ஜெ.ரோஸ்லின்

மனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜெ.ரோஸ்லின் கவிதைகள்

மனம்

இந்த மனதிடம்
நீ இல்லாத எதையோ உற்றுப்பார்க்கும் பூனையைப் போல இருக்கிறாய்
என சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அது நம்ப மறுக்கிறது.
கைவிளக்குகளோடு
நான் என்னைவிட்டு வெளியேப்போய்
என்னைத் தேடும் போதுதான் கவனித்தேன்
என்னுடைய மனம் தூரத்தில் ஒரு மலையாக அமர்ந்திருப்பதை.
அதன் அடிவாரத்தில் சென்றுபார்த்தேன்.
நினைவுகள் படிக்கட்டுகள் வழியே கீழே இறங்குவதை
பார்த்தபடியே மேலே ஏறிக்கொண்டிருந்தன மறந்தவைகள்

பாதி திறந்த சன்னலுடைய அறை

இரவுகளில் அறைகள்
யுத்தச்சூழலில் நீந்திக்கொண்டிருக்கும் நீர்மூழ்கிகப்பல்களாக
தங்களை கனவு கண்டுகொள்கின்றன

தாமதத்தின் தெருக்கள் வழியே

சிங்கத்தின் தலையுடைய ஒருத்தி பால்கனியில்
தனியே நின்றுகொண்டிருக்கிறாள்.
அம்பாசிடர் கார் ஒன்று
அந்த சாலையில் எதற்கோ காரணம் மாதிரி
நிற்கிறது.
அச்சு அசலாய் என்னைப் போலவே இருக்கும்
ஆயிரம் ஆயிரம் பேர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன் தாமதத்தின் தெருக்கள் வழியே.

திரும்பிப் பார்க்கையில்

திரும்பிப் பார்க்கையில்
காலம் ஒரு இடமாக
காட்சியளிக்கிறது என்று நகுலன் எழுதியிருக்கிறார்.
ஆனால் திரும்பி பார்க்கும்போது அல்ல
இந்த சன்னலில் இருந்து
பார்க்கையில்
எனக்கு காலம் ஒரு நபராக தெரிகிறது.
அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்
எப்போதும் செய்துகொண்டிருப்பதையா?
இல்லை, மெதுவாக நிலவை தணித்துக்கொண்டிக்கிறாள்

பிரிவு

நீ எப்போதும் மூன்று பேருக்கு மத்தியில் இருக்கிறாய்
ஆனால் உன்னை மாத்திரம் தனக்கு விருப்பமான
நீலநிறபொம்மையென
தன் கையில் பொத்திவைத்துக்கொள்கிறது தனிமை
பிறகு யாருக்கும் தெரியாமல்
உன்னை தன்வீட்டிற்கு எடுத்துச்செல்கிறது
நீ மற்ற பொம்மைகளுக்கு அருகில் வைக்கப்படுகிறாய்
உன்னை வைத்து சாவகாசமாய்
இரவும் தனிமையும் விளையாடுகின்றன
இரவு உன்னை தூக்கி எறிகிறது
மறுமுனையில் தனிமை உன்னை பிடித்துக்கொள்கிறது
வீட்டில் மூன்று பேருக்கு மத்தியில்
நின்றுகொண்டிருக்கும் உன் உடலுக்கு
இப்போது தலைவலிக்கத் துவங்குகிறது
நீ உன் அறைக்கு ஓடுகிறாய்
மெதுவாக மூன்று நபராக பிரிகிறாய் நீ