‘காலமானார், இயற்கை எய்தினார், சிவனடி சேர்ந்தார், உயிர் நீத்தார், அமரரானார்.’
எல்லா வார்த்தைகளையும் ஏகாம்பரம் ஒருமுறை சொல்லிப் பார்த்தார். திரும்பத்திரும்ப சொன்னதில் வார்த்தைகளுக்குள் ‘ தான் ‘ கரைந்து அதுவாகவே ஆகிப்போனது போன்ற உணர்வு உண்டாயிற்று அவருக்கு.
அதுவும் சமீபகாலமாக அந்த வார்த்தைகள் மேல் அவருக்கு மிகுந்த பற்று உண்டாயிற்று. தனியாக இருக்கும் நேரங்களில் ஏகாம்பரம் அந்த வார்த்தைகளை உருப்போடுவதுபோல் சொல்லிப்பார்த்துக்கொண்டிருந்தார்.
எழுபது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஏகாம்பரத்துக்கு ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையுமில்லை.
மூன்றுவேளையும் நன்றாக சாப்பிட்டார், மாலை தெருவில் காலார நடந்தார், கண்ணாடி அணியாமலே எதிரில் வருபவர்களை அடையாளம் கண்டுகொண்டார். செரிமானப் பிரச்சனையுமில்லை.
ஆனாலும் அவருக்கு போதுமென்று தோன்றிவிட்டது. படுத்த படுக்கையில் கிடக்கும் சிலர்,
” செத்துப்போயிடுவேனோன்னு பயமா இருக்கு ” என்று சொல்வதுண்டு. நலிந்த உடற்கூட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் உயிரை கெட்டியாக தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு ஏற்படும் ஆசையின் விளைவே அவர்கள் அப்படி சொல்வது.
ஆனால் ஏகாம்பரத்துக்கு விட்டு விடுதலையாகவே விருப்பமாயிருந்தது. நாளாக, ஆக அந்த விருப்பம் அதிகரித்துக்கொண்டே போனது.
ஏகாம்பரம் தலையணையை சாய்த்து வைத்து சரிந்து அமர்ந்தார். லேசாய் திறந்திருந்த ஜன்னலின் வழியே கசிந்த நிலா வெளிச்சம் ஒரு துண்டு மெலிந்த கோல்போல் தரையில் விழுந்து கிடந்தது.
ஏகாம்பரத்துக்கு உயிர் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவலாயிருந்தது.
‘ அது சாம்பிராணிப் புகைபோல் சுருள், சுருளாக உள்ளே ஓடிக்கொண்டிருக்குமா , பனிப்புகை போல் உடல் முழுக்க அடர்ந்து பரவியிருக்குமா, அல்லது பிராணவாயுதான் உயிரா…..?’
உள்ளே கேள்விகள் ஓடின. விடை அறிந்து கொள்ள முடியாத கேள்விகள். வெகுநேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர் தன்னையுமறியாமல் உறங்கிப்போனார்.
விடியற்காலையில் வாசல் தெளித்து வரட், வரட்டென்று சிவகாமி கூட்டும் சத்தம் கேட்டு ஏகாம்பரம் விழித்துக்கொண்டார். ஆளோடியை ஒட்டிய அறை அவருடையது. அதனால் சத்தம் துல்லியமாக கேட்டது. கூடவே மார்கழி மாதத்து பனிக்காற்று ஜன்னலிடுக்கின் வழியே உள்நுழைந்து சிலீரென்று அவரைத் தொட்டது.
ஏகாம்பரம் கைகளை உயரே தூக்கி நெட்டி முறித்துவிட்டு போர்வையை மடித்து வைத்தார். கொல்லைப்புறம் சென்று பல் துலக்கி காலைக்கடன்களை கழித்து கூடத்துக்கு வந்தார்.
” வயசானா மலச்சிக்கல் பிரச்சனை வந்துடுமாப்பா…?”
சிவராமன் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.
அறுபது வயதுக்குமேல் சலிப்பு தாங்கிய முகத்துடன் நடமாடுபவர்களின் தலையாய பிரச்சனை மலச்சிக்கல்தான் என்று சிவராமன் அடித்து சொல்வார்.
