கட்டுரை

யாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி

சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்.இன்றும் வாசிக்கையில் அதன் மொழியால் அதே வசீகரத்துடன் இருக்கிறது.மொழி ஒரு பேரழகியாய் இந்த நாவல் முழுக்க தன் ஔியை நிறைத்து வைத்திருக்கிறது.

வயோதிகத்தில் தன் முதல்பெண்ணை சந்திக்கச் செல்லும் அம்பியின் எளிமையான ஒரு திரும்பிப்பார்க்கும் கதை.ஆனால் அதன் மொழியின் கவித்துவத்தால்,வயோதிக அம்பியின் முன்பின் கலங்கிய மனத்தால், தான் பிறன் என்ற கோடழியும் தடுமாற்றத்தால் ,நூற்றிபத்துபக்கங்கள் உள்ள இந்த நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு அழகிய கனவுக்குள் வாழ்ந்துவிட்டு வெளியறியதைப்போல உணரமுடிகிறது.

ஒரே அமர்வில் வாசிக்கமுடிந்தால் அது பேரனுபவம்.அது இன்னொரு வசீகரம்.சிறியநாவல்களின் சிறப்பியல்பு அல்லது அதன் பலம் என்பது ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கனவாக இருப்பது.நீண்ட ஒற்றைக்கனவு.அப்படி ஒரே அமர்வில் வாசித்தநாவல்களில் அம்மாவந்தாள்,அபிதா இரண்டும் மனதை ஆட்டிவைத்தவை. வாசித்துமுடித்து வேறெதும்வாசிக்காமல் அடுத்தநாளே மீண்டும் வாசித்தவை.

நாவலில் அம்பி சொல்வதைப்போல் உள்ளே ஒரு கோடழியும் அவரின் மனம், அவரின் நடப்பிலும், கனவிலுமாக தவிக்கிறது.நாவலின் நடைமுறை அம்சம் என்பது இளம்வயதின் ஈர்ப்பு அல்லது காதல் அல்லது சினேகம்.அது மனதின் ஆழத்தில் கிடந்து நினைவில், கனவில் எழுந்து கொண்டேயிருக்கிறது.

அதை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை.யாருக்கும் அப்படியான ஒரு பேரன்பு ஒருவர் மேல் இருக்கவே செய்யும்.அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம்.நடைமுறை வாழ்வில் எந்தபயனும் இல்லாதது.அவரவர் மனதிற்கினிய தெய்வத்தைப் போல தான்.உடனிருந்தும் ஒன்றும் பயனில்லை ஆனால் அது உடனில்லாவிடில் வேறெதுமில்லை.

நாவலின் தத்துவத்தளம் என்று நான் உணர்வது இவ்வுலகப்படைப்பின் பேரெழில் மீது எளியமனம் கொண்ட மையல்.வயதாகும் போது இவ்வுலகின் மீது உண்டாகும் பெரும் பிடிப்பு.இந்தப்படைப்பையே பெண்ணுருவாக காணுதல் அல்லது பெண்ணுருவையே படைப்பாக காணுதல். தன்படைப்பு அனைத்திலும் தன்னையே பிரதிபலிக்கும் பிரபஞ்சத்தின் பேரெழில்.

அம்பி தான் இளமை வரை வாழ்ந்த கரடிமலைக்கு,அவரின் மனதின் வலி உடலின் வலியாக மாறியிருக்கும் நேரத்தில் வருகிறார்.அழகு ஆட்சி செய்யும் பசுமையான இடம்.அதுவே ஒரு குறியீட்டுத்தளம்.இளமையை குறிக்கும் தளம்.பசுமை, இளமை, செளந்தர்யம்.ஒருவேளை முதிய மனதின் இளமைக்கான ஏக்கம் அல்லது இளமை பற்றிய கனவுதான் இந்தநாவலாக இருக்கலாம்.நாவலின் மொழியும் கூட இன்றும் அத்தனை வசீகரமானது.கதையின் களம் ,பேசுபொருள் மொழி அனைத்தும் குன்றாத எழில் கொண்டவை.

வாழ்வின் மறுகரையில் வந்து நின்று அந்தக்கரையை பார்க்கும் கனவு.கனவை அதே போன்ற ஒரு உன்மத்த மொழியில் தானே சொல்ல முடியும்.

மல்லாந்த முகத்தின் பனித்த காற்று தான் மீண்ட நினைப்பின் முதல்உணர்வு’

நானின் மாறாத மட்டற்ற மெளனத்தின் தனிமை’

அத்தனையும் உன்:நீ யின் சட்டையுரிப்பு’

அத்தனை பசுமையான கரடிமலையின் உச்சியில் கருவேலங்காட்டில் திருவேலநாதர் வானமே கூரையாக, மழையும், வெயிலும், காற்றும், பனியும், பறவைகளும் அபிஷேகம் செய்ய அமர்ந்திருக்கிறார்.அத்தனை சிறுமுட்கள் சூழ வீற்றிருக்கும் தாதை, அன்னையை மனதில் நிறுத்தி காத்திருக்கும் யோகன்.

மானுடவாழ்வின் முட்களுக்கு எதிரே பசுமையென விரிந்திருப்பது அவர்களின் பதின் வயதுகள் தானா? என்று இந்நாவலை வாசிக்கையில் தோன்றுகிறது.உடலும் மனமும் நடைமுறையில் சிக்காது பறக்க எத்தனிக்கும் காலம்.சுற்றிநடப்பவைகள் எங்கோ எனத் தெரிய தன்கனவில் தான் வாழும் பருவம்.

ஊரில் திருமணங்கள் என்றால் ஒலிபெருக்கியில் சினிமா பாடல்களை ஒலிக்கவிடும் பழக்கம் இன்றும் உண்டு.சிறுவயதில் அப்படி கேட்டு பதிந்தபாடல் ஒன்றின் வரிகள் இந்தநாவல் வாசிப்பின்போது நினைவில் எழுந்தது. ‘ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்காட்சி’ என்ற பாடலாசிரியர் வாலியின் வரி.முதலில் அது மானுடருக்காக இருந்து படிப்படியாக பிரபஞ்ச அழகை ஆராதிக்கும் நிலையாகிறது. கனவில் தொடங்கும் வாழ்வு இடையில் நடைமுறையில் சிக்கி மீண்டும் கனவை நோக்கி செல்வதுதான் இந்தநாவல் சொல்லும் வாழ்வு.

இந்தநாவலின் கனவுமயமான பகுதிகள் கரடிமலை சூழலில் வருகின்றன.அப்படியான சூழலில் வரும்பாதே அவற்றின் கனவுத்தன்மை என்பது தீவிரமடைகிறது.மலையும் மலையைச்சார்ந்த இடமும்.

