ஷ்யாமளா கோபு

மனிதம்

ஷ்யாமளா கோபு

முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று தலையை ஒழுங்காக வாரி பின்னலை இழுத்து கொண்டையிட்ட  இந்திரா நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டாள். தரையோடு தளர்ந்திருந்த  கயிற்றுக் கட்டிலில் படுத்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் ராமலிங்கம். இன்று நேற்றா? கடந்த இரு வருடங்களாகவே.

அடுப்பு மேடையின் மீதிருந்த அலுமினிய வாளியை எடுத்து கூடைக்குள் வைத்தவாறே கணவனிடம் சொன்னாள் மனுஷி. “இங்கே பாரு. இதோ உனக்கு சாப்பாடு, பிளாஸ்கில் சுடு தண்ணி வெச்சிருக்கேன். அடுப்பில டீத்தண்ணி கிடக்கு. கங்கை அணைக்கலை. அதனால் சூடாகவே இருக்கும். எடுத்து குடிச்சிக்க. சாயங்காலம் பிள்ளைங்க வந்ததும் அதுகளுக்கும் ஆளுக்கு ஒரு கிளாஸ் டீத்தண்ணி குடு. நான் வெள்ளனே வந்துடறேன்”

“முதலாளிக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டியா?”

“அதான் நித்தியப்படி ஆச்சே”

“உனக்கு?”

“எடுத்துக்கிட்டாச்சு. மாத்திரை மருந்தை பக்கத்துல டப்பால வெச்சிருக்கேன் பாரு. மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு போட்டுக்க மறந்துடாதே”

“இது ஒரு கருமம்’

“ஏன்யா சலிச்சிக்கிறே?”

“பின்னே என்ன? இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த கட்டையை வெச்சிக்கிட்டு கிடக்குனுமோ”
“ஏன் நான் பூவும் பொட்டுமா இருக்கறது உன் கண்ணை உறுத்துதா?”

“அந்த ஒரு காரணத்துக்குத்தான் உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றவனின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது

.கையில் இருந்த தூக்குசட்டியை அடுப்படி மேடையின் மீது வைத்து விட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள் “ஏன்யா இப்படி பேசறே?” என்றாள் அன்புடன்.

“பிரவோசனம் இல்லாமல் போயிட்டேனே?” விசும்பினான்.

“பிரவோசனமா இருந்தவன்தானே நீ” என்று அவன் தலையை தன் மார்போடு அணைத்து முகத்தை வருடிக் கொடுத்தவள் “இந்த ஊரே மெச்சும்படி என்னைக் கல்யாணம் கட்டி ஆசை ஆசையாய் ரெண்டு பிள்ளையைப் பெத்து கவுரவமாத் தானே எங்களைக் காப்பாத்தினே”

‘இந்த ரெண்டு வருஷமா நீ என்னென்ன கஷ்டப்பட்டு நாலு ஜீவனுக்கும் கஞ்சி ஊத்தறே”

“அதுக்கு என்னய்யா பண்றது? உன்னாலே முடிஞ்ச போது நீ செஞ்சே. இப்போ உனக்கு முடியாம போகவும் நான் செய்யறேன். குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும்”

“ம்”

“அதை விட உன் அன்பு பெருசுய்யா” என்று அவன் முகத்தை வருடி திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தாள். அது படக்படக்கென முறிந்தது. ”பாரு. எம்புட்டு திருஷ்டி உனக்கு” என்று மெல்ல அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“இன்னைக்கு ராவுக்கு முதலாளி வருவாரா?” கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவன், “வூட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே. அதான் கேட்டேன்” என்றான்.

“ரெண்டு நாளா மேலுக்கு முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு”

“என்னவாம்?” என்றான் உண்மையான அக்கறை குரலில் தென்பட.

“நாக்குக்கு ஒன்னும் பிடிக்கலை. சரியா சாப்பிட முடியலைன்னு சொன்னாரு”

“அவருக்கு உனக்கையா சமைச்சிக் கொடு தங்கம்”

“உக்கும். அவருக்கு உனக்கையா சமைச்சிப் போட நான் என்ன அவரு பொண்டாட்டியா?”

“எனக்கு விபத்து ஏற்பட்டு இப்படி ஆன நாளில் இருந்து அந்த மனுஷனாலத் தான் நாம கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கோம்” என்றான் நன்றியுடன்

மண்டித் தெருவில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியான ராமலிங்கம், முதுகில் மூட்டை விழுந்து, முதுகெலும்பு முறிந்து, படுத்த படுக்கையான பின்,  அதே தெருவில் நாலைந்து கடைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறாள் இந்திரா. அதனால் இந்த நான்கு ஜீவன்களும் ஒரு வாய் உணவையேனும் உண்ண முடிந்தது. ஆனாலும் கணவனுக்கு போதிய வைத்தியமும் அதற்கேற்றாற்போல சத்தான ஆகாரமும் கொடுக்க இயலவில்லை அவளால். வளர்ந்து வரும் இரு பிள்ளைகளுக்கும் வயிறார உணவிட முடியாமல், உழைத்து களைக்கும் தன் பசி போக்கும் வகை தெரியாமல். அந்த பிள்ளைகள் பசியால் இழுத்துப் பிடிக்கும் வயிற்றை தடவியவாறு தூக்கம் வராமல் கிடக்கையில் அதைக் கண்டு எத்தனயோ இரவுகள் அழுகையில் கரைந்திருக்கிறாள் அவள்.  இன்னும் நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு பிழைத்து விட்டால் மகன் வேலைக்கு போய் விடுவான். குடும்ப பாரத்தை சுமக்க தன்னோடு ஒரு தோள் கொடுப்பான். அதுவரை கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் வாழத் தான் வேண்டும்.

மண்டித்தெருவில் முதலாளி ராஜேந்திரனுக்கு சிறு அரிசி கடை இருந்தது. முதலில் இவளுக்கு கடனுக்கு அரிசி கொடுத்துக் கொண்டிருந்தவர் ஒருநாள் தனக்கு சோறு ஆக்கித் தர முடியுமா என்று கேட்கவும், அவருக்கு கொடுக்க வேண்டிய கடனுக்குப் பதில் சோறு ஆக்கித் தர சம்மதித்தாள். இநத முதலாளியின் தயவால் இவர்கள் குடும்பம் வயிறார பசியாற முடிகிறது. சமயத்தில் வைத்திய செலவும், அவளுக்கு கிழிசல் இல்லாத நல்ல புடவைகளும் கூடத் தான்.

ஒருநாள் காயலாய் கிடந்த முதலாளியை மகனின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டி விட்டு தங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டார்கள் அவர்கள். பத்திய சாப்பாடும் விருந்தோம்பிய பண்பும் அவரை நெஞ்சை நெகிழ்த்தவே, தனிமை சலிப்பைத் தரும் பொழுதுகளில் இரவு  கடை மூடிய பின் இங்கே வந்து பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்தது. அலுத்துக் களைத்து வருபவருக்கு சுடச்சுட வெந்நீர் குளியலும் சூடான உணவும் அதுவும் குடும்பத்துடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்புகளும் உண்டு.

ஓரத்தநாட்டுப் பக்கம்  களக்காடு கிராமம் முதலாளிக்கு. தாய் தகப்பனற்று, தாய்மாமன் வீட்டில் எடுபிடியாக வளர்ந்தவருக்கு, காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிப் போய் ஏமாந்து திரும்பி வந்த தன் மகளை மணமுடித்து கொடுத்தார் மாமன். தென்னை மரம் ஏறும் போது கால் தவறி கீழே விழுந்ததில் ஆண்மையற்றுப் போனவனை, வேலைக்கு ஆகாதவன் என்று வெறுத்த மனைவி. வீட்டை விட்டு இவரை துரத்திய மாமன் மனைவி, மகளுக்கு வேறு ஒருவனை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்ட மாமன் என வாழ்க்கையே துரோகமாகவும் அவமானமாகவும் வேதனையாகவும்  முடிய இங்கே வந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஆனாலும் இந்த முதலாளி நம்ம வீட்டுக்கு வராம இருந்தா தேவலை. இது மாதிர் வீண் பேச்சை கேக்க வேண்டியிருக்காது” என்று குறைப்பட்டுக் கொள்வாள் இந்திரா.

“நீ இல்லாத சமயங்களிலும் நம் வீட்டுக்கு வந்து என்னிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார். என்றோ இறந்து போன பெத்தவங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். உன்னைப் பார்க்கையில் அவர்  அம்மா மாதிரி இருக்கவே உன்னிடம் ஒரு மரியாதை இருப்பதாக சொல்வார்”

“உண்மை தான். என்னை ரொம்பவே மரியாதையாகத் தான் நடத்துவார் இங்கேயும் சரி. கடையிலும் சரி. மற்றவர்கள் எதிரிலும் சரி. மரியாதை தான். தாயி என்று தான் அழைப்பார்” என்றாள் அவளும் ஆத்மார்த்தமான நெகிழ்வுடன்.

ஒருநாள் முதலாளிக்கு காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் சேர்த்ததில் அவருக்கு உயர் ரத்தக் கொதிப்பு என்றனர். கட்டுக்கடங்காத ரத்தக் கொதிப்பு கைகால்களை முடக்கிப் போட்டு விட்டது. இப்போது இவரை யார் பார்த்துக் கொள்வது என்று ஒரு கணமும் தயங்கி நிற்காமல் ராமலிங்கம் தன் கட்டிலை விட்டு இறங்கி அங்கே முதலாளியை படுக்க வைத்தான்.  இந்திரா தான் முதலாளிக்கும் பாடு பார்க்கிறாள். கணவன் கூடமாட உதவி செய்கிறான். இதற்கு பேர் என்ன சொல்வது?

