எஸ்.ஜெயஸ்ரீ

இரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ

தமிழில் சிறுகதை, நாவல் வடிவங்கள் பரவலாக வெளிவருவது போல் நாடகங்கள் வருவதேயில்லை. நண்பரும், எழுத்தாளருமான பாவண்ணன் தொடர்பு கிடைத்த பிறகே, அவரது மொழி பெயர்ப்பில் கிரீஷ் கர்னாட் அவர்களுடைய நாடகங்களை கன்னடத்திலிருந்து தமிழுக்கு அவர் கொடையளித்திருப்பது தெரிந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அக்கினியும் மழையும், பலிபீடம், நாகமண்டலம் எல்லாம் அப்படி வாசித்ததுதான். பாவண்ணன் இது வரை அவருடைய எட்டு நாடகங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். சமீபத்தில் வெளி வந்திருப்பது அவருடைய இரண்டு நாடகங்கள். அவை “சிதைந்த பிம்பங்கள்” மற்றும் ”அஞ்சும் மல்லிகை” ஆகியவை.
.. இரண்டு நாடகங்களுமே, மனப் பிறழ்வு சார்ந்த நிகழ்வுகளே. சிலர் மட்டுமே மனப் பிறழ்வு நோய்க்கு ஆட்பட்டவர்கள் என்று இனம் கண்டு கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய நடை, உடை, பாவனைகளில் தெரியும் மாற்றங்கள் அவர்களை வெளியுலகுக்கு அப்படி அடையாளம் காட்டி விடுகிறது. இவைகள் வெளி விகாரங்கள் மட்டுமே. வெளிப்படையாக எந்த வித அடையாளங்களும் இல்லாமல், மன விகாரங்களுடன், மனமும், புத்தியும் வக்கிரமாக சிந்திக்கக் கூடியவர்களுமாக இருக்கிறார்கள் பலர்.
. படிக்கும் படிப்போ, வாங்கும் பட்டங்களோ, பரிசுகளோ என்று எதற்குமே சம்பந்தமே இல்லாமல், மனதில் அழுக்குகளைச் சுமந்து திரிபவர்களாக, அந்த அழுக்குகளை சமயம் வாய்க்கும்போது, எல்லா இடங்களிலும் பரப்பி, தன்னை நிலை நாட்டிக் கொண்ட தவறான புரிதல் கொண்டு மகிழ்கிறார்கள். இந்த விதமான மனிதர்கள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். இரண்டிலும் அடிப்படையில் பெற்றோரை லேசாகக் கோடிட்டுக் காண்பிக்கிறது. அதை நாம் நாடகங்களை கூர்ந்து வாசிக்கும்போது கவனிக்கக் கிடைக்கிறது
—————
”சிதைந்த பிம்பம்” நாடகம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாகத் தொடங்குகிறது,. திருமதி மஞ்சுளா நாயக் ஒரு ஆங்கில நாவலுக்காக விருது வாங்கியிருக்கிறார், அவரது பேட்டியும், அதைத் தொடர்ந்து, அந்த நாவலின் தொலைக்காட்சிப் படமும் ஒளிபரப்பபபடும் என்பதாக ஆரம்பிக்கிறது நாடகம்.நாவலாசிரியரைப் பேட்டி எடுக்கிறார்கள். அவரும், நாவல் உருவான விதம், அதன் பாத்திரங்கள் பற்றியெல்லாம் பதிலளிக்கிறார். முடிக்கும்போது, தன்னை கன்னட எழுத்துலகம் பாராட்டாமல், பழிக்கிறது என்று சொல்லி முடிக்கிறார். அப்போதுதான் உண்மையிலேயே நாடகம் தொடங்குகிறது.
