சிவதனுசு

பங்காளி

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிக்கிடையே அந்த விளம்பரம் வந்தது. எல்லா நிகழ்ச்சிகளிலுமே பத்து நிமிடங்களுக்கொரு முறை, எதிர்கட்சியை கேலி செய்யும் வெவ்வேறு மாதிரியான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதால், ஒருவித சலிப்புடன், செல்வம் ஒலியை அணைத்தபோது தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்த அம்மா இவனைப் பார்த்தார். அவன் முகத்தில் தெரிந்த ஒவ்வாமையைக் கண்டு “என்னாச்சு” என்றார்.

செல்வமும் அவன் அப்பா கணபதியும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். டீபாயின் மேல் கிடந்த லேசாகக் கசங்கிய தமிழ் நாளிதழின்மேல் அம்மாவின் கண்ணாடி இருந்தது.

“பத்து வருசமா இருந்தவனுங்க, தான் செஞ்சத சொல்லாம அடுத்தவங்கள கிண்டல் பண்றானுங்க. நீயும் இவனுங்களுத்தான் ஓட்டப் போடுவ”

அம்மா லேசாக புன்னகைத்து, “அப்படியே பழகிடுச்சு. என்ன பண்ணச் சொல்ற” என்றார்.

கணபதி எந்த உணர்வும் காட்டாத முகத்துடன் ஒலியின்றி ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தார்.

“இதனாலதான் அவனுங்க மேல வர்ற கோபத்தவிட ஒங்க மேல அதிகமா கோபம் வருது”

“ஏன்”

“தலைவரா இருந்த அந்தம்மா இருந்தவரைக்கும் எப்படி பம்மிக்கிட்டு இருந்தானுங்க. இப்ப எப்படி துள்ளிக்கிட்டு திரியிறானுங்க”

“அவங்க துள்றதுல ஒனக்கு என்ன பிரச்சனை”

“எனக்கு பிரச்சனையில்ல. நம்ம மாநிலத்துக்குதான். அந்தம்மா ஏத்துக்காம இருந்த திட்டத்தையெல்லாம் நம்ம மேல திணிச்சப்ப பல்ல இளிச்சுக்கிட்டே ஏத்துக்கிட்டாங்களே அது ஒங்களுக்குப் புரியுதா”

“எவ்ளோ கட்டுப்பாடு கொண்டு வந்தாலும் நம்ம புள்ளைங்க படிச்சு மொத எடத்துக்கு வந்திருங்க. அதப் பத்தி நீ கவலப்படாத”

பதில் சொல்ல முயன்றபோது அலைபேசி அழைத்தது. சண்முகம் அண்ணன்தான் அழைத்தார். அம்மா செல்வத்தின் முகத்தில் தெரிந்த தவிப்பை கவனித்ததும் பார்வையைத் திருப்பி தொலைக்காட்சியை பார்த்தார். அம்மாவின் பாவனையை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்காமலேயே அறையைவிட்டு பால்கனிக்கு வந்தபின் அழைப்பை ஏற்றான். சண்முகம், செல்வத்தின் பெரியப்பா மகன்.

“சொல்லுங்கண்ணே”

“செல்வம் வீட்ல இருக்கியா. கொஞ்சம் அவசரம் அதுக்காகத்தான் இப்ப கூப்ட வேண்டியதாயிடுச்சு. சாரிப்பா”

“பரவாயில்ல, சொல்லுங்கண்ணே”

“ஒன் அண்ணிக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. ஆஸ்பிடல் போகனும்”

“என்னாச்சுண்ணே. பயப்படற மாதிரி ஒண்ணுமில்லையே” அதிர்ச்சி தொனிக்கும் குரலில் செல்வம் கேட்டான்.

“ஒனக்குதான் தெரியுமே. பய நெனப்புலேயே ஒழுங்கா சாப்பிடாம ஒடம்பு எளச்சிட்டா. மதியத்துல சாப்பிடராளோ இல்லையோ தெரியல. நான் வந்தவுடன எனக்கு காபி கொண்டாறேன்னு அடுப்படிக்கு போனவ மயங்கி கீழே விழுந்துட்டா”

“அய்ய்யோ. அடி எதுவும் படலையே”

“இல்லையில்ல. செவத்த ஒட்டியே விழுந்ததால அடி எதுவும் படல. மொகத்துல தண்ணி தெளிச்சவுடனே முழிச்சிட்டா”

“ஒடனே பக்கத்துல இருக்கற டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்கண்ணே”

“கூட்டிட்டு போகனும். அதுக்காத்தான் ஒன்னய கூப்பிட்டேன்…” தயக்கத்துடன் இழுபட்டது வார்த்தை.

“தயங்காம சொல்லுங்கண்ணே. எவ்வளவு வேணும்”

“செல்வம், ஏற்கனவே நெறைய கொடுத்திருக்க. மறுபடியும் கேக்கறதுக்கு தயக்கமாதான் இருக்கு. வேற யாருக்கிட்டயும் கேக்க முடியாமத்தான்… ஒங்கிட்ட கேக்கறேன். ஒண்ணும் தப்பா நெனச்சுக்காதடா”

“ஏண்ணே இப்படியெல்லாம் பேசுற. ஒரு ஐயாயிரம் ரூபாய ஒன் அக்கௌன்ட்ல போடறேன். மொதல்ல அண்ணிய ஆஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போங்க. மறுபடியும் கவனமில்லாம இருக்காதீங்க,” என்று இணைப்பைத் துண்டித்தான். அலைபேசியிலேயே அவரின் கணக்குக்கு பணத்தை அனுப்பினான். பணம் சென்றடைந்ததைக் கூறும் குறுத்தகவலுக்காக காத்திருந்த நேரத்தில் கீழே தரையில் வைக்கப்பட்டு முதல்தளம் வரை வளர்ந்து வந்து பூத்திருந்த முல்லை மலர்களைப் பார்த்தபடி அதன் சிறிய இலைகளை வருடினான். அதன் மெல்லிய மணம் மனதின் பதட்டத்தை சற்று நிதானமாக்கியது. குறுந்தகவல் வந்தவுடன் உள்ளே சென்றான்.

நுழைந்தபோதே, அடுப்படியில் இருந்த மனைவி ரமா விழிகளாலேயே செல்வத்தை அழைத்தாள். என்ன என்ற முக பாவத்துடன் சென்றவனிடம் “எதுக்குங்க அத்தைக்கிட்ட இத கேட்டுக்கிட்டு இருக்கீங்க. அவங்களப் பத்திதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே. என்ன சொன்னாலும் அவங்க கேக்கப் போறதில்ல. ஒங்களுக்குதான் டென்சன்” என்றாள்.