இந்த உலகம் அவளை சோரம் போனவள் என்றாலும் சரி.  வீரபாகு அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கியதைப் போல ராமலிங்கம் பொண்டாட்டிய அனுப்பி அரிசி கடையை வாங்கிட்டான் என்று மற்றவர்கள் கேலி செய்தாலும் சரி. இது அவர்கள் வாழ்க்கை. அவர்கள் உலகம். அவர்கள் யாருக்கு பதில் சொல்ல வேண்டும்?

பந்தம்

ஷ்யாமளா கோபு

“ஹல்லோ அண்ணா, எப்படி இருக்கே?” பூமா தன் தந்தையை கைப்பேசியில் அழைத்து குசலம் விசாரித்தாள்.

ஐந்தாறு அண்ணன் தம்பிகள் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின், மூத்த மகனை அவனுக்கு கீழ் பிறந்தவர்கள் சுமார் ஏழெட்டு பேர்களும் பங்கும் பங்காளிகள் வகையறாவில் ஏழெட்டு உருப்படிகளும் அண்ணா என்று அழைக்கப் போய் அந்த அண்ணாவிற்குப் பிறக்கும் சின்னதுகளும் அண்ணா என்றே அழைக்க தலைப்பட்டதினால் நேர்ந்த விபரீதம் தான் இது. அப்பாவை அண்ணா என்ற இந்த முறை தவறிய அழைப்பு.

அதுவும் அந்த மூத்த மகனின் முதல் மகளோ அல்லது முதல் மகனோ யார் முதலில் பிறக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக அண்ணா என்றே அழைப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் பிறந்த குழந்தைகள் தந்தையை அண்ணா என்று அழைக்கும் முன்பு அந்த தந்தையின் ரெண்டொரு தங்கைகள் திருமணம் முடிந்து புகுந்த வீடு போய் விட ரெண்டொரு தம்பிகள் வேலை விஷயமாக வெளியூருக்கு போய் விட நேர்ந்து விடுமாதலால் இந்த குழந்தைகள் தந்தையை அப்பா என்றே அழைக்கும் பேறு பெற்றவர்கள் ஆவார்கள்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த ரங்கசாமியின் மூன்று மகன்களுடன் கூடிய கூட்டுக்குடும்பத்தின் முதல் மகனாம் சிவநேசனின் கடைசி மகள்தான் இந்த் பூமா. ஆனால் சிவநேசனின் ஐந்து மக்களும் முன்னால் பிறந்தவர்களின் அடியொட்டி தாங்களும் அவரை அண்ணா என்றே அழைத்துப் பழக்கப்பட்டுப் போயிருந்தனர். அதிலும் அவருடைய கடைக்குட்டி பூமா பேரன் பேத்தி எடுத்த பின்பும் இன்னும் செல்லம் தான் அவருக்கு. பூமாவிற்கு மூத்த அக்காக்களும் அண்ணன்களும் தந்தையிடம் பக்தியும் மரியாதையும் கொண்டு எட்டி நின்று பழகிய போதும் பூமா மட்டும் இன்னும் சிறுபிள்ளைத்தனமான அவரிடம் வம்பு வளர்ப்பதில் அவருக்குமே மிகவும் மகிழ்ச்சி தான். திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளைகளைப் பெற்று வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பியவள். ஒரு பெரிய மத்திய அரசு அலுவலகத்தில் உயர்பதவியில் இருப்பவள். கை நிறைய மட்டுமன்றி பை நிறையவும் சம்பாதிப்பவள். அவள் கணவர் கோபாலனோ சுயதொழில் செய்து பணத்தை மூட்டையில் வாரிக் கட்டிக் கொண்டிருப்பவர்.

“ஹல்லோ, சொல்லும்மா. எப்படி இருக்கே? மாப்பிள்ளை எப்படி இருக்காங்க? பேரனுங்க சுகமா?” என்று சிவநேசனின் கேள்விகள் ஒரு மைல் நீளத்திற்கு நீண்டு கொண்டு செல்ல அங்கே ஒரு பிரேக் போட்டாள் பூமா.

“ண்ணா… நான் கூப்பிட்டா இத்தனை கேள்வி கேட்பது உனக்கு வாடிக்கையா போச்சு. நீயா போன் பண்ணி கேக்கணும் இத்தனை கேள்வியை”

“ஹி.. ஹி.”

“சிரிக்காதே” என்றவள் தானும் சிரித்தாள்

“என்னம்மா எப்படி இருக்கே?” என்றார் வாஞ்சையுடன்.

“நல்லாயிருக்கேன்ண்ணா” என்று அந்த ஒரு பதிலில் தான் அவருடைய நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதை அறிந்தவளாக பொறுப்புடனும் அன்புடனும் பதில் சொன்னாள்.

“என்னம்மா வேலைக்கு போகலையா? இந்நேரம் கூப்பிடறே?”

“ஊஹூம். வேலைக்கு போகலைப்பா. போன வாரம் சொன்னேனே ஒரு இடம் விலைக்கு வருதுன்னு”

“ஆமாம். வாங்கிட்டியா?”

“கொஞ்சம் பணம் குறையுதுப்பா”

“என்கிட்டே பணம் இருக்கும்மா” என்றவரை இடைமறித்து அவளுடைய தாய் “என் நகைகளும் கூட இருக்குங்க” என்றது காதில் விழுந்தது. “நான் வேணும்னா கொண்டுக்கிட்டு வரட்டுமா தங்கம்?” என்று கேட்டார்.

“இல்லைப்பா. எனக்கு பணம் வேண்டாம். அம்மாவிடம் சொல்லு. என் நகைகளை அடகு வைக்கத் தான் வங்கி வரை போயிட்டு வந்தோம். அதனால் தான் வேலைக்கு போகலை. அடுத்த வாரம் ரெஜிஸ்டர் பண்றோம்ண்ணா”

“ஏன் உன் நகையை அடகு வைக்கிற? வெளியே தெருவுல போறவ. ஆபீசுக்கு போறவ. என் நகையை அடகு வைக்கலாம் இல்லையா?” என்று தாய் கேட்டது காதில் விழுந்தது. ஸ்பீக்கரில் போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்து “இந்த கொரோனா காலத்தில ஆபீசுக்கே போகலைம்மா. இதில் வெளியே தெருவுல எங்க போறது?” என்றாள் பூமா.

“அது சரி” என்றார் சிவநேசன்.

“என்னவோ போ பூமா, அந்த காலத்துல கூட்டுக்குடும்பத்தில மாட்டிக்கிட்டு அல்லல் பட்டோம். பெத்த பிள்ளைங்களுக்கு ஒன்னு வாங்கித் தரனும்னா மீன மேஷம் பார்த்துக்கிட்டு, பிள்ளைங்க ஆசைப்பட்டுக் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியலையேன்னு வருத்தப்பட்டு கிடந்திருக்கோம். இப்போ நம்மை கேட்க ஆளில்லை. பணம் காசும் கை நிறைய கிடக்கு. நீங்கள் எல்லோரும் இன்னைக்கு நல்லாயிருக்கீங்க என்ற சந்தோஷம் இருந்தாலும் உங்களுக்கோ எதுவுமே என்னிடம் தேவையில்லாமல் போச்சு” என்றார் சிவநேசன் உண்மையான வருத்தத்துடன்.

பூமாவிற்கும் தன்னுடைய சின்ன வயதில் நிகழ்ந்த சம்பவம் இன்று நினைவிற்கு வந்தது. பூமா ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு போய்க் கொண்டிருந்த பருவம் அது. வசதியான வீட்டுப் பிள்ளைகள் அலுமினியத்தால் ஆன பெட்டியில் புத்தகங்கள் கொண்டு வருவார்கள். சிலர் அடியில் குஞ்சம் வைத்த ஜோல்னா பையில் கொண்டு வருவார்கள். பூமாவிற்கு அவளுடைய தாய்மாமன் தில்லியிலிருந்து வாங்கி வந்திருந்த அலுமினிய பெட்டியில் அவ்வளவு விருப்பமில்லை. மாறாக குஞ்சம் வைத்த புத்தக பை வேண்டும் என்று அடம். இவள் ஒருத்திக்கு மட்டும் குஞ்சம் வைத்த பை வாங்கிக் கொடுத்தால் வீட்டில் மீதமுள்ள சிறுவர்களுக்கும் வாங்கித் தர வேண்டும். ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?

இறுதியில் “இத்தனை குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் உன் அக்கா மகளுக்கு மட்டும் தனியாக எப்படி வாங்கிக் கொண்டு வரலாம்” என்று பூமாவின் தாய்மாமன் திட்டு வாங்கிக் கொண்டு போனது தான் மிச்சம். உங்க குடும்பத்தில் இனி கால் வைக்க மாட்டேன் என்று மாமாவின் சபதம் வேறு தனிக்கதை.

நினைவில் இருந்து மீண்டவள் தந்தையிடம் கேட்டாள் “யாரு சொன்னா?”என்று.

“யாருமே எங்களிடம் எதுவும் கேட்பதில்லை. மாறாக நீங்கள் தான் எங்களுக்கு படியளந்து கொண்டிருக்கிறீர்கள். அதிலும் நீ தான் மாதாமாதம் எங்களுக்கு பென்சன் தருகிறாய்” என்றார் சிவநேசன்.