அவளுடைய மனசாட்சி பேச ஆரம்பிக்கிறது. ”உருவம்” என்ற பாத்திரமாக அது மஞ்சுளாவோடு உரையாடுகிறது. உரையாடும்போதுதான் கதையின் உண்மையான மனித முகங்கள் வெளிப்படுகிறது. மஞ்சுளாவுக்குத் தங்கை மாலினி. அவளுக்கு இடுப்புக்குக் கீழே செயலில்லை. எனவே, அவள் மேல் பெற்றோருக்கு அளவு கடந்த பாசம். இளமையில் அவளுக்கே நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். பெற்றோர் இறந்தவுடன் அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அக்காவாகிய மஞ்சுளாவின் தலையில் விழுகிறது. மஞ்சுளாவுக்குத் திருமணமும் ஆகி விட்டது தங்கையைத் தன்னோடு அழைத்து வந்து விடுகிறாள். அவள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். அவள் கணவன் ப்ரமோத்குமாரை விரும்பித்தான் மணந்திருக்கிறாள். தங்கையை வசதியாகத்தான் பார்த்துக் கொள்கிறாள். அந்தத் தங்கை இறந்து போன இரண்டு வாரங்களுக்குள் இந்த நாவல் வெளி வந்து விடுகிறது. அவள் உருக்கமாக பேட்டி கொடுக்கிறாள்.
ஆனால், உண்மையில் அந்த நாவலே தங்கை மாலினி எழுதியதுதான். தங்கை இடுப்புக்குக் கீழே செயலற்றவளாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பெரும் புலமை படைத்தவளாக இருக்கிறாளே என்ற பொறாமை அக்காவுக்கு. அதைத் தீர்த்துக் கொள்ள, மாலினி எழுதிய நாவலைத் தன்னுடைய நாவல் என்று பறை சாற்றிக் கொள்கிறாள். அவள் பாவம் என்று கண்ணீர் விட்டது எல்லாம் பொய் என்ற உண்மை வெளிப்படும்போது அவளுடைய பிம்பம் சிதைகிறது.
அந்தத் தங்கை, பெற்றோருக்குப் பிறகு தன்னைத் தாய் போன்று கவனித்துக் கொள்ளும் அக்காவின் கணவரின் மேலேயே தவறான ஆசைப் படுகிறாள். மற்றவர்க்கு முதலில் அவள் மேல் தோன்றும் பரிதாப பிம்பமே சிதைந்து போகிறது.
மஞ்சுளாவின் கணவன் ப்ரமோத் தன் மச்சினிக்குத் தந்தை போன்று இருக்க வேண்டியவனே தவறான எண்ணம் கொண்டு அவளோடு பழகுகிறான். இந்த இடத்தில் ஒரு வசனம் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. மஞ்சுளாவிடம் உருவம் ப்ரமோத் அவளோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டதில் சிக்கல் இருந்ததா என்று கேட்கும்போது அவள் சொல்லும் பதில்,”அவனுக்கு இடுப்புக்குக் கீழே செயல்படாத தன்மை எதுவும் இல்லையே” என்பது. ஆண்கள்,. பெண்களைத் தங்கள் உடல் சுகத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை என்பதற்கு ப்ரமோத் போன்ற ஒருவன் ஒரு சிறந்த பாத்திரப்படைப்பு. அவன், மாலினி இறந்த பிறகும், , அவளைக் கவனித்துக் கொள்வதற்காக வந்து கொண்டிருந்த தாதியை வரச் சொல்லலாமே என்று சொல்கிறான் .மஞ்சுளாவுக்குத் தன் காதலைச் சொல்லும்போதே அவளுடைய தோழி லூசிக்கும் காதல் கடிதம் கொடுத்து, அதை அவள் அப்போதே மறுத்தவள்.ஆனால், அவன் மஞ்சுளாவைப் பிரிந்தவுடன், லூசியுடன் போய் ஒட்டி கொள்கிறான். அவன் படித்தவன், ஒரு இளம்பொறியாளர் என்கின்ற பிம்பம் சிதைந்து, அவன் ஒரு பெண். பித்தன்
என்ற பிம்பமே தெரிகிறது.
இப்படி எல்லோரும் வெளியில் ஒரு பிம்பமாகவும், மனதிற்குள் வேறொன்றாகவும் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது.
