வே. நி. சூரியா

குளத்தங்கரை

வே. நி. சூரியா

குளத்தின் மீது பிரதிபலிக்கும் மரத்தின் மீது கல்லெறிகிறாள். கல்லேதும் விழாமலே கல் விழுந்ததைப் போல குளம் சலனமடைகிறது. மரமோ அசைவற்ற குளம் போல நிற்கிறது, கிளைவிரித்து. வந்தமர்ந்த காக்கைகள் வெயில் உலர்த்திக்கொண்டு வழக்கம்போல பழங்களை கொத்திச் சென்றன. குளத்திலிருந்து இலைகள் சில உதிர்ந்து மரத்தின் மீது மிதந்தன. அப்போது கூட அவளெறிந்த கல் திரும்பவில்லை.

மெய்யோ பொய்யோ

வே. நி. சூரியா

 

கண்ணாடியிலிருந்த
பறவையின் தவறி விழும்
சிறகுகளிலிருந்து
சிறுசெடியென அதே
கண்ணாடி
பிரதிபலிப்பிற்குள்
விழுகிறேன்.
பிரதிபலிப்பிற்குள்ளிருந்து
பெருஞ்செடியாக
அல்லாமலும் சிறுகாளான்
சூழாமலும் விதையென
வான் நோக்கி
முளைக்கிறேன்.
பிரதிபலிப்பிற்கு வெளியே
விழும் என் நிழலில்
செடிகளும் காளான்களும்
மரங்களும்
இளைப்பாறுகிறது.

சிதிலங்கள்

வே. நி. சூரியா

இருள் கொஞ்சும் நேரம். எப்போதும் போல கடல் அலைகள். எப்போதும் போலத்தான் அந்த நேரமும். அங்கு தான் அழகிய முகம், விரித்து விடப்பட்ட கூந்தல் , கடல் அலையை கருணையோடு பார்த்து கொண்டிருக்கும் மாதவி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் காலடித் தடம் மண்ணில் பதிவதும் அதை கடல் அலைகள் அழிப்பதுமாக ஒரு விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

அநேகமாக அங்கு அவளைத் தவிர அந்நேரம் யாருமில்லை. ஏன் அங்கு மற்ற கடற்கரைகளை போல கூட்டமில்லை என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. ஏன் அந்த கடற்கரையை மற்றவர்கள் வெறுக்கிறார்கள் என்பதன் பதில் அந்த மற்றவர்களுக்கு ஆளுக்கொரு விதமாக தெரிந்திருந்தது. அந்த நகரம். அப்படி சொல்லலாமா என்பது கூட தெரியவில்லை.

ஒரு ஆள் அரவமற்ற கடற்கரை, ஆட்கள் அதிகம் வசிக்காத பகுதிகள், ஒரு பாழடைந்த நூலகம் மேலும் தீயில் கருகிய பல அரசாங்க கட்டிடங்கள் , இன்னும் தரையில் சிதறிக் கிடக்கும் ராணுவ உடைகள், பல செயலிழந்த வெடி குண்டுகள் என ஒரு இடம் . அங்கு தான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு நிசப்தம் அங்கு. அந்த இடத்தை விட்டால் சக மனிதர்களிடம் இருந்து தப்ப வேறு எந்த இடமும் இல்லை. மாதவிக்கு ஒரு சிதிலமடைந்த வீடு அங்கு தான் சொந்தமாக இருந்தது. தற்காலிக சொந்தமாக இருந்தது. அந்த நகரமே எரிந்து போன கோலத்தில் இருந்ததால் அவளுக்கு சமைக்க எரிபொருள் பஞ்சமும் இல்லை.தன்னை போகப்பொருளாக எண்ணும் மனித மிருகங்கள் யாருமில்லாததால் அந்த ஆள் அரவமற்ற நகரில் எப்போதோ பெய்த மழையில் நிரம்பி எப்போதுமே மனித குப்பைகள் மிதந்து வரும் நவீன குளங்களை போல அல்லாத ஒரு நீர் தேக்கம் இருந்தது குளிப்பதற்கு. அதுவும் அவள் ஆடைகள் அற்று நிர்வாணமாக குளிக்கும் அளவிற்கு நிரம்பி வழியும் தனிமையுடன்.