“நான் ரொம்ப நாளா உன்னிடம் ஒன்னு கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீ வாங்கித் தர மாட்டேங்கிறே” என்றாள் பூமா சிணுங்கலுடன்.

சிறு பிள்ளையாய் தன்னிடம் சிணுங்கிக் கொண்டிருக்கும் மகளின் குரல் பெற்றோர் இருவருக்கும் உற்சாகத்தைக் கொடுக்கவே அதே சிரிப்புடன் “என்னவாம்?” என்றார்கள் ஒரு சேர.

“எனக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுன்னு எத்தனை வருஷமா கேட்கறேன்” என்றாள் பூமா.

“உனக்கு இல்லாத புடவையா? அப்பாவிடம் கேட்கறே?” என்று சிரித்தாள் அவள் தாய்.

“எனக்கு எவ்வளவு இருந்தா என்ன? ண்ணா நீ வாங்கி தருவியா மாட்டியா?”

“நீ பொங்கலுக்கு எங்களுக்கு காசு அனுப்புவே இல்லையா. இந்த வருஷம் அனுப்பாதே. அந்த பணத்தில் உனக்கு ஒரு புடவை வாங்கிக்கோ” என்றாள் அம்மா.

“ம்..போங்கா இருக்கே. அதெல்லாம் கிடையாது. நீ உன் சொந்த பணத்தில் எனக்கு புடவை வாங்கி தரணும்”

“அவர்ட்ட எது காசு?” என்றாள் அம்மா கவலையுடன்.

“உனக்கு கிடைக்கும் காசில் சேர்த்து வெச்சி வாங்கி தா” என்றாள் பூமா.

“நிஜமாவா கன்னுக்குட்டி கேட்கறே?” என்றார் சிவநேசன்.

“ஆமாம் ண்ணா” என்றாள் பூமா உறுதியுடன்.

“வாங்கித் தரேன்” என்றார் தீர்மானத்துடன்.

தந்தைக்கு எண்பது வயதாகிறது. சதாபிஷேகம் செய்ய வேண்டும் என்று அண்ணன்களும் சித்தப்பாக்களும் அத்தைகளும் தீர்மானித்து கிராமத்து வீட்டில் நடத்துவதற்கு ஏற்பாடாகி எல்லாரும் குடும்பத்துடன் ஒரு வாரம் முன்னே போய் அந்த ஓட்டு வீட்டில் அடைந்து விட்டார்கள். பூமாவின் இரு மகன்களும் மருமகள்களும் பேரன் பேத்திளுடன் வந்து விட்டிருந்தனர். மூன்று தலைமுறைகள் கூடியிருந்தது. கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சிவநேசனும் மிக உற்சாகமாக இருந்தார்.

ஒருநாள் இரவு எல்லோரும் வீட்டின் முன் இருக்கும் களத்து மேட்டில் அமர்ந்து நிலா சாப்பாடு சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு எங்கெங்கோ சுற்றி வந்து இறுதியாக பூமாவின் புடவையில் வந்து நின்றது.

“நான் இருநூறு ரூபாய் சேர்த்து வெச்சிருக்கேன். நாளைக்கு நீ போய் புடவை எடுத்துக்கோ” என்றார் சிவநேசன்.

“இருநூறு ரூபாய்க்கு என்ன புடவை எடுக்க முடியும்?” என்று கேட்டாள் பூமாவின் அண்ணி.

“ஷ்” என்று கண்ணால் அவளை அடக்கி விட்டாள் பூமா. “இரு….நூ..று ரூபாயா? பேஷ். பேஷ். எதுப்பா உனக்கு இவ்வளவு ரூபா?”

“என்னம்மா கிண்டல் பண்றே? உன்னிடம் இல்லாத பணமா?” என்றார் சிவநேசன்.

“என்ட எவ்வளவு இருந்தா என்ன? நீ வாங்கிக் கொடு”

“சரி. இந்தா” என்று தன் இடுப்பில் கட்டியியிருந்த அகலமான பெல்ட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார் அவர்.

“ஊஹூம். நான் போக மாட்டேன். நீ தான் எடுத்து தரணும்”

“நானா?”

“ஆமாம். நீ தான்”

“நீ புது மோஸ்தரில் புடவை கட்டுவே. எனக்கு எடுக்கத் தெரியாதே”

“உனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு எடுத்தா போதும்” என்றவள் “நீ வாங்கி தரும் புடவையைத் தான் சதாபிஷேகத்துக்கு கட்டிப்பேன்” என்றாள் பூமா.

“சாக்கு மாதிரி எதையாவது வாங்கிக் கொடுத்துடப் போறேன்” என்றார் கவலையுடன்.

“சாக்கு மாதிரி இல்லைண்ணா. சாக்கே வாங்கிக் கொடுத்தாலும் அதைக் கட்டிக் கொண்டு தான் விஷேசத்திற்கு வருவேன்” என்றாள் இன்னும் முனைப்புடன்

“அண்ணியுடன் போய் வாங்கிக்கோ”

“ஊஹூம். நீ தான் கடைக்கு போய் வாங்கித் தரணும்”

“ஏய் பூமா, எதுக்கு நீ அவரை இந்த பாடுபடத்தறே?” என்று கோபப்பட்டார் இவ்வளவு நேரமும் பூமா தந்தையிடம் வம்பு செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவன்.

“என்னோட அப்பா, நான் கேட்கறேன். அப்படித் தானேண்ணா” என்று அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் பூமா.

“ஆமாம் மாப்பிள்ளை. கொளந்தை கேட்கறா என்னால கடைக்கு போய் வாங்கித் தர முடியலை”

விசேஷம் சிறப்பாக நடந்தேறிய பின்பு அவரவர் கிளம்பி சென்று விடவே பூமாவும் பெற்றோரிடம் விடைப் பெற்றுக் கொண்டாள். ”ண்ணா, அடுத்த தடவை வரும் போது எனக்கு புடவை எடுத்து வெச்சிருக்கணும். சரியா” என்றாள்.

“ஆகட்டும்” என்று பொக்கை வாய் காட்டி சிரித்தார் சிவநேசன்.

வீட்டிற்கு வந்த பின்பு பூமாவின் கணவன் கோபாலன் அவளிடம் மிகவும் வருத்தப்பட்டார். ”நீ ரொம்பத் தான் பண்றே. அந்த வயசான மனுஷன் கடைக்கு போய் புடவை வாங்கித் தரணும்னு என்ன ஒரு அடம் உனக்கு?” என்று.

“அது ஒரு கணக்குங்க” என்றாள் பூமா.

“உன் கூட பிறந்தவங்களும் இங்க தானே இருக்காங்க. அவுங்களுக்கு இல்லாத கணக்கு உனக்கு மட்டும் என்ன இருக்கு? கருமம். எல்லார் எதிரிலும் என் மானம் போவுது”

“என் கூடப் பிறந்தவங்க அவரிடம் பயபகதியுடன் எட்டி நின்று வளர்ந்தவர்கள். தங்களுடைய தேவைக்கு கூட அவரிடம் எதிரில் நின்று கேட்டு அறியாதவர்கள். ஆனால் நான்? அவருடைய தோளில் அமர்ந்து ஊரை சுற்றி வந்தவள். வானத்தையும் பூமியையும் இயற்கையும் விவசாயத்தையும் ரசிக்க கற்றுக் கொடுத்தவர் அவர். அவர் கையைப் பிடித்து இழுத்து இது வேண்டும் அது வேண்டும் என்று அழுது அடம் பிடித்துக் கேட்பது நான் மட்டும் தான். ஒருபெரிய கூட்டுக் குடும்பத்தில் அவ்வளவாக பணப்புழக்கம் இல்லாத காலத்தில் நான் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாமல் என்னை விட அதிகம் கவலைப்பட்டவர் அவர். அப்படி எதையாவது வாங்கிக் கொடுத்து விட்டால் என்னை விட அதிகம் மகிழ்ந்தவரும் அவர் தான்”

“சரி. அது சின்ன வயசுல எல்லார் வீட்டிலும் நடப்பது தானே. அன்னைக்கு வாங்கிக் கொடுக்கலைன்னு இன்னைக்கு குத்திக்காட்டுவது போலிருக்கு”

“ஊஹூம்”

“என்ன ஊஹூம்?” என்றார் அப்போதும் எரிச்சலை மறைக்க மாட்டாமல்.

“அன்னைக்கு நாங்க கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க முடியவில்லை என்பதை விட இன்றைக்கு நம்ம பிள்ளைங்க கிட்ட வாங்கிக் கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் தான் அவுங்களுக்கு”

“அதுனால என்ன? பிள்ளைங்க பெத்தவங்களுக்கு செய்யறது தப்பா என்ன?” என்றார் கோபாலன்.

“நிச்சயம் இல்லை. ஆனால் நம்மால் அவர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்ற எண்ணத்தை விட பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க. நம்ம கையை விட்டுப் போய்ட்டாங்க என்ற எண்ணம் தான் அவர்களுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்காது”

“அது உண்மை தான்” என்று ஒப்புக் கொண்டார் கோபாலன்.

“அதனால் தான், நான் இன்னும் வளரலை. உங்க கிட்ட கேக்கற அளவுக்கு இன்னும் நான் உங்க கைக்குள்ள தான் இருக்கேன் என்று அவருக்கு உணர்த்த தான் இந்த நாடகம்” என்று சிரித்தாள் பூமா.

“ஓஹோ” என்றார் அவளைப் புரிந்து கொண்டவராக.