அவள் பேசும்போது உதட்டசைவிற்கு ஆமா போடுவதுபோல காதில் தொங்கிய ஜிமிக்கி முன்னும் பின்னும் ஆடியது. சாளரம் வழியாக வந்த காற்றால் உந்தப்பட்ட நான்கைந்து குழல்கள் இணைந்து காதிற்கு முன்புறம் வந்து துள்ளின.

ஜிமிக்கியையும் குழலையும் நோக்கிக்கொண்டிருந்த அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவனை நிமிர்ந்து பார்த்து, “நான் சொல்றத கவனிச்சிங்களா இல்லையா?” எனக் கேட்டாள்.

“என்ன சொன்ன?”

“சரியாப் போச்சு. அத்தைக்கிட்ட ஓட்டுப் போடறதப் பத்தி எதுவும் கேக்காதீங்க,” என்றாள்.

“ஆமால்ல. பேசிக்கிட்டு இருந்தத மறந்தே போயிட்டேன். இந்தத் தடவையும் எப்படி அதே சின்னத்துக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு நல்லாக் கேக்கலாம். நீயும் வா.”

“அய்யா சாமி.. ஒங்களையே கேக்க வேண்டாம்னு சொல்றேன். என்னய வேற கூப்படறீங்களா. இத்தன தடவ முடியாததையா இப்ப மாத்தப் போறீங்க. நீங்க ஏதாவது பண்ணுங்க, என்னய இழுக்காதீங்க சாமி,” கும்பிடும் பாவனையில் கையை குவித்துவிட்டு அடுப்பை நோக்கித் திரும்பியவளின் கையைப் பிடித்தான். இறுக்கமாக கையின் மேல்பக்கம் அழுத்திக் கொண்டிருந்த வளையலை தளர்த்தியபடி “ரமா, நீ சொல்லு. நீ யாருக்கு ஓட்டுப் போடுவ?” என்று கேட்டான்.

“ஏன்.. இதிலென்ன சந்தேகம் எப்பவும் போடறதுக்குதான்”

“அதத்தான் யாருக்குன்னு கேக்கறேன்”

“அத நீங்க கேட்டா ஒடனே சொல்லனுமா. எனக்கு யாருக்குத் தோணுதோ அவங்களுக்குப் போடுவேன். ஒங்கக்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை,” என்றபடி கையை இழுத்துக் கொண்டு திரும்பியவள், தோளை மெல்ல உலுக்கிக் கொண்டு உதட்டை லேசாகக் கடித்தபடி புன்னகைத்துக் கொண்டாள்.

இவளுக்கு எல்லாம் விளையாட்டுதான் என்று முணுமுணுத்தபடி உள்ளே வந்தான். தொலைக்காட்சியில் அடுத்த நெடுந்தொடரின் விளம்பர நேரத்தில் அதே போன்ற கேலி அரசியல் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒலியைக் குறைத்துவிட்டு இவனை நோக்கிய அம்மா, “போன்ல யாரு, அந்தப் பாவியோட மவனா?” என்று கேட்டார்.

“ஏம்மா, பெரியப்பாவே போயிச் சேந்துட்டாரு. இன்னும் கோபத்தை விடாம வச்சுக்கிட்டு இருக்க”

“அவம் போயிட்டானா செஞ்சதெல்லாம் மறைஞ்சிருமா?”

“சரி, அவரு செஞ்சதுக்கு சண்முகண்ணே என்ன பண்ணுவாரு?”

“அவஞ் சம்பாதிச்சு சேத்ததுக்கெல்லாம் இவந்தானே வாரிசு. நல்லதுக்கு மட்டுமில்ல கெட்டதுக்கும் பாவத்துக்கும் சேத்துத்தான்”

“சரி விடும்மா, எல்லாத்தையும் எழந்துட்டு நிர்க்கதியா நிக்கறாரு”

“நான் உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன். அவங்கிட்ட எந்தத் தொடர்பும் வச்சுக்காத. அவனுக்கு உள்ளத அவன் அனுபவிப்பான். யாராலயும் காப்பாத்த முடியாது. கை கொடுக்கறேன்னு நீயும் உள்ள விழுத்திடாத… அம்புட்டுதான் நாஞ்சொல்வேன்”

“அத நான் பாத்துக்கிறேன் நீ கவலப்படாதம்மா. நாம பேசுன விசயத்துக்கு வருவோம்”

“என்ன?”

“ஓட்டுப் போடறதப் பத்தி. இவங்க தலைவி எறந்து போனாங்களே. அதுல மர்மம் இருக்குன்னு சொல்லி யுத்தம் தொடங்கினாரே. அப்பறம் ரெண்டு பேரும் ஒண்ணாக் கூடின ஒடனே மர்மமெல்லாம் மாயமா ஆயிடுச்சே… அதக் கவனிச்சிங்களா”

“எப்டியோ அவங்க போயிட்டாங்க. இப்ப விசாரிச்சு என்னாகப் போகுது?”

அப்போது கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்த செல்வம் “வாங்க சார்” என்று எழுந்தான். வீட்டு உரிமையாளர் மாணிக்கம் உள்ளே வந்தார். அம்மா காலை மடக்கியபடி நிமிர்ந்து அமர்ந்தார். அப்பா முகத்திலும் லேசாக முறுவல் தோன்றியது.

“ஒக்காருங்க” என்று அம்மா சொன்னபோது அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். மாணிக்கம் மாநகராட்சியில் இளநிலை அதிகாரியாக பணியாற்றுகிறார்.

“நல்லாருக்கீங்களா. உங்களத்தான் பகல்ல பாக்கவே முடியறதில்ல”

“எங்க, காலையில கெளம்பி வேலைக்குப் போனா… வந்து சேர ஏழுமணிக்கு மேல ஆயிடுது. இப்ப எலக்சன் டூட்டி வேற போட்டிருக்காங்க. இன்னைக்கு ரெண்டாவது நாள் டிரெயினிங். முடிஞ்சு கெளம்பி வர்றதுக்கு இவ்ளோ நேரமாயிடுச்சு”

“வாங்க சார்” என்றபடி வந்த ரமா காபிக் கோப்பையை அவரிடம் நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவர் “எப்படிமா சொல்லாமலேயே காபி கொண்டு வந்திட்ட”

“உங்க குரல் கேட்டுச்சு. அதான் காபியோடவே வந்திட்டேன்”

அவரின் புன்னகையில் அவளின் செயலை பாராட்டும் தொணியிருந்தது.

