எனக்கு அறிமுகமான முதல் பேயின் பெயர் பாண்டிச்செல்வி. அவள் தெருமுக்கில் இருந்த வீட்டில் வசித்தவள். சிறு வயதிலேயே தற்கொலை செய்து கொண்டதால் அவள் பேயாக உலவுவதாகவும் , பூட்டியிருக்கும் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு இரவில் பார்ப்பவர்களிடம் எல்லாம் தண்ணீர் கேட்டு வருகிறாள் என்றும் பல கதைகள் உலாவின.
நாங்கள் நான்காம் வகுப்பில் இருந்தபோது எங்களுடன் படித்த தேவி பாம்பு கடித்து இறந்து போனாள். அதற்கு பின் எங்கள் வகுப்பின் மூலையில் ஸ் ..ஸ் .. என்று பாம்பின் சத்தம் கேட்பதாகவும் சில சமயம் கால்களில் ஏதோ நெளிவது போல இருப்பதாகவும் கடைசி பெஞ்ச் பிள்ளைகள் கூறியது கேட்டு பெஞ்ச் மேலே சம்மணமிட்டபடியே பகலெல்லாம் அமர்ந்திருந்தோம்.
சில பேய்கள் இரவு காட்சி முடிந்து வருபவர்களிடம் டபுள்ஸ் கேக்குமாம். ஆலமரத்தடியில் செல்லும்போது கீழே குனிந்து எதுவும் எடுக்க கூடாது, பொடனியில் பேய் அடித்துவிடும் என்ற கதையை உண்மையென்று பல காலம் நம்பினேன். பாட்டி வீட்டிற்கு ஜாம கோடாங்கி ஒருவன் வந்து நடுநிசியில் குறி சொல்லுவான். பகலில் வந்து காசு வாங்கும்போது அவன் கூறும் பேய் கதைகள் எல்லாம் அதிபயங்கரமாக இருக்கும். மொட்டை கிணறு, பழைய காரை வீடு, பள்ளியின் டாய்லட் மூலை என்று பேய் வசிக்க ஊருக்குள் தனியாக இடமிருந்தது.
அப்போது எங்களுக்கு பதினோரு வயதிருக்கும். நான் ,பிரபு மற்றும் யாமினி மூவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். வழக்கமாக பள்ளிக்கு குதிரை வண்டியில் சென்று வருவோம். ஜல் ஜல் என்று அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகள் ஓசை எழுப்ப, டொக் டொக் என்று அதன் கால் குளம்பிகளின் ஓசை தெறிக்க லேசான ஆட்டத்துடனும் மிதமான வேகத்துடனும் சாலையில் பயணித்து பள்ளி சென்று வருவோம். சில சமயங்களில் குதிரை பாரம் இழுக்க முடியாமல் திணறி ரோட்டோரமாக அவ்வப்போது உட்கார்ந்து விடும். அப்படியான சந்தர்ப்பங்களில் கீழே இறங்கி நாங்கள் விளையாட ஆரம்பித்துவிடுவோம். குதிரை வண்டிக்கார அண்ணன் அதற்கு தண்ணீர் கொடுத்து எழுப்பி எங்களை அழைக்கும் வரை விளையாடியபடி இருப்போம்.
அப்படி ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது குதிரை ரோட்டில் அமர்ந்துகொண்டது. அங்கிருந்து வீடு வெறும் அரை மைல் தூரம் மட்டுமே என்பதால், இறங்கி நடந்துவிடலாம் என்று நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பிக்க , சரக் சரக்கென்று காலணிகளை தரையில் தேய்த்தபடி வினீத்தின் பாட்டி எதிரே நடந்து வந்துகொண்டிருந்தார். எங்கள் தெருவில் தான் அவரும் வசிக்கிறார்.எங்களை பார்த்ததும் மைய்யமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு எங்களை கடந்து சென்றார்.மறுநாள் மாலை வீடு திரும்பும் போதும் குதிரை மக்கர் செய்தது , வண்டியை விட்டு நாங்கள் இறங்கினோம் ,எதிரே வினீத் பாட்டி சரக் சரக்கென்ற சப்தத்துடன் எங்களை கடந்து போனார், அதே மைய்யமான புன்னகை. மறுநாளும் இதே கதை குதிரை ரோட்டில் அமர்ந்தது,இறங்கினோம்,எதிரே வினீத் பாட்டி,சரக் சரக் சத்தம்,புன்னகை.
