பாவண்ணன்

பழுது – பாவண்ணன் சிறுகதை

“இந்தாங்க எளநி. சூடு சூடுனு ரெண்டு நாளா பொலம்பினேங்களேன்னு ஒங்களுக்காவத்தான் வாங்கியாந்தன். குடிங்க”

ரேவதியின் குரலைக் கேட்டபிறகுதான் திரும்பிப் பார்த்தேன். அவள் கொடுத்த சொம்பிலிருந்து இரண்டு வாய் குடித்த பிறகுதான் கோவிலுக்குப் போய்வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்த அவள் திரும்பி வந்ததை நான் கவனிக்கவே இல்லை என்பது உறைத்தது.

“எப்ப வந்த நீ? நான் ஒன்ன பாக்கவே இல்லியே.”

“அது சரி, ரெண்டு கதவயும் தெறந்து போட்டுட்டு, இங்க வந்து அறைக்குள்ள ஒக்காந்துகினா யாரு வரா யாரு போறானு எப்பிடி தெரியும்?”

“க்வார்ட்டர்ஸ்க்குள்ள யாரு வரப்போறா? வெளிச்சம் உள்ள வரட்டும்னுதான் தெறந்து வச்சேன்.”

“டேபிள்ல இருந்ததயெல்லாம் எடுத்து எதுக்கு இப்பிடி கலச்சி போட்டு வச்சிருக்கிங்க. என்ன தேடறிங்க?”

“ஆயிரம் ரூபா அட்வான்ஸ் எடுத்திருந்தன். எண்ணூறுக்குதான் பில் இருக்குது. மிச்சம் எரநூறு ரூபாய்க்கி பில்லுங்கள காணம். அர மணி நேரமா தேடறன். கண்ணுலயே படமாட்டுது. சூட்டுல மண்டயே வெடிச்சிடறமாதிரி இருக்குது.”

“எத்தன தரம் சொன்னாலும் ஒரு எடமா வச்சி எடுக்கற பழக்கமே ஒங்களுக்கு இல்ல. ஆபீஸ் ஊடு எல்லாமே ஒங்களுக்கு ஒன்னுதான். எங்கனாச்சிம் புஸ்தக்கத்துக்குள்ள, பீரோவுக்குள்ளதான் வச்சிருப்பிங்க, நல்லா பாருங்க.”

“அத தேடற கடுப்புலதான் நீ வந்தத நான் பார்க்கலை.”

“நேத்து கழட்டி போட்டிங்களே ப்ரெளன் பேன்ட். அதுல ஏதாச்சிம் வச்சிட்டு எடுக்க மறந்துட்டிங்களா.”

“அதான் அதோ ஆணியில மாட்டி வச்சிருக்கே. அதுலயும் நல்லா தேடிப் பாத்துட்டன். எங்கயும் இல்ல. அதுக்குள்ள இந்த ஏ.இ. வேற நாலுதரம் போன் பண்ணி அக்கெளன்ட குடு, அக்கெளன்ட குடுனு உயிர எடுக்கறாரு.”

“மாசம் பொறந்தா ஆயிரம் ரூபாய குடுத்துட்டு அடுத்த ஒன்னாம் தேதிவரைக்கும் நீங்க நூறுதரம் கணக்கு கேக்கறிங்களே, அந்த மாதிரிதான் அவரும் இருப்பாரு. ஜே.இ. என்கிட்ட கணக்கு கேக்கறாரு. ஜே.இ.கிட்ட ஏ.இ. கேக்கறாரு.……”

ரேவதி சிரித்துக்கொண்டே சொன்னாலும் எனக்குக் கோபம் வந்தது. ”ஊட்டுக்கணக்கும் ஆபீஸ் கணக்கும் ஒன்னா?” என்றேன். அதற்குள் சட்டென ஒலித்த ஃபோன் மணி என் கவனத்தைத் திருப்பிவிட்டது. “ஒரே கேள்விய எத்தன தரம்தான் திருப்பித்திருப்பி கேப்பாரோ தெரில” என்று எரிச்சலுடன் ரிசீவரை எடுத்தேன்.

“சார், ஏ பேனல்ல அலாரம் அடிக்குது சார்.”

அது மாணிக்கத்தின் குரல் என்பது சற்று தாமதமாகத்தான் உறைத்தது. கோஆக்சியல் கேபிள் ஸ்டேஷன் மஜ்தூர். மறுகணமே உடம்பு சூடு ஏறியது. “என்னடா சொல்ற மாணிக்கம்? அலாரமா?”

“ஆமா சார். ஏ பேனல்ல.”

“சரி. சஞ்சனா மேடமும் திரிவேணி மேடமும் இப்ப டூட்டிதான. காலையில பாத்தனே. அவுங்க அங்க இல்லியா?”

“ரெண்டு பேரும் டூட்டிலதான் சார் இருக்காங்க. திரிவேணி மேடம் பேங்க் வரைக்கும் போயிட்டு வரேனு போயிட்டாங்க. கொஞ்சம் பாத்துக்க மாணிக்கம்னு சொல்லிட்டு சஞ்சனா மேடம் பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்னு போயிட்டாங்க.”

“நீ மட்டும் ஏன் அங்க இருக்கற? நீயும் பூட்டிட்டு எங்கனா போ.”

“சார், அலாரம் அடிச்சிகினே இருக்குது சார்.”

“ஒன்னதான பாத்துக்க சொன்னாங்க, அப்படியே நாற்காலிய இழுத்து போட்டு ஒக்காந்து பாத்துகினே இரு. ஏன் என்ன கூப்புடற?”

“சார். டேஞ்சர் வெளக்கு எரியுது. பயமா இருக்குது சார்.”

அவனுடைய உடைந்த குரலைக் கேட்டதும் மனம் இளகிவிட்டது. “ஒன்னும் ஆவாது மாணிக்கம். பயப்படாத. அங்கயே இரு. இதோ நான் கெளம்பிட்டேன். ரெண்டு நிமிஷத்துல வந்துடுவேன்.”

ஃபோனை வைத்ததும் தானாகவே பெருமூச்சு வந்தது. “என்னவாம்?” என்றாள் ரேவதி. “தெரில. ஸ்டேஷனுக்கு போனாதான் தெரியும்” என்றபடி லுங்கியைக் கழற்றி கொடியில் போட்டுவிட்டு பேன்ட் எடுத்து அணிந்துகொண்டேன். “அந்த பில்ங்க எங்க இருக்குதுனு கொஞ்சம் பாத்து தேடி எடுத்து வை ரேவதி, சரியா. ப்ளீஸ்?” தம்ளரில் எஞ்சியிருந்த இளநீரைக் குடித்துவிட்டு கூடத்துக்கு வந்தேன். ”சாய்ங்காலம் ஒதியஞ்சாலை மைதானத்துல இந்திரா காந்தி மீட்டிங் பேசறாங்க. அழச்சிட்டு போய் அவுங்கள காட்டறன்னு சுனிதாகிட்டயும் அனிதாகிட்டயும் சொல்லியிருந்தன். இப்ப இருக்கற நெலையில அவுட்டோர் கெளம்பிட்டா வீட்டுக்கு எப்ப திரும்பி வருவேன்னு எனக்கே தெரியாது. பசங்களுக்கு பக்குவமா எடுத்துச் சொல்லு”

வேகமாக படியிறங்கி வெளியே வரும்போது இரண்டு கைகளிலும் இரண்டு பெரிய வெள்ளரிப்பழங்களோடு டிரைவர் கேசவன் வந்துகொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் தங்கப்பல் தெரிய வாய்கொள்ளாத சிரிப்போடு “பழம் மூனு ரூபா சார். உரிச்சி சக்கர போட்டு ஊறவச்சி சாப்ட்டா அருமயா இருக்கும் சார்” என்றான். அவன் சொற்கள் எதுவுமே என் மனசுக்குள் இறங்கவே இல்லை. “கேசவன், நம்ம ரூட்ல கேபிள் ஃபால்ட். வெளிய கெளம்பணும். நம்ம டீம் பசங்களுக்கும் தகவல சொல்லி சீக்கிரமா வரச் சொல்லுங்க” என்றேன். ‘நான் இன்னும் சாப்படல சார்” என்றான் அவன். “சரி, சீக்கிரமா சாப்டுட்டு வாங்க”

வாசலிலேயே நின்றிருந்தான் மாணிக்கம். “நான் ஒன்னுமே செய்யல சார். இப்பிடி ஸ்டூல்ல ஓரமா ஒக்காந்துட்டிருந்தன். திடீர்னு ஃபயர் எஞ்சின் மாதிரி மணியடிக்க ஆரம்பிச்சிட்டுது” அவன் பேனல் அலாரம் பெட்டியின் திசையில் கைகாட்டினான்.

“அலாரம் வந்தா எப்பிடி நிறுத்தணும்னு ஒனக்கு மேடம் சொல்லித் தரலியா?”

“இல்ல சார்”

“சரி, பயப்படாத. இங்க வா. லேடர்ல ஏறி, இங்க இருக்குது பாரு ஸ்விட்ச். அத நிறுத்தணும்” என்றபடி செய்து காட்டினேன். அலாரம் நின்றுவிட்டது. அவன் கண்கள் அமைதி கொண்டு குளிர்வதைப் பார்த்தேன். விளக்கு மட்டும் எரிந்தது. எட்டடி உயரத்தில் அலமாரிபோன்ற தோற்றம் கொண்ட இணைப்புத்தொகுப்புச் சட்டகத்தில் செந்நிற மாதுளைமுத்துகள் போன்ற வட்டவிளக்குகள் வரிசையாக ஒளிர்ந்தன. எங்கோ இணைப்பு அறுந்துபோனதன் அடையாளம்.

“நீ ஒருதரம் செஞ்சிப் பாக்கறியா?”

“ஐயையோ, வேணாம் சார்.”

“ஷாக் எதுவும் அடிக்காது, இங்க வா.”

திரிவேணி ஸ்டேஷனுக்குள் வரும்போதே என்னைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள். வேகமாக அருகில் வந்து “சாரி சார், ஃபால்டா?” என்றாள். நான் பதில் சொல்லாமல் தலையசைத்தேன். “இந்த மாச ஆர்.டி.ய இன்னும் கட்டாம வச்சிருந்தன். தேதி இருவத்தொன்னு ஆய்டுச்சேனு கட்டிட்டு வர போயிருந்தன்”. அப்போது சஞ்சனாவும் அமைதியாக வந்து குடையை சுருக்கி மேசை ஓரமாக வைத்துவிட்டு நின்றாள்.

“பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் அவுட். திரிவேணி, மொதல்ல லாக் புக்ல என்ட்ரி போடுங்க. சஞ்சனா, நீங்க ஆசிலேட்டர ரெடி பண்ணுங்க. ஒரு ஃபிரிக்வன்சி டெஸ்ட் எடுத்துரலாம்.”

நான் சட்டகத்துக்கு அருகில் சென்று ஆர்டர் ஒயர் வழியாக விழுப்புரத்தை அழைத்தேன். “குட் ஆஃப்டர்நூன், பாண்டிச்சேரி காலிங். விழுப்புரம்” என்று மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்தேன். சட்டென ஒயர் உயிர்பெற்று “குட் ஆஃப்டர்நூன். விழுப்புரம் ப்ளீஸ்” என்று பதில் வந்தது.

“சந்திரசேகர். எப்பிடி இருக்கிங்க?”

“நல்லா இருக்கேன் ஜே.இ.சார். பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் அவுட். அலாரம் வருது சார்.”

“அதத்தான் பாத்துட்டிருக்கேன். எந்த செக்‌ஷன்ல ஃபால்ட்டுனு தெரிலை. கொஞ்சம் ஃப்ரிக்வன்சி டெஸ்ட் எடுத்து பாத்துட்டு சொல்றீங்களா? லயன்லயே இருக்கட்டுமா, கூப்பிடறீங்களா?

“நீங்க வச்சிருங்க சார். பாத்துட்டு நானே கூப்புடறேன்.”

பாண்டிசேரி விழுப்புரம் கேபிள் பாதையின் நீளம் நாற்பத்திரண்டு கிலோமீட்டர். ஒரு வசதிக்காக பத்து செக்‌ஷன்களாக பிரித்திருந்தோம். நாலு கிலோமீட்டர் ஒரு செக்‌ஷன். ஒவ்வொரு செக்‌ஷனையும் ஒரு ரிப்பீட்டர் இணைக்கிறது. அலைக்கற்றையின் திறனை அதிகரிக்கும் எந்திரமும் ஒரு க்ரிஸ்டலும் ரிப்பீட்டரில் உள்ளன. ஒவ்வொரு க்ரிஸ்டலும் ஒரு குறிப்பிட்ட ஃப்ரிக்வன்சியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அதற்குரிய ஃப்ரிக்வனிசியை மட்டுமே அது ஏற்று பிரதிபலிக்கும். பிரதான முனையிலிருந்து க்றிஸ்டலை நோக்கி அனுப்பப்பெறும் ஃப்ரிக்வன்சி, க்றிஸ்டலால் பிரதிபலிக்கப்பட்டு திரும்பவும் பிரதான முனைக்கே கிடைத்துவிட்டால் அந்த செக்‌ஷன் சரியாக இருக்கிறது என்பது பொருள். கிடைக்கவில்லை என்றால் அந்த செக்‌ஷனில் பிரச்சினை. ஃபால்ட்டை தோராயமாக ஓர் எல்லைக்குள் மட்டுமே தேடுவதற்கு இது ஒரு வழி.

சஞ்சனாவும் திரிவேணியும் ஃப்ரிக்வன்சி டெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

“சார், நாலாவது செக்‌ஷன் வரைக்கும் சிக்னல் க்ளீனா வருது. அதுக்கப்பறம் இல்லை”

பதினாறாவது கிலோமீட்டரிலிருந்து தொடங்கும் ஊர்களை நான் மனக்கண்ணில் வரிசைப்படுத்திப் பார்த்தேன்.

“ஜே.இ.சார்” சந்திரசேகரின் குரல் ஆர்டர் ஒயரில் ஒலித்தது. “சொல்லுங்க சந்திரசேகர். நான் லயன்லதான் இருக்கேன்”

”சார், பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, அஞ்சு வரைக்கும் ஓகே சார். அதுக்கப்பறம் கெடைக்கலை.”

“சரி, சந்திரசேகர். அங்கயே இருங்க. ஃபால்ட் நாலுக்கும் அஞ்சிக்கும் நடுவுலதான். தேவைப்பட்டா கூப்படறேன். இதோ, நாங்க கெளம்பிட்டம்.”

“திரிவேணி. டெஸ்ட் டீடெய்ல்ஸ் எல்லாத்தயுமே என்ட்ரி போட்டுடுங்க.”

“சார். எல்லாமே பெங்களூரு, மெட்ராஸ், பாம்பே சர்க்யூட்ஸ் சார். ஹெவி ட்ராஃபிக் ரூட்.” அவள் குரலில் நடுக்கம் இருந்தது. “அதுக்கு நாம என்ன செய்யமுடியும் திரிவேணி? கேபிள் ஃபால்ட்ங்கறது ஒரு ஆக்சிடென்ட். ஆக்சிடென்ட்டே இல்லாம வண்டி ஓட்டணும்னுதான் எல்லாருக்குமே ஆசை. ஆனாலும் நம்ம கவனத்த மீறி ஒரு சில சந்தர்ப்பங்கள்ல ஆக்சிடென்ட் நடந்துடுது இல்லையா? என்ன செய்யமுடியும் சொல்லு. சரிபண்ணிட்டு மறுபடியும் வண்டிய ஓட்டவேண்டிதுதான்”

“சார். ஆர்.டி. கட்டிட்டு உடனே திரும்பி வந்துடலாம்னுதான் பேங்க்குக்கு போனன். ஏகப்பட்ட கூட்டம். இப்பிடி ஆகும்னு நான் நெனச்சிகூட பார்க்கலை சார்.” அவள் கண்கள் தளும்பின. குரல் நடுங்கியது.

“ஒங்களால எதுவும் நடக்கலை திரிவேணி. ரிலாக்ஸ். ரிலாக்ஸ். மாணிக்கம். மேடத்துக்கு ஒரு க்ளாஸ் தண்ணி கொண்டாந்து குடு”

தகவல் சொல்வதற்காக நான் ஏ.இ.யை அழைத்தேன். அவர் டி.இ.ஆபீஸ் போயிருப்பதாக சொன்னார்கள். நான் உடனே டி.இ.ஆபீஸ் நெம்பரை அழைத்து ஏ.இ.யை இணைக்கும்படி சொன்னேன். இரண்டு மூன்று நொடிகளிலேயே அவர் இணைப்புக்கு வந்துவிட்டார். “என்னங்க தயாளன், நான் லோகநாதன் பேசறன். சொல்லுங்க” என்றார். ஃபால்ட் விஷயத்தை நான் சுருக்கமாக சொல்லிமுடித்தேன்.

“ஐயையோ, எட்டு க்ரூப்க்கு மேல அதுல ட்ராஃபிக் இருக்குதே தயாளன். என்ன செய்யறது? ஃபால்ட் எடுக்க எத்தன நாள் புடிக்குமோ தெரியலையே?” அவர் பதற்றம் கொள்ளத் தொடங்கினார்.

“மண்ணாடிப்பட்டு, முண்டியம்பாக்கம் வழியா விழுப்புரத்துக்கு இன்னொரு மாத்து ரூட் இருக்குது சார். இந்த கேபிள்ல இருக்கற ட்ராஃபிக் எல்லாத்தயும் அதுல மாத்திடலாம். அஞ்சி நிமிஷத்துல இண்டோர க்ளியர் செஞ்சிடலாம். எல்லா ட்ராஃபிக்கும் ரிஸ்டோராய்டும். ஒங்க பர்மிஷன் வேணும்.”

“வேற வழி இல்ல தயாளன். நான் பர்மிஷன் குடுத்துட்டன்னு நெனச்சிக்குங்க. திரிவேணி இருந்தா குடுங்க. நான் சொல்றன். நீங்க ஃபால்ட் என்னனு போயி பாத்துட்டு வந்து ரிப்போர்ட் பண்ணுங்க. தேவைப்பட்டா நானும் நாளைக்கி வரன்…”

“சார், இன்னொரு ஆயிரம் ரூபா தேவைப்படும். இப்பவே டி.இ. ஆபீஸ்ல அப்ளை பண்ணி வச்சிடுங்க. தற்சமயத்துக்கு சொந்த பணத்த போட்டு செலவு செய்றன். நீங்க அப்பறமா குடுங்க”

“போன அக்கெளன்டயே இன்னும் நீங்க எழுதிக் குடுக்கல தயாளன்.”

“இப்பதான் எழுத உகாந்தன். அதுக்குள்ள புதுசா இந்த ஃபால்ட் வந்துட்டுது. நான் என்ன செய்யறது சார்?”

“சரி சரி, பணம்தான? எடுத்து வைக்கறன். நீங்க திரிவேணிகிட்ட ஃபோன குடுங்க.”

நான் திரிவேணியிடம் தொலைபேசியைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.

கேசவனும் மஜ்தூர்களும் வேனுக்கு அருகில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அருகில் நெருங்கியதும் அவர்கள் உரையாடல் நின்றது. மஜ்தூர்களைப் பார்த்து ”எல்லாரும் சாப்டிங்களாடா?” என்றேன். அவர்கள் தலையைசைத்தார்கள். “வண்டில சாமான்ங்க எல்லாம் இருக்குதா பாத்துட்டிங்களா? அங்க போனப்பறமா அது இல்ல சார் இது இல்ல சார்னு தலய சொறியக்கூடாது” என்றேன். “எல்லாத்தயும் எடுத்து வச்சிட்டேன் சார்” என்றான் சண்முகம். நான் அவனிடம் “சரி, நீ போய் குப்புசாமி ஜாய்ண்டரையும் வரச்சொல்லு. க்வார்ட்டர்ஸ்லதான தூங்கறாரு. அவரயும் சேத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றேன்.

கூடத்தில் ஒரு செய்தித்தாளில் கோதுமையைக் கொட்டி உலரவைத்துக்கொண்டிருந்தாள் ரேவதி. என்னைப் பார்த்ததுமே “என்ன, ஒங்க கேபிளுக்கு அடி பலமா? பொழைக்குமா பொழைக்காதா?” என்று சிரித்தாள். “ஒனக்கென்னம்மா, நீ இதுவும் சொல்வ. இதுக்கு மேலயும் சொல்வ. என் பொழப்பு அப்பிடி” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றேன். என் மேசை மீது காலையில் தேடிக்கொண்டிருந்த பில்கள் பென்சில் பாக்ஸ்க்கு கீழே வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ”எங்க இருந்தது பில்ங்க? அவ்ளோ நேரம் தேடனன். என் கைக்கு கெடைக்கவே இல்ல. உன் கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சிட்டுதே. ஒனக்கு நல்ல கைராசி” என்றபடி ரேவதியைப் பார்த்தேன். “கைராசி உள்ள கைக்கு ரெண்டு தங்க வளையல் வாங்கியாந்து போட்டுட்டு அந்த வார்த்தய சொல்லணும்” என்று சிரித்தாள் ரேவதி. “ரெண்டு என்ன, போனஸ் வரட்டும், நாலாவே போட்டுடலாம்” என்றேன் நான். “டெலிபோன் டைரக்டரிக்குள்ளேருந்து எடுத்தன். அதுக்குள்ள ஏன் வச்சிங்கன்னுதான் தெரியலை” என்றாள் ரேவதி.

