எழுத்து

மரியாளின் சிலுவைப்பாதை – அ.மலைச்சாமி சிறுகதை

கல்லறைத் திருநாளான நேற்று அந்த கல்லறையில் அவ்வா காறித் துப்பியதை நான் பார்த்து விட்டேன். மேற்கு வானில் சூரியன் ஆழச் சரிந்து, நூறு கிழவிகள் சேர்ந்து துப்பிய வெற்றிலை எச்சில் போல, ஒரு கொடங்கையளவு மேகம் செங்காறையாயிருந்த நேரம். ஏழுமணி திருப்பலி பூசைக்காக புனித அந்தோணியார் கோயிலில் உபதேசியார், ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்ற ஜெபத்தை மைக்கில் செபித்துக் கொண்டிருந்தார்.

இருள், மனிதமுகங்களின் அடையாளங்களை மறைத்திருந்த அந்தநேரத்தில் எங்கள் அவ்வா தடியை ஊன்றிக் கொண்டு ஊரின் வடக்குதிசை நோக்கி நடந்தாள். எங்கு போகிறாய் என்று நான் கேட்டதற்கு, நடுச்சிலுவைத் திண்ணைக்கு அருகிலிருக்கும் ஜோசப் வீட்டிற்கு துவரை புடைக்க போவதாக சொன்னாள். அவ்வாவிற்கு பின்னால் போனால் வடை, காப்பி என எதற்காவது கண்டிப்பாக உத்தரவாதமுண்டு. மேலும் அவ்வா துவரை புடைக்கும் வரை அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ‘அம்லு’ நாடகம் பார்க்கலாம்.
அவ்வா நடுச்சிலுவைத் திண்ணையைக் கடந்து மேலும் வடக்கில் நடந்தாள். அவ்வா வேறேதோ வேலையாக போகிறாள் என்பது எனக்கு உறுதியானது. நல்ல பிராயமான பனைமரத்தின் உயரம் அளவுக்கு இடைவெளி விட்டு நான் பின்தொடர்ந்தேன். கிறித்தவர்கள் வசிக்கும் பகுதியைக் கடந்து இந்துக்கள் வசிப்பிடமருகில் சென்று கொண்டிருந்தாள். ஊரின் வடக்கு எல்லையான சம்மனசு சிலுவைத் திண்ணையையும் தாண்டி நடந்தாள். பொழுது விழுந்த பின் அந்த சிலுவைத் திண்ணையைத் தாண்டி போவது ஊரில் யாருக்கும் வழக்கமில்லை. ஊரின் பெரிய திருவிழாவின் போது, ஊர்க்காவலரான புனித வனத்துஅந்தோணியார் கூட அந்த இடத்தில் சம்மனசு மாலை போட்ட பின் தெற்கு நோக்கி திரும்பி விடுவார். சின்ன வயதில் பகலில் நான் அந்தப் பக்கமாக போனது தெரிந்தாலே அம்மா எனக்கு டின்னு கட்டுவாள். அவ்வா அந்த இடத்தையும் தாண்டி நடந்து கொணடிருந்தாள்.

அந்த மெட்டல் ரஸ்தாவின் இரு மருங்கும் ஆடாதொடை, காட்டு நொச்சி, தங்கரளி போன்ற கைப்புச்சுவைத் தாவரங்கள் ஆளுயரத்திற்கு மேல் வளர்ந்திருந்தன. ஐப்பசி மாதத்து வாடையை எதிர்த்து அவ்வா போய்க் கொண்டிருக்கிறாள். அதற்கு மேல் நடக்க எனக்கு பெரும் பயமாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு மர்மத்தை அறியும் ஆவலாதியில் அவ்வாவின் பின்னேயே நடந்துகொண்டிருந்தேன். எதும் பிரச்சினை வந்தால் அவ்வாவை கூப்பிட்டுவிடலாம் என்ற தைரியமிருந்தது.

உபதேசியார் செபித்துக் கொண்டிருக்கும் மைக்கின் ஒலி தேய்ந்திருந்ததால், தடக் தடக் என்ற அவ்வாவின் கைத்தடி ஓசை என் காதில் வலுத்தது. அந்த ஓசை அவ்வா நடக்கும் வேகத்தை துல்லியமாக உணர்த்தியது. அது அவ்வாவின் சராசரியான நடையல்ல. வாழ்க்கையை துச்சமாக கருதித் துணிபவனின் வேகம் அது. அவ்வாவின் நடைவேகமும், அவ்வேகத்தால் அவளின் ஊன்றுகோல் எழுப்பும் ஓசையும், அமைதியான அந்த சூழலுக்கு ஒரு அலைக்கழிப்பான திகிலை அளித்திருந்தது. தனக்குப் பின்னால் ஒரு பெரிய ஊர் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாதது போல் அவ்வா திரும்பி பார்க்காமல் நடந்தாள். அவள் ஊருக்கு திரும்புவாளா என்று கூட என்னால் அப்போது நம்பமுடியவில்லை.

சாலையின் கிழக்கே ஊரின் சிறுபான்மையினரான புராட்டஸ்டன்ட் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டமிருந்தது. சுற்றுச்சுவருக்கு உள்ளே சிறு சிறு வெளிச்சங்கள் தெரிந்தன. கல்லறையில் ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளின் ஒளி, அங்கு ஊன்றப்பட்டிருக்கும் சிலுவைகளின் நிறங்களையும், அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களையும் அறிவதற்கு போதுமானதாக இல்லை. செண்டுமல்லிப்பூ மாலையுடன் மெழுகுவர்த்தியின் திரி கருகி மெழுகுருகும் வாசனை.
தடியுடனானஅவ்வாவின் நடை, சிலுவையுடன் கல்வாரிக்கு போன இயேசுவின் நடையைப்போல தளர்ந்திருந்தது. கிறிஸ்து கைதான வழக்கில், மரியாளே முதன்மை குற்றவாளி என பிலாத்து ராஜா தீர்ப்பு வழங்கியிருந்தால், அவளும் முள்முடி தரித்தவாறு உலகின் பாரமான சிலுவையைச் சுமந்து அதே கல்வாரிக்கு நடந்திருப்பாளா தெரியவில்லை.

புராட்டஸ்டன்ட்கள் கல்லறைத்தோட்டத்தைத் தாண்டி மெட்டல் ரஸ்தாவிற்கு மேற்கே இருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்களின் கல்லறைத்தோட்டத்தை அடைந்தாள். சாலையோரமிருந்த கல்லறைத் தோட்டத்து சாவடியில் வேக வைத்த பயறு பச்சைகள் சிதறிக் கிடந்தன. சாவடியையொட்டி அமரர் தேர் நின்று கொண்டிருந்தது. எல்லா கல்லறைகளும் செடி செத்தையில்லாமல் செதுக்கப்பட்டு அனைத்து சிலுவைகளிலும் மாலைகள் சாத்தப்பட்டிருந்தன. செவ்வந்தி, சம்பங்கி, ரோஜா, செண்டுமல்லி .
காமராசர், எம் ஜியார், ராஜீவ் காந்தி போன்ற தலைவர்கள் இறந்த போது, ஊரே அவர்களுக்காக ஒப்பாரி வைத்து, அவர்களின் உருவபொம்மையை அந்த கல்லறைத் தோட்டத்தில் புதைத்திருந்தார்கள். சில கல்லறைகளுக்கு உடல்களும் அனாவசியம்தான் போலும். அவர்கள் கல்லறையிலும் சிலுவைகள் நடப்பட்டிருந்தன. அவற்றில் ரோஜாப்பூ மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

தலைவர்கள் கல்லறைகளுக்கு நேர் வடக்கில் ஊர் தோட்டிகளான பறையர், வண்ணார், சக்கிலியர் கல்லறைகளிருந்தன. அவற்றுள் சிலவற்றில் சிலுவைகளிருந்தன. கிழக்கு மேற்காக போகும் பாதை, கல்லறையிலும் சமரசத்தை வெட்டி விலக்கியிருந்தது.

அந்தப் பாதையிலேயே ஒரு பெரிய புளியமரம். அந்த மரத்தின் காய்ப்பை உள்ளூர்க்காரர்கள் யாரும் ஏலமெடுப்பதில்லை. அவ்வா ஒருநாள் எங்கோ கலம் புடைத்துவிட்டு கல்லறைப் பாதை வழியாக திரும்பி வந்தபோது, இந்த புளிய மரத்தில் உட்கார்ந்திருந்த ஆந்தை அலறியதாம். அடுத்த நாள் காலையில் சொட்டையன் சித்தப்பாவை பெரியாஸ்பத்திரியில் வைத்திருப்பதாக தாக்கல் வந்தது. லாரி ஓட்டிப்பழகுவதற்காக கிளீனராக போய்க் கொண்டிருந்த சொட்டையன் சித்தப்பா சாலை விபத்தில் சிக்கியிருந்தார். ஒரு வயது பயலாக இருந்த என்னை இடுப்பில் தூக்கி கொண்டு போன போது, பெரியாஸ்பாத்திரி பிணவறைக்குத்தான் போகச் சொன்னார்களாம். அந்த புளிய மரத்திற்கு அருகில்தான் சொட்டையன் சித்தப்பாவை புதைத்தது. அந்த புளியமரத்தையும், தன் மகன் புதைக்கப்பட்ட இடத்தையும் கூட அவ்வா கண்டு கொண்டதாக தெரியவில்லை. நான் புளிய மரத்தில் மறைந்து நின்றவாறு அவ்வாவை கவனித்துக் கொண்டிருந்தேன். தொடும் இடமெல்லாம் ஆணிகளும், அதனில் சிக்கிய மயிர்களுமாயிருந்தன. பேய் பிடித்தவர்களின் தலைமயிர்களை பிடுங்கி அதனை அந்த புளிய மரத்தில்தான் ஆணியால் அறைவார்கள். பேயாடுபவர்கள் எல்லோரும் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களையே தங்கள் பெயர்களாக சொல்வார்கள். அவர்கள்தான் பேய்கள் என்று ஊரில் சொல்வார்கள். பேய்களின் கல்லறைகளிலும் சிலுவைகளைத்தான் நடுகிறார்கள். வாடைக்காற்றிலும் எனக்கு வியர்த்தது. இந்தப் புளிய மரத்தில் பேயரசாள்கிறதோ என்று நான் எண்ணியதால், ஜன்னி வரும் அளவுக்கு உடல் வெடவெடத்தது. ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சிலுவைகளுக்குள் அவ்வா மெதுவாக நடந்து போகிறாள். மொச்சை, தட்டைப் பயிறு, பாசிப்பயறு, கொள்ளு, கல்லுப்பயறு, வெல்லம் அல்லது சீனி கலந்த ஊறிய பச்சரிசி போன்றவற்றுடன் பீடி, சிகரெட், சுருட்டு, புகையிலை, கஞ்சா,மது என்று பல்வேறு பாவங்களும் அவரவர் வசதி, விருப்பங்களுக்கு தக்கபடி அவரவர் கல்லறைகளில் அவரவர் வாரிசுகளால் பரிமாறப்பட்டிருந்தன. ஊன்றுகோலை தரையில் அழுத்தி பல பாவங்களை மிதித்து, பல பாவங்களைக் கடந்து சிமெண்டால் கட்டப்பட்ட அந்த உயர்ந்த கல்லறை முன்பு போய் அவ்வா நின்றாள். அந்த கல்லறையில் நிறைய மாலைகள் இருந்தன. புதைக்கப்பட்டவரின் பெயர் படத்துடன் அவரின் தோற்றமும் மறைவும் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் யார் கல்லறை என்று எனக்குத் தெரியவில்லை. ‘க்ர்ர்’ என்று அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டி நாவுக்கு கொண்டு வந்து உக்கிரத்துடன் ஓங்கித் துப்பினாள் அவ்வா.

திரும்பி வேகமாக நடந்தாள் அவ்வா. அவளைப் பார்க்க எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஊருக்குள்ளிருந்து வருகையில் எனக்கு பின்னால் ஊரிருந்தது. அவ்வா எனக்கு முன்னாலிருந்தாள். இப்போது அவ்வாவுக்கு முன் ஊரும் எனக்குப் பின் கல்லறையும் இருப்பது அச்சமூட்டுவதாக இருந்தது. ஆகவே வேகமாக ஓடி அவ்வாவின் கையைப் பிடித்தேன். அவ்வா எந்த அதிர்ச்சியும் காட்டாமல் என்னை வீட்டுக்கு கூட்டிப்போனாள்.

அன்று வரும்படி சற்றே கூடுதல் என்பதால் அப்பா என் கால்ப்பாத அளவு நீளமான சப்பட்டை பாட்டில் பிராந்தி வாங்கியிருந்தார். எங்கள் வாதரகாச்சி மரத்தடியில் உட்கார்ந்து தண்ணீர் கலந்து பிராந்தியை குடித்துக் கொண்டிருந்தார். அப்பாவை பார்த்து ‘எனக்கிம்புட்டு குடுறா’ என்றாள் அவ்வா. முக்கா கிளாஸ் பிராந்திக்கு கால் கிளாஸ் தண்ணீர் கலந்து கொடுத்தார் அப்பா. கிளாஸை வாங்கி கண்களை சுருக்கி மூடி ஒரே வீச்சில் குடித்தாள் அவ்வா. சிறு செருமலுடன் வீட்டு பட்டாசாலில் சாக்கை விரித்து படுத்துக் கொண்டாள்.

புனித அந்தோணியார் கோயிலில் திருப்பலி பூசை தொடங்கியிருந்தது. அன்று கல்லறைத் திருநாளாதலால் ‘ஜீவனுள்ள வாழ்வை வாழ்ந்து மரித்தோர் யாவரும் கிறிஸ்துவுக்குள் நித்ய இளைப்பாற்றியை அடைவதாக’ என்று சொல்லிவிட்டு தன் பிரசங்கத்தை தொடங்கினார் பாதிரியார்.

எல்லோரும் உறங்க போயிருந்தார்கள். நான் வெளித் திண்ணையில் அவ்வாவருகே படுத்திருந்தேன்.அவ்வா உறக்கமின்றி புரண்டு கொண்டேயிருந்தாள்.
‘எதுக்குவ்வா அந்த கல்லறய காரித்துப்புன’ என அவ்வாவுக்கு மட்டும் கேட்கும் அளவில் என் தொண்டையின் ஒலியை பிரயோகித்தேன்.தூங்கும் பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் நடந்து வந்த தாயொருத்தி, அப்பிள்ளையை தூளியில் பதுவிசாக கிடத்துவது மாதிரி பிணைப்பும், விலகலுமாய் அவ்வா பேச ஆரம்பித்தாள்.
‘சொட்டையனோட சாவ, போலிஸ் பிராதாக்கி குடுத்தா, வண்டி பேருல இருக்க இன்சூரன்ஸ வச்சு ரூவா வாங்கி குடுக்கிறதா லாரி ஓனர் சொன்னாரு. பிராது குடுக்கறதுக்காக அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு போயிருந்தோம். அங்க நாங்களும் எங்களமாதிரி பிராது குடுக்க வந்தவுகளும் ஸ்டேசன் வாசல்ல இருந்த மரத்தடியில அங்கங்க கூட்டமா ஒக்காந்திருந்தாக . எல்லா கூட்டத்திலயும் ஆணும் பொண்ணுமா அழுகுறவுக இருந்தாக . மேனாமிக்கி பொம்பளகளும், ஆம்பளகளும் டேசனுக்குள்ள போறதும் வாரதுமா இருந்தாக . கூட்டத்துல இருந்தவுக ‘இவ அந்தூரு அவிசாரி. இவன் அந்தூரு திருட்டுப்பய. இந்தா இவன் கஞ்சா விக்கிறவன்’ அப்படின்னு அங்க வந்தவுக போனவுகளுக்கு அடையாளஞ் சொல்லிக்கிட்டிருந்தாக. மாமூல் குடுக்க வாரதா பேசிக்கிட்டாக. திருட்டு குடுத்தவுக, அவிசாரித்தனம் பண்ணுனவுக, கஞ்சா வாங்கி குடிச்சவங்கன்னு எல்லாரும் அந்த டேசன் மரத்தடியில கூடியிருந்தாங்ய போல’.

‘அங்கதே அந்த பொண்ணமூஞ்சிப்பய இன்ஸ்பெட்ரா வேல செஞ்சான். “பிள்ளய சாக குடுத்திருக்க. ஒங்கிட்ட நாங்க காசு வாங்கமாட்டம். ஆனா பிரேத பரிசோதன செய்யுறவக சும்மா செய்ய மாட்டாக. ஐநூறு ரூவா கேப்பாக. குடுத்திட்டா இன்னிக்கே சாயங்காலத்துக்குள்ள பண்ணிருவாக” அப்படின்னான். நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லலாம்லேன்னு ஒங்க தாத்தா சொன்னாரு. “அங்க எம்பேச்சு செல்லாது”ன்னு இவஞ்சொன்னான். கூலிக்கு குப்ப சொமக்குற எங்ககிட்ட ஏது காசு? லாரி ஓனர் அத ஏத்துக்கிட்டாரு.

“நீங்க பிராத குடுத்திட்டு நகல் வாங்கிட்டு வாங்க. நான் போயி காச கட்டிட்டு ஆகறத பாக்குறேன்னு” சொல்லிட்டு லாரிஓனர் போயிட்டாரு.
பிள்ளய சாக குடுத்தவுக படுறதுக்கும், ஆண்டவன் கொஞ்சூண்டு ஆசுவாசத்த வச்சிருந்தான் போல்ருக்கு.
காலச்சூட்டில் சுண்டிப்போன உணர்வின் அடர் ஈரத்தில் அவ்வா பேசினாள்.
“நீங்க ஒரு உதவி செய்யணும். எங்க சரகத்து எல்லையில போனமாசம் ஒரு பிச்சக்காரி செத்துப் போயிட்டா. விளம்பரப்படுத்தியும் பொணத்த கேட்டு யாருமே வரல. அந்த பிரேதத்த போஸ்ட்மார்டம் பண்ணுறதுக்கு மார்ச்சுவரியில நீங்க காசு கட்டணும். ஒங்களுக்கும் அது புண்ணியமா இருக்கும். எங்களுக்கு ஒரு காசு கூட வேணாம். துக்க வீட்டுக்கு நாங்க கேடு செஞ்சிர மாட்டம்”. அப்படின்னு இந்த இன்ஸ்பெட்டரு சொன்னான். ஒங்க அம்மா காதுல கெடந்தத அடகு வெச்சிட்டு, பத்தும் பத்தாததுக்கு வீட்டுல இருந்த தெவசத்த வித்துட்டு ஒங்கப்பந்தே பெரியாஸ்பத்திரிக்கி காசு கொண்டுக்கிட்டு வந்தான்.
கண்ணீரும் கம்பலையுமா பொணத்த வாங்கறதுக்கு பெரியாஸ்பத்திரியில நிக்கிறோம். அழுதழுது அஞ்சாறுவிட்டம் சொரணையில்லாம நானு விழுந்திட்டனாம். சப்பு சப்புன்னு கன்னத்துல அடிச்சு எழுப்புனதா ஒங்கப்பன் சொன்னான்.

வெள்ளத்துணியில மூஞ்சி மட்டும் தெரியிற மாதிரி சுத்தி சொட்டையன குடுத்தாக. அங்க இருந்த புஸ்தகத்தில ஒங்க தாத்தன் கைநாட்டு வச்சிட்டு இருக்கும் போது அந்த அனாதப் பொணத்தையும் வெளில கொண்டுக்கிட்டு வந்தாக. அதுக்கு போலிஸ்காரனொருத்தன் கையெழுத்து போட்டான். சொட்டையன வண்டியில ஏத்தும் போது அந்த அனாதப் பொணத்த பாத்தேன். எனக்கு தெரிஞ்ச மொகம் மாதிரி இருந்துச்சு.

அவ்வாவின் மூச்சு அப்போது வேகப்படுவது போலிருந்தது. பிராந்தியால் ஊறிய எச்சிலை புளிச்சென்று துப்பினாள்.

நம்மூரு ரயிலடி பக்கத்தில கஞ்சா வித்த ஊமையவ. காதும் மந்தம். சொல்லவோ எழுதவோ ஏலாத அவ எந்தூரு, என்ன பேருன்னு யாருக்கும் தெரியாது. பத்து பதினஞ்சு வருஷமா அவள நா பாத்திருக்கேன். ஊரும் பேரும் தெரியாதவள காமாட்சின்னு கூப்புட்டா என்ன? மீனாட்சின்னு கூப்புட்டா என்ன? அவளுக்கு கேக்காதுங்குறதால எல்லாரும் அவள ஊமன்னுதே சொல்லுவாக. அதுமட்டும் அவளுக்கு கேட்டுருமா?
அவ்வா தொண்டையைக் கனைத்து செருமித் துப்பினாள். நாக்கில் என்னதான் ஊறுமோ தெரியவில்லை.

மீண்டும் பேச ஆரம்பித்தாள். ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நா சிறுமலைக்கி கல்லொடைக்க போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். பொழுது மசமசன்னு இருட்டிகிட்டு வருது. அப்ப ரோட்டுக்கு தெக்க இருட்டுக்குள்ள ஒருத்தன் இவ கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தான். நானு கிட்டத்துல போக விட்டியும் இவள விட்டுட்டு அவன் ஓடிட்டான். அதிலயிருந்து என்னய பாத்தா இவ சிரிப்பா. அவ சிரிப்பு மதுர மீனாட்சி சிரிப்பு மாதிரி அம்புட்டு அம்சமா இருக்கும். அவகிட்ட கஞ்சா வாங்குனதா ஒங்களுக்கு ஜாதகம் எழுதுன வள்ளுவரு சொல்லுவாரு. சிலருக்கு கடனா கூட கஞ்சாவ விப்பாளாம். சொந்தம், சுருத்துன்னு யாரும் இல்லாததால இவ சாப்பாட்டு அளவுக்கு காச குடுத்திட்டு, மிச்சத்த போலிஸ்காரங்ய புடுங்கிக்குவாய்ங்கலாம். எங்கியாச்சும் ரெய்டு போறதுல கெடக்கிறதயும் இவகிட்ட குடுத்து விக்க சொல்வாய்ங்கலாம். இவ கஞ்சா வித்தா இவிங்யளுக்கு ஆதாயம் ஜாஸ்திதானே! ரெண்டு மாசத்துக்கொருதரம் டேசனுக்கும், கோர்ட்டுக்கும் இவள கூட்டிக்கிட்டு போவாகளாம். அந்த ரயிலடி பக்கத்துல இருக்குற டேசன்ல வேல பாத்த இந்த வாக்காலங்கெட்ட இன்ஸ்பெட்டரு கடிக்கி, இவள டேசனுக்கு கூட்டிட்டு போறத நானொருதரம் பாத்திருக்கேன். அவள அனாதப் பொணமா பாக்க எனக்கு ஈரக்கொலயே நடுங்கிருச்சு’.

‘யாருமில்லாதவ அனாததானவ்வா?’ என்றேன்.

முறைப்பது போல என்னைக் கூர்ந்து பார்த்தாள் அவ்வா.

‘பிள்ள பெத்ததுல சரிஞ்ச வயிறுடா அவளுக்கு. எத்தன பெத்தாளோ? யாருக்கெல்லாம் பெத்தாளோ? எங்கல்லாம் பெத்தாளோ?’ என்று நெடுமூச்செரிந்தாள் அவ்வா.

‘ஒரு மாசமா பிரேதத்த கேட்டு யாரும், எங்கிருந்தும் வரலைல’ என்றேன். அடிவயிற்றிலிருந்து ஜீவனைத் திரட்டுவது மாதிரி ஓங்கரித்து காரி எக்கித் துப்பினாள் அவ்வா. காற்றின் வீச்சுவாக்கில் என் முகத்திலும் எச்சில் தெறித்தது.

‘எத்தன பேரு போதக்கும், தினவுக்கும் அவ நாதி தேவையாயிருந்துச்சு. அவகிட்ட வாங்கி தின்டவன், மென்டவன் எல்லாருக்குமா அவ அனாத? இந்த பலவட்ற இன்ஸ்பெட்டரு கடிக்கி எம்புட்டு வாங்கித் தின்டுருப்பான்? அவ பொணத்த அனாதப் பொணமாக்க இவனுக்கு எப்புடி மனசு வந்திச்சு?’ அவ்வாவுக்கு வந்த ஆவேசத்தில் அவள் வார்த்தைகள் திக்கித் தேம்புவது போலிருந்தது.

‘தின்டவனும் மென்டவனும் எம்புட்டோ பேர் இருக்க இந்த இன்ஸ்பெக்டர மட்டும் எதுக்கு காரித்துப்புற?’ என்றேன்.

