குறுங்கதை

‘நான் எப்போ சாவேன்?’ – தேடன்

தேடன்

‘நான் எப்போ சாவேன்?’ என்று அடிக்கடி கேட்பாள் அவள், லீலா. அவளுக்கு வாழ்வின் மீது அவ்வளவு வெறுப்பு என்பதை விட சாவின் மீது ஏதோ பிரியம் என்றே சொல்லலாம். ஏனேனில் அவள் வாழ்க்கை அவ்வளவு மோசமாக ஒன்றுமில்லை.

லீலாவிடம் எதற்காக நீ இப்படி கேட்கிறாய் என்றால் ‘எனக்கு லைஃப் ல ஒரு திருப்தி வரவேயில்ல‌. கடவுள் கிட்ட போயிட்டா நானும் சந்தோஷமா இருப்பேன்ல. அதுல தான் எதோ நிறைவு இருக்க மாதிரி தோணுது. இங்க வாழறது எதுக்குனே தெரியல.’ என்று நீட்டி முழக்கி தத்துவம் பேசுவாள். அதில் உண்மையிருந்தாலும் சாவை பற்றியே யோசிப்பது ஒரு நோய் என்பதை அவள் அறியவில்லை.

லீலாவின் வீட்டின் அருகே ஒரு சிறுமிக்கு திடீரென புற்றுநோய் என்று தெரியவந்தது. அவளுக்கு அந்த சிறுமியோடு சிறிது நாள் பழக்கமே என்றாலும் லீலாவோடு அந்த சிறுமி மிக நெருங்கி விட்டிருந்தாள். சிறுமிக்கு புற்றுநோய் என்று தெரியவந்தது முதல் லீலாவுக்கு தூக்கமே வரவில்லை. கண்களை மூடினாலும் திறந்தாலும் அந்த சிறுமி கீமோதெரபியால் முடி கொட்டி மெலிந்து சோர்ந்து விட்டிருந்தவள், ஆட்டோவில் இருந்து இறங்கி வருகையில் மூச்சை இழுத்து இழுத்து விட்டபடி லீலாவை பார்த்து சிரித்த அந்த தருணமே ஓடிக்கொண்டேயிருந்தது. எப்படியும் அந்த சிறுமி இன்னும் சில மாதத்தில் இறப்பது உறுதி என்று சொல்லிவிட்டனர்.

லீலா அந்த சிறுமியை பார்க்கும் தைரியம் அற்றவளாய் இருந்தாள். அந்த சிறுமியை எல்லோரும் வந்து பார்த்து விட்டு சென்றனர். லீலாவின் வீட்டிலிருந்தும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர். லீலாவிடம் ‘கடைசியா பாத்துடு. உன்னதான் அவ கேட்டா. அப்பறம் பாக்கமுடயலனு வருத்த பட்டு ப்ரயோசனம் இல்ல’ என்று அம்மா சொன்னாள். லீலாவால் அந்த சிறுமியை பார்க்க போகும் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாது அழத் தொடங்கிவிட்டாள். அழுகை நின்றதும் திரும்ப அந்த சிறுமியின் நினைவு வர அவளுக்குள் செய்வதறியா கோபம் பொங்கியது.

மறுநாள் லீலா கண்விழித்து பார்க்கையில் அவள் முன் அந்த சிறுமி நிற்கிறாள். ஓடியாடி சிரித்து குதித்த அந்த சிறுமி மெலிந்து நொடிந்து மூச்சு விட சிரமப்பட்டு மொட்டை தலையோடு அவள் முன் நிற்கிறாள். லீலா வின் கண்களோடு சிறுமியின் கண்கள் மோதுகின்றன. எல்லாமே சூன்யமானது அந்த சிறுமி கண்களில் தெரிந்த சிரிப்பால்.

லீலாவிடம் ‘நான் எப்போ சாவேன்க்கா,’ என்கிறது அந்த மழலை மாறாத குரல். லீலாவின் உடலெங்கும் ஆயிரமாயிரம் அதிர்வலைகள். அந்த கேள்வி, தான் கேட்கும் அதே கேள்வி. மீண்டும் மீண்டும் கேட்கிறாள் அந்த சிறுமி அதே கேள்வியை.

‘நான் எப்போ க்கா சாவேன் சொல்லுக்கா’ அதே மழலை குரல் துக்கத்தின் சாயலில் உள்ளிறங்கி ஒலிக்கிறது.

