ஹரீஷ் கணபத்

நிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை

பேருந்திலிருந்து இறங்கும் போதே லேசான குளிர் இருந்தது. பழகிய குளிர் தான். பழகிப் பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சட்டென்று உடல் கண்டு கொண்டு பழக்கப்பட்டு விடும் குளிர் . எப்போதும் வந்து இறங்கியதும் குளிருடன் சேர்த்துத் துளிர்க்கத் துவங்கும் அப்போதைய விடுமுறை நாட்களுக்கான சந்தோஷச் சுரப்பு மட்டும் இல்லை. பையைத் தோளில் சரியாக மாட்டிக் கொண்டு நடக்கத் துவங்கினேன்.

பிரதான சாலையிலிருந்து பிரியும் பாதையில் நுழைந்தவுடன் திடுக்கென்று பிரம்மாண்டமாய் முளைத்திருந்த புதுக் கல்லூரியின் கட்டிடம் கண்களைக் குத்தியது.கல்லூரியின் பெயர்ப்பலகையை இருளில் சற்றே சிரமப்பட்டுப் படித்தபடிக் கடந்தேன்.

முதல் நாள் இரவு ரம்யாவின் முறைப்புகளைச் சமாளித்து அலுவலக வேலையை வீட்டில் வந்தும் தொடர்ந்து கொண்டிருந்த போதே தலைவலி துவங்கி விட்டது. வேலையை முடித்து விட்டுப் பத்தரைக்குப் படுக்கும் போது தலைவலி உச்சத்தை அடைந்து விட்டிருந்தது. படுத்தவுடன் குழந்தை காலைத் தூக்கி மேலே போட்டது அந்த நொடியில் எரிச்சலைத் தந்தது. “ப்ச்” என்று பலமான உச்சுக் கொட்டலுடன் சற்றே வேகமாகக் குழந்தையின் காலைத் தட்டி விட்டதை ரம்யா பார்த்து விட்டாள்.

அவள் தூங்கவில்லை என்பதே அப்போது தான் தெரிந்தது. நெருப்பைப் போல் பார்வையை உமிழ்ந்தவளைச் சமாதானம் செய்ய வார்த்தைகளைத் தேடிச் சேர்க்கையில் தான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்து சேர்ந்தது.

துக்க வீடுகளுக்குப் போவது என்பது எப்போதுமே என் இயல்புக்கு ஒவ்வாததாய்த் தான் இருந்திருக்கிறது..அவ்வாறான இடங்களின் பெரும்பான்மை உரையாடல்களான துக்க விசாரிப்புகள் பொதுவாகவே அதிகபட்சம் மூன்று நான்கு கேள்விகளுக்குள் முடிந்து போகிறவை. சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கனவே பலப்பல முறைகள் சொல்லிச் சலித்த பதில்களையே மீண்டும் மீண்டும் சொல்ல வைப்பவை.

மாமாவின் துக்க வீடு எப்படி இருக்குமென்று மனதில் காட்சியாய்க் கொண்டு வர முயன்று தோற்றேன். மழுங்கலான சித்திரமாய் தீபராணியின் முகம் மட்டும் மேலெழுந்து வந்து நடை சற்றே வேகம் குறைந்தது.கூடவே மாமா வீட்டின் பின்புறமும் வேலியொட்டி இருந்த அந்தத் துவைக்கும் கல்லும் , வேலி தாண்டி சற்றே வளைந்து நீண்டு அடர் காட்டுக்குள் சென்று முடியும் ஒற்றையடிப் பாதையும் பனி படர்ந்த் கண்ணாடியில் சற்றே தெளிவுற்று மீண்டும் கலங்கும் பிம்பம் போல் நினைவில் நெருடின.

———

“என்னா தீப்சு… துக்கத்துக்கு போனவங்க நைட் வர மாட்டாங்க போல தெரியுது. இன்னிக்கு நைட் சாப்புட என்னா பண்ணலாம்? நான் வேணா டவுனுக்கு போய் புரோட்டா வாங்கிட்டு வரட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். கிடைக்கிறதே கொஞ்ச நேரம். அதையும் வேஸ்ட் பண்ணிகிட்டு” என்று முணுமுணுத்தது என் காதில் விழுந்தாலும் “ என்னா தீப்சு? என்ன சொன்ன?” என்றேன். உடல் லேசாக அதிர்ந்து கொண்டிருந்தது.

“வீட்லயே மாவு இருக்குது தோச போட்டு சாப்டுக்கலாம்னு சொன்னேண்டா” என்று சத்தமாகச் சொன்னவள், வேறு பக்கம் திரும்பி “ எப்பப் பாத்தாலும் சாப்பாட்டுலயே கண்ணு” என்று முணுமுணுத்ததும் காதில் விழுந்தது.

அந்த இரவில் என்ன பேசினோம் எப்படி நேரத்தைத் தின்றோம் என்பது எதுவும் ஞாபகமிருக்கா விட்டாலும் அந்த இரவு மட்டும் நினைவில் என்றென்றைக்குமான தடமாய்ப் பதிந்து போனது.

———–

கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றிக் கொண்டு வலது முனை திரும்பும் போது சிறிய டீக்கடை ஒன்று திறந்திருந்தது கண்ணில் பட்டது. பேருந்தின் கடைசி இருக்கையில் மூட முடியாத ஜன்னல் ஒரு பக்கமும் மேலேயே சாய்ந்து விழுந்த முதியவர் மறுபக்கமுமென அமைந்ததால் பறிபோன தூக்கத்தின் விளைவாய்க் கண்ணோரங்களில் படர்ந்திருந்த எரிச்சலுக்குத் தேநீர் சற்றே இதமாய் இருக்குமென்று தோன்றியது.

கடைக்கு நடந்து ஒரு தேநீர் சொல்லி விட்டுச் சோம்பல் முறித்தேன்.. மேலும் இருவர் வந்து டீ சொல்லி விட்டு பென்ச்சில் அமர்ந்து கொண்டனர். துக்கத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தனர். கையில் பையோடு நான் வந்திருப்பது கண்டு துக்க வீட்டுக்குப் போகிறேனென்பதைப் புரிந்து , கண்களால் அமைதியாய் ஆமோதித்து விட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர்.

——-

“கீழ போவல? எல்லாரும் போயிட்டாங்க.”

“நீ போவல”?

“நீயும் வாயேன் போவலாம்”

“நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். கொசு அதிகமா இருக்கு. நீ கீழ போ தீப்சு”

“ஒனக்கு மட்டும் கொசு கடிக்காதா?”

முதன் முதலில் கல்லூரி இரண்டாமாண்டு முடிவில் ஊருக்கு வந்திருந்த போது தீபராணி என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் அதுவரை இல்லாத பல மாற்றங்கள் தென்பட்டதை உணர்ந்ததும் உடல் முழுவதும் எங்கெங்கோ குளிர்ந்தது நினைவில் நிரடியது.தீபராணி அப்போது கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாள்.

——

“சார் டீ” என்ற குரல் கலைத்தது. தேநீரின் வெப்பம் மட்டுமே அதைக் குடிக்கத் தூண்டுவதாய் இருந்தது.துக்க வீட்டுக்கு போகையில் தேநீர் குடிப்பது கூட ஏனோ வினோதக் குற்றவுணர்ச்சியாய் இருந்தது.

மெல்லக் குடித்து முடித்து விட்டுக் குளத்தின் இடது முனை நோக்கி நடக்கத் துவங்கினேன். இடது முனை தாண்டி வலப் பக்கம் பிரியும் சாலையில் இறங்கினால் இரு பக்கமும் அடர் மரங்கள் . அதைத் தாண்டினால் தான் ஊர் துவங்குமிடம் வரும்.அந்த இடத்தைக் கடக்கும் போது கறுப்புப் பட்டை இடப்பட்டு அதன் நடுவே மஞ்சள் வட்டத்தினுள் 19 என்று எழுதப்பட்ட கொன்றை மரத்தைக் கண்கள் தேடின.

——-

“என்னா தீப்சு பயங்கர ஜாலியா இருக்காப்ல இருக்கு?”

“அப்டியா தெரிது?” நான் சாதாரணமா தான் இருக்குறேன்”

“அய்ய. சும்மா சொல்லாத. உன்னை எனக்கு தெரியாது?”

“அது….”

“ந்தா… சும்மா சொல்லு”

“பிஜி சக்ஸஸ்புல்லா முடிச்சிருவேன்னு செம்ம நம்பிக்கையா இருக்கேண்டா”

“அதான் தெரியுமே… நீ தான் செரியான படிப்ஸாச்சே. அதுக்கெதுக்கு நீ இவ்ளோ உணர்ச்சிவசப்படுற?”

“கேம்பஸ்ல ப்ளேஸ்மெண்ட் கிடைச்சிருக்குடா”

சட்டென்று அமைதியானேன்.

“பாத்தியா. இதை சொன்னா உனக்கு கடுப்பாவும்னு தான் சொல்லல. “

“சேச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்ல.”

“சாரிடா” என்று கூறியபடி தோளில் கை வைத்தவள் சட்டென்று கையை உயர்த்தித் தலையைக் கோதினாள். அவள் கைகளிலிருந்த சீயக்காயும் அஸ்வினி தேங்காய் எண்ணெயும் கலந்த மணம் நாசியில் ஏறிக் கமறியது.

———

புரையேறிச் சட்டென்று தலையை உலுக்கி நிகழுக்கு வந்த போது அடர் தோப்பைத் தாண்டி வாய்க்கால் பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்தேன். எதிரில் யாரோ சைக்கிளில் வருவது தெரிந்தது. மாமா வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருப்பவர். அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. ஆனால் அவர் சைக்கிளில் மேடேறி மூச்சு வாங்க வருவதைப் பார்க்கும் போது ஏனோ அவர் பெயர் சங்கரனாக இருக்கக் கூடுமென்று தோன்றியது.

என்னைப் பார்த்ததும் சைக்கிளிலிருந்து இறங்கினார். ” மணி மருமவன் தான நீயி?” என்றார் சந்தேகத்துடன்.ஆமாம் என்று தலையாட்டியவுடன் முகத்தில் துக்கம் தேங்க “ஹ்ம்ம்.. என்னவோ போ. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். சரி நான் ஒரு வேலையாப் போயிட்டு இருக்கேன்” என்றவர் “போயிட்டு வந்துடறேன்” என்பதைக் கண்ணாலேயே சொல்லி விட்டுச் சைக்கிளை நகர்த்திக் கொண்டு போனார்.

————-

சென்னைக்கு வேலைக்காக வந்தவள், அலுவலகத் தோழிகளுடன் தனியாக வீடெடுத்துத் தங்கி விட்டாள். முதல் சில நாட்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தது, பின் படிப்படியாய்க் குறைந்து நின்று போனது ஒரு கட்டத்தில். தூரத்து ஊரில் இருந்த போது இருந்த நெருக்கமும் வாத்சல்யமும், நினைத்தவுடன் சென்று பார்க்கும் தொலைவில் சென்னையிலேயே இருந்தும் சிறுகச் சிறுகக் குறைந்து போய் கிட்டத் தட்ட நின்று போனது ஆச்சரியமாய் இருந்தது.

வாழ்க்கையின் அலைக்கழிப்புகளில் நீந்திப் போராடி இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள ஏதேதோ போராட்டங்கள் செய்து கொண்டிருந்த சமயத்தில் தீபராணியை வெகு நாட்கள் கழித்து ஒரு திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது..

“எப்படி இருக்கே தீப்சு”?

“நல்லாருக்கேண்டா. நீ எப்படி இருக்கே?”

“நல்லாருக்கேன்”

“பேசியே ரொம்ப நாளாச்சில்ல தீப்சு?”