‘இன்னிக்கும் கஞ்சா கெடக்கத்தான் செய்யிது. அவ கஞ்சா வித்ததுல யாருக்கெல்லாம் ஆதாயமோ தெரியாது. ஆனா கஞ்சா விக்கிறவனையும் வாங்குறவனையும் அடக்கி, ஊர யோக்கியமா வச்சிக்கறதுக்காக சம்பளம் வாங்குனவன் இவன். அதயே அச்சாரமா வச்சிக்கிட்டு இவ யோக்கியத்த கெடுத்த நாதாரிப்பயல் இந்த இன்ஸ்பெட்டரு’
அவ்வாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

‘வாய் செத்த அவள இவன் எதாவது கோயில் கொளத்தில பிச்சக்காரியாவே ஆக்கியிருக்கலாம். பிச்சக்காரக சங்கத்திலயிருந்து நாலு பிச்சக்காரங்ய அவளுக்காக வந்திருப்பாய்ங்க. இந்த சின்னப்பட்ட வேலைக்குள்ள அவள தள்ளி, அந்த அப்புராணிய அநாதையாக்கிட்டானே பாவி. அவ பொழப்ப கன்னாசனம் காசநாசம் பண்ணிட்டு எந்த
உறுத்தலும் இல்லாம அவள காணாப்பொணமாக்கி அந்த சவங்களுக்குள்ள ‘ஒரு மாசம்’ நாறவச்சிட்டாய்ங்களே’. அந்த ஒரு மாசமென்பது யுகங்களுக்கான எடையை சுமந்த அழுத்தத்துடன் அவ்வாவின் வாயிலிருந்து வந்தது. மீண்டும் ஒருமுறை காரித்துப்பினாள் அவ்வா.

‘இவகிட்ட வாங்கி தின்டவனும் மென்டவனும் இப்ப உசுரோட இருக்காய்ங்களா போயிட்டாய்ங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா தெய்வம் இவன போட்டுப் பாத்திருச்சு. சொட்டையன் செத்த மறு வருஷம் நெஞ்சு வலியில இவன் செத்துப் போயிட்டான்.
அப்பத்தே எனக்கு கொஞ்சம் மனசாருச்சு.’
‘ஆனா இந்த சர்க்காரு இவன் குடும்பத்துக்கு ரூவாயும், இவம்புள்ளக்கி உத்தியோகமும் கொடுத்திச்சு. பாவிகள செவக்கி வக்கவா சர்க்காரு? கை, கால்ல வெறப்பு இல்லேண்டாலும், நெஞ்சுக்குள்ள ஆத்திரம் கெடக்குதே!’

‘அந்த இன்ஸ்பெக்டர அவமானப்படுத்தறதுக்கு எம்புட்டோ வழியிருக்கும் போது எதுனால காரித்துப்பணும்னு முடிவு செஞ்ச?’ என்றேன்.

‘பேச வாயில்லாம இவிங்யளால கெட்டழிஞ்சு போன அவளுக்கு அவட்டம் இருந்து, இந்த சீன்றம் புடிச்ச பயகள என்னமாச்சும் செய்யணும்னு நெனச்சா, அவளால காரித்துப்பத்தான முடியும்?’

‘எதுக்கு கல்லற திருநா அன்னக்கி துப்புற?’ என்றேன்.

‘பாவிகள் அழிஞ்சு போனாலும் அவுகவுக செஞ்ச பாவங்கள் நெனப்புகள்ல சுத்திக்கிட்டுத்தே இருக்கு. செத்தவுக அவுகவுக இரத்த வழிகளாலே நெனக்கப்படுற நாள்ல அவன் பாவங்களும் நெனக்கப்படணும்ல. அப்பறம் நியாயத் தீர்ப்புக்கு என்ன அர்த்தம்?’ என்றாள் அவ்வா. சிறிது நேரத்தில் அவ்வா உறங்கியது மாதிரி இருந்தது. உறக்கத்தால் அன்று நான் ஆசிர்வதிக்கப்படவில்லை.

நினைக்கப்பட வேண்டிய இறந்தோர் செய்கைகள் நினைவில் எழுந்து கொண்டேயிருந்தன. எவையெல்லாம் நினைக்கப்பட வேண்டும், எவையெல்லாம் நினைக்கப்பட தேவையில்லை என்பதற்கான பட்டியலும், அதனை யாருக்கு எவ்வளவில் எப்போது பரிமாற வேண்டும் என்பவற்றையெல்லாம் யார் நிர்வகிக்கிறார்கள்? மனதின் இசைவையும், இசைவின்மையையும் மனித விருப்பங்களால், முயற்சிகளால் மீற முடியாதபடிதான் இங்கு வாழ்க்கைகள் வாழப்படுகின்றன.எனக்கு இரத்த உறவுடைய அவ்வாவையே நான் பின்தொடர்ந்தேன். நான் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றதும், அந்த இன்ஸ்பெக்டர் மற்றும் ஊமைத்தாயைப் பற்றி நான் அறிந்து கொண்டது என் விருப்பமோ அல்லது என் அவ்வாவின் விருப்பமோ முயற்சியோ அல்ல. ஊமைத்தாய், அந்த இன்ஸ்பெக்டரும் என்னால் நினைக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தை அல்லது வாய்ப்பை விதி உருவாக்கி தந்திருக்கிறது. ஊமைத்தாயை எங்கு புதைத்தார்கள் என்று அவ்வாவுக்கு தெரியாது. அதனால் எனக்கும் தெரியாது. எனக்கு அறிவிக்கப்பட்ட செய்திக்குரிய, நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கக்கூடிய அந்த நபரை அறிய விரும்பினேன்.

பூமியில் ஒளி பரவ, இருள் தன் அனுமதியை மெல்ல வழங்கிக் கொண்டிருந்த காலை. ஊர்க்காரர்கள் காடு கரைகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். நான் கல்லறைத் தோட்டத்தை நோக்கி நடந்தேன். கத்தோலிக்க திருச்சபையினரின் கல்லறைத் தோட்ட முகப்பில் நின்றவாறு கல்லறைகளைப் பார்த்தேன்.

ஆயிரக்கணக்கில் சிலுவைகள். தேவகுமாரன் சுமந்தது போன்ற பாரமான சிலுவையை பிரதி அல்லது போலி செய்த சிலுவைகள். அந்த சிலுவைகளுக்கடியில் எத்தனை எத்தனை உடல்களோ!
இறந்தவர்கள் வாழுங்காலத்தில் அவர்களை கருவிகளாய்க் கொண்டு தங்கள் ஜீவன்களை ஈன்று கொண்டவர்களால் சுமக்கப்பட்டு நடப்பட்ட சிலுவைகள். கல்லறைகளுக்குள் நடந்தேன்.

கிழக்குச்சூரியன் மேற்கு நோக்கி ஒளி வீசியதால் கிழக்கு நோக்கிய சிலுவைகளும், அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களும் துலக்கமுற்றிருந்தன. கல்லறைப்பாதைக்கு வடக்கேயிருந்த ஊர்த்தோட்டிகளின் புதைப்பிடங்களில் துளசியும், பிரண்டையும் நடப்பட்டிருந்தன. அவற்றில் சில வளர்ந்திருந்தன. சில நறுங்கியிருந்தன.

பெருந்தலைவர் காமராசரின் கல்லறைதான் சிலுவை நடப்பட்ட கல்லறைகளில் முதலாவதாக இருந்தது. அவர் பெயரையே அவரால்தான் நான் வாசிக்கிறேன். அவ்வா நடந்தது போல வேகமாக நடக்க முடியவில்லை. கல்லறைகள் முழுக்க சிலுவைகள். சிலுவைகள் முழுக்க பெயர்கள் . அதனடியில் புதைக்கப்பட்டவர்களுக்காக போடப்பட்டிருந்த படையல்கள். எல்லாவற்றிலும் மாலை, மெழுகுவர்த்தி, பயறு என சில பொதுப்பொருள்கள் படையலில் இருந்தன. ஆனால் ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாதவாறு பிரத்யேகப் பொருள்களும் நிறைந்தே இருந்தன.

இரண்டாம் வரிசையில் என் வகுப்புத் தோழி யொருத்தியின் கல்லறையொன்றிருந்தது. வகுப்பிலேயே மிக அழகானவள். ஏதோ விசித்திர நோயில் இறந்து போனவள். அடுத்த வரிசையில் எனக்கு சைக்கிள் ஓட்ட பழக்கிவிட்ட நண்பனொருவனின் கல்லறை. கொஞ்சம் தள்ளி ‘சக்கிலியப்பயலுக்கு முதல்ல சோறு போட்டா, மற்ற பிள்ளக எப்பிடி சாப்புடுவாக’ என்று சொல்லி முதலில் எனக்கு சோறு போட மறுத்த பள்ளிக்கூட ஆயாவின் கல்லறை இருந்தது. அடுத்த வரிசையில் எனக்கு ஐந்தாம் வகுப்பில் நன்னெறிப் பாடம் நடத்திய ஆசிரியையின் கல்லறையை அடையாளம் கண்டு சில வினாடிகள் நின்றேன். அவர்தான் “ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிவார்கள்” என்ற திருமூலர் பாட்டை நடத்தினார்.

அவ்வா காறித்துப்பிய கல்லறை இருந்த வரிசையில் போய்க் கொண்டிருந்தேன். ஒரு கல்லறையில் மாலைகள் மெழுகுவர்த்திகளுடன், ஒரு பித்தளைச்சங்கும், பால் நிரப்பிய பால் புட்டியையும் பார்த்தேன். இரண்டு மாதம் முன்பு போர்வெல் குழியில் விழுந்து இறந்து போன ஒன்றரை வயது குழந்தையின் கல்லறை அது.

அவ்வா காறித்துப்பிய கல்லறையை அடைந்தேன். அது அந்த போலிஸ் இன்ஸ்பெக்டரின் கல்லறையல்ல. அது நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அந்த இன்ஸ்பெக்டரினுடைய தந்தையை அடக்கம் செய்த கல்லறை. அவ்வா தவறு செய்து விட்டாளா என்று எனக்கு புரியவில்லை. ஆயினும் எனக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. எங்கு பெய்வது என்பதில்தான் குழப்பமாயிருந்தது.

பூச்செண்டு – கலைச்செல்வி சிறுகதை

அவள் கண்ணாடி சன்னலின் வழியே வெளியே பார்வையை ஓட்டினாள். வழக்கம்போல தெரு அமைதியாக இருந்தது. அக்கொடிய வியாதி இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றபோது யாரும் அத்தனை பெரிய விஷயமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவர் இரண்டாகி, இருவர் எட்டாகி, எட்டு அறுபத்துநான்கானபோது கூட நமக்கெல்லாம் அது வந்து விடாது என்ற பொது மனப்போக்கு கொண்டவர்களாகவே இருந்தனர். தொட்டுக் கொண்டால் கூட அக்கொடியவியாதிக்கான கிருமி தொற்றி விடும் என்ற உலக சுகாதார மையம் வீரிட்டது. ஏற்கனவே தொட்டதன் துர்பலனை உலகம் அனுபவிக்க தொடங்கியிருந்ததால், ‘நெருங்குதலிலிருந்து விலகியிருத்தல்’ என்ற புதியதொரு கோட்பாட்டை அது கடைபிடிக்கத் தொடங்கியது. வீட்டடங்கு என்ற பதம் எல்லோருக்குமே புதிதென்றாலும் இளைஞர்கள் நாள் முழுக்க வீட்டிலிருப்பதை உணராதவர்களாக இருந்தனர். வசதிப்படைத்த இளைஞர்களை விட வர்க்கத்தட்டுகளில் கீழ்நிலையிலிருந்த இளைஞர்களின் உலகம் அதிகமும் வெளியிலிருந்தது. அரையுலகிற்குள் இருப்பதென்பது, உடலை ஒருபுறமாக சாய்த்து ஒற்றைக்காலில் நொண்டியடிப்பதை போன்றது. நொண்டியடித்தபடியே இருப்பதால் இடுப்பில் வலி ஏற்பட்டது. பிறகு அது பொருளற்றவர்களின் உடலில் பரவத் தொடங்கியது, முக்கியமாக வயிற்றுக்கு. வசதிப்படைத்த இளைஞிகளும் இளைஞர்களும் இணையத்தின் அத்தனை பயன்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளும் மும்மரிப்பான, தீவிரமான ஆவல் கொண்டனர். செயலிகளை புதிதுபுதிதாக பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன் மீதான ஆர்வம் வடிய தொடங்கியபோது அவர்களிடம் இன்னும் தொழிற்நுட்பம் மீதமிருந்தது. கணினி வழியாக வீட்டுக்குள்ளிருந்து பணியாற்றியவர்களும் வெளியே செல்ல வழியற்ற அன்றாட வருவாய் ஈட்டுவோரும் ஒருமித்து பொறுமையிழக்க தொடங்கியபோது, தொற்று கூடியிருப்பதை காரணம் காட்டி அரசாங்கம் வீட்டுறைவு காலத்தை நீட்டித்திருந்தது.

அவனும் வீட்டுறைவில்தான் சிக்கியிருந்தான். ஆனால் சிக்கியபோது அவன் விடுதி ஒன்றின் அறையிலிருந்தான். அது அலுவல் சார்ந்த பயணம். இரண்டு நாள் கருத்தரங்கிற்காக திருச்சியிலிருந்து பெங்களுரூ வந்திருந்தான். ஒருநாள் ஊரடங்கு ஒரு வாரமாக நீட்டிக்கப்பட்டு கருத்தரங்கு இரத்தாகி, பயண வழிகளும் அடைக்கப்பட்டபோது அவனோடு சேர்ந்து திருச்சியிலிருந்த அவளும் பரிதவித்துப் போனாள். இருவரும் வாட்ஸ்ஆப்பின் காணொலி அழைப்பின் வழியாக பேசி பேசி அதை சரிக்கட்ட முனைந்தனர் “சஞ்சு எங்கருக்கா..” “அவளா..? ஜம்முன்னு என் மேல எப்டி துாங்றா பாரேன்..” காமிராவை கீழிறக்கிக் காட்டினாள். சஞ்சு மல்லாந்திருந்த அவள் வயிற்றின் மீது, உடலை உப்பலாக்கி கழுத்தை வளைத்து உடலில் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது. சஞ்சு காக்கடைல் பறவையாக இருக்குமாறு இப்பிறவியில் பணிக்கப்பட்டிருந்தது.

“பொறாமையா இருக்கு..” என்றான். அவளை நோக்கி ஏந்திக் கொள்வது போல கைகளை நீட்டினான். இரவுகளில், தன்னிரு கைகளையும் ஏந்தி அவளை வாங்கி நெஞ்சில் சாத்திக் கொள்வான். அவள் தலையை நிமிர்த்தி அவன் விழிகளை தன் விழிகளால் துழாவுவாள். காமம் கொண்ட அவ்விழிகள் தன்னளவில் சிறுத்திருக்கும். அவளுடைய புற அசைவுகளை அனிச்சையாக எதிர்க் கொள்ளும் அவனுடல், அவளை வீழ்த்துவதிலேயே தொடர்ந்து விழையும். “என் அசைவுகளை உணரு..” என்பாள் உடல்வழியே. “அதுனாலதானே ஒன்னை இறுக்கக் கட்டிக்கிறேன்..” என்பான் செயல்வழியே. நான் விழைவதை நீ விழைவதும், நீ விழைவதை நான் விழைவதுமே பொருந்துகின்ற காமம். ஆழம் தீண்டுவதே காமத்தின் நிறைவு. நுகர்தலே பூக்களுக்கு மணம் உண்டாக்குகிறது.

அந்த வியாதிக்கு காரணமான அந்த நுண்கிருமியை பெரிதாக்கியபோது அது அழகிய பூச்செண்டுபோலிருந்தது. வல்லரசுகள் உருவாக்கியிருந்த வலிமைக் கொண்டவர்கள், வலிமையிழந்தவர்கள் என்ற உலகின் இரு பிரிவுகளை குறுகிய காலத்தில் அக்கொடியநோய் ஒருங்கிணைத்து அனைத்து காதுகளிலும் அப்பூச்செண்டை சொருகி வைத்திருந்தது.

ஊரடங்கும் வீட்டடங்கும் நீட்டிப்பானபோது அவனுக்கான விடுதி செலவை இனி ஏற்றுக் கொள்ளவியலாதென நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அந்நேரம் விடுதியும் மூடியாக வேண்டிய நிர்பந்தத்திலிருந்தது. “இப்படியெல்லாம் நடக்கும்னு ரெண்டுநாளுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தாகூட நா அங்கேர்ந்து கௌம்பியிருக்க மாட்டேன்டா.. நீயும் தனியா அங்க கஷ்டப்பட்டிருக்க மாட்டே..” என்றான் தன்னிரக்கத்தோடு.

“யெஸ்… வெஜிடபிள் கெடைக்கலே மளிகை கெடைக்கலேன்னு ஊரே லோலோன்னு அலையுது… இங்க சமைச்சு வச்ச சாப்பாட்ட சாப்பிட ஆளில்ல… என் ஒருத்திக்காக சமைச்சு நானே சாப்டறதெல்லாம் ஒலக போர்டா சாமி..”

“அதுக்காக சாப்டாம இருந்துடாதே.. நானெல்லாம் இங்க சாப்டறது ஒண்ணுதான் வேலைன்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. நேரங்கெடைக்கும்போது ஏடிஎம்ல கொஞ்சம் பணத்த எடுத்து கைசெலவுக்கு வச்சிக்க.. எல்லாத்தையும் லிக்விட்டா வச்சுக்க முடியாது பாத்துக்க..”

“போதும்.. போதும்.. போரடிக்காத..”

”அதுசரி.. ஒனக்கு இருக்க வீடிருக்கு.. வெளாட சஞ்சு இருக்கா.. நாந்தான் ரொம்ப பாவம்…”

“பொலம்பாத.. எதாது ஒரு வழி கெடைக்காமய போவும்…“ சஞ்சுவை நோக்கி அலைபேசியை திருப்ப அவன் திரைவழியாக அதனை கொஞ்சினான். அது தன் சிறிய அலகைக் கொண்டு திரையை கொத்தியது. அவளை பார்த்து கண்சிமிட்டிவிட்டு “இன்னைக்கு நீ ரொம்ப அழகாருக்கே..” என்றான். இரவுகளில் அடிக்கடி இதை கூறியிருக்கிறான். அவள் சிரித்துக் கொண்டாள். மனைவியின் அழகென்பது அலங்கரிக்கப்பட்ட கோபுரவாயில். கோட்டைக்குள் நுழைந்ததும் கோபுரம் விலகி பின்னே சென்று விடுகிறது. தரிசனம் என்பது கருவறை சிலையை காண்பதல்ல. அதிலுறையும் இறையை கண்டெடுப்பதே. இறை தான் நிறை. அது எடுத்தபிறகும் குறையாது, கொடுத்த பிறகும் மாறாது. மற்றொருவரில் தானாக, தன்னில் மற்றொருவராக. தானென ஏதும் மிஞ்சாததாக.

நவீன உலகம் திகைத்து வியர்த்து அப்பூச்செண்டின் முன் கைக்கட்டி வாய் புதைத்து நின்றது. இத்தனைக்கும் அப்பூச்செண்டு பல இலட்சம் கோடிகளை செலவிடும் அளவுக்கு வல்லமை படைத்த இராணுவம் கொண்ட நாட்டையோ படைபலத்தையோ ஆயுதபலமென்று எதையுமோ கொண்டிருக்கவில்லை. வீடுகள், வீடுகளாகவே இருப்பதால் அவற்றை பதுங்குக்குழிகள் என்று மக்கள் கருதாமலிருக்கலாம். கனவு கண்டு விழித்ததும் எல்லாம் கடந்து விடும் என்பது போல அவர்கள் பகல்களில் உறங்கத் தொடங்கினர். கண்விழித்தபிறகும் சிலருக்கு நடக்கும் நிகழ்வுகள் உண்மைதானா? என்ற சந்தேகமிருந்தது. இலக்கியவாதிகள், இதனை மிக சிறந்த அறிவியல் கதை என்றெண்ணிக் கொண்டு கண்ணுறங்கினர். விழித்தெழுந்த பிறகு, அதையே கருவாக்கி, கதைகள் புனைந்து தங்களுக்குள் படித்துக் கொண்டனர். அது குறித்து காரசாரமாக விமர்சனங்கள் கூட எழுந்தது. எழுத்தை பார்த்து விமர்சனம் செய்யுங்கள், எழுத்தாளர்களை கருதிக் கொண்டு விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சிலர் பொங்கியெழுந்தனர். அவர்கள் வேற்றுலகவாசிகள் என்பதால் அவர்களை கழித்து விட்டு மீதி உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. சினிமாவிரும்பிகள் ஹாலிவுட் இயக்குநர்கள் இந்த பூச்செண்டை விட மிக அதிகமாக கற்பனை செய்யும் திறன் படைத்தவர்கள் என இறுமாந்து அதனை தாம் பார்த்த படங்களின் வழியே நிறுவ முயன்றனர். இவர்களையும் கழித்து விட்டு, மீத மனிதர்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டிருக்க, வெளியுலகில் பொது கட்டுமானங்களும் போக்குவரத்து சாதனங்களும் ஆள்வோரின்றி அயர்ந்துக் கிடந்தன. அதை கண்டு திகைத்த பறவைகள் முதலில் திசை தடுமாறின. பின் மீண்டபோது அவை தாங்கள் இழந்துவிட்ட மர்மதேசங்களை அடையாளம் கண்டன. இயற்கையோ கலைப்பாரின்றி பெருகி வழிந்தது.

அவளுக்கு பெங்களுரிலிருக்கும் தன் தோழியின் நினைவு வர அன்றிரவே அவளிடம் வாட்ஸ்ஆப்பில் “என்ன பண்றே..?” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருக்க, அத்தருணத்திலேயே அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “ஏய்.. இன்னுமா துாங்கல..?” என்றாள் ஆச்சர்யமாக. “இப்பல்லாந்தான் எப்ப வேணும்னாலும் துாங்கலாம்.. எப்ப வேணும்னாலும் எந்திரிக்கலாம்… எப்போ வேணும்னாலும் சமைக்கலாம்.. எப்போ வேணும்னாலும் சாப்டுலாம்னு ஆயிடுச்சே.. நேரத்துக்கு துாங்கி என்ன பண்ணப்போறே.. ஆனா இது கூட நல்லாதான் இருக்கு… நா காலைல அஞ்சு மணிக்குதான் துாங்க ஆரம்பிப்பேன்.. இப்போ மணி ஒண்ணுதானே..” என்றாள்.

“ஒங்காளு..?”

”ம்க்கும்.. அவரு வெளிநாட்ல மாட்டிக்கிட்டாரு..” என்றாள்.

“அடிப்பாவீ.. அங்கயும் அதே கதைதானா..? எங்காளு ஒங்கூர்ல மாட்டிக்கிட்டாரு.. ஹோட்டல்லாம் குளோஸ் பண்ணீட்டா அவரு கதி அதோகதிதான்…”

“ஏய் இங்கொருத்தி இருக்கேங்கிறத மறந்துட்டீயா..” என்றாள்.

“மறக்காத்துனாலதானே ஒனக்கு போன் பண்ணேன்.. அப்டீன்னா காலைல அவர வர சொல்லுட்டுமா..,” என்றாள். “இதென்னடீ கேள்வீ..?” என்று தோழி கோபம் கொண்டாள்.

அவனை அப்போதே எழுப்பி சொன்னபோது “முன்னபின்ன தெரியா வீட்ல நா எப்படி தங்கறது..? என்றான். “ஒனக்குதான் தெரியாது.. எனக்கு அவள சின்னதுலேர்ந்தே தெரியும்.. சாதாரண நாள்ல யோசிக்க வேண்டியதெல்லாம் இப்போ யோசிச்சுட்டிருக்காத.. அத்தனாம்பெரிய வீட்ல அவளும் அவங்கம்மா மட்டுந்தான்… நீ போயி தங்கறதால அவங்களுக்கு எந்த எடஞ்சலுமில்ல… புரியுதா..?” என்றாள். “போறேன், வேற வழி..” “ஏய்.. ரொம்ப அலுத்துக்காத… ஒரு வாரந்தானே கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கடா…” என்றாள். கிருமியின் பரவல் அப்போது கட்டுக்குள் இருப்பதாகதான் சொல்லப்பட்டது. அடுத்தநாள் அறையை காலி செய்து விட்டு தோழியின் வீட்டுக்கு சென்று விட்டதாக தகவலளித்தான்.

உலகெங்கிலும் அந்த பூச்செண்டு தன் மகரந்தத்தை பரப்பிக் கொண்டிருக்க, மக்கள் தங்கள் வாழ்க்கையின் மீது எவ்வித அவநம்பிக்கையுமற்று அன்றாடங்களை கழித்துக் கொண்டிருந்தனர். எதிர்கால திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தனர். அவள் கூட சஞ்சுவுக்கு மருந்தகத்தில் சொல்லி பேர்ட்ஸ் ஸ்பெஷல் வைட்டமின் டானிக்கை வரவழைத்து ஸ்டாக் வைத்துக் கொண்டாள். “ஒனக்கொரு சஞ்சு மாதிரி எனக்கொரு அம்மா..” என்றாள் தோழி. ஆனால் நடையுடை இல்லாத அம்மா. போட்டது போட்டப்படி கிடக்கும் அம்மா. “நீ செய்றது ரொம்ப பெரிய உதவீடீ.. எல்லாம் சரியானபிறகு ஒருநாளு அங்க வந்து ஒங்கம்மாவ பாத்துட்டு வரணும்…” என்றாள்.

