கோவை தியாகு நூல் நிலையத்தில் நடக்கும் எங்கள் வழக்கமான வார இறுதிச் சந்திப்பின்போது, தமிழின் இன்றைய பிரபல எழுத்தாளர் குறித்த ஒரு பேச்சில் நண்பர் ஒன்று சொன்னார். அந்த எழுத்தாளர் தன் வாழ்க்கை அனுபவங்கள் என்று குறிப்பிடும் சம்பவங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், அவருக்கு குறைந்தபட்சம் இரு நூறு வயதாவது இருக்க வேண்டும் என்றார் அவர். நான் வேறொரு பிரபல எழுத்தாளரின் பெயரைச் சொல்லி அவருக்கும் இது பொருந்துமே, என்றேன். மற்ற நண்பர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஆனால், பின்னர் அந்த அரட்டை மனநிலையிலிருந்து விடுபட்டு சற்றே நிதானமாக அதைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்தது. வெவ்வேறு வாழ்க்கைகளை தன் வாழ்வாகக் காணச் செய்வதில்தான் எழுத்தாளன் வெற்றி பெறுகிறான். புனைவிலோ, அல்லது கட்டுரையிலோகூட இடம் பெறும் அனுபவங்கள் எல்லாமே எழுதியவனுக்குரியதாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லைதான். எழுத்தாளன் ஒரு அனுபவத்தை விவரிக்கும்போது, அங்கு நேரடி அனுபவம் பேசுகிறது, ஒரு வகையில் அந்த அனுபவம் அவனுடையதுதான் என்று வாசகனை நம்ப வைப்பதில்தான் புனைவுக்கலையின் வெற்றி இருக்கிறது (அந்த அனுபவங்களில் பிறர் ஏற்கும் பாத்திரங்கள் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து அதன் நம்பகத்தன்மை குறித்த கருத்து வேறுபாடு எழலாம்). யாருக்கோ, எங்கோ, எப்போதோ நிகழ்ந்ததை, தன்னுடையதாக மாற்றி, அதை வாசிக்கும் ஒருவரை, அவருடையதாக உணர வைப்பதே புனைவெழுத்தாளனின் வெற்றி..
முதலில் கேட்ட கேள்விதான் – இத்தனை அனுபவங்களை எழுதுகிறாரே, இதெல்லாம் உண்மையாக இருந்தால் இவருக்கு எத்தனை வயதிருக்கும்?- இப்போது போகன் சங்கர் எழுதி வெளிவந்திருக்கும், அல்லது அவர் முகநூல் மற்றும் தனது வலைத்தளத்தில் என்று முன்னரே எழுதியவற்றை தொகுத்து வெளிவந்திருக்கும், ‘போகப் புத்தகம்‘ நூலை வாசிக்கும்போது மனதில் தோன்றுகிறது. அதற்கான அதே பதிலையும் தொடர்ந்து சொல்லிக் கொள்ள வேண்டியதாகிறது – எழுத்தில் காணப்படும் ‘நான்’, எழுதியவனின் ‘நான்’ இரண்டும் வெவ்வேறு; இவற்றை ஒன்றாய்க் காணும் தோற்றப்பிழை, வாசிப்பின்பத்தை முன்னிட்டு வாசகன் எழுத்தாளனுக்கு அளிக்கும் குறைந்தபட்ச சலுகை.
பின்னர் வரும் கேள்விகள்- இது என்ன மாதிரியான நூல்? சிறுகதைத் தொகுப்பா? அல்லது அனுபவக் குறிப்புகளா? போகனே தன்னிடமும் அதற்கு விடை இல்லை, என்று முன்னுரையில் குறிப்பிட்டு விடுகிறார். புனைவம்சம் மேலோங்கியிருக்கும் அனுபவங்கள், அல்லது அச்சு அசல் அனுபவங்கள் போல் தோன்றும் புனைகதைகள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம், ஒரு வசதிக்காக.
எப்படியாயினும், அவரது சிறுகதைத் தொகுப்பான ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படும் அதே அனுபவத்தை, வெவ்வேறு அளவில், இந்த நூலும் தருகிறது என்பதில் ஐயமில்லை. இதில் மொத்தம் 106 கதைகள்/ குறிப்புகள் உள்ளன. அனைத்துமே அவருக்கும் நமக்கும் நன்கு அறிமுகமான கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையில், அதிகபட்சம் திருநெல்வேலி அல்லது மதுரை வரை நடைபெறும் கதைகள். அவற்றில் நிச்சயம் பாதிக்குப் பாதி, நம்முள் உடனடியாக ஒரு பாதிப்பை உண்டாக்குகின்றன.