சமையலறையிலிருந்து ஒரு தட்டில் சோறும் தயிரும் எடுத்து வந்து கொடுத்தாள். நான் வேகமாக சாப்பிட்டு முடித்து எழுந்தேன். ஒரு பைக்குள் தண்ணீர் பாட்டிலை வைத்து “இத வச்சிக்குங்க. கண்ட எடத்துல தண்ணி குடிச்சிட்டு வந்து ராத்திரி பூரா கக்குமுக்குனு இருமாதீங்க” என்று கொடுத்தாள்.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் குப்புசாமி ஜாய்ண்டர் “எந்த செக்‌ஷன் சார்?” என்று கேட்டான். “அஞ்சாவது செக்‌ஷன்” என்று சொன்னேன் நான்.

“மதகடிப்பட்டா?” என்று கேட்கும்போதே அவன் முகம் பிரகாசமுற்றது. மதுக்கடைகளுக்கு பிரபலமானது அந்த வட்டாரம்.

“வேல முடியறவரைக்கும் மாமா கட மச்சான் கடன்னு எங்கயும் போவக்கூடாது குப்புசாமி” நான் கண்டிப்புடன் அவரைப் பார்த்துச் சொன்னேன். அவன் வேகமாக தலையசைத்தான். “சார், இப்ப எந்த பாட்டலயும் தொடறதில்ல சார். என் பொண்டாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா. குடிச்சிட்டு போனா சோறு கெடைக்காது சார். நான் அவளுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன்” என்றான். ”அது சரி, சத்தியம் செய்யறது ஒனக்கு சக்கரபொங்கல் சாப்புடறமாதிரிதான” என்றேன். மெதுவாக பேச்சை மாற்றும் விதமாக அவனே “லெட் ஸ்டிக் எடுத்துக்கலயா சார்?” என்று கேட்டான். “இப்பவே எதுக்கு குப்புசாமி? மொதல்ல ஃபால்ட் எங்கன்னு கண்டுபுடிப்பம்” என்றேன் நான்.

”ஒரு ஜாய்ண்ட்டுக்கு அஞ்சி ஸ்டிக் சார். மறந்துடாதீங்க.”

”நீ மூனுலயே முடிக்கற ஆளுதான, எதுக்கு அஞ்சி?”

“அது என் கெப்பாசிட்டி சார். என் உழைப்பு. ஆனா ஆபீஸ் கணக்குக்கு அஞ்சி. அத எம்.ஜி.ஆரே வந்து சொன்னாகூட மாத்திக்க மாட்டன். நீங்க வேணும்ன்னா பழய ரெக்கார்ட பாருங்க. நம்ம அன்புக்கனி ஜேஇ சார் இருந்த போது கூட அஞ்சிதான் குடுப்பாரு. நம்ம பசங்ககிட்ட வேணும்ன்னா கேட்டு பாருங்க.”

”சரி சரி. மொதல்ல ஃபால்ட்ட கண்டுபிடிப்பம். வா”

ஸ்டேஷனைவிட்டு எங்கள் வண்டி புறப்பட்டது. சுற்றுச்சுவரைத் தாண்டி வெளியே வரும்போது ஏ.இ. வண்டி வந்து நின்றது. நான் இறங்கிச் சென்று விவரங்களைச் சொல்லிவிட்டுத் திரும்பினேன். வண்டி புறப்பட்டது.

“பூமிக்கு கீழ மூணு நாலடி ஆழத்துல இருக்கற கேபிள் எப்பிடி அடிவாங்கும்?”

“நிச்சயமா இது யாரோ ஒரு குடிகாரன் செஞ்ச வேலதான்.”

“அது எப்பிடி அவ்வளவு தீர்மானமா சொல்ற?”

“குடிபோதையில இருக்கறவன் என்ன வேணுமானாலும் செய்வான் சார். கேபிள நோவாம எடுத்து அழகா ஓட்டய போட்டு மறுபடியும் குழியில போட்டு மூடியிருப்பானுங்க சார்.”

“அப்பிடி ஒரு அற்ப சந்தோஷத்துக்கு மனுஷன் ஆசப்படுவானா?”

“சார், குடிச்சதும் ரத்தத்துல ஒரு கிர் ஏறும் சார். மனுஷன் குடிக்கறதே அந்த கிர்ருக்காக. அந்த கிர் வண்டுமாதிரி தலய கொடயும். அது ஒரு சுகம். அந்த நேரத்துல அவன் எத வேணும்னாலும் செய்வான். குடிக்காத ஒருத்தனால பூமியில இத புரிஞ்சிக்கவே முடியாது.”

மஜ்தூர்களும் ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.

”அந்த கலால் செக்போஸ்ட்டுக்கு பக்கத்துல நெறய வண்டிங்கள ஓரம் கட்டி அடிக்கடி செக் பண்றதுண்டு சார். ஹெவி வண்டிங்க எதுவாச்சிம் நம்ம கேபிள் குழிக்கு மேல நின்னு, அந்த அழுத்தத்துல கேபிள் வெடிச்சிருக்கலாம்னு தோணுது.”

“நம்ம கேபிள் குழி மொத்தமும் பல எடங்கள்ல மண்ணு இல்லாம உள்ள வாங்கியிருக்குது சார். யாராச்சிம் கடப்பாறையால குத்தியிருக்கலாம்.”

“பன்னி புடிக்கறவங்க இப்படிதான் பள்ளத்துல பன்னிய ஓடவிட்டு வசமா ஒரு எடத்த பாத்து வேல்கம்பால குத்தி சாவடிப்பாங்க. ஏதாவது ஒரு கம்பு பன்னிக்கு பதிலா கேபிள குத்தியிருக்கலாம்”

நாலாவது ரிப்பீட்டரில் வண்டி நின்றது. அருகில் இருந்த தேநீர்க்கடையில் எல்லோரும் முதலில் தேநீர் அருந்தினோம். குப்புசாமியையும் இரண்டு மஜ்தூர்களையும் அங்கிருந்து கேபிள் பாதையைச் சோதித்தபடியே நடந்து வருமாறு சொல்லிவிட்டு ஐந்தாவது ரிப்பீட்டரை நோக்கிச் சென்றோம். அங்கு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நானும் இரண்டு மஜ்தூர்களும் நாலாவது ரிப்பீட்டரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

பாதையிலிருந்து வெகுதொலைவில் ஓரமாக பள்ளமெடுத்து கேபிள் போட்டிருந்தார்கள். சரிந்தும் ஒடுங்கியும் பள்ளம் உள்வாங்கியிருந்தது. குறைந்தபட்சமாக பத்து பதினைந்து லாரி லோட் மண் வேண்டும். அதை வாங்கி நிரப்ப பணம் வேண்டும் என பல முறை குறிப்பெழுதி அனுப்பிவைத்தும் ஒரு பைசா கூட மேலிடத்திலிருந்து வரவில்லை. பல இடங்களில் கன்னங்கரேலென தார் பூசப்பட்ட கேபிள் கரும்புத்துண்டுபோலத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு உடலே நடுங்கிவிட்டது.

பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு கேபிள் பற்றி பாடமெடுத்த ஒரு டெக்னீஷியன் “ஒரு நல்ல கேபிள் ரூட்ங்கறது யார் பார்வையிலும் படாத படிதாண்டாப் பத்தினி மாதிரி இருக்கணும்” என்று நகைச்சுவையோடு சொன்ன சொற்கள் நினைவில் எழுந்தன. யாரோ ஒருவன் அப்போது “பார்வையில படறமாதிரி இருந்தா என்ன ஆவும் சார்?” என்று வேண்டுமென்றே ஒரு கேள்வியெழுப்ப, அந்த டெக்னீஷியன் “வாடியம்மா வாடின்னு யாராச்சிம் ஒருத்தன் கைய புடிச்சி இழுத்தும் போயிட்டே இருப்பான்” என்றார். வகுப்பே அதைக் கேட்டு சிரிப்பில் மூழ்கியது.

“என்னடா இது? வாய்க்கா மாதிரி இருக்குது கேபிள் ரூட்.”

“இதுக்குள்ள காப்பர் இருக்குதுனு தெரிஞ்சவன் யாராவது இந்த ஊருக்குள்ள இருந்தான்னு வைங்க சார், இந்நேரத்துக்கு வெட்டி உருவி எடுத்தும் போயிருப்பானுங்க…”

அதைக் கேட்கும்போதே எனக்கு நெஞ்சை அடைத்தது.

“வேணும்னா, நீயே ஊருக்குள்ள போயி தண்டோரா போட்டு சொல்லிட்டு வாயேன்.”

“கோச்சிக்காதிங்க சார். சும்மா வெளயாட்டுக்கு சொன்னன்”

ஒரு பள்ளத்துக்கு மேல் அருகிலிருந்த உணவு விடுதியின் எச்சிலைகளும் காய்கறிக்கழிவுகளும் குப்பைமலைபோல குவிந்திருந்தன.

“நம்ம கேபிளுக்கு ரொம்ப சேஃப்ட்டி”

மூக்கை மூடிக்கொண்டு ஒதுங்கி நடந்தோம்.

அரசமரத்தடியில் ஒதுங்கியிருந்த ஆறேழு பாறைகள் மீது அமர்ந்தபடி காலாட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள் சிலர். எங்களைப் பார்த்ததும் “என்ன சார், சர்வேயா?” என்று கேட்டார்கள். “ரோடு அகலப்படுத்தப் போறீங்களா? மொதல்ல இருக்கற ரோட்ட ஒழுங்கா மெய்ன்டெய்ன் பண்ணுங்க சார். நீங்களே பாருங்க. எவ்ளோ குண்டும் குழியுமா கெடக்குது”

நான் அதை மறுத்தபடி மெதுவாக “நாங்க டெலிபோன்ஸ். பிஅன்ட்டி” என்றேன். “அப்படியா சரிசரி” என்றார் ஒருவர். உடனே இன்னொருவர் எழுந்து நின்று “நம்ம கவுண்டர் ஒரு எஸ்.டி.டி.பூத்துக்கு அப்ளிகேஷன் போட்டு ரெண்டு வருஷமாச்சி தம்பி. ஒன்னும் வரமாட்டுது. நீங்க பாத்து ஏதாச்சிம் செஞ்சா ஊருக்கு நல்லது” என்றார் இன்னொருவர். “நாங்க வேற ஆபீஸ். ஆனாலும் நீங்க சொன்னத அந்த ஆபீஸ்ல தெரியப்படுத்தறேன்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

இன்னொரு அரசமரத்தடிக்கு முன்னால் நானும் குப்புசாமியும் சந்தித்துக்கொண்டோம். கண்ணுக்குப் புலப்படுகிறமாதிரி கேபிள் பாதையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

“கேபிள்ல எங்கோ லீக் இருக்குது சார்.”

“அத எப்படி உறுதியா சொல்ற?”

“எரநூறு மீட்டர் கேப்ல ஒரு நாலு எடத்துல வால்வ் வச்சிட்டு கேஸ விட்டம்னா லீக்க கண்டுபுடிச்சிடலாம்.”

என் தலை குழம்பியது. எதுவும் பதில் சொல்லாமல் குப்புசாமியின் முகத்தையே பார்த்தேன் நான்.

“நம்ம அன்புக்கனி ஜேஇ சார் அப்பிடித்தான் செய்வாரு சார். நான் அவர் கூடவே இருந்திருக்கன் சார்”

பனைவரிசைக்கு அப்பால் எங்கோ சூரியன் மறைந்துகொண்டிருந்தது. நாவறட்சி தாங்கமுடியவில்லை. பையிலிருந்த பாட்டிலை எடுத்து தண்ணீரைப் பருகினேன். எல்லோரும் வண்டியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

யாரோ வெட்டியிருப்பார்கள். அல்லது துண்டாக்கி இழுத்துப் போட்டிருப்பார்கள். என் அனுபவத்தில் அந்த மாதிரி பழுதுகளை மட்டுமே சரிபார்த்து இணைத்திருக்கிறேன். இதே பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் பாதையில் ஒருமுறை யாரோ சிலர் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் மீதிருந்த சிமெண்ட் கட்டையை உடைத்து கேபிளை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டார்கள். அத்துண்டுகளை கச்சிதமாக இணைத்து ஒரே நாளில் சீரமைத்த அனுபவம் உண்டு. ஆனால் இந்த மாதிரியான பழுது எனக்கு முதல் அனுபவம்.

ரம்பா ஒயின்ஷாப் அருகிலிருந்த தர்மலிங்க உடையாரின் தேநீர்க்கடைக்குச் சென்று வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு வேனில் ஏறி ஸ்டேஷனுக்கு வரும்போது மணி எட்டாகிவிட்டது. “குப்புசாமி, நீங்க சொல்றமாதிரியே நாளைக்கு செஞ்சி பாக்கலாம். எப்படியாவது ஃபால்ட்ட எடுக்கணும். சிலிண்டர், வால்வ் என்னென்ன வேணுமோ எல்லாத்தயும் எடுத்துக்குங்க” என்றேன்.

நாலடி தொலைவு நடந்துவிட்டவரை நிறுத்தி “அன்புக்கனி ஜே.இ.ய வரவழைக்கலாம்ன்னு தோணுதா?” என்று மெதுவாகக் கேட்டேன். ”நாளைக்கு ஒருநாள் போவட்டும் சார். முடியலைன்னா அதுக்கப்பறமா கூப்புடலாம்” என்றார் குப்புசாமி. “கண்டுபிடிக்க முடியாதவங்கன்னு நம்ம மேல பழி வந்துடக்கூடாது குப்புசாமி. அத நெனச்சாதான் கொஞ்சம் டென்ஷனா இருக்குது” என்றேன். “சார், நீங்க கவலைப்படாம போங்க. நம்மால முடியும் நம்மால முடியும்னு மனசுக்குள்ளயே சொல்லிட்டிருங்க. கண்டிப்பா முடியும்” என்று அவர் சொன்ன சொற்கள் எனக்கு ஓரளவு தைரியத்தை அளித்தன. “சரி, ஏ.இ.க்கும் ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துர்ரேன்” என்று குப்புசாமியை அனுப்பிவைத்துவிட்டு, ஏ.இ. க்வார்ட்டர்ஸ்க்குச் சென்றேன். அவர் வாசலில் ஈச்சர் போட்டு உட்கார்ந்துகொண்டு மனைவிக்கு பிரபந்தம் படித்து பொருள் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஃபால்ட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்னும் விஷயம் அவருக்கும் சோர்வையளித்தது. நாளைய திட்டங்களையும் அவருக்கு விளக்கினேன். பேச்சோடு பேச்சாக அன்புக்கனி ஜே.இ. பற்றியும் சொன்னேன். “நல்ல அருமையான வேலைக்காரன் அவன். இங்கதான் மொதல்ல இருந்தான். இப்ப கடலூர்ல இருக்கான். வேணும்ன்னா நானே அவுங்க ஏ.இ.கிட்ட பேசறன்” என்றார். எனக்கு அவர் அப்படிச் சொன்னது ரொம்ப ஆறுதலாக இருந்தது.

மறுநாள் காலை பத்துமணிக்கு மதகடிப்பட்டுக்குச் சென்றுவிட்டோம். இரண்டு ரிப்பீட்டருக்கும் இடைப்பட்ட தொலைவில் கேபிள் பாதையில் நான்கு இடங்களில் ஒரு ஆள் இறங்கி வேலை செய்கிற அளவுக்கு அகலமான பள்ளம் தோண்டப்பட்டது. தேரிழுக்கும் வடக்கயிறுபோல உள்ளே கேபிள் முறுக்கிக்கொண்டிருந்தது. குப்புசாமி பள்ளத்தில் இறங்கி கேபிள் மேல்கவசங்களை நீக்கிவிட்டு ஊசியால் ஒரு துளையிட்டு அதில் சைக்கிள் டியூப் வால்வைப் பொருத்தினார். நான்கு இடங்களிலும் அதைச் செய்து முடிக்கவே மதியமாகிவிட்டது. அவசரமாக அருகிலிருந்த ஒரு கடையில் சாப்பிட்ட பிறகு ரிப்பீட்டர் முனையில் ஆக்சிஜன் உருளையை இணைத்து கேபிள் வழிக்குள் காற்று செல்வதற்கு வழி செய்தார் குப்புசாமி. ஏறத்தாழ இரண்டு மணி நேரம் காற்று கேபிளுக்குள் பாய்ந்து சென்றது. பிறகு உருளையை விலக்கிவிட்டு ரிப்பீட்டர் முனைகள் உட்பட ஆறு இடங்களிலும் காற்றின் அழுத்தத்தை அளந்து சொன்னார். நான் அந்த அளவுகளைக் குறித்துக்கொண்டேன்.

“இத வச்சிகிட்டு ஒரு க்ராஃப் போடுங்க சார். கேபிள்ல எங்க ஓட்டைன்னு அத வச்சி கண்டுபுடிச்சிடலாம் ”

நான் குப்புசாமியின் முகத்தையே பார்த்தேன். அவர் தொடர்ந்து “நம்ம அன்புக்கனி சார் அப்பிடித்தான் கண்டுபிடிப்பார். இந்த வட்டாரத்துலயே கேபிள் லீக் கண்டுபிடிக்கறதுல வில்லாதிவில்லன் அவரு” என்றார்.

குறித்துவைத்த அளவுகளை ஒருமுறை பார்த்தேன். கிட்டத்தட்ட எல்லாமே சமமாகவே இருந்தன. க்ராஃப் போட்டால் அது ஒரு கோடு போலத்தான் வருமே தவிர ஓட்டை இருக்கும் இடத்தைக் காட்டாது என்று தோன்றியது. எனக்கு தலை சுற்றியது. பள்ளங்களை மூடிவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டோம். அதற்குள் எங்கள் கேபிள் பாதை பழுதான கதை தில்லி வரைக்கும் தெரிந்துவிட்டது. ஏகப்பட்ட கேள்விகள். விசாரணைகள்.

மறுநாள் ஏ.இ., டி.இ. இருவருமே எங்களோடு வந்துவிட்டார்கள். முதல்நாள் போலவே பள்ளங்களைத் திறந்து காற்றைச் செலுத்திவிட்டு இரண்டு மணி நேரம் காத்திருந்து அழுத்த அளவுகளைக் குறித்துக்கொண்டேன். மாற்றமே இல்லை. எல்லா அளவுகளும் நேற்று போலவே இருந்தன.

ஏ.இ., டி.இ. இருவருடைய முகங்களும் இருண்டுவிட்டன. “ரிட்டயர்மென்டுக்கு எனக்கு இன்னும் பத்து மாசம்தான் இருக்குது. இந்த நேரத்துல எனக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று தலையில் அடித்துக்கொண்டார் டி.இ. “ஆல் ஆர் இன்கேப்பபள் பீப்பள். இதுக்கா கவுர்மென்ட் நமக்கு சம்பளம் குடுக்குது?” என்று எல்லோர் மீதும் எரிந்து விழுந்தார். இறுதியாக “லோகநாதன், வேற வழியில்ல. அந்த அன்புக்கனி ஜே.இ. நாளைக்கே இங்க வரதுக்கு ஏற்பாடு செய்யுங்க. இப்பிடியே இழுத்தும் போனா நமக்குத்தான் அசிங்கம்” என்று சொல்லிவிட்டு தன் வண்டியில் புறப்பட்டுச் சென்றார் டி.இ.

ஸ்டேஷனுக்குத் திரும்பியதுமே “வாங்க தயாளன். இப்பவே பேசி அன்புக்கனிய அரேஞ்ச் பண்ணிடலாம்” என்று தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். நானும் கூடவே சென்று அவருடைய அறையில் அமர்ந்தேன். அவர் எஸ்.டி.டி.யில் கடலூர் ஏ.இ.யை அழைத்தார். கேபிள் பழுதைப்பற்றி சுருக்கமாகத் தெரிவித்தார். அன்புக்கனியை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒருகணம் மறுமுனையில் அமைதி நிலவியது. பிறகு “சார், அவருக்கு ஒரு பெர்சனல் ப்ராப்ளெம். மெடிக்கல் லீவ்ல இருக்காரு” என்று நிதானமாகச் சொல்வது காதில் விழுந்தது.

ஏ.இ. திகைப்புடன் என்னைப் பார்த்தார். நான் தொலைபேசியை வாங்கி “ஊர்ல இருக்காரில்லயா சார்?” என்று கேட்டேன். “ஆமாமாம். க்வார்ட்டர்ஸ்லதான் இருக்காரு” என்றார் அவர். பேச்சு அத்துடன் முடிந்தது.

குழப்பத்தில் எங்களுக்கு தலையில் இடி இறங்கியதுபோல இருந்தது. ஏ.இ.யின் தலை தளர்ந்து தொங்கிவிட்டது. என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை. பிறகு ஏதோ ஒரு வேகத்தில் ”சார், நீங்க கவலப்படாம போங்க. நானே நாளைக்கு நேரா போயி அன்புக்கனி ஜே.இ.ய அழச்சிட்டு வரன். எனக்கு வண்டி மட்டும் குடுங்க” என்றேன். “உங்களால முடியுமா? மெடிக்கல் லீவ்னு சொல்றாரே. என்ன கண்டிஷன்னு தெரியலையே” என்று இழுத்தார். ஒரு வேகத்தில் “சார், அதயெல்லாம் நான் பாத்துக்கறேன். அன்புக்கனிய அழச்சிட்டு வரவேண்டியது என் பொறுப்பு” என்றேன். “சரி, போய்வாங்க தயாளன். நமக்கு ஃபால்ட் சரியாவணும். அதுதான் முக்கியம். நான் இப்பவே டிரைவர்க்கு சொல்லிவைக்கறேன்” என்று ஃபோனை எடுத்தார்.