“ஒருநாள் எலக்சன் டூட்டிக்கு எவ்வளவு தர்றாங்க” என்று அம்மா கேட்டார்.

“போனதடவ ரெண்டாயிரத்து ஐநூறு கொடுத்தாங்க. இந்தத் தடவ கொஞ்சம் அதிகமா தருவாங்கன்னு நெனக்கிறேன்”

“பரவாயில்லையே, ஒரு நாளைக்கு இவ்ளோ கொடுக்கிறது”

“நீங்க வேறம்மா. ஒரு நாளுன்னு ஈசியா சொல்றீங்க. மூணு நாளைக்கு ட்ரெயினிங். அப்புறம் எலக்சனுக்கு மொத நாளு சாயந்திரமே அங்க போகணும். அதோட எலக்சன் முடிஞ்சவுடனே கெளம்ப முடியாது. எல்லாத்தையும் சீல் வச்சுட்டு, பெட்டி எடுக்கறதுக்கு அவங்க வர்ற வரைக்கும் காத்திருக்கனும். ஒருதடவ நைட்டு ரெண்டு மணிக்குதான் வந்தாங்க. அதுக்கப்புறம் கெளம்பி வீட்டுக்கு வரணும்” என்றவர் “வேல நேரம் கூட பரவாயில்லம்மா… பக்கத்துல சாப்பாடு கெடைக்காது. கழிவறை சரியா இருக்காது. அதோட கொசுக்கடி வேற. ரெண்டு நாளு நைட்டும் சரியா தூங்க முடியாது. ஒடம்பு நார்மல் ஆறதுக்கு, மூணு நாளாகும் ”

“ஒங்க வேலையும் நார்மலா கஷ்டந்தான். ஆனா, சம்பளத்தோட லீவு விட்டாக்கூட நேரா வந்து ஓட்டுப் போட்டுட்டு போறதுக்கு பல பேருக்கு மனசு வரமாட்டேங்குது” என்றார் அம்மா.

“ஆமா … தேவையில்லாதவங்களுக்கு ஓட்டுப் போடறதவிட போடாம இருக்கறவன் மேல்தான்” என்றான் செல்வம் கேலியாக அம்மாவை நோக்கியபடி.

“என்ன செல்வம் இப்படிச் சொல்லிட்ட. மக்கள ஓட்டுப் போட வைக்கிறதுக்கே எவ்ளோ செலவாகுது தெரியும்ல”

“தெரியுது சார். ஆனா எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம போடறவங்களுக்கேதான் போடுவேன்னு சொல்றவங்கள என்ன செய்யறது”

செல்வம் அவன் அம்மாவைத்தான் சொல்கிறான் எனப் புரிந்து கொண்டவர், “சில பெரியவங்க மாறமாட்டாங்க. அதுக்கு என்ன பண்றது. சரி இந்தா இந்த மாச வாடகைக் கணக்கு, ஒரு ரெண்டு நாள்ல கொடுத்திட்டீங்கன்னா நல்லாருக்கும்” என்று செல்வத்திடம் ஒரு தாளை கொடுத்துவிட்டு எழுந்தார். குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை அவர் உடலில் தெரிந்தது. “வர்றேங்க” என்று அம்மாவிடம் கூறிவிட்டு எல்லோரையும் பார்த்து தலையாட்டியபடி சென்றார்.

“தம்பீ… இப்ப எதுக்கு அவருகிட்ட போயி இப்படில்லாம் பேசற” செல்வத்தைப் பார்த்து அம்மா கேட்டார்.

“நமக்கு மேலேயிருந்து வரவேண்டிய எதையுமே கேட்டு வாங்காம, நமக்குப் பாதகமா அவங்க சொல்றதயெல்லாம் தலையாட்டிக்கிட்டே செய்றாங்களே… அவங்களுக்குதான் ஓட்டுப் போடுவேன்னு சொல்றியே… இது சரியா”

“எதுத்துக் கேட்டா மட்டும் தடுக்க முடியுமா? அவங்களுக்கு யாரோட தயவும் தேவையில்லாத நெலமையில அவங்கள எப்படி கட்டுப்படுத்த முடியும்?

இப்ப எதுக்கு மூச்சப் பிடிச்சு பேசிகிட்டிருக்கே. நானும் செய்தியெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். எனக்கு தெரியும் எது நாயமுன்னு,” என்று தொடர்ந்து பேசிய அம்மாவை எப்படி மறுப்பதென யோசித்தபடி பார்த்தான் செல்வம். அருகிலிருந்த கணபதி எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒலியின்று ஓடிய நெடுந்தொடரை வாயசைவை வைத்து புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார்.

“எனக்கு எட்டு வயசாகறப்பவே எங்க அப்பாவோட போயி கோயில்கள்ல நடக்கற மகாபாரத உபன்யாசங்கள கேட்டிருக்கேன். ஒவ்வொரு கோயில்லயும் வேறவேற ஆளுங்களும் அவங்க வயசுக்குத் தகுந்த மாதிரி, அனுபவத்துக் தகுந்தபடி, ஒவ்வொரு விதமா சொல்வாங்க. ஆனா கதையோட மையமான கருத்து எப்பவுமே மாறாது. ஒவ்வொரு தடவயும் கேட்டுட்டு வர்றப்ப, மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சது ஒரு விசயந்தான். அத எப்பவுமே அழிக்க முடியாது”

இத்தனை வருடங்களில் அம்மா இதைச் சொன்னதில்லை. செல்வமும் இத்தனை அழுத்தி விவாதித்ததில்லை. எனவே வார்த்தை எழும்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து வந்த ரமா செல்வத்தின் தோளில் கை வைத்தபடி நின்று அத்தை கூறுவதை கவனித்தாள். கணபதியும் திரும்பி அம்மாவை பார்த்தார்.

“பங்காளியோட பங்க இல்லைன்னு சொல்லி தொரத்துரவனோட வம்சமே ஒண்ணுமில்லாமப் போயிடும்,” என்று அழுத்தமாக கூறியபோது கண்கள் கலங்கி தளும்பியது. மருமகளின் முன் கண்ணீர் சிந்திவிடக் கூடாதென எண்ணியவர் போல வேகமாக எழுந்து பால்கனியை நோக்கிச் சென்றார்.