மஞ்சுளாவுக்கு சிறு வயதிலிருந்தே, பெற்றோர் தங்கை மேல் அன்பாக இருப்பது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. மேலும், அவள் உடல் குறைபாட்டுடன் இருந்தாலும், அதிக அறிவும், அழகும், திறமையும் உடையவளாக இருப்பதும் மனதில் பொறாமையை உண்டாக்குகிறது. பெற்றோர், மாலினி குறையுள்ள குழந்தையாக இருப்பதால் அவள் பெயரில் வீட்டை வாங்கி வைத்திருப்பது தான் முக்கியமானவள் இல்லையோ என்ற உணர்வை ஆரம்பத்திலேயே ஏற்படுத்தியிருக்கிறது. குறைபாடுள்ள குழந்தை மேல் பெற்றோருக்கு இயற்கைவாகவே அதிக அன்பும், அக்கறையும் தோன்றுவதுண்டு. ஆனால், அதே, மஞ்சுளா, தங்கை மேல் அக்கறை காட்டியது போல் பெற்றோர், தன் மேல் அக்கறை காட்டியிருந்தால், தானும் இன்னும் கூட வாழ்க்கையில் சிறப்பாக இருந்திருக்க முடியும் என்று மனம் கொள்ளா தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்து விட்டது. அதனாலேயே,, அவளை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக ஏங்க வைத்து விட்டது.. தங்கை உயிருடன் இருக்கும் வரை அதை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அவள் இறந்த பிறகு, அவள் எழுதிய நாவலை தான் எழுதியதாக உலகத்துக்கே அறிவித்து, அதற்கான பரிசினைப் பெறுவதில் ஒரு பொய்யான சுகத்தைத் தேடிக் கொள்கிறாள்.
பொறாமை, தாழ்வுணர்ச்சி, காமம், பொய்மை இவையெல்லாம் மனித மனங்களில் கசடுகளாக ஆழ் மனதில் தங்கி விடுகின்றன. நிச்சயம் ஒவ்வொருவர் மனதிலும் இந்த கசடுகள் சேர்வதற்கான வாய்ப்புக் கூறுகள் அமைந்து விடுகின்றன. இந்தக் கசடுகளை நீக்கிக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள் சிறப்பாகவே வாழ்ந்து விடுகிறார்கள். மற்றவர்களோ, அவற்றை நீக்க முடியாமல், வெளியில் ஒரு மாதிரியும், உள்ளுக்குள் வேறு மாதிரியும், சிதைந்த பிம்பங்களாக வாழ்ந்து திரிகிறார்கள்.
—————————–
“அஞ்சும் மல்லிகை” யில் தம்பி சதீஷும், அக்கா யாமினியும் இங்கிலாந்தில் தங்கிப் படிக்கிறார்கள். அங்கு அவனுக்கு ஜூலியாவும், அவளுக்கு கௌதமும் நண்பர்களாகக் கிடைக்கிறார்கள். யாமினி ஓவியம் பயிலவதற்கும், சதீஷ் ஒரு இளம் விஞ்ஞானியாகவும் அங்கு வருகிறார்கள்.
சதீஷ்- ஜூலியா நட்பு காதலாக வளர்கிறது. கௌதம் யாமினி மேல் அன்பு கொள்கிறான். ஆனால், அதை அவள் எந்த இடத்திலும் ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. இடையில் டேவிட் என்று ஒரு வெள்ளையன் வருகிறான். ஏனோ அவனை யாமினிக்குப் பிடிக்கிறது. ஆனால், அவனோ, இவளை ஒரு இந்தியக் குரங்கு என்றும், கறுப்பி என்றும் அவமானப்படுத்தித்தான் பயன்படுத்திக் கொள்கிறான் ஆனாலும், அவளுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, அவளால் அவன் பிடியிலிருந்து வர முடியவில்லை. கௌதமின் உண்மையான அன்பை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவளுடைய மனப்பிறழ்வு வெளிப்பட்டு மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.
அப்போது யாமினி, தன் தம்பி சதீஷைத் தனக்குப் பிடிக்குமெனவும், தானும் அவனும் தங்கள் பழைய வீட்டில் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாகவும் அதனால் தன் வயிற்றில் அவனுடைய கரு உருவாகியது என்றும் நிறைய கதை பகிர்ந்து கொள்கிறாள். ஜூலியாவால் நம்ப முடியவில்லை.