மறுநாள் பத்து மணிக்கு பாண்டிச்சேரியிலிருந்து புறப்பட்டு பதினோரு மணிக்கெல்லாம் கடலூருக்குச் சென்றுவிட்டேன். முதலில் ஸ்டேஷனுக்குத்தான் சென்றேன். இரவில் தொலைபேசியில் பேசிய ஏ.இ.யைப் பார்த்தேன். அவர் மறுபடியும் மெடிக்கல் லீவ் என்று ஆரம்பித்தார். “இருக்கட்டும் சார். நான் ஒன்னும் அவர டிஸ்டர்ப் பண்ணமாட்டன். ஒரு சந்தேகம். அத கேக்கணும். அவ்ளோதான். அவர் க்வார்ட்டர்ஸ் நெம்பர் சொல்லுங்க” என்றேன்.

அவர் தயக்கத்துடன் “இங்க வாங்க தயாளன்” என்று என்னை ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்துவந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு “இது ஃபோன்ல சொல்ற விஷயமில்ல. நம்ப அன்புக்கனிக்கு மூனு புள்ளைங்க. ரெண்டு ஆண். ஒரு பொண்ணு. தெரியுமில்லயா?” என்று சம்பந்தமில்லாமல் எதையோ அவர் சொல்லத் தொடங்கினார். பிறகு சட்டென அடங்கிய குரலில் “அவரு ஒய்ஃப் போன வாரம் திடீர்னு ஒரு ஜவுளிக்காரனோட கெளம்பிப் போயிடுச்சி தயாளன். அன்புக்கனி அப்பிடியே ஒடஞ்சி போயி ஊட்லயே கோழிமாதிரி சுருண்டு கெடக்கறாரு. ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னே தெரியலை. விஷயத்த கேள்விப்பட்டு அவுங்க பேரண்ட்ஸ்கூட இங்க வந்துட்டாங்க. ஆனா அன்புக்கனிதான் இன்னும் ஒரு நெலைக்கு வரலை….” என்றார். அந்த அதிர்ச்சியை என்னாலும் தாங்கமுடியவில்லை. இருவருமே ஒரு நிமிடம் எதையும் பேசாமல் பக்கத்தில் வெட்டப்பட்டு கிடந்த மரக்கிளையைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

“சரி சார். எங்க ஸ்டேஷன்ல வேல செஞ்சவரு அவரு. சீனியர். இவ்ளோ தூரம் வந்துட்டு அவர பாக்காம போக மனசு வரலை. ஒரு நிமிஷம் பாத்து பேசிட்டு கெளம்பிடறேன்”

அந்த ஏ.இ.யிடம் விடைபெற்றுக்கொண்டு க்வார்ட்டர்ஸ் பகுதியில் நடந்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தேன். அழைப்புமணியை அழுத்தியதும் அவரே வந்து கதவைத் திறந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “பாண்டிச்சேரி ஸ்டேஷன்ல உங்கள பத்தி பேசிக்காத நாளே இல்ல சார். ஏ.இ.யில ஆரம்பிச்சி மஜ்தூர் வரைக்கும் உங்கள பத்தி கதகதயா பெருமயா சொல்வாங்க” என்றேன். அன்புக்கனி புன்னகையோடு என் தோளைப் பற்றி அழுத்தினார். தன் அம்மாவிடம் எனக்காக தேநீர் தயாரிக்கும்படி சொன்னார்.

நான் குப்புசாமி ஜாய்ன்டர் சொன்ன விஷயங்களை அவரிடம் சொன்னபோது ”நல்ல வேல தெரிஞ்சவர். எதயும் நறுவிசா செய்யத் தெரிஞ்ச ஆளு. ஆனா லெட் ஸ்டிக் மேல ஒரு பித்து உண்டு அவருக்கு. ஒரு ஜாய்ன்ட்ட்க்கு அஞ்சி ஸ்டிக் கண்டிப்பா குடுக்கணும் அவருக்கு. மூனுல வேலய முடிச்சிட்டு ரெண்ட எடுத்தும்போயி வித்து காசாக்கிடுவாரு. அது ஒன்னுதான் அவருக்கு பலவீனம்” என்று சிரித்தார். “உலகத்துல பலவீனம் இல்லாத மனுஷங்க யாரு இருக்காங்க தயாளன்? ஒவ்வொருத்தவங்களுக்கு ஒவ்வொரு பலவீனம்.”

பாண்டிச்சேரி விழுப்புரம் கேபிள் பாதையில் ஏற்பட்ட பிரச்சினையைப்பற்றி சுருக்கமாகச் சொல்லி பையிலிருந்த காற்றழுத்தக் குறிப்புகளை அவரிடம் காட்டினேன். அவர் அதைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே மடித்துவைத்துக்கொண்டார். “எத்தன மணிக்கு எடுத்த ரீடிங் இது?” என்று கேட்டார். நான் “ஒரு ரீடிங் மத்யானம் மூனு மணிக்கு. இன்னொரு ரீடிங் மத்யானம் நாலு மணிக்கு” என்றேன்.

“ப்ரெஷர் ரீடிங்க எப்பவுமே நடுராத்திரியில எடுக்கணும். இல்லைன்னா அதிகாலை நாலு மணி, அஞ்சு மணிக்குள்ள எடுக்கணும் தயாளன்.”

“குப்புசாமி அதப்பத்தியெல்லாம் ஒன்னும் சொல்லலை சார்”

தேநீர் வந்தது. அருந்திக்கொண்டே அவரை எப்படி பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்வது என்று மனசுக்குள் திட்டமிடத் தொடங்கினேன். எப்படி பேச்சைத் தொடங்குவது என்பது புரியாமல் தவிப்பாக இருந்தது.

“தயாளன், நான் இப்ப லீவ்லதான் இருக்கேன். ஒன்னும் வேல இல்ல. உங்க கூட வந்து ஃபால்ட்ட க்ளியர் பண்ணி குடுக்கறேன். தைரியமா இருங்க.”

அன்புக்கனி தானாகவே முன்வந்து சொன்ன வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. மகிழ்ச்சியில் என் கண்கள் தளும்பின. “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றபடி அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். “மதியம் சாப்ட்டுட்டு கெளம்பலாம்” என்றார். நான் மறுக்கவில்லை.

நான் அங்கிருந்தே லோகநாதன் ஏ.இ.யை அழைத்து நாங்கள் வரும் தகவலைச் சொன்னதால் மாலை நான்கு மணிக்கு அனைவருமே ஸ்டேஷனில் காத்திருந்தார்கள். மாணிக்கம் ஓடி வந்து அவர் காலிலேயே விழுந்துவிட்டான். அன்புக்கனி அவனை எழுப்பி நிறுத்தினார். ”மாணிக்கம் நம்ம புள்ள. நான்தான் இங்க இவன சேர்த்து விட்டன்” என்று என்னைப் பார்த்துச் சொன்னார். ஏ.இ. எல்லோருக்கும் தேநீர் வரவழைத்தார். அவர் அறையிலேயே உட்கார்ந்து அனைவரும் அருந்தினோம்.

அன்புக்கனி அப்போதே மதகடிப்பட்டுக்குப் போகலாம் என்று சொன்னார். “காலையில போவலாமே” என்றார் ஏ.இ. “இல்ல இல்ல. இப்பவே போவலாம். எல்லாருக்குமே இன்னைக்கு சிவராத்திரி” என்றார் அன்புக்கனி.

“ரெண்டு எட்டுக்கட்ட டார்ச் லைட் எடுத்துக்குங்க. டெண்ட்டும் தார்ப்பாயும் கூட வேணும். ராத்திரி ரெஸ்ட் எடுக்க உதவும்” என்று மஜ்தூர்களிடம் சொல்லிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார். நானும் குப்புசாமியும் மஜ்தூர்களும் சேர்ந்துகொண்டோம். நகரைத் தாண்டும்போது ஒரு ஸ்டேஷனரி கடையில் வண்டியை நிறுத்தி ஒரு க்ராஃப் நோட்டும் பென்சிலும் வாங்கிக்கொண்டார் அன்புக்கனி.

பள்ளங்களைத் திறந்து தயார் செய்வதற்குள் மணி ஏழாகிவிட்டது. ரிப்பீட்டர் முனையில் ஆகிசிஜன் உருளையை நிறுத்தி சீரான வேகத்தில் காற்று செலுத்தப்பட்டது.

தர்மலிங்க ரெட்டியார் கடையில் எல்லோரும் சிற்றுண்டி சாப்பிட்டோம். இரண்டு மஜ்தூர்களை மட்டும் விழித்திருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை ஓய்வெடுக்க அனுப்பினார். அவர்கள் பாதையோரமாக மரத்தடியில் கூடாரமடித்து தார்ப்பாய் விரித்து படுத்துக்கொண்டார்கள். வண்டிக்குள்ளேயே உட்கார்ந்து கேசவனும் குப்புசாமியும் பழைய டிப்பார்ட்மெண்ட் கதைகளைச் சிரிக்கச்சிரிக்கச் சொல்லத் தொடங்கினார்கள்.

“நான் மஜ்தூரா சேர்ந்த புதுசு. நான்தான் அப்ப ஆபீஸ்ல இருந்தன். திடீர்னு போன் மணி அடிச்சிது. எடுத்து அலோனு சொன்னன். ஒங்க ஏஇ இருந்தா குடுப்பான்னு சொன்னாங்க. யார் என்ன கேட்டாலும் ஆபீஸ்ல இல்ல, ரூட்டுக்கு போயிருக்காருனு சொல்லணும்னு இவரு ஏற்கனவே சொல்லி குடுத்திருந்தாரு. நானும் அது மாதிரியே அவர் இல்ல சார்னு சொன்னன். அந்த ஆள் உடறமாதிரியே தெரிலை. எங்க எங்கன்னு கேட்டாப்ல. நான் ரூட் ரூட்னு சொன்னன். அங்கதான் படுத்திட்டிருக்காரு, எனக்குத் தெரிது, நீ இல்லைனு சொல்றயே, இப்ப அங்க வந்தன்னா பாருன்னு மெரட்டனாரு. பயத்துல எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. நீங்க போன்ல தெரியறீங்களாம் சார் எனக்கு பயமா இருக்குது சார்னு இவர பாத்து ஓன்னு அழுதுட்டன். அந்த ஏஇக்கு வந்திச்சி பாரு ஒரு கோவம். அடிஅடின்னு அடிச்சி தொவச்சிட்டாரு..”

மாற்றிமாற்றி கதை கேட்டதில் பொழுது போனதே தெரியவில்லை. பதினோரு மணிக்கு ஒரு மஜ்தூரை மட்டும் அழைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் ரீடிங் எடுத்தோம். இரண்டு மணிக்கு மேல் விழித்திருந்தவர்கள் கூடாரத்துக்கு சென்றுவிட, உறங்கி முடித்தவர்கள் எழுந்து வந்து டார்ச் லைட்களை வாங்கிக்கொண்டார்கள். அன்புக்கனி மூன்று மணிக்கு ஒரு ரீடிங் எடுத்தார். தொடர்ந்து ஐந்து மணிக்கு ஒரு ரீடிங் எடுத்தார்.

பிறகு ஸ்டேஷனுக்குத் திரும்பினோம். ஸ்டேஷனில் இருந்த விருந்தினர் அறையிலேயே தங்கிக்கொள்வதாக அன்புக்கனி சொன்னபோதும், நான் அவரைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

அடுத்தநாள் காலையில் எழுந்ததும் குளிக்கச் சென்றுவிட்டார் அன்புக்கனி. நான் பால் வாங்கி வருவதற்காக வெளியே சென்றேன். திரும்புபோது நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பிய ஏ.இ.ஐப் பார்த்தேன். இரவு நடந்த வேலைகளைப்பற்றியெல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன். இறுதியில் “சொந்த பிரச்சனைய கூட பெரிசா நெனைக்காம நமக்காக வந்திருக்காரு சார். உண்மையிலேயே பெரிய மனுஷன் சார்” என்று சொல்லத் தொடங்கியதுமே எனக்கு குரல் தழுதழுத்தது.

“அது என்ன சொந்தப் பிரச்சினை?” என்று ஏ.இ. கேள்வி கேட்ட போதுதான் நான் செய்த பிழை புரிந்தது. வேறு வழியில்லாமல் நான் அவரிடம் சொல்லவேண்டியிருந்தது. அதைக் கேட்டுவிட்டு அவரும் வருத்தப்பட்டார். “நல்லவங்களுக்குத்தான் தயாளன் இப்படிப்பட்ட சோதனைகள்” என்று பெருமூச்சு விட்டார். பேசிக்கொண்டே நடந்ததில் க்வார்ட்டர்ஸ் வந்ததே தெரியவில்லை.

”பத்து மணிக்கு நானும் வரேன் தயாளன். புறப்படும்போது சொல்லுங்க” என்று விடைபெற்றுக்கொண்டார் ஏ.இ.

வீட்டுக்கு வந்தபோது காற்றழுத்த அளவுகளை வைத்து அன்புக்கனி வரைந்த வரைபடங்கள் மேசை மீது தயாராக இருந்தன. ஒவ்வொரு வரைபடத்தின் அமைப்பும் தரைமீது வைக்கப்பட்ட குழம்புச்சட்டி போல இருந்தது அந்த வரைபடம். மூன்று வரைபடங்கள். மூன்றிலும் கீழ்விளிம்புப் புள்ளி கிட்டத்தட்ட ஒரே நீளத்தைக் குறிப்பதாக இருந்தது.

“ரிப்பீட்டர்லேர்ந்து ஆயிரத்து அறுநூற்றி எழுபத்திரண்டு மீட்டர்ல ஃபால்ட் இருக்குது தயாளன்.”

அந்தத் துல்லியமான கணக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு பத்து மணிக்கு எல்லோருமே ஸ்டேஷனில் கூடினோம். டி.இ., ஏ.இ. எல்லோருமே வந்துவிட்டார்கள். அன்புக்கனி காட்டிய வரைபடங்களை அனைவரும் நம்பமுடியாதவர்களாக ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஐம்பது மீட்டர் நீளமுள்ள ஒரு கேபிள் காயிலும் வண்டியில் ஏற்றப்பட்டது.

”நெஜமாவே அங்கதான் ஃபால்ட் இருக்குதா?”

“ஆமாம் சார்.”

குப்புசாமி வேகமாக என்னிடம் வந்து “பழைய கேபிள எடுத்துட்டுதான் இந்த புது பீஸ போடணும். அப்ப ரெண்டு ஜாய்ண்ட் கணக்கு. பத்து ஸ்டிக் எடுத்துக்குங்க” என்று ரகசியமாக சொன்னார். நான் ஸ்டோர் டெக்னீஷியனை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவரோடு குப்புசாமி சென்று ஸ்டோரிலிருந்து நேரிடயாகவே ஸ்டிக்குகளை வாங்கிக்கொண்டு வந்து வண்டியில் உட்கார்ந்துகொண்டார்.

பதினோரு மணிக்கு மதகடிப்பட்டை அடைந்துவிட்டோம். ரிப்பீட்டரில் ஆக்சிஜன் உருளையை இணைத்தோம். பிறகு அங்கிருந்து நீளத்தை அளக்கும் ரோடோமீட்டரை மெதுவாக உருட்டிக்கொண்டே நடந்தான் ஒரு மஜ்தூர். அவனுக்குப் பின்னால் துப்பறியும் கூட்டத்தைப்போல நாங்கள் அனைவரும் படபடக்கும் நெஞ்சுடன் நடந்தோம்.

மீட்டர் ஆயிரத்து அறுநூற்றி எழுபத்திரண்டு காட்டியதும் மஜ்தூர் நின்று காலால் ஒரு கோடு இழுத்து அடையாளமிட்டான். அந்தப் புள்ளிக்கு அருகில் சென்ற அன்புக்கனி அங்கிருந்து விழுப்புரம் பக்கமாக பத்து தப்படி நடந்து சென்று ஒரு கோடு கிழித்தார். பிறகு மீண்டும் மையப்புள்ளிக்கு வந்து பாண்டிச்சேரி பக்கமாக பத்து தப்படி நடந்து சென்று . ஒரு கோட்டைக் கிழித்தார். நாங்கள் அனைவருமே ஏதோ மந்திரவாதியைப் பார்ப்பதுபோல அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

“இந்த இருபது தப்படிக்குள்ளதான் சார் ஃபால்ட்.” என்று எங்களைப் பார்த்துச் சொன்னார். மஜ்தூர்களைப் பார்த்து “ரெண்டு கோடுங்களுக்கும் நடுவுல தோண்டுங்க” என்றார்.

“நெஜமா ஃபால்ட் இங்கதானா?” டி.இ. பக்கத்திலிருந்த ஏ.இ.யைப் பார்த்துக் கேட்டார். ”ஆமா, நிச்சயமா இங்கதான் சார்” என்று சொல்லிக்கொண்டே டி.இ.ஐ வண்டிக்கு அருகில் அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.

இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். கன்னங்கரேலென கரி படிந்த மூங்கில் கழியைப்போல பள்ளத்துக்குள் கேபிள் விளிம்பு தெரிந்தது. மஜ்தூர்கள் பிக் ஆக்ஸை வெளியே வைத்துவிட்டு குனிந்து கையாலேயே மணலை இருபுறமும் தள்ளி கேபிளை தெளிவாகப் பார்க்கும் வகையில் செய்தார்கள்.

ஸ் என்று எழுந்த சீறலைக் கேட்டு ஒரு மஜ்தூர் “சார்” என்று பீதியில் பின்வாங்கி அலறினான். நாங்கள் அனைவரும் அவனுக்கு அருகில் ஓடினோம். எங்கள் சத்தத்தைக் கேட்டு டி.இ.யும் ஏ.இ.யும் மறுகணமே ஓடி வந்தார்கள். மஜ்தூர் சீய்த்துத் தள்ளிய மண்ணுக்கு அடியில் கேபிள் துளை வழியாக காற்று பீய்ச்சியடித்தபடி வெளியேறியது. நான் நிமிர்ந்து சாலையில் ஏற்கனவே போட்டிருந்த கோட்டைப் பார்த்தேன். சரியாக ஆயிரத்து அறுநூற்றி எழுபத்திரண்டாவது மீட்டர். ஓட்டை வழியாக வெளியேறும் காற்றை ஏதோ ஓர் அற்புதத்தைப் பார்ப்பதுபோல நாங்கள் கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்தோம்.

டி.இ. ஓடி வந்து அன்புக்கனியைத் தழுவிக்கொண்டார். ”யூ ஆர் ரியலி க்ரேட், யூ ஆர் ரியலி க்ரேட்” என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.

“தயாளன், இங்க வாங்க” என்று அவசரமாக என்னை அழைத்தார். நான் போய் நின்றதும் பையிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து என்னிடம் கொடுத்து “எல்லாருக்கும் தம்ஸ் அப் வாங்கி குடுங்க” என்றார். இரு மஜ்தூர்களோடு நான் கடைக்குச் சென்று தம்ஸப் பாட்டில்கள் வாங்கி வந்தேன். ஒரு பெரிய பிரச்சினை நல்லவிதமாக முடிந்ததில் எல்லோருக்குமே ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிட்டது. எல்லோரும் மகிழ்ச்சியோடு தம்ஸப் அருந்தினோம்.

“அப்ப நான் கெளம்பட்டுமா சார்?” என்று டி.இ.யிடம் கேட்டார் அன்புக்கனி. “இருங்க அன்புக்கனி, ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி “வண்டியிலயே அன்புக்கனிய கடலூருக்கு அழச்சிட்டு போய் விட்டுட்டு வாங்க” என்று சொன்னார்.

குப்புசாமியிடமும் மஜ்தூர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தார் அன்புக்கனி. ”போற வழியில எங்கள ஆபீஸ்ல எறக்கி விட்டுடுங்க” என்று டி.இ.யும் ஏ.இ.யும் ஏறிக்கொண்டார்கள். கேபிள் ஓட்டையிலிருந்து காற்று பீறிட்ட காட்சியை டி.இ.யால் மறக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதை விவரித்தபடியே வந்தார்.

ஸ்டேஷன் வாசலில் இருவரும் இறங்கிக்கொண்டார்கள். நாங்களும் இறங்கினோம். வண்டியைத் திருப்புவதற்காக கொஞ்ச தூரம் வரைக்கும் முன்னால் ஓட்டிக்கொண்டு சென்றார் டிரைவர்.

டி.இ. அன்புக்கனியின் தோளைத் தொட்டு கனிந்த குரலில் “நீங்க எப்படிப்பட்ட பிரச்சினையில இருக்கிங்கன்னு எனக்குத் தெரியும் அன்புக்கனி. கடலூர் இன்ஸ்பெக்டர் என் க்ளோஸ் ப்ரண்ட். நீங்க ஒரு வார்த்த சொன்னிங்கன்னா, எங்க இருந்தாலும் ரெண்டு நாள்ல அந்த பையன கண்டுபுடிச்சிடலாம்.” என்று மெதுவாகச் சொன்னார். அதைக் கேட்டு அன்புக்கனியின் கண்களும் கலங்கிவிட்டன.

“வேணாம் சார். அப்பிடிலாம் செய்ய அவசியமில்ல சார். அவளுக்கு ஏதோ ஒரு சபலம். கெட்ட நேரம். அவனோட போய்ட்டா. அவ்ளோதான். ஆனா அவ கெட்டவ கெடயாது. என்னைக்காவது ஒரு நாள் நிச்சயமா திரும்பிவந்துடுவா சார். எனக்காக இல்லைன்னாலும் புள்ளைங்களுக்காகவாவது வந்துடுவா. நிச்சயம் ரிஸ்டோர் ஆயிடுவா” என்றார் அன்புக்கனி. பிறகு “வரேன் சார். பாக்கலாம்” என்றபடி வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார். நானும் அவருக்கு அருகில் உட்கார்ந்தேன்.

