ஜோ டி குருஸ்

துறைவன் நாவல் முன்னுரை: ஜோ டி குருஸ்

இலங்கிறும் பரப்பின் எறி சுறா நீக்கி…

image

மகிழ்வதற்கான தருணமிது. தென்மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், நெய்தலே அதன் வீரத்தை, விவேகத்தை, வாழ்க்கைக்கான போராட்டத்தை, கடலாடும் வித்தையை அகவிழி திறந்து பேச ஆரம்பித்திருக்கிறது. வரலற்றுக் காலந் தொட்டு இன்று வரையிலான வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை துறைவன் என்ற பதிவின் மூலம் ஒருசேர அள்ள முயன்ற தம்பி கிறிஸ்டோபர் ஆன்றனியின் முயற்சியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனி, ஆடி ஆண்ட புரட்டாசி தேடித் தின்போர்க்கு தெய்வமே துணை என்பார்கள், கடலடி அதிகமாய் இருக்கும் தென்மேற்கு கடற்கரையின் மீனவர் வாழ்வை, தெள்ளிய தமிழால் எடுத்து இயம்பியிருக்கிறார் தம்பி. வாழ்வின் வளமை தேடி எங்கெங்கோ போய்விட்டோம் ஆனாலும் கடமரத்துக் கடியாலில் கயிறு கட்டி இழுத்ததும், பொக்கை வாய்க் கிழவர்களைப் போத்தி போத்தி என அன்பொழுக அழைத்து மகிழ்ந்ததும் எமக்கு மறந்து விடவில்லை என்று துறைவனில் காட்டியிருக்கிறார் தம்பி.

துணைக்கு வந்ததாய் மாயத் தோற்றம் காட்டிய போர்த்துக்கீசியமும் அதன் மூலம் வந்த கத்தோலிக்கமும்,  அவரடிமை, இவரடிமை என எங்களுக்கு பெயர் சூட்டி கடற்கரைக்குள்ளேயே எம்மை முடக்கிப் போட்டதோடல்லாமல் கடல் தாண்டி, கரை தாண்டி யோசிக்கவும் விடவில்லை. தூவர்த் பர்போசா போல வந்தவனும் போனவனும் வாய்க்கு வந்தபடி எதை எதையோ பதிந்து விட்டுப் போனதை உரையாடல் வழி ஆய்வு மனப்பான்மையோடு அலசுகிறது துறைவன்.

பரசுராமர் கேரளக் கடற்கரையிலிருந்த மீனவரைத்தான் நம்பூதிரிகளாக மாற்றினார் என்பதற்கு சான்றாய் இன்றும் தொடர்கிறது அவர்தம் திருமணத்தில் வலைவீசி மீன் பிடிக்கும் சடங்கு. எப்படி ஒட்டகக் கயிறுகளை தேவை கருதி அரேபியர்கள் தலையில் சுற்ற ஆரம்பிக்க பின்னாளில் அதுவே அவர்களின் ஆடையில் ஓர் அங்கமாய் மாறிப் போனதைப் போல, மீன் பிடிக்கும் தூண்டில் கயிறு பூனூலாய் மாறியதோ என்னவோ!

துறைவனில், நாஞ்சிலின் நல்ல தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. பண்டைய தமிழ்ச் சொற்களே மலையாள மொழியின் ஆதார சுருதியாய் இருப்பது கண்டு வியந்து போனேன்.

“பகவதியம்ம, நம்ம கடலம்மைக்க சகோதரி.”

“மீன ஓடவிட்டுப் பிடிச்சனும்.”

“நம்ம ஜாதியில எல்லாரும் தலைவமாரு, ஏசு கிறிஸ்து பெறந்ததுல இருந்து இந்தத் தலவமாரெல்லாம் சேந்து ஒரு தலைவன தேர்ந்துடுக்கத் தெரியாது இருக்கானுவ, ரண்டாயிரம் வருசமா இதுதாம் நெலம அதுனாலதாம் வந்தவனும் போனவனும் தலைவராயிட்டு இருக்காம்.”

“ஊர்ல ஒருத்தனுக்கும் குடிச்சாத சாப்பாடு எறங்காதே.”

“இந்தக் கரமரவும், கரமடியும் இழுத்திட்டு கெடந்தா செரியாவாது. யமாகாயும், சுசுகியும், போட்டும் வச்சி கடல்ல கெடக்க மீன வாரியெடுக்கும்போ, நீ மரத்தில போயி கொக்கு மாரி ஒவ்வொண்ணா கொத்தி எடுத்திட்டிருந்தா எப்புடில. இந்த எஞ்சின் சாதனங்க வந்த பெறவு  மீனெல்லாம் பேடிச்சி வெலங்க ஓடியாச்சி.”

“இதில குருவான கள்ளன் யாரு?”

“குருமிளகு கொண்டுபோக வந்தவன் வாஸ்கோட காமா.”

உரையாடலின் ஊடே எட்டிப் பார்க்கும் சிறு செய்திகளை போத்தியின் வாய் வழியாய் வரலாற்றுக்குள் இணைக்கும் பக்குவத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார் தம்பி. எது எப்படியோ, எனக்கு தெரிந்தவரை பரதவரில், முக்குவ பரதவர்தான் துறைவன். அவர்கள்தான் இன்றும் பெருங்கடல் வேட்டத்துக்குச் சொந்தக்காரர்கள். அவர்தம் வாழ்வு துறைவனில் பதிவாகி அதன் மூலம் நெய்தலின் நீண்ட நெடிய துயில் கலைகிறது என்பதே என்போன்றோரின் மகிழ்ச்சிக்கான காரணம்.

வாழ்த்துகள்!

                                                 ஆர் என் ஜோ டி குருஸ், சென்னை – 600 013