அதற்கு மறுநாள் ஞாயிற்று கிழமை. நாங்கள் திப்புவின் வீட்டு வராந்தாவில் அமர்ந்து பரமபதம் விளையாடி கொண்டிருந்தோம். விளையாட்டில் பிரபுவின் அக்கா ப்ரீத்தியும், திப்புவும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் எங்களை விட மூன்று வருடம் பெரிய பிள்ளைகள். நாங்கள் ஐவரும் “சீக்ரட் ஃபைவ்” கேங் என்று கூறிக்கொண்டு வெயிலே பரிதாபப்படும் அளவிற்கு சுற்றி திரிவோம். பல துப்பு துலக்கும் வேலைகளை செயல் படுத்துவது என்பது தான் சீக்ரெட் ஃபைவ் கேங்கின் குறிக்கோள். ஆனால் அன்று வரை சீக்ரெட் பைவ்வின் செயல்பாடுகள் என்ன என்பது எங்களுக்கே சீக்ரெட்டாக இருந்தது என்பது தான் உண்மை.
திப்பு வீட்டு தொலைக்காட்சியில் ஏதோ ஒரு பேய் படம் ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு ஹிந்தி படம். அதில் வந்த பேய் ஒரு அலங்கார பிரியயையாக இருந்தது. கதாநாயகியின் வித விதமான ஆடைகளை அணிந்து அழகு பார்க்கும், நடு ராத்திரியில் எல்லாம் அடுப்பங்கரைக்கு சென்று சமைத்து சாப்பிடும். நீண்ட கூந்தலுடன் வந்து அது சாப்பிடும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது.
“பேய் சாப்பிடுமா??” என்றாள் யாமினி
“உயிரோட இருந்தப்போ சாப்பாட்டுக்காக ஏங்கியிருக்கும். அந்த ஆசைய இப்படி நிறைவேத்துது போல” என்றாள் பிரீத்தி.
” ஜஸ்ட் எ மிஸ்ஸு ரெண்டு விழுந்திருந்தா பாம்பு கடி வாங்கிருப்ப, தப்பிச்சுட்ட ” என்று பிரபு பரமபத காயினை நகர்த்த, சரக்கு சரக்கென்று ரோட்டில் யாரோ நடந்து போகும் சப்தம் தெளிவாக கேட்டது.
“இது வினீத்தோட பாட்டி தான” என்று நிமிர்ந்து வெளியே பார்த்தான் திப்பு
“அவங்களே தான்” என்று நிமிர்ந்து பார்க்காமலே ஆமோதித்தாள் ப்ரீத்தி
“அடிக்கடி இந்த நேரத்துக்கு இவங்க மட்டும் இந்த பக்கமா போறாங்க. எங்கன்னு தான் தெரியல ” என்றான் திப்பு
“ஆமா நானும் பார்த்திருக்கேன் ”
“நானும் பார்த்திருக்கேன் ”
“நானும் பார்த்திருக்கேன் ”
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அந்த பார்வையில் அப்படி அவங்க எங்க தான் போறாங்கன்னு போய் பார்த்தா என்ன என்கிற கேள்வி இருந்தது. எங்கள் சீக்ரட் ஃபைவ்விற்கு முதல் வேலை வந்துவிட்டது என்ற உற்சாகத்துடன் எழுந்து மாடிப்படிக்கட்டில் ஏறி நாங்கள் பால்கனிக்கு போய் பார்க்கையில் வினீத்பாட்டி தெரு எல்லை அருகே சென்றுகொண்டிருந்தார்.
யாரையும் சட்டை பண்ணாத சாவகாசமான நடை அவருடையது. அங்கே இருக்கும் ஒரு அரசமரத்தை கடந்து எங்கள் பார்வையை விட்டு அவர் அகன்றதும் நாங்கள் வேகமாக மாடிப்படி ஏறி மொட்டை மாடிக்கு சென்று பார்த்தோம்.அரச மரத்தை தாண்டி இருக்கும் ரோட்டை கடந்து சரிவில் இறங்கி அடர்ந்து இருக்கும் சீமை கருவேல புதர்களுக்குள் நடந்து மறைந்தார்.
‘நாம அங்கேயே போய் பார்த்தால் என்ன?’ என்று அனைவருக்கும் தோன்றவே அவசரமாக படியிறங்கி,வீட்டை விட்டு வெளியேறி, ரோட்டில் இறங்கி வேகமாக ஓட ஆரம்பித்தோம். எங்கள் தெருவை தாண்டி, அதற்கு அடுத்திருக்கும் அரச மரத்தையும் தாண்டி அந்த சாலை வரை சென்ற நாங்கள் சட்டென நின்றோம். அதை கடந்து இதுவரை நாங்கள் யாரும் சென்றதில்லை. அந்த சீமை கருவேல முள் செடிகளுக்குள் இறங்கி நடக்க தயக்கமாக இருந்தது.