அன்பின் பெருங் காவியங்கள் அனைத்தையும் போலவே இதிலும் பிரிவே அந்தஅன்பின் நிறத்தை, சுவையை அடர்வு கொள்ளச்செய்கிறது.அடையபட முடியா நிலையே ஒன்றை பெருமதிப்புடையதாக, பேரழகுடையதாக மாற்றுகிறது.அதுவே எதிர்நிலையில் பெரும் சினமாக ,வெறுப்பாகவும் மாறுகிறது.ஒன்றின் இருநிலைகள்.உளவியல் சார்ந்தும் இதுவே உண்மை.

இந்தநாவலில் அபிதா மீதான அம்பியின் பொசசிவ்னஸ் எனக்கு அதிர்ச்சியளித்தது. தோழிகள் அந்தசொல்லை பயன்படுத்தும் போது ‘நோய்வாய்ப்பட்ட அன்பு’என்று அதற்குபொருள் சொல்வேன். இந்தநாவலில் வாயோதிக அம்பியின் நோய்வாய்ப்பட்ட அன்பாக அதை இணைத்து புரிந்து கொள்ளமுடிகிறது.

வாழ்வில் நம்பால்யத்தின் மனிதர்கள் மீதான அன்பு கள்ளமற்றது,மிகத்தூயது.அந்தவயதுகளில் நம் வாழ்வில் வரும் மனிதர்கள் நம் மனதில் அழியா நித்தியத்துவம் பெறுகிறார்கள்.நாம் எங்கு சென்றாலும் மனதின் ஆழத்தில் அந்தமனிதர்களும்,அந்த இடங்களுமே நம்முடனிருக்கின்றன.

மழைப் பெய்த புதுநிலமாக மனம் இருக்கையில் விழும் விதைகள். புதுமனிதர்களை,புதுஇடங்களை நாம் பால்யத்தின் மனிதர்கள் இடங்களுடனே ஒப்பிட்டுக்கொள்கிறாம்.புறத்தோற்றத்தில்,குணத்தில் என்று இரண்டிலுமே.அவ்வகையில் இந்தநாவலின் புறசூழலும்,அம்பியின் மனஆழமும் அபிதாவாக எழுந்திருக்கிறது. லா..ரா தன் அழகிய கனவை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார்.

இந்தநாவலை என் தோழியிடம் பகிர்ந்த பொழுது அவள் சலித்துக்கொண்டாள்.பெண் சார்ந்த இன்றைய, நேற்றைய, நாளைய பார்வைகள் பற்றி பேசினாள்.என்னால் அவளுக்கு புரியவைக்க இயலவில்லை.அதன் பின்தான் இந்தவாசிப்பனுபவம் பற்றி எழுத நினைத்தேன்.இலக்கியம் என்பது நடைமுறை தளத்திலிருந்து பறப்பது அல்லவா ?அதன் சிறகில் அமரும் நம்மனதின் புழுதிகள் அந்தப்பறவையின் ஜிவ்வென்ற ஒரே எழும்புதலில் பறந்துவிடும்.அந்தப்பறவை பிரபஞ்சத்தை அளப்பது.

பிரபஞ்சத்தின் பேரழகை காணமுடியும்…ஒரு எல்லையில் உணரமுடியும்.ஆனால் ஒருபோதும் உடைமையாக்கமுடியாது.இதில் லா..ரா தொடுகை என்பதேயே உடமையாக்குதல் என்ற பொருளில் சொல்கிறார்.உடமையான எதன் மதிப்பையும் நாம் உணர்வதில்லை.பிரபஞ்சம் தன்னின் ஒருதுளியை நமக்களித்தது…அதை நாம் என்ன செய்துகொண்டிக்கிறோம் என்பது நமக்கே தெரியும்.அதனால்தான் மற்றவைகளை பிரபஞ்சம் நம் முன்னால், கழுதைக்கு முன் கேரட்டைப் போல தொங்கவிட்டுள்ளது.

இந்தநாவலை வாசித்துமுடிக்கையில் கண்எதிரே நீண்டிருக்கும் கொல்லிமலையைப்பார்க்கிறேன்.கோடையில் கருகித்தீய்ந்து உயிர்ப்பிடித்திருக்கிறது.முதல்மழை கண்டுவிட்டது.இன்னும் ஓரிருமழை…மலை சிலிர்த்துக்கொண்டெழும் பேரழகை ஜீன்மாதத்தில் காணலாம்.இந்தநாவல் இயற்கையை காண ,அதன் பேரழகில் மனதை வைத்து தன்னையிழக்கும் சுகத்தை நமக்கு சொல்லித்தருவதையே இதன் பெருமதிப்பாக நான் உணர்கிறேன்.பெண்ணழகிலிருந்து பேரழகிற்கு.என்னால் இந்தநாவலை அப்படிதான் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.

Advertisements

‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின் அகாலம்எனும் கவிதைத் தொகுப்பை இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான வயலின் மனிதன்ஐ சட்டென கடக்க இயலவில்லை.’’வயலின் மனிதன்தலைப்பின்கீழ் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே இசை சம்பந்தமான கவிதைகள். இக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மனதிற்குப் பிரியமான இசையினை இன்னும் நெருக்கமாய்க் கேட்கத் தோன்றியது. மட்டுமன்றி கவிதை வாசித்தல், இசை கேட்டல் எனும் இரு நிகழ்வுகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென இரட்டை மகிழ்வினை ஒருசேர அனுபவிக்க வாய்த்தது மனதிற்கு அலாதியான ஒரு உணர்வினை அளித்தது. அத்தகையதொரு மனநிலையில்தான் மெல்லமெல்ல இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது.

வயலின் மனிதன்

வயலின்களும் இசைப்பர்களும் மறைந்துவிட
இசை என்னைச் சுருட்டி எறிகிறது
பூமிக்கு வெளியே

குரல்களின் அடுக்குகளுக்குள்
பதுங்கியிருக்கும் வண்டுகள்
பாய்ந்து வெளியேறி
என் தலையை மூடுகின்றன

எந்த வடிவத்திற்குள்ளும் அடங்கமுடியாத
உயிரின் துக்கம்
ஒரு ஒற்றை வயலினிலிருந்து
கறுப்பு வானமாய் பெருகுகிறது.

