(This story is translated by Thackli with the kind permission of Eric Maroney for non-commercial publication specifically at Padhakai.com. No other use may be made of this material without prior permission of the author.)
-எனது ஆன்மா இரவில் உம்மோடு இருக்க விரும்புகிறது. என் மூச்சுக் காற்றும் என்னுள் உன்னைத் தேடுகிறது.
-ஏசாயா 26:8-9
“எதுவுமில்லை; ஒரு சப்தமுமில்லை, ஒன்றுமே இல்லை…
“தானாகத் துவங்கிற்று, அதன்பின் ஒன்றும் நடக்கவில்லை. எனக்கென்றால் என் இதயமே வெடித்து விடும்போல் இருக்கிறது. மேகமூட்டமாய் இருந்த அந்த நாளில், அப்போது சூரியன் வெளியே வந்தது. என் முன் இருந்தது ஒரு சிறு நறவ மலர். நான் சொல்வதை நீ நம்பித்தான் ஆக வேண்டும், அந்த மலர் ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை. சாலையோரம் கிடந்த சேற்றுக்கருகில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சிறு ஊதாச் செடி…
“ஆனால் அப்படி மறுபடியும் நடக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நான் கைகளை ஊன்றி, மண்டியிட்டு அமர்ந்து கொண்டு அதை கவனித்தேன். அதன் இதழ்களும் அதில் சிறிது சிறிதாய் இருக்குமே, அதை என்ன சொல்வாய்? அதுவெல்லாம் என்னவென்று எனக்குத் தெரியாது, அவை அங்கே இருந்தன, ஆனால் இருக்கவில்லை. சூரியன் ஒளியூட்டக்கூடிய எல்லாவற்றையும்விட பிரகாசமாய் அவைத் தெரிந்தன. மிகப் புதிதாய்த் தோன்றியவை போல் அவற்றை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கழுவி விடப்பட்ட உலகத்தைப் பார்ப்பது போல். நான் சொல்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்பது தெரியும். நான் ஒரு சாதாரண யூதன், உன்னைப் போல் படித்தவன் அல்ல…
“நான் அந்த மலரைப் பார்த்தப்போது அது மாறியது போலிருந்தது- ஆனால் உண்மையில், எதுவும் மாறவில்லை!”
ரயில் குலுங்கியது, அவர் தன் இருக்கையிலிருந்து கீழே விழுந்தார். நிமிர்ந்து உட்கார்ந்திருந்தபோது இருந்ததைவிட அவர் தரையில் கிடக்கும்போது இன்னும் எளியவராய்த் தெரிந்தார். கூர்மையாய் எழுதப்பட்ட ‘S’ என்ற எழுத்தைப் போன்ற வடிவம் கொண்ட கோணல் முதுகுடன் புடைத்திருந்தார். அவர் எழுந்து அமர உதவி செய்துவிட்டு, நீண்ட ஒரு பெருமூச்செறிந்தேன்..
“இந்த உள்ளூர் ரயில்கள்தான் என்னைக் கொல்லப் போகின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் பற்றி உனக்கு நினைவு இருக்காது, உனக்கு அவ்வளவு வயதாகவில்லை. இப்போது நாம் ஒரு ஸ்டேஷன் விட்டு இன்னொன்றுக்கு நத்தைகள் போல் ஊர்ந்து கொண்டிருக்கிறோம், நாம்தான் கோயிம்களையும் அவர்களது கோழிக்குஞ்சுகளையும் ஏற்றிக் கொள்ள வேண்டுமே. அந்தக் காலத்தில் நீ எக்ஸ்பிரஸ் ரயிலில் போகிறாய் என்றால் அதில் வருகிறவர்களுக்கு என்று ஒரு அந்தஸ்து இருக்கும். சரி, என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆமாம், அந்தப் பூ. மன்னித்துக் கொள், உனக்கு முழுக் கதையும் புரிய வேண்டுமானால் முதலில் நடந்ததை எல்லாம் நான் கொஞ்சம் சொல்ல வேண்டும்…
“ஒரு நாள், ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு மிக மோசமான ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. என் மனைவியை வேறொருத்தனுடன் பார்த்து விட்டேன். அதைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை, நீ எவ்வளவு தெய்வநம்பிக்கை உள்ளவன் என்பது தெரிகிறது. ஆனால் என் மனைவியை கையும் களவுமாகப் பிடித்து விட்டேன். அதுவும் அவள் ஒன்றும் அப்போது வெறுமே படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை, அவனது சாமான் அவளுக்குள் இருந்தது, உனக்கு அப்படி எதுவும் எப்போதும் நடக்காமல் இருக்கட்டும்! இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அதற்கப்புறம்தான் எனக்கு மூச்சு விடுவதே சிரமமாய்ப் போய் விட்டது. என் உதடுகளுக்கு இடையிலிருந்து காற்று போவது மாதிரியான ஓசைதான் வரும்: ஸ்ஃபீ, என்று துருப்பிடித்த டீ கெட்டிலில் வரும் சப்தம் மாதிரி.
