ஐ.கிருத்திகா

ஆழ்நிலைப் படிமங்கள்

                               ஐ கிருத்திகா

 

                    ” என்னத்  தெரியிதா……?”

அவள்  குனிந்து  நெஞ்சில்  கைவைத்துக்  கேட்டாள். சிவப்பு கலரில்  பெரிது, பெரிதாய்  பூப்போட்ட  புடவை  கட்டியிருந்தாள். ரத்த  சிவப்பில்  முகத்திலறைகிறமாதிரி  இருந்தது  அவள்  உடுத்தியிருந்த  புடவை.  தெரியும்  என்று  தலையாட்ட  சின்னப்பொண்ணுக்கு  தயக்கமாயிருந்தது. அந்த  முகம்  எப்போதோ  கனவில்  ஒருநொடி  தோன்றி  மறைந்த  முகம்  போல்  அவளுக்குப்பட்டது. மூளையின்  ஞாபக  அடுக்குகளில்  ஒரு  தீர்க்கமான  உருவமாக  அது  பதிந்திருக்காமல்  அலசலாக  இருந்ததில்   சின்னப்பொண்ணு  லேசாக  இதழ்  பிரியாமல்  புன்னகைத்து  வைத்தாள்.

அடுக்கடுக்கான  படிமங்கள்…….ஒன்றன்மேல்  ஒன்றாய்  அடுக்கி  வைக்கப்பட்ட  படிமங்கள். கோப்புகள்  போல்  மூளையில்  ஏராளமான  ஞாபகப்படிமங்கள். அடியிலிருந்து  உருவமுடிந்ததேயொழிய  மேலுள்ளதை  அசைக்கக்கூட  முடியவில்லை.  ரொம்ப  யோசித்தால்  அடுக்குகள்  குலைந்தன. கருப்பு  வெள்ளையில்  சிலதும், வர்ண  சிதறல்களாய்  சிலதும்  கலந்து  கட்டி  நவீன  ஓவியம்  போல  புரியாமல்  குழப்பின.  சின்னப்பொண்ணு  மெதுவாக  கால்களை  நீட்டி  கைகள்  ஊன்றி  இடுப்பை  நகர்த்தி  படுத்துக்கொண்டாள்.

” இது  எப்புடி  சின்னம்மாவுக்கு  வந்துச்சு….?”

சிவப்புப்  புடவை  கேட்க,  அந்த  வீட்டிலியே  இருப்பவள்  முகத்தை  ஒருமாதிரி  வைத்துக்கொண்டு  தலையாட்டினாள்.

“அதான்  அத்தாச்சி  எங்களுக்கும்  புரியல. டாக்டர்ட்ட  அதப்  பத்தி  கேட்டா, இப்பெல்லாம்  இது  ரொம்ப  பேருக்கு  வருதுங்குறாரு.”

அவள்   சொல்லிவிட்டு  எழுந்து  கொல்லைப்பக்கம்  செல்ல, சிவப்புப்  புடவைக்காரி  சின்னப்பொண்ணைப்  பார்த்தாள். சின்னப்பொண்ணு  பார்வையை  தழைத்துக்கொண்டாள். இருவரும்  தன்னைப்பற்றித்தான்  பேசினார்கள்  என்பது  அவளுக்கு  புரியாமலில்லை.

‘ அதென்னவோ  வந்துவிட்டதாக  இவள்  என்னைக்காட்டி  கேட்க, அவளும்  ஆமாம்  சாமி  போட்டாளே. அப்படியென்ன  எனக்கு  தெரியாமல்  நாசூக்காய்  எனக்குள்  வந்து  உட்கார்ந்துகொண்டது….’

யோசித்தவளுக்கு  ஒன்றும்   புரியவில்லை. பேசாமல்   கண்களை  மூடிக்கொண்டாள்.

என்னத்  தெரியிதா  என்று  கேட்டதை  வைத்து  அவள்  ஏற்கனவே  அறிமுகமானவள்தான்  என்கிற  ஐயமில்லா  தீர்மானத்துக்கு  சின்னப்பொண்ணு  வந்திருந்தாள். ஆனால்   யாரென்று  தெளிவாகவில்லை. நிறைய  யார்- கள்  அவளெதிரே  வந்து,  என்னைய  ஞாபகமிருக்கா  என்கிறார்கள். ஒங்க  பேரென்ன  என்று  கூட  கேட்கிறார்கள். அப்போதெல்லாம்  அவளுக்கு  சுருக்கென்று  கோபம்  வருகிறது.

” சி….சின்னப்பொண்ணு…..”   என்கிறாள்  மெலிதாக.

” புருசன்  பேரென்னா…?”

அன்று  வந்த  உயரமான  ஆசாமி  புருவம் உயர்த்தி கேட்க, சட்டென்று  மனதில்  ஒரு  வெளிச்சப்புள்ளி  விழுந்து  அது  அப்படியே  பற்றிப்படர்ந்து  சுடர்  விட்டது.

முகத்தில்  ஆயிரம்  விளக்குகளின்  ஒளி,  கண்களில்  நட்சத்திர  ஜொலிப்பு.

” புருசன்  பேரச்  சொல்லு…”

” பேரு….சொல்லக்கூடாது….”

சின்னப்பொண்ணு  முனகினாள்.

” ஏனாம்…?”

” அது…..அது  அப்புடித்தான்….”

” என்னவோ  போ…ஒந்தலையெழுத்து  இந்தமாரி  ஆவும்னு  நான்  நெனக்கவேயில்ல.”

அவர்  முணுமுணுத்துவிட்டு  துண்டை  உதறி  தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிப்போனார்.

சின்னப்பொண்ணு  மெல்ல  எழுந்து  வாசல்  பக்கம்  வந்து  நின்றாள். தெரு  வெறிச்சோடிக் கிடந்தது. மாலைவரை  கொளுத்திய  வெயில்  அடங்கி  நிலவு  மெல்ல  எட்டிப்பார்த்த  இரவில்  காற்று  லேசாக        வீசியது . வெக்கை  காற்று. காலடித்தடங்களின்  மிச்சங்களை  சுமந்து  கிடந்த  தெருப்புழுதியில்  அவளின்  பார்வை நிலைத்து  மீண்டது.

” எப்பப்  பாத்தாலும்  கலகலன்னு  பேசிக்கிட்டிருக்கும். எல்லாம்  பழங்கததான். தீவாளிக்கு  அப்பா  வாங்கிக்குடுத்த  சீட்டி  பாவாடைய  கட்டிக்கிட்டு  மத்தாப்பூ  கொளுத்துனது, பதினாலு  வயசுல  வயசுக்கு  வந்தது, புட்டு  சுத்துனது, பள்ளிக்கூடத்துல  வாத்தியார்ட்ட  அடிவாங்குனது, தாமர க்கொளத்துல  நீச்சலடிச்சது, வேப்பம்பழம்  பொறுக்குனது, டென்ட்டு  கொட்டாயில  மணல்  குமிச்சி  ஒக்காந்து  சினிமா  பாத்ததுன்னு  மாத்தி, மாத்தி  எதையாவது  சொல்லிக்கிட்டேயிருக்கும்.”

சற்று  தடிமனான  அவன்  சொல்ல, அந்த  வீட்டிலேயே  இருப்பவள்  தொடர்ந்தாள்.

” ஒரு  குறிப்பிட்ட  காலம் வரைக்கிம்  அத  சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதுக்கப்புறம்   என்  மாமனாரு  பொண்ணுப்  பாக்க  வந்தது, இவுங்கள  கட்டிக்கிட்டது, புள்ளைங்க  பொறந்ததுன்னு  அம்புட்டையும்  வாய்  ஓயாம  சொல்ல  ஆரமிச்சாங்க. அதுவும்  மெல்ல, மெல்ல  கொறஞ்சி  இப்ப  பேச்சே  கெடையாது. ஏதாவது  கேட்டா  யோசனையா  பாப்பாங்க. நாலஞ்சி  தடவ  அழுத்திக்கேட்டா, வாயத்  தொறப்பாங்க. பேருமட்டும்  ஞாவகம்  இருக்கு. கேட்டா  சொல்லிடுவாங்க. மத்ததுக்கு  இஸ்டமிருந்தா  சொல்றது, இல்லாட்டி  வாயடைச்சி  ஒக்காந்துருக்கறது….இப்புடித்தான்  போவுது.”

அவள்  சொல்லிவிட்டு  அமைதியானாள்.

ஒரு  கனத்த  மௌனம்  அடர்த்தியாய்  அங்கு  பரவிக்கொண்டது. அவர்கள்  பேசியதை, தெருவை  வெறித்துக்கொண்டிருந்த  சின்னப்பொண்ணு  கேட்டுக்  கொண்டுதானிருந்தாள். சிலசமயம்  பேச்சை  உள்வாங்கும்  மனம்  அநேக  நேரங்களில்  வெட்டவெளியாய்  வெறிச்சோடிக்கிடக்கும். சுற்றுப்புற  சலனங்களால்  ஒரு  துரும்பளவும்  பாதிப்பு  ஏற்படாதமாதிரி  அவள்  கல்  போல்  அமர்ந்திருப்பாள்.

எல்லோரும்  ஏன்  தன்னைப்பற்றியே  பேசுகிறார்கள்  என்பது  மாதிரியான  ஐயம்  வெகு  அபூர்வமாய்  ஏற்படும். அரவமற்ற  குளத்தில்  ஒரு   சிறு  கல்லை  விட்டெறிந்து  வட்ட  நீர்ப்பரப்புகளை  உருவாக்குவது  போல  உள்  விழும்  ஐயம்  சுழன்று, சுழன்று  மெல்ல  அமிழ்ந்து  போகும். அவள் முன்னே  கேள்விகள்  குவிந்து  கிடக்கின்றன. எளிதான  கேள்விகளும், அதற்கு  எதிர்பார்க்கப்படுகின்ற  தெரிந்த  பதில்களும். எல்லாமே  கடினமான  கேள்விகளாக  அவளுக்குப்  பட்டன. விடை  தெரியாத  மாணவன்  போல்  அவள்  மலங்க, மலங்க  விழித்தாள்.

” ஆரம்பத்துல  சம்பவங்களை  மறப்பாங்க. அப்புறம்  ஆளுங்களை……போகப்போக  பேச, சாப்பிட, குளிக்க…..”

டாக்டர்  சொன்னபோது  சின்னப்பொண்ணு  வெறுமனே  அருகில்  அமர்ந்திருந்தாள். சம்பவங்களின்  நடுவே, உரையாடல்களின்  இடையே, ஒவ்வொரு  காட்சியிலும்  அவள் மூன்றாம்  நபராகவே  இருந்தாள். காட்சிக்கு  சம்மந்தமில்லாத, தொடர்பற்ற  ஒரு  அனாவசிய  ஆளாகவே  அவள்  அங்கு  ஒரு  இடத்தை  ஆக்கிரமித்திருந்தாள்.

அனைத்து  விரல்களும், பார்வைகளும்  தன்னைச்சுட்டுவது  அவளுக்கு  விசித்திரமாயிருந்தது. அதுபற்றி  நிறைய யோசிக்கமுடியவில்லை . மூளையில்  முன்பதிவுகள்  ஏறக்குறைய  அழிந்து  போயிருந்தன. ஒரு  புது  அழிப்பானை  வைத்து  எழுத்துக்களை  அழித்து  காகிதத்தை  வெள்ளையாக்கியது  போல  மேலடுக்குகள்  பளீரென்று  புத்தம்புதியதாய்  பளிச்சிட்டன. அடியிலிருந்தவைகளில் ஒருசில    மங்கலாக, கொஞ்சம்  மக்கிப்போய்  பலவீன  தோற்றம்  காட்டுகின்றன. எதையும்  கூர்ந்து  கவனிக்கமுடியவில்லை. காட்சிகள்  கண்களில்  படிந்த  அளவுக்கு  மனத்திரையில்  பதியவில்லை. சுற்றிலும்  அறிமுகமில்லாத  மனிதர்களாய்  நடமாடிக் கொண்டிருப்பது போல  சின்னப்பொண்ணு  உணரத்தலைப்பட்டதிலிருந்தே  அவளின்  அசைவுகள்  குறைந்தன.

” ஆத்தா  பொழுதுக்கும்  மோட்டுவளைய  வெறிச்சிக்கிட்டே  படுத்துருக்கும். எப்பனாச்சும்  எந்திரிச்சி  வெளில  போயி  தெருவ  உத்துப்பாக்கும். மனசுல  என்னா  நெனக்கிமோ, திரும்ப  வந்து  படுத்துக்கும்.”

அந்த  சிறுபெண்  கவலையோடு  தன்  வயதையொத்த  பெண்ணிடம்  சொன்னாள்.

” எங்காத்தாவுக்கும்  இதே  வயசுதான். ஆனா  அதுக்கு  எல்லாம்  ஞாவகமிருக்கு. இப்பக்கூட  புல்லறுக்க  மத்தப்  பொம்பளைங்களோட  வயக்காட்டுப்பக்கம்  போயிருக்கு.”

” இதுவும்  அப்புடி  இருந்ததுதான….இப்பத்தான்  ஆறேழு  மாசமா  பச்சப்புள்ளையாட்டம்  பேசாம, கொள்ளாம  கெடக்கு.”

இரண்டுபேரும்  சின்னப்பொண்ணை  கைக்காட்டி  பேசிக்கொண்டார்கள்.

” யம்மா….எந்திரிச்சி  ஒக்காந்து  சாப்புடு…”

அந்த  தடிமனான  ஆசாமி  அவளை  மெல்ல  எழுப்பி  அமரவைத்தான். தட்டில்  சுடச்சுட  சோறும், ரசமும் போட்டு  அந்த  வீட்டுக்காரி  அருகில்  வைத்தாள். சோற்றிலிருந்து  ஆவி  மேல்கிளம்பி  நாசியை  வருடிற்று. புழுங்கலரிசிச்சோறுக்கே  உரிய  வாசம்  பசியை  கிளர்ந்தெழச்செய்தது  அனைவருக்கும், சின்னப்பொண்ணைத்  தவிர.

” பாவக்காய  வெங்காயம், தக்காளி  சேத்து  காரப்பொடி  போட்டு  தளதளன்னு  வதக்கியிருக்கேன். ஒங்களுக்கு  ரொம்ப  புடிக்குமில்ல. தொட்டுக்கிட்டு  சாப்புடுங்க.”

அவள்  ஒரு  கரண்டி  காயை  தட்டின்  ஓரத்தில்  வைத்தாள். மஞ்சளும், சிவப்புமாய்  எண்ணெய்  மினுமினுப்போடு  தட்டில்  கிடந்த  பாகற்காயை  பார்த்தவள்  அதை  மெல்ல  ஒதுக்கிவிட்டு  சோற்றை  விரல்களால்  அளைந்தாள்.

” ஒங்களுக்கு  புடி……..”

அவள்  சொல்லவந்ததை  அவன்  சைகை  செய்து  தடுத்தான்.

” வுடு…வேணுங்குறத  சாப்புடட்டும். வெறும்  சோறு  தின்னு  வயிறு  நெறஞ்சாலும்  சரிதான். வரவர  ஒடம்பு  பலகீனமாயிட்டே  வருது. ”

அவன்  குரல்  கரகரத்தது. சட்டென்று  துளிர்த்த  கண்ணீரை  மறைக்க  பார்வையை  தழைத்துக்கொண்டான். சின்னப்பொண்ணு  சோற்றை  கையிலெடுத்தாள். விரலிடுக்கின்  வழியே  பருக்கைகள்  தட்டில்  உதிர்ந்தன. மனவிரிசலுக்கிடையிலிருந்து  சம்பவங்கள்  உதிர்வது  போல  பருக்கைகள்  உதிர்ந்து  கொண்டேயிருந்தன. வாய்க்குப்போனது  ஒரு  சில  பருக்கைகள்  மட்டுமே.

” நான்  வூட்டி  வுடட்டுமா…?”

அவன்  கேட்டான். சின்னப்பொண்ணு  அதிர்ச்சியாய்  பார்த்தாள். அந்நிய  ஆண்  ஊட்டி  விடுவதை  எப்படி  ஏற்றுக்கொள்ள  முடியும்  என்பது  போலிருந்தது  அவளது  பார்வை.

” நான்  வூட்டி  வுடுறம்மா…அப்பதான்  நீ  கொஞ்சமாச்சும்  சாப்புடுவ….”

அவன்  தட்டை  கையிலெடுக்க, சின்னப்பொண்ணு  கையை  நீட்டினாள்.

” வேணாங்க……நானே  சாப்புடுறேன்.”

மெலிதாக  முனகினாள். அவன்  திடுக்கிட்டு  அந்த  வீட்டுக்காரியைப் பார்த்தான்.

” அம்மா  என்னைய  மறந்துருச்சா….?”

” அ….அப்புடித்தான்  நெனக்கிறேன். அதுக்காவ  நீங்க  மனச  வுட்ராதீங்க. இப்புடியெல்லாம்  நடக்கும்னு  டாக்டர்  அப்பவே  சொன்னாரில்ல.”

அவள், அவனைத்  தேற்றினாள். சின்னப்பொண்ணு  உதிர, உதிர  சோற்றை  அள்ளி  வாயில்  போட்டுக்கொண்டாள். செய்யும்  வேலையில்  பற்றில்லாது,  கலைந்த  சிந்தனையுடன்  உண்டதில்  செரித்தது  கொஞ்சம், சிதறியது  அநேகம். சின்னப்பொண்ணை  பார்க்க  வந்தவர்கள்  சொல்லி, சொல்லி  மாய்ந்தார்கள்.

” எடுத்துகட்டி  வேல  செய்யிற  பொம்பள. கலியாணம், காச்சின்னா  ஒடனே  ஓடியாந்துருவா. சமயக்காரனுக்கு  சாமான்  எடுத்து  குடுத்து, பந்தி  கவனிச்சி  ஒரு  கொறை  இல்லாம  பாத்துக்குவா. செஞ்ச  வேல  தொலங்கும். நல்ல  கைராசிக்காரி. இன்னிக்கி  அம்புட்டையும்  மறந்துட்டு  கல்லு  கணக்கா  ஒக்காந்துருக்காளே. இது  அந்த  சாமிக்கே  அடுக்காது.”

