சிறுகதைப் போட்டி 2015

வண்ணத்து பூச்சிகளின் கோயில்- ஆ. ஜீவானந்தம்

(சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். அவசரமும் பதைபதைப்பும் கூடிய அவளது உடலசைவுகள் வினோதமாகத் தெரிந்தன. இப்போதே நேரம் ஆகிவிட்டது. இதுவரை பஸ் வரும் சப்தம் ஏதும் கேட்காமல் இருப்பதே ஆச்சரியம். ஈச்சம்பாறையின் மேலேறி நின்றுக்கொண்டு தூரத்தில் தெரியும் தார்ரோட்டில் பஸ் ஏதும் வருகிறதா எனப் பார்த்தேன். நல்லவேளை. வளைவுகளில் நெளிந்து, மின்னி ஓடும் ஒரு கருநதியாய் தார் ரோடு வெறுமையாகக் கிடந்தது. ஆனால் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இளம் பசுமையான வெற்றிலைக் கொடிகள் அகத்தி மரத்தில் படர்ந்திருக்கும் தோப்புகளின் ஊடாக கடந்து வரும் ஹாரன் சப்தம் கேட்டுவிடக்கூடும். அதற்குள் கிளம்பிக்கூட் ரோட்டை அடைந்துவிட்டால் பிடித்துவிடலாம் பஸ்ஸை.

கடவுளே! கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

சாயங்காலம் மாட்டுக்கொட்டாய்க்கு ‘புளஸ்தண்ணி’ வைக்கப் போன பாட்டி திடீரென கத்தி கூப்பாடு போட்டாள். புளியங்கொட்டை மாவில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன் கொட்டாயை நோக்கி ஓடினாள். தும்பைப் பூக்களை வாயில் வைத்து தேன் உறிஞ்சியபடியே அம்மாவுக்கு பின்னால் நானும் ஓடினேன். கருப்பி அசை போடவில்லை. அவள் உடம்புக்கு என்னமோ ஆகியிருந்தது. அழகான கொம்புகளுடன் கூடிய அம்முகத்தின் வசீகரம் காணாமல் போயிருந்தது. அசை போடாத நிச்சலனத்துடன் தரை வெறித்திருந்த அதன் பார்வையில் பீதியும் வெறுமையும் சேர்ந்த கலவையின் மின்னல்கள் பளிச்சிட்டன. நான் அருகில் சென்று அவள் கழுத்தை கைகளால் வளைத்து கருப்பியின் முகத்தை என்னை நோக்கித் திருப்பினேன். அதன் கழுத்தில் இருந்த தொன்னச்சி பூச்சிகளையும் உண்ணிகளையும் பிடுங்கி நசுக்கி போட்டேன். அளவற்ற வாஞ்சையுடன் கருப்பியின் கழுத்தில் என் முகத்தை பதித்துக்கொண்டு கைகளால் தடவிக்கொடுத்தேன். வழக்கமாக நான் இப்படி செய்தவுடன் கருப்பி உற்சாகமாக தலையை ஆட்டுவாள். கொம்பைத் தாழ்த்திக் கொண்டு தடவிக் கொடுப்பதற்கு வாட்டமாக தலையைக் காட்டுவாள். ’பேசற அறிவு ஒண்ணுதான் இல்ல, மத்த எல்லாம் இருக்கு’ என அம்மா செல்லமாக திட்டுவாள். ஆனால் அன்றைக்கு கருப்பியிடம் எந்த அசைவும் இருக்கவில்லை. என் கருப்பி வழக்கம் போல தலையை ஆட்டவில்லை. தடவிக் கொடுப்பதற்காக முகத்தை காண்பிக்கவில்லை… உனக்கு என்ன ஆகிவிட்டது கருப்பியே… ஏன் இப்படி இருக்கிறாய்… நீ இப்படியே இருந்தால் சூடு கொட்டைகளை கொண்டு வந்து பாறையில் தேய்த்து சூடு வைத்துவிடுவேன்…

“அத தொந்தரவு பண்ணாத… எழுந்து தூர வாடா” என்றாள் அம்மா. நான் துக்கத்துடன் எழுந்து வந்து அம்மாவுக்கருகில் நின்று கொண்டேன். இதற்குள் விஷயம் தெரிந்து பக்கத்து தோப்பிலிருந்து கிருஷ்ணா பாட்டி வந்தாள். “ஒண்ணும் பயப்படாத கண்ணு… ஜீரண கோளாறாத்தான் இருக்கும்… வெத்தலயில பெருங்காயத்த வெச்சி ஊட்டக் கொடுத்தா சரியாப் போயிடும்…’ என்றாள்

வேடி மாமாவும் செல்வமும் பெருங்காயத்தை வெற்றிலைக்குள் மடித்து வைத்து கருப்பிக்கு ஊட்டினார்கள். வேடி மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொள்ள செல்வம் கருப்பியின் வாயை வலியத் திறந்து பிடித்துக்கொண்டு உள்ளே வெற்றிலை மூடிய பெருங்காயத்தை திணித்தார். நடப்பது புரியாமல் மிரண்டு திமிறிய கருப்பியைப் பார்க்க பார்க்க எனக்கு அழுகை கிளறிக் கொண்டு வந்தது.

“அர மணி நேரம் பாருங்க… அதுக்கப்புறமும் அச திரும்பலன்னா வைத்தியனதான் போய் கூட்டி வரணும்…” என்று சொல்லிவிட்டு வேடி மாமா போய்விட்டார்.

காற்றடிக்கையிலெல்லாம் உதிர்ந்தபடியே இருந்த புளியம்பூக்களை வாயில் போட்டு மென்று மென்று துப்பியபடியே நான் கருப்பியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரைமணி நேரத்திற்கு மேலாகியும் கருப்பி அசையே போடவில்லை. லேசாக கருப்பியின் வாயில் இருந்து ஜொள் ஒழுகத் தொடங்கியது. உடனே பதறியடித்துக் கொண்டு ராமசாமியைக் கூட்டி வருவதற்காக அம்மா கிளம்பினாள். கூடவே நானும் கிளம்பினேன்.

ராமசாமி எங்கள் பக்கத்தின் ஒரே நாட்டு வைத்தியன். மாடுகளின் நோய்களுக்கும் எலும்பு முறிவிற்கும் வைத்தியம் செய்வதுதான் அவன் தொழிலாக இருந்தது. மனிதர்களுக்கென வரும் சில ரகசிய நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் அவன் தேர்ந்தவனென பிற்பாடு அறிந்தேன்.

ராமசாமியை தேடி நானும் அம்மாவும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஊருக்கு வெளியே அடர்ந்த தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே தென்படும் ஒற்றை வீடுகளில் ஒன்றுதான் எங்களுடையது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் கூப்பிடு தூரங்களில் நாலைந்து குடிசைகள் மட்டுமே இருந்தன. எங்கள் வீட்டிலிருந்து அடிக்கடி ஊருக்குள் போய் வருபவனாக நான் இருக்கவில்லை. ஊருக்குள் போய் எனது பள்ளி நண்பர்களுடன் விளையாடுவது என்பது எனக்கொரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வந்தது. வழி நடுவில் ‘ஒம்போது புளியமரம்’ என்றொரு இடம் இருப்பதே காரணம். அருகருகே எழும்பிய ஒன்பது புளிய மரங்கள் தம் நீண்டர்ந்த கிளைகளுடன் அங்கே வியாபித்திருந்தன. பல பேய்களும் ஒரு முனியும் அங்கு உலவுவதாக கதைகள் சொல்லப்பட்டன. ஒருவித மயான அமைதியுடனும், விவரிக்க முடியாத இருளின் கதிர்களுடனும் அந்த இடம் காணப்பட்டது. செழித்த நிழற்குளுமை பூத்துக்கிடக்கும் அந்த இடத்தை கடந்து போகும் போதெல்லாம் திகில் கொடிகள் உடம்பைச் சுற்றத்தொடங்க பயக்குமிழிகள் பூத்து உதிரும். அந்த இடம் வந்தவுடன் நான் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன்.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தைக் கடக்கும்போது எனக்கு பயமே தெரிவதில்லை. அம்மாவின் அருகாமை என்பது சகல அச்சங்களையும் எரித்துவிடக்கூடியதாக இருக்கிறது. சொரசொரப்பான அவள் உள்ளங்கையிலிருந்து உணர நேர்கிற கதகதப்பு சொல்லமுடியாத பல விஷயங்களினால் ஆனது. எத்தனையோ ஆண்டுகள் கழிந்து போயினும் இன்னும் இதமூட்டுவதாய் அம்மாவின் அந்த ஸ்பரிசமே எஞ்சி, அணையாது மனத்திரியில் நின்றொளிரும் அருட்சுடராக வாழ்வெளி எங்கும் பிரகாசிக்கிறது.

நாங்கள் ஊருக்குள் போன போது ராமசாமி வீட்டில் இல்லை. ஏதாவது சாராயக் கடையில் இருப்பானென்று யாரோ சொன்னார்கள். அருகருகே இருந்த இரண்டு சாராயக்கடைகளிலும் அவன் இல்லை. மூன்றாவது கடை கொஞ்சம் தொலைவில் இருந்தது. ஓடிச்சென்று விசாரித்ததில் அங்கேயும் அவன் இல்லையென்று சொன்னார்கள். அப்போதுதான் குடித்து முடித்திருந்த மூர்த்தி குழறியபடியே சொன்னான், ”அடடா அச போடலன்னா கஷ்டமாச்சே… இப்பத்தான் ராமசாமி இந்த ஓணில போனான். சுருக்கா நடந்தா புடிச்சிறலாம்…”

பதற்றத்தையும் அவசரத்தையும் வரித்த பாதங்களூடன் நானும் அம்மாவும் இருள் அடர்ந்திருந்த அந்த ஓணி வழியில் நடந்தோம். வழியின் இரு பக்கத்திலும் அடர்ந்திருந்த பனைமரங்களில் இருந்து கள் வாசம் சிந்திக்கொண்டிருந்தது. எனக்கு மிகப்பிடித்தமான வெல்வெட் பூச்சிகள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலக்கடலை வயலிருந்து சிள்வண்டுகள் ரீங்கரித்தன. சற்று தொலைவில் தள்ளாடியபடியே யாரோ நடப்பது நிழலைசைவாகத் தெரிந்தது. நல்லவேளை. ராமசாமிதான், இனிக் கவலையில்லை. எப்படிப்பட்ட நோயையும் குணப்படுத்தி விடுவதில் ராமசாமி தேர்ந்தவன்.

அவனிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தோம். தள்ளாடியபடியே நடந்தான். எவ்வளவு போதையிலும் எதையும் கவனித்து நிதானிக்கும் சித்தம் பெற்றவன்தான் அவன். ஆனால் அன்றைக்கு வழக்கத்தை விட அதிகமாயிருந்தது போதை. அதிகரித்துக்கொண்டே வந்தது அவன் நடையின் தள்ளாட்டம். மாட்டுக்கொட்டாய்க்கு கொஞ்ச தொலைவிலேயே விழுந்தவன் விழுந்தவன்தான், எழவே இல்லை. எழுப்பி எழுப்பி பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தோம். கருப்பி அப்படியேதான் இருந்தாள். அசை போடவில்லை. இனி மருத்துவரைக் கூட்டிவர போச்சம்பள்ளிதான் போகவேண்டும். சற்று நேரத்தில் பஸ் வந்துவிடக்கூடும், அதற்காகத்தான் கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். நான் அப்போதுதான் சுட்டு வைத்திருந்த பலாக்கொட்டைகள் சிலதை உண்பதற்காக எடுத்து ஜோபியில் போட்டுக்கொண்டு அம்மாவுடன் கிளம்பினேன்.

இரவு எட்டு மணிக்கு நாங்கள் போச்சம்பள்ளி போய் சேர்ந்தோம். மருத்துவரின் வீடு எங்கிருக்கிறதென தெரியவில்லை. முன்பு எப்போதோ ஒருமுறை மருத்துவர் வீட்டுக்கு போயிருப்பதாகவும் இப்போது மறந்துவிட்டதாகவும் அம்மா சொன்னாள். பக்கத்திலிருந்த தேநீர் கடையில் விசாரித்தோம். கூட நடந்து வந்த ஒன்றிரண்டு பேரிடம் கேட்டோம். யாருக்கும் தெரியவில்லை. தெளிவில்லாமல் ஒரு தெருவில் நடந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த ஒருவர் சொன்னார், ”இப்படியே நேரா போய் இடது பக்கம் திரும்பினா மூணாவது வீடு…”. மூன்று மாதங்களுக்கு முன்பு செத்துப் போயிருந்த என் அப்பாவைப் போல மீசை வைத்திருந்த அவரை திரும்பி திரும்பி பார்த்தபடியே நான் நடந்தேன்.