“இதுவரைக்கும் இதை தாண்டி யாரவது போயிருக்கீங்களா?”
“ம்ஹூம் ”
“இல்ல”
“நஹி ”
“லேது”
அனைவரும் சில நொடிகள் யோசித்தோம் .
திப்பு தான் துணிந்து இறங்கினான். அவனுக்கு பாட்டி எங்கே போனார் என்பதை விடவும் ப்ரீத்தியின் முன் சாகசம் நிகழ்த்துவதே நோக்கமாக இருந்தது.அதன் பிறகு பிரபு இறங்கி நான்கு அடி எடுத்து நடந்துவிட்டு பின்னால் திரும்பி தயங்கி நிற்கும் எங்களை பார்க்கவும் துணிந்து நாங்களும் குதித்தோம். அந்த ஒத்தையடி பாதையை மிகவும் ஜாக்கிரதையாக கடக்க வேண்டியிருந்தது. சற்று பிசகினாலும் முட்கள் கிழிக்க காத்திருந்தன.
ஒருவழியாக அந்த முட்ச்செடிகளை கடந்து செல்லவும் அது ஒரு பெரிய வெட்ட வெளியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாட்டியை காணவில்லை ஆனால் பசுமையான அந்த காட்சி கண்களை நிறைத்தது. வலது பக்கம் சற்று தூரத்தில் இருப்பது ரயில் பாதை,அந்த பக்கம் சென்றிருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை என்பதால் இடது பக்கம் தான் சென்றிருப்பார் என்ற யூகத்தில் நடக்க ஆரம்பித்தோம். தூரத்தில் கொஞ்சம் மரங்களும் ஒரு சின்ன மண்டபமும் இருந்தது . இப்படி ஒரு இடம் ஊர் எல்லையில் இருப்பதை அப்போது தான் நாங்கள் பார்க்கிறோம். அந்த மண்டபத்தை நோக்கி நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு சின்ன வறண்ட ஓடை குறுக்கிட்டது .அதில் இறங்கி மேடேற முற்படும்போது அந்த ஓடையின் சிறு பள்ளத்தில் ஒரு அண்ணாவும் அக்காவும் எதிரெதிரே அமர்ந்து ஏதோ பேசி கொண்டிருந்தார்கள். நாங்கள் மேடேறி செல்ல ஆரம்பித்தோம். திப்பு மட்டும் அந்த இடத்தை பார்த்து வைத்துக்கொண்டதுபோல இரு முறை திரும்பி பார்த்துவிட்டு நடந்தான்.நாங்கள் அந்த மண்டபத்தை நெருங்கியதும் பார்வையைசுழலவிட்டோம்அங்கும் வினீத்ப்பாட்டி இருப்பதாக தெரியவில்லை. மண்டபத்திற்கு பின்னே ஒரு சாலை இருந்தது. நாங்கள் மண்டபத்தின் அருகே செல்ல செல்ல எங்களை சுற்றி ஒரு நெடி படர்வதை நுகர முடிந்தது.
புருவத்தை சுருக்கி ‘இது என்ன’ என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள திப்பு மட்டும் அதை இழுத்து சுவாசித்து “இங்க யாரோ இப்போ சுருட்டு குடித்து” என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே ஒரு மரத்தின் பின்னாலிருந்து எதிர்பட்டார் வினீத் பாட்டி.
திடீரென்று ஒரு மரத்தின் பின்னாலிருந்து அவர் தோன்றவும் பக்கென்றது எங்களுக்கு. எங்களை அங்கே சற்றும் எதிர்பார்க்காததால் திக்கென்றிருக்க வேண்டும் அவருக்கு.
இரு நொடி அப்படியே அசைவற்று நாங்கள் பார்க்க அவர் சட்டென சுதாரித்த்து தன் கையிலிருந்த சுருட்டை வாயில் வைத்து இழுத்து புகையை வெளியே விட்டார்.ஒரு பெண் அதுவும் ஒரு வயதான பாட்டி புகைக்கும் காட்சி வினோதமாக இருக்கவே நாங்கள் அவரை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அவர் ஓரக்கண்ணால் எங்களை பார்த்தபடியே அவசரமாக புகைத்து முடித்து விட்டு அந்த மிஞ்சி போன சுருட்டை காலில் போட்டு தேய்த்து விட்டு எங்களை நோக்கி வந்தார். அதே சரக் சரக் சப்தம்.அனால் அந்த புன்னகையில் வித்தியாசம் தெரிந்தது.
