தினப்பதிவுகள்

கதை எழுதிய கதை: பெல்லந்தூர் ப்ளைஓவர் சம்பவம்

பெல்லந்தூர் ஃபளை ஓவர் சம்பவம்- கதை எழுதிய கதையைச் சொல்கிறார் சிகந்தர்வாசி

சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். அங்கு  ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஒருவன் நாங்கள் போய்க் கொண்டிருந்த ஆட்டோ முன்பு வந்து ஏதோ கத்தினான். ஆட்டோ டிரைவர் சற்று முன் சென்று நிறுத்திவிட்டு அவன் வருவான் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் வரவில்லை. நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றோம்.

இரண்டு நாட்களில் அந்தச் சம்பவம் கதையாகி வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டது.

பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம் – சிகந்தர்வாசி

பெண்டுல மனசு கவிதை குறித்து கோபி சரபோஜி

பெண்டுல மனசு கவிதை குறித்து கோபி சரபோஜி-

புலம் பெயர்ந்து வேலைக்காகச் செல்லும் வாழ்க்கை என்பது மாயக் கூண்டுக்குள் நுழைவது மாதிரி. ஒரு வருடமோ இரண்டு வருடமோ மட்டும் அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொஞ்சம் சம்பாதித்து வந்து ஊரில் குடும்பத்தோடு இருந்து விட வேண்டும் என்றும், தான் செய்ய நினைத்ததைச் செய்து விட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விமானம் ஏறுபவர்கள் அதன் பின் தன் வாழ்நாளின் பாதியை அப்படியான வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிப் போவது மிகப் பெரிய துயரம்!

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நுனிப்புல்லாய் சில வசதிகளை அந்த வாழ்க்கை கொடுத்திருப்பதாய் தெரிந்தாலும் இளமையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்ட சூழலில் வேலை இல்லை என தான் வேலை செய்யும் நிறுவனங்களால் திடுமென  ஊருக்குத் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அவர்கள் படும் மனவேதனையும், மனக்குழப்பங்களும் சொல்லி மாளாதவைகள்!

ஆரம்பகாலத்தில் தான் செய்து பார்க்க நினைத்த விருப்ப, தொழில் சார்ந்த முயற்சிகள் எல்லாம் கால ஓட்டத்தில் காலத்திற்கு ஒவ்வாதவைகளாகவும், போட்டித்தன்மை மிக்கதாகவும் மாறி விட்ட நிலையில் எழும் அச்ச உணர்வும், குடும்பத்தின் தேவைகள், குழந்தைகளின் கல்வி போன்ற கட்டாயப் பொருளாதாரத் தேவைகளும் அவர்களை மீண்டும் அதே வாழ்க்கை முறைக்கே பயணப்பட வைக்கிறது.

என்ன செய்வது? எனத் தெரியாத குழப்ப நிலையில் தற்காலிகத் தீர்வாய் இப்படி வாழ்நாள் முழுக்கப் பயணிப்பவர்களின் மனமானது அவர்கள் தங்களின் ஆரம்பகாலத்தில் செய்ய நினைத்த விசயங்கள், தொழில்கள் பற்றிய சிந்தனைகளைத் தாங்கி. குடும்பத்தோடு தொடர்ந்து இருக்க முடியாத துயருடனே நீள்கிறது,

இந்த நாட்டில் இன்னும் இரண்டு வருடம் மட்டும் தான் இருப்பேன், அதன் பின் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு இருந்து நினைத்த தொழிலை, விசயத்தைச் செய்வேன் என ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்கள் நினைக்கும் எண்ணங்கள் அனைத்துமே கானல் நீர் போல வெறும் நினைப்பாக மட்டுமே அமைந்து விடுகிறது, பொருளீட்டல் சார்ந்த புலம் பெயர்தலின் ஊடாக ஒரு பெண்டுலம் ஆரம்பத்திற்கும், முடிவுக்குமாய் நிற்காது அசைவதைப் போல அவர்களின் மனம் வாழ்நாள் முழுக்க இரண்டு நிலைகளுக்கும் அசைந்த படியே இருக்கிறது.

அவர்களில் ஒருவராய் நானும் இருக்கிறேன்.