“இது ஒரு விதமான பந்தம். அதை உணரவும் மற்றவர்களுக்கு உணர்த்தவும் தான் இது. இந்த புடவை கேட்கும் நாடகம். ஆனால் அதிலும் ஒரு விஷயம் பாருங்கள். அப்பா இருநூறு ரூபாய் சேர்த்து வெச்சிருக்கிறாரே. ஒவ்வொரு ரூபாயையும் எடுத்து வைக்கும் போது அவருக்கு என் ஞாபகம் வருமில்ல”

“அது சரி” என்றார் அவர்.

“இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போறாங்க ரெண்டு பேரும். இருக்குற நாள் வரைக்கும் அவுங்க நினைத்துக் கிடக்க ஏதேனும் ஒரு காரணம் வேணுமில்ல” என்றாள் பூமா.

சிவநேசன் சாப்பிட்டு விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தார். பின்னால் வந்து அவர் மனைவி அருகில் கிடந்த மேசை மீது தண்ணி சொம்பை வைத்து விட்டு சதாபிஷேகத்தில் நடந்த கதைகளை பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக பூமா புடவை கேட்ட கதை வந்தது.

கணவனிடம் கேட்டாள்.”இந்த குட்டிக்கு மட்டும் வம்பு போக மாட்டேங்கிது” என்றாள்.

“எதை சொல்றே?” என்று கேட்டார் சிவநேசன்.

“பேரன் பேத்தி எடுத்து பாட்டியாகவும் ஆயிட்டா”

‘யாரை சொல்றே? கடைக்குட்டியையா?”

“புடவை வாங்கி தரணுமாம். அதுவும் நீங்களே கடைக்கு போய் வாங்கித் தரணுமாம். இந்த குழந்தைக்குத் தான் எவ்வளவு வம்பு பாருங்க” என்றாள்.

“அவள் இன்னும் நம்ம குழந்தையாக இருக்கறதால தான் இத்தனை வம்பு பண்ணுறா” என்றார் அவர்.

இருவரும் சேர்ந்து சிரித்தனர். அவளைத் திருமணம் முடித்து வந்த நாளிலிருந்து ஒவ்வொரு பிள்ளைகளும் பிறந்த நாளையும் பொழுதையும் அவர்கள் வளர்ந்த காலத்தையும் அவர்களை வளர்க்க இவர்கள் பட்ட பாட்டையும் இன்று பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்ட நிறைவையும் மாறி மாறி பேசி பேசி நீண்டது அந்த இரவு. அவர்களும் பிள்ளைகளை நினைத்துக் கிடக்க காரணம் வேண்டும்.

சாந்தா

ஷ்யாமளா கோபு 

இரவு மணி ஒன்பதிருக்கும். வாசல் கதவை மூடி தாளிட்டு விட்டு படுக்க கிளம்பினேன். தெருவில் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது. என் வீட்டிற்கு எதிர் வரிசையில் இடதுபுறம் நான்கு வீடு பத்து பதினைந்து தள்ளி தெருநாய்கள் இருக்கும். அந்த வீட்டு அம்மாள் தான் அவைகளுக்கு தினசரி உணவிடும் பழக்கம். தெருவினருக்கும், திருடர் பயமில்லாமல் அது ஒரு பாதுகாப்பாக இருப்பதால் அவைகளை ஒன்றும் சொல்வதில்லை. சில சமயங்களில் வெளியாட்கள் யாரேனும் தென்பட்டால் இப்படித் தான் இரவெல்லாம் குரைத்துக் கொண்டிருக்கும். அதுவும் பத்து பதினைந்து நாய்கள் ஒன்றாக ஓங்காரமிடுவது கோபத்தைக் கிளப்பத் தான் செய்யும். ஆனால் வெளியாட்களுக்குத் தான் இத்தகைய வரவேற்பு என்பதால் இப்போதும் எவரேனும் வெளியாட்கள் தெருவில் தென்படுகிறார்களா என்று காம்பவுண்டின் கேட்டிற்கு பின்புறம் நின்று தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தேன்.

என் வீட்டின் இடது புறம் சிறு சந்தில் இருபுறமும் இருபது சிறிய ஸ்டோர் வீடுகள் உண்டு. அவர்கள் எல்லோரும் அவரவர் வீட்டின் விளக்கைப் போட்டிருந்தார்கள். சந்தின் கடைசியில் ஒரே ஒரு ஸ்டோர் வீடு மட்டும் ரொம்ப நாட்களாக காலியாக இருந்தது. இன்று காலையில் தான் புதிதாக திருமணம் ஆன ஒரு ஜோடி குடி வந்திருந்தார்கள். காதல் திருமணம் போலும். இரு வீட்டு உறவினரோ அன்றி நண்பர்களோ இல்லாமல் இருவரும் மட்டும் மாலையும் கழுத்துமாக வந்து இறங்கி ஆரத்தி சுற்றக் கூட ஆளில்லாமல் தாங்களாகவே கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.

இப்போது அவர்கள் வீட்டு வாசலில் தான் ரகளை. ஏ சாந்தா சாந்தா என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான் ஒரு நடுத்தர வயது ஆண். அவளோ கதவைத் திறக்கவில்லை. அவன் சத்தமோ குறையவில்லை. குடித்திருப்பான் போலும். நிற்க மாட்டாதா தள்ளட்டாம். கூட இருந்த பதினைந்து பதினேழு வயது சிறுமிகள் இருவரும் ஓவென்று அழுது கொண்டிருந்தார்கள். வீட்டின் உள்ளே இருந்த இளைஞன் வெளியே வரவில்லை. அந்த இளம் பெண் மட்டும் வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் சாந்தா சாந்தா என்று அவளைக் கெஞ்சுகிரானா அல்லது அடிக்கப் போகிறானா என்று அறிந்து கொள்ள இயலாத வகையில் உளறிக் கொண்டு அவள் மீது விழுந்து கொண்டிருந்தான். அவளோ நகர நகர விடாது அவள் மீது மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்தான். அந்த சிறுமிகளோ சாந்தா என்ற அந்த பெண்ணை ஓடிச் சென்று இடுப்போடு கட்டிக் கொண்டு அம்மா அம்மா என்று அலறி அழுது கொண்டிருந்தது. பார்க்க சகிக்க முடியாத பாச போராட்டம்.

அந்த சந்தில் இருக்கும் அத்தனை குடித்தனக்காரர்களும் அங்கே குழுமி விட்டார்கள். என்னால் மட்டும் விஷயம் என்னவென்று அறிந்து கொள்ளாமல் இன்றிரவு உறங்கி விட முடியுமா என்ன? நானும் அங்கே தான் இருந்தேன்.

அந்த வீட்டின் ஓனரம்மா வந்து சாந்தாவிடம் “என்னம்மா ராவுல இவ்வளவு அக்கப்போரு பண்றீங்க?” என்று குரல் கொடுத்தாள்.சாந்தாவோ பதில் சொல்லாமல் ஓனரம்மாவைக் கண்டதும் மிகவும் பம்மியவளாக “இல்லேம்ம்மா” என்றாள்.

“இங்கே இத்தனை அக்கப்போரு நடக்குது. உன் புருஷன் எங்கே?” என்று கேட்டாள்.

“நான் தானுங்க அதும் புருஷன்” என்றான் இவ்வளவு நேரமும் சாந்தா என்று கூவி கலாட்டா செய்து கொண்டிருந்தவன்.

“என்னது?” திடுக்கிட்டது ஓனரம்மா மட்டுமல்லா கூடியிருந்த கூட்டம் முழுவதும் தான்.

“ஆமாம்ம்மா நான் தானம்மா அதும் புருஷன்.” என்றான் அவனே.

“ஏன்னா இது சாந்தா?” என்ற ஓனரம்மாவின் குரலில் கடும் கோபம் இருந்தது. அவள் கண்கள் சாந்தாவை இரு தோளிலும் பிடித்துக் கொண்டு தொங்கும் இரு சிறுமிகளிடம் பாய்ந்தது.

“இது ரெண்டும் அதும் பிள்ளைங்கம்மா. எங்களை விட்டுட்டு இந்த பயலோடு ஓடியாந்துட்டுது” என்றான் அந்த குடிகார கணவன்.

“நீ மூக்கு முட்ட குடிச்சிட்டு வேலை வெட்டிக்கு போகாம நான் சம்பாரிசிக்கினு கொண்டார ஒன்னு ரெண்டையும் பிடுங்கி அதையும் குடிச்சி கவுந்துடர”

“எல்லார் வீட்டிலும் இருக்கறது தானே. அதுக்காக கட்டின புருஷனையும் பெத்த
பிள்ளைங்களையும் ஒருத்தி இப்படி அம்போன்னு விட்டுட்டு வருவாளா என்ன?” என்று நொடித்தாள் கூட்டத்தில் ஒருத்தி.

“இவன் கூட வாழ முடியாதும்மா” என்று கேவினாள் சாந்தா.

“உன் புருஷன் என்று ஒருத்தனைக் கூட்டிக்கினு வந்தியே. அவனை வெளியே வர சொல்லு” என்று உறுமினாள் ஓனரம்மா. வெளியே வந்தவனிடம் “இதெல்லாம் தெரிந்துமா நீ இந்த பொண்ணை இட்டுக்கினு வந்தே?” என்று கேட்டாள்.

“நல்லவன் மாதிரி நிக்கறானே இவனை நம்பாதீங்கம்மா. எந்நேரமும் குடிச்சிச்சிட்டு இவளை கொல்றான். அதுவும் எத்தனை நாளைக்கு தான் இவனிடம் உதை வாங்கும். அது தான் இட்டுக்கினு வந்துட்டேன்” என்றான் மிகவும் நல்லவனைப் போல் புதுமாப்பிள்ளை.

