ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.
கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள்.
ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.
ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்
சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.
வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு
அனுகிரஹா சொல்வனம் மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.
இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்
‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.
பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்
நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும் என நம்புகிறேன்.
பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட
1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்
2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்
3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்
ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.
இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.
Like this:
Like Loading...