செல்வமும் ரமாவும் புரியாமல் கணபதியைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“ஏப்பா, இப்ப ஓட்டுப் போடறதுக்கும் அம்மா சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இத எப்படிச் சொல்றது” என்று கூறியபடி யோசித்த கணபதி, சொற்களை தனக்குள் தொகுத்துக் கொண்டதைப் போலிருந்தது. “பெண்கள் தங்களோட ஆழ்மனசு சொல்றமாதிரி ஒரு முடிவ எடுத்துட்டாங்கன்னா அதுல இருந்து அவங்கள மாத்த முடியாது. ரமாகிட்ட கேட்டாக் கூட, நீ வருத்தப்படக் கூடாதுங்கிறதுக்காக உனக்குப் பிடிச்சத சொல்லிட்டு அவ நினைச்சதத்தான் செய்வா. அது நீ சொல்றதாக் கூட இருக்கலாம். ஆனா, அது அவளுக்குப் பிடிச்சதுக்கு வேற ஏதாவது ஒரு காரணம் இருக்கும்”.

“இந்தக் கட்சியோட வரலாறு ஒனக்கு தெரியுமுன்னு நெனக்கிறேன். அதுவரைக்கும் கட்சிக்காக ஒழச்சவரை, “கட்சியில எந்தப் பங்குமில்லை, எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு” சொல்லி தொரத்துனதனாலதானே இந்தக் கட்சியே உருவாச்சு. அதே சமயத்துலதான் ஒன் பெரியப்பாவும் அப்படிப் பண்ணினாரு. நம்மள ஏமாத்திட்டாங்கன்னு உள்ளம் கொதிச்ச அந்தத் தருணத்துல, எப்படியோ… திருதராஷ்டிரன், ஒன் பெரியப்பா, இந்தக் கட்சி உருவாக காரணமா இருந்தவரு எல்லாரையும் ஒரே குணமுள்ள எதிரிகளா வரிச்சுக்கிட்டா போலிருக்கு. அதனாலதான் ஒண்ணப்பத்தி பேசறப்போ மத்ததும் நினைவுக்கு வந்து ஒரு கொதிநிலைக்குப் போயிடறா” என்றார்.

செல்வம் சொல்லின்றி திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். ரமா அவன் தோளில் லேசாக ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தாள். அப்போது, அலைபேசியில் சண்முகம் அழைத்தார். அழைப்பைத் துண்டித்துவிட்டு அம்மாவை நோக்கிச் சென்றான்.

 

 

பகவதியம்மை

“அண்ணே, இரவிபுதூர் போற பஸ் எது?” இக்கேள்வியை கடந்து சென்ற பலரிடம் கேட்டும் “ம்ம்ம்க்க்கும்” எனும் பதில்தான் கிடைத்தது. சொந்த ஊர் பேருந்து நிலையத்தில் ஒரு ஊருக்கு செல்லும் வழித்தடம் அறியாமல் நின்றேன். இறையூர் என கூகுலில் தேடினால் பதில் இல்லை. இரவிபுதூர் என்பதே பெயர் எனப் பதிலாய் வந்தது. இப்பேருந்து நிறுத்தமே பள்ளத்தில் இருந்தது, எதிரே எழும்பி கம்பீரமாய் நின்ற தேவாலயத்தில் ஆறு முறை மணியடித்து விவிலிய வசனம் பேசியது ‘கர்த்தராலே கூடாத காரியம் எதுவுமில்லை’. மாடனை வேண்டிக்கொண்ட மனதில் நல்மேய்ப்பரையும் வேண்டிக்கொண்டேன்.

நெற்றியில் திருநீரால் முக்கோடு போட்டு, காதில் சிவப்புக்கல் கடுக்கனோடு, வெற்றிலை குதப்பியவாறே, முன்மண்டை வெற்றிடமான, குலுங்கும் தொப்பையோடு, மங்கிய வெள்ளைச் சட்டையும், மடித்து கட்டிய வேஷ்டியும், லூனார் செருப்புமாய் அருகில் வந்தவர், மாடனாகவோ, மேய்ப்பவராகவோ இருப்பார் எனத் தோணவே அவரிடம் வழி கேட்டேன். ‘இரவிபுதூர் போற பஸ் எதுனே”, கூடவே இவ்வூரிலே வழக்கமான மரியாதை குறிச்சொல் ‘அண்ணாச்சி’யையும் இணைத்துக் கொண்டேன்.

வெற்றிலை சாறு உதட்டில் வடிய மேலும் கீழுமாய் பார்த்தவர் “ஆளு வெளியூரோ, இங்கன இறையூர்னு சொன்னாதான் நம்ம ஆளுக்காருக்கு பிடிப்படும். நானும் அங்கதான் போறேன். ராஜாவூர் பஸ் வரும், மருங்கூர் இப்போதான் போயிருக்கும். யாருக்கு தெரியும், இன்னும் வராம கூட இருக்கும். அவனுக இஷ்ட மயிருக்கு தானே வரான். நிப்போம். தம்பி சாப்டிலா. இல்ல வாங்க காப்பி குடிப்போம்”

வலுக்கட்டாயமாய் கூட்டிக் கொண்டு போனார். “பஸ் வந்தாலும் அவனுக டீ, காப்பி குடிச்சுட்டு தான் எடுப்பான். இறையூருல எங்க. இன்னிக்கு முகூர்த்தம் ஒன்னும் இல்லையே, என்ன சோலி” என்றார்.

சென்னையில் இருந்தாலும் தாத்தா நாகர்கோயில் பழப்பம் மலையாளக் கடையில் இருந்து மாதமிருமுறை வாங்கித் தருவார். கண்முன்னே செந்நிறமாய் குவிந்து கிடந்த பலகாரங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். “தம்பிக்கி பசிக்கோ, மக்கா இதுல ஒன்னு எடு” கடைக்காரரிடம் கேட்டு வாங்கித் தந்தார். அசௌகாரியமாய் உணர்ந்தேன், வாங்கத் தயங்கவே, “பழப்பம் என்ன கோடி ரூவாய்யா, தின்னுப்போ. எம்பயனுக்கா வயசுதான உனக்கு. தின்னு”. முதல் கடியிலே வெல்லமும், ஏலக்காயும், அவலையும் நாக்கு ருசித்தது. “சக்கர பாகு, அவலு உள்ள இருக்கும். வயித்துக்கு நல்லது. இனி மத்தியானம் தான் பசிக்கும்” என்றார் சிரித்தவாறு.

