இன்றைக்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை கையிலேந்துகையில் சில விநோதமான வாக்கியங்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. சில பத்திகளை காக்கைகள் தூக்கிச் சென்றிருக்குமோ.. கூகுள் மொழிபெயர்ப்பின் கைங்கர்யமோ. இப்படியான இத்தனை கேள்விகளையும் சில்லறை அவநம்பிக்கைகளையும் தாண்டித்தான் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. இப்பின்னணியில் இரண்டு விஷயங்கள் முக்கியமான கருவிகள் ஆகின்றன. ஒன்று, உள்ளுணர்வு. பிறிதொன்று பிற மொழி அறிவு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மிக மோசமான தமிழ்மொழிபெயர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அப்படியே வளைவுப்பாதையில் சென்று ஆங்கில புத்தகத்தையே தேர்வுசெய்து என்னை காப்பாற்றிக் கொள்வதுண்டு. நமக்கு தெரியாத மொழியிலிருந்து மொழியாக்கம் எனும்பட்சத்தில் உள்ளுணர்வுதான் வழிநடத்துநர். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அம்மொழியாக்கம் குறித்த என் மதிப்பீடு. எனக்கு மலையாளம் தெரியாது என்ற எல்லைக்குள் நின்றுகொண்டே குளச்சல் மு. யூசுப் அவர்கள் மொழிபெயர்த்த மீஸான் கற்கள் நாவலை ஒரு நல்ல உள்ளுணர்வுடன் வாசித்தேன். ஏற்கனவே அவருடைய மொழிபெயர்ப்பில் பஷீரினுடைய படைப்புகளை வாசித்திருந்தேன். இலக்கியச் சுத்தமானமொழி, பிரதேச மொழி என அந்தந்த படைப்புகளுக்கு ஏற்றவாறு அவரால் ஒரு சட்டையை கழற்றி புதுசட்டை அணிந்துகொள்வது போல ஒரு நடையை சுவீகரித்துக் கொள்ளயியல்கிறது. மேலும் கதாபாத்திரங்களின் தொனியை அவரால் அப்படியே கடத்த இயல்கிறது. இந்த தொனியை மொழிபெயர்ப்பது என்பதுதான் தமிழில் எழுதப்பட்டது என்றெண்ண வைக்கும் ஒரு சரளமான அசல்த்தன்மையை நாவலுக்கு போர்த்துகிறது என்றே நினைக்கிறேன். மேலும் கசிந்துருகச்செய்யும் வரிகளை உக்கிரம் கொப்பளிக்கும் வரிகளாக மொழிபெயர்த்துவிடுகிற அபாயம் பெருகிவிட்ட தற்கால மொழிபெயர்ப்புச் சூழலில் மேற்குறிப்பிட்ட இரண்டும் முக்கியமான பண்புகள்.
ஒற்றைவரியில் சொல்ல முயன்றால் மீஸான் கற்கள், ஒரு அந்த கால இஸ்லாமிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் வாழ்க்கையையும் அதன் வீழ்ச்சியையும் சித்தரிக்கும் நாவல். புனத்தில் குஞ்ஞப்துல்லா அப்படியே நம் முன் ஒரு கதையை தூக்கிவீசுகிறார். அவர் அந்த கதையில் யாருடைய தரப்பையும் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, முன்பு இது இப்படி இருந்தது ஆனால் இன்று பாருங்கள் இது இப்படி மாறிவிட்டது என்று சொல்கிறார். காலத்தால் சிறுசிறுக துருவேறி பொடிப் பொடியாக மாறிவிட்ட உடைக்கயியலாத இரும்புத்துண்டத்தை போன்ற வாழ்க்கையே அவருடைய விசாரணையின் மையம். விசாரணை அறிக்கையில் இறுதி முடிவு எனும் இடத்தை பெரும்பாலும் வெற்றிடமாக விட்டுவிடுகிறார். மீஸான் கற்கள் நிறைந்த பள்ளிவாசல், அப்பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் எரமுள்ளான், அந்த பள்ளிவாசலையொட்டிய அறக்கல் இல்லம், கருணை மற்றும் குரூரத்தின் விநோதமான கலவையுடன் குறுநில மன்னர் போல அந்த அறக்கல் இல்லத்தில் வசித்துவரும் கான்பகதூர் பூக்கோயா தங்ஙள், அவருடைய மனைவி ஆற்றபீவி, அவருடைய மகள் பூக்குஞ்ஞி, பூக்கோயா தங்களின் பணியாளர்கள், பூக்கோயா தங்ஙளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் நீலியின் மகன் குஞ்ஞாலி, பாடகனான பட்டாளம் இபுறாகி இவர்கள் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். கூடவே மரணமும் கட்டுக்கடங்காத இச்சையும் ஒரு கதாபாத்திரம் போல இந்நாவலில் அலைகிறது.
