சுசித்ரா மாரன்

குறுஞ்செய்தி

சுசித்ரா மாறன்

நீலக் குறியீட்டுக்கு முன்
நீக்கப்பட்ட குறுஞ்செய்திக்கு
பலநூறு நஞ்சுக்கொடிகள்

யூகங்களை உண்டு வளரும்
சிசுக்களின் பாலினம் ஆசைக்கேற்ப அமைகிறது

கைபிடித்த காலை நடைபயிற்சியாகவும்
பின்னிருந்து கட்டிக்கொண்ட திடுக்கிடலாகவும்
கிச்சுக்கிச்சை உணரும்போதே
கடைசி கையசைப்பின் அசையுறு படம் உதைக்கிறது

பிறந்த பிறகு பெயர் தேடலாம்
இன்னும் கொஞ்ச நாட்கள் நீக்கி நீக்கி விளையாடு
எதிர்பார்ப்பின் பரவச வண்ணங்கள்
பூசி வாழ்நாள் முழுமைக்குமான
கூரை செய்து கொள்கிறேன்.

ஏதுமற்றுப்போன நேசம்

சுசித்ரா மாரன்

ஊடலின் சுவர்கள்
மௌனத்தின் நீர் உறிஞ்சி
கடினப்படுகின்றன
நக்கிக் கரைக்கும்
நாய்க்குட்டி அன்பின்
வால் நறுக்கிய வள் வள் சொல் கூட
சுவரின் அங்கம் தான்
கனிகவர் திறனற்ற சொற்கள்
உடைபடும் பிரியத்தின் கையறு சாட்சிகள்
ஏதும் இயலா இச்சொற்களின் தகனத்தில்
தீப்பாய்ந்து ஏதுமற்றுப்போன நேசம் தான்
முன்பு எல்லாமுமாய் இருந்ததும்

கைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை

கால எறும்புகள்
ஊர்தலில்
கரைந்து கொண்டிருக்கிறது
கைவிடப்பட்ட வீடு

காணாமல் போகுமுன் 
யாரிடமாவது
பகிர்ந்து விடவேண்டும்
துருவேறிக் கொண்டிருக்கும்
சில ஞாபகங்களை

கவனமீர்த்தலுக்கென்றே சப்திக்கப்பட்ட
கம்பிக் கதவின் ஒலிக்குறிப்பு
பதின்மத்தின் இசையானதை

விசிறியெறியப்பட்ட சோற்றுத்தட்டின் 
விளிம்பு வெட்டிய பிறை வடுவின்
பின்னிருந்த வன்மத்தை

பகிர்ந்து விட வேண்டும் 
கால எறும்புகள் நினைவுகளில்
ஊரும் முன்

எப்போதேனும்
எச்சமிட்டுச் செல்லும்
அயலூர்ப்பறவைக்கும்
வீட்டின் நினைவெச்சங்களின்
மொழி புரியவில்லை

அன்றைய குழந்தை
வீட்டின் மேனியெங்கும்
கரிக்கோடிழுத்த
அம்மா அப்பா
சினை ஆடு
பஞ்சாரக்
கோழிகளென
குடும்பத்துடன்
வாழும்
குச்சுவீடு மட்டும்
பகலில் எரியும் விளக்காக
அரற்றுகிறது கைவிடப்பட்ட
வீட்டின் பகிரமுடியா துயரத்தை