
டிசம்பரின் முதல் வாரத்தில் கோண்டும் வண்ணக்கழுத்தும் தன்னந்தனியாக உளவு பார்க்கப் போக வேண்டியிருந்தது. அவர்கள் போன இடம் ஒரு காடு. அது ஏப்ரெ, அர்மெண்டியர் மற்றும் ஹெஸ்ப்ரோக் நகரங்களில் இருந்து வெகு தொலைவில் இல்லை. ஃபிரெஞ்சு வரைபடத்தை எடுத்துக் கொண்டு, கலேவிலிருந்து தெற்கு நோக்கி ஒரு நேர்க்கோட்டை வரைந்தீர்கள் என்றால், பிரிட்டிஷ் மற்றும் இந்திய ராணுவம் நின்றிருந்த இடங்கள்அடுத்தடுத்து இருப்பதைக் காண முடியும். அர்மெண்டியருக்குப் பக்கத்தில் இந்திய மொகம்மதிய வீரர்களின் கல்லறைகள் நிறைய இருக்கின்றன. இந்திய இந்து மத வீரர்களின் கல்லறைகள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்துக்கள் ஆதிகாலத்திலிருந்தே இறந்தவர்களை எரியூட்டி வந்தார்கள். எரியூட்டப்பட்டவர்களுக்கு கல்லறைகள் கிடையாது. அவர்களுடைய அஸ்தி காற்றில் தூவப்படுகின்றன. அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை, ஆம், எந்தவொரு இடமும் அவர்களின் நினைவை பாரமாய்ச் சுமப்பதில்லை..
மீண்டும் கோண்டிற்கும் வண்ணக்கழுத்திற்கும் வருவோம். எதிரியின் எல்லைக்கு அப்பால், ஹெஸ்ப்ரோக் அருகில் காட்டிற்குள் இருக்கும் மிகப்பெரிய இரகசிய ஆயுதக் கிடங்கின் இருப்பிடத்தை துல்லியமாய் அறிய அவர்கள் இருவரும் அனுப்பப்பட்டார்கள். அதைக் கண்டுபிடித்தால், கோண்டும் வண்ணக்கழுத்தும் தனியாகவோ இருவருமாகவோ, ஒரு துல்லியமான வரைபடத்தோடு பிரிட்டிஷ் ராணுவ தலைமையகத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வளவு தான். ஆக, தெளிவான டிசம்பர் மாத காலையில் ஒரு நாள் வண்ணக்கழுத்தை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொண்டார்கள். அது காட்டின் மேலே இருபது மைல் தூரம் பறந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதி இந்தியப் படை வசமும் மற்றொரு பகுதி ஜெர்மானியப் படை வசமும் இருந்தது. ஜெர்மனியர்களின் இடத்திற்குள் நுழைந்த பிறகு வண்ணக்கழுத்து விடுவிக்கப்பட்டது. அவன் காடு முழுக்கப் பறந்தான். பிறகு அந்த நிலப்பரப்பைப் பற்றி அறிவை வளர்த்துக் கொண்டு வீடு திரும்பினான். வண்ணக்கழுத்து தன்னுடைய பாதையை அறிந்து கொள்ளவும், அவனிடம் எதிர்பார்க்கப்படும் வேலையைப் பற்றி அவனுக்கு அறிவுறத்தவுமே இந்த ஏற்பாடு.
அன்று மாலை சூரியன் மறைந்ததும், நியூ யார்க்குக்கு வடக்கே பத்து பாகையில் இருக்கும் அந்த இடத்தில் சுமார் நான்கு மணிக்கே அந்தி சாய்ந்துவிடும்,, குளிருக்கு கணப்பான உடைகளை அணிந்து கொண்டு, வண்ணக்கழுத்தை தன் மேல் சட்டைக்கு உள்ளே வைத்துக் கொண்டு, கோண்ட் கிளம்பினார். அவர்கள் ஒரு ஆம்புலன்ஸில் அந்தப் பெரிய காட்டில், இந்திய ராணுவத்தின் இரண்டாவது எல்கை வரை சென்றார்கள். முழு இருட்டில், உளவுத்துறை ஆட்கள் வழிநடத்த அவர்கள் போர்முனை நோக்கிச் சென்றார்கள்.