மருத்துவரின் வீடு வெளிர்நீல நிறத்தில் இருந்தது. வீட்டின் முன்புறத்தை அநேக வகையான பூச்செடிகள் நிறைத்திருந்தன. மைசூரிலிருந்து அவர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருந்தனர். சந்தோஷக் கூச்சல்களும், கொண்டாட்ட ஆரவாரங்களும் அவர் வீட்டிலிருந்து ததும்பி வந்தன. மருத்துவர் வீட்டில் இல்லை. பக்கத்தில் எங்கோ போயிருக்கிறார் என்றும் சீக்கிரத்தில் வந்துவிடுவார் என்றும் அவர் மனைவி சொன்னார். நாங்கள் தாழ்வாரத்தில் உட்கார்ந்தோம்.

கருப்பி இதுமாதிரி ஆனதற்கு ஏதாவது விஷப்பூண்டை மேய்ந்ததுதான் காரணமாக இருக்குமென்று அம்மா சொன்னாள். கருப்பி பெரும்பாலும் பெரிய காவாயில்தான் மேய்ந்துக் கொண்டிருப்பாள். ’பெரியக்காவாய்’ என்று அழைக்கப்பட்டாலும் அவ்வளவு பெரிய கால்வாயாக இல்லை அது. அதிக மழை பொழிந்து எப்போதாவது செல்லநாக ஏரி நிரம்பி வழியும் போதுதான் அந்த கால்வாயில் தண்ணீர் வரும். என்றாலும் எப்போதும் ஈரம் சொதசொதக்கும் மண்ணைக் கொண்டதாக அந்த கால்வாய் இருந்தது. கரிசாலையும் பொண்ணாங்கண்ணியும் நிறைந்து கிடக்கும் அங்கே நிறைய வண்ணத்து பூச்சிகள் பறந்தபடியே இருந்தன. அந்த இடம்தான் வண்ணத்து பூச்சிகளின் கோயில் என்று கீதாக்கா சொன்னாள். மிக நல்ல அக்காவாகவே அவள் இருந்தாள். சாப்பிட்டிருக்காத வாயின் கசப்பை நான் எச்சிலாக துப்பிக் கொண்டிருந்த தருணங்களில் எல்லாம் அம்மாவுக்கு தெரியாமல் பூசணி இலையில் வைத்து சோறும் குழம்பும் ஊற்றிக் கொடுத்த விரல்கள் அவளுடையதாக இருந்தன. பௌர்ணமிதான் வண்ணத்து பூச்சிகளின் பண்டிகை நாளென்றும் வானத்துக்கு மேலே இருக்கும் வண்ணத்து பூச்சிகளின் சாமி ராட்சஸ உருவத்துடன் பெரிய சிறகுகளுடன் பறந்தபடி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கீழே வரும் என்றும் இரவில் ஒண்ணுக்கிருப்பதற்காக வெளியே வந்த போது இரண்டு முறை அவற்றை தான் பார்த்திருப்பதாகவும், அழகான அவைகளை பிடித்து விளையாடி ஒருபோதும் துன்புறுத்தக்கூடாதென்றும் சதா சொல்லிக் கொண்டிருந்த அவள்தான் ஒரு பௌர்ணமி தினத்திலேயே யாருடனோ ஓடிப்போனவள் ஆனாள்.

எனக்கும் கருப்பிக்கும் வண்ணத்துபூச்சிகளின் கோயிலை ரொம்பவும் பிடித்திருந்தது. விதவிதமான நிறங்களில் பறந்து களித்திருக்கும் வண்ணத்துபூச்சிகளின் மீது கருப்பிக்கு ஏதோவொரு ஆர்வமும் கவர்ச்சியும் இருந்ததென்றுதான் நினைக்கிறேன். நான் கவனித்திருந்த பல சமயங்களில் கருப்பி புல்லைக் கூட மேயாமல் வண்ணத்துபூச்சிகள் பறப்பதையே பார்த்துக்கொண்டிருப்பாள். ஒருவேளை அங்கே ஏதாவது விஷப்பூண்டுகள் இருந்திருக்குமோ? அது வண்ணத்து பூச்சிகளின் கோயிலாயிற்றே… எப்படியிருந்தாலும் கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

மருத்துவரின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறுமி நந்தியாவட்டைப் பூக்கள் கொய்து கொண்டிருந்தாள். மருத்துவரின் மகளாகவோ வந்திருக்கும் விருந்தினர்களின் மகளாகவோ இருக்கலாம். பூக்களைக் கொய்யும் விளையாட்டில் சலிப்படைந்தவள் போல காணப்பட்டாள். நான் எழுந்து அவள் அருகே சென்றேன். ஒருசில விளையாட்டுகள் மூலம் நாங்கள் வெகு சீக்கிரமே நட்பில் ஒன்றிவிட முடிந்தது. என் ஜோபியிலிருந்த சுட்ட பலாக்கொட்டைகளை அவளிடம் எடுத்துக் கொடுத்தேன். முடியக்கூடிய எதையும் எல்லோருக்கும் தருபவனாகவே எப்போதும் நான் இருந்து வந்திருக்கிறேன். பலாக்கொட்டைகளின் ருசி அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதற்கான நன்றியுடன் என்னைப் பார்த்தாள். இருந்தாலும் ஒரு கடனாளியாக அவள் தன்னை உணர்ந்திருக்க வேண்டும். பதிலுக்கு தானும் எதையாவது எனக்கு தர விரும்பியவளாக வீட்டினுள்ளே சென்று ஒரு சிறு கிண்ணத்துடன் திரும்பிவந்து என்னிடம் அதை நீட்டினாள். ஆர்வத்துடன் அக்கிண்ணத்தை வாங்கிப் பார்த்தவாறு நான் சொன்னேன்.

“ அட மண்புழு மாதிரி இருக்குதே…”

“… ஐயோ அது மண்புழு இல்ல… நூடுல்ஸ்… ”

ப்ரியமான என் நண்பர்களே! வாழ்வில் முதல் முறையாக அப்போதுதான் நான் நூடுல்ஸ் புழுவைத் தின்றேன். கொஞ்சத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியை பிளாஸ்டிக் காகிதத்தில் சுருட்டி ஜோபியில் பத்திரப்படுத்திக் கொண்டேன். திடீரென எனக்கொரு யோசனை தோன்றியது. மண்புழுவை தூண்டிலில் கோர்த்து மீன் பிடிப்பதைவிட இந்த நூடுல்ஸ் புழுவைக் கோர்த்து மீன் பிடித்தால் நிறைய மீன்கள் சிக்கலாம் எனபதுதான் அது. ஒரே தடவையில் ரெண்டு மூணு மீன்கள் கூட மாட்டலாம்.
நான் உடனே அம்மாவிடம் ஓடி வந்தேன்.

“…உனக்கு தெரியுமா அம்மா… என்னிடம் ருசியுள்ள நூடுல்ஸ் புழுக்கள் இருக்கின்றன… மண்புழுவை விட ஒசத்தியானவை… இன்றைக்கே போய் கல்யாணி மாமாவின் தூண்டிலை நான் வாங்கிக் கொள்வேன… பெரிய பெரிய மீன்களை நான் பிடிப்பேன் அம்மா.. பெரிய பெரிய சப்பாரைகளை நான் கொண்டுவருவேன்.”

அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அம்மாவுக்கே உரிய பல நிம்மதியின்மைகள் இருந்தன. ஆறாத ரணங்களின் சொல்ல முடியாத வலிகளின் முடிவற்றத் தடங்கள் அவள் மனதெங்கிலும் வியாபித்திருந்தன. இறுக்கத்தால் வேயப்பட்ட அவள் முகத்தில் எப்போதாவதுதான் மகிழ்ச்சியின் சிறு கீற்றுகளை காண முடிந்தது. என்றாலும் அழக்கூடியவளாக அம்மா இருந்ததேயில்லை. எந்த விஷயத்தைம் தனக்கேயுரிய அறியாமையோடும் தெளிவோடும்தான் அவள் எதிர்கொண்டாள்.

கருப்பி பிறத்தியாரிடமிருந்து வாங்கிய மாடல்ல. எங்கள் வீட்டிலேயே கன்றென பிறந்து மகளென வளர்ந்தவள். விதவிதமான மாடுகளுடனும் அவற்றின் இணக்கமான ஸ்நேகங்களுடனுமே காலமெல்லாம் வாழ்ந்து வந்தவள் என் பாட்டி. முன்பொரு காலத்தில் அநேக மாடுகளை வளர்ப்பவளாய் பாட்டி இருந்திருக்கிறாள். கட்சி கட்சியென்று தாத்தா அழித்தது போக எஞ்சியது கருப்பி மட்டும்தான். அதுவும் போய்விட்டால் என்ன செய்வது… கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

எங்கள் ஊருக்குப் போகும் கடைசி பஸ்சும் போனப்பிறகே மருத்துவர் வீட்டிற்கு வந்தார். பதற்றத்துடன் அம்மா விஷயத்தைக் கூறினாள். மருத்துவர் அம்மா சொல்லி முடிக்கும்வரை நிதானமாக கேட்டார். மருத்துவரின் சித்தி குடும்பம் எங்களூரில்தான் இருந்தது. வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் சித்தி வீட்டுக்கு வரவிருப்பதால் எல்லோரும் சேர்ந்து காரில் போய்விடலாம் என்றும், தயாராகி வரும்வரை காத்திருக்குமாறும் சொல்லிவிட்டு மருத்துவர் வீட்டினுள் சென்றுவிட்டார்.

அப்பாடா… இனி பிரச்சனை இல்லை… இதுவரைக்கும் ஏதும் ஆகாமலிருந்தால்…

‘சென்றாய சாமியே…’ என்று அம்மா வாய்விட்டு முனகுவது காதில் தெளிவாக கேட்டது. சென்றாய சுவாமிதான் எங்கள் குல தெய்வம். பத்து மைல் தொலைவில் இருக்கும் சென்றாய மலைக்கு புரட்டாசி மாசத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் சத்யாக்காவுடன் சேர்ந்து நான் போகாமலிருக்க மாட்டேன். சத்யாக்காவுடன் சேர்ந்து மலையேறுவதைப் போல அவ்வளவு குதூகலமானதாக வேறொன்று எனக்கு இருந்ததில்லை. துணிமணிகளையும் பொரி உருண்டைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயே சென்று விடுவோம். கால்வாசி மலையில் பஸ்வான தீர்த்தமும், பாதிமலையில் மந்தி தீர்த்தமும் இருந்தன. நாங்கள் மந்தி தீர்த்தத்தில்தான் எப்போதும் குளிப்போம். குளித்து முடித்தவுடன் பொரி உருண்டைகளை தின்றுவிட்டு சீத்தாபழங்களை தேட ஆரம்பிப்போம். மலையெங்கும் சீத்தா மரங்கள் காடாய் செழித்திருந்தன. சீத்தாக்காய்களை பறித்தால் ஏலம் எடுத்தவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பழத்தை பறித்து எவ்வளவு வேண்டுமானாலும் அங்கேயே சாப்பிடலாம். ஆனால் வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. நாங்கள் வேண்டிய மட்டும் அங்கேயே பழத்தை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்ப சாயங்காலம் ஆகிவிடும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் சித்தம் குலைந்து சத்யாக்கா பைத்தியம் ஆகும்வரை ஒவ்வொரு புரட்டாசி மாதமும் சென்றாய மலைக்கு நான் போய்க்கொண்டிருந்தேன்.

கருணையிலும் கருணை கொண்ட சென்றாய சுவாமியே எங்கள் கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

பாதிநிலா ஒளிர்ந்த அந்த இரவில் மருத்துவரின் குடும்பமும் உறவினர்களும் தயாராகி காரில் ஏற ஒருமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இருபது நிமிஷத்தில் எங்களூருக்கு வந்துவிட்டோம். கார் நேராக மருத்துவரின் சித்தி வீட்டிற்கு முன்பு நின்றது. குடும்பத்தினர் எல்லோரும் இறங்கிய பிறகு மருத்துவர் காரை திருப்ப முயன்றார். எங்கள் வீடு இன்னும் கொஞ்ச தொலைவில்தான். அங்கே கருப்பி எப்படியிருக்கிறாளோ…

அப்போது மருத்துவரின் சித்தி வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியே ஓடிவந்தாள்.