பூக்கோயா தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் மானுட உருவம். கருணை, இச்சை, அதிகாரம் என்ற முக்கோணத்திற்குள் அலையும் முன்தீர்மானிக்க முடியாத குணாம்சங்களின் தொகுப்பாகவே நாவலில் அவருடைய கதாபாத்திரம் வெளிப்படுகிறது. தனது குதிரையில் ஏறி மீனவக் குடிசையில் அத்துமீறுவது அவருடைய ஒரு முகம் என்றால் ஊரில் காலாரா வந்து மக்கள் அவதிப்படும்போது அதற்கு முன்னால் வந்து நிற்பது அவருடைய இன்னொரு முகம். கான்பகதூர் பூக்கோயா தங்ஙள் தன் இச்சையை பொருட்டு குத்தி வீழ்த்தபடும்போது நாவல் தன்னுடைய இன்னொரு வீச்சை அடையத் தொடங்குகிறது. அதிகாரம் இருக்ககையில் அதை பயிற்சி செய்ய ஆள் இல்லாதபோது உண்டாகும் வெற்றிடம் அந்த அதிகாரத்தையே விழுங்க முயல்வதும் இன்னொரு ஆளை தேடுவதுமான காட்சி ஒன்று நாவலிலிருந்து எழுந்துவருகிறது. அறக்கல் இல்லம் மண்ணில் புதைக்கப்பட்ட சவத்தை போல உருகுலையத் தொடங்குகிறது. தற்கொலை, மரை கழறல், விட்டு வெளியேறுதல் என அறக்கல் இல்லத்து மாந்தர்கள் சரிந்துவீழ்கிறார்கள்.
ஏதோ முடிந்தால்தான் ஏதோ தொடங்கும் என்பதுபோல, ஒருகட்டத்தில் நாவலின் பாத்திரங்கள் இறந்துபோகிறார்கள் அல்லது அதற்கு நிகரான நிலையை அடைகிறார்கள். காமம் மரணத்தின் முகமூடியை அணிந்துகொள்கிறது. மரணம் காமத்தின் முகமூடியை பதிலுக்கு அணிந்துகொள்கிறது. சிலசமயம் காமமும் மரணமும் ஒன்றேபோல் ஆகிவிடுகின்றன நாவலில். வடக்கு மலபார் முஸ்லீம்களின் வாழ்வியல் நாவலெங்கும் விவரிக்கப்படுகிறது. அவர்களது பழக்கவழக்கங்கள், தொன்மங்கள், கல்வி முறை என அனைத்தும் நாவலின் வாயிலாக ஒரு இயங்கும் சித்திரமாக எழுந்துவருகிறது. இந்நாவலில் வருகிற ஜின்களை குறித்த பகுதி கனவுத்தன்மையை உண்டாக்கிச்செல்கிறது. நாவலின் சாரத்தை தொகுத்துக்கொள்ள முயலும்போது இப்படி ஒரு உருவகம் மனதில் தோன்றுகிறது. எல்லா சன்னல்களும் திறந்திருக்கும் நிறைய ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம். அதை இயக்குமிடத்தில் இச்சையையும் அதிகாரத்தையும் உடல் பாகமாக கொண்ட மனிதர். வாகனம் புறப்படுகிறது. இறுதியில் மரணம் எனும் நிறுத்தத்தில் வாகனம் பழுதடைந்து நிற்கிறது. அதை வருங்காலம் வெறித்துப் பார்த்துபடி கடந்துசெல்கிறது. இன்னொருவிதமாக கூற முயன்றால், வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை என்று கூட சொல்லலாம். இது வெறும் வீழ்தல் அல்ல, ஒளியின் வருகையையும் தீர்க்கதரினசமாக தன்னுள் பொதிந்து வைத்திருக்கம் ஒரு வீழ்ச்சி.
ஏராளமான கதாபாத்திரங்கள். எக்கச்சக்கமான தருணங்கள். கிராமத்து வாழ்க்கையின் அப்பாவித்தனங்கள். அதன் உன்மத்தங்கள். சகலத்தையும் பாரபட்சமின்றி கேலியுடன் அணுகும் ஒரு நவீனத்துவ குரல். ஒரு எடைமிகுந்த காலத்தின் கடைசி மூச்சிரைப்பு சப்தம் என இந்நாவல் ஒரு பரந்த பரிணாமத்துடன் பூரணித்து நிற்கிறது. இந்நாவலை மிகச் சிறந்த முறையில் தொய்வில்லாமல் மொழியாக்கம் செய்து தந்திருக்கும் குளச்சல் மூ யூசுப் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்
மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா
காலச்சுவடு வெளியீடு