சீக்கிரமே அவர்கள் இரு படைகளின் ஆக்கிரமிப்பிலும் இல்லாத மையப்பகுதியை அடைந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அது மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது. குண்டுவீச்சில் அம்மரங்களில் பல இன்னும் சேதமடையாமல் இருந்தது. பிரெஞ்சோ ஜெர்மனோ, ஆங்கிலத்தில் ‘யெஸ்’, ‘நோ’, ‘வெரி வெல்’ என்பதைத் தாண்டி ஒன்றும் அறியாத கோண்ட், தன்னுடைய மேல் சட்டைக்கு அடியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் புறாவின் துணையோடு, ஜெர்மனியப் படையின் ஆயுதக் கிடங்கை கண்டுபிடிக்க தனித்து விடப்பட்டார்.
முதலில் அவர், தான் குளிர்ந்த இமாலயத்தின் சீர்தோஷணம் கொண்ட ஒரு நாட்டில், குளிர் காலத்தில் மரங்கள் மொட்டையாக நிற்க, இலையுதிர்கால சருகுகளும் உறைபனியும் தரையை மூடியிருக்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதை தனக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. மரங்களிலும் மரக்கன்றுகளிலும் குறைந்த அளவே இலைகள் இருக்க அவருக்கு தன்னை மறைத்துக் கொள்வது அத்தனை எளிதான காரியமாக இல்லை. அந்த இரவு இருள் சூழ்ந்திருந்தது; பிணத்தைப் போல சில்லிட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு மனிதனைவிடவும் இருட்டில் சிறப்பாக அவரால் காண முடியும் என்பதாலும், அவருடைய மோப்பம் பிடிக்கும் சக்தி எந்தவொரு விலங்கை விடவும் கூர்மையானது என்பதாலும், யாரும் புக முடியாத இடத்தைக் கடந்து முன்னேறுவது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இரவில் காற்று கிழக்கிலிருந்து வீசியது.
மரங்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த அவர், தன்னால் முடிந்த அளவிற்கு விரைவாக முன்னேறினார். ஒரு ஜெர்மனியப் படை தன் வழியைக் கடக்கப்போகிறது என்பதை அவர்கள் வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அவருடைய முக்கு அவருக்குச் சொல்லிவிட்டது. அவர், ஒரு சிறுத்தையைப் போல மரத்தின் மீது ஏறி காத்திருந்தார். அவர்களுக்கு ஒரு சிறு அசைவின் ஓசை கூடக் கேட்கவில்லை. அதுவே பகலாக இருந்திருந்தால் அவர் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஏனென்றால், உறைபனியின் மீது நடந்து வந்திருந்த அவருடைய கால்களில் இருந்து ரத்தம் சொட்டி, கறைபடிந்த கால்தடத்தை விட்டிருந்தது.
ஒருமுறை அவர் மிக குறுகிய இடைவெளியில் தப்பித்தார். இரண்டு ஜெர்மானிய வீரர்கள் கீழே கடந்து செல்ல வழிவிட்டு அவர் மரத்தின் மீது ஏறியிருக்க, ஒரு கிளையிலிருந்து அவர் காதில் யாரோ ஒருவர் கிசுகிசுத்ததைக் கேட்டார். உடனே அவருக்கு அது ஒரு ஜெர்மானிய துப்பாக்கி வீரர் என்பது புரிந்து விட்டது. ஆனால், அவர் தன் தலையைத் தாழ்த்தி கவனமாகக் கேட்டார். அந்த ஜெர்மானியர் ‘குடன் நாட்ஜ்’ என்றார். பிறகு, வெளிவந்து மரத்திலிருந்து இறங்கினார். அவர் கோண்ட் தன்னை பணியிலிருந்து விடுவிக்க வந்த சக வீரர் என்று தவறாக நினைத்துக் கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து, கோண்ட் மரத்திலிருந்து இறங்கி, அந்த ஜெர்மானியரின் கால் தடத்தை பின்தொடர்ந்தார். இருட்டாக இருந்தாலும் அவருடைய வெற்றுப் பாதம், அந்த மனிதனின் காலடி தடம் பதித்திருந்த மண்ணை உணர்ந்தது. அது அவருக்கொன்றும் கடினமில்லை.