ஒரு நாள், ஜூலியா தற்கொலை செய்து கொண்டதாகத் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சதீஷிடம் சொல்கிறாள். பிறகு அவளே அவள் காப்பாற்றப்பட்டு விட்டாள் என்றும் சொல்கிறாள். அப்படிச் சொன்னவள், ஒரு பித்து நிலை கொண்டு, தன்னையே வறுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் இறந்த பிறகு, ஜூலியா, சதீஷிடம், அவனுடைய வீட்டின் பழைய படம் ஒன்றைக் காண்பிக்கிறாள். அது ஒரு அக்காவும், தம்பியும் ஒரு வீட்டின் முன் சேர்ந்து நிற்கும் ஒரு வங்கப் படத்தின் காட்சி என்று சதீஷ் சொல்கிறான். ஜூலியா யாமினிக்கு ஏதோ மனப் பிறழ்வுதான் என்று தெளிவு பெறுகிறாள்.
இந்த நாடகத்திலும், பெற்றோர் ஒரு ஆண் பிள்ளை மேல் அதிக கவனமும், அக்கறையும் காட்டி,பெண் பிள்ளையை வீட்டு வேலை செய்யவும், வீட்டுத் தேவைக்காகவும் பள்ளிக் கூடத்தை நிறுத்துவதும் செய்திருக்கிறார்கள். பெற்றோரின் இந்த பழக்கத்தை, கவனித்து வளரும் ஒரு ஆண் குழந்தை, தானும், தன் சகோதரியை மதிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறது. அவளுக்குப் பெற்றோர் செலவு செய்வதைக் குத்திக் காட்டுகிறது.
இந்த தாழ்வுணர்ச்சியால், யாமினி ஓவியம் கற்றுக் கொள்ளவென்று தம்பியோடு வந்திருந்தாலும், அவளுக்கு அது கைகூடவில்லை.
இந்தக் கசப்புணர்வுகள், யாமினியின் மனதில் கசடுகளாகத் தங்கி விடுகின்றன. இவையே, அவளை ஒரு மன நோயாளியாக ஆக்கியிருக்கிறது.
தாழ்வுணர்ச்சிதான் மனநோய்க்கு முதற்காரணம் என்றே சொல்லலாம்.
யாமினியின் தாழ்வுணர்ச்சியே, தன்னுடைய கையை தன் தம்பியின் தோழி ஜூலியாவின் கையோடு ஒப்பிட வைக்கிறது . அன்புக்கான ஏக்கமே டேவிட் போன்ற ஒரு பெண்பித்தனிடம் தன்னை ஒப்புவிக்கச் செய்கிறது. பெற்றோரின் கரிசனமும், அன்பும் கிடைக்கப் பெறாத தனக்கு,இவற்றை அதிகமாகப் பெறுகின்ற தம்பியை தன்னோடு உறவு கொள்பவன் என்று கற்பனை செய்யவைக்கிறது. .
ஒரு இடத்தில் மல்லிகைச் செடியைப் பிடுங்கி பண்படுத்தி வேறொரு இடத்தில் நட்டு வைப்பார்கள் என்று யாமினி சொல்வதாக வருகிறது. அவள் பெற்றோரும் இவளுக்கு மனநோய் இருக்கிறது என்று தெரிந்தே அவளை இங்கிலாந்துக்கு அனுப்பியிருக்கலாம். யாமினியும், ஒரு அஞ்சும் மல்லிகையாகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறாள் என்பதை வாசகனால் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது.
——————–
இந்த மனப் பிறழ்வுக் கதைகளை கிரீஷ் அருமையான நாடகங்களாகச் செய்திருக்கிறார்.. மிகவும் த்ரில்லிங்காக படைக்கப்பட்டிருக்கும் விதம் வாசகனை கட்டிப் போடுகிறது. பாவண்ணனின் அருமையான மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நாடகம் வாசிக்கிறோம் என்ற நினைப்பையே ஏற்படுத்தாமல், அத்துணை சிறப்பாக இருக்கிறது.
இந்தப் புத்தகங்களை அழகாக குறுந்தகடு வடிவில் அச்சிட்டிருக்கும், காலச்சுவடு பதிபகத்தார் பாரட்டுக்குரியவர்கள்.