ஒரு  பெண்மணி  முந்தானையில்  மூக்கை  சிந்திக்கொண்டாள். எத்தனை  பேர்  வந்து   என்ன  சொல்லி  என்ன….ஒரு  மண்ணும்  சின்னப்பொண்ணுக்கு  விளங்கவில்லை.

உரிக்க, உரிக்க  வெங்காயத்தில்  ஒன்றுமில்லாமல்  போகும். அதுபோல  வரவர நினைவுகள்  உரிந்து, உரிந்து  விழுந்து  கொண்டேயிருந்ததில்  மூளையின்  ஞாபக  அடுக்குகள்  வெற்றிடமாகிக்  கொண்டிருந்தன.

ஒரு  நிலைப்பாடற்ற  தன்மையில், பொருந்தி  போகமுடியாத  சூழலில்  சின்னப்பொண்ணு  அவ்வபோது  அசையும்  ஜடமாக  உட்கார்ந்திருப்பதும், படுப்பதும், எப்போதாவது  எழுந்து  வாசல்  நோக்கி  செல்வதுமாக  இருந்தாள்.

அன்று  அந்த  சிறுபெண்  சின்னப்பொண்ணை  கைப்பிடித்து  வெளியே  அழைத்து  வந்து  அமரவைத்தாள். சித்திரை  வெயிலின்  உக்கிரம்  தணிந்த  இரவுப்பொழுது. வேப்பமரத்தின்  இலைகள்  லேசாக  சலசலத்ததில்  புழுக்கம்  அப்பிக்கிடந்த  சூழ்நிலை  கொஞ்சம் மாறிற்று. நிலவை  மறைப்பதும், விடுவிப்பதுமாக  விளையாட்டுக்காட்டின  மேகக்கூட்டங்கள். சின்னப்பொண்ணு  நிலவை  வெறித்தாள். வரைந்து  வைத்ததுபோல்  வட்டமாக, தேங்காய்  பத்தை  போல்  அவ்வளவு  வெண்மையாக  இருந்தது  நிலவு.

” அது  என்னா  சொல்லு  பாப்போம்.”

அவன்  கைக்காட்டி கேட்டான். அடிக்கடி  பேச்சு  கொடுக்க  சொல்லி  டாக்டர்  சொல்லியிருந்தார். அவ்வளவு  நாட்கள்  அசிரத்தையாக  இருந்தவன்  திடீரென  வேகம்  வந்ததுபோல்  கேள்விகள்  கேட்க  ஆரம்பித்திருந்தான்.

” சொல்லு  ஆத்தா, அது  என்னா….?”

சிறுபெண்  அழுத்தமாக  கேட்டது.

” நெ……லா…..”

குரல்  பிசிறுதட்டி  வந்தது. அவன்   முகத்தில்  ஒற்றைச்சுடர்  ஒளிர்விட்டது.

” அம்மாவுக்கு  நெலா  தெரியிதுடி….”

மகிழ்ச்சியோடு, வேலைமுடித்து  வந்தமர்ந்தவளிடம்  சொன்னான்.

“ மேல  கேளுங்க….”

அவள்  சைகை  காட்ட, சிறுபெண்  கெஞ்சியது.

” நான்  கேக்குறேம்ப்பா…”

” சரி, கேளு…”

” யாத்தா,,,, இது  என்னா……?”

கையில்  அணிந்திருந்த  வளையலைக்  காட்டிக்  கேட்டாள். சின்னப்பொண்ணு  சிலநொடிகள்  அமைதியாயிருந்துவிட்டு,

” வ….ளவி…..”  என்க,

” சூப்பரு…..ஆத்தாவுக்கு  ஞாவகம்  வருது” என்று

சிறுபெண்  துள்ளிக்குதித்து  ஆர்ப்பரித்தது.

” அம்மாவுக்கு  ஞாவக  சக்தி  திரும்புதுடி…”

சந்தோஷித்தவன் கேள்விகள்  கேட்டே  அவளை  பழைய  நிலைக்கு  திருப்பிவிடுவது   என்கின்ற   முனைப்போடு  அடுத்த  கேள்விக்கணையை  அவளை  நோக்கி  வீசினான்.

” நான்  யாரு….?”

சின்னப்பொண்ணு  சுண்டுவிரலைக்  கடித்துக்கொண்டிருந்த  எறும்பை  தூக்கி  தூர  எறிந்தாள்.

” அத்த….சொல்லுங்க, இவுரு  யாரு….?”

அவள், அவனை  தொட்டுக்காட்டி  கேட்டாள்.

” நான்  யாரு….நான்  யாரு……?”

அவன்  பரபரத்தான்.

” நீ………..நீங்க……….”

காற்று  நிரம்பிய   பலூனில் ஒற்றை  ஊசி  ஏற்படுத்திய  வெடிச்சத்தம்  போல  அவனுள்ளே  ஏதோ  சத்தம்  கேட்டது.

அவன்  முகம்  கறுத்து  சிறுத்தது. அதன்பின்  கேள்விகள்  கேட்பதை  அவன்  அறவே  விட்டுவிட்டான். தேய்கின்ற  நிலவு  பவுர்ணமியில்  பிரகாசிப்பதைப்  போல  மாற்றம்  நிகழும்  என்றெண்ணியவனுடைய  நம்பிக்கை  பொய்த்துப்போனது.

கூடத்தில்  கிடந்த  நாற்காலியும், ஒற்றை  மரப்பலகையும்  சின்னப்பொண்ணின்  நேரங்களை  பகிர்ந்துகொண்டன. வெயிலேறிய  மதியப்பொழுதுகளில்  அவள்  வியர்வை  கசகசப்போடு  பலகையில்  படுப்பதும், பின்  மெல்ல  எழுந்து  வந்து  நாற்காலியில்  அமர்வதுமாக  இருப்பு  கொள்ளாமல்  தனித்தியங்கிக் கொண்டிருந்தாள்.

யோசனைகளற்ற  மனவெளியில்  மெலிதான  ஒருபயம்  சன்ன   இழையாக  ஓடிக்கொண்டிருந்தது.

யாரையோ  தேடுவதும், காணும்  முகங்களின்  அந்நியத்தன்மையில்  மருள்வதும்  அவளுடைய  முகக்குறிப்பில்  தெரிந்தது. புடவையிலிருந்து  நைட்டிக்கு  மாறியபோதும், தலை  மழிக்கப்பட்டபோதும்  அவள்  உணர்வுகளில்  சிறுதுளி  மாற்றமுமில்லை.

”   பொடவ  கட்டிக்க  தெரியல. நான்  கட்டி  வுட்டாலும்  காமிக்கிறதில்ல. தல  பூரா  பேனு  எழைய  ஆரமிச்சிடுச்சி. அதான்  மொட்டையடிச்சி  நைட்டிய  போட்டுவுட்டாச்சி…….”

அந்த வீட்டுக்காரி  போனில்  யாரிடமோ  சொல்லிக்கொண்டிருந்தாள். மறுமுனையில்  ஏதோ  கேட்டிருக்கவேண்டும்.

” அதெல்லாம்  எதுவுமே  ஞாவகமில்ல. நேத்திக்கி  நின்னவாக்குல  ஒண்ணுக்கு  போயிட்டாங்க. ரொம்ப  செரமமாத்தான்  இருக்கு. அந்தசாமிதான்  நல்ல  வழி  காட்டணும்.”

அவள்  சொல்லிவிட்டு  பெருமூச்சு  விட்டபடி  போனை  வைத்தாள். சின்னப்பொண்ணு  அவளையே  பார்த்துக்கொண்டிருந்தாள். வரவர  பார்வையின்  நிலைத்த  தன்மையில்  ஒட்டமுடியாமல்   காட்சிகள்  விலகி  நழுவின. நழுவிய  காட்சிகள்  பாதரச  குண்டுமணிகள்  போல  உதிர்ந்து  ஓடின. உள்ளே  எதுவுமற்ற  அந்தகாரம். அமைதியாய்  இருந்தது  மனசு.

 

திடீரென  மூளைக்குள்  மின்மினிப்பூச்சிகள்  பறப்பது  போன்ற  உணர்வு சின்னப்பொண்ணுக்கு. மின்மினிப்பூச்சிகள் அங்கிருந்து      மினுக்கியபடியே  பறந்து  கண்கள்  வழியே வெளியேற, காணும்  வெளியெங்கும்  மின்மினிப்பூச்சிகள்.

“அது  ஒடம்புல  என்னாம்மா  இருக்கு…..பறக்குறப்ப  பளிச்சி, பளிச்சின்னு  வெளிச்சம்  தெரியிது.”

சின்னப்பொண்ணு  கண்களில்  ஆர்வம்  தேக்கி  கேட்க, அவள்  கையை  பற்றியிருந்த  அம்மா  சொன்னாள்.

” அது  ஒடம்புல  வெளக்கு  வச்சிக்கிட்டு  பறக்குதுடி. அதான்  இப்புடி  வெளிச்சமா  தெரியிது….”

” எனக்கு  அத  புடிச்சி  தர்றியாம்மா….?”

” எங்கைகிட்ட  வர்றப்ப  புடிச்சி  தர்றேன்டி.”

அம்மா  அவள்  கன்னம்  திருகி  முத்தமிட்டாள். இளஞ்சூடான  முத்தம். புறங்கையில்  மொதுமொதுவென்று  வெயில்   காய்ந்த நீர்  படுவது  போலிருந்தது

வாசமடிக்காத  வியர்வை  அம்மாவினுடையது. சின்னப்பொண்ணு  ஐந்து  வயதுவரை  தாய்ப்பால்  குடித்தாள். விளையாடிக்  களைத்து  ஓடி வருபவள்  அம்மாவின்  மடியில்  பொத்தென்று  விழுந்து  சட்டை  விலக்கி  பொங்கி  வழியும்  மார்புகளில்  ஒன்றைப்  பற்றிக்கொண்டு  இன்னொன்றில்  இதழ்   பொருத்திக்கொள்வாள். பீரிடும்  அமுது  இரண்டு  நிமிடங்களில்  மணி  வயிற்றை   நிறைத்து  விடும். இன்னொருபுறம்  குடிக்க  தள்ளாடுவாள். அம்மா  விடமாட்டாள்.

” கொஞ்சம்  குடிச்சிட்டுப்  போடி  தங்கம். ”

இழுத்து  வற்புறுத்துவாள்.

” வேணாம்….”

சின்னப்பொண்ணு  தலையாட்டி   ஓடுவாள்.

” அரவயிறு  நொம்புனதும்   எந்திரிச்சிட  வேண்டியது. அப்புறம்  ரெண்டே  நிமிசத்துல  ஓடிவரவேண்டியது. ”

செல்லமாய்  திட்டு  கிடைக்கும். பெரும்  திறப்புக்காக  காத்திருக்கும்  சுரப்பு  விறுவிறுக்கத்  தொடங்கும். அம்மா  தவித்துப்போவாள். பால்  வாசமடிக்கும்  அம்மா. அது  அம்மாவின்  பிரத்தியேக  வாசமாய்  சின்னபொண்ணின்  மனதில்  பதிந்து  விட்டிருந்தது. அம்மா  வேலியோரம்  நின்று  கிளேரியா  மரத்தடியில்  பால்  பீய்ச்சி  விடுவாள். ஒருமுறை  சின்னப்பொண்ணு  பார்த்துவிட்டாள்.

” எனக்கு  வேணும்…..அதுக்கு  ஏன்  குடுத்த…?”

புடவையைப்  பற்றியிழுத்து  தையதக்கா  என்று  குதித்து, குதித்து  அழுதாள். அம்மா  அவளை  வளைத்து  அணைத்துக்கொண்டாள். நார்ப்பட்டின்  மொரமொரத்த  ஸ்பரிசத்தோடு  கூடிய  பால்  வாசம்  வீசிற்று.

” பொழுதுக்கும்  மாராப்ப  நனைச்சிக்கிட்டு…..பாக்க  நல்லாவா  இருக்கு.”

அப்பாவுக்கு  ஏக  கோபம்.

” தானா  வருது. இந்தக்  குட்டியும்  வரவர  சரியா  குடிக்க  மாட்டேங்குது. கொடம்  தண்ணிய  சரிச்சி  வுட்டாப்ல  கொட்டுறத  பாக்குறப்ப  மனசு  பதறுது. அதான்  இப்பெல்லாம்  ஆட்டுக்குட்டிய  தூக்கி  மடியில  போட்டுக்குறேன். அப்படியும்  செலசமயம்  ரவுக்க  நனைஞ்சிடுது.”

குரல்  சன்னஞ்சன்னமாக  ஒலித்துக் கொண்டிருந்தது. அம்மாவின்  வாசம் கல்லிடுக்கின்  தேரைப்போல  உயிர்  தப்பி  வளர்ந்து  எட்டிப்  பார்த்து, மனவெளியில்  செஞ்சுடராய்  பற்றிப்  பரவி  கனன்று  தகித்தது.

இரவு  விடிவிளக்கின்  நீல  வெளிச்சம்  பரவிக்கிடந்த  கூடத்தில்  அனைவரும்  ஆழ்ந்த  உறக்கத்திலிருக்க   சின்னப்பொண்ணு  மெல்ல  எழுந்து  உட்கார்ந்தாள்.

” எங்கம்மாட்ட  போவணும்…..எங்கம்மாட்ட  போவணும்….?”

விசும்பத்  தொடங்கினாள்.

 

    

 

 

 

 

                     

 

 

 

 

 

கொதிப்பு

ஐ கிருத்திகா

கொடியடுப்பில் முள்ளங்கிக் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அதன் வாசம் நாசியைத் தொட்டு ராசுப்பயலை எழுப்பிவிட்டது. அவனுக்கு முள்ளங்கிக் குழம்பென்றால் பெரும்பித்து.

“எங்கம்மா முள்ளங்கிக்கொளம்பு வைக்கும் பாரு. அதுக்கு ஒரு தனி ருசிடா…” நண்பர்களிடம் கதையளப்பான்.

“நல்லா தாராளமா பருப்ப வேவுச்சி கடஞ்சி ஊத்தி இம்மாம் வெங்காயத்த வதக்கி கொளம்ப கொதிக்கவுடும். முள்ளங்கிய நெலாத்துண்டாட்டம் நறுக்கி வதக்குறப்ப ஒரு வாசமடிக்கும் பாரு. வார்த்தையால சொல்லமுடியாது.” அவன் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.

“மேல சொல்லுடா…” நண்பர்கள் தூண்டிவிடுவார்கள்.

“முள்ளங்கிக் கொளம்புன்னா மஞ்சத்தூள ரெண்டுசிட்டிக கூடுதலாத்தான் போடும் எங்கம்மா. அதனால கொளம்பு மஞ்ச, மஞ்சேர்ன்னு இருக்கும். மொதநா கொளம்பவுட மய்க்கா நா கொளம்புக்கு ருசி அதிகம்.”

” அதெப்புடிடா…?” வேண்டுமென்றே கேட்பார்கள்.

” எங்கம்மா காலம்பற எந்திரிச்சதும் மொத வேலயா மீந்த கொளம்ப கொடியடுப்புல போட்டு சுண்டவைக்கும்.அதுல ரெண்டு கைப்புடி முருங்கைக்கீரைய உருவிப் போட்டுடும். அந்த வாசம் புடிச்சா நாக்கு ஊறும். காந்த வாசனை அடிக்கிற கொளம்புல வெந்த முருங்கக்கீர வதங்கி சவுக், சவுக்குன்னு கடிபடும். அதெல்லாம் தின்னாத்தான்டா தெரியும்.”

ராசுப்பயலுக்கு பள்ளிக்கூடம் போகும் வரை சொல்வதற்கு தினமும் ஆயிரம் கதைகளிருந்தன. நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கழியில் புத்தகப்பையை மாட்டி இருவர் மாற்றி இருவராக சுமந்து செல்வார்கள். பள்ளிக்கூடம் சற்று தூரம்தான்.

ராசுப்பயலின் பேச்சு தூரத்தைக் கடக்க தினமும் தேவைப்பட்டது. சோறு, அரசமரப்பிள்ளையார், தடி வாத்தியார், இலவச டிவியில் பார்த்த சினிமா என்று ஏதோ ஒன்று ராசுப்பயலுக்கு சொல்லக் கிடைத்துவிடும். சிலசமயம் ஏற்பாடில்லாமல் கதையை ஆரம்பிப்பான். கதை அவனைத் தன்பாட்டுக்கு இழுத்து சென்றுவிடும். நண்பர்கள் உம் போட்டபடி செல்வர்.

ஐந்தாறு பேர் ஒரு குழுவாக பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள். பள்ளிக்கூடம் கடைத்தெருவிலிருந்தது. கடைத்தெரு முடியுமிடத்தில் இடதுபுறம் திரும்பி பத்து தப்படி நடந்தால் பள்ளிக்கூடம். அந்தத் திருப்பத்தில் ஒரு பிள்ளையார் கோவிலுண்டு. அங்கு வந்ததும் பேச்சை நிறுத்தி விழுந்து கும்பிட்டுவிட்டு கிரில் கதவின் கம்பிகளில் சிந்திக்கிடக்கும் விபூதியை பூசிக்கொள்வார்கள். ராசுப்பயல் பெரும்பட்டையாக இட்டுக்கொள்வான்.

அவனுக்குப் பள்ளிக்கூடம் செல்வதொன்றும் அவ்வளவு விருப்பமான செயலாக இருக்கவில்லை. மதியசோறும், முட்டையும் அவனை வா, வாவென்று கூப்பிட்டதில் போய்க்கொண்டிருக்கிறான். பள்ளி முடிந்து வீட்டுக்குவருபவன் புத்தகப்பையை கடாசிவிட்டுத் தெருப்புழுதிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவான் .