லீலாவின் குரல் வரவேயில்லை அவள் உதடுகள் செய்வதறியாது மேலும் கீழும் அசைந்தன. என்ன சொல்வது, என்ன சொல்லி என்னவாகப் போகிறது. சாவு நிம்மதி தான் ஆனால் பிரிவு கொடியது; வாழ்க்கையின் மிக பெரும் வன்முறை. அதற்கு மேல் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அந்த சிறுமி சிரித்து கொண்டே நின்றிருந்தாள்.

‘அய்யோ,’ என்று ஒரு பெருங்கூச்சல் அந்த சிறுமியின் வீட்டிலிருந்து. லீலா தூக்கத்திலிருந்து விழிக்க லீலாவின் அம்மா சொன்னாள் ‘குழந்த போயிட்டா’.

குறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்

காலத்துகள் 

‘நீ பேசறது உன் எழுத்தை விட கொஞ்சம் பெட்டரா இருக்கும், மாஸ்க்கால மூடிட்டு பேசினா அதுவும் ஒண்ணும் புரியாத மாதிரி ஆயிடுது’ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. பெருந்தொற்று காலத்திலும், இலக்கியம் குறித்தும்,  நான் எழுதவதைப் பற்றியும் அவருடன் உரையாடுவதை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று அவர் வீட்டிற்கு வந்த காரணம் இலக்கியம் சம்பந்தப்பட்டது மட்டுமேயல்ல. கடந்த மூன்று நான்கு மாதங்களாக நான் எதையும் புதிதாக எழுதவில்லை. ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’ என்று சொல்ல முடியாது. நான் எழுத்தாளனா என்ற தன் சந்தேகத்தை வெளிப்படையாக முற்றுப்புள்ளி கேட்பார், நான் அதை உள்ளூர என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. இன்று மீண்டும் எழுதத் தோன்றியது.

‘இப்ப சரியா இருக்கா ஸார்’

‘ஏன்யா கத்தற, போன்ல பேசும் போது தான் சில பேர்  இப்படி சத்தம்  போடுவாங்க, நீ எதுத்தாப்ல தான ஒக்காந்திருக்க’

‘சாரி ஸார். ஒரு சின்ன குழப்பம், அதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்’

‘..’

‘ரொம்ப நாளைக்குப்பறம் இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன் ஸார்’

‘..’ ‘எதுக்கு’ என்று பெரியவர் வெளிப்படையாக கேட்காதது, நல்ல ஆரம்பம், அவர் மனநிலை மாறுவதற்கு சொல்லி விட வேண்டும்.

‘முதல் வரி  எழுதினேன் ஸார், நான் சொல்றது நம்ப முடியாத மாதிரி இருக்கும், அந்த நொடி போன் வந்தது ஸார். அதுக்கப்பறம் நாள் முழுக்க  கிட்டத்தட்ட மூணு நாலு மணி நேரம் போன்லையே இருந்திருக்கேன். தொடர்ச்சியா கால்ஸ். பர்ஸ்ட் லைனுக்கு பிறகு எதையுமே எழுத முடியலை’

‘என்ன அந்த வரி’

உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம்.’

குட். நான் கூட நீ என்னமோ ‘இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ், இட் வாஸ் தி வர்ஸ்ட் ஆப் டைம்ஸ்’ மாதிரி ஏதோ எழுதிட்டியோன்னு நினைச்சுட்டேன். ‘

‘அந்த வரி என்னவாயிருந்த என்ன ஸார், கண்டின்யு பண்ண முடியலையே’

‘சரி, இப்ப  என் கிட்ட வந்து பேசிட்டிருக்கிறதுக்கு தொடர்ந்து எழுதியிருக்கலாமே. நானும் ஈவ்னிங்கை உருப்படியா ஸ்பெண்ட் பண்ணிருப்பேன்’ பெரியவரின் இத்தகைய பேச்சுக்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

‘நாள் பூரா அடுத்து எழுத முடியாம போனது தான் எனக்கு குழப்பமா இருக்கு ஸார். இதுல ஏதாவது குறியீடா இருக்குமோ?’

‘குறியீடு எங்க திடீர்னு வருது’

‘இலக்கிய கடவுள்கள் இந்தக் கதையை நீ எழுத வேண்டாம்னு சொல்றாங்களோ’

‘சிம்பாலிக்கா சொல்றாங்களோன்னு கேக்கற? இங்க சிம்பாலிக் யூஸ் பண்ற இடத்தில், குறியீடு பொருந்துமா?’