“…ஹலோ மாமா… திடீர்னு நீங்க வருவீங்கனு நா எதிர்பார்க்கவே இல்ல…சாயங்காலம்தான் மணியம்பாடியிலிருந்து வந்தேன்… சரி வாங்க காப்பி குடிச்சிட்டு போகலாம்…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

“…சங்கீ… நீயும் இங்கதான் இருக்கறியா… சரி இரு அர்ஜெண்ட்டா ஒரு கேஸ் பாத்துட்டு வந்துர்றேன்…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

“.. அட காப்பிதானே எப்ப பார்த்தாலும் கேஸ்கேஸ்ன்னுட்டு… இல்லனா இங்கியே கொண்டுவந்து தர்றேன்… கார்லேயே குடிச்சிட்டு கிளம்புங்க சரியா…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

”அவ்வளவுதான் ஒரு நிமிஷம் போலாம் இரும்மா…” என்றார் மருத்துவர் பின்னால் திரும்பி எங்களைப் பார்த்து.

நான் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அழுகை வெடிக்கும் நிலையில் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அது நிகழ்ந்து விடலாம் போலத்தோன்றியது. திடீரென கார்க்கதவை திறந்துக் கொண்டு எங்கள் குடிசையை நோக்கி அம்மா ஓடத்துவங்கினாள் .எதிரில் தடுக்கிய வேலி முட்களில் பாதம் கிழிபட்டு ரத்தங்கசிய பின்னாலேயே ஓடிய என்னை பாட்டியின் அழுகுரல் எதிர்கொண்டது.

வண்ணத்து பூச்சிகளின் பறத்தலைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த கருப்பி அசையுடன் மூச்சையும் நிறுத்தியிருந்தாள்.

தாலாட்டு -ரபீக் ராஜா

(சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

“தம்பி, சீக்கிரம் ஆஸ்பத்திரி போயிருங்க! எ, புள்ளைனா எனக்கு உசுரு!” என்றாள் அந்த வயதான தாய்.

இது போன்ற உணர்ச்சி மிகுந்த வாக்கியங்கள் வேலு பல முறை கேட்டு புளித்தவை.

டாக்டர் வேலுவை அழைத்து, “வேலு, இப்ப மணி 6, சரியா 9.30க்கு இந்த கேஸை சென்னை அப்பல்லோவுல சேத்துரு! ரொம்ப கிரிட்டிக்கல். சென்னை வர தாங்குமானு தெரியல. பீ கேர்ஃபுல்” என்றார். இதுகூட வழக்கமான வார்த்தைகள்தான்.

தனது குலதெய்வமான பதினெட்டாம்படி கருப்பனை வேண்டியவாறே ஆம்புலன்சை ஸ்டார்ட் செய்து திரும்பிப் பார்த்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு உணர்வற்ற நிலையில் ஒரு வாலிபன். முகத்தில் பிராணவாயு முகமூடி அணிவிக்கப்பட்டு இருந்தது. தலையில் பெரிய கட்டு. உடன் அந்த வயதான தாய் மற்றும் இந்த ஹாஸ்பிட்டல் நர்ஸ் ஒருத்தி.

ஆம்புலன்சை கிளப்பி மருத்துவமனை வளாகத்தை கடக்கும் முன்பே அவன் அலைபேசி ஒலித்தது. அழைப்பது மனைவி. மொபைலை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் 30 நொடிகள் கடந்ததும் அழைப்பை ஏற்றான்.

போனில், “என்னடி? ஒன்னோட பெரிய எளவா போச்சு! சொல்லி தொலை என்ன விஷயம்?” பின்னே உட்காந்திருந்த வயதான தாய் அவனை ஏறிட்டாள்.

போனில் அவன் மனைவி, “சீ, எப்ப பாத்தாலும் உனக்கு வாயில எளவு தான் வரும். எப்ப வீட்டுக்கு வருவீங்க? நாளைக்கு என் பெரியம்மா மகள் கல்யாணம் யாவகம் இருக்கா?”

“ம், இருக்கு! இருக்கு!! அர்ஜென்ட் கேஸ் ஒண்ணு. வை அப்புறம் பேசுறேன்” பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்தான்.

வாகனத்தை பைபாஸ் சாலையில் செலுத்தி வேகத்தை அதிகப்படுத்தினான். ஆம்புலன்ஸ் இருட்டைக் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது.

நர்சிடம் வயதான தாய் பேசுவது வேலுவிற்கு மெதுவாக கேட்டது.
“எனக்கு மொத்தம் நாலு பசங்க! அவரு போய் சேந்ததுக்கு அப்புறம் நானே சுயமா உழைச்சு நாலு பேரையும் ஆளாக்கினேன்”

அந்த நர்ஸ் அசுவாரசியமாக, “ம்” என்றாள்.

“என்ன தவிக்க வச்சுட்டு இப்ப மூச்சு பேச்சு இல்லாம இந்தா படுத்துக்கிடக்குரானே, இவன் தான் கடைசி புள்ள. இன்னும் கல்யாணம் கூட பண்ணல. மொத மூணு மகன்களும் பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு தனி குடித்தனம் போய்டாணுங்க. இவன் இப்ப தான் படிப்பை முடிச்சுட்டு 6 மாசமா வேலைக்கு போய்கிட்டு இருந்தான். அதுவும் இந்த பாழாய் போன கடவுளுக்கு புடிக்கல.”

நர்ஸ், எதுவும் சொல்லவில்லை.

“இவனுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில கிடந்த போது கூட இவனோட அண்ணன்கள் மூணு பேரும் எதோ மூணாவது மனுஷன் மாதிரி வந்து பாத்துட்டு செலவுக்கு பணத்தை கொடுத்துட்டு பொண்டாட்டி பின்னாடியே போயிட்டாங்க. அந்த மனுஷன் இப்ப இருந்தா இப்படி நடந்துருக்குமா? உதவிக்கு கூட ஆளு இல்லாம இப்படி அனாதை மாதிரி ஆயிட்டேன்”

இப்பொழுது நர்ஸ் வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டிருக்க வேண்டும்.

“என்ன பண்றது எல்லாத்தையும் பாக்கணும்னு என் தலைல எழுதிருக்கு!” மிக பலவீனமான அழுகை கேட்டது.

சிறிது நேரத்தில் நர்ஸ் மெதுவாக வேலு அருகில் வந்து காதில் வந்து கிசுகிசுத்தாள், “பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு. இன்னும் எவ்வளோ நேரத்துல சென்னைல ரீச் ஆவோம்?”

வேலு, “மாக்சிமம், ஒரு மணி நேரம். பெரிய டிராபிக்ல சிக்காமல் இருந்தா!”

வயதான தாய், “என்னமா ஆச்சு?”

நர்ஸ், “ஒண்ணுமில்லமா! நீங்க பயப்படதீங்க!”

வாகனம் இன்னும் வேகம் பிடித்தது.

நாளை பள்ளி திறக்கும் நாள் என்பதால் சொந்த ஊரிலிருந்து விடுமுறை முடித்து மக்கள் அனைவரும் சென்னை நோக்கி விரைவதால் சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. எனிலும் ஆம்புலன்சுக்கு பொறுப்பாக வழி கொடுத்து விலகி நிற்கிறார்கள்.

வயதான தாய் மீண்டும், “ஏ, புள்ள எப்படியும் பிழைத்து விடுவான். நம்பிக்கை இருக்கு.”

வேலு கண்ணாடி வழியாக நர்சை பார்த்தான். நர்ஸ், வராத புன்னகையை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

“இவனுக்கு சின்ன வயசுல இருந்து சாதாரண காய்ச்சல் வந்தாக்கூட லேசுல போகாது. ரெண்டு மூணு நாள் சிரமப்படுத்திட்டு தான் போகும். இப்ப இவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் லேசுல போகாது தான். அந்த பெரிய ஆஸ்பத்திரில சேர்த்தா எல்லாம் சரியா போய்டும். என்ன காசுதான் அதிகமா செலவாகும். அதுக்கு என்ன? ஏ புள்ள சம்பாதிப்பான்.”

இப்பொழுது தான் பேசுவதை யாராவது கேட்க வேண்டும் என்பதை அந்த வயதான தாய் எதிர்பார்க்கவில்லை.

“இவன நா எப்போதுமே திட்டுனது இல்ல! கை நீட்டி அடிச்சதில்ல. ரொம்ப செல்லம். ஏ காலயே சுத்தி சுத்தி வருவான். இவனுக்கு ரெண்டு வயசு இருக்கும் போது பயங்கரமான காய்ச்சல் வந்துச்சு. நடுராத்திரி, பேய் மழை. காய்ச்சல் அதிகமாகி வலிப்பு மாதிரி வந்துருச்சு. என்ன பண்றதுனே புரியல. வலிப்பும் நிக்கல. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. பழனி முருகனை வேண்டிக்கிட்டு இவன நெஞ்சோடு அணைச்ச பத்தாவது நிமிசத்தில வலிப்பு நின்னு என்ன “அம்மா”னு கூப்பிட்டன். அதே மாதிரி இப்பவும் என்னை “அம்மா”ன்னு கூப்பிடுவான்.”

இப்பொழுது ஏனோ வேலுவிற்கு அந்த தாயின் முகத்தை திரும்பி பார்க்க தோன்றியது.

சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் வளர்த்தவன் வேலு. மனைவி இறந்த 6 மாதத்தில் வேறு திருமணம் செய்தார் தந்தை. மாற்றாந்தாய் கொடுமைப்படுத்தவில்லை என்றாலும் பாசம் என்கிற கதகதப்பு அவனுக்கு அரிதாகவே இருந்தது. தன் தாய் உயிரோடு இருந்தால் இந்த வயதான தாய் போல தான் இருந்திருப்பாள் என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் வேலு.

ஒரு வளைவில் சைரனை ஒலிக்க விட்டு ஒரு ஒரு சரக்கு லாரியை ஒதுங்க வைத்து விரைவாக வண்டியைச் செலுத்தினான்.

சிறிது நேரத்தில் வாகனத்துக்குள் “உஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்? ஆக்சிசன் சிலின்டரில் ஆக்சிசன் வெளியே போகிறதோ? என்று வேலு ஊகிப்பதற்கு நர்ஸ் டிரைவர் இருக்கைக்கு அருகில் வந்து, “மெதுவா போங்க! இனி அவசரம் இல்ல” என்றாள்.

வேலு திரும்பிப் பார்க்கையில் அந்த தாய் மகனின் கைகளை இறுக்க பிடித்துக்கொண்டு அவன் நெஞ்சில் தனது காதை வைத்துக் எதையோ செய்து கொண்டிருந்தாள்.

விடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்

(சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை, எழுதியவர் கிஷோர் ஸ்ரீராம்)

வெங்கடேசன் பத்து வருடங்களாக சமைத்து வந்தாலும், காலையில் தான் சமைத்த உணவை டப்பாவில் கட்டிக்கொண்டு போய் கல்லூரியில் திறந்தால் ஒரு ஊசிப் போன வாடை கண்டிப்பாக வந்துவிடும். உணவு நன்றாகவே இருந்தாலும் அந்த வாடை தினமும் அடிப்பதாக உணர்ந்தார். அதற்காகவே சக பேராசிரியர்களுடன் சாப்பிடாமல் தன் இருக்கையிலேயே சாப்பிடுவார்.

மனைவி ராஜி விபத்தில் கால் போனதிலிருந்து படுத்த படுக்கையாகவே இருந்தாள். இவர் தினமும் காலை எழுந்து, கோலம் போட்டு, வாக்கிங் செல்பவர்கள் பறிக்கும் முன் பூக்கள் பறித்து, பால் காயவைத்து  இருவருக்கும் காப்பி போட்டு பேப்பர் படித்துவிட்டு சமைக்க ஆரம்பிப்பார். சமையலில் அவர் வல்லுநர் இல்லையென்றாலும் சாப்பிடும்படி சமைத்து வந்தார். கல்லூரி கிளம்பும் முன் தன் மனைவியை எழுப்பி குளிப்பாட்டி, புது நைட்டி அணிவித்து காலை உணவை மெத்தைக்கு அருகே அமைக்கப்பட்ட டேபிளில் வைத்துவிட்டு, மதிய உணவையும் ஹாட் பேக்கில் அதே மேசையில் வைத்துவிட்டுத் தானும் எடுத்துக்கொண்டு போவார். மேசையில் டிவி ரிமோட், செல்போன், தட்டு, ஹாட்பேக், அன்றைய பேப்பர் வைக்கவே இடம் இருக்கும். மருந்து மாத்திரைகள் வைக்க தலைமாட்டில் தனியாக ஒரு டிராயர் இருந்தது.