“வெளக்கு கொளுத்தியாச்சி. இந்தப் பயல இன்னும் காணும். பொஸ்தவத்த எடுத்து ஒரு எளுத்து படிக்க மாட்டேங்கிறான். நல்லவிதமாவும் சொல்லிப் பாத்துட்டன், வெளக்கமாத்தால வெளுத்தும் பாத்துட்டன். வெளங்காத பய….அவுங்கப்பனாட்டமே ஊர் மேய கெளம்பிடுறான்.”

ஈசுவரி பக்கத்து வீட்டு முத்தரசியிடம் புலம்பித் தீர்த்தாள். நாலெழுத்து படித்து மகன் உருப்பட்டுவிட வேண்டுமென்பதுதான் அவள் நினைப்பு.

“பள்ளிடத்துல பேக்கு, டவுசர், சட்ட, பொஸ்தவம் எல்லாம் குடுத்து சோத்தையும் போட்டு படிக்க சொல்லுறாங்க. புத்தியுள்ள புள்ள அத பயன்படுத்திக்கிட்டு முன்னேறி வந்துடும். இது என்னாவுமோ, மண்ணாத்தான் போவுமோ…” தலையிலடித்துக்கொள்வாள்.

மழை வரும் போலிருந்தது. மாடக்குழியில் ஏற்றி வைத்திருந்த விளக்கு, வீசிய காற்றுக்கு அல்லாடியது. ஈசுவரி ஆடுகளைப் பக்கவாட்டிலிருந்த தொழுவத்தில் அடைத்து புல்கட்டை பிரித்து உதறிவிட்டாள். அன்று நல்ல வளப்பமான புற்கள் பெருத்த கட்டாக அறுத்துக் கட்ட கிடைத்திருந்தன. கைக்கு லாவகமாய் பிடித்தறுக்க பெரிது, பெரிதான புற்கள். ஈசுவரிக்கு மனசு நிறைந்துவிட்டது. மண்டைக்காத்தான் கண்டால் சவட்டிவிடுவான்.அவன் வயலை ஒருவரும் அண்டமுடியாது. மழைக்குப் பயந்து ஈசுவரி துணிந்து விட்டாள். நல்லவேளையாக அவன் தலைகாட்டவில்லை. புற்கள் வீச்சு, வீச்சாக வளர்ந்து கிடந்தன. ஒரேமூச்சாக அறுத்துப் பெருங்கட்டாக கட்டிவிட்டாள்.

கோடைவெயிலுக்கு எரிந்து கிடக்கும் புற்களைக் கண்டு மனம் வெதும்பி நிற்பதற்கு மாறாக பொங்கும் புதுப்புனல் போல மனம் நுரைத்துப் பொங்கிற்று. ஆடுகள் புசு,புசுவென்று மூச்சு விட்டபடியே பருபருவென்று புற்களைத் தின்றன. ராசுப்பயல் குதிரைமுகம் வரை புழுதியப்பிய கால்களோடு வந்து நின்றான். கையிலிருந்த பனையோலை காற்றாடி சுழன்று கொண்டிருந்தது.

“பசிக்கிது சோறு போடும்மா…”

குனிந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்புறம் நின்று குதிகால்களை எக்கிப்பார்த்து சொன்னான். ஈசுவரி பதில் சொல்லவில்லை.

“சோறாக்கலயாம்மா…?”

சுழன்று கொண்டிருந்த காற்றாடியைக் கட்டைச்சுவரில் வைத்துவிட்டு அடுப்புமேல் மூடியிருந்த குண்டானைத் திறக்கப் பாய்ந்தான். ஈசுவரி திரும்பி, ஓங்கின வேகத்துக்கு முதுகில் ஒன்று வைத்தாள்.

“வெளக்கு வச்ச நேரத்துல ரெண்டு வார்த்த படிச்சோமுன்னு இல்லாம தெருத்தெருவா சுத்திட்டு வந்து சோறு போடுன்னா, சோறு எங்கேயிருந்து வரும். ஒங்கப்பனா கையெளுத்துப் போட்டு சம்பாரிச்சி கொண்டாந்து கொட்டுறான்.”

அவளுக்கு ஆவேசமாக இருந்தது. முட்டைப் போல் வயிறு பெருத்திருந்த சமயத்தில் இன்னொருத்தியுடன் ஓடிப்போனவனைத் திட்டுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்க தேவையிருக்கவில்லை. எதொன்றுக்கும் அவனை இழுத்துவைத்து வசவுகளை விட்டெறிவதற்கு அவளுக்குக் கைவரப்பெற்றிருந்தது.

ராசுப்பயல் திண்ணையில் அமர்ந்தான். முதுகு திகுதிகுவென்று எரிந்தது. வலது கையை எட்டும் மட்டும் வளைத்துப் பின்புறம் துழாவி தடவிக்கொண்டான். மழைத்தூறல்கள் போட்டது. சாய்வு, சாய்வான ஊசித்தூறல்கள். மழைக்குப் பயந்துதான் அவன் இவ்வளவு சீக்கிரமாக வீட்டுக்கு வந்ததே. இல்லாதுபோனால் இருளின் வீச்சு முழுமையடைந்திருக்கும்போது மெல்ல தலைகாட்டும் பசியை உணர்ந்து அலுப்புஞ்சலிப்புமாய் விடைபெற்றுக்கொள்வான். சோறு, சோறு என்று வயிறு குதியாட்டம் போடும். தெருவில் அநேகமாய் விளக்குகள் எரிவதில்லை. இருட்டு மசி போல் அப்பிக்கிடக்கும் தெருவில் அவன் மனதிலூரும் பயத்தை அடக்க சத்தம் போட்டுப் பாட்டு பாடியபடியே வருவான்.

கையில் எப்போதும் ஒரு குச்சி இருக்கும். அதை அப்படியும், இப்படியுமாக அசைத்து தன் கவனத்தை அதில் பதித்துக்கொள்வான். ஈசுவரி வெளியே எட்டிப்பார்த்தாள். பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.

“எந்திரிச்சி வந்து சோத்தத் தின்னு. கரண்டு போச்சின்னா தொளாவணும்.”

அவன் அசிரத்தையாக எழுந்தான். புழுங்கலரிசிச்சோறின் மணம் மூக்குக்கு இதமானதொரு வாசத்தைப் பரப்ப, அக்கறையில்லாதவன் போல் தட்டின் முன் அமர்ந்தான். குண்டுபல்பின் மஞ்சள் ஒளியில் சோறு மினுமினுத்தது. உதிரி, உதிரியாய் கொஞ்சம் புளியம்பூ நிறத்தில் தட்டு நிறைய சோறு.

அள்ளித் திங்க வேண்டும்போல மனசு பரபரத்தது. ஈசுவரி குழம்பை சோற்றின் மேல் பரவலாக ஊற்றினாள். கத்தரிக்காய் துண்டுகள் சோற்றில் விழுந்தன.

“கால், கை களுவுற பளக்கமெல்லாம் இருந்தா நீ உருப்புட்டுடமாட்ட…”

ராசுப்பயல் எழுந்துபோய் ஒழுகிய மழையில் கால், கையை நீட்டி கழுவிவிட்டுவந்தான்.

“களுவிட்டன்.”

வேகமாய் அமர்ந்து குனிந்து சாப்பிடத் தொடங்கினான். பள்ளிக்கூடத்து மதியசோறு வயிறு நிரம்பத்தான். மற்றபடி அதொன்றும் ருசியாக இல்லை என்பான் அவன்.

“கல்யாண ஊட்டுல எல நெறச்சி சோறு போடுவாங்க. ரெண்டு வகை காயி, வடை, பாயசம்னு எக்கச்சக்க அயிட்டம் இருக்கும். அந்தமாரி சாப்பாடு சாப்புட்டு பாக்கணும்டா ” என்று நண்பர்களிடம் சொல்லி, சொல்லி மாய்ந்து போவான்.

தெருவில் நடக்கும் விசேஷங்களுக்கு ஈசுவரி மட்டும் போவாள். வரும்போது வடையையோ, போண்டாவையோ மடியில் கட்டிக்கொண்டு வருவாள். ராசுப்பயல் தானும் வருவதாக சொன்னால் முதுகில் சாத்துவாள்.

“இருவது ரூவாய வச்சிப்புட்டு ரெண்டுபேரு வந்து தின்னுபுட்டுப் போறாங்கன்னு பின்னாடி பேசுவாளுங்க…வேணுமுன்னா நீ போ. நான் போவல” என்பாள்.

“கறியும், கூட்டும் திங்கவா போறன். நாலு சனம் வேணுமுன்னு போறன். நாளபின்னாடி என் எளவுன்னா தூக்க நாலுபேரு வரணுமில்ல.” குரல் அழுகையில் பிசிறடிக்கும். ராசுப்பயல் பேசாமல் அமர்ந்திருப்பான்.

மழை மறுநாளும் தொடர்ந்ததில் பள்ளிக்கூடம் விடுமுறை அறிவித்திருந்தது. பள்ளிக்குப் போகாமல், விளையாடவும் போகமுடியாமல் வீடடங்கி கிடப்பது ராசுப்பயலுக்கு பெரும் அவஸ்தையாயிருந்தது. மின்சாரம் அவிந்து போயிருந்ததில் இலவச டிவி இருண்டு கிடந்தது.

திடீர், திடீரென வீசிய காற்றுக்கு கிளேரியா மரம் அசைந்ததில் பெருத்த நீர்ச்சொட்டுகள் சொட்டித் தெறித்தன. ஆடுகள் சாரலுக்குப் பயந்து நெருக்கியடித்துத் திண்ணையில் நின்றிருந்தன. தெருவடைத்த மழை. இரண்டுநாள் மழைக்கு மண் வாந்தோடிப் போயிருந்தது. முன்பு இப்படியொரு பெரு மழையில்தான் அவன் பிறந்தான்.

“அப்பிய மாசம் பொத்துக்கிட்டு ஊத்துது. கருக்கிருட்டு புடிச்சி ஊரே இருண்டு கெடக்கு. ஒருவா கஞ்சி குடிச்சிப்புட்டு கம்முன்னு படுத்துக்கிடலாம்னு பாத்தா திடீர்ன்னு வலி பொரட்டியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. முத்தரசி கொடலையத் தூக்கி தலையில போட்டுக்கிட்டு ஓடிப்போயி ஒன் பெரியாத்தாள கூட்டியாந்தா. சிம்னி வெளக்க பொருத்தி வச்சிக்கிட்டு ஆத்தா பிரசவம் பாத்துச்சி.” ஈசுவரி சொன்ன கதையை ஜோடித்து ராசுப்பயல் தன் நண்பர்களிடம் கூறுவான்.

“கொளேர்ன்னு ஒரே இருட்டாம். அப்ப துணுக்கு சுடராட்டம் நான் பொறந்ததும் எல்லாருக்கும் கண்ணு கூசிப்போச்சாம். தவமா, தவங்கெடந்தாலும் இப்படியொரு புள்ள பொறக்காதுடின்னு ஆத்தா கண்ணு தண்ணி வுட்டுச்சாம்.”

அவன் சற்று நிறம்தான். அதனால் நண்பர்கள் அதை ஒத்துக்கொண்டு பேசாமலிருந்தனர். மழை நின்று வெயில் காட்டத் தொடங்கிவிட்டது. ஈசுவரி ஆடுகளைக் கொட்டகையில் தள்ளி கட்டிவிட்டு நூறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

பகல்பொழுதில் மேயவிட்டால் பச்சையைக் கண்டமேனிக்கு பாய்ந்துவிடும். நிலத்துக்குச் சொந்தக்காரன் பிடித்து வைத்துக்கொள்வான். போய் நின்றால் காது கூச கூச்சல்போடுவான்.

பிறகு தண்டமழுது கூட்டிவரவேண்டும். அந்தப்பாடுகளுக்கு பயந்து அவள் அவிழ்த்துவிடும் வேலை வைத்துக்கொள்வதில்லை. வேலை முடிந்து வரும்போது எங்காவது புகுந்து ஒரு கட்டுப்புல் தேற்றிவிடுவாள். விடுமுறை நாட்களில் ராசுப்பயலை நச்சரிப்பாள்.

“அவுத்துட்டுப் போயி மேச்சிட்டு வாயன்டா. சும்மாதான கெடக்குற…”
அவள் கேட்கும்போதெல்லாம் அவன் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி சமாளிப்பான்.

“பரிச்ச ஆரமிக்கப்போவுது. படிக்கணுமில்ல…” என்பான்.

“பெசல் கிளாசு வச்சிருக்காங்கம்மா. பள்ளிடம் போவணும் ” என்று புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான்.

வடக்குத் தெருவில் தாழப் படர்ந்திருக்கும் மரத்தின் கிளையொன்றில் அவன் பை தொங்கிக்கொண்டிருக்கும். அந்தத் தெருவில் அவனுக்கு ஏராளமான நண்பர்களுண்டு. அவர்களுடன் சேர்ந்துகொண்டு மண்டையில் தெறிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடுவான்.

விளையாட்டு அலுக்கும் நேரங்களில் நண்பர்களுடன் கடைத் தெருவை சுற்றிவருவான். ஊரில் ஒரேயொரு கிளப் கடை இருந்தது. காலையில் போட்ட பூரி கண்ணாடிப் பெட்டிக்குள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்.

அதைப் பார்த்தபடி சற்றுநேரம் பொழுது போகும். பறக்கும் தட்டு போன்ற பூரிகள். அதன் உப்பல் ரகசியம் இன்றுவரை அவனுக்குப் பிடிபடவேயில்லை. ஒரேயொருமுறையாவது அந்தப் பூரியைத் தின்றுபார்த்துவிட மனசு ஆவலாய் துடிக்கிறது.

ஒரு செட் பூரி முப்பது ரூபாய். விளிம்பற்ற தட்டில் வாழையிலை போட்டு இரண்டு பூரிகளோடு கிழங்கு அள்ளி வைத்துத் தருவார்கள். வெளியிலிருந்து பார்த்தாலே மேசைகள் தெரியும். பொன் நிறமாய் மினுமினுங்கும் கிழங்கு தெரியும். அவக், அவக்கென்று விழுங்கும் வாய் தெரியும். ஆர்டர் சொல்லிவிட்டு ஆவலாய் பறந்தலைகிற கண்கள் தெரியும். இன்னொரு செட் என்று சொல்கிற குரலை வைத்து முதுகுகாட்டி அமர்ந்திருக்கிற காளிமுத்து மாமாவையோ, சின்னான் பெரியப்பாவையோ இனங்கண்டுகொள்ளமுடியும் .

தினம் கடையைக் கடக்கும் தருணங்களில் காற்றில் மசாலா வாடை அடிக்கும். சால்னாவோ, கிழங்கோ வாயு ரூபத்தில் வந்து மூக்கைத் தடவும். அது ஒரு சுகந்த மணம். அதை அனுபவிப்பதற்காகவே ராசுப்பயல் நடையைத் தளர்த்துவான். ஒருமுறை ஈசுவரியிடம் நைச்சியமாக கேட்டும் பார்த்தான். முப்பது ரூபாய் என்றதும் அவள் மலைத்துவிட்டாள்.

“அதெல்லாம் நமக்குத் தோதுப்படாதுடா” என்று அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். முப்பது ரூபாயில் பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வாங்கி பத்து நாட்களை ஓட்டிவிடுவாள்.

நண்பர்களில் யாராவது பூரி சாப்பிட்டதாக சொன்னால் பசி கப்பென்று காதையடைக்கும். பூரிப்பசி. அவர்கள் தின்றதை விட அதைப்பற்றி அவர்கள் கதையளப்பதைத் தாங்கிக் கொள்வது பெருங்கடினமாக இருந்தது அவனுக்கு.

தங்களுக்கும் கதை சொல்லத் திறமை வந்துவிட்டதைப்போல அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்படி, இப்படியென்று அவன் பட்டாளத்திலிருந்த அத்தனை பேரும் பூரி சாப்பிட்டிருந்தார்கள். சிலர் கடன் சொல்லி சாப்பிட்டதாக சொன்னார்கள். பின்னாடியே அவர்களுடைய அப்பாக்கள் வந்து கடனடைத்து விடுவார்களாம்.

ராசுப்பயலுக்கு முதன்முறையாக அப்பா இல்லாதது பெருங்குறையாகப்பட்டது. அதுநாள்வரை அப்பாவைப்பற்றி அவன் யோசித்ததில்லை. தெளிவற்ற பிம்பமாக கூட அவர், அவனுடைய விழிப்படலத்தில் உறைந்திருக்கவில்லை. சிறுநெல் மணியளவு கருப்பைக்குள் ஊன்றி தரித்திருக்கையிலேயே அவர் விட்டுப் போய்விட்டார்.

அம்மாவின் ஒவ்வொரு வசவின்போதும் அவரின் இருத்தல் குறித்த ஞாபகம் வரும். அம்மாதிரியான ஒரு உறவுக்கு வீரியமிருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. இப்போது பூரியின் மீதான காதலில் அவரின் நினைவு வந்தது.

காலையில் எழும்போதே ஈசுவரி அந்த சந்தோஷ செய்தி சொன்னாள். “எலே பயலே, உன் புத்தகப்பையி மேல காசு வச்சிருக்கேன். கிளப்பு கடையில பூரி வாங்கித் தின்னு.”

ராசுப்பயலுக்கு சட்டென்று காதுகள் அடைத்துக்கொண்டதைப் போலிருந்தது. திருதிருவென்று விழித்தான்.

“முப்பது ரூவாதான….?”

ஈசுவரி தலையாட்டிக் கேட்டாள். ஆவென வாயைத் திறக்க மா…..வுக்கு காற்று மட்டும் வந்தது.

“காசு பத்திரம்…”

ஈசுவரி அடுப்புச்சாம்பல் ஒதுக்கி சாணி மெழுகினாள். மூன்று பத்து ரூபாய்த்தாள்கள் பைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராசுப்பயல் புத்தகப்பைக்குள் ரூபாயை பத்திரப்படுத்திக்கொண்டான். அவசரமாக நீரை மொண்டள்ளிக் குளித்தான். பாட்டின் வார்த்தைகள் இஷ்டத்துக்கு வந்தன. பூரிகள் பறக்கும் தட்டுகளாய் கண்ணுக்கெதிரே காற்றில் அலைந்தன. அவசரமாய் சீருடை அணிந்து மாடத்தில் கிடந்த விபூதியை நெற்றியில் அப்பிக்கொண்டு புத்தகப்பையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான்.

