செமிகோலன்

கவாஸ்கரும் கபில்தேவும்

மு. முத்துக்குமார்

பரபரத்துக் கொண்டிருந்த கடைவீதிக்கு, சற்றும் பொருந்தாமல் தூரத்தில் ஒரு வாழைமரம் தெரிந்தது. ஸ்டார் ஐஸ் பேக்டரி, ராஜேஸ்வரி ஹோட்டல், ஒரு வங்கி, பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை, மீன் அங்காடியின் நுழைவு வாயில் என அனைத்தையும் தாண்டி தூரத்தில் தெரிந்த வாழைமரத்திற்கு அருகில் வந்திருந்தார் கோவிந்தன். சற்றுமுன் பெய்த மழையால் சேறும் சகதியுமாய் இருந்த சாலையில் நடந்த அயர்ச்சியை, வாழையிலையில் அரும்பியிருந்த மழைத்துளி சற்று குறைத்து கோவிந்தனை ஆசுவாசப்படுத்தியது..

அந்தக் கடையின் பெயர் இப்போது கோவிந்தன் மருந்துக் கடையல்ல. ‘அஜாஸ் மெடிக்கல்ஸ்’ என்று மாறியிருந்தது. “என்ன அங்கிள் இவ்வளவு தூரம்?..மருந்த சொல்லி விட்டிருந்தா நடராஜன்ட்ட கொடுத்து விட்டிருப்பேன்ல…” என்ற ஜாகீரிடம், “பரவாயில்லப்பா…” என்று மருந்து சீட்டை கொடுத்து விட்டு விசாலமான அந்த கடையின் முகப்பிலிருந்த கண்ணாடிப் பெட்டிக்கு முன்னாலிருந்த வாடிக்கையாளர் நாற்காலியில் மெல்ல அமர்ந்தார்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை அக்கடையின் உரிமையாளராக இருந்த நினைவுகள் மேலெழும்பி வருவதை தவிர்க்க நினைத்தாலும், கோவிந்தனால் முடியவில்லை. அப்போதுதான் அஜாஸ் மெடிக்கலுக்கு புதிதாக வந்திருந்த மருந்துகளை சரிபார்த்து உள்ளே அடுக்கிக் கொண்டிருந்த அவர் பேரன் நடராஜன், தன் ஊதாரித்தனத்தால் இக்கடையை தன்னிடமிருந்து இழக்க வைத்த இறந்து போன தன் மகனை நினைவுக்கு கொண்டு வந்தான்.

கோவிந்தன் வாழும் தெரு தலைமுறைகளாக வெளியாட்களை சுவீகரித்துக் கொண்டதில்லை. அவர் ஃபார்மஸிஸ்டுக்கு படித்த காலத்தில் இருந்தே இத்தெரு இப்படித்தான் இருக்கிறது. எதிர் வீட்டில் இப்போதிருந்தால் 90 வயது தாண்டியிருக்கும் சீனிவாசய்யரின் மூன்றாம் தலைமுறை குடியிருக்கிறது. அவருடைய கொள்ளுப் பேரன்கள் நடராஜனுடன் தான் பள்ளி இறுதியில் படிக்கிறார்கள். இத்தெருவிலுள்ள பையன்கள் எல்லாம் கிரிக்கெட் மேல் மோகம் கொண்டு ஈடுபாட்டுடன் விளையாடுவதற்கு காரணம் சீனிவாசய்யர் குடும்பத்திற்கு விடுமுறை தோறும் வந்து போகும் அவருடைய உறவினர் ஒருவர்தான். பக்கத்து வீட்டு ஜாகீர் அவருடைய கண்டுபிடிப்புதான். இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை கபில்தேவ் பெற்றுத் தந்திருந்த காலக்கட்டமது. எண்பதுகளின் நடு. கவாஸ்கரின் ஆட்டம் சற்று தொய்வடையத் தொடங்கிய காலகட்டமும் கூட.

“இந்தாங்க கோவிந்தன் நீங்க கேட்ட ரெண்டு லட்சம்…” என்ற ஜாகீரின் தந்தையிடம், “அபுபக்கர் பாய், இன்னொரு யோசன எனக்குத் தோணுது…” என்றார் கோவிந்தன்.

” சொல்லுங்க கோவிந்தன்…”

” என் பையனும் ஊதாரியா போய்ச் சேந்துட்டான். இனிமே என்னாலயும் இந்த மருந்துக் கடய நடத்த முடியாது. இன்னும் மேல ரெண்டு லட்சம் குடுத்துட்டு நிலத்தோட அந்தக் கடய எடுத்துக்குங்க. உங்க ரெண்டாவது பையன் ஜாகிருக்கு ஒரு தொழில் அமைஞ்ச மாதிரி இருக்கும்…நானும் கடன்காரனாகாம இருப்பேன்…” என்றார் கோவிந்தன்.

நீண்ட யோசனைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு தகராறில் தன் கையையும், வாழ்க்கையையும் இழந்திருந்த தன் மகனுக்கு அது உகந்ததாக இருக்கும் என்று எண்ணி ஒப்புக் கொண்டார் அபுபக்கர்.

ஜாகிரின் பந்து வீச்சு அந்த ஊரில் உள்ள கிரிக்கெட் ஆடுபவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது. எதிரணிகளின் பேட்ஸ்மென்களுக்கு, அவனுடைய தெத்துப் பல்லும் நீண்ட தூரத்திலிருந்து ஓடிவந்து, பந்தை கையிலிருந்து விடுவிக்கும் முன் தேர்ட்மேன் திசையை கண நேரம் நோக்கும் அந்த பெரிய கண்களும் எப்போதும் கபில்தேவை ஞாபகப்படுத்தும். சீனிவாசய்யரின் அந்த உறவினர் தந்த பயிற்சியாலும், ஊக்கத்தாலும் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி அதன் கேப்டனாகவும் இருந்தான் ஜாகிர். கல்லூரியில் தன்னை செதுக்கிக் கொள்வதைவிட தன்னுடைய ரெயின்போ கிரிக்கெட் அணியைச் செதுக்குவதில்தான் நேரம் செலவழித்தான்.

கிரிக்கெட் பிடிபட்டதுபோல் மருந்து வியாபாரம் பிடிபடவில்லை ஜாகிருக்கு. கோவிந்தன் ஆறு மாதங்களுக்கு மேலாக அவனுடன் கடையில் இருக்க வேண்டியிருந்தது.

இலையின் நுனியிலிருந்து புழு தொங்கி ஆடுவது போல் தன் இடது தோளிலிருந்து சின்னதாய் தொங்கிக் கொண்டிருந்த வெட்டப்பட்ட கையின் அடிக்கூம்பு அங்குமிங்கும் ஆட பரபரப்பாய் இருந்த ஜாகிர், “இப்ப ஓரளவுக்கு எல்லாம் புடிபடுது அங்கிள்…” என்று கோவிந்தனின் நினைவுகளை கலைத்தான்.

சாலையில் நிலைகுத்தியிருந்த பார்வையை விலக்கி, மூக்கிலிறங்கியிருந்த கண்ணாடியை சற்று மேலேற்றியவாறு, ஜாகிரின் எஞ்சியிருந்த கையை நோக்கினார் கோவிந்தன்.

“பாழாப் போன அந்த கிரிக்கெட் சண்டைல என் ஊதாரிப் பையன காப்பாத்துறேன்னு, கையத் தொலைச்சுட்டயே ஜாகிரு…” என்று கலங்கியவரிடம், “அதெல்லாம் நான் எப்பவோ கடந்தாச்சு அங்கிள். கை போயும் அண்ணன காப்பாத்த முடியாம போச்சுங்குற வருத்தந்தான் இன்னு இருக்கு…சரி இந்தாங்க உங்க மருந்து. நட்டு, தாத்தாவ விட்டுட்டு வந்துர்ரயா…”

“இல்லப்பா…நானா போயிருவேன்…” என்று மெல்ல எழும்பியவர், “நட்டு, மதியம் சாப்பாட்டுக்கு வந்துரு…” என்று கிளம்பினார். தன் மகனுடைய இடத்தில் ஜாகிர் அமர்ந்திருப்பது தன்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும், அவனிடம் நடராஜன் வேலை செய்வது ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பெரிதும் சோர்வடையச் செய்தது.