‘..’

‘குறியீடுலாம், நல்ல மொழி வளம், சிந்தனை உள்ளவங்க உபயோகிக்கிற வார்த்தை. நீ நேரடியா எழுதறேன் பேர்வழின்னு அதையே கந்தரகோலம்  பண்ற ஆளு, உனக்கு எதுக்கு’

‘சரி, குறியீடு வேண்டாம். சகுனம்னு வெச்சுக்குங்க. கதையை ஆரம்பிக்கும் போதே தடங்கல் வருதே, இலக்கிய தெய்வங்கள் தரும் கெட்ட சகுனமா எடுத்துக்கலாமா’

‘உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா’

‘எனக்கு பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஸார் , ஆனா பயமாயிருக்கே’

‘அதானே, ஓரு ரைட்டர் நேம் ட்ராப்பிங் பண்ணாம, அவரை க்வோட் பண்ணாம  பத்து நிமிஷம் கூட உன்னால பேச முடியாதே’

‘பேய், பிசாசு குறித்த தன்னுடைய நம்பிக்கை பற்றி இப்படி ஓரு ரைட்டர் சொன்னார்னோ, அவரை பெயரையோ நான்  குறிப்பிடலையே ஸார், நீங்க தான் இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ்ன்னு இன்னொருத்தரை க்வோட் செஞ்சீங்க’

‘ஆனா அவர் தன் நம்பிக்கை குறித்து குறிப்பிட்டதையே தானே நீயும் சொன்ன’

‘நானும் அவர் மரபுல வந்தவன்னு….’  சொல்ல வந்ததை நிறுத்தினேன்

‘…’

பெரியவர் எதுவும் பேசவில்லையென்றாலும் , பல வருடங்களாக அவரிடம் இலக்கிய வசவு வாங்கிக்கொண்டிருக்கும் எனக்கு அவருடைய  மனவோட்டம்  புரிந்தது. இலக்கிய முன்னோடிகளின் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர் முற்றுப்புள்ளி, அதனாலேயே சாதாரணமாக ஏதாவது கூறினாலும், அவர்களை அது சிறுமைப்படுத்துவதாக  எண்ணிக்கொண்டு பொரிந்து தள்ளிவிடுவார். அதற்கு இடம் தரக் கூடாது.

‘நான் சொன்னதை நீங்க எப்பவும் போல விபரீதமாக புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க ஸார். அவர் மரபுல வந்தவன்னு, என் எழுத்தின் தரத்தை வெச்சோ, என்னை அவருடன் ஒப்பிட்டோ  சொல்லலை, அமானுஷ்யம் குறித்த அவர் நம்பிக்கை வழி வரேன்னு தான் சொல்றேன்.’

பெரியவரின் இறுக்கம் இளகியது.

‘குறியீடு, சகுனம் பத்திலாம் நீ கவலைப் படாத. நான் பல வருஷமா  உன்கிட்ட நேரடியாவே மூர்க்கத்தனமா  உன் எழுத்து மோசம்னு சொல்லிட்டு வரேன், அதையே நீ கண்டுக்காம எழுத்திட்டிருக்க. ஸோ நீ எழுத ஆரம்பிக்கும் போது, பூனையென்ன, புலி, பாம்பை நடுல சகுனமா விட்டால்  கூட நீ  மாறப் போறதில்லைன்னு  லிடரரி காட்ஸுக்கு  தெரியாதா என்ன. நீ வழக்கம் போல, எப்பவும் கொட்டற எழுத்துக்  குப்பையை கொட்டு’

‘ ‘ப’னாக்கு ‘ப’னான்னு நீங்க பாம்பு, புலின்னு சொல்லியிருந்தாக் கூட, எனக்கு அதுலயும் ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ஸார். பாம்புகள் மேல் எனக்கிருக்கிற சரிசமான ஈர்ப்பும், பீதியும் பற்றியும், என் கனவுகளில் அவை அடிக்கடி வருவதும் உங்களுக்கு தெரியும். இன்னிக்கு எழுத ஆரம்பிச்ச கதையுடன் சர்ப்பம், எழுத்து, இரண்டையும் இணைக்கும் உளவியல் சிக்கல்னு இன்னொரு புனைவும் எழுதிடலாம்னு நினைக்கிறேன் ஸார். முடிஞ்சா இன்றைய தடங்கல்களையே கூட கதையா மாத்திடலாம். மூன்று புனைவுகள். வாட் டூ யு திங்க்?’

