காலாண்டிதழ்

பாவண்ணன் – தொடர்ச்சியின் சுவடுகள்

ஶ்ரீதர் நாராயணன்

paavannan

‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பா பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.

வசிக்குமிடத்து மொழியின் இலக்கிய பரப்பை இவ்வளவு விரிவாக தாய்மொழிக்கு கொண்டு வருவது மூலம் அவர் இரண்டு மொழிகளுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதற்கு மகுடம் வைத்தது போல பைரப்பாவின் ‘பருவம்’ நாவலின் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகதெமி விருது அமைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் தமிழிலும் தீவிரமாக புனைவுகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறார். எழுதுவது தவிர வேறெந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கிறார். தன்னுடைய ‘சுவரொட்டிகளின் நகரம்’ என்ற கவிதையில், பொருளற்ற வார்த்தைகளும் கூச்சந்தரும் குழைவுகளும் எப்படி ஒரு நகரத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றன என்று கூறியிருப்பார். தன்னைச் சுற்றிலும் இருக்கும் நகரம் முழுவதுமாக ஒரு சுவரொட்டியாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் துயரம் அக்கவிதையில் தெரியும்.

அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்

மெல்ல மெல்ல இந்கரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக் கொண்டிருக்கிறது

அதையே சற்று விரித்து, ‘சுவரொட்டி சொக்கலிங்கமாக’ விகடனில் சிறுகதையாக எழுதியிருந்தார். கண்ணைக்கு குத்தும் பொருளற்ற சுவரொட்டிகளிடையே, சமூகத்திற்கு சேதி சொல்லும் பெரியப்பா சொக்கலிங்கத்தையும் பாவண்ணனின் படைப்புக் கண்கள் தவறவிடவில்லை. ஒரே செயலின் இருப்பக்கத்தையும் அவரால் தன் எழுத்தில் கொண்டு வர முடிகிறது. ‘சுவரொட்டி’ சிறுகதையில் ஓரிடத்தில் சொக்கலிங்கம் தன்னையே ஒரு நடமாடும் சுவரொட்டியாக மாற்றிக் கொண்டு கடற்கரையில் பாலிதீன் பைகள் விற்பதை தடுக்க பாடுபடுவார். அந்த சாத்வீகமான போராட்டத்தை, கடற்கரை கடை முதலாளிகள்க் கூட்டம் முதலில் கேலியாலும், பிறகு புறக்கணிப்பாலும், அதன் பிறகு வன்முறையாலும் எதிர்கொண்டு, பிறகு தோற்றுப்போவார்கள். ஒரு எதிர்பாரா தருணத்தில் இறந்துவிட்ட சுவரொட்டி சொக்கலிங்கத்தை, மின்மயானத்திற்கு கொண்டு சென்று, தானே கொள்ளிவைத்துவிட்டு வீடு திரும்புவார் கதைசொல்லி. திரும்பும் வழியில், நகரெங்கிலும் காணும் போஸ்டர்களில் எல்லாம் கதைசொல்லிக்கு,, சொக்கலிங்கத்தின் முகம்தான் பிரகாசமாகத் தெரியும். இத்தேசத்தில் காந்திய சிந்தனை என்று மங்காது தொடர்ச்சியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதை பதிவு செய்யும் படைப்பு அது.

paaimarakappal01

காந்தியின் தாக்கத்தை பாவண்ணனின் எழுத்தில் பல இடங்களில் பார்க்கலாம். ‘பாய்மரக் கப்பலில்’ முத்துசாமி கவுண்டனின் அண்ணன் மகன் காந்தியவாதியாக உருவெடுக்கிறார். இத்தனைக்கும் அதே முத்துசாமிக் கவுண்டனின் சகோதரன் ஒரு நொடி உணர்ச்சி வேகத்தில் உற்றாரைக் கொன்று போட்டு ஜெயிலுக்கு போவதாகவும் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கும். இரண்டு முனைகளுக்கும் இடையேதான் இந்த நிலத்தின் காதைகள் பலதும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கோர சம்பவத்தில் மனைவி வனமயிலை இழந்ததும் நாவாம்ப்பாளை ‘நடுவீட்டுத்தாலி’யுடன் மறுமணம் கொள்கிறார் முத்துசாமி. புரோகிதன் கவுண்டன் வந்து திருமணம் நடத்தி வைக்கும் புதுச்சேரி கவுண்டர் சமூக வழக்குகளை ஆங்காங்கே தெரிந்து கொள்ள வாய்க்கிறது. பிரான்சின் காலனியாதிக்க எச்சத்தினால் ஆட்பட்டு ஃப்ரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பாரிஸுக்குப் போகும் முனுசாமியும், இந்த ஊரிலேயே ஆன்மிகத்தில் தொலைந்ந்து போகும் ரங்கசாமியும் புதுச்சேரி நிலத்தின் வரலாற்றை சற்று கோடிட்டு காட்டுகின்றார்கள்.

கதையின் தொடக்கத்தில், கோர்க்காட்டு அமாசைக் கிழவரும், முத்துசாமிக் கிழவரும் கடந்த காலத்தை பற்றி மிகவும் ஆதுரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். கதை முடியும்போது கிழவர் தத்துப்பேரனான பிச்சாண்டியுடன் சேர்ந்து நிலத்தின் மீதான தன் நம்பிக்கயை மீட்டெடுக்கிறார். நான்கு தலைமுறைகளுக்கு இடையேயான சமூக வரலாற்றை முன்-பின்னாக சொல்லிச் செல்கிறது. ஒரு புராண காலத்து வீரனாக வாழ்ந்து, நாடி ஒடுங்கி விழுந்துவிட்ட முத்துசாமிக்கு அந்த நிலத்தின் மீதான நேசம்தான் உயிரை ஒட்ட வைத்து கொண்டிருக்கிறது. முதலில் ரெட்டிகளால் நிலம் பிடுங்கப்படும்போதும், பிறகு பார்த்தசாரதி ஐயரிடம் குத்தகைக்காக கிடந்து தவிக்கும்போதும் அதே நிலத்தின் மீதான் காதல்தான் முத்துசாமியை நிலை நிறுத்துகிறது. திருக்குறளில் ‘இடனறிதல்’ அதிகாரத்தில் ஒரு குறள் வரும். கடலோடும் நாவாயும், நிலத்தில் ஓடும் நெடுந்தேர்ப் பற்றியும் ஒப்பிட்டுச் சொல்லும் குறள் அது. முத்துசாமி நிலம் மீதான பயணம், பாய்மரக்கப்பல் போல மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் என்று அலைக்கழிக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது என்று வாசிக்கும்போது அந்தக் குறள்தான் நினைவிற்கு வந்தது. இடமறிந்து செயலாற்ற வேண்டும் என்னும் வள்ளுவ கூற்றை சற்று மாற்றி, இடம் மாற்றி செயலாற்றுவதன் மூலம்தான் ஒருவன் வரலாற்றில் நிலைப்பெற முடியும் எனக்கூறும் நாவல் பாய்மரக்கப்பல்.

தொடர் இயக்கம் வழியே மட்டும் ஒரு படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்க முடியும். அது சாமானியப்பட்டதல்ல. ஒவ்வொரு முறையும் பரீட்சிக்கப்படும் எழுத்தை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் புறவுலகின் பாதிப்புகளுக்கு தன்னைத் தொடர்ந்து ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரால்தான், அதை அழகுணர்ச்சியோடும் சமூக அக்கறையோடும் மீட்டெடுத்து நமக்கு அளிக்க முடியும். பாவண்ணனின் சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் ‘கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் மரப்பாச்சி பொம்மைகள் போல நினைவுகள் அவருள்ளே ஊறிக் கொண்டேயிருக்கின்றன’.