“என்ன பிள்ளேளா இந்த பாட்டி சுருட்டு குடிக்கிறாளேனு தெகச்சு போயி நிக்கிறீங்களா ?? இப்படி உட்காருங்க” என்று அந்த சிறு மண்டபத்தில் போய் அமர்ந்துகொண்டார்.
நாங்கள் எதுவும் பேசாமல் அவர் எதிரே போய் அமர்ந்தோம்.
” அது…நான் பொறந்து வளந்தது கேரளாவுல ஒரு மலை கிராமம். எப்போவுமே சிலு சிலுனு இருக்கிற குளிர் பிரதேசம். ” என்றவாறே வாயை சேலை தலைப்பால் அழுந்த துடைத்தபடி தொடர்ந்தார்.
“அப்போ நாங்க தேயிலை பறிக்க காலைலயே கிளம்பி மலை ஏறி போவோம். குளிர் உடலை நடுக்கும். எல்லாருக்கும் ஒரு சுருட்டு குடுப்பாங்க. குடிச்சா அப்படியே இதமா இருக்கும். அப்பறம் தான் வேலையே ஆரம்பிப்போம்,ஆரம்பிக்கவே முடியும். அப்படி வந்தது தான் இந்த பழக்கம். அப்படியே பழகிருச்சு. இப்போவும் விட முடியாம தொடர்ந்துகிட்டிருக்கு என்றவாறே கையில் இருந்த சுருட்டு பாக்கெட்டை எடுத்து ஒரு கவரில் வைத்து இடுப்பில் சொருகிகொண்டார்.
“அதுக்கு ஏன் இவ்ளோ தூரம் வர்றீங்க பாட்டி ?”
“அது… நான் சுருட்டு பிடிக்கிறது யாருக்கும் பிடிக்காது. நான் தான் இதை விட முடியாம தினம் இங்க வந்து ஒன்னு சாப்ட்டு போவேன் இதுல இன்னொரு விஷயமும் இருக்கு” என்றவர் முகத்தில் ஒரு பூரிப்புடன் கூடிய சிரிப்பு வந்து மறைந்தது.
அவர் ஏதோ சுவாரஸ்யமான பிளாஷ் பேக் சொல்ல போகிறார் என்று அதை கேட்கும் ஆர்வத்தில் கண்கள் விரிய அவரை பார்த்துக்கொண்டிருந்தோம்.
“அப்போ எனக்கு பதினெட்டு வயசிருக்கும். வயசுல நான் அவளோ அழகா இருப்பேன். இப்போவும் தானே” என்று கேட்டுவிட்டு பலமாக காரை பற்கள் தெரிய சிரித்துக்கொண்டார் .
ஆனால் எவ்வளவு முயன்றும் அவர் சின்ன வயசில் எவ்வளவு அழகாக இருந்திருப்பார் என்று எங்களால் யூகிக்க முடியவில்லை.
“அப்போ எனக்கு மனசு முழுக்க அவுக தான். அவருக்கும் நான்னா அவளோ இஷ்டம். ஆனா லவ்வு கிவ்வுனு எதுவும் சொல்லிக்கலாம் இல்ல.தினம் ஒன்னா தான் எல்லாரும் மலை தோட்டத்துக்கு போய் திரும்புவோம். தினம் எவ்ளோ பேசினாலும் எங்களுக்கு தீரவே தீராது. எப்போவும் கல கலனு ஏதாவது பேசிட்டே இருப்பார். நான் அமைதியா அத ரசிச்சுட்டு இருப்பேன். மலைக்கு போயிட்டு சாயங்காலம் திரும்புறப்போ ஒரு சின்ன சுனை ஒன்னு இருக்கும். அது ஒரு டிசம்பர் மாசம் நல்ல குளிர் காலம் ,அன்னைக்கு சுனை பக்கத்துல உட்கார்ந்து ரெண்டு பேரும் சுருட்டு பிடிச்சுட்டே கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம்.”
நாங்கள் அந்த காட்சியை கற்பனை செய்து பார்த்துக்கொண்டோம்.சிரமப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டு அவர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தோம்.