எட்டு மணிக்கு கல்லூரிப் பேருந்து வந்துவிடும். நகரத்தை விட்டு இருபத்தைந்து கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தது கல்லூரி. கல்லூரி செல்லும் வரை எதையாவது படித்துக்கொண்டு வருவார். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அந்தக் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார் . புள்ளியியல் துறை பேராசிரியர். துறைத் தலைவர் பதவி தள்ளிப் போய் அவருக்கு அந்த வருட முடிவில் கிடைக்க வாய்ப்புள்ளதாக மற்றவர்கள் பேசி வந்தனர். வாரத்திற்கு எட்டு வகுப்புகள் எடுப்பார். பழகிப் போன கணக்குகள். முன்பு போல அந்தக் கணக்குகள் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதில்லை. கரும்பலகையின் இடது ஓரத்தில் கை வைத்தால் மள மளவென்று கை வழியாக கணக்கு பாயும். எந்த இடத்தில் புள்ளி வைப்போம், பிரதான கணக்குக்குத் தேவையான உதவிக் கணக்குகள், எங்கு மாணவர்களை கேள்வி எழுப்ப வேண்டும் என்று எல்லாம் தடம் பழகிய காளைகள் போல் அடுத்து அடுத்து வரிசை மாறாமல் நடந்தன. புதுக் கணக்குகள் எடுப்பதை எப்போதோ கைவிட்டிருந்தார்  வழமைக்கு மாறாக புதிதாக செய்யவேண்டிய காரியங்கள் போல் அவரை எதுவும் அச்சுறுத்துவதில்லை. சாதுர்யமாக அவைகளை தவிர்த்து வந்தார்.

மதிய இடைவேளையில் ராஜிக்கு போன் செய்வார். ‘ஒன்னும் பிரச்சனை இல்லையே?’ என்று கேட்பார். உணவு எப்படி இருந்தது என்று கூட கேட்க மாட்டார். பதில் வந்ததும் போனை வைத்துவிடுவார். கல்லூரியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. துறையில் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு பெரியவர் என்ற முறையில் ஆலோசனை கேட்பார்கள். வாக்குவாதங்களோ, சண்டைகளோ போட்டதில்லை. தனக்கு ஒரு வேலை வந்தால் செய்வார். அவராக எதையும் இழுத்துப் போட்டுக்கொள்ள மாட்டார்.

மாலை பேருந்தில் பெரும்பாலும் தூங்குவார். வீடு போக ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். வீட்டுக்கு வந்தவுடன் காப்பியும் பிஸ்கெட்டும் ராஜிக்குத் தருவார். இரவு உணவுக்குத் தேவையான காய்கறிகள் நறுக்குவார். தொலைக்காட்சியில் ஏதாவது விவாதம் ஓடிக்கொண்டு இருக்கும். பார்த்துக்கொண்டே வேலை செய்வார். இரவு உணவு ராஜியின் படுக்கைக்குப் பக்கத்தில் சேர் போட்டுக்கொண்டு ராஜியுடனேயே சாப்பிடுவார். ‘இன்னும் கொஞ்சம் சாம்பார் விடட்டுமா?’, ‘நாளைக்கு ஷட் டவுன், கரண்ட் இருக்காது.’,‘ பக்கத்து அப்பார்ட்மெண்டுக்கு புதுசா பேச்சுலர்ஸ் குடி வந்திருக்காங்க, அதான் ஒரே சத்தம்’ என்று துணுக்குச் செய்தியாகத்தான் சம்பாஷணைகள் இருக்கும். ராஜி பெரும்பாலும் பேசுவதில்லை.

ராஜி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவள் . சிறு வயதிலிருந்தே துறுதுறுவென இருந்த பெண். பள்ளிக்குத் தன் அப்பாவின் பார் வைத்த ஹெர்குலிஸ் சைக்கிளைத்தான் ஓட்டிச் செல்வாள். செயினுக்கு எண்ணெய் ஊற்றுவது, காற்றடிப்பது எல்லாம் பார்த்துப் பார்த்து செய்வாள் . எட்டாவது வகுப்பு வந்ததும், அம்மா திட்டித்தான் வீதியில் இருந்த மற்ற பெண்கள் போல நடந்து பள்ளிக்குச் சென்றாள். தன் வேலையைத் தானே எப்போதும் செய்து கொள்பவள். துணி வைப்பு அலமாரியிலும், புத்தக மேசையிலும் அவள் அடுக்கி வைக்கும் ஒழுங்கை அம்மா எல்லோரிடமும் காட்டி பூரித்துக்கொள்வாள். வெங்கடேசன் அவளைப் பெண் பார்க்க வந்தபோது அவர் கை நகக்கண்களில் இருந்த அழுக்கு தான் அவளுக்கு முதலில் பார்வைக்குப் பட்டது.

‘காலேஜுல வாத்தியாராம். எல்லாருமே நல்லவங்களாத் தெரியறாங்க. நகத்துல அழுக்கு இருக்கறதெல்லாம் உனக்கு ஒரு காரணமா?’ சமையல் கட்டில் அம்மா அவளைத் திட்டினாள். இது என்ன மற்ற நாட்களைப் போன்ற ஒரு சாதாரண நாளா?, பெண் பார்க்கும்போதாவது ஒழுங்காக வரவேண்டாமா. அப்படி என்ன ஒரு அசட்டையான பாங்கு? ராஜியின் காரணங்கள் யாருக்கும் புரிந்திருக்கவில்லை.

கல்யாணம் ஆகிய சில வருடங்களிலேயே ராஜிக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வெளியே வந்து வேலை செய்வதே அவளுக்கு மிகப்பெரிய விடுவிப்பாக இருந்தது. வெள்ளிக் கிழமைகளில் வெங்கடேசன் ராஜியின் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருவர். வெங்கடேசன்தான் வழி நெடுக பேசிக்கொண்டே வருவார்.

‘உன்னை பொண்ணு பாக்க வந்தப்ப என் நகத்துல அழுக்கு இல்லாமல் இருந்தா என்ன பண்ணி இருப்ப?’

‘தலை முடி கலைஞ்சுருக்கான்னு பாத்திருப்பேன்’. இருவரும் சிரித்தனர்.

‘ஆனா பாருங்க. இன்னிக்கு வரைக்கும் உங்களுக்கு அதையெல்லாம் சரி பண்ணிக்கணும்ன்னு தோணினதே இல்ல’

‘ஐ ஹாவ் பெட்டர் திங்க்ஸ் டு வொர்ரி அபவுட்’

‘பொடலங்கா’

‘ஒரு உதாரணத்துக்கு நான் இதையெல்லாம் நான் சரி செஞ்சுகிட்டேன்னு வச்சுக்கோயேன், அப்பவும் உனக்கு குறை சொல்ல ஏதாவது இருக்கும்’

‘அப்படி நீங்க நெனச்சுக்கிட்டா நான் என்ன பண்றது’?

சில நேரம்தான் அது உரையாடலாக இருக்கும். பிறகு இருவரும் மாற்றி மாற்றி கல்லெறிவது போல ஆகிவிடும். வெங்கடேசனுக்கு ராஜியை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் எப்போதுமே உண்டு. அடியாழத்திலிருந்து எழும் சிறியதொரு சொல்லும் நேரம் போகப் போக எரிகற்களாக வந்து விழும். ராஜியின் திமிர் அனைத்தையும் கட்டுடைத்து உள்ளே என்ன தான் உள்ளது என்று பார்க்கும் பொறுமையெல்லாம் அவர் இழந்துவிட்டிருந்தார். கடைசி வரை ராஜியின் பிரச்சனைதான் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் நின்று போனது. அதற்குள் ராஜியும் படுத்துக்கொண்டு விட்டாள்.

ராஜிக்கு விபத்து ஏற்பட்டது பத்து வருடங்களுக்கு முன்னால். வெங்கடேசனுடன் ஸ்கூட்டரில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு போனபோது பின்னால் வந்த கார் இடப்புறமாக முந்த முயன்றது. அந்நேரம் எதிரே பஸ் வந்ததால் வெங்கடேசன் கார் வந்ததை கவனிக்காமல் இடப்புறம் சற்று ஒடிக்க, கார் ஸ்கூட்டரை இடித்தது. பிடி கிடைக்காமல் கீழே விழுந்ததில் ராஜியின் கால் மேல் கார் ஏறி இழுத்துப் போனது. வெங்கடேசன் தோள்பட்டையில் காயத்துடன் தப்பித்தார். ராஜியின் கால்கள் சரி செய்ய முடியாத அளவு பிளவுண்டு போயின. ராஜியைப் பார்த்துக்கொள்ள கொஞ்ச நாட்கள் அவளின் அம்மா வந்தாள். பிறகு வெங்கடேசனே பார்த்துக்கொண்டார்.

விபத்து ஏற்பட்டதிலிருந்து ராஜி பேசி வந்த வெகு சில வார்த்தைகளும் நின்று போயின. இரவில் அவள் விசும்புவது கேட்டு வெங்கடேசன் பேச முயன்றாலும் ‘ஒன்னும் இல்லை. வலிக்குது. நீங்க தூங்குங்க’ என்று கூறி விடுவாள். வீல் சேர் வைத்துக் கொண்டு சில மாதங்கள் வீட்டுக்குள் நடமாடி வந்தாள். அவ்வப்போது வெங்கடேசனுக்கு சமைக்க உதவுவாள். பொதுவாக டீவி பார்ப்பதில்லை என்றாலும் டிஸ்கவரியில் வரும் மிகப் பிரம்மாண்ட கட்டிடங்கள் தகர்க்கப்படுவது, ஒரு அடர் வனத்தில் தனியாக உயிர் பிழைப்பது போன்ற நிகழ்ச்சிகள் நன்றாக இருப்பதாகக் கூறுவாள். சில வாரங்களில் உலகில் உள்ள அத்தனை வகையான காடுகளும் அவளுக்கு அத்துப்படியாகி இருந்தது. முந்தைய இரவு பார்த்ததையே மறுநாள் மதியமும் பார்த்து வந்தாள்.

ஒரு நாள் அவர் கல்லூரி சென்றிருந்த போது ராஜி வீல் சேரிலிருந்து பாத்ரூம் கம்போடில் உட்காரப் போகும்போது கை இடறி வழுக்கி விழுந்துவிட்டாள். திரும்ப ஏறி உட்காரவும் கையில் பலம் இல்லை. கீழே விழுந்ததில் கையில் அடி பட்டுவிட்டது. வெங்கடேசன் மதியம் செல்போனில் திரும்பத் திரும்ப அழைத்த போது எடுக்காததால் மதியம் பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது ராஜி பாத்ரூமில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவர் மெதுவாக அவளை எழுப்பி வீல் சேரில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து படுக்க வைத்தார்.

‘ கீழ விழுந்தா சத்தம் போடலாமில்லே ?’

‘ போட்டேன். யாருக்கும் கேக்கல’

கீழே விழுந்ததும் ராஜிக்கு படுக்கையை விட்டுப் போகவே பயமாக இருந்தது. எவ்வளவு வற்புறுத்தியும் படுக்கையை விட்டு சற்றும் நகர மறுத்துவிட்டாள். உள்ளூர பயம் ஒரு விருட்சம் போல படர ஆரம்பித்திருந்தது. அவளுக்கு ஏற்படும் சிறு தொய்வும் அவளின் மனோபலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்தது. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததிலிருந்து பாத்ரூம் போய் வர, குளிக்க, வெங்கடேசனின் துணை வேண்டியிருந்தது. கல்லூரி செல்லும் போது டயப்பர் கட்டிவிட்டுப் போவார். அவரும் மனம் கோணாமல் எல்லாம் செய்து வந்தார். பூ பறிப்பது, பேப்பர் படிப்பது போல ராஜியின் சிசுருஷைகளும் அவருக்கு மற்றொரு வேலையாயின.