வளவனூரில் இருக்கும் ஏரிப் பற்றி ஒரு கட்டுரையில் விரிவாக பதிகிறார். தென்பெண்ணை ஆறு நிரம்பியதும் வளவனூர் ஏரிக்கு நீர் வரத்தொடங்கி விடுகிறது. ஒருமுறை நிரம்பினால் ஆறு மாதஙளுக்கு நீர் ததும்பியபடி இருக்கும். சிறுவர்களின் கணக்கில் காலாண்டு தேர்வுக்கு நிரம்பத் தொடங்கும் ஏரி முழு ஆண்டுத் தேர்வு சமயம் வரை நிரம்பியபடித்தான் இருக்கும். ஏரியில் புரளும் புதுவெள்ளத்தோடு போட்டிப் போடும் சிறுவர்கள் பற்றிய விவரணைகள் நம்மை அக்காலத்திற்கே இட்டுச் செல்கின்றன. மதுரை பசுமலைக் கண்மாயில் நண்பர்களுடன் நான் போட்ட குதியாட்டங்களூம், கலைநகர் பக்கம் பட்டிமேட்டில் விவசாயக் கிணற்றில் குதித்தோடிய அனுபவங்களையும் ஒப்புநோக்கி பார்த்து மகிழ்ந்த வண்ணம் வாசித்துக் கொண்டு வந்தேன். நடுவே அவருடைய பள்ளித்தோழி சரஸ்வதி ‘நீ குளிக்கப் போகலியா? உனக்கு நீச்சல் தெரியாதா? உனக்கு நான் நீச்சல் கத்துக் கொடுக்கவா?’ என்றெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இவருக்கு விருப்பம் இல்லாததால், ஏமாற்றத்தால் சுணங்கிப் போய், திரும்பிப் போய்விடும் சரஸ்வதியுடன் இவருடைய நீச்சல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் போய்விடுகிறது. சரஸ்வதியிடம் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தால் பாவண்ணனிடமிருந்து இன்னொரு நாவல் கிடைத்திருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அவருடைய நண்பன் பழநியின் தம்பி சேகர் அந்த ஏரியில் மூழ்கிப் இறந்து போய்விட அந்த ஏரியின் அமைதி அமானுஷ்யமாக மாறுகிறது.

‘துங்கபத்திரை கட்டுரைகளில்’ அதே ஏரி வறண்டு போய் கிடக்கும் அவலத்தையும் பதிவு செய்கிறார். அவரைச் சுற்றி இருக்கும் நிலங்களும், நீர் நிலைகளும், நதிகளும் தங்களுக்குள் ஒருபகுதியாக அவரைக் கொண்டிருக்கிறது என்பது இப்படியான தொடர் பதிவுகளில் தெரிகிறது. வற்றிப்போயிருக்கும் ஏரியைப் பற்றி குறிப்பிட்ட ‘வாழ்க்கை எனும் சுமை’ கட்டுரை பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதே புள்ளியைத் தொட்டு ‘தீராநதி’ பேட்டியில் ‘சீதையின் துயரம்தானே ராமாயணம், கண்ணகியின் துயரம்தானே சிலப்பதிகாரம், குந்தி, திரோபதை, சுபத்திரை என்ற மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்’ என்று குறிப்பிடுகிறார். இந்த பரிவான பார்வையை அவருடைய படைப்பெங்கும் தொடர்ந்து காண முடிகிறது. ‘வாழ்க்கையில் ஒரு நாள்’ எனும் சிறுகதையில் சண்முகவேலன் தொடர்ந்து கொந்தளிக்கும் மனநிலையுடனே இருக்கிறான். அவனுக்கு வாய்த்திருக்கும் தனித்துவ குரல்வளமும், அதன் குழைவும் அதன் வனப்பும் பற்றி பலரும் சிலாகிக்க எப்படியாவது சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்றுவிட வேண்டும் எனும் தணியாத ஆர்வம். அதற்கான தொடர் முயற்சிகள் தோல்வியில் முடியும்போதெல்லாம் அவனுக்கு ஆற்றாமை மேலோங்குகிறது. அவனுக்கு வரமாக வாய்த்த குரல்வளமே அவனுனை கொந்தளிப்பிலும், ஆற்றாமையிலும் ஆழ்த்தி விடுகின்றன. இந்த முடிவில்லாத சுழலிலிருந்து சண்முகவேலன் விடுதலை பெறும் இடம், வாசிக்கும் நம்மையும் ஆட்கொண்டு விடுதலை பெற்றுத்தருகிறது.

pavannan

கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட தொடர் இயங்குதலுக்கு அப்புறமும் பாவண்ணனின் படைப்புகள் பற்றி கவனம் தந்து பேசும் தரப்புகள் அதிகமில்லை. ஆனால் அவர் அப்படி தன்னை தேங்கச் செய்துகொள்ளாமல் அடுத்த தலைமுறையின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தபடிதான் இருக்கிறார். அவர் எழுதத் தொடங்கியபோது பிறந்தேயிராத சில புதியவர்களை அவர்களின் ஆரம்ப நிலையிலேயே கவனித்து ஊக்கப்படுத்தும் விழைவைக் கொண்டவராக இருக்கிறார். ‘திண்ணை’ இணையதளத்தில், ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியம் படிக்க வரும் புதிய வாசகனுக்கு ஒரு வாசலாக அந்த கட்டுரைத் தொகுப்பு இருக்க வேண்டும் என விருப்பப்பட்டு எழுதினார். சமீபத்தில் எழுத்தாளர் ‘சார்வாகன்’ மறைந்தபோது அவரைப் பற்றிய மிகச்சில பதிவுகளில் முக்கியமானதாக பாவண்ணனின் கட்டுரைதான் அமைந்திருந்தது. புதியவர்களுக்கான அறிமுகமும், பழையவர்களுக்கான அடையாளமுமாக இந்த இலக்கிய தொடர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் பாவண்ணன்.

அரசியல் சாய்வுகள் இல்லாத சர்ச்சைகளுக்கு வழிகோலாததொரு நிச்சலனமான எழுத்து இங்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படுத்துவதில்லை. எந்த துறைகளிலும் இப்படியானதொரு தொடர் உழைப்பு பிறரிடம் ஒரு மரியாதையாவது ஏற்படுத்தும். ஆனால் தமிழில் தொடர்ந்து எழுதுகிறவர்களின் நிலை வேறு. இன்றைய பரந்து விரிந்த சமூக வலைத்தளத்தில், சினிமா பங்களிப்பு, அரசியல் நிலைப்பாடு, செல்வாக்குத் திறன் போன்ற காரணிகளால் மட்டுமே எழுத்து எடைபோடப்படுகிறது. தீவிர வாசிப்பற்ற, இலக்கிய உலகின் போக்குகளைப் பற்றி அடிப்படைப் புரிதல் இல்லாத, திருகல் பார்வையுடன் ஆவலாதி கூட்டும் குழு அரசியல்களால் நிறைந்திருக்கும் சூழலில், ஓரளவுக்கு நல் வாசிப்பைப் தங்கள் உள்ளே அடைகாத்து வரும் சில நல்ல நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பல சிறப்பிதழ் முயற்சிகள் மூத்த படைப்பாளிகளையும், அவர்களை போற்றும் அடுத்த தலைமுறைக்கும் ஊக்கமாக அமைய வேண்டும்.