இன்னொரு உடுமண்டலத்தில்
நானும் பியானோவும் தொங்குகிறோம்
ஒரு புல் நுனியில்
தினசரி வாழ்விலிருந்து
மில்லியன் மைல்களுக்கு அப்பால்
ஓர் அமானுஷ்யப் பரப்பில்
தாளங்களின் காலக்கணக்கு
சிம்பனியின் அடியாழத்தில்ந
ஒரு தனிமனிதனின் விம்மல்

நடத்துனனின் ஒரு சிறு தவறில்
முழு ஆர்க்கெஸ்ட்ராவும்
என்மேல் பாய்கிறது.
ஒவ்வொரு உறுப்பாய் என்னைக் கழற்றி எறிந்துவிட்டு
ஓய்கிறது இசை.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

ஒரு ஆர்கெஸ்ட்ராவின் அற்புதமான நிகழ்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்கையில் ஒலிநாடாவில் ஏற்படும் குறைபாடுகளாலோ, பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் மைக் முன் அரங்கேறும் நிகழ்வுகளை மனமொன்றிக் கவனிக்கையில் திடீரென ஏற்படும் உச்சஸ்தாயிலான கீச்சொலியிலோ அல்லது மனதிற்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கையில் வானொலியில் ஏற்படும் கரகர அதிர்விலோ இப்படி ஏதேனுமொரு நிகழ்வில் இம்மாதிரி மனம் கூசும்படியான அதிர்வினை அனைவரும் சந்தித்திருக்க அநேக வாய்ப்புகளுண்டு. இசையில் இன்புற்றிருக்கும் மனமானது திடுமென இரைச்சலுக்கு உட்படுத்தப்படுகையில் அதுவரை தான் அனுபவித்த, தனக்குப் பிடித்தமான ஸ்பரிசத்தினை முழுமையாக இழந்துவிடும் நிகழ்வே இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, கிட்டத்தட்ட காற்றிற்கு அசைந்து இசையெழுப்பும் மரமொன்றை வேரோடு பிடுங்கி எறிவது போலத்தானென எண்ணத் தோன்றுகிறது. கவிஞர்களின் இருப்பானது பூலோகமாக இருப்பினும் அவர்களின் அகவெளியானது அவ்வப்போது பூமிக்கு வெளியிலான சஞ்சரிப்புகளில் திளைத்தூறி தனது விருப்பங்களுக்கும் , அறிவுத் தேடல்களுக்கும் தீனியிட்டுக் கொள்கின்றன என்பதற்கு முதற்பத்தி சான்றாக அமைகிறது. கண்கள் மூடியபடி நாம் ரசிக்கும் இசையானது நம்மைச் சுருட்டி பூமிக்கு வெளியே வீசவேண்டுமாயின் அது மனதிற்கு இசைவானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ இருக்க வேண்டும்.் இசையின் மீது அனைத்து உயிர்களுக்கும் மயக்கமுண்டு எனும் நிதர்சனத்தை எண்ணுகையில், ‘இசையால் வசமாகா இதயம் எது?’ எனும் பாடல் வரியானது நினைவில் ஊர்கிறது. இசையும், குரலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று தழுவி நம் மனதின் ஆழத்தை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. உயிரின் துக்கமென வயலினிருந்து கசியும் இசை அரூபமானது. கறுப்பு வானம் என்பது காட்சிப்படிமம். எனவே கறுப்பு வானமாகப் பெருகும் உள்ளுணர் வரிகள் வாசகருக்கு ஒரு அழுத்தமான புறவெளிக்காட்சியை அகத்துள் தோற்றுவிக்கிறது. மனித அறிவானது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி நகர்வது போல மூன்றாம் பத்தியின் வரிகள் அரூபத்திலிருந்து மெல்ல ரூபம் நோக்கி நகர்கின்றன.

சில பாடல்கள் சுமையான மனதை சட்டென இலகுவாக்கும் தன்மை வாய்ந்தவை. ஒரு பருப்பொருளோ அல்லது மனிதனோ சிறு புல்நுனியில் தொங்கவியலாதுதான். மனமானது இலேசாகிப் பறக்கும் தருணத்தில் அப்படியொரு அரிதான வாய்ப்பு அவருக்கு கிட்டியதை அறிவதோடு குரலின் ரிதம் குறித்த அவரின் புரிந்துணர்வையும் நாம் அறியப்பெறுகிறோம். எந்தவொரு மனமும் இரைச்சலை விரும்புவதில்லை. ஆர்க்கெஸ்ட்ரா நடத்துனனின் சிறு தவறால் சட்டென தன்னுணர்வு நிலைக்குத் திரும்புவதைத்தான் இறுதிப்பத்தி சுட்டுகிறது. இசை இரைச்சலாக மாறும் தருணம் மனம் சந்திக்கும் அதிர்வில் அவர் ஏதுமற்ற ஒன்றாகி எதுவுமே இல்லாமல் ஆகிறார். The Pianist திரைப்படத்தில் இசையைத் தொடர்ந்துவரும் இரைச்சலும், இரைச்சலினூடான இசையுமென சற்று கனத்த மனஅதிர்வினை உண்டாக்கிய காட்சிகளை அசைபோடுகிறது மனம்.

 

அரங்கை விட்டு வெளியேறுகிறேன்

ஒரு பிரும்மாண்டப் பியானோவின் இசை நகர்மேல் பொழிந்து கொண்டிருக்கிறது.
பஸ் ஸ்டாப், கடக்கும் வாகனங்கள்,
விருட்டென்று வந்து எனை ஏற்றிக்கொண்ட சிட்டிபஸ்; வெளியில் விடைதரும் சிநேகிதி
ஓரத்தில் ஒளி கசியும் கட்டிடங்கள்
வேப்பமரங்கள், கறுப்புச் சாலை, கடைகள்,
வேதக்கோயில், த்யேட்டர், ரிக் ஷா வரிசைகள்
எல்லாவற்றுக்குள்ளும் இருந்து
எட்டிப்பார்க்கிறது ஒரு வயலின்.

