மாயக்கூத்தன்
இங்கு கோண்ட் வேறொரு தந்திரம் செய்தார். எதிர்த்திசையில், வெவ்வேறு மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடினார். காற்றினால் கொண்டு சேர்க்கப்படும் தன்னுடைய வாடை, அந்த எருதை அடையாமல் இருக்கவே அவர் அப்படிச் செய்தார். குழப்பமடைந்த போதும் அந்த எருது திரும்பி கோண்டைத் தொடர்ந்தது. மீண்டும் எங்கள் மரத்திற்கு கீழே கிடந்த கோண்டின் துணி மூட்டையைக் கண்டது. எருதை அது இன்னும் வெறியடையச் செய்தது. முகர்ந்து பார்த்துவிட்டு, தன் கொம்புகளால் அவற்றைக் கலைத்தது.
இப்போது கோண்ட் காற்றின் கீழ்த்திசையில் இருந்தார். என் பார்வைக்கு அவர் தெரியாத போதும், மரங்கள் ஒருவேளை அந்த எருதினை அவர் பார்வையிலிருந்து மறைத்திருந்தாலும் கூட அதன் வாடையைக் கொண்டே அவர் எருதின் இடத்தைச் சொல்லிவிடுவார் என்று நான் ஊகித்தேன். கோண்டின் துணிகளுக்கு ஊடே தன் கொம்புகளைச் செலுத்திக் கொண்டே அந்த எருது மீண்டும் முக்காரம் போட்டது. அது சுற்றியிருந்த மரங்களில் பயங்கரமாக அமளி துமளிப்பட்டது. எங்கிருந்தோ குரங்குக் கூட்டங்கள் கிளைவிட்டுக் கிளை தாவி ஓடி வந்தன. அணில்கள் சுண்டெலிகளைப்போலே ஓடி மரத்திலிருந்து காட்டின் தரையில் இறங்கி, பின் மீண்டும் மரத்திற்கே சென்றன. மேலே பறந்து கொண்டிருந்த ஜேக்கள், நாரைகள், கிளிகள் போன்ற பறவைக்கூட்டங்கள், காக்கைகள், ஆந்தைகள் மற்றும் பருந்துகளோடு க்றீச்சிட்டன.
திடீரென்று அந்த எருது மீண்டும் தாக்க விரைந்தது. கோண்ட் அமைதியாக அதன் முன்னால் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அமைதியைப் போலே அமைதியாக இருக்கும் ஒரு மனிதனை நான் பார்த்தேன் என்றால் அது கோண்ட் தான். அந்த எருதின் பின்னங்கால்கள் துடித்து வாட்களைப் போலே பறந்தன. பிறகு என்னவோ நடந்தது. அது பின்னங்கால்களை ஊன்றி காற்றில் மேலே எழுந்தது. அதன் கொம்பில் இறுக்கப்பட்டு எங்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த சுருக்குக் கயிற்றால் தான் அது மேலெழுந்தது என்பதில் சந்தேகமே இல்லை. தரையிலிருந்து பல அடி உயரம் எழுந்து, பின் விழுந்தது. அந்த நொடியில், ஒரு சிறுபிள்ளையால் உடைக்கப்பட்ட மரக்குச்சி போலே, அதன் கொம்பு முறிந்து காற்றில் பறந்தது. அந்த முறிவு கட்டுப்படுத்த முடியாத வேகத்தை உண்டு பண்ணி, எருமையை ஒரு பக்கமாக தரையில் எறிந்தது. படபடவென்று கால்கள் காற்றை மிதிக்க, அது கிட்டத்தட்ட உருண்டது. அந்த நொடியில், சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து வரும் தீப்பொறியைப் போலே கோண்ட் முன்னால் குதித்தார். அவரைப் பார்த்தவுடன், அந்த எருமை தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, தன் பிட்டத்தில் உட்கார்ந்து, பெருமூச்செறிந்தது.
எழுந்து நிற்பதில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டது. ஆனால், தன்னுடைய பட்டக்கத்தியால் கோண்ட் அதன் தோளுக்குப் பக்கத்தில் தாக்கினார். அதன் கூர்மையான முனை ஆழமாக வெட்டியது. தன்னுடைய மொத்த எடையையும் கொண்டு அதை அழுத்தினார் கோண்ட். எரிமலை வெடிப்பதைப் போலே ஒரு முக்காரம் காட்டை உலுக்கியதோடு, திரவ மாணிக்க ஊற்று பீச்சியடித்தது. அதற்கு மேலும் காணச் சகியாது நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.