“இந்த சின்ன பொண்ணுங்களோட கதி என்னாகும்னு நெனச்சிப் பார்த்தியா?” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

“எங்க கூடவே இருக்கட்டும். நான் காப்பாத்திக்கறேன்” என்றான் அவன்.

“யாரு பொண்ணுங்களை யார் காப்பாத்துறது?” என்று உறுமினான் சாந்தாவின் பழைய கணவன்.

“ஏண்டா நீயும் காப்பாத்த மாட்டே. என்னையும் காப்பாத்தக் கூடாதுன்னு சொல்றே. கொஞ்சமாவது மனசாட்சி வெச்சிப் பேசு” என்றான் சாந்தாவின் புது கணவன்.

“தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான்” என்று கிசுகிசுத்தான் கூட்டத்தில்  ஒருத்தன்.

ஓனரம்மாவின் காதில் விழுந்து விட்டது அந்த வார்த்தைகள். “யாருடா அது கெட்ட வார்த்தை பேசறது?” கோபத்துடன் கூட்டத்ததில் குரல் வந்த திசையில் ஒரு முறை முறைத்தாள். கூட்டம் அமைதியாகி விட்டது. “சாந்தா இப்போ நீ என்ன செய்யப் போறே?” என்று கேட்டாள் ஓனரம்மா.

“நான் இவரோடு தான் இருப்பேன்” என்று காலையில் திருமணம் முடித்துக் கொண்டு வந்த புது கணவனுடன் ஒண்டி நின்றாள் அவள்.

“அம்மா எங்களை விட்டுட்டுப் போய்டாதே” என்று அவளிடம் கெஞ்சினார்கள் அவள் மகள்கள் இருவரும். தன் புதுக்கணவனை பரிதாபமாக பார்த்தாள் சாந்தா.

உடனே மனம் இளகி விட்டது அவனுக்கு. “நீங்க எங்களோடு இருங்க. நான் பார்த்துக்கறேன்” என்றான்  அவன்.

“நானும் உங்களோடு இருக்கேன். என்னையும் உங்களோடு வெச்சிக்கங்க” என்றான் சாந்தாவின் பழைய கணவன்.

“ஏய் என்ன சொன்னே?” என்றான் புது கணவன்.

“என் குடும்பம் உன்னோடு தானே இருக்கு. நான் மட்டும் தனியா இருக்க முடியுமா?”

“அதுக்கு?” பதறினான் அவன்.

“நானும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன்” என்றான் அந்த குடிகாரன்.

“என்ன சொன்னே?” என்று திடுக்கிட்டான் இந்த ட்விஸ்டை எதிர்பாராத புது மாப்பிள்ளை.

“நான் சோத்துக்கு என்ன செய்வேன்? உங்களோடு நானும் இருந்திடறேன். நீ என் பொண்டாட்டிய வெச்சிக்கோ. கூடவே என்னையும் வெச்சிக்கோ. அம்புட்டு தான்”

தலையில் அடித்துக் கொண்டாள் சாந்தா. அங்கும் இங்கும் சாந்தியில்லை அவள் வாழ்விலே. என்ன செய்வது?

இப்போது கூட்டம் முழுவதும் திகைத்து ஆகா, டேய் என்ன சொன்னே, அட வெட்கம் கெட்டவனே, இப்படி மானம் கெட்டவனுடன் அந்த பொண்ணு எப்படி வாழ முடியும்? இன்னைக்கு மானங்கெட்டு பொண்டாட்டியை அடுத்தவனுக்கு விட்டவன் நாளை குடிக்கு காசு இல்லைன்னு பெத்த பிள்ளைங்களை அடுத்தவனுக்கு வித்துடுவான் என்றெல்லாம் கூட்டத்தில் ஆளாளுக்கு பேசிக் கொள்ள தொடங்கி விட்டார்கள்.

மனசு வெறுத்துப் போயிற்று அந்த ஓனரம்மாவிற்கு. “ஏனம்மா சாக்கடைக்கு தப்பி பீக்குழிக்குள்ள விழுந்ததைப் போல அவனுக்குத் தப்பி இவனோடு வந்திட்டியே. உன் வயசு பெண்களை நாளை இவன் நல்லபடியா பார்த்துப்பான்னு நம்பறியா?” என்று கேட்டாள்.

“இந்த காலத்தில பெத்த தகப்பனை நம்பியே பொட்டைப் பிள்ளைங்களை விட்டுட்டு போக முடியாது. இதுல நீ இவனை நம்பி எப்படி பிழைப்பே?” என்றாள் ஒருத்தி.

“இவன் கூட வாழ முடியாதும்மா” என்று கேவினாள்.

“உன் கஷ்டம் புரியுதும்மா. இன்னைக்கு தமிழ்நாட்டுல குடிகாரனுங்க வீட்டுல நடக்கறது தான் உனக்கும் நடக்குது. ஆனால் நாம நம்ம பிள்ளைகளை கை விடக் கூடாதில்லையா?” என்றேன் நான்.

“இவன் என்னை எங்கேயும் நிம்மதியா பிழைக்க விட மாட்டான்ம்மா” என்றாள் சாந்தா.

“அது தான் தெரியுதே. இல்லாட்டி எவனாவது வெட்கம் கெட்டு உன்னை இட்டுக்கிட்டு வந்தவன் கிட்ட நானும் ஒரு ஓரத்தில் இருக்கேன் என்று சொல்வானா?” என்றேன் நான்.

வார்த்தை போட்டு வார்த்தைப் போட்டு வம்பு பெரிதாகிக் கொண்டிருந்தது. சாந்தாவின் புது கணவன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உள்ளே வர சொன்னான். பழைய கணவனோ நானும் உள்ளே வருகிறேன் என்றான்.

என் கணவர் என்னை அழைக்கவே இதற்கு மேல் இங்கு நின்று  வேடிக்கை பார்க்க முடியாது என்று என் வீட்டிற்குப் போய் விட்டேன்.

மறுநாள் காலையில் ஹவுஸ் ஓனரம்மாவிடம் கேட்டேன் முடிவு என்ன ஆயிற்று என்று. நூறுக்கு போன் பண்ணி எல்லோரையும் வண்டி ஏற்றி காவல் நிலையம் அனுப்பி விட்டதாக சொன்னார்கள். மனசு சாந்தாவிற்காக பரிதாபட்டது. எல்லோரும் அதையே பேசி பேசி அலமலந்து போனோம்.

அக்கினிக் குஞ்சொன்று

ஷ்யாமளா கோபு 

 

“பாலா…..பாலாமணி……….பாலா” குடிசையின் வாசலில் நின்று குரல் கொடுத்தாள் மல்லிகா. உள்ளேயிருந்து ஒரு சிறு அசைவும் வரவில்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். கயிற்றுக் கட்டிலில் தலைமாடு கால்மாடாகப் படுத்திருந்தார்கள் பாலாவும் நிஷாவும். தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது உஷா. மீண்டும் குரல் கொடுத்தாள் மல்லிகா. “பாலா”

“ம்.” என்று எழுந்தவள் எதிரே மல்லிகா நிற்பதைக் கண்டதும் அவசர அவசரமாக எழுந்து அருகில் கிடந்த மகளையும் எழுப்பியவாறே “அம்மா, வாங்கம்மா” என்றாள்.

“என்ன பாலா, நல்ல தூக்கம் போல. எழுப்பி விட்டு விட்டேனா?”

“அப்படி எல்லாம் இல்லம்மா. இந்த புயலில் மூணு நாளா அலமலந்து போய் கிடக்கிறோம். ஏன்னா புயலு, காத்து…அதோ அங்கப் பாருங்க” அவள் காட்டிய திசையில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஐயோ பாவமே என்று இருந்தது. குடிசையின் மேற்கூரை பாதி காணாமல் போயிருந்தது. பின்பக்க சுவரும் இடிந்து தரை மட்டமாகி இருந்தது.

“என்ன பாலா இது?” என்று திடுக்கிட்டவள்  ரொம்ப கோராமையா இருக்கே?”என்றாள்.

“இருக்கிற சொச்ச கூரையும் இடிந்து தலையில் விழுந்துடுமோன்னு பயந்துக் கிட்டு ராவெல்லாம் தூங்காமல் கிடந்தோம் அம்மா. இப்பத் தான் காலையிலே இருந்து காத்து இல்லாமல் அப்பப்போ கொஞ்சம் சிலுசிலுன்னு தூறிக்கிட்டு இருக்கவே சித்த நேரம் படுக்கலாம்னு படுத்தோம். நல்ல அலுப்பு. பசி வேற. கண் அசந்துட்டோம்” என்றவள் “வந்து ரொம்ப நேரமாச்சா?” என்று கேட்டாள்.

“நீங்க எல்லாம் புயலில் சிக்கிக்கிட்டு கிடப்பீங்க. அதனால் தான் ஆஸ்பத்திரிக்கு மாதாந்திர மாத்திரை வாங்க வரவில்லைன்னு தெரிஞ்சி கையோட மாத்திரையைக் கொண்டாந்திருக்கேன் பாலா”

“உக்காருங்கம்மா” சொன்னவள் கட்டிலில் கிடந்த துணிகளை அப்புறப்படுத்தி அவள் அமர இடம் ஒதுக்கிக் கொடுத்தாள். அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தவள் தன் கைப்பையில் இருந்து மாத்திரையை எடுத்து பாலாவின் கையில் கொடுத்தாள்.