எந்த ஸ்டாப்பிலோ இறங்குகிறேன்
எந்தத் தெருவிலோ நடக்கிறேன்
எந்த வீட்டையோ தட்டுகிறேன்
ஓர் உயிருள்ள வயலினாக நான்
எப்பொழுதோ மாறிவிட்டிருந்தேன்.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

கவிதை என்பதை மௌனம் மலர்த்தும் அலாதியான இசை எனவும் குறிப்பிடலாம். இசையானது எல்லோர் வீட்டின் கதவுகளையும் தட்டக்கூடியது. நாம்தான் செவிமடுக்க மறுத்து அலட்சியமாய் அவைகளைக் காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இசையானது ஒலியுணர்திறன் கொண்டது மட்டுமன்றி காட்சி மயக்கத்தினையும் உணரப்பெறுவதுமாகும். இக்கவிதையைப் பொறுத்தமட்டில் ஓரத்தில் ஒலி கசியும் கட்டிடங்கள், ரிக் ஷா வரிசை போன்ற காட்சி பிம்பங்களிலிருந்து ஒரு வயலின் எட்டிப்பார்க்கிறது எனும் நேர்த்தியான வரியானது காட்சிமயக்கத்தின் அற்புதத்தை மனதினுள் நிகழ்த்திக் காட்டுகிறது. மிகுந்த மெல்லதிர்வை உண்டுசெய்யும் இக்காட்சியானது ஒரு சிலிர்ப்பான நுண்ணிசையைக் கசிந்து கொண்டே மனம் முழுக்க அடர்வாக விஸ்தரிக்கிறது. ‘ஓரான் பாமுக்’ ன் “பனி” நாவல் முழுக்க விசித்திர நிலமான துருக்கியின் ‘கார்ஸ்’ நகரக் கட்டிடங்கள் பனியினூடாக இப்படியொரு நுண்ணிசையைக் கசிந்துகொண்டே இருக்கும்.

பொதுவாக மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நேர்மறையானாலும் சரி, எதிர்மறையானாலும் சரி சில பொழுதோ, காலமோ தொடர்ந்து அதன் நிழல்களில் சஞ்சரித்தவாறு மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிடுகிறது. இங்கு நேர்மறை உணர்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. சில நிகழ்வுகளின் பொருட்டு ஒரு புள்ளியில் குவிந்து அங்கேயே நிலைபெறுகிற நம் கவனமானது அதன்பிறகான எவ்வித பிரம்மாண்டங்களின் லயிப்பிலும் ஈர்ப்பு பெறுவதில்லை அல்லது அவ்வாறு இயங்கவென மனம் நம்மை அனுமதிப்பதில்லை. மழை நனைப்பதுபோல் ஒரு நகரை இசை நனைப்பதை உணர்வதென்பதே பேரின்பம். அம்மாதிரியான மனோநிலையில் தன்னைச் சூழ்ந்துள்ள உயர்திணை, அஃறிணை யாவற்றிலும் வயலின் இசை கசிந்துகொண்டிருப்பதை உணர்வதென்பது பேரின்பத்தினூடான மற்றுமொரு பேரின்பம். இசையில் மயங்கிய ஒரு மனமானது இந்த உலகத்தை இசையாகவே காணும் அறிவுமயக்கத்தில் சஞ்சரிப்பதுடன் அதை கொண்டாடிக் களிக்கிறது. ஒரு மனிதனின் இசைவயப்பட்ட மனப்பிரியத்தை வெளிப்படுத்தும் பெருங்கடத்தியாக தன்னை நிறுவிக்கொண்டுள்ளது இக்கவிதை.
உயிரின் வேர்வரை ஊடுருவி ஒரு உணர்வினை முழுமையாய் கவித்துவமாக்க வேண்டுமெனில் தான் அதுவாகவே மாறுவதன்றி வேறெப்படி இயலும்? எந்த ஸ்டாப்பிலோ இறங்கி, எந்தத் தெருவிலோ நடந்து, எந்த வீட்டையோ தட்டினாலும் திறந்துகொள்ளும் எல்லாக் கதவுகளும் அவருடையதாகவே இருக்கிறது என்பதாக விரிகிறது எனது சிந்தனை.

மேற்கூறிய இரு கவிதைகளிலும் வயலின் மற்றும் பியானோ ஆகிய இரு இசைக்கருவிகளின் தாக்கம் தெளிவாகிறது. முதற்கவிதையானது பாழ்பட்ட இசை குறித்த உணர்வையும், மற்றது ஒரு இசையூறிய மனதின் உணர்வுப் பிரவாகத்தினையும் நயமாக எடுத்துரைக்கிறது. முதற்கவிதையில் மன அடுக்குகளைச் சீர்குலைத்தபடி தன்னிலிருந்து விடுபட்டுச் சுழன்றோடி மறையும் இசையானது மற்றதில் அதே வேகத்தில் அவ்வளவையும் சீர் செய்வதெனும் கருத்தானது உணரக் கிடைக்கிறது. வாழ்வின் உன்னத தருணங்களை உயிர்ப்போடு மலர்த்துகிற இதுபோன்ற கவிதைகளை அவ்வளவு எளிதில் கடக்க முடிவதில்லை. சில சமயங்களில், அண்டை வீட்டில் கமழும் தாளிப்பு மணமானது நம் வயிற்றுப்பசியைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல, கவிஞரின் இவ்விதமான இசைத்தாளிப்பானது மனத்தின் இசைப்பசியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொகுப்பு _ அகாலம்
ஆசிரியர் _ சமயவேல்
வெளியீடு _ சவுத் ஏசியன் புக்ஸ்
முதல் பதிப்பு _ 1995

சேவல் களம்- வெ.சுரேஷ் குறிப்பு

சேவல் களம்”பாலகுமார் விஜயராமன்.

எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. ஆனால் (நல்ல வேளையாக ) எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவதில்லை,” என்று சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். அண்மையில்கூட ஓவியர் ஜீவா இதே போல ஒரு வரியை சொல்லியிருந்தார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!

நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே நமக்கு சுவாரசியமாக, சுவையாகத்தான் தெரியும். ஆனால் அவற்றை பதிவு செய்யும்போது பிறருக்கும் சுவாரசியமாகவும், சுவையாகவும் தோன்ற வேண்டுமென்றால், ஒருவர் அதுவரை எழுத்தில் பதிவாகாத ஒரு மாற்று வாழ்வை விவரிக்க வேண்டும். அல்லதுஏற்கனவே அவ்வாறு அறியப்பட்ட வாழ்வின் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படியுமில்லாமல், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கதைக்களமாக இருந்தாலும்கூட, அந்த வாழ்வின் சில பகுதிகளிலாவது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். இது போன்ற கூறுகள்தான் டயரிக் குறிப்புகளை இலக்கியமாக மாற்றுகின்றன.

அண்மையில், பாலகுமார் விஜயராமன் அவர்கள் எழுதிய சேவல் களம் (சேவற்களம் என்பதுதானே சரி?) நாவலை படித்தபோது, மேலே சொன்ன உணர்வைத்தான் நான் அடைந்தேன். நாவல், மூன்று திரிகளாக பிரித்து சொல்லப்பட்டு இறுதியில் இணைகிறது. ஒன்று, சேவல் சண்டையும் அதன் சித்திரமும். இரண்டு, அதன் நாயகரான ராமர் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை, மூன்றாவதாக ராமரின் தங்கை ஆண்டாள் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை.