சஞ்சு அவள் வலது கையில் ஏறி வலதுத்தோளில் அமர்ந்துக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று கத்தியது. பசியாக இருக்க வேண்டும். தானியமணிகளை சிறுத்தட்டில் கொட்டி நீட்ட, அது பட்பட்டென்று சத்தமிடும் அலகோடு அவற்றை கொத்தியது. அதில் தெறித்த மணிகள் அவள் நைட்டியில் தரையிலும் விழுந்தது. விரலை நீட்டியதும் சஞ்சு அதில் ஏறிக் கொள்ள அதை கட்டிலில் இறக்கி விட்டுவிட்டு, சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து வந்தாள். சஞ்சு அதில் மூக்கை நுழைத்து ஒரு கொத்துகொத்தி விட்டு தலையை அண்ணாந்து நீரை பருகியது. அவனிடமிருந்து காணொலி அழைப்பு வர, நெட்டுக்குத்தலாக வைத்திருந்த தலையணையில் உடலை சரிவாக்கி அமர்ந்து, அலைபேசியை இயக்கியதும் சஞ்சு தத்தி தத்தி நடந்து வந்து நைட்டியை அலகால் கொத்தி பிடிமானம் ஏற்படுத்திக் கொண்டு மேலெழும்பி, அவள் மார்பிலேறிக் கொண்டது. நைட்டியின் பட்டனை வாயில் வைத்துக் கொண்டு அது கடித்து திருக, “ஏய்.. வாயில போயிட போவுது..” என்று அதட்டியவாறு சஞ்சுவை வயிற்றுக்கு நகர்த்தி விட்டு “ம்.. சொல்லு..” என்றாள். அவள் நகர்த்த நகர்த்த சஞ்சு மேலும் முனைப்போடு மேலேறியது. அதை கண்ணெடுக்காது பார்த்தவன் “நான் சஞ்சுவை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றான். அவள் தலையை சாய்த்து சிரித்தாள். ஆட்டம் எதுவாக இருப்பினும், தோற்றவர்கள் வெற்றி பெறும் முனைப்பும், வென்றவர்கள் தோல்வி நேரிடுமோ என்ற தவிப்பும் கொள்வதாலேயே ஆட்டம் தொடர்ந்து களத்திலேயே இருக்க நேரிடுகிறது. அவன் எதோ பேசியபோது அவள் ஏதோ பதிலுறுத்தாள். இருமுனைகளும் ஒன்றையொன்று கவ்வி விலகி அமுதையோ நஞ்சையோ பரிமாறிக் கொள்ளும் நிறைவின் வழியாகதான் ஆட்டம் களைக்கட்டுகிறது. ஆனால் ஆட்டத்தின் மையம் ஒன்றேஒன்றாகதானிருக்க முடியும். மையமென்பது உணரப்படுபவை, உணர்த்துபவையல்ல. நிறைவென்பதே யோகம். அது உடலிருந்து மனதிற்கு எழுவதா..? அல்லது மனம் கொண்ட நிறைவை உடல் சுகிக்கிறதா? எதுவாயினும் முகம் ஆடியை போன்று செயல்பட்டு விடும்.

அந்த தொற்றுக்கிருமி அந்நாட்டின் ஆராய்ச்சிக்கூடத்தின் வழியே உருவாக்கப்பட்டது என்று வல்லரசு அந்நாட்டை சுட்டிக்காட்டி குறை கூறியது. ஏனெனில், அந்நாடுதான் இந்நோய் பரவலின் ஆதாரம். நோயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துாரம் உலகின் கண்களிலிருந்து மறைத்து விட்டு, மறைக்கவியலாத காலக்கட்டத்தில்தான் இந்நோய் குறித்து உலகிற்கு அறிவித்தது என்றும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவியலாது உலகு செயலிழந்து நிற்பதற்கு அந்நாடே காரணம் என்றும் வல்லரசு கடுஞ்சொல்லாடியது. வல்லரசு, வல்லரசாகவே நீடிக்க அதற்கு மேலதிக தொழிற்நுட்பமும், விற்பனைக்கான சந்தையும், பணியாற்றுவதற்கான ஆட்களும் தேவைப்படுகின்றன. அது தன்னுடைய கண்டுப்பிடிப்புகளுக்கேற்ப நோய்களையும் தேவைகளையும் உருவாக்கிக் கொள்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாடு, வல்லரசை குத்திக் காட்டியது.

சஞ்சு மெல்லிய விசிலொலி எழுப்பிக் கொண்டே மூடியிருந்த சன்னலின் கம்பியிலேறி விளையாடியது. அதன் நீண்டிருக்கும் கொண்டை மயிர்கள் காற்றில் வளைந்தாடின. “எப்போதான் அங்க வருவேன்னு இருக்கு” என்றான். ”புரியுது” என்றாள் சிரிப்புடன். “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? அவன் கண்கள் காமத்தில் சிறுத்திருந்தன. அந்நியரொருவர் வீட்டில் மூன்று வேளையும் உட்கார்ந்து உண்ணுவது சங்கடம் உண்டாக்கும் செயல் என்று பேச்சை மாற்றினான். “அதுக்கென்ன செய்றது? கொஞ்சம் அனுசரிச்சுக்கோ. பே பண்றேன்கிண்றேன்னு எதாது சொல்லி வச்சிராதே. நா என்ன பிஜியா நடத்துறேன்னு அவ கோச்சுக்குவா.” அவளும் அவன் பேச்சை ஏற்றுக் கொண்டவள்போல பதிலளித்தாள். தீவிரநிலையிலிருந்து மீள்வதென்பது அதை எளியப்பேச்சுகளால் கடத்து விடுதலேயாகும்.

அன்றைய கனவில், பெண்ணென பெருகி வந்து தான் கையளித்ததை அவன் உணர்ந்து அறிவதே ஆட்டத்தின் வெற்றி என்றாள். அவனோ அதை அவளே உணர்த்த வேண்டுமென்பதாக புரிந்துக் கொண்டான். இரவு இருளாகி அது அவன் முகத்திலும் பிரதிபலிக்க, அவள் “அசடு வழியுது.. போய் தொடச்சுக்க..” என்பாள் கேலியாக.

அடுத்துவந்த நாட்களும் உலகின் தலையெழுத்தில் மோசமான நாட்களாகவே மாறிக் கொண்டிருந்தன. தொற்றுக்கு மாற்றுமில்லை. மருந்துமில்லை. புழங்கும் கைகளை, நடக்கும் கால்களை, அருகருகே நிற்கும் உடல்களை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்றனர். யாரும் யார் வீடுகளுக்கும் செல்வதில்லை. விலங்குகள் பம்மி பதுங்கி தலை நீட்டின. விரட்டுவோர் யாருமின்றி திகைத்து, பின் தங்கள் பூர்வபூமியை உணர்ந்து, அலையலையாக வெளிவரத் தொடங்க, அதனை மனிதர்கள் பதுங்கியிருந்தபடியே நேரிடையாகவும் காமிரா கண்களின் வழியாகவும் பார்த்தனர். தலைவர்கள் தங்கள் நாடுகள் சுற்றும் அபிலாஷைகளை ஒதுக்கி விட்டு, நிலைமையை கவனிக்கத் தொடங்கினர். முன்பின் அனுபவமின்மையால் செய்வதறியாது குழம்பி, யாருக்கும் புரியாத கட்டளைகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது மட்டுமே எல்லோருக்கும் புரிந்திருந்தது.

“அய்யோ… இதென்ன கூத்து…? நீ எப்போதான் வருவே…?” என்று திடுக்கிட்டாள் அவள்.

ஆண்டு பலன்களை கணித்து தந்த நிமித்திகர்களையும், சோதிடர்களையும் ஒருசாரார் தேடிக் கொண்டிருக்க, கடவுளர்கள் மனித தொந்தரவின்றி பூட்டிய கதவுகளுக்குள் மோனநிலையில் ஆழ்ந்திருந்தனர். அறம் பிறழ்வதே கலியுக அறமென கொண்டு இயங்கிய உலகிற்கு அத்தனை விரைவாக தன்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை. முகக்கவச ஊழல், கிருமிநாசினி ஊழல், கையுறை ஊழல் என தொற்று தொடங்கிய அன்றே ஊழல்களும் தொடங்கியிருந்தன. அரசு, இடநகர்தலுக்கென வகுத்து வைத்த காரணிகளான உடல் நலமின்மை, இறப்பு, பிறப்பு, ஏற்கனவே திட்டமிட்ட திருமணம் போன்றவற்றுக்கான செயற்கை சான்றிதழ்களை சரளமாக உற்பத்தி செய்துக் கொண்டிருந்த ஊழ்வணிகத்தின் துணைக்கொண்டு அவன் நகரமுனைந்தபோது, அவன் அலுவலகம் பெங்களுரூவில் முடிக்க வேண்டிய சில பணிகளை அவனிடம் ஏவியதாக அவளிடம் கூறி வருந்தினான்.

பொய்யான காரணங்களோடு மக்கள் நகர்ந்துக் கொண்டிருப்பது பூச்செண்டிற்கு பூச்செண்டு கொடுத்து அழைக்கும் செயல் என்று ஆளும்கட்சிக்கு எதிராக, முகக்கவசமிட்ட முகங்களோடு எதிர்கட்சி வழக்குத் தொடுக்க, நீதிமன்றம், இனி இடநகர்வு அனுமதி பெற வேண்டுமெனில், பிறர் குறுக்கீடின்றி, சம்பந்தப்பட்ட இரு முனையமும் சேர்ந்தாற்போல் இசைவு தெரிவிக்க வேண்டுமென்று ஆணையிட்டது. அதற்கேற்ப விண்ணப்பப்படிவம் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டது. மேலும் இடநகர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

“ச்சே.. மூவ் ஆகறதுக்கு நல்ல சான்ஸ் கெடைச்சுது.. அப்டி என்னதான் ஒங்க கம்பெனிக்கு அர்ஜென்ட் வொர்க்கோ தலைபோற வொர்க்..? செரி வுடு.. கவர்மெண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுட்டும்… மொதவேலையா மைகிரேஷன் பாஸ் அப்ளை பண்ணிட்றேன்.. நீ அக்செப்ட் குடுத்துடு..“ என்றாள் அவனிடம்.

“ரொம்ப வருத்தமாருக்குடீ ஒங்க ரெண்டுபேரையும் நெனச்சா… இத்தன நாள் கழிச்சு கௌம்பும்போது இந்த வேலைய முடிச்சிட்டு வா.. அந்த வேலைய முடிச்சிட்டு வான்னு சொன்னா என்ன அர்த்தம்..” என்று தோழியும் வருந்தினாள்.

வல்லரசு, வைரஸ்களின் பல்வேறு உருமாறுதல்கள் குறித்து அந்நாட்டில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, அவ்வுருமாற்ற கிருமிகள் அங்கேயே பாதுகாக்கப்படுவதாகவும் அப்படி பாதுகாக்கப்பட்டு வந்த கிருமிகளில் ஒன்றுதான் இப்பூச்செண்டு என்றும் இம்மாதிரியான பூச்செண்டுகள் அங்கு நிறைய உண்டு என்றும் அந்நாட்டின் மீது மேலும் குற்றச்சாட்டை எடுத்து வைத்தது. இந்தியாவில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கை மக்களே விரும்பாத நிலையில், பாதிப்புகளும் பலிகளும் உயர்ந்துக் கொண்டிருந்தாலும் பொருளாதார சீர்க்கேடுகளை சரிசெய்யும்விதமாக அத்தியாவசியங்களுக்கு தளர்வு அளிக்கும் முடிவுகளையும் இடநகர்வுக்கான தளர்வுகளையும் அரசாங்கம் வெளியிட்டது.

அவள் விறுவிறுப்பாக மடிக்கணினியை எடுத்து, அவன் வருகைக்கான இணைய அனுமதிச்சீட்டு விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கினாள். சஞ்சு க்விக்.. க்விக்.. என கத்தியது. அதனை அதற்கான சிறு ஊஞ்சலில் ஏற்றி விட, அங்கும் கத்தியது. மேசையின் இழுப்பறை, கொடிக்கயிறு, சன்னல் கம்பிகள் என அதன் விருப்ப இடங்களிலெல்லாம் விட்டபோதும் அது விடாமல் கத்தியது. அதற்கொரு துணை வாங்க வேண்டும். அதற்கு முதலில் வெளியுலக நிலைமை சகஜமாக வேண்டும். அந்நேரம் அவன் காணொலி அழைப்பில் முகம் காட்டினான். “ஹாய்..” என்றான். “பாஸ் அப்ளை பண்ணிட்டுருக்கேன்.. நீ அக்செப்ட் மட்டும் குடுத்துடு..” என்றாள். சஞ்சு மடிக்கணினியில் ஏறி அதன் உச்சியில் நின்றுக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று சத்தமிட்டது. “சஞ்சுவ கூண்டுல விட்டுட்டு நானே லைனுக்கு வர்றேன்..” அவன் இணைப்பை துண்டித்து விட்டு சஞ்சுவை கூண்டில் விட்டபோதுதான் அவன் முகம் பொலிந்து வழிந்திருந்தது சிந்தையிலேறியது. ஒருவேளை அலுவலகமே அவனை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுமோ..? ஒருவேளை… ஒருவேளை… படபடப்போடு அவனை அழைக்க, அது எடுப்பாரின்றி அடித்து ஓய்ந்தது. மீதமிருந்த ஆன்லைன் விண்ணப்பதை பூர்த்தி செய்து விட்டு, ‘இருதரப்பார் விருப்பம்’ என்ற இடத்தில் அழுத்தியபோது அது சுழன்று உள்ளே சென்று, பின் அவனின் மௌனத்தை காரணம்காட்டி, விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியது.

பிறகெப்போதோ நிரூபணமாகும் ரகசியம், அது ரகசியம் என்பதனாலேயே கசிந்திருந்தது. வல்லரசும் அது கைக்காட்டும் நாடுமிணைந்து உலக மொத்த வர்த்தகத்தையும் தங்கள் காலடியில் அமர்த்திக் கொள்ளும் நடவடிக்கையின் பொய்த்த வடிவம்தான் அந்த பூச்செண்டு என்பதும் அவ்விரு நாடுகளும் உலகிற்கு பெருந்துரோகம் இழைத்து விட்டதென்றும், அவை எத்திட்டத்தையும் எக்காலமும் கைவிடப்போவதில்லை என்றும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதென்பது வெற்று திசைதிருப்பல்களே என்பதும் அறிவுஜீவிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

சஞ்சு விடாமல் க்வீக்.. க்வீக்.. என்று கத்திக் கொண்டிருந்தது.

பரியுடை நன்மான் – வளவ.துரையன் கட்டுரை

ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. ஆனால் அதைச் சொல்லியாக வேண்டும். இந்த நிலையில் அக்கருத்தை மறைபொருளாகச் சொல்லும் வழக்கத்தை நம் முன்னோர் மரபாகவே கடைப்பிடித்து வந்தனர். இதையே மங்கலம், குழுஉக்குறி, இடக்கரடக்கல் என்று இலக்கணம் கூறுகிறது. பெரும்பாலும் துன்பச் செய்தியைத்தான் இப்படி மறைத்துக் கூறினார்கள். செத்தார் என்பதைத் துஞ்சினார், விண்ணுலகு அடைந்தார், காலமானார் என்னும் சொற்களால் இன்றும் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது.

பண்டைய இலக்கியங்கள் இதை இறைச்சி என்றும் குறிப்பிட்டுள்ளன. நவீனத்தில் நாம் படிமம் என்று கூறுகிறோம். சங்க காலத்தலைவி தன் தலைவனுக்கு இழுக்கு நேரும் சொல்லை ஒருபோதும் உரைக்க மாட்டாள். அவன் தவறு செய்தபோதும் அதை வெளிப்படையாகச் சொன்னால் அது அவனின்பால் உள்ள குறையைத் தான் குறிப்பிட்டதாக ஆகிவிடும் எனக் கருதி அதனை மறைத்தே பேசுவாள். ஆனால் அவளிடம் வந்து உரையாடுவோர் அக்குறிப்பை உணரும் தன்மையைக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

ஐங்குறுநூறு ஓர் அருமையான அகத்துறை இலக்கியம். அதில் தலைவன் ஒருவன் தன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் இல்லம் சென்று தங்கி விடுகிறான். இது அக்கால வழக்கமாகும். தலைவி தனியே பிரிந்து வருந்திக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது தலைவனிடத்திலிருந்து வந்த சிலர் “அவன் விரைவில் இங்கு வந்து விடுவான் எனக் கூறுகின்றனர். ஆனால் அவன் அவ்வளவு எளிதாக வரமாட்டான் என்பது தலைவிக்குத் தெரியும். அதை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துப் பேசுகிறாள்.

”அங்கிருக்கும் பரத்தையர் ஊர் முழுதும் தூங்கினாலும் தாங்கள் தூங்காதத் தன்மை கொண்டவர்” என்று மட்டும் கூறுகிறாள். அவர்கள் உறங்காதபோது அவன் எப்படி அவர்களுக்குத் தெரியாமல் வரமுடியும் என்பது மறை பொருளாகும்.

”பரியுடை நன்மான் பொங்குஉளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சுஊர் யாமத்தும், துயில்அறி யலரே. [வேழப்பத்து—3]

இப்பாடலில் வேழம் என்னும் சொல் வருகிறது. அதற்கு யானை என்று பொருள் கூறுவது வழக்கம். இந்த இடத்தில் வேழம் என்பதற்கு. வேழக்கரும்பு அல்லது கொறுக்கச்சி என்று பொருளாகும். இக்காலத்தில் இது கொறுக்கந்தட்டு என்று வழங்கப்படுகிறது. பத்துப் பாடல்களிலும் இந்த வேழம் குறிப்பிடப்படுவதால் இப்பகுதிக்கு வேழப்பத்து என்றே பெயர் வந்தது. அதேபோல பரி என்பது பெரும்பாலும் குதிரையைக் குறிக்கும் சொல்லாகும். இங்கே மான் என்பது குதிரையைக் குறிக்க பரி என்பது குதிரையின் விரைவைக் காட்டுகிறது. உளை என்பது குதிரையின் தலையில் அணிவிக்கப்படும் சுட்டியாகும். அதுவெண்மையாக இருக்கிறது இப்படித் தமிழ்மொழியின் ஒருசொல் பலபொருள் சிறப்பும் இப்பாடலில் விளக்கப்படுகிறது.

”மிகுந்த விரைவைக் கொண்ட தலைவனின் குதிரையின் நெற்றிச் சுட்டியைப் போல வெள்ளையாகப் பூ பூக்கின்ற வேழம் இருக்கிற குளிர்ச்சியான ஊரை உடையவன் அவன். அங்கு ஊர் தூங்கும்போதும் பெண்டிர் தூங்கமாட்டாரே” என்பது தலைவி கூற்றாகும்.

பரியுடை நன்மான் என்பது தலைவியின் கற்புத் திறத்தைக் காட்டும். அக்குதிரையின் நெற்றிச்சுட்டி போல வேழம் பூ பூக்கும் என்பது பிறமகளிரைக் காட்டும்.

வேழப்பத்தின் இறுதிப்பாடல் மற்றும் ஒரு கருத்தை மறைவாகப் பேசுகிறது.

”அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்,
காம்புகன் டன்ன தூம்புடை, வேழத்துத்
துறைநணி ஊரனை உள்ளி,என்
இறைஏர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே” என்பது பாடல்.

இதில் ஒரு காட்சி காட்டப்படுகிறது. ”ஆறு சிறிய கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய வண்டு, நூறு இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவில் முட்டைகளை இடுகின்றது. அம்முட்டைகளை அருகில் உள்ள மூங்கில் என்னும் வேழம் அழைக்கிறது”. இக்காட்சியைச் சொல்லி, ”அவற்றை உடைய ஊரைச் சேர்ந்தவன் அவன். அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் முன்கை வளையல்கள் கழன்று ஓடுகின்றன” என்று தலைவி இப்பாடலில் கூறுகிறாள்.

தன்னை அழகான தாமரைப் பூவில் உள்ள முட்டையாகவும், அதைச்சிதைக்கும் வேழமாகப் பிறமகளிரையும் அவள் மறைவாகப் புலப்படுத்துகிறாள். மற்றொரு பொருளாக, வண்டின் முட்டையாகத் தன் புதல்வனையும், அவனைத் தலைவன் நினைவில் இருந்து பிற மகளிர் மறைப்பதாகவும் கூறவும் வாய்ப்புள்ளது.

ஆக தலைவி, தன் இல்லற வாழ்வுக்கு ஊறு ஏற்படும்போது கூட அதை ஊரார்க்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைத்துக் கூறும் திறம் படைத்தவள் என்பதை ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.

தன்மீட்சி – சுஷில் குமார் சிறுகதை

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஸ்கைப் அழைப்பு இருக்கும். நான்கு அல்லது ஐந்து முக்கியமான நபர்களுடன். பெரும்பாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதைச் சார்ந்த கலந்துரையாடல்களாக இருக்கும். சில அழைப்புகள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாண்டியும் போகும். அன்றைய அழைப்பும் நீண்டு கொண்டேதான் சென்றது. ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஏதும் கேட்கவில்லை, ஆனால், வீடியோவில் மற்றவர்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். தன்னுடையை ஹெட்செட் வேலை செய்கிறதா என்று ஒன்றிரண்டு முறை சோதித்துப் பார்த்தும் சரியாகவில்லை. ஹெட்செட்டைக் கழற்றி ஃபோனை நேரடியாக வைத்துக் கேட்டுப் பார்த்தும் பலனில்லை. சரவணனுக்கு வியர்த்துக் கொண்டு வந்தது. கண்கள் லேசாக இருட்டிக்கொண்டு வந்தன. கை விரல்கள் அவனையறியாமல் நடுங்குவதுபோல் தோன்றியது. இருள் படர்ந்து அவனைச் சூழ்ந்து, அவனுக்குள் ஏறி நிரம்பி வழிந்தது போல இருந்தது. அப்படியே கண்மூடி உட்கார்ந்து விட்டான். பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. விரல்கள் தொடர்ந்து நடுங்குவது மட்டுமே தெரிந்தது. சுய நினைவிற்குத் திரும்பி ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்தான். ஒரே யோசனையாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக ஒரு வித சோர்வு. எப்போதும் அப்படி இருப்பவனில்லை அவன். அவன் இருக்கும் இடமே கலகலப்பாகத் தான் இருக்கும். ஒரு வழியாக, மிச்சமிருந்த வேலைகளைக் குழப்பத்துடன் முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

கதவைத் திறந்த பத்மா, “பிள்ள தூங்குகால்லா, எதுக்கு இப்டி கதவ தட்டுகியோ? வரச்சம மிஸ்டு கால் குடுக்கச் சொன்னேம்லா?” அமுதாவிற்கு மூன்று வயது. தினமும் அப்பா வரும்போது கதவின்பின் ஒளிந்து நின்று ‘அப்பா’ என்று தாவிக் குதிப்பாள்.

பதில் பேசாமல் நேராக குளியலறைக்குச் சென்று ஷவரில் நின்றான். தலை லேசாகச் சுற்றுவது போல இருந்தது. ஏதேதோ எண்ணங்கள், கட்டற்ற வேகத்துடன் எங்கேயோ விரைந்து செல்கின்றன. ஒன்றின் குறுக்காக ஒன்றாக, திடீரென்று மேல்நோக்கி, பின், உள்ளுக்குள் சுற்றிச் சுற்றி, அலை அலையாக. விரல் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை. பத்மா கதவைத் தட்டுவது எங்கேயோ தூரத்தில் கேட்டது. மெதுவாகச் சென்று கதவைத் திறந்தவன் அவள் தோள் மீது அப்படியே சாய்ந்தான்.

“பிள்ளயாரப்பா..எத்தான், பாத்து பாத்து..என்னத்தான், என்ன செய்யி? எத்தான், தண்ணி குடிக்கேளா” ஓவென அழ ஆரம்பித்து விட்டாள் பத்மா. சரவணனால் கண்களைத் திறக்க முடியவில்லை, அப்படியே சென்று கட்டிலில் உட்கார்ந்து தலையணையில் சாய்ந்து விழுந்தான். ஒன்றுமில்லை என்பது போல பத்மாவைப் பார்த்து கை காட்டினான். அவள் நேராகச் சென்று திருநீறு எடுத்து வந்து பூசிவிட்டாள், வாய் ‘அம்மே நாராயணா, தேவி நாராயணா’ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரியாகி விட்ட மாதிரி இருந்தது. “பத்மா, வா டாக்டர்ட்ட போலாம்” என்றான். பத்மா அழுகையும் குழப்பமுமாக அவனைப் பார்த்து நின்றாள். ‘காச்சல் வந்தாக் கூட மாத்திர சாப்பிட மாட்டா, நமக்கு ஒண்ணுஞ் செய்யாது கேட்டியா? உள்ள ஓடது மீனு ரத்தம்லான்னு சொல்லுவா, பிள்ளயாரப்பா, இப்ப ஆஸ்பத்திரிக்கு போவோம்னு சொல்லுகாளே, நா என்ன செய்வேன்’

“எத்தான், என்னத்தான் செய்யி, சொல்லுங்கத்தான்”

“ஒண்ணுல்ல, நீ பொறப்படுட்டி மொதல்ல. ஆட்டோக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லு, பைக் வேண்டாம்.” ஆட்டோ வந்தது. ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பத்மா ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தாள். எதையும் கவனிக்காமல் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். அமுதா எதுவும் தெரியாமல் அம்மா தோளில் தூங்கிக்கொண்டிருந்தாள். காய்ச்சல் பரிசோதனை செய்து, இரத்த அழுத்தம், எடை, உயரம் குறித்துக் கொண்டு காத்திருக்கச் சொன்னார்கள். சரவணன் எதுவுமே பேசவில்லை. பத்மா அவளுடைய அம்மாவிற்குப் ஃபோன் செய்து அழுது கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து அவர்களது முறை வந்தது.