மற்ற பயல்கள் கிளம்பியிருக்கவில்லை. வெயில் மஞ்சள் படலமாய் விரிந்து கிடந்த தெருவில் ராசுப்பயல் ஒரு காலை அழுத்தி, ஒரு காலை உயர்த்தி, திரும்பவும் அதேபோல் அழுத்தி, உயர்த்தி பாட்டுப் பாடியபடியே ஓடினான்.

காலை நேரமென்பதால் கடையில் கூட்டம் அதிகமிருக்கவில்லை. நேரமாக, ஆக மண்டத் தொடங்கிவிடும். ராசுப்பயல் தயங்கியபடியே கடைக்குள் எட்டிப் பார்த்தான். கால்கள் கூசின. கொஞ்சம் படபடப்பாயிருந்தது. தோளில் கிடந்த பையை இடது கைக்கு கொண்டுவந்து துழாவினான். பணம் இருப்பதை உறுதி செய்துகொண்ட மனதுக்கு சற்று ஆசுவாசமாயிருந்தது.

“என்னாடா,,,,?” கல்லாவுக்கு அந்தப்புறமிருந்து முதலாளி எட்டிப்பார்த்துக் கேட்டார்.

“பூரி…..” ராசுப்பயலுக்கு குரல் எழும்பவில்லை.

“சாப்புடணுமா….?” கையை வாய்க்கருகில் கொண்டு சென்று கேட்டார். ராசு தலையாட்டினான்.

“காசு கொணாந்திருக்கியா….?” அவனுக்கு அவமானமாயிருந்தது. சட்டென உடல் கூசிப்போக கண்கள் கலங்கின. வேகமாய் தலையாட்டி பைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்தான்.

“உள்ளாற போயி ஒக்காரு…” அவர் கைக்காட்டிய இடத்தில் சென்றமர்ந்தான். இரண்டு கால்களுக்கிடையில் புத்தகப்பையை நிறுத்தி இறுக்கிக் கொண்டான்.

‘தம்பிக்கு ஒரு செட்டு பூரி குடுப்பா…” முதலாளியே அவனுக்காக குரல் கொடுத்தார். ராசுப்பயல் நாற்காலியின் விளிம்பில் அமர்ந்திருந்தான். கைவிரல்களைக் கோர்த்து தொண்டையை நனைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சமையல்கட்டை நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே, கைவைத்த அழுக்கு பனியன் அணிந்திருந்த மாஸ்டர் பூரி தேய்த்துக் கொண்டிருந்தார். பிசைந்து வைத்திருந்த மாவிலிருந்து சிறிது கிள்ளி எடுத்து உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டினார்.

உருட்டிய மாவை அரை நொடியில் பெரிய வட்டமாய் தேய்த்தார். ராசுப்பயல் அதை அதிசயம் போல் கண்கள் விரியப் பார்த்தான். வட்டா நிறைய கொதித்துக் கிடந்த கிழங்கில் கல்பாசியின் தணியாத வாசம். சப்ளையர் பையன் ஒரு பெரிய தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ராசுப்பயல் கொஞ்சமாய் நீர் அருந்திக் கொண்டான்.

“தண்ணி குடிச்சா பசியடங்கிடும் ” என்பாள் ஈசுவரி. நீரில் எண்ணெய் கசண்டடித்தது.

பக்கத்து மேசையில் ஒருவர் பூரி மேல் குருமாவைப் பரப்பி மூன்று விரல்களால் பிய்த்து, பிய்த்து தின்று கொண்டிருந்தார். ராசுப்பயலுக்கு வாய்க்குள் உப்புநீர் சுரந்தது. உதடுகள் லேசாக பிளந்து கொண்டன. கருமணிகள் அசையாது அவரையே உன்னித்தன.

“பூரி……” சப்ளையர் ணங்கென்று தட்டை வைத்தான். அவன் ராசுவைவிட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். முகம் கடுகடுத்திருந்தது. திடீரென்று பக்கவாட்டிலிருந்து குரல் வந்ததில் தவம் கலைந்த தினுசில் ராசுப்பயல் அதிர்ந்துபோனான்.

தட்டில் இளம்பச்சை நிற குருத்து வாழையிலையில் இரண்டு உப்பல் பூரிகள். பக்கத்தில் மஞ்ச, மஞ்சேரென்று ஆவாரம்பூ குருமா. மூன்று விரலால் பிய்க்க வேண்டும். பக்கத்துமேசை மனிதர் சொல்லித் தந்திருந்தார். பிய்த்தான். பிஞ்சு விரல்கள் எண்ணெயில் மினுமினுத்தன. குருமாவில் தோய்த்தான். விழிகளில் பறந்தலைகிற ஆவல். தலையை லேசாக உயர்த்தி கிழங்கோடு பூரியை வாயிலிட்டுக்கொண்டான். அப்போது கண்கள் தானாக மூடிக்கொண்டன. அதுவரை அனுபவித்தறியாத ருசியின் தீண்டலில் நாக்கு இளஞ்சிவப்பு மலர் போல மலர்ந்து போனது. ஒவ்வொரு வாய்க்கும் எழுந்த கிளர்ச்சி மனதை பரபரக்க செய்தது. கால்கள் பையை இறுக்கிக்கொண்டன.

மூளையின் செல்களை உணர்வூட்டி விட்டது போல அவனுக்குள் கதைகள் கிளைத்தன. இன்னொருமுறை கடைக்கு வருவது போன்ற நிகழ்வை நிகழ்த்திப் பார்த்து மனசு சந்தோஷப்பட்டது. ஒவ்வொரு வாய்க்கும் இடைவெளி விட்டு ருசிக்க, கண்கள் சுற்றியலைந்தன. உடல் முன்னும், பின்னுமாக லேசாக அசைந்தது. கடைசிவாயை வழித்து வாயிலிட்டுக்கொண்டபோது வயிறு நிறைந்து போனது.

குருமாவின் மசாலா வாசம் உள்ளங்கையில் மிதந்தது. உள்ளங்கை எண்ணெய் மினுமினுப்பில் வாழைப்பூ போல இளமஞ்சள் நிறத்தில் பளபளத்தது. கழுவிய கையை
சட்டையில் துடைத்துக்கொள்ள பயமாயிருந்தது. ஒருமாதிரி அடிபட்ட கை போல உடம்பில் படாதவாறு வைத்துக்கொண்டு ராசுப்பயல் பிள்ளையார் கோவிலண்டை வந்து நின்றான். தூரத்தில் சகாக்கள் வருவது தெரிந்தது.

“ஒசத்தியான மஞ்ச நெறத்துல ஆவாரம்பூவாட்டம் குருமா. …” மனதில் சொல்லிப் பார்த்துக்கொண்டான் .

சாயல்

ஐ கிருத்திகா

லாரி நான்கு வழிச்சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. உக்கிர வெயிலின் பிடிக்குள் சிக்கியிருந்த முற்பகலில் அந்த லாரி சென்னையிலிருந்து அரியலூர் திரும்பிக் கொண்டிருந்தது.

நவீன் டிரைவரைப் பார்த்தான். மாட்டுவண்டி ஓட்டும் தொனியில் முகத்தை வைத்திருந்தவர் ஸ்டியரிங்கை வளைக்க வேண்டிய அவசியமின்றி வெறுமனே பிடித்தபடியிருந்தார். நவீன் நோக்குவதை உணர்ந்து திரும்பியவர்,

” ஒண்ணுக்குப் போவணுமா…?” என்றார்.

” இ… இல்ல….” என்ற நவீனுக்குப் போனால் தேவலாமென்றிருந்தது. காலை ஐந்து மணிக்குப் போனது. ஒன்பது மணிவரை வயிறு எந்த அறிகுறியும் காட்டாதிருந்தது பயமாக இருந்தது. ஏறியதிலிருந்து தண்ணீர் குடிக்காதது ஞாபகத்துக்கு வர, சற்று ஆசுவாசமாகிப் போனது.

” டீக்கடையில நிறுத்துங்க. டீ குடிச்சிட்டுப் போகலாம். ”

நவீன் சொல்ல, அவர் தலையை மட்டும் ஆட்டினார். சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்ல பேருந்தோ, ரயிலோ கிடையாது. ஊரடங்கு வேறு அறிவிக்கப் போகிறார்கள். கொரோனா ரொம்பத்தான் ஆட்டம் போடுகிறது என்று நினைத்துக் கொண்டான்.

இரண்டு மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தவனை வேலைக்கு வரவழைத்தது நிர்வாகம். அப்போது இரண்டு ஊரடங்குகள் கடந்திருந்தன. மார்ச் மாதத்தின் மத்தியில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு இரு தினங்கள் முன்பு ரயிலில் அடித்துப் பிடித்து ஊருக்கு வந்தவனைப் பார்த்து அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இரண்டு மாதங்கள் அலுப்பும், சலிப்புமாக கழிந்தாலும் வேலைப்பளு இல்லாமல் செல்போனே கதியென்று கிடந்தவன் மெதுவாக சென்னைப் போய் சேர்ந்தான். பத்து தினங்கள் ஆகவில்லை. சக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் வர அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. அதோடு கொரோனாவின் தீவிரமான பிடியில் சென்னை திக்குமுக்காடியது.

” தம்பி எப்படியாவது ஊர் வந்து சேர்ந்துடுப்பா. அங்க இருந்தா உனக்கும் கொரோனா வந்துடும்,” என்று அம்மா கண்ணீர் வடித்தாள்.

நவீன் வேலை பார்க்கும் அலுவலகத்தின் தொழிற்சாலை அரியலூரிலிருந்தது. அங்கிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்னை வந்த லாரி திரும்பியபோது மேலதிகாரியின் சிபாரிசோடு நவீன் அதில் தொற்றிக்கொண்டான்.

டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்.

” ஏண்ணே…?”

அவர் எதுவும் பேசாமல் இடுப்பில் சொருகி வைத்திருந்த உள்ளங்கையளவு பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டார். நவீனுக்குத் திகிலேறியது.

” டிரைவிங்ல குடிக்கிறீங்களேண்ணே. தப்பில்ல….?”

ஏற்கனவே லாரிக்குள் உட்கார முடியவில்லை. இன்ஜின் அருகாமையிலிருந்ததில் சீட் கொதித்தது. ஏசி பேருந்திலோ, ரயிலிலோ சென்று பழக்கப்பட்டவனுக்கு அக்கொதிப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் அவர் குடித்த சரக்கின் நாற்றம் வேறு குடலைப் புரட்டியது.

” நேத்திக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கி வண்டியெடுத்தேன். சென்னைக்குப் பன்னண்டு மணிக்கி வந்தேன். லோடை எறக்கி வுட்டுட்டு படுத்தா பொட்டுத் தூக்கம் வரல. மறுபடி விடியக்காலையில கெளம்ப வேண்டியதாப் போச்சி. ஒடம்பெல்லாம் அசதியா இருக்கு. கொஞ்சம் உள்ளத் தள்ளலைன்னா ஒளுங்கா ஊர்போயி சேரமுடியாதுப்பா.”

டிரைவர் பீதியைக் கிளப்பினார். பின்னால் வந்த கார்கள் விர், விர்ரென்று முந்திக்கொண்டு விரைந்தன. எதிர்த்திசையில் வாகனப்போக்குவரத்து பெரிய அளவிலில்லை.

அன்றிலிருந்து சென்னை உள்ளே செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவித்திருந்தார்கள். பாஸ் வாங்கிக்கொண்டு சொந்த வாகனத்தில் சென்னையை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. வலுவான காரணங்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலைமை மாறி பணத்துக்காக பாஸ் வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கிளம்பிய அநேகருடன் கொரோனாவும் கிளம்பிற்று. இதனால் தாக்கம் குறைவாயிருந்த பகுதிகளில் எண்ணிக்கை கூடத் துவங்கிற்று.

” அவந்தான் ஏவிவுட்டான்னு சொல்றாங்களே தம்பி… உண்மையா…?”
டிரைவர் அப்பாவியாக கேட்டார்.

” ஏவிவிடறதுக்கு அதென்ன பில்லி, சூனியமா…’ என்று நினைத்துக்கொண்டவன்,

” தெரியலையே…” என்றான் மெதுவாக. அரியலூர் எப்போது வருமென்றிருந்தது.

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என்று ஒவ்வொரு ஊரையும் கடக்கும்பொழுது நாகர்கோயிலுக்கான தூரம் நீண்டுகொண்டே போவது போலிருந்தது. ரெக்சினால் ஆன சீட் கட்டை போலிருந்ததில் உட்காருமிடத்தில் வலி உண்டானது. நவீன் சில நிமிடங்களுக்கொரு முறை அப்படியும், இப்படியுமாக உடலை அசைத்து நெளிந்தான். டிரைவர் சிரித்தார்.

“சொகுசு பஸ்ஸுல போயி பளக்கமாயிருக்கும் ஒங்களுக்கு. இந்த கட்டவண்டி நாலுநாளு ஒங்க கட்டைய சாய்ச்சிப்புடும் பாருங்க. படுத்தா எந்திரிக்க மாட்டீங்க…..” என்ற டிரைவர் கரையேறிய பற்கள் தெரிய சிரித்தார்.

பக்கவாட்டிலிருந்து வெப்பக்காற்று வீசிற்று. காற்றில் அனல் கங்குகள் தெறித்தன. முழுக்கை சட்டை போட்டு வந்தது தவறென்று நவீனுக்கு அப்போதுதான் உறைத்தது. இரு பொத்தான்களை விடுவித்தான். போட்டிருந்த மாஸ்க் பெரும் அவஸ்தையைக் கொடுத்தது. ஆரம்பத்தில் மூச்சுத் திணறுவது போன்ற உணர்வு. அதற்கே மனம் பீதியடைந்துவிட்டது.

” மாஸ்க்கைப் போட்டா மூச்சுவிட முடியாம பெரிய அவஸ்தையா இருக்குடா……” என்று நண்பன் சொன்னபோதுதான் அது பொதுவான பிரச்சனை என்று புரிந்தது.

டிரைவர் மாஸ்க்கை தாடைக்குப் போட்டிருந்தார். சோதனைச்சாவடி கண்களில் தென்பட்டால் வெடுக்கென்று இழுத்துவிட்டுக் கொண்டார். அவர் அணிந்திருந்த நிறமிழந்த பனியன் வியர்வையில் நனைந்திருந்தது. இன்ஜின் சூட்டைக் கக்கி அவரை வியர்வையில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

” வண்டி உங்களுதா…?”

நவீன் நேரத்தைக் கடத்த கேட்டான்.

” என்னைப் பாத்தா லாரி ஓனர் மாதிரியா தெரியிது. நான் வெறும் டிரைவர்தான் தம்பி. எங்க ஓனருக்கு ஆயிரம் லாரிகள் இருக்கு. பெரிய ஆளு அவரு. எப்பவும் வெள்ளையுஞ் சொள்ளையுமா பாக்க சினிமா நடிகராட்டம் இருப்பாரு. இந்த ஆறு வருசத்துல நானே அவர பத்து தடவதான் பாத்துருப்பேன். அவருக்கு கீள ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தனுக்கு கீளதான் நாங்க வேலப் பாக்குறோம். ”

” இதுக்கு முன்னாடி எங்க வேலைப் பார்த்தீங்க…?”

” காய்கறி லாரி ஓட்டிக்கிட்டிருந்தேன். அப்ப வடநாட்டுக்கெல்லாம் போயிருக்கேன். வெங்காயம் ஏத்துமதி பண்ண மகாராஸ்ட்ரா போவோம். இருவது வருசமா அந்த வேலப் பாத்துட்டு முடியாம வந்துட்டேன். என் சகலை இந்த வேலைய வாங்கிக் குடுத்தான். அவனும் இங்கதான் வேலப் பாக்குறான்.”

அவர் பேசியபடியே டீக்கடையருகில் லாரியை நிறுத்தினார். நவீன் அவரைக் கூப்பிட்டபோது மறுத்துவிட்டார்.

” ஏற்கனவே வயறு கலக்கியடிக்கிது தம்பி. ராத்திரி புரோட்டா சாப்புட்டேன். அது செரிக்கலையா என்னான்னு தெர்ல. வயறு கடமுடங்குது. நீங்க குடிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள நான் என் மிஸஸ் கிட்ட பேசிடுறேன்”

அவர் கைக்கு அடக்கமாயிருந்த அந்த நோக்கியா செல்போனில் எண்களைத் தட்டத் தொடங்கினார். நவீன் கீழே குதித்தான். இடுப்பில் கைவைத்து உடலை வளைத்து ஆசுவாசித்துக் கொண்டான்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே டீக்கடையும் கொதித்துக் கிடந்தது. பாய்லருக்கருகில் நின்றிருந்த மனிதர் நவீனைக் கண்டதும் கழுத்தில் கிடந்த மாஸ்க்கை மூக்கில் மாட்டிக்கொண்டார்.

மாஸ்க் டீ வடிகட்டும் துணி நிறத்திலிருந்தது. நிறமே அதுதானா அல்லது துவைக்கப்படாமல் அப்படி ஆகிப்போய்விட்டதா என்று புரியவில்லை. நவீன் தயக்கத்தோடு காலடி எடுத்து வைத்தான்.

” வாங்க சார்… மசாலா டீ . ஏலக்கா டீ, இஞ்சி டீ இதுல எது குடிக்கிறீங்க…?”

அவர் சுறுசுறுப்பாய் கிளாசைக் கழுவினார். டிரேயில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கூட்டம் திடீரென்று மேலே பட்ட தண்ணீரில் அதிர்ந்து விலகின. நவீன்,

” இஞ்சி டீ…” என்றான்.

” எங்கேயிருந்து வர்றீங்க சார்…?”