ராஜிக்கு உடம்பும் உப்பிக்கொண்டே வந்தது. உடம்பு மெலிந்து போவதை விட அவள் உடல் பருமனாவது ஒரு பெரிய நோய்மையின் கூறாக அவர் எண்ணினார். ராஜியின் பிடிவாதமே அவளை அப்படி ஆக்குவதாக அவருக்குப் பட்டது . அவளின் உடனடி தேவை முழுமனதாக ஒரு அழுகை. அவர்களுக்கு குழந்தை இல்லாத குறை அவரை விட ராஜிக்கு அதிகமாக இருக்குமென்று அவர் நினைத்ததுண்டு . அவள் மனது கண்டிப்பாக அந்த இரவு விசும்பலை விட ஆழமானது .

அவருடைய ஒரே வருத்தம் தனக்கு சலிப்பு வந்து அவளை அப்படியே விட்டுவிடுவேனோ என்பதுவாகத்தான் இருந்தது. ஆனால் இவ்வளவு வருடங்கள் இந்த உறவை பிணைத்திருக்கும் ஒரு மறைமுகமான கயிறு அவர் மட்டும் தான். தன் வாழ்வில் இது தனக்கு உவப்பானதல்ல என்று அவர் எதையுமே ஒதுக்கியதில்லை. வாழ்க்கை தன்னை இட்டுப்போன திசைக்கு அம்மாவின் விரல் பிடித்து நடக்கும் குழந்தை போலவே நடந்து வந்துள்ளார். நடக்கையில் கடக்கும் காட்சிகள் தன்னையே மறக்கடிக்கச் செய்யுமளவு அழகாக இருந்தால் அவ்விரலை மேலும் கெட்டியாகப் பிடித்து நடந்துள்ளார். தன் சந்தோஷங்கள், துக்கங்கள், அவமானங்கள், வெற்றிகள் அனைத்துமே தம்பூராவில் மீட்டும் ஒரே சுருதியைப் போலத்தான் அவரால் மீட்டெடுக்க முடிந்தது. இது அத்தனையிலிருந்தும் ஓய்வு என்பதை அவர் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அந்த மனநிலை என்பது எப்படித்தான் இருக்கும் என்று அறிய ஆசையாக இருந்தது.

கல்லூரியில் இருந்து அன்று வந்த போது மாலை வழக்கத்துக்கு மாறாக பேருந்தில் டிரைவர் பாட்டு போட்டுக்கொண்டு வந்தார். இளையராஜா வந்த புதிதில் போட்ட பாட்டுக்கள் . பேருந்தில் வந்த மாணவர்கள் உச்சுக்கொட்டிக்கொண்டு வந்தார்கள். பாட்டுக்கள் எல்லாமே யாரோ நல்ல இசை ரசனை உள்ளவர் தேடித் தேடிச் சேர்த்தவை போல இருந்தது. அனைத்தும் முத்துக்கள். அடித் தொண்டையில் முனகிக்கொண்டே சீட்டில் தாளம் போட்டுக்கொண்டு வந்தார். அந்த மாலை அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே இளஞ்சிவப்பாக இருந்த அந்தச் சூரியனை முதல்முறை பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டு வந்தார். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு வரை பாடிக்கொண்டே நடந்து வந்தார். வீட்டைத் திறந்து உள்ளே வந்ததும் எதுவோ சரி இல்லை என்று பட்டது. ஹாலில் மேசையின் இடம் சற்று மாறி இருந்தது. சந்தேகம் ஏற்பட்டு ராஜியின் அறைக்குச் சென்று பார்த்தார். அங்கே எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ராஜி எதிர் சுவற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அறைக்குச் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பழைய காலத்து மர பீரோ. அதை உடைப்பதற்கு பெரிய சிரமமெல்லாம் தேவையில்லை . இடுக்கில் ஒரு சன்னமான இரும்புக் கம்பியை உள்ளே கொடுத்து ஒரு நெம்பு நெம்பினால் வந்துவிடும் நிலையில் தான் இருந்தது. திருடனும் அதையே தான் செய்திருந்தான். அந்த அறைக்குள் வர ஜன்னல் கம்பிகளை ரம்பத்தைக் கொண்டு அறுத்திருக்க வேண்டும். பீரோவில் உள்ள துணிகளெல்லாம் கீழே வீசி எறியப்பட்டிருந்தன. ராஜியின் நகைகளை லாக்கரில் வைத்திருந்தார். பணம் ஒரு முப்பதாயிரம் வைத்திருந்தார். அதுவும், வெள்ளி சாமான்கள் சிலதும் திருடப்பட்டிருந்தன. பீரோவில் ஒரு டிராயரில் அவர், தான் கல்லூரியில் பொழுதுபோக்காக சேர்த்த ஸ்டாம்புகள், பல தேச நாணயங்கள், பழைய புகைப்படங்கள் எல்லாம் வைத்திருந்தார் அதெல்லாம் கீழே கொட்டப்பட்டிருந்தன.

அவர் செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்தார். எண்ணங்கள் கோர்வையாக ஓடவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்காமல் அவருக்கு பழைய நினைவுகளெல்லாம் திரண்டு கண் முன் விரிந்தன. சமயோசிதமில்லாமல் வாகனத்தை ஒட்டி ராஜியை படுத்த படுக்கையாக்கியது, பாடத்தில் பெயில் ஆக்கியதால் ஒரு மாணவன் மருந்து குடித்தது, அறிமுகமில்லாத ஆளிடம் கடன் குடுத்து அதை வாங்க முடியாமல் அலைந்தது, ராஜியை பெண் பார்க்கச் சென்றது.. ராஜி.. அவருடைய நினைவுகள் எல்லாம் அவளைச் சுற்றியே வந்துகொண்டிருந்தன. தன்னுடைய இயலாமையின் மிகப் பெரிய ஊற்றாக ராஜியைப் பார்த்தார். அணு அணுவாக அவரின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் ஒரு மிகப் பெரிய முடிவிலி. அவள் பற்கள் பொதுவாகவே துருத்திக்கொண்டு வெளியே தெரியும். சிரிக்கும் போது கோரமாக அது தெரியாதிருக்க கையை வாய்ப்பொத்தித் தான் சிரிப்பாள். இவ்வளவு வருடங்களாக வெள்ளந்தியாக அவள் ஒரு முறை கூட வாய் விட்டுச் சிரித்தது இல்லை. அவள் மனதில் அப்படி என்ன உள்ளது? எதைப் பூட்டி வைக்க வேண்டும் ? அதை சற்றும் தெரிந்து கொள்ள முற்படாமல் தட்டிக்கழித்து, தோற்று, இப்படி அவளுக்கு வேண்டியதெல்லாம் மறுபேச்சு பேசாமல் பண்ணிப் பண்ணி அவள் அடுத்த அறையில் ஒரு பூதகியைப் போல் படுத்துக்கொண்டிருக்கிறாள்.

அவர் காலுக்குக் கீழ் அவர் தன் பள்ளி ஆண்டு விழாவில் பெண் வேஷம் போட்டு ஒரு நாடகத்தில் நடித்த போட்டோ விழுந்து கிடந்தது. கன்னத்தில் கை வைத்து வசனம் பேசும் போது எடுத்த போட்டோ. நாடகம் முடிந்து அவரை அள்ளிக்கொண்டு எல்லோரும் கொஞ்சினர். மாலை வீடு திரும்பியதும் அவரின் அம்மா திருஷ்டி கழித்தாள். அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. கண்களில் கண்ணீர் வழிந்ததை துடைத்துக்கொண்டு ராஜியின் அறைக்கு விரைந்தார்.

‘நம்ம வீட்டுல திருடு போயிருக்கு’

‘ஓ அப்படியா. எப்ப?’

‘இல்ல தெரியாமத் தான் கேக்கறேன். நீ என்னத்தப் புடுங்கிட்டு இருந்த. ஜன்னல அறுத்து பீரோவ பிரிச்சு இருக்கான் பக்கத்து ரூமுல, நீ மயிரே போச்சுன்னு படுத்துட்டு இருந்துருக்க.’

ராஜி பேசவே இல்லை.

‘திங்க வேண்டியது. தூங்க வேண்டியது. பேள வேண்டியது. நீயெல்லாம் ஒழிஞ்சு போயேண்டி சனியனே’ – திட்டி முடிக்கும் முன்னரே உதடு துடித்தது. குரல் கூட கணீரெண்று ஒலிக்காத ஒரு நசநசத்த கோபம். அந்த நொடியின் கனத்தைத் தாள முடியாமல் சர சரவென்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.

மாலை ரசித்த பாட்டெல்லாம் எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. மனது ஏதேதோ எண்ணங்களை அசை போட்டது. வீட்டுக்குத் திரும்ப எரிச்சலாக இருந்தது. அவருக்கு யாரிடமாவது பேசி அழவேண்டும் போல இருந்தது. திடீரென்று பேருந்தில் எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றி அப்போது அங்கே வந்த பேருந்தில் ஏறிக்கொண்டார். இரண்டு நிறுத்தங்கள் தாண்டி பேருந்து நிலையம் வந்தது. கண்டக்டர் இறங்கச் சொல்லியதும் இறங்கி வெளியே நடந்தார்.

ரோட்டின் மறுபுறம் ஒரு மதுபானக்கடை இருந்தது. அதுவரை அவர் மதுவை தொட்டதே இல்லை. அன்று வரை அது ஏனோ தோன்றியதும் இல்லை, வாய்ப்பும் அமையவில்லை. அந்த மதுக்கடை நோக்கி நடந்தார். வெளியே கூட்டமாக இருந்தது. ஒரு இரும்பு சட்டத்தின் சிறு ஓட்டையில் அனைவரும் பணத்தை நீட்டி பாட்டிலை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த சந்துக்குள் சென்றனர். அவர் அங்கு சிறிது நேரம் விழித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் சேர அவர் முன்னுக்குத் தள்ளப்பட்டார். இரும்புச் சன்னல் அருகே நின்று சுற்றிப் பார்த்தார். பின்னால் நின்றிருந்தவர்கள் எல்லாரும் கத்த ஆரம்பித்துவிட்டிருந்தார்கள்

‘இந்தா சார் என்ன வேணும்’ என்று உள்ளே இருந்தவன் அலறினான்.

‘அது வந்து’ என்று இவர் இழுத்துக் கொண்டே பர்ஸைத் துழாவினார்.

‘சரி இருநூறு ரூபா எடு’ என்று ஒரு விஸ்கி பாட்டிலை அவர் முன் தள்ளினான். அவர் பணத்தை கொடுத்துவிட்டு அந்த சந்தின் முன் நின்றுகொண்டிருந்தார். உள்ளே இருந்து லுங்கி அணிந்த ஒரு சிறுவன் அவர் கையைப் பிடித்து ‘வா சார் உள்ள வா’ என்று அழைத்துப் போனான். நீளமான ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்ட ஒரு கொட்டகையில் பத்து டேபிள்கள் போடப் பட்டிருந்தன. எல்லா டேபிளிலும் ஆட்கள் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். அந்த இடமே ஒரே கூச்சலாக இருந்தது. டேபிளில் தண்ணீர் சிந்தி, கொட்டகையின் ஓரத்தில் ஒருவன் கண்கள் சொருகி தலையைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான். மூத்திர நாற்றமும், மது வாடையுமாக அந்த இடமே குமட்டிக்கொண்டு வந்தது.

ஓரளவு சுத்தமான டேபிளில் அமர்ந்து கொண்டார். சிறுவன் பிளாஸ்டிக் கப்பும் தண்ணீர் பாக்கெட்டுடனும் வந்தான். கடலை வேணுமா என்று கேட்டு ஒரு சிறிய கடலை பாக்கெட்டை லுங்கி மடிப்பிலிருந்து எடுத்து வைத்தான். முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு ‘சிக்கன் எதுனா வேணும்னா சொல்லு சார்’ என்றான். வெங்கடேசன் வேண்டாம் என்பது போல் கையசைத்தார். ராஜியின் மருந்து பாட்டில்கள் போல அந்த பாட்டிலை திறக்க சிரமப் பட்டார். முகர்ந்து பார்த்தபோது வீச்சம் தலைக்கேறி ஒரு முறை சிலிர்த்துக் கொண்டார்.