“ஆமாடா. நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவள் கேள்வியை முடிக்கும் முன் அவள் கைப்பேசி அழைத்தது. தொடுதிரையைப் பார்த்ததும் தானாய் முகத்தில் படர்ந்த புன்னகையைச் சட்டென்று மறைத்துக் கொண்டு கண்களாலேயே எனக்கு விடை கொடுத்து விட்டு நகர்ந்தாள்.அதற்கு மேல் நிகழாமல் அந்த உரையாடல் அங்கேயே முற்றுப் பெற்றது எனக்குக் குழப்பமாய் இருந்தது.

அதற்கு முன் வரை அவள் பேச்சிலிருந்த லேசான குறும்புத்தனம் காணாமல் போயிருந்தது. அவள் பார்வையிலிருந்த அன்னியோன்னியம் காணாமல் போயிருந்தது.ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி அவளிடம் புதிதாகத் தென்படத் துவங்கியிருந்த பக்குவமும் கண்ணியம் கலந்த கம்பீரமும் பிரமிப்பைக் கூட்டியது. கிளம்பும் போது அவளைத் தேடிப் பார்த்துக் காணாமல் சொல்லிக் கொள்ளாமலே தான் கிளம்பினேன்.

———–

மாமா வீட்டின் தெருவுக்குப் போகும் பிரதான சாலையிலிருந்த அந்தத் திரையரங்கம் எந்த வித மாறுதல்களுமற்று அப்படியே இருந்தது. இரும்புக்குருவி என்று தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பாவிடம் நானும் மாமாவிடம் தீபாவும் அவள் அக்காவும் அடம் பிடித்து, தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ராட்சதப் பட்டாம்பூச்சியொன்றைப் பற்றிய படத்தைத் தனியே போய்ப் பார்த்ததும், படம் முழுவதும் அருகில் அமர்ந்திருந்த தீபா, “அய்யோ… எவ்ளோஎ பெருசுல்ல அந்த பூச்சி? யப்பா எப்புடி அந்த பொண்ணு அது மேல உக்காந்து போவுதுல்ல?” என்று வெகு இயல்பாய்த் தொட்டுத் தொட்டுப் பேசியபடி இருந்ததும், படம் முடிந்து வீட்டுக்குப் போகையில் சுற்றிலும் தெரு நாய்கள் நின்று குரைக்க, என் பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாய் அவர்களுக்காக நடித்ததும் கண் முன் வந்து போனது.

———-

“யேய் தீப்சு….எப்டி இருக்க?” சங்கடமாய்ப் புன்னகைத்தேன். அவளுக்கும் அதே சங்கடம் இருந்தது கண்களில் புலப்பட்டது. “ நல்லாருக்கேன். நீ எப்படி இருக்க?”

“நான் நல்லாருக்கேன்” என்றபடியே தீபராணியை ஒட்டி நின்றிருந்தவரை ஏறிட்டேன். புரிந்தவளாக , “ இது ப்ரதீப். என் கலீக்” என்று அறிமுகப்படுத்தினாள். அதைச் சொல்லும் போது அவள் கண்கள் மெல்லத் தாழ்ந்தன. சூழ்நிலையைச் சகஜமாக்கும் பொருட்டு ப்ரதீப்பைப் பார்த்து வலிந்து சிரித்து “ நான் தீபாவோட கஸின்”என்று கூறிவிட்டு “எந்த ஸ்க்ரீன்? என்றேன்

கையிலிருந்த மொபைலை எடுத்துப் பார்த்து “ஸ்க்ரீன் 5 “என்றதும் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு வெளிப்பட்டது. “எனக்கு ஸ்க்ரீன் 9. சரி தீபா. எனக்கு டைமாயிடுச்சு. அப்புறம் பார்ப்போம்” என்று நகர்ந்தேன்.

அதற்கு அடுத்து வந்த நாட்களில் காரணமே இல்லாமல் நண்பர்களிடம் சண்டை போட்டுக் கொண்டும் அம்மாவிடம் போனில் எரிந்து விழுந்து கொண்டும் ஏன் ஒரு விதமான சிடுசிடுப்பில் இருக்கிறேன் என்று புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன்.

———–

மாமா வீட்டுத் தெருவை அடைந்து விட்டிருந்தேன். தெரு முனையிலிருந்தே ஷாமியானாப் பந்தலும் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளும் தெரிந்தன. அங்கிருந்தே நான்  வருவதைப் பார்த்து விட்ட வயதான சிலர், அவர்கள் நினைக்கும் ஆள் தானா நான் என உறுதி செய்து கொள்ள , அருகில் செல்லும் வரை என்னையே உற்றுப் பார்ப்பது தெரிந்தது.

அந்தக் கூட்டத்தில் தெரிந்த உறவுக்கார முகம் ஏதேனும் தெரிகிறதா என்று தேடினேன். அப்பா இருப்பாரென்று நினைத்தேன். காணவில்லை. ஏதேனும் வேலையாய் இருப்பார். யோசனைகளோடு நடந்து வீட்டு வாசலை அடைந்தேன்.

ஏனோ உள்ளே போகாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். நான் அமர்வதற்காகவே காத்திருந்தது போல் , முகம் மட்டும் நினைவில் இருந்த, பெயர் நினைவிலில்லாத, சற்றே தூரத்து உறவினர்கள் இரண்டு பேர் வந்து  என்னருகில் அமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுக்கத் துவங்கினர்.

ஒரு வகையில் அது ஆசுவாசமாய் இருந்தது. உள்ளே போய் மாமாவை, தீபராணியைப் பார்ப்பதை இன்னும் சில மணித்துளிகள் தள்ளிப் போடும் பலவீனமான முயற்சி. ஆச்சரியமாய் என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. என் வீட்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் ரம்யாவைப் பற்றியும் நிஜமான அக்கறையுடன் விசாரித்துக் கொண்டிருந்தனர்.அப்பா சொல்லியிருக்கக் கூடும்.

உரையாடலின் நடுவே யதேச்சையாக விழுந்த தீபராணியின் பெயர் கவனத்துக்கு வந்ததும் மீண்டும் நினைவுகள் நழுவின. தீபராணி தன் காதலை வீட்டில் சொன்ன போது பெரும் பிரச்னை வெடித்தது. மாமாவும் அத்தையும் தினந்தோறும் சண்டை போட்டார்கள். அவள் கொஞ்சமும் மசியவில்லை. அவள் பிடித்த பிடியில் ஸ்திரமாக நின்றாள். கடைசியில் அத்தையும் மாமாவும் தான் இறங்கி வரும்படி ஆயிற்று.

“எப்படிடா இருக்கே?”

“நல்லா இருக்கேன் தீபா”

“எல்லாம் கேள்விபட்டிருப்பேன்னு நினைக்கிறேன்”

“கேள்விப்பட்டேன் தீபா. கங்கிராட்ஸ்.”

“நேர்ல வந்து கூப்பிடலையேன்னு நினைச்சுக்காத. இதையே பர்சனல் இன்வைட்டா எடுத்துக்கோ. கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுடா” என்றாள்.

“கண்டிப்பா” என்றேன்.

போகவில்லை.தீபராணியின் திருமணத்துக்குப் பின் அவளுடனான தொடர்பு இன்னமுமே குறைந்து போனது.

வேலையிலும் தீபராணிக்குப் பின்னான சிறு சிறு ஈர்ப்புகளையும் தாண்டி, வீட்டில் பெண் பார்க்கச் சொல்லி அதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியிருந்த சமயம் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு நாள் தீபராணியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

“எப்படிடா இருக்கே? வேலையெல்லாம் எப்படி போகுது?பொண்ணு பாக்கறதா சொன்னாங்க அத்தை.  டிலே ஆகுதுன்னு கவலைப்பட்டுக்காதே.எல்லாம் நல்லபடியா நடக்கும்.”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஐம் பைன். நீ எப்படி இருக்க தீபா? ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு?”

“எல்லாரும் நல்லாருக்கோம். அது சரி அதென்னடா தீபா தீபான்னு? தீப்ஸ்னு எப்போவும் போல கூப்பிடு”

இப்படியாக எங்களுக்கிடையேயான சம்பாஷனைகள் ஒரு மரியாதையான இடைவெளியில் மீண்டும் தொடர்ந்தன. ஆனால் எங்களுக்கிடையேயான உரையாடலில் சர்வ நிச்சயமாய் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். இடைக்காலங்களில் காணாமல் ஆகியிருந்த பால்யத்தின் பரிவும் வாத்சல்யமும் அக்கறையும் நிச்சயம் அவள் குரலில் கலந்திருந்தது. அதன் கூடவே அவளது கம்பீரமும் முதிர்ச்சியும் சேர்ந்து வேறு ஒரு பரிமாணத்தில் தீபா தெரிந்தாள்.

——

“சொல்லு தீப்சு எப்படி இருக்க? ப்ரதீப் எப்படி இருக்காரு?”

“எல்லாம் நல்லாருக்கோம். உன் பேஸ்புக் போஸ்ட் பாத்துட்டு தான் கால் பண்ணேன்.”

“எந்த போஸ்ட்டு?”

“பிக் பேங் தியரி தான் இருக்கறதுலயே சிறந்த ஷோன்னு போட்டு வெச்சிருக்க? போன வாட்டி நாம பேசும் போது ப்ரண்ட்ஸ் தான் பெஸ்ட்டுன்னு சொன்ன?”

“ரெண்டும் தான். காரணமிருக்கு.”

உரையாடல் டி வி நிகழ்ச்சிகளைப் பற்றித் தொடர்ந்து நட்பையும் நண்பர்களையும் பற்றிப் பேசி, ஊரைத் தொட்டு, தோப்புகள், வாய்க்கால்கள் என்று நீண்டு பால்ய நாட்களில் வந்து நின்று உறைந்து போன காலத்தைக் கண்ணாடி வழி பார்ப்பது போன்ற பிரமையைத் தந்தது.

———-

மின்விசிறிக் காற்றில் அலைந்தாடும் மயிர்த்துணுக்கு போல் அடி மனதின் ஏதோ ஒரு இழையில் சுழன்றபடி இருந்த இனம் புரியாத ஒரு ஏக்கம் ரம்யாவைப் பெண் பார்த்துச் சம்மதம் சொல்லி, நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் அவளுடனான உரையாடல்களின் போது  இன்னும் வலுவாகி, திருமணத்தின் போது உச்சக்கட்டத்தை அடைந்து பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு உடல் சுகமில்லையோவெனப் பதறி விசாரிக்குமளவுக்குப் போனதும் சுதாரித்துக் கொண்டேன்.

———-

சட்டென்று தோளில் கை விழுந்ததும் நினைவிலிருந்து நிகழுக்கு வந்தேன். அப்பா நின்றிருந்தார். ” நீ எப்படா வந்த?” என்றார். கேட்கும் தொனியிலேயே “உள்ள வராம் இங்க என்ன பண்ணிட்டிருக்க” என்ற கேள்வி ஒலித்தது. கண்ணாலேயே உள்ளே போகுமாறு சைகை காட்டி விட்டு விலகிப் போனார்.

இதற்கு மேலும் தவிர்க்க முடியாது என்று  எழுந்தேன். வாசல் படிகளிலும் உறவினர் கூட்டம் நிறைந்திருந்தது. ‘ அந்தப் புள்ள தான் பாவம். அழுவறதுக்கு கூட நேரமில்லாம சுத்தி சுத்தி வேலை பாக்குது. ஒரு சொட்டுத் தண்ணியில்லையே கண்ணுல பாவம்.” என்று இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர்கள் தீபராணியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அடி வயிறு லேசாகக் கலங்கியது. மெல்லப் படியேறி உள்ளே நுழையும் போதே லேசான அழுகைச் சத்தம் காற்றில் கலந்திருந்தது. இரவிலிருந்தே அழுது கொண்டிருப்பதால், அழுகையின் சப்தம் தணிந்து, விசும்பல்களும் பெருமூச்சுகளும் கூடச் சில கிசுகிச்சுப்பான உரையாடல்களும் கூடக் காதில் விழுந்தன.

மாமா குளிர் பெட்டிக்குள்  இருந்தார். குளிர் பெட்டியின் தலைமாட்டில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி அணைக்கப் பட்டிருந்தது.அருகே அத்தையும் தீபராணியின் அக்காவும் அமர்ந்திருந்தனர்.