நாங்கள் கடையில் காப்பிக்கும் பழப்பத்திற்கும் காசு கொடுத்து திரும்ப பேருந்தும் சரியாய் வந்தது. ஏறி அவர் அருகிலே அமர்ந்தேன். “இறையூருல யார பாக்கணும், வெளியூரு ஆளு. சொல்லுங்க தெரிஞ்சா நா கூட வாரேன்.”

“தெரிஞ்சவங்க ஒருத்தர பாக்கணும். இறையூர் சுடலமாடன் கோயில் பக்கம் வீடு”

“சரியா போச்சு. நானும் அவன பாக்கத்தான் போறேன். குடும்ப சாமி. பாத்து நாளாச்சு. போய் கும்பிடனும். ரெண்டு மாசமா வீட்டுல ஒருத்தருக்கா கழியாம போகு. போய் மஞ்சன சாத்தி, ஆரம் போட்டு, சாமிக்கு பண்ணனும். யாரும் கண்டுக்காம இருந்திருப்பான். அதான் நம்மள படுத்துகு. எங்க அய்யா வழி சுடல. நல்லா குடுப்பான், சமயத்துல பாடா படுத்துவான். நான்தான் மதியில்லாம ரொம்ப நாள் வராம இருந்திட்டுட்டேன்” கவலையோடு சொன்னார். “சரி, நம்ம கதைய சினிமா எடுக்கலாம், ஒரு பய பாக்க மாட்டான்” சொல்லிவிட்டு அவரே சிரித்தார். வெகுளியாய் தெரிந்தார், நானும் சகஜமாய் பேச ஆரம்பித்தேன்.

“அங்க ஒரு ஆச்சி இருக்கு, சுடலை கோயில் பக்கம் வீடு. அவங்க வீட்டுக்கு போறேன், பேரு பகவதியம்மை”.

கொஞ்சம் அமைதியானவர், “கூனிக் கிழவி வீட்டுக்கா. உங்க சொந்தமா அவ?”

“தெரிஞ்சவங்க, எங்க தாத்தா இங்கையிருந்து மெட்ராஸ் போய் செட்டில் ஆனவரு. அவருக்கு தெரிஞ்சவங்க”

“ஓ அப்டியா. உங்க தாத்தா பேரு:?”

“கிருஷ்ணப் பிள்ளை” என்றதும். முதுகை குலுக்கி கொஞ்சம் இன்னும் இணக்கமாய் “பிள்ளைமாறா, முக சாடை தெரிஞ்சுது. இப்போ உள்ள பிள்ளைகளுக்கு தான் இன்னாருன்னு சொன்னா கொஞ்சம் சங்கடம், அதான் கேக்கல. சுத்தி முத்தி சொந்தமாதான் இருப்போம். பின்ன கடுக்கரை, ஆரம்பலி, காக்கமூரு எல்லாம் அங்கதானே கட்டிக் கொடுப்போம்” என்றார்.

இவ்வூர் சுசீந்தரமாக இருக்க வேண்டும். சாலையின் இணையாக ஆறு ஓடியது. வலப்பக்கம் பெரிய கோபுரம் தெரிந்தது. தாத்தா சொல்லிய கதைகளில் பலமுறை தாணுமாலயன் வருவதுண்டு. படித்துறையில் துணி அலசும் ஒலி கேட்டது. பழைய பாலம் இன்னும் கம்பீரமாக நிற்க, புதிதாய் வழி தவறி சாய்ந்து சாலையில் இணைந்த புதிய பாலம் தெரிந்தது. வண்டி பழைய பாலம் வழியே அக்கரை எனும் ஊருக்குள் நுழைந்தது. வழியெங்கும் இருக்கரையிலும் தெங்கு, அடுத்து பசுமையான போர்வை போலவிருந்த வயலில் நெல் நாற்று காற்றில் மேலும் கீழுமாய் தலையசைத்து வரவேற்பது போலவிருந்தது. அருகே பேச்சு சத்தம் குறையவே அவரைக் கண்டால் உறங்கிவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் எழுந்து, “ஊரு வந்துட்டு வாங்க இறங்குவோம்” என்றார். வயல்வெளி நடுவே சாலை உணவைத் தேடி ஊரும் கருநாகம் போல நீண்டு போனது.

பழைய ஓட்டு வீடுகள், ஓடு வேய்ந்த பள்ளிக்கூடம், இடையிடையே கான்கிரீட் வீடுகள். சட்டை அணியாத சாரம் அணிந்த திடமான நெஞ்சைக் கொண்ட தாத்தாக்கள்- தாத்தா சாரம் என்று சொல்லியே நானும் கைலியை சாரம் என்றே அழைக்கிறேன்.

“என்ன எங்கோடியா அத்தான் கண்டு நாளாச்சு” பெண்குரல், கேட்டு திரும்பினேன். பசுமாட்டை இழுத்தபடி ஐம்பது வயது பெண்ணொருத்தி.

“மைனி சுகமா, சுப்பிரமணிக்கு ஒரு சம்பந்தம் இருக்கு. ஊருக்கு போகும் முன்னாடி வீட்டுக்கு வாரேன்.”

“சம்பந்தம் வருகு, வழிச் சுத்தம் வேணுலா. தேரூர்ல ஒன்னு வருகு”

“அதான் நானும் சொல்ல வந்தேன். நம்ம சகலப்பாடி முருகன் இருக்கான்லா, அவனுக்க பெரியக்கா பொண்ணு. யோசிக்காத வாரேன் பேசுவோம்.”

“கூட யாரு, ஆளு பிடிப்படலையே”

“மெட்ராஸ்ல இருந்து வராரு, நம்ம ஆளுதான். கூனிக் கிழவிய பாக்கணுமா”

“அது ரெண்டு நாளா இழுத்துட்டுலா கிடக்கு. சீக்கிரம் போவும். அதுக்கு நாளாயிட்டு, சலம்பிட்டு, ஏசிட்டு திரியும். என்ன ஆளோ, நம்ம ஆளு இல்ல. ஊருக்காரன் பேசிட்டு இருக்கான். என்னதான் இருந்தாலும் சுடலை கோயில தூத்து வாறிட்டு கிடந்தா. அதுக்கு சொந்தம் கிந்தம் உண்டான்னு தெரில. முதவாட்டி ஒரு ஆளு அத தேடி வருகு. ஊரு செலவுல பாடை எடுக்கணும்” நடந்துக் கொண்டே வார்த்தைகளை உதிர்த்தபடி சென்றாள்.