எதிரே ஒருவன் பாட்டிலை உடைத்து மதுவை கப்பில் ஊற்றி தண்ணீரை அதில் பீச்சி அடித்து ஒரே மடக்காகக் குடித்துக் கிளம்பினான். அதை பார்த்துக்கொண்டிருந்த வெங்கடேசன் தன் பாட்டிலில் இருந்த முக்கால்வாசி மதுவை ஊற்றி கொஞ்சம் தண்ணீரை பீச்சி வாயில் ஒரேடியாகக் கவிழ்த்தார். மதுவின் வீச்சம் ஒத்துக்கொள்ளாமல் புரையேறி இருமினார். உணவுக் குழாய் நெடுக கதகதப்பாக அந்தத் திரவம் பயணிப்பதை உணர்ந்தார். குமட்டிக்கொண்டு வந்தது. வாய் எதையாவது மெல்ல வேண்டும் போல இருந்தது. கடலையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். மிச்ச மதுவையும் ஊற்றி தண்ணீர் கலக்காமல் கண்களை மூடிக்கொண்டு குடித்து முடித்தார்.

லேசாக தலை கிறுகிறுத்தது. வெளியுலகமே சற்று நேரத்திற்கு பரிச்சயமற்றுப் போனது. எழுந்து நிற்க முடியவில்லை. முயன்று எழுந்தபோது தள்ளாடி கீழே விழப் போகையில் சிறுவன் பிடித்துக்கொண்டான். வாந்தி வருகிறது என்று சொன்னதும் சிறுவன் அதே மூலைக்கு அழைத்துச் சென்றான். மதிய உணவெல்லாம் வெளியே வாந்தியாக வந்தது. வீட்டுக்குப் போகணும் என்று முனகினார். பார்த்துக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் அவர் சொன்ன பேருந்துக்கு கைத்தாங்கலாக அழைத்துச் சென்று டிக்கெட்டையும் எடுத்துக்கொடுத்தார்கள்.

அவரால் உட்காரவே முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு மயக்கமாக வந்தது. பேருந்தில் தூங்கிக்கொண்டே வந்தார். தன் சீட்டின் முன் சாய்ந்த போது கைகள் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணின் தோள் மீது சரிந்தன. அந்தப் பெண் சத்தம் போட்டதும் பேருந்தில் இருந்தவர்களெல்லாம் அவரை அடிக்கத் தொடங்கினர். கைகளால் தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட அவருக்கு அப்போது இல்லை. பேருந்தை நிறுத்தி அவரை குண்டுக்கட்டாக தூக்கி படியிலிருந்து தள்ளி விட்டனர். அவர் காதில் மாட்டிக்கொண்டிருந்த ஒரு கால் செருப்பு கீழே விழுந்ததும் சாக்கடையில் அடித்துச் சென்றது . மைல்கல்லில் சாய்ந்து விழுந்து கிடந்தார். இரவு முழுதும் அங்கேயே கிடந்தார்.

மறுநாள் காலையில் அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவன் ஒருவன் அவரை எழுப்பி, தண்ணீர் வாங்கிக்கொடுத்து ஆட்டோவில் கொண்டு வந்து விட்டான். தன் வியர்வை வாடை தன்னுடையது போலவே இல்லை.பிசுக்காக ஒட்டியது. சட்டையெல்லாம் அழுக்காக இருந்தது. கால்சராய் மடிப்பு முழுதும் மணலாகக் கொட்டியது. நெற்றியிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டிருந்தது. ராஜியின் அறைக்கு வந்து பார்த்த போது அவள் கண்ணெல்லாம் சிவந்து வீங்கி இருந்தது. முன்தினம் டயப்பர் கட்ட மறந்திருந்தார். ராஜியின் ஆடை, மெத்தை முழுதும் சிறுநீர் நாற்றம் அடித்தது. ராஜியை அலுங்காமல் வீல்சேரில் அமர வைத்து பாத்ரூமுக்கு கூட்டிச்சென்றார். அப்போதும் விசும்பினாள். பிறகு தானும் குளித்து நெற்றிக்கு பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டார். காலை உணவை சில நிமிடங்களில் தயார் செய்து ராஜியின் ஹாட்பேக்கில் போட்டு வைத்து தானும் தன் டப்பாவில் போட்டுக்கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டார்.

காலை வகுப்பில் கணக்குகள் வழக்கம் போல் வந்தன. மாணவர்களும் பழைய மாணவர்கள் கேட்ட அதே சந்தேகங்களைக் கேட்டனர். இவரும் மனப்பாடமே ஆகிப்போன பதிலைக் கூறி தெளிவு படுத்தினார் . மதிய உணவை தனியாகவே சாப்பிட்டார். டப்பாவைத் திறந்ததும் அதே ஊசிப்போன வாடை அடித்தது.

இரண்டு தோசைகள்

(பரிசு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை, எழுதியவர் ராஜா (எ) இளமுருகு)

இரண்டாவது தோசையை வேகமாக பிய்த்து வாயில் போட்டு, டம்ளரில் இருந்த தண்ணீரைக் குடித்தபடியே “குமாரு, கணக்குல எழுதிக்கோ” என்று வேகமாக ஹோட்டல் படியிறங்கி பைக்கில் உட்கார்ந்தேன்.அது நான் தினசரி சாப்பிடும் ஹோட்டல், காலை இரவு என்று 2 வேளை அங்கே சாப்பிடுவது வழக்கம், சில நேரங்களில் மதியம் மட்டும், வாரயிறுதியில் எப்பவாவது இல்லாமலும் கூட போகும். ஹெல்மெட் எடுக்கலாம் என்று திரும்பிய கணத்தில் ஒரு கை நீண்டது. அவருக்கு 45லிருந்து 50 வயதிருக்கலாம். நிறைய முடி நரைத்திருந்தது, சவரம் செய்து எப்படியும் 6 மாதமாவது இருக்கும், குழி விழுந்த கண்கள், அழுக்காக.. இல்லை இல்லை மிகவும் அழுக்காக இருந்தார். உடைகளை அவர் சமீபத்தில் துவைத்திருப்பதற்கான அறிகுறியே இல்லை. எங்கேயோ கீழே கிடந்ததைப் பொறுக்கி அப்படியே அணிந்து வந்திருக்கிறார், இல்லையெனில் யாராவது பழைய துணி கொடுத்திருக்கலாம். எப்படியாக இருந்தாலும் துவைக்கவில்லை.

“என்ன” என்றேன். “சாப்பிட்டு 2 நாளாச்சு சார், ஏதாச்சும் வாங்கிக்குடுத்தீங்கன்னா புண்ணியமாப் போவும்”. நான் அவரை மேலும் கீழும் பார்த்தேன். அவர் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். இவர் சாப்பிடக் கேட்கிறாரா? இல்லை டாஸ்மாக்கில் கட்டிங் வாங்க கேட்கிறாரா என்று தெரியவில்லை. “சாப்பாடு வாங்கித்தந்தா சாப்பிடுவீங்களா? இல்லை, காசுதான் வேணுமா?” இன்னும் எனக்கு சந்தேகம் விலகவில்லை. “சாப்பிட வாங்கிக்குடுங்க சார், அது போதும்” தொண்டை கமறியது அவருக்கு.

நான் திரும்பி “குமாரு, இவருக்கு எதாச்சும் சாப்பிடக்குடு, என் கணக்குல சேர்த்துக்கோ” என்றேன். “சார், அதெல்லாம் சரியா வராது சார், நான் வெளியில இட்டாந்து தந்துர்றேன், அந்தாளு அங்கனயே சாப்பிட்டுகிடட்டும்” “பரவாயில்லை சார், நான் சாப்பிட்டுக்கிறேன் சார். நீங்க நல்லா இருக்கனும் சார்” “இருக்கட்டும், நீங்க சாப்பிடுங்க” என்று கிளம்பி 4 வது கியரை மாற்றவில்லை, ஏதோ தோன்ற திரும்ப ஹோட்டலுக்கே வந்தேன். அவர் வாசலில் காத்திருக்க குமார் இரண்டு தோசையை பார்சல் செய்து கொண்டு வந்து தந்தான். “அந்தப் பக்கம் போய் சாப்பிடு பெர்சு” என்றான், என்னைக் கண்டு திடுக்கிட்ட குமார் “இல்ல சார், மொதலாளி வந்தா திட்டுவாரு சார், அதான்…” என்று இழுத்தான்.

பெரியவர் பார்சலை வாங்கி பிளாட்பார்ம் வந்து சாப்பிட ஆரம்பித்தார், அவர் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன், சரியான 40வது விநாடியில் இரண்டு தோசைகளையும் சாப்பிட்டு முடித்திருந்தார். கை கழுவ தெருக்குழாய் நோக்கி நகர்ந்தார். நான் அவரைக் கூப்பிட்டேன், அப்படியே குமாரையும். “குமார், இனிமே இவர் சாப்பிட எப்போ கேட்டாலும், என்ன கேட்டாலும் சாப்பிடக்குடு, சரியா” பெரியவர் ஏதோ பேச எத்தனித்தனிப்பதற்குள் நான் அந்த இடத்தைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டேன். அந்தப் பெரியவருக்கும் எனக்கு ஏதோ தொடர்பு இருப்பதைப் போன்றதொரு உணர்வு, நான் சிறுவனாக இருந்த போது என் தந்தை ஊரை விட்டுப் போய்விட்டாராம். காசியில் சாமியாராகி விட்டதாக சிலர் சொன்னார்கள், இராமேஸ்வரத்தில் பிச்சையெடுப்பதாகவும் சொன்னார்கள். அதுகூட இவருக்கு சாப்பாடு வாங்கித் தருவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏதோ ஒன்று இப்பொழுது மனம் நிரம்பியிருந்தது, என்னவென்று அறியாத ஓர் இனம் புரியாத சந்தோசம்.

அப்புறம் அந்தப் பெரியவரை சாப்பிடப் போகும்போதெல்லாம் தேடுவேன், பார்த்ததேயில்லை. அடுத்த மாதம் அக்கெளண்ட் செட்டில் செய்யும் போதுதான் கவனித்தேன், கணக்கு சரிவிகிதம் எகிறி இருந்தது, காலை 2 தோசை, இரவு 2 தோசை, இப்படித்தான் வாரம் ஏழு நாட்களும் அவர் சாப்பிட்டிருக்கிறார். ஆச்சர்யமாய் இருந்தது, எப்படி ஒரு மனிதன் காலை இரவு என இரு வேளைகளுக்கும் தோசை மட்டும் சாப்பிட முடிகிறது, சரி, எதுவும் இல்லாமல் இருப்பவருக்கு தோசை கிடைக்கிறதே என்று சாப்பிடுவார் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அந்த மாதமும் அவரைச் சந்திக்காமலேயே கழிந்தது. அவர் தவறாமல் சாப்பிட வருகிறார் என்று உறுதி செய்தான் குமார். அடுத்த மாதம் கணக்கை செட்டில் செய்யும் போது ஏதோ உறுத்தியது. அந்த ஒரு வேளை மட்டும் வாங்கிக்கொடுத்துவிட்டு விலகியிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனாலும் மனதில் ஏதோ உந்த பரவாயில்லை என்று விடத்தோன்றியது.

அடுத்த மாதம் பாதியில் குமார் என் செல்போனுக்கு அழைத்தான். “சார், அதான் சார், அந்தப் பெருசு உள்ளாரதான் சாப்பிடுவேன்னு சொல்லுது சார், முதலாளி கத்துறாரு சார். நீ பார்சலே வாங்கிக்கச் சொல்லு சார், பேஜாரா போவுது சார்” என்றான் பதட்டமாக. என்னடா இது பெரிய தொந்தரவாக போயிற்றே என்று “குமார், நீ ஒன்னு பண்ணு, இன்னும் ஒரு வாரத்துக்கு பார்சல் வாங்கிக்கச் சொல்லு, அப்புறமா நான் அவர்ட்ட பேசிக்கிறேன்” என்று கட் செய்தேன்.

கொல்கத்தா போனபிறகு பெரியவர் மனதிலிருந்து காணாமல் போயிருந்தார். திரும்ப சென்னை திரும்ப 10 நாட்கள் ஆகிற்று.