கடைசில் அவர் நிறைய மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தார். அவர் மெதுவாக அவர்களைச் சுற்றிச் சென்று முன்னேற வேண்டியிருந்தது. தன் காலடியில் ஏதோவொரு புதிய சத்தத்தைக் கேட்டார். நின்று, கவனித்தார். சந்தேகமே இல்லை, அது அவருக்கு பழக்கமான சத்தம்தான். அவர் காத்திருந்தார். ஒரு மிருகத்தின் காலடி. பட்டர்ர் பட், பட்டர்ர்! கோண்ட் அந்த சத்தத்தை நோக்கி நகர்ந்தார். உள்ளழுந்திய ஒரு உறுமல் சத்தம் வந்தது. பயத்திற்கு பதிலாக, சந்தோஷம் அவர் மனதை நிறைத்தது. புலிகள் நிறைந்த இந்தியக் காடுகளில் இரவைக் கழித்த அவர், ஒரு காட்டு நாயுடைய உறுமலுக்கு பயந்துவிடவில்லை. சீக்கிரமே இரண்டு சிவப்புக் கண்கள் அவருடைய பார்வைக்கு வந்தது. கோண்ட், கவனமாக தனக்கு முன்னால் இருக்கும் காற்றை முகர்ந்தார். அந்த நாயின் மீது சிறிதளவு கூட மனித வாசனை இல்லை. அந்த நாய் காட்டு விலங்காகிவிட்டிருந்தது. அந்த நாயும், தான் என்ன விதமான விலங்கை எதிர் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய காற்றை முகர்ந்தது. கோண்ட் சாதாரணமாக மனிதர்கள் வெளிப்படுத்தும் பய வாசனையை வெளிப்படுத்தவில்லை என்பதால், அந்த மிருகம் முன் வந்து தன்னை அவர் மீது உரசி, தீவிரமாக முகர்ந்தது. அதிர்ஷ்டவசமாக, கோண்ட் வண்ணக்கழுத்தை அந்த நாயின் மூக்கிற்கு மேலே தூக்கிக் கொண்டிருந்தார். மேலும், காற்று பறவையின் வாசனையைக் கொண்டுபோய்க் கொண்டிருந்தது. ஆக, அந்த நாய் தனக்கு முன்னால் இருந்த மனிதனை பயமில்லாத ஒரு நண்பனாகவே பார்த்தது. அது தன் வாலைக் குழைத்துக்கொண்டு கொண்டு செல்லம் கொஞ்சியது. தன் கையால் அதன் தலையை தட்டிக் கொடுப்பதற்கு பதிலாக கோண்ட், மெதுவாக தன் கையை நாயின் கண்களுக்கு முன்னால், அது பார்ப்பதற்காகவும் முகர்வதற்காகவும் நீட்டினார். அடுத்த ஒரு நொடி நிச்சயமின்மை தொடர்ந்தது.
அந்த நாய் கையைக் கடிக்கப் போகிறதா? இன்னொரு நொடியும் கழிந்தது. பிறகு… அந்த நாய் கையை நக்கியது. இப்போது சுகமாய்க் கொஞ்சியது. “ஆக, இது வேடனுடைய நாய். தலைவனைப் பிரிந்திருக்கிறது. இதனுடைய எஜமானன் இறந்திருக்கக் கூடும். ஜெர்மானியப் படைக்கு வரும் உணவுப் பொருட்களைக் கவர்ந்து தின்று உயிர் பிழைத்திருக்கிறது. ஏனென்றால், இது இதுவரை மனித மாமிசத்தை தின்றதாகத் தெரியவில்லை. இதுவரைக்கும் பரவாயில்லை” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் கோண்ட்.
கோண்ட் மெதுவாக சீட்டியடித்தார். எந்த நாடாக இருந்தாலும் எக்காலத்திலும் இது தான் வேடர்களின் சமிக்ஞை. ‘வழிநடத்து’ என்பது அதன் அர்த்தம். அந்த நாயும் அவரை வழிநடத்தியது. ஒரு ஆண் கலைமான், புலியின் குகையை மிகத் திறமையுடன் கடப்பதைப் போல, அந்த நாய் ஜெர்மானிய வீரர்களின் தற்காலிக முகாமை சுற்றிக் கொண்டு சென்றது. பல மணிநேர அலைச்சலுக்குப் பின், அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்கள். சந்தேகமே இல்லை. கோண்ட் அவர் தேடி வந்த ஆயுதக் கிடங்கை கண்டுபிடித்துவிட்டார். ஆயுதங்கள் மட்டுமல்ல ஜெர்மானியர்களின் உணவுக் கிடங்கும் அது தான். அவரை வழிநடத்திக் கொண்டு போன காட்டு நாய், ஒரு ரகசியப் பொந்துக்குள் சென்று அரை மணி நேரம் கழித்து ஒரு கன்றின் கால் இறைச்சியோடு திரும்பியது. அதுவொரு மாட்டிறைச்சி என்று அதன் வாடையைக் கொண்டே கோண்டால் கணிக்க முடிந்தது. அந்த நாய் உறைபனித் தரையில் தன்னுடைய இரவுணவோடு அமர்ந்தது. அதே நேரத்தில், கோண்ட் தான் இரவு முதல் தோளில் போட்டுக் கொண்டிருந்த பூட்ஸ்களை எடுத்து அணிந்து கொண்டு, மேலே உற்று நோக்கினார். நட்சத்திரங்களின் நிலை இருப்பை வைத்து அவரால் தன் இருப்பிடத்தை அறிய முடிந்தது. அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்தார்.
