நாவல்

ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 2

முந்தைய பகுதி: ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 1

கடல், இதமான வசந்தகாலம், ஒளியில் நனையும் தீவுகள், கிரேக்கத்தின் அலங்காரமற்ற அழியா திருமேனியின் மீது மென்மழை தெள்ளிய திரையாகப் பரவியது. ஏஜியன் கடலை மரணிப்பதற்கு முன் தன் வாழ்நாளில் கடப்பவன் உண்மையில் பாக்கியவான் என எண்ணிக்கொண்டேன்.

பெண்கள், பழங்கள், சிந்தனைகள்– ஆம் இவ்வுலகின் இன்பங்கள் கணக்கற்றவை. ஆனால் இந்த அற்புதமான வசந்த காலத்தில், கடந்து செல்லும் ஒவ்வொரு தீவின் பெயரையும் முணுமுணுத்தபடி கடலைக் கிழித்துக்கொண்டு பயணிப்பதில் உள்ள மகிழ்ச்சிதான் என்னளவில் மனிதனின் இதயத்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த மார்க்கம். வேறெங்கும் நிகழ்காலத்திலிருந்து கனவிற்குள் இத்தனை எளிதாக, அமைதியுடன் நுழைந்துவிட இயலாது. எல்லைகோடுகள் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன, புராதனமான கப்பல்களின் கொடிகம்பங்களில் இருந்து கிளைகள் முளைத்து கனிகள் காய்க்கின்றன. கிரேக்கத்தில், தேவையே அற்புதங்களை உண்டாக்கும் அன்னை என்றாகிறது. (more…)