சில நிமிடங்களில் என் இடத்திலிருந்து நான் கீழிறங்கி வர, அந்த எருமை ரத்தப்போக்கால் செத்துப்போய் விட்டதைக் கண்டேன். ஆழமான ரத்தக் குளத்தில் அது கிடந்தது. அதற்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து கோண்ட், தன் செயலால் தன் மேல் படிந்திருந்த கறையை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் தனித்து இருப்பதையே இப்போது விரும்புவார் என்பதை நான் அறிவேன். ஆக, நான் முன்பிருந்த மரத்திற்குச் சென்று வண்ணக்கழுத்தை அழைத்தேன். ஆனால், அவனிடமிருந்து பதிலேதும் இல்லை. அந்த மரத்தில் உச்சிக் கிளை வரைக்கும் ஏறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவன் அங்கு இல்லை.
நான் கீழே இறங்கி வந்தபோது, கோண்ட் தன்னை சுத்தம் செய்து முடித்திருந்தார். அவர் வானத்தை நோக்கி கை காட்டினார். இயற்கையின் தோட்டிகளை நாங்கள் கண்டோம். பருந்துகள் கீழேயும் அவற்றுக்கு வெகு மேலே பிணந்தின்னிக் கழுகுகளும் பறந்தன. யாரோ இறந்துவிட்டார்கள் என்றும் தாங்கள் காட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவை அதற்குள் தெரிந்து கொண்டிருந்தன.
”நமது புறாவை மடாலயத்தில் தேடுவோம். சந்தேகமே இல்லை, அவன் மற்ற பறவைகளோடு பறந்து போய்விட்டான்” என்றார் கோண்ட். ஆனால் வீடு நோக்கி கிளம்புவதற்கு முன், இறந்த எருமையை அளக்கச் சென்றேன். அதை நோக்கி ஒவ்வொரு திசையிலிருந்தும் ஈக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன. அந்த எருமை பத்தரை அடி நீளம் இருந்தது. அதன் முன்னங்கால்கள் மூன்று அடிக்கும் மேலே இருந்தன.
மடாலயத்திற்கு திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் மெளனமாகவே இருந்தது. பாதிக்கப்பட்ட அந்த கிராமத்திற்குச் சென்று, அதன் தலைவரிடம் அவர்களின் எதிரி இறந்துவிட்டது என்பதை நண்பகல் பொழுதில் சொன்ன போது மட்டுமே மெளனம் கலைந்தது. முன்தின மாலையில், சூரிய அஸ்தனமனத்திற்கு முன் பிரார்த்தனைக்காக கோவிலுக்குச் சென்ற அவரது வயதான தாயாரை அந்த எருமை கொன்றிருந்ததால் அவர் துக்கத்தில் இருந்த போதும், இதைக் கேட்ட போது அவர் நிம்மதியடைந்தார்.
நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம், வேகமாக நடந்தோம். சீக்கிரமே மடாலயத்தை அடைந்துவிட்டோம். உடனே எனது புறாவைப் பற்றி விசாரித்தேன். வண்ணக்கழுத்து அங்கு இல்லை. மிகவும் துக்கமாக இருந்தது. அவருடைய அறையில் பேசிக் கொண்டிருந்த போது அந்த வயதான துறவி “கோண்ட், உங்களைப் போலவே அவனும் பத்திரமாக இருக்கிறான்” என்றார். பல நிமிட மெளனத்திற்குப் பிறகு, “எது உனது மன நிம்மதியைக் குலைக்கிறது?” என்று கேட்டார்.
அந்த வயதான வேடுவர் தான் சொல்லப்போவதை அமைதியாக யோசித்தார். “ஒன்றுமில்லை குருவே. எதைக் கொல்வதையும் நான் வெறுக்கிறேன். நான் அந்த எருதை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் ஐயோ! நான் அதை அழிக்க வேண்டி வந்துவிட்டது. அதன் கொம்பு உடைந்த போது, எனக்கும் அதற்கும் இடையில் எதுவுமே இல்லை. ஒரு முக்கிய நரம்பில் எனது கத்தியைச் செருக வேண்டியதாகிவிட்டது. அவனை உயிருடன் பிடித்திருந்தால் ஒரு மிருகக்காட்சி சாலைக்காவது விற்றிருக்கலாமே என்று நான் வருந்துகிறேன்.”
”ஓ! வணிகவியலின் ஆன்மாவே!” என்று நான் கூவினேன். “அந்த எருது இறந்தது பற்றி நான் வருந்தவில்லை. மிச்ச வாழ்க்கை முழுவதும் மிருக்க்காட்சி சாலையில் ஒரு கூண்டில் இருப்பதைவிட செத்துப்போவதே நல்லது. சவ வாழ்க்கை வாழ்வதற்கு சாவே மேல்.”