” விழுப்புரத்துலேருந்து ” என்றான் சட்டென்று. சென்னை என்ற பேரைக் கேட்டாலே எல்லோருக்கும் அலர்ஜியாகிவிட்டது. சென்னை கனவுகளை வசமாக்கும் நகரமாக இருந்தது ஒரு காலம். சென்னைக்குப் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. இப்போது, சென்னையிலிருந்தால் பிழைக்க முடியாது என்று வார்த்தைகள் மாறிவிட்டன.

தப்பித்தால் போதுமென்று சனம் சொந்த ஊரைப் பார்க்க ஓடுகிறது. கடைக்காரர் டீ கிளாசை மேசை மீது வைத்தார். நவீன் பட்டும்படாமல் பெஞ்சில் அமர்ந்தான். எங்கே கிருமி அதில் ஒட்டியிருந்து தன்மீது தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம்.

மடக், மடக்கென்று டீயைக் குடித்தவன் ரூபாய் நோட்டை நுனிவிரலால் தந்துவிட்டு லாரியருகில் வந்து பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த சானிடைசர் பாட்டிலை எடுத்து கைகளை சுத்தம் செய்து கொண்டான். சுத்தம் செய்வதற்கு முன் பாட்டிலை தொட்டுவிட்டது ஞாபகத்துக்கு வர மீண்டும் திரவத்தை உள்ளங்கையில் நிரப்பி பாட்டிலை மெழுகினான்.

” தம்பி, கெளம்பலாமா…?”

டிரைவர் குரல் கொடுக்க பாய்ந்து ஏறிக்கொண்டான். ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது போல கியரை ஒரு சுற்று சுற்றி வண்டியைக் கிளப்பியவர்,

” இன்னும் ஒருமணி நேரத்துல அரியலூர் போயிடலாம்,” என்றார். லாரியின் நெற்றியில் ‘ஒண்டி கருப்பண்ணசாமி துணை’ என்று எழுதப்பட்டிருந்தது. நவீன் அதைப் படிப்பதைக் கவனித்தவர்,

” ஓனரோட கொலதெய்வம். ஆயிரம் லாரியிலயும் இதான் எளுதியிருக்கும்,” என்றார்.

” ரெண்டாவது ஊரடங்கு அமல்ல இருந்தப்ப அரசாங்கம் தளர்வுகளை அறிவிச்சுதே. அப்ப வண்டி ஓட்டினீங்களாண்ணே..?”

” ஓட்டாம… மொத ஊரடங்க சமாளிச்சிட்டேன். ரெண்டாவது அறிவிச்சப்ப பகீர்ன்னுச்சி. ஏன்னா கையில் காக்காசு கெடையாது. இருந்ததக் கொண்டுதான் மொத ஊரடங்க கொண்டாடுனோம். நல்லவேளையா கட்டட வேல நடக்கலாமுன்னு அரசாங்கம் அறிவிச்சிது. லாரி ஏறிட்டேன். ஒண்ணு பசியால சாவணும், அல்லது கொரோனாவால சாவணும். வூட்டுல எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க. ரெண்டு புள்ளைங்க எனக்கு. அதுங்க பசியோட கெடந்தா என்னால தாங்கிக்க முடியிமா சொல்லுங்க…”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு டெம்போ வேன் மிக வேகமாக கடந்து போனது.

” தூ…”

மிகவும் மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தார். ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவரது இடது கை V வடிவில் வளைந்திருந்தது. முழங்கையின் மேற்பரப்பில் பூரான் வடிவ தையல் ஓடியிருந்தது. அவர் அனிச்சையாக அந்தத் தையலை அடிக்கடி தடவி விட்டுக்கொண்டார்.

” ஒருதடவ உள் கிராமம் ஒண்ணுக்கு லோடு அடிக்க வேண்டியிருந்தது. அது சிங்கிள் ரோடு. நான் நிதானமாத்தான் போயிக்கிட்டிருந்தேன். எதுத்தாப்ல வந்த பிரைவேட் பஸ் வேகமா வந்து மோதுனதுல லாரி கவுந்து போச்சி. எனக்கு பெருசா அடிபடல. சோத்தாங்கால் பிராக்சர் ஆயிப்போச்சி. கை சதை கிளிஞ்சிடுச்சி. அப்ப போட்ட தையல்தான் இது.”

நவீன் கேட்காமல் அவரே சொன்னார். நவீன் அவரைக் கண்களால் அளந்தான்.

அவர் உதடுகள் உலர்ந்து போயிருந்தன. கண்களுக்கு கீழே இரு பைகள் கனத்து தொங்கின. அடர்த்தியில்லாத செம்பழுப்பு நிற மயிர் காற்றுக்கு மடிந்து நிமிர்ந்தது.

பிளாஸ்டிக் ஒயர் பின்னிய நாற்காலியில் ஒரு அழுக்கான தலையணை போட்டு அவர் அதில் அமர்ந்திருந்தார். ஒயர் முடிச்சுகள் சில இடங்களில் அறுந்திருந்தன. உட்காருமிடத்தில் ஒயர் பின்னல்கள் சுமை அழுத்தத்தில் கீழ் நோக்கி தொய்ந்திருந்தன. நாற்காலிக்குப் பொருத்தமாக செய்து வைத்தது போல அவர் அதில் அமர்ந்திருந்தார். அவர் கைகள் வெகு நிச்சயமாக காய்த்துப் போயிருக்கக்கூடும் என்று நவீனுக்குத் தோன்றியது.

அவர் இன்ஜினுக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தார். அதன் சூட்டுக் கொதிப்பு அவரை உருக்கிவிட்டதா அல்லது மெலிந்த தோற்றம் அவரது இயல்பான உடல்வாகா என்று அவனுக்குத் தெரியவில்லை.

” இருவத்தாறு வருசமா லாரி ஓட்டுறேன். ” அவரே திடுமென கூறினார்.

‘ பயணங்கள் மனதுக்குப் பிடித்தமானவை. ஆனால் இவரது பயணம் இவருக்கு எப்படிப்பட்டதாயிருக்கும்…’

நவீன் யோசித்தபடியே வெளியே பார்வையை பதித்தான். லாரி அரியலூர் எல்லைக்குள் நுழைந்திருந்தது. அதற்குள் முழுதாய் ஏழு மணி நேரங்கள் கரைந்திருந்தன. நவீனுக்கு இடுப்பும், முதுகும் கழன்று விடும் போலிருந்தது.

அவ்வபோது தன்னையுமறியாமல் உறங்கி கழுத்து மளுக், மளுக்கென்று சாய்ந்ததில் திரும்ப முடியாமல் வலி பின்னியெடுத்தது. இன்னொரு ஏழு மணி நேரத்தைக் கடந்தாக வேண்டுமே என்றெண்ணி அவன் மலைத்துப் போனான். டிரைவர் லாரியை தொழிற்சாலை கேட் அருகில் நிறுத்தினார்.

” தம்பி எறங்கிக்கிறீங்களா…?”நவீன் நூறு ரூபாய்த் தாளை இன்ஜின் மேல் வைத்தான்.

” வச்சிக்குங்கண்ணே…”

” இதெல்லாம் எதுக்கு தம்பி…”

அவர் நெளிந்தார். கண்கள் விரிந்தன. வெள்ளைப் பரப்பில் சிவப்பு நிறமிகள் சாயப்பூச்சு போல படர்ந்திருந்தன.

” பரவாயில்லண்ணே. பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…”

நவீன் பையை மாட்டிக்கொண்டு பக்கவாட்டுக் கைப்பிடியை பற்றி திரும்பி டயரில் கால் வைத்து பொத்தென்று குதித்தான்.

” தம்பி ஞாபகம் வச்சிக்குங்க… வரட்டுமா…?”

டிரைவர் குனிந்து சல்யூட் அடித்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

அடுத்த அரைமணி நேரத்தில் நாகர்கோயில் செல்லும் லாரி சிமெண்ட் மூட்டைகளுடன் கிளம்பிற்று. இந்த டிரைவர் முன்னவர் போலில்லை. கிட்டத்தட்ட நவீனுக்கு சமவயதுக்காரன் போலத் தெரிந்தான்.

முகம் கடுகடுப்பாயிருந்தது. ஒரு வார்த்தை பேசவில்லை. நகர எல்லையைத் தாண்டியதுமே வண்டி வேகமெடுத்தது. ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடியே மறுகையால் அவன் சிடி பிளேயரை ஓடவிட்டான்.

டார்லிங்கு டம்பக்கு பாட்டு அதிர்ந்தது. விழுப்புரத்தில் சாப்பிட்ட வயிறு பகபகவென்றிருந்தது.

” ஹோட்டல் எதுனா வந்தா நிறுத்துங்க…”

” சரி…”

அவன் ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டான். அந்த லாரி புதிதாயிருந்தது. மஞ்சள் பெயிண்டின் மினுமினுப்பு வெயிலில் பளபளக்க வேகமாய் பறந்தது. முகப்பில் ‘ செல்லாண்டியம்மன் துணை ‘ என்று எழுதப்பட்டிருந்தது.

‘ அந்த செல்லாண்டியம்மன்தான் நம்மளை பத்திரமா கொண்டுபோய் சேர்க்கணும் ‘ என்று நவீன் நினைத்துக்கொண்டான்.

டிரைவர் ஒரு கையால் செல்போனைப் பிடித்தபடி அடிக்கடி யாரிடமோ பேசிக்கொண்டே வந்தான். பாட்டு சத்தத்தில் எதிராளியின் குரல் கேட்காமல்,

” சத்தமா பேசித் தொலையேன்…” என்று கத்தினான்.

ஏறியதுமே சட்டையைக் கழற்றி சேரில் மாட்டி விட்டவனது கழுத்தில் சுண்டுவிரல் நீளத் தாயத்து தொங்கியது. கருப்புக் கரையிட்ட சிவப்பு பனியன் அணிந்திருந்தான். முகக் கவசத்தைக் காணவில்லை. வண்டி திருச்சி பைபாஸிலிருந்த அந்த சுமாரான ஹோட்டல் முன் நின்றது. கடைக்காரர் முகக்கவசம், கையுறை சகிதம் காட்சி தந்தார். நவீன் இரு பார்சல்கள் வாங்கி ஒன்றை டிரைவரிடம் தந்தான்.

” எனக்கு வேணாம் சார்…”

அவன் மறுத்ததை பொருட்படுத்தாமல் பார்சலை அவனருகில் வைத்துவிட்டு வந்து மரநிழலில் அமர்ந்து சாப்பிடத் துவங்கினான். பசித்த வயிற்றை நிரப்பி லாரியில் ஏறியபோது உச்சிவானில் சூரியன் மிதந்தது. அதற்குள் அம்மா இருமுறை போன் செய்து ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்.

” கொஞ்சநேரம் பாட்டு வேண்டாமே. எனக்குத் தூக்கம் வருது,” என்ற நவீனை அவன் ஒருமாதிரியாகப் பார்த்தான். பின்,

” பாட்டுப் பாடலைன்னா எனக்குத் தூக்கம் வந்துடும் ” என்றான் நிதானமாக.

நவீனுக்குத் திக்கென்றானது. இரு கைகளையும் கட்டிக்கொண்டு விறைப்பாக அமர்ந்து பக்கவாட்டில் நகரும் மரங்களைப் பார்க்கத்துவங்கினான்.

” சிங்கம், சிங்கம் ஈஸ்வர சிங்கம்…”

பாட்டு அலறத் துவங்கியது. சிங்கம் படத்தை கோயமுத்தூர் சித்தப்பா வீட்டுக்குப் போனபோது அங்கிருந்த மால் ஒன்றில் நவீன் பார்த்தான். மாலில் இளஞ்சிட்டுகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக நடமாடிக் கொண்டிருந்தன.

சினிமாவின் மீதான ஈர்ப்பு பறிபோய் அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தவனை சித்தப்பா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். அது ஞாபகத்துக்கு வர தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“சார் சூர்யா ரசிகரா…?”

டிரைவர் திடீரென்று கேட்டான். அவனது கடுகடுத்த முகத்தின் இறுகினத்தன்மையில் லேசான இளக்கம். எதையோ சொல்லத் துடிக்கிற ஆர்வம் அவன் கண்களில் தெரிய,

“ரசிகர்கலாம் இல்ல. ஆனாப் பிடிக்கும் ” என்றான் நவீன். அவன் பாட்டு சத்தத்தைக் குறைத்தான்.

“நமக்கு தலதான் எல்லாம். நான் அவரோட தீவிர பேன். அவர் படம் ரிலீசான அன்னிக்கி மொத ஷோ மொத வரிசையில ஒக்காந்து பாத்துடுவன். அவரு பேரை நெஞ்சில பச்சக்குத்தி வச்சிருக்கன் பாருங்க.”

அவன் பெருமையாகக் காட்டினான். அவனுக்குத் தன்னை திறந்து காட்டிவிட்ட திருப்தி. அதற்காகத்தான் தூண்டில் போட்டதே. நவீனுக்குப் புரிய மேலும் நாலைந்து கேள்விகளைக் கேட்டான். எல்லாமே தல பற்றிய கேள்விகள்.

பேசுவதை நிறுத்திவிட்டால் பாட்டு சத்தத்தைத் கூட்டிவிடுவானே என்கிற பயம். அவன் உற்சாகமாகப் பேசினான். சாலையில் லாரியின் வேகம் குறைந்திருந்தது. சில வாகனங்கள் கடந்து போயின.

“தலய ஒருதடவ நேர்ல பாக்கணும்னு ரொம்ப ஆசை. முயற்சி பண்ணிக்கிட்டிருக்கன். வூட்ல அதுக்கு இதெல்லாம் புரியாது. ஒளுங்கா சம்பாதிய்யா, அத வுட்டுட்டு தல, கிலன்னு அலையிறியேன்னு கோச்சிக்கும். ”

“கல்யாணமாயிடுச்சா…?”

“இப்பதான் ஆறு மாசத்துக்கு முந்தி ஆச்சி. தல படத்த வச்சி அதுக்கு முன்னாடி தாலி கட்டுனன். என்னப் பொறுத்தவரைக்கிம் அவருதான் கொலதெய்வம். ”

” எத்தனை வருஷமா லாரி ஓட்டுறீங்க…?”

கேள்வி மூலம் நவீன் அவனை மடைமாற்றிவிட்டான். அவன் முகத்தில் முன்பிருந்த பளீர்த்தன்மை மறைந்திருந்தது.

” அஞ்சு வருசமா ஓட்டுறன்” என்றான் அசிரத்தையாக.

” முகக்கவசம் அணியறது பாதுகாப்பு. நீங்க ஏன் அணியல…?”

” அதப் போட்டுக்கிட்டா மூச்சடைக்கிற மாதிரி இருக்கு. எரிச்சலா வருது. லாரி ஒட்டுறதுல கவனமில்லாம போயிடுது. அதான் பாக்கெட்டுக்குள்ள வச்சிருக்கன்” என்று அவன் சட்டைப் பையைத் தொட்டுக்காட்டினான். பின்,

” சிமெண்டு கம்பெனியில வேலப் பாக்குறீங்களா சார்…?’ என்றான்.

” ஆமா… சென்னையில இருக்க ஆபீஸுல வேலை. ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. எவ்ளோ நாள்தான் சும்மாவே அங்க உட்கார்ந்திருக்கறது. அதான் கிளம்பிட்டேன்.”

” உங்கள மாதிரி உத்தியோகம் பாக்குறவங்களுக்கு பிரச்சினையில்ல.”

அவன் அதற்குப் பிறகு பேசவில்லை. மதுரை கடந்து கோவில்பட்டியும் விசுக்கென்று மறைந்து போயிருந்தது. சூரியன் மேற்கு நோக்கி இறங்கிக் கொண்டிருக்க, வானில் சோகையான நீலம் படிந்திருந்தது. வெள்ளை மேகங்கள் சில ஊர்ந்து போயின.

” ஒரு அஞ்சு நிமிசம் எறங்கிட்டு வந்துடறன் சார்…”

அவன் வண்டியை அந்த அரசமரத்தினருகில் ஓரங்கட்டிவிட்டு இறங்கினான். மரத்தையொட்டிய சந்திலிருந்து நைட்டி மேல் துப்பட்டா அணிந்த பெண்ணொருத்தி ஓடிவந்தாள். கீரைத்தண்டு போல் மெல்லிசாய் இருந்தாள். முகமும், தாலிக்கயிறும் மஞ்சள் நிறத்தில் மினுமினுத்தது. அவன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் அவள் நெருங்கி வந்திருந்தாள்.

” நைட்டு வந்துருவீல்ல…”

அவசரமாக கேட்டாள். கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் திரள் போல் நின்றிருந்தவளுடைய கண்களில் ஒருவித தவிப்பு.

” லாரிய பேக்டரியில வுட்டுட்டு பத்து மணிக்கெல்லாம் வந்துருவன்.”அவன் காது குடைந்தபடியே சொன்னான்.

” காசு வச்சிருக்கியா….நைட்டு சோறாக்கணும்…”

மடித்து கட்டியிருந்த கைலியைத் தூக்கி வலது பக்கமிருந்த டிரவுசர் பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான். வாங்கிக்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தவள் நிமிர்ந்து உள்ளே அமர்ந்திருந்த நவீனைப் பார்த்துவிட்டு அமைதியானாள்.

கன்னங்களில் தேமல் படர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்து வெடித்திருந்தன. விலா எலும்புகள் புடைத்திருந்தன. துப்பட்டா வேலிமுள்ளில் மாட்டிய துணிபோல் படபடத்தது.

நவீன் எங்கோ பார்ப்பதுபோல் அவர்களிருவரையும் பார்த்தான். முதலில் ஏறிவந்த லாரியின் டிரைவர் ஞாபகத்துக்கு வந்தார். மூவர் முகத்திலும் ஒத்த சாயலிருந்தது.

நவீன் லாரியை விட்டு இறங்கியபோது அந்த மாத சம்பளம் அவனுடைய வங்கிக்கணக்கில் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாக அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது.