“இதுல கொஞ்சம் சாப்பாடு இருக்கு. நான் வீட்ல செஞ்சி எடுத்துக் கிட்டு வந்திருக்கேன். இதோ கொஞ்சம் அரிசியும் இருக்கு. ஒரு வாரத்துக்கு தாங்கும். அதுக்குள்ள நீங்களே சமாளிச்சிர மாட்டீங்களா?”

“மேடம், சோத்துக்கு வழியில்லாமல் நாதியத்துப் போய் நான் நிப்பது இது ரெண்டாவது தடவை. முதல் முறையும் நீங்க தான் உதவினிங்க. இதோ இப்பவும் நீங்க தான் ஆபத்துல காப்பாத்துற கடவுளா கண் முன் வந்து நிக்கறீங்க”

கைக் கூப்பித் தொழுது நின்றவளை கரம் பற்றி “இதற்கு எனக்கு சம்பளம் தராங்க பாலா” உணர்ச்சி வசப்பட்டு கிடந்தவளை லகுவாக்குவதற்காக சிரித்தாள் .

“மாத்திரைக் கொடுப்பதற்குத் தானே சம்பளம். இந்த அரிசிக்கும் சாப்பாட்டுக்குமா சம்பளம் தராங்க” கொண்டையை முடிந்துக் கொண்டு அடுப்பருகே கிடந்த ஒன்றிரண்டு நனைந்த சுள்ளிகளை தட்டி தட்டி அடுப்பில் திணித்து விளக்கில் கிடந்த மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்தாள்.

“என்ன பண்ணப் போறே?”

“கொஞ்சம் கட்டங்காப்பி போடுறேன் மேடம். எங்களுக்கும் சேர்த்து தான்”

“சரி” என்று ஒப்புக் கொண்டவள் “பாலா உனக்கு ஒரு விஷயம் சொல்லணும். அதுக்குத் தான் முக்கியமா நான் வந்ததே”

ஈர சுள்ளியினால் புகையத் தொடங்கியிருந்த அடுப்பை ஊதாங்குழளால் ஊதியவள் நிமிர்ந்து கண்ணில் அடித்த புகைக்கு ஒரு கண்ணை மூடியவாறு  என்ன என்பதைப் போலப் பார்த்தாள்.

“உன்னோட  வழக்கு வர வெள்ளிக்கிழமைக்கு வருது இல்ல. ஞாபகம் இருக்கா?”

“அதுக்குத் தானே உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கிறேன்”

“போன வாரம் வக்கீலய்யாவை வேற ஒரு விஷயமா பார்க்கப் போயிருந்தேன். எல்லா பேப்பர்ஸ்ம் தயாரா இருக்கு. நாம் மருத்துவமனையில் கேட்டிருந்தவைகள் கிடைத்து விட்டது. அதனால் முழு நம்பிக்கை இருக்காம். உன் கேஸ் நல்லபடியா முடிஞ்சிரும்னு சொல்ல சொன்னார்”

“கடவுள் உங்களை மாதிரி மனித உருவத்தில தான் வந்து நம்மை காப்பாத்தி கரை சேர்ப்பாருன்னு படிச்சிருக்கேன் மேடம்”

“ரொம்ப பேசறே நீ” விளையாட்டாக ஒரு விரலை பத்திரம் காட்டினாள்.

“உணமையைத் தான் பேசறேன்” சிரித்தாள் பாலா.

பாலாமணியின் கணவன் ரங்கசாமி பக்கத்து ஊரில் ஓரளவிற்கு நிலம் நீச்சென்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். நாமக்கல்லில் லாரி புக்கிங் ஆபிஸ் வைத்து கொண்டு தொழில் செய்து வந்தான். அவனுடைய அக்கா இங்கேயே அரசு ஆசிரியையாக நல்ல வழமையாகவே வாழ்ந்து வந்தாள். பாலாவின் குடும்பம் ஓரளவிற்கு நடுத்தர குடும்பம். வலுவில் வந்து பெண் கேட்ட  ரங்கசாமியின் பெற்றோரின் தன்மையும் பண்பாடும் எதையும் யோசிக்காமல் அவர்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு சம்மதிக்க வைத்தது.

இப்போது புதிதாகப் பிறந்ததும் பெண்ணாக பிறந்து விட்டது என்று ரங்கசாமிக்கும் அவன் தாய்க்கும் நிரம்பவே ஆதங்கம். ஜாடைமாடையாக ஏசத் தான் செய்வார்கள். ஆனால் ரங்கசாமி பாலாவை நகை நட்டு கார் என்று நல்ல வசதியாகவும் ஆசையாகவும் வைத்திருக்கவே ஆண் குழந்தை இல்லையே என்ற ஆதங்கத்தில் மாமியார் ஏசுவதை பாலா பொருட்படுத்தவில்லை.

எல்லாமே நல்லபடியாகவே சென்று விட்டால் தெய்வத்தை மனிதன் மறந்து விடுவான் இல்லையா! ரங்கசாமி நோய்வாய்ப்பட்டான். அங்கே சுற்றி இங்கே சுற்றி ஆட்கொல்லி நோயான ஹ.அய்.வி முற்றி இன்று எய்ட்ஸ் என்று வந்து நின்றது. அவளுக்கும் குழந்தைகளுக்கும் பரிசோதிக்க வேண்டியது கட்டாயம் என்ற போது கூட விவரம் அறியாதவளாக சம்மதித்தவளுக்கு தலையில் இடி இறங்கியது. அவளுக்கும் அவளுடைய இரு குழந்தைகளுக்கும் நோயின் தன்மை இருப்பதாக பரிசோதனை முடிவு சொன்ன போது உலகமே இருண்டு போனது.

“எல்லாம் உன்னால் தானே?” அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் பாலா.

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” சட்டையை நீவியவன் ரொம்பவும் இறுமாப்புடன் கேட்டான்.

“கல்யாணத்திற்கு முன்பே உனக்கு வியாதி இருப்பது தெரியும் தானே. வீணில் என்னை ஏன் பழி  வாங்கினாய்? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்?”

“என் நிலைமை தெரிந்து வழக்கமாக வரும் பெண்கள் வர மறுத்து விட்டார்கள். கல்யாணம் என்று செய்து கொண்டு விட்டால் இந்த வம்பே இல்லை. யார் பின்னாலேயும் தொங்க வேண்டாம் பார்”

“உன் அக்கா மகளை கட்டியிருந்திருக்கலாமே”

“என்னைப் பற்றி நன்கு தெரிந்தும் அவள் மகளை எனக்கு கொடுப்பாளா அவள்?”

”நான் உன்னைக் கட்டிய பாவத்திற்கு எனக்கு இது தேவை தான். நம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்”

“எனக்குன்னு ஒரு புள்ளைப் பொறக்கலைன்னா அப்புறம் இந்த உலகம் என்னைப் பொட்டைப்பய என்று சொல்லாதா?”

“அதுக்கு இன்னொன்னும் எதுக்கு பெத்தே?”

“ஏய் என்னமோ நான் தான் கேட்டது போல பேசறே?”

“நீ தானே ஆம்புளை புள்ளை வேணும்னு கேட்டு கேட்டு நச்சரிச்சே”

“நான் என்ன உன்ன மாதிரி அன்னக்காவடியா? எத்தனை சொத்து சுகம் இருக்கு. அத்தனைக்கும் ஒரு வாரிசு வேண்டாமா?”

“ஏன் பெத்து வெச்சிருக்கியே ஒரு புள்ளை. அது போதாதா? அதோட நிறுத்தி இருக்கலாம் இல்ல. இப்ப இன்னொன்னு பெத்து அதுவும் உன்னை மாதிரி சீக்கில சாகப் போவுது” நெஞ்சு வெடித்து அழுதாள்.

“அறிவு இருக்கா உனக்கு? எவன் வீட்டுக்கோ போகப் போறது எனக்கு வாரிசா? ஆம்புள்ளைப் புள்ளையப் பெத்துக் கொடுக்க வக்கில்லாதவ பேசற பேச்சைப் பாரு”

அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தவர்கள் அவன் உயிரோடு இருக்கும் வரை பாலாவை அம்மா தாயே மகாலட்சுமி பொறுமையில் பூமாதா என்றெல்லாம் கொண்டாடினார்கள். ஏனெனில் அவன் அருகில் இருந்து பாடுபார்க்க வேறு யாரால் முடியும்?

இழுத்துக் கொண்டு கிடந்தவன் ஒருவழியாக கண்ணை மூடிய போது தன் வாழ்க்கை அஸ்தமித்துப் போனதைப் போல நிராசையுடன் கிடந்தாள் பாலா. ஆசையுடன் அருமையாக வைத்திருந்தவன் இறந்து போனானே என்று இறந்தவனுக்காக அழுவதா அன்றி தெரிந்தே தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் நோயைக் கொடுத்து சீரழித்து விட்டானே என்று கசந்து கொள்வதா என்று புரியவில்லை அவளுக்கு.

இனி தன் எதிர்காலம் என்னாகும் என்பது அவளுக்குப் புரிந்தது. தனக்கு வந்திருப்பதும் ஆளைக் கொள்ளும் ஆள்கொல்லி நோய். இதில் தான் தப்பிக்கவே முடியாது. ஆனால் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? வாழ வேண்டிய வயதில் நோயுடன் போராடத் தான் அவர்களுக்கு பலம் இருக்குமா? ஏன் பலம் இருக்காது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் பாலா. இந்த உலகமும் உறவினர்களும் உடன் இருந்தால் நோயுடன் போராடி வென்று நீண்ட நாட்கள் நம் மகள்கள் வாழ முடியும் என்று தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது அடுத்து அடுத்து இடிகள்.