டாக்டர் கேட்டார், “சொல்லுப்போ, என்னாச்சி? நீ இந்தப் பக்கமே வர மாட்டியே?”

“இல்ல டாக்டர், ஒரு மாரி தளச்சயா இருக்கு, சாய்ங்காலமானா ஒரே தல சுத்து, கண்ணு ஒரு மாரி இருட்டிட்டே போகு..இன்னிக்கி ஃபோன் பேசும்போ கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே கேக்காம ஆய்ட்டு..” பத்மாவால் உட்கார முடியவில்லை, கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

“ஓ, ஒனக்கென்ன டே தளச்ச இந்த வயசுல, சின்ன ப்ராயத்துல கெதியா இருக்காண்டாமா டே? ஒங்கப்பன் அம்பது வயசுல ரெண்டு மூட அரிசிய அசால்ட்டா தூக்கிப் போட்ருவானே டே! செரி விடு” என்றவர் பத்மாவைப் பார்த்து, “எம்மோ, நீ எதுக்கு அழுக? சும்மா இரிம்மோ. வேறென்ன செய்யி சொல்லுடே?”

“சாப்பிடவும் பிடிக்க மாட்டுக்கு டாக்டர்..கொஞ்சம் சாப்ட்ட ஒடனே வயிறு நெறஞ்சி போன மாதி தோணுது..”

“ம்ம், வேற? ஒழுங்கா தூங்குகியா?”

பத்மா குறுக்கிட்டாள், “இல்ல சார், ஒரு வாரமா இவ்வோ சரியில்ல, ராத்திரி முழிச்சே கெடக்கா, தூக்கத்துல ஒரே பொலம்பக்கம்..”

“செரி, டெம்பரேச்சர் நார்மல், BP இல்ல, சுகரும் இல்லல்லா ஒனக்கு?” டாக்டர் சிறிது யோசித்து குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் குடுத்தார். “ப்ளட் டெஸ்ட் எழுதிருக்கேன், சுகரும் செக் பண்ணிருவோம், பாத்துட்டு வாப்போ..ஒண்ணும் பயப்படாண்டாம்.”

இரத்த மாதிரி குடுத்து, சர்க்கரை பரிசோதனையும் செய்துவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தனர்.

“எத்தான், ஆபீஸ்ல என்னவாம் பிரச்சனையா, என்ட்ட எதும் மறைக்கேலா? எனக்கு படபடப்பா வருகு..எல்லாவளுக்க கண்ணும் சேந்து எனக்க உயிரல்லா எடுக்கு.”

“ஏட்டி, நீ சும்மா இருக்கியா? ஒண்ணுல்ல, பாப்போம், இரி”

“குடும்பக் கோயிலுக்கு போவோம்னு சொன்னா கேக்கேளா நீங்க? ஓரே வேல வேலன்னு அலஞ்சா! ஒரு நாளு கூட லீவு போட மாட்டியோ, வீட்டுக்கு வந்தாலும் ஒரே ஃபோனு…”

பரிசோதனை முடிவுகள் வந்தன. சர்க்கரை அளவு சரியாகத்தான் இருந்தது. இரத்தப் பரிசோதனை அறிக்கையில் ஹீமோக்ளோபின் அளவு 19 என்று இருந்தது. அடிக்கோடு இடப்பட்டிருந்தது. சரவணன் ஃபோனை எடுத்து அதைப்பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தான். பத்மா என்ன என்ன என்று கேட்டு ‘அம்மே நாராயணா’ சொல்ல ஆரம்பித்தாள்.

முடிவுகளைப் பார்த்து டாக்டர் சொன்னார், “தம்பி, ஹீமோக்ளோபின் அளவு பொதுவாட்டு 13லருந்து 15 வர இருக்கணும். ஒனக்கு இப்போ 19 இருக்கு. நெறய காரணம் இருக்கலாம். ஆனா, இப்போ ஒண்ணும் முடிவா சொல்ல முடியாது. ஒரு, ஒரு வாரம் பாப்போம், நெறைய தண்ணி குடி, ஜூஸ், எளனி குடி.”

“செரி டாக்டர், தூக்கமே இல்லயே டாக்டர்” என்று கேட்டான் சரவணன்.

“எதயும் யோசிக்காம ஒறங்குப்போ. அடுத்த வாரம் மறுபடியும் ப்ளட் டெஸ்ட் எடுப்போம், ஒருவேள ஹீமோக்ளோபின் கொறயலன்னா கொஞ்சம் சிக்கல் தான். அத நம்ம அப்ப பாப்போம், என்ன?”

பத்மா அதற்குள் மறுபடியும் அழ ஆரம்பித்திருந்தாள். டாக்டர் அவளைப் பார்த்து, “எம்மோ, நீ அழாம இரி மொதல்ல, ஆபீஸ் போறவனுக்கு நெறைய கொடச்சல் இருக்கும்லா, நீ தைரியமாட்டு இருந்தாத்தான அவனும் கெதியா இருப்பான்.”

பத்மா குனிந்துகொண்டே தலையை ஆட்டினாள்.

“தம்பி, இது ஒரு வேள ‘பாலிசித்தீமியா வெரா’வா இருக்கலாம். அது ஒரு ப்ளட் கண்டிசன் தா, அத நம்ம இப்ப கொழப்பாண்டாம். ஒரு வாரம் கழிச்சு வாப்போ… செரி பாப்போம்.”

….

அன்று இரவு ஒரு நொடி கூட சரவணனால் தூங்க முடியவில்லை. கண்களை மூடியதும் தலை சுற்றுவது போலவும் எல்லாமே இருண்டு வருவது போலவும் ஒரு மயக்க நிலை தொடர்ந்து இருந்தது. வித விதமான எண்ணங்கள் வேறு. ‘பாலிசித்தீமியா பத்தி கூகுள்ல பாக்கும்போ என்னாலாமோ போட்ருந்தானே, கேன்சர்னு கூட ஒரு வார்த்த இருந்துச்சே, ஒரு வேள அப்டி ஆயிட்டா பத்மா என்ன செய்வா? எம் பிள்ளய எப்டி வளப்பா? இன்னும் எத்தன மாசம் இப்டி இருக்கப் போறனோ!’

“எத்தான், எத்தான், என்ன செய்யித்தான்? ஏன் தூங்காம இருக்கியோ?” பத்மாவிற்கு படபடப்பு இன்னும் குறையவில்லை. அவளும் தூங்காமலேயே கிடந்தாள்.

“பத்மா, எனக்கு ஒருவேள கேன்சரா இருக்குமோ? நெட்-ல அப்டிதா போட்ருக்கான். நா போய்ட்டா நீ என்ன செய்வ?”

“எத்தான், இப்டி பேசாதியோ, நா செத்துருவேன்..ஒண்ணுல்லத்தான் உங்களுக்கு..ஒறங்குங்கோ…” என்னதான் மனதை தைரியப்படுத்திக் கொண்டு அவள் சமாளித்தாலும் சரவணன் தூங்கவுமில்லை, அவன் புலம்பல் நிற்கவுமில்லை.

“பாலிசித்தீமியாவா இருந்தா டெய்லி மாத்திர சாப்பிடணும், வாழ்க்க பூரா…செலசமம் அதுவே கேன்சரா மாறுமாம். எலும்புக்குள்ள மஜ்ஜை இருக்குல்லா, அத மாத்துவாங்கலாம்..ரொம்ப பெயின்ஃபுல் ட்ரீட்மென்ட்..பயங்கர செலவாகும்..நமக்கு எங்க அதுக்கு கழியும்! அவ்ளோதான் போல, பிள்ள என்ன பண்ணுவா? அவளுக்கு யாருமே இல்லாம போய்ருமே..’

“எத்தான், நம்ம வேற ஆஸ்பத்திரிக்கு போவோம், நாகராஜ் அண்ணன நாளக்கி வரச் சொல்லுங்கோ, ஒண்ணுல்லத்தான், என்ன பயமுறுத்தாதியோ..”

திருவனந்தபுரத்தின் புகழ் பெற்ற மருத்துவமனையில் எல்லா விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டன; அடி வயிற்று ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, இரத்தத்தின் நுண்ணிய பகுதிகளை ஆய்வு செய்யும் ஒரு இரத்தப் பரிசோதனை, நரம்பு மண்டலத்திற்கான ஸ்கேன். பாலிசித்தீமியா போன்ற சில நோய்களுக்கு, அவ்வப்போது உடலிலிருந்து ஒரு யூனிட் இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இல்லாவிடில், இரத்தத்தின் திடத்தன்மை அதிகரித்து உடலின் உள்பகுதிகளில் அடைப்புகள் ஏற்படலாம். உயிரிழப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த இரத்தம் அப்படியே அழிக்கப்படும்.

பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர் ஹீமோக்ளோபின் அளவு 17.5 இருப்பதாகச் சொன்னார். இருந்தாலும், அந்த முறைப்படி ஒரு யூனிட் இரத்தத்தை வெளியேற்றி சில மாத்திரைகளைச் சாப்பிட்டு ஒரு வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார். அதன்படியே, ஒரு யூனிட் இரத்தம் எடுக்கப்பட்டது.

“எத்தான், அந்த ஆஸ்பத்திரில 19-னு சொன்னான். கிறுக்குப்பயக்க..ஓட்ட மெசின எதயாம் வச்சி செய்வாம் போல..”

சரவணனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் வித வித எண்ணங்கள் வந்து பயமுறுத்துவது நிற்கவில்லை, அன்றைக்கும் சரியாக சாப்பிட முடியவில்லை. இரத்தத்தின் திடத்தன்மையை கட்டுக்குள் வைக்க தினசரி இரண்டு மாத்திரைகள், பிறகு, நிறைய தண்ணீர், ஜூஸ், இளநீர்..எல்லாம் அதே அறிவுரை தான்…

“மாப்ள, என்னடே, கிளி பறந்துருச்சோ? எதயாம் பாத்து பயந்தியால? நீ லேசுல இப்டி ஆக மாட்டியே டே?” நாகராஜ் சரவணனுக்கு நீண்ட கால நண்பன்.

“இல்ல மக்ளே, நாந்தா சொன்னேம்லா..எனக்கே தெரில மக்கா, ஒரே பயம், கேட்டியா? செத்துருவமோ, பிள்ளக்கி என்ன ஆகுமோன்னு..”

“போல லே, எல்லாவனும் சாவ வேண்டியதா, நால்லாம் ஒரு நாளக்கி எத்தன பிரச்சினய தோள்ல போட்டுட்டு சுத்துகேன், உனக்கென்ன ல, பைத்தியாரா…போல, போய் வேலயப் பாரு ல..”

“மக்கா, நா எல்லாருக்கும் ட்ரெய்னிங் குடுக்க ஆளு..நானே சொல்லுகேன் இப்டிலாம் தோணுகுன்னு…”

“செரி, விடு..ஒண்ணு செய்வோம்…நம்ம வடசேரி பள்ளில போய் மொதல்ல ஓதி கயிறு கட்டுவோம், நீ வா..”

லெப்பையிடம் வரிசையில் காத்திருந்து ஒரு பாக்கெட் ஊதுபத்தி, ஒரு எலுமிச்சை பழம் கொடுத்து கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டான். அவர் ஓதி விட்டு அடிக்கடி எச்சில் துப்பி அவன் முகத்தில் ஊதினார். “பயந்தான்..போ..செரி ஆவும்..இன்ஷா அல்லா..”

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் பூசாரித் தாத்தாவிடம் தண்ணீர் தெளித்து கயிறு கட்டினால் எல்லாம் சரி ஆகும் என்று யாரோ சொல்ல, பத்மாவும் சரவணனும் அங்கு சென்றார்கள். பூஜை முடித்து தண்ணீர் சொம்புடன் வெளியே வந்த பூசாரி சரவணனைப் பார்த்த உடனேயே, “இவன் யாம் இப்டி பயப்படுகான்? கயித்தப் பாத்து பாம்புன்னுலா பயப்படுகான்” என்றார். பத்மாவின் முகத்தில் இன்னும் பயம் கூடியது.

கயிறு கட்டுதல் அதோடு முடியவில்லை. சுடுகாட்டு சுடலை மாடன், தாழாக்குடி அம்மன் கோவில், வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் என்று பல கயிறுகள் சரவணனின் மணிக்கட்டில் ஏறி அவனுக்கு தைரியம் கொடுத்தன. குமரி பகவதி அம்மன் அபிஷேக சந்தனத்தை மூன்று இரவுகள் முகத்தில் பூசிப் படுத்தான்.

அடுத்த வாரம் மீண்டும் திருவனந்தபுரத்தில். இரத்தப் பரிசோதனை செய்தபோது ஹீமோக்ளோபின் 14.5 என்று வந்தது. அவனுக்கு பாலிசித்தீமியா இல்லை எனவும், இது ஒரு வேளை வேலைப் பளுவாலோ, இல்லை ஏதேனும் உளவியல் சிக்கலாகவோ இருக்கலாம் என்றும் மருத்துவர் சொல்ல, சரவணனின் குழப்பம் இன்னும் அதிகமானது.

“பத்மா, டாக்டர் என்ன சொன்னாரு மனசுலாச்சா? எனக்கு ஸ்ட்ரெஸ்ஸாம்..ஆன்க்சைட்டி டிஸ்ஆர்டராம்…நம்ப முடியுதா? செரிதான்…ரைட்டு, பாப்போம்…”

மருத்துவர் சரவணனிடம் நன்றாகத் தூங்க வேண்டும் எனவும், சில நாட்களுக்கு வேலையிலிருந்து விடுப்பு எடுத்து ஓய்வெடுக்கலாம் எனவும் கூறினார். முக்கியமாக, மொபைல் ஃபோன் உபயோகப் படுத்துவதைக் குறைக்க வேண்டும். தேவைப்படும் நேரங்களில் முடிந்த வரை முகத்திற்கு நேராக வைத்து ஃபோனைப் பார்க்க வேண்டும். தலை குனிந்து ஃபோனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

எல்லாம் முயற்சி செய்தும் சரியான பாடில்லை. இரண்டு வாரங்கள் ஓடின. தினமும் காலை சரியாக 6.17-க்கு முழிப்பு வந்தது. அடுத்த இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு மூளை அதிவேகத்தில் ஓடும்; எண்ணங்களின் பந்தயம்; சில கடந்த நாட்களைப் பற்றி, சில எதிர்காலம் பற்றி, வேலை போய்விடுமோ, படுத்த படுக்கையாகி விட்டால் என்ன செய்வது?, சேமிப்பு பெரிதாக இல்லை, மனநிலை பாதிப்பு என்றால் ஒரு வேளை பைத்தியம் பிடித்து விடுமோ? ஒரு பன்றி தன் குட்டிகளுடன் பரபரத்து ஓடுவது போல அடிக்கடி கனவில் தோன்றியது. சில நேரங்களில் பகலிலும்.

சாப்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனது. காலை உணவிற்குப் பின் வீட்டு வராந்தாவில் நடக்க ஆரம்பிப்பான், இங்கும் அங்குமாக, ஏதும் பேசாமல், அவ்வப்போது பெருமூச்சுகளாக விடுவான். குழந்தையிடம் விளையாடுவது அறவே நின்று போனது, அவள் அருகே வந்தாலே எரிச்சலில் கத்தினான். பத்மாவையும் முகம் கொடுத்து பார்ப்பதைத் தவிர்த்தான். மாலை நான்கு மணிக்கு மேல் எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாகப் பேச ஆரம்பிப்பான். இரவு மீண்டும் குழப்ப எண்ணங்கள், பயம், தூக்கமின்மை.

நாகராஜனுடன் ஒரு மனநல மருத்துவமனைக்குப் போனான் சரவணன். அது ஒரு நாலுக்கெட்டு வீடுதான். கட்டுப்படுத்த முடியாத ஓர் இளைஞனை கொண்டுவந்த காரிலேயே வைத்து ஊசி போட்டு அமைதிப் படுத்தினார் மருத்துவர். படபடப்பாக அமர்ந்திருந்த சரவணனை உள்ளே வருமாறு அழைக்க, இருவரும் சென்றனர்.

“வாங்க, இரிங்க, யாருக்கு பிரச்சன?” மருத்துவர் ஒரு சோபாவில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே கேட்டார். அவர் தலைக்கு மேல் ஒரு வெள்ளை நிற பல்பு, கண் கூசும் விதமாக ஒளிர்ந்தது. சரவணன் தன் பிரச்சினையைப் பற்றி விளக்கமாகச் சொன்னான். அடிக்கடி அந்த பல்பு அவனைத் தொந்தரவு செய்வது போல எரிச்சலூட்டியது. மருத்துவர் சரவணனைப் பார்க்காமல் நாகராஜனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“தம்பி, ஆன்க்சைட்டி அண்ட் ஃபியர், அவ்ளோதா..ரெண்டு வருசம் இருக்கும்னு நெனக்கேன், எனக்கு அட்டாக் வந்து ICU-ல இருந்தேன்..செத்துருவேன்னு ஒரே பயம்..மருந்து என்ன மருந்து…நம்ம தான் மருந்து…அந்த பத்து நாள்ல தான் புரிஞ்சு..நம்மலாம் ஒரு மயிரும் இல்லன்னு…இன்னா பாரு, ஜம்முன்னு இருக்கேம்லா…மனசுதா மருந்துப்போ…”

சரவணன் கூர்ந்து கவனிக்க நாகராஜன் மருத்துவரைப் பார்த்து ம்ம், ம்ம் என்று தலையாட்டிக் கொண்டிருந்தான்.

“தம்பி, ஒனக்கு எந்த ஹீரோயின் புடிக்கும் சொல்லு” என்று நாகராஜனைப் பார்த்து சிரித்தார் மருத்துவர்.

“சார்..அது…” கொஞ்சம் வெட்கப்பட்டு, “நயன்தாரா சார்..” என்றான்.

“ஆமா தம்பி, ஜம்முன்னு இருக்கால்லா..அவ பொண்டாட்டியா வந்தா சூப்பரா இருக்கும்லா..”

நாகராஜன் தலையைச் சொரிந்து கொண்டே, “அது நடக்காதுல்லா சார்.” என்றான்.

“அப்பிடிச் சொல்லு…எல்லாவனுக்கும் அவவன் பொண்டாட்டிதான்டே நயன்தாரா, திரிஷா எல்லாம்..வேறென்ன செய்ய முடியும்? அப்டி நெனச்சுட்டே ஓட்ட வேண்டியதான். என் ஃபிரெண்ட் ஒருத்தன் இருக்காம் பாத்துக்கோ, 45 வயசு..பெரிய லாயரு…இன்னும் கல்யாணம் பண்ணல்ல..யாம்லன்னு கேட்டா, ‘ஒரே கருவாட்டு வாட, சீ…சீ..அப்டிங்கான்..சொல்லது மனசுலாச்சா..”

சரவணன் தலையாட்டி சிரிக்க ஆரம்பித்தான். மருத்துவர் இப்போது அவனைப் பார்த்து, “தம்பி ஒரு பலூன்ல ஃபுல்லா தண்ணி புடிச்சி ஒரு நூல்ல கெட்டி வச்சிருக்கேன்னு வய்யி, அத ஒரு சுண்டு சுண்டுனா என்ன ஆவும்?”

சரவணன் யோசித்து, “அது குலுங்கும் சார்” என்றான்.

“ம்ம்..அதுக்க அதிர்வு இருக்குல்லா, எவ்ளோ நேரம் இருக்கும்னு நெனைக்க, சொல்லு பாப்போம்.”

“ஒரு…ஒரு முப்பது செகண்ட் இருக்கும் சார்.” என்றான்.

“தம்பி, நீ சொல்லு..” என்று மருத்துவர் நாகராஜனைப் பார்த்துக் கேட்டார்.

“சார்..ஒரு ரெண்டு நிமிசம் இருக்கும்லா.” என்றான்.

“ம்ம்..சொன்னா நம்ப மாட்டியோ, கொறஞ்சது முப்பது நிமிசம் இருக்குமாம்..நீங்க வேண்ணா கூகிள் பண்ணிப் பாருங்கோ..” இருவரும் மருத்துவரைக் கூர்ந்து கவனித்தனர்.

“அதே மாதி தான நம்ம மனசும்..நயன்தாரா, வேல, சம்பாத்தியம், குடும்பம், சப்பு, சவறு..என்ன மயித்தயெல்லாம்தா மனுசன் சமாளிப்பான்..அதுலயும், கல்யாணம் ஆயிட்டுன்னு வய்யி, பய தொலஞ்சான்..நாந்தா பாக்கேம்லா..வரவன்ல பாதி பேரு குடும்பத்தால சீரழிஞ்சவந்தான்..பொண்டாட்டி…மண்ணாங்கட்டின்னு…வேற வேலயில்லாமத் திரியானுவோ…”

இருவரும் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தனர்.

மருத்துவர் கேட்டார் “எதாம் நடந்திருக்கும்…எப்பயும் மாதி இல்லாம வேறெதாம் செஞ்சுருப்ப..யோசிச்சுப் பாத்து சொல்லு..வீட்ல எதாம் சண்ட கிண்ட போட்டியா?”

சரவணன் கொஞ்ச நேரம் யோசித்து சொல்ல ஆரம்பித்தான், “ம்ம்ம்..ஆமா, சார்…ஒரு மாசம் இருக்கும்னு நெனைக்கேன்..எம் பொண்டாட்டி பாத்ரூம்ல பிள்ளய குளிப்பாட்டிட்டு இருந்தா..பிள்ளன்னா தண்ணில ஜாலியா வெளயாடத்தான செய்யும் ..திடீர்னு ஓ..ஓன்னு பிள்ள அழுகா..இவதான் அடிச்சிருப்பா..எனக்குப் பொதுவா பிள்ளேல யாரும் அடிக்கத பாத்தா மண்ட காஞ்சிரும்..எத்தன தடவ சொன்னாலும் இவ கேக்கதில்ல..பிள்ளயப் போட்டு அடிக்கது..அன்னிக்கி கடுப்புல போயி பாத்ரூம் கதவுல ஓங்கி ஒரு இடி இடிச்சேன்..பயங்கரமா கத்திட்டேன்..கதவு ரெண்டு துண்டாப் போய்ட்டு…எனக்கே ஒரு மாதி ஆய்ட்டு…மூணு நாளா ஒண்ணும் பேசாம இருந்தேன்…

“ம்ம்ம்..பொறவு…”

“பொறவு, அடுத்த வாரம் வேறெதோ சண்டைல அவ ஃபோனப் போட்டு ஒடச்சா..நா கண்டுக்காம அமைதியா வெளில போய்ட்டேன்..பொறவு, சமாதானம் ஆனப்போ..எத்தான், .ஃபோன ஒடச்சதுக்கு நீங்க ஏன் கோவப்படலத்தான்னு கேட்டா..எனக்கே மனசுலாவல…எப்டி நா அமைதியா இருந்தேன்னு..”

“ம்ம்..அதான கேட்டேன்..ஒண்ணும் நடக்காமலா மனசு ஷேக் ஆவும்…பலூன் கததான் கேட்டியா..”

சரவணன் ஏதோ புரிந்தது போல அவரைப் பார்த்தான். முகத்தில் ஒரு தெளிவு தெரிந்த மாதிரி இருந்தது.

“பலூன சுண்டுனா குலுங்கும்லா..நா சொல்லுகது செரி தானப்போ…சொல்லு பாப்பம்…”

“நம்ம சொல்லத தான் நம்ம மனசு கேக்கணும் இல்லயா?..அது என்ன பெரிய மயிரா நமக்கு ஆர்டர் மயிரு போட…நம்ம மனசுக்கு நாமதான் மொதலாளி..இல்லா? ‘Your mind is your instrument. Learn to be its master, not its slave’-ன்னு ஒரு கோட் இருக்கு தெரியுமா?”

சரவணன் தலையை ஆட்டி ஆமோதித்துப் பின் கேட்டான், “டாக்டர்…நீங்க சொல்லது எல்லாம் மனசுலாகு..ஆனா, ஒறங்க முடில, சாப்பாடு எறங்கல…அதான் பயந்துட்டேன்..ஒரே கெட்ட எண்ணம்..எவனாம் செய்வின வச்சிருப்பானோன்னு கூட நெனச்சேன்..”