மெதுவாக விடியத் துவங்கியது. தன் பையிலிருந்து ஒரு திசைகாட்டியை எடுத்தார். அந்த இடத்தின் வரைபடத்தை தன்னால் வரைய முடியும் என்று நிச்சயமாக உணர்ந்தார். அப்போது, அந்த நாய் மேலே குதித்து, கோண்டின் மேல் சட்டையை பற்களால் கடித்து இழுத்தது. மீண்டும் அந்த நாய் தன்னை வழிநடத்த விரும்புகிறது என்பதில் அவர் மனதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த நாய் முன்னால் ஓட, கோண்ட் விரைவாக பின்தொடர்ந்தார். விரைவிலேயே அவர்கள் முட்களாலும் உறைந்த கொடிகளாலும் அடர்த்தியாக மறைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை அடைந்தார்கள். அந்த பாதை விலங்குகளுக்கு மட்டுமே சாத்தியமானது. அந்த நாய் பல கூரான முட்களுக்கு கீழே தவழ்ந்து சென்று மறைந்துவிட்டது.
இப்போது கோண்ட் நட்சத்திரங்களின் நிலை இருப்பை ஒரு படமாக வரைந்து, தன்னுடைய திசைகாட்டியின் சரியான நிலையையும் வரைபடத்தில் குறித்து இரண்டையும் வண்ணக்கழுத்தின் காலில் கட்டிப் பறக்கவிட்டார். அந்தப் புறா ஒவ்வொரு மரமாகப் பறந்து, ஒவ்வொன்றிலும் ஒரு நிமிடம் வரை உட்கார்ந்து தன் அலகுகலால் இறகுகளை ஒழுங்குபடுத்துவதைப் பார்த்தார். பிறகு, காலில் கட்டப்பட்ட தாள் இருக்கிறதா என்று சரிபார்ப்பது போல தன் அலகால் கொத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டு, இருப்பதிலேயே உயரமான மரத்தின் உச்சிக்கு சென்று, அங்கே அமர்ந்து கொண்டு அந்த இடத்தின் அமைப்பை ஆய்வு செய்தது. அந்த நொடியில், மேலே பார்த்துக் கொண்டிருந்த கோண்ட் தான் இழுக்கப்படுவதை உணர்ந்தார். குனிந்து தன் காலின்கீழ் பார்த்தார். அந்த நாய் முட்களுக்கு அடியிலிருந்த ஒரு குழிக்குள் அவரை இழுத்தது. கோண்ட் தாழக் குனிந்தார். தன்னுடைய வழிகாட்டியை தொடரும் அளவிற்கு கீழே வளைந்தார். ஆனால், கடைசியில் தலைக்கு மேலே இறக்கைகள் அடிக்கும் சத்தமும், துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தமும் கேட்டது. எழுந்து வண்ணக்கழுத்து கொல்லப்பட்டுவிட்டானா இல்லையா என்று ஆராயக் கூட அவருக்கு விருப்பமில்லை.
முட்களுக்கு அடியில், தன் வயிறும் முதுகெலும்பும் ஒட்டிக் கொண்டது போலும், இரண்டும் சேர்ந்து தரையோடு தைக்கப்பட்டது போலும் அவர் தவழ்ந்தார். அவர் உந்தித் தவழ்ந்து திடீரென்று எட்டு அடி வரை வழுக்கிக் கொண்டு போய், ஒரு இருண்ட குழியில் விழுந்தார். கும்மிருட்டாக இருந்தது. சிராய்த்த தலையை தேய்த்துக் கொண்டிருந்த்தால் கோண்ட் அதை முதலில் கவனிக்கவில்லை.