பாவண்ணனின் பாய்மரக்கப்பல், கலப்படமில்லாத படைப்பூக்கம் என்னும் காற்றை சக்தியாகக் கொண்டு, என்றென்றும் கடலோடிக் கொண்டிருக்க வாழ்த்துகள்.

விளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை

திருஞானசம்பந்தம்

IMG_20140727_144132

வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பரப்பு அற்புதமாக காட்சி  தரும் ஓவியம் போன்றது. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஒட்டத்திற்கேற்ப தன் வண்ணத்தையும் அழகையும் மாற்றி மாற்றி காட்சி தரும். சேற்றின் மேற்பரப்பில் மண்புழுக்கள் பயணித்த கோடுகள் வளைந்தும் நெளிந்தும் உருவாக்கும் கோட்டோவியங்கள் வயலெங்கும்  நிரம்பியிருக்கும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையையும் மற்ற கடலோரப் பகுதியையும் திருப்பிப் போட்ட அடர்பெரும் அடைமழையின் ஓதமாக எங்கள் கிராமப் பகுதியிலும் ச்ற்றே பெய்ததால் நெல் நடவு இந்த போகத்தில் சாத்தியமாயிற்று. நெல் வயல் மனித மனம் போன்றே  விசாலமானது. ஆயிரமாயிரம் இரகசிய விதைகளைத் தன்னுள் பொதிந்து  வைத்திருக்கும். அது பயிரோடு சேர்த்து களையையும் வளர்த்தெடுக்கும். அதற்கு பயிரும் களையும் ஒன்றே. பாரபட்சம் பார்க்காதது. வயல் தாய். தாய்க்கு தன் பிள்ளைகளில் பேதம் பார்க்கத் தெரியாது. எல்லாப் பிள்ளைக்கும் ஒன்றே   போல்  தன் முலை சுரக்கும்.

வயல்தான் நம் தாய். மொழிதான் நாம் வளரும் வயல். நம்மை வளர்க்கும் வயல். எனவே நம் மொழியும் நமக்குத் தாயாகிறாள்.

எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகள், தமிழின் நவீன இலக்கிய வயல்வெளி பரப்பின் எல்லா திசைகளிலும் படர்ந்திருக்கிறது. பாவண்ணனின் படைப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்ட/பாண்டிச்சேரி மண்ணில் வேர்விட்டு, கர்நாடக நிலப்பரப்பின் வளர்ச்சி மற்றும் வாழ் நிலைகளை தன் அநுபவத்தில் உள்வாங்கி, ஒட்டு மொத்த இந்திய மரபின் கலாசார பிண்ணனியை உள்ளடக்கிய எழுத்தாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அவர் வயலில் எல்லாமும் விளையும். நெல் மட்டுமல்ல, எள்ளும், கொள்ளும், புல்லும் வளரும். ஒவ்வொரு படைப்பும் தமிழுக்கு அறுவடைதான்.

காலத்தின் காலடிச் சுவடுகளில், அன்றாட வாழ்வின் அர்த்தங்கள் மட்டுமல்ல அர்த்தமின்மையின் எச்சங்களும் தொடர்ந்து பயணிக்கின்றன. பயணத்தின் ஒவ்வொரு சிறு கணத்தையும், அதன் ஆகச் சிறந்த வனப்புகளின், வலிகளின் அநுபவப் பதிவுகளையும் செதுக்கியபடி கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை என்று எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

எல்லா கதைகளிலும் அவர் இருக்கிறார். அப்பாவின் அடிக்கு பயந்த சிறுவனாக, வெறும் கருங்கல் தொட்டியாக மாறும் மாயத்தை கண்டு அதிசயிக்கும் பள்ளிக் கூடம் போகும் மணவனாக, குடிசைத் தீயில் தன் பெற்றோரையும் கனவுகளையும் பறி கொடுத்து அநாதையாக நிற்கும் திக்கற்ற இளைஞனாக, பாக்குத்தோட்டத்தையும் தந்தையையும் இழந்து குடும்ப பாரம் சுமக்கும் யட்சகான ஹெக்டேவாக, பெரியம்மாவாக, தாயாக பிள்ளையாக, ஓவியனாக, சாமியாக, செடியாக, தோப்பாக…. இருக்கிறார். காலத்தின் முன்னும் பின்னுமாக கூடு விட்டு கூடு பாய்ந்து, தன் அநுபவங்களை முன் வைக்கும் கதைகள்.

கதைகளில் வரும் பாத்திரப் படைப்புகள் புனையப்பட்டவை  என்றாலும், நம்முடன் வாழும் எளிய மனிதர்கள். எங்காவது ஒரு ஓரத்தில் சிறு அன்பிற்காகவும், ஆதரவுக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உயிர்கள். பெரும்பாலும் அவர்களின் ஏக்கம் நிறைவேறுகிறது. யாராவது கைகொடுத்து தூக்கி விடுகிறார்கள். முடியாத போது அவர்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள். அவர்களின் கண்ணீர் உண்மையானது. வாழ்வின் மீதான அவநம்பிக்கையை தகர்த்து நம்பிக்கையின் துளிர்களை முகிழ்க்கச் செய்கிறது.

மகாபாரதத்தின் மாந்தர்களை கதைப் பொருளாகக் கொண்டு எழுதாத எழுத்தாளர்களே இந்தியாவில் இல்லை  எனலாம். பல நூறு கதைகளை பல நூறு எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பாவண்ணனின் மொழியாக்கத்தில் வந்த எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் என்ற மகாபாரத நாவல் தமிழில் நிகழ்ந்த ஒரு மகத்தான முயற்சி. இதன் பின்னணியில்,2001-ல் வெளியான ஏழு லட்சம் வரிகள் என்ற தொகுப்பு, புராணத்தின் அடிப்படைக் கதைகளின் சிறுசிறு முடிச்சுகளை முன்வைத்து எழுதப் பட்ட கதைகள். அந்தக் கதைகளில், மாவீர்ர்கள், சக்ரவர்த்திகள், காவிய நாயகர்கள், மாமுனிவர்கள், பெருங்கவிஞர்கள் நம்முடன் வந்து பேசுகிறார்கள். தாங்க முடியாத வலிகளின் ரணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

குணாட்யர் மிகுந்த மன வலியோடு அரசவையிலிருந்து திரும்பி காட்டில் இருக்கும் தன் குடிலுக்கு வருகிறார். பைசாச மொழியில் எழுதப்பட்ட முதல் மாபெரும் காவியம். ரத்தத்தால் எழுதப்பட்டது. இவை இரண்டுமே தீட்டுகள். ஏற்க முடியாது. தத்துவ சாஸ்திரப்படி காவியத்தை அரங்கேற்ற முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டார்கள். இதுவரை யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை. ஏழு லட்சம் வரிகள். தன் ரத்தத் துளிகளைத் தொட்டுத் தொட்டு எழுத்தாணியால் சுவடிகளில் எழுதி முடித்தவை. சமஸ்கிருதம் ஒலிக்கும் அவையில், பைசாச மொழிக் காவியம் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்படுகிறது.

paruvam-06867

காவியத் தீட்டு. ஒற்றை வார்த்தையால் ஒரு மொழியையும் மக்களையும் எப்படி தள்ளி வைக்க முடிகிறது? இரவெல்லாம் எண்ணி எண்ணி தவிக்கிறார். சீடர்கள் மனம் குமைகிறார்கள். காவியம் படைத்த அதி உன்னத, ஆனந்த பித்து நிலையினை மனம் மீண்டும் அசை போடுகிறது. பைசாச மொழியின் மக்களைத் தன் கண் முன்  நிற்க வைத்து பார்க்கிறார். அவர்களின் கபடற்ற முகமும் சிரிப்பும் அசைந்தாட இரவில், நிலவில் குடிலை விட்டு வெளியே வந்து வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்தபடி கண்ணீர்  வடிக்கிறார். தீட்டு என்ற ஒரு சொல் அவரை வாட்டுகிறது. அப்போது தூரத்தில் பாதி இரவில் எழுந்த தன் குழந்தையைத் தூங்க வைக்க ஒரு தாய் பைசாச மொழியில் பாடும் தாலாட்டு கேட்கிறது. மொழியின் இசையும் தாயின் அன்பும் குணாட்யரின் மனதை பொங்க வைக்கிறது.