முதல் திரி, இதுவரை தமிழ்ப் புனைவின் பரப்பில் அதிகம் சொல்லப்படாத சேவல் கட்டு எனும் ஒரு விஷயத்தை தனது பேசுபொருளாக எடுத்துக் கொண்டதில் ஒரு புதுமை இருக்கிறது.சேவல் சண்டையை,சேவல்களின் பல்வேறு வகைகளை, சண்டைக்கான முன் தயாரிப்புகளை, சண்டைக்கு இடையே சேவல்களுக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகளை, எழுதியிருப்பது எல்லாம் மிக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதில் இருக்கும் ஒரு சரளத்தன்மை வாசிப்பை லகுவாக்கவும் செய்கிறது. அந்த விளையாட்டின் நுட்பங்களை அறியாத வாசகனுக்கு இது இயல்பாகவே ஒரு நல்ல சுவாரசியமான சித்திரத்தைத் தருகிறது. இந்தத் திரியின் கிளைமாக்ஸ் போல வரும் ராமர் பார்ட்டியின் உள்நாட்டு சாம்பல் வளவி சேவலுக்கும் ஹைதராபாத் பார்ட்டியின், நூரி வெள்ளைச் சேவலுக்குமான போட்டி மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சேவல்களின் இயல்பான அறிவுக் கூர்மை, ஆபத்திலிருந்து தப்பும் வழிகள், தாக்குதல் முறைகள் எல்லாம் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

ஆனால், இந்த நாவலின் மற்ற இரண்டு திரிகளில் சொல்லப்படும் ராமரின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது தங்கையின் குடும்பத்தினர் வாழ்க்கை மிகச் சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தீவிர இலக்கிய பரப்பில் இம்மாதிரியான எழுத்துக்கு என்ன இடம் என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் நல்லவராக விளங்கும் இந்த விக்ரமன் சினிமா பாணி கதையில் ராமரின் இரண்டாவது பிள்ளை கம்ப்யூட்டர் விற்பன்னராக வந்து சில வில்லத்தனங்களை செய்கிறான். அதுவும் அப்படியே விட்டுப்போய்விடுகிறது. இதெல்லாம் அந்தக் கால, ராணி முத்து, மாலை மதி போன்ற புத்தகங்களில் வரும் ஒரு கதை போலத்தான் இருக்கிறது. முன்னுரை எழுதியுள்ள பெருமாள் முருகன் இதையே வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு 200 பக்க நாவலில் பாதிக்குப் பாதி, சேவல் சண்டை பற்றியது என்றால், இந்த குடும்பக் கதை மீதி. அதில் ஆசிரியருக்கு காத்திரமாக சொல்வதற்கு அதிகமில்லை என்பதாலேயே அந்த கடாவெட்டுக்கு ஆடு தேர்ந்தெடுக்கப் போகும் காட்சியும், காதுகுத்து கடா வெட்டு கொடுக்க குல சாமி கோவிலுக்குப் போகும் காட்சியும் அவ்வளவு நீளமாக படித்து சலித்துப் போகும் வண்ணம் எழுதுபட்டுள்ளது தெரிகிறது. பொறுமையையும் சோதித்துவிடுகிறது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த வாசகர்களுக்கு வேண்டுமானால், அது அட, நம்ம வூட்ல நடக்கறத அப்டியே எழுதியிருக்காம்பா, என்ற வியப்பையும் மகிழ்ச்சியையும் தரலாம். அவ்வளவுதான். பின் இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தப்படைப்பில் எங்கும் சாதி குறிப்பிடப்படாதது. இதுவே இதை ஒரு தொலைகாட்சி தொடராகவோ திரைப்படமாகவோ எடுப்பதற்கு மிகவும் தோதாக மாற்றுகிறது. இன்று தீவிர இலக்கியம் என்ற போர்வையில் வரும் பெரும்பாலான படைப்புகளுக்கு இந்த ஒரு நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது.

இம்மாதிரியான ஒரு படைப்பு ஒரு வணிகப் படைப்பாக, நான் மேலே சொன்ன மாதாந்திர வெளியீடுகளில் வந்திருக்குமானால், நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. காலச் சுவடு போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வெளியிடும் ஒரு பதிப்பகம் வழியாக வரும்போது, பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அவர்களது தேர்வில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் முதலில் சொன்ன விஷயத்துக்கு போவோம். எல்லாரிடமும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. பலர் அதை சொல்லவும் சொல்வார்கள். ஆனால் அது எல்லாமே ஒரு நல்ல இலக்கிய படைப்பாகி விடாது.

கோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்

இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி” 

எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின் கிராமத்தை?

இலக்கியம் என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு பதிலாய் இருக்கும், ”கோவேறு கழுதைகள்” வாசித்து முடித்த, கோடைக்காற்று வீசும் இக் கென்யப் பின்னிரவில், நெகிழ்ந்து உணர்வு வசப்பட்டுக் கிடக்கும் இம்மனநிலையை எப்படி விவரிப்பது?. 4500 கிலோமீட்டர்களுக்கு அப்பால், கடல்தாண்டி இருக்கும், ஓர் ஆப்பிரிக்க நாட்டில், எழுதி இருபத்தைந்து வருடங்களுக்குப் பின், வாசித்து முடித்த ஒரு படைப்பு மனதை இந்த அளவிற்குப் பாதித்து, வசியம் செய்து, பரவசப்படுத்தி, வளர்ந்த கிராமத்தின் பதின்ம நினைவுகளையெல்லாம் தொட்டெடுத்து மீட்டி, மனம் நிறைத்து, பின்னிரவில் தூக்கம் மறக்க வைத்து, மங்கிய நிலவொளியில், கிளைகள் அசையும் மரங்களினூடே இப்படி நடக்க வைக்கிறதென்றால்…”இலக்கியம்” எனும் பேராற்றல் முன் வணங்கி நிற்கத்தான் முடிகிறது.