மாமாவின் முகத்தை ஓரிரு நொடிகள் பார்த்தவன், குற்ற உணார்ச்சி உந்தித் தள்ள சுற்றிலும் பார்த்து தீபராணியைத் தேடினேன். அவளைக் காணவில்லை. மீண்டும் மாமா முகத்தைப் பார்க்கத் துவங்கினேன்.

உள்ளறை வாசலில் சலனம் தெரியவே நிமிர்ந்து பார்த்தேன் தீபராணி நின்றிருந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். இரவு முழுதும் தூங்காததால், கண்கள் களைப்புற்றுச் சிவந்திருந்தன. புறங்கையால் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கிக் கொண்டே மெல்லக் குளிர் பெட்டியின் அருகே வந்தவள், “வா” என்பது போல் என்னைப் பார்த்துத் தலையசைத்தாள்.

பதிலுக்கு லேசாகத் தலையசைத்தேன். சில நொடிகள் குனிந்து மாமாவின் முகத்தைப் பார்த்தவள் நிமிர்ந்தாள். கண்களில் நீர் நிறைந்திருந்தது. நாசி விடைத்துக் கொண்டிருந்தது.

மதகுகளைத் திறந்ததும் அடித்துச் சுழற்றும் அணை நீர் போல் சட்டென்று என் மேல் சாய்ந்தவள் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள். அவள் கண்ணீரும் எச்சிலும் சட்டையை நனைத்தன. உள்ளுக்குள் ஏதோ உடைந்து போக, மெல்லக் கைகளை உயர்த்தி, அவள் முதுகைச் சுற்றி அணைத்தேன். மெல்லத் தடவிக் கொடுத்தேன். சீயக்காயும் அஸ்வினி தேங்காயெண்ணெயின் மணமும் நினைவினின்றும் புகை போல் எழுந்து நாசியை ஆக்கிரமித்தது.

அவள் அழுகை நீடித்த நிமிடங்கள் நகராமல் நிற்பது போல் தோன்றியது மெல்ல மெல்ல என் கண்களிலும் நீர் நிறைந்து மறைத்தது.அழுகையின் வீரியம் சற்றே குறைந்தாற் போலிருந்தது. மெல்ல அவளை விலக்கினேன். கண்களோடு சேர்த்துக் கன்னங்களை அழுந்தத் துடைத்தேன். அவள் தலை மேல் மெல்லக் கை வைத்து அழுத்தினேன்.

பின்திரும்பிப்பார்க்காமல்வெளியேவந்தேன். சட்டை  முழுவதும்வியர்த்துநனைந்திருந்தது. அதில்தீபராணியின்வியர்வையும்இருந்தது. தேநீர்குடித்தால்தேவலாம்போலிருந்தது. மெல்லப் படியிறங்கிக் குளத்துத்திருப்பத்தின்தேநீர்க்கடையைநோக்கிநடக்கத்துவங்கினேன். தெருமுனையைத்திரும்பும்போதுயாரோபின்னாலிருந்துஅழைப்பதுபோல்இருந்தது. திரும்பிப்பார்க்கவில்லை.

பச்சை – ஹரீஷ் கண்பத் சிறுகதை

ஹரீஷ் கண்பத்

அம்மா காலையிலேயே மதிய உணவுக்குத் தயார் செய்யத் துவங்கியிருந்தாள். கிராமம் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சிறுநகரமாய் மாறிக் கொண்டிருக்கும் இது போன்ற ஊர் ப்ரியாவுக்குப் புதிது. நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவள். நகரத்திலிருக்கும் எல்லாமும் இங்கேயும் வரத் துவங்கி விட்டாலும் ஒரு மெல்லிய இழையில் இரண்டும் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பது இயல்புதான்.

அதன் பல சாட்சிகளுள் ஒன்றாய் சின்னச் சின்னக் கூரை வேய்ந்த வீடுகளையும், மாலையானால் வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டை அடிக்கும் சனங்களும், வழியில் தென்படும் எல்லா வீடுகளிலிருந்தும் உணவுண்ண அழைப்பும் என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ப்ரியா.

மெல்ல வெளியிறங்கிப் படலைத் திறந்து கொண்டு நடக்கத் துவங்கினோம். முந்தைய நாளின் கோடை மழை இலை செடி கொடிகளைத் துடைத்து வைத்திருந்தது. பச்சை மணம் வீசிக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற சாலையை ப்ரியா வெகுவாக ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது கடக்கும் எக்ஸல் சூப்பர் அல்லது எம் 80 யின் ஒலிகள் தவிர காற்று அமைதியாயிருந்தது.

பத்து நிமிட நடையில்தானிருந்தது கோவில். திடீரென்று வெயில் காணாமல் போய் மேகம் மூட்டம் போட்டது. சட்டென்று சுதாரிப்பதற்குள் சடசடவெனத் தூறல் விழத் துவங்கியது. வேகமாய் அருகிலிருந்த மரத்தடிக்கு ஓடி நின்றேன். ப்ரியாவும் பின்னோடு ஓடி வந்தாள்.

“ மழை பெய்யும்போது மரத்தடில நிக்கக் கூடாது தெரியும்ல. சய்ன்ஸ்” என்றாள் மூச்சு வாங்கலின் நடுவே சிரித்துக் கொண்டே. அவள் நெற்றியிலிருந்து பிரிந்திருந்த ஒற்றை முடியின் நுனியில் அமர்ந்திருந்த மழைத்துளி எப்போது வேண்டுமானாலும் கீழே விழக் கூடும்.

“ இது பாஸிங் க்ளவுட்தான். உடனே நின்னுரும் பாரு மழை,” என்று நான் சொல்லி முடிக்கச் சட்டென்று தூறல் நின்றது. அசட்டுப் பெருமையாயிருந்தது எனக்கு. மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். வழியில் கோமதியக்காள் எதிர்ப்பட்டாள். இதான் சம்சாரமா, என்றாள். ப்ரியாவின் கன்னத்தை வருடினாள். குசல விசாரிப்புகள் முடிந்து “தம்பி வூட்டுக்கு எப்ப சாப்புட வர்ற? ந்தா இன்னிக்குதான் வர்றது” என்றாள்.

எனக்குப் பிறக்கும் குழந்தையின் சிரிப்பு இப்படி இருந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று சட்டென்று தோன்றியது கோமதியக்காவின் சிரிப்பைப் பார்த்து. அவ்வளவு துலக்கம். சிரித்துச் சமாதானம் சொல்லிக் கடந்தேன்.

பத்து நிமிடம் நடந்து கோவிலை அடைந்தோம். “இந்த ஊர்ல இவ்ளோ பெரிய கோவிலா?” என்றாள் வியப்பாய், செருப்பைக் கழற்றியபடியே. பிரதான சன்னிதி கூட்டமின்றி இருந்தது. ஓரிருவர் நின்றிருந்தனர். ஒரு சிறுவன் அவனைவிடச் சின்னப் பெண் ஒன்றை சிரமப்பட்டுத் தூக்கி மணி அடிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அர்ச்சகர் தரிசனம் செய்வித்துவிட்டு பிரசாதம் கொடுக்கையில் கல்யாணம் பற்றி விசாரித்தார். நல்லபடியாய் முடிந்தது சந்தோஷம், என்றார். பிரசாதம் வாங்கிக் கொண்டு அகன்றோம். கோவிலைச் சுற்றி வரும்போது பின்புறமிருந்த அரச மரத்தடி நாகரை வணங்கிக் கொண்டோம். அவ்வளவு பெரிய அரசமரத்தை விடுத்துச் சற்றுத் தொலைவில் சுவர் விரிசலில் லேசாய்க் கீறிக் கொண்டு முளைத்திருந்த அரசஞ்செடி மீது கவனம் பதிந்தது. அது லேசான காற்றில் சிலிர்ப்பது போல் அசைந்தது முதல் துளி மழை உடம்பில் பட்டதும் வரும் சிலிர்ப்புக்கொப்பாயிருந்தது.

அரச மரத்தின் பின்புறம் எங்கிருந்தோ வந்திருந்த ஒற்றை ஆடு முன்னங்கால்களில் எக்கித் தழை தின்ன முயன்று கொண்டிருந்தது. மெல்லப் பிரகாரச் சுற்றை முடித்து விட்டுக் கோவில் வாசலுக்கு வந்தோம்.  கோவிலின் அகன்ற திண்ணையைப் பார்த்ததும், “கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போவோம்” என்றேன். திண்ணையில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்காராமல் உட்தள்ளிச் சுவரில் சாய்ந்து சப்பணங்காலிட்டு அமர்ந்தோம். வெயில் தெரியவில்லையென்றாலும் திண்ணைக்கென வேயப்பட்டிருந்த கூரையின் நிழல் அலாதியாயிருந்தது.

சற்றைக்கெல்லாம் மீண்டும் சடசடவெனத் தூறல். “இதுவும் உங்க ஊர் மழை தானே? இது எப்ப நிக்கும்னு சொல்லு” என்றாள் ப்ரியா என்னைப் பார்த்துக் குறும்பாக. அவள் “உங்க ஊரு மழை” என்று சொன்ன பதம் பிடித்திருந்தது.  தூறல் கோடுகளினூடே மெதுவாக ஒரு எக்ஸல் சூப்பர் கடப்பது தெரிந்தது. கோவிலைக் கடக்காமல் நின்றது. வண்டியிலிருந்து இறங்கி வரும் வெள்ளை வேட்டி மனிதரின் நடையை எங்கோ பார்த்தது போலிருந்தது.

அருகில் வர வர நீர்க் கோடுகளை மீறி ஆள் அடையாளம் தெரிந்தது. ரங்கன் பெரியப்பாதான். என்னைப் பார்த்து விட்டிருக்கிறார். புன்னகையுடன் வந்தார். மழை அவரை ஒன்றும் செய்யவில்லை. திடீரென்று அவர் அருகில் வருவதற்குள் கோவிலுக்குள்ளே தரையில் நீர்த் துளிகள் விழுந்து தெறிப்பதைக் காண வேண்டும் என்று ஆவல் எழுந்தது. திரும்பி உள்ளே பார்ப்போமா என்று யோசனையினூடே பெரியப்பா வந்து சேர்ந்து விட்டார்.

“என்னாடா எப்பிடி கீற” என்றார். சங்கடமாய் நெளிந்தேன்.  “நல்லாருக்கேன் பெரிப்பா” என்றேன். ப்ரியாவிடம் “என் பெரிப்பா” என்றேன். அவள் புருவம் சுருக்குதலில் “இவர் கல்யாணத்துக்கு வரலியே?” என்ற கேள்வி தெரிந்தது.

“இதான் உன் சம்சாரமா. வணக்கம்மா. நல்லாக்கீரியா?” என்றார் நிறைவாக. “நல்லாருக்கேங்க” என்றாள், என்ன சொல்லி அழைக்க வேண்டுமென்ற குழப்பத்தில் எந்த உறவு முறையும் கூறாமல். மழை விட்டிருந்தது. கூரையின் நுனியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

“செரி நட வீட்டுக்கு போவலாம்” என்றார். திடுக்கிட்டேன். “அது… வந்து… பெரிப்பா” என்று இழுத்தேன். “என்னாடா இழுக்குற. உங்கப்பன் என்னிய கல்யாணத்துக்கு கூப்புடலன்னு எனக்கு வருத்தம்தான். அதுக்கு நீ என்னா செய்வ. பெரிம்மா பாத்தா சந்தோசப்படுவாடா. என்னா வரியா” என்றார்.

அவர் அழைப்பின் தொனியில் “தயவு செய்து வாயேன்” என்ற விண்ணப்பமிருந்தது. ”சரி பெரிப்பா போலாம்… ஆனா சாப்பாட்டுக்கு….” என்றேன்.