” அதோ வாரான் பாரு சுகவனம். அவன் பேர்ல இருக்க சுகம் மொகத்துல இல்லாததுக்கு காரணம் அதுதான்….” என்று சிவராமன் கண்ணடித்து சொன்னபோது ஏகாம்பரத்துக்கு சிரிப்பு வந்தது.
” சிரிக்கிறியா….ஒனக்கென்னாப்பா, நீ குடுத்து வச்சவன். காலையில எந்திரிச்சதும் போயிடுற. எங்களுக்கு முக்கி முக்கியே முழி பிதுங்கிப்போயிடுது.”
சிவராமன் அலுத்துக்கொண்டார்.
” மாமா, காபி எடுத்துக்குங்க…” என்று சிவகாமி கொண்டுவந்து வைத்த காபி டம்ளரை கையிலெடுத்தவரின் பார்வை அனிச்சையாக கூடத்தில் மாட்டியிருந்த பிரேமிட்ட படங்களின் மீது நிலைத்தது.
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, மனைவியின் படங்கள் வரிசையாக சந்தனப்பொட்டுக்களோடு சிரித்தன.
அடுத்தபடம் தன்னுடையதாக இருக்கும் என்றெண்ணியவர் கற்பனையில் கண்ணாடி சட்டத்தை மாட்டி அதில் தன்னைப் பொருத்திப் பார்த்தார். முறுக்கு மீசை, வழுக்கை விழாத நரைத்த தலை, கூர்மையான கண்கள் என்று முகம் நன்றாகத்தானிருந்தது. வண்ண புகைப்படம் வேறு. கேட்கவா வேண்டும்.
” அப்பா, என்னா யோசன…..?”
கேட்டபடியே ரவி வந்தமர, நினைவு கலைந்தவர் சமாளித்து காபியை உறிஞ்சத்தொடங்கினார்.
” சிவகாமி, காபி குடு…” என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்த ரவி,
” அப்பா, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ” என்று தயங்கினான்.
” சொல்லுடா…..”
” நம்ம ராமாமிர்தம் மாமா தவறிட்டாராம். பதினோரு மணிக்கு போன் வந்துச்சு. அந்த நேரத்துல உன்னை எழுப்ப வேணாம்னு சிவகாமி சொன்னா. அதான்….”
” எ….எப்புடிடா….?” என்ற ஏகாம்பரத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து இருவரும் நண்பர்கள். கிராமத்தில் அவர்கள் சுற்றாத இடமில்லை.
பிறந்த ஊரிலேயே கடைசிவரை வாழ ஒரு கொடுப்பினை வேண்டும். அது இருவருக்குமே வாய்த்தது.
” நேத்திக்கு சாயந்தரம்கூட அவுங்க வீட்டுக்கு போயி அரைமணி நேரம் பேசிட்டு வந்தேனே…”
” மாமா எப்பவும்போல ராத்திரி சாப்புட்டு எந்திரிச்சிருக்காரு. எந்திரிச்சவரு, நெஞ்சை வலிக்கிறமாதிரி இருக்குன்னு சொன்னாராம். ஒடனே மோகன் கைத்தாங்கலா புடிச்சு படுக்க வைக்கப் போகையில அப்புடியே நின்னுடுச்சாம்.”
அதற்குமேல் ஏகாம்பரத்துக்கு தரிக்கவில்லை. சட்டென சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
” இட்லி ஊத்துறேன். ஒருவழியா சாப்புட்டு போயிடுங்களேன் மாமா….”
சிவகாமி தயக்கமாக கூற, வேண்டாமென தலையசைத்தவர் செருப்பை மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார்.
பனி புகைப்போல தெருவை போர்த்தி கிடந்தது. வாசல் தெளித்த பெண்களில் சிலர், சரட், சரட்டென்ற செருப்பு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தனர்.
ஏகாம்பரம் நிதானமில்லாமல் இருந்தார். ராமாமிர்தத்தைப் பற்றி ஏதேதோ நினைவுகள் உண்டாகி ஒருகட்டத்தில் வெற்று கரும்பலகைப்போல நினைவுகள் ஏதுமின்றி மனசு ஸ்தம்பித்தது.