கோபி சரபோஜியின் கவிதை இங்கே

இரு நாயகர்கள்

தன்னுடைய பன்னிரெண்டு ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தில் சிமோன் பொலிவர் மூன்றுமுறை ஒன்றுபட்ட இலத்தீன் அமெரிக்காவை நிர்மாணிக்க முயன்று தோற்றுப் போகிறார். எண்ணிக்கையில் சிறிய அளவே கொண்ட படையுடன் நியூ கிரனெடா மேல் அவர் நடத்திய படையெடுப்பு சரித்திர புகழ் பெற்றது. விடுதலையாளர் எனப் போற்றப்பட்டாலும், அவர் முதலில் தன்னை ஒரு சர்வாதிகாரியாகத்தான் நிலைநிறுத்திக் கொள்ள விழைந்தார். அவருடைய கனவான ஒன்றுபட்ட இலத்தின் அமெரிக்கா நிகழாமலே போய்விட்டது. மார்க்குவெஸ் இப்படிச் சொல்கிறார்

“அவருடைய உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும், இருபதாண்டு கால பயனற்ற போர்களையும், அதிகார மாயையும் துப்புரவாக்கும் வண்ணம், அன்றைக்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்ட தினசரி திருப்பலியை வழமையைவிட மிகையான தீவிர எழுச்சியுடன் நிகழ்த்தினார்.”

வரலாறு காட்டும் நாயகர்கள் எப்போதும் ஒளிவட்டத்தினூடே பொலியும் வீரகதைகளைக் கொண்டவர்களாக மட்டும் இருப்பதில்லை. அவர்களை நாம் தரிசிக்கும் நெருக்கம் குறையக் குறைய ஒளிரும் முகங்கள் மறைந்து சாதாரணரின் முகம் அங்கே நிலைகொள்கிறது. சுயபச்சாதாபமும், தோல்வியின் கருமையும் படிந்திருக்கும் அந்த முகங்களில் நமது சாயலும் சமயத்தில் தெரிகிறது. “இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்” கட்டுரையில் அஜய் நம்மை மார்க்குவெஸ்ஸின் புதிர்ப்பாதை வழியே தளபதி பொலிவரின் பொருளற்ற முடிவை நோக்கிக் கொண்டு செல்கிறார். மரணம்தான் எத்தகைய நிவாரணியாக இருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட நிலையிலிருந்து மற்றொரு பாத்திரத்தை கொண்டு வந்து தளபதியின் எதிர்த்தராசில் வைக்கிறார் அஜய். ஸ்டோனரின் ஆளுமையின்மைதான் இப்படியானதொரு இணை வாசிப்பை நிகழ்த்த காரணமாக இருந்திருக்க வேண்டும்.

“நீ யார், எப்படிப்பட்டவனாக ஆக விரும்புகிறாய், நீ செய்வதன் முக்கியத்துவம் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்று ஏடுகளில் பதியப்படாத, இராணுவத்தால் ஆகாத போர்களும், வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன. நீ என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் பொழுதில் இதை நினைவில் கொள்”,

என்று வரும் வரிகள் மூலம் ஸ்டோனரின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரம் நமக்குத் துலக்கமாகத் தெரிகிறது. தோல்விகளால் மட்டுமே தொகுக்கப்பட்ட வரலாற்றின் அந்திமக் கணங்கள் ஸ்டோனருக்கு அளிக்கும் மனச்சாந்தியை சுட்டிக் காட்டுகிறது கட்டுரை.

கொந்தளிக்கும் எரிமலைக் குழம்பின் வலிமை அதன் பீறிட்டு வெளியேறும் வீச்சில் இருக்கிறது. ஆழமான ஏரியின் வலிமை அது அசையாமல் இருப்பதில்தான் இருக்கிறது.

– ஸ்ரீதர் நாராயணன்

கட்டுரை இங்கே- சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

 

oOo

ஒளிப்பட உதவி- Jacob Bender Has a Blog

விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு

“விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து” – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு

blow up image

பல்விரிவுத்தன்மை கொண்ட வாசிப்பு குறித்து வெ. கணேஷ் எழுதும் இரண்டாம் கட்டுரை இது. இதற்கு முன், குரோசவாவின் திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்- “ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்“.  இந்த வரிசையில் அவர் மேலும் பல கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும்போதும் சில விவாதப் புள்ளிகளை முன்வைக்கலாம்.