செய்வலர்: செமிகோலன்

மாமருந்து – ஐ.கிருத்திகா சிறுகதை

வழக்கம்போல  அந்த  மஞ்சள்நிறக்குருவி  கிலுவமரக்கிளையில்  வந்தமர்ந்து  கண்கள்  மினுங்க  பார்த்தது  ஜன்னல்  வழியே  தெரிந்தது. சற்றுநேரம்  அமர்ந்து  அப்படியும், இப்படியுமாய்  தலையசைத்துப்  பார்த்த   குருவி  ஏதோ  ஞாபகம்  வந்ததுபோல்  விருட்டென  பறந்து  போனது.

அறையின்  வலது  மூலையில்  கிடந்த  கட்டிலில்  படுக்கை  விரிப்பு  நுனிகூட  கசங்காது  பெட்டி  போட்டது  போல்  அவ்வளவு  நறுவிசாக விரிக்கப்பட்டிருந்தது.

ஸ்விட்ச்  போர்டின்  கீழ்ப்பகுதியில்  ஓரங்குல  அகலத்துக்குக்  கருமை  படர்ந்திருந்தது. இளமஞ்சள்  வர்ணமடிக்கப்பட்ட  சுவரில்  ஆங்காங்கே  சின்ன, சின்ன  அழுக்குத்  திட்டுகள், எல்லாமே  உத்திராபதியின்  கைங்கர்யம்தான்.

அடிக்கடி  மரத்துப்  போகும்  கால்களின்  மீதான  நம்பிக்கையை  அவர்  சுவர்வசம்  ஒப்படைத்திருந்ததன்  விளைவுதான்  அந்த  கருந்திட்டுகள். அவர்  இருக்கும்போது  மூக்குப்பொடி  வாசம்  அறையை  நிறைத்திருக்கும்.

ஒரு சிட்டிகை  மூக்குப்பொடியை   வலது  கையால்  எடுத்து   தலையை  உயர்த்தி  மூக்கில்  வைத்து  உறிஞ்சுவார். அடுத்த  நிமிடமே  சரமாரியாக  தும்முவார்.

” நாப்பது  வயசுல  ஆரம்பிச்ச  பழக்கம். விடமாட்டேங்குது. போவட்டும், மனுசங்கதான்  கடைசிவரைக்கும்  வரமாட்டேங்குறாங்க. இதாவது  இருக்கட்டுமே ” என்று  அதற்கு  ஒரு  நியாயம்  கற்பித்க்து  கொள்வார்.

சங்கரன்  பெருமூச்சு  விட்டார். ஹேங்கரில்  உத்திராபதியின்  வெள்ளை  சட்டை  காலர்  அழுக்கோடு  தொங்கிக்கொண்டிருந்தது.

” வெள்ளை  உடுப்பு  உடுத்தினா  பார்க்கறவங்களுக்கு  கண்ணியமா  தோணும். மனசுக்குள்ள  கண்ணியமானவன்தான். இருந்தாலும்  அதை  எப்படி  படம்  பிடிச்சு  காட்டறது. அதுக்குதான்  இந்த  வெள்ளையுடுப்பு….” என்பார்  உத்திராபதி.

ஏனோ  அவர்  மேல்  சங்கரனுக்கு  அவ்வளவாக  பிடிப்பில்லை. இருவருக்கும்  பத்துவயது  வித்தியாசம். அதுதான்  காரணமென்று  சொல்லமுடியாது.

அரசியலும், ஆன்மீகமும்  பேசிப்பேசி  சலித்தாயிற்று. உடம்பில்  தெம்பிருந்தபோது,  மனதில்  தைரியமிருந்தபோது  எல்லாவற்றையும்  பேசியாயிற்று. இப்போதெல்லாம்  பேச்சை  விடுத்து  வாழ்வதிலேயே  மனம்  நாட்டம்  கொள்கிறது.

தப்பித்தவறி  யாராவது, எதையாவது  பேசினால்  புளித்தமாவு  தோசை  சாப்பிட்டதுபோல  ஒவ்வாமை  உண்டாகிறது. அதனாலும்  சங்கரன், உத்திராபதியிடம்  பேச்சைத்  தவிர்த்தார்.

” மாசம்  எட்டாயிரம்  ரூபா  பணம்  கட்டணும். சாப்பாடு, காபியெல்லாம்  அருமையா  இருக்கும். அமாவாசை,  கார்த்திகைக்கு  வடை, பாயசத்தோட  சாப்பாடு. ரூமுக்கு  ரெண்டுபேர்வீதம்  தங்கிக்கணும். உள்ளயே  பாத்ரூம், கக்கூஸ்  இருக்கு. உடம்புக்கு  முடியலேன்னா  சாப்பாட்ட  கையில  கொண்டுவந்து  குடுத்துடுவாங்களாம். பத்திய  சாப்பாடும்  செஞ்சு  தருவாங்களாம். ஊருக்கு  ஒதுக்குப்புறமான  இடத்துல  இருக்கறதுனால  சத்தமில்லாம  அமைதியா  இருக்கும். சுத்தி  ஏகப்பட்ட  மரங்கள்  இருக்கு. வாக்கிங்  போக  தோதான  இடம்………….”

மகன்  அடுக்கிக்கொண்டே  போனபோது  சங்கரன்  எதுவும்  பேசவில்லை.

வேண்டாத  பழைய  பொருட்களை  வீட்டுக்கு  வெளியில்  போடுவது  மனித  இயல்புதானே. அதை  குறையென்று  சொல்லமுடியுமா.

ஆனாலும்  வேண்டாத  பொருளாகிவிட்டோமே  என்ற  கழிவிரக்கத்தில்  சங்கரன்  ஒடுங்கித்தான்  போனார். ஓரோர்  சமயம், போய்  சமுத்திரத்தில்  விழுந்துவிடலாமா  என்றுகூட  தோன்றும்.

வயதான  காலத்தில்  அப்படி  செய்து  ஏளனத்துக்கு  ஆளாக  பயந்து  உணர்வுகளைக்  கட்டுப்படுத்தி  கொண்டார். செத்தபிறகும்  தன்  பேரைக்  காப்பாற்றிக்கொள்ள  இந்த  மனுஷ  ஜென்மங்கள்தான்  என்னமாய்  பாடுபடுகின்றன  என்று  மனசு  எக்காளமிட்டு  சிரித்தது.

” இங்கிருக்கறதவிட  ஹோம்ல  நீ  நிம்மதியா, சந்தோஷமா  இருக்கலாம். தைரியமா  போ.  நான்  அடிக்கடி  வரப்போக  இருக்கேன்” என்று  பால்யகால  நண்பன்  திரவியம்  ஆறுதல்  சொல்லி  அனுப்பிவைத்தார்.

இல்லத்துக்கு  வந்து  ஓராண்டு  முடிந்துவிட்டது. வசதிக்கு  ஒரு  குறைவுமில்லை. மகன்  மாதம்  தவறாமல்  பணம்  கட்டிவிடுவான். கைச்செலவுக்கு  அவரின்  பென்சன்  தொகை  உதவிற்று.

ஆரம்பத்தில்  மாதம்  ஒருதடவை  வந்து  பார்த்த  மகன்  வேலையைக்  காரணம்காட்டி  இரண்டுமாதத்துக்கு  ஒருமுறை  வர  ஆரம்பித்தான். மகனிடம்  பேச  எதுவுமிருப்பதாக  சங்கரனுக்குத்  தோன்றாது. பேசாது  அமர்ந்திருப்பார்.

அவனும்  தானாக  நாலைந்து  கேள்விகள்  கேட்டுவிட்டு  புறப்பட்டு  போய்விடுவான். கடைசியாக  நான்கு  மாதங்களுக்குமுன்  வந்தது.

” நீ  பேசவே  மாட்டேங்கறியாம். அவனுக்கு  என்னவோ  போலிருக்காம். அதான்  கொஞ்ச  இடைவெளி  விட்டு  போய்ப்பார்க்கலாம்னு  இருக்கேன்னு  சொன்னான்.”

பார்க்க  வந்த  திரவியம்  சொன்னார். சங்கரன்  மகனைவிட  பேரனை  மிகவும்  எதிர்பார்த்தார். முதல்தடவை  பேரனுக்காக  பிஸ்கெட்  பாக்கெட்டெல்லாம்  வாங்கிவைத்திருந்தார். மகன்  தனியாளாய்  வந்தது  பெரும்  ஏமாற்றத்தைத்  தந்தது.

” அவனுக்கு  பரீட்சை  இருக்குப்பா. அதான்  அழைச்சிட்டு  வரல” என்று  மகன்  தரைப்பார்த்து  சொன்னான். பேரன்  முகம்  கண்ணுக்குள்ளேயே  இருந்து  அவரை  வாட்டி  வதைத்தது.

” நீ  ஏன்  தாத்தா  ஹோமுக்கு  போற….?” என்று  கிளம்பும்போது  அவன்  கேட்டான். சங்கரனுக்கு  என்ன  சொல்வதென்று  தெரியவில்லை. விரும்பிப்போகவில்லை, வலுக்கட்டாயமாக  அனுப்படுகிறேன்  என்று  சொல்லமுடியுமா…………..

‘உனக்கு  விருப்பமா, நீ  போறியா, இருக்கியா  என்றெல்லாம்  யார்  கேட்டார்கள். எல்லோருக்கும்  நியூக்ளியர்  பேமலியாக  வாழத்தான்  பிடித்திருக்கிறது. கணவன், மனைவி, குழந்தைகள்  மட்டுமே  அடங்கிய  குடும்பத்தின்  கட்டமைப்புக்குள்  தாய், தந்தை  உறவு  அந்நியப்பட்டு  போனதுகூட  மனிதமனங்களின்  விகாரம்தானே.’

சங்கரன்  பெருமூச்சு  விட்டார். அந்த  ஒருவருடத்தில்  கொஞ்சம், கொஞ்சமாக  இயந்திரமாக  வாழப்பழகியிருந்தார். கடந்த  சில  நாட்களாகத்தான்  மனசு,  கையிலிருந்ததை  தொலைத்துவிட்டு  தேடியலையும்  குழந்தையைப்போல  தவியாய்  தவிக்கிறது.

” தனிமை  நம்மள  கன்னாபின்னான்னு  யோசிக்கவைக்கும். அதனால   எப்பவும்  ஆக்குபைடா  இருங்க. அதாவது  கலகலப்பா  பேசிக்கிட்டோ, பேச  ஆளில்லாத  நேரத்துல  புத்தகவாசிப்புல  ஈடுபட்டோ தனிமைய  துரத்துங்க. வாழ்க்கை  கசக்காது” என்று  ஹோமுக்கு  வந்திருந்த  அந்த  பேச்சாளர்  சொன்னார். சங்கரனுக்கு  அது  ஞாபகத்துக்கு  வந்தது.

உத்திராபதி  அறையில்  இருந்தவரை  அவ்வபோது  பேசுவார். நன்றாக  பேசக்கூடியவர்தான். சங்கரனுடைய  அமைதிகண்டு  ஒதுங்கிப்போனார். அக்கம்பக்கத்து  அறைகளில்  இருப்பவர்கள்  வரப்போக  இருப்பார்கள். அவர்களுடன்  உத்திராபதி  சந்தோஷமாக  அளவளாவுவார். பேச்சுக்கு  ஆள்  கிடைக்காத  நேரங்களில்  தேவாரமோ, திருவாசகமோ  வாசிப்பார்.

” மனசுக்குள்ள  படிக்க  வரமாட்டேங்குது. கொஞ்சம்  சத்தமா  படிச்சிக்கிடவா….உங்களுக்கு  ஒண்ணும்  தொந்தரவு  இல்லையே…?” என்று  ஒருமுறை  அவர்  கேட்டபோது, சங்கரன்  இசைவாய்  தலையசைத்தார்.

அதிலிருந்து  குட்டிப்  புத்தகத்தை  வைத்து  கொஞ்சம்  சத்தமாக  படிக்கத்  தொடங்கினார். சங்கரனும்   அதெல்லாம்   வாசித்தவர்தான். மனைவி  இருந்தவரை   பூஜை, புனஸ்காரம்  என்று  வீடு  அல்லோலகல்லோல  படும். அவள்  போனபிறகு  எல்லாம்  அடியோடு  மாறிப்போய்விட்டது.

போனவள், இட்டு  நிரப்ப  முடியாத  சூன்யத்துக்குள்  அவரை  தள்ளிவிட்டு  சென்றுவிட்டாள். உத்திராபதி  தேவாரம்  வாசிக்கும்போது  சங்கரனின்  மனசும்  சேர்ந்து  சொல்லும். அதை  தவிர்க்க  பார்த்தும்  அவரால்  இயலவில்லை.

குழந்தையிடம்  ஒரு  கேள்வி  கேட்டால்  விடை  தெரிந்த  இன்னொரு  குழந்தை  அடக்கமுடியாமல்  சேர்ந்து  சொல்லுமே. அது  போலத்தான்  மனசும்  என்பது  போகபோகத்தான்  சங்கரனுக்குப்  புரிந்தது.

கதவு  தட்டப்பட்டது. சங்கரன்  எழுந்துபோய்  கதவு  திறந்து  கீழே  ட்ரேயில்  வைக்கப்பட்டிருந்த  காபி, பிஸ்கெட்டை  எடுத்துக்  கொண்டார். காலை, மாலை  இருவேளையும்  கதவு  தட்டி  காபி  வைத்துவிட்டுப்  போவார்கள். மாலை  மட்டும்  இரண்டு  பிஸ்கெட்டுகள்  தொட்டு  சாப்பிட  கொடுப்பார்கள்.

காபி  சுவையாக  இருந்தது. பில்டர்  காபி. உத்திராபதி  ரசித்து  குடிப்பார்.

” காபித்தூள்ல  கொதிக்க, கொதிக்க  தண்ணி  ஊத்தி  திக்கா  டிகாஷன்  இறக்கி, அளவா  சக்கரை  போட்டு  காபி  கலந்தா  தேவாமிர்தமா  இருக்கும். நீ  போடற  காபி  அப்படித்தாம்மா  இருக்கு ” என்று  சமையல்கார  அம்மாவை  ஒருமுறை  பாராட்டிக்கொண்டிருந்தார்.

அவரின்  இணக்கம் சங்கரனுக்கு  ஆச்சர்யமாக  இருந்தது.

சங்கரன்  பிஸ்கெட்டைத்  தாளில்  மடித்து  வைத்துவிட்டு  காபியைக்  குடித்தார். அறையைப்  பெருக்க  வரும்  பெண்ணிடம்  பிஸ்கெட்டைத்  தந்தால்  குழந்தைக்குக்  கொடுப்பாள். அதுவும்  உத்திராபதி  ஏற்படுத்திய  பழக்கம்தான்.

” வயசான  எனக்கு  எதுக்கு  பிஸ்கெட். உம்மககிட்ட  குடு. சாப்பிடட்டும்” என்று  தினமும்  கொடுப்பார். அந்தப்  பெண்மணியும்  சந்தோஷமாக  வாங்கிக்கொள்வாள்.

தீபாவளி, பொங்கல்  சமயங்களில்  ஹோமில்  இருப்பவர்களுக்குப்  போட்டிகள்  நடத்தப்படும். தம்பதியாக  இருப்பவர்கள்  சந்தோஷமாக  கலந்து  கொள்வார்கள்.

மற்றவர்கள்  பேருக்குக்  கலந்து  கொள்வார்கள். எல்லாம்  உட்கார்ந்தபடியே  விளையாடும்  விளையாட்டுகள்தான். அப்போதெல்லாம்  உத்திராபதி  மிகவும்  குதூகலமாக  இருப்பார்.

மைக்கைப்  பிடித்துக்கொண்டு  வயது  மறந்து  உற்சாகமாக  நிகழ்ச்சியை  ஒருங்கிணைப்பார். சங்கரனுக்குத்  தெரிந்து  அவரைப்பார்க்க  ஒருவரும்  வந்ததில்லை.

வார  விடுமுறை  நாட்களில்  ஹோமின்  எதிர்ப்புறமிருக்கும்  மரங்களடர்ந்த  மைதானம்  உறவுகளால்  நிரம்பியிருக்கும். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, மனசாட்சிக்கு  பயந்தோ, இல்லையோ  பெற்றவர்களைப்  பார்க்க  பிள்ளைகள்  வருவதும், போவதுமாயிருப்பர்.

அந்த  நேரத்தில்  உத்திராபதி  அறையிலமர்ந்து  தேவாரமோ, திருவாசகமோ  வாசித்துக்  கொண்டிருப்பார். உறவுகளை  எதிர்பார்த்து  ஏமாந்த  வேதனையின்  நிழல்  அவர்  முகத்தில்  படிந்திருந்ததாக  சங்கரனுக்கு  ஞாபகமில்லை.

‘ ஒருவேளை  வாய்விட்டு  பேசியிருந்தால்  அவரும்  மனம்விட்டு  பேசியிருப்பாரோ  என்னவோ….’

திடுமென்று  அந்த  எண்ணம்  எழுந்தது.

” உங்களுக்கு  முன்னாடி  என்  வயசுக்காரர்  ஒருத்தர்  இங்கே  இருந்தார். ரொம்ப  நல்லாப்  பேசுவார். என்ன  நினைச்சானோ, புள்ள  வந்து  கூட்டிட்டுப்  போயிட்டான்” என்று  உத்திராபதி  ஒருமுறை  சொன்னது  ஞாபகத்துக்கு  வந்துது.

 

திரவியம்  வந்திருந்தார். மனிதர், மனைவியுடன்  காசிக்கு  சென்றுவிட்டு  வந்திருந்தார். இரண்டு  பெண்களைப்  பெற்றவர். இருவருமே  வெளிநாட்டில். உடன்  வந்து  தங்கும்படி  வற்புறுத்துகிறார்கள். திரவியம்  பிடிகொடுக்காமல்  நழுவுகிறார்.

