவிட்டார். இரண்டு தடவை அதேப் போல் அவர் வலது கையை மடக்கி மடக்கி தொங்கவிட காவல் அதிகாரி வெறுப்பாக “என்னடா வேனும் உனக்கு?” என்றார்.

“ஆங்..ஆங்”.அவர் தேநீர் கடையை சுட்டிக் காட்ட, காவல் அதிகாரி சலிப்பாக தலையை தடவினார். உணர்ச்சி காட்டாமல், “இந்தா” என்று தன் சட்டைப் பையிலிருந்து இருபது ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தார்.அதுவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தவர் உடனேயே உற்சாகமாகி இடது கையால் காவல் அதிகாரிக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு காசைப் பெற்றுக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கி நடந்தார். அவர் தாங்கி நடந்து விலகியதும் காவல் அதிகாரி என் பக்கம் திரும்பி ஏளனமாக புன்னகைத்தார். நானும் மழுப்பலாக சிரித்தேன்.

“மோசமான ஆள் தம்பி அவன்.” தேநீர்க் கடையின் திசையில் கண்ணோரமாக பார்த்துவிட்டு எச்சரிப்பதுப் போல் தொடர்ந்தார். “பார்க்கத்தான் கிறுக்கன் மாதிரி இருப்பான். ஆனா வெவகாரமானவன். பலே ஆள். சைக்கிள் திருடன்”

“அவரா?”.எனக்கு ஏதோ தொடர்பில்லாத வேறு விஷயம் பற்றி பேசுவது போலிருந்தது.

“அவனே தான். எந்த பூட்டையும் அசால்ட்டா ஒடைச்சு சைக்கிள திருடிருவான். எத்தனையோ வாட்டி சொல்லி பார்த்தோம். கேக்கவே இல்ல. அப்புறம் நாங்கதான் கைய ஒடைச்சு அனுப்பிட்டோம்”

நான் புரியாமல் விழிந்தேன். “நீங்களா?”என கேட்டு, பின் திக்கி “இல்ல. யாரு?யார சொன்னீங்க?” என்றேன்.

“நாங்கதான். ஸ்டேஷன்ல வச்சி ஒடைச்சு விட்டோம். பின்ன சொன்னா கேக்கனும்ல? ஊர்ல இருக்குறவன் பொருள எல்லாம் எவ வேணும்னாலும் தூக்கிட்டு போலாம்னா அப்புறம் எதுக்கு போலீஸ்?என்ன சொல்றீங்க”

எனக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. மழுப்பலாக தலையாட்டினேன்.

“ஆங்…ஆங்”. தேநீர் கடைக்கு பக்கத்தில் நின்று சூடான காகித கோப்பையை கையில் பிடித்தவாறு அவர் காவல் அதிகாரியை நோக்கி சத்தம் கொடுத்தார்.

“என்னடா?”. காவல் அதிகாரியின் குரல் அதட்டலாக ஒலித்தது.

அவர் தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை காவல் அதிகாரியை நோக்கி நீட்டி உயர தூக்கி சமிக்ஞை காண்பித்தார். “எனக்கு வேணாம். நீயே குடி” என்று கூறிவிட்டு என் வசம் திரும்பி “நக்கல பார்த்தீங்களா?” என்றார் காவல் அதிகாரி.

என் மனம் வேறு யோசனையில் தன்னை இழந்துக் கொண்டிருந்தது. கடை வாசலில் நின்று இடது கையில் கோப்பையை பிடித்து வாயால் ஊதி ஊதி தேநீர் பருகிக் கொண்டிருந்தார் அவர். வலது முழங்கை தளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. பலவீனமான ஒரு மெல்லிய ஜவ்வுதான் அந்த முழங்கையை இன்னும் விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.தோலுக்கடியே ரத்த வரியோடிய உள்சதை பரப்பு, தசை நார்கள், எலும்புகளை இணைக்கும் ஜவ்வு என எல்லாமும் ஒரே நேரத்தில் கவிச்சையாக என் மனதில் எழுந்தன. மனித உடலில் எல்லாமே வலுவற்றவை. சின்ன சமன் குலைவில் பிசகிவிடுபவை. நொறுங்குபவை. சாதாரண பேனாக் கத்தியில் கிழிந்துவிடுபவை. போலீஸ் அடியில் உடைபவை. பக்கத்தில் காவல் அதிகாரி எழுந்து நின்று நெட்டி முறித்து மறுபடியும் உட்கார்ந்துக் கொண்டார். எப்படி அவர் அந்த முழங்கையை உடைத்திருப்பார் என்று யோசித்தேன். லட்டியால் ஓங்கி அடித்து அல்லது கையை வெறித்தனமாக முறித்து மடக்கி… தூரத்தில் ஒரு ராட்சஸ ஓங்காரம். தொடர்ந்து தொண்டை அலறும் வலி ஓலம். பயமாக இருந்தது.

அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தேன். ரயில் வர வேண்டிய நேரம் தாண்டி தாமதாகிக் கொண்டிருந்தது. சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும். குளிர் வேறு தணியாமல் எரிச்சல் ஏற்படுத்தி கொண்டிருந்தது. அதற்குள் அவர் தேநீர் குடித்துவிட்டு மறுபடியும் எங்கள் திசையில் நடந்து வந்தார். காவல் அதிகாரியை கடக்கும்போது இடது கையால் வலது கையை தூக்கி வணக்கம் வைத்து விலகினார். நான் அவரை தவிர்ப்பதற்காக தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை தாண்டி சென்றார். “க்ரீச்” என்று எதிர் நடைமேடையில் ஒரு ரயில் தேய்ந்து நின்று பின் “பாங்” என்று கணைத்து கடந்துச் சென்றது. ரயில் சத்தம் தடதடத்து ஓய்ந்தபோது அருகாமையில் யாரோ மூர்க்கமாக காறி உமிழும் சத்தம் கேட்டு நான் துணுக்குற்று திரும்பினேன்.

“ச்சீ.பொறம்போக்கு”.பூக்காரிகளில் ஒருத்தி கை உடைந்த ஊமையனை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள். “பொறுக்கி நாய். எச்சக்கலை”

அவள் காறி துப்பியதில் சட்டை மேல் படிந்த எச்சிலை துடைத்துவிட்டு அடிக்குரலில் சத்தமாக சிரித்தார் அவர்.பின் ஒரு காலை ஊன்றி சுழன்று நடைமேடையில் இருந்து குதித்து மண்ணில் விழுந்து எழுந்து காய்ந்த மணல் பாதையில் விக்கியவாறே நடந்து சென்றார். நீல பிளாஸ்டிக் பைக்கு அண்டையாக தரையில் எச்சில் தடம் நுரையோடிருக்க அவர் விகாரமாக சிரித்தது மிஞ்சிய எதிரொலிப் போல் இன்னும் கேட்டது.

இன்னொரு பூக்காரி திட்டிக் கொண்டிருந்தவளின் கைபிடித்து “என்னக்கா?” என்று பதற்றமாக கேட்டாள்.

அவள் மெல்ல “இப்படி பண்ணி காட்டுறான் பொறம்போக்கு” என்று கையை மேலும் கீழும் அசைத்து சைகை காட்ட, கேள்விக் கேட்டவள் தலையிலடித்து “ச்சே பன்னாடை.” என்றாள்.

“அவனுக்கு போய் அந்தாள் காசு கொடுக்குறான் பாரு. அவன் ஒரு பைத்தியக்காரன் ”. தலை குனிந்தவாறு காவல் அதிகாரியை சுட்டி கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு அவள் மீண்டும் பூ தொடுக்கலானாள். காவல் அதிகாரி எதையும் கவனிக்கவில்லை.அவர் அலைபேசியில் என்னவோ செய்துக் கொண்டிருந்தார்.

“ஆமாக்கா.அவனுங்கள விடு” என்று மற்றவள் பிளாஸ்டிக் பையில் முந்தானையை உதறி உதிரிப் பூக்கள் கொட்டிவிட்டு

“யக்கா…புட்லூர்ல யாரோ ஒரு பொண்ணு வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள கூட்டினு போய் காமினு உயிர எடுக்குறான்.. நாளைக்கு வர்றியா?போயிட்டு வந்துருவோம்” என்றாள்.

“வவுத்துல பாம்பு வளருதா? என்னடி சொல்ற?”

“ஆமாக்கா. இப்போதான் கலியானம் ஆன பொண்ணாம். முழுகாம இருக்கான்னுட்டு ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போயிருக்காங்க. அங்க மெசின்ல படம் புடிச்சு பார்த்தா வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள நெட்டுல பாத்து சொன்னான்”.

“பார்ரேன்டி அம்மா.” அவர்கள் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்க, நான் அயர்ச்சியோடு எழுந்தேன். “திருவள்ளுவர் வரை செல்லும் அடுத்த ரயில் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்” என்று ஒரு கரகர குரல் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தது. நான் என் துணிப்பையை திறந்து சால்வையை தேட ஆரம்பித்தேன். குளிர் விடுவதாக தெரியவில்லை.

oOo

ஒளிப்பட உதவி – sabareesh seshadri