அடிக்கடி அவளுக்கே தோன்றும் இது எனக்கு மட்டும் படைக்கப்பட்ட நகரமா என்று. கடைசியில் இந்த தனிமையை எண்ணி இதை இழந்து விடக்கூடாது என இது எனக்கான நகரம்.இங்கு வேறு யாரும் இருக்க முடியாது.இது எனக்கான நகரம் என அவளுக்கு அவளே சொல்லிக் கொள்வாள். இப்படி ஒரு ஆள் அரவமற்ற அழகான தனிமையுடைய நகரை ஏன் இந்த மனிதர்கள் கைவிட்டார்கள் எனவும் அடிக்கடி யோசித்து கொள்வாள்.

இப்படிப்பட்ட ஒரு நகரத்தின் ஆள் அரவமற்ற கடற்கரையில் நடந்து கொண்டிருந்த மாதவிக்கு என்னவென்றே தெரியாத பல சிந்தனைகள் மின்னி மின்னி மறைந்தன. தனிமையில் இருக்கும் போது மனிதன் உண்மையாக இருக்கிறான் என மனோதத்துவ அறிஞர்கள் சும்மாவா சொன்னார்கள். அந்த தனிமையில் பல வருடங்களாக ஊறிப்போனதில் அவள் முழு உண்மையாக மாற்றப்பட்டிருந்தாள்.

அவள் ஒரு கடற்பறவையை காண நேர்ந்தது.அது போல அவள் பறவைகளை கண்டு வெகுகாலமாகியிருக்கும்.ஏன், விலங்குகளைக் கூட கண்டதில்லை அவள் இந்த நகரத்தில். எப்போதோ எல்லை மறந்து நிசப்தத்தை சுவாசிக்க வரும் சில பறவைகள் அவளை வெகுவாக ஆச்சரியப்படுத்தும். எந்த மனிதர்களும் கனவில் கூட வாழ நினைக்காத ஒரு பிரதேசத்தை இப்படி சில நேரம் இந்த மாதிரியான பறவைகள் பார்த்துவிட்டு செல்வதை கண்டால் ஆச்சரியப்படாமல் யார் தான் இருப்பார்கள்.

அந்த பறவை அவள் நடந்து செல்லும் வழியில் வெகுதொலைவில் பாதி சிதிலமடைந்து கிடக்கும் ஒரு ராணுவ விமானத்தின் இறக்கையின் ஒய்யாரமாக அமர்ந்து தன் உடலை தன் அலகாலே கொத்திக் கொண்டிருந்தது.இந்த ஒரு நிகழ்வை கண்டு திகைத்தவளாய் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இதற்கிடையே கடல் அலைகள் சீற்றம் , உப்பு வாசனையேற்றும் ஒரு பயங்கர குளிர்க்காற்று.

அந்த பயங்கர காற்றை விட அதிபயங்கரமான யோசனைகள். அந்த பறவை தற்கொலைக்கு முயல்கிறதா ? ஏன் ? என் ? கண் முன்னால் தற்கொலைக்கு முயல வேண்டும் ? இந்த இருளில் அது ஏன் தனியே இங்கே வந்தது ? என ஒன்றன்பின் ஒன்றாக யோசனைகள். இப்படி யோசித்து கொண்டிருக்கும்போதே திடீரென அந்த பறவை எங்கோ அவசரமாக புறப்படும் மனிதனை போல சிறகுகளை விரித்தசைத்து பறந்து போனது.அப்படி பறந்து போன பின்பும் அவள் அந்த ராணுவ விமானத்தின் இறக்கைக்கு மேல் அந்த பறவை அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

எல்லாம் திடீர் என நடந்து கொண்டதை போல அவளும் திடீரென அந்த கடற்கரையை விட்டு சிதிலமடைந்த கட்டிடங்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