இவ்வளவு அற்புதமான மொழியை தீட்டென்னும் சாயம் பூசித் தள்ளுகிறார்களே என்கிற சோகம் மனத்தில் தைத்தது.

மெல்ல இருட்டுத் திரை விலகத்  தொடங்கியது.வெளிச்சம் படர ஆரம்பித்தது. திடுமென குணாட்யருக்கு மனம் பொங்கி, இக்காவியத்தை அரங்கேற்ற வேண்டிய இடம் இந்தக் காடுதான் என்றும், இந்த நேரம் தான் என்று தோன்றிய கணம் அவர் மனத்தில் பெரும் விடுதலையுணர்வு  தோன்றியது. அருகிருக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து குடிலை அடைந்து ஈரத் தோலாடையுடன் அக்கினி குண்டத்தின் முன் உட்கார்ந்தார்.

நெருப்புக்கு தீட்டு இல்லை. தன் காவியத்தின் முதல் சுவடியை எடுத்து வாசித்தார். காவிய ஓசையில் காடே ஸ்தம்பித்ததுகாட்டு விலங்குகள் அவரை நோக்கி வந்தனபறவைகள் பறக்க மறந்தன. மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நின்றனர். வாசித்து முடித்ததும் நெருப்புக்கு அவிசாக்கினார். அரசர் வந்து அவர் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கோருவதற்குள் ஆறு லட்சம் வரிகள் நெருப்புக்கு இரையாயின. அவர்  தன் காவியத்தை எரிக்கவில்லை. மக்களை, மக்களின் மொழியை ஒதுக்கிய ஆணவத் தீட்டை எரித்தார். அகங்கார அறியாமைத் தீட்டை எரித்தார். இன்றும் நாம் எரிக்க வேண்டிய தீட்டுக்கள் மீதமிருக்கின்றன.

போர்க்களம் என்று ஒரு கதை. பாற்கடலைக் கடைந்து அமுதெடுக்கும் வேலை. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சம உழைப்பு, சம பங்கு ஒப்பந்தம். எல்லோருக்கும் அமரர்ஆகத் துடிக்கும் பேராவல். அமுதக் கலசம் கைவசப்பட்டதும் பங்கீட்டில் குழப்பம். மோகினி வேசம் போட்டு ஒட்டு மொத்த அசுரர் குலத்திற்கே துரோகம் இழைத்தவனின் சுயம் உலகறிந்த கதை. எத்தனை ஒப்பந்தம் எழுதினாலும், அதைச் சட்டமாக இயற்றினாலும், எத்தனை பட்டியலிட்டு பங்கு கொடுப்பதாக நடித்தாலும் துரோகம் இன்று வரை தொடர்கிறது. உண்மை ஒருபோதும் அழிவதில்லை. ஆனால் அதை திட்டமிட்டு நூற்றாண்டுகளாக மறைக்க முடியும் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாவண்ணனின்இலக்கிய பரிணாம வளர்ச்சியில், மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும், அது  நிகழும் சூழலையும் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார். அவரின் படைப்புகளும், படைப்போடு இணைந்த படைப்பூக்கச் செயல்பாடுகளும் புதிதாக எழுத வருபவர்களுக்கும், வாசகர்களுக்கும் எப்போதும் தொடர்ந்து உற்சாகத்தையும் நெருக்கத்தையும் கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது. அவரின் படைப்பாளுமை தமிழ் கூறும் மக்களுக்கு விளை நிலமாகவும், மொழிக்கு வேரடி மண்ணாகவும் இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. நம் தாய்மண் நம்மை ஒருபோதும் கைவிடாது.

                                   

தாயினும் சாலப்பரிந்து – பாவண்ணனின் ஒட்டகம் கேட்ட இசை கட்டுரை தொகுதி – வாசகனின் பரிந்துரை

தன்ராஜ் மணி

ottagam_kaetta_isai

நிமிடத்திற்கு நூறு அனுபவ பதிவுகள் முகநூலிலும், வலைப்பூக்களிலும் வெளி வரும் இந்நாட்களில் ,அனுபவ பதிவு வ்கை எழுத்துக்களை வாசிக்கும் எண்ணமே ஒரு மனச்சோர்வை எனக்களிக்கிறது.

ஆனால் இது பாவண்ணனின் அனுபவ கட்டுரைகள். சொற்களின் நெசவு கைவரப் பெற்றவர் தன் அனுபவங்களை எழுதியதை வாசிக்கும் பொழுதே இவ்வகை எழுத்துக்களை எவ்வளவு படைப்பூக்கத்துடன் எழுத முடியும் என்பதை உணர முடிகிறது. தன் அனுபவங்களை பதிவுகளாய் வலையேற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இத்தொகுப்பை  அவை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூலாக கொள்ள பரிந்துரைக்கிறேன்.

பெரு நகர வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள், தன் வேலை நிமித்தம் அவர் செல்லும் இடங்களில் அவரை பாதித்த விஷயங்கள் இவையே பல கட்டுரைகளுக்கான கருப்பொருள்.

நாம் அன்றாடம் கண்டும் காணாமல் கடந்து போகும் சமூக அவலங்கள்  புறக்கணிக்கும் யதார்த்தங்கள் ,  கண் முன்னால் கரைந்து மறையும் வாழ்க்கை முறை இவையே இக்கட்டுரைகளின் பேசு பொருள்.  

ஒரு சிறுகதையாய் தான் எழுதமுடியாமல் போன அனுபவங்களை கட்டுரையாக்கி இருப்பதாக முன்னுரையில் பாவண்ணன் சொல்கிறார். இவர் தேர்ந்த கதைசொல்லியாகவும் இருப்பதால் அனைத்து கட்டுரைகளும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கிறது.

ஒரு வகையில் அனுபவ கட்டுரை எழுத்தாளர் தன் அனுபவங்களுடன் சேர்த்து தன்னையும் வாசகர் முன் வைக்கிறார். சிலருக்கு சுபாவமாகவே மனிதரின் நற்பண்புகள் மட்டுமே கண்ணில் படும்,  சக ஜீவராசிகள் படும் அல்லல்களும். பாவண்ணன் அவர்களில் ஒருவர்.

ஒரு புலம் பெயர் பிஹாரிக்கு உதவி புரிதல், சமூகத்தின் ஆகக்கடைசி இடுக்கில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தல், குழந்தையை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் தாயின் துயரை தானும் அடைதல் என பாவண்ணன் எனும் மனிதரின் நல்லியல்புகள் இக்கட்டுரைகளின் பேசுபொருளையும் தாண்டி வெளிப்படுகின்றன.