‘..’

‘ஸார்’

‘என்னை ஏன் கேக்கற’

‘என் ஐடியா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு…’

‘நீ எப்படியும் எழுதத் தான் போற. ஒரேயடியா மூன்று கதைகளை நான் படிச்சுத் தொலைக்கணும். அதனால வரும் பாதிப்பை தடுக்க ஏதாவது தடுப்பூசியை இலக்கிய கடவுள்கள் தருவாங்களா, அவங்க கிட்டகூட உன் எழுத்திலிருந்து காப்பாற்றும் மருந்து இருக்காதே’

 

பிற முற்றுப்புள்ளி கதைகள்

போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

குற்றமும் தண்டனையும் – காலத்துகள் சிறுகதை

முடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை

காலத்துகள்

போர்-பி வகுப்பறையில் ஹீமேன் தொலைக்காட்சி தொடரின் நேற்றைய அத்தியாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனை, மேரி மார்க்கெட் மிஸ் அருகில் அழைக்கிறார். மேரி மார்க்கரெட் என்பதை மேரி மார்க்கெட் என்று அழைப்பதில்தான் பயல்களுக்கு குஷி. உள்ளங்கை தரையை நோக்கி இருக்குமாறு கையை நீட்டி விரல் முட்டியில் ஸ்கேலால் அடிவாங்கிவிட்டு தன் இருக்கைக்குச் செல்ல முயல்பவனை நிறுத்தி, ‘கோ தேர் அண்ட் ஸிட்,’ என்கிறார் மார்க்கெட் மிஸ். ‘மிஸ் மிஸ்’ என்று கெஞ்சுபவன் அவர் முன்னால் மீண்டும் கையை நீட்டுகிறான். பின்னாலிலிருந்து பயல்களின் கிண்டல் சிரிப்பொலி. ‘கோ தேர்’ என்று கையை ஓங்கிக் கொண்டு மிஸ் வர தளர்ந்த நடையில் அந்த பெஞ்ச்சிற்குச் சென்று அமர்கிறான்.

மூன்று பேர் அமரக் கூடிய பெஞ்ச்சின் இடது முனையில் இவன், அடுத்து சந்திரா, அதற்கடுத்து ப்ரியா. வகுப்பு நடக்கையில் பேசி மாட்டிக் கொண்டால் பெண்கள் அருகில் அமர வைக்கப்படுவது அவ்வப்போது தரப்படும் தண்டனைதான். இனி அடுத்த பீரியட் முழுதும் பயல்கள் கிண்டல் செய்து படுத்தி எடுப்பார்கள். யாராவது ஒருவன் மனமிரங்கி ஆட்காட்டி விரலை வளைத்து, நடு விரலை அதனுடன் இணைத்து இவன்த் தோளை தொட்டு பழம் விடும் வரை ‘ஏய் கிட்டக்க வராத’, ‘தொடாத’ தான். மார்க்கெட் மிஸ் இன்னும் இரண்டு மூன்று முறைகூட அடித்திருக்கலாம்.

முடிந்தவரை சந்திராவிடமிருது தள்ளி இருப்பதற்காக பெஞ்ச் முனையில் அமர முயன்றாலும், இரண்டு பேர் மட்டுமே சௌகரியமாக அமரக்கூடிய இடத்தில் இடைவெளி என்பது சாத்தியம் இல்லை. நேரே போர்ட்டை மட்டுமே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான், மிஸ் ஏதோ சொல்கிறார். அடுத்த பீரியடிற்குப் பிறகு லஞ்ச் டைம். அதற்குள் பயல்களைச் சரிகட்டி விடவேண்டும். இதவரை நுகர்திராத மணமொன்றை உணர்பவன் தலை தாழ்த்தி சந்திராவைப் பார்க்கிறான். அவள் உடலிலிருந்தோ, பள்ளிச் சீருடையிலிருந்தோதான் அந்த வாசம் வருகிறது. வீட்டில் பண்டிகை நாட்களில்போது சாமி படங்களுக்கு மாட்டப்படும் பூச்சரங்கள் அடுத்த நாள் எடுக்கப்படும்போது ஒவ்வாமையையும், கிளர்ச்சியையும் ஒரு சேரத் தரும் மணத்தை போன்ற அடர்த்தியான வாசம். ஒரே ஒரு முறை அத்தர் தெளித்துக் கொண்டபோது நுகர்ந்த மணமும் இப்படித்தான் இருந்ததோ?