காமாட்சி, ஏகாம்பரத்தைப் பார்த்து பெருங்குரலெடுத்து அழுதாள்.
” ஒங்க பெரண்ட பாத்தீங்களாண்ணே. நடையுடையா இருந்த மனுசன் பட்டுன்னு போயிட்டாரே. சாப்புட்டு கழுவுன கை காயறதுக்குள்ள சாஞ்சிட்டாரே. நான் என்னா பண்ணுவேன்.”
அவள் அழ, ஏகாம்பரம் மெதுவாக ராமாமிர்தம் இருந்த ஐஸ் பெட்டியை நெருங்கினார். தலைக்கட்டு, கால்கட்டு, நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் சகிதம் அமைதியாய் சயனிப்பதுபோல் படுத்திருந்தவரைப் பார்த்த ஏகாம்பரம் கண்களை மூடிக்கொண்டார்.
ஆரம்பத்தில் நண்பனின் இழப்பில் தவித்த மனசு அடங்கிப்போய் அமைதியாகிவிட்டிருந்தது. நிச்சலனமற்ற நீர்ப்பரப்பில் தவழும் காற்றுபோல இதமான உணர்வு அவரை சூழ்ந்துகொண்டது.
சுற்றியிருந்த சொந்தங்கள் அழ அவர் நண்பனைப் பார்த்து கரம்குவித்தார்.
‘ ஆகாசத்த எட்டிப்புடிக்கிற ஏணியில மொதல்ல நீ ஏறிட்ட. உன்னைத் தொடர்ந்து நானும் சீக்கிரமே வந்துடுறேன்.’
வாய்க்குள் சொல்லிவிட்டு வெளியே வந்து சாமியானா பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
சிவராமன் அவருக்கு முன்பே வந்துவிட்டிருந்தார். ஏகாம்பரத்தைக் கண்டதும் தனியே அமர்ந்திருந்தவர் எழுந்துவந்து அவரருகில் அமர்ந்தார்.
” ராமாமிர்தம் இப்புடிப் போவான்னு நெனச்சு கூட பாக்கலப்பா. சேதி கேட்டதும் நெலகொலஞ்சு போயிட்டேன்.”
மெதுவாக சொன்னார். கண்களில் பீதி அப்பிக்கிடந்தது.
” பயப்படுறியா…..?”
ஏகாம்பரம் கேட்க, சிவராமனின் தலை தாழ்ந்தது.
” எழுவது வயசாச்சு. இந்த வயசுல என்னா பயம்?”
” எத்தினி வயசானா என்னா. சாவுன்னா பயந்தான். ஏன் ஒனக்கில்லையா …?”
” காலை சுத்துன பாம்பு கடிக்காம வுடாது. இது புரிஞ்சா மனசு தெளிஞ்சிரும்.”
“அதுசரி, எல்லாம் பேசுறதுக்கு சுளுவாத்தானிருக்கும். நமக்குன்னு வந்தாத்தான் தெரியும் வலியும், வேதனையும்.”
” செத்ததுக்கப்புறம் வலி ஏது, வேதன ஏது. ராமாமிர்தத்தைப் பாத்தியா….அவன் மொகத்துல தெரிஞ்ச அமைதிய இதுக்கு முன்னாடி பாத்துருக்கியா….எப்பவும் பரபரப்பா இருப்பான். முணுக்குன்னா கோவம் வந்துரும். எதிராளி குரலொசத்தி பேசுனா தாம், தூம்முன்னு குதிப்பான். இப்ப உணர்ச்சிகளை தொலைச்சிட்டு சாத்வீகமா படுத்துருக்கான்.”
ஏகாம்பரம் சொல்ல, சொல்ல சிவராமன் அவரை வித்தியாசமாக பார்த்தார். உள்ளே திடீர், திடீரென்று அழுகை சத்தம் கேட்டது. சில குரல்கள் செயற்கையாக அழுதது அப்பட்டமாக தெரிந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு பெரிய கேனில் காபி உள்ளே போனது. காகித கப்புகளில் நிரப்பித் தரப்பட்ட ஆடை படர்ந்த காபியை குடித்ததும் ஒரு தெம்பு தொற்றிக்கொள்ள குரல்கள் திடீரென எழும்பி அடங்கின.