“அப்படி ஒரு நாள் எங்களுக்கு நடுவுல ஒரு சுருட்டு பாக்கெட்டை பிரிச்சு வச்சுட்டு பேசிட்டிருந்தோம். மொத்தம் அஞ்சு இருக்கும் ஒரு பாக்கெட்ல. முதல்ல ஆளுக்கு ஒன்னா எடுத்து பிடிச்சோம். அப்பறம் கொஞ்ச நேரத்துல
“குமுதூ ….குமுது குட்டி ”
“ம்ம் ”
“ரொம்ப குளிருதுல அப்படியே கொஞ்சம் அனவா இதமா”னு ஆரம்பிச்சாரு
“அனவா இதமா? ”
“இல்ல.. அப்படி ஏதும் கிடைச்சா நல்லாருக்கும்ல” அப்படினு அவரு சாடையா என்ன கேட்குறார்னு புரிஞ்சு புரியாத மாதிரி “அனவாதானே” னு பாக்கெட்ல இருந்து ஒரு சுருட்ட எடுத்து அவர் வாயில வச்சுவிட்டேன்.
காதல் ப்ராதாபத்துல ரெண்டு பேரும் ஒரே காற்றை தான் சுவாசிச்சுட்டு இருக்கோம்ங்கிற நெனப்பே பறக்கிற மாதிரி இருந்துச்சு.
அப்பறம் நானும் ஒன்னு எடுத்து அவரோட சுருட்டுலயே பத்த வச்சுக்கிட்டேன்.
இப்போ அவரு என் வாயில இருக்குற சுருட்ட தனக்கு கொடுக்கனும்னு கேட்குறாரு. நான் வீம்புக்குனே இன்னொன்னு பாக்கி இருக்குல்ல அத எடுத்துக்கோனு பாக்கெட்டை பாக்குறேன் வெறும் பாக்கெட் தான் இருக்கு மிச்சம் இருந்த ஒன்ன காணோம்.
இப்போதான மூனு இருந்துச்சு உனக்கொன்னு எனக்கொன்னு போக பாக்கி ஒன்னு இருக்கனுமேன்னு நான் அவங்கள குழப்பமா பார்க்கவும் அவரு அப்ப தான் சுத்தி முத்தி பார்க்கிறாரு, அப்பறம் வானத்தை பார்க்கிறாரு. அப்போதான் கவனிக்கிறோம் நல்லா இருட்ட ஆரம்பிச்சிருச்சு அன்னைக்கு அமாவாசை வேற, எங்க ரெண்டு பேர் மனசுலயும் இப்போ இருக்கிறது ஒரே நெனப்பு தான்,”
சிறிய இடைவெளி விட்டார். நாங்கள் இமைக்க மறந்து அவரையே பார்த்து கொண்டிருந்தோம்.
“அது சுருட்டு பேய். அதுவா தான் இருக்கனும்னு ரெண்டு பேருக்குமே பட்டுச்சு. ரெண்டு பேரும் எதுவும் பேசிக்காம அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். வேக வேகமா ரோட்டுக்கு வந்ததும் தான் நிம்மதியாச்சு.
சின்ன வயசுல குளிர் தாங்காம செத்து போனவங்க தான் இப்படி சுருட்டுக்கு ஆசைப்பட்டு பேயா சுத்துறாங்கன்னு எங்க ஊரு பக்கம் கதை சொல்வாங்க. நிறைய பேருக்கு இப்படி அனுபவமும் இருந்திருக்கு.
அதுக்கு அப்பறம் இருட்டிறதுக்கு முன்னாடியே சுனையை விட்டு கிளம்பி வீட்டுக்கு திரும்பிட்டிருந்தோம். அப்ப தான் எங்க அப்பா எனக்கு பக்கத்து ஊர்ல ஒரு மாப்பிள்ளையை பார்த்தாரு. இந்த விசயத்த என்கிட்டயே சொல்லாம வச்சிருந்திருக்காரு.
ஒருநாள் நாங்க வேலைய முடிச்சுட்டு மலையை விட்டு இறங்கிட்டு இருக்கோம். எங்க அப்பா பார்த்த அந்த மாப்பிள்ளை யாருக்கும் தெரியாம என்ன பார்க்கனும்னு சொல்லி விசாரிச்சு மலைக்கு வந்துட்டான்.
நீதான் குமுதவல்லியா??நான் யாருன்னு தெரியுதா?ன்னான்.
நான் முழிக்கவும், நாந்தான் உன்னைய கட்டிக்க போற மாப்பிள்ளை. உங்க அப்பா சொல்லலையா?னு கேட்டான், எனக்கு திக்குன்னுச்சு.
நீங்க யாருன்னே எனக்கு தெரியாதே வழிய விடுங்கனு விலகி நடக்கிறேன்.