“அப்டிதா தோணும்ப்போ…சயின்ஸ் படி பாத்தா, நம்ம நெனச்சாலே நமக்கு கேன்சர் வரும்ங்கான்..எல்லா சோக்கேடும் நம்ம கைலதான்..நம்ம தாத்தமாரெல்லாம் எப்டி இருந்தானுகோ…நாலு பொண்டாட்டி வச்சு ராசா மாதி இருந்தானுகல்லா…இன்னொரு மேட்டரும் உண்டு..இது பரம்பரயா கூட வரும்னும் சொல்லுகா..ஒங்க குடும்பத்துல யாருக்காம் இப்டி இருந்திருக்கலாம்..யாரு கண்டா!”

“டாக்டர்..இப்ப என்ன செய்யச் சொல்லுகியோ?”

“தம்பி…நீ சரக்கடிக்கவன் மாதி தெரில…அடிப்பேன்னா நல்லா நாலு நாளு ஒரு டூரப் போடு..இந்தா இருக்காம்லா, இவன் மொடக்குடிகாரந்தான..முழியப் பாத்தா தெரிதே ..இவனக் கூட்டிட்டுப் போ..இந்தா இருக்கு கேரளா..ஒரு ரெசார்ட்ட போட்டு நல்லா குடி..ஒரு மஸாஜப் போடு…நல்லோரு ஓமனக்குட்டி கிட்டுமெங்கில் கொள்ளாமாயிருக்கும்..எல்லா பயம் மயிரும் ஓடிரும்…”

சரவணனும் நாகராஜனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

“என்னடா, டாக்டரே இப்டி சொல்லுகாரேன்னு பாக்கியா? இல்லன்னா சொல்லு..ஒனக்கு ஒரு ஆறு, ஏழு மாத்திர தாரேன்..ரெண்டு மாசம் சாப்பிடு…அதுக்கப் பொறவு செரி ஆவும், இல்லன்னா பழகிரும்…ஹிஹிஹி…”

இருவரும் குழப்பத்தோடு மருத்துவரைப் பார்க்க, அவர் தொடர்ந்தார், “செரி, அத விடு..இப்ப என்ன, ரெண்டு வாரம் சோலிக்குப் போலேல்லா..எத்தன நாளக்கி அப்டி இருப்ப? மொதல்ல நீ ஆபீஸ்க்கு போ..ஒனக்குப் பிடிச்ச வேலதான…நூறு பேருக்கு ட்ரெய்னிங் கொடுக்கவம்லா டே நீ? போய் வேலயப் பாரு…வேறென்ன இன்ட்ரெஸ்ட் ஒனக்கு? மியூசிக், டிராயிங், ஏதும் உண்டா?”

“அது..சார்..புக்ஸ்னா உயிரு சார்..நெறைய எழுதணும்னு ஒரு ஆசயும் இருக்கு…”

“பொறவு என்ன டே..போய் நெறைய படி…எழுத ஆரம்பி…வீட்ல மகாலட்சுமி மாதி பொம்பளப் புள்ள இருக்கால்லா..அவ கூட டெய்லி வெளையாடு…ஒண்ணுல்ல கேட்டியா…நம்ம தா மனசுக்கு மாஸ்டர்..என்ன?”

“செரி சார்..”

மருத்துவர் இரண்டு நாட்களுக்கு மட்டும் மாத்திரை எழுதிக் கொடுத்தார். தூக்கம் வருவதற்காகவும், எண்ண ஓட்டத்தைக் குறைப்பதற்காகவும். தினமும் இரண்டு மாத்திரைகளில் கால் அளவு தான். முதல் நாள் இரவு மாத்திரை போட்டதும் அடித்துப் போட்டது போல தூங்கினான் சரவணன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது திடீரென முழிப்பு வந்தது. கண் திறந்து பார்க்க, ஓரடி தூரத்தில் பெரிதாக ஒரு முகம், அவ்வளவு தத்ரூபமாக அவனைக் கூர்ந்து பார்த்தது. பயந்து போய் முகத்தைத் திருப்பிப் பார்க்க, மேசையின் அருகே இருந்த நாற்காலி தலைமுடியை விரித்துப் போட்டு அவனை நோக்கி நகர்ந்து வந்தது. கண்களை இறுக்க மூடி அப்படியே உறங்கி விட்டான்.

அடுத்த நாள் காலை அதே அறிகுறிகள் இருந்தாலும் மனது தைரியமானது போல இருந்தது. இரவில் தோன்றியது KFC லோகோவில் உள்ள முகம் போல இருந்ததாக நினைத்து சிரிப்பு வந்தது. மீதமிருந்த மாத்திரைகளை பரணில் தூக்கிப் போட்டான். நாகராஜனுக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னான்.

“மாப்ள, இன்னிக்கு லீவு போட முடியுமா?”

“என்ன மக்கா? எதுக்கு ல?”

“நீ லீவு போடு…வண்டிய எடு..”

நாகராஜன் விடுப்பிற்குச் சொல்லிவிட்டு பைக்கில் அவனை ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

“நண்பா, வண்டிய நேர திருச்செந்தூருக்கு வுடு…”

“லே, என்ன மக்கா? டக்குன்னு திருச்செந்தூருன்னு சொல்லுக..”

“நண்பா, நீ போ சொல்லுகேன். தலைவர பாத்து ரொம்ப நாள் ஆச்சில்லா..”

“செரி மக்கா..நானும் போணும்னு நெனச்சேன்..செரி போவோம்..

நீண்ட பயணத்தின்போது மனது லேசானது..நீண்ட உரையாடல்கள்..மனதிற்கு நெருக்கமான நண்பனுடன் அங்கங்கே நிறுத்தி சாயா, உளுந்த வடை என…

கோவிலுக்குச் சென்று முருகர் தரிசனம் முடித்து பிரபல மணி ஐயர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, கோவில் மண்டபத்தில் சென்று இருவரும் படுத்து உரையாடலைத் தொடர்ந்தனர். கடல் காற்று உச்சி வெயிலில் சுகமாக இருந்தது. எங்கும் மயிலிறகுகள், நேர்த்திக் கடன்கள்.

“மணி ஐயர் சாப்பாடுன்னா ஒரு சொகந்தாம் மொக்கா..ஆமா, பிள்ளேள் எப்டிருக்கா மொக்கா? பையன் எப்டி படிக்கான்?” என்று கேட்டான் சரவணன்.

“பரவால்ல டே….செம வாயி கேட்டியா? எங்கப்பாவ பாத்து ‘லே, எவம்ல அது? இங்க வால லே’ன்னு சொல்லுகான்..அவனுக்கு ஓரே காரு ஆசதான்..நூறு கார் பொம்ம வச்சிருக்கான் தெரியும்லா…இன்னொரு நாளு சொல்லுகான், ‘அப்பா, நீங்க பிராண்டி குடிக்காதியோ, அடிச்சு தொவச்சிருவேன்’னு..”

“சூப்பர் மக்கா..சின்னவா என்ன சொல்லுகா?”

“நீ தான டே அதுக்கு காரணமே…சண்ட வந்தா போயி கெட்டிப் புடி..எல்லாஞ் செரி ஆவும்னு நீதான சொல்லுவ..அததா ஃபாலோ பண்ணேன்..இந்தா ஒரு வயசு ஆவப் போது..”

“அது செரி, நீ சும்மாவே தொட்டு வெளயாடுவ..”

“மாப்ள, உன்ட்ட சொல்லணும்னு நெனச்சேன் பாத்துக்க..நீ யாம்ல ரெண்டாவது வேண்டாம்னு சொல்லுக?”

“இல்ல மக்கா..வேண்டாம்னு ஒரு தோணக்கம்…ஏன்னு தெரில…”

“இல்ல நண்பா, நாஞ் சொல்லத கேளுல…நீ கமிட் ஆக வேண்டாம்னு நெனைக்க…பெரியவங்க சொல்லது சும்மால்ல மக்கா..ரெண்டு பிள்ளங்க இருந்தா லைஃப் வேற ஒரு டைரக்சன்ல போவும் பாத்துக்க..எம் பொண்டாட்டி என்ன போலீஸ் ஸ்டேசன் வர கொண்டு போனவதான..இப்ப பாரு..சுத்திச் சுத்தி வாரால்லா…நீ நல்லா யோசி மக்கா..இன்னொரு பிள்ள வந்தா நீ இன்னும் ஒழைக்கணும்லா..அதுக்காவே ஓடுவ..லைப் அவ்ளோதான…பத்மாக்கும் மனசுக்குள்ள ஒரு ஆச இருக்கும் பாத்துக்கோ…நீ எதாம் நெனப்பேன்னு சொல்லாம இருப்பா…”

“ஆமா மக்கா..அவா ரெண்டு மூணு தடவ சொன்னா கேட்டியா..”

“அதாம்ல சொல்லுகேன்…அடிச்சு கெளப்பு டே..நம்ம ஃபரூக்குக்கு இப்ப நாலு பயக்க தெரியும்லா…சவத்துப்பய இன்னும் ஒண்ணு வேணுன்னு நிக்கான்…”

“அது செரி..நமக்கு முதுகெலும்பு அத்துரும்டே…பாப்பம்..”

அடுத்த ஒரு வாரத்திற்கு சரவணன் தினசரி செயல்களைக் கொஞ்சம் மாற்றிப் பார்த்தான். காலையில் கொஞ்சம் பேட்மிண்டன், பின் ஜெயமோகன் வலைத்தளம்…அலுவலகத்திற்கும் செல்ல ஆரம்பித்தான்..முழுதாக கவனம் செலுத்தி வேலை செய்ய முடியாவிட்டாலும் முடிந்த அளவு சமாளித்தான். மாலையில் தீவிர வாசிப்பு…முக்கியமாக, அதுவரை குறிப்பெடுத்து வைத்திருந்த யோசனைகளை எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்தான். ஒரு வாரத்தில் அவனது முதல் சிறுகதை ‘தனிமையிருள்’ தயார் ஆனது. நண்பர்களின் வாசிப்புக் குழுமத்தில் அதைப் பற்றி ஒரு கலந்துரையாடலும் நடந்தது. வாழ்க்கையில் ஓரளவிற்குப் பிடி கிடைத்து விட்டதாக உணர்ந்தான்.

“பத்மா, உன்ட்ட ஒண்ணு சொல்லணும்…”

“என்னத்தான்…சொல்லுங்கோ..”

“இல்ல..அது…”

“அட…இதெல்லாம் ஓவருத்தான்..உங்களுக்கு வெக்கம்லாம் செட் ஆகல..”

“ம்ம்ம்..அது…அமுதா இப்பல்லாம் ரொம்ப நேரம் தனியா வெளயாடுகால்லா…”

பத்மா சில நொடிகள் எதுவும் பேசவில்லை. அப்படியே சென்று சுவரில் இருந்த பிள்ளையார் போட்டோவின் முன்னால் நின்று கண்களை மூடிக் கொண்டாள்.

தனிவழி – பாவண்ணன் சிறுகதை

”நாகராஜன் ரொம்ப திமுரு காட்டிகினு திரியறான்டா” என்று பொருமினான் சிவலிங்கம். “புள்ளு எந்தப் பக்கம் பறந்து வந்தாலும் புடிச்சி இன்னைக்கு அவன் கொட்டத்த அடக்கணும்”

எங்களை எச்சரித்துவிட்டு உத்திக்குழிக்கு நேராக இருபதடி தொலைவில் உறுதியாக நின்றான் சிவலிங்கம். கிரிதரன் இலுப்பை மரத்தின் திசையில் நகர்ந்து சென்றான். தண்டபானி கள்ளிச்செடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான். பெருமாள் கோவில் மதிலுக்கு அருகில் போய் நின்றான் வடிவேலு. நான் அரசமரத்தைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த மண்மேடைக்கு அருகில் சென்று நின்றுகொண்டேன்.

எல்லோருடைய கண்களும் நாகராஜனின் மீதே பதிந்திருந்தன. தன்னைச்சுற்றி வியூகம் வகுத்து நின்றிருக்கும் அனைவரையும் ஒருமுறை கண்ணால் அளந்துவிட்டு உத்திக்குழியைப் பார்த்துக் குனிந்தான் அவன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கிட்டிக்கோலால் தெண்டி அடித்த கிட்டிப்புள் ஒரு சிட்டுக்குருவி போல காற்றில் விர்ரென பறந்தது.

அது தாவியெழுந்த கோணத்தை வைத்தே என்னை நோக்கித்தான் வருகிறது என்பது புரிந்துவிட்டது. உடனே எல்லோரும் “ஆனந்தா விடாதே ஆனந்தா விடாதே” என்று கூவி எச்சரிக்கத் தொடங்கினார்கள். பதற்றத்தில் கைகால்களெல்லாம் எனக்குப் பரபரத்தன. கண்களை அதன் மீதே பதித்திருந்தேன். ஒரு பறவைபோலத் தாவி அதைப் பிடித்துவிட மாட்டோமா என்று துடித்தேன். அது நெருங்கிவரும் நேரத்தைக் கணித்து சரியான தருணத்தில் கையை உயர்த்தியபடி என்னால் முடிந்த அளவுக்கு உயரமாக எகிறினேன். பிடிக்கு அகப்படாமல் என் கைவிரலுக்கு மேல் இரண்டடி உயரத்தில் பறந்துபோன கிட்டிப்புள் அரசமரத்தில் பட்டென்று மோதித் தெறித்தது. , முதலில் கீழே இருந்த பிள்ளையார் மீது பட்டு உருண்டு சென்று இறுதியாக ஆடுபுலி ஆட்டத்தில் மூழ்கியிருந்த தாடிக்காரரின் தொடையில் முட்டி நின்றது. அவர் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்து என்னை முறைத்துவிட்டு “போய் வேற பக்கத்துல ஆடுங்கடா” என்றபடி கிட்டிப்புள்ளை எடுத்து வீசினார்.

எல்லோரும் அடித்த தொலைவைவிட நாகராஜன் அடித்த தொலைவு அதிகமானது என்பதால் அவனே வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்பட்டான். நாங்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவராக அரசமரத்தின் கல்மேடையிலிருந்து உத்திக்குழி வரைக்கும் அவனை முதுகில் சுமந்துசென்று இறக்கினோம். “கிட்டிப்புள் ஆட்டத்துல நம்மள அடிச்சிக்க ஆளே கெடயாது தெரியுமா?” என்று கொக்கரித்தான் நாகராஜன்.

அடுத்த ஆட்டத்தைத் தொடர எங்களுக்கு ஆர்வம் இல்லாததால் மனம் சோர்ந்து கல்மேடைக்கு வந்து அமர்ந்தோம். நாகராஜன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மேடையின் மற்றொரு மூலையில் கூடை நிறைய அவித்த கடலைக்கூடையோடு அமர்ந்திருந்த ஆயாவிடம் நாலணாவுக்கு கடலையை வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தான்.

அந்தக் கல்மேடை மேட்டுத்தெருவும் ஸ்டேஷன் தெருவும் அக்ரஹாரமும் சந்திக்கும் புள்ளியில் இருந்தது. கோலியனூர் சந்தைக்கும் சிறுவந்தாட்டுக்கும் போகக்கூடிய மாட்டுவண்டிகள் அந்த இடத்தில்தான் சற்றே நின்று இளைப்பாறும். புறப்படும்போது வண்டிக்காரர்கள் இரண்டடி உயர கல்கூடாரத்துக்குள் அரையடி உயரத்தில் கருகருவென்றிருக்கும் பிள்ளையாரைப் பார்த்து வணங்கியபடியே காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டுச் செல்வார்கள். கிழங்கோ கடலையோ விற்கவரும் ஆயாக்கள் நடந்து வரும் வழியில் பறித்துவந்த இரண்டு செம்பருத்திப்பூக்களையோ நந்தியாவட்டைப் பூக்களையோ பிள்ளையார் முன்னால் வைத்து ஒரு துண்டு கற்பூரத்தையும் ஏற்றிய பிறகே வியாபாரத்தைத் தொடங்குவது வழக்கம். கருங்கல் பதிக்கப்பட்டதால் கோடையில் கூட அந்த இடம் குளுமையாக இருந்தது. அதனால் எப்போதுமே நான்கு பேர் படுத்துக்கொண்டும் மூன்று பேர் வேர்ப்புடைப்பில் சாய்ந்துகொண்டும் வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள்.

மேடையின் விளிம்பில் அமர்ந்து கால்களைத் தொங்கப்போட்டபடி கடலையைத் தின்றுகொண்டே மனம்போன போக்கில் சினிமாக்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சிவலிங்கம் இரண்டு நாட்கள் முன்பு பார்த்த ராமு சினிமாவின் கதையை ஒவ்வொரு காட்சியாக விவரித்தான். ஒவ்வொரு காட்சியும் நம் கண் முன்னால் நிகழ்வதுபோல கதைசொல்வதில் பெரிய கெட்டிக்காரன் அவன். வாய் பேச முடியாத ஒரு சிறுவனாக அவனே எங்களுக்கு முன்னால் நடித்துக் காட்டினான். அவன் பாடிக் காட்டிய துயரம் தோய்ந்த ’பச்சை மரம் ஒன்று’ பாடலின் வரிகளின் ஆழத்தில் நாங்கள் மூழ்கிவிட்டோம். எங்களுக்கு அருகில் ஒருவர் ஈஸ்வரா என்றபடி கையை ஊன்றி எம்பி மேடைமீது அமர்ந்த ஓசையைக் கேட்ட பிறகே எங்கள் கவனம் திசைதிரும்பியது. சிவலிங்கம் சொன்ன கதையின் சுவாரசியத்தில் அவர் எந்தத் திசையிலிருந்து வந்தார், எப்படி வந்தார் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை.

இரண்டு தோள்களிலிருந்தும் இரண்டு பைகளை இறக்கி வைத்துவிட்டு மூச்சு வாங்கினார் அவர். ஒரு கை அகலத்துக்கு பட்டையாக இருந்த அந்தப் பைகளின் பட்டிகள் விசித்திரமாக இருந்தன. ஒன்று பெரிய பை. மற்றொன்று சின்ன பை. அழுக்கான வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். பரட்டைத்தலை. தாடி வைத்திருந்தார். வெயிலில் முகத்திலும் கழுத்திலும் ஊறி வழிந்த வேர்வையை கழுத்திலிருந்த துண்டை எடுத்து துடைத்துக்கொண்டார்.

“என்ன பாட்டு சொன்ன?” என்று கேட்டார் அவர்.

அப்படி ஒரு கேள்வியோடு எங்கள் உரையாடலுக்கு நடுவில் அவர் குறுக்கிடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அவரைப் பார்த்தால் சினிமா பார்க்கிற மனிதரைப்போலவே தெரியவில்லை. எங்கோ காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்து வந்து சந்தையில் விற்றுவிட்டுத் திரும்பும் கிராமத்தானைப்போலத்தான் இருந்தது.

பதிலை எதிர்பார்த்து அவர் எங்கள் முகத்தைப் பார்த்தபடியே இருந்ததால் சிவலிங்கம் “பச்சை மரம் ஒன்று இச்சைக்கிளி “ என்று முதல் வரியைப் பாடினான்.

”சுசிலாம்மாவும் சீனிவாசும் பாடற பாட்டா?”

“ஆமா”

“சீனிவாசுக்கு ரொம்ப இளகின குரல். சோகத்துக்கு பொருத்தமான குரல் உள்ளவரு. சோகப்பாட்டுன்னாவே சீனிவாசத்தான் போடுவாங்க”

அவருக்கு ஏதாவது தகுந்த பதிலைச் சொல்லவேண்டும் என்று பரபரத்தான் சிவலிங்கம். எனினும் சொல்லெழாவதனாக தவித்தபடி அவரையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்தான். எதிர்பாராத கணத்தில் “சந்தோஷமா ஆடிப் பாடற பாட்டு கூட அவர் பாடியிருக்காரே” என்றேன் நான்.

“ஆமா. அதுவும் பாடியிருக்கார். ஆனா அவருக்குன்னு ஒரு தனித்துவம் இருக்குதில்ல, அது சோகப்பாட்டுதான்.”

சட்டென்று என் வேகம் அடங்கிவிட்டது. அவர் என்னை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட விதம் என்னை ஊமையாக்கிவிட்டது. தொடர்ந்து என்ன பேச என்று தெரியவில்லை.

“பாட்டுல கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயினு ரெண்டு இருக்குது. கீழ் ஸ்தாயி சோகத்துக்கு பொருத்தமா இருக்கும். சீனிவாசு கீழ் ஸ்தாயிலயே இருக்கறவர். அவரால அத ரொம்ப சுலபமா பாடமுடியும். மேல் ஸ்தாயில இருக்கற ஒருத்தர் கீழ் ஸ்தாயிக்கு மெனக்கிட்டு எறங்கிவந்து பாடனாதான் அவுங்களுக்கு சோகப்பாட்டு வரும்”

அவர் என் தோள்மீது கைவைத்து அருகில் இழுத்துக்கொண்டார்.

“நீ மயக்கமா கலக்கமா கேட்டிருக்கியா? அப்படியே மனச உருக்கறமாதிரி இருக்குதில்ல? அது சோகப்பாட்டுதான?”

“ஆமா”

”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், இந்த மன்றத்தில் ஓடி வரும், யார் சிரித்தால் என்ன எல்லாமே அவர் பாடனதுதான?”

“ஆமா”

“அப்படி ஒரு நூறு பாட்டு இருக்கும். பெரிய சோகக்களஞ்சியம்.”

அவருடைய புன்னகையில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. இவரிடமா வம்பிழுக்க நினைத்தோம் என்று தோன்றியது. அவர் என்னிடம் “உன் பேரென்ன?” என்று கேட்டார்.

“ஆனந்தன்”

அவர் திரும்பி மற்றவர்களைப் பார்த்தார். நான் அவர்களுடைய பெயர்களை ஒவ்வொருவராகச் சொன்னேன்.

“முழுப்பரீட்ச லீவுல இங்கதான் ஆட்டமா?”

நாங்கள் கூச்சத்தோடு ஆமாம் என்று தலையசைத்தோம்.

“அந்த பச்சைமரம் ஒன்று பாட்ட ஒருதரம் நீங்க பாடறீங்களா?” என்று கேட்டேன்.

“ஓ. அதுக்கென்ன? பாடறனே” என்று சிரித்தார். “ஆனா நான் ஒரு பாட்டு பாடனா, நீ ஒரு பாட்டு பாடணும். அந்த ஒப்பந்தத்துக்கு சம்மதம்னா நான் பாடறேன். சரியா?”

நானே வலையை விரித்து நானே மாட்டிக்கொண்டேனே என்று தோன்றியதில் நாக்கைக் கடித்துக்கொண்டேன். நண்பர்கள் எல்லோரும் என்னைப் பார்த்து “ம்னு சொல்லுடா. ம்னு சொல்லுடா” என்று தூண்டினார்கள். சிவலிங்கம் சற்று சத்தமாகவே ”பள்ளிக்கூடத்துல பாட்டுப்போட்டிக்கு பாடனியே தமிழுக்கும் அமுதென்று பேர். அத பாடுடா” என்று சொல்லிவிட்டு முதுகைத் தட்டினான். நான் வேறு வழியில்லாமல் சரியென்று தலையசைத்தேன். “அப்ப நானும் தயார்” என்று அவர் சிரித்தார்.

திரும்பி தனக்கு அருகிலிருந்த பெரிய பையைப் பிரித்தார். அதிலிருந்து என்ன எடுக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தோம். வெள்ளைவேட்டியால் மூடிக் கட்டிய ஒரு மூட்டை அந்தப் பைக்குள் இருந்தது. அந்த மூட்டையையும் பிரித்து அதிலிருந்து அவர் ஆர்மோனியப்பெட்டியை எடுத்தார். பளபளவென அது கரிய நிறத்தில் மின்னியது. அதை எடுத்து தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு எங்களைப் பார்த்து புன்னகைத்தபடி துடைத்தார். மெதுவாக அவர் துருத்தியை அசைத்தபடி வெண்மையும் கருமையும் கலந்த அதன் வெவ்வேறு மரக்கட்டைகளில் விரல்களை அழுத்திய போது இசை எழுந்தது. ஆறேழு அசைவுகளிலேயே அவர் பச்சைமரம் ஒன்று பாட்டுக்குப் பொருத்தமான தாளத்தைக் கொண்டுவந்துவிட்டார். அவர் பச்சை மரம் ஒன்று பாடத் தொடங்கியபோது எங்கிருந்தோ ஒரு வானொலிப்பெட்டி பாடுவதுபோலவே தோன்றியது. அந்த அளவுக்கு வரிகளுக்குப் பொருத்தமான குரல். எங்களால் அமர்ந்திருக்க முடியவில்லை. தன்னிச்சையாக எழுந்து அவரைச் சூழ்ந்துகொண்டு நின்றோம்.

பாட்டுச்சத்தம் கேட்டதுமே கல்மேடையில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களும் நிழலுக்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்களும் உறங்கிக்கொண்டிருந்தவர்களும் எழுந்து வந்து எங்களைச் சூழ்ந்துவிட்டார்கள். அவர் பாடி முடித்ததுமே சந்தோஷத்தில் எல்லோரும் கைதட்டினார்கள்.