” அதெல்லாம்  நமக்கு  சரிப்படாதுப்பா. போய்  கொஞ்சநாள்  இருக்கலாம். பேரப்புள்ளைங்களோட  சந்தோஷமா ஒருமாசமோ, ரெண்டுமாசமோ  இருந்துட்டு  வரலாம். அதுக்குமேல  அங்கயே  இருக்கறது  தப்பு. ஒண்ணு, அந்த  ஊர்  நமக்கு  அவ்வளவா  செட்டாவாது. ரெண்டாவது, கூடவே  இருந்தா  ஒரு  கட்டத்துல  தொந்தரவுன்னு  தோணும். அதனால  விலகி  இருக்கறதுதான்  நல்லது. எப்பவும்  நம்மஊர்  தான்  நமக்கு  சாசுவதம். அப்படியே  எங்களுக்குத்  தனியா  இருக்க  பயமாயிருந்தா  ஹோமுக்கு  வந்துடறோம். இங்க  இருக்க  எல்லாரும்  நிம்மதியாத்தானே  இருக்காங்க” என்று  ஒருமுறை  கூறிய  திரவியம்  சங்கரனை, சரிதானே  என்பதுபோல்  பார்த்தார். அவ

” மனசுல  எதையும்  வச்சிக்காம  கலகலப்பா  இருப்பா. இங்க  இருக்கறவங்கள  உறவுக்காரங்களா  நினைச்சிக்க. நமக்கெல்லாம்  வயசாயிடுச்சு. இன்னும்  எத்தினிநாள்  இருக்கப்போறோம்  சொல்லு. இருக்கவரைக்கும்  சந்தோஷமா  இருப்போமே” என்று  நண்பனை  அவ்வபோது  உற்சாகமூட்டுவார். அவர்  வரப்போக  இருப்பது  சங்கரனுக்கு  மிகப்பெரிய  ஆறுதல்.

திரவியம்  தீர்த்தம், விபூதிப்  பிரசாதத்தை  சங்கரனிடம்  தந்தார்.

” ரொம்ப  திருப்தியா  காசிக்கு  போயிட்டு  வந்தோம்ப்பா. நாலுநாளும்  கங்கையில  குளிச்சோம், மூதாதையர்களுக்கு  திதி  குடுத்தோம். விசுவநாதரை  கண்குளிர  ஏகப்பட்ட  தடவைகள்  தரிசிச்சோம். என்   மனைவியோட  ரொம்பநாள்  ஆசை  நிறைவேறிடுச்சு” என்ற  திரவியம்,

” தீர்த்தத்தை  உன்கூட  இருக்க  பெரியவருக்கு குடு…” என்றார்.

” அவர்  ரூம்ல  இல்லப்பா…”

” ஏம்ப்பா….ஊருக்கு  ஏதும்  போயிருக்காரா….?”

” ரெண்டுநாளா  மூச்சுவிட  சிரமமாயிருக்குன்னு  சொல்லிக்கிட்டிருந்தார். நாலுநாளைக்கு  முன்னாடி  தஞ்சாவூர்ல  காட்டிட்டு  வர்றேன்னு  கிளம்பிப்போனார். ஆளைக்காணும்.”

” அடடா…..தனியாவா  போனார்…?”

” ஆமாம்ப்பா. தனியாத்தான்  போனார்” என்ற  சங்கரன்  குரலில்  குற்றவுணர்ச்சி  தெரிந்தது. இருவரும்  ஹோம்  நிர்வாகியிடம்  விசாரித்ததில்  மருத்துவமனையில் இருப்பதாக  தகவல்  கிடைத்தது.

” போய்  பார்த்துட்டு  வந்தா  தேவலாம்னு  தோணுது. நீயும்  வர்றியா…?” என்று  சங்கரன்  கேட்க, திரவியம்  மறுக்கவில்லை.

இருவரும்  மறுநாள்  பாசஞ்சர்  ட்ரெயினில்  புறப்பட்டுப்போனார்கள். மருத்துவமனை  நகரின்  மையத்தில்  அமைந்திருந்தது. விசாரித்துக்கொண்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த

அறைக்குப்  போனபோது  ஒரேயொரு  இளைஞன்  மட்டுமே  உடனிருந்தான். உத்திராபதி  சோர்வாய்  படுக்கையில்  சாய்ந்திருந்தார். கையில்  குளுக்கோஸ்  ஏறிக்கொண்டிருக்க, முகத்தில்  ஆக்சிஜன்   மாஸ்க்  பொருத்தப்பட்டிருந்தது.

சங்கரனையும், திரவியத்தையும்  பார்த்தவர்  சோர்வையும்  மீறி  புன்னகைத்தார். வாங்கி  வந்திருந்த  பழங்களை  மேசையில்  வைத்துவிட்டு  சங்கரன்  அருகில்  செல்ல,  அவர்  கையை  நெகிழ்ச்சியுடன்  பிடித்துக்கொண்டவர்  பல்ஸ்  பார்க்க  வந்த  நர்ஸிடம்  மாஸ்க்கை  எடுக்க  சொல்லி  வற்புறுத்தினார்.

” அஞ்சு  நிமிஷம்தான்  தாத்தா. அதுக்குமேல  அனுமதிக்கமாட்டேன்”  என்று  நர்ஸ்  உறுதியாக  கூறிவிட்டு  செல்ல  மெதுவாக  தலையசைத்தவர்,

” என்னைப் பார்க்கறதுக்காக  இவ்ளோதூரம்  வந்திருக்கீங்களே. உங்க  ரெண்டுபேருக்கும்  ரொம்ப  நன்றி…” என்று  கையெடுத்துக்  கும்பிட்டார்.

” ஐயய்யோ….நீங்க  பெரியவங்க, இப்படியெல்லாம்  பேசக்கூடாது.”

திரவியம்  பதறி  அவர்  கைகளைப்  பற்றிக்கொண்டார்.

” இருக்கட்டும். இந்தமாதிரி  நேரத்துல  ஒருத்தருக்கொருத்தர்  அனுசரணையா  இருக்கறதுதான்  நம்மமாதிரி  ஆளுங்களுக்கு  பலம். காசு, பணம்  யாருக்கு  வேணும். நம்ம  வயசுக்கு  நாமெல்லாம்  நிறைய  பார்த்தாச்சு. நிம்மதியா  சொச்ச  நாளை  கழிக்கணும். வலியில்லாம  போய்ச்சேரணும்” என்று  மூச்சிழுத்தபடியே  பேசியவர், சங்கரனைப்  பார்த்து  சிரித்தார்.

” சங்கரன்  ரொம்ப  பேசுற  ஆளில்ல. தேவைக்கு  மட்டுமே  பேசுவார். என்னை  மாதிரி  ஒரு  லொடலொட  ஆசாமியோட  இருந்து  பாவம், ரொம்ப  கஷ்டப்பட்டுட்டார். அடுத்தது  வர்ற  ஆளாவது  அவருக்கு  தோதா  அமையணும்.”

” ஏன்  அப்படி  சொல்றீங்க. உடம்பு  குணமானதும்  நீங்கதான்  என்னோட  வந்து  இருக்கப்போறீங்க.”

சங்கரன்  அவசரமாக  சொன்னார்.

” வருவேங்கற  நம்பிக்கை  இல்லீங்க.  இப்போதைக்கு  நல்லபடியா  போய்ச்சேரணுங்கற  நினைப்புதான்  மனசு  பூரா  இருக்கு. எழுபத்தெட்டு  வயசாவுது. இந்த  வயசுக்கு  உடம்பு  படுத்தாம  வாழ்ந்துட்டேன். இதுக்குமேல  இருந்து  என்ன  செய்யப்போறேன். பாவம், இந்தப்பையன்  என்னால  கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கான். இவனுக்காகவாவது  நான்  சீக்கிரம்  போய்ச்சேர்ந்துடணும்.”

அவர்  சொல்லிக்  கொண்டிருந்தபோதே  மருத்துவர்  வர, மூவரும்  ஒதுங்கி  வெளியே  வந்தனர்.

” நீங்க  பெரியவருக்கு  உறவா, தம்பி….?”

திரவியம்  கேட்க, அவன்  மறுத்து  தலையசைத்தான்.

” நான்  ஐயாவோட  மாணவன்ங்க. ஐயா  தமிழ்  வாத்தியார். அருமையா  பாடம்  எடுப்பார். அவர்  பாடம்  எடுத்தா  படம்  புடிச்சாப்ல  கண்ணுக்கெதிரே  காட்சிகள்  விரியும். பாடம்  நடத்துறதோட  என்னைமாதிரி  ஏழை  மாணவர்களுக்கும்  நிறைய  உதவிகள்  பண்ணியிருக்கார். அவரோட  காசுலதான்  நான்  படிச்சேன். இன்னிக்கு  நல்ல  நிலைமையில  இருக்கேன்.”

அவன்  கண்கள்  கலங்கின.

” சொந்தக்காரங்க  யாரும்……..”

” ஐயாவுக்கு  ஒரு  தம்பி, ஒரு  தங்கச்சி. அவங்கெல்லாம்  இப்ப  உயிரோட இல்ல. அவங்களோட   பசங்க  வெளிநாட்டுல  இருக்காங்க. யார்கூடவும்  போய்  இருக்க  ஐயாவுக்கு  விருப்பமில்ல” என்றவன்  சங்கரனின்  முகக்குறிப்பறிந்து,

” ஐயா  திருமணமே  செஞ்சிக்கலீங்க. அவர்  ஒரு  பொண்ண  விரும்பியிருக்கார். அந்தப் பொண்ணுக்கு  வேற  இடத்துல  திருமணம்  முடிச்சிட்டாங்க. ஐயா  அந்தப்பொண்ண  மறக்க  முடியாம  அப்படியே  இருந்துட்டார். இதெல்லாம்  எங்கப்பா  சொல்லி  எனக்குத்  தெரியும்” என்றான். சங்கரனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

” ஐயா  தம்பி, தங்கச்சிய  நல்ல  நிலைமைக்கு  கொண்டுவந்தார். அவங்க  தலையெடுத்ததும்  விலகி  வந்துட்டார். நான்  துபாய்ல  இருக்கேன். அப்பப்ப  செல்போன்ல  ஐயாவோட  பேசுவேன். இந்தமுறை  ஊருக்கு  வந்தப்ப  ஐயா  ஆஸ்பத்திரியில  சேர்ந்திருக்கறதா  சொன்னார். உடனே  ஓடி  வந்துட்டேன்” என்றவன்,

” ஐயாவுக்கு  ப்ளட்  கேன்சர். ரொம்ப  முத்திப்போயிட்டதா  டாக்டர்  சொன்னார்” என்று  கூறிவிட்டு  குரலுடைந்து  அழ, சங்கரன்  திரும்பி  நின்று  அவசரம், அவசரமாக  கைக்குட்டை  எடுத்து  கண்களைத்  துடைத்துக்  கொண்டார். அறையை  விட்டு  வெளியே  வந்த மருத்துவர், கையிலிருந்த  ரிப்போர்ட்டைக்  காட்டி  விபரம்  சொன்னார்.

” பெரியவர்  க்ரிட்டிக்கல்  ஸ்டேஜில  இருக்கார். எவ்ளோநாள்  தாங்கும்னு  சொல்லமுடியாது. தெரிவிக்க  வேண்டியவங்களுக்கு  தெரிவிச்சிடுங்க. அப்புறம், இங்கேயே  இருக்கணும்கற  அவசியமில்ல. டிஸ்சார்ஜ்  செஞ்சு  கூட்டிட்டு  போறதாயிருந்தாலும்  சரிதான்.”

” வேண்டாம்  டாக்டர். அவர்  மூச்சுவிட  சிரமப்படறார். என்  வீட்டுக்கு  அழைச்சிட்டு  போய்  வச்சிக்கறது  கஷ்டம். அவர்  உங்க  கண்காணிப்புலேயே  இருக்கட்டும் ” என்றான்  அந்த  இளைஞன்.

மருத்துவர்  அகல, மூவரும்  உள்ளே  வந்தனர். உத்திராபதி  மூச்சுத்திணறலோடு  உறங்கிக்கொண்டிருந்தார்.

” தூங்கறதுக்கு  ஊசி  போட்டிருக்கு. யாரும்  அவரைத்  தொந்தரவு  பண்ணாதீங்க.”

நர்ஸ்  கூறிவிட்டு  செல்ல, திரவியம், சங்கரனைப்  பார்த்தார்.

” நீ  கிளம்பறதாயிருந்தா  கிளம்புப்பா. நான்  இன்னிக்கு  ஒருநாள்  தங்கிட்டு  நாளைக்கு  வர்றேன். மனசு  என்னவோ  போலிருக்கு. ”

” நான்மட்டும்  போய்  என்ன  செய்யப்போறேன். பக்கத்து  லாட்ஜில  ரூம்  போட்டு  தங்கிட்டு  நாளைக்கு  முழுக்க  இவரோட  இருந்துட்டு  சாயங்காலமா  கிளம்புவோம்  சரியாப்பா…?”

விசிட்டர்ஸ் நேரம்வரை   உத்திராபதியுடன்  இருந்துவிட்டு  இருவரும்  லாட்ஜிக்குக்  கிளம்பினர்.

” தம்பி, பணம்  தேவைன்னா  சொல்லுங்க, நான்  தர்றேன்.”

சங்கரன்  ஏ. டி. எம்  கார்டை  கையிலெடுத்தார்.

” வேண்டாம்  சார். இப்பவரைக்கும்  நான்  ஒருபைசா  செலவு  பண்ணல. ஐயா  தன்னோட  ஏ. டி.எம்  கார்டை  எங்கிட்ட  குடுத்துட்டார். நீ  ஒரு  ரூபா  கூட  எனக்காக  செலவு  பண்ணக்கூடாதுன்னு  கண்டிச்சு  சொல்லிட்டார்” என்றான்.

இரவு  சங்கரனுக்கு  உறக்கம்  வரவில்லை. நெருங்கிய  உறவின்  தவிப்பை  உள்வாங்கியதுபோல்  மனசு  ஆசுவாசமின்றித்  தவித்தது.

மறுநாள்  மருத்துவமனைக்குச்  சென்றபோது  உத்திராபதி  நிலைகொள்ளாமல்  தவித்துக்  கொண்டிருந்தார். உடலில்  தங்கியிருந்த  நோயின்  தீவிரம்  அவரை  ஏகமாய்  இம்சித்தது.

ஆக்சிஜன்  மாஸ்க்கை  எடுத்துவிட்டு  மூக்கில்  சிறு  குழாயைப்  பொருத்தியிருந்தார்கள். குழாய்  முகத்தைச்  சுற்றி  ஓடி  ஒரு  கருவியோடு  இணைந்திருந்தது. படுக்கை  சாய்த்து  வைக்கப்பட்டிருக்க  உத்திராபதி  அதில்  தளர்வாய்  சரிந்திருந்தார்.  மார்பில்  ஆங்காங்கே  குழாயோடு  இணைக்கப்பட்டிருந்த  வெள்ளை  வில்லைகளை  ஒட்டியிருந்தனர்.

வலது  புறமிருந்த  மானிட்டரில் சிக்சாக்  கோடுகள்  ஓடிக்கொண்டிருக்க, இடதுபுறம்  குளுக்கோஸ்  பாட்டில்  தொங்கிக்கொண்டிருந்தது. உத்திராபதி  உறங்க  முடியாமலும், விழித்திருக்க  இயலாமலும்  போராடிக்கொண்டிருந்தார்.

” இந்த  நேரத்துல  நமக்கு  என்னாகுமோங்கற  பயத்துல  தூக்கம்  வராதுங்க” என்றாள்  தரை  துடைக்கும்  பெண்மணி.

” இ….இல்ல, இல்ல…..பயப்படறதுக்கு…….எ….எதுவுமில்ல. வேலை  முடிஞ்சா  சரி…” என்றார்  உத்திராபதி  திக்கித்திணறி.

” ஐயா  தன்னோட  உடம்பை  மருத்துவ  கல்லூரி  மாணவர்கள்  ஆராய்ச்சிக்காக  தானமா  எழுதி  குடுத்துட்டார்…” என்றான்  அந்த  இளைஞன்.

மாலை நான்கு மணியளவில் சங்கரனும், திரவியமும் கிளம்பிவிட்டனர். சங்கரனுக்கு உத்திராபதியை விட்டுக் கிளம்ப மனசேயில்லை. இருத்தலிலிந்து விடுபடத் துடிக்கும் ஒற்றைச் சுடரொளி காற்றுக்கு அசைவது போன்ற பிரமை தட்ட சங்கரன் கலங்கிப்போனார். நிழலின் சாயல் படிந்த உத்திராபதியின் கண்கள் எதையோ உணர்த்துவது போலிருக்க, ரயில் பிரயாணத்தில் அவை சங்கரனுடன் தொடர்ந்து வந்தபடியிருந்தன. மறுநாள் மதியவாக்கில் உத்திராபதி இறந்த செய்தி வந்தது. சங்கரன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. ஹேங்கரில் உத்திராபதியின் வெள்ளை சட்டை காலர் அழுக்கோடு தொங்கிக் கொண்டிருந்தது.

கூடுடைத்து – ஐ.கிருத்திகா சிறுகதை

மிர்ணாளினி  மதியத்  தூக்கம் போட்டு  எழுந்தபோது  வானம் கருத்திருந்தது. கடைந்த. மோரில் திரளும்  வெண்ணெய்  போல கருத்த. மேகங்கள்  ஆங்காங்கே திரண்டிருந்தன. காற்று  குளிர்ந்து வீசியது.  மதியம்வரை  சூரிய அனலில்  கிடந்து  வறுபட்ட காற்றில்  இப்போது  சாரல் சிந்தியது.

மிர்ணாளினி  துள்ளியெழுந்து கொல்லைப்புறம்  வந்தாள். கொல்லையில்  அடர்த்தியான பசுமை  கவிந்திருந்தது. இலை இடுக்குகள்  வழியாக  வானம் தெரிவது  அரிதான  ஒன்று. இப்போது  இன்னும்  இருண்டு போயிருந்தது. மிர்ணாளினி   துணி துவைக்கும்  கல்லில்  அமர்ந்தாள்

” மிர்ணா, காபி  கலக்கவா……?”