அம்மாடி இவ்ளோ நீளமா முடி வச்சுருக்கியே உன்னுது தானா இல்ல சவுரி முடியானு என் முடிய பிடிச்சு இழுத்துட்டான்
முடில இருந்து கைய எடுன்னு அவன் கைய நான் தட்டிவிட சரியா இவுக அவன ஓங்கி ஒரு அரை விடவும் அவன் அப்படியே தடுமாறி கீழ விழுந்துட்டான்.
அவன் சுதாரிச்சு எந்திரிக்கங்குள்ள இன்னும் ரெண்டு அடி போட்டு, குமுதாவை நாந்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், நீ வந்த வழிய பார்த்து போயிடுறது நல்லதுன்னாரு.
அவன் எந்திரிச்சு, அடுத்த மாசம் எனக்கும்,அவளுக்கும் தான் கல்யாணம் நடக்க போகுது அவங்க அப்பா வாக்கு குடுத்துட்டாரு பாக்குறியானு சொல்ல ரெண்டு பேருக்கும் சண்டை பெருசாயிருச்சு. ஆட்கள் சேர்ந்துட்டாங்க. எல்லாரும் வேடிக்கை பார்க்க அவனை அடி வெளுத்துட்டாரு, அவன் பொழச்சா போதும்னு ஓடிட்டான்.”
இதை கூறும்போது பாட்டி முகத்தில் அப்படி ஒரு பெருமித சிரிப்பு.அந்த சிரிப்புடன் கூடிய முகத்தை பார்க்கும்போது சின்ன வயசில் அவர் அழகாகத்தான் தான் இருந்திருக்க வேண்டும் என்று அப்போது தோன்றியது.
“அன்னைக்கு தான் முடிவு பண்ணேன் கட்டுனா இவரை மாதிரி ஒரு வீரனத்தான் கட்டனும்னு .அப்பறம் பிடிவாதமா நின்னு, எங்கப்பாவை சம்மதிக்க வச்சு அடுத்த மாசமே நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்கு அப்பறமும் அந்த சுனைக்கு அடிக்கடி போய் சுருட்டு பிடிச்சுட்டு, பிடிச்சதை சாப்பிட்டுட்டு மணிக்கணக்கா பேசிட்டு வருவோம். இப்போ அவரில்லேனாலும் இந்த சுருட்டு பிடிக்கிறப்போ எல்லாம் அவர் கூட இருக்கமாதிரி மனசு லேசாயிடும். இதெல்லாம் அனுபவிக்காம நூறு வருஷம் வாழ்ந்து என்ன பிரயோசனம் சொல்லு” என்று கூறி சிரித்தார் பாட்டி.
இப்போது பாட்டி எங்கள் மனதுக்கு நெருக்கமானவராக மாறிப்போனார்.
“என்ன பிள்ளேலா கதை நல்லா இருந்துச்சா? நீங்களும் இப்படி ஒரு வீரன தேர்ந்தெடுத்து கட்டுங்க” என்று அவர் கூற திப்பு ஒரகண்ணால் ப்ரீத்தியை பார்த்துக்கொண்டான்.
சரியாக அந்த பக்கமாக பாட்டியை தேடிக்கொண்டு வண்டியில் வினீத் அப்பாவும் வந்து சேர்ந்தார்.
“ஆஸ்ப்பித்திரி போகனும்னு சொல்லிட்டு இங்க என்ன பண்றம்மா ” என்று அவர் கேட்டதும்
பாட்டிக்கு சட்டென்று ஒரு பதட்டம் ஒட்டிக்கொண்டது. அவர் இடுப்பிலிருந்த சுருட்டை எடுத்து திப்புவின் கையில் அவசரமாக திணித்துவிட்டு கிளம்பி போய் வண்டியில் அமர்ந்துகொண்டார்.
“ஆமா இத்தனை பேரு இங்க என்ன பண்றீங்க?” என்று வினீத் அப்பா எங்களை பார்த்து கேட்க நாங்கள் என்ன கூறுவதென்று தெரியாமல் திரு திருவென்று விழித்தோம்.
“நான் தான் இவங்களுக்கு கதை சொல்றேன்னு கூட்டிட்டு வந்தேன்” என்று பாட்டி கூறிவிட்டு “எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க கண்ணுகளா” என்று டாடா காட்டிவிட்டு ஆஸ்ப்பித்திரிக்கு கிளம்பி போனார். அவர் சென்றதும் தான் வீட்டுக்கு சொல்லாமல் இவ்ளோ நேரம் இங்கிருந்தது உரைத்தது.