கடைசியில் எங்கே இருக்கிறோம் என்பதை அவர் அறிய முற்பட, திருடர்களின் குகை போல முட் புதர்களால் பாதுகாக்கப்பட்ட உறைந்த தண்ணீர்க் குழியாக இருக்கலாம் என்று நினைத்தார். குளிர்காலத்திலும், தலைக்கு மேலே உள்ள கிளைகளிலும் கொடிகளிலும் இலைகளே இல்லாத போதும், பகற்பொழுதிலும்கூட அந்தக் குழியில் இருள் அடர்த்தியாகவே இருந்தது. அந்த நாய் இப்போதும் அவருடன் தான் இருந்தது. அது தான் அவரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து வந்திருந்தது. பாவம், அந்த விலங்கு ஒரு நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தது. அந்த நேரத்திலும் கோண்ட்டோடு மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருக்க விரும்பியது. ஆனால், களைப்படைந்த கோண்ட், கிட்டத்தில் ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தத்தையும் பொருட்படுத்தாது தூங்கிவிட்டார்.
மூன்று மணிநேரங்கள் கழித்து அந்த நாய் திடீரென்று சிணுங்கியது. பைத்தியம் பிடித்ததைப் போல ஊழையிட்டது. அதன் பிறகு பயங்கர வெடிச் சப்தங்களால் பூமி அதிரந்தது. அதைப் பொறுக்க முடியாமல், அந்த நாய் கோண்டின் மேல் சட்டையைப் பிடித்து இழுத்தது. வெடிச் சத்தம் படிப்படியாக, கோண்ட் இருந்த இடம் ஒரு தொட்டில் போல ஆடும் வரை உயர்ந்தது. ஆனால், அவரால் மறைவிடத்திலிருந்து வெளியே வருவதாய் இல்லை. ”ஓ வண்ணக்கழுத்தே, ஒப்பில்லாத பறவையே, எவ்வளவு சிறப்பாக உன் வேலையைச் செய்திருக்கிறாய். அதற்குள், அந்த செர்ரிப்பழ முகம் கொண்ட தளபதியிடம் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறாய். எனவேதான் இந்த இடி போன்ற பதில். நீ பறவை இனத்தின் மாணிக்கம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். அவர் முனகிக் கொண்டிருக்க விமானங்கள் போட்ட குண்டுகள் ஜெர்மானிய ஆயுதக் கிடங்கை வெடிக்க வைத்தது.
அப்போது, அவரை மேற்சட்டையின் கையைப் பிடித்து இழுக்க முயன்று கொண்டிருந்த அந்த நாய், காய்ச்சல் வந்தவன் போல ஊழையிட்டு நடுங்கியது. அந்த நொடியில் காற்றில் ஏதோ உரசிக் கொண்டு வந்து பொத்தென்று பக்கத்தில் விழுந்தது. ஒரு அழுகையான ஊளையோடு அந்த நாய் தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே விரைந்தது. கோண்டும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால், காலம் கடந்துவிட்டது. அந்த முட்களின் ஊடே அவர் பாதி தூரம் கடந்திருக்க, அவருக்கு கீழே இருந்து காதைப் பிளக்கும் வெடிச்சத்தம் பூமியை நொறுக்கியது. கொடூரமான வலி அவருடைய தோளைத் துளைத்தது. ஏதோ ஒரு பேயால் தூக்கி, கடும் வலிமையுடன் தரையில் எறியப்பட்டதைப் போல அவர் உணர்ந்தார். கருஞ்சிவப்பு வைரங்களில் ஒளி அவர் கண்களின் முன்னே சில நொடிகள் ஆடிவிட்டு, திடீரென்று ஆற்றுப்படுத்தும் இருள் சூழ்ந்தது.
ஒரு மணிநேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பிய உடன், முதன் முதலில் அவர் உணர்ந்தது ஹிந்துஸ்தானி குரல்களைத்தான். தன்னுடைய ஊர் மொழியை மேலும் தெளிவாகக் கேட்க அவர் தன் தலையை உயர்த்தினார். அந்த நொடியில், அவர் ஆயிரம் நல்ல பாம்புகள் கொத்தியதைப் போன்ற வலியை உணர்ந்தார். தான் தாக்கப்பட்டதையும் உயிர் போகுமளவிற்கு காயம்பட்டிருப்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார். அதே நேரத்தில், ஒவ்வொரு முறை ஹிந்துஸ்தானி ஒலி கேட்கும் போதும், இந்தக் காடு எதிரியின் வசம் இல்லை, இந்தியப் படையின் வசத்தில் இருக்கிறது, என்பதை அறிந்து அவர் உள்ளம் மகிழ்ந்த்து. ’ஆ! என் வேலை முடிந்தது. இனி நான் சந்தோஷமாகச் சாகலாம்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
(தொடரும்…)
Like this:
Like Loading...