கைக் குழந்தையுடனும் இடுப்பில் மூன்று வயது பெண் குழந்தையுடனும் நின்றவளை குற்றம் சாட்டியது ரங்கசாமியின் குடும்பம்.

“உன்னால் தான். நீ தான் எங்கேயோ தறிக்கெட்டுப் போய் வியாதியை இழுத்துக் கொண்டு வந்து அவனுக்கும் கொடுத்து விட்டாய்”

“உங்கள் மகன் யோக்கியதை தெரிந்தும் நாக்கில நரம்பில்லாமல் பேசாதீர்கள்” ஆங்காரப்பட்டவளிடம் “ஆண்கள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள். ஆனால் அதனால் எல்லாம் நோய் வந்து விடுமா என்ன? அவன் லோடு லாரி விஷயமா வெளியே தெருவுல போயிருக்கும் போது நீ என்ன செஞ்சியோ? இப்போ உனக்கும் வந்து உன் பிள்ளைகளுக்கும் வந்திருக்கு”

“என் பிள்ளைகளா? உங்கள் பையனோட பிள்ளைகளம்மா”

“அப்படின்னு நெனப்புடன் வந்து விடாதே. அசிங்கப்பட்டுப் போயிடுவே” மாமியார் வெஞ்சினத்து உரைத்தாள்.

கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தாள் நாத்தனார். ”ஏதோ அவன் காலம் முடிஞ்சிப் போச்சு. அவன் போட்ட நகை எல்லாம் கழட்டிக் கொடுத்துட்டுப் போ. நான் பத்திரமா வெச்சிருக்கேன். நாளை பின்னே மகள்களுக்கு கல்யாணம் காட்சின்னு வந்தா நாங்க தானே செய்யனும்”

“நகையை தரணுமா?”

“உங்க அப்பன் வீட்ல இருந்தா போட்டுக்கிட்டு வந்தே?” ஈவு இறக்கம் இல்லாமல் கழுத்தில் கிடந்த தாலிக் கொடியுடன் நகைகளையும் சேர்த்துக் கழட்டிக் கொண்டாள் அவள்.

பாலாவைப் பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் எட்டியே நின்றார்கள். “அப்பா என்னப்பா இப்படி பண்றாங்க” என்று அழுது கொண்டே அருகில் சென்றவளை எட்டியே நின்று “பாப்பா என்ன பண்றது?  உன் விதி. வேறு என்ன சொல்ல?” என்று ஒதுங்கிக் கொண்டார் அவர்.

“நானா அப்பா ஆசைப்பட்டுக் கட்டிக் கிட்டேன்?”

“நான் தான் கட்டி வெச்சேன். அதுக்கு இப்ப என்ன பண்றது?”

“என்னை இப்படி கஷ்டப்பட விடுவீங்களா அப்பா?” கேவி அழுதாள்.

“அவரு நல்லா வெச்சிருந்த போது நீ தானே அனுபவிச்சே. இப்பயும் நீ தானே அனுபவிக்கனும்”

“அப்பா வீட்டுக்கு வரேன்ப்பா. வேறே நான் எங்கே போறது?”

“அம்மா கொஞ்சம் யோசித்துப் பேசு. வீட்ல இன்னும் பிள்ளைங்க இருக்காங்க. அவுங்களுக்கும் கல்யாணம் காட்சின்னு நடக்கணும். உன் விவரம் கேள்விப்பட்டால் அப்புறம் என்ன ஆகும்னு கொஞ்சம் யோசித்துப் பேசும்மா”

“என்னம்மா யோசிக்கணும்?”

“உன் மாமியார் இந்த ஊர் பூரா உன் மேலே பழியை சொல்வாளே”

“அதை நீங்க நம்பறீங்களா?”

“எங்க வீட்ல இருந்தவரைக்கும் உன்னை ஒரு அப்பழுக்கு சொல்ல முடியுமா?”

“அப்படின்னா இப்போ சொல்லுவீங்களா?”

மொத்த குடும்பமும் மௌனமாக நின்றது. இடிந்து போனாள் என்ற வார்த்தை மிகவும் சாதாரணம். தனிமையில் கிடந்து அழுது கரைந்தாள். மனம் எதை எதையோ யோசித்துக் கிடந்தது.

நம் நடத்தையில் சந்தேகப்பட்டு இவர்கள் நம்மை பழி சொல்லவில்லை. மாறாக நம்மைத் தவிர்ப்பதற்காக நம் நடத்தையை வீணில் பேசுகிறார்கள். தங்களுக்கு எப்படித் தேவையோ அதைப் போல இந்த உலகை திருப்புகின்ற சுக்கான்கள் இவர்கள். இவர்கள் சொல்லுவதால் நான் அப்படி ஆகி விட மாட்டேன்.

அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை. கைப்பிள்ளை அழுகையில் கதறியது. அதன் அழுகுரல் நெஞ்சை வரட்டியது. வயிற்றைக் காந்தியது. கையில் இருக்கும் கொஞ்சம் பணத்திற்கு பால்டாயிலை வாங்கி வந்தாள். பாலில் கலந்து குழந்தைகளுக்கும் தனக்கும் குடிக்க டம்ளரில் ஊற்றினாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள். அது அவளும் அவள் குழந்தைகளும் இனி இந்த உலகில் வாழப் போகிற வாழ்க்கைக்கான கதவு திறப்பாக இருந்தது.

மருத்துவமனையில் இவர்களைப் பதிவு செய்திருந்ததினால் இன்று போல் அன்றும் மல்லிகா இவளை தேடி வந்தாள். அவர்களின் நிலை அறிந்தாள். தனக்குத் தெரிந்த பண்ணையில் பாலாவையும் நிஷாவையும் சேர்த்து விட்டு கைக்குழந்தையை வேறு அமைப்பில் சேர்த்து விட்டாள். கைப் பிள்ளைக்காக பகலில் மாரில் பால் சுரக்கும். இரவுகளில் படுக்கையில் நிஷாவை அரவணைத்துப் படுத்திருக்கையில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

காலம் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் மருத்துவமனையில் மல்லிகா பாலாவிடம் துருதுருவென்று அங்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைக் காட்டி, “இது யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டாள்.

ஆளை இடித்து தள்ளும் பெருங் கூட்டத்திலும் பெற்றவளுக்குத் தன் பிள்ளையை தெரியாதா? தன் வாழ்நாள் காலத்தில் இனி ஒருமுறை பார்க்கவே பார்க்க முடியாது என்று மனதின் ஆழத்தில் போட்டு மூடி வைத்திருந்த ஏக்கத்தையும் துக்கங்கத்தையும் மீறி தன் குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள்ளே அலையடிக்கும் அந்த உணர்வுகள் தான் புரியாதா?

கண்கள் கசியத் தொடங்கியிருக்கவே மல்லிகா அவளை அணைத்துக் கொண்டாள். “உனக்கு வேண்டுமானால் நான் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு உன் மகளை பெற்றுத் தரட்டுமா பாலா. இப்போது தான் நீ ஓரளவிற்குத் தேறி விட்டாயே. சொல். கேட்கட்டுமா?”

“ஊஹூம்”

“ஏன்?” ஆச்சரியப்பட்டுப் போனவளை பார்த்து சன்னமாக முறுவலித்தாள் பாலா.மனம் கசந்து  நைந்த அந்த முகத்தைப் பார்த்து மல்லிக்காவிற்கு மனம் கனத்துப் போனது.

“வேண்டாம் மேடம். எனக்கு எப்போது சாவு மணி அடிக்குமோ தெரியாது. என்னை நம்பி  ஏற்கனவே நிஷா இருக்கிறாள். அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு கொண்டு கரை சேர்த்து விட்டால் போதும். அங்கே நல்லபடியாக வளரும் அந்த குழந்தையை வீணில் நான் கொண்டு போய் அலைகழிப்பானேன்?”

“நிஷாவை என்ன செய்வாய்?”

“மாத்திரை மருந்தை சரியாக கொடுத்து நல்ல ஆகாரம் கொடுத்து பார்த்துக் கொண்டால் நல்லபடியாகவே வாழ்வாள். நல்ல படிப்பு கொடுக்கணும். உங்களை மாதிரி நல்ல உத்தியோகத்திற்குப் போகணும். நாளை பின்னே அவள் நிலை அறிந்து எவனாவது அவளுக்கு வாழ்க்கைத் துணைக் கிடைத்தால் அந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்கட்டும்”

“இத்தனையும் சின்னதற்கும் கிடைக்கும் தானே பாலா”

“கண்டிப்பாக. அதனால் தான் அந்த குழந்தை அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறேன்”

“நீ நிஷாவுக்கு சொன்ன அத்தனையும் உஷாவுக்கும் கிடைக்கும். ஆனால் அம்மா அக்கா என்று குடும்பம் கிடைக்குமா?”

“அது இருக்கிற நாள் வரை நல்லபடியா இருக்கட்டும் மேடம். என்னோடு வந்து அரை வயிற்றுக்கும் கால்வயிற்றுக்கும் அல்லல் பட வேண்டாம்”

“உனக்கு என்று குடும்பம் இல்லையா பாலா?”

“இருந்தது”

“இப்போது?”

“இல்லை”

“ஏன்?”