மீண்டும் அவள் பக்கம் திரும்புகிறான். வகுப்பில் இருக்கும் பெரும்பாலான பயல்களைவிட உயரம், உறுதியான உடல்வாகு சந்திராவிற்கு. உடலை அசைத்துக் கொள்கிறான், மனமும் நிலையழிகிறது. இடது கால் முழுதும் பெஞ்சிற்கு வெளியே இருக்குமாறு விலகுபவன் மீண்டும் அதை உள்ளிழுத்துக் கொள்கிறான். அடுத்த தன்னிச்சையான உடலசைவில் அவனுடைய உடலின் வலது பாகம் சந்திராவின் இடது பாகத்தை தொடுகிறது. இன்னும் நெருங்கி அவனைச் சூழும் அவளின் அடர்மணம். ஸ்கர்ட்டைத் துளைத்து வரும் அவள் கால்களின் வெப்பம், ஷார்ட்ஸ் அணிந்த இவன் தொடையைச் சுடுகிறது. வலது காலை மட்டும் சற்று நகர்த்த இருவரின் தொடைப் பகுதிகள் சமநிலையில் இணைகின்றன. சந்திரா, மார்க்கெட் மிஸ் சொல்வதை நோட்டில் குறித்துக் கொண்டிருக்கிறாள். ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறான். ‘போர்-ஏ’ க்ளாஸ் பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஓடுகிறார்கள். முதல் முறையாக பார்ப்பது போல் உள்ளது. பார்வையை விலக்குகிறான். அவஸ்தை. இது தவறில்லையா? ‘அவர் பாதர் இன் ஹெவன்’. மூச்சை உள்ளிழுத்து சந்திராவின் மணத்தை உடல் முழுதும் நிரப்புகிறான்.

oOo

ட்வெல்வ்-பியில் சதாசிவம் ஸார் வழக்கம் போல் கீச்சுக் குரலில் ஆங்கில பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதேச்சையாக திரும்புவது போல் உமா அமர்ந்திருக்கும் பக்கம் பார்க்கிறான். ஜூலை மாத மதியம் மூன்றரை மணி வெயில் ஜன்னல் வழியாக பெண்கள் பகுதியை நிரப்பியிருக்கிறது. உமாவின் கன்னத்தில் வியர்வை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்குள் ‘எதேச்சையாக’ பார்ப்பதற்கான நேரம் முடிந்த உணர்வு ஏற்பட ஸார் பக்கம் திரும்புகிறான். இனி சிறிது நேரம் கழித்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் எதேச்சை. எண்ணை வழியும் முகத்திலும் உமா துலக்கமாகத்தான் இருக்கிறாள். அவளுக்குப் பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும், சற்றே சதைப்பற்றான உதடுகளையுடைய மீராவிற்கு ஒருபோதும் வியர்க்காது போல.

பெண்கள் வரிசையில் கடைசி பெஞ்ச்சில் சந்திரா. இத்தனை வருடங்கள் இவனுடன்தான் படித்து வருகிறாள் என்றாலும் கண்ணில் படுவதென்பதோ இது போல் எதேச்சையாக எப்போதேனும்தான். தினமும் அட்டென்டென்ஸ் எடுக்கப்படும்போதுகூட அவள் மனதில் பதிவதில்லை. பெண்களுக்கு அருகில் அமர வைக்கப்படும் தண்டனையை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்தியாயிற்று. பயல்கள் அதற்கு அடுத்தான வகுப்புக்களில் அதை தண்டனையாக பாவிக்க மாட்டார்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்திருக்கிறார்கள். பி.டி. பீரியட்டில் ஷார்ட்ஸ் அணிந்து பங்கேற்பதும் ஐந்தாவதுடன் முடிந்தாயிற்று.