“அது தெரியும். உங்கம்மா ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க. நீ அங்கயே சாப்புடு. நம்மூட்ல எதுனா கலரு கிலரு முறுக்கு சாப்புட்டு போ. இல்ல காப்பித் தண்ணிதான் குடிச்சிட்டுப் போ. இன்னொரு நாளிக்கி சாப்டுக்கலாம். என்னா ஓகேதான” என்றார். என்ன ஒரு புரிதல். அந்த நொடி பெரியப்பாவைத் தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

“செரி. உனுக்குதான் வீடு தெரியும்ல. ந்தா அஞ்சு நிமிசம் நடந்தா வருது. நீ நடந்து வந்துர்றியா. நான் மருமவளக் கூட்டிகினு வண்டில போறன் முன்னாடி. என்னாமா வரியா” என்றார். ப்ரியா என்னைப் பார்த்தாள். மெல்லக் கண் காட்டினேன்.

“சரிங்க போலாம்” என்று வெகு இலகுவாகக் கிளம்பி விட்டாள். அவர்கள் இருவரும் வண்டியில் ஏறிக் கோவில் முனை தாண்டி மறைந்ததும் நடக்கத் துவங்கினேன். இப்படி மழை அவ்வப்போது நீர் தெளித்து இந்தச் செடிகளையெல்லாம் மேலும் மேலும் பச்சையாக்கிக் கொண்டிருக்கிறதே, ஒரு கட்டத்தில் இதற்கு மேல் செடியில் பச்சைக்கு இடமில்லை என்று செடியில் பட்டு வழியும் நீரெல்லாம் பச்சையாய் வழியப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.

நினைத்தவுடன் திரும்பி சாலையோரச் செடியைப் பார்த்தேன். அமைதியாயிருந்தது. பெரியப்பா இந்த ஐந்து நிமிட வண்டிப் பயணத்திலேயே ப்ரியாவுக்கு எங்கள் குடும்பக் கதையையும் அப்பாவுக்கும் அவருக்குமான உப்பு பெறாத ஏதோ ஒரு கவுரவச் சண்டை பற்றியும் அதனால் உண்டான பத்து வருஷப் பகை பற்றியும், ஆடு பகை குட்டி உறவு கணக்காகப் பெரியப்பா என்னையும் என் தம்பிகளையும் உறவாடுவதைப் பற்றியும் என் அப்பாவும் பெரியப்பாவின் பெண் மீது பாசமாயிருப்பதைப் பற்றியும்  விவரித்திருக்கக் கூடும்.

பெரியப்பா வீட்டுக்குப் போனால் தெரியும். பெரிய்ப்பா வீடு கோவிலுக்கு அருகிலேயே இருந்தது. ஐந்து நிமிஷ தூரம். இவ்வளவு அருகருகே இருந்து கொண்டு எப்படி பகையை தினந்தோறும் காலையில் எழுந்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அதை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகிறதென்று ஆச்சரியமாயிருந்தது. யோசனையினூடே நடந்ததில் பெரியப்பாவின் வீடு வந்து விட்டது.

பால்யத்தில் நான் பார்த்த பெரியப்பா வீட்டின் வாசல் வேலிப் படல் இரும்பு கேட்டாக மாறியிருந்தது. உள்ளே வீட்டுக்குச் செல்லும் வழிகூட சிமெண்ட் வேயப்பட்டிருந்தது. கூடையைத் திறந்து விட்டிருப்பார்கள் போல. கோழிகள் ஆங்காங்கே சிதறிச் சுற்றிக் கொண்டிருந்தன. ப்ரியா பெரியப்பாவுடன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். சரியாக பெரியம்மா வெளியே வந்தார். முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. பாதி வழியிலேயே மறித்தார். வாடா இப்பதான் இந்த கெழவிய பாக்கறதுக்கு வழி தெரிஞ்சிதா, என்று என் கன்னம் வழித்தார். பின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துப் போனார். பெரியம்மா கொஞ்சம்கூட மாறவில்லை. வாசலுக்குச் சென்றதும் நிப்பாட்டினார்.

“இங்கயே நில்லு வரேன். இது யாரு உன் சம்சாரமா. அழகா இருக்கா. நல்லாருங்க ரெண்டு பேரும். இந்தா வந்துர்றேன்,” என்று உள்ளே போனார். லேசான பரபரப்பு இருந்தது அவர் நடையில். உள்ளிருந்து இன்னதென்று இனம் பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு உணவு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் வாசனை வந்தது.

ஆரத்தித் தட்டுடன் வந்து வரவேற்றார் பெரியம்மா. “கல்யாணம்லா நல்லபடியா நடந்துச்சா” என்றார். “போயி அவங்களுக்கு காப்பி போடு”, என்று பெரியம்மாவிடம் சொன்ன பெரியப்பா, “காப்பி குடிக்கிறிங்கள்ல?” என்றார் எங்களைப்  பார்த்து. தலையசைத்தோம். “இந்தா போறேன் இருங்க. பையன் வந்துகுறான் வூட்டுக்கு. இன்னா அவசரம்” என்று என் அருகில் வந்து கன்னத்தை வழித்தாள்.

சிறு வயதில் மடியில் போட்டுத் தூங்கப் பண்ணிய பெரியம்மாவின் சேலை வாடை மீண்டும் இத்தனை வருடங்களுக்குப் பின் இவ்வளவு அருகே. நிமிர்ந்து பெரியம்மாவைப் பார்த்தேன். கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இவ்வளவு சந்தோஷம் தாங்காது என்பது போல இருந்தது அவளின் செய்கைகள்.

வீட்டின் பின்புறம் ரயிலின் ஓசை கேட்டது. பெரியம்மா விலகி சமையலறைக்குள் நுழைந்தார். “சின்ன வயசுல இங்க பெரியப்பா வீட்டுக்குப் பின்னால இருக்கற காம்பவுண்டு செவுரு எகிறி குதிச்சிதான் நானு பாஸ்கரெல்லாம் ரயில்வே கிரவுண்டுல போயி விளையாடுவோம்,” என்றேன் ப்ரியாவிடம்.

“அந்த செவுரெல்லாம் இப்ப ரொம்ப பெருசா கட்டிட்டானுக. அப்புறம் அந்த ரயில்வே ஸ்டேசன் வாசல்லருந்து பாய்ஸ் ஸ்கூலு போவோமுல்ல. அந்த ரோட்டையும் ரயில்வே பிராப்பர்டினு சொல்லி கேட்டு போட்டு அந்த பக்கம் போவ முடியாம செஞ்சிட்டானுங்க. இப்ப மெயின் ரோடுல சுத்திகினு ஆனந்தா ஓட்டலாண்ட போயிதான் பாய்ஸ் ஸ்கூல் போவணும். இல்லனா ட்ராக்குலயே நடந்து போவணும்,“ என்றார் பெரியப்பா.

ஏனோ ஊரின் முகம் பெரியப்பா சொன்ன ஒரு வாக்கியத்தில் சட்டென்று மாறி விட்டது போலிருந்தது. “ பாஸ்கர் எங்க?” என்றேன். இன்னும் சகஜமாய்ப் பெரியப்பா என்று அழைக்க வாய் வரவில்லை. “அவன் நால் ரோடு வரைக்கிம் போயிருக்கறான். வந்துருவான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம் 80 சத்தம் கேட்டது.

வ்ண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் எங்களைப் பார்த்ததும் சட்டென்று நின்று விட்டான். சூழலை கிரகித்துக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. எழுந்து அவனை நெருங்கினேன். தோள் மேல் கை போட்டு அணைத்தேன். “எப்படி இருக்க பாஸ்கரு” என்றேன். தயங்கிப் பின் அவனும் அணைத்தான். “டேய் எப்பிட்றாகீற. நான் நல்லாகுறன். என்றவன் இயல்பாய் ப்ரியாவைப் பார்த்து, “இன்னாமா நல்லாகுறியா” என்று புன்னகைத்தான்.

“பெரியப்பா பையன். எனக்கு அண்ணன். ஆனா பெஸ்டு ப்ரெண்டு,” என்று ப்ரியாவிடம் அறிமுகம் செய்தேன்.

பெரியம்மா காபிக் கோப்பைகளை ஒரு பெரிய தட்டில் வைத்து கூட பிஸ்கட், சீடை, முறுக்கு என்று எதையெதையோ கொண்டு வந்தார். கவனிப்பும் அனுசரிப்பும் பேச்சுகளும் விசாரணைகளும் நீண்டபடியிருந்தன. கவனமாய் அப்பா பற்றிய பேச்சு மட்டும் எழாமல் பார்த்துக் கொண்டார் பெரியப்பா.

நேரமாகி விட்டதென்று சொல்லிக் கொண்டே கிளம்புவதற்கு எழுந்தேன். பெரியப்பா “எப்படி போற?” என்றார். “ நடந்துதான் “ என்றேன்.

“இரு நான் கொண்டு வுடறேன்,” என்றார். திடுக்கென்றது. இதென்ன தர்ம சங்கடம்? “இல்ல… நாங்க ரெண்டு பேரு… நடந்தே….” என்றேன். “அட அதுக்கென்ன. என் வண்டி கீது. பாஸ்கர் வண்டி கீது. போலாம் வா,” என்றார். பாஸ்கரும் குழம்பினான். ஆனால் தயாரானான். விஷயத்தின் வீரியம் புரியாததால் ப்ரியா வேடிக்கை மட்டும் பார்த்தாள்.

“என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடன் கிளம்பினேன். பெரியப்பா வண்டியில் ப்ரியா ஏறிக் கொள்ள, பாஸ்கருடன் நான் கிளம்பினேன். வீடு நெருங்க நெருங்க குழப்பம் அதிகரித்தது. ஒன்றிரண்டாய்த் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. போகும்போது இருந்த தூறலை ரசிக்கிற மனநிலை இப்போது இல்லை.

யோசித்து முடியாமல் வீடு வந்து விட்டது. இறங்கிக் கொண்டு எதுவும் சொல்லாமல் மௌனமாய்த் தலையாட்டினேன். அவர்களைக் கிளம்பச் சொல்லி நேரிடையாய்ச் சொல்ல முடியாது. அப்பா வெளியே வந்து விடக் கூடாதென்பதே என் வேண்டுதலாயிருந்தது.

சட்டென்று ப்ரியா, “ உள்ள வாங்க பெரியப்பா,” என்றாள். சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்து விட்டாள். ஒரு நொடி என்னைப் பார்த்த பெரியப்பா பின் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தார். உயிர் போய் விடும் போலிருந்தது. இந்த ரயில் வேறு நேரம் காலம் தெரியாது கூவித் திரிந்து கொண்டிருந்தது.

வாசலில் அரவம் கேட்டு அம்மா தான் முதலில் வந்தாள். அதிர்ச்சியை மெல்ல மென்று முழுங்கியவள் “ வாங்கணா. வா பாஸ்கரு,” என்றாள் மெல்லிய குரலில். படி வரை வந்தவரை எப்படி வர வேண்டாமென்று சொல்வது என்பது தவிர அவள் வரவேற்க வேறு காரணங்களில்லை. பயம் அப்பிக் கிடந்தது அவள் கண்ணில்.

“தம்பி நடந்து வர்றன்னு சொன்னான். அதான் எதுக்கு நடக்கணும்னு நாங்க கூட்டினு வந்தோம். கல்யாணமெல்லாம் நல்லா நடந்துச்சா?” என்றார்.

“ஆங்… நல்லா… நடந்துச்சு,” என்றாள் அம்மா. குக்கர் விசிலடித்தது. இப்போது இந்த நொடி சோவென்று பெருமழை பெய்யத் துவங்கி பேச்சுக் குரல்களை அமுக்கி விடாதா என்றிருந்தது எனக்கு.

அப்பா வெளியில் வந்தார். நின்றிருப்பவர்கள் எல்லாரையும் பார்த்தார். பின் அப்பாவின் பார்வை பெரியப்பா மீது நிலை கொண்டது. சில நொடிகள். யுகங்களுக்கான மௌனங்களைத் தமக்குள் பொதிந்து வைத்திருந்த நொடிகள். மீண்டும் குக்கர் கத்தியது. “வா. எப்படிகீற” என்றார் அப்பா பெரியப்பாவைப் பார்த்து.