தனிவழி – பாவண்ணன் சிறுகதை

”நாகராஜன் ரொம்ப திமுரு காட்டிகினு திரியறான்டா” என்று பொருமினான் சிவலிங்கம். “புள்ளு எந்தப் பக்கம் பறந்து வந்தாலும் புடிச்சி இன்னைக்கு அவன் கொட்டத்த அடக்கணும்”

எங்களை எச்சரித்துவிட்டு உத்திக்குழிக்கு நேராக இருபதடி தொலைவில் உறுதியாக நின்றான் சிவலிங்கம். கிரிதரன் இலுப்பை மரத்தின் திசையில் நகர்ந்து சென்றான். தண்டபானி கள்ளிச்செடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான். பெருமாள் கோவில் மதிலுக்கு அருகில் போய் நின்றான் வடிவேலு. நான் அரசமரத்தைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த மண்மேடைக்கு அருகில் சென்று நின்றுகொண்டேன்.

எல்லோருடைய கண்களும் நாகராஜனின் மீதே பதிந்திருந்தன. தன்னைச்சுற்றி வியூகம் வகுத்து நின்றிருக்கும் அனைவரையும் ஒருமுறை கண்ணால் அளந்துவிட்டு உத்திக்குழியைப் பார்த்துக் குனிந்தான் அவன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கிட்டிக்கோலால் தெண்டி அடித்த கிட்டிப்புள் ஒரு சிட்டுக்குருவி போல காற்றில் விர்ரென பறந்தது.

அது தாவியெழுந்த கோணத்தை வைத்தே என்னை நோக்கித்தான் வருகிறது என்பது புரிந்துவிட்டது. உடனே எல்லோரும் “ஆனந்தா விடாதே ஆனந்தா விடாதே” என்று கூவி எச்சரிக்கத் தொடங்கினார்கள். பதற்றத்தில் கைகால்களெல்லாம் எனக்குப் பரபரத்தன. கண்களை அதன் மீதே பதித்திருந்தேன். ஒரு பறவைபோலத் தாவி அதைப் பிடித்துவிட மாட்டோமா என்று துடித்தேன். அது நெருங்கிவரும் நேரத்தைக் கணித்து சரியான தருணத்தில் கையை உயர்த்தியபடி என்னால் முடிந்த அளவுக்கு உயரமாக எகிறினேன். பிடிக்கு அகப்படாமல் என் கைவிரலுக்கு மேல் இரண்டடி உயரத்தில் பறந்துபோன கிட்டிப்புள் அரசமரத்தில் பட்டென்று மோதித் தெறித்தது. , முதலில் கீழே இருந்த பிள்ளையார் மீது பட்டு உருண்டு சென்று இறுதியாக ஆடுபுலி ஆட்டத்தில் மூழ்கியிருந்த தாடிக்காரரின் தொடையில் முட்டி நின்றது. அவர் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்து என்னை முறைத்துவிட்டு “போய் வேற பக்கத்துல ஆடுங்கடா” என்றபடி கிட்டிப்புள்ளை எடுத்து வீசினார்.

எல்லோரும் அடித்த தொலைவைவிட நாகராஜன் அடித்த தொலைவு அதிகமானது என்பதால் அவனே வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்பட்டான். நாங்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவராக அரசமரத்தின் கல்மேடையிலிருந்து உத்திக்குழி வரைக்கும் அவனை முதுகில் சுமந்துசென்று இறக்கினோம். “கிட்டிப்புள் ஆட்டத்துல நம்மள அடிச்சிக்க ஆளே கெடயாது தெரியுமா?” என்று கொக்கரித்தான் நாகராஜன்.

அடுத்த ஆட்டத்தைத் தொடர எங்களுக்கு ஆர்வம் இல்லாததால் மனம் சோர்ந்து கல்மேடைக்கு வந்து அமர்ந்தோம். நாகராஜன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மேடையின் மற்றொரு மூலையில் கூடை நிறைய அவித்த கடலைக்கூடையோடு அமர்ந்திருந்த ஆயாவிடம் நாலணாவுக்கு கடலையை வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தான்.

அந்தக் கல்மேடை மேட்டுத்தெருவும் ஸ்டேஷன் தெருவும் அக்ரஹாரமும் சந்திக்கும் புள்ளியில் இருந்தது. கோலியனூர் சந்தைக்கும் சிறுவந்தாட்டுக்கும் போகக்கூடிய மாட்டுவண்டிகள் அந்த இடத்தில்தான் சற்றே நின்று இளைப்பாறும். புறப்படும்போது வண்டிக்காரர்கள் இரண்டடி உயர கல்கூடாரத்துக்குள் அரையடி உயரத்தில் கருகருவென்றிருக்கும் பிள்ளையாரைப் பார்த்து வணங்கியபடியே காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டுச் செல்வார்கள். கிழங்கோ கடலையோ விற்கவரும் ஆயாக்கள் நடந்து வரும் வழியில் பறித்துவந்த இரண்டு செம்பருத்திப்பூக்களையோ நந்தியாவட்டைப் பூக்களையோ பிள்ளையார் முன்னால் வைத்து ஒரு துண்டு கற்பூரத்தையும் ஏற்றிய பிறகே வியாபாரத்தைத் தொடங்குவது வழக்கம். கருங்கல் பதிக்கப்பட்டதால் கோடையில் கூட அந்த இடம் குளுமையாக இருந்தது. அதனால் எப்போதுமே நான்கு பேர் படுத்துக்கொண்டும் மூன்று பேர் வேர்ப்புடைப்பில் சாய்ந்துகொண்டும் வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள்.

மேடையின் விளிம்பில் அமர்ந்து கால்களைத் தொங்கப்போட்டபடி கடலையைத் தின்றுகொண்டே மனம்போன போக்கில் சினிமாக்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சிவலிங்கம் இரண்டு நாட்கள் முன்பு பார்த்த ராமு சினிமாவின் கதையை ஒவ்வொரு காட்சியாக விவரித்தான். ஒவ்வொரு காட்சியும் நம் கண் முன்னால் நிகழ்வதுபோல கதைசொல்வதில் பெரிய கெட்டிக்காரன் அவன். வாய் பேச முடியாத ஒரு சிறுவனாக அவனே எங்களுக்கு முன்னால் நடித்துக் காட்டினான். அவன் பாடிக் காட்டிய துயரம் தோய்ந்த ’பச்சை மரம் ஒன்று’ பாடலின் வரிகளின் ஆழத்தில் நாங்கள் மூழ்கிவிட்டோம். எங்களுக்கு அருகில் ஒருவர் ஈஸ்வரா என்றபடி கையை ஊன்றி எம்பி மேடைமீது அமர்ந்த ஓசையைக் கேட்ட பிறகே எங்கள் கவனம் திசைதிரும்பியது. சிவலிங்கம் சொன்ன கதையின் சுவாரசியத்தில் அவர் எந்தத் திசையிலிருந்து வந்தார், எப்படி வந்தார் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை.

இரண்டு தோள்களிலிருந்தும் இரண்டு பைகளை இறக்கி வைத்துவிட்டு மூச்சு வாங்கினார் அவர். ஒரு கை அகலத்துக்கு பட்டையாக இருந்த அந்தப் பைகளின் பட்டிகள் விசித்திரமாக இருந்தன. ஒன்று பெரிய பை. மற்றொன்று சின்ன பை. அழுக்கான வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். பரட்டைத்தலை. தாடி வைத்திருந்தார். வெயிலில் முகத்திலும் கழுத்திலும் ஊறி வழிந்த வேர்வையை கழுத்திலிருந்த துண்டை எடுத்து துடைத்துக்கொண்டார்.

“என்ன பாட்டு சொன்ன?” என்று கேட்டார் அவர்.

அப்படி ஒரு கேள்வியோடு எங்கள் உரையாடலுக்கு நடுவில் அவர் குறுக்கிடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அவரைப் பார்த்தால் சினிமா பார்க்கிற மனிதரைப்போலவே தெரியவில்லை. எங்கோ காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்து வந்து சந்தையில் விற்றுவிட்டுத் திரும்பும் கிராமத்தானைப்போலத்தான் இருந்தது.

பதிலை எதிர்பார்த்து அவர் எங்கள் முகத்தைப் பார்த்தபடியே இருந்ததால் சிவலிங்கம் “பச்சை மரம் ஒன்று இச்சைக்கிளி “ என்று முதல் வரியைப் பாடினான்.

”சுசிலாம்மாவும் சீனிவாசும் பாடற பாட்டா?”

“ஆமா”

“சீனிவாசுக்கு ரொம்ப இளகின குரல். சோகத்துக்கு பொருத்தமான குரல் உள்ளவரு. சோகப்பாட்டுன்னாவே சீனிவாசத்தான் போடுவாங்க”

அவருக்கு ஏதாவது தகுந்த பதிலைச் சொல்லவேண்டும் என்று பரபரத்தான் சிவலிங்கம். எனினும் சொல்லெழாவதனாக தவித்தபடி அவரையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்தான். எதிர்பாராத கணத்தில் “சந்தோஷமா ஆடிப் பாடற பாட்டு கூட அவர் பாடியிருக்காரே” என்றேன் நான்.

“ஆமா. அதுவும் பாடியிருக்கார். ஆனா அவருக்குன்னு ஒரு தனித்துவம் இருக்குதில்ல, அது சோகப்பாட்டுதான்.”

சட்டென்று என் வேகம் அடங்கிவிட்டது. அவர் என்னை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட விதம் என்னை ஊமையாக்கிவிட்டது. தொடர்ந்து என்ன பேச என்று தெரியவில்லை.

“பாட்டுல கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயினு ரெண்டு இருக்குது. கீழ் ஸ்தாயி சோகத்துக்கு பொருத்தமா இருக்கும். சீனிவாசு கீழ் ஸ்தாயிலயே இருக்கறவர். அவரால அத ரொம்ப சுலபமா பாடமுடியும். மேல் ஸ்தாயில இருக்கற ஒருத்தர் கீழ் ஸ்தாயிக்கு மெனக்கிட்டு எறங்கிவந்து பாடனாதான் அவுங்களுக்கு சோகப்பாட்டு வரும்”

அவர் என் தோள்மீது கைவைத்து அருகில் இழுத்துக்கொண்டார்.

“நீ மயக்கமா கலக்கமா கேட்டிருக்கியா? அப்படியே மனச உருக்கறமாதிரி இருக்குதில்ல? அது சோகப்பாட்டுதான?”

“ஆமா”

”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், இந்த மன்றத்தில் ஓடி வரும், யார் சிரித்தால் என்ன எல்லாமே அவர் பாடனதுதான?”

“ஆமா”

“அப்படி ஒரு நூறு பாட்டு இருக்கும். பெரிய சோகக்களஞ்சியம்.”

அவருடைய புன்னகையில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. இவரிடமா வம்பிழுக்க நினைத்தோம் என்று தோன்றியது. அவர் என்னிடம் “உன் பேரென்ன?” என்று கேட்டார்.

“ஆனந்தன்”

அவர் திரும்பி மற்றவர்களைப் பார்த்தார். நான் அவர்களுடைய பெயர்களை ஒவ்வொருவராகச் சொன்னேன்.

“முழுப்பரீட்ச லீவுல இங்கதான் ஆட்டமா?”

நாங்கள் கூச்சத்தோடு ஆமாம் என்று தலையசைத்தோம்.

“அந்த பச்சைமரம் ஒன்று பாட்ட ஒருதரம் நீங்க பாடறீங்களா?” என்று கேட்டேன்.

“ஓ. அதுக்கென்ன? பாடறனே” என்று சிரித்தார். “ஆனா நான் ஒரு பாட்டு பாடனா, நீ ஒரு பாட்டு பாடணும். அந்த ஒப்பந்தத்துக்கு சம்மதம்னா நான் பாடறேன். சரியா?”

நானே வலையை விரித்து நானே மாட்டிக்கொண்டேனே என்று தோன்றியதில் நாக்கைக் கடித்துக்கொண்டேன். நண்பர்கள் எல்லோரும் என்னைப் பார்த்து “ம்னு சொல்லுடா. ம்னு சொல்லுடா” என்று தூண்டினார்கள். சிவலிங்கம் சற்று சத்தமாகவே ”பள்ளிக்கூடத்துல பாட்டுப்போட்டிக்கு பாடனியே தமிழுக்கும் அமுதென்று பேர். அத பாடுடா” என்று சொல்லிவிட்டு முதுகைத் தட்டினான். நான் வேறு வழியில்லாமல் சரியென்று தலையசைத்தேன். “அப்ப நானும் தயார்” என்று அவர் சிரித்தார்.

திரும்பி தனக்கு அருகிலிருந்த பெரிய பையைப் பிரித்தார். அதிலிருந்து என்ன எடுக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தோம். வெள்ளைவேட்டியால் மூடிக் கட்டிய ஒரு மூட்டை அந்தப் பைக்குள் இருந்தது. அந்த மூட்டையையும் பிரித்து அதிலிருந்து அவர் ஆர்மோனியப்பெட்டியை எடுத்தார். பளபளவென அது கரிய நிறத்தில் மின்னியது. அதை எடுத்து தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு எங்களைப் பார்த்து புன்னகைத்தபடி துடைத்தார். மெதுவாக அவர் துருத்தியை அசைத்தபடி வெண்மையும் கருமையும் கலந்த அதன் வெவ்வேறு மரக்கட்டைகளில் விரல்களை அழுத்திய போது இசை எழுந்தது. ஆறேழு அசைவுகளிலேயே அவர் பச்சைமரம் ஒன்று பாட்டுக்குப் பொருத்தமான தாளத்தைக் கொண்டுவந்துவிட்டார். அவர் பச்சை மரம் ஒன்று பாடத் தொடங்கியபோது எங்கிருந்தோ ஒரு வானொலிப்பெட்டி பாடுவதுபோலவே தோன்றியது. அந்த அளவுக்கு வரிகளுக்குப் பொருத்தமான குரல். எங்களால் அமர்ந்திருக்க முடியவில்லை. தன்னிச்சையாக எழுந்து அவரைச் சூழ்ந்துகொண்டு நின்றோம்.

பாட்டுச்சத்தம் கேட்டதுமே கல்மேடையில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களும் நிழலுக்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்களும் உறங்கிக்கொண்டிருந்தவர்களும் எழுந்து வந்து எங்களைச் சூழ்ந்துவிட்டார்கள். அவர் பாடி முடித்ததுமே சந்தோஷத்தில் எல்லோரும் கைதட்டினார்கள்.

“இப்ப நீ. இப்ப நீ” என்று ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன் அவர் என் பக்கமாக விரலை நீட்டி புன்னகைத்தார். நான் மெளனமாக தலையைக் குனிந்துகொண்டு அவ்வரிகளை நினைவுகூர்ந்தேன். பிறகு நாணத்துடன் அவரைப் பார்த்து தயார் என்பதுபோல தலையசைத்துவிட்டு குனிந்துகொண்டேன். அவருடைய விரல்கள் உடனே ஆர்மோனியத்தில் கட்டைகளின் மீது படர்ந்து அழுத்தம் கொடுத்து விடுவித்தன. ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று நான் தொடங்கினேன். பாடலை முடிக்கும் வரை தலையை உயர்த்தவே இல்லை. இறுதிச் சொல்லுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். அவர் குதூகலத்துடன் இரு கைகளையும் மார்பளவுக்கு உயர்த்தி வேகவேகமாகத் தட்டினார். அவரைத் தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“ஏற்ற இறக்கம்லாம் ரொம்ப நல்லா இருக்குது ஆனந்தா. உனக்கு ரெண்டு ஸ்தாயியும் வருது. அது பெரிய வரம். உண்மையிலேயே நீ பெரிய பாட்டுக்காரன்” என்று என்னை அருகில் வரச்சொல்லி தட்டிக் கொடுத்தார்.

ஒருவர் ஆயாவிடமிருந்து ஒரு மந்தாரை இலை நிறைய கடலையை வாங்கி மடித்து எடுத்துவந்து பாட்டுக்காரர் முன்னால் வைத்து “சாப்புடுங்க சாமி” என்றார். பாட்டுக்காரர் அதை எங்கள் பக்கமாக இழுத்துவைத்து “ம், எடுத்துக்குங்க” என்றார். மேலும் தன்னுடைய தோள் பையைத் திறந்து அதிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து “இந்தாங்க, இதயும் எடுத்துக்குங்க” என்றார்.

எந்த வகுப்பிலிருந்து எந்த வகுப்புக்குச் செல்கிறோம், எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், எந்தப் பாடம் மிகவும் பிடிக்கும், எங்களுக்கு விருப்பமான பாடல்கள் எவைஎவை என்றெல்லாம் அவர் கேட்கக்கேட்க நாங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருந்தோம்.

திடீரென அவர் “இங்க இவ்வளவு பெரிய இடம் இருக்குதே, நீங்க இங்க தாராளமா விளையாடலாமே. ஏன் சும்மா இருக்கீங்க?” என்று கேட்டார்.

“நீங்க வரவரைக்கும் விளையாடிட்டுதான் இருந்தோம்.”

“அப்படியா, என்ன விளையாட்டு?”

“கிட்டிப்புள்ளு”

“ஓ, அப்ப யாரு ஜெயிச்சி குதிரை ஏறனது?”

“அவன்தான்” நான் நாகராஜனைச் சுட்டிக் காட்டினேன்.

“சரி சரி. இன்னைக்கு நாம புதுசா பந்து விளையாடாமா?”

நாங்கள் மெளனமாகி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். எங்களிடம் பந்து இல்லை என்பதுதான் காரணம். “ஏன் முழிக்கறீங்க?” என்று கேட்டார் அவர்.

“எங்ககிட்ட பந்து இல்லயே”

அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் “அது ஒரு பிரச்சினையா? பந்த நாம உண்டாக்குவோம் ஆனந்தா” என்றார். உடனே மேடையிலிருந்து கீழே குதித்து உதிர்ந்திருந்த இலைகளையெல்லாம் சேகரித்தார். பக்கத்தில் வேலியோரமாக முளைத்திருந்த செடிகளிலிருந்தும் இலைகளைப் பறித்தார். தரையில் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக முளைத்திருந்த புற்களையெல்லாம் பிடுங்கியெடுத்தார். பிறகு பையில் வைத்திருந்த ஒரு துண்டில் அவையனைத்தையும் குவித்து அழுத்தி அழுத்திச் சுருட்டி உருட்டி முடிச்சுபோட்டு ஒரு பந்துபோல மாற்றிவிட்டார். ”நல்லா இருக்குதா?” என்று எங்களைப் பார்த்து கேட்டுவிட்டு சிரித்தார்.

நான் அதை வாங்கி உயரமாக தூக்கிப் போட்டுப் பிடித்தேன். அசலாக பந்துபோலவே இருந்தது. நாகராஜனும் வடிவேலும் வாங்கி ஒருவருக்கொருவர் தூக்கிப் போட்டு பிடித்தார்கள்.

“மூனு பேரு இந்த பக்கம் நில்லுங்க, மூனு பேரு அந்தப் பக்கம் நில்லுங்க. நான் நடுவுல. என்னால புடிக்க முடியாத அளவுக்கு ஒரு பக்கத்துலேந்து இன்னொரு பக்கத்துக்கு பந்த தூக்கி போடணும். நான் புடிச்சிட்டா யாரு போட்டாங்களோ, அவுங்க இந்த இடத்துக்கு வந்துடணும். சரியா?”

“இது குரங்கு பந்து ஆட்டம். எங்களுக்கு தெரியுமே”

“அப்பறமென்ன, ஆடுங்க”

மறுகணமே அவர் நடுவில் நின்றுகொள்ள, நானும் சிவலிங்கமும் நாகராஜனும் ஒருபக்கம் நின்றோம். தண்டபானியும் கிரிதரனும் வடிவேலும் மற்றொரு பக்கம் நின்றார்கள்.

பந்து மாறிமாறிப் பறந்தபடி இருந்தது. பாட்டுக்காரர் தாவித்தாவி முயற்சி செய்தார். ஆனால் அவர் ஒரு பந்தைக்கூட தடுத்துப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவரைக் கடந்து பறந்துபோனது பந்து. அவர் உண்மையிலேயே குரங்கின் உடல்மொழியில் தாவித்தாவி ஏமாந்தார். பந்து தப்பிப் போகும் ஒவ்வொரு முறையும் ஐயையோ என்று கைகளை உதறியபடி தவித்துச் சிரித்தார். அதைப் பார்க்கப்பார்க்க எங்கள் வேகம் கூடியது. கடைசி வரைக்கும் அவர் ஒருமுறை கூட பந்தை கைப்பற்றவே இல்லை. நாங்கள் வெற்றியில் துள்ளிக் குதித்தோம்.

மேடையில் அமர்ந்திருந்தவர்கள் எங்கள் திசையில் கைகாட்டிப் பேசிக்கொள்வதைக் கேட்டேன்.

“எந்த ஊரு இந்த ஆளு? கிறுக்கு மாதிரி இங்க வந்து இந்த புள்ளைங்களோட ஆடிகினிருக்கான்?”

“யாரோ நாடோடி. புள்ள இல்லாதவன்போல. புள்ளைங்கள பாத்ததும் ஏதோ வேகத்துலயும் பாசத்துலயும் ஆடறான்.”