“தப்பா நினைக்காதப்போ. பொம்பள அப்படியாப்பட்ட ஆளுதான். வாயில சனி. என்கூட கொஞ்சம் பிடித்தம் உண்டு. நானும் அது சாவ முன்னாடி பாக்கணும். முண்டு கட்டிட்டு இருப்பா. மலையாளத்துக்காரியா இருப்பா போல. எங்க அய்யாக்கு அவள தெரியும். அவருதான் இங்க தங்க இடம் கொடுத்தாரு. சுடல கோயிலு சுத்தி நம்ம இடம்தான். பாவம் ஆளுத் துணையில்லை. தனிக்கட்டை. நம்ம நாளு வந்தா போயிதானே ஆகணும். அது பொறக்கப்பயே முடிவாயிடும். என்ன நா சொல்லது” என்றார் விரக்தியாய்.

மௌனம் மாத்திரமே என்னுள் நிறைந்திருந்தது. நடந்து கொண்டே தாத்தாவின் நினைவுகளை அசைப் போட்டேன். ஆச்சி எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும் போதே இறந்துவிட்டாள். அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் அவர் இறக்கும் வரை மனக்குறையில்லை. அவராய் படுக்கையில் இருக்கும் போது “என் தங்கம், கண்ணு, சாமி தாத்தா செத்தா. தகவலை இறையூர்ல பகவதியம்மை ஆச்சிட்டு சொல்லணும். தாத்தாக்க ஆச மக்ளே. அப்பனுக்கு தெரியாண்டாம்.” பேசிக்கொண்டே கைகளில் முத்தமிட்டார். யார் பகவதியம்மை, தாத்தாக்கு என்ன பழக்கமோ என்றெல்லாம் யோசிக்க நேரமின்றி அடுத்த இரண்டு நாட்களில் இறந்துவிட்டார். அப்பா ஊருக்கு தகவல் எல்லாம் சொல்லாமல் கண்ணம்மாபேட்டையில் காரியம் செய்தார். ஆச்சி இறந்ததுக்கும் இதேதான் நடந்தது. தாத்தாவும் ஊருக்கு கொண்டு சென்று காரியங்கள் செய்ய ஆசைப்படவில்லை. தாத்தாவின் கதைகள் வீட்டின் எல்லா அறையிலும் நிறைந்து இருந்தன. இரண்டு மூன்று வாரங்களில் வீடு சகஜமாக, எனக்கோ தாத்தா கடைசியாய் முத்தமிட்ட கைகள் அரிக்க ஆரம்பித்தது. கனவிலும் தாத்தா பகவதியம்மை பேரை சொல்லிக்கொண்டே வந்து நின்றார். பெங்களூர் செல்வதாய் சொல்லி நாகர்கோயில் கிளம்பிவிட்டேன்.

“சரி, உங்க தாத்தாக்க ஊரு எது?” நடந்தபடி கேட்டார்.

“அழகியபாண்டியபுரம்”

“அலையான்றமா, பேசி பேசி பக்கத்துல வந்திட்டியே. அங்க எங்க?”

“அதுலாம் தெரியாது”

“அப்பா பேரு என்ன?”

“மணியன்”.

நின்று வித்தியாசமாய் பார்த்தார். “உங்க தாத்தாவ கிட்டுனு கூப்பிடுவாங்களா?”

“ஆமா, ஊருல கிருஷ்ணப் பிள்ளைனா யாருக்கும் தெரியாது, கிட்டுனு சொன்னாதான் தெரியும். சக்கோட்டை கிட்டுனு சொல்வாரு சிலநேரம் சிரிச்சிட்டே”

“லேய், நா உனக்கு மாமா முறைலா. உங்க தாத்தாவும், எங்க அய்யாவும் நல்ல கூட்டுக்காரன்லா. அய்யா சொல்லிருக்காரு கதைலாம். இப்போ புரியுது. நீ சின்னப்பையன். தாத்தா எப்புடி இருக்காரு, அப்பா சுகமா. உங்கூட பொறந்தவங்க எத்தனை பேரு?”

“தாத்தா தவறிட்டாரு, அத அந்த ஆச்சிட்ட சொல்லணும்னு தாத்தா சாவ முன்னாடி ஆசைப்பட்டுச்சு, அதான் வந்தேன்”

“செய், சங்கடம். காலத்தை பாத்தியா மக்கா. எல்லாம் அந்தந்த சமயத்துல நடக்கணும். நீ வரணும்னு தான் அது இழுத்துட்டு கிடக்கு.”

ஆறடியில் நெடுநெடுவென மண்பீடம், சுற்றிலும் பீடம் பின் நின்ற வேம்பின் சருகுகள். முன்னே என்றோ வைத்த வாழையிலை மட்டும் இருந்தது. கொஞ்சம் தொலைவில் வயதான ஓலை வீடு, முன்னே தாழ்ந்திருந்த கூரை பிய்ந்து கிடந்தது. அவரும் கூடவே வந்தார். வீட்டில் உள்ளே எந்த சத்தமும் இல்லை.

“அம்மை வீட்டுல உண்டா, நா எங்கோடியா வந்திருக்கேன்”

“உள்ள வாடே, பிள்ளையை கண்டு நாளாச்சு” எனும் உடைந்த பெண் குரல் உள்ளிருந்து வந்தது.

உள்ளே வா, என்பது போல் என்னைப் பார்த்தபடி அவரும் நுழைந்தார். ஒரே அரை, மண் அடுப்பில் சப்பிய பாத்திரம் ஒன்றில் அரிசி கொதித்தது. அருகே ஆங்கில சி போல வளைந்து, உடலெங்கும் தோல் தளர்ந்து தொங்கியபடி, இருந்த கொஞ்ச நார்ப் போலவிருந்த முடியை முடிந்து வைத்த தலையும், இடுப்பில் சாரமும், மேலே வெள்ளை துவர்த்தும் மட்டுமே கட்டிய ஆச்சி இருந்தாள். இவளா ஊரில் எல்லோரும் ஏசும் ஆச்சி, அப்படியா இருக்கிறாள். இந்நிலையிலும் முகம் மலர்ச்சியாய் இருந்தது. தெரிந்த எங்கோடியா வந்ததில் மலர்ந்திருக்கலாம்.