சிவராமன் பெஞ்சில் கிடந்த அன்றைய தினசரியை கையிலெடுத்தார். ஒரு மணி நேரமாய் அப்படியே உட்கார்ந்திருந்தது இடுப்பையும், உட்காருமிடத்தையும் வலித்தது.
ஏகாம்பரம் கால்கள் நீட்டி, கைகளை சேர்த்து வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டார்.
சிலர் கைகளில் ரோஜாப்பூ, மல்லிகைப்பூ மாலைகளோடு உள்ளே சென்றவண்ணமிருந்தனர்.
சிவன் கோவிலுக்கருகில் ஒரேயொரு பூக்கடை உண்டு. அங்கிருந்து வாங்கி வரப்பட்ட மாலைகள் ராமாமிர்தத்தின் மேல் சில நிமிடங்கள் கிடந்துவிட்டு விதிப்படி சுவரோரம் போய் சுருண்டு விழுந்தன.
சாமிக்காக கட்டிய மாலைகளை சவத்துக்கு விற்றதில் பூக்கடைக்காரனுக்கு எந்த குற்றவுணர்ச்சியுமில்லை. அதை எண்ணிப்பார்த்து ஏகாம்பரத்துக்கு சிரிப்பு வந்தது.
” யப்பா ……”
சிவராமன் தோள்தொட, ஏகாம்பரம் திடுக்கிட்டு விழித்தார்.
” வயித்த முட்டுது. நான் வூட்டுக்கு போயிட்டு வந்துடுறேன்.”
” திரும்பி எதுக்கு வர்ற….அதான் பாத்தாச்சில்ல.”
” சேச்சே….தப்புப்பா. பொணம் எடுக்குறவரைக்கும் இருக்கறதுதான் மொற….இல்லாட்டி சனம் ஒருமாதிரி பேசும்.”
உணர்வுகளடங்கி சலனமற்று கிடக்கும் ராமாமிர்ததுக்கு பிணம் என்ற இன்னொரு பெயர் பொருத்தமானதுதான் என்று ஏகாம்பரத்துக்கு பட்டது.
” மாமா, காபி எடுத்துக்குங்க…”
மோகன் காபி கப்பை நீட்டினான்.
” வேணாம்ப்பா….வரும்போது குடிச்சிட்டுதான் வந்தேன்.”
” பன்னெண்டு மணிக்கு சாப்பாடு வரும். அதுவரைக்கும் பசி தாங்கணுமில்ல. ஒருவாய் குடிங்க மாமா.”
அவன் வற்புறுத்த ஒரு கப்பை எடுத்துக்கொண்டவர் சிவராமனையும் கைக்காட்டினார்.
” அவனுக்கும் ஒண்ணு குடு…”
மோகன், சிறுநீர் கழித்துவிட்டு வந்த சிவராமனிடம் கப்பைத்தர அவர் ஆவலுடன் வாங்கிக்கொண்டார்.
“வூட்டுக்குப் போவலப்பா. அங்கன புங்கமரம் இருக்குல்ல. அதுக்கு பின்னாடி ஒதுங்கிட்டு வந்துட்டேன்.”
சிவராமன் சொல்லிவிட்டு காபியை உறிஞ்சத் தொடங்கினார்.
இரண்டு பிள்ளைகள் பெற்று பேரப்பிள்ளைகளையும் பார்த்தாயிற்று. இருந்தும் மனிதர் கண்களில் பயம் அப்பிக்கிடந்தது.
” அடுத்தவாரம் மழ ஆரம்பிக்குதாம். பேப்பர்ல போட்ருக்கு.”