“ நல்லாகுறன். நீயி?” என்றார் பெரியப்பா.

“ நல்லாதான் இருக்குறன். வா வந்து உக்காரு,” என்றார். பெரியப்பா சுவாதீனமாய் அமர்ந்து கொண்டார்.  “கல்யாணத்துக்கு கூப்புட…” என்று தொடங்கிய அப்பாவை அவசரமாய் இடை மறித்து “அது பரவால்ல” என்றார் பெரியப்பா.

“எப்படிகிற பாஸ்கரு” என்றார் அப்போதுதான் பாஸ்கரைப் பார்த்த அப்பா.

“நல்லாகுறன் சித்தப்பா” என்றான் பணிவாய்.

பின் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு “புள்ளைக்கி கல்யாணம் ஆகிருக்குது. அதான் நம்ம வூட்டுக்கு சாப்புட கூப்புடலாம்னு. நாளைக்கி அனுப்பி வெக்கிறியா?” என்றார். இத்தனை உரையாடல்களின் இடையேயும் இருவரும் ஒருவரையொருவர் கண் பார்த்துக் கொள்ள தவிர்த்தனர்.

“அதுக்கென்னா. வருவான்” என்றார் அப்பா.

“செரி அப்ப நான் கெளம்பறேன்” என்று திரும்பியவர் மீண்டும் ஒரு முறை தயங்கி நின்றார். சட்டென்று அப்பாவின் பக்கம் திரும்பி அவர் தோளைத் தொட்டு, “நீயும் வாயேன். சம்சாரத்தையும் கூட்டினு வா. எல்லாரும் வாங்க. ரெம்ப நாளாச்சி” என்றார். இப்போது அப்பாவின் கண்ணை நேருக்கு நேர் பார்த்தார்.

“செரி என்னா வேல கீதுன்னு பாத்துகினு நாளிக்கி எல்லாரும் வந்துர்றோம். அண்ணியாண்ட சொல்லிரு,” என்றார் அப்பா. மெல்லத் தலையசைத்த பெரியப்பா வாசலை நோக்கி பாஸ்கருடன் நடந்தார்.

நான் பின்னாலேயே சென்றேன். திரும்பி, “வரேன் தம்பி. நாளிக்கி அப்பா அம்மா எல்லாரையும் இட்டுகுனு வந்துரு” என்றார். “சரிங்க பெரியப்பா” என்றேன். மஹை பெருந்தூறலாய் விழத் துவங்கியிருந்தது. கோவில் மணிச் சத்தம் தீனமாய்க் கேட்டது. குக்கர் மீண்டும் சத்தம் போட்டது.  பெரியப்பாவின் வண்டி கிளம்பித் தெருமுனை சென்று திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன். ரயில் சத்தம் கேட்கத் துவங்கியது.

நசி

ஹரீஷ்

இரண்டு நாட்களாகவே தொந்தரவு செய்யத் துவங்கி விட்டாள் அவள். சென்ற முறை வந்தவள் போலில்லை. இவள் புதிது. அவளை விடவும் வேகமாக இருந்தாள்.அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தன.

உள்ளுக்குள் பரபரப்பு மிகுந்திருந்தாலும் வெளியில் ஒரு ஜோம்பியைப் போல் அமர்ந்திருந்தேன். “ஏன் இப்படியே உக்காந்திருக்கே? கிளம்பேன் . வெளியில மழை பெய்யுது என்றாள் அவள்.

வாசலில் அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னவோ தெரில. நல்லாததான் இருந்தான். இப்ப கொஞ்ச நாளாததான். விட்டத்தப் பாத்துக்கிட்டு கெடக்கான். திடீர்னு சிரிக்கிறான். என்னான்னு கேட்டா கோவப்பட்றான். எப்பப்பாரு ஒரு வெள்ளைப் பேப்பர எடுத்து வெச்சுகிட்டு வெறிச்சு வெறிச்சுப் பாக்கறான். ரூம் கதவ அறஞ்சு சாத்திக்கிறான்” என்று.

எதிர்க்குரல் கிசுகிசுப்பாகப் பேசியது. விஷயம் சரியாகக் காதில் விழவில்லை. என்ன சொல்லியிருக்கக்கூடும், மேலத்தெரு தர்காவுக்குக் கூட்டிச் சென்று சாகிப் மஸ்தானிடம் மந்திரிக்கச் சொல்லியிருக்கக்கூடும். மழைக்குத் திண்ணையில் ஒதுங்கியவர்களுக்கெல்லாம் வம்புக் கதை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது இந்த வீட்டில்.

அலமாரியைத் திறந்து இருப்பதிலேயே பழைய சட்டையாய்ப் பார்த்து எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தேன். மழை நசநசத்துக் கொண்டிருந்தது. அம்மா “ எங்க கண்ணு போற” என்றாள். அதற்குள் இவள் “ அங்கென்ன பதில் சொல்லிகிட்டு? வா போலாம். க்விக்” என்றாள். பாவம் அம்மா. எப்போதும் என்னை டா போட்டுக்கூட அழைத்ததில்லை. அவளைப் பரிதாபகரமாய்ப் பார்த்து விட்டு வெளியேறினேன். “சந்தேகமே இல்ல. அதான். நீங்க நான் சொன்னத முதல்ல செய்ங்க” என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த எதிர்க்குரல் முதுகின் பின் தேய்ந்து மறைந்தது.

இவள் யட்சி. போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். அங்கும் இங்கும் கடற்காற்றில் தள்ளாடும் தோணி போல் மனசும் மூளையும் வெவ்வேறு திசைகளில் பிய்த்துக் கொண்டிருந்தன. சொற்கள் அகப்படவில்லை. எவ்வளவு வேகமாக நடந்தேன் என்பது சட்டென்று நின்று சுற்றிலும் பார்த்தபின்தான் தெரிந்தது. வீட்டிலிருந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் வரை வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட நாலரை கிலோமீட்டர். அவளுடன் பேசிக் கொண்டே வந்ததில் தெரியவில்லை. வரும் வழியில் ரயில் பாதையை வேறு கடந்து வந்திருக்கிறேன் எதுவுமே கவனத்தில் இல்லை.

சட்டை நனைந்திருந்தது. வேகமாக நடந்து வந்ததில் வியர்வையிலா அல்லது நச நசவெனத் தூறியபடியிருக்கும் மழையினாலா என்று தெரியவில்லை. மைதானத்தைப் பார்த்தேன். ஒருத்தரையும் காணோம். ஆங்காங்கே சிறு சேற்றுக் குட்டைகள் உருவாகிக் கிடந்தன. நட்டு வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான கோல் போஸ்ட் கம்பிகளிலிருந்தும் பூப்பந்துக்கான வலையமைக்கப்பட்டிருந்த கம்பிகளிலிருந்தும் இடைவிடாமல் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

காம்பவுண்டு சுவரின் மீது கைவைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவனை உள்ளே போ என நெட்டித் தள்ளினாள் யட்சி. சற்றே தள்ளியிருந்த வாயில் கேட்டைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. சுவற்றின் மேல் கால் வைத்து சரியாக எகிறும் தருணத்தில் சாலையில் தலை முதல் முழங்கால் வரை நெகிழிப்பை போர்த்தியிருந்த ஒருவர் என்னைப் பார்த்தபடியே கடந்து போனார். நெகிழியால் தலை மறைக்கப்பட்டிருந்ததால் அவர் வயதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.

உள்ளே போலாம் என்றாள். அடுத்த நிமிஷம் குட்டைச் சுவர் எகிறி உள்ளே குதித்திருந்தேன். மூலை வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தேன். நேராகப் போகாமல் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் செய்வது போல் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி நடந்தேன்.

“இந்த சேத்துல கால் நுழைச்சா எப்படி இருக்கும் தெரியுமா. ஐ ஜஸ்ட் லவ் இட். நீயும் நடந்து தான் பாரேன்” என்றாள். கேட்கவில்லையென்றால் விட மாட்டாள். போன முறை வந்தவள் இவ்வளவு ஆதிக்கமில்லை. அவள் பூப்போல் மென்மையானவள். இவள் பயங்கர ராட்சசியாக இருக்கிறாள்.

ஆங்காங்கே உருவாகியிருந்த சேற்றுப் பொதிகளில் கால்களை உள்நுழைத்து அளையச் சொல்லிப் படுத்தினாள். அவள் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் சேற்றில் கால்களை உழல விட்டு நடந்தேன். வேப்ப மரத்தடியை அடைந்தபோது மழையின் வேகம் குறைந்திருந்தது. கால்கள் கரும்பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. மழை தரும் புத்துணர்ச்சியையும் மீறி உடல் மிகவும் சோர்ந்திருந்தது.

இது எப்போது வரை நீளுமென்று தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விடுபட வேண்டும். சொற்களைத் தேடிக் கொண்டே இருந்தேன். எதைப் பார்த்தாலும் அதிலிருந்து ஏதேனும் சொற்கள் கிட்டக் கூடுமா என்று உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.

தேடலைக் கலைத்தாள். “ஹேய்.. இந்த மரத்தடியிலதானே நீ முதல் முதல்ல தமிழ் செக்ஸ் புக் படிச்சே? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றாள். அவள் தொனியில் கிண்டலில்லை. பால்ய கால நினைவுகளை அசைபோட வாய்ப்பு கிடைத்த ஒரு வயசாளியின் குதூகலம் மட்டுமே தெரிந்தது. தொடர்ந்தாள். “ புக் பேர் கூட ஞாபகம் இருக்கு. “பாப்பாத்தியின் காம லீலைகள்” கரெக்டா?” என்று சிரித்தாள்.

சிரிக்க முயன்று தோற்றேன். மண்டைக் குடைச்சல் பலமாக இருந்தது. கைகளின் நடுக்கமும் லேசாகத் துவங்கி விட்டிருந்தது. “உங்க சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளான மாதிரி ஒரு பீல். இல்ல?” என்றாள் காரணமேயின்றி திடீரென்று. அவள் சொன்னதும் எனக்கும் அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது. இடையே சொற்களைச் சேமித்து வைத்தபடியிருந்தேன்.

அவள் கேள்விக்கு ஆமா என்பது போல் தலையாட்டினேன். “அப்ப வா போலாம் “ என்றாள். திடுக்கிட்டேன். அவள் பேச்சை வேறு தட்ட முடியாது. எழுந்து நடப்பதே சிரமமாக இருந்தது. திரும்ப வீடு நோக்கி நடக்கும் போது ரயில்வே குவார்ட்டர்ஸ் மிகப் பெரும் அமைதியைப் போர்த்திக் கொண்டிருந்தது. மழைக்குப் பின்னான ரம்மியம் காற்றில் இல்லை. தனிமையின் ஓலம் நிறைந்திருந்தது. தனிமையின் ராட்சசம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிப்பது போலிருந்தது.

முடிந்தவரை சீக்கிரமாக அங்கிருந்து அகல முயன்று வேகமாக நடந்தேன். அந்தச் சாலையின் முனையில் இருக்கும் ரயில் நிலையமும் கோவிலும்கூட சூழலின் இறுக்கத்தை மாற்ற முடியவில்லை.

ஓரிரு வினாடிகள் நின்று ரயில் நிலைய முகப்பைப் பார்த்தேன். மனித சஞ்சாரம் ஏதுமில்லை. உள்ளே யாரும் இருக்கக்கூடும். ரயில் நிலைய முகப்புக் கட்டிடம் எந்த நேரமும் நிமிர்ந்து நின்று தன் உடல் மீது படர்ந்த ஈரத்தை உதறிக் கொள்ளக்கூடும் என்பது போல் ஒரு தோற்றம் மனசில் ஏற்பட்டது. அது அச்சமூட்டுவதாக இருந்தது.