நடராஜன் அவர் செல்வதையே சற்று நோக்கி விட்டு மீண்டும் வேலைகளில் தொலைய முயன்றான். அப்பா இறப்பதற்கு முன்னாலும் தாத்தாவின் மருந்துக் கடை வருமானம்தான் அவனையும், அவன் அம்மாவையும் காத்தது. அப்பாவின் அரசாங்க சம்பளம் முழுதும் கிரிக்கெட், சீட்டு விளையாட்டு என்று விரயம்தான் ஆனது என்பார் தாத்தா. அப்பாவிற்கு பிறகு தான் அந்த சம்பளம் அவர்கள் குடும்பத்திற்கு உதவியது, அம்மாவிற்கு கொடுக்கப்பட்ட அரசாங்க வேலை வழியாக. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் இந்த மருந்துக் கடைக்கு வந்துருவான். இங்கு வந்த முதல் கோடை விடுமுறையின்போது தாத்தா அமர்ந்திருந்த இடத்தில் இப்போது ஜாகிர் அங்கிள் இருக்கிறார். இங்கு கிடைக்கும் பணம், அவனுடைய கல்விச் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. அப்பா, இங்கு அமர்ந்திருந்தால் நான் இங்கு வரவேண்டியிருந்திருக்குமா? என்று அவனை எப்போதும் தொந்தரவு செய்யும் கேள்வி ஜாகிர் அங்கிளை பார்த்தவுடன் காணாமல் போய் விடுவது அவனுக்கு எப்போதும் ஆச்சரியத்தையும் விடுதலையுணர்வையும் ஒரு சேர அளிப்பது.

கவாஸ்கர் வரும் ‘ஒன்லி விமல்…’ விளம்பர ஈர்ப்பில் அந்தக் கம்பெனி சட்டையை அடுத்த வருடம் முதல் முறையா கல்லூரிக்கு போகும் போது போடவேண்டும் என்ற நினைப்பையும் ஜாகிர் அங்கிள் நிறைவேற்றுவார் என்று அதிகம் விற்பனையாகும் லோபரட் மற்றும் லாசிக்ஸ் மாத்திரைகளை எளிதில் எடுக்குமிடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான்.

கடையின் இரும்பு சுருள் கதவை நடராஜன் மேலிருந்து இழுத்து பூட்டியபோது, இரவு மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. கடைவீதி கிட்டத்தட்ட காலியாயிருந்தது. ராஜேஸ்வரி ஹோட்டல் மட்டும் திறந்திருந்தது. அங்குதான் பெரும்பாலும் இவர்களிருவருக்கும் இரவுணவு.

“அதென்னடா, கவாஸ்கர் மேல இவ்வளவு ஈர்ப்பு…” என்ற ஜாகிரிடம், ” வீடு ஃபுல்லா அவர் போட்டாவத் தான அஙகிள், அப்பா ஒட்டி வச்சிருந்தாரு… உங்களுக்கு தெரியாதா?… அப்பா போனதுக்கப்புறம் தாத்தா எல்லாத்தயும் கிழிச்சுப் போட்டுட்டாரு…அப்பாவும் கவாஸ்கரும் இன்னமும்…”

“… ம்ம்ம்… உங்கப்பா அசாருதின் மாதிரி உயரமா இருக்குற ஒரு கவாஸ்கர்டா. இவன் பேட்ல மேக்னட் எதுவும் வச்சுருக்கானாடாம்பாரு சீனிவாசய்யரோட வீட்டுக்கு வர்ர சொந்தக்காரர். அவன் பேட்டு போகுற இடத்துக்கெல்லாம் பந்து போகும்.. அதுவும் அந்த பேக் ஃபுட்ல போய் ஃபிளிக் பண்ற ஸ்டைல பாத்து அப்படியே அசந்து போயிருவோம். அவனோட பேட், சில சமயம் அவனோட கையோன்னு தோணும்… பௌலரோட ரன்னப், கையில பந்து வச்சுருக்கிற விதம் இத எல்லாத்தயும் வச்சு பந்து எங்க விழும்ங்கறத அவனால துல்லியமா கணக்கு போடமுடியும். உங்கப்பா ஒரு கிரிக்கெட் ஜீனியஸ்டா. உங்க தாத்தா கடைசிவர இத புரிஞ்சுக்கல. சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு, அவரோட விதவை தங்கச்சி பொண்ண. கவர்மெண்ட வேலயும் வாங்கி கொடுத்துட்டாரு. ரெண்டுலயும் உங்கப்பாவால ஒட்ட முடியல…

“உங்கப்பா போனதோட என்னோட ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் போயிடுச்சி… எளவு அன்னக்கு மட்டும் உங்கப்பாவுக்கு ரன் அவுட் கொடுத்துருந்தா, நார்த் ஸ்டார் கிளப்பு ஜெயிச்சுருப்பாங்க. உங்கப்பாவோட உயிரும், என்னோட கையும் மிஞ்சியிருக்கும். நம்ம ஊர் எம்எல்ஏ பேர்ல நடக்குற பிரமாண்டமான கிரிக்கெட் டோர்ணமென்ட் அது. பெரிய பெரிய ஊர்ல இருந்தெல்லாம் வந்து விளையாடுவாங்க.”

“என்னப்பா மேட்லாம் இல்லயா, டர்ப்லதான் ஆடணுமா? கிரிக்கெட் பாலா இல்ல கார்க் பாலா…” என்று ஏளனம் செய்யும் நகர அணிகளின் தொழில் முறை ஆட்டக்காரர்கள் ஒரு போட்டிக்குப் பின் ஆச்சரியமடைந்து ஜாகிரிடம் ஆடுகளம் தயாரிக்கப்பட்ட விதத்தை கேட்டறிந்து வியப்பார்கள். ஆறு மாத இடைவிடா பணியிது. ஜாகிரும், அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் இந்த டோர்ணமென்டில் ஆடுவது, அதை நடத்துவது, அதற்கான தயாரிப்பில் ஈடுபடுவது என்றே வருடம் முழுதுமிருப்பார்கள். படிப்பு, வீடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே.

ஒவ்வொரு முறையும் ரெயின்போ கிளப், இறுதி ஆட்டம் வரை வந்து விடும். ஆனால், கோப்பையை மட்டும் வென்றதில்லை. ஏதாவது ஒரு வெளியூர் அணிக்கே கோப்பையும் ரொக்கப் பரிசான 25001 ரூபாயும் கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகைக்காகவே, அந்த ஊர் எம்எல்ஏ பெயரில் இந்த டோர்ணமென்ட் நடத்தப்படுகிறது. நடராஜின் அப்பா கொல்லப்பட்ட அந்த ஆண்டும் இறுதி வரை முன்னேறியிருந்தது ஜாகிரின் ரெயின்போ கிளப்.

அந்தக் கண்மாயை போர்த்தியிருந்த இருளாடை, மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. எப்போதாவது வெள்ளம் வந்தால் மட்டுமே கிட்டத்தட்ட பத்து கி.மீ சுற்றளவுள்ள முழுக்கண்மாயும் நிரம்பும். ஊரையும், கண்மாயையும் ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தது ரயில் தண்டவாளம். அந்த அதிகாலையிலும், இருவர் மிகப் பெரிய இரும்பு உருளையை, மெதுவாக அக்கண்மாயிலுள்ள ஆடுகளத்தின் மேல் உருட்டிக் கொண்டிருந்தார்கள். நேற்றைய ஆட்டத்தின் சுவடுகள் அந்த உருளையின் கனத்தில் மறைய, சுற்றியிருந்த பசும்புல் பரப்பால் புதுப்பொலிவு கொள்ள ஆரம்பித்தது ஆடுகளம். ஒரு ஐந்தாறு பேர், எல்லைக் கோட்டிலிருந்து ஆடுகளம் நோக்கிப் பரந்திருந்த அப்பசும் புல்பரப்பில் குனிந்து தேவையற்ற கற்களையும், சிப்பிகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஊரின் முடிவில், இயற்கையாகவே அமைந்த இந்த கிரிக்கெட் மைதானம், மிகப் பெரிய கொடை. சாலையிலிருந்து ஏறி தண்டவாளத்தைத் தாண்டி இறங்கினால் ஒரு கி.மீ. தொலைவில் மைதானத்தின் எல்லைக் கோடு வந்து விடும்.