“உடுங்கய்யா, நம்மாலதான் முடியல. யாரோ ஒருத்தன் செய்யறான். சந்தோஷமா செஞ்சிக்கடா சாமினு உட்டுட்டு போவாம, இதயெல்லாமா ஒரு பேச்சுனு பேசுவாங்க?”

எதிர்த்திசையிலிருந்து தண்டபானி பந்து வீசியபோது அது எங்கள் பிடிக்கும் அகப்படாமல் பறந்து சென்று கல்மேடையில் அவர்கள் முன்னால் சென்று விழுந்தது.

“கண்ணுமண்ணு தெரியாம என்னடா ஆட்டம் வேண்டிக் கெடக்குது? அடக்கம் ஒடுக்கமா ஆடுங்க. இல்லைன்னா வால ஒட்ட நறுக்கிடுவன்” என்று எச்சரித்துக்கொண்டே ஒருவர் தன்னிடமிருந்த பந்தை வீசினார்.

அவர் வீசிய வேகத்தில் துண்டின் முடிச்சு தளர்ந்து அவிழ்ந்து இலைகள் விழுந்து சிதறின. காற்றுபோன பந்துபோல நாங்களும் தளர்ந்துவிட்டோம்.

“அடடா, பிரிஞ்சிடுச்சே” என்றபடி அதை எடுத்துக்கொண்டு பாட்டுக்காரருக்கு முன்னால் போய் நின்றேன். எனக்கு மூச்சு வாங்கியது. அவருக்கும் மூச்சு வாங்கியது. நெற்றியிலும் கழுத்திலும் வேர்வை கோடாக அரும்பியது.

”இன்னைக்கு இது போதும். நாளைக்கு பிஞ்சி போகாத அளவுக்கு கெட்டியா பந்து செஞ்சி வைக்கறேன். அதுக்கப்பறம் விளையாடலாம். சரியா?” என்றபடி சாலையோரமாகச் சென்று துண்டை உதறினார். உள்ளேயிருந்த இலைகள் தரையில் சிதறி விழுந்தன.

மறுபடியும் அனைவரும் மேடைக்குச் சென்று அமர்ந்து பேசத் தொடங்கினோம்.

வெப்பம் தாளாமல் அவர் உடலிலிருந்து வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. “புழுக்கத்துல வேர்த்துகினே இருக்குது. எங்கனா ஏரியில கொளத்துல எருமைக்கன்னுக்குட்டி மாதிரி கெடந்தா நல்லா இருக்கும்னு தோணுது” என்றார்.

“இங்க பக்கத்துலதான் ஏரி இருக்குது. அதுல குளிக்கலாம்” என்றான் சிவலிங்கம்.

“ரொம்ப தூரமா?”

“அதெல்லாம் இல்ல. அதோ அங்க பனைமரங்கள் வரிசையா தெரியுது பாருங்க. அதுதான் ஏரிக்கரை”

நான் கைகாட்டிய இடத்தை அவர் அப்போதே திரும்பிப் பார்த்துவிட்டார்.

“இப்ப கோடை காலமாச்சே. தண்ணி இருக்குதா?”

“எங்க ஊர் ஏரியில எல்லா காலத்துலயும் தண்ணி இருக்கும்”

“அப்ப கெளம்புங்க போவலாம்” அவர் சட்டென்று ஆர்மோனியத்தைக் கட்டி பைக்குள் வைத்தார். நான் அந்தப் பையை கையை நீட்டி வாங்கி என் கழுத்தில் முன்பக்கமாக தொங்கும்படியாக மாட்டிக்கொண்டேன். சிவலிங்கம் இரண்டாவது பையை எடுத்துக்கொண்டான்.

பாட்டுக்காரர் முன்னால் செல்ல, நாங்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.

“ஆளு பெரிய மாயக்காரனா இருப்பான்போல. ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு புள்ளைங்களைலாம் வாரி தூக்கி தோள்மேல வச்சிகிட்டான்.”

“எந்த ஊருகாரன்னு கூட தெரியல. இங்க வந்ததுமே இங்கயே நாலஞ்சி பரம்பரயா வாழற ஆளுமாதிரி நடந்துக்கறான்.”

மேடையில் அமர்ந்தவர்கள் தமக்குள் எதைஎதையோ பேசிக்கொண்டார்கள்.

ஏரி கடல்போல விரிந்திருந்தது. காற்றில் படபடத்து நெளியும் பட்டாடைபோல சிற்றலைகள் அசைந்தபடி இருந்தன. கரையை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஏராளமான புதர்கள். ”ஐயோ, இவ்வளவு தண்ணியா? இந்த வெயில் காலத்துலயும் இந்த மாதிரி தண்ணிய பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்குது” என்றார் பாட்டுக்காரர்.

கரைக்குச் சென்றதும் எல்லோரும் ஆடைகளைக் களைந்தார்கள். பாட்டுக்காரரின் பைகள் இறக்கிவைக்கப்பட்டன. எல்லோரும் வேகவேகமாக ஆடைகளைக் களைந்த சமயத்தில் நான் அமைதியாக நின்றிருந்தேன்.

“ஏன் தம்பி, நீ குளிக்க வரலையா?” என்று கேட்டார் பாட்டுக்காரர்.

“எனக்கு நீச்சல் தெரியாது.”

“ஓ. அப்ப பாட்டுதான் தெரியும். நீச்சல் தெரியாதா?”

“நான் இந்த துணிமணிங்க, பொட்டி எல்லாத்தயும் பாத்துகிட்டு கரையிலயே இருக்கறேன். நீங்க எல்லாரும் சீக்கிரமா குளிச்சிட்டு சீக்கிரமா வாங்க”

அவர்கள் ஒவ்வொருவராக ஏரிக்குள் தாவினார்கள். பாட்டுக்காரர் மல்லாந்து படுத்துக்கொண்டு கைகளை விரித்து நீந்தியபடி வட்டமடித்தார். அதைப் பார்த்ததும் சிவலிங்கமும் மற்றவர்களும் அவரைப் போலவே நீந்திக்கொண்டு அவரோடு வட்டமடித்தார்கள்.

நாகராஜன் மட்டும் தனியாகக் கரைக்கு நீந்திவந்து ஆலமரத்தின் மீதேறி தண்ணீர்ப்பரப்பின் மீது தாழ்வாக வளைந்து சென்ற கிளையின் மீது நடந்து சென்று அங்கிருந்து செங்குத்தாக தண்ணீருக்குள் குதித்தான். உடனே ஊற்றென தண்ணீர் மேலே பொங்கித் தணிந்தது. பாட்டுக்காரர் கைதட்டிச் சிரித்தார். நாகராஜன் தண்ணீருக்குள்ளேயே நீந்தி அவருக்கு அருகில் சென்று நின்றான்.

சிவலிங்கமும் கிரிதரனும் தண்டபானியும் வடிவேலும் ஒவ்வொருவராக கரைக்கு வந்து நாகராஜனின் வழியைப் பின்பற்றி ஆலமரத்தில் ஏறி கிளையில் நடந்து சென்று ஒவ்வொருவராக எம்பிக் குதித்தார்கள்.

சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் தண்ணீருக்குள்ளேயே பிடிக்கிற ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதுபோலத் தெரிந்தது. ஒவ்வொருவராக தண்ணீருக்குள் மூழ்கி மறைய ஒருவர் மட்டும் ஆளைத் தேடி நான்கு திசைகளிலும் அலைந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் நீச்சலைக் கற்றுக்கொள்ளாமல் போனோமே என்று மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதையெல்லாம் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று தொடக்கத்திலேயே தடுத்துவிட்ட அம்மாவின் மீது கோபமாக வந்தது.

தண்ணீருக்குள் யாரோ ஒருவர் அகப்பட்டுவிட்டார். ஓவென்ற சத்தத்திலிருந்து உணரமுடிந்தது. பாட்டுக்காரர் சின்னப் பையனைப்போல எல்லோருக்கும் நடுவில் நீந்திக்கொண்டிருந்தார்.

கண்கள் சிவக்கச்சிவக்க நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒவ்வொருவராக கரைக்கு வந்து சட்டையாலேயே ஈரத்தைத் துடைத்துக்கொண்டு, பிறகு அதையே உதறிவிட்டு அணிந்துகொண்டார்கள். நான் ஆர்மோனியப் பெட்டியை வைத்திருக்கும் பையை கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.

ஏரிக்கரையில் இறங்கும் நேரத்தில் சிவலிங்கம் என்னைப் பார்த்து “டேய், இந்த ஆர்மோனியப் பொட்டிய கழுத்துல தொங்க உட்டுகினு நடக்கும்போது எப்பிடி இருக்குது தெரிமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

“எப்பிடி இருக்குது?” நான் ஆச்சரியத்தோடு அவன் பக்கம் திரும்பினேன்.

“நாடோடி படத்துல இந்த மாதிரிதான் ஒரு பொட்டிய கழுத்துல மாட்டிகினு எம்ஜியாரு பாட்டு பாடுவாரு”

“டேய்..” ஆட்காட்டி விரலை அவனை நோக்கி நாணத்துடன் அசைத்தேன்.

“நாடு, நாடு, அதை நாடு, அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு?”

“சிவலிங்கம், இப்ப நீ அடிவாங்க போற?”

“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு, மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

நான் அவனைப் பார்க்கவே இல்லை. அவன் பாடுவது எதுவும் என் காதில் விழவே இல்லை என்பதுபோல எங்கோ வேறு திசையில் பார்த்தபடி நடந்தேன்.

பாட்டுக்காரர் சிவலிங்கத்தின் தோளைத் தொட்டு “நீயும் சின்ன பையன்தான? கிண்டல் போதும் விடு. சங்கீதம் கத்துக்கறதுக்கு முன்னால நாம கத்துக்க வேண்டிய விஷயம் இங்கிதம். தெரியுதா?” என்றார்.

அக்கணமே அவன் ஏற்றுக்கொள்வதுபோன்ற புன்னகையுடன் தலையசைத்து நிறுத்திவிட்டான். பிறகு நாணத்துடன் தலைகுனிந்தான்.

கல்மேடைக்கு வந்ததும் ஆர்மோனியப்பெட்டியை இறக்கி வைத்தேன். அவர் அதை துணியில் வைத்துச் சுருட்டி தன் பைக்குள் வைத்துக்கொண்டார்.

“என்னடா வானரங்களா, ஆட்டத்துல யாருக்கும் பசிக்கலயா? வீடுன்னு ஒன்னு இருக்கறதயே மறந்துட்டிங்களா?”

கிழங்கு விற்கும் ஆயா குரல் கொடுத்த பிறகுதான் எங்களுக்கு வீட்டின் நினைவே வந்தது. உடனே மேடையிலிருந்து கீழே குதித்தோம்.

“சாய்ங்காலமா வெயில் அடங்கனதுமே வந்துருவேன், நீங்க இங்கயே இருப்பீங்களா?” என்று பாட்டுக்காரரிடம் கேட்டேன்.

“ஏன் ஆனந்தா, என்ன சங்கதி?”

“அடுத்த வருஷம் பாட்டுப்போட்டியில பாடறதுக்கு எனக்கு ஒரு நல்ல பாட்டு சொல்லிக் கொடுக்கறீங்களா?”

“ஒன்னு என்ன? ரெண்டாவே சொல்லிக் கொடுக்கறன். போய்வா ஆனந்தா”

அதைக் கேட்டதும் எனக்கு போட்டியில் அப்போதே வென்று பரிசைத் தட்டிக்கொண்டு வந்துவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

பாட்டுக்காரர் தானாகவே அருகில் நின்றிருந்த மற்றவர்களிடம் “உங்களுக்கும் கத்துக்கணுமா?” என்று கேட்டார். அவர்கள் உடனே ”ம்ஹூம்” என்று தலையசைத்தார்கள். “பாட்ட காதால கேக்கறதோட சரி. அதுக்கு மேல எந்த ஆசையும் இல்ல”

“ஏன்?”

“நமக்குலாம் ஃபுட் பால், பேஸ்கெட் பால், வாலி பால் மட்டும்தான். இறைக்க இறைக்க ஓடணும். குனியனும். நிமிரணும். மூச்ச இழுத்துக் கட்டி பாடறதுலாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று தோளைக் குலுக்கினார்கள்.

பாட்டுக்காரர் சிரித்துக்கொண்டார். செல்லமாக அவர்கள் முதுகில் தட்டினார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். நாகராஜனும் கிரிதரனும் அக்ரகாரத்தின் பக்கம் செல்ல வடிவேலுவும் தண்டபானியும் மேட்டுத்தெருவின் பக்கமாகச் சென்றார்கள். நானும் சிவலிங்கமும் ஸ்டேஷன் தெருவில் இறங்கி நடந்தோம்.

வீட்டுக்குச் சென்று திண்ணையில் உட்காரும்போதே வீட்டுக்குள்ளிருக்கும் அம்மாவை அழைத்து “காலையில மெட்ராஸ் ரயில் போவற நேரத்துக்கு போன ஆளு இப்பதாம்மா உள்ள வரான். எங்க போய் வரான்னு வந்து கேளும்மா. வேப்பூரானாட்டம் எங்கயோ சுத்தி அலஞ்சிட்டு வந்திருக்கான் பாரு” என்று சத்தமுடன் சொன்னாள் அக்கா.

அம்மா வெளியே வந்து “வெயில்ல சுத்தாத, வெயில்ல சுத்தாதனு ஒனக்கு எத்தன தரம்டா சொல்றது? கருத்து கருவாடுமாதிரி வந்து நிக்கற? எங்க போன?” என்றாள்.

“எங்கயும் போவலைம்மா. அங்கதான் அரசமரத்துங்கிட்ட பசங்களோட நெழல்லதான் ஆடிகினிருந்தன்.”

நான் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன். தட்டில் சோற்றைப் பார்த்ததுமே பசித்தீ கொழுந்துவிட்டெரிந்தது. நெத்திலி மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டு முடித்தேன்.

“அம்மா, இன்னும் கொஞ்சம் சோறு”

“மீன் குழம்புன்னா ஒன் கொடலு கூட ரெண்டடி நீண்டு போய்டுமே?”

அம்மா சிரித்துக்கொண்டே வந்து சோற்றை வைத்து குழம்பூற்றினாள். “தாராளமா ஊத்தும்மா” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். “கொஞ்சமாச்சிம் வெக்கம் இருக்குதா பாரு, ஒம் புள்ளைக்கு? என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல உட்டுருவான்” என்று திண்ணையிலிருந்தே பழித்தாள் அக்கா.

கைகழுவிக்கொண்டு திண்ணைக்கு வரும்போதே அம்மா என்னை மடக்கி பக்கத்தில் உட்காரவைத்தாள். “எங்கயும் போயிடாத ராசா? அரிசியும் உளுந்தும் நெறய வந்திருக்குது அரைக்கறதுக்கு. நீதான் அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசயா ஏந்திரம் சுத்தணும்” என்றாள்.

“ஏன் அக்காவுக்கு என்னாச்சி? நல்லா உலக்கை மாதிரிதான இருக்குது” நான் அவளைப் பார்த்தேன். திண்ணையில் குறுக்காக ஒரு உலக்கையை வைத்துவிட்டு அதன் மறுபக்கத்தில் அவள் பாயில் படுத்திருந்தாள்.

“அவளால ஒக்காந்து அரைக்கமுடியாதுடா தங்கம். அம்மா சொல்ற பேச்ச கேளுடா”

“சரி சரி, சுத்தறன். ரொம்ப கொஞ்சாத. ஆனா அஞ்சி மணிக்குலாம் என்ன விட்டுடணும். அங்க வெளயாடறதுக்கு பசங்க வந்து காத்திட்டிருப்பானுங்க”

சாக்கையும் செய்தித்தாட்களையும் விரித்து அதன் மீது எந்திரத்தையும் உருட்டிச் சென்று வைத்துவிட்டு அம்மா எனக்காகவே காத்திருந்தாள். நான் அக்காவைப் பார்த்து முணுமுணுத்தபடி எந்திரத்தின் அச்சைப் பிடித்து சுற்றத் தொடங்கினேன். அம்மா அரிசியை சீராக குழிக்குள் போட்டபடி இருந்தாள்.

எல்லாவற்றையும் மாவாக்கி, பைகளில் நிரப்பி ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் சென்று கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது. சாமிக்கண்ணுக் கவுண்டர் வீட்டைக் கடக்கும்போது குனிந்து அவர் வீட்டுக் கடிகாரத்தில் மணி பார்த்தேன். இரண்டு முள்களும் சேர்ந்து ஒரே குத்துக்கோடாக தெரிந்தது. மணி ஆறு.

கால்களில் ஒட்டியிருந்த மாவுப்புழுதியை எல்லாம் கழுவித் துடைத்துவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். நெருங்க நெருங்க ஆர்மோனியத்தை இசைக்கும் சத்தம் கேட்டது. நண்பர்கள் ஐந்து பேரும் அங்கே நிற்பதைப் பார்த்தேன். ஓட்டமாக ஓடி மேடை மீது ஏறி நின்றேன். ஆர்மோனியத்தின் மீது பாட்டுக்காரரின் விரல்கள் தன்னிச்சையாக படர்ந்தபடி இருக்க அவர் பிள்ளையாரையே பார்த்துக்கொண்டிருந்தார். பிள்ளையாரின் முன்னிலையில் ஓர் அகல்விளக்கு எரிந்தது. ’சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே’ என்று மனமுருகிப் பாடிக்கொண்டிருந்தார் அவர். நான் சிவலிங்கத்துக்கு அருகில் நின்று ”எத்தனாவது பாட்டு?” என்று சைகையால் கேட்டேன். “இதான் முதல் பாட்டு” என்று அவனும் சைகையாலேயே பதில் சொன்னான். நான் பாட்டின் இனிமையில் மூழ்கத் தொடங்கினேன். மேடையில் எங்கள் ஆறு பேரைத் தவிர கிழங்கு விற்கும் ஆயாவும் இன்னும் இரண்டு ஆண்களும் நின்றிருந்தனர். மேட்டுத் தெருவிலிருந்து இரண்டு கிழவர்கள் மெதுவாக நடந்து வந்து சேர்ந்துகொண்டார்கள்.

நான் பாட்டுக்காரரின் கண்களைப் பார்த்தேன். கனிவும் பக்தியும் கலந்த பார்வை. அவர் இந்த உலகத்திலேயே இல்லை. முதல் பாட்டு முடிந்ததுமே ’ஆனை முகத்தான், அரன் ஐந்து முகத்தான் மகன், ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்’ என அடுத்த பாட்டைத் தொடங்கிவிட்டார் அவர். அகல்விளக்கின் சுடரொளியில் பிள்ளையாரின் தந்தத்தின் மேட்டிலும் நெற்றியிலும் பளீரென மின்னுவதுபோல ஒரு கோடு படிந்திருந்தது.

தற்செயலாக என் பார்வை திரும்பிய சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து நந்தகுமாரை துணைக்கு அழைத்துக்கொண்டு ருக்மிணி மாமி வருவதைப் பார்த்தேன். அவர் கல்மேடையை நெருங்கி படிக்கட்டு வழியாக மேடையில் ஏறி பிள்ளையாருக்கு முன்னால் நின்று கைகுவித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு தற்செயலாகத் திரும்பும்போது என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினாள். புன்னகையுடன் நான் மாமிக்கு வணக்கம் சொன்னேன். நந்தகுமாரின் உதடுகளிடையில் ஒரு கோடுபோல புன்னகை பரவி விரிந்தது.

ஆர்மோனியத்தின் இசை மட்டுமே சில கணங்கள் நீடித்தன. மேல்கட்டைகளை மாறிமாறி அழுத்தியபடி அவர் வேறொரு பாட்டை யோசிப்பதுபோலத் தோன்றியது. அடுத்த கணமே அவர் ‘ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் லம்போதரம் விசாலாட்சம் வந்தேம் கணநாயகம்’ என்று தொடங்கினார். அந்த அமைதியான பொழுதில் அவர் குரல் எங்கெங்கும் பரவி நிறைந்தது. அக்ரகாரத் தெருவிலிருந்து இன்னும் சிலர் வந்து கூட்டத்தில் நின்றார்கள்.

பாட்டு முடிந்ததன் அடையாளமாக அவர் தன் தோளிலிருந்து ஆர்மோனியத்தைக் கழற்றி கீழே வைத்தார். ருக்மிணி மாமி தன் பூசைப் பையிலிருந்து ஒரு துண்டு கற்பூரத்தை எடுத்து பிள்ளையாருக்கு முன்னால் வைத்து ஏற்றினாள். தீபம் சுடர்விட்டு எரியும்போது அனைவரும் கண்மூடி வணங்கினார்கள். கற்பூரம் எரிந்து முடிந்ததும் ஒவ்வொருவராக பிள்ளையார் முன்னால் விழுந்து வணங்கிவிட்டு இறங்கி நடந்தார்கள். ”ரொம்ப நன்னா பாடறேள். கேக்கறச்சே பகவானே பக்கத்துல வந்து நின்னாப்புல தோணித்து. மனசு அப்படியே அடங்கி சாந்தமாய்டுத்து. தட்டாம இத நீங்க வாங்கிக்கணும்” என்றபடி ருக்மிணி மாமி தன் பையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து பாட்டுக்காரரிடம் கொடுத்தார். பாட்டுக்காரர் அதை புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டார். கிழங்குக்கார ஆயா, கூடையில் எஞ்சியிருந்த கிழங்குகளை ஒரு மந்தாரை இலையில் வைத்து எடுத்து வந்து பாட்டுக்காரரிடம் கொடுத்தாள். அவர் அதையும் வாங்கி வைத்துக்கொண்டார். எங்களைத் தவிர ஒவ்வொருவராக அனைவரும் அங்கிருந்து கலையத் தொடங்கினார்கள்.