ஆரோக்கிய நிகேதனம்” படித்து முடித்த இரவிலும், “பிஞ்சர்” பார்த்த இரவிலும், “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” படித்து முடித்த இரவிலும் இப்படித்தான், பண்ணையின் பசுங்குடில்களுக்கு நடுவே சூரிய சக்தி விளக்குகளின் வெளிச்சத்தில் இலக்கில்லாமல் மேலும் கீழும் நடந்துகொண்டிருந்தேன். ஆரோக்கியத்தின் வாழ்வு இலக்கியத்தில் பதியப்பட்டு, சாகாவரம் பெற்றுவிட்டது. அவர் வாழ்வு மட்டுமல்ல, அவரைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வியல், எழுத்தாணி கொண்டு பொறிக்கப்பட்டு விட்டது. இலக்கியம் இதற்குத்தானே?. ராச்சோறு எடுக்கும் ஆரோக்கியத்தின் “சாமி, உங்க வண்ணாத்தி மவ வந்திருக்கேன் சாமி” என்ற வீட்டுவாசல் குரல், என் கிராமத்து நண்பன் ஆறுமுகம் வீட்டுவாசலில் எண்பதுகளில் கேட்ட அக்கம்மாவின் “அக்கம்மா வந்திருக்கேன்சோறு போடுங்க தாயி…” குரலை துல்லியமாக காதுகளில் ஒலிக்கவைத்தது. முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின், அக்கம்மாவின் அக்குரல் இந்த நள்ளிரவில் மனதில் மேலெழுந்து வந்து கண்களில் நீர் துளிர்க்க வைக்கிறது.

அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அக்கம்மாவின் குடும்பம் எங்கள் கிராமத்தில் சலவைத் தொழில் செய்யும் குடும்பம். தெப்பக் குளத்தின் தெற்குப்புறம் கடைசியில் இருந்த காலனியில் பின்பக்கமாயிருந்தது அவர்கள் வீடு. மண்வீட்டின் முன் கருவேல மரத்தில் கழுதை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ராச்சோறு எடுப்பதற்கு அக்கம்மாவோ, அவர் கணவனோ, சிலநாட்கள் அவர் பெண் பூரணமோ முன்னிரவில் வீடு வீடாகச் செல்வார்கள். பூரணத்திற்கு என்னைவிட ஐந்தாறு வயது அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னிரவு நேரத்தில், தெப்பக்குள சுற்றுச்சுவற்றில் உட்கார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சில நாட்களில், துவைத்த துணிகளை வீடுகளில் கொடுப்பதற்காக, பெரிய மூட்டையை தலைமேல் தூக்கிக் கொண்டு அக்கம்மாவுடன் செல்லும் பூரணத்தைப் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் சாயங்காலம் சென்னம்பட்டியிலிருந்து பள்ளிக்கூடம் விட்டு சைக்கிளில் வரும்போது, தெப்பத்தின் கிழக்கு மூலையில் ஆலமரத்தடியில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தில், சைக்கிளை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, பக்கத்தில் கூட்டத்தினருகே சென்று எட்டிப்பார்த்தேன். பஞ்சாயத்து போர்டு பிரெஸிடண்டோடு இன்னும் மூன்று நான்கு பெரியவர்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். இடுப்பில் துண்டோடு பூரணத்தின் அப்பா கைகூப்பி முதுகு வளைத்து நின்றிருந்தார். பக்கத்தில் அக்கம்மாவும், பூரணமும் தலைகுனிந்து கண்ணீரோடு நின்றிருந்தார்கள். பெரியப்பாவும், மாமாவும் தனியே மடக்கு சேரில் உட்கார்ந்திருந்தார்கள். காலனிப் பையன் ஒருவன் சட்டையில்லாமல் கிழிந்து போன பனியனோடும், இடுப்பில் துண்டோடும் எல்லோர் காலிலும் விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. “இருபது ரூபா ஜாஸ்திங்க சாமி, தயவு பண்ணணும்” அந்தப் பையன் மறுபடியும் ஒரு பெரியவரின் காலில் விழுந்து கும்பிட்டான். ”நீ பண்ண தப்புக்கு இருபது ரூபா கம்மிடா” என்றார் ஒருவர். என்னைப் பார்த்துவிட்ட சீனி மாமா, முறைத்து வீட்டிற்குப் போகச்சொல்லி சைகை காட்டினார். நான் நகர்ந்து போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினேன். வீடு வரும்வரைக்கும், பூரணத்தின் கண்ணீர் நிரம்பிய அந்தக் கண்கள்தான் மனதில் நின்றிருந்தது.    

பத்து/பனிரெண்டு வயதில் நான் பார்த்து, ஆழ் மனத்திற்குச் சென்று மறைந்து போன அக்குடும்பத்தை, இந்த நாற்பத்தாறு வயதில், “கோவேறு கழுதைகள்” ரத்தமும், சதையுமாய் கண்முன் கொண்டுவந்தது. அக்கம்மாவும், ஆரோக்கியமும் வேறுவேறல்ல. படிக்கும்போது அக்கம்மாவும் இப்படித்தானே வாழ்ந்திருப்பார் என்று யோசித்து யோசித்து மனம், நெடுகிலும் நெகிழ்ந்துகொண்டேயிருந்தது. இப்போது பூரணம் எங்கிருக்கிறாரோ, என்ன செய்துகொண்டிருக்கிறாரோபெருமூச்சுடன் அவருக்காக பிரார்த்தித்துக்கொண்டேன்.

உருட்டுக் கட்டையாட்டம் இருக்கிற இந்த உடம்பாலதான் ஊருல எல்லார்கிட்டயும் எனக்குச் சண்டை வருது. கீழ்ச் சாதின்னு கூடப் பார்க்காமக் கடிக்க வரானுங்க. மீசை நரைச்ச கெயவன்கூட எங்கிட்டக் கேலி பேசுறான். கோவமா வருது. என் அடி வவுத்தையே பாக்குறாங்க. நா இனிமே துணி எடுக்கப் போகல”  மேரியின் அழுகைக் குரல் மனதை என்னவோ செய்கிறது. எது நடந்துவிடக் கூடாது என்று மேரி பயந்துகொண்டிருந்தாளோ, அச்சம்பவம் நடந்த அத்தருணம்சடையனிடம் மாட்டிய மேரியின் கெஞ்சும் குரல்மனதை அறுப்பது

வாண்டாம் சாமி…”

தப்பு சாமி…”

நல்லதில்ல சாமி…”

மானம் மருவாத பூடும் சாமி…”

தெருவுல தல்காட்ட முடியாது சாமி…”

குடும்பம் அயிஞ்சுபூடும் சாமி…”

வண்ணாத்தி சாமி…”

வாக்கப்படப் போறவ சாமி…”

சாதிக் குத்தமாயிடும் சாமி…”

உசுரப் போக்கிப்பேன் சாமி…”

உங்களுக்குக் காலுக்குக் கும்பிடுறேனய்யா…”

உங்களுக்கு மவளாப் பொறக்கறனய்யா…” 

மேலே வாசிப்பைத் தொடரமுடியாமல் கலங்கடித்த இடம் அது.