“ஐயோ கண்டிப்பா எங்க வீட்ல தேட ஆரம்பிச்சிருப்பாங்க வாங்க ” என்று நான் கிளம்ப
“இந்தா இதை நீயே வினீத் பாட்டிகிட்ட குடுத்துரு” என்று திப்பு அவன் கையிலிருந்த சுருட்டை என்னிடம் திணித்தான்.
“ஐயோ நான் இதை வச்சு என்ன பண்றது? இந்தா பிடி” என்று நான் யாமினியின் கையில் தர
“எனக்கு வேணாம்பா” என்று அவள் பிரபுவிடம் தர, அவன் “எங்க வீட்ல இதை பார்த்தாங்கன்னா அவளோதான்” என்று திப்புவிடமே தந்தான்.
“சரி இந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்புவோம்” என்று ப்ரீத்தி சொல்லவும். ஆமா அத முதல்ல செய்வோம் என்று நாங்கள் ஐவரும் நகர்ந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.
அந்த ஓடையை கடக்கும் போது மறக்காமல் அந்த பள்ளத்தை அனைவருமே பார்த்தோம். இப்போது அந்த அண்ணாவும் அக்காவும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.
அந்த சீமை கருவேல மரங்கள் அருகே வரும்போது திப்பு தான் கேட்டான் “ஆமா இப்போ யாருகிட்ட சுருட்டு இருக்கு? மறக்காம வினீத் பாட்டிகிட்ட குடுத்துருங்க ”
“உன்கிட்ட தான இருக்கு” என்றதும் சட்டென்று நின்றான்.
கையை விரித்து “இல்லையே நான் பிரபுகிட்ட கொடுத்துட்டேன்”
“அடப்பாவி நாந்தான் உன்கிட்ட குடுத்தேன் நீ திரும்ப தரல”
“என்கிட்டே இல்ல”
“என்கிட்டயும் இல்ல”
“என்கிட்டயும் இல்ல”
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
“அங்கேயே கீழ போட்டுட்டு வந்துட்டோமா? திரும்ப அந்த மண்டபத்துக்கு போய் பார்த்திருவோம், அவங்க காதல் சின்னத்தை அவங்ககிட்டயே குடுத்துருவோம்” என்று ப்ரீத்தி புறப்பட்டாள். அனைவரும் மண்டபத்திற்கு ஓடினோம். இப்போதும் அந்த ஓடையை தாண்டும்போது மறக்காமல் அந்த பள்ளத்தை பார்த்தோம்.இப்போது அந்த அண்ணன் அந்த அக்காவை தோளோடு சேர்த்துப்பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
நாங்கள் மண்டபத்திற்கு சென்று தேட ஆரம்பித்தோம். பாட்டி புறப்பட்ட இடத்தில் தான் அது கீழே விழுந்திருக்க வேண்டும் என்று துழாவ ஒன்றும் சிக்கவில்லை. அது ஒரு சின்ன இடம் ஐவர் தேடியும் அந்த சுருட்டு பாக்கெட் கிடைக்கவே இல்லை.
“ஹே திப்பு நீ தான வச்சுருக்க?”
“என்னாது நானா??” என்று தன் பாக்கெட்டை வெளியே இழுத்து காண்பித்தான். ஒன்றும் இல்லை.
பிரபுவிடமும் இல்லை. நானும் ப்ரீத்தியும்,யாமினியும் ஒளித்துவைக்க வாய்ப்பில்லை. அப்போ எங்கு போனது என்று சிந்தித்த நொடி கிட்டத்தட்ட எல்லாருடைய முகமும் ஓரே நேரத்தில் கலவரமானது.
“அப்போ அந்த சுருட்டு பேய் ” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த பிரபுவின் வாயை பொத்தினாள் ப்ரீத்தி
“டேய் ஏண்டா நீ வேற பீதியை கெளப்பிகிட்டு” என்று அவள் வானத்தை பார்க்க ஆரம்பித்தாள் அப்போதுதான் உணர்கிறோம் இருட்ட ஆரம்பித்துவிட்டது. வானத்தில் நிலாவும் காணோம்.எங்கிருந்தோ நிஜமாகவே காற்றில் ஒரு சுருட்டின் மணம் பரவியதை அனைவரும் உணர்ந்தோம்.
வாங்க போய்டலாம் என்று திப்பு தான் முதலில் ஓட ஆரம்பித்தான்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று ப்ரீத்தி கத்தவும் முன்னால் ஓடிய திப்பு திரும்பி வந்து அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு “எல்லாரும் வாங்க சீக்கிரம்” என்று ஓட ஆரம்பித்தான்.