“இப்ப நீ. இப்ப நீ” என்று ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன் அவர் என் பக்கமாக விரலை நீட்டி புன்னகைத்தார். நான் மெளனமாக தலையைக் குனிந்துகொண்டு அவ்வரிகளை நினைவுகூர்ந்தேன். பிறகு நாணத்துடன் அவரைப் பார்த்து தயார் என்பதுபோல தலையசைத்துவிட்டு குனிந்துகொண்டேன். அவருடைய விரல்கள் உடனே ஆர்மோனியத்தில் கட்டைகளின் மீது படர்ந்து அழுத்தம் கொடுத்து விடுவித்தன. ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று நான் தொடங்கினேன். பாடலை முடிக்கும் வரை தலையை உயர்த்தவே இல்லை. இறுதிச் சொல்லுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். அவர் குதூகலத்துடன் இரு கைகளையும் மார்பளவுக்கு உயர்த்தி வேகவேகமாகத் தட்டினார். அவரைத் தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“ஏற்ற இறக்கம்லாம் ரொம்ப நல்லா இருக்குது ஆனந்தா. உனக்கு ரெண்டு ஸ்தாயியும் வருது. அது பெரிய வரம். உண்மையிலேயே நீ பெரிய பாட்டுக்காரன்” என்று என்னை அருகில் வரச்சொல்லி தட்டிக் கொடுத்தார்.

ஒருவர் ஆயாவிடமிருந்து ஒரு மந்தாரை இலை நிறைய கடலையை வாங்கி மடித்து எடுத்துவந்து பாட்டுக்காரர் முன்னால் வைத்து “சாப்புடுங்க சாமி” என்றார். பாட்டுக்காரர் அதை எங்கள் பக்கமாக இழுத்துவைத்து “ம், எடுத்துக்குங்க” என்றார். மேலும் தன்னுடைய தோள் பையைத் திறந்து அதிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து “இந்தாங்க, இதயும் எடுத்துக்குங்க” என்றார்.

எந்த வகுப்பிலிருந்து எந்த வகுப்புக்குச் செல்கிறோம், எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், எந்தப் பாடம் மிகவும் பிடிக்கும், எங்களுக்கு விருப்பமான பாடல்கள் எவைஎவை என்றெல்லாம் அவர் கேட்கக்கேட்க நாங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருந்தோம்.

திடீரென அவர் “இங்க இவ்வளவு பெரிய இடம் இருக்குதே, நீங்க இங்க தாராளமா விளையாடலாமே. ஏன் சும்மா இருக்கீங்க?” என்று கேட்டார்.

“நீங்க வரவரைக்கும் விளையாடிட்டுதான் இருந்தோம்.”

“அப்படியா, என்ன விளையாட்டு?”

“கிட்டிப்புள்ளு”

“ஓ, அப்ப யாரு ஜெயிச்சி குதிரை ஏறனது?”

“அவன்தான்” நான் நாகராஜனைச் சுட்டிக் காட்டினேன்.

“சரி சரி. இன்னைக்கு நாம புதுசா பந்து விளையாடாமா?”

நாங்கள் மெளனமாகி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். எங்களிடம் பந்து இல்லை என்பதுதான் காரணம். “ஏன் முழிக்கறீங்க?” என்று கேட்டார் அவர்.

“எங்ககிட்ட பந்து இல்லயே”

அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் “அது ஒரு பிரச்சினையா? பந்த நாம உண்டாக்குவோம் ஆனந்தா” என்றார். உடனே மேடையிலிருந்து கீழே குதித்து உதிர்ந்திருந்த இலைகளையெல்லாம் சேகரித்தார். பக்கத்தில் வேலியோரமாக முளைத்திருந்த செடிகளிலிருந்தும் இலைகளைப் பறித்தார். தரையில் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக முளைத்திருந்த புற்களையெல்லாம் பிடுங்கியெடுத்தார். பிறகு பையில் வைத்திருந்த ஒரு துண்டில் அவையனைத்தையும் குவித்து அழுத்தி அழுத்திச் சுருட்டி உருட்டி முடிச்சுபோட்டு ஒரு பந்துபோல மாற்றிவிட்டார். ”நல்லா இருக்குதா?” என்று எங்களைப் பார்த்து கேட்டுவிட்டு சிரித்தார்.

நான் அதை வாங்கி உயரமாக தூக்கிப் போட்டுப் பிடித்தேன். அசலாக பந்துபோலவே இருந்தது. நாகராஜனும் வடிவேலும் வாங்கி ஒருவருக்கொருவர் தூக்கிப் போட்டு பிடித்தார்கள்.

“மூனு பேரு இந்த பக்கம் நில்லுங்க, மூனு பேரு அந்தப் பக்கம் நில்லுங்க. நான் நடுவுல. என்னால புடிக்க முடியாத அளவுக்கு ஒரு பக்கத்துலேந்து இன்னொரு பக்கத்துக்கு பந்த தூக்கி போடணும். நான் புடிச்சிட்டா யாரு போட்டாங்களோ, அவுங்க இந்த இடத்துக்கு வந்துடணும். சரியா?”

“இது குரங்கு பந்து ஆட்டம். எங்களுக்கு தெரியுமே”

“அப்பறமென்ன, ஆடுங்க”

மறுகணமே அவர் நடுவில் நின்றுகொள்ள, நானும் சிவலிங்கமும் நாகராஜனும் ஒருபக்கம் நின்றோம். தண்டபானியும் கிரிதரனும் வடிவேலும் மற்றொரு பக்கம் நின்றார்கள்.

பந்து மாறிமாறிப் பறந்தபடி இருந்தது. பாட்டுக்காரர் தாவித்தாவி முயற்சி செய்தார். ஆனால் அவர் ஒரு பந்தைக்கூட தடுத்துப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவரைக் கடந்து பறந்துபோனது பந்து. அவர் உண்மையிலேயே குரங்கின் உடல்மொழியில் தாவித்தாவி ஏமாந்தார். பந்து தப்பிப் போகும் ஒவ்வொரு முறையும் ஐயையோ என்று கைகளை உதறியபடி தவித்துச் சிரித்தார். அதைப் பார்க்கப்பார்க்க எங்கள் வேகம் கூடியது. கடைசி வரைக்கும் அவர் ஒருமுறை கூட பந்தை கைப்பற்றவே இல்லை. நாங்கள் வெற்றியில் துள்ளிக் குதித்தோம்.

மேடையில் அமர்ந்திருந்தவர்கள் எங்கள் திசையில் கைகாட்டிப் பேசிக்கொள்வதைக் கேட்டேன்.

“எந்த ஊரு இந்த ஆளு? கிறுக்கு மாதிரி இங்க வந்து இந்த புள்ளைங்களோட ஆடிகினிருக்கான்?”

“யாரோ நாடோடி. புள்ள இல்லாதவன்போல. புள்ளைங்கள பாத்ததும் ஏதோ வேகத்துலயும் பாசத்துலயும் ஆடறான்.”

“உடுங்கய்யா, நம்மாலதான் முடியல. யாரோ ஒருத்தன் செய்யறான். சந்தோஷமா செஞ்சிக்கடா சாமினு உட்டுட்டு போவாம, இதயெல்லாமா ஒரு பேச்சுனு பேசுவாங்க?”

எதிர்த்திசையிலிருந்து தண்டபானி பந்து வீசியபோது அது எங்கள் பிடிக்கும் அகப்படாமல் பறந்து சென்று கல்மேடையில் அவர்கள் முன்னால் சென்று விழுந்தது.

“கண்ணுமண்ணு தெரியாம என்னடா ஆட்டம் வேண்டிக் கெடக்குது? அடக்கம் ஒடுக்கமா ஆடுங்க. இல்லைன்னா வால ஒட்ட நறுக்கிடுவன்” என்று எச்சரித்துக்கொண்டே ஒருவர் தன்னிடமிருந்த பந்தை வீசினார்.

அவர் வீசிய வேகத்தில் துண்டின் முடிச்சு தளர்ந்து அவிழ்ந்து இலைகள் விழுந்து சிதறின. காற்றுபோன பந்துபோல நாங்களும் தளர்ந்துவிட்டோம்.

“அடடா, பிரிஞ்சிடுச்சே” என்றபடி அதை எடுத்துக்கொண்டு பாட்டுக்காரருக்கு முன்னால் போய் நின்றேன். எனக்கு மூச்சு வாங்கியது. அவருக்கும் மூச்சு வாங்கியது. நெற்றியிலும் கழுத்திலும் வேர்வை கோடாக அரும்பியது.

”இன்னைக்கு இது போதும். நாளைக்கு பிஞ்சி போகாத அளவுக்கு கெட்டியா பந்து செஞ்சி வைக்கறேன். அதுக்கப்பறம் விளையாடலாம். சரியா?” என்றபடி சாலையோரமாகச் சென்று துண்டை உதறினார். உள்ளேயிருந்த இலைகள் தரையில் சிதறி விழுந்தன.

மறுபடியும் அனைவரும் மேடைக்குச் சென்று அமர்ந்து பேசத் தொடங்கினோம்.

வெப்பம் தாளாமல் அவர் உடலிலிருந்து வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. “புழுக்கத்துல வேர்த்துகினே இருக்குது. எங்கனா ஏரியில கொளத்துல எருமைக்கன்னுக்குட்டி மாதிரி கெடந்தா நல்லா இருக்கும்னு தோணுது” என்றார்.

“இங்க பக்கத்துலதான் ஏரி இருக்குது. அதுல குளிக்கலாம்” என்றான் சிவலிங்கம்.

“ரொம்ப தூரமா?”

“அதெல்லாம் இல்ல. அதோ அங்க பனைமரங்கள் வரிசையா தெரியுது பாருங்க. அதுதான் ஏரிக்கரை”

நான் கைகாட்டிய இடத்தை அவர் அப்போதே திரும்பிப் பார்த்துவிட்டார்.

“இப்ப கோடை காலமாச்சே. தண்ணி இருக்குதா?”

“எங்க ஊர் ஏரியில எல்லா காலத்துலயும் தண்ணி இருக்கும்”

“அப்ப கெளம்புங்க போவலாம்” அவர் சட்டென்று ஆர்மோனியத்தைக் கட்டி பைக்குள் வைத்தார். நான் அந்தப் பையை கையை நீட்டி வாங்கி என் கழுத்தில் முன்பக்கமாக தொங்கும்படியாக மாட்டிக்கொண்டேன். சிவலிங்கம் இரண்டாவது பையை எடுத்துக்கொண்டான்.

பாட்டுக்காரர் முன்னால் செல்ல, நாங்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.

“ஆளு பெரிய மாயக்காரனா இருப்பான்போல. ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு புள்ளைங்களைலாம் வாரி தூக்கி தோள்மேல வச்சிகிட்டான்.”

“எந்த ஊருகாரன்னு கூட தெரியல. இங்க வந்ததுமே இங்கயே நாலஞ்சி பரம்பரயா வாழற ஆளுமாதிரி நடந்துக்கறான்.”

மேடையில் அமர்ந்தவர்கள் தமக்குள் எதைஎதையோ பேசிக்கொண்டார்கள்.

ஏரி கடல்போல விரிந்திருந்தது. காற்றில் படபடத்து நெளியும் பட்டாடைபோல சிற்றலைகள் அசைந்தபடி இருந்தன. கரையை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஏராளமான புதர்கள். ”ஐயோ, இவ்வளவு தண்ணியா? இந்த வெயில் காலத்துலயும் இந்த மாதிரி தண்ணிய பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்குது” என்றார் பாட்டுக்காரர்.

கரைக்குச் சென்றதும் எல்லோரும் ஆடைகளைக் களைந்தார்கள். பாட்டுக்காரரின் பைகள் இறக்கிவைக்கப்பட்டன. எல்லோரும் வேகவேகமாக ஆடைகளைக் களைந்த சமயத்தில் நான் அமைதியாக நின்றிருந்தேன்.

“ஏன் தம்பி, நீ குளிக்க வரலையா?” என்று கேட்டார் பாட்டுக்காரர்.

“எனக்கு நீச்சல் தெரியாது.”

“ஓ. அப்ப பாட்டுதான் தெரியும். நீச்சல் தெரியாதா?”

“நான் இந்த துணிமணிங்க, பொட்டி எல்லாத்தயும் பாத்துகிட்டு கரையிலயே இருக்கறேன். நீங்க எல்லாரும் சீக்கிரமா குளிச்சிட்டு சீக்கிரமா வாங்க”

அவர்கள் ஒவ்வொருவராக ஏரிக்குள் தாவினார்கள். பாட்டுக்காரர் மல்லாந்து படுத்துக்கொண்டு கைகளை விரித்து நீந்தியபடி வட்டமடித்தார். அதைப் பார்த்ததும் சிவலிங்கமும் மற்றவர்களும் அவரைப் போலவே நீந்திக்கொண்டு அவரோடு வட்டமடித்தார்கள்.

நாகராஜன் மட்டும் தனியாகக் கரைக்கு நீந்திவந்து ஆலமரத்தின் மீதேறி தண்ணீர்ப்பரப்பின் மீது தாழ்வாக வளைந்து சென்ற கிளையின் மீது நடந்து சென்று அங்கிருந்து செங்குத்தாக தண்ணீருக்குள் குதித்தான். உடனே ஊற்றென தண்ணீர் மேலே பொங்கித் தணிந்தது. பாட்டுக்காரர் கைதட்டிச் சிரித்தார். நாகராஜன் தண்ணீருக்குள்ளேயே நீந்தி அவருக்கு அருகில் சென்று நின்றான்.

சிவலிங்கமும் கிரிதரனும் தண்டபானியும் வடிவேலும் ஒவ்வொருவராக கரைக்கு வந்து நாகராஜனின் வழியைப் பின்பற்றி ஆலமரத்தில் ஏறி கிளையில் நடந்து சென்று ஒவ்வொருவராக எம்பிக் குதித்தார்கள்.

சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் தண்ணீருக்குள்ளேயே பிடிக்கிற ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதுபோலத் தெரிந்தது. ஒவ்வொருவராக தண்ணீருக்குள் மூழ்கி மறைய ஒருவர் மட்டும் ஆளைத் தேடி நான்கு திசைகளிலும் அலைந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் நீச்சலைக் கற்றுக்கொள்ளாமல் போனோமே என்று மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதையெல்லாம் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று தொடக்கத்திலேயே தடுத்துவிட்ட அம்மாவின் மீது கோபமாக வந்தது.

தண்ணீருக்குள் யாரோ ஒருவர் அகப்பட்டுவிட்டார். ஓவென்ற சத்தத்திலிருந்து உணரமுடிந்தது. பாட்டுக்காரர் சின்னப் பையனைப்போல எல்லோருக்கும் நடுவில் நீந்திக்கொண்டிருந்தார்.

கண்கள் சிவக்கச்சிவக்க நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒவ்வொருவராக கரைக்கு வந்து சட்டையாலேயே ஈரத்தைத் துடைத்துக்கொண்டு, பிறகு அதையே உதறிவிட்டு அணிந்துகொண்டார்கள். நான் ஆர்மோனியப் பெட்டியை வைத்திருக்கும் பையை கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.

ஏரிக்கரையில் இறங்கும் நேரத்தில் சிவலிங்கம் என்னைப் பார்த்து “டேய், இந்த ஆர்மோனியப் பொட்டிய கழுத்துல தொங்க உட்டுகினு நடக்கும்போது எப்பிடி இருக்குது தெரிமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

“எப்பிடி இருக்குது?” நான் ஆச்சரியத்தோடு அவன் பக்கம் திரும்பினேன்.

“நாடோடி படத்துல இந்த மாதிரிதான் ஒரு பொட்டிய கழுத்துல மாட்டிகினு எம்ஜியாரு பாட்டு பாடுவாரு”

“டேய்..” ஆட்காட்டி விரலை அவனை நோக்கி நாணத்துடன் அசைத்தேன்.

“நாடு, நாடு, அதை நாடு, அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு?”

“சிவலிங்கம், இப்ப நீ அடிவாங்க போற?”

“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு, மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

நான் அவனைப் பார்க்கவே இல்லை. அவன் பாடுவது எதுவும் என் காதில் விழவே இல்லை என்பதுபோல எங்கோ வேறு திசையில் பார்த்தபடி நடந்தேன்.

பாட்டுக்காரர் சிவலிங்கத்தின் தோளைத் தொட்டு “நீயும் சின்ன பையன்தான? கிண்டல் போதும் விடு. சங்கீதம் கத்துக்கறதுக்கு முன்னால நாம கத்துக்க வேண்டிய விஷயம் இங்கிதம். தெரியுதா?” என்றார்.

அக்கணமே அவன் ஏற்றுக்கொள்வதுபோன்ற புன்னகையுடன் தலையசைத்து நிறுத்திவிட்டான். பிறகு நாணத்துடன் தலைகுனிந்தான்.

கல்மேடைக்கு வந்ததும் ஆர்மோனியப்பெட்டியை இறக்கி வைத்தேன். அவர் அதை துணியில் வைத்துச் சுருட்டி தன் பைக்குள் வைத்துக்கொண்டார்.

“என்னடா வானரங்களா, ஆட்டத்துல யாருக்கும் பசிக்கலயா? வீடுன்னு ஒன்னு இருக்கறதயே மறந்துட்டிங்களா?”

கிழங்கு விற்கும் ஆயா குரல் கொடுத்த பிறகுதான் எங்களுக்கு வீட்டின் நினைவே வந்தது. உடனே மேடையிலிருந்து கீழே குதித்தோம்.

“சாய்ங்காலமா வெயில் அடங்கனதுமே வந்துருவேன், நீங்க இங்கயே இருப்பீங்களா?” என்று பாட்டுக்காரரிடம் கேட்டேன்.

“ஏன் ஆனந்தா, என்ன சங்கதி?”

“அடுத்த வருஷம் பாட்டுப்போட்டியில பாடறதுக்கு எனக்கு ஒரு நல்ல பாட்டு சொல்லிக் கொடுக்கறீங்களா?”

“ஒன்னு என்ன? ரெண்டாவே சொல்லிக் கொடுக்கறன். போய்வா ஆனந்தா”

அதைக் கேட்டதும் எனக்கு போட்டியில் அப்போதே வென்று பரிசைத் தட்டிக்கொண்டு வந்துவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

பாட்டுக்காரர் தானாகவே அருகில் நின்றிருந்த மற்றவர்களிடம் “உங்களுக்கும் கத்துக்கணுமா?” என்று கேட்டார். அவர்கள் உடனே ”ம்ஹூம்” என்று தலையசைத்தார்கள். “பாட்ட காதால கேக்கறதோட சரி. அதுக்கு மேல எந்த ஆசையும் இல்ல”

“ஏன்?”

“நமக்குலாம் ஃபுட் பால், பேஸ்கெட் பால், வாலி பால் மட்டும்தான். இறைக்க இறைக்க ஓடணும். குனியனும். நிமிரணும். மூச்ச இழுத்துக் கட்டி பாடறதுலாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று தோளைக் குலுக்கினார்கள்.

பாட்டுக்காரர் சிரித்துக்கொண்டார். செல்லமாக அவர்கள் முதுகில் தட்டினார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். நாகராஜனும் கிரிதரனும் அக்ரகாரத்தின் பக்கம் செல்ல வடிவேலுவும் தண்டபானியும் மேட்டுத்தெருவின் பக்கமாகச் சென்றார்கள். நானும் சிவலிங்கமும் ஸ்டேஷன் தெருவில் இறங்கி நடந்தோம்.

வீட்டுக்குச் சென்று திண்ணையில் உட்காரும்போதே வீட்டுக்குள்ளிருக்கும் அம்மாவை அழைத்து “காலையில மெட்ராஸ் ரயில் போவற நேரத்துக்கு போன ஆளு இப்பதாம்மா உள்ள வரான். எங்க போய் வரான்னு வந்து கேளும்மா. வேப்பூரானாட்டம் எங்கயோ சுத்தி அலஞ்சிட்டு வந்திருக்கான் பாரு” என்று சத்தமுடன் சொன்னாள் அக்கா.

அம்மா வெளியே வந்து “வெயில்ல சுத்தாத, வெயில்ல சுத்தாதனு ஒனக்கு எத்தன தரம்டா சொல்றது? கருத்து கருவாடுமாதிரி வந்து நிக்கற? எங்க போன?” என்றாள்.

“எங்கயும் போவலைம்மா. அங்கதான் அரசமரத்துங்கிட்ட பசங்களோட நெழல்லதான் ஆடிகினிருந்தன்.”

நான் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன். தட்டில் சோற்றைப் பார்த்ததுமே பசித்தீ கொழுந்துவிட்டெரிந்தது. நெத்திலி மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டு முடித்தேன்.

“அம்மா, இன்னும் கொஞ்சம் சோறு”

“மீன் குழம்புன்னா ஒன் கொடலு கூட ரெண்டடி நீண்டு போய்டுமே?”

அம்மா சிரித்துக்கொண்டே வந்து சோற்றை வைத்து குழம்பூற்றினாள். “தாராளமா ஊத்தும்மா” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். “கொஞ்சமாச்சிம் வெக்கம் இருக்குதா பாரு, ஒம் புள்ளைக்கு? என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல உட்டுருவான்” என்று திண்ணையிலிருந்தே பழித்தாள் அக்கா.

கைகழுவிக்கொண்டு திண்ணைக்கு வரும்போதே அம்மா என்னை மடக்கி பக்கத்தில் உட்காரவைத்தாள். “எங்கயும் போயிடாத ராசா? அரிசியும் உளுந்தும் நெறய வந்திருக்குது அரைக்கறதுக்கு. நீதான் அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசயா ஏந்திரம் சுத்தணும்” என்றாள்.

“ஏன் அக்காவுக்கு என்னாச்சி? நல்லா உலக்கை மாதிரிதான இருக்குது” நான் அவளைப் பார்த்தேன். திண்ணையில் குறுக்காக ஒரு உலக்கையை வைத்துவிட்டு அதன் மறுபக்கத்தில் அவள் பாயில் படுத்திருந்தாள்.

“அவளால ஒக்காந்து அரைக்கமுடியாதுடா தங்கம். அம்மா சொல்ற பேச்ச கேளுடா”

“சரி சரி, சுத்தறன். ரொம்ப கொஞ்சாத. ஆனா அஞ்சி மணிக்குலாம் என்ன விட்டுடணும். அங்க வெளயாடறதுக்கு பசங்க வந்து காத்திட்டிருப்பானுங்க”

சாக்கையும் செய்தித்தாட்களையும் விரித்து அதன் மீது எந்திரத்தையும் உருட்டிச் சென்று வைத்துவிட்டு அம்மா எனக்காகவே காத்திருந்தாள். நான் அக்காவைப் பார்த்து முணுமுணுத்தபடி எந்திரத்தின் அச்சைப் பிடித்து சுற்றத் தொடங்கினேன். அம்மா அரிசியை சீராக குழிக்குள் போட்டபடி இருந்தாள்.

எல்லாவற்றையும் மாவாக்கி, பைகளில் நிரப்பி ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் சென்று கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது. சாமிக்கண்ணுக் கவுண்டர் வீட்டைக் கடக்கும்போது குனிந்து அவர் வீட்டுக் கடிகாரத்தில் மணி பார்த்தேன். இரண்டு முள்களும் சேர்ந்து ஒரே குத்துக்கோடாக தெரிந்தது. மணி ஆறு.

கால்களில் ஒட்டியிருந்த மாவுப்புழுதியை எல்லாம் கழுவித் துடைத்துவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். நெருங்க நெருங்க ஆர்மோனியத்தை இசைக்கும் சத்தம் கேட்டது. நண்பர்கள் ஐந்து பேரும் அங்கே நிற்பதைப் பார்த்தேன். ஓட்டமாக ஓடி மேடை மீது ஏறி நின்றேன். ஆர்மோனியத்தின் மீது பாட்டுக்காரரின் விரல்கள் தன்னிச்சையாக படர்ந்தபடி இருக்க அவர் பிள்ளையாரையே பார்த்துக்கொண்டிருந்தார். பிள்ளையாரின் முன்னிலையில் ஓர் அகல்விளக்கு எரிந்தது. ’சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே’ என்று மனமுருகிப் பாடிக்கொண்டிருந்தார் அவர். நான் சிவலிங்கத்துக்கு அருகில் நின்று ”எத்தனாவது பாட்டு?” என்று சைகையால் கேட்டேன். “இதான் முதல் பாட்டு” என்று அவனும் சைகையாலேயே பதில் சொன்னான். நான் பாட்டின் இனிமையில் மூழ்கத் தொடங்கினேன். மேடையில் எங்கள் ஆறு பேரைத் தவிர கிழங்கு விற்கும் ஆயாவும் இன்னும் இரண்டு ஆண்களும் நின்றிருந்தனர். மேட்டுத் தெருவிலிருந்து இரண்டு கிழவர்கள் மெதுவாக நடந்து வந்து சேர்ந்துகொண்டார்கள்.

நான் பாட்டுக்காரரின் கண்களைப் பார்த்தேன். கனிவும் பக்தியும் கலந்த பார்வை. அவர் இந்த உலகத்திலேயே இல்லை. முதல் பாட்டு முடிந்ததுமே ’ஆனை முகத்தான், அரன் ஐந்து முகத்தான் மகன், ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்’ என அடுத்த பாட்டைத் தொடங்கிவிட்டார் அவர். அகல்விளக்கின் சுடரொளியில் பிள்ளையாரின் தந்தத்தின் மேட்டிலும் நெற்றியிலும் பளீரென மின்னுவதுபோல ஒரு கோடு படிந்திருந்தது.