சமூக பொறுப்புணர்வோடு , பிறருக்கென எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல்  நேரம் செலவழிப்பவர்களையும் காண்பது மிக மிக அரிதாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இச்சூழலிலும் பாவண்ணன் போன்றோர் மனிதமும் , அன்பும் , நெகிழ்வுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதே பெரும் ஆசுவாசமளிக்கிறது.

நக்கலும் , நையாண்டியும் , வலிந்து வரவழைக்கப்பட்ட நகைச்சுவையும் இல்லாத அனுபவ கட்டுரைகளை நான் படித்து பல காலங்கள் ஆயிற்று. இவை எதுவுமே இக்கட்டுரைகளில் இல்லை என்பது எனக்கு பேருவகை அளித்தது.

இக்கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒரு நெருங்கிய நண்பரிடம் நீண்ட நேரம் உரையாடிய நிறைவு. விடை பெறும்போது பிரிய மனதே இல்லாமல், குலுக்கிய கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் , அவர்களின் பிரியம் உங்களை நெகிழச் செய்தால், இந்த கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும்.

நாஞ்சிலும் நானும்

 சுல்தான்

nanjil_nadan_spl_issueசுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் உள்ள சொல்வழக்குகள், விவசாய அனுபவங்கள், அனைத்தும் ஏதோ ஒரு அன்னியோன்யத்தை எனக்கு உண்டாக்கியது.

அடுத்து நானும் பம்பாயில் லேபராக வேலை செய்திருக்கிறேன். அவரது பம்பாயை தளமாக கொண்ட நாவல்களில், கதைகளில் வரும் பம்பாயின் சந்துகளிலிலும். பொந்துகளிலும் நானும் நிஜமாகவே நடந்திருக்கிறேன், எஸ் கே முத்துவாகவும் சண்முகமாகவும் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறேன். இதுவும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்மீது எனக்கு மிகுந்த அன்னியோனியத்தை உண்டாக்கியது..

இதனால் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை இணையத்தில் தேடி தேடி வாசிக்க தொடங்கினேன். இணையத்தில் வாசிப்பது என்றால் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.. அன்றன்று கிடைக்கும் கதைகள் , கட்டுரை முதலியவைகளை கணிணியிலேயே நேரடியாக படிக்காமல் , அவற்றை வேர்ட் பைலில் தொகுத்து ,ஒரு 30, 40 பக்கமாக சேர்த்து பிரிண்ட் எடுத்து தினமும் படிப்பது என் வழக்கம். அப்படி தொகுக்கும்போது நாஞ்சிலின் கதைகளை தனி பைலாக தொகுக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது பிரபலமாக தொடங்கியது. அந்த நேரத்தில் நானும் பிளாக் தொடங்க ஆசைப்பட்டேன். ஆனால் எழுத என்னிடம் சரக்கு இல்லையே?

அந்த நேரம் இணையத்தில் கிடைக்கும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுத்தால் என்ன எனும் எண்ணம் தோன்றியது.. நாஞ்சில்நாடன் பிளாக்கை தொடங்கினேன்.

அந்த நேரம் நாஞ்சிநாடனை எனக்கு நேரடியாக பழக்கம் கிடையாது. ஏதோ என்போக்கில் நான் தொகுத்துக் கொண்டு இருந்தேன்.. இந்த பிளாக்கை தொடங்கிய சில மாதங்களில் நாஞ்சிநாடனுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. நாஞ்சிலின் எழுத்துக்களை படிக்க விரும்பிய வாசகர்களுக்கு என் தளம் ஒரு சிறந்த வாசலாக தொடங்கியது..

நாஞ்சிலுக்கு சாஹிய அகாதமி விருது கிடைத்ததை பாராட்டி ஜெயமோகனின் விஸ்ணுபுரம் வாசகர் குழு சென்னையில் பாராட்டுவிழா நட்த்தினார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. விழாவுக்கு முன்தினமே சென்று அவர்களுடன் தன்கினேன். அன்றுதான் நான் முதன்முதலாக நாஞ்சில்நாடனை சந்தித்தது..

”ஓஓ.. நீங்கதானா எஸ் ஐ சுல்தான் என்பவங்களா? வணக்கம்!”

””ஓஒ.. நீங்கதான் நாஞ்சில் நாடன் என்பவங்களா?? வணக்கம்!!” என எங்கள் நட்பு தொடங்கியது..

நாஞ்சிநாடனின் வாசகனாக இருந்த நான் அன்றுமுதல் நாஞ்சில்நாடனின் நட்பு வட்டத்தில் இணைந்தேன்.

ஒரு மூத்த அண்ணன்போல பாசாங்கில்லாத அவரது பழக்கவழக்கங்கள், நட்பை பாசமாக வளரச் செய்தது.

எனக்கு வேறு பொழுது போக்கில்லை. நண்பர்கள் கிடையாது. சாஹித்ய அகாதமி விருதுக்கு பின் நாஞ்சிநாடனை குறித்த செய்திகள் தினமும் வரத் தொடங்கின.. நானும் தளவேலைகளில் பிசியானேன்..

ஒரு கால கட்டத்துக்கு பிறகு அவரது நாவல்கள், கதைகளை நானே ஸ்கேன் எடுத்து  பிளாக்கில் பதிக்க தொடங்கினேன். நல்ல வரவேற்ப்பிருந்தது.  இருக்கிறது.

இன்று நாஞ்சில்நாடனின் எழுத்துக்களில், அவர் குறித்த செய்திகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை இந்த நாஞ்சிநாடன் தளத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கிறது என்பது எனக்கும் பெருமையான விசயம்..

அவ்வளவுதாங்க மேட்டர்!!

கம்பன் காதலன்

செந்தில்நாதன்

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது.

பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான எனது உறவு. மனப்பாடம் செய்த பாடல்களும் மறந்து போயின. நாஞ்சிலின் கட்டுரை படித்தவுடன் கம்ப இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எழுந்தது. ஆனால் எந்த உரை சிறந்தது, அதற்கு எங்கே போவத?. அதற்கும் நாஞ்சில் தான் வழிகாட்டினார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியரின் உரையை வைத்துத் தன் ஆசிரியர் பாடம் எடுத்த்தாக அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். அதை ஒட்டியே அந்த உரை கொண்டு நான் கம்பனைப் படிக்கத் தொடங்கினேன்.

அந்தக் கட்டுரையில் அவர் பம்பாயில் ரா.பத்மனாபன் அவர்களிடம் நான்காண்டுகள் கம்ப இராமாயணம் கற்றதைச் சுவை படச் சொல்லியிருப்பார். இருபது பேருடன் கோலாகலமாக ஆரம்பித்த கம்பராமாயாயண வகுப்பு, கடைசியில் நாஞ்சில் மட்டுமே என்று சுருங்கியது, ஆசிரியரின் வீட்டுக்கு வகுப்பு நகர்ந்தது என்று அந்தக் கட்டுரையே ஒரு நல்ல சிறுகதை போல இருக்கும். அக்காலத்தில் தீவிர நாத்திகரான நாஞ்சிலுக்கு இராமன் பட்டாபிஷேகப் படத்தின் முன்னால் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்கத் தடையொன்றுமில்லை. “அவருக்கு தமிழ் மூலம் சமயம், எனக்குச் சமயம் மூலம் தமிழ், சில சமயம் இரண்டும் ஒன்று தான் எனத் தோன்றும்” என்கிறார் நாஞ்சில்.