செயற்கையை பராமரிப்பதைவிட இயற்கையை பராமரிப்பது மிகக் கடினம். இதைச் செம்மையாகச் செய்வது, ஜாகிரும் அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் தான். இறுதி ஆட்டத்திற்கான ஆடுகளம் கிட்டத்தட்ட தயாராயிருந்தது. எல்லைக் கோட்டைத் தாண்டி உருட்டி நிறுத்தப்பட்டிருந்த, இரும்பு உருளை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. எல்லைக் கோடு முழுவதும், ‘V’ வடிவத்தில் ஆழமாக வெட்டப்பட்டு சுண்ணாம்பால் நிரப்பப்பட்டு, பல வண்ணச் சிறு கொடிகளை சீரான இடைவெளியில் ஏந்தியிருந்தது.

நார்த் ஸ்டார் கிளப்பும் உள்ளூர் அணி எனபதால், இந்த தடவையாவது வெற்றிபெற வேண்டிய அழுத்தம் ரெயின்போ கிளப்பிற்கு அதிகமாக இருந்தது. காலையின் மென்வெயில் தற்போது சுட்டெரிக்க, ஆடுகளம் இறுகி பந்துகள் இடுப்பளவு எகிற ஆரம்பித்தன. அதிலும், ஜாகிரின் அவுட் ஸ்விங்கர்கள் விசேஷமானவை. நார்த் ஸ்டாரின் விக்கெட்டுகள் சீரிய இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தன. ஆட்டத்தின் கடைசி ஓவர் வரைக்கும் கூட இரண்டு சிலிப்கள் இருந்தன. முதல் ஸ்லிப் எப்போதும் நடராஜின் அப்பாவுக்கானது. பேட்ஸ்மென்களின், பேட்டைத் தவிர வேறெங்கும் நோக்காத அவன் சிலிப் கேட்சுகளை தவற விடுவதேயில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவரில், எட்டு விக்கெட்டுகளை இழந்து, நூற்றி எழுபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது நார்த் ஸ்டார். எளிதான இலக்கை விரட்டிய ரெயின்போவினர் திணறினார்கள். ஒரு முனையில் விக்கெட்டுகளாக விழுவதை, மறுமுனையில் துவக்க ஆட்டக்காரனான நடராஜின் தந்தையால் வேதனையுடன் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. பெரும்பாலும் அவனை எதிர்முனையில் வைத்திருக்கவே நார்த் ஸ்டார் முயற்சித்தனர். இருந்தும், அவனுடைய கவர் டிரைவ்களாலும், ஃபிளிக்குகளாலும் நூற்றைம்பதை தாண்டியிருந்தார்கள் ரெயின்போ. ஆறு ஓவர்கள் மீதம் இருந்தது, கையில் இன்னும் மூன்று விக்கெட்டுகள் இருந்தது. வழக்கம் போல், தன்னை பேட்டிங் முனையில் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்த ஓவரின் கடைசிப் பந்தை, சார்ட் மிட் ஆன் திசையில் நளினமாக தட்டி விட்டு விரைந்து ஓடினான். அவன் எதிர்பாராத விதமாக, சார்ட் மிட் விக்கெட் திசையில் இருந்த ஃபீல்டர் பாய்ந்து அந்த பந்தை தடுத்தெடுத்து ஸ்டம்புகளை நோக்கி வீச, என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறி கிரீசைத் தொடுவதற்குள் ஸ்டம்புகள் சிதறியிருந்தன.

“அது ரன் அவுட் தாண்டா…. ஆனா நாங்க ஜெயிக்கணும்னு அம்பயர் தான் அவுட் தரல… அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்…” என்று கலங்கிய ஜாகிரின் பெரிய கண்களில் தானும் கலங்குவதை பார்த்தான். தன் தந்தையை கடைசியாக தாங்கிப் பிடித்த மிச்சமிருக்கும் அந்தக் கையை கலக்கத்துடன் இறுக்கிப் பிடித்தவாறு ராஜேஸ்வரி ஹோட்டலில் இருந்து வெளியேறினான் நடராஜன்.

செய்வலர்: செமிகோலன்

அப்பால் இருப்பவள்

விஜயகுமார் 

1

தாய் தந்தையரே இப்படி செய்வார்களா? தேவியை இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படி வீட்டிலேயே வைத்திருப்பதாக அவர்களுக்கு உத்தேசம். அவளுடைய சம்பளமே அவளுக்கு தடையாக வரும் என்று யார் நினைத்தார்கள். இரண்டில் ஒன்று இன்று தெரிந்தாக வேண்டும். சாரதா வெதும்பிக்கொண்டே தன் சித்தி வீட்டுக் கதவைத் தட்டினாள்.

சாரதா அன்று அதீத சினம் ஏறியவளாகத்தான் இருந்தாள். மறுமுறை தட்டுவதற்குள் சித்தி கதவைத் திறந்தாள். “வா கண்ணு..” என்று மலர்ந்தாள் சித்தி. சண்டைக்காரி போல் வந்திருந்த சாரதாவை பேச்சில்லாமல் ஆக்கியது. அவளும் லேசாக சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள். “நீ மட்டும் வந்திருக்க? பாப்பா, மாப்பிள்ளை யாரும் வரல?” என்ற விசாரிப்புக்கு “வரல” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டாள்.

“தேவி உள்ளயா இருக்கா?”

“ஆமா, லேப்டாப்பில வேல செஞ்சுகிட்டு இருக்கா.”

உள்ளே சென்றதும் அந்த சிறிய ஹாலையே நிரப்பிககிடப்பதுபோல சித்தப்பா டிவி பார்த்துக்கொண்டு தரையில் படுத்திருந்தார். “வா சாரதா..” என்றார். மறுமொழி ஏதும் சொல்லாமல் அரைக்கணம் மட்டும் அவர் கண்களை வெறுமனே பார்த்துவிட்டு தேவி இருக்கும் உள் அறைக்கு சென்றாள்.

“தேவி…. அக்கா வந்துருக்கா பாரு…..” என்று சித்தி குரல் பின்னால் கேட்டது.

நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும்போது காட்டவேண்டிய முகபாவனையை தயார் செய்துகொண்டே சாரதா உள்ளே சென்றாள். சாரதாவின் வருகையை கேட்டு தன் மடிக்கணினியை விட்டு எழுந்து நின்றிருந்தாள் தேவி. பெருங்கூட்டு உடம்புக்காரி மெலிந்து நைந்துபோய் இருந்தாள். தேவியின் வற்றிய உடல் சில வருடங்களுக்கு முன் அவள் வனப்பாய் இருந்த இளமையை சாரதாவிற்கு ஞாபகப்படுத்தியது.

“இது தேவியே அல்ல. தேவியின் சாயலில் உள்ள வேறு யாரோ. வேறு எதுவோ” சாரதாவின் கண் சட்டென்று கலங்கியது. சுதாரித்துக்கொண்டு தயார் செய்து வைத்திருந்த பாவனைக்கு மீண்டாள்.

“எப்படிடீ இருக்க. எளச்சுட்ட..” என்று அவள் தொளைப் பிடித்தாள். அது சதைப்பிடிப்பு ஏதுமில்லாமல் பொசுக்கென்று இருந்தது.

“நல்லா இருக்கேன்க்கா.. பாப்பா மாமாவெல்லாம் வரலையா? கூட்டி வந்திருக்கலாமில்ல.”

“நான் உன்ன பாக்கத்தான் வந்தேன்” என்றதும் புரிந்துகொண்டவள் போல் தலையசைத்தாள். முகம் சிறுத்துக்கொண்டு வந்தது.