அடுத்த மாதம் கணக்கை செட்டில் செய்யும் போதுதான் கவனித்தேன், கணக்கில் குறைந்தது. குமாரை கூப்பிட்டு விசாரித்ததில் தெரிந்தது, பணம் வாங்கி 4 நாட்கள் ஹோட்டல் உள்ளே வந்தே சாப்பிட்டிருக்கிறார், துணியெல்லாம் புதிதாகப் போட்டிருந்தாராம், ஹோட்டலுக்குள் சாப்பிடுவதை மிகவும் கெளரவமாக நினைத்து சாப்பிட்டாராம். ஆனாலும் காலை, மாலை 2 வேளைகளிலும் 2 தோசை என்கிற கணக்கில் எந்த மாற்றமும் இல்லை. அப்புறம் அவர் என்னை முறை கேட்டிருக்கிறார், அவ்வளவுதான் திரும்ப அவர் வரவேயில்லை. அவரைத் தேடுவதா? இல்லை விட்டது தொல்லை என்று கிளம்பிவிடலாமா என்று ஒரே குழப்பம். இரு தெருக்களில் தேடிப்பார்த்தேன், சிக்கவேயில்லை. நாளடைவில் அவரை மறந்துவிட்டிருந்தேன்.

ஒரு நாள், இரவு 10 மணி வாக்கில் கோயம்பேடு, மார்க்கெட் தாண்டிப் போகையில ஒருவர் அரக்கப் பரக்க என் பின்னாடி ஒருவர் ஓடி வந்தார், சட்டென அடையாளம் தெரியவில்லை. “தம்பி” என்று இரு கை கூப்பினார். அந்த தம்பி என்கிற வார்த்தையிலேயே புரிந்துவிட்டது, அந்த 2 தோசைப் பெரியவர். “நல்லா இருக்கீங்களா தம்பி?”

“நல்லா இருக்கேன், எங்கே இப்பல்லாம் வந்து சாப்பிடறது இல்லை போல. நீங்க இப்ப..” என்று இழுத்தேன்.

“இல்லே தம்பி, பிச்சை எடுக்கிறது இல்லை. நீங்கதான் அதுக்குக் காரணம்..”

ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றேன்

“சொல்லுங்க என்னாச்சு”

“தினமும் உங்க காசுலேயே சாப்பிடுவேன், பிச்சையெடுப்பேன். இப்படியே போயிட்டு இருந்துச்சு. ஒரு மாசம் கழிச்சு, நீங்கதான் காசு தரீங்க. அதுவும் முழுசாத்தான் தரீங்க. ஏன் உள்ளே உக்காந்து சாப்பிடக்கூடாதுன்னு கேட்டேன். அதுக்குக் கோவிச்சிட்டாரு அந்தத் தம்பி..”

“யாரு குமாரா?”

“ஆமா, அந்த சர்வர் தம்பிதான். ஏன்னு கேட்டேன். குளிக்கலை, அழுக்கா இருக்கேன்னு சொன்னாப்ல. சரி இருக்கிற, பிச்சையெடுத்த காசை வெச்சி, சவரம் பண்ணிட்டு, நல்ல துணி போட்டுட்டு போய் 2 நாள் சாப்பிட்டேன். நல்ல துணி போட்டுக்கிட்டதால பிச்சை எடுக்க தோணவும் இல்லை, நல்ல துணி போட்டிருக்கிறதால யாரும் பிச்சை போடவும் இல்லை. அதான் மார்க்கெட் பக்கம் வந்து வேலை தேடினேன். இப்ப இருக்கிற முதலாளி காய்கறி கடை வெச்சிருக்காரு. கூடமாட ஒத்தாசையா இருந்துக்கோன்னாரு. ராவுக்கு அங்கேயே படுத்துக்கவும் சொல்லிட்டாரு. இப்பல்லாம் பிச்சை எடுக்கிறதில்லை தம்பி. ஆனா பிச்சைன்னு கேட்டா காசு குடுக்கிறதில்லை, சாப்பாடு வாங்கித் தந்துடறேன். நீங்க சொல்லிக்குடுத்ததுதான் தம்பி”

எனக்குப் புரியவேயில்லை, சாப்பாடு போட்டா சோம்பேறி ஆகிடுவாங்க என்கிற விதி போய், பிச்சையெடுத்தவர் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

சிரித்தபடியே “சந்தோசம்ங்க பெரியவரே! எனக்குப் பசிக்குது, நீங்க சாப்பிட்டீங்களா? என்றேன்

“இல்லை தம்பி, இப்பத்தான் முதலாளி கடையைச் சாத்தினாரு. இனிமேதான்..”

“சரி, சர்வர் எனக்கு ஒரு பூரி மசால் குடுங்க. உங்களுக்குப் பெரியவரே..” என்றேன் அவரைப் பார்த்து

“2 தோசை” என்றார்.

மாசாவின் கரங்கள்- தனா

(சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, எழுதியவர் முகவரி vedhaa@gmail.com)

மணலை வாரி இறைத்தபடி போருக்கான ஓலத்துடன் வெகு வேகமாக பாலையைக் காற்று கடந்துகொண்டிருந்தது. ஒழுங்கற்ற வட்டமாய் வேலியிடப்பட்ட மந்தையில் அரைக்கண் மூடி இன்னும் எத்தனை தூரமென்ற ஆழ்ந்த சிந்தனையில் நின்றபடியும், கால் மடக்கி மணலை அழுத்தியபடியும் கிடந்தன ஆடுகள். அதன் தடித்த மயிர்களுக்கிடையே மணல் செருகிக்கிடந்தது. ஆழ்ந்து ஊன்றப்பட்ட கோலுக்கும் காலுக்குமான கயிற்றைச் சட்டை செய்யாத கழுதைகள் மெல்லிய உடலசைவுடன் அரையுறக்கம் கொண்டன. பாம்பூர்ந்த தடத்தை கடந்த தேளொன்று மணல்பெருக்கிய நடையுடன் வரும் தியாசைக் கண்டதும் சட்டென தன்னை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது. ஆங்காங்கே பொருத்தப்பட்ட நெருப்புகள் பல அணைந்து கங்குகளாய் கனன்றன. மற்றவை காற்றுடன் உத்வேகமாய்ச் சண்டையிட்டு சடசடத்தன.

தரையில் பாவாமல் பாவி, பின் அந்தரத்தில் சுழன்றாடும் மணற்புயலின் இரவொன்றில் யனோவா சன்னதம் கொண்டான். ஜெஹோவாவின் மொழியில் கதறியபடி பித்லாஹ்மியின் தெருக்களில் அலைந்தான். மக்கள் காற்றில் தள்ளாடியபடி முகம் மறைத்து, கண்கள் சுருக்கி அவனை தொடர்ந்தனர். வற்றிய பெண் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியபடி தெருக்களைப் பார்த்தனர். கூடத்தை அடைந்த கிழவன் பலிமேடை பற்றி மூச்சிரைத்தான். மண் படர்ந்த உதடு பிரித்து ஓலமிட்டான். திசைக‌ளில் கிழக்கை அவன் கண்கள் பற்றின. கைகளும் அதையே சுட்டின. வெயிலூறிய பகலொன்றில் இரைக்கான ஆடுகளோடும், பொதிக்கான கழுதைகளோடும் பெருங்கூட்டமாய் கிளம்பினர் மக்கள். பல சூர்யோதங்களை கடந்தபின், இயற்கையால் உறிஞ்சப்பட்டவர்கள் தவிர எஞ்சியோர் இதோ இப்பாலையில் கிடந்தனர்.

பெருந்துயர் போர்த்திய அக்கூட்டத்தில் எவருக்கும் விழித்திருக்க வலிமையில்லை. உடல்கள் தெரியாவண்ணம் அவர்கள் மேல் கவிந்திருந்த கம்பளி கிழிசலுக்குள்ளே தட்டுத் தடுமாறி வழியறிந்து நுழைந்து கொண்டிருந்தது குளிர். அழத்திராணியற்ற குழந்தைகள் மரணித்ததைப்போல் தூங்குகின்ற இரவிது. பெரும் மணற்பரப்பை கடக்கத் துணிந்த மக்களுக்கு இத்தகைய இரவு பகல் இன்னும் முழுதும் பழக்கப்படவில்லை. சுடும்பகலில் விழிக்காதவர்கள் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டு மறக்கப்பட்டனர்.

மாசா தன் உடல் முழுதும் மறைக்காத கம்பளிக்கு பணிந்து, அதற்குள் தன்னை குறுக்கிக்கொண்டாள். குளிரில் விரைத்த அவளின் முலைக்காம்புகளும், பாதங்களும், மணல் கடந்து மரமொதுங்கும் அவளின் கனவுகளுக்குள் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டன.

தியாஸ் தனக்கு வணங்காத கால்களை இழுத்து இழுத்து அக்கூட்டத்தை நெருங்கினான். வீங்கிய அவன் உதடுகள் குளிரில் மரத்துப்போனாலும் கடுத்தது. அவனின் அழுக்கு தோய்ந்த கருப்பு உடையின் உள்ளே, உறுப்புகள் மீது வலிகள் தெறித்தன. கண்ணில் தெறிக்கும் மணலை கைகளில் தடுத்தபடி, அலங்கோலமாய் ஆங்காங்கே குவிந்திருக்கும் கம்பளிகளை கண்டான். கண்ணீர் இளஞ்சூடாய் விழிகளை நிரப்பியது. நீர் முழுதும் வற்றிய உடலில் எங்ஙனம் புதிதாய் ஊற்று பிறக்கிறது என்ற ஐயம் அவனுக்கு இருந்தது. அவன் தொண்டையில் எழுந்த கேவல்களை பல்லடைத்து அடக்கிக்கொண்டான். கட்டித்துக்கிடந்த அவன் தலைமயிர்க்கடியிலும், கீழ்தாடையிலும் ரத்தத்துடன் வலி உறைந்து நின்றது.

மணல் தேய்த்து நடந்தபடி நெருப்பருகே சென்றான். புனல் வாய் போன்ற இரும்பு குடுவையில் சுள்ளிகள் எரிந்தன. அதை தன் இளைத்த கைகள் கொண்டு எடுத்தான். தீ வெடித்துச் சிதறி காற்றுடன் நகர்ந்து காணாமலாயின. கறுத்திருண்ட பெரும் மேகங்களாய் கிளம்பிய கூட்டம் சில காலங்களில் சிறுத்துப் போனது, அவனுக்கு மாசாவை கண்டறிய உதவியாய் இருக்க கூடும். நெருப்பை இடவலது திருப்பி, உற்றுப் பார்த்தபடி கூட்டத்தில் புகுந்தான்.

உப்பி சுருண்டிருந்த பசோக்காவின் கம்பளியை அடையாளம் கண்டான். சாம்பல் நிறத்தில் கறுப்பு கோடிட்ட நிறத்தில் இருந்த அழகிய கம்பளி இப்பொழுது வெளிறி நைந்திருந்த்து. முன்பு ஒரு குளிர்காலத்தில் பசோக்காவின் வீட்டிலிருந்து அக்கம்பளியை எடுத்துக்கொண்டு வெளிவரும் போது பசோக்கா வாசலுக்கு வந்துவிட்டிருந்தான். கம்பளியை கீழே வைத்துவிட்டு அதிரும் இதயத்துடன் மெல்ல அவனை கடக்கையில் பசோக்காவின் நுரை பொங்கும் எச்சில் தியாசின் காதில் சொத்தென விழுந்தது. திரும்பாமல் நடந்த தியாஸ் அந்த எச்சிலை அவனை விட்டு மறையும் வரை துடைக்காமல் இருந்தான். பசோக்கா இத்திருட்டை பற்றி யனோவாவிடம் முறையிடாமல் தன்வீட்டுப்பொருட்களை தியாசிடமிருந்து காத்துக்கொண்டான். இப்பொழுது அந்த கம்பளிக்குள் குழந்தையின் அசைவைக் கண்டான் தியாஸ். அக்கம்பளி பசோக்காவையும், அப்பெண் குழந்தையையும் மட்டுமே உள்ளடக்க முடியும். அவன் அருகில் யாரும் சுருண்டிருக்கவில்லை. அவன் மனைவி இரக்கமுள்ளவள்.
தியாஸ் குறுக்கும் நெடுக்குமாக காலை இழுத்துக்கொண்டு அலைந்தான். கண்ணீர் முற்றிப்பெருக மனம் வெகுவாய் அடைத்துக்கொண்டது. தவிட்டு நிறமுடைய கம்பளிக்கு வெளியே தண்ணீர் குடுவையின் மர மூடியை நெருப்பு காட்டியது. சத்தமின்றி மெல்ல உருவினான். குடுவையின் வாய்ப்பகுதியில் நீர் கசிந்திருந்தது. பாதி அளவுள்ள தண்ணீரை கனம் உணர்த்தியது. சிரமத்துடன் உதடு பிரித்து இரண்டு மிடறுகள் விழுங்கி விட்டு மரமூடியை அழுத்தி மூடி கம்பளிக்குள் செருகினான். நீர் நெஞ்சை கடந்ததாகத் தெரியவில்லை.