இந்தக் கதைகளை தோராயமாக ஒரு நான்கு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம்- 1.காதல், காதல் தோல்வி, முறை மீறிய உறவுகளால் வரும் சிக்கல்கள். 2. யதார்த்த வாழ்வின் மிக அருகிலேயே அல்லது அதன் இணையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும், யதார்த்தத்தை மீறிய அமானுஷ்ய அனுபவங்களால் நிரம்பிய வாழ்க்கை; ஜோதிடம், ஆவிகள், மத நம்பிக்கைகளின் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை பற்றியது. 3. வாழ்வின் மிகக் கொடுமையான சூழலிலும் அடியோடு நைந்து கிடக்கும் நிலையிலும் எல்லா வகையிலும் கைவிடப்பட்டவர்களும்கூட, தங்களைப் போன்ற பிற மனிதர்கள் அல்லது தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்த கதைகள் 4. நோய்வாய்ப்பட்ட நிலை உருவாக்கக்கூடிய தீவிர மற்றும் நகைச்சுவை கலந்த அனுபவங்கள். இவைகூடவே காரணமே இன்றி அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய அபத்தங்கள் நிறைந்த நிகழ்வுகள். சில கதைகளை மேலே சொன்ன எல்லாம் கலந்தது என்றும் சொல்ல முடியும்.
இந்தக் கதைகளில் பெரும்பாலானவை நம்மைத் தொடுவதற்கும் நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பவை, போகனின் நடை, கூரிய அங்கதம், ஒரு கசந்த நகைச்சுவை உணர்வு (Wry Humour) பல சமயங்களில், ஜெயமோகனும் சுஜாதாவும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க இயலவில்லை.
‘பொருட்காட்சி’, ‘அசல் ராஜா’, ‘குரூரம்’, ‘சந்திர பிரபை’, ‘அமரன்’, ‘நெருப்பு’, ‘அப்பாக்களின் நாட்கள்’, ‘நீல வெளிச்சம்’, ‘பண்டிகை’, போன்ற கதைகள் உருவாக்கும் பெரும் அழுத்தத்தை உடனடியாக சமனப்படுத்தும், ‘இலக்கியக் கூட்டம்’, ‘comically yours’, ‘ஒரு கர்நாடக இசையும் தமிழ் மனமும்’, ‘வசிய மை’, ‘ஆன்லைன் ஷாப்பிங்’, ‘இரண்டு டாக்டர்கள்‘, ஆகிய நகைச்சுவை கதைகள் என்று கலந்து கட்டி சுவாரசியமான ஒரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்தப் புத்தகம்.
தமிழ்ப் புத்தகங்களுக்கான பின்னட்டை blurbகள் பல சமயங்களில் புத்தகத்தை பற்றிய மிகை மதிப்பீடுகளாகவும், அதைவிட சிக்கலானவையாகவுமே அமைந்து வரும் இந்த காலகட்டத்தில், இந்த புத்தகத்தின் blurb மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளதை சொல்லியே ஆகவேண்டும்.
ஒரு முறை சுஜாதா தமிழ்வாணன் பற்றி எழுதும்போது ஒரே சமயத்தில் வள்ளலாராகவும் ப்ரூஸ் லீயாகவும் தோன்றியவர் என்று குறிப்பிட்டார். அது போல போகனைப் பற்றி அல்லது இந்த நூலில் வரும் “நான்” பற்றிச் சொன்னால், ஒரே சமயம் தேவதாஸ் ஆகவும் கோகுலத்துக் கிருஷ்ணாகவும் தோற்றம் அளிக்கிறார் எனலாம். அவ்வப்போது எம்ஜியார்கூட (மிகப் பெரும்பாலும் பெண்களே இவரை நாடுகிறார்கள். இவர் அவர்களை அல்ல). இவை, என்னடா ஒரேயடியாக அலட்டிக் கொள்கிறாரே என்று தோன்றாமலிருப்பதற்கு முக்கிய காரணம், போகனிடம் உள்ள சுய எள்ளல். என்றாலும், இந்த இரு எல்லைகளின் வசீகரம் அவரது இந்தக் கதைகளுக்கு அலுப்புத் தட்டாத ஒரு சுவாரசியத்தை அளிப்பது உண்மைதான்.
‘லைட் ரீடிங்’ என்று வகைமைப்படுத்தக்கூடிய இத்தொகுப்பில் போகன் கணிசமான இடங்களில் வெறும் சுவாரசியத்தைத் தாண்டி ஆழங்களைத் தொடவும் செய்கிறார்தான். ஆனால் பின்னது அதிகம் அமையும் படைப்புகளை நோக்கி அவர் முன்னேறுவதை முன்னது தடுத்து விடக்கூடாதே என்ற கவலை இந்தப் புத்தகத்தை முடிக்கும்போது தோன்றாமலில்லை.இதுகூட அவரது வெற்றிதான் என்று சொல்லலாமா?