“நீ மட்டும் சுருக்குக் கயிற்றை இரண்டு கொம்புகளிலும் போட்டிருந்தாயானால்” என்று கோண்ட் ஆரம்பித்தார்.
“நீங்கள் இரண்டு பேரும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். செத்துப் போன ஒன்றைப் பற்றியல்ல” என்று அந்த லாமா சத்தம் போட்டார்.
”உண்மை தான். நாளை அவனைத் தேடுவோம்” என்றார் கோண்ட்.
அதற்கு லாமா பதில் சொன்னார் “இல்லை. டெண்டாமுக்குத் திரும்பு என் மகனே. உங்கள் குடும்பம் உங்களைப் பற்றிய கவலையில் இருக்கிறது. அவர்களுடைய எண்ணங்கள் எனக்குக் கேட்கின்றன.”
அடுத்த நாள் நாங்கள் ஒரு ஜோடி குதிரையில் டெண்டாமுக்குக் கிளம்பினோம். விரைவான பயணத்தாலும், வெவ்வேறு இடங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குதிரைகளை மாற்றிக் கொண்டதாலும் மூன்றே நாட்களில் டெண்டாமை அடைந்துவிட்டோம். எங்கள் வீட்டை நோக்கி மேலே போகும் போது, மிகுந்த உற்சாகத்தில் இருந்த எங்கள் வீட்டு வேலைக்காரரை எதிர் கொண்டோம். மூன்று நாட்களுக்கு முன்னரே வண்ணக்கழுத்து வந்துவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் அவனுடன் நாங்கள் இருவரும் வரவில்லை என்பதால் என் பெற்றோர் கலவரப்படத் துவங்கி, எங்களை உயிருடனோ பிணமாகவோ தேடிக் கண்டெடுக்க குழுக்களை அனுப்பி வைத்திருந்தார்கள்.
கோண்டும் நானும் என் வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினோம். அடுத்த பத்து நிமிடத்தில் என் அம்மாவின் கைகள் என்னைச் சுற்றியிருந்தன. அவனுடைய கால்கள் என் தலையில் இருக்க, வண்ணக்கழுத்து தன்னை சமநிலையில் இருத்திக்கொள்ள தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தான்.
வண்ணக்கழுத்து ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிட்டான் என்பதைப் கேட்டபோது நான் அடைந்த உற்சாகத்தைச் சொல்லத் தொடங்கினால் நிறுத்த முடியாது. மடாலயத்திலிருந்து டெண்டாமில் எங்கள் வீடுவரைக்கும் அவன் பறந்து வந்திருக்கிறான். தடுமாறவில்லை,. தோற்றுப் போகவும் இல்லை. “ஓ! பறத்தலின் ஆன்மாவே, புறக்களுக்கு மத்தியில் ஒரு முத்தே” என்று நானும் கோண்டும் விரைந்து நடக்கும் போது வியந்து கொண்டேன்.
இப்படி முடிந்தது சிங்காலிலாவிற்கான எங்கள் யாத்திரை. வண்ணக்கழுத்தையும் கோண்டையும் போர்க்களத்தில் பீடித்திருந்த நோய்களான பயத்தையும் வெறுப்பையும் இந்த யாத்திரை குணப்படுத்திவிட்டது. வாழ்வின் மிகக் கொடிய இந்த நோய்மைகளிலிருந்து ஒரு ஆன்மாவையேனும் மீட்குமெனில் அதற்கான எந்தவொரு உழைப்பும் வீண் இல்லை.
இந்தக் கதையின் இறுதியில் ஒரு உபதேசத்தைச் சொல்வதற்கு பதிலாக நான் இதைச் சொல்கிறேன்,
“நாம் எதை யோசிக்கிறோமோ, எதை உணர்கிறோமோ அதன் சாயல் நமது வாக்கிலும் செயலிலும் படியும். பிரக்ஞையற்ற நிலையில் கூட ஒருவன் பயப்பட்டாலோ அல்லது அவனுடைய சிறிய கனவு கூட வெறுப்பில் தோய்ந்திருந்தாலோ, விரைவிலோ அல்லது பின்னரோ, அவனால் இந்த இரண்டு குணங்களையும் தன் செய்கையில் வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆக, என் சகோதரர்களே, துணிவோடு வாழுங்கள், துணிவைச் சுவாசியுங்கள், துணிவே அளியுங்கள். அன்பை தியானிப்பதன் மூலமும் அன்பை உணர்வதன் மூலமும், ஒரு மலர் வாசம் தருவதைப் போலே இயற்கையாகவே சமாதானமும் அமைதியும் உங்களிடமிருந்து பொழியும்.
“எல்லோருக்கும் அமைதி கிட்டட்டும்.”
(முற்றும்)