” ஆமா, நானும் படிச்சேன். வூட்டுக்கு ஓடு மாத்தாம கெடக்கு. மயிலுங்க பண்ற அட்டகாசத்துல ஓடெல்லாம் பெரெண்டு போச்சு. அதமாத்தி சீர் செய்யணும்னா அஞ்சாயிரம் ஆவும். அம்புட்டு காசு எங்க இருக்கு. பேசாம ஒழுவுற எடத்துக்கு நேரா சட்டி, பானைய வச்சிட வேண்டியதுதான்.”
அருகில் அமர்ந்திருந்த இருவர் பேசிக்கொண்டனர்.
” கோபுர தீபம் ஏத்தணும். நீங்கதான் அய்யருகிட்ட சொல்லணும் மாமா. ”
மோகன் அருகில் வந்து பவ்யமாய் சொன்னான்.
ஏகாம்பரம் வெறுமனே தலையசைத்து வைத்தார். அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை.
” அட, அதயேன்ப்பா அவன்ட்ட சொல்ற. அந்தப்பக்கமா போவும்போது நான் அய்யருகிட்ட சொல்லிட்டுப் போறேன்” என்ற சிவராமன், மோகன் நகர்ந்ததும் ஏகாம்பரத்தை பிடித்துக்கொண்டார்.
” ஒனக்கு இதுலேல்லாம் நம்பிக்கையில்லன்னு எனக்கு நல்லாத்தெரியும். அவன் போயி ஒங்கிட்ட சொன்னான் பாரு.”
” அதான…”
” என்னா அதான…ஒடம்புலேருந்து உசிரு விடுதலையாகி கடவுள்ட்ட சேர்றத மோட்சம்னு சொல்லுவாங்க. அந்த உசிருக்கு நல்ல கதி கெடைக்கணும்னு கோபுர உச்சியில தீபம் ஏத்தி வைக்கிறது வழக்கம். இதுல என்னா தப்பிருக்கு, சொல்லு…”
ஏகாம்பரத்துக்கு பதில் சொல்ல விருப்பமில்லை. பார்வையை வேறுபுறம் திருப்பினார். அங்கு இருவர், ராமாமிர்தம் ‘ இயற்கை எய்தினார் ‘ போஸ்டரை சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தனர்.
” இன்னிக்கி சந்து, பொந்து, இண்டு, இடுக்குன்னு ஒரு எடம் பாக்கியில்லாம ஊர் முழுக்க ராமாமிர்தம் சிரிச்சிக்கிட்டிருப்பான்.”
ஏகாம்பரம் சொல்ல, சிவராமன் எழுந்துபோய் வீட்டுக்கருகில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை பார்த்துவிட்டு வந்தார்.
” மோகனு நாப்பது வயசுல புடிச்ச போட்டோவ குடுத்துருப்பான் போலிருக்கு. போட்டோவுல ராமாமிர்தம் எளமையா, தலை முழுக்க மயிரோட ஜோரா இருக்கான்.”
“தற்சமயம் போட்டோ எதுவும் புடிக்கல மாமா. எங்கலியாண ஆல்பத்த எடுத்து பாத்தோம். அதுல அப்பா, ஒண்ணு சைடு வாக்குல நிக்கிறாரு, இல்லாட்டி கூட்டத்தோட நிக்கிறாரு. அதான் முன்னாடி எடுத்த போட்டவ குடுத்தேன். ”
அந்தப்பக்கமாக வந்த மோகன் சொல்லிவிட்டுப் போனான்.
உடனே டவுனுக்குப் போய் நல்ல கலர் போட்டோ ஒன்று எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஏகாம்பரம் நினைத்துக்கொண்டார்.
ஊர் முழுக்க போஸ்டரில் சிரிக்க அவருக்கு விருப்பமில்லை. போகவர இருப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக தானொன்றும் அவ்வளவு பிரபலமானவனில்லை என்கிற எண்ணம் இருந்தாலும் வீட்டு சுவற்றில் மாட்ட ஒரு படம் தேவையென்பதால் மறுநாள் டவுனுக்கு செல்ல அப்போதே தீர்மானித்துவிட்டார்.