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கம்பன் சொல் நயம் பற்றித் தான் ஆற்றிய உரையை விரிவு படுத்தி கம்பனின் அம்பறாத்தூணி என்ற நூலாக 2013ல் வெளியிட்டார் நாஞ்சில். அந்த நூல் அறிமுகமே இந்தக் கட்டுரை. இது விமர்சனமல்ல. நூல்நயம் பாராட்டுதல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

தான் கம்பனுக்குள் வந்த கதையை முதல் அத்தியாயத்தில் சுவை படச் சொல்லுகிறார். மாசி-பங்குனி மாதங்களில் ஊருக்கு வரும் தோல்பாவைக் கூத்துக்காரர்கள் மூலமாக இராமாயணக்கதை அறிமுகமாயிற்று என்று ஆரம்பித்து, பள்ளிப் பருவத்தில் தி.க. கூட்டங்களில் இராமாயணத்தில் எதிர்ப்பக்கங்களையும் கேட்டறிந்த கதை கூறி, பம்பாயில் ரா.பத்மநாபன் அவர்கள் இல்லத்தில் இராமாயணம் முழுமையாகக் கற்றதுடன் நிறைவு செய்கிறார். இந்த நூலை ரா.ப. அவர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார் நாஞ்சில்.

பின்னர் நவீன இலக்கியத்துக்குள் வந்த போதும் நாஞ்சில் மரபு இலக்கியத் தொடர்பை விடாமல் காத்து வந்திருக்கிறார். ”என்னை மாற்றிய நூல்” என்ற தலைப்பில் 2009 ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் கம்ப ராமாயணத்தைப் பற்றி தி.க. தலைவர் வீரமணி முன் பேசிய போது தி.க.வினர் ஏற்படுத்திய அமளியையும் சொல்லுகிறார். அதன் பின்னர் ஜெயமோகன் இதிகாசங்கள் பற்றி ஊட்டி இலக்கிய முகாமில் பேச அழைத்ததிலிருந்து தான் கம்பனுக்குள் மீண்டும் வந்ததாகவும், அந்த அமர்வுக்குப் பிறகு சற்று முயன்றால் தமிழ்க் காப்பியத்தின் மேன்மையை இளைய வாசகர்கள், இளம் படைப்பாளிகள் நெஞ்சத்துள் கடத்திவிடலாம் என்ற நம்பிக்கை வந்ததாகவும் சொல்லுகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ‘கம்பனின் அம்பறாத் தூணி” என்று நூலுக்குத் தலைப்பு வைத்ததற்குப் பெயர்க் காரணம் கூறுகிறார். வீரர்கள் தோளில் மாட்டியிருக்கும் அம்பு வைத்திருக்கும் தூணி. இதற்குக் கம்பன் பயன்படுத்திய சொற்கள் கணைப்புட்டில், வாளிபெய் புட்டில், ஆவம், தூணி, பகழி என்று எடுத்துக் காட்டும் நாஞ்சில் எக்காலத்திலும் அம்பு அற்றுப் போகாத தூணி, அம்பு + அறா + தூணி = அம்பறாத் தூணி என்று பெயர்க்காரணத்தை விளக்குகிறார். கம்பன் சொல் வீரன், அவன் தூணி சொற்கள் நிறைந்தது. வில்வீரனின் அம்பறாத்தூணி தோளில் கட்டப்படும் எனில் காப்பியக் கவிஞனின் சொல் அறாத்தூணி அவன் சிந்தையில் கட்டப்படும்’ என்பது நாஞ்சிலின் விளக்கம்.

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ

(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)

வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)

கல் கிடந்தது கானகம் தன்னிலே

(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)

நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே

(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)

சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)

சொல் என்றால் ஒரு சொல்லா, இரு சொல்லா? தமிழ் அகராதிக் கணக்கையும் தாண்டிய சொற்குவை. மூன்றாவது அத்தியாயம் நாழி முகவுமே நாநாழி. நாழி என்பது நெல் அளக்கும் அளவை. ’நாழி முகவாது நாநாழி என்பது தான் பழமொழி. எவ்வளவு அழுத்தி அளந்தாலும் நாழி, நான்கு நாழிகள் தானியத்தைத் தன்னுள் முகந்து கொள்ளாது’ என்று பழமொழியை விளக்குகிறார்.

தமிழ்க் காப்பியங்களின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்த்து கம்பராமாயணத்தில் சுமார் மூன்று லட்சம் சொற்கள் கம்பன் பயன் படுத்தியிருக்கிறான் என்கிறார் நாஞ்சில். (10368 பாடல்கள், ஒவ்வொன்றும் 4 அடிகள், அதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால் ஒவ்வொரு அடியிலும் 6 சீர்கள், சில ஓரசைச் சீர்கள், சில ஈரசைச் சீர்கள்). அவற்றில் திரும்பத் திரும்ப பயன்படுத்திய சொற்களைக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை லட்சம் சொற்கள் இருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு.

ஒரு வீரனின் முன் கிடக்கும் பல ஆயுதங்களில் எதைப் பயன் படுத்துவான் வீரன்? பகைவனின் சேண்மை அல்லது அண்மை, தான் நிற்கும் இடம், ஆயுதம் பயன்படுத்தும் வெளி, தனதாற்றல், பகை ஆற்றல் என எத்தனை தீர்மான்ங்கள். வீரனுக்குரிய அத்தனை முன் தீர்மான்ங்களும் கவிஞனுக்கு உண்டு. அதில் மாட்சி தெரிக்கும் தெய்வமாக்கவி எனில்? கவிச்சக்கரவர்த்தி எனில்? அவன் சொல் தேர்வு எங்ஙனம் இருக்கும்?” என்று நம்மைக் கேள்வி கேட்டு அவன் சொல் தேர்வின் வீச்சைப் புரிய வைக்கிறார். தூணியின் கொள்ளளவையும் மீறி சொற்கள் கிடக்கும் தூணி அவனுடையது. எனவே கம்பனின் காப்பியத்தில் நாழியும் முகவும் நாநாழி என்கிறார்

தமிழில் வழக்கொழிந்து ஆனால் மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்களைப் பட்டியலிடுகிறது ’மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்’ அத்தியாயம். ஒவ்வொரு சொல்லுக்கும் அது மலையாளத்தில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் வருகிறது, தமிழில் இன்று அதற்குப் பதிலாக எந்த சொல் இன்று புழக்கத்தில் உள்ளது என்று கூறுகிறார் நாஞ்சில். இந்தப் நூலில் அவர் எடுத்துக் காட்டும் அனைத்துச் சொற்களுக்கும் இது போல் ஒரு குறுங்கட்டுரை வரைந்திருக்கிறார். அங்கங்கே அவருக்கே உரிய அங்கதத்துடன் தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

உறக்கம் என்ற சொல்லைத் தமிழன் மறந்து தூங்கப் போய்விட்டான் என்று வருத்தப் படுகிறார். கிங்கரர்கள் கும்பகர்ணனை எழுப்பும் பாடலை

உறங்குகின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண் எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில் பிடித்த காலதூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

உதாரணமாகத் தரும் நாஞ்சில் ‘இந்தப் பாட்டுக்கும் கூட உரை வேண்டுமெனில், புத்தகத்தை மூடி வைத்து நீங்கள் உறங்கப் போகலாம்’ என்று வாசகனையும் எச்சரிக்கிறார். இது போன்ற நாஞ்சிலின் முத்திரைகள் நூல் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன. இந்த அத்தியாயத்தில் முடிவில் ’இப்படியே போய்க் கொண்டிருந்தால் மொத்தக் கம்பராமாயணமுமே மலையாள மூல மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் என்று இந்த நூலாசிரியன் நிறுவிவிட்டுப் போய்விடுவான்“ என்று அவர் கூறும் போது புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

சொல் காமுற்றற்று அத்தியாயத்தில் கம்பனில் தன்னை ஈர்த்த, தனக்கு நூதனம் என்று தோன்றிய சொற்களை விளக்குகிறார். தான் கம்பன் சொல் திறத்தை விரும்புவதையே (காமுறுவுதையே) சொல் காமுற்றற்று என்ற தலைப்பின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் நாஞ்சில்.