“பிள்ளைக்கு ஒன்னும் இல்லையெடே. கஞ்சிதான் வைக்கேன். ரெண்டு நாளா மேலு வலி, கையும், காலும் பிடிச்சு நிக்கி. வயசாயிட்டா. வயித்துக்கு பாக்கியம் சமயத்துல கஞ்சி கொண்டாருவ. இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. அதான் எந்திச்சிட்டேன். நீ இரு, நா போய் கலரு வாங்கிட்டு வரேன். கூட யாரு, நா கவனிக்கல. கண்ணு தெரிலியா. யாரு ஒம்பிள்ளையா பிள்ளே?”

“இல்ல ஆச்சி, கோயிலுக்கு வந்தோம். என் பெரிய மைனிக்க மவன். நீ இரு, நா வாங்கிட்டு வாரேன்”

“போல ஆகாதவன் மவனே, இன்னைக்குதான் திடமா இருக்கேன். நா போறேன். நீ இரு,” குனிந்து நடந்தபடியே பொசுக்கென்று நடந்தாள், ஆட்டின் மடிபோல துண்டு விலகி மார்பு அங்குமிங்கும் ஆடியது அவளுக்கு. நான் புரியாமல் விழித்தேன்.

“இரு இப்போமே எல்லாம் சொல்லணுமா, கழியாத பொம்பள. வரட்டும்”

“எவென் வீட்டு மாடுல, பிச்சைக்கார பய இங்க அவத்து விட்ருக்கான். மேய இடம் இல்லையால, இழுத்துக்கட்டுல புலையாடி மவனே” ஆச்சி யாரையோ ஏசியபடி செல்வது காதில் கேட்டது.

“மணியன் ஏதாச்சும் சொல்லுவானா இவள பத்தி, வளத்தவ பாசம், பெத்தவளு மேல இல்ல. அவன ஒன்னும் சொல்லதுக்கு இல்ல மக்கா. எல்லாம் இப்புடித்தா நடக்கணும்னு மேல ஒருத்தன் எழுதிருக்கான்”, எதுவுமே புரியவில்லை. அவளும் வருவது போலில்லை.

“உங்க தாத்தாவ நா கண்டுருக்கேன் சின்னதுல. எம் ஜி ஆர் கலரு, சுருண்ட முடியுமா ஆளு சினிமா நடிகர் கணக்கா இருப்பாரு. இந்த அம்மா எப்புடி பழக்கமோ. உங்க தாத்தாவுக்கு தான் தெரியும். அவங்க அய்யா பழைய ஆளு, நிலமும் தோப்புமா ஜம்முன்னு இருப்பாரு. எங்க அய்யா சொல்லுவாரு” கொஞ்சம் உரிமை எப்படியோ பேச்சில் வந்தது.

“இந்த ஆச்சி யாரு. எங்க தாத்தாவுக்கு என்ன பழக்கம்?”

“இவ ஊரு, குடும்பம்லா தெரியாது. உங்க தாத்தா மேக்க போவாரு அடிக்கடி. இவளுக்கு அங்க பூவாரு பக்கம்னு மட்டும் தெரியும். இவரு அங்க கள்ளு குடிக்கப் போவாருன்னு அய்யா சொல்லுவாரு. அங்க என்ன பழக்கமோ. உங்க ஆச்சிய கட்டுனதுக்கு, அப்புறமா இல்லையானு தெரியல. நிறைய மறந்துட்டு” நிறுத்தி பாக்கெட்டில் இருந்த திருநீரை நெற்றியில் பட்டையிட்டார்.

வெளியே ஆச்சி வருவது போலத் தெரியவில்லை. நான் விடாமல் “அப்புறம்” என்றேன்,

“உங்க ஆச்சிக்கு பிள்ளையில்லை, போகாத கோயில் இல்லையாம். மடில கனம் இல்லை போல. ஒருநாள் நல்லா செவந்த குட்டியை தூக்கிட்டு வந்தாராம். அவன்தான் உங்க அப்பன். வீட்டுல கொண்டாந்த அவரு அப்பா உள்ள விடல. பெரிய சண்டை. கொஞ்ச நாளுல இவ வந்தா, எம்பிள்ளைனு சொல்லி ஒரு நாள் அலையான்றம் முழுக்க ஒரே பெகலம்தான். உங்க தாத்தாக்க அப்பா அவர தலை முழுகி வீட்ட விட்டு விரட்டிட்டார். நல்ல மனுஷன், கேவலத்துல அப்புறம் இங்க வரவேயில்ல. எங்க அய்யா நாரோயில்ல வீடு பாத்து வச்சாரு. உங்க அப்பன் வந்த வீட்டுல ஒட்டிக்கிட்டான். உங்க ஆச்சியும் பிள்ளையில்லையா, செவத்த பய, பாக்க அவ்வளவு லச்சணமா இருப்பான். விட மனசில்லை. கூடவே வச்சுக்கிட்டா. எவன் பாத்தனோ, வத்தி வச்சுட்டான். அதுலாம் பண்டு.” நிறுத்திவிட்டு, ஆச்சி வருகிறாளா என்று நோட்டமிட்டு தொடர்ந்தார் “அங்கேயும் உங்க தாத்தாவ அசிங்கப்படுத்தி, இவளயும் பூவாருல இருந்து கூட்டிட்டு வந்து, ரோட்டுல போட்டு அடிச்சி, சங்கடம். மணியனயும் சம்சாரத்தையும் கூட்டிட்டு ஊர விட்டே போய்ட்டாரு. போறப்ப எங்க அய்யாட்ட இவளுக்கு ஒரு இடம் கொடுத்து பாருன்னு கேட்டாரு. அந்தக்கால பழக்கம்லா. இந்தா இங்க இடம் கொடுத்து அய்யா பாத்துக்கிட்டாரு. அய்யா இருக்க வர உங்க தாத்தாட்ட இருந்து லெட்டர் வரும். அய்யா இங்க வந்து பேசுவாரு. எல்லாம் நாளாச்சு”.

அமைதி மட்டுமே எங்குமே, அவள் வீட்டுக்கு வந்து இரண்டு கலரையும் கையில் கொடுத்தாள்.

“அம்மே, ஆளு பிடிப்படுகா” என்றார் எங்கோடியா,

சிறிது நேரம் பார்த்தவள், “இல்லடே, கண்ணு மங்கி நாளாச்சு. குரல வச்சுதான் இப்போ ஆள பிடிக்கது. புகையா உருவம் தெரியும்”

“உம்பேரன் தான்.”