இருள் கவியத் தொடங்கியது. யாரோ ஒருவர் கோவில் வாசலிலிருந்து இறங்கி வந்து பாட்டுக்காரரிடம் “அங்க கோவில் வாசலுக்கு வந்து பாடணுமாம். சொல்லி அனுப்பனா” என்றார். பாட்டுக்காரர் அவரை நிமிர்ந்து பார்த்து “நான் முடிச்சிட்டேனே. இதுக்கு மேல என்ன பாட்டு?” என்று கேட்டார். அவருக்குப் புரியவில்லை. சிறிது நேரம் தடுமாறினார். சரியாகச் சொல்லவில்லையோ என நினைத்து “அங்க வந்து பாடினா நன்னா இருக்கும்னு சொன்னா. ஏதாச்சிம் குடுக்கச் சொல்றேன். வாங்கோ” என்றார். பாட்டுக்காரர் பதிலே சொல்லவில்லை. அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே “போ போ” என்றபடி சைகை செய்தார். அவர் அதை நம்பமுடியாதவராக விலகிச் சென்றார்.

முற்றிலும் இருள் கவிந்துவிட்டது. ”பிள்ளைகளா, கெளம்புங்க. இருட்டிடுச்சி. இனிமே நீங்க இங்க இருக்கவேணாம்” என்று எங்களிடம் சொன்னார் பாட்டுக்காரர். பிறகு ஒரு பழம், ஒரு கிழங்கை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை எங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

”எங்க படுத்துக்குவிங்க நீங்க?” என்று பீதியுடன் அவரிடம் கேட்டேன்.

“இங்கதான். பிள்ளையாருக்கு பக்கத்துலயே” என்றபடி அவர் புன்னகைத்தார். என் தோள் மீது கை வைத்து “ஒனக்காக ஒரு பாட்டு யோசிச்சி வச்சிருக்கேன். நாளைக்கு சொல்லித் தரேன்” என்று சொன்னார். அதைக் கேட்டு எனக்குள் சற்றே ஏமாற்றம் படர்ந்தாலும் புன்னகையுடன் சரி என்று தலையசைத்துக்கொண்டேன்.

“இங்க தனியா படுக்க ஒங்களுக்கு பயமா இருக்காதா?”

“நான் தனியா இருப்பேன்னு யாரு சொன்னா? இந்த மரம், இந்த செடி, இந்த மேடை, இந்த பிள்ளையார் எல்லாருமே எனக்கு துணையா இருப்பாங்க. எனக்கு ஒன்னும் பயமில்லை. போய் வாங்க”

மறுநாள் காலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பழைய சோற்றைச் சாப்பிட்டுவிட்டு சட்டை மாற்றிக்கொண்டு கிளம்பினேன். “தொர எங்க கெளம்பிட்டாரு? எந்த ஆபீஸ்ல கையெழுத்து போடப் போறாரு?” என்று கேட்டாள் அக்கா. “நா எங்க போனா ஒனக்கென்ன? நான் ஒன் வழிக்கு வரலை. நீயும் என் வழிக்கு வராத” என்று கறாராகச் சொன்னேன். அவள் உடனே “அம்மா, இங்க வந்து பாரு. எங்கடா போறன்னு கேட்டா ஒனக்கென்னன்னு கேக்கறான்” என்று சத்தம் போட்டு அம்மாவை வரவழைத்துவிட்டாள். “என்னடா சத்தம்? ஒங்க ரெண்டு பேருக்குள்ள என்னடா ஒரே போராட்டமா இருக்குது” என்றபடி அம்மா வந்து நின்றாள்.

“எங்கடா கெளம்பிட்ட?” என்று அம்மா கேட்டாள்.

“வெளயாடறதுக்கும்மா. தண்டபானிலாம் வந்து அங்க காத்துகினிருப்பாங்க. நேத்து சாய்ங்காலமே போவலாம் போவலாம்ன்னு ஆறுமணிக்கு அனுப்பன. அதுக்குள்ள அவுங்கள்லாம் ஆடி முடிச்சிட்டாங்க தெரியுமா?” சொல்லிக்கொண்டு வரும்போதே எனக்கு தொண்டை அடைத்தது. அம்மா ஒன்றும் பேசமுடியாமல் திகைத்து நின்றாள்:.

“சரி சரி போடா. போய்ட்டு சாப்பாட்டு நேரத்துக்கு சரியா வந்துரு.”

நான் தலையசைத்துவிட்டு ஓரக்கண்ணால் அக்காவுக்கு அழகு காட்டிவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். தொலைவிலிருந்து பார்க்கும்போதே பாட்டுக்காரரும் மற்றவர்களும் சேர்ந்திருக்கும் காட்சி தெரிந்தது. நான் வேகமாகச் சென்று சிவலிங்கத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன்.

“இன்னைக்கு காலையிலயே அவர் ஏரியில குளிச்சாராம்டா. இந்தக் கரையிலேந்து அந்தக் கரை வரைக்கும் போய் வந்தாராம்” சிவலிங்கம் ஆச்சரியத்தைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் சொன்னான். நான் “அப்படியா?” என்று கேட்டபடி பாட்டுக்காரரை நோக்கித் திரும்பினேன். “தம் கட்டி நீச்சலடிச்சிகினே போய்ட்டேன். நான் பார்க்காத ஏரியா ஆறா?” என்றார் அவர்.

“அப்ப மத்யானம் குளிக்க முடியாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் சிவலிங்கம்.

“யாரு சொன்னா? ஏரியில காலையில குளிச்சவங்க மத்தியானம் குளிக்கக்கூடாதுனு சட்டம் ஏதாச்சிம் இருக்குதா என்ன? நாம எல்லாருமே போய் மத்யானம் குளிக்கறோம். சரிதானா?”

ஏ என்று மகிழ்ச்சியில் எல்லோரும் சத்தமிட்டோம். அவர் தன் பையிலிருந்து புதிதாக அவர் செய்து வைத்திருந்த பந்து உருளையை எடுத்து வெளியே வைத்தார். உருண்டையாக அது அழகாக பந்து போலவே இருந்தது.

“சரி, இப்ப பந்து விளையாடலாமா, ஆனந்தனுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கலாமா?”

நான் உடனே “பாட்டு பாட்டு” என்றேன். மற்றவர்கள் “பந்து பந்து “ என்றார்கள். அவர் சிரித்துக்கொண்டார். “சரி, ஒரு சின்ன பாட்டுதான். அவன் கத்துகிடட்டும். அப்பறமா ஆடலாம்” என்றபடி என்னைப் பார்த்தார்.

நாங்கள் அவர் முன்னால் நெருங்கி உட்கார்ந்தோம். அவர் “தீராத விளையாட்டு பிள்ளை’ என்று தொடங்கினார். அவர் ஒவ்வொரு சரணமாகப் பாடி முடித்ததும் நான் அதைத் திருப்பிப் பாடினேன். மிக எளிய சொற்கள். இரண்டு முறை மீண்டும் மீண்டும் பாடியதுமே மனத்தில் பதிந்துவிட்டது. பழத்தைக் கொடுத்துவிட்டு தட்டிப் பறிக்கிற காட்சியையும் எட்டாத உயரத்தில் தின்பண்டங்களை வைத்துவிட்டு ஏமாற்றும் காட்சியையும் அந்த விவரிப்பிலேயே உணர முடிந்தது. ”இவ்ளோ போதும். இந்தப் பாட்டு ரொம்ப நீளமான பாட்டு. நீ சின்ன பையன்தான? உனக்கு அவ்ளோ வேணாம். சுருக்கமா போதும். சரியா?” என்றபடி அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார்.

பாட்டை முடித்ததுமே நாங்கள் பந்து விளையாடத் தொடங்கினோம். பந்துக்காக எம்பிக் குதிக்கும்போதெல்லாம் எனக்கு தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்’ என்னும் வரியே மனத்தில் ஓடியது. அந்தப் பண்டத்துக்கு எம்பிக் குதிப்பவனாகவே நான் என்னை நினைத்துக்கொண்டேன்.

பந்து விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்போதே மேட்டுத் தெருவிலிருந்து ஒரு ஆயா வந்து பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னாள். அவளுக்குப் பின்னால் ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் முகம் சற்றே கோணலாகி வேறொரு திசையில் பார்ப்பதுபோல இருந்தது.

“என்ன ஆயா?”

ஆயா ஒரு பதிலும் சொல்லாமல் சட்டென்று வளைந்து பாட்டுக்காரரின் பாதங்களில் விழுந்துவிட்டாள். ”ஆயா, என்ன செய்றீங்க? ஏந்திருங்க ஏந்திருங்க” என்றபடி அவளைத் தொட்டு தூக்கி நிறுத்தினார் பாட்டுக்காரர்.

“சாமி, இது என் பேரப்புள்ள சாமி. அம்மா அப்பா இல்லாத புள்ள சாமி. மூள சரியில்ல. நின்னா நின்ன இடம். உக்காந்தா உக்காந்த இடம். அவன் யாருக்கும் சம்பாதிச்சி கிம்பாதிச்சி கொட்ட தேவல. அவன் வேலய அவனா பாத்துக்கற அளவுக்கு கொஞ்சம் மூள இருந்தா போதும் சாமி. நீங்கதான் அவனுக்கு ஒரு வழிய காட்டணும்” ஆயா அழுதுகொண்டே மீண்டும் அவர் காலில் விழப்போனாள்.

பாட்டுக்காரரின் முகத்தில் ஒரு வேதனை படர்ந்தது. ஒன்றும் பேச முடியாமல் ஒருகணம் தலை குனிந்திருந்தார். ஆயாவுக்குப் பின்னால் நின்றிருந்த சிறுவனுக்கு அருகில் சென்று அவனை அணைத்துத் தழுவி முத்தம் கொடுத்தார்.

”அம்மா, நீங்க ஒரு நல்ல வைத்தியர பாருங்கம்மா. அவராலதாம்மா இத குணப்படுத்த முடியும். நான் வெறும் பாட்டுக்காரன். நான் என்னம்மா செய்யமுடியும்?”

“அப்படி சொல்லாதீங்க சாமி. நீங்க பாடனா சாமிக்கு கேக்கும். இந்த புள்ளைக்காக நீங்க சாமிகிட்ட ஒரு பாட்டு பாடணும்.”

அவர் அதைக் கேட்டு பெருமூச்சு விட்டார்.

“சரி, நான் பாடறன். ஆனா நீங்க நல்ல வைத்தியருகிட்ட காட்டணும். அத செய்விங்கன்னு சொன்னாதான் நான் பாடுவேன்”

“செய்றன் சாமி. நிச்சயமா செய்றன்”

பாட்டுக்காரர் அந்தச் சிறுவனை தூக்கிக்கொண்டு கல்மேடைக்குச் சென்றார். பிள்ளையார் முன்னால் உட்காரவைத்துவிட்டு ஆர்மோனியப் பெட்டியை எடுத்தார். அவர் கண்கள் தளும்புவதை என்னால் பார்க்க முடிந்தது. துருத்தியை அழுத்தி கட்டைகளை மீட்டி சுரங்களை எழுப்பினார். ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ’ என்று பாடத் தொடங்கினார். அதைப் பாடி முடிக்கும்போது எல்லோருடைய விழிகளிலும் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக அவர் ‘எங்கு நான் செல்வேன் ஐயா நீர் தள்ளினால் எங்கு நான் செல்வேன் ஐயா’ என்று தொடங்கிவிட்டார். அதையும் முடித்து ‘தசரதாத்மஜம்’ பாடிய பிறகே நிறுத்தினார். அங்கிருந்த திருநீற்றை எடுத்து சிறுவனின் நெற்றியில் பூசிவிட்டார்.

ஆயா தன் பையிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவர் காலடியில் வைத்துவிட்டு வணங்கிய பிறகு சிறுவனை அழைத்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கினார். மேட்டுத்தெருவிலிருந்து இருபது முப்பது பேர்களுக்கும் மேற்பட்ட ஒரு கூட்டம் வந்து அங்கு நின்றிருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.

அவர்கள் அனைவரும் ஒரே குரலில் “ஐயா, எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க ஐயா” என்று கேட்டனர். அதைக் கேட்டு அவர் முகத்தில் சற்று முன்னர் திரண்டிருந்த துயரம் மறைந்து புன்னகை அரும்பியது.

“பாட்டுதான? இதோ பாடறேன்” என்றபடி ஆர்மோனியத்தை மீட்டத் தொடங்கினார். அந்த மீட்டல் ஒரு தாளமாக மாறிய கணத்தில் ‘பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது’ என்று பாடல் வரியை இணைத்துக்கொண்டார்.

பாட்டு முடிந்ததும் அனைவரும் நின்ற இடத்திலேயே பாட்டுக்காரரைப் பார்த்து கும்பிட்டபடி தரையில் விழுந்து வணங்கினர். ஒரு சொல்லும் இல்லாமல் பாட்டுக்காரர் அனைவரையும் பார்த்து தலைதாழ்த்தி வணங்கினார். பிறகு ஆர்மோனியப் பெட்டியை இறக்கி துணிக்குள் வைத்து மூடி பைக்குள் வைத்தார். நான் அதை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.

”பிள்ளைகள் ரொம்ப நேரமா நீச்சலடிக்கறதுக்கு எனக்காக காத்திட்டிருக்காங்க. நான் கெளம்பறேன்?” என்று சொல்லிவிட்டு எங்களோடு வேகவேகமாக ஏரிக்கரைக்கு நடந்தார். மேட்டுத்தெரு மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

போன வேகத்தில் அனைவரும் ஆடைகளைக் களைந்துவிட்டு ஏரிக்குள் இறங்கிவிட்டனர். ஒரே கொண்டாட்டம்.

“உண்மையாவே காலையில நீங்க அந்தக் கரை வரைக்கும் போனீங்களா?” என்று சத்தமாகக் கேட்டான் சிவலிங்கம்.

“ஆமா”

“நடு ஏரில ரொம்ப ஆழமா?”

“ஆமா”

“இப்ப இன்னொரு தரம் போவலாமா?”

“இப்ப வேணாம். வெயில்ல உடம்பு சோர்ந்து போயிடும்.”

அவர்கள் முகம் வாட்டமடைவதைப் பார்த்துவிட்டு “இப்ப நான் உங்களுக்கு ஒரு வேடிக்க செஞ்சி காட்டறன், வாங்க” என்றார்.

வேடிக்கை என்றதும் அவர்கள் முகம் மலர்ந்தது.

“இங்க பாருங்க, நான் இங்க முழுகி அதோ அங்க எழுந்திருப்பேன். பாக்கறீங்களா?” என்று கேட்டார். “உண்மையாவா?” என்று வாயைப் பிளந்தான் வடிவேலு.

“இப்ப பாரு” என்றபடி அவர் தண்ணீருக்குள் முழுகினார். அவர் எந்தப் பக்கம் சென்றிருப்பார் என எல்லோரும் திகைத்துக்கொண்டிருக்கும் போது அவர் ஏற்கனவே சொன்ன புள்ளியில் தண்ணீருக்கு மேலே வந்தார். அதே போல மீண்டும் அங்கே மூழ்கி இந்தப் புள்ளிக்கு வந்து தண்ணீருக்கு மேலே எழுந்தார்.

கண்கள் சிவக்கும் வரைக்கும் தண்ணீருக்குள்ளேயே கிடந்துவிட்டு அவர்கள் மெதுவாக கரைக்கு வந்தார்கள்.

கல்மேடைக்கு வந்ததும் எங்களுக்கு அவர் ஒரு கதையைச் சொன்னார். அதற்குப் பிறகு பையிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து ஆளுக்கொன்று கொடுத்தார்.

மதிய உணவுக்காக அனைவரும் அவரவர் வீட்டுக்குப் பிரிந்து செல்ல, நானும் சிவலிங்கமும் பேசிக்கொண்டே ஸ்டேஷன் தெருவில் இறங்கி வீட்டுக்கு நடந்தோம்.

திண்ணையில் உலக்கையைத் தடுப்பாக்கி மறுபக்கத்தில் அக்கா திண்ணையில் சாய்ந்தபடி தனியாக பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தாள்.

”என்னக்கா, ஒத்தையில நீயே பல்லாங்குழி ஆடிக்கற?”

சத்தத்தைக் கேட்ட பிறகே அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். சலிப்போடு “என்ன செய்யமுடியும் தம்பி, நீ எப்ப பார்த்தாலும் கூட்டாளிங்க கூட்டாளிங்கன்னு ஏரிக்கரை பக்கமா ஓடிடற? என் கூட வேற யாரு இருக்காங்க ஆடறதுக்கு?” என்று கேட்டாள்.

அவள் பதிலை நான் பொருட்படுத்தவில்லை. அவளிடம் அடங்கிய குரலில் “இன்னைக்கு நான் ஒரு பாட்டு கத்துட்டு வந்திருக்கேன் தெரியுமா?” என்றேன்.

அவள் ஆர்வத்தோடு “பாட்டா, என்னடா பாட்டு?” என்று கேட்டாள்.

“தீராத விளையாட்டு பிள்ளை”

“அப்படின்னா?” என்று என்னை கிண்டலுடன் பார்த்தாள்.

அவளுக்கு முதல் இரண்டு வரிகளை மட்டும் பாடிக் காட்டிவிட்டு “புடிச்சிருக்குதா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லா இருக்குதுடா தம்பி. ரேடியோவுல பாடறமாதிரி இருக்குது.”

“நாளைக்கி உனக்கு முழுசா பாடிக் காட்டறேன்” என்று சொல்லிவிட்டு “அம்மா அம்மா” என்று ஆவலோடு அழைத்தபடி வீட்டுக்குள் சென்றேன்.

அதற்குள் அக்கா வாசலிலிருந்தே “அம்மா இல்லைடா. தேவி அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க. அங்க தட்டுல சோறு போட்டு மூடி வச்சிருக்காங்க பாரு. நீயே எடுத்து வச்சிகினு சாப்புடு” என்று சொன்னாள். “சரி சரி” என்று பதில் சொல்லிவிட்டு கைகழுவிக்கொண்டு வந்து சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்தேன்.

திண்ணைக்கு வந்து அக்காவுடன் பல்லாங்குழி விளையாடினேன். “டேய், அந்த பாட்ட இன்னொரு தரம் பாடிக் காட்டுடா” என்று கேட்டாள் அக்கா. நான் விளையாடிக்கொண்டே அந்தப் பாட்டின் மூன்று சரணங்களையும் பாடிக் காட்டினேன். “டேய் தம்பி, உண்மையிலயே நீ ரொம்ப நல்லா பாடறடா” என்றாள் அக்கா. அம்மா ஒரு கூடையில் கேழ்வரகோடு வீட்டுக்கு வந்தாள்.

மாலை பொழுது இறங்கியதும் நான் கல்மேடைக்குச் சென்றேன். பிள்ளையாருக்கு எதிரில் ஏராளமான பூக்கள் குவிந்திருந்தன. செம்பருத்தி. நந்தியாவட்டை. மகிழம்பூ. அல்லி. அஞ்சுமல்லி. மூன்று தெருக்களைச் சேர்ந்தவர்கள் பலரும் ஏதோ ஊர்ப்பஞ்சாயத்துக்குக் கூடியிருப்பதைப்போல மேடைக்கு அருகில் நிறைந்திருந்தார்கள். சிலர் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் மரத்தடிகளில் நின்றிருந்தார்கள். அனைவரும் அமைதியாக பாட்டுக்காரரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னால் கல்மேடைக்கு அருகில் செல்லமுடியவில்லை. மேடையில் தண்டபானி, சிவலிங்கம், நாகராஜன் அனைவரும் நிற்பதைப் பார்த்ததும் பிந்திவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்வது என்று தவிப்போடு சுற்றுமுற்றும் பார்த்தேன். அதற்குள் பாட்டுக்காரர் என்னைப் பார்த்துவிட்டார். பக்கத்தில் வா என்பதுபோல கையை அசைத்தார். அதைக் கேட்ட பிறகே எனக்குள் நிம்மதி பிறந்தது. அங்கே அமர்ந்தவர்களின் தோள்களைத் தொட்டுத் தொட்டு நடுவில் வழியை உருவாக்கிக்கொண்டு நடந்து சென்று மேடைக்குச் சென்றுவிட்டேன்.

“என்ன வீட்டுல பாடிப் பாத்தியா?” என்று கேட்டார் பாட்டுக்காரர். அதைக் கேட்டதும் வெட்கம் வந்தது. ஆச்சரியத்தோடு அவரைத் திரும்பிப் பார்த்து “ம்” என்றேன்.

“ஆ. அப்படித்தான் இருக்கணும். அப்பறமா எழுதி வச்சிக்கோ. அப்பதான் நல்லா பாடமாவும். தெனமும் பாடு. பாடப் பாடத்தான் பாட்டு. ஆட ஆடத்தான் ஆட்டம். நீச்சல் வேணாம்னு நிக்கறமாதிரி பாட்ட ஒதுக்கக்கூடாது.”

“ம்”

“இப்ப பாடறியா?”

“இப்பவா?”

அதிர்ச்சியில் திகைப்புடன் நான் அவரைப் பார்த்தேன்.

“ஆமா. இப்பத்தான். பாடு.”

அவர் என் பதிலை எதிர்பார்க்காமலேயே ஆர்மோனியப்பெட்டியை எடுத்து துருத்தியை அழுத்த ஆரம்பித்துவிட்டார்.

“நான்…… இங்க…… எப்பிடி….” என்று சொற்கள் கூடி வராமல் நான் இழுத்தேன்.