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று

கல்வி கற்காதவன் அவையில் சொல்ல விருப்பப் படுவது முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போன்றது என்பது வள்ளுவன் வாக்கு. இது தனக்கும் தெரியும் என்று கூறும் நாஞ்சில் இந்த இடத்தில் தனது தோதுக்கு ஏற்றாற் போல பொருள் கொள்கிறார்.

இசை ரசிப்பவர் குறுந்தகடுகள் சேகரிப்பது போன்றும் ஓவிய ரசிகர்கள் ஓவியம் சேகரிப்பது போன்றும் ஒரு படைப்பிக்க்கியவாதிக்கு சொற் சேகரம். ஆனால் அவன் பணி சேகரித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதில் முற்றுப் பெறுவதில்லை. அடுத்த கட்டமாக அவற்றைப் பயன்படுத்த முடிவது. பயன்படுத்தும் முனைப்பு இல்லாதவனுக்கு சொல் மோகமும் இருக்காது, சொல் யோகமும் இருக்காது’ என்று கூறும் நாஞ்சில் படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற் சுரங்கம் என்கிறார்.

நாஞ்சிலின் வாசகர்களுக்கு அவர் படைப்புகளில் உணவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தெரியும். இந்த நூலிலும் அவர் காளான் நம் நாட்டுத் தாவரமா என்று பேராசிரியர் பா.நமசிவாயத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டதைப் பகிர்கிறார். புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும், களவழி நாற்பது நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காளாம்பி என்பது காளான் என்று உரைக்கும் நாஞ்சில் கம்பனில் கிட்கிந்தா படலத்தில் ஆம்பியைக் கண்டடைகிறார். இன்றும் செட்டிநாட்டில் பூஞ்சை படிவதை ’ஆம்பிப் போவது’ என்று சொல்லுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

குண்டிகை (கமண்டலம் அல்லது குடுக்கை) என்ற சொல்லையும் நிறைவாக விளக்கிச் சொல்லுகிறார் நாஞ்சில். இது திருமழிசை ஆழ்வார் ஏழாம் நூற்றாண்டில் பாடிய நான்முகன் திருவந்தாதியில் வருகிறது என்று உரைத்து அதற்கு ஒரு குதர்க்க அர்த்தத்தையும் உரைக்கிறார். அதை இங்கு எழுதினால் சண்டை வந்துவிடும். நூலை வாங்கிப் படித்து நாஞ்சிலிடம் சண்டை போடுங்கள்.

பல சொற்களை நயம் பாராட்டிய ’சொல் காமுற்றற்று’ அத்தியாயத்திற்கு அடுத்து இரு சொற்களைப் பாராட்டும் ‘ஊழியும் ஆழியும்’. ஊழ் என்பதைக் கம்பன் ஊழ்வினை, முறைமை, பகை, முடிவு, ஊழிக்காலம் என்று பல அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளதைக் காட்டும் நாஞ்சில் ஊழி தொடர்பாகக் கம்பன் பயன்படுத்தியுள்ள 43 சொற்றொடர்களைப் பட்டியலிடுகிறார். ஊழ்வினைக்கு எடுத்துக் காட்டாகத் தசரதன் அரச பதவியைத் துறந்து இராமனை அரசாள வேண்டுவதாக அமைந்த பாடலைக் காட்டுகிறார்.

முன்னை ஊழ்வினைப் பயத்தினும், முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும், அரிதினும் பெற்றேன்;
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ?

பாடலில் தசரதனின் மனத்தை விளக்கும் நாஞ்சில் ‘அரச பாரம் துறந்து, மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க நினைத்த ஒரு பேரரசனின் துறவு மனம் இது. தயவு செய்து சமகால அரசியலோடு ஒப்பு நோக்காதீர்கள். இங்கு எவரும் தசரதனும் இல்லை, இராமனும் இலக்குவனும் பரதனும் சத்ருக்கனும் இல்லை’ என்று முடிக்கிறார். இது தான் நாஞ்சில்.

தமிழ் லெக்சிகன் ஆழி என்னும் சொல்லுக்கு 11 பொருள் தருகிறது. கம்பனோ 12 பொருள்களில் ஆழி பயன்படுத்துகிறான் என்று கூறும் நாஞ்சில் அவற்றில் சில பாடல்களை மேற்கோள்களோடு விளக்குகிறார். வாலி இறக்கும் முன் இராமனிடம் வரம் இரந்து நிற்கும் பாடல்

அனுமன் என்பவனை – ஆழி ஐய! – நின் செய்ய செங்கைத்
தனு என நினைமதி

கூறி இந்த வரிகளைத் தான் சிகரமாக நினைப்பதாக்க் கூறுகிறார் நாஞ்சில். சாவதற்குச் சில கணங்கள் முன்பு, தன்னைக் கொன்றவனிடம், தன்னைக் கொல்ல அனுப்பியவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுவது காப்பியத்தின் உச்சகணங்களில் ஒன்று.

அடுத்த அத்தியாயம் அம்பு என்னும் சொல்லுக்குக் கம்பன் உபயோகப்படுத்தும் சொற்கள். அம்பு, சோணை, கோல், கணை, சரம், வாளி, பகழி, என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றிற்கும் மேற்கோள் காட்டுகிறார்.

அடுத்து வழக்கொழிந்து போன உறவுச்சொற்கள். உம்பி (உன் தம்பி) நுந்தை (உன் தந்தை), உங்கை (உன் தங்கை), தவ்வை (தமக்கை, மூத்தவள்) போன்ற சில சொற்களை விளக்குகிறார். இவற்றில் தவ்வைக்கு எடுத்துக்காட்டியுள்ள பாடல் மிகச் சிறப்பான ஒன்று. பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்பதற்காக கைகேயி வீழ்ந்து கிடக்கும் காட்சி. இதற்குக் கம்பன் உதாரணம் “தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள், எப்படியும் அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று கருதி அயோத்தி வந்தடைந்த திருமகளின் தமக்கையாகிய மூதேவி போல கைகேயி கிடந்தாள்’.

’கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்திவந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை

இதற்கு நாட்டார் வழக்கிலிருக்கும் எளிய சொலவடையைக் காட்டுகிறார் நாஞ்சில் ‘சீதேவி போனாள், மூதேவி வந்தாள்’.

கம்பனின் மொழியாக்கங்கள் என்ற அடுத்த அத்தியாயத்தில் நாஞ்சில் களம் கட்டி ஆடுகிறார். கம்பனை வால்மீகியை மொழி பெயர்த்தவன் தானே என்று துச்சமாகப் பேசுபவர்களுக்குப் பதிலே இந்தப் பகுதி. ‘வடமொழியில் வான்மீகமும் வாசித்திராத, தமிழில் கம்பனும் கற்றிராத மூடன் தான் அவ்விதம் சொல்வான்’ என ஆரம்பத்திலேயே தன் கருத்தை நிறுவுகிறார். கம்பன் செய்தது மொழியாக்கம் என்றும் 10368 பாடல்களிலும் கம்பன் ஒரு கிரந்த எழுத்தைக்கூட பயன்படுத்தவில்லை என்றும் சொல்லுகிறார்.’கம்பனின் தமிழ்ப்பற்று வடமொழி துதி பாடிகளுக்குப் புரியாது. திராவிட இயக்கக் கனபாடிகளுக்கும் அர்த்தமாகாது’ என்று கம்பன் பக்கம் நின்று எல்லா பக்கமும் சாட்டை வீசுகிறார்.