சந்திராவிற்கு அன்று இவன் அவளருகில் அமர்ந்திருந்தது நினைவில் இருக்குமா? அன்று அனுபவித்த அவஸ்தையான கிளர்ச்சியை சந்துருவுடன்கூட பகிர்ந்து கொண்டதில்லை. ஆறாவது படிக்கும் போது தான் உமாவின் இருப்பை உணர ஆரம்பித்தான், பின் மீரா, கடந்த இரு வருடங்களாக அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் சுந்தரி அக்கா பற்றி குற்றவுணர்வு ஏற்படுத்தும் எண்ணங்கள். ஆனால் அந்த அரை மணி நேரத்திற்குப் பின் ஒரு முறைகூட சந்திராவிடம் ஈர்ப்பு ஏன் ஏற்பட்டதில்லை என்பதை புரிந்து கொள்ள முயன்று, அது இயலாமல் தலையசைத்துக் கொள்கிறான்.

oOo

நிச்சயதார்த்தம் முடிந்தபின் வனிதாவுடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறான். காரின் பின்னிருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருக்க, அவளுடன் ஒட்டியபடி மெல்லிய குரலில் உரையாடல். ‘நிவியா’ உபயோகிக்கிறாள். அசையும்போது அவள் உடுத்தியிருக்கும் பட்டுப் புடவையின் சரசரப்பில் உடல் கிளர்கிறது. யாரையும் முத்தமிட்டதுகூட கிடையாது, இன்னொருவரின் எச்சில் ருசி, மணம் எப்படி இருக்கும். வாட ஆரம்பித்திருக்கும், வனிதா சூடியிருக்கும், பூச்சரத்தின் மணம். வண்டி குலுங்க வனிதாவின் உடல் இவன் மீது சாய தொடைகள் ஒட்டுகின்றன. உமாவின் வியர்வை வழிந்த முகத்திலும், மீராவின் சதைப்பற்றான உதடுகளிலும், காரக் குழம்பு கிண்ணத்தை நீட்டும் சுந்தரி அக்காவிடமிருந்து வரும் பூண்டு, மசாலா பொடிகளின் மணத்திலும், இப்போது வனிதாவின் ‘நிவியா’ வாசத்திலும், தன் இருப்பை உணர்த்தியபடி இருக்கும் சந்திராவின் மணம். இதுவரையிலான பாலுணர்வுத் தருணங்களின் ஒவ்வொரு கணத்துடனும் பிணைந்திருக்கும், இனியும் பிணைந்திருக்கப்போகும், போர்-பியின் அந்தச் சில முடிவிலி நிமிடங்களை தன்னுள் நிகழ்த்திப் பார்ப்பவன், சந்திரா மீது இறுதி வரை எந்த ஈர்ப்பும் உருவாகாததின் முரண்நகையைப் புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சி எப்போதும் போல் தோல்வியடைகிறது. “என்ன சிரிக்கறீங்க?” என்று வனிதா கேட்பதற்கு பதில் சொல்லாமல் தலையசைத்துவிட்டு, கார் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தி, “அப்ஸர்ட்” என்று முணுமுணுத்துக் கொள்கிறான்.

ஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை

இஸ்ஸத்

கடந்த சில நாட்களாக அவனிடம் பணம் என்று இருந்ததே அந்த 20 ரூபாய் மாத்திரம்தான். அந்த நோட்டில் உள்ள படத்தில் இருக்கும் இரு மீனவர்கள் மீது எவரோ பீடி பற்ற வைத்தபோது விழுந்த தீப்பொறியினால் ஏற்பட்ட ஓட்டையும், அதன் அச்சிடப்பட்ட திகதி 1995.11.16 என்பதுவும், அதன் ஓரங்களில் ஆட்டினுடையதோ அல்லது கோழியினதோ குருதி தோய்ந்து இருந்ததையும் தூக்கத்திலெழுப்பி கேட்டாலும் விபரமாக சொல்லுமளவு அந்த நோட்டோடு அவ்வளவு ஐக்கியமாயிருந்தான். அவன் அதை செலவு செய்யாமல் இருப்பதற்கு காரணம்: தன்னிடமும் பணம் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மாத்திரமே.