தற்செயலாக என் பார்வை திரும்பிய சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து நந்தகுமாரை துணைக்கு அழைத்துக்கொண்டு ருக்மிணி மாமி வருவதைப் பார்த்தேன். அவர் கல்மேடையை நெருங்கி படிக்கட்டு வழியாக மேடையில் ஏறி பிள்ளையாருக்கு முன்னால் நின்று கைகுவித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு தற்செயலாகத் திரும்பும்போது என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினாள். புன்னகையுடன் நான் மாமிக்கு வணக்கம் சொன்னேன். நந்தகுமாரின் உதடுகளிடையில் ஒரு கோடுபோல புன்னகை பரவி விரிந்தது.

ஆர்மோனியத்தின் இசை மட்டுமே சில கணங்கள் நீடித்தன. மேல்கட்டைகளை மாறிமாறி அழுத்தியபடி அவர் வேறொரு பாட்டை யோசிப்பதுபோலத் தோன்றியது. அடுத்த கணமே அவர் ‘ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் லம்போதரம் விசாலாட்சம் வந்தேம் கணநாயகம்’ என்று தொடங்கினார். அந்த அமைதியான பொழுதில் அவர் குரல் எங்கெங்கும் பரவி நிறைந்தது. அக்ரகாரத் தெருவிலிருந்து இன்னும் சிலர் வந்து கூட்டத்தில் நின்றார்கள்.

பாட்டு முடிந்ததன் அடையாளமாக அவர் தன் தோளிலிருந்து ஆர்மோனியத்தைக் கழற்றி கீழே வைத்தார். ருக்மிணி மாமி தன் பூசைப் பையிலிருந்து ஒரு துண்டு கற்பூரத்தை எடுத்து பிள்ளையாருக்கு முன்னால் வைத்து ஏற்றினாள். தீபம் சுடர்விட்டு எரியும்போது அனைவரும் கண்மூடி வணங்கினார்கள். கற்பூரம் எரிந்து முடிந்ததும் ஒவ்வொருவராக பிள்ளையார் முன்னால் விழுந்து வணங்கிவிட்டு இறங்கி நடந்தார்கள். ”ரொம்ப நன்னா பாடறேள். கேக்கறச்சே பகவானே பக்கத்துல வந்து நின்னாப்புல தோணித்து. மனசு அப்படியே அடங்கி சாந்தமாய்டுத்து. தட்டாம இத நீங்க வாங்கிக்கணும்” என்றபடி ருக்மிணி மாமி தன் பையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து பாட்டுக்காரரிடம் கொடுத்தார். பாட்டுக்காரர் அதை புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டார். கிழங்குக்கார ஆயா, கூடையில் எஞ்சியிருந்த கிழங்குகளை ஒரு மந்தாரை இலையில் வைத்து எடுத்து வந்து பாட்டுக்காரரிடம் கொடுத்தாள். அவர் அதையும் வாங்கி வைத்துக்கொண்டார். எங்களைத் தவிர ஒவ்வொருவராக அனைவரும் அங்கிருந்து கலையத் தொடங்கினார்கள்.

இருள் கவியத் தொடங்கியது. யாரோ ஒருவர் கோவில் வாசலிலிருந்து இறங்கி வந்து பாட்டுக்காரரிடம் “அங்க கோவில் வாசலுக்கு வந்து பாடணுமாம். சொல்லி அனுப்பனா” என்றார். பாட்டுக்காரர் அவரை நிமிர்ந்து பார்த்து “நான் முடிச்சிட்டேனே. இதுக்கு மேல என்ன பாட்டு?” என்று கேட்டார். அவருக்குப் புரியவில்லை. சிறிது நேரம் தடுமாறினார். சரியாகச் சொல்லவில்லையோ என நினைத்து “அங்க வந்து பாடினா நன்னா இருக்கும்னு சொன்னா. ஏதாச்சிம் குடுக்கச் சொல்றேன். வாங்கோ” என்றார். பாட்டுக்காரர் பதிலே சொல்லவில்லை. அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே “போ போ” என்றபடி சைகை செய்தார். அவர் அதை நம்பமுடியாதவராக விலகிச் சென்றார்.

முற்றிலும் இருள் கவிந்துவிட்டது. ”பிள்ளைகளா, கெளம்புங்க. இருட்டிடுச்சி. இனிமே நீங்க இங்க இருக்கவேணாம்” என்று எங்களிடம் சொன்னார் பாட்டுக்காரர். பிறகு ஒரு பழம், ஒரு கிழங்கை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை எங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

”எங்க படுத்துக்குவிங்க நீங்க?” என்று பீதியுடன் அவரிடம் கேட்டேன்.

“இங்கதான். பிள்ளையாருக்கு பக்கத்துலயே” என்றபடி அவர் புன்னகைத்தார். என் தோள் மீது கை வைத்து “ஒனக்காக ஒரு பாட்டு யோசிச்சி வச்சிருக்கேன். நாளைக்கு சொல்லித் தரேன்” என்று சொன்னார். அதைக் கேட்டு எனக்குள் சற்றே ஏமாற்றம் படர்ந்தாலும் புன்னகையுடன் சரி என்று தலையசைத்துக்கொண்டேன்.

“இங்க தனியா படுக்க ஒங்களுக்கு பயமா இருக்காதா?”

“நான் தனியா இருப்பேன்னு யாரு சொன்னா? இந்த மரம், இந்த செடி, இந்த மேடை, இந்த பிள்ளையார் எல்லாருமே எனக்கு துணையா இருப்பாங்க. எனக்கு ஒன்னும் பயமில்லை. போய் வாங்க”

மறுநாள் காலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பழைய சோற்றைச் சாப்பிட்டுவிட்டு சட்டை மாற்றிக்கொண்டு கிளம்பினேன். “தொர எங்க கெளம்பிட்டாரு? எந்த ஆபீஸ்ல கையெழுத்து போடப் போறாரு?” என்று கேட்டாள் அக்கா. “நா எங்க போனா ஒனக்கென்ன? நான் ஒன் வழிக்கு வரலை. நீயும் என் வழிக்கு வராத” என்று கறாராகச் சொன்னேன். அவள் உடனே “அம்மா, இங்க வந்து பாரு. எங்கடா போறன்னு கேட்டா ஒனக்கென்னன்னு கேக்கறான்” என்று சத்தம் போட்டு அம்மாவை வரவழைத்துவிட்டாள். “என்னடா சத்தம்? ஒங்க ரெண்டு பேருக்குள்ள என்னடா ஒரே போராட்டமா இருக்குது” என்றபடி அம்மா வந்து நின்றாள்.

“எங்கடா கெளம்பிட்ட?” என்று அம்மா கேட்டாள்.

“வெளயாடறதுக்கும்மா. தண்டபானிலாம் வந்து அங்க காத்துகினிருப்பாங்க. நேத்து சாய்ங்காலமே போவலாம் போவலாம்ன்னு ஆறுமணிக்கு அனுப்பன. அதுக்குள்ள அவுங்கள்லாம் ஆடி முடிச்சிட்டாங்க தெரியுமா?” சொல்லிக்கொண்டு வரும்போதே எனக்கு தொண்டை அடைத்தது. அம்மா ஒன்றும் பேசமுடியாமல் திகைத்து நின்றாள்:.

“சரி சரி போடா. போய்ட்டு சாப்பாட்டு நேரத்துக்கு சரியா வந்துரு.”

நான் தலையசைத்துவிட்டு ஓரக்கண்ணால் அக்காவுக்கு அழகு காட்டிவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். தொலைவிலிருந்து பார்க்கும்போதே பாட்டுக்காரரும் மற்றவர்களும் சேர்ந்திருக்கும் காட்சி தெரிந்தது. நான் வேகமாகச் சென்று சிவலிங்கத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன்.

“இன்னைக்கு காலையிலயே அவர் ஏரியில குளிச்சாராம்டா. இந்தக் கரையிலேந்து அந்தக் கரை வரைக்கும் போய் வந்தாராம்” சிவலிங்கம் ஆச்சரியத்தைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் சொன்னான். நான் “அப்படியா?” என்று கேட்டபடி பாட்டுக்காரரை நோக்கித் திரும்பினேன். “தம் கட்டி நீச்சலடிச்சிகினே போய்ட்டேன். நான் பார்க்காத ஏரியா ஆறா?” என்றார் அவர்.

“அப்ப மத்யானம் குளிக்க முடியாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் சிவலிங்கம்.

“யாரு சொன்னா? ஏரியில காலையில குளிச்சவங்க மத்தியானம் குளிக்கக்கூடாதுனு சட்டம் ஏதாச்சிம் இருக்குதா என்ன? நாம எல்லாருமே போய் மத்யானம் குளிக்கறோம். சரிதானா?”

ஏ என்று மகிழ்ச்சியில் எல்லோரும் சத்தமிட்டோம். அவர் தன் பையிலிருந்து புதிதாக அவர் செய்து வைத்திருந்த பந்து உருளையை எடுத்து வெளியே வைத்தார். உருண்டையாக அது அழகாக பந்து போலவே இருந்தது.

“சரி, இப்ப பந்து விளையாடலாமா, ஆனந்தனுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கலாமா?”

நான் உடனே “பாட்டு பாட்டு” என்றேன். மற்றவர்கள் “பந்து பந்து “ என்றார்கள். அவர் சிரித்துக்கொண்டார். “சரி, ஒரு சின்ன பாட்டுதான். அவன் கத்துகிடட்டும். அப்பறமா ஆடலாம்” என்றபடி என்னைப் பார்த்தார்.

நாங்கள் அவர் முன்னால் நெருங்கி உட்கார்ந்தோம். அவர் “தீராத விளையாட்டு பிள்ளை’ என்று தொடங்கினார். அவர் ஒவ்வொரு சரணமாகப் பாடி முடித்ததும் நான் அதைத் திருப்பிப் பாடினேன். மிக எளிய சொற்கள். இரண்டு முறை மீண்டும் மீண்டும் பாடியதுமே மனத்தில் பதிந்துவிட்டது. பழத்தைக் கொடுத்துவிட்டு தட்டிப் பறிக்கிற காட்சியையும் எட்டாத உயரத்தில் தின்பண்டங்களை வைத்துவிட்டு ஏமாற்றும் காட்சியையும் அந்த விவரிப்பிலேயே உணர முடிந்தது. ”இவ்ளோ போதும். இந்தப் பாட்டு ரொம்ப நீளமான பாட்டு. நீ சின்ன பையன்தான? உனக்கு அவ்ளோ வேணாம். சுருக்கமா போதும். சரியா?” என்றபடி அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார்.

பாட்டை முடித்ததுமே நாங்கள் பந்து விளையாடத் தொடங்கினோம். பந்துக்காக எம்பிக் குதிக்கும்போதெல்லாம் எனக்கு தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்’ என்னும் வரியே மனத்தில் ஓடியது. அந்தப் பண்டத்துக்கு எம்பிக் குதிப்பவனாகவே நான் என்னை நினைத்துக்கொண்டேன்.

பந்து விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்போதே மேட்டுத் தெருவிலிருந்து ஒரு ஆயா வந்து பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னாள். அவளுக்குப் பின்னால் ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் முகம் சற்றே கோணலாகி வேறொரு திசையில் பார்ப்பதுபோல இருந்தது.

“என்ன ஆயா?”

ஆயா ஒரு பதிலும் சொல்லாமல் சட்டென்று வளைந்து பாட்டுக்காரரின் பாதங்களில் விழுந்துவிட்டாள். ”ஆயா, என்ன செய்றீங்க? ஏந்திருங்க ஏந்திருங்க” என்றபடி அவளைத் தொட்டு தூக்கி நிறுத்தினார் பாட்டுக்காரர்.

“சாமி, இது என் பேரப்புள்ள சாமி. அம்மா அப்பா இல்லாத புள்ள சாமி. மூள சரியில்ல. நின்னா நின்ன இடம். உக்காந்தா உக்காந்த இடம். அவன் யாருக்கும் சம்பாதிச்சி கிம்பாதிச்சி கொட்ட தேவல. அவன் வேலய அவனா பாத்துக்கற அளவுக்கு கொஞ்சம் மூள இருந்தா போதும் சாமி. நீங்கதான் அவனுக்கு ஒரு வழிய காட்டணும்” ஆயா அழுதுகொண்டே மீண்டும் அவர் காலில் விழப்போனாள்.

பாட்டுக்காரரின் முகத்தில் ஒரு வேதனை படர்ந்தது. ஒன்றும் பேச முடியாமல் ஒருகணம் தலை குனிந்திருந்தார். ஆயாவுக்குப் பின்னால் நின்றிருந்த சிறுவனுக்கு அருகில் சென்று அவனை அணைத்துத் தழுவி முத்தம் கொடுத்தார்.

”அம்மா, நீங்க ஒரு நல்ல வைத்தியர பாருங்கம்மா. அவராலதாம்மா இத குணப்படுத்த முடியும். நான் வெறும் பாட்டுக்காரன். நான் என்னம்மா செய்யமுடியும்?”

“அப்படி சொல்லாதீங்க சாமி. நீங்க பாடனா சாமிக்கு கேக்கும். இந்த புள்ளைக்காக நீங்க சாமிகிட்ட ஒரு பாட்டு பாடணும்.”

அவர் அதைக் கேட்டு பெருமூச்சு விட்டார்.

“சரி, நான் பாடறன். ஆனா நீங்க நல்ல வைத்தியருகிட்ட காட்டணும். அத செய்விங்கன்னு சொன்னாதான் நான் பாடுவேன்”

“செய்றன் சாமி. நிச்சயமா செய்றன்”

பாட்டுக்காரர் அந்தச் சிறுவனை தூக்கிக்கொண்டு கல்மேடைக்குச் சென்றார். பிள்ளையார் முன்னால் உட்காரவைத்துவிட்டு ஆர்மோனியப் பெட்டியை எடுத்தார். அவர் கண்கள் தளும்புவதை என்னால் பார்க்க முடிந்தது. துருத்தியை அழுத்தி கட்டைகளை மீட்டி சுரங்களை எழுப்பினார். ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ’ என்று பாடத் தொடங்கினார். அதைப் பாடி முடிக்கும்போது எல்லோருடைய விழிகளிலும் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக அவர் ‘எங்கு நான் செல்வேன் ஐயா நீர் தள்ளினால் எங்கு நான் செல்வேன் ஐயா’ என்று தொடங்கிவிட்டார். அதையும் முடித்து ‘தசரதாத்மஜம்’ பாடிய பிறகே நிறுத்தினார். அங்கிருந்த திருநீற்றை எடுத்து சிறுவனின் நெற்றியில் பூசிவிட்டார்.

ஆயா தன் பையிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவர் காலடியில் வைத்துவிட்டு வணங்கிய பிறகு சிறுவனை அழைத்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கினார். மேட்டுத்தெருவிலிருந்து இருபது முப்பது பேர்களுக்கும் மேற்பட்ட ஒரு கூட்டம் வந்து அங்கு நின்றிருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.

அவர்கள் அனைவரும் ஒரே குரலில் “ஐயா, எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க ஐயா” என்று கேட்டனர். அதைக் கேட்டு அவர் முகத்தில் சற்று முன்னர் திரண்டிருந்த துயரம் மறைந்து புன்னகை அரும்பியது.

“பாட்டுதான? இதோ பாடறேன்” என்றபடி ஆர்மோனியத்தை மீட்டத் தொடங்கினார். அந்த மீட்டல் ஒரு தாளமாக மாறிய கணத்தில் ‘பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது’ என்று பாடல் வரியை இணைத்துக்கொண்டார்.

பாட்டு முடிந்ததும் அனைவரும் நின்ற இடத்திலேயே பாட்டுக்காரரைப் பார்த்து கும்பிட்டபடி தரையில் விழுந்து வணங்கினர். ஒரு சொல்லும் இல்லாமல் பாட்டுக்காரர் அனைவரையும் பார்த்து தலைதாழ்த்தி வணங்கினார். பிறகு ஆர்மோனியப் பெட்டியை இறக்கி துணிக்குள் வைத்து மூடி பைக்குள் வைத்தார். நான் அதை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.

”பிள்ளைகள் ரொம்ப நேரமா நீச்சலடிக்கறதுக்கு எனக்காக காத்திட்டிருக்காங்க. நான் கெளம்பறேன்?” என்று சொல்லிவிட்டு எங்களோடு வேகவேகமாக ஏரிக்கரைக்கு நடந்தார். மேட்டுத்தெரு மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

போன வேகத்தில் அனைவரும் ஆடைகளைக் களைந்துவிட்டு ஏரிக்குள் இறங்கிவிட்டனர். ஒரே கொண்டாட்டம்.

“உண்மையாவே காலையில நீங்க அந்தக் கரை வரைக்கும் போனீங்களா?” என்று சத்தமாகக் கேட்டான் சிவலிங்கம்.

“ஆமா”

“நடு ஏரில ரொம்ப ஆழமா?”

“ஆமா”

“இப்ப இன்னொரு தரம் போவலாமா?”

“இப்ப வேணாம். வெயில்ல உடம்பு சோர்ந்து போயிடும்.”

அவர்கள் முகம் வாட்டமடைவதைப் பார்த்துவிட்டு “இப்ப நான் உங்களுக்கு ஒரு வேடிக்க செஞ்சி காட்டறன், வாங்க” என்றார்.

வேடிக்கை என்றதும் அவர்கள் முகம் மலர்ந்தது.

“இங்க பாருங்க, நான் இங்க முழுகி அதோ அங்க எழுந்திருப்பேன். பாக்கறீங்களா?” என்று கேட்டார். “உண்மையாவா?” என்று வாயைப் பிளந்தான் வடிவேலு.

“இப்ப பாரு” என்றபடி அவர் தண்ணீருக்குள் முழுகினார். அவர் எந்தப் பக்கம் சென்றிருப்பார் என எல்லோரும் திகைத்துக்கொண்டிருக்கும் போது அவர் ஏற்கனவே சொன்ன புள்ளியில் தண்ணீருக்கு மேலே வந்தார். அதே போல மீண்டும் அங்கே மூழ்கி இந்தப் புள்ளிக்கு வந்து தண்ணீருக்கு மேலே எழுந்தார்.

கண்கள் சிவக்கும் வரைக்கும் தண்ணீருக்குள்ளேயே கிடந்துவிட்டு அவர்கள் மெதுவாக கரைக்கு வந்தார்கள்.

கல்மேடைக்கு வந்ததும் எங்களுக்கு அவர் ஒரு கதையைச் சொன்னார். அதற்குப் பிறகு பையிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து ஆளுக்கொன்று கொடுத்தார்.

மதிய உணவுக்காக அனைவரும் அவரவர் வீட்டுக்குப் பிரிந்து செல்ல, நானும் சிவலிங்கமும் பேசிக்கொண்டே ஸ்டேஷன் தெருவில் இறங்கி வீட்டுக்கு நடந்தோம்.

திண்ணையில் உலக்கையைத் தடுப்பாக்கி மறுபக்கத்தில் அக்கா திண்ணையில் சாய்ந்தபடி தனியாக பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தாள்.

”என்னக்கா, ஒத்தையில நீயே பல்லாங்குழி ஆடிக்கற?”

சத்தத்தைக் கேட்ட பிறகே அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். சலிப்போடு “என்ன செய்யமுடியும் தம்பி, நீ எப்ப பார்த்தாலும் கூட்டாளிங்க கூட்டாளிங்கன்னு ஏரிக்கரை பக்கமா ஓடிடற? என் கூட வேற யாரு இருக்காங்க ஆடறதுக்கு?” என்று கேட்டாள்.

அவள் பதிலை நான் பொருட்படுத்தவில்லை. அவளிடம் அடங்கிய குரலில் “இன்னைக்கு நான் ஒரு பாட்டு கத்துட்டு வந்திருக்கேன் தெரியுமா?” என்றேன்.

அவள் ஆர்வத்தோடு “பாட்டா, என்னடா பாட்டு?” என்று கேட்டாள்.

“தீராத விளையாட்டு பிள்ளை”

“அப்படின்னா?” என்று என்னை கிண்டலுடன் பார்த்தாள்.

அவளுக்கு முதல் இரண்டு வரிகளை மட்டும் பாடிக் காட்டிவிட்டு “புடிச்சிருக்குதா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லா இருக்குதுடா தம்பி. ரேடியோவுல பாடறமாதிரி இருக்குது.”

“நாளைக்கி உனக்கு முழுசா பாடிக் காட்டறேன்” என்று சொல்லிவிட்டு “அம்மா அம்மா” என்று ஆவலோடு அழைத்தபடி வீட்டுக்குள் சென்றேன்.

அதற்குள் அக்கா வாசலிலிருந்தே “அம்மா இல்லைடா. தேவி அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க. அங்க தட்டுல சோறு போட்டு மூடி வச்சிருக்காங்க பாரு. நீயே எடுத்து வச்சிகினு சாப்புடு” என்று சொன்னாள். “சரி சரி” என்று பதில் சொல்லிவிட்டு கைகழுவிக்கொண்டு வந்து சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்தேன்.

திண்ணைக்கு வந்து அக்காவுடன் பல்லாங்குழி விளையாடினேன். “டேய், அந்த பாட்ட இன்னொரு தரம் பாடிக் காட்டுடா” என்று கேட்டாள் அக்கா. நான் விளையாடிக்கொண்டே அந்தப் பாட்டின் மூன்று சரணங்களையும் பாடிக் காட்டினேன். “டேய் தம்பி, உண்மையிலயே நீ ரொம்ப நல்லா பாடறடா” என்றாள் அக்கா. அம்மா ஒரு கூடையில் கேழ்வரகோடு வீட்டுக்கு வந்தாள்.

மாலை பொழுது இறங்கியதும் நான் கல்மேடைக்குச் சென்றேன். பிள்ளையாருக்கு எதிரில் ஏராளமான பூக்கள் குவிந்திருந்தன. செம்பருத்தி. நந்தியாவட்டை. மகிழம்பூ. அல்லி. அஞ்சுமல்லி. மூன்று தெருக்களைச் சேர்ந்தவர்கள் பலரும் ஏதோ ஊர்ப்பஞ்சாயத்துக்குக் கூடியிருப்பதைப்போல மேடைக்கு அருகில் நிறைந்திருந்தார்கள். சிலர் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் மரத்தடிகளில் நின்றிருந்தார்கள். அனைவரும் அமைதியாக பாட்டுக்காரரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னால் கல்மேடைக்கு அருகில் செல்லமுடியவில்லை. மேடையில் தண்டபானி, சிவலிங்கம், நாகராஜன் அனைவரும் நிற்பதைப் பார்த்ததும் பிந்திவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்வது என்று தவிப்போடு சுற்றுமுற்றும் பார்த்தேன். அதற்குள் பாட்டுக்காரர் என்னைப் பார்த்துவிட்டார். பக்கத்தில் வா என்பதுபோல கையை அசைத்தார். அதைக் கேட்ட பிறகே எனக்குள் நிம்மதி பிறந்தது. அங்கே அமர்ந்தவர்களின் தோள்களைத் தொட்டுத் தொட்டு நடுவில் வழியை உருவாக்கிக்கொண்டு நடந்து சென்று மேடைக்குச் சென்றுவிட்டேன்.

“என்ன வீட்டுல பாடிப் பாத்தியா?” என்று கேட்டார் பாட்டுக்காரர். அதைக் கேட்டதும் வெட்கம் வந்தது. ஆச்சரியத்தோடு அவரைத் திரும்பிப் பார்த்து “ம்” என்றேன்.

“ஆ. அப்படித்தான் இருக்கணும். அப்பறமா எழுதி வச்சிக்கோ. அப்பதான் நல்லா பாடமாவும். தெனமும் பாடு. பாடப் பாடத்தான் பாட்டு. ஆட ஆடத்தான் ஆட்டம். நீச்சல் வேணாம்னு நிக்கறமாதிரி பாட்ட ஒதுக்கக்கூடாது.”

“ம்”

“இப்ப பாடறியா?”

“இப்பவா?”

அதிர்ச்சியில் திகைப்புடன் நான் அவரைப் பார்த்தேன்.

“ஆமா. இப்பத்தான். பாடு.”

அவர் என் பதிலை எதிர்பார்க்காமலேயே ஆர்மோனியப்பெட்டியை எடுத்து துருத்தியை அழுத்த ஆரம்பித்துவிட்டார்.

“நான்…… இங்க…… எப்பிடி….” என்று சொற்கள் கூடி வராமல் நான் இழுத்தேன்.

“நீதான். இங்கதான். சும்மா ஆரம்பி…..”