எதையோ மறந்துவிட்டவள் போல நின்றாள். என்னவெல்லாம் நினைத்திருப்பாளோ, கண்கள் காட்டிக் கொடுத்தது கண்ணீரின் வழியே. எதுவும் பேசவில்லை.

“பிள்ளைக்கு பேரு என்னது?”

குரல் வரவில்லை. “கிருஷ்ணா” என்றேன்.

என் கைகளை பிடித்து முத்தமிட்டாள். எதுவுமே பேசவில்லை,

பின் நான், “தாத்தா தவறிட்டாரு. உங்கள்ட்ட சொல்லணும்னு என்கிட்டே கேட்டாரு முன்னாடியே”.
“நல்ல மனுஷன், என்னா ஐஸ்வர்யம் நிரஞ்ச ஆளு. நன்னி எப்போவும் உண்டு. நீயும் நல்லா வருவா. மணியன் நல்லாருக்கானா,” பேசியபபடியே ஓரமாய் இருந்த தகரப் பெட்டியில் சேலை ஒன்று மூடி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தாள். பின் மூடி விட்டு வந்தாள். “சாப்பிட்டுட்டு போ, இங்க எங்க தங்க சொல்ல. சாப்பிடாம போகக்கூடாது.” என்றாள்.

என்னால் தொடர்ந்து அங்கே இருக்க முடியவில்லை “நா போறேன். வேற வேலையிருக்கு. மன்னிச்சிருங்க” என்றபடி எழுந்தேன். எதையோ எண்ணியபடி வந்தவள் மீண்டும் கைகளை பிடித்து முத்தமிட்டாள். மனம் இருண்டு, உணர்வுகள் கூடியது, என்னையறியாமல் குனிந்து அவள் கால்களை தொட்டேன். அவள் கண்ணீர் என் முதுகில் குளிர்ச்சியாய் பட்டது. ஆச்சி வீட்டின் வெளியே வந்து நான் தெரு திரும்பும் வரை நின்று கொண்டிருந்தாள் அவளின் கலங்கிய கண்கள் அதுவரை எனக்கு தெரிந்தது.

எங்கோடியா மாமா பேருந்து ஏற்றிவிடும் வரை கூடவே வந்தார், கைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம். நாகர்கோயில் வந்ததும் சென்னை உடனே திரும்ப மனமில்லை, கன்னியாகுமரி சென்று அறையெடுத்து தங்கினேன். இரவு கடற்கரைக்கு சென்றேன். அலையெல்லாம் ஏதோ சோகத்தை தாங்கி வருவதும் போவதுமாய் தெரிந்தது. சுற்றிலும் சூன்யமாய் உணர்ந்தேன். இரவு தூங்கியதும் நினைவில்லை.

காலை எழுந்து சூரிய உதயம் காண முடிவு செய்தேன். என் அறையில் இருந்தே கடல் தெளிவாய் தெரிந்தது. கைபேசி ஒலிக்கவே எழுந்தேன், எங்கோடியா மாமாதான். ஊருக்கு போய் விட்டேனா என அழைப்பதாய் தோன்றியது. ஜன்னல்களை திறந்தவாறே அழைப்பை எடுத்தேன்.

“மக்கா ஊருக்கு போய்ட்டியா. பயணம்லா வசதியா இருந்துச்சா. அப்புறம் ஆச்சி இறந்துட்டா. எனக்கு இப்போதான் தகவல் வந்திச்சு. உன்ன பாத்த சந்தோசமா இருக்கும். நல்ல சாவு. சொல்லத்தான் கூப்பிட்டேன்” மறுபதில் எதுவுமே எதிர்பார்க்கவில்லை, அழைப்பை துண்டித்துவிட்டார். சூரியன் மெதுவாய் கடலில் இருந்து எட்டிப் பார்ப்பது போலவிருந்தது, மஞ்சள் பந்து, கடல் தங்கம் போல மின்னியது.

அறையில் இருந்து கிளம்பி இறையூர் சென்றேன். ஊர் இயல்பாக இயங்கியது. கொஞ்சம் ஆண்கள் கூரையில் வெளியே நின்றார், கூடவே எங்கோடியாவும் இருந்தார். “மக்கா போலையா, நீ போய்ட்டேன்னு நினச்சேன்”

கூடவே வீட்டுக்குள் வந்தார். எல்லாரிடமும் சொல்லியிருக்கிறார் போல, என்னை அனைத்து கண்களும் வினோதமாய் பார்ப்பது போல தெரிந்தது. உள்ளே சென்றோம் ஆச்சியைப் படுக்க வைத்திருந்தனர். யார் போட்ட மாலையோ பூவின்றி நார் அதிகமாய் தெரிந்தது. வரும் அவசரத்தில் எதையும் நான் யோசிக்கவில்லை. வெளியே பாடை தயாராய் இருந்தது. தனிக்கட்டையாய் இருந்திருக்கிறாள்

எல்லாம் வேகமாய் நடந்தது. காரியங்களில் நானும் இருந்தேன், வாய்க்கரிசி போட்டேன், எரிக் கங்கு எங்கோடியா மாமா இட்டார். அருகில் இருந்த ஆற்றில் குளித்து மீண்டும் அவள் வீட்டுக்கே வந்தேன். தகரப்பெட்டியை திறந்து புடவையை எடுத்தேன் உள்ளே மங்கிய புகைப்படம் ஒன்று தெரிந்தது. அதில் சுருள் முடியும் எம் ஜி ஆர் போல தாத்தாவும், அருகே செம்மீன் ஷீலா போல ஆச்சியும் இருந்தாள். புகைப்படம் சுற்றிய அதே பழைய புடவையை ஆச்சி அதில் கட்டிக்கொண்டு இருந்தாள். அதை நானே எடுத்துக்கொண்டேன். வெளியே எங்கோடியா மாமா நின்றார்.

“வச்சுக்கோ. உங்க ஆச்சி தாத்தா தானே. பிள்ளைக்கு கல்யாண வயசு ஆச்சே. வரன் ஏதாச்சும் வருகா. நம்ம ஊருல பாப்போம், மெட்ராஸ் போய் அப்பாட்ட சொல்லு. மாமாவ பாத்தேன்னு.” பேசிக்கொண்டே இருவரும் நடந்தோம்.