செமிகோலன்
தெருக்கூத்து குழுவில் ஒப்பனை மற்றும் பிற சின்ன வேலைகளை செய்து வரும் காசிலிங்கத்தின் (அம்போகம்) மனைவி அவனை விட்டுச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவளுடைய உறவினர்கள் காசிலங்கத்தை சந்திக்க வருவதாக கூத்துப் பட்டறையின் வாத்தியாரிடம் சொல்லியிருக்கிறார்கள். காசிலிங்கத்திற்கு எதற்காக வருகிறார்கள் என்ற பதைபதைப்பும், எதிர்பார்ப்பும்.
வாழ்வில் சின்ன மகிழ்வான தருணங்களையே கூட அதிகம் அனுபவித்திராத வாழ்க்கை காசிலிங்கத்தினுடையது. மகன் ராஜா தான் என்று அவன் தாய் கூறினாலும், அவனுடைய குரலிலும், நடையில் உள்ள சிறிய குறை அவனை சிறுவயதிலிருந்தே பின்தொடர்கிறது. முப்பது வயதிற்கு மேல், கணவன் இறந்து விட்ட சூரியகாந்தியை மணம் செய்கிறான். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்று அவளை பார்க்கச் சென்ற அன்றே அவனுக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் காலப்போக்கில் மனம் மாறுவாள் என்று நம்புகிறான். ஆனால் அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பவள்,ஒரு கட்டத்தில் மீண்டும் தாய் வீட்டிற்கே சென்று விடுகிறாள். அதன் பின்? எப்போதும் போல் செல்கிறது காசிலிங்கத்தின் வாழ்க்கை. ஒப்பனை செய்யும் போது, பெண் வேடமிடும் நடிகனுக்கு பெரிய முலைகளை பொருத்தும் போது, தன்னிச்சையாக அவற்றை அழுத்துகிறான், அதை பார்த்துவிடும் மற்றொரு நடிகனால் அதன் பின் ஜாடை மாடையாக கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறான். ஆனால்காசிலிங்கம் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை, அது அவனுடைய குணம் அல்ல, தன் வாழ்விலுள்ள மற்றனைத்தையும் போல் இதையும் சகித்துக் கொள்கிறான்.
அவனுடைய தாய் இருந்து விட்டாள். சூரியகாந்தியின் தாய் சமீபத்தில் தான் இறந்தாள் என்பதால், இப்போது அவளுக்கும் யாருமில்லை. ஒரு வேளை அதனால், மீண்டும் தன்னிடம் வருவதற்காகத் தான் ஆட்களை அனுப்புகிறாளோ என்ற ஆசை அவனுக்கு உள்ளது. வாத்தியாரிடம் அதை அவன் கூற, அவரோ, அவள் சீராக கொண்டு வந்த பொருட்கள், காசிலிங்கத்திடம் தான் இருப்பதால், அதை கேட்க கூட ஆள் அனுப்பலாம் என்கிறார்.
உறவினர்கள் வருகிறார்கள். சூரியகாந்தி அரசாங்க உதவி தொகையை பெற வேண்டுமென்றால், அவளுக்கு துணையென்று யாரும் இருக்கக் கூடாது, எனவே விவாகரத்து பத்திரத்தை காசிலிங்கம் கையொப்பமிட கேட்கிறார்கள். சீர் பொருட்களை கேட்க வரக் கூடும் என்ற யூகத்தின் நீட்சியாக இதை பார்க்கலாம் என்றாலும், அதுவரை வாசகனுக்கு அது குறித்து தோன்றாமல் இருப்பதே எழுத்தின் வலிமை. எதற்காக வருகிறார்கள் என்ற பதைபதைப்பில் அவனும் இந்தக் கோணத்தை தவற விடுகிறான்.