எடுத்தயெடுப்பிலேயே தேவி அமைதியானாள். சங்கடமான சில வினாடிகளுக்குப் பின் சாரதா “நேத்து நல்ல மழை போல. இந்த வருஷமே ஏகதேசமா எல்லா பக்கமும் நல்ல மழை” என்றாள். தேவி, “அப்படியாக்கா…” என்று மட்டும் சொன்னாள். இருவரும் கட்டிலில் அமர்ந்துகொண்டனர். சில பல பொது விசாரிப்புகளின் வழியாக தேவியிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்பதுதான் சாரதாவின் முனைப்பு. முனைப்பு எல்லாம் ஏதோ சுவற்றில் மோதுவதுபோல் நின்றது.

சித்தி சில பலகாரங்கள் கொண்டுவந்தாள். “மாமனார் மாமியார் எல்லாம் நல்ல இருக்காங்களா?” என்று ஆரம்பித்து சித்தி பிடித்துக்கொண்டாள். உடல் நலம், விவசாய முட்டுவிலி, போக்குவரத்து, வான் நிலவரம் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சித்தி வட்டமடித்து நீட்டி முழக்கிக் கொண்டிருந்தாள். சாரதாவின் சங்கடம் கூடிவரவே தேவி, “அம்மா, அக்காவை கொஞ்சம் சும்மா விடு” என்றாள்.

“என்னடி இது. நீ உன் வேலையப் பாரு. பெரியவங்க என்ன பேசுனா உனக்கு என்ன?”

சாரதா சலிப்பு தட்டி, “ஜாதகமெல்லாம் வருதா?” என்று மையப் பேச்சை எடுத்தாள்.

“அது வந்துகிட்டேதான் இருக்கு. எங்க! உங்க சித்தப்பாவே பாதி ஜாதகத்த சரி இல்லேன்னு கழிச்சு போடுறாரு. அதுக்குமேல கேட்டா சண்டைதான் வருது.”

“இப்படி சொன்னா எப்படி சித்தி. நம்ம பொண்ணு இன்னும் சின்ன பொண்ணா? இன்னும் வருஷம் இருக்குன்னு நினைக்க.”

“இந்த அஞ்சு வருசமா நாங்களும் பாத்துகிட்டே இருக்கோம். யாரு கண்ணு பட்டதோ! நாம இப்போ ஊருக்குள்ள வசதி வாய்ப்பா இருக்கோமில்ல, அதான் எல்லாருக்கும் பல்லெரிச்சல். வர்ற ஒன்னு ரெண்டு இடத்தையும் அது இதுன்னு சொல்லி கலைச்சு போடுறானுங்க.”

சித்தி முடிக்கும் முன்னே சாரதா மறித்து தொடர்ந்தாள், “சித்தி, இன்னும் ஆறேழு மாசத்துல நாங்க வெளிநாடு போயிடுவோம். அவர் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கார். அதுக்குள்ள பாத்தாதானே நான் வந்து கல்யாணத்துக்கு வேலை செய்ய முடியும். அவளுக்கு இருக்குற ஒரே அக்கா நான்தான். நான் பாத்து செய்யுற மாறி வருமா?” கொஞ்சம் மூச்சுவிட்டு; தயங்குவதுபோல் ஆரம்பித்தாள். “இவ சம்பாரிக்கறதுதான எல்லாம். அது இதுன்னு காரணம் சொல்லாம நாலு தரகர நாமதான் போய் பாக்கணும். வர்ற ஜாதகத்த மட்டும் பாத்தா போதுமா? நான் எத்தன ஜாதகம் சொல்லி இருப்பேன். ஆச்சு இல்லேன்னு எனக்காவது ஒரு பதில் சொன்னீங்களா? உங்க ஆர்வம் அவ்வளவுதானா?” என்று கடிந்தாள். சித்தி பேச்சு தடைபட்டு நின்றாள்.

இல்லா பதில்களை கண்ணீர் நிறைக்கிறது. பார்ப்பதற்க்கு உண்மை போலவே இருந்தது. உண்மையேதான். முனைப்பின்றி சித்தியின் கண்கள் வழிந்தோடின. “உன்கிட்ட சொல்றதுக்கு என்ன. நாங்களும் போகாத கோயில் இல்ல பாக்காத இடமில்ல. ஏதும் அமைய மாட்டீங்குது. உங்க சித்தப்பாவும் எதுவும் என்கிட்டே பெருசா கலந்துக்க மாட்டிங்கறாரு. நான்தான் கெடந்து தவிக்கிறேன். யார் வீட்டுக்கு வந்தாலும் நாம எங்க போனாலும் யாராவது இவளப்பத்தி கேட்டுடுவாங்களோன்னு பயந்து பயந்து வருது.” என்று முந்தானையில் மூக்கு சிந்தினாள்.

“நான் அதுக்கு சொல்ல வரல சித்தி. நீங்க ரொம்ப கழிக்கிறீங்கன்னு..” என்று சொல்லி முடிப்பதற்குள் “நாங்க எங்க கழிக்கிறோம். தோதா வந்தா போதும்னுதான் பாக்குறோம். நான் சொல்லவும் முடியாம இருக்கவும் முடியாம கெடக்கேன் தெரியுமா. ஒரு பல்வலி வந்தாலும் சரி, மூட்டுவழி வந்தாலும் சரி கம்முன்னுதான் இருக்கேன். என்னால தடங்கல் வரக்கூடாதுன்னு. நான் அவ்ளோதான் செய்யமுடியும். என் பேச்ச இங்க யாரு கேக்குறா.”

தேவி தரையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேறு ஏதோ உலகத்தில். இவர்கள் யாரும் இல்லாத உலகத்தில்.

தேவிக்காக நியாயம் கேட்க வந்த சாரதா தன் சித்தியின் நியாயங்களை கேட்கும்படி ஆகிவிட்டது. சித்தி தனக்குத்தானே பேசுவதுபோல் இடைவிடாது பிரசங்கித்துக் கொண்டிருந்தாள். சாரதாவும் எப்படி எப்படியோ தன் சித்தியின் வார்த்தை ஓட்டத்தை பிடித்து தேவியின் கல்யாண விஷயத்துக்கு கொண்டு வர முயற்சித்தாள். சித்தியின் மன ஓட்டம் பல திசைகளிலும் சிதறி வடிகால் கண்டு கொண்டிருந்தது.

சாரதா அமைதியானாள். தேவி மெலிதாக சிரித்தாள்.

சித்தி, “உங்க அம்மாயி செத்துப் போனாக்கூட நாலு பேர் மத்தியில மனசார அழுது தொலைக்கலாம். அதுக்கும் வழி இல்லாம உங்க அம்மாயியும் கிண்ணுனு இருக்கு. போன வாரம்தான் போய் பார்த்துட்டு வந்தேன்.” என்றதோடு நிறுத்தினாள். சாரதா ஏற்கனவே நிறுத்தி இருந்தாள். தேவி வெகுகாலம் முன்பே நின்றிருந்தாள்.

மூவரும் பேச்சின்றி ஆனார்கள். சொல்லி முடித்த சித்தி, சொல்ல முடியாத சாரதா, சொல்ல ஏதுமில்லாத தேவி, பேச்சின்றி அமர்ந்திருந்தனர். எழுந்து செல்லவோ பேசவோ மனமின்றி அமர்ந்திருந்தனர். மூச்சு சப்தம் மட்டும் சிறிது நேரம் கேட்டு அடங்கியது.

இந்த அசௌகரியமான நிசப்தத்தை குலைக்க சாரதா மட்டும் ஏதோ சொல்ல எத்தனித்தாள். தொண்டைவரை இயம்பிய சொற்கள் தோற்று பின்வாங்கி மீண்டும் அடிவயிற்றுக்கே சென்று அடங்கியது.

சித்தி சுவற்றைப் பார்த்தும் தேவி தரையைப் பார்த்தும் நிலை கொண்டிருந்தனர். அணிகள் ஏதும் இல்லாத அமைதி அருகில் வந்து அமர்ந்து கொண்டது. அமர்ந்த அமைதி அனைவரையும் கிடுக்கிப் பிடியாக பிடித்துக் கொண்டது.

