கவிதை

சத்தமற்ற தனிமை

கனிமொழி பாண்டியன்

சத்தமற்ற தனிமை
முனுமனுப்பற்ற மனது
அலம்பலற்ற முகம்
சிமிட்டாத இமைகள்
கொதியற்ற வெதுவெதுப்பு
நடுநெஞ்சில் ஆணியாக
அகண்ட ஏக்கத்தையும்
வழிந்த வலியையும்
மெல்ல மெல்ல தடவுகிறாள்
கண்களோடு மூக்கும் அழுகிறது

 

வீட்டுக்கு வெளியே வட துருவம்

காஸ்மிக் தூசி 

அமைதியாய் வந்து அமர்ந்திருக்கும்
நடு இரவில்
வீட்டுக்கு வெளியில்
வட துருவம்

குளிரின் கொடுங்காற்று
கூரையின் மேல்
சரிந்து இறங்குகையில்

எவரின் மீதோ
ஒரு வசை
வாழ்த்து
விமர்சனம்.
மற்றும்
இவை யாதுமற்ற
வெறுமையின் சலிப்பு.

ஊளையிட்டு சண்டையிடும்
இவ்வளவு காற்றும் வருவது
எங்கிருந்து?
இவ்வளவு பனியும் இதுவரையும்
இருந்தது எவ்விடத்தில்?

இதையெல்லாம்
கண்டுபிடிக்கதான்
பொழுதுபோகாத
அந்த மூதாட்டி

கையில் குழவியுடன்
வெற்றிலையை இடித்து
கடவாயில் வைத்தபடி

நிலவில்
காலை நீட்டி
அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறாளோ
பூமியை?

 

பெருங்கவிதை

விஜயகுமார் 

பேருண்மை தான் வேண்டுமா
வெறும் உண்மை வேலைக்காகாதோ

பெரும் தவிப்போ
அதுதான் செல்லுபடியாகுமோ

எப்படி பார்த்தாலும் அழகி தானே பக்கத்தில் இருப்பவள்
பேரழகி எல்லாம் புனைவுதானே

சரி விசயத்திற்கு வருகிறேன்

பெரும் புரட்சி என்றும் நடவாது
வேண்டுமென்றால் சின்ன புரட்சி
முயற்சித்துப் பார்க்கலாமே

ஏனென்றால்
பேரழிவும் அழிவும் அளவில் ஒன்றுதான்.

பேராண்மை பற்றி கேட்காதீர்கள்
எனக்கு பெரும் சிரிப்பு வந்துவிடும்

பெருங்கருணை பெரும்படை கொண்டதுதானே
நாங்கள் வேண்டுவதெல்லாம் வெறுங்கருணை மட்டுமே

உயிர் இருக்கிறது
பேருயிர் கண்டதில்லை

தாய்க்கு மட்டும்தான் இழப்பு
பிறருக்கு என்னவோ பேரிழப்பு

பெருங்காதல் பெருந்தாபம்
பேராற்றல் பெருங்கொடை பெருவீரம்
எல்லாம் வெறும் காகிதத்தில் எழுதியவையோ

சரி சரி போனால் போகட்டும்
வைத்துக் கொள்வோம்,
அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று எழுத்துதானே
ஒன்றும் குறையில்லை.

 

 

ஆகாச பூச்சியின் நீர்க்கட்டி

கோ . பிரியதர்ஷினி

ஊர் முழுக்க
கேட்கும் எல்லா
குழந்தைகளின் அழுகுரல்களும்
இடிந்து விழுகின்றன
வயிற்றின் மேலொரு
வரி விழாதவளுக்கு

நீர்க்கட்டிகளை ஒவ்வொரு கல்லாய்
தூக்கி போட்டு உடைத்தெறிந்து
உங்களுக்கென்று ஒரு சிசுவை
ஈனுவதற்குள்
நீலமித்து விடுகின்றன
கெட்டிக் கருப்பைகள்

வெப்பத்தை சுரந்து கொண்டிருக்கும்
உதடுகளிலிருந்து
நீள வாக்கியமாகவே
குறு வாக்கியமாகவே
வெளித்தள்ளும் சொற்களில்
இயற்கையாகவே வளைய நெளிகிறது
பேரன்பின் ஆகாச பூச்சியொன்று
என் நுனி வயிற்றில்

கிரீடங்களை
அழுத்தி எடுத்துக் கொண்ட
எல்லா புகைப்படங்களையும்
மாட்டித் தொங்க விடுவது போல்
எங்களினுள் ஆழமாக
சொருகிக்கொண்டிருக்கின்றன
மறைமுக ஆணிகள்

சிலைகளை போல சும்மாவும்
அசையாமலும்
அப்படியே நின்று கொள்ள
நினைவெண்ணுகிறோம்
கீழாடையும் மேலாடையும்
களவாடாத புனிதக் கைகள்
போற்றுதலுக்குரியவை

பரிகசம் ஒன்றை
பாத்திரத்தில் எடுத்து வந்து
ஸ்பூன்களால் ஊட்டி விடுகிறீர்கள்
தலை தூக்கிய போது
வானில் மங்கலாக
அசைகிறது குளியலறை
அந்தரங்க படமொன்று

முறிந்த விரல்களில்
எழுதுமொரு தடுமாறும்
எழுத்துக்களில்
நிறைந்திருக்கும் அஞ்ஞானமாய்
எல்லாருடைய
கழுத்திலும் தடித்து சிரிக்கிறது
தேர்ந்த கள்வர்களின் சாவி

சுவைகள்

கலையரசி

பள்ளிக்கூடம் முடிந்து
வீடு திரும்பும்
குழந்தைப்பருவம்
நினைவுக்கனிகளில்
இன்னமும் சுவைத்திருக்கிறது.

காலம் போட்ட தொரட்டிக்காம்பில்
குறும்புகளைக் கொப்பளித்திருந்தது
கோணப்புளியங்காயின் துவர்ப்பு.

சதைப்பற்றை மென்று துப்பிய
ஒவ்வொரு சீதாப்பழ விதையும்
ஏகாந்தங்களை
மண்ணூன்றி இருந்தது.

நண்பனுக்குத் தெரியாமல்
திருடித்தின்ற நெல்லிக்கனி
அவ்வளவும் கசந்து போனது
அப்பாவியாய்
அவன் தந்த தண்ணீரை
அருந்தியபோது.

தேர்வு நேரங்களில்
புன்னகை துறந்த உதடுகளுக்கு
ஆறுதலாய் முத்தமிட்டிருந்தது
நாவல் பழத்துச் சாயம்.

எளிதாய் ஒடிந்த
வெள்ளரிப்பிஞ்சுகளின் ஓசைகளில்
பிணக்கு நீங்கிய
வெள்ளந்திச் சிரிப்புகள்
எதிரொலித்தன.

உக்கிர வெயிலின் கூர்முனை
உவர்ப்பையும் கார்ப்பையும் தடவி
கீற்றுக்கீற்றாக
மாங்காய்களை நறுக்கித்தந்தது.

படிப்பு முடிந்த காலத்தில்
கனிகளைச் சுவைத்து
வெளியேறிய போது
இலந்தையின் புளிப்பிலும்
இனிப்பிலும்
ஊறிப்போய் இருந்தது
எதிர்காலக் கனவுகள்.

அதன் பின்னர்
எந்தப் பருவமும்
நரம்புக்கிளைகளில்
சுவைக்கவே இல்லை
இன்றுவரை.