ரவி வந்தான், பேருக்கு ஐஸ்பெட்டிக்கருகில் ஐந்து நிமிடம் நின்று வணங்கினான், மோகனிடம் துக்கம் விசாரித்தான், கிளம்பிவிட்டான். போகிறபோக்கில்,
” பாடிய எடுத்ததும் வந்துடுப்பா…” என்று சொல்லிவிட்டுப்போனான்.
பன்னிரண்டு மணிவாக்கில் சாப்பாடு வந்தது. பக்கத்திலிருந்த கொட்டகையில் வைத்து சாப்பாடு போடப்பட்டது. துக்கத்துக்கு வந்த ஊர்சனம் கிளம்பிவிட உறவுசனம் ஒரு வெட்டு வெட்டியது.
ஏகாம்பரத்துக்கு பசியில்லை. இரண்டுங்கெட்டான் நேரத்தில் மோகன் கொடுத்த காபி வேறு நாக்கில் கசந்து கொண்டேயிருந்தது. சாப்பாடு வேண்டாமென்றால் மோகன் விடமாட்டானே என்று பயந்து வெறுமனே கைநனைத்து வைத்தார்.
” சாம்பார் சாதம் நல்லா சூடா இருக்குப்பா. ஒரு கரண்டி வாங்கி சாப்புடேன்.”
” எழவு வூட்டுல விருந்து சாப்புட எனக்கு விருப்பமில்ல.”
” அட, பசிச்சவன் வயித்துக்கு எழவு வூடும் ஒண்ணுதான், நல்ல வூடும் ஒண்ணுதான். புள்ளையே வகை, வகையா ஆர்டர் பண்ணி கொண்டாந்து எறக்கியிருக்கான். நீ வியாக்கியானம் பேசுறியே” என்ற சிவராமன் இரண்டாவது அப்பளம் கேட்டு வாங்கிக்கொண்டார்.
” தயிர் சாதத்துல பெருங்காய வாசனை தூக்கலா இருக்கு. மோகனு சாப்பாடு எங்க ஆர்டர் பண்ணுனான்னு தெரியல.”
பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவரிடம் கையை நக்கியபடியே கேட்டார்.
” பக்கத்தூர்லேருந்து வந்துருக்கு…”
அவனும் சோற்றை வாயில் அடக்கியபடியே நிமிர்ந்து பார்த்து சொன்னான்.
சாப்பிட்டு முடித்து வந்து சாமியானா பந்தலில் அமர்ந்தவர்களில் பெரும்பாலானோர் உட்கார்ந்த வாக்கிலே உறங்கத்தொடங்கினர்.
சரியாக மூன்று மணிக்கு ராமாமிர்தத்தை குளிப்பாட்டினர்.
காமாட்சி பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள். தனக்கு அப்படி மனம் வருந்தி அழ மனைவி இல்லாதது ஏகாம்பரத்துக்கு பெரும் திருப்தியாக இருந்தது. அமைதியாக போகவே அவருக்கு விருப்பம்.
தாரை, தப்பட்டையோடு தெருவெங்கும் பூக்கள் சிதற ராமாமிர்தம் புறப்பட மயானக்காடு வரை சென்றுவிட்டு ஏகாம்பரமும், சிவராமனும் வீடு திரும்பினர். சிவகாமி சுள்ளென்று வெந்நீர் வைத்து தந்தாள்.
சந்து வழியாக கொல்லைப்புறம் வந்த ஏகாம்பரம் நன்றாக நீர் விளாவி குளித்தார். நாள் முழுக்க உட்கார்ந்திருந்ததில் அலுத்து கிடந்த உடம்பு வெந்நீர் பட்டதும் புத்துணர்ச்சியை பூசிக்கொண்டது.
‘ ராமாமிர்தம் இந்நேரம் எரிந்து கொண்டிருப்பான். அக்கினிக் கொழுந்துகள் அவனை சூழ்ந்து, புசித்துக் கொண்டிருக்கும்’ என்ற நினைப்போடு ஏகாம்பரம் அறைக்குள் வந்து ஈரவேட்டியை களைந்துவிட்டு மாற்று உடுப்பு உடுத்திக்கொண்டார்.