அத்தையின்  வெண்கலக்  குரல்  காதுகளில்  மோதியது. புதிதாக பில்டர்  போட்டு  டிகாஷன்  இறக்கி வைத்திருப்பாள். காலை  ஒரு முறை,  மாலை  ஒருமுறை  என்று இரண்டு  முறைகள்  டிகாஷன் இறக்கியாகிவிடும்.

” அப்ப இறக்கி  அப்பவே குடிக்கணும். அதுக்கு  தனி  ருசி.”

அவள்  கண்கள்  மின்னும். மிர்ணாளினி  வந்ததிலிருந்து  விழுந்து, விழுந்து கவனிக்கிறாள்.

” ஒரு  மாசம்  தங்கலாம்னு  வந்தேன். ஒரு  வாரத்துல ஓட வச்சிடாதே. ”

மிர்ணாளினி  குறும்பாகச்  சொன்னாள். அத்தைக்குச்  சிறுவயதிலிருந்தே  மருமகளென்றால்  கொள்ளைப் பிரியம். குழந்தை  கண்ணுக்கு  மை தயாரிப்பதிலிருந்து,  தலைக்கு எண்ணெய்  காய்ச்சுவது  வரை எல்லாமே  அத்தைதான்.

” மருதாணியை  பட்டு,பட்டா  அரைச்சு  பட்டுக்  கையில இட்டு  விடவா……..?”  என்று அத்தை கேட்பாள். மிர்ணாளினிக்கு  சிரிப்பு பொங்கும்.  கன்னம்  குழிய சிரித்தபடி  அவள்  கழுத்தைக்  கட்டிக்  கொள்வாள்.

அத்தை காபியோடு   வந்தாள்.

” இன்னிக்கு  மழை  வரும்  போலிருக்கு  அத்தை.”

மிர்ணாளினி கால்களை   மடக்கி அமர்ந்து   கொண்டாள். அத்தை பிளாஸ்டிக்  நாற்காலியை கையோடு  கொண்டு வந்திருந்தாள். அதில்  சாய்ந்து அமர்ந்து  கொண்டாள்.

மாலை  நேரத்தைகாபி  கூடுதலாய்  ரசிக்க  வைத்தது. காபியின்மிடறுகள்தொண்டைக்குழிக்குள்இனிப்பையும்,  கசப்பையும்சரிசமமாய்  இறக்கின.

அத்தை  மயில்மாணிக்கப் பூக்களை  வெறித்தபடி  காபியை உறிஞ்சினாள். தோட்டத்தில்  நிறைய  பூக்கள் பூத்திருந்தன. வண்ணங்களை குழைத்து  ஆங்காங்கே  தடவி விட்டது  போல பல நிறங்களில் பூக்கள்.

” எனக்குத்  துணையா  பூக்கள். பூக்களுக்குத் துணையா  நான்.”

அத்தை சொன்னாள்.

அவள்  முகத்திலும்  ஆயிரம்  பூக்கள்  மலர்ந்திருந்தன. தூறல்விழஆரம்பித்தது. சற்றே  கனமானதூறல்கள். சிமெண்ட்  தளத்தில்  விழுந்தவேகத்தில்  காசுகள்  போல்  வட்டமாய்  விரிந்தன.

தூறல்கள்  சில்லிட்டிருந்தன. நெற்றியில் ஒன்று, புறங்கையில்  ஒன்று, இமைகளை  உரசி  ஒன்று  விழுந்தபோது  மொத்த   உடலும்  சில்லிட்டது. அத்தை உள்ளங்கையை குழித்து  தூறல்களை  ஏந்திக் கொண்டிருந்தாள்.

”  அஞ்சு  சொட்டு  மழை  நீரைப் பிடிச்சுட்டேன்.”

அவளுடைய  சந்தோஷத்   தளும்பலில்  உள்ளங்கை வழிந்தது. அத்தை மறுகை  குழித்து  நீரை  எதிர்பார்த்துக்  கிடந்தாள். கனத்  தூறல்கள்  நின்று  ஊசித் தூறல்கள் விழ  ஆரம்பித்தன. சல்லடைத் துளைகளிலிருந்து  கொட்டும்  மாவு  போல  தூறல்கள் அடர்ந்து  விழுந்தன. அத்தை நாற்காலியைத்  தூக்கிக் கொண்டாள்.

” கொல்லைப்  பக்கக்  காட்சி  முடிஞ்சது. வா, தெருப்  பக்கக் காட்சியை  ரசிக்கலாம்.”

மிர்ணாளினியை  அழைத்துக்கொண்டுபோனாள். சிட்டவுட்டில்  இருவரும்  அமர்ந்தனர். வீட்டுக்கு  முன்நின்றிருந்தவேப்பமரத்தைமழைகுளிப்பாட்டிக்  கொண்டிருந்தது.

தெருவில்  நீரோட்டம் அதிகமாயிருந்தது. அவ்வளவு மழை. அத்தை  நினைத்துக் கொண்டவள்  போல்  எழுந்து  உள்ளே  சென்றாள். இரண்டு நிமிடங்களில்  திரும்பி   வந்தவள் கையில்  மல்லிகைச்சரம்.

” உனக்காக  தொடுத்து  வச்சேன். இப்பதான்  ஞாபகம்  வந்தது. ”

தலையில்  சூட்டி  விட்டாள். பூவின் மணம்  அவள்  விரல்களில்  அப்பிக் கொண்டது.

” ராத்திரிக்கு  என்ன   செய்யலாம்….. உனக்குப்   பிடிச்ச   மசால்தோசைப்  பண்ணட்டுமா…….?”

” திரும்பவும்  உபசரணையா…… நான்  வந்து  நாலு  நாளாகுது. இந்த  நாலு  நாள்ல  ரெண்டு  கிலோ  எடை  போட்டுட்ட. மாதிரி இருக்கு. இப்படியே  நீ  செஞ்சு போட்டுகிட்டேருந்தா  நான்  ஊருக்குப் போகும்போது  அடையாளம் தெரியாதபடி  குண்டாயிடுவேன். அதனால  இன்னிக்கு  சிம்பிளா கல்தோசை  பண்ணிடு.”

” வெறுமனே  தோசைன்னு சொல்லிட்டுப்  போயேன்.  எதுக்கு  முன்னால  கல்லுங்கற   அடைமொழி……”

அவள் சிரித்தாள். அடுத்த  அரைமணி  நேரத்தில்  மழை  நின்று விட்டது. மேகங்கள்  கரைந்து  மண்ணில்  கலந்து விட்டிருந்தபடியால்  வானம்  பளிச்சிட்டது. காற்று  குளிர்ந்த  தன்மைக்கு  மாறியிருந்தது.

” கோடை  மழைக்கு  ஸ்திரத்தன்மை  கிடையாது.”

அத்தை  சொல்லிவிட்டு  எழுந்தாள். ஆறு  மணியானால்  விளக்கேற்றி  சுலோகம்  சொல்வாள். சாமிஅறையில்  சாம்பிராணி  புகைக்கமழ்ந்தது. வீட்டின்  தலைவாசல்  நேர்மேலே  மாமாவின்  புகைப்படம். பெரிதாக  மரச்  சட்டமிட்டகண்ணாடிக்குள்  மாமா  சிரித்துக்  கொண்டிருந்தார்.

அத்தை  இறுதியாக  அதற்கு  சாம்பிராணிக் காட்டினாள். புகை  வளையங்கள்மேலெழுந்து  காற்றில்  பரவின. சுருள்,  சுருளாக  அலைந்துகலைந்தன. அத்தை  தூபக்காலை  வேகமாக  சுற்றியதில்  ஒரு  துண்டுநெருப்பு  கீழே  விழுந்தது.

குளிர்ந்த தரையில்  அது  கனன்று  கிடந்தது. அதை  இடுக்கியால்  கவனமாக  எடுத்துப்  போட்டாள். இரண்டு முறை  அது  இடுக்கியிலிருந்து  நழுவி  கீழே  விழுந்தது. அத்தை மூன்றாவது  முறையாக  வென்று விட்டாள்.

”  இப்பதான்  கம்ப்யூட்டர்  சாம்பிராணி  வந்துடுச்சே. அதை வாங்கி  வச்சிக்கலாமே….. ”

மிர்ணாளினியின்  யோசனையில் அவளுக்கு  உடன்பாடில்லை  என்பது  அவளது  முகக்குறிப்பில்  தெரிந்தது.

” நான்  அந்தக்  காலம்டி.”

அத்தை  சிரித்துக்கொண்டே  சொன்னாள். இரவு வானத்தில்  நட்சத்திரங்கள்

நெருஞ்சிமுள்ளைப்  போல  அப்பிக்  கிடந்தன. விமானம்  ஒன்றுபூச்சி  போல  பறந்து  போனது. மொட்டைமாடியில்  சின்னச்,  சின்னவட்டங்களாக  நீர்  தேங்கிக்  கிடந்தது.

மாமாவின்  பூர்வீக  வீடு அது. நூறு  வருடங்களுக்கு  முன்பே  நல்ல  வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது.

” மாமாவோட  உயிர்  இந்த  வீடு” என்று  அத்தை  ஒருமுறை  சொல்லியிருக்கிறாள்.

அந்த வீட்டுக்காக  அத்தை  தனக்குக் கிடைத்த  அரசாங்க  வேலையை உதறியிருக்கிறாள். தையல் பயிற்சி   முடித்திருந்தவளுக்கு அரசாங்க  பள்ளிக்கூடத்தில் தையல்  ஆசிரியை  வேலை கிடைத்து  சென்னைக்குப்  போக வேண்டிய  சூழ்நிலை  உண்டானபோது  அதைத்  தவிர்த்துவிட்டாள்.

” வேலை வேண்டாம்னு  எழுதிக் கொடுத்துட்டியாமே. ஏன்டி  அப்படி செஞ்சே……?”

அம்மா  பிடித்துவிட்டாள். அத்தை சமாளித்துக் கொண்டாள்.

” ஏகப்பட்டது  கிடக்கு. வேலைக்குப் போய்  புதுசா  எதை சேர்க்கப் போறேன். ”

” ஆனா  அது  உன்  கனவாச்சே…..”

அத்தை  எதுவும்  சொல்லவில்லை.

நிலவொளியில்  அத்தையின்  முகம்  வரைந்த  ஓவியம்  போலிருந்தது. முதுமையின்  சாயல் அப்பிக்கொள்ளாத  முகம். மாமாவின் மறைவுக்குப் பிறகு அவள் பூச்சூடி கொள்வதில்லை. மற்றபடி அவளிடம் எந்த மாற்றமுமில்லை. இந்த  ஐம்பது வயதிலும்  அவள்  இளமையாகவே தெரிந்தாள்.

” நாளைக்குப்  பக்கத்துல  இருக்க மலைக்கோவிலுக்குப்  போகலாம். ரொம்பப்  பெரிய மலையெல்லாம் கிடையாது. பத்து  நிமிஷத்துல ஏறிடலாம். ”

அத்தை  சொல்லிவிட்டு  ஈசிசேரில் சாய்ந்து  கொண்டாள்.

” தினமும்  இப்படி  மொட்டை மாடியில  உட்கார்ந்து  காத்து வாங்கறது  வழக்கம். ஏழு  மணிக்கு சாப்பிடுவேன். எட்டரை  வரைக்கும் நிலவை  ரசிப்பேன். ”

” அமாவாசையன்னிக்கு……..?”

மிர்ணாளினி  இடைமறித்தாள். அத்தை கண்களைச்  சுருக்கிப்  பார்த்து சிரித்தாள்.

” இருளையும்  ரசிக்கப் பழகிக்கிட்டேன். மையிருள்ல  எதையும்  அசை  போடாம அமைதியா  உட்கார்ந்திருக்கறது ஒரு  சுகம். அதுவும் எனக்குப்  பிடிக்கும்.”

அத்தை  சொல்லிவிட்டு  கொட்டாவி விட்டாள்.

“தூக்கம்  வந்தா  கீழே  போகலாம்.”

மிர்ணாளினி  தயாரானாள்.

” மதியம் தூங்கலை. அதான்  இப்ப கண்ணைக்  கட்டுது.”

இருவரும்  சுருள்  வளைவுப் படிகளில்  இறங்கினர். கைப்பிடி  மரவளைவு  வழுவழுத்தது.  இந்த வீடு அத்தையின் சொர்க்கம் என்று மிர்ணாளினி  நினைத்துக் கொண்டாள். வாரிசுகளற்ற அத்தைக்கு  உயிரற்ற  இந்த வீட்டின்  மீதான  பிடிப்பு  ஒரு தேவையான  ஆசுவாசம்  என்று  அவள்  எண்ணினாள்.

மாமா  பெரிய  மீசை  வைத்துக் கொண்டிருப்பார். கணீரென்று பேசுவார். ஒரு  சொல்  வந்து விழுந்தால்  எதிராளி  மறு வார்த்தை  பேசமாட்டான். அப்படி  மிடுக்காய்  வாழ்ந்தவர்  ஒருநாள்  திடீரென்று  வந்த  நெஞ்சுவலியில்  சட்டென்று  முடிந்து போனார்.

மறுநாள்  மிர்ணாளினி  அத்தையுடன் மலைக்  கோவிலுக்குச் சென்று  வந்தாள். கோவில்  சின்னதாய், அழகாயிருந்தது. யாரோ  ஒரு  அரசன்  கட்டியது  என்று சொன்னார்கள்.

” கல்யாணமான  புதுசுல  அடிக்கடி இந்தக்  கோவிலுக்கு  வருவோம். அவருக்கு  இந்தக்  கோவில் ரொம்பப்  பிடிக்கும்.”

” யாருக்குத்தான்  பிடிக்காது. அற்புதமான  சூழல்ல இயற்கையோட   பிண்ணணியில கோவில்  ரொம்ப  அழகா  இருக்கு. எனக்கும் இந்தக்  கோவிலை  அவ்வளவு பிடிச்சிருக்கு அத்தை.”

அத்தை  அதன்பிறகு  எதுவும்  பேசவில்லை. வீடு வரும்வரை  அமைதியாக  வந்தாள். இரவு  உணவுக்குப்  பின்பு  தலை வலிப்பதாக  கூறி  சீக்கிரமே படுக்கச்  சென்று  விட்டாள்.

மொட்டை  மாடியில்  நிலவு  காய்ந்தது. ஒளியை  ஒழுகவிட்டுஅது  காத்துக்  கிடந்தது. சன்னல்வழியே  தெரிந்த  நிலவைவெறித்தபடி  மிர்ணாளினி  படுத்துக்கிடந்தாள்.

ஐந்து வருடங்கள்  வாழ்ந்த  வாழ்க்கையிலிருந்து  விடுபட்டு வந்தாயிற்று. பறவைகளின்  சுதந்திரம்  அதன்  இறக்கைகளின் வலிமையைச்  சார்ந்தது  என்பது  போல  தன்னுடைய    மன  வலிமையில் தான்,  தன்  மகிழ்ச்சி  அடங்கியிருக்கிறது  என்பதை அவள்  நன்றாகவேப்  புரிந்து வைத்திருந்தாள்.

ஐந்து  வருட  திருமண  பந்தம்  அவனது  அர்த்தமற்ற அகங்காரத்தில்  குலைவுற்றுப்போனது. மிர்ணாளினிக்கு  மூச்சுத்திணறி போகக்  கூடுடைத்து  வெளியே வந்துவிட்டாள்.

காலையில்  அத்தை  தெளிவாக இருந்தாள்.

” தலைவலி எப்படி இருக்கு….?”

” சரியாயிடுச்சு……”

அத்தை  இயல்பாக  சிரித்தாள்.

” நேத்திக்கு  திடீர்ன்னு  என்னாச்சு அத்தை. கோவில்ல  ஒருமாதிரி இருந்தியே.”

அத்தைக்கு  சில  வேலைகளிருந்தன. அவள்  செய்துகொண்டேயிருந்தாள். அவள்  அந்தவீட்டிற்கு  மகாராணி. அதில்எந்தசந்தேகமுமில்லை. எடுபிடிவேலைகளுக்கு  ஆட்களிருந்தனர்.

வீட்டை  அழகுபடுத்துவது, சமையல்செய்வது  அத்தை. அது  அவளதுபொழுதுபோக்கிற்காக.  பிடித்ததும்கூட.  தனிமை  அவளை  முடக்கி  விடவில்லை. அவள்  மகிழ்ச்சியாக  இருந்தாள்.

காலை  ஆகாரம்  மேசைக்கு  வந்துவிட்டது. அத்தையின்  கைப்பக்குவத்தில்  ருசியான  பொங்கலும், தொட்டுக்கொள்ள  தேங்காய் சட்னியும்  தயாராயிருந்தன.

” சாப்பிடலாம்……”

அத்தை  தட்டெடுத்து  வைத்தாள். மிர்ணாளினி  அமர்ந்தவுடன்  கேட்டாள்.

” நான்  கேட்டதுக்கு  நீ  இன்னும் பதில் சொல்லவேயில்லை.”

” அந்தக்  கோவில்  அவருக்கு ரொம்பப்  பிடிச்ச  கோவில். நினைச்சா  உடனே  கிளம்பிடுவார்.”

” அதைத்தான்  நேத்திக்கு சொன்னியே.”

” எனக்கும்  சிலது பிடிக்கும். ஆனா  அதுக்கு  முக்கியத்துவம்  கிடையாது.”

மிர்ணாளினி,  அத்தையைப்  பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

” அவருக்குப்  பிடிச்சதெல்லாம்  எனக்குப்  பிடிக்கணும். எனக்குன்னு  தனிப்பட்ட அபிப்பிராயம்  இருக்கக்கூடாது. அது  செல்லாது. அவருக்குப் பிடிச்ச மாதிரி  நான்  நடந்துகிட்டா அவருக்கு  ரொம்பப் பிடிக்கும்.”

அத்தை  அமைதியானாள். சில வினாடிகளுக்குப்  பின்  மிர்ணாளினி கேட்டாள்.

” இப்ப……..?”

” இந்தத்  தனிமை  எனக்கு  ரொம்பப்  பிடிச்சிருக்கு. ” என்றாள் அத்தை.