மேல்நாரியப்பனூர் அந்தோணியார் கோவிலுக்குப் போவதிலிருந்து துவங்கும் நாவல், அம்மக்களின் வாழ்வை அச்சு அசலாய் அத்தனை இயல்பாய் அக்கிராமத்தின் எல்லாப் பின்னணியோடும் கண்முன் விரிக்கிறது. கிராமத்தின் எழவு வீட்டின் காரியங்கள், அறுவடைக் காலம், களம் தூற்றும் நிகழ்வுகள், ஊர்ச் சோறு எடுப்பது சம்பந்தமாக ஆரோக்கியத்திற்கும் சகாயத்திற்கும் நடக்கும் சண்டைகள், தெரசா, திரவியராஜ் குடும்பம், திரவியம்மேரியின் கல்யாணம், திரவியராஜின் மரணம், பெரியானின் வாழ்க்கை, தைப் பொங்கலில் கிராமத்தின் முகம், மேரிக்கும் ராணிக்கும் இடையிலான நட்பு, குடுகுடுப்பைக்காரனின் இரவு வாக்கு, மாரியம்மன் கோவில் திருவிழா, ஆடு, மாடு, பன்றித் தலைகளுக்கு நடக்கும் பஞ்சாயத்து, ஊர்ச்சோறு எடுக்கும்போது ஆரோக்கியத்தின் அனுபவங்கள், கிராமத்தில் தேர்தலின் முகம், அந்த மழை, வளரும் பெரியானின் பேத்தி, கிராமத்தில் நடக்கும் பிரசவம், ஆரோக்கியம் நீக்கும் பால்கட்டு

நாவல் படித்து முடித்தபோது, என் கிராமத்தில் மறுபடி வாழ்ந்து வெளியில் வந்ததுபோல் இருந்தது.

இந்து தமிழ் திசையில் வெளியான, அரவிந்தன் எடுத்த இமையத்தின் பேட்டியை, “கோவேறு கழுதைகள்” படித்துமுடித்த அந்த இரவில்தான் வாசித்தேன். ஒரு நள்ளிரவில் தான் கேட்ட ஆரோக்கியத்தின் அழுகுரல்தான், “கோவேறு கழுதைகள்” நாவலை உருவாக்கியது என்று சொல்லியிருந்தார். அந்த நள்ளிரவின் அடர்ந்த இருட்டில் சாதாரணமாய் கரைந்து போயிருந்திருக்கக் கூடிய ஓர் ஒட்டுமொத்த வாழ்வின் அழுகுரலை அழுத்தமாய் பதிவு செய்ததற்காக இமையத்தை கட்டிக்கொள்கிறேன். பேட்டியில் செடல் எனும் தெருக்கூத்தாடும் அழகான பெண் குறித்து சொல்லும்போது

ஒரு கரிநாள் அன்று பொங்கல் காசு கேட்பதற்காக வந்த செடல் மாமன் மகனே பொங்க காசு தாங்க சாமிஎன்று கேட்டு காலில் விழுந்து கும்பிட்டு, “பால் பொங்கிடிச்சா?” என்று கேட்டார். அவர் என் காலின் முன் விழுந்து கிடந்த அந்த கணத்தில்தான் தமிழ் நாவல் இலக்கியத்தின் மாபெரும் கதாநாயகி செடல் என்று தோன்றியது”  

என்று குறிப்பிடுகிறார். இந்த ஒரு வரியே என் மனதை நிரப்பப் போதுமானதாய் இருந்தது. செடல், எங்கள் கிராமத்தின் ”வெள்ளையம்மா”வாக இருக்கலாம். மனம் இப்போதே பரபரக்கிறது. வரும் நாட்கள் செடலுடன்தான்.

வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை – மீஸான் கற்கள் குறித்து வே.நி சூர்யா

இன்றைக்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை கையிலேந்துகையில் சில விநோதமான வாக்கியங்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. சில பத்திகளை காக்கைகள் தூக்கிச் சென்றிருக்குமோ.. கூகுள் மொழிபெயர்ப்பின் கைங்கர்யமோ. இப்படியான இத்தனை கேள்விகளையும் சில்லறை அவநம்பிக்கைகளையும் தாண்டித்தான் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. இப்பின்னணியில் இரண்டு விஷயங்கள் முக்கியமான கருவிகள் ஆகின்றன. ஒன்று, உள்ளுணர்வு. பிறிதொன்று பிற மொழி அறிவு. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மிக மோசமான தமிழ்மொழிபெயர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அப்படியே வளைவுப்பாதையில் சென்று ஆங்கில புத்தகத்தையே தேர்வுசெய்து என்னை காப்பாற்றிக் கொள்வதுண்டு. நமக்கு தெரியாத மொழியிலிருந்து மொழியாக்கம் எனும்பட்சத்தில் உள்ளுணர்வுதான் வழிநடத்துநர். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அம்மொழியாக்கம் குறித்த என் மதிப்பீடு. எனக்கு மலையாளம் தெரியாது என்ற எல்லைக்குள் நின்றுகொண்டே குளச்சல் மு. யூசுப் அவர்கள் மொழிபெயர்த்த மீஸான் கற்கள் நாவலை ஒரு நல்ல உள்ளுணர்வுடன் வாசித்தேன். ஏற்கனவே அவருடைய மொழிபெயர்ப்பில் பஷீரினுடைய படைப்புகளை வாசித்திருந்தேன். இலக்கியச் சுத்தமானமொழி, பிரதேச மொழி என அந்தந்த படைப்புகளுக்கு ஏற்றவாறு அவரால் ஒரு சட்டையை கழற்றி புதுசட்டை அணிந்துகொள்வது போல ஒரு நடையை சுவீகரித்துக் கொள்ளயியல்கிறது. மேலும் கதாபாத்திரங்களின் தொனியை அவரால் அப்படியே கடத்த இயல்கிறது. இந்த தொனியை மொழிபெயர்ப்பது என்பதுதான் தமிழில் எழுதப்பட்டது என்றெண்ண வைக்கும் ஒரு சரளமான அசல்த்தன்மையை நாவலுக்கு போர்த்துகிறது என்றே நினைக்கிறேன். மேலும் கசிந்துருகச்செய்யும் வரிகளை உக்கிரம் கொப்பளிக்கும் வரிகளாக மொழிபெயர்த்துவிடுகிற அபாயம் பெருகிவிட்ட தற்கால மொழிபெயர்ப்புச் சூழலில் மேற்குறிப்பிட்ட இரண்டும் முக்கியமான பண்புகள்.