பலதரப்பட்ட உணர்வு நிலைகளுக்குரிய பல்வகை யதார்த்தங்கள் வெளிப்படும் பல்வாசிப்பு ஆற்றல் கொண்ட படைப்புகள், யதார்த்தத்தின் பன்முகத்தன்மையை, அதன் பொது பிடிமானமின்மையை பிரதிபலிக்கும் காரணத்தால் சரியாகவே போற்றப்படுகின்றன. அதற்கு அடிப்படையாய் அமையும் பிரதியின் ambiguity எப்படிப்பட்டது என்பதையும் பேசுவது நம் பார்வையைச் செறிவாக்கக்கூடும். அதாவது, ஒரு படைப்பு பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதற்காகவே அது பாராட்டுக்குரிய தகுதியை அடைவதில்லை. வெவ்வேறு உணர்வு நிலைகள் வெவ்வேறு வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன என்பது மட்டும்தான் பன்முக விரிவு குறித்து நாம் சொல்லக்கூடிய விஷயமா?. இதற்கு பதில் காண, ஒரு விளையாட்டாய், வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு நிகழ்த்தினால் என்ன?

இந்தக் கதையில், மிக்கேல் புறச்சித்தரிப்பிலிருந்து உன்முகமாய் பயணிக்கிறான். அதை அவன் வார்த்தைகளில் விவரிக்கையில் சொல் பிம்பம் ஆகிய இரண்டும் (நாமரூபங்கள்!) அவனுக்கு பேயோட்டு கருவிகளாகின்றன- மிக்கேல் தற்பாலின கலவி குறித்த அச்சங்களை, அதன் துன்பியல் நினைவுகளை, இக்கதைசொல்லலைக் கொண்டு மீள்கிறான். கொர்த்தசாரின் கதைசொல்லிக்கு எதிர்த்திசையில், பிரதியிலிருந்து உன்முகம் நோக்கிய பயணம் மேற்கொள்கிறார் கணேஷ் – வாசிப்பு என்ற செயல், அவரது குழந்தைப்பருவத்தின் ஒரு சிறு துண்டத்தை பெரிய அளவில் விரித்துக் காட்டுகிறது, அப்படி ப்ளோ அப் செய்யப்பட்ட வாழ்வனுபவத்தை வாசிப்புக்கு உட்படுத்தும்போது, அது அவர் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் “ப்ளோ-அப்” என்ற சிறுகதையைப் புரிந்து கொள்ளும் கருவியாகிறது. சிறுகதையின் கதைசொல்லி பிரதியிலிருந்து பயணப்பட்டு தன் குழந்தைப் பருவ குழப்பங்களை சமநிலைக்கு கொண்டு வருகிறார், இந்தக் கட்டுரையில் வெ. கணேஷ் குழந்தைப்பருவ நினைவுகளிலிருந்து பயணப்பட்டு பிரதியின் குழப்பங்களைச் சமநிலைக்குக் கொண்டு வருகிறார்.

தான் பல்வகை வாசிப்புகளை நிகழ்த்தும்போதும் சிறுகதை தன் மையப் பொருளைப் புலப்படுத்துவதில்லை என்ற ஆதங்கத்தை ஒரு வாசகராய் வெ. கணேஷ் வெளிப்படுத்துகிறார். ஆனால் அதே சமயம், பல்வகை யதார்த்தங்கள் இருக்கக்கூடும் என்ற உண்மையை இந்தப் பிரதி நம்பச் செய்கிறது என்றும் வாசிக்கிறார். இதற்கு அடுத்த கட்டமாய், பிரதியின் பல்வகை வாசிப்புகள் பல்வகை யதார்த்தங்களை உருவாக்கக்கூடும் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவரது இந்தக் கட்டுரை ஒரு பிரதியாய் எந்த உண்மையைச் சுட்டுகிறதோ, அதுவும் பல்வகை வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கக்கூடியதுதான்.

வாசிப்பே பிரதியாகும் நிலையில், சற்று விலகி நின்று யோசித்தால், எது யதார்த்தம் என்ற கேள்விக்கு இணையாக எது பிரதி, எது வாசிப்பு, என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்வி, ஜூலியோ கொர்த்தசாரின் சிறுகதையிலும் தொக்கி நிற்கும் ஒன்றுதான். கதைசொல்லி தன் புகைப்படப் பிரதியின் ஒரு சிறு பகுதியை வாசிக்கத் தேர்ந்தெடுத்து அதற்கு பேருருத்தன்மை அளிக்கும்போது (ப்ளோ-அப்) அது வேறொரு யதார்த்தத்தைத் திருப்பித் தருகிறது, பரிசளிக்கிறது, விளைவிக்கிறது.. இத்தகைய தேர்வுகளுக்கு இடமுள்ள வரை, எது யதார்த்தம், எது பிரதி, எது வாசிப்பு என்ற கேள்வி முடிவற்ற ஒன்றுதான்.