“நான் ஒன்றுமில்லாதவனாய் இருக்கவில்லை. என் பாக்கெட்டில் பணம் இருந்தது. அப்போதெல்லாம் இப்படியில்லை, இன்று நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கும் யூதர்களும்கூட பணம் கிடைக்கிறது என்று சர்ச்சுக்குப் போவதைப் பார்க்க முடிகிறது.
“ஆனால் நான் அப்படி இல்லை, அந்த சமயத்தில் நான் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாரையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய ஆட்களை எல்லாம் எனக்கு நேரடியாகத் தெரியும்…
“ஒருத்தர் விடாமல் அவர்கள் எல்லாருமே நான் பூரண குணமடைவேன் என்று உறுதி அளித்தார்கள். “இதைக் குடி. இந்த மாத்திரையைச் சாப்பிடு. இந்த ஸ்பாவுக்குப் போ’. ஆகா, அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது, பெரிய ஆட்கள். நான் வெந்நீர்க் குளியல் எடுத்தேன், மனோவசியத்துக்கு உட்பட்டேன். என்ன செய்தாலும் என் மூச்சு வசப்படுவதாயில்லை. என் காற்று போய் விட்டது…
“அதன்பின் சில நாட்களில் என்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் போனது. அத்தனை நவீன மருத்துவமனைகளிலும் காந்தங்களிலும் என் பணம் எல்லாவற்றையும் செலவழித்து விட்டிருந்தேன்.
“ஆக, அப்படியே கிடந்தேன், என் அழுக்கில், என் தலைக்கு மேல் மரணம் வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு. அப்போது பார்த்து யார் வர வேண்டும்? எடுபிடி வேலை செய்பவன் ஒருவன், அவன் தோல் பச்சை வெங்காயம் போலிருக்கிறது, அவனது பற்கள் அழுக்காய், கருப்பு கூழாங்கற்கள் போலிருக்கின்றன. அவன் தன் தலையில் ஒரு யார்முல்கே அணிந்திருக்கிறான், அதுவும் அழுக்காக இருக்கிறது, கரித்துண்டைக் கரைத்து ஊற்றியது போல் அதில் கறைகள்…”
“”உனக்கு என்ன வேண்டும்?” என்று அவனைக் கேட்டேன்.
“”உன் பெட்பானை மாற்ற வேண்டும்,” என்று பதில் சொல்கிறான். பதிலுக்கு நான் சொல்கிறேன், “செய்து முடி. இறந்து கொண்டிருப்பவனை ஏன் வெறித்துப் பார்க்கிறாய்?”
“அப்போது அவன் சொல்கிறான், “நீ மூச்சு விடப் பழகவேயில்லை”
“நான் அவனிடம் சொல்கிறேன், “என்ன உளறுகிறாய்? போய் விடு, பாவப்பட்ட யூதனைச் சாக விடு”. ஆனால் இவன், இவன் ஒரு காரியமாய்த்தான் வந்திருக்கிறான்…
“”இவரைப் போய்ப் பார்,” என்று என்னிடம் சொல்கிறான். சிக்கு படிந்த ஒரு அட்டையைக் கொடுக்கிறான். மணல் பள்ளங்களுக்கு அப்பால் ஒரு மண்பாதையில் அவன் தந்த முகவரியில் உள்ள இடம் இருக்கிறது. என்ன செய்தேன் தெரியுமா? நீ சிரித்தாலும் சிரிப்பாய், உனக்கு தெய்வ பக்தி இருக்கிறது, நீ படித்திருக்கிறாய். ஆனால் ஒருவன் சாகக்கிடக்கும்போது, வாழ்வதற்காக என்னவும் செய்வான், என்ன ஆனாலும் சரி…
“எனவே நான் குறுகிய அந்தச் சாலைக்குச் சென்றேன், இருமிக் கொண்டு, இழுத்துக் கொண்டு. குடித்தனக்காரனின் கடைசி காசைக் கணக்கு பார்க்கும் வீட்டுக்காரன் போல் என் ஒவ்வொரு மூச்சையும் கணக்கு பார்த்தபடி மரணம் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அங்கே நான் யாரைப் பார்த்தேன்? நினைத்த மாதிரிதான் இருந்தது: கூன் விழுந்த, குள்ளமான ஒருவர், நரைத்த தாடியுடன், தாயத்துகளும் பிரார்த்தனை விண்ணப்பங்களும் எழுதிக் கொண்டிருந்தார். அந்த மாதிரி ஆட்கள் எப்படி என்பது எனக்கு நன்றாகவே தெரியும்…