“நீதான். இங்கதான். சும்மா ஆரம்பி…..”

அவருடைய புன்னகை எனக்குத் தெம்பைக் கொடுத்தது. நான் திரும்பி என் நண்பர்களையும் பிள்ளையாரையும் பார்த்துவிட்டு மீண்டும் பாட்டுக்காரரின் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களை அசைத்துவிட்டு ஆர்மோனியத்தின் மரக்கட்டைகள் மீது விரல்களைப் படரவிட்டார். தரையிலிருந்து ஒரு பறவை சிறகுகளை அசைத்து மேலெழுந்து வட்டமிட்டு வானத்தை நோக்கிப் பறப்பதைப்போல மெல்லிய இசை பொங்கி எழத்தொடங்கியது. நான் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று தொடங்கி அந்த இசையுடன் சேர்ந்துகொண்டேன். வானத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பதுபோல நான் உணர்ந்தேன். காலையில் அவர் சொல்லிக் கொடுத்த ஏற்ற இறக்கங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் எழுந்தன. நான் அதுபோலவே பாடினேன். ’மனமகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான்’ என்று நிறைவு செய்த பிறகுதான் அங்கு நிறைந்திருந்தவர்களின் முகங்களைப் பார்த்தேன்.

அந்த இசையை மீட்டிக்கொண்டே அதே பாட்டின் தொடர்ச்சியாக அவர் ‘அழகுள்ள மலர்கொண்டு வந்தே’ என்று அடுத்த சரணத்தைத் தொடங்கினார். நான் ஒவ்வொரு சொல்லாக அந்தச் சரணத்தைப் பின்தொடர்ந்தேன். ’பின்னலைப் பின்னின்றிழுப்பான்’ என மற்றொரு சரணத்தையும் அவர் பாடிவிட்டு மீண்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை வரிக்கு வந்து சேர்ந்தார்.

“பெருமாள் பாட்டு ஒன்னு பாடுங்க” நின்றிருப்போர் வரிசையிலிருந்து ஒரு அம்மா கேட்டார். “பெருமாள் பாட்டாம்மா, பாடிருவோம்மா” என்று சிரித்துவிட்டு ’ஊரிலேன் காணியில்லை உறவுமற்றொருவர் இல்லை’ என்று தொடங்கினார்.

அதை முடிப்பதற்காகவே காத்திருந்த மாதிரி “ஐயா, ஒரு சிவன் பாட்டு’ என்று கேட்டார் ஒரு முதியவர். “சிவன் பாட்டுதான? அந்த சுடுகாட்டு சுடலைக்கு ஒரு வணக்கம் சொன்னாதான நாளைக்கு நம்ம கட்ட வேகும். பாடிருவோம்ய்யா” என்றபடி புன்னகைத்துக்கொண்டே ’சங்கரனைத் துதித்தாடு இனி ஜனனமில்லை’ என்று தொடங்கினார்.

நேற்று எங்களுக்கு அவர் சொன்ன கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி விளக்கங்கள் அக்கணத்தில் சட்டென தானாகவே என் நினைவுக்கு வந்தன. அவர் குரலில் சட்டென ஒரு தவிப்பும் மன்றாடுதலும் சேர்ந்துகொள்வதைப் பார்த்தேன். என்னவென சரியாகப் புரிந்துகொள்ள முடியாத பாரம் நெஞ்சை அழுத்தியது.

“ஐயா, தாயாரப் பத்தி ஒரு பாட்டு”

“சரிங்கம்மா. அம்மாவுக்கும் ஒரு வணக்கத்த சொல்லிடுவோம்”

’அகிலாண்டேஸ்வரி ரக்‌ஷமாம் ஆகம சம்ப்ரதாய நிபுணே ஸ்ரீ’ என்று தலையசைத்துக்கொண்டே பாடினார்.

“முருகருக்கும் ஒரு பாட்டு பாடுங்க சாமி”

“ஆமா. மறந்தே போச்சில்ல. ஆண்டிக்கு இல்லாத பாட்டா? அவன் நம்ம ஆளாச்சே. இப்ப பாடிடுவோம்”

அவர் ஒரு சிறுவனைப்போல நாக்கைக் கடித்தபடி கண்களைச் சிமிட்டியதைப் பார்க்க அழகாக இருந்தது. கண்களை மூடி சில கணங்கள் யோசித்த பிறகு ‘முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்’ என்று தொடங்கினார். ஒரு குன்றில் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லும் மயிலைப்போல அவர் குரல் அடுத்தடுத்த உயரங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தது.

அவர் பாடி முடித்தபோது மரத்தடியில் நிறைந்திருந்தவர்கள் தாமாகவே உணர்ச்சிவசப்பட்டு ‘ஆறுமுகனுக்கு அரோகரா’ என்று குரலெழுப்பியபடி கைதட்டினார்கள். ஒருவர் கூடை நிறைய மாம்பழங்களைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்துவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் என பழங்களைக் கொண்டுவந்து கூடையில் வைத்தார்கள். சிலர் சில்லறை நாணயங்களை வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்துவிட்டார்.

என்னையும் சிவலிங்கத்தையும் அழைத்து பழக்கூடையை எடுத்துச் சென்று அங்கு கூடியிருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொன்றாக வழங்கும்படி சொன்னார். வடிவேலுவும் நாகராஜனும் ஓடி வந்து கூடையை ஆளுக்கொரு பக்கம் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். நானும் சிவலிங்கமும் தண்டபானியும் ஒவ்வொரு பழமாக எடுத்து எல்லோருக்கும் கொடுத்தோம்.

“என்னடா ஜெகதலப்பிரதாபா? நீதான் இங்க விநியோகமா?” என்ற குரலைக் கேட்டுத் திரும்பியபோதுதான் அங்கு ருக்மிணி மாமி நிற்பதைப் பார்த்தேன். எனக்கு அவரைப் பார்த்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுத்து நெஞ்சை நிரப்பியது. ”இந்தாங்க மாமி” என்று ஒரு பழத்தை அவருக்கும் மற்றொரு பழத்தை அவரை ஒட்டி நின்றுகொண்டிருந்த நந்தகுமாருக்கும் கொடுத்தேன். “ஆத்துப் பக்கம் ஏன்டா வரமாட்டற? ஒருநாள் வாடா” என்றாள் மாமி. தொடர்ந்து “தீராத விளையாட்டுப் பிள்ளையை நானும் கேட்டேன்டா. ஒன் குரல் திவ்யமா இருக்கு. விட்டுடாதடா, பாடிண்டே இரு” என்று சொன்னாள். ”சரிங்க மாமி” என்றபடி அடுத்தவரை நோக்கி நகர்ந்தேன்.

சில்லறைகளை மட்டும் எடுத்து கைக்குட்டையில் வைத்துச் சுற்றி எடுத்துக்கொண்டு மேடைக்குத் திரும்பும் சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து ஒருவர் வேகமாக பாட்டுக்காரருக்குப் பக்கத்தில் வந்து நின்றார். நேற்று பார்த்த அதே முகம்.

“அங்க வந்து பாடச் சொல்றாங்க.”

பாட்டுக்காரர் புன்னகைத்தபடி “அடடா, இப்பதான முடிச்சேன்” என்றார்.

“எங்களுக்காக இல்லைன்னாலும் சாமிக்காக வந்து பாடலாமே”

“சாமியா, அவர் அங்க மட்டுமா இருக்காரு? அவர் இல்லாத இடம்னு ஒன்னு இருக்கா என்ன? எல்லா இடத்துலயும் இருந்து பாடறதயெல்லாம் கேட்டுகினுதான இருக்காரு.”

அவர் எதுவும் பேசாமல் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார். கூடியிருந்தவர்களும் எழுந்து கலைந்துசெல்லத் தொடங்கினர்.

மறுநாள் காலையில் சிவலிங்கம் வீட்டுக்கே வந்துவிட்டான். நானும் குளித்து முடித்து பழைய சோற்றைச் சாப்பிட்டு முடித்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தேன். இருவருமாகச் சேர்ந்து கல்மேடைக்குச் சென்றோம்.

தொலைவிலிருந்தே பாட்டுக்காரர் புதுச்சட்டை அணிந்திருப்பதைப் பார்த்தோம். நேற்று அவர் அணிந்திருந்த சட்டை துவைக்கப்பட்டு வேலியோரமாக ஒரு கிளைமீது தொங்கி வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. “டேய், இன்னைக்கும் ஏரிக்கு போய் வந்திருக்காருடா” என்று ரகசியமாகச் சொன்னான் சிவலிங்கம்.

நாங்கள் சென்று மேடையில் உட்கார்ந்திருந்த பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னோம். ”வாங்க வாங்க. வந்துட்டீங்களா” என்று சிரித்தார் அவர். “இவனுங்க இன்னைக்கு ஒங்களுக்கு முன்னாலயே வந்துட்டாங்க” என்று வடிவேலையும் நாகராஜனையும் கிரிதரனையும் சுட்டிக் காட்டிச் சொன்னார். அவர்கள் எருக்கம்பூக்களை ஒரு மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தனர்.

“இந்த மாலை எதுக்கு?” என்று புரியாமல் பாட்டுக்காரரிடம் கேட்டேன்.

”நம்ம புள்ளயாருக்குத்தான்.”

”இன்னைக்கும் ஏரில அடுத்த கரை வரைக்கும் போய் வந்தீங்களா?” என்று ஆவலோடு நான் பாட்டுக்காரரிடம் கேட்டேன். ”ஆமா” என்று தலையசைத்துச் சிரித்தார் அவர்.

“இருட்டா இருக்கும்போதே குயில்சத்தம் கேட்டு எழுந்துட்டேன். இந்த மரத்துக்கு நெறய குயில்ங்க வருது. என்ன மாதிரியான சங்கீதம் தெரியுமா? அந்த குரலுக்கு முன்னால நான் பாடறதெல்லாம் பாட்டே இல்ல. பாட்டுல அந்தத் தாளத்த கொண்டுவர முடியாமதான் நாம வார்த்தைங்கள போட்டு அடச்சிடறோம்”

அவர் கண்களில் படர்ந்த பரவசத்தைப் பார்த்தபோது எதுவுமே தெரியாத எங்களுக்கே பரவசமாக இருந்தது.

ஒருசில நிமிடங்களுக்குள் மேடை நிறைந்துவிட்டது. மண்ணை ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வண்டிகளை தொடர்ந்து ஓட்டிச் செல்ல முடியாமல் வண்டிக்காரர்கள் நிறுத்திவிட்டனர். கூட்டத்தைப் பார்த்து மாடுகள் மிரண்டன. நானும் தண்டபானியும் ஓடிச் சென்று மக்கள் கூட்டத்தை ஒதுங்கவைத்து வண்டிகள் செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

எருக்கமாலையைக் கட்டி முடித்ததும் நாகராஜன் அதை எடுத்துச் சென்று பிள்ளையார் கழுத்தில் சூட்டினான். “இப்ப பாரு, நம்ம புள்ளயார் எவ்வளவு அழகா இருக்காரு” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பாட்டுக்காரர். கூட்டத்திலிருந்து எழுந்து வந்த ஒரு ஆயா தன் மடியிலிருந்த பூக்களையெல்லாம் பிள்ளையார் முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி வணங்கினாள். பாட்டுக்காரர் அந்தச் சுடரைத் தொட்டு வணங்கினார். நாங்களும் வணங்கிவிட்டு கீழே தரையில் விழுந்து எழுந்து காதுகளைப் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டோம்.

“ம், நாம ஆரம்பிக்கலாமா?” என்று என் தோளைத் தட்டினார் பாட்டுக்காரர். நான் ஆவலோடு சென்று ஆர்மோனியப் பையை எடுத்து வந்து அவருக்கு முன்னால் வைத்தேன். அவர் பிள்ளையார் முன்னால் அமர்ந்து துணிமூட்டையிலிருந்து ஆர்மோனியத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டார். விரல்கள் அங்குமிங்கும் படரவிட்டு இசையைக் கூட்டினார். ஒருகணம் என்னை அருகில் வருமாறு சைகை காட்டிவிட்டு “அந்தக் குயில் எப்படி கூவிச்சி தெரியுமா?” என்று கேட்டார். நான் “எப்படி?” என்பதுபோல அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் துருத்தியை மெல்ல இழுத்தபடி ஒரு மரக்கட்டையை ஒரு பூவைத் தொடுவதுபோல மெல்லமெல்லத் தொட்டார். அப்போது எழுந்த ஓசை உண்மையிலேயே அங்கு ஒரு குயில் வந்து கூவுவதைப்போல இருந்தது. நம்ப முடியாதவனாக நான் அவர் விரல்களையே பார்த்தேன். அது குயிலின் குரலேதான். ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அற்புதமா இருக்குது. கண்ண மூடினா குயில்தான் தெரியுது.”

“சங்கீதத்தையே அப்பிடித்தான் கண்டுபுடிச்சாங்க. எல்லாமே ஒரு சேர்மானம்தான். குயில், மயில், ஆடு, காளை, குதிரை, யானை, அன்றில்னு பறவைகளுடைய குரல்களையும் விலங்குகளுடைய குரல்களையும் கூட்டிக் கொறச்சி செய்ற வித்தை. இதான் ராகம் தாளம்.”

குயிலின் குரலோசையிலிருந்தே விடுபட முடியாமல் திகைத்திருந்த என்னை பாட்டுக்காரரின் பேச்சு மேலும் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.

“சரி, இப்ப பிள்ளையாரைப் பத்தி பாடுவோம் என்ன?” என்றபடி மரக்கட்டைகளை அழுத்தி வேறு மாதிரியான இசை எழும்படி செய்தார். சில கணங்கள் கண்களை மூடி ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ என்று தொடங்கினார். அப்புறம் அடுத்தடுத்து ‘அல்லல்போம் வல்வினைபோம்’, ’முன்னவனே யானை முகத்தானே’ ‘களியானைக்கன்றை’ ’மருப்பையொரு கைக்கொண்டு’ என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கியதும் நேற்று போலவே பலரும் வந்து கூடையில் பழங்களை வைத்துவிட்டுச் சென்றனர். நாங்கள் அங்கிருந்தோர் அனைவருக்கும் அந்தப் பழங்களை உடனடியாகப் பிரித்துக் கொடுத்தோம்.

அக்ரகாரத்தெருவிலிருந்து இரண்டு பேர் வேகமாக கல்மேடைக்கு அருகில் வந்து நின்றார்கள். ஆர்மோனியப்பெட்டிக்குப் பக்கத்தில் இருந்த பாட்டுக்காரரிடம் “இங்க பாடறவரு யாரு?” என்று கேட்டார் ஒருவர். பாட்டுக்காரர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்தார். நான் துடுக்காக அவரைப் பார்த்து “பாடறவருகிட்டயே வந்து நீங்கதான் பாடறவரானு கேக்கறிங்க” என்றேன். அதைக் கேட்டு அவர் முகம் சிவந்துவிட்டது. ”சரி சரி” என்று சமாளித்தார். பிறகு ”சரி, கெளம்புங்க” என்று பாட்டுக்காரரைப் பார்த்துச் சொன்னார்.

பாட்டுக்காரர் ”எங்க?” என்று அவரிடம் கேட்டார்.

“ராமசாமி ஐயர் உங்கள கையோட அழச்சிண்டு வரச் சொன்னார்”

“ஏன்?”

“இன்னைக்கு அவா ஆத்துல பெரிய பூஜை நடக்குது. அதுல நீங்க பாடினா நன்னா இருக்கும்ன்னு பிரியப்படறார்.”

“சரி”

“சரின்னு சொல்லிட்டு உக்காந்துண்டா போதுமா? வாங்கோ போவலாம்”

“எனக்கு யார் வீட்டுக்கும் போய் பாடற பழக்கமில்ல தம்பி. நான் சும்மா இப்படி நாடோடியா பாடிட்டே போற ஆள். போய் சொல்லுங்க.”

“அவர் யார்னு தெரியாம நீங்க பேசறேள்னு நெனைக்கறேன். அவர் இந்த அக்ரகாரத்துலயே பெரிய புள்ளி. விழுப்புரம் பெரிய கோர்ட்ல மாஜிஸ்ட்ரேட். இந்த வட்டாரத்துல அவர் பேச்சுக்கு மறுபேச்சே இல்ல.”

பாட்டுக்காரர் எந்த அசைவுமில்லாமல் உட்கார்ந்தபடியே இருந்தார்.

“எழுந்து வாங்கோ”

“தம்பி, நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேனே. நீங்க கெளம்பலாம்”

அந்தப் பதிலைக் கேட்டு அவர் முகம் இருண்டுவிட்டது. அவர் முகம் போன போக்கே சரியில்லை. நான்கு பக்கங்களிலும் மாறிமாறிப் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார்.

“சரி, நாம விளையாடற நேரம் வந்துட்டுது. பந்து விளையாடலாமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் உற்சாகமாக தலையசைத்துக்கொண்டே எழுந்தேன்.

மேடையில் அமர்ந்திருந்த கூட்டம் அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தது. நாங்கள் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தோம்.

“எங்க ஊருக்கு யாரும் இந்த மாதிரிலாம் வந்ததில்ல சாமி. நீங்க வந்தது ஒரு பெரிய அதிசயம். கடவுளா பாத்து உங்கள அனுப்பி வச்சிருக்காரு. எங்க கஷ்டம் தீர்ற மாதிரி ஒரு பாட்டு பாடுங்க” என்று ஒருவர் எழுந்து சொன்னார். உடனே “ஆமா பாடுங்க” “ஆமா பாடுங்க” என்று பல குரல்கள் எழுந்தன. ”என்ன செய்யலாம்?” என்பதுபோல என்னையும் சிவலிங்கத்தையும் பார்த்தார் பாட்டுக்காரர். “சரி, சாய்ங்காலமா வெளயாடிக்கலாம். பாட்டே பாடுங்க” என்று சொன்னோம்.

பாட்டுக்காரர் ஆர்மோனியத்தை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டார். சில கணங்களிலேயே இசையைக் கூட்டி ’உனது திருவடி நம்பிவந்தேன் எனக்கு ஒருவருமில்லை நான் ஏழை’ என்று பாடத் தொடங்கினார். அந்தக் குரலைக் கேட்கும்போதே நெஞ்சு அடைப்பதுபோல இருந்தது. கண்களில் நீர் தளும்பத் தொடங்கியது. அரசமரத்தைவிட உயரமான உருவத்துடன் யாரோ ஒருவர் அங்கு நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றி என் உடல் அதிர்ந்தது. அந்தப் பாடல் முடித்ததும் ‘காணாத கண்ணென்ன கண்ணோ வீணான கண்மயில் கண்ணது புண்ணோ’ என்ற பாட்டு தொடங்கியது. கிட்டத்தட்ட அனைவருடைய கண்களும் குளமான நிலையில் ‘கண்டேன் கலிதீர்ந்தேன் கருணைக்கடலை நான் கண்டேன்’ என்று பாடத் தொடங்கினார் பாட்டுக்காரர். அந்த வரிகள் வழியாகவும் ஆர்மோனியத்திலிருந்து பீறிட்ட இசை வழியாகவும் பாய்ந்த ஒரு பரவசத்தில் திளைத்திருந்தேன்.

அந்தப் பாட்டு முடியும் தருணத்தில் அக்ரகாரத் தெருவிலிருந்து இருபதுமுப்பது பேர் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் வந்தவர் வெள்ளை வெளேரென வேட்டி அணிந்திருந்தார். ஒரு துண்டுமட்டும் தோளில் இருந்தது. நெற்றியுலும் மார்பிலும் தோள்களிலும் திருநீற்றின் பட்டைகள் உலர்ந்து படிந்திருந்தன. கழுத்தில் ருத்திராட்ச மாலை தொங்கியது. அவருக்குப் பக்கத்தில் சற்று முன்னால் வந்து சென்றவர் நின்றிருந்தார்.

சட்டென எனக்குள் ஒரு பயம் படர்ந்தது. என்ன நடக்குமோ என்று மனத்துக்குள் பதறத் தொடங்கினேன். திரும்பி பாட்டுக்காரரைப் பார்த்தேன். அவர் அங்கு எதுவுமே நிகழாததுபோல தன் பாட்டின் உலகத்துக்குள் இருந்தார். ருத்ராட்சமாலை அணிந்தவர் பாட்டு முடியும் வரைக்கும் காத்திருந்து பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னார்.

”நான் ராமசாமி. நீங்க நன்னா பாடறேள்னு கோவில்ல சொன்னா. இன்னைக்கு நம்ம ஆத்துல சத்யநாராயண பூஜை. நீங்க வந்து பாடனா நன்னா இருக்கும்ன்னுதான் அழச்சிண்டு வரச்சொன்னேன். என் மனசில வேற எந்த எண்ணமும் இல்ல. ஆத்துக்கெல்லாம் நீங்க வரமாட்டேள்னு தம்பி வந்து சொன்னான். அதான் நானே கெளம்பி வந்துட்டேன்.”

“உக்காருங்க”

பாட்டுக்காரருக்கு முன்னால் அவர் காலை மடித்து அமர்ந்தார். “அண்ணா நாற்காலி” என்று அவசரமாக எழுந்த குரலை திரும்பியே பார்க்காமல் கையை உயர்த்தி அடக்கினார். அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் கீழே அமர்ந்தனர். மேடையில் இடம் கிடைக்காதவர்கள் தரையில் அமர்ந்திருந்த கூட்டத்தோடு அமர்ந்தனர்.

”கங்கையை பாக்க நாமதானே கங்கைகிட்ட போவணும். கங்கையை நம்ம பக்கத்துக்கு இழுக்க நெனைக்கலாமோ. பெரிய தப்பு பண்ணிட்டேன்.”