இதைப் பேசும்போது டிஜிடல் போட்டோகிரபியில். அதிகம் பயன்படுத்தப்படும் இரு சொற்கள்- scan, என்ற சொல், ‘”close investigation,”‘ என்ற பொருளிலும், render என்ற சொல், “give back, present, yield”” என்ற பொருளிலும் முதலில் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிகிறது. ஆனால் இன்றோ scan என்ற சொல் நகலெடுப்பது என்ற பொருளிலும் render என்ற சொல் கூடுதல் பரிமாணம் சேர்ப்பது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது- பிரதி நெருக்கமான வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, வாசிப்பே வேறொரு வாசிப்புக்கு உட்படுத்தப்படக்கூடிய பிரதியுமாகிறது.

வெ. கணேஷ் கட்டுரை இங்கே 

ஒளிப்பட உதவி – Corpse from “Blow-Up” speaks!, Roger Ebert 

ஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு

ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)

‘A Little Love Story’ என்ற தலைப்பு மட்டுமல்ல, “Everything is just as it always was, it seems nothing has changed…”, என்று ஆரம்பிக்கும் முதல் பத்தி, “… Only that summer’s gone…” என்று கோடைப் பருவம் மாறிவிட்டதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்போது, இனி திரும்பி வர இயலாத காலத்தின் ஒரு துளியை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் உறைந்துப் போயுள்ள, இனி மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லாத காதலைப் பற்றிய கதை இது என்று உணர்த்தி விடுகிறது ((‘Shall I compare thee to a summer’s day?’ என்ற கவிதையில் ஷேக்ஸ்பியர், பருவ நிலையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு காலப்போக்கில் எல்லாம் அழிந்தாலும், “But thy eternal summer shall not fade,” என்று தன் காதலைச் சொல்கிறார். ஆங்கில இலக்கியத்தில் உணர்ச்சி வேகத்தையும் இளமையையும் உணர்த்தும் படிமமாக கோடைப் பருவம் உள்ளது)). அடுத்து, இலையுதிர் காலத்தைப் பற்றிய சிறிய, செறிவான வர்ணனை தொடர்கிறது இங்கு ஏன் இலையுதிர் காலத்தைச் சுட்ட வேண்டும் என்று கதையில் போக்கில் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.

இப்போது கதைசொல்லியின் ஒரு கோடை கால நினைவோடைக்குள் வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். இதில் திடீரென்று ‘இது பற்றியெல்லாம் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என்று கதைசொல்லி/ ஆசிரியர் வாசகனிடம் நேரடியாகக் கேட்கும் சித்து வேலையும் நடக்கிறது. இன்று இத்தகைய உத்திகள் மலிந்து விட்டன. Tristram Shandy போன்ற நாவல்கள் இவற்றை இன்னும் முன்னரே செய்திருந்தாலும், 1900களின் ஆரம்பப் பகுதிகளில் இத்தகைய உத்திகள் இன்னும் வியப்பை உருவாக்கக் கூடியவையாகவே இருந்திருக்கக் கூடும். கதையின் ஓட்டத்திற்கு இது பொருத்தமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

அடுத்து, கதைசொல்லி தன்னைக் குறித்தும் சொல்கிறார். இப்போது, கதையில் முதல் பத்திகள் அவர் குறித்து உருவாக்கக் கூடிய நெகிழ்வான சித்திரத்திற்கு நேர்மாறாக இருக்கிறார் அவர். பெண்களைப் போகப் பொருளாக, இச்சையின் வடிகாலாக மட்டுமே பார்த்தவனாக (” I wanted every girl I saw, I wanted to possess her”) தான் அந்தக் கோடையின்போது இருந்ததாக சொல்கிறார். தன் காதலி குறித்தும் அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை, அவள் செவிடாகவும்/ ஊமையாகவும் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார். அதே நேரம், தான் அப்போது மூர்க்கமான மனிதனாக இருந்தேன் என்பதை இப்போது ஒப்புக் கொள்ளுமளவிற்கு காலம் அவரைக் கனியச் செய்துள்ளது.