நிசப்தம் புறமாக அமைதி அகமாக மௌனம் ஆழமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

தனி மனம் அடங்கியதால் கூட்டு மனம் மேல் எழும்பியது. அங்கே சொற்கள் கரைந்திருந்தன ஆகையால் எண்ணங்கள் கரைந்திருந்தன ஆகையால் முரண்கள் கரைந்திருந்தன. ஆகையால் அவள் இவள் அது இது அங்கே இங்கே அன்று இன்று என்ற பேதம் இல்லாமலிருந்தது. அங்கே சித்தியின் நியாயத்தை சாரதாவும் சாரதாவின் ஆதங்கத்தை சித்தியும் கண்டனர். கூட்டு மனதிற்கு அப்பால் தேவி இருந்தாள். பிரிந்து சிதற அங்கு இச்சை இல்லாததால் அவர்கள் ஒற்றை மூச்சு இயக்கமாக அமர்ந்தே இருந்தனர். வழக்கமாக கேட்கும் காக்கையின் கரைச்சலோ பசுவின் மெய்ச்சலோ கோழியின் கொத்தலோ வேப்பமரத்தின் அசைவோ இல்லாமல் அவர்களுக்கு இயற்கைச் சூழல் சமைத்து தந்திருந்தது. அரிதினும் அரிதாக நிகழும் அது நிகழ்ந்தது. கூட்டு மனம் ஆழ்மனத்தில் தடுக்கி விழுந்தது. க்ஷணத்திலும் சிறிய க்ஷணமான அணுவிலும் சிறிய அணுவான அந்த அகால வெளிக்குள் பிரவேசித்தனர்.

அங்கு தேவி முற்றாய் இருந்தாள்.

அவர்கள் அங்கே வந்த மாத்திரத்திலேயே தத்தம் இச்சைகள் வந்து அவர்களை கலைத்து பின்னிழுத்து சென்றது. மீண்ட சாரதா பெருவெடிப்பாய் உடைந்து அழுதாள். வாய் பிளந்து வாய் விட்டு வாய் இழுத்து. மீண்ட சித்தி வெறுமனே அவர்களை பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினாள்.

தர்க்கத்திற்கு சிக்காத அந்த உணர்வெழுச்சியால் சாரதா தரையை அறைந்து அறைந்து அழுதாள். அறையும் கரங்களை தேவி பற்றிக்கொண்டாள். சாரதாவை தன் நெஞ்சோடு அணைத்து சமாதானப்படுத்துபவள் போல் தலையை வருடிக்கொடுத்தாள். “அக்கா இப்ப என்ன ஆச்சு… வேணாம் வேணாம் விடு விடு… நான் நல்லாத்தான் இருக்கேன் எல்லாம் சீக்கிரம் சரியா போயிடும். நீ கவலைப்படாத அக்கா. எல்லாம் சீக்கிரம் சரியாப் போயிடும். எல்லாம் சீக்கிரம் சரியாப் போயிடும்,” தேவி சாரதாவின் தலையை தடவி சொல்லிக் கொண்டிருந்தாள். சாரதா மெல்ல மெல்ல தன்னிலை மீண்டாள். மெல்ல மெல்ல விம்மலும் நின்றுவிட்டிருந்தது.

“ச்சே.. நான் ஏன் அழறேன்னே தெரியல”

“பரவால்லக்கா”

மீண்டும் அமைதியானார்கள். அவ்வமைதிக்குள் மீண்டும் பிரவேசிக்க பயந்த சாரதா அசட்டையாக சிரித்துவிட்டு, “உன்கிட்ட என்னமோ இருக்குடி. சித்தி சித்தப்பாக்குதான் அது தெரியல. ஏன் தெரியாம? எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. உன் சம்பளத்தை பார்த்து பழகினவங்க அவ்வளவு சீக்கிரமா உன்னை கட்டி கொடுத்துடுவாங்களா? வீடு நிறைய இத்தன புது ஜாமணங்க. எல்லாம் உன் சம்பளம் தானே? இந்த வீட்டிலே என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுதா இல்லையா?

“அக்கா….” என்று சிறிது இடைவெளி விட்டு “உன்ன விட எனக்கு நல்லா தெரியும்கா”

சாரதா தேவியை பரிதாபமாக பார்த்தாள். இந்த பொண்ணு எவ்வளவு பெரிய வார்த்தைய சொல்லிடுச்சு. தெருஞ்சுமா இங்க இப்படி பூதம் மாதிரி உட்கார்ந்து இருக்கு. இப்படி தன்னுடைய வாழ்க்கைய சுரண்டரதுக்கு அனுமதிக்குதே. இவங்க எல்லாம் நல்லா இருப்பாங்களா?

அவள் எண்ணங்களை உணர்ந்தது போல் தேவி, “அக்கா நீ ஒன்னும் நினைக்காதே. என் சம்மதம் இல்லாமயா இதெல்லாம் நடக்குதுன்னு நினைக்கிறே? எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் அப்புறம் எல்லாம் சரியாயிடும். நீ வேணா பாரு”

சாரதாவுக்கு தன் தலையை யாரோ இன்னும் வருடிக்கொடுப்பது போலவே இருந்தது. ஏதோ நூற்றாண்டு சங்கடத்திற்கு ஆறுதல் சொல்வது போல. தீர்வு சொல்வது போல.

சாரதா முழுமையாக தன்னிலை மீண்டிருந்தாள். அவர்கள் சம்பாஷணையை வேறு எங்கேயாவது எடுத்துச் செல்ல சாரதா பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். தேவி அதை புரிந்து முழுமையாக ஒத்துழைத்தாள். இருவரும் சேர்ந்து பழைய ஆல்பம் பார்த்தார்கள். சிறுவயது சேஷ்டைகளை நினைவு கூர்ந்தார்கள். நேரம் செல்ல செல்ல சாரதா சேயாகவும் தேவி தாயாகவும் அங்கு பாவனையில் இருந்தார்கள். சாரதாவும் அந்தப் பாவனையிலேயே லயித்திருந்தாள். சாரதாவின் அன்ன உடலையும் மனோ உடலையும் ஆனந்த உடலையும் ஏதோ அரூப கரங்கள் வருடிக் கொண்டேயிருந்தன.

அன்று சாயங்காலம் சாரதா சொல்லிக்கொண்டு கிளம்பும்போது தான் வந்து தீர்வுகாண இங்கே ஏதுமில்லை என்பதையும் தேவியின் வாழ்வு பற்றிய ஒரு குழப்பமான சமாதானத்தையும் அவள் மனம் ஏற்றிருந்தது. ஏதோ ஒரு வகையில் அவள் வாய் விட்டு அழுதது ஒரு சௌக்கியமான விடுதலையாக இருந்தது. அந்த விடுதலையே அந்நேரம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

2

சில மாதங்கள் கடந்திருந்தது. சித்தி வீட்டாரை தொடர்பு கொண்டு வரன் பற்றிய விஷயங்களைக் கேட்க சாரதாவால் ஏனோ முடியவில்லை. கேட்காமலேயே அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவளால் ஊகிக்க முடிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தின் தேவியின் சம்பளத்தை தோராயமாக கணக்கு போட்டுப் பார்த்தாள். யாருக்குத்தான் ஆசை வராது. சாரதாவின் கைப்பேசி சிணுங்கவே அதை எடுத்துப் பார்த்தவளுக்கு கருக்கென்று இருந்தது. சித்தி அழைத்துக் கொண்டிருந்தாள். சாரதாவின் நெஞ்சின் மேல் திடீரென்று பாறாங்கல்லை வைத்தது போல் ஒரு அழுத்தம்.

“ஹலோ சித்தி..” என்றவுடனே சித்தி அழுதுகொண்டே சாரதா என்றாள்.

“சித்தி.. என்ன ஆச்சு?.. சித்தி அழாதீங்க.. தேவிக்கு என்ன…?”