எல்லாரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட சிறிது தூரத்திலேயே யாமினி தொம்மென்று கால் இடறி விழுந்தாள் . அவளை தூக்கப்போகும் போது குனிந்தால் பொடனியில் அடிக்கும் பேயின் ஞாபகம் வர குனியாமல் வானத்தை நிமிர்ந்து பார்த்தபடியே அவளை தூக்கிவிட்டு மீண்டும் வேகமெடுத்து அந்த பதட்டத்திலும் ,பீதியிலும் ஓடையில் திடுமென்று குதித்து ஓட பள்ளத்திற்குள் அந்த அக்காவின் மிக அருகில் முகம் வைத்து பேசி கொண்டிருந்த அண்ணன் பதறி போய் விலகி என்னமோ ஏதோ என்று இருவரும் எழுந்து கொண்டார்கள்.நாங்கள் மேடேறி சீமை கருவேல மரங்களை பொருட்படுத்தாமல் ஊடே புகுந்து ஓடிய ஓட்டம் நாங்கள் இதுவரை எங்கள் வரலாற்றில் ஓடாத ஓட்டம். பேய்த்தனமான ஓட்டம் ச்சை வெறித்தனமான ஓட்டம்.முட் புதரினூடே ஓடும் போது நன்றாக இருட்டிவிட்டதால் பதட்டம் இன்னும் அதிகரித்தது.
முட்களின் கீறல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் ரோட்டில் தான் நின்றோம். ஊருக்குள் வந்து ஆட்களை பார்த்ததும் தான் கொஞ்சம் நிம்மதி வந்தது.
மூச்சிரைத்தது, பேச்சு குழறியது,நா வறண்டு போனது. இயல்பாய் இயங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
“சுருட்டு பேய் வேலையா தான் இருக்குமோ” என்றான் திப்பு
சில நொடிகள் கழித்து “எனக்கென்னமோ…” என்று இழுத்தான் பிரபு
“என்னமோ…என்ன டா முழுசா சொல்லு”
“இல்ல எனக்கென்னமோ அந்த சுருட்டு பேயே ….”
“சுருட்டு பேயே???.. ..சொல்ல வந்ததை முழுசா சொல்லுடா ”
அடி வயிறு என்னமோ செய்தது.
” இல்ல…எத்தனை வருசமா நமக்கு வினீத் பாட்டிய தெரியும். என்னைக்காவது அவங்க இவ்ளோ கல கலனு பேசி பார்த்திருக்கோமா? அப்புறம் அவங்க பேசுறப்போ அவங்க கண்ண கவனிச்சீங்களா அப்படியே ஒளிருச்சு. அவங்கள பார்த்து மெரண்டு போய் தான் குதிரையும் மக்கர் பண்ணி உட்கார்ந்திருக்கும்னு தோணுது” என்று அவன் கூறவும் எங்கள் அனைவருக்கும் இதய துடிப்பு எகிறி அடித்தது.
அவன் சொல்லவும் தான் யோசித்தோம் உண்மையில் வினீத் பாட்டி இவ்வளவு கலகலப்பான ஆள் கிடையாது.
“அதுவுமில்லாம எங்கயாவது பாட்டி சின்ன பசங்களுக்கு உக்காந்து லவ் ஸ்டோரி சொல்வாங்களா?”
பிரபு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக எங்களுக்கு திகில் கூடி கொண்டே இருந்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அவங்க சுருட்டு குடிச்சதும் பழைய நெனப்புல நம்மகிட்ட மனசு விட்டு பேசிருக்காங்க அவளோதான். “
எனக்கு பாட்டி கதை கேட்டப்போ இருந்தே ஒரு டவுட். என் கூட வாங்க என்று ஓட ஆரம்பித்தான் பிரபு. நாங்கள் அனைவரும் மூச்சிரைக்க மீண்டும் தொடர்ந்து ஓடினோம்.வேகமெடுத்து ஓடியவன் வினீத் வீட்டிற்கு சென்று தான் நின்றான்.
எதற்கு ஒரு கூட்டமே இந்த இரவு வேளையில் இப்படி இங்கே வந்திருக்கிறது என எதிர்பார்க்காத பார்வையில் வரவேற்ற வினீத்திடம் பிரபு கேட்டான் “ஹே வினீத் உங்க பாட்டி பேரு என்ன டா? ”
“அமுதவல்லி”.