அவருடைய புன்னகை எனக்குத் தெம்பைக் கொடுத்தது. நான் திரும்பி என் நண்பர்களையும் பிள்ளையாரையும் பார்த்துவிட்டு மீண்டும் பாட்டுக்காரரின் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களை அசைத்துவிட்டு ஆர்மோனியத்தின் மரக்கட்டைகள் மீது விரல்களைப் படரவிட்டார். தரையிலிருந்து ஒரு பறவை சிறகுகளை அசைத்து மேலெழுந்து வட்டமிட்டு வானத்தை நோக்கிப் பறப்பதைப்போல மெல்லிய இசை பொங்கி எழத்தொடங்கியது. நான் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று தொடங்கி அந்த இசையுடன் சேர்ந்துகொண்டேன். வானத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பதுபோல நான் உணர்ந்தேன். காலையில் அவர் சொல்லிக் கொடுத்த ஏற்ற இறக்கங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் எழுந்தன. நான் அதுபோலவே பாடினேன். ’மனமகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான்’ என்று நிறைவு செய்த பிறகுதான் அங்கு நிறைந்திருந்தவர்களின் முகங்களைப் பார்த்தேன்.

அந்த இசையை மீட்டிக்கொண்டே அதே பாட்டின் தொடர்ச்சியாக அவர் ‘அழகுள்ள மலர்கொண்டு வந்தே’ என்று அடுத்த சரணத்தைத் தொடங்கினார். நான் ஒவ்வொரு சொல்லாக அந்தச் சரணத்தைப் பின்தொடர்ந்தேன். ’பின்னலைப் பின்னின்றிழுப்பான்’ என மற்றொரு சரணத்தையும் அவர் பாடிவிட்டு மீண்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை வரிக்கு வந்து சேர்ந்தார்.

“பெருமாள் பாட்டு ஒன்னு பாடுங்க” நின்றிருப்போர் வரிசையிலிருந்து ஒரு அம்மா கேட்டார். “பெருமாள் பாட்டாம்மா, பாடிருவோம்மா” என்று சிரித்துவிட்டு ’ஊரிலேன் காணியில்லை உறவுமற்றொருவர் இல்லை’ என்று தொடங்கினார்.

அதை முடிப்பதற்காகவே காத்திருந்த மாதிரி “ஐயா, ஒரு சிவன் பாட்டு’ என்று கேட்டார் ஒரு முதியவர். “சிவன் பாட்டுதான? அந்த சுடுகாட்டு சுடலைக்கு ஒரு வணக்கம் சொன்னாதான நாளைக்கு நம்ம கட்ட வேகும். பாடிருவோம்ய்யா” என்றபடி புன்னகைத்துக்கொண்டே ’சங்கரனைத் துதித்தாடு இனி ஜனனமில்லை’ என்று தொடங்கினார்.

நேற்று எங்களுக்கு அவர் சொன்ன கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி விளக்கங்கள் அக்கணத்தில் சட்டென தானாகவே என் நினைவுக்கு வந்தன. அவர் குரலில் சட்டென ஒரு தவிப்பும் மன்றாடுதலும் சேர்ந்துகொள்வதைப் பார்த்தேன். என்னவென சரியாகப் புரிந்துகொள்ள முடியாத பாரம் நெஞ்சை அழுத்தியது.

“ஐயா, தாயாரப் பத்தி ஒரு பாட்டு”

“சரிங்கம்மா. அம்மாவுக்கும் ஒரு வணக்கத்த சொல்லிடுவோம்”

’அகிலாண்டேஸ்வரி ரக்‌ஷமாம் ஆகம சம்ப்ரதாய நிபுணே ஸ்ரீ’ என்று தலையசைத்துக்கொண்டே பாடினார்.

“முருகருக்கும் ஒரு பாட்டு பாடுங்க சாமி”

“ஆமா. மறந்தே போச்சில்ல. ஆண்டிக்கு இல்லாத பாட்டா? அவன் நம்ம ஆளாச்சே. இப்ப பாடிடுவோம்”

அவர் ஒரு சிறுவனைப்போல நாக்கைக் கடித்தபடி கண்களைச் சிமிட்டியதைப் பார்க்க அழகாக இருந்தது. கண்களை மூடி சில கணங்கள் யோசித்த பிறகு ‘முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்’ என்று தொடங்கினார். ஒரு குன்றில் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லும் மயிலைப்போல அவர் குரல் அடுத்தடுத்த உயரங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தது.

அவர் பாடி முடித்தபோது மரத்தடியில் நிறைந்திருந்தவர்கள் தாமாகவே உணர்ச்சிவசப்பட்டு ‘ஆறுமுகனுக்கு அரோகரா’ என்று குரலெழுப்பியபடி கைதட்டினார்கள். ஒருவர் கூடை நிறைய மாம்பழங்களைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்துவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் என பழங்களைக் கொண்டுவந்து கூடையில் வைத்தார்கள். சிலர் சில்லறை நாணயங்களை வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்துவிட்டார்.

என்னையும் சிவலிங்கத்தையும் அழைத்து பழக்கூடையை எடுத்துச் சென்று அங்கு கூடியிருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொன்றாக வழங்கும்படி சொன்னார். வடிவேலுவும் நாகராஜனும் ஓடி வந்து கூடையை ஆளுக்கொரு பக்கம் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். நானும் சிவலிங்கமும் தண்டபானியும் ஒவ்வொரு பழமாக எடுத்து எல்லோருக்கும் கொடுத்தோம்.

“என்னடா ஜெகதலப்பிரதாபா? நீதான் இங்க விநியோகமா?” என்ற குரலைக் கேட்டுத் திரும்பியபோதுதான் அங்கு ருக்மிணி மாமி நிற்பதைப் பார்த்தேன். எனக்கு அவரைப் பார்த்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுத்து நெஞ்சை நிரப்பியது. ”இந்தாங்க மாமி” என்று ஒரு பழத்தை அவருக்கும் மற்றொரு பழத்தை அவரை ஒட்டி நின்றுகொண்டிருந்த நந்தகுமாருக்கும் கொடுத்தேன். “ஆத்துப் பக்கம் ஏன்டா வரமாட்டற? ஒருநாள் வாடா” என்றாள் மாமி. தொடர்ந்து “தீராத விளையாட்டுப் பிள்ளையை நானும் கேட்டேன்டா. ஒன் குரல் திவ்யமா இருக்கு. விட்டுடாதடா, பாடிண்டே இரு” என்று சொன்னாள். ”சரிங்க மாமி” என்றபடி அடுத்தவரை நோக்கி நகர்ந்தேன்.

சில்லறைகளை மட்டும் எடுத்து கைக்குட்டையில் வைத்துச் சுற்றி எடுத்துக்கொண்டு மேடைக்குத் திரும்பும் சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து ஒருவர் வேகமாக பாட்டுக்காரருக்குப் பக்கத்தில் வந்து நின்றார். நேற்று பார்த்த அதே முகம்.

“அங்க வந்து பாடச் சொல்றாங்க.”

பாட்டுக்காரர் புன்னகைத்தபடி “அடடா, இப்பதான முடிச்சேன்” என்றார்.

“எங்களுக்காக இல்லைன்னாலும் சாமிக்காக வந்து பாடலாமே”

“சாமியா, அவர் அங்க மட்டுமா இருக்காரு? அவர் இல்லாத இடம்னு ஒன்னு இருக்கா என்ன? எல்லா இடத்துலயும் இருந்து பாடறதயெல்லாம் கேட்டுகினுதான இருக்காரு.”

அவர் எதுவும் பேசாமல் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார். கூடியிருந்தவர்களும் எழுந்து கலைந்துசெல்லத் தொடங்கினர்.

மறுநாள் காலையில் சிவலிங்கம் வீட்டுக்கே வந்துவிட்டான். நானும் குளித்து முடித்து பழைய சோற்றைச் சாப்பிட்டு முடித்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தேன். இருவருமாகச் சேர்ந்து கல்மேடைக்குச் சென்றோம்.

தொலைவிலிருந்தே பாட்டுக்காரர் புதுச்சட்டை அணிந்திருப்பதைப் பார்த்தோம். நேற்று அவர் அணிந்திருந்த சட்டை துவைக்கப்பட்டு வேலியோரமாக ஒரு கிளைமீது தொங்கி வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. “டேய், இன்னைக்கும் ஏரிக்கு போய் வந்திருக்காருடா” என்று ரகசியமாகச் சொன்னான் சிவலிங்கம்.

நாங்கள் சென்று மேடையில் உட்கார்ந்திருந்த பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னோம். ”வாங்க வாங்க. வந்துட்டீங்களா” என்று சிரித்தார் அவர். “இவனுங்க இன்னைக்கு ஒங்களுக்கு முன்னாலயே வந்துட்டாங்க” என்று வடிவேலையும் நாகராஜனையும் கிரிதரனையும் சுட்டிக் காட்டிச் சொன்னார். அவர்கள் எருக்கம்பூக்களை ஒரு மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தனர்.

“இந்த மாலை எதுக்கு?” என்று புரியாமல் பாட்டுக்காரரிடம் கேட்டேன்.

”நம்ம புள்ளயாருக்குத்தான்.”

”இன்னைக்கும் ஏரில அடுத்த கரை வரைக்கும் போய் வந்தீங்களா?” என்று ஆவலோடு நான் பாட்டுக்காரரிடம் கேட்டேன். ”ஆமா” என்று தலையசைத்துச் சிரித்தார் அவர்.

“இருட்டா இருக்கும்போதே குயில்சத்தம் கேட்டு எழுந்துட்டேன். இந்த மரத்துக்கு நெறய குயில்ங்க வருது. என்ன மாதிரியான சங்கீதம் தெரியுமா? அந்த குரலுக்கு முன்னால நான் பாடறதெல்லாம் பாட்டே இல்ல. பாட்டுல அந்தத் தாளத்த கொண்டுவர முடியாமதான் நாம வார்த்தைங்கள போட்டு அடச்சிடறோம்”

அவர் கண்களில் படர்ந்த பரவசத்தைப் பார்த்தபோது எதுவுமே தெரியாத எங்களுக்கே பரவசமாக இருந்தது.

ஒருசில நிமிடங்களுக்குள் மேடை நிறைந்துவிட்டது. மண்ணை ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வண்டிகளை தொடர்ந்து ஓட்டிச் செல்ல முடியாமல் வண்டிக்காரர்கள் நிறுத்திவிட்டனர். கூட்டத்தைப் பார்த்து மாடுகள் மிரண்டன. நானும் தண்டபானியும் ஓடிச் சென்று மக்கள் கூட்டத்தை ஒதுங்கவைத்து வண்டிகள் செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

எருக்கமாலையைக் கட்டி முடித்ததும் நாகராஜன் அதை எடுத்துச் சென்று பிள்ளையார் கழுத்தில் சூட்டினான். “இப்ப பாரு, நம்ம புள்ளயார் எவ்வளவு அழகா இருக்காரு” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பாட்டுக்காரர். கூட்டத்திலிருந்து எழுந்து வந்த ஒரு ஆயா தன் மடியிலிருந்த பூக்களையெல்லாம் பிள்ளையார் முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி வணங்கினாள். பாட்டுக்காரர் அந்தச் சுடரைத் தொட்டு வணங்கினார். நாங்களும் வணங்கிவிட்டு கீழே தரையில் விழுந்து எழுந்து காதுகளைப் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டோம்.

“ம், நாம ஆரம்பிக்கலாமா?” என்று என் தோளைத் தட்டினார் பாட்டுக்காரர். நான் ஆவலோடு சென்று ஆர்மோனியப் பையை எடுத்து வந்து அவருக்கு முன்னால் வைத்தேன். அவர் பிள்ளையார் முன்னால் அமர்ந்து துணிமூட்டையிலிருந்து ஆர்மோனியத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டார். விரல்கள் அங்குமிங்கும் படரவிட்டு இசையைக் கூட்டினார். ஒருகணம் என்னை அருகில் வருமாறு சைகை காட்டிவிட்டு “அந்தக் குயில் எப்படி கூவிச்சி தெரியுமா?” என்று கேட்டார். நான் “எப்படி?” என்பதுபோல அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் துருத்தியை மெல்ல இழுத்தபடி ஒரு மரக்கட்டையை ஒரு பூவைத் தொடுவதுபோல மெல்லமெல்லத் தொட்டார். அப்போது எழுந்த ஓசை உண்மையிலேயே அங்கு ஒரு குயில் வந்து கூவுவதைப்போல இருந்தது. நம்ப முடியாதவனாக நான் அவர் விரல்களையே பார்த்தேன். அது குயிலின் குரலேதான். ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அற்புதமா இருக்குது. கண்ண மூடினா குயில்தான் தெரியுது.”

“சங்கீதத்தையே அப்பிடித்தான் கண்டுபுடிச்சாங்க. எல்லாமே ஒரு சேர்மானம்தான். குயில், மயில், ஆடு, காளை, குதிரை, யானை, அன்றில்னு பறவைகளுடைய குரல்களையும் விலங்குகளுடைய குரல்களையும் கூட்டிக் கொறச்சி செய்ற வித்தை. இதான் ராகம் தாளம்.”

குயிலின் குரலோசையிலிருந்தே விடுபட முடியாமல் திகைத்திருந்த என்னை பாட்டுக்காரரின் பேச்சு மேலும் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.

“சரி, இப்ப பிள்ளையாரைப் பத்தி பாடுவோம் என்ன?” என்றபடி மரக்கட்டைகளை அழுத்தி வேறு மாதிரியான இசை எழும்படி செய்தார். சில கணங்கள் கண்களை மூடி ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ என்று தொடங்கினார். அப்புறம் அடுத்தடுத்து ‘அல்லல்போம் வல்வினைபோம்’, ’முன்னவனே யானை முகத்தானே’ ‘களியானைக்கன்றை’ ’மருப்பையொரு கைக்கொண்டு’ என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கியதும் நேற்று போலவே பலரும் வந்து கூடையில் பழங்களை வைத்துவிட்டுச் சென்றனர். நாங்கள் அங்கிருந்தோர் அனைவருக்கும் அந்தப் பழங்களை உடனடியாகப் பிரித்துக் கொடுத்தோம்.

அக்ரகாரத்தெருவிலிருந்து இரண்டு பேர் வேகமாக கல்மேடைக்கு அருகில் வந்து நின்றார்கள். ஆர்மோனியப்பெட்டிக்குப் பக்கத்தில் இருந்த பாட்டுக்காரரிடம் “இங்க பாடறவரு யாரு?” என்று கேட்டார் ஒருவர். பாட்டுக்காரர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்தார். நான் துடுக்காக அவரைப் பார்த்து “பாடறவருகிட்டயே வந்து நீங்கதான் பாடறவரானு கேக்கறிங்க” என்றேன். அதைக் கேட்டு அவர் முகம் சிவந்துவிட்டது. ”சரி சரி” என்று சமாளித்தார். பிறகு ”சரி, கெளம்புங்க” என்று பாட்டுக்காரரைப் பார்த்துச் சொன்னார்.

பாட்டுக்காரர் ”எங்க?” என்று அவரிடம் கேட்டார்.

“ராமசாமி ஐயர் உங்கள கையோட அழச்சிண்டு வரச் சொன்னார்”

“ஏன்?”

“இன்னைக்கு அவா ஆத்துல பெரிய பூஜை நடக்குது. அதுல நீங்க பாடினா நன்னா இருக்கும்ன்னு பிரியப்படறார்.”

“சரி”

“சரின்னு சொல்லிட்டு உக்காந்துண்டா போதுமா? வாங்கோ போவலாம்”

“எனக்கு யார் வீட்டுக்கும் போய் பாடற பழக்கமில்ல தம்பி. நான் சும்மா இப்படி நாடோடியா பாடிட்டே போற ஆள். போய் சொல்லுங்க.”

“அவர் யார்னு தெரியாம நீங்க பேசறேள்னு நெனைக்கறேன். அவர் இந்த அக்ரகாரத்துலயே பெரிய புள்ளி. விழுப்புரம் பெரிய கோர்ட்ல மாஜிஸ்ட்ரேட். இந்த வட்டாரத்துல அவர் பேச்சுக்கு மறுபேச்சே இல்ல.”

பாட்டுக்காரர் எந்த அசைவுமில்லாமல் உட்கார்ந்தபடியே இருந்தார்.

“எழுந்து வாங்கோ”

“தம்பி, நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேனே. நீங்க கெளம்பலாம்”

அந்தப் பதிலைக் கேட்டு அவர் முகம் இருண்டுவிட்டது. அவர் முகம் போன போக்கே சரியில்லை. நான்கு பக்கங்களிலும் மாறிமாறிப் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார்.

“சரி, நாம விளையாடற நேரம் வந்துட்டுது. பந்து விளையாடலாமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் உற்சாகமாக தலையசைத்துக்கொண்டே எழுந்தேன்.

மேடையில் அமர்ந்திருந்த கூட்டம் அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தது. நாங்கள் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தோம்.

“எங்க ஊருக்கு யாரும் இந்த மாதிரிலாம் வந்ததில்ல சாமி. நீங்க வந்தது ஒரு பெரிய அதிசயம். கடவுளா பாத்து உங்கள அனுப்பி வச்சிருக்காரு. எங்க கஷ்டம் தீர்ற மாதிரி ஒரு பாட்டு பாடுங்க” என்று ஒருவர் எழுந்து சொன்னார். உடனே “ஆமா பாடுங்க” “ஆமா பாடுங்க” என்று பல குரல்கள் எழுந்தன. ”என்ன செய்யலாம்?” என்பதுபோல என்னையும் சிவலிங்கத்தையும் பார்த்தார் பாட்டுக்காரர். “சரி, சாய்ங்காலமா வெளயாடிக்கலாம். பாட்டே பாடுங்க” என்று சொன்னோம்.

பாட்டுக்காரர் ஆர்மோனியத்தை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டார். சில கணங்களிலேயே இசையைக் கூட்டி ’உனது திருவடி நம்பிவந்தேன் எனக்கு ஒருவருமில்லை நான் ஏழை’ என்று பாடத் தொடங்கினார். அந்தக் குரலைக் கேட்கும்போதே நெஞ்சு அடைப்பதுபோல இருந்தது. கண்களில் நீர் தளும்பத் தொடங்கியது. அரசமரத்தைவிட உயரமான உருவத்துடன் யாரோ ஒருவர் அங்கு நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றி என் உடல் அதிர்ந்தது. அந்தப் பாடல் முடித்ததும் ‘காணாத கண்ணென்ன கண்ணோ வீணான கண்மயில் கண்ணது புண்ணோ’ என்ற பாட்டு தொடங்கியது. கிட்டத்தட்ட அனைவருடைய கண்களும் குளமான நிலையில் ‘கண்டேன் கலிதீர்ந்தேன் கருணைக்கடலை நான் கண்டேன்’ என்று பாடத் தொடங்கினார் பாட்டுக்காரர். அந்த வரிகள் வழியாகவும் ஆர்மோனியத்திலிருந்து பீறிட்ட இசை வழியாகவும் பாய்ந்த ஒரு பரவசத்தில் திளைத்திருந்தேன்.

அந்தப் பாட்டு முடியும் தருணத்தில் அக்ரகாரத் தெருவிலிருந்து இருபதுமுப்பது பேர் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் வந்தவர் வெள்ளை வெளேரென வேட்டி அணிந்திருந்தார். ஒரு துண்டுமட்டும் தோளில் இருந்தது. நெற்றியுலும் மார்பிலும் தோள்களிலும் திருநீற்றின் பட்டைகள் உலர்ந்து படிந்திருந்தன. கழுத்தில் ருத்திராட்ச மாலை தொங்கியது. அவருக்குப் பக்கத்தில் சற்று முன்னால் வந்து சென்றவர் நின்றிருந்தார்.

சட்டென எனக்குள் ஒரு பயம் படர்ந்தது. என்ன நடக்குமோ என்று மனத்துக்குள் பதறத் தொடங்கினேன். திரும்பி பாட்டுக்காரரைப் பார்த்தேன். அவர் அங்கு எதுவுமே நிகழாததுபோல தன் பாட்டின் உலகத்துக்குள் இருந்தார். ருத்ராட்சமாலை அணிந்தவர் பாட்டு முடியும் வரைக்கும் காத்திருந்து பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னார்.

”நான் ராமசாமி. நீங்க நன்னா பாடறேள்னு கோவில்ல சொன்னா. இன்னைக்கு நம்ம ஆத்துல சத்யநாராயண பூஜை. நீங்க வந்து பாடனா நன்னா இருக்கும்ன்னுதான் அழச்சிண்டு வரச்சொன்னேன். என் மனசில வேற எந்த எண்ணமும் இல்ல. ஆத்துக்கெல்லாம் நீங்க வரமாட்டேள்னு தம்பி வந்து சொன்னான். அதான் நானே கெளம்பி வந்துட்டேன்.”

“உக்காருங்க”

பாட்டுக்காரருக்கு முன்னால் அவர் காலை மடித்து அமர்ந்தார். “அண்ணா நாற்காலி” என்று அவசரமாக எழுந்த குரலை திரும்பியே பார்க்காமல் கையை உயர்த்தி அடக்கினார். அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் கீழே அமர்ந்தனர். மேடையில் இடம் கிடைக்காதவர்கள் தரையில் அமர்ந்திருந்த கூட்டத்தோடு அமர்ந்தனர்.

”கங்கையை பாக்க நாமதானே கங்கைகிட்ட போவணும். கங்கையை நம்ம பக்கத்துக்கு இழுக்க நெனைக்கலாமோ. பெரிய தப்பு பண்ணிட்டேன்.”

பாட்டுக்காரர் ஆர்மோனியப்பெட்டியைத் தொட்டு சுருதி கூட்டியபடியே “என்ன பாட்டு வேணும், சொல்லுங்க” என்று கேட்டார்.

“நீங்க சுதந்திரமா எது பாடினாலும் சரி”

ராமசாமி பாட்டுக்காரரின் முகத்திலேயே கவனத்தை குவித்திருந்தார். பாட்டுக்காரர் மெல்ல ‘யாருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ அவனே பெரியவனாம்’ என்று அடியெடுத்து பாடத் தொடங்கினார். பார்வைக்குத் தென்படாத ஒரு பேருருவம் எங்களுக்குப் பக்கத்திலேயே உயர்ந்து நிற்கும் உணர்வை நான் மறுபடியும் அடைந்தேன். அந்தப் பாட்டை முடித்ததுமே அவர் ‘ஆடும் சிதம்பரமோ ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ’ என்று தொடங்கினார். அதைத் தொடர்ந்து ‘பாதமே துணை ஐயமே’ ‘பாடுவாய் மனமே சிவனைக் கொண்டாடுவாய் தினமே’ ‘வாருங்கள் வாருங்கள் சொன்னேன் நீங்கள் வாயாடாது ஓடி வருவீர் என் முன்னே’ ‘உத்தாரம் தாரும் ஐயே எனக்கு ஒருவருமில்லை நான் பரகதி அடைய’ ‘தில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம்’ ‘தில்லை வெளியிலே கலந்துகொண்டால்’ ‘ஆடிய பாதத்தைத் தாரும் உம்மைத் தேடி வந்தோம் இதோ பாரும்’ ‘கைவிடலாது காமதேனு அல்லவோ’ என்று பாடிக்கொண்டே சென்றார். எல்லாவற்றையும் பாடி முடித்துவிட்டு புன்னகைத்தபடியே ஆர்மோனியத்தை இறக்கினார்.

நான் ராமசாமியைப் பார்த்தேன். அவர் கண்களிலிருந்து நீர் பெருகி கோடாக வழிந்தபடி இருந்தது. அவருக்கு எவ்விதமான சுய உணர்வும் இல்லை. ஆர்மோனியம் நின்று வெகுநேரத்துக்குப் பிறகே அவர் மனம் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தது. சுற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபடி துண்டின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“அந்த நடராஜன அப்படியே கண்முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டேள். என்ன சொல்றதுனே தெரியலை. வார்த்தயே வரலை. வார்த்தைகள் எல்லாம் எங்கயோ காணாம போய்ட்டமாதிரி இருக்கு. மனசே லேசாய்ட்டுது. நீங்களே இங்க தேடி வந்து பாடனதுலாம் இந்த ஊர் செஞ்ச புண்யம்.”

குரல் இடற ராமசாமி திரும்பினார். யாரோ ஒருவர் முன்னால் வந்து ஒரு மாலையை நீட்டினார். இன்னும் மூன்று பேர் தம்மிடம் இருந்த பழத்தட்டுகளையும் வேட்டி துண்டு வைத்த தட்டையும் எடுத்துச் சென்று ஆர்மோனியத்துக்கு அருகில் வைத்துவிட்டுத் திரும்பினர்.

ராமசாமி மாலையை உயர்த்தி பாட்டுக்காரரின் கழுத்தில் அணிவிக்க கைகளை உயர்த்தினார்.

“ஹா, எனக்கா?” என்றபடி ஒரு கணத்தில் நின்ற இடத்திலிருந்து பின்வாங்கிய பாட்டுக்காரர் “அங்க, அங்க அவருக்கு போடுங்க” என்றபடி பிள்ளையாரின் பக்கம் சுட்டிக் காட்டினார். ராமசாமி மாலையை பிள்ளையாருக்குச் சூட்டிவிட்டு பாட்டுக்காரரைப் பார்த்து புன்னகையுடன் வணங்கினார். பிறகு வணங்கிய நிலையிலேயே மேடையிலிருந்து இறங்கி நடந்து சென்றார்.