அவள் வெறும் இடத்தையோ, நேரத்தையோ கடப்பது போல அவள் அங்கிருந்து நடப்பதை பார்த்தால் தெரியாது ஏனெனில் முகத்தில் சதா ஏன் ஏன் என் என எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் யோசனைகளை தாண்டி தாண்டி பள்ளத்தில் விழாமல் தப்பி சென்றுகொண்டிருந்தாள். தற்கொலை, சுதந்திரம் என இதற்கு முன் அவளுக்கு தோன்றிருக்காத விஷயங்களை கடந்து கொண்டிருந்தாள் . தற்கொலை, சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகள் காகிதத்திலோ, புத்தகத்திலோ உயிர் பெறுவதில்லை.ஆனால் இந்த வார்த்தைகளுக்கு மனித மனமே உயிர் கொடுத்து செயல்படவிடுகிறது என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம். ஒருவேளை அந்த வார்த்தைகள் என் மனதை ஆதாரமாக கொண்டு என் உடல் வழியே செயல்பட்டு விடுமோ என்ற பயமாக கூட இருக்கலாம்.

இப்படி ஒரு மனநிலை நிலவிய நகர சூழலில் அடிமேல் அடிவைத்து நிழலை முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளி தள்ளி இலக்கை அடைந்தாள். ஒரு பெரிய கட்டிடம், அதில் பாதி தரையில் கிடந்தது.ஒரு ராணுவ தானியங்கி குண்டு எறியும் கருவியின் பெரிய குழாய் அந்த பாதி கட்டிடத்தின் மேல் கூரையாக கிடந்தது.அது தான் மாதவியின் வீடு. கதவும் கிடையாது. அந்த வீட்டினுள் சில புத்தகங்கள், ஒரு படுக்கை, ஒரு பாலீதீன் குப்பி அதில் பாதியளவு தண்ணீர் , சிறிது குடிக்கப்பட்ட பிராந்தி குப்பி , சில உடைகள் , ஒரு இருபது நாளுக்கு உண்ணும்படியான அகதிகளுக்கான பெரிய உணவு பொட்டலம் , மேலும் சில எழுதப்படாத டையரிகளும், இரண்டு கறுப்பு நிற பேனாக்களும் அங்கு இருந்தது. இவை அனைத்தும் ஏற்கனவே அங்கேயே இருந்ததால் இந்த கட்டிடம் அவள் வசிக்கும் இடம் ஆனது.

உள்ளே போன மாதவியின் கண்ணில் பட்டது அந்த புகைப்படம். அது மட்டுமே அவளுடைய பூர்வீக சொத்து.அதை கண்டவள் கடந்த காலத்தை நினைக்க கடமைப்பட்டவளாய் நினைவுகளில் பின்னோக்கி போனாள். அங்கே தன் தந்தை, தாய், காதலன் , பரபரப்பான நகரம் என நினைவுகளை சுவாசித்து கொண்டிருக்கும்போது அந்த படுக்கையின் மேலே சுவாசித்த களைப்பில் தூங்கியும் போனாள்.அங்கே ஒரு கனவு. நனவில் இருந்து இருந்து சலித்து போனவர்கள் தனிமையில் நினைவுகளை சுவாசித்தால் கனவு வரத்தானே செய்யும்.

அங்கே மாதவி ஒருவனை பார்த்தாள். அது சகா தேவன் என உணர கொஞ்சம் காலம் பிடித்தது. “அதே வசீகர உதடுகள்” என பேசிக்கொண்டே கட்டியணைத்தான் மாதவியை பின்னிருந்து. ஒன்றும் பேச முடியவில்லை மாதவியால். “என்னுடன் வரும் திட்டமில்லையா உனக்கு ?” என்றான் சகா தேவன் பிடியை விடாமல்.சகா தேவனின் அனல் மூச்சு மாதவியின் கழுத்தில் அனல் காற்றாக பட்டு தெறித்துக்கொண்டிருந்தது.