“அவ பிதுறு கெட்ட மாறி இருக்கா சாரதா. என்ன செய்யறதுன்னே தெரில.”

“சித்தி! என்ன. பிதுறு கெட்ட மாதிரின்னா?”

“பிரம்ம புடிச்ச மாறி இருக்கா. உக்காந்தா கெடைய விட்டு எழுந்திரிக்க மாட்டேங்குறா. கண்ண மூடுன்னா தொறக்க மாட்டேங்குறா. தொறந்தா மூட மாட்டேங்குறா. உங்க சித்தப்பா சொல்றத பாத்தா பயமா இருக்கு.” என்று அழுதுகொண்டே சொன்ன சித்தியின் சொற்கள் தோராயமாகத்தான் கேட்டது என்றாலும் சாரதா புரிந்துகொண்டாள்.

“பேசுறாளா?”

“ஒன்னு ரெண்டுன்னு எப்பவாச்சியும். நீ வந்துட்டு போ கண்ணு..”

“வர்றேன் சித்தி. இன்னிக்கே வர்றேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். நான் வந்து பேசிப்பாக்குறேன்”

“வீட்டுல யாருகிட்டேயும்….”

“அதெல்லாம் யாருக்கும் தெரிய வேண்டாம்”

ஒரு நாள் தயங்கினாள். அடுத்த நாள் சித்தியே போனில் அழைத்து இப்போ வர வேண்டாம் என்றாள். இப்போது ஒரு அளவேனும் நல்ல முறையில் இருப்பதாகவும். மனநல மருத்துவரை பார்க்க ஒப்புவதாகவும் சொன்னாள். சாரதா அதிகப்படியான தன் விசாரிப்பின் வழியாக தான் தயங்கிய அந்த ஒரு நாளை சரிகட்டிக் கொண்டாள்.

சிறிது நாட்கள் கழித்து சித்தியே மறுபடியும் அழைத்து இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றும் மருத்துவர் நல்ல கைராசிக்காரர் என்றும் சொன்னாள். எல்லாம் பழைய நிலைமைக்கே வந்துவிட்டது என்றும் தனக்கு இப்போதுதான் உயிர் வந்தது என்றும் பல சொற்களில் பொழிந்துகொண்டே சென்றாள். “கைராசின்னா அப்படி ஒரு கைராசி. மருந்து மாத்திரை ஒன்னும் இல்ல சும்மா பேசியே சரி செஞ்சிட்டாரு. இவளும் கிளிப்பிள்ளை மாதிரி நடந்தா பாரு. சும்மா சொல்றேன்னு நினைக்காத உனக்கும் மனசு சரி இல்லேன்னா ஒரு எட்டு போய் பாத்துட்டு வா. சரியா”

“தேவிகிட்ட பேசட்டா?

“அவ போனுக்கே போடு. ஆமா மைக்ரோ ஓவென் வச்சுருக்கியா நீ.”

“ஹ்ம் என்ன?…… தேவி மறுபடியும் வேலைக்கு கீலைக்கு…..”

“அதெல்லாம் கெட்டிக்கார பொண்ணு வேற கம்பெனில இன்னும் அதிக சம்பளமாமே. உங்க சித்தப்பா சொன்னாரு. அது சரி நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்ன்னு இருந்தேன், மைக்ரோ ஓவேன்ல அரிசி வேகுமா?”

“ஏன் சித்தி! இத்தனைக்கு அப்புறமும் தேவிய வேலைக்கு அனுப்பனுமா?”

“அட அதுதான் அவளுக்கு சந்தோஷம். ஆமா அப்பளம்கூட சுடலாமாமே உண்மையா?”

சித்திக்கு தேவையான பதிலை சொல்லிவிட்டு தனக்கான கேள்வியை தேக்கி வைத்துக்கொண்டாள்.

ஒரு மாதம் இந்த உறுத்தலை சாரதா ஆறப்போட்டிருந்தாள். அங்கிருந்து சாதகமாகவோ பாதகமாகவோ எதுவும் செய்தி வரவில்லை. சித்தப்பா பணம் சேர்த்துக் கொண்டிருப்பார் என்றுமட்டும் தோன்றியது. சித்தி மைக்ரோ ஓவன் வாங்கியிருப்பாள். உருவாகி வந்திருந்த ஒவ்வாமை கால இடைவெளியினால் மட்டுப்பட்டிருந்தது. ஒவ்வாமையை புதுப்பிக்கும் வண்ணம் மீண்டும் சித்தியிடமிருந்து அழைப்பு வந்தது. சாரதாவிற்கு உள்ளுக்குள் அடித்துக்கொண்டது.

“ஹலோ சித்தி…”

……..

“ஹலோ சித்தி கேக்குதா? தேவிக்கு ஏதாவது.. என்ன ஆச்சு..”

சித்தி விசும்பியவாறு, “உங்க அம்மாயி தவரீருச்சு”

சாரதா ஆசுவாசமானாள்.

“தேவிதான் பக்கத்துல இருந்தா. அவதான் போன் பண்ணினா.”

“என்ன! தேவி பக்கத்துல இருந்தாளா? அம்மாயி உயிர் போறப்பவா? யாரு அவள அங்க போகச் சொன்னது? தேவி இப்போ எப்படி இருக்கா?” சாரதா பதட்டமாகக் கேட்டாள்.

“டாக்டர் தான் ஒரு சேஞ்சு வேணும்ன்னு சொன்னாரு. அவதான் அம்மாயி வீட்டுக்குப் போறேன்னா. ஏண்டி கண்ணு என்ன ஆச்சு” தன் சோக பாவனையை கைவிட்டு குழப்பமாகக் கேட்டாள்.

“சித்தி உங்களுக்கு புரியுதா இல்லையா. அவ இருக்கற நிலைமையில அவளை தனியா அங்க. சரி விடுங்க இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”

“அம்மாயி வீட்லதான். உங்க சித்தப்பாதான் பந்தல், ஆளுக்காரங்க, சாப்பாடு எல்லாம் ரெடி பண்றாரு. எல்லா செலவும் அவர்தான் பாக்குறாரு.”

“சரி நாங்க இப்பவே கெளம்புறோம்.”

குடும்பம் சகிதமாக சாரதா அம்மாயி வீட்டுக்கு வரும்போது புதியதாய் வேய்ந்திருந்த பந்தல் அவர்களை வரவேற்றது. அதற்கு நடுவில் நின்று சித்தப்பா ஆள்காரர்களிடம் உரக்க பேசிக்கொண்டிருந்தார். இந்நிகழ்வின் முக்கியஸ்தர்போல தன் புது பணக்கார அந்தஸ்த்தை பயிற்சி செய்துகொண்டிருந்தார். தேவியின் பணத்தை யார் யாரிடமோ எடுத்து நீட்டிக் கொண்டிருந்தார். ஜனங்கள் வரத் தொடங்கியிருந்தார்கள்.

சாரதா உள்ளே நடையும் ஓட்டமுமாக சென்று தேவியை தேடினாள். சித்தி அம்மாயியின் தயார் செய்த உடலருகே அமர்ந்திருந்தாள். சாரதாவைப் பார்த்ததும் தேவி உள் அறையில் இருப்பதாக சமிக்ஞை செய்தாள். சாரதா உள்ளே செல்லும்போது அவ்வறை சந்தன வாசத்தால் நிரம்பியிருந்தது. தேவியைப் போல் இருந்த ஏதோ ஒன்று “அக்கா…” என்றது. சாரதா சிறுகுழந்தையென அதன் மடிமீது விழுந்தாள். அது சாரதாவை ஏந்திக்கொண்டது. விழுந்தவள் கதறி அழுதாள். நேரம் செல்லச் செல்ல அவள் அழுகை தீவிரம் அடைந்தது. கடைசியாக அழுகை ஓய்ந்து மெல்லிய கண்ணீராக வழிந்தது. சாரதா அனைத்திற்கும் சேர்த்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். அது சாரதாவை வருடிக் கொடுத்தது. சாரதா அதனருகில் அமர்ந்திருந்தாள். சாரதா என்னவாகவோ ஆகிப் போயிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அது தேவியாக காட்சி செய்தது.