மீண்டும் நடக்கத் துவங்கினேன். சாலை வழி செல்லாமல் ரயில் பாதையை ஒட்டியே நடக்கத் துவங்கினேன்.. மழை நீரில் கரைந்த மலத்தின் வாடை முகம் சுளிக்கச் செய்வதாய் இருந்தது. அவளும் முகம் சுளித்தாள்.

தொப்பலாக நனைந்து வீட்டுக்குள் நுழையும்போது முதுகின் பின் அம்மாவின் பார்வை துரத்துவதை உணர முடிந்தது. எதுவும் கேட்கவில்லை. உள்ளே சென்று ஒரே ஒரு சட்டையையும் வேட்டியையும்  ஒரு பழைய பையில் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன். அறை வாசலுக்கு வந்தவன் மீண்டும் உள்ளே போய் ஒரு நெகிழிப் பையை எடுத்து ஓரிரு வெள்ளைக் காகிதங்களை எடுத்து கவனமாய் அதில் போட்டுக் கொண்டேன். உபயோகப்படும். பேனாவை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.

அறையை விட்டு வெளியே வரவும் இதை எதிர்பார்த்தேயிருந்த அம்மா பதற்றமாய் அருகில் வந்தாள். “ என்ன கண்ணு எங்க கெளம்பிட்ட” என்றாள்.மெல்லப் புன்னகைத்தேன். “ஒண்ணுமில்லம்மா பயப்படாத. சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. திடீர்னு பாக்கணும்னு தோணிச்சு. அதான் போறேன். நாளைக்கி வந்துருவேன்” என்றேன்.

என்னைத் தனியாக அனுப்புவதில் அவளுக்கு நிறைய யோசனைகள் இருந்தன. என்ன செய்வது, போய்த்தானாக வேண்டும். ஏதோ கேட்க நினைத்தவள் கடைசி நொடியில் கேள்வியை மாற்றி “ இந்த மழையிலயா?” என்றாள். சிரித்தேன். அதற்கு மேல் ஏதும் பதில் கிடைக்காது என்று அவளுக்குத் தெரியும். இயலாமையுடன் “பத்திரமா போய்ட்டு வாப்பா” என்றாள்.

என் உளைச்சலை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் புரிவது கஷ்டம். “சீக்கிரம். நேரமாச்சு” என்று இவள் வேறு உந்தித் தள்ளினாள். பேருந்து நிலையத்தை நடந்தே அடைந்தேன். எல்லாப் பேருந்துகளும் கழுவி விடப்பட்டவை போல் சுத்தமாக இருந்தன. சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச் சீட்டை வாங்கிக் கொண்டேன். ஜன்னலை முழுக்கத் திறந்து விட்டுக் கொண்டேன்.

அரசுப் பேருந்தாதலால் கூட்டமில்லை. கூட்டமாயிருந்திருந்தால் ஜன்னலை இப்படி முழுக்கத் திறந்து விட்டுக்கொள்ள எதிர்ப்பி\ருந்திருக்கும். பேருந்தில் எந்தக் காலத்திலோ பொருத்தப்பட்ட ஆடியோ செட் இயங்காமல் போய் வயர்கள் அறுந்து தொங்கும் நிலையிலிருந்தது.

பேருந்து கிளம்பவும் சிலர் ஓடி வந்து ஏறினார்கள். அவர்கள் யாரும் என் அருகிலோ அதற்கருகிலிருக்கும் இருக்கையிலோ வந்து அமர்ந்து விடக்கூடாதென்று வேண்டிக் கொண்டேன். சற்று நேரமாய் இல்லாமலிருந்த மழை இப்போதுதான் மீண்டும் சிறு தூறல் தெளிக்கத் துவங்கியிருந்தது. ஜன்னல் திறப்பு தடைபடக்கூடாதென்றே அப்படி ஒர் வேண்டுதல். வழியெங்கும் மழை சிலுசிலுத்தபடியே வந்தது. ஆங்காங்கே சொற்ப கூட்டம் பேருந்தில் ஏறுவதும் பேருந்தை விட்டு இறங்குவதுமாய் இருந்தது. இவள் பேசிக்கொண்டே இருந்தாள். அதை கவனியாமல் இருக்க முடியாது. இருந்தும் அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மனசு லேசாக சமனப்படத் துவங்கியிருந்தது.

இந்த நிலைதான் வேண்டும். இன்னும் கொஞ்சம் .இன்னும் கொஞ்சம். முயற்சித்தபடியே இருந்தேன். அவள் குரல்கூட மெல்லத் தேய்ந்து ஒரு கட்டத்தில் மெலிதாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஆனால் அவள் போகவில்லை. அவளின் இருப்பு சர்வ நிச்சயமாய் இருந்தது. என்ன, முன்பு போல் மூளையைப் பிடித்து உலுக்குவதாய் உளைச்சல் தருவதாய் இல்லை. மென்மையாய் இருந்தது.

நாமக்கல் வந்து இறங்கினேன். இரண்டு ஊர்களிலும் பெய்தது ஒரே மழைதான் என்றாலும் மழையில் நனைந்தபின் இரு ஊர்களும் முற்றிலும் வேறாக இருந்தன. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டேன் போல் தோன்றியது. சித்தப்பா வீட்டின் கதவைத் தட்டியதும் சித்திதான் வந்து திறந்தாள். மெல்லிய புன்னகையுடன். நெற்றி சுருக்கவில்லை. அம்மா போன் செய்திருப்பாள் என்று புரிந்தது.

“வா உக்காரு. எப்படி இருக்க?” என்றாள். அவஸ்தையாய்ச் சிரித்தேன். “சித்தப்பா இப்ப சாப்புட வர நேரம்தான். அவர் வர வரை காத்திருக்கறியா இல்ல இப்ப சாப்பிடறியா” என்றாள். அவள் கண்களில் தெரிந்தது சிறு பயமா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ”வரட்டும் “ என்றேன் ஒற்றை வார்த்தையில். “அதானே. அவரைப் பாக்கதான் இத்தனை தூரம் வந்தது. அவரைப் பாக்காம என்ன சாப்பாடு?” என்றாள் இடையில் இவள்.

உள்ளங்கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி குறுகுறுவெனப் பார்ப்பதைக் குனிந்திருந்தாலும் உணர முடிந்தது. அசூயையாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் சிரமமாக இருந்தது. சித்தப்பா வந்து விட்டார். வழக்கமான விசாரிப்புகளைப் பெரும் ஆயாசத்துடன் கடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்து அவரைப் பார்க்கவென்று வந்துவிட்டு அவர் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தட்டில் போட்ட சோற்றை அளைந்து கொண்டிருப்பது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

கை கழுவியவுடன் “கிளம்பறேன் சித்தப்பா. பசங்க வந்தா சொல்லுங்க” என்றேன். என்னப்பா அவசரம் என்றோ… இரேன் போகலாம் என்றோ சித்தப்பா ஏதும் சொல்லவில்லை. அம்மா என் நிலைமை பற்றி விவரித்திருக்கக் கூடும். மெலிதாய்த் தலையசைத்து “போய்ட்டு வாப்பா… ஒடம்பப் பாத்துக்க” என்றார். அவர் கண்கள் பச்சாதாபத்திலும் நம்பிக்கையின்மையிலும் நிரம்பியிருந்தன.

கிளம்பி விட்டேன். மழை முற்றாக நின்று விட்டிருந்தது. வெயில்கூட அடிக்கத் துவங்கியது. ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் கடந்து பெண்கள் கல்லூரி தாண்டி வேக வேகமாக நடந்தேன். கல்லூரியிலிருந்து பெண்கள் வெளி வரத்துவங்கியிருந்தனர். கல்லூரி முடியும் நேரமாகியிருக்க வேண்டும்.

கூட்டத்தை வேகமாய்க் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வரும்போதிருந்தது போலவே காலியான அரசுப் பேருந்தாய் பார்த்து ஏறி அமர்ந்தேன். ஜன்னல் வழி வெயில் ஊர்ந்து தேகமெங்கும் வழியத் துவங்கியிருந்தது. வண்டி கிளம்பியது. இவள் இடைவிடாமல் பேசியபடியே வந்தாள். பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

ஜன்னல் வழியே விரையும் மரங்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்க மிகச் சிறியவையாகத் தெரிந்தன. அவற்றை ஆள்காட்டி விரல் கொண்டு தொட முயன்றபடியே இருந்தேன். என் செய்கையைப் பார்த்து அவள் சிரித்தாள். சட்டென்று ஏதோ தோன்றியது. இதுதான் தருணம். நான் தயாராயிருப்பதாய் ஏதோ சொன்னது. ராசிபுரம் பிரிவருகே வரும் போது எழுந்து வண்டியின் கதவருகே சென்றேன்.

நடத்துனர் என்ன என்பது போல் பார்த்தார். கண்களால் கெஞ்சலாக “இறங்கணும் “ என்றேன். முறைத்தவர் விசிலை ஊதினார். பேருந்திலிருந்து என்னை உதிர்த்துக் கொண்டேன். மனம் நிச்சலனமாக இருந்தது. மண்டைக்குள் குடைச்சலும் உளைச்சலும் ஓய்ந்திருந்தது.

மெதுவாக நடந்தேன். நடக்கப் போவதை அறிந்தோ என்னவோ அவள் ஏதும் பேசாமலிருந்தாள். அந்த அமைதி எனக்குத் தேவையாயிருந்தது. சற்று தூரம் நடந்த பின் ஆளரவமற்ற சாலையோரம் ஒரு டீக்கடை தென்பட்டது. உள்ளே நுழைந்தேன். யாரையும் காணவில்லை. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் கடந்தபின் வயதான பெரியவர் ஒருவர் கையில் பெரிய பாத்திரத்துடன் வந்தார்.” என்னா” என்றார். “டீ வேணும்” என்றேன்.

“இனிமேதான் பால் காச்சணும். லேட்டாவும்,” என்றார். பரவால்ல போடுங்க என்றபடி உடைந்திருந்த நாற்காலியில் அமர்ந்த என்னை வினோதமாகப் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தேன். லாபம் என்று எழுதப்பட்டு ஓரங்கள் கிழிந்து போயிருந்த பிள்ளையார் படம் போட்ட காலண்டர் அட்டை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டேன்.

கவனமாய்ப் பைக்குள் கைவிட்டு நெகிழிக்குள் பொதிந்து வைத்திருந்த வெள்ளைக் காகிதங்களை எடுத்தேன். நடக்கப் போவதை அறிந்த அவள் பதறினாள். கண்ணீர் வரத் துவங்கி விட்டது அவளுக்கு. “ இதை நீ கண்டிப்பா செஞ்சாகணுமா. ப்ளீஸ் வேண்டாமே” என்றாள். வெற்றுக் கண்களுடன் அவளை ஏறிட்ட நான், “ வேற வழியில்ல” என்றேன். தெளிவாக இருந்தேன்.

கண்களை மூடி ஒரு முறை மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். பின் கண்களைத் திறந்தேன். நடக்கப் போகும் விஷயத்தை ஏற்றுக் கொண்டவள் போல் எந்த விதமான உணர்ச்சிகளும் காட்டாமல் அவளிருந்தாள்.

“நசி” என்று தலைப்பிட்டேன். மெல்ல அவளை ஒவ்வொரு சொல்லாய் எழுதத் துவங்கினேன். அவள் பார்வை என் மேல் நிலைகுத்தியிருந்தது. எழுத எழுத எதிரிலிருந்தவள் மையில் மெல்லக் கரைந்து காகிதத்தில் பரவத் துவங்கினாள்.