காசிலிங்கம் கையொப்பம் இடுவதுடன் கதை முடிகிறது. ஆனால் அப்போது அவனுடைய கலங்கிய கண்களிடமிருந்து நம்மால் பார்வையை விலக்க முடிவதில்லை. சீர் பொருட்கள் திரும்பித் தர வேண்டாம் என்று உறவினர்கள் கூறினாலும் அதையும் அவன் தந்து விடுகிறான். இத்தனை வருடங்களாக அவள் இல்லை, ஆனால் அவன் இதுவரை இடாத கையொப்பமும், அவன் வீட்டிலுள்ள அவளுடைய சீரும், அவளை இன்னும் தன் மனைவியாகவே எண்ணச் செய்கிறது, நாளை நல்லது நடக்கக் கூடும், என்று இத்தனை ஆண்டுகளை கடக்க உதவியிருக்கிறது. அப்படியே அவள் மீண்டும் வந்தாலும், அவர்களுக்கிடையேயான உறவு எப்படி இருந்திருக்கக் கூடும். ஆனால் பரஸ்பர பலனுக்கான உறவு என்றாலும் உறவு என்று ஒன்று இருந்திருக்குமே? இப்போது? எப்போதேனும் அந்த உறவு மீண்டும் துளிர்க்கலாம் என்ற நம்பிக்கையில், தனக்கு யாருமில்லை என்று உணர்வதை தவிர்த்துக் கொண்டிருந்த காசிலிங்கம் இடும் கையொப்பம், அவனை முழுதும் தனியனாக்குகிறது.
பழைய இரும்புப் பொருட்களை வாங்கி அவற்றுக்குப் பதில் வெங்காயத்தை கொடுக்கும் வியாபாரம் கதிர்வேலுக்கு (இரும்புராசி). ஒரு வீட்டில், இரும்பு பொருளொன்றை அதன் மதிப்பு தெரியாமல், மனைவி கொடுக்க வர, அதற்கு ஈடாக தன்னிடம் கொடுக்க எதுவுமில்லை என்று வேண்டாமென்கிறான். அப்போது அங்கு வரும் பெண்ணின் கணவன், அவனுக்கு நன்றி கூறி, மற்றொரு பொருளைத் தருகிறான். அதன் பின் இன்னும் சில வீடுகளில் பொருட்கள் கிடைக்க,இன்று நல்ல வியாபாரம் என்ற சந்தோசம் கதிர்வேலுக்கு.
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலைசெய்ததாக கையொப்பமிட்டு பணம் வாங்கிக் கொள்ளுமாறு அவன் மனைவி அன்று கூறியிருக்கிறாள். அது குறித்த இரட்டை மனநிலையில் தான் கதிர்வேல் இருக்கிறான். தவறென்று தெரிகிறது, ஆனால் பொருளியல் யதார்த்தம் அதை பின் தள்ளுகிறது. உழைத்து வரும் பணமே ஒட்டுவதில்லை, இப்படி ஏமாற்றி பணம் வாங்கினால் அது எப்படி ஓட்டும், என்று அப்படிச் செய்வதை தவிர்த்து விடுகிறான்.
தன்னிடம் பழைய இரும்பு சாமான்கள் இருப்பதாகவும், வந்தால் தருவதாகவும் அவனிடம் ஒருவன் கூறுகிறான். இன்று ஏற்கனவே நிறைய பொருட்கள் கிடைத்திருப்பதால், தான் வண்டியை தள்ள முடியாதென்று கதிர்வேலன் கூறினாலும், அவனை வற்புறுத்துகிறான். தானே வண்டியை ஓட்டிச் செல்வதாகவும் கூட சொல்கிறான். மனைவியிடமிருந்து அப்போது அலைபேசி அழைப்பு வர, சில நிமிடங்கள் அவளுடன் உரையாடுகிறான், அவன் கவனம் வண்டியின் மீது இல்லை.