ஒரு நாள் அவர் காதலி, தயக்கத்துடன், நீ ஏன் என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய், என்று கேட்கிறார். இதை அவர் கழிவிரக்கத்துடனோ, அவனிடமிருந்து தன்னைக் குறித்த புகழ்ச்சியை சுற்றி வளைத்து வரவழைக்கவோ கேட்கவில்லை என்பதையும், அவள் நுண்ணுணர்வு உள்ளவர் என்பதையும் ” You don’t love me at all, …” என்று அவர் தொடர்ந்து பேசுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கும் நம் கதைசொல்லி மிக மட்டமான பதிலையே சொல்கிறான். அவன் குணாதிசயமே இதுதான் என்றாலும், தன் உள்ளத்தை அவள் ஊடுருவிப் பார்க்கிறாள் என்பதும், அதில் (அவளைக் குறித்து அவன் எண்ணுவது) காண்பதைக் குறித்து அவள் அதிகம் வருத்தமடைவது போல் தெரியவில்லை என்பதும் கதைசொல்லியின் அகங்காரத்தைச் சீண்டி அவனை அப்படியொரு இழிவான எதிர்வினைக்குத் தூண்டியிருக்கக் கூடும்.

இப்போதும் அவன் காதலி தன்னிலை இழப்பதில்லை. “You poor thing” என்று கூறி அவனை மென்மையாக முத்தமிட்டு அவனை விட்டு நீங்குகிறாள். அவள் செய்கையில் காதலோ, வருத்தமோ தெரிவதில்லை. இவன் வாழ்வு முழுதும் அலைக்கழிந்து கொண்டே இருப்பான் என்பது அவளுக்கு புலப்பட அது குறித்த பரிதாப உணர்வோடேயே அவள் செல்கிறாள்.

”On Chesil Beach’ நாவலில், வேறொரு சூழ்நிலையில், ஆனால் ஒரு விதத்தில் இக்கதையின் பாத்திரங்களைப் போல் அதே கொதிநிலையில் உள்ள தம்பதியரின் வாழ்வு எப்படி “This is how the entire course of a life can be changed: by doing nothing-.” முற்றிலும் மாறுகிறது என்று சொல்லப்படுகிறது. நம் கதைசொல்லி, ஒன்றுமே செய்யாமல் இல்லை, அவள் விலகிச் செல்லும்போது பத்தடி தொடர்ந்து செல்பவன், அதற்குப் பின் திரும்பி விடுகிறான். இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருந்தால் அவன் வாழ்வு மாறி இருக்கக் கூடும், ஆனால் முதலில் மனதளவில் எடுத்து வைக்க வேண்டிய காலடியே முடியாமல் போகும் போது, அவன் நின்று விடுகிறான்.

இதுவரை, சிற்சில நுட்பங்கள் இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வழமையான கதையாக இருந்தது, “Only ten paces. But for that brief interval of time, this tiny love blazed heartfelt and intense, filled with splendor like a fairy tale,” என்று முடியும்போது இன்னொரு தளத்தை எட்டுகிறது. இப்போது கதையின் ஆரம்பத்தில் அவன், திரும்ப வர முடியாத கோடையை நினைத்துப் பார்ப்பதற்கு அர்த்தம் கிடைக்கிறது.

கோடையில் அக்காதல் வெந்தழிந்தபின் அவன் பல வசந்தங்களைப் (உறவுகளிலும்) பார்த்திருப்பான். இப்போது காலநிலை மட்டுமல்ல அவன் வாழ்வும், இலையுதிர் காலத்தில் இருக்கக் கூடும் (கோடையில் இளமை வேகம் என்றால் இலையுதிர் காலம் மனமுதிர்ச்சியை சுட்டும் படிமம் என்று கருதலாம்).. அதனாலேயே அகங்காரம் உதிர்ந்து, தன் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்ததை வெளிக்கொணர்ந்து அதை நோக்கும் முதிர்ச்சியை, கனிவை அவன் அடைந்திருக்கக்கூடும். தன் காதல் குறித்து “..Not a love like Romeo and Juliet, that lasts beyond the grave.” என்று இப்போது என்ன சொன்னாலும் உண்மையில் அக்கோடையில் தீ பற்றிய அவன் உள்ளமும் சரி காதலும் சரி பிறகெப்போதும் அணையவேயில்லை என்பதும் கதைசொல்லியைப் பொருத்தவரையிலேனும் (இவர்கள் பிரிந்த பிறகு அப்பெண் குறித்து கதையில் வேறு எதுவும் சொல்லப்படாததால்) எப்போதும் தன் கோடைக் காதலின் தழல் அவனைச் சுட்டெரித்துக் கொண்டே இருக்கும் என்றும் புரிகிறது.

– ஆர். அஜய்

கதையை இங்கு வாசிக்கலாம் – ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)

oOo

ஒளிப்பட உதவி – English with a Twist