காற்றின் வேகம் குறைந்த கணத்தில், மந்தையில் ஓர் ஆடு சத்தமிட்டது. தியாஸ் அதை நோக்கி விருவிருவென நடந்தான். மந்தையின் ஓரத்தில் மாசாவின் கம்பளி இருந்தது. மாசாவிற்கு அவன் அளித்த முதற்பொருள். ஒருநாள் முழுக்க போர்த்திவிட்டு தன் வாசனையுடன் அவளுக்கு கொடுத்தான். அவனின் இடுங்கிய கண்களை கண்டவாறே மாசா பெற்றுக்கொண்டாள். கருப்பும், கருஞ்சிவப்புமான முடிகளை கொண்ட கம்பளி. நெருப்பை அவளருகே நிறுத்தி வைத்தான். மறுபடியும் அவளருகே வீற்றிருப்பதின் மகிழ்ச்சி, யாகுதாவின் அடிவயிற்று உதையில் பெற்ற நீண்ட வலியை மறைத்தது. வெகு நேரம் குளிருக்கு முகத்தைக் கொடுத்து காலைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். போதிய வெளிச்சத்தை தரவியலாத விண்மீன்களும் குறை நிலவும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தன.

தியாஸ் மெல்ல கம்பளிக்குள் கை நுழைத்து அவளின் குளிர்ந்த கணுக்காலை பற்றினான். பாம்போ தேளோவென பயந்து கால் உதறி திடுக்கிட்டு எழுந்தாள் மாசா. பசியும் தூக்கமும் பொங்கிய கண்களுக்கு தியாஸ் கலைக்கப்பட்ட முகம் கொண்ட ஓவியமாய் தெரிந்தான். மாசா கண்களை அழுத்தி மூடி பின் திறந்து பார்த்தாள். நெருப்பின் ஒளியில் தியாஸ் சிவந்து தெரிந்தான். மாசா கம்பளியை இழுத்து போர்த்தி குனிந்து கொண்டாள்.

“என்னை பார் மாசா” என்றான் தியாஸ் முனங்கும் உதட்டுடன். அவன் உடல் மெதுவாக நடுங்கத்தொடங்கியது. “வழிந்தோடும் உயிரைத் தேக்குவது எத்தனை சிரமம் தெரியுமா மாசா?

மாசா நிமிர்ந்தாள். பாலையில் நெளிந்தோடும் ஒற்றையோடை போல் அவள் வரண்ட வெளுத்த கன்னச்சருமத்தில் நீர் இறங்கியது. “நீ போய்விடு தியாஸ், நான் உன் உயிரற்ற தேகத்தை பார்க்க விரும்பவில்லை. நீ போய்விடு. அதற்காக நான் உனக்கு நன்றியுடையவளாய் சாவேன்” மெல்லிய கேவலில் விசும்பினாள். பின் தலை திருப்பி அடங்கிப்போன அக்கூட்டத்தை பார்த்தாள். எங்கேயும் அசைவில்லை.

“இப்பெரும் மணற்பரப்பில், உனக்கு எதிரான திசையில் செல்ல எனக்கு தைரியம் இல்லை மாசா”. அவள் அழுகையும் பெருகியது. தன் கைகளைக்கொண்டு வாயைப் பொத்திக்கொண்டாள்.

“பார் மாசா, அத்தனை பேர் அடித்தும் என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. மயக்கம் குறைந்து வலி தெறிக்க நான் இமைகள் விரித்த போது ஒரு மணல் குன்றை கண்டேன். நிச்சயமாய் மாசா, உன் மஞ்சள் நிற மார்பகங்களையே கண்டேன். பெரும் மணலாய் நீயே படுத்திருந்தாய். வலிக்க எழுந்து போய் அம்மணலில் முகம் புதைத்தேன். நீயே எனக்கு உயிரூட்டினாய். இன்று நான் உன்னை மறுபடியும் பார்த்துவிட்டேன் மாசா. இனி என்னால் உன்னை பிரிய முடியாது,” அவளின் கரம் பற்றினான்.

மாசா அவன் உள்ளங்கைகளில் சூட்டை உணர்ந்தாள். “நீ போய் தான் ஆக வேண்டும் தியாஸ். இவர்கள் விழிக்கும் போது இங்கே இருக்காதே. இன்னுமொருமுறை அவர்கள் உன்னை அடிப்பதை காண்பேனானால் தாய் தந்தையரற்ற என் சகோதரிக்காக நான் உயிர் வாழ‌ முடியாம‌ல் போய்விட‌க்கூடும். வில‌கி போய்விடு தியாஸ். என் த‌ந்தைக்கு நான் ச‌த்திய‌ம் செய்திருக்கிறேன். என் தமையனின் பிஞ்சு உடல் கூறாக்கப்பட்டு அள்ளிச்சென்றபோது, வெட்டுப்பட்டுக்கிடந்த என் தந்தைக்கு நான் சத்தியம் செய்திருக்கிறேன். இதோ என் வயிற்றில் என் தமையன்.. உன் மகன். நான் இவனைப் பெற வேண்டும். உயிருள்ளதாய். சிரித்து, துள்ளி மணலை இறைத்து விளையாடும் அவனை நான் திரும்பப்பெற வேண்டும். நீ போய் விடு. எங்காவ‌து சென்று பிழைத்து கொள் தியாஸ்.. இனியும் திருடாதே..”

தியாஸ் கன்னம் இழுக்க, வலியில் முன்ங்கியவாறே அழுதான். குரல் வெளிவரவில்லை. ஆனால் கழுத்து நரம்புகள் வெட்ட வெட்ட அவன் அழுதான். மாசா கம்பளியால் தன் முகத்தைப் பொத்திக்கொண்டாள். தியாஸ் அவள் கம்பளியை பிடித்து இழுத்தான். அவள் இறுக்கப்பிடித்தபடி உள்ளே குலுங்கிக்கொண்டிருந்தாள். தியாஸ் அவள் முகத்தை நிமிர்த்திப்பார்த்தான்.

யோசேப்புவின் வீட்டிலிருந்து மரச்சில்லுகளை பொறுக்கி தன் வயிறு முழுக்கச்சுற்றியபடி வந்த மாசாவை தியாஸ் வழிமறித்தான். பிள்ளை உண்டானது எப்படி என்று வம்பிழுத்தான். மாசா அவனை போடா திருடா என்றாள். தியாஸ் அவள் மரச்சில்லுகள் கொண்ட மடியை உருவிவிட்டு தள்ளிப்போய் நின்றுகொண்டான். ரொட்டிக்கும் மரச்சில்லுக்கும் தன்னை விற்றவளே என ஏசினான். அவள் கண்ணில் கண்ணீர் பொங்க அவனை முறைத்தபடி நின்றாள். அவன் அலட்சியமாய் சிரித்தான். அவள் அங்கிருந்து நகரவுமில்லை. மரச்சில்லுகளை பொறுக்கவுமில்லை. தியாஸின் முகம் மாறியது. சரி விடு. கோவப்படாதே என்றான். மாசா அவனிடம் எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்துத் தந்தால் ஒழிய நகர மாட்டேன் என்றாள். தியாஸ் அவளை அடிக்க கை ஓங்கினான். அவள் கண் இமைக்கவில்லை. மெல்லக்குனிந்து பொறுக்க ஆரம்பித்தான். அவள் கால்களை சுற்றிக்கிடந்த சில்லுகளை பொறுக்கினான். அவள் கால்கள் திடமாய் நின்றிருந்தன. மெல்ல வருடினான். அவை இளகின. பின் அவள் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். மாசா அவன் தலை கோதினாள்.

விறகுகளை தீயுடைக்கும் ஓசையுடன் மக்கள் எழுந்தனர். மாசா பதறினாள். தியாஸ் பல்லை இறுக்கக் கடித்தபடி வீம்புடன் அமர்ந்திருந்தான். சகேயு ஓடி வந்து தியாஸை எட்டி உதைத்துத் தள்ள தியாஸ் பின்னால் சரிந்து விழுந்து பின் உடல் மணலில் இழுக்க ஊர்ந்து மாசாவின் இரு கரங்களைப்பற்றி தன் முகத்துடன் சேர்த்து அழுத்திக்கொண்டு அவள் மடியில் தன்னை புதைத்துக்கொண்டான். எத்தனை சூடு அவள் கரங்களுக்கு.. இச்சூட்டில் தானே என் மகனும் வாழ்கிறான் என எண்ணிக்கொண்டான். ஆம் அவன் என் மகன் தான். அவள் கரங்களை தன் கரங்களால் அழுத்தி பிடித்து முகத்தில் வைத்துக்கொண்டான். சகேயு தியாசின் முதுகில் உதைக்கத்தொடங்கினான். பின் மாசாவிடமிருந்து அவனை பிரிக்க அவன் ஆடை பற்றி இழுத்தான். தியாஸ் மாசாவின் இரு கரங்களை விடாமல் பற்றிக்கொண்டான். சகேயு மூச்சிரைக்க தியாஸின் கழுத்தில் ஓங்கி மிதித்தான். தியாசின் கைகள் சட்டெனத்தளர மாசா தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்து சகேயுவின் கால்களை கட்டிக்கொண்டு அழுதாள். உலர்ந்த பார்வைகள் கொண்ட மக்கள் அவர்களைச் சுற்றி குளிரில் நடுங்கி நின்று கொண்டிருந்தனர். மெல்ல நடந்தபடி யனோவா வந்தார். தியாசைக்கண்டதும் சிவந்த விழிகள் விரிந்தன. அவன் மேல் காரித்துப்பினார். மாசா இப்பொழுது யனோவாவின் காலைக்கட்டிக்கொண்டாள். எத்தனை சுற்றம் இருந்து தந்தையின்றி என் பிள்ளை பிறக்கலாமா? கருணை கொள்ளுங்களேன் என இறைஞ்சினாள். ய்னோவா அவளை குனிந்து பார்க்கவில்லை. தியாசை மட்டுமே நோக்கினார். பின் கூட்டத்தை நோக்கினார்.

பிறந்த மகவெல்லாம் இறந்தன. வயிற்று நீரில் ஊறி வளர்ந்த அங்கங்கள் வெட்டப்பட்டு இறந்தன. விடாய் கொண்ட மண் எத்தனை சுலபமாய் அத்தனை ரத்த்தையும் உறிஞ்சியது என்று நாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். நம் இறைவனுக்கு நாம் செய்த துரோகம் என்ன? அவன் கருணை பாலைக்காற்றாய் நம்மை கடந்து போய்விட்டதேன் என அறியோம். ஆனால் அவன் நம்மை காப்பான் என்றுதானே இன்னும் கோலைக் கைபிடித்தவண்ணம் உயிர்பிடித்து நிற்கின்றோம். அவனின் கருணை பொழிய வேண்டுமென்றுதானே மிஞ்சிய நம் உடைமைகளை அவனுக்கு பலியாய் வளர்த்தோம். அதைத் திருடிப் புசித்தவன் நம்முடையவன் என்றால் எங்ஙனம் குளிரும் நம் தந்தையின் உள்ளம்? எங்ஙனம் மகவாய் பிறப்பான் எம் தந்தை? பின் மெல்ல மாசாவைக் குனிந்து நோக்கினார்.

சகேயு தியாசை இழுக்க, எந்த மீறலும் இல்லாமல் தியாசின் உடல் மாசாவின் கரங்களிலிருந்து வழிந்தது. சிலர் மாசாவை தூக்கி இழுத்துக்கொண்டு போனார்கள். அவள் தன் அத்தனை ஆற்றலையும் கொண்டு கத்தினாள். பாலை அதை ஒரு சிறு நரியின் ஊளையாய் எடுத்துக்கொண்டது. கூட்டம் மெல்ல குழந்தைகளையும் உடைமைகளும் எடுத்துக்கொண்டு நத்தையென ஊறி தியாசைத் தனிமையாக்கினர். எழவோ திரும்பவோ முடியாமல், மண்ணிலிருந்து தியாஸ் தன் தலையை மெல்ல உயர்த்தினான். தன் எச்சில் படர்ந்த மண்ணை மட்டும் நோக்கி மகனே யூதாஸ் என முனங்கியபின் உயிர்விட்டான்.