அழைப்பு

ஹரீஷ் கண்பத்

பேருந்து நிலையத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். வந்திறங்கி முக்கால் மணி நேரமாகியிருந்தது. வருவதாகச் சொல்லி விட்டு தாமதித்துக் கொண்டிருந்த நண்பன் மேல் கோபம் வரவேயில்லை. ஊரின் வெயில் கூட நின்று நிதானமாக உடலைத் தடவுவது போலிருந்தது. ஜனம் வெள்ளமாய் வந்து போய்க் கொண்டிருந்தது. யாரிடமும் பரபரப்பில்லை. மாறாக உற்சாகம் மண்டிக் கிடந்தது. ஊரில் வாழ்ந்த நாட்களில் இது போன்ற பண்டிகை சமயங்களில் இந்தப் பக்கம் வந்ததில்லை. பண்டிகையின் சுவடு ஊர் முழுக்கப் படர்ந்து பரவியிருப்பதாகப் பட்டது.எத்தனை வருஷங்கள் கழித்து வந்திருக்கிறேன் என்று சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளவில்லை. நிச்சயம் ஐந்தாறு வருஷங்கள் இருக்கும். கடைசியாக மாரியின் திருமணத்துக்கு வந்தது.

வருகிறேன் என்று சொன்னவனுக்கு மீண்டும் அழைத்தேன். எடுத்துப் பேசினான். எதிர்முனையில் காற்றின் இரைச்சல் அதீதமாக இருந்தது.வண்டியோட்டிக் கொண்டே பேசுகிறானோ என்று கவலையாக இருந்தது. “ கலெக்டரேட்ல இருக்கறண்டா பையா. வந்துர்றேன்” என்றான். எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகும். பசித்தது. நிலையத்தின்   வெளியே எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவகம் இருப்பதாக ஞாபகம் வந்தது. மெதுவே நடந்து அங்கே சென்றேன். நிரம்பக் கூட்டம். மீண்டும் வெளியே வந்து நின்று கொண்டேன்.பக்கத்தில் மிட்டாய்க் கடை வாசலில் ஒரு குழந்தை அலறிக் கொண்டிருந்தது. அதன் அம்மா குழந்தையைக் கொண்டு வந்து மிட்டாய்க் கடை வாயிலில் அமர வைத்த தன் அறிவைத் தானே நொந்து கொண்டே குழந்தையைச் சமாதானம் செய்தபடி இருந்தாள்.

மெல்ல நடக்கத் துவங்கிய என்னை வழிமறித்தவாறு வண்டியை நிறுத்தினான் பிரபு. செல்லமாக அவன் தோளில் தட்டி, “இதான் வர்ற டைமாடா பையா?” என்றேன். பல வருடப் பட்டண வாசத்தால் பேச்சில் தலைகாட்டாமல் தேய்ந்தழிந்து போன ஊர் வாசம் இங்கு வந்ததும் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடுவது ஆச்சரியம் தான்.”இல்லடா. நான் வந்தர்லான்னு பாத்தன். உன்னிய கிரிஸ்ணகிரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ணுடான்னா நீயி தரும்புரி பஸ்டேண்டு வந்துட்டு போன் பண்ற. மொதுல்லயே போன் பண்ணிருந்தா கரெட்டா வந்துட்ருப்பேன்” என்றான்.“செரி ரொம்ப பேசாத. பசிக்கிது. எங்கனா சாப்புட போலாம் வா” என்றேன்.” எங்க போறது?” என்று என்னையே திருப்பிக் கேட்டான். “ அதியமான் போலாம் வா” என்று வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. திடீரென்று ஞாபகம் வந்தவனைப் போல், “ டேய் நம்ம டீலக்ஸு இன்னும் இருக்குதா இழுத்து மூடிட்டானுகளா?” என்றேன். டீலக்ஸ் என்று நாங்கள் அழைப்பது எங்கள் ஊரின் பலான படத் திரையரங்கை. கல்லூரி நாட்களில் அங்கேயே பழியாய்க் கிடந்ததுண்டு.” நல்லா தான் இன்னும் ஓடினிருக்குது” என்றவன் சற்றே பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தான். “ எல்லா தேட்டரும் அப்டியே தாங்கீது. கணேசா மட்டும் மூடிட்டான்” என்றான்.அந்த அரங்கில் மௌனம் பேசியதே படத்தைத் தனியே போய்ப் பார்த்தது நினைவில் வந்து போனது.”டேய்.. அப்புறமா எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி போய் பாத்துட்டு வந்துரலாம்” என்றதற்கு சரி என்று தலையாட்டினான். அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன்.

வீட்டின் நினைவுகள் மூச்சு முட்ட அழுத்தும் கொடி போல் மூளையைச் சுற்றிலும் படர்ந்து இறுக்கத் துவங்கியது. தலையை உலுக்கிக் கொண்டேன். ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.” டேய் காந்தி நகருல எங்கப்பாவோட அத்த வீடு கீது. அங்க தான் போவணும். சாயந்திரமா பத்திரிக குடுக்க கெளம்பலாமா” என்றேன்.”செர்ரா.. என்னைய வீட்ல விட்டுட்டு நீ வண்டிய எட்துனு போ. சாய்ந்தரம் என்னைய கூட்டிக்கோ” என்றான்.கிளம்பினோம். கணேசா தியேட்டரின் வழியே போகும் போது அந்த இடம் பல்லெல்லாம் கொட்டிப் போய் விட்ட பின்பும் புன்னகை மாறாத பாம்படக் கிழவி போல் தோன்றியது.

அப்பாவின் அத்தை மிக மிகத் தளர்ந்திருந்தார். இன்னமும் அவர் கையில் பிரம்புடன் பாடம் எடுப்பது போலவே ஒரு பிம்பம் மனதில் பதிவாகியிருந்ததை அழிப்பது சிரமமானதாயிருந்தது.நடுங்கும் விரல்களால் தலையைத் தடவி வரவேற்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அறையில் புகுந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் போனது தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது மணி நாலாகியிருந்தது.தயாராகி வெளியே வந்து வண்டியை எடுத்தேன். வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. அப்போதே காற்றில் லேசாகக் குளிர் கலந்திருந்தது. குளிர் இந்த ஊருக்குப் புதிதில்லை. அற்புதமான சீதோஷ்ணம். சிறு வயசில் எத்தனை குளிரையும் தாங்கும் உடம்பு, இப்போதெல்லாம் முடிவதில்லை.பட்டணம் பல விதமான உபாதைகளை விதைத்திருக்கிறது.

குளிரை ரசித்து உணர்ந்தபடியே அவன் வீட்டுக்கு வண்டியை மெல்ல விரட்டினேன்.சத்திர மேல் தெருவும் அப்படியே தானிருந்தது. மாலை நேரம் வீட்டு வாசல்களில் முளைக்கும் பணியாரக் கடைகள் மொளகா வடைக் கடைகள் வியாபாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. பிரபு வீடு மட்டும் முற்றிலுமாக மாற்றிக் கட்டப்பட்டிருந்தது.  வெளியே வந்தவனிடம் விசாரித்தேன். “ தெர்லடா பையா. ரெம்ப நாளா இப்டி தான் கீது. மின்ன எப்பிடி இரின்ச்சுனு மறந்து போச்சி” என்றான் சாதாரணமாக. நான் வந்து எவ்வளவு வருஷங்கள் ஆகி விட்டிருக்கின்றன என்று அப்போது தான் புரிந்தது..

இருவரும் கிளம்பினோம். நானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டேன். அழுக்கடைந்த கட்டிடமென ஞாபக அடுக்குகளில் எப்போதும் பதிந்திருக்கும் அரசு மருத்துவமனை, பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரியாக மாறியிருந்தது மனசை என்னவோ செய்தது. இது வழியே பிரதான சாலையிலிருந்து எத்தனை முறை வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன். இப்போது வெறும் கட்டிடக் காடாய் கண் முன் நின்றது. ஏனோ கல்லூரி படிக்கையில் விபத்தில் இறந்து போன அடுத்த வகுப்பு மாணவனின் உடலைப் பார்க்க இங்கு வந்தது நினைவில் நிரடியது. துக்கத்தை அனுசரிக்காமல் அப்போது மனம் கவர்ந்திருந்த பக்கத்து வகுப்பின் பெண்ணை நோட்டம் விட்டபடியிருந்த குற்ற உணர்வும் துல்லியமாய் கண் முன் வந்துன் போனது.

செந்தில் நகரை அடைந்து தினேசனுக்கு தொலைபேசினேன். அவன் வீட்டுக்கு வழி சொன்னான். வீட்டைக் கண்டடைவது அவ்வளவு சிரமாகவெல்லாம் இல்லை. தெரு மூலை வீடு. அபாரமாக வரவேற்றான். பாலாஜி அங்கேயே வந்திருந்தான். அங்கேயே வைத்துப் பத்திரிகையைக் கொடுத்தேன். பெண் என்ன செய்கிறாள் , திருமணம் எங்கே போன்ற கேள்விகள் சடுதியில் முடிந்து போக, எங்கள் உரையடலில் எப்போதும் எனக்குப் பிடித்தமான பகுதியான கல்லூரி ஆசிரியர்களின் வசனங்களைக் கிண்டலடிக்கும் பகுதி துவங்கியது. பாலாஜி அதில் விற்பன்னன். நேரம் போனதே தெரியவில்லை. மணி ஆறாகி விட்டிருந்தது. சுரேஷின் வீடு அருகிலிருப்பதால் அவனைப் போய் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். அவனைச் சந்தித்து பத்திரிகையைக் கொடுத்தேன். அவன் அம்மா சுரேசனுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இன்னும் எதுவும் தகையவில்லை எனவும் லேசான வருத்தத்துடன் கூறினார்.அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு அடுத்து மாரியைப் பார்த்து விட்டு வந்து விடலாமென்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஆறு மணிக்கே இருள் முழுவதுமாகக் கவிந்திருந்தது. காற்றில் குளிர் வெகுவாக ஏறியிருந்தது.குளிரில் வண்டியைச் செலுத்துவது சிரம்மாயிருந்தது. இன்னொரு பக்கம் ஆனந்தமாயும் இருந்தது. மாரியின் ஊரருகே புதிதாக ஒரு மேம்பாலம் முளைத்திருந்தது. அதைக் கட்டிப் பல வருஷங்கள் ஆகியிருக்கக் கூடும். நான் இப்போது தான் பார்க்கிறேன். இடப்புறம் திரும்பி ஊர்ப் பாதையில் நுழைந்ததும் பழகிய வீட்டு நாய் போல் இருள் வந்து மேலெங்கும் அப்பிக் கொண்டது.மாரியின் திருமணத்துக்கு வந்த போது இருந்தது போலவே இப்போதும் ஊரில் ஏதோ திருமணம் நடந்து கொண்டிருந்தது. சீரியல் விளக்குகளின் ஒளி மினுங்கிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் இந்திப் பாடல் பாடிக் கொண்டிருந்த்தைக் கேட்டு சிரிப்பாக வந்தது.

மாரி வீட்டைல் அடைந்தோம். ட்யூப் லைட் பலகீனமாக எரிந்து கொண்டிருந்த வெளிப்புறத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் தோளில் ஏறி ஒரு சிறுவன் ஆடிக் கொண்டிருக்க, இன்னொருவன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பிள்ளைகளாக இருக்கக் கூடும். எழுந்து வந்து முகம் மலர வரவேற்றான். அவன் மனைவி சமையலறையில் வேலையாய் இருப்பது தெரிந்தது. ஆள் தளர்ந்திருந்தான்.

சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்து, எழுந்து உள்ளே சென்றவன் திரும்பி வருகையில் கையில் மிக்சர் தட்டோடு வந்தான். “ என்னாயா ஆளே டல்லாயிட்ட?” என்றேன். அதேனோ எப்போதும் மாரிய மட்டும் “டா” போட்டு அழைக்க வாய் வந்ததேயில்லை. உருவம் காரணமாக இருக்கலாம்..என்னவோ போ. ஜட்ஜு எக்ஸாம் எளுதினேன். ஜஸ்டுல மிஸ்ஸாயி போச்சு. அடுத்து எப்பன்னு தெர்ல. வேலை டென்சன் வேற. பி பி கூட வந்திருச்சுன்னா பாத்துக்க” என்றான்.