” தட்டெடுத்து வக்கிறேன். ஒக்காருங்க மாமா…”
சிவகாமி சொல்லிவிட்டு அடுப்படிக்கு போனாள்.
” பிரண்டு போனது மனசுக்கு வருத்தமா இருக்காப்பா…?”
டிவி பார்த்துக்கொண்டிருந்த ரவி கேட்டான்.
” வருத்தந்தான். அது வுட்டுட்டு போனதுக்காவ இல்ல. முன்னாடி போயிட்டானே. அதுக்காவ…”
” என்னாப்பா இப்புடி சொல்லிட்ட…..”
ரவி ஆச்சர்யமாக கேட்டான்.
சாப்பாடு பரிமாறிய சிவகாமிக்கும் ஆச்சர்யம்தான். அதை அவள் பார்வை சொல்லிற்று. ஏகாம்பரம் பதில் சொல்லவில்லை. பேசாமல் சோற்றை உருட்டி, உருட்டி உள்ளே தள்ளினார்.
ரவி டிவியை நிறுத்திவிட்டு மெல்ல எழுந்து அவரருகில் வந்து அமர்ந்து அவருடைய முகத்தை ஆராய்ந்தான். தன்னுடைய கவனிப்பில் ஏதேனும் குறையிருக்குமோ என்கிற சந்தேகம் சட்டென அவன் மனதுக்குள் முளைவிட்டது.
” என்னாடா அப்புடி பாக்குற…?”
ஏகாம்பரம் நிமிர்ந்து பார்த்து கேட்க, அவ மெதுவாய் தலையசைத்தான்.
” அ….அதுவந்து நீ…..சந்தோசமாத்தான இருக்க….?”
” அதுக்கென்னா கொறைச்சல்….கேக்குறான் பாரு கேள்வி…”
சொல்லிவிட்டு சிரித்தவர் மறுசோறு கொண்டுவந்த சிவகாமியை கைநீட்டி தடுத்தார்.
” மதியம் அங்க தின்னதே வயிறு திம்முன்னு இருக்கு. ”
பொய் சொல்லிவிட்டு எழுந்து கையலம்பியவர் பேருக்கு ஐந்து நிமிடம் நாற்காலியில் அமர்ந்தார்.
” காசிக்கு டிக்கெட்டு எடுத்து தாரேன், ஒருவாரம் போயிட்டு வாரியாப்பா…?”
ரவி இருந்திருந்தாற்போல் கேட்டான்.
” வேணாம்டா. காசிக்குப்போயி கருமத்த தொலைக்க நான் எந்த கருமத்தையும் சேத்து வைக்கல.”
சொல்லிவிட்டு தன்னறைக்கு வந்தவர் படுக்கையை தட்டிப்போட்டார்.
ஜன்னலை ஒருக்களித்து மூடிவைத்தார். சிவகாமி ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனாள். ஏகாம்பரம் அந்த சிறிய விடிவிளக்கை ஒளிரவிட்டு விளக்கணைத்து படுத்தார்.
குளிர்காற்று சில்லென்று முகத்திலறைய, போர்வையை இழுத்து காலிலிருந்து தலைவரை போர்த்திக்கொண்டவரின் எண்ணப்பரப்பில் அந்த வார்த்தைகள் சுழல ஆரம்பித்தன.
‘காலமானார், இயற்கை எய்தினார், சிவனடி சேர்ந்தார், உயிர் நீத்தார், அமரரானார்.’
உருவத்துக்குள் அடைபட்டு கிடக்கும் அருவம் விட்டு விடுதலையாகிவிட்டபின் அந்த உருவத்துக்கு கிடைக்கும் பட்டப்பெயர்கள் பல. ஆனால் அத்தனைக்கும் பொருள் ஒன்றே.
அந்தப்பெயர்களின் மீதான காதல் ஏகாம்பரத்துக்கு கூடிக்கொண்டே போனது. அத்தனை பெயர்களையும் ஒருமுறை சற்று சத்தமாகவே சொல்லிப்பார்த்தவருக்கு மனதின் அடியாழம் வரை மகிழ்ச்சி படர்ந்து பரவிற்று.
முற்றும்