ஜீவன் பென்னி

ஜீவன் பென்னி கவிதைகள்

1.
எந்தப் பெரிய காரணங்களுமில்லாமல் இந்நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன.
அவ்வொவ்வொரு பிரகாசத்தையும் பின்தொடர்ந்திடும் போது
இந்த இரவு மிகுந்த சந்தோசங்கள் மட்டுமே கொண்டதாகி விடுகிறது.
அதன் இருள் தன் புதிர்களை ஒவ்வொன்றாக அவிழ்த்திடும் போது
ஒரு அதிகாலைத் தானாகப் புலர்கிறது,
பிறகு அது எப்போதும் போலாகிவிடுகிறது.
இப்பிரபஞ்சத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதென்பது இவ்வளவு
நெருக்கமாக இக்கூழாங்கல்லை கைகளில் பிடித்துக்கொண்டிருப்பது தான்.

2.
உலகத்திடம் வேப்பம் பூக்களை காண்பித்துக்கொண்டிருக்கிறது இக்கோடை
ஒரு புல் தனது பச்சையை இழந்திருக்கிறது
சருகான தன் கடைசி அன்பை ஒரு மரம் பேசுகிறது
காய்ந்து கிடக்கும் கூழாங்கல் உங்களின் நிழலை வேண்டிக்கொண்டிருக்கிறது
உங்கள் முன் உதிர்ந்து கிடக்கும் வாழ்வுகளில்
உங்களுக்கான ஒன்றை எடுத்துப் பத்திரப்படுத்துகிறீர்கள்.
இக்கோடையின் வெப்பம் இன்னும் ஆழமிக்கதாக மாறிவிடுகிறது.

3.
இன்னும் தொடங்கிடாத உலகின் முதல் கூழாங்கல்
கைகளுக்குள்ளிருக்கிறது.
இப்பிரபஞ்சத்தின் அனைத்து மகிழ்ச்சிகளும் எனக்குள்ளிருக்கின்றன.
இவ்வளவு நெருக்கத்தில் அதனன்பு சொல்லவே முடியாததாகயிருக்கிறது
சிறிது சிறிதாய் அது ஒரு உலகினை அருகினில் கொண்டுவருகிறது.
பழையவைகளனைத்தும் ஒரு தொலைவில் தனித்து விடப்பட்டிருக்கின்றன.