“இந்த வயசுல பி பி எல்லாம் வரக் கூடாதுயா. என்னா போ நீயி. “ என்று சலித்துக் கொண்டேன். அவன் பிள்ளை ஓயாமல் சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தான். பத்திரிகையை கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்ததும், “ந்தா.. ஒரு நிமிசம் இரு. வந்தர்ரேன்” என்றபைட் மாரி உள்ளே ஓடினான்.

சில நிமிஷங்கள் கழிந்து வந்தவன் கையில் சில பொட்டலங்களைத் திணித்தான். கைய நீட்டு என்றவன் ஒரு கயிற்றைக் கையில் கட்டி விட்டான். “ காசி போய்ருந்தன். பிரசாதம். இது கால பைரவரு கவுறு. கலியாணம் வேற நிச்சியமாயிருக்குது. இருட்டுல வேற போறீங்க. இத கட்டிக்க” என்றான்.மாரியின் கைச்சூடு குளிருக்கு இதமாக இருந்தது.

“செல்லா இங்க தான் பைபாஸுக்கு அந்தாண்ட இருக்கறானாம். பாத்துட்டு போயர்லாமா” என்றான் தினேசன்.அவனுக்குத் தொலைபேசி, அவனை பைபாஸ் முனைக்கு வரச் சொல்லி விட்டு அங்கே கொண்டு போய் வண்டியை நிறுத்தினோம்.அடுத்த சில நிமிடங்களில் செல்லா வந்தான். கல்லூரியில் பார்த்த எந்தச் சுவடுமின்றி முதிர்ந்திருந்தான். ஆனால் உற்சாகமாக இருந்தான். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருந்தான். ஓஷோவைப் பின்பற்றுவதாகச் சொன்னான். பத்திரிகையைக் கொடுத்ததும் அந்தத் தேதியில் பட்டணம் வரும் வேலை இருப்பதாகவும் கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். பேச்சு எப்படியோ திசை திரும்பி கல்லூரியை பற்றி மாறியது. அடுத்த அரை மணி நேரம் பாலாஜி கல்லூரி வாத்தியார்களைப் பற்றி ஆற்றிய பலகுரலில் எல்லாரும் வயிறாரச் சிரித்தோம். கிளம்பும் போது பாலாஜியின் தொண்டை முழுவதுமாகக் கட்டியிருந்தது.

குளிரில் எனக்குமே தொண்டை லேசாக அடைக்கத் துவங்கியிருந்தது. ஆனால் மனசு மட்டும் ஏனோ தளும்பிக் கொண்டே இருந்தது.” டேய் எங்க வீட்ட போயி ஒரு வாட்டி பாத்துட்டு வந்தர்லாம்” என்றேன். பிரபு, தினேசன் , பாலாஜி மூவருமே ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் தான் எத்தனை நாட்கள் உண்டு உறங்கி, விளையாடி, கூடி களித்து ஒன்றாக திரிந்த இடம் அது. அவர்களுக்கும் நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்.

பைபாஸ் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை எந்த விதமான மாற்றங்களுமில்லாமல் அப்படியே பலகீனமான மஞ்சள் சோடிய வெளிச்சத்துடன் மனசை என்னவோ புரட்டியது. என் தெருவில் எதுவுமே மாறியிருக்கவில்லை. வீட்டு வாசலில் சாலையில் நின்றபடி, தெரு விளக்கொளியில் வீட்டை சற்று நேரம் வெறித்தபடி இருந்தேன்.” இங்க தான நாம கிரிக்கெட் ஆடுவோம்” என்று அவர்கள் மூவரும் அந்த வீட்டைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்பேசியை எடுத்துப் படம் பிடிக்க முயன்றேன். இருளில் சரியாக வரவில்லை. கண் லேசாகக் கலங்கியது போல் தோன்றியது. பிரமை போல. சட்டென்று ஏதோ ஒரு நொடியில் உள்ளே போய் வீட்டை வாங்கியவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு சுற்றிப் பார்த்து விட்டு வரலாமா என்னும் ஆசை பூதாகாரமாக எழுந்து ஏனோ எழுந்த நொடியிலேயே அடங்கி அமிழ்ந்து போனது. கிளம்பி விட்டேன்.

வண்டியில் ஏறி நகரத் துவங்கிய பின்னும் அவ்வளவு வெட்ட வெளியிலும் வீட்டைப் பற்றின அலையலையான நினைவுகள் பின் தொடர்ந்து துரத்தி வந்து மூச்சு முட்டச் செய்தபடி இருந்தன.

வழியில் கடையில் சாப்பிடப் போன போது சாப்பாடு இறங்கவில்லை. ஏதோ பேர் பண்ணி விட்டு கிளம்பினேன். வீட்டுக்குப் போய் கட்டிலில் விழுந்த பின்னும் துரத்தல்கள் தொடர்ந்தன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலையில் எழுந்திருக்கும் போது ஏழரை ஆகியிருந்தது.இன்று காரிமங்கலம் போவதாக ஏற்பாடு. கோபுவைப் பார்க்க, கல்லூரியில் என் அருகில் மூன்று வருசங்களும் அமர்ந்திருந்தவன்.

அவன் வீட்டை அடைந்ததும் வரவேற்றான். கல்லூரி படிக்காய்யில் அவன் குரலை வெகுவாகக் கிண்டல் செய்வோம். இப்போது அவன் கல்லூரியில் விரிவுரையாளன் ஆகி விட்டிருக்கிறான். காலம் யாரை எப்படி மாற்றுகிறதென்று சொல்லவே முடிவதில்லை. குரல் நல்ல கெட்டிப்பட்டிருந்தது. பிள்ளைகள் மருண்டு விழித்தன. மாட்டுப் பொங்கல் தினமாதலால் சுடச் சுட பொங்கலும் வடையும் கொடுத்தான். பத்திரிகை வைத்து விட்டு செந்திலைப் பார்க்கக் கிளம்பினோம்.

சாலையைக் கடந்து எதிர்ப்புறம் ஏழெட்டு கிலோமீட்டர்களில் அவன் ஊர். வீட்டு வாசலை அடைந்த போது சரியாய் எங்கிருந்தோ வேகமாக வந்தான். “இன்னிக்கு மாட்டுக்கு பூசை வெச்சிருக்கறோம் கீள காட்டுல. அங்க தான் இருந்தேன். நீங்கள்லாம் வரீங்களேனு வந்தேன்” என்றவன் கொஞ்ச நேரம் எங்களோடு கதைகள் பேசிக் கொண்டிருந்தான். எழுந்தவன் “ வாங்களேண்டா. நீங்களும்? பூசை இனிமே தான் போட போறோம். அஞ்சு பத்து நிமிசம் தான், இருந்துட்டு போவீங்க” என்றான். அவன் பின்னாலேயே நடந்தோம். வீட்டைப் பூட்டி விட்டு சரிவில் நடந்தான். இரண்டு நிமிடங்கள் தான். தூரத்திலிருந்தே அவன் அப்பா அம்மா தங்கை எல்லாரும் மாட்டுக்குப் பூசை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

மாட்டின் உடம்பில் வண்ணங்களை அப்பியிருந்தார்கள். விளக்கேற்றி விட்டு மாட்டின் கழுத்தில் மாலையிட்டு விட்டு, கைச் செம்பின் தண்ணீரை மாட்டைச் சுற்றித் தெளித்தபடி “ பலியோ பலி” என்றான் செந்தில். அவன் அப்பா “ பொங்கலோ பொங்கல்” என்றார். மாட்டைச் சுற்றி நடந்தபடியே “ பலியோ பலி பொங்கலோ பொங்கலு” என்று குரல் கொடுத்தனர். இதே போல் மற்ற மாடுகளுக்கும் பூசை நடந்தது. பூசை முடிந்த பின், படையலிட்டிருந்த வெல்லம், புளிக் குழம்பு, சோறு எல்லாவற்றையும் ஒன்றாய்ப் பிசைந்து இலைத் துண்டில் வைத்து எங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அவ்வளவு அற்புதமான சுவையுடனிருந்தது அந்தக் கலவை.

வெயில் ஏறியிருந்தது. மணியைப் பார்த்தேன். உச்சியை அடைந்திருந்தது. இரவு பட்டணம் கிளம்ப வேண்டும். நேரம் நிறைய இருப்பது போலிருந்தது. அடுத்த நொடியே நேரம் மிகக் குறைவாயிருப்பதைப் போல் தோன்றிப் பதறச் செய்தது.பத்திரிகையைக் கொடுத்து விட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். டவுனை அடைந்ததும் தினேசனும் பாலாஜியும் கிளம்பினர். நான் பிரபுவுடன் அவன் வீட்டுக்குச் சென்று அவன் அறையில் படுத்து விட்டேன்.

தூக்கமும் விழிப்புமற்றா ஒரு மாதிரியான அரை மயக்க மந்த நிலையில் புரண்டபடிக் கிடந்தவனை பிரபு கையில் காபியுடன் எழுப்பினான். காபியை வாங்கி உறிஞ்சியபடியே “ பணியாரம் சாப்பட்லாமாடா பையா?” என்றேன். “செரி இரு வாங்கினு வரேன்” என்று கூறி விட்டுச் சென்றவன் சிறிது நேரத்தில் கையில் பொட்டலங்களுடன் வந்தான்.திருப்தியாகச் சாப்பிட்டோம். நேரம் குறைந்து கொண்டே வந்தது.

“செரி நா வீட்டுக்கு போறன். என்னிய கொண்டு போயி வுடு” என்றேன். வீட்டில் என்னை இறக்கி விட்டு விட்டு “நைட்டு எத்தினி மணிக்குடா பஸ்ஸு” என்றான். பத்தே முக்காலுக்கு வண்டி. நீ வரியா.. இல்லின்னாலும் ஒண்ணும் ப்ரச்னயில்ல. நான் போய்க்கிறேன்” என்றேன். “இல்லல்ல. நான் வந்து கூட்டினு போறேன். பத்தே காலுக்கு வரன்” என்று கிளம்பினான்.

என் வீடிருந்த பகுதியில் இப்போது சதுர அடி என்ன விலைக்குப் போகிறதென்று கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.துணிமணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டு கிளம்பினேன். பழகிய பூனைக் குட்டி வீட்டை விட்டுக் கிளம்ப விடாமல் கால்களைச் சுற்றுவது போல கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ நினைவுச் சுழல் என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தது ஏதோ அசவுகரியமாக இருந்தது. பட்டணத்தை நினைத்து ஆயாசமாக இருந்தது.

இரவு உணவு எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டேன். நேரம் எப்படித் தான் போனதோ தெரியவில்லை.பிரபு வந்து ஆரனடித்தான். வீட்டில் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் அடைந்ததும் “ நீ வேணா கெளம்புடா பையா. உங்கூட்ல திட்ட போறாங்க” என்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன் தான் குடித்து விட்டு வண்டியிலிருந்து விழுந்ததால் அவன் இரவில் எங்கே போனாலும் கண் கொத்திப் பாம்பாய் அவன் வீட்டில் கவனித்து வந்தனர். “ அதெல்லாம் ஒண்ணும் பரவால. உன் கூட தான் வந்துகுறேன்னு தெரியும் .ஒண்ணியும் சொல்ல மாட்டாங்க” என்று பிடிவாதமாய் நின்றான்.

வண்டி சரியான நேரத்துக்கு வந்தது ஏனோ மனசுக்கு வருத்தமாக இருந்தது. ஏறி அமர்ந்து கையசைத்தவுடன் அவன் நகர்ந்தான்.ஊரின் குளிர் முகத்தில் பட்டால் தேவலாம் போலிருந்தது. குளிர் சாதனப் பேருந்தென்பதால் சன்னல்கள் திறக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தன. பேருந்தின் குளிர் சாதனம் மனசுக்கு ஒப்பவில்லை. மெல்லப் பேருந்து நகரத் துவங்கியது. இருள் படிந்திருந்த திறக்க முடியாத சன்னலின் வெளியே ஊர் கொஞ்சம் கொஞ்சமாக பின் தங்கி நழுவத் துவங்கியிருந்தது.