பல நாட்கள் அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது பணக்கார தோரணை கருதி அதனைக் கொண்டு தனது பசியை போக்கிக் கொள்ளாமலேயே இருந்தவனுக்கு இன்று யாரோ ஒரு புண்ணியவானினால் புரியாணி பார்சல் கிடைத்துவிட்டது. அதனை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை கட்டுக்கு சென்று குளித்துவிட்டு தனது பையினுள் இருந்த ஆடைகளுள் எது நல்ல ஆடையோ அதை மாற்றிக்கொண்டு அவ்விடத்திலேயே தனது உணவு பொட்டலத்தை ஆசையாக பிரித்து வயிறு முட்ட உண்டு முடித்தான். என்னதான் புரியாணியாக இருந்தாலும் அதை உண்ட பிற்பாடு பீடா ஒன்று போட்டால்தான் அது இராஜ விருந்தாகும் என்றபடி தனது 20 ரூபாயை செலவழிக்க முடிவெடுத்தவனாய் தனது தோல் பைக்குள் இருந்த பணத்தை எடுத்து காற் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு சற்று தொலைவிலிருந்த பீடா கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய்ச் சேர்ந்தான்.

பீடா கடை முன்பாக நின்று கொண்டு வயிறு முட்ட சாப்பிட்டதனால் வந்த ஏப்பத்தை விட்டபடியே பணத்தை எடுப்பதற்காக வேண்டி தனது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டவனுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் அப்போதிருந்த அவனது இரு நண்பர்களுடன் ஹோட்டலில் ரீ குடித்துவிட்டு ஹோட்டலின் முன்பாக சாய்ந்து கிடந்த ஆலை மரத்தின் தடித்த தண்டின் மீது உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை அவனது தொடையில் தற்காலிக தஞ்சமடைந்ததினால் ஏற்பட்ட வடுவை வருடும் பாக்கியம் மாத்திரமே கிடைத்தது.

அவன் தனது பைக்கற்றுக்குள் கையை விட்டு துலாவியபடியே தனது பணம் எங்கோ விழுந்து விட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டே கையை பைக்கற்றின் அடி ஆழம் வரை விட்டு ஓட்டையான காற்சட்டை பைக்கற்றை புரட்டி வெளியே எடுத்து அதன் இடுக்குகளில் இருந்த மண்ணையும், தூசிகளையும் துப்பரவு செய்தபடி எதுவித சலனமுமின்றி தனது ஏமாற்றத்தை சிறு புன்னகையால் தவிர்த்தவனாய் நடக்கலானான்.

அவனின் புன்னகையிலும், தொய்வற்ற நடையிலும், தான் இன்னும் எவ்வளவு இழப்பையும் தாங்குவேன் என்றும், இன்னுமொரு புதிய அல்லது பழைய பதிப்பையுடைய 20 ரூபாய் நோட்டு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையும் வலிகளும் பல ஏமாற்றங்களும் கண்ட முதிர்ச்சியும் இல்லாமலில்லை.

 

தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி – நரோபா குறுங்கதை

நரோபா

பூமியின் நிழல் இருளாக கவிந்த, துணை வரும் நிழலும்கூட கைவிட்டு அகன்ற அந்தியின் காரிருளில் தனித்து நடக்கையில், அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.  உடலற்றவர்கள். அல்லது உடலை புதைத்து வைத்துக்கொண்டு தங்கள் நிழலை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியவர்கள்.

நிழல்களுக்கு குரல் உண்டு. ‘உன் தந்தையைக் கொல்’, ரகசிய கிசுகிசுப்பாய் காதருகே முணுமுணுத்தவன் உடல் மெலிந்தவனாக இருக்க வேண்டும். ரகசியங்களை மறுப்பது அத்தனை எளிதில்லை. அதற்கு நாம் வேறோர் ரகசியத்தை அறிந்திருக்க வேண்டும். ‘தந்தையைக் கொல்ல ஆர்வமில்லை’ என்று முணுமுணுத்தேன்.

அழுகிய பழங்களும், பொறியில் சிக்கி  மரித்த எலியும், தூமைத் துணிகளும், இன்னும் பல நூற்றாண்டு கால குப்பைகளும் குமையும், வெள்ளியாக இருளில் மினுங்கிய, நகராட்சியின் தகர குப்பைத் தொட்டிக்கு என்னை இட்டுச் சென்றார்கள்.

உள்ளிருந்து கிளறிக் குடைந்து தந்தையின் வயிற்றில் சொருகி குடலைச் சரிக்க எனக்கொரு  பனிக்கத்தியை உதிரம் காய்ந்து பழுப்பேறிய துணியில் பொதித்துக் கொடுத்தான், ஊமையன் ஒருவன்.

எரியாத மின்விளக்கு கம்பத்தின் பாதி உயரத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவன் நெடியவனாக இருக்க வேண்டும். “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோடான கோடி தந்தைகளின் குருதி குடித்த கத்தி’, என்றவனின் குரலில் உறுதி தொனித்தது.