ஒற்றைவரியில் சொல்ல முயன்றால் மீஸான் கற்கள், ஒரு அந்த கால இஸ்லாமிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் வாழ்க்கையையும் அதன் வீழ்ச்சியையும் சித்தரிக்கும் நாவல். புனத்தில் குஞ்ஞப்துல்லா அப்படியே நம் முன் ஒரு கதையை தூக்கிவீசுகிறார். அவர் அந்த கதையில் யாருடைய தரப்பையும் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, முன்பு இது இப்படி இருந்தது ஆனால் இன்று பாருங்கள் இது இப்படி மாறிவிட்டது என்று சொல்கிறார். காலத்தால் சிறுசிறுக துருவேறி பொடிப் பொடியாக மாறிவிட்ட உடைக்கயியலாத இரும்புத்துண்டத்தை போன்ற வாழ்க்கையே அவருடைய விசாரணையின் மையம். விசாரணை அறிக்கையில் இறுதி முடிவு எனும் இடத்தை பெரும்பாலும் வெற்றிடமாக விட்டுவிடுகிறார். மீஸான் கற்கள் நிறைந்த பள்ளிவாசல், அப்பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் எரமுள்ளான், அந்த பள்ளிவாசலையொட்டிய அறக்கல் இல்லம், கருணை மற்றும் குரூரத்தின் விநோதமான கலவையுடன் குறுநில மன்னர் போல அந்த அறக்கல் இல்லத்தில் வசித்துவரும் கான்பகதூர் பூக்கோயா தங்ஙள், அவருடைய மனைவி ஆற்றபீவி, அவருடைய மகள் பூக்குஞ்ஞி, பூக்கோயா தங்களின் பணியாளர்கள், பூக்கோயா தங்ஙளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் நீலியின் மகன் குஞ்ஞாலி, பாடகனான பட்டாளம் இபுறாகி இவர்கள் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். கூடவே மரணமும் கட்டுக்கடங்காத இச்சையும் ஒரு கதாபாத்திரம் போல இந்நாவலில் அலைகிறது.

பூக்கோயா தங்ஙள் நிலப்பிரபுத்துவத்தின் மானுட உருவம். கருணை, இச்சை, அதிகாரம் என்ற முக்கோணத்திற்குள் அலையும் முன்தீர்மானிக்க முடியாத குணாம்சங்களின் தொகுப்பாகவே நாவலில் அவருடைய கதாபாத்திரம் வெளிப்படுகிறது. தனது குதிரையில் ஏறி மீனவக் குடிசையில் அத்துமீறுவது அவருடைய ஒரு முகம் என்றால் ஊரில் காலாரா வந்து மக்கள் அவதிப்படும்போது அதற்கு முன்னால் வந்து நிற்பது அவருடைய இன்னொரு முகம். கான்பகதூர் பூக்கோயா தங்ஙள் தன் இச்சையை பொருட்டு குத்தி வீழ்த்தபடும்போது நாவல் தன்னுடைய இன்னொரு வீச்சை அடையத் தொடங்குகிறது. அதிகாரம் இருக்ககையில் அதை பயிற்சி செய்ய ஆள் இல்லாதபோது உண்டாகும் வெற்றிடம் அந்த அதிகாரத்தையே விழுங்க முயல்வதும் இன்னொரு ஆளை தேடுவதுமான காட்சி ஒன்று நாவலிலிருந்து எழுந்துவருகிறது. அறக்கல் இல்லம் மண்ணில் புதைக்கப்பட்ட சவத்தை போல உருகுலையத் தொடங்குகிறது. தற்கொலை, மரை கழறல், விட்டு வெளியேறுதல் என அறக்கல் இல்லத்து மாந்தர்கள் சரிந்துவீழ்கிறார்கள்.

ஏதோ முடிந்தால்தான் ஏதோ தொடங்கும் என்பதுபோல, ஒருகட்டத்தில் நாவலின் பாத்திரங்கள் இறந்துபோகிறார்கள் அல்லது அதற்கு நிகரான நிலையை அடைகிறார்கள். காமம் மரணத்தின் முகமூடியை அணிந்துகொள்கிறது. மரணம் காமத்தின் முகமூடியை பதிலுக்கு அணிந்துகொள்கிறது. சிலசமயம் காமமும் மரணமும் ஒன்றேபோல் ஆகிவிடுகின்றன நாவலில். வடக்கு மலபார் முஸ்லீம்களின் வாழ்வியல் நாவலெங்கும் விவரிக்கப்படுகிறது. அவர்களது பழக்கவழக்கங்கள், தொன்மங்கள், கல்வி முறை என அனைத்தும் நாவலின் வாயிலாக ஒரு இயங்கும் சித்திரமாக எழுந்துவருகிறது. இந்நாவலில் வருகிற ஜின்களை குறித்த பகுதி கனவுத்தன்மையை உண்டாக்கிச்செல்கிறது. நாவலின் சாரத்தை தொகுத்துக்கொள்ள முயலும்போது இப்படி ஒரு உருவகம் மனதில் தோன்றுகிறது. எல்லா சன்னல்களும் திறந்திருக்கும் நிறைய ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம். அதை இயக்குமிடத்தில் இச்சையையும் அதிகாரத்தையும் உடல் பாகமாக கொண்ட மனிதர். வாகனம் புறப்படுகிறது. இறுதியில் மரணம் எனும் நிறுத்தத்தில் வாகனம் பழுதடைந்து நிற்கிறது. அதை வருங்காலம் வெறித்துப் பார்த்துபடி கடந்துசெல்கிறது. இன்னொருவிதமாக கூற முயன்றால், வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை என்று கூட சொல்லலாம். இது வெறும் வீழ்தல் அல்ல, ஒளியின் வருகையையும் தீர்க்கதரினசமாக தன்னுள் பொதிந்து வைத்திருக்கம் ஒரு வீழ்ச்சி.

ஏராளமான கதாபாத்திரங்கள். எக்கச்சக்கமான தருணங்கள். கிராமத்து வாழ்க்கையின் அப்பாவித்தனங்கள். அதன் உன்மத்தங்கள். சகலத்தையும் பாரபட்சமின்றி கேலியுடன் அணுகும் ஒரு நவீனத்துவ குரல். ஒரு எடைமிகுந்த காலத்தின் கடைசி மூச்சிரைப்பு சப்தம் என இந்நாவல் ஒரு பரந்த பரிணாமத்துடன் பூரணித்து நிற்கிறது. இந்நாவலை மிகச் சிறந்த முறையில் தொய்வில்லாமல் மொழியாக்கம் செய்து தந்திருக்கும் குளச்சல் மூ யூசுப் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்

மீஸான் கற்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா

காலச்சுவடு வெளியீடு