வாழ்வாசை ஒருபோதும் மனிதர்களை கைவிடுவதில்லை. விரும்பி தன்னை முடித்துக் கொள்பவர்கள் இங்கு மிக அரிதிலும் அரிதே. வழங்கப்பட்டதை கடைசித்துளிவரை உறிஞ்சிக் குடித்துவிடவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். அத்தனை பேருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என்ன? எத்தனை துய்த்த பின்னும் மனம் மீண்டும் நுகரும் வேட்கையால் அலையாடிக் கொண்டே இருக்கிறது. எல்லா ஆசைகளும் முதலில் ஒரு துளியென இம்மண்ணில் விழுகின்றது. வேரோடி வாழும் நிலத்தை ஆரத்தழுவியபோது இது நிரந்தரம் என்றும் இன்னும் அதிகக்காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் நம்புகிறோம். அதனால் ஓயாமல் லௌகீக காரியங்களில் நம்மை இழக்கிறோம். செய்கின்ற அனைத்தும் நம் விருப்பம் ஒன்றினால் மட்டுமே நிகழ்கிறதா?
எக்கணமும் நம் வாய்ப்பு காலாவதியாகலாம். காலடி மண் இல்லாமலாகி பறத்தலின் சாமான்யம் விதிக்கப்பட்டு மீண்டும் இங்கு நிகழ்வனவற்றை கண்ணாடியின் அப்புறம் நின்று வெறிக்கும்போது நம்மால் என்ன செய்துவிட முடியும்? விடைபெற்றுக் கொள்ளும் மனநிலையை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. நம் காற்றை நிறுத்தும் கணம் எங்கிருக்கிறது? எப்படி அதன் தருணமறிந்து நம்மைத்தேடி அடைகிறது? இத்தனை நுண்ணிய நீர்த்துளிகளை பேராழி கணக்கில் வைத்துள்ளதா? பேராழி என்பதே நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகைதானோ? தொகுப்பதும் பகுப்பதும் எவரின் கரம்?
ஒரு மரணம் நிகழும்போது ஒரு பறவை பறந்து செல்கிறது, தொடுவானம் தாண்டிய தொலைவிற்கு. இனி ஒருபோதும் அது மீண்டு வருவதில்லை. தாழ்ந்தும் உயர்ந்தும் தவித்தாடும் மரக்கிளையே அப்பறவை இருந்ததற்கான பருப்பொருள் சாட்சி. வந்தமரும் பறவையை ஆடி ஓயும் மரக்கிளை எவ்வாறு எதிர்கொள்கிறது? அமர்தலும் பறத்தலும் தவித்தாடுதலும் உலக இயல்பு என்றறியும் கணம் புன்னகையாக அன்றி வேறென்னவாக விரியும்? மரணத்தை எதிர்கொள்ள தர்க்கத்தைவிட சிறந்த கேடயம் வேறு உண்டா?