“இந்த இடம் அப்படி ஒரு அமைதி. ஏன் இப்படி வந்து வந்து போகிறீர்கள்.இங்கேயே இருந்துவிடக் கூடாதா ?” என மாதவி கேட்டாள். “இங்கே என்ன இருக்கிறது. அமைதி மட்டும் போதுமா வாழ ?” என கேலியுடன் கேட்டான் சகா தேவன். “இல்லை, இங்கு இருக்க எனக்கு மிகவும் பிடித்துள்ளது .இந்த இடத்தை விட்டு என்னால் வர முடியாது. ஆட்கள் இல்லாத கடற்கரை, சுத்தமான குளம், பரிபூரண அமைதி.என்னால் முடியாது.” என சொல்லிவிட்டு தூரத்தில் தெரியும் ஒரு வெளிச்சத்தை கண்டாள். “அப்படியெனில் நம் திருமணம் ?” என சகா தேவன் கேட்டான். “உங்கள் ஊரில் தான் திருமணம், சம்பிரதாயம், சடங்குகள் எல்லாம்.இங்கே வந்தால் சடங்கும் கிடையாது, சம்பிரதாயமும் கிடையாது ஏன் கடவுளே கிடையாது” என சிரித்துக்கொண்டே சொன்னாள். “எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் கடவுள் இல்லை என சொன்னதை ஒப்புக்கொள்ள முடியாது” என்றான் சற்று கோபத்துடன்.

“கடவுள் இல்லை என்றதும் கோபம் வருகிறதோ ?” என்றாள் மாதவி.”இல்லாம எப்படி. இந்த உலகத்தை படைச்சவர் கடவுள் ” என பேசி முடிக்கும் முன்னரே மாதவி ” அப்படியெனில் இந்த விஷம், வியாதி, போர், தற்கொலை என எல்லாவற்றையும் படைத்தவரும் உங்க கடவுள் தான? என கேட்டவள் அத்துடன் நிற்காமல் “எவ்வளவு நேரம் இப்படி அணைத்துக்கொண்டு நிற்பீர்கள்.கூச்சமாக இருக்கிறது.கையை எடுங்கள் ” என்ற வேண்டுகோளுடன் நாக்கை அசைப்பதை நிறுத்தினாள்.

“ஏன் உன்னை கட்டிப்பிடிப்பது தவறா ? நீ தான் என் காதலியாயிற்றே !” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சகா தேவன்.

“ம்கும், நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ” என்றாள் மாதவி. ” வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் மரணம் உண்டு தானே ” என பதில் சொன்னான். “வாழவே இல்லை. அதற்குள் உங்களை கொன்றுவிட்டாரே கடவுள் !” என அழ ஆரம்பித்தாள். கண்ணீர் கனவின் கண்ணாடியில் முகம் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தபோது சகா தேவனை காணவில்லை.இருப்பது இல்லாமல் போகும் போது இல்லாமல் இருப்பது நிரம்பி வழிந்து காட்டாறு போல திசை மாறி ஊரை அழித்து கொண்டு ஊரை வளப்படுத்த சிறைக்குள் அடைபடுவது போல அந்த கண்ணீருக்கு பின் ஒரு ஒருமையான வெறுமை. ஒரே வெறுமை. மகா அமைதி. எங்கும் இருள்.

சாவின் நனவை கனவில் கண்ட துக்கம் பொறுக்காமல் மூளையின் நரம்புகள் துயரத்தால் நெறுக்கப்பட்டு மூச்சு தன்னுடைய அகத்தை பிதுக்கி கொண்டு தன் இருப்பை சோதித்து கொள்வது போல உதடுகள் மனதின் மீட்டலில் தன்னாலே “என்ன ஒரு மோசமான கனவு” என சொல்லிக்கொண்டே தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்தால் அந்த நகரத்தை காணவில்லை.கடற்கரையும் இல்லை.சிதிலமடைந்த கட்டிடங்களும் இல்லை.சுத்தமான குளமும் இல்லை.. மாதவியின் கையில் ஹிட்லர் எழுதிய எனது போராட்டம் புத்தகம் இருந்தது. தொலைபேசி ஒலித்தது.அதை கையில் எடுத்து யார் என பார்த்தால் “சகா தேவன்” என இருந்தது.எழுந்து போய் சன்னல் வழியே பார்த்தாள். ஒரு ராணுவ பயிற்சி முகாம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.