எடுத்துக்காட்டாக நாகம் என்ற சொல்லைக் கையில் எடுக்கிறார். ‘நாகம் எனும் சொல் தமிழ்ச்சொல், அதே சமயம் வட சொல். கம்பன் பல பாடல்களில் நாகம் எனும் சொல்லை தென் சொல்லாகவும், வட சொல்லாகவும் ஆள்கிறார். அவருக்கு அதில் பேதமில்லை’ என்று கம்பனின் அம்பறாத்தூணியை குறுக்குபவர்களைச் சாடுகிறார் நாஞ்சில். கதாபாத்திரங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார். இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று பயன்படுத்தப்படும் ‘காண்டாயிட்டான்’ என்ற சொல்லுக்குத் தாவுகிறார். கடுப்பாகிவிட்டான் என்ற அர்த்தத்தைக் கேட்டபின், ஒருவேளை இது கம்பன் பயன்படுத்திய ‘கான்று’ ( கனல் வீசும் ) தானோ என்று கேட்டு நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.

அசைச் சொற்கள், தாமரைக்கு ஈடான சொற்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்கும் நாஞ்சில், ’கம்பனின் கலப்பை’ அத்தியாயத்தில் தன் பெயருக்கே வருகிறார். ‘நாஞ்சில்’ என்ற நிலப்பகுதி புறநானூற்றில் வருகிறது. ஆனால் அதன் பொருள் என்ன? கலித்தொகையில் இருந்து கலப்பை என்ற பொருள் கண்டடைகிறார். கம்பன் நாஞ்சிலை கலப்பையாகவும் போர்க்கருவியாகவும் பயன்படுத்துகிறான் என்கிறார். நாஞ்சில் நாடனுக்கும் இது பொருந்தும். கம்பனின் சொற்சுரங்கத்தைத் தோண்டி எடுக்கும் கலப்பையாகவும் இருக்கிறார், கம்பனை யாரும் தூற்றினால் போரிடும் போர்க்க்கருவியாகவும் இருக்கிறாரல்லவா நாஞ்சில்?

கம்பன் சேமித்த தகவல்கள் அத்தியாயத்தில் ‘புல்லிடை உகுத்த அமுது’ ஆயிற்று கம்பனின் கவித்திறம் என்று குறைபட்டுக் கொண்டு கம்பன் சேமித்து வைத்துள்ள பண்பாட்டுக் கூறுகளை விளக்குகிறார் நாஞ்சில். வாத்தியங்கள், மலர்கள், பறவைகள், ஆயுதங்கள் பற்றி எண்ணற்ற பாடல்களில் வரும் குறிப்புகளைக் காட்டிக் கம்பனில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

நாஞ்சிலின் சொல்லாய்வு நூல் பல்கலைகழகப்ங்கள் வெளியிடும் படிக்க முடியாத நூல் போன்றது இல்லை. கம்பனைத் தஞ்சாவூர் கோயில் கோபுரம் போல் பெருமை மிக்கப் பழம் பொருளாய்ப் புரியாமல் பார்த்து விட்டு நகருகிறவர்களைக் கூப்பிட்டு சில சிற்பங்களை, அதன் நுணுக்கங்களை, அழகை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சில் நாடன்.

’எம்மனோர்’ என்ற சொல்லும் கம்பன் உபயோகப்படுத்திய சொல் தான். எம்மைப் போன்றவர் என்று அர்த்தம். அதுவே இந்த நூலின் கடைசி அத்தியாயம். காப்பியத்தின் உச்ச தருணங்களில் கம்பன் இதை எம்மனோர் எப்படி விவரிப்பர் என்று கேட்கிறான். அந்தச் சொல்லைப் பற்றி விளக்கும் போது கம்பன் எம்மனோர் என்பது யாரை என்று கேட்கும் நாஞ்சில் தானே அதற்கு பதிலும் சொல்கிறார் ”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா? கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா? இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா?”

கம்பராமாயணம் படிக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் இந்த நூல். கம்பனைக் கற்றறிந்தவர்களுக்கு மேலும் சுவை கூடும். இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். கம்பராமாயணம் படிக்கத் தான் வேண்டுமா? படித்து என்ன ஆகப் போகிறது? தமிழ்ச்சுவையும், எதுகையும் இன்றைய அவசர உலகத்தில் தேவையா? நியாயமான கேள்வி தான். எதையும் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை தான்.

நம் கல்வி முறையில் செவ்வியல் ஆக்கங்களுக்கு இருக்கும் இடம் ஓரிரண்டு செய்யுட்கள், மிஞ்சிப் போனால் ஒரு கட்டுரை, அவ்வளவு தான். சங்கத்திலிருந்து ஆரம்பித்து இருபதாம் நூற்றாண்டு வரை நீளும் இலக்கியத்தை சில பக்கங்களுக்குள் சுருக்கி விட வேண்டியிருக்கிறது. மதிப்பெண் பெறுவதற்கு கம்பனைப் பற்றிக் கோனார் கூறியதை மனனம் செய்தால் போதும்.கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான கருவி என்பதால் அங்கு இந்தப் பேச்சே இல்லை. இளங்கலை தமிழ் படிப்பவர்களுக்கு மட்டுமே செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிமுகம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் நம் மொழியின் ஆற்றலை, நம் முன்னோர்கள் சாதனைகளை, அவை இன்றும் நீடித்திருப்பதற்கான காரணங்களை நமக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நம் கலாச்சார ஆளுமைகளுக்கு உள்ளது. அந்த விதத்தில் நாஞ்சில் செய்வது முக்கியமானதொரு செயல். பள்ளிக்குப் பின் நான் மீண்டும் கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்ததற்கு நாஞ்சிலே தூண்டுகோல். கம்பராமாயணம் மட்டுமல்லாது, சிற்றிலக்கியங்கள் பற்றியும் அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் எனக்குப் பாடமாய் அமைந்தவை.

இந்த நூலிலேயே நாஞ்சில் கூறுகிறார் “யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் படைப்பிலக்கியவாதியான் என் பணியே அல்ல எனத் தோன்றும். மீண்டும் யோசித்துப் பார்த்தால் இவற்றை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் எனத் தோன்றும்”. முற்றிலும் உண்மையான கூற்று. கண் முன்னே கிடக்கும் ரத்தினங்களை விட்டுவிட்டு கூழாங்கற்கள் தேடும் தேசத்தில் இவ்வகையான பணிகள் செய்வது சோர்வூட்டக்கூடியது தான். ஆனால் அவரது இந்த முயற்சியால் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.

தான் கம்பனைக் கற்றுச் சுவைத்துத் தோய்ந்த அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே கம்பனின் அம்பறாத்தூணி நூல். நாஞ்சில் நாடன் கம்பன் மேல் கொண்ட காதலால் உருவான நூல் இது. கிட்கிந்தா காண்டத்தில் காதலன் என்ற சொல்லை மகன் என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறான் கம்பன். வாலியின் மகன் அங்கதனை “வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை” என்று வருணிக்கிறான். அதே போல் நாஞ்சில் நாடனைக் கம்பன் காதலன் என்றே அழைக்கலாம்.