உறுதியான குரல்கள் ஐயமற்றவை. அல்லது ஐயத்தை மறைக்கக் கற்றவை. ஆகவே ஆபத்தானவை. நாம் அவை முன் சென்று மண்டியிட்டு எமை வழி நடத்துக, எனக் கோரத் தகுந்த குரல்கள். எண்ணெய் பிசுக்காக அக்குரல் மனதை மூடி பரவிப் படியச் செய்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பழக்கம். கீழ்படிந்துவிட வேண்டியதுதான். ஏதோ ஒன்று பரப்பைக் கீறிக் கிழித்து வெளிவந்தது. உறுதியான குரலில் அவனிடம், “எப்படியும் தந்தைதான் இறந்து விடுவாரே” என்றேன்

முழங்காலுக்குக் கீழேயொரு நகைப்பொலி- ஏறத்தாழ கழுதைப்புலியின் கனைப்பை ஒத்தது. “ஆம். ஆனாலும் அது நம் கையால்தான் நிகழ வேண்டும்,” என்று சொல்லிச் சிரித்தான் சித்திரக் குள்ளன்.

பகடி கல்லறையில் அறையப்படும் கடைசி ஆணி. நாம் தனித்திருக்கையில் மட்டும் வெளிப்படும் நச்சுப்பல். பகடி நம்மை அச்சுறுத்துவது. தனிமைப்படுத்துவது. பகைக்கு பணியாதவரும் பகடிக்கு பணிவார். வியர்த்திருந்தது. லேசாகச் சிரித்துக்கொண்டே அவனிடம் சொன்னேன்.

‘மேலும்… நாளை நானுமொரு தந்தையாவேனே’

சொல்லி முடித்த நொடியில் மூக்கை உரசியபடி ஆக்ரோஷமாகக் கத்தினான் ஒரு தடியன், “ஆம். அப்போது உன் குடலும் சரிக்கப்படும்”

“கண்ணே, உன் தந்தையை நீ கொல்லத்தான் வேண்டும், எனக்காகவேணும், நான் பட்ட துயரங்களை நீ அறிவாய்” எனக் கெஞ்சியது ஒரு பெண் குரல். உடல் விதிர்த்தது. அது அன்னையின் குரல். ஒருவேளை உரக்க ஆணையிட்டிருந்தால் அதையே தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்தக் குரல் இரைந்து கேட்கிறது. அறுக்க முடியாத பிணைப்பு மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்ள செய்கிறது. கண்களில் பெருகிய நீர் கன்னத்தில் உருண்டு நிலத்தை அடைந்தது. கத்தியை இறுகப் பற்றினேன். விம்மியுடைந்த குரலில், “உன் வஞ்சத்தை நான் சுமக்கிறேன். ஆனாலும் எதன் பொருட்டும் என்னால் அவரைக் கொல்ல இயலாது”, என்றேன்.

என் கையில் கனத்து குளிர்ந்த பனிக்கத்தியை மீண்டும் வாய் பிளந்து கிடக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தேன். பெருமூச்சுகளும், உச்சு கொட்டல்களும், முனகல்களும் எழுந்தன. நீள் கையன் தொட்டியில் துழாவிக் கொண்டிருந்தான். அதற்குள் அது எங்கோ ஆழத்தில் சென்று மறைந்திருக்க வேண்டும்.

“அட…முட்டாளே” வாய்விட்டுக் கூவினாள் அந்தப் பெண்..

சிற்றகலாக மஞ்சள் ஒளியுமிழும் ஒற்றை குண்டுவிளக்கை சூடிய என் அறையை கனவு கண்டபடி அங்கிருந்து விலகினேன்.

எனை எப்போதும் காக்கும் அவர்கள் அறியாத ரகசியம் ஒன்றுண்டு.  தந்தையைக் குத்திக் கிழிக்கும் ஆவேசம் புகும் ஒவ்வொரு முறையும், தந்தையின் ஆசி இவ்வாழ்வு என்றெண்ணிக் கொள்வேன். அப்போது நீலச் சுவற்றில் ஆடும் மரச்சட்டத்தின் வெற்றுக் கண்ணாடியில் தந்தையின் உருவத்திற்கு மேலும் ஒரு பிக்சல்  கூடித் துலங்குகிறது