இப்போது என்ன நடக்கப் போகிறது என்று வாசகனுக்குப் புரிந்து விடுகிறது, இருந்தாலும் அவ்வாறு நேரக் கூடாது என்றே, வண்டியை ஒட்டிக் கொண்டு எங்கோ சென்று விட்ட அந்த ஆளைத் தேடும் கதிர்வேலுவுடன் நாமும் இணைகிறான். அவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. ஒரு வேளை தூரத்தில் எங்கேனும் புதருகில் அந்த ஆள் நின்றிருக்கக் கூடுமோ, ஏதேனும் கடை கூரையின் அடியில் கதிர்வேலுக்காக காத்துக் கொண்டிருக்கிறானோ, அவனே கூட திரும்பி வரலாம். நடக்காது என்று தெரிந்து இப்படி சாத்தியமில்லாதவைகளை எண்ணிக் கொள்கிறோம். இறுதியில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, நாளை கதிர்வேலு நூறு நாளை வேலை செய்ததாக கையோப்பமிடுவானோ?
ஆலிஸ் மன்றோவின் ‘The bear over the mountain’ சிறுகதையில் தன் நினைவுகளை இழக்கத் துவங்கும் பயோனாவை அவள் கணவன் க்ரான்ட் காப்பகத்தில் சேர்க்கிறான். பின் தினமும் சென்று அவளுடன் அங்கு நேரம் செலவிடுகிறான். காப்பகத்தில் பயோனாவிற்கு ஆப்ரி என்பவுடன் நட்பு உருவாகிறது. அங்குள்ள செவிலி இத்தகைய நட்பு, உறவு, இயல்பான ஒன்று தான் என்று கூறினாலும், தன் பல்லாண்டு கால மனைவி, தன்னை மறந்து, மற்றொருவனுடன் இன்னும் நெருக்கமாவதை க்ரான்ட்டால் தாங்கிக் கொள்ளமுடிவதில்லை.
தன்னிலை அழிந்து, இறக்கும் தருவாயில் இருக்கும் தன் மனைவி பச்சைக்கிளியின் அருகே அமர்ந்திருக்கிறார் இளையபெருமாள் (பச்சைக்கிளி). கடந்த சில நாட்களாக, ‘வண்டிக்காரன் கூப்டுறான், நா போவுட்டுமா..’ என்று மட்டும் அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சொல்வது அவருக்கு மட்டுமே புரிகிறது. இளம் வயதில் பச்சைக்கிளியை அவள் ஊரிலுள்ள வண்டிக்காரன், பொங்கநாதன், திருமணம் செய்ய விரும்புகிறான், அவளிடம் அதை கூறவும் செய்கிறான். அவனிடம் பேசி, பழகியிருந்தாலும், அது போன்ற எண்ணம் அவளிடமில்லை என்று நாம் யூகிக்கலாம், அவள் தன் உறவினன் இளையபெருமாளை மணக்கிறாள். சில காலம் கழித்து, விபத்தில் வண்டிக்காரன் இறந்து விடுகிறான். நிறைவான நீண்டமணவாழ்க்கை முடியும் தருணத்தில், இப்போது மீண்டும் வண்டிக்காரன் அதே கேள்வியை கேட்க ஆரம்பித்திருக்கிறான். பச்சைக்கிளி என்ன செய்யப் போகிறாள்? இளையபெருமாள் அனுமதி குடுப்பாரா?
மேற்கு எப்போது மூளை, அறிவை (enlightment) முன்னிறுத்தும், லோகாயாதம், யதார்த்தம் பேசும், கிழக்கு, புலன்களை தாண்டிய உணர்வுகளை, அனுபவங்களை ஏற்கும், உலகியலிலிருந்து விலகி இருக்கும், என்று மேற்கு, கிழக்கு பற்றிய ஒரு பொது புரிதல் உண்டு. இது ஒரு எளிய புரிதலே, இவ்வளவு எளிதாக இரண்டையும் பகுப்பு செய்ய முடியாது என்றாலும்,‘The bear over the mountain’, ‘பச்சைக்கிளி’ இரண்டு கதைகளின் முடிவையும் இந்த பகுப்பில் பொருத்திப் பார்க்கலாம். முதலாவதில் அறிவு, யதார்த்தம் சார்ந்த முடிவு, இரண்டாவதில் அதை மீறிய ஒரு உணர்வு, ஒரு கணம்.