தேவியைப் பார்த்த சாரதா தன்னை திரட்டிக்கொண்டாள். மெதுவாகவும் தயக்கமாகவும் கேட்டாள், “என்னடி இதெல்லாம்?”

தேவி, ” என்னக்கா? அம்மாயி போயிடுச்சு. அம்மா இதுக்குத்தான ஆசைப்பட்டுச்சு. ஆசைப்பட்டா நடக்க வேண்டியதுதான.”

“என்னடி என்னென்னவோ பேசுற. எனக்கு பயமா வருது”

“என்னக்கா பயம். சும்மா இரு. அதுதான் நான் இருக்கேன்ல்ல”

என்னடி முகத்துல எந்த சோகமும் இல்லாத மாதிரி இருக்க.. அம்மாயி செத்துப் போச்சுன்னு உனக்கு தெரியுதா?”

“தெரியாம என்னக்கா…. நான்தான அனுப்பி வெச்சதே….”

பேயறைந்தார் போல் சாரதா தேவியைப் பார்த்தாள். அதே அரூபக் கரங்கள் சாரதாவின் தலையை வருடிக்கொடுத்தன. சாரதாவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்ள மூச்சுத்திணறல் நெஞ்சையடைக்க அந்தக் கரங்களை தட்டிவிட்டு கூட்டத்தை பிளந்து காற்றிற்காக வெளியே ஓடினாள். உலகம் சுற்றியது. உடல் ஒருபுறம் மனம் ஒருபுறம் உயிர் ஒருபுறம் பிரிந்து நின்று கூத்தடித்தது. பந்தலை விட்டு வெளியேறி ஒரு செக்கின் மீது அமர்ந்து சிதறித் தெறித்த மூச்சுக் காற்றை சீர் செய்தாள். மூச்சு இழுத்து இழுத்து விட்டாள். சீரடைந்ததும் உடைந்து அழுதாள்.

சித்தி ஆசைதீர அழுது திளைத்தாள். சித்தப்பா அந்தஸ்தில் திளைத்தார். சாரதா அச்சத்தோடு இது அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்தாள். இனி தான் செய்ய சுத்தமாக ஏதுமில்லை என்பதை உணர்ந்தாள். அம்மாயி காடு சேரும்வரை பிணம் போல் இருந்துவிட்டு குழந்தை கணவனை இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு ஓடியே போனாள்.

3

சாரதாவின் குடும்பம் வெளிநாடு சென்றுவிட்டதாக சித்தி அறிந்தாள். சொல்லிக் கொள்ளமால் சென்றுவிட்டாள் என்று சித்தி வருந்தவில்லை.சித்தப்பா கார் வாங்கியதிலிருந்து அவளுக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிந்திருந்தது. இதை இப்படியே விட்டு வைக்கலாகாது. சிறிது நாட்களாக ஜாதகம் வருவதும் நின்றிருந்தது. தரகர் வருவதே இல்லை. அவரிடம் நியாயம் கேட்டதற்கு முதல் நாள் அடி வாங்கினாள் இரண்டாம் நாள் உதை வாங்கினாள் மூன்றாம் நாள் இவளும் கை ஓங்கினாள் நான்காம் நாள் சண்டையை வீதிக்கு இழுத்து வந்தாள் ஐந்தாம் நாள் தேவியை வேலை செய்ய விடவில்லை ஆறாம் நாள் புதிய ஜோதிடரைப் பார்க்க கணவனும் மனைவியும் சென்று வந்தார்கள். தேவி அக்காட்சிகளுக்கு எல்லாம் வெறும் சாட்சியாக இருந்தாள்.

புதிய ஜோதிடரிடம் சென்று வந்த நம்பிக்கையை சித்தி மந்திரம்போல் ஜபித்துக் கொண்டிருந்தாள். “ஆசைப்பட்டது நடக்கும்; எல்லாம் சரியா போகும்…..; ஆசைப்பட்டது நடக்கும்; எல்லாம் சரியா போகும்….”

“நான் ஆசைப்படறதெல்லாம் இப்போ ஒண்ணே ஒண்ணுதான்…. தாயே தெய்வமே எல்லாம் சரியா போகணும்”

குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்று சொல்லியிருந்தது ஜோதிடம். சித்தப்பா புதிய கார் ஓட்டும் ஆர்வத்திலும் சித்தி வரப்போகும் எல்லாம் சரியாகிப்போன காலத்தை எதிர்நோக்கியும் தேவி அவர்கள் கேட்டதை கொடுத்துவிடும் தீர்மானத்துடனும் எட்டுக்கையம்மன் கோவிலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

சித்தி வழிநெடுகிலும் புலம்பிக்கொண்டும் வேண்டிக்கொண்டும் வந்தாள். “நீ வேணா பாரேன் இந்தக் கோவிலுக்கு போயிட்டு வந்தோமுன்னா எல்லாம் சட்டுபுட்டுன்னு நடக்கும். நாம நெனச்சமாறி” தேவி அமைதியாக இருந்தாள். “எத்தன நாளைக்கு இப்படியே இருக்குறது.. அது அது கரெக்ட்டா நடக்க வேண்டாமா… அந்த ஜோசியக்காரன் சொன்னா சொன்னதுதான். நம்மக்கு விடிவுகாலம் வந்திருச்சு. எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிடும்” தேவி அமைதியாக இருந்தாள். “ஆனாலும் பாரு எல்லாம் காலம் வர்ற வரைக்கும்தான் இப்படி. அதுக்குண்டான காலம் வந்துருச்சுனா எல்லாம் சரியா போய்டும்.” தேவி அமைதியாக இருந்தாள். இன்னாரிடம் சொல்கிறோம் என்றில்லாமல் அவளுக்கு அவளே சொல்லி சொல்லி எதையோ கட்டிக் கொண்டிருந்தாள். தேவி எல்லாவற்றையும் வெறுமனே பார்த்தவாறு இருந்தாள்.

கோயில் முற்றத்தில் இவர்களை இறக்கி விட்டுவிட்டு நல்ல நிழலான பாதுகாப்பான இடம் தேடி காரை நிறுத்த சென்றுவிட்டார். பொங்கப் பானை சாமான்களை சித்தி அவளாகவே எடுத்துக்கொண்டு ஒரு தோதான இடம் தேடி வைத்துவிட்டு, மாலை பூஜை பொருட்கள் மற்றும் இதர சாமான்கள் வாங்க புலம்பிக்கொண்டே சென்றாள். “வந்தாச்சு… வந்தாச்சு … பொங்க வெக்கிறோம் விளக்கு ஏத்துறோம் ஆத்துல குளிக்கிறோம் சாமி கும்பிடுறோம் அப்புறம் நம்மள புடிச்ச கருமத்தை இங்கேயே தொலைச்சுட்டு போறோம். கருமத்தை இங்கேயே தொலைச்சுட்டு போறோம். இங்கேயே தொலைச்சுட்டு போறோம்.” சொல்லி சொல்லி புலம்பி புலம்பி சித்தி தீர்க்கப்படுத்திக் கொண்டாள்.

காருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாத ஒரு சௌகரியமான இடத்தில் நிறுத்திவிட்டு தேவியின் அப்பா சாவகாசமாக வந்தார்.

பொங்கல் வைப்பதற்கு அடுப்பு கற்களை உருட்டிக் கொண்டிருந்தவள், “தேவி எங்கே?” என்று கேட்டாள்.

“ஏய் என்ன என்கிட்டே கேக்குற? தேவி எங்க?”

“ஏங்க! நீங்கதான கார் நிறுத்த கூட்டிட்டு போனீங்க..”