‘ஆனால் என்னைப் பார்த்ததும் அவர் தன் எழுதுகோலைக் கீழே போட்டுவிட்டார். சுருக்கம் விழுந்திருந்த அவரது வெண்ணிற முகம் சிவந்தது, வேக வைத்த பீட்ரூட் போல். மிகவும் சிரமப்பட்டு அவர் எழுந்து நின்றார். நிலை கொள்ளாத தன் கைவிரலை என்னை நோக்கி நீட்டி, நடுங்கும் குரலில் சொன்னார், “மூச்சுதான் உயிர்! உன் மூச்சு உன்னை விட்டுப் பிரிந்து கொண்டிருக்கிறது”, என்று. “எனக்குத் தெரியாத எதையாவது சொல்,” என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அந்தக் கிழவர் ஒரு சிறகை எடுப்பது போல் என்னைத் தூக்கிக் கொண்டார். அவர் பலசாலியாக இருந்தார்…”
“அப்புறம் நான் கண் விழித்தபின், நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிகச் சிறந்த பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தார்…”
பருமனாய் இருந்த அவர் வேகமாக எழுந்து நின்றார், மேலே இருந்த ரேக்கிலிருந்து தன் துணிப்பையை எடுத்துக் கொண்டு, வாசலை நோக்கி ஓடினார்.
“இரு!”, என்றேன் அவர் கோட்டின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே. நான் முதலில் கேட்பதற்குத் தயாராகவே இல்லாத ஒரு கதையை இப்போது அவர் முடித்து வைத்தாக வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்துவது அவரைக் கோபப்படுத்துகிறது என்பது எனக்குப் புரிந்தது. “அவர் உனக்கு என்ன சொல்லித் தந்தார்?”
“மூச்சு விடுவது எப்படி என்று! ஒவ்வொரு மூச்சாக விட வேண்டும். ஒவ்வொரு மூச்சுக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். மிக எளிய வைத்தியம்…
“அன்று இரவு, நான் ஒரு கல்லைப் போல் தூங்கினேன். அடுத்த நாள், சவரம் செய்து கொண்டேன், முடி வெட்டிக் கொண்டேன், புதிய சூட் ஒன்று வாங்கினேன், பீச்சுக்கு நடந்தேன். அப்போதுதான் அந்த வெளிச்சத்தைப் பார்த்தேன். “தண்ணீரைப் பார், அந்த வெளிச்சத்தைப் பார்,” என்று சொல்லிக் கொண்டேன், குறிப்பாக யாருக்கும் சொல்லப்பட்டதல்ல அது. நான் சொன்ன சொற்கள், நிச்சயம் நான் அந்த வார்த்தைகளைச் சொன்னேன், அவை நீரையும் ஒளியையும் கைப்பற்றத் தவறின, எல்லாம் வழுக்கிச் சென்றன…”
அத்துடன் அந்தக் குள்ளமான ஆள், அவர் போய் விட்டார். அவர் பிளாட்பாரத்தில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தேன்- ஒருவரையொருவர் நெருக்கியடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டிருமிருந்த கூட்டத்தில் ராணுவ வீரர்கள், விவசாயிகள், வியாபாரிகளுக்கு இடையே, அந்த மக்கள் திரளின் நடுவே வெளியேற அவர் போராடுவதைப் பார்த்தேன், அப்புறம் அவர் மறைந்து விட்டார். அதன்பின் அவர் நினைவாய் ஒரு உணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது- ரயில் பெட்டியில் அவரது சுவாசத்தின் மிக மெல்லிய வாசம்.
நன்றி : Lowestoft Chronicle
கோயிம் (Goyim) – யூதர் அல்லாதவர்கள் என்று பொருட்படும் ஒரு ஏளனச் சொல்.
ஸ்பா (Spa) : மருத்துவ குணம் கொண்ட உப்புகள் அடங்கிய வெந்நீர் குளியல்களுக்கான தங்குமிடங்கள்
யார்முல்கே (Yarmulke) – மரபார்ந்த யூதர்கள் அணியும் குல்லா, பிற யூதர்கள் பிரார்த்தனையின்போது அணிந்து கொள்வது.