மல்லிகாவின் ஊரில், அவள் தாய் வீட்டிற்கு அருகில் இருந்த ‘குடிகார’ ஆள் இறந்து விட்டான் என்ற தகவல் அவளுக்கு வருகிறது (வாடாமல்லி). கணவன் பன்னீர்செல்வம் முன் அந்த செய்தியை அவள் சாதாரணமாக எடுத்துக் கொள்வது போல் நடந்து கொண்டாலும், அவள் உணர்சிவசப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. ஏன்? பன்னீர்செல்வத்திற்கு இந்த விஷயம் முந்தைய இரவே தெரிந்திருந்தும், அவள் வருந்துவாள் என்று சொல்லாமல் இருந்திருக்கிறான் என்று நமக்குத் தெரிய வரும் போது யூகிக்க முடிகிறது.
பன்னீர்செல்வம் தான் அவளை ஊருக்கு அனுப்பி வைக்கிறான், வண்டியில் கொண்டு விடட்டுமா என்று கூட கேட்கிறான். வேறு வழியில்லை என்பது போல் மல்லிகாவும் கிளம்புகிறாள். பயணத்தின் போது ‘குடிகாரனின்’ நினைவுகள். அவளுக்கும், அவனுக்கும் காதல், இவள் குடும்பம் ஏற்கவில்லை. ஓடிப் போனவர்களை பிடித்து, பன்னீர்செல்வத்திற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ‘குடிகாரனும்’ பாப்பாத்தியை திருமணம் செய்கிறான். ஆனால் மல்லிகாவை அவன் மறக்கவில்லை, குடி இன்னும் மோசமாகி, மனைவி, குழந்தைகளை மோசமாக நடத்துகிறான். ஆனாலும் பாப்பாத்தி மீது மல்லிகாவிற்கு கோபம் தான் உள்ளது. அல்லது அது பொறாமையா?
திருமணத்திற்குப் பின் இந்த விஷயம் தெரிய வந்தாலும், அது பற்றி மல்லிகாவிடம் பன்னீர்செல்வம் எதுவும் கேட்டதில்லை. இப்போதும் கூட அவள் மனம் எவ்வளவு துன்புறும் என்று தான் எண்ணுகிறான். பெரிய மாலையுடன் ‘குடிகாரன்’ வீட்டிற்கு வருபவளை, பாப்பாத்தி, ‘அக்கா’ என்று அழைத்தபடி கட்டிக் கொள்வதுடன் கதை முடிகிறது.
மல்லிகா, ‘குடிகாரன்’, இருவரின் காதல், இவற்றை விட பன்னீர்செல்வம், பாப்பாத்தி தான் நம் நினைவை விட்டு நீங்க மறுக்கிறார்கள். பாப்பாத்திக்கும் தன் கணவனின் காதல் குறித்து தெரிந்திருக்கும், இருந்தும் வாழ்ந்திருக்கிறாள், ‘அக்கா’ என்று மல்லிகாவை அழைக்கிறாள். இழப்பின் முதற்கட்ட சோகத்தை கடந்தவுடன் இதே உறவு நிலை நீடிக்க வாய்ப்பில்லை, ‘குடிகாரன்’ குறித்து இருவரும் பேசிக் கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், அந்தக் கணத்தில், இருவருக்குமிடையே ஒரு தற்காலிக இணைப்பு உருவாகிறது. இனிமேலும் பன்னீர்செல்வம் ‘குடிகாரன்’ பற்றி ஏதுவும் பேசப்போவதில்லை. மூவருக்குமிடையே, எப்போதுமே அவர்களருகில்இருக்கும், ஆனால் பேசாப்பொருளாக,‘குடிகாரன்’ நிலைபெற்றுவிட்டான்.