“ஏன் என்றால்?” சொன்னாள். ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் சொன்னாள். அவள் கதைக் கேட்டு மனம் கனத்து போனது  மல்லிகாவிற்கு.

வட்டமிடும் வல்லூறுகளும், சுற்றி வரும் ஓநாய்களும், கொத்தி தின்று விடப் பார்த்த பருந்துகளும், நோட்டமிடும் நரிகளும், நூல்விடும் பசு தோல் போர்த்திய புலிகளும் என்று ஒரு வனவிலங்கு கூட்டத்திற்கிடையே வாழ நேர்ந்த போதும், மல்லிகா பண்ணையின் முதாலாளி அவர்கள் குடும்பம் வீட்டு உரிமையாளர் என்று மனிதர்களும் அவளை சுற்றி வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள். அவர்களின் உதவியாலும் மனிதாபிமானத்தினாலும் அவள் தன்னை பாதுகாத்து தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த பாலாவிற்கு தன் மகள் உஷா கண் முன்னே இருந்து மறையவேயில்லை. மல்லிகா கேட்டதைப் போல தன் மகளுக்கு அம்மா அக்கா என்று குடும்பம் வேண்டுமே. எதிர்காலத்தில் நிஷாவிற்கும் ஒரு துணை வேண்டும். ஒருவருக்கு ஒருவர் என்று அக்கா தங்கை இருவரும் வாழும் போது வாழ்க்கை கொஞ்சம் இலகுவாகத் தானே இருக்கும். தன்னைப் போல தனியாளாக கஷ்டப்பட வேண்டியிருக்காதே. இப்போது கஷ்டப்பட்டு பண்ணையில் உழைப்பதைப் போல இன்னும் கொஞ்சம் கஷ்டம் பாராமல் உழைத்தால் இருவருக்குமே கஞ்சி ஊற்றலாம். அரசு பள்ளி இருக்கிறது. அரசின் இலவச ரேசன் இருக்கிறது. உலகில் இன்னும் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். எல்லாருமேவா ரங்கசாமியைப் போலும் அவன் குடும்பத்தினரைப் போலும் இருந்து விடுவார்கள்? அவ்வளவு ஏன் தன் குடும்பத்தினரைப் போல நம்மை நிர்கதியாக விட்டு விடப் போகிறார்கள்?

உஷாவை கேட்டு அமைப்பில் விண்ணப்பித்து அவளை பாலாவிடம் சேர்த்தாள் மல்லிகா.  என்.ஜி.ஓவின் உதவியால் வக்கீல் மூலம் ரங்கசாமியின் குடும்பத்தினரிடம் சொத்தைக் கேட்டு நோட்டிஸ் அனுப்பினாள்.

நாத்தனார் தேடிக் கொண்டு வந்து முகத்தில் அறைந்தாள். ”புருஷனே போய்ட்டான். இன்னும் சொத்திற்கு அலைகிறாய்?”

“நான் உன் தம்பிக்குத் தானே இந்த பிள்ளைகளைப் பெத்தேன். அதற்கான அங்கீகாரம் இது. நீ எனக்கு இடும் பிச்சை இல்லை உன் சொத்து”

“வா வா கோர்டில் அசிங்கப்பட்டு நிக்கப் போறே?”

“எதுக்கு?”

“நீ எங்கேயோ போய் சீக்கை வாங்கி வந்து என் தம்பி தலையில் கட்டி விட்டே?”

“இந்த கதைக்கு பயந்த பாலா இல்லை நான். உன் கதையை நீ கோர்டில் சொல். என் கதையை நான் சொல்கிறேன்”

இதோடு போயிற்றா இத்தகையப் பேச்சுக்கள்? எங்கெங்கோ சுற்றி அவள் காதுக்கே வந்தது. சோர்ந்து போய் விடவில்லை. ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு உண்டான சோதனையைத் தவிர வேறு என்ன பெரிதாக நமக்கு வந்து விடப் போகிறது? அடுத்தவன் மனையிலும் கற்புநிலைக் காத்துக் கொண்ட சீதையை தீக்குளிக்க வைத்த உலகம் அல்லவா இது. அதுவும் ஆனானப்பட்ட அவதார புருஷனான ராமனே கூட இதற்கு விதிவிலக்கல்லவே!.  மனம் தளரவில்லை. இத்தகைய ஏச்சு பேச்சுக்களுக்கு பதில் சொல்லவும் இல்லை. நம்மை நிரூபிக்கக் கிளம்பினால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. மேலும் நிருபிக்கும் அளவிற்கு அவர்கள் நமக்கு யார்? கணவனே ஆனாலும் நம்மை அவனுக்கு நிருபித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நான் அக்கினியைப் போல சுத்தமானவள் என்று எனக்குத் தெரிந்தால் போதும். அதை தவிர்த்து உபயோகமான வேலையைப் பார்ப்போம் என்று மனம் திடப்பட்டாள்.

நீதிமன்றத்தில் தன் இரு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பாலாவை, காரில் வந்து இறங்கிய ரங்கசாமியின் குடும்பத்தினர் கம்பளிப் பூச்சியை பார்ப்பது போல அருவெறுப்புடன் பார்த்து விட்டு கடந்து சென்றார்கள்.

அவர்களுடைய வக்கீலின் பிரதான வாதமே பாலாவிற்கு ரங்கசாமியை அல்லாது மற்ற பிற ஆண்களுடன் தொடர்பு உண்டு என்றும் அவளால் தான் ரங்கசாமிக்கு நோய் வந்தது என்பது தான். கிட்டத்தட்ட இரு குழந்தைகளுமே ரங்கசாமியின் பிள்ளைகளல்ல. அதனால் பாலாவிற்கும் குழந்தைகளுக்கும் குடும்ப சொத்தில் பங்கு கொடுக்க இயலாது என்பது தான்.

பாலாவின் வக்கீல், ரங்கசாமிக்கு நாமக்கல்லில் ஹ.அய்.வி கிளினிக்கில் பதிவு செய்திருந்த பதிவேட்டின் நகலில் உள்ள தேதியையும் மருத்துவ பதிவேட்டின் நகலையும் காட்டி ரங்கசாமிக்கு பாலாவை திருமணம் முடிக்கும் முன்பே நோய் இருந்தது என்று நிருபித்தாகி விட்டது. மனிதாபிமானம் மிக்க நீதிபதிக்குப் புரிந்து விட்டது இந்த வழக்கின் போக்கு.

கடவுள் கை விடவில்லை. கண் திறந்தும் பார்த்தார் போலும். தெளிவான தீர்ப்பை நீதிபதி  வாசித்தார். “ஆகையினால் ரங்கசாமியியன் மனைவி பாலாமணிக்கும் அவர்களுடைய இரு பெண் குழந்தைகளான நிஷா உஷாவிற்கும் ரங்கசாமியின் பரம்பரை சொத்துக்களில் ஆறில் மூன்று பங்கை இப்போதே கொடுத்து விட வேண்டும். ரங்கசாமியின் பெற்றோரின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய ரெண்டு பங்கையும் அந்த பிள்ளைகளுக்கே கொடுக்க கட்டளையிடுகிறேன்”

“ஆங். என் சொத்தை கொடுக்க மாட்டேன். அதுவும் ஆம்பிள்ளைப் புள்ளையாக இருந்தால் கூட போனா போவட்டும்ன்னு யோசிப்பேன். போயும் போயும் பொட்டைப் புள்ளைங்களுக்கு என் சொத்தைக் கொடுக்க மாட்டேன்” கிரீச்சிட்டாள் மாமியார்.

தீர்ப்பை சொல்லி விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்த  நீதிபதி “அம்மா இன்னும் நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க? ஆம்புளை பொம்பிளைன்னு பேசிக்கிட்டு” என்று கடிந்து கொண்டு விட்டு அங்கே இருந்த உதவியாளரிடம் சொன்னார். ”அவுங்க கிராமம் இருக்கும் போலிஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி ஆய்வாளரை இந்த பெண்ணிற்கு சொத்தைப் பிரித்து தரும் வரை உடன் இருந்து பாதுகாப்பு தரும்படி மனிதாபிமானத்துடன் உதவும்படி நான் பெர்சனலாக தகவல் சொன்னேன் என்று சொல்”

“ஆங்” என்று ஆங்காரப்பட்ட மாமியாருக்கு புரைக்கேறி கண்கள் கலங்கி மாரை அடைப்பதைப் போல ஆகவும் அருகில் இருந்த நிஷா தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து “பாட்டி கொஞ்சம் தண்ணீ குடிங்க” என்று வாயில் ஊற்றினாள். அவளை நிமிர்ந்து பார்த்த பாட்டியின் கண்கள் இறந்து போன மகனை அவளில் கண்டு நெஞ்சம் விம்மியது. மாமியாரின் வலது கரம் நிஷாவை அணைத்துப் பிடித்திருந்தது.

“உனக்கு கொஞ்சம் வேச்சிக்கம்மா.எல்லா தண்ணியையும் பாட்டிக்கே கொடுத்துடாதே” என்றார் தாத்தா.

“பரவாயில்லை தாத்தா. நான் அங்கே போய் தண்ணி  தொட்டியில் பிடிச்சிக்குவேன். பாட்டி நீங்க இன்னும் கொஞ்சம் குடிங்க” என்று மீத நீரையும் பாட்டியின் வாயில் ஊற்றினாள். தாத்தாவின் வலது கரம் நிஷாவின் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தது.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பாலாவிற்கு வானம் பிரகாசமாக இருந்தது அவள் எதிர் வரும் வாழ்க்கையைப் போல.