“இல்ல அவ உன்கூடவே இறங்கீட்டா…”

சுற்றும் முற்றும் பார்த்தனர். மனித முகங்களினூடே தேவி தென்படவில்லை. “சும்மா நிக்காதீங்க போய் தேடுங்க.” என்று சொல்லிவிட்டு எழுந்து ஆற்றுப் படித்துறைக்கு தேவியை தேடி சென்றாள். சித்தப்பா கோயிலுக்குள் தேட சென்றார். ஆற்றுப் படிக்கட்டு, குளிக்குமிடம், தல விருட்சத் திண்ணை, முடி காணிக்கை மண்டபம், தேர் மண்டபம், கடை வீதி என்று தேடிக் களைத்தாள். தேவி கோயிலுக்குள்ளும் இல்லை காருக்குள்ளும் இல்லை என்று வந்து நின்றார். சித்தி அழ ஆரம்பித்தாள். சித்தப்பா நின்ற இடத்திலேயே இன்ன எண்ணம் என்று தெரியாமல் சுற்றிமுற்றி பார்த்தார். எங்கும் மனிதர்கள். வெவ்வேறு முகங்கள். வெவ்வேறு பாவனைகள் வெவ்வேறு மனிதர்கள். அம்மனிதர்களுக்கு இடையே தேவி இருக்கவில்லை.

4

ஏழு பகல் ஏழு இரவு தேடினார்கள். சாமியார் மடத்தில் புதிய பெண் சாமி வந்திருப்பதாக சொன்னபோது சென்று தேடினார்கள். கருவறையில் ஒருத்தி நுழைந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு சென்று தேடினார்கள். படித்துறையில் அடிதடியின்போது. தலவிருட்ச திண்ணையில் ஒற்றை ஆடை பெண் ஒருத்தி குறி சொல்வதாய் சொன்னபோது. முதல் பெண் திகம்பர அடிகள் வந்துள்ளார் என்று சொன்னபோது. ஓடி ஓடி களைத்தார்கள். எல்லாம் சரியாகிப் போகும் என்றிருந்த நிலைமை போய் இதெல்லாம் முடிந்தால் போதும் என்றாகிவிட்டது.

எல்லோரையும் கேட்டார்கள். போலீசிடம் பூசாரியிடம் கடைக்காரர்களிடம் வந்து செல்வோரிடம். கேட்டவர்களிடமே திரும்ப கேட்டார்கள். யார் யாரோ எங்கெங்கோ எப்படியெப்படியோ பார்த்ததாக துப்பு சொன்னார்கள். சொன்ன இடம் சென்று ஏமாந்தார்கள். சமீபமாக கிணற்றில் விழுந்ததையும் இரயிலில் அடிபட்டதையும்கூட பார்த்து கழித்தார்கள்.

சித்தப்பா அழ ஆரம்பித்திருந்தார். சித்தி நிறுத்தியிருந்தாள். சித்தப்பா ஆகாரம் தவிர்க்க ஆரம்பித்திருந்தார். சித்தி மீண்டும் ஏற்க ஆரம்பித்திருந்தாள். இருவரும் ஒன்றன் பின் ஒன்றான வேறுவேறு உலகத்தில் இருந்தார்கள்.

கொந்தளிப்பும் இல்லாத சமாதானமும் இல்லாத ஒரு மனம் வந்தமைந்தது. எல்லா செயலும் முறிந்து நின்றது. சேர்ந்து தேடியோர் அகன்று கொண்டனர். தகவல் கிடைத்தால் சொல்லி அனுப்புவதாக போலீஸ் சொல்லிவிட்டது. கொஞ்சம் அக்கறை செலுத்தியோர் வீடு சென்று வர அறிவுறுத்தனர். இவர்கள் உலகம் இங்கேயே நின்றுவிட. இவர்கள் விட்டுவந்த உலகம் முன் சென்றுகொண்டிருந்தது.

“வீட்டுக்கு போய் மேல என்ன செய்றதுன்னு யோசிப்போம்” என்று சித்தப்பா சொல்லும்போது எதுவும் சொல்லாமல் இருந்தாள். “வந்த வேலை முடிந்தது. எல்லாம் சரியாக போய்விட்டது. கருமம் தொலைந்து விட்டது. அதற்குத்தானே வந்தோம்” என்று மனம் அங்கதமாக நினைக்காமல் இல்லை. நினைத்தவுடனேயே கடிந்துகொண்டது. கடிந்துகொண்டவுடன் அதுவும் செய்ய வேண்டிய செயல்தான் என்று தர்க்கம் பேசியது. வெகுநேரம் அமைதியாய் இருந்துவிட்டு போகலாம் என்றாள். அவள் அதை சொல்வாள் என்று சித்தப்பா அறிந்திருந்தார்.

அவ்விடம் விட்டு சென்றவர்களை அங்குள்ளோர் மீண்டும் இதுநாள் வரை பார்க்கவில்லை

5

ஆண்டியர் மடத்தில் அன்று எல்லோரும் குதூகலமாக இருந்தார்கள்.

“தெய்வம் வருகுதுடோய் ஒரு தெய்வம் வருகுதுடோய்
அட ஆண்டி புதிய தெய்வம் வருகுதுடோய்

கூடு ஏது வீடு ஏது டோய் – அட ஆண்டி
உனக்கு காடுகூட தான் ஏது டோய்

விதி உண்டா கதி உண்டா டோய் – இல்லை
வெறும் செயல் மட்டும் தான் உண்டா டோய்

செயல் ஒடுங்கும் மந்திரம் தெரியுமோ டோய்
மந்திர உட்பொருள் சூத்திரம் தெரியுமா டோய்
சூத்திரம் துலக்கும் மறைபொருள் அறியுமா டோய்

உடல் கரையுமோ உளம் கரையுமோ டோய்
உயிர் கூட சேர்ந்து கரையுமோ டோய்

வந்த வேலை முடிந்ததோ டோய்

தந்தாநே டோய் தாநாநே டோய்
தெய்வம் வருகுதுடோய் புதிய தெய்வம் வருகுதுடோய்.”

6

சாரதா மூன்றாவது குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டு கோவிலுக்கு வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆற்றில் அகலப்பரப்பில் தட்டையாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. விசுவிசுவென்று ஈரக் காற்று அவளை முழுதும் நனைத்து சென்றது. ஆற்றுப் படுகை பகலின் வெம்மையை மேல் அனுப்பிக்கொண்டிருந்தது. கீழ்வானம் மஞ்சளாகவும் மேல்வானம் நீலமாகவும் அந்தி நிரப்பிக் கொண்டிருந்தது. அவள் இப்போது தனிமையையோ அமைதியையோ விரும்புவது இல்லை. தடுக்கி விழுந்துவிட்டால்? மேல் மனம் தேவியை நினைப்பதே இல்லை அடி மனம் மறப்பதே இல்லை. தேவியின் மென்மயிர் தேகம், அகலமான தோள்கள், நீள்வட்ட முகம், நேர்நின்ற மார்பு, வற்றிய வயிறு, அவளின் முக ஓட்டங்கள் அக பாவனைகள் என்று எதையும்.

அடி மனம் அவளைக் காண விரும்பியதோ என்னவோ தேவியின் முகம் மின்னல்போல் ஒரு கீற்றாக எங்கோ தோன்றி மறைந்தது. சாரதாவிற்கு நெஞ்சு அடைத்தது. பரவச படபடப்பு அவளை நிரப்பியது. அங்குமிங்கும் பார்த்தாள். தென்படவில்லை. இல்லை, அது இங்கேதான் இருக்கிறது. தேவியாய் காட்சி கொள்கிறது. அருகில் பார்க்காதே தொலைவில் பார். தொலைவில் பார்க்காதே அருகில் பார். அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் அக்கரைப் பரப்பில் ஒற்றை ஆடையுடன் தேவியாகிய அது சாரதாவைப் பார்த்து நின்றுகொண்டிருந்தது.

ஜடாமுடியுடன், சாதாரணமாக, மிக சாதாரணமாக. காலநிலையால் அடிபட்டு தேகமே உயிராக. புதிராகவோ புனிதமாகவோ புராணமாகவோ இல்லாமல் வெறுமனே நேரடியாக.

தன்னைப்போலவே.

அவள் அருகில் சில பிச்சைக்கார ஆண்டிகள்.

இரு வேறு கரைகளில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செய்வலர்: செமிகோலன்