பாட்டுக்காரர் ஆர்மோனியப்பெட்டியைத் தொட்டு சுருதி கூட்டியபடியே “என்ன பாட்டு வேணும், சொல்லுங்க” என்று கேட்டார்.

“நீங்க சுதந்திரமா எது பாடினாலும் சரி”

ராமசாமி பாட்டுக்காரரின் முகத்திலேயே கவனத்தை குவித்திருந்தார். பாட்டுக்காரர் மெல்ல ‘யாருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ அவனே பெரியவனாம்’ என்று அடியெடுத்து பாடத் தொடங்கினார். பார்வைக்குத் தென்படாத ஒரு பேருருவம் எங்களுக்குப் பக்கத்திலேயே உயர்ந்து நிற்கும் உணர்வை நான் மறுபடியும் அடைந்தேன். அந்தப் பாட்டை முடித்ததுமே அவர் ‘ஆடும் சிதம்பரமோ ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ’ என்று தொடங்கினார். அதைத் தொடர்ந்து ‘பாதமே துணை ஐயமே’ ‘பாடுவாய் மனமே சிவனைக் கொண்டாடுவாய் தினமே’ ‘வாருங்கள் வாருங்கள் சொன்னேன் நீங்கள் வாயாடாது ஓடி வருவீர் என் முன்னே’ ‘உத்தாரம் தாரும் ஐயே எனக்கு ஒருவருமில்லை நான் பரகதி அடைய’ ‘தில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம்’ ‘தில்லை வெளியிலே கலந்துகொண்டால்’ ‘ஆடிய பாதத்தைத் தாரும் உம்மைத் தேடி வந்தோம் இதோ பாரும்’ ‘கைவிடலாது காமதேனு அல்லவோ’ என்று பாடிக்கொண்டே சென்றார். எல்லாவற்றையும் பாடி முடித்துவிட்டு புன்னகைத்தபடியே ஆர்மோனியத்தை இறக்கினார்.

நான் ராமசாமியைப் பார்த்தேன். அவர் கண்களிலிருந்து நீர் பெருகி கோடாக வழிந்தபடி இருந்தது. அவருக்கு எவ்விதமான சுய உணர்வும் இல்லை. ஆர்மோனியம் நின்று வெகுநேரத்துக்குப் பிறகே அவர் மனம் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தது. சுற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபடி துண்டின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“அந்த நடராஜன அப்படியே கண்முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டேள். என்ன சொல்றதுனே தெரியலை. வார்த்தயே வரலை. வார்த்தைகள் எல்லாம் எங்கயோ காணாம போய்ட்டமாதிரி இருக்கு. மனசே லேசாய்ட்டுது. நீங்களே இங்க தேடி வந்து பாடனதுலாம் இந்த ஊர் செஞ்ச புண்யம்.”

குரல் இடற ராமசாமி திரும்பினார். யாரோ ஒருவர் முன்னால் வந்து ஒரு மாலையை நீட்டினார். இன்னும் மூன்று பேர் தம்மிடம் இருந்த பழத்தட்டுகளையும் வேட்டி துண்டு வைத்த தட்டையும் எடுத்துச் சென்று ஆர்மோனியத்துக்கு அருகில் வைத்துவிட்டுத் திரும்பினர்.

ராமசாமி மாலையை உயர்த்தி பாட்டுக்காரரின் கழுத்தில் அணிவிக்க கைகளை உயர்த்தினார்.

“ஹா, எனக்கா?” என்றபடி ஒரு கணத்தில் நின்ற இடத்திலிருந்து பின்வாங்கிய பாட்டுக்காரர் “அங்க, அங்க அவருக்கு போடுங்க” என்றபடி பிள்ளையாரின் பக்கம் சுட்டிக் காட்டினார். ராமசாமி மாலையை பிள்ளையாருக்குச் சூட்டிவிட்டு பாட்டுக்காரரைப் பார்த்து புன்னகையுடன் வணங்கினார். பிறகு வணங்கிய நிலையிலேயே மேடையிலிருந்து இறங்கி நடந்து சென்றார்.

கசப்பின் சிறுதுளி – தஹர் பென் ஜெலூனின் ‘உல்லாசத்திருமணம்’ மொழிபெயர்ப்பு நாவல் குறித்து பாவண்ணன்

’பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா, இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ’ என்பது சிவவாக்கியரின் வரி. அது ‘மனிதர்களிடையில் வேறுபாடில்லை’ என்பதை உணர்த்தும் ஞானவாக்கியம். பதினெண்சித்தர்களில் ஒருவர் அவர். சாதிசமய வேறுபாடுகளைப் பெரிதென நினைக்கும் பித்தர்களைச் சாடியவர். மொழி வேறுபாடு, இனவேறுபாடுகளப் பெரிதெனப் பேசித் திரிகிறவர்கள் கேட்டு மனம் திருந்துபவர்களுக்காக சொல்லப்பட்டதாகவும் நாம் இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொன்ன மகாவாக்கியத்தின் மற்றொரு வடிவமே இது.

தமிழில் மட்டுமல்ல, இதுபோன்ற அமைதிவாக்கியங்கள் உலகமொழிகள் ஒவ்வொன்றிலும் நிச்சயம் இருக்கக்கூடும். ஆயினும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் மனிதர்களுக்கு கிறுக்குப்பிடித்து இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் ஒருவரையொருவர் கொன்றும் கொலையுண்டும் ஆயிரக்கணக்கில் அழிந்துபோகிறார்கள். சமூக வரலாறு அந்தப் புள்ளிவிவரங்களையெல்லாம் தொகுத்தும் பகுத்தும் வைத்திருக்கும்போது இலக்கியம் அந்தப் புள்ளிவிவரங்களை காட்சியளவில் தொகுத்தும் பகுத்தும் காட்டி மானுடத்தின் சாட்சியாக விளங்குகிறது. சதத் ஹஸன் மண்டோவின் கதைகள் இந்த மண்ணில் நிகழ்ந்த மிகக்கொடூரமான மதமோதல்களின் வரலாற்றுச் சாட்சிகளாக இன்றளவும் உள்ளன.

ஆழ்மனத்தில் ஒரு மனிதனிடம் தன்னை மற்றொருவனுக்குச் சமமானவன் எனக் கருதும் எண்ணமே இல்லை என்றே தோன்றுகிறது. அடுத்தவனிடமிருந்து தன்னை வேறுபட்டவன் என எடுத்துக்காட்ட ஆயிரம் காரணங்களை அது பொழுதெல்லாம் தேடிக்கொண்டே இருக்கிறது. உதடுகள் ‘நாம் அனைவரும் சமமானவர்கள்’ என உச்சரித்தாலும் உள்ளம் ஏதோ ஒரு புள்ளியில் நாம் வேறுபட்டவர்கள் என உள்ளூர மறுகிக்கொண்டிருக்கிறது. அந்த எண்ணமே, ஒரு புள்ளியில் திடீரென வெடிக்கும்போது வெறுப்பாக, வன்மமாக, பகையாக, கொலைவெறியாக உருமாற்றம் பெறுகிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமல்ல, உலகமெங்கும் இந்த வெறி மொழிவெறி, இனவெறி, நிறவெறி என்னும் பெயரில் பாசியெனப் படர்ந்து நிறைந்திருக்கிறது. தஹர் பென் ஜெலூனின் பிரெஞ்சு நாவலான ‘உல்லாசத் திருமணம்’ நிறவெறிக்குப் பலியான ஒரு குடும்பத்தின் கதையைச் சித்தரிக்கிறது.

கடந்த நூற்றாண்டின் முப்பதுகளின் பின்னணியில் மொராக்கா தேசத்தில் உள்ள ஃபேஸ் என்னும் நகரத்தில் நாவல் தொடங்குகிறது. வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தேசம் மொராக்கா. வடக்கில் மத்தியதரைக்கடலுக்கும் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கிழக்கில் அல்ஜீரியாவுக்கும் தெற்கில் சஹாரா பாலைவனத்துக்கும் இடையில் மொராக்கா இருக்கிறது. அரபு, பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகள் அங்கு பேசப்படுகின்றன. ஃபேஸ் என்பது மொராக்காவில் உள்ள ஒரு நகரம். ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அருகில் உள்ள நகரம். இஸ்லாமியர்கள் வாழும் நகரம். அவர்கள் அனைவரும் வெள்ளை நிறம் கொண்டவர்கள். அடிமைமுறை வழக்கத்தில் இருந்த காலம் என்பதால் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட அடிமைகள் அவர்களிடம் கூலிகளாக வேலை செய்கிறார்கள். அவர்களும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் கருப்பு நிறம் கொண்டவர்கள். மொராக்காவே ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடென்ற போதும், மொராக்காவின் வெள்ளைநிற இஸ்லாமியர்கள் கருப்புநிற இஸ்லாமியர்களை ஆப்பிரிக்கக் கருப்பர்கள் என்றும் நீக்ரோ என்றும் அழைக்கிறார்கள். நேரம் கிட்டும்போதெல்லாம் ‘ஆப்பிரிக்கன் ஆப்பிரிக்கன்’ என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். இந்த நிறவெறி ஒவ்வொருவரின் ஆழ்மனத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது.

கருப்பு இஸ்லாமியர்களை அவர்கள் வெறுத்தபோதும், அவர்கள் இல்லாமல் வெள்ளை இஸ்லாமியர்களால் வாழ முடிவதில்லை. குடும்ப வேலைகளுக்கும் கடினமான புற வேலைகளுக்கும் கூலி வேலைகளுக்கும் அவர்கள் தேவைப்ப்டுகிறார்கள். அந்தத் தேவையை ஒட்டியே அவர்கள் அங்கு வந்து சேர்கிறார்கள். ஒருவித வெறுப்பு-விருப்புக்கு நடுவிலேயே அவர்கள் உறவு அங்கு நிலவுகிறது.

ஃபேஸ் நகரத்தைச் சேர்ந்த ஓர் எளிய வெள்ளை இஸ்லாமிய வணிகன் அமீர். திருமணமானவன். நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பன். தன் மதநூலான குரானின் சொற்படி நடப்பவன் என்பதால் மனிதர்களிடையில் பேதம் பார்ப்பதை பாவம் என்று நினைப்பவன். அவன் வீட்டிலும் கருப்பு இஸ்லாமிய வேலைக்காரர்கள் உண்டு என்றபோதும் அவர்களிடம் நியாய உணர்வோடு நடந்துகொள்பவன். ஆனால் அவன் மனைவி லாலா ஃபாத்மா அப்படிப்பட்டவள் அல்ல. அவளால் பேத உணரவிலிருந்து ஒருநாளும் விடுபட முடிந்ததில்லை.

ஒருமுறை அமீர் கொள்முதலுக்காக தன் பதின்மூன்று வயதுடைய கரீம் என்னும் சிறுவனுடன் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செனகல் என்னும் ஊருக்குப் புறப்படுகிறான். வட ஆப்பிரிக்க முனையிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் செல்லும் அந்தப் பயணம் மிகமிகக் கடுமையானது. செனகலில் சிறிது காலம் அவன் தங்கியிருக்க நேர்கிறது. செனகலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு வீடெடுத்து தங்குவது அவன் வழக்கம். அதேபோல இடைக்காலத் துணையாக ஓர் இளம்பெண்ணை மதமுறைப்படி பணமும் நகைகளும் கொடுத்து உல்லாசத்திருமணம் செய்துகொள்வதும் வழக்கம். தற்காலிகத் திருமணத்துக்கு உல்லாசத்திருமணம் என்று பெயர். அமீர் உல்லாசத்திருமணம் செய்துகொள்பவளின் பெயர் நபு. அவளும் இஸ்லாமியப்பெண்ணே. ஆனால் கருப்புநிறம் கொண்டவள். அவள் வழியாக அவன் அடையும் இன்பம் அவனை மயக்கம் கொள்ளவைக்கிறது. இல்லறம் என்பது இத்தனை இன்பமயமானதா என்பதை முதன்முதலாக அவள் வழியாக அவன் அறிந்துகொள்கிறான்.

கொள்முதல் காலம் முடிந்து அவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் நாள் நெருங்குகிறது. நபு மீது காதல் வசப்பட்டு விடுகிறான் அமீர். அவளைப் பிரிந்து செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று இரண்டாவது மனைவியாக ஆக்கிக்கொள்ள அவன் நினைக்கிறான். தன் மகன் கரீமின் எண்ணத்தை அறிய அவன் முதலில் விரும்புகிறான். அப்பாவின் மகிழ்ச்சியைப் பார்க்கும் சிறுவன் அதற்குச் சம்மதிக்கிறான். நபுவுக்கும் அதில் சம்மதமே. அதனால் திரும்பும் காலத்தில் அவளையும் அவன் அழைத்துக்கொண்டு ஊருக்குப் புறப்படுகிறான்.

ஃபேஸ் நகரத்தை நோக்கிய அவர்களுடைய பயணம் தொடங்குகிறது. மெக்னெஸ், ஸகோரா, தாஞ்சியர், ஜிப்ரால்டர், காஸாபிலான்கா, உவர்ஸஸாத், தெத்துவான், மராக்கேஷ், நதூர், செத்தாத், ரபாத் என பல இடங்களை மோட்டார் வாகனம், கால்நடை வாகனம் என பல விதங்களில் பயணம் செய்து கடந்து இறுதியாக அவர்கள் ஃபேஸ் நகருக்கு வந்து சேர்கிறார்கள். இந்தக் கொள்முதல் பயணத்தை மிகநீண்ட காட்சிச் சித்திரமாக தீட்டிக் காட்டியிருக்கிறார் தஹர் பென் ஜெலூன். வாகனத்துக்குள் இருக்கும்போது முதன்முறையாக அவன் மனம் தன் வெள்ளைநிற மனைவி நபுவை எப்படி எதிர்கொள்வாள் என்று நினைத்துக் கலங்குகிறான். அவளுடைய எதிர்ப்புணர்வை தான் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவனுக்குக் கலக்கத்தை அளிக்கிறது.

அந்தப் பயணத்தில் ஓவ்வொருவருமே நபுவின் கருப்புநிறத்தை ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கிறார்கள். ஆனால் அந்நிறத்தை முன்னிட்டு அதை உடனடியாக ஒரு சமூகப்பிரச்சினையாக யாரும் மாற்றவில்லை. அப்படி ஒரு எண்ணமே அப்போது யாரிடமும் இல்லை. நிறப்பிரச்சினை ஒரு குடும்பம் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே சுருங்கியிருக்கிறது. ஃபேஸ் நகரத்திலிருந்து செனகலுக்கும் செனகலிலிருந்து ஃபேஸ் நகரத்துக்குமான பயணத்தை மட்டுமே விவரிக்கும் முதல் ஐந்து அத்தியாயங்கள் வழியாக நாம் அடையும் எண்ணம் இதுவே. மொராக்கா இஸ்லாமிய மக்களிடையே நிறம் சார்ந்த வேறுபாட்டுணர்வு, வெறுப்பூட்டும் அளவுக்கு ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால் குடும்ப அளவிலான வெறுப்பு என்கிற அளவில் மட்டுமே அது படிந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளை நிறத்திலொன்று, கருப்பு நிறத்திலொன்று என நபுவுக்கு இரட்டைக்குழந்தை பிறக்கும்போது, முதல் மனைவியான லாலா, சூனியம் வைத்து நபுவைக் கொல்லும் அளவுக்குக்கூட செல்கிறாள். அதுதான் அவள் செல்லும் வெறுப்பின் எல்லை.

அடுத்த ஐம்பது பக்கங்களில் அமீரின் குடும்பத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அமீரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகளுக்குத் திருமணம் நடக்கிறது. ஆண்பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றுவிடுகிறார்கள். உடல்நலம் குன்றி லாலா இறந்துவிடுகிறாள். வணிகமும் சரிந்துவிடுகிறது. வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு ஃபேஸைவிட பெரிய நகரமான தாஞ்சியருக்குச் சென்று வணிகத்தைத் தொடங்குகிறான் அமீர். அவன் எதிர்பார்த்த அளவு அதில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. எதிர்பாராத விதமாக அவனும் மரணமடைந்துவிடுகிறான். நபுவுடைய இரு பிள்ளைகள் ஹுசேனும் ஹசனும் அமீரின் வணிகத்தைத் தொடர்ந்து நடத்துககிறார்கள்.

கருப்பு நிறம் கொண்ட ஹசன் செல்லுமிடங்களிலெல்லாம் இடர்கள் காத்திருக்கின்றன. நகரத்தில் எங்கெங்கும் நிறவெறி தாண்டவமாடுகிறது. ஹசனும் ஹுசேனும் தாமே தமக்குப் பிடித்த பெண்ணைத் தேடிக்கொள்கிறார்கள். ஹுசேனுக்கு ஒரு வெள்ளை இஸ்லாமியப்பெண் கிடைக்கிறாள். ஹசனுக்கு ஒரு கலப்பின இஸ்லாமியப்பெண் கிடைக்கிறாள். ஹசனுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் பெயர் சலீம். அவனும் கருப்பு நிறம் கொண்டவனாக இருக்கிறான். அவனும் வளர்ந்து இளைஞனாக நகரில் வலம் வருகிறான். நகரத்தில் முன்பிருந்ததைவிட நிறவெறி உச்சத்தில் இருக்கிறது. நடைபாதையில், பேருந்துப் பயணத்தில் அவனைப் பார்க்கிறவர்கள் அருவருப்புடன் பார்த்து வசைபாடுகிறார்கள். அவனை மதிப்பவர்கள் யாருமே இல்லை. அவனை இஸ்லாமியனாக ஒருவரும் ஏற்றுக்கொள்வதில்லை. பொதுமக்கள் தொல்லை என்பதற்கும் அப்பால், அரசு நிர்வாகமும் காவல் துறையும் கருப்பு நிறத்தவரை அந்நியர்களாக கட்டமைக்கின்றன. தகுந்த ஆவணங்கள் இல்லாத சமயங்களில் கருப்பு நிறத்தவரை கேள்விமுறை இல்லாமல் கைது செய்கிறது. ஒரு படி மேலே சென்று அவர்களை அடையாளம் கண்டு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவைக்கிறது. துரதிருஷ்டவசமாக காவலர்களிடம் அகப்பட்டுக்கொள்ளும் கருப்பு நிற சலீம் கைது செய்யப்பட்டு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். காவல் துறையிடம் அவன் மன்றாடல்கள் எதுவும் பலிக்கவில்லை.

அவனை விடுவிக்கும் இடம் ஒரு காலத்தில் நபு வாழ்ந்த செனகல் நகரம். அவனோடு சேர்ந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் செனகலிலிருந்து எங்கெங்கோ சென்றுவிட, அவன் மட்டுமே போக்கிடமின்றி செனகலில் சுற்றியலைகிறான். அவனால் அந்த ஊருடன் ஒட்டிக்கொள்ள இயலவில்லை. மீண்டும் தாஞ்சியாருக்கே செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. தான் பிறந்த இடத்திலேயே வாழவேண்டும் என அவன் நினைக்கிறான். மசூதிகளிலும் விடுதிகளிலும் சிறுசிறு வேலைகள் செய்து பணமீட்டிக்கொண்டு தாஞ்சியாருக்குப் புறப்படுகிறான்.

அமீரும் நபுவும் பயணம் செய்த அதே பழைய பாதை. அரைநூற்றாண்டுக்குப் பிறகு அதே பாதையில் அவன் புறப்படுகிறான். இந்த இரண்டு பயணங்களைப்பற்றிய குறிப்புகளே நாவலின் முக்கியமான அடையாளம். நபுவுக்கு வாய்த்ததுபோல சலீமின் பயணம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. எங்கெங்கும் வசைகள். அவமானங்கள். புறக்கணிப்புகள். அவனுடைய கருப்பு நிறமே எல்லோருடைய பார்வையிலும் முதலில் பட்டு முகம் சுளிக்கவைக்கிறது. உணவும் தங்குமிடமும் இல்லாமல் ஒவ்வொரு இடத்திலிருந்தும் துரத்தப்படுகிறான். கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் ஈட்டலாம் என்று முயற்சி செய்தபோதும், அவனுக்கு வேலை கொடுப்பவர்கள் யாருமில்லை. அவனைத் துரத்தியடிப்பதிலேயே ஒவ்வொருவரும் குறியாக இருக்கிறார்கள்.

வழியில் இரக்கமுள்ளவர்கள் சிலரையும் அவன் சந்திக்கிறான். அவர்களே அவன் ஆசுவாசம் கொள்ள சிறிதளவு உணவை அளிக்கிறார்கள். தங்க இடமும் அளிக்கிறார்கள். பணம் வாங்கிக்கொள்ளாமல் தன் வாகனங்களில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரம் வரைக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்கிறார்கள். எஞ்சிய தொலைவை அவன் கால்நடையாகவே கடந்து பல மாதங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்புகிறான். ஆயினும் குடும்பத்துடன் நீண்ட காலம் அவனால் சேர்ந்து வாழ வழியில்லாமல் போய்விடுகிறது. நருக்குள் கருப்புநிறத்தவர்களின் நடமாட்டத்தை காவல் துறை மட்டுமல்ல, ஒவ்வொருவருமே கண்காணிக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் படும்போதெல்லாம் விரட்டுகிறார்கள். கருப்பு நிறத்தவர்களின் நடமாட்டத்தை மற்றவர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். நகரத்தின் அழகை கருப்பர்கள் களங்கப்படுத்துவதாக நினைக்கிறார்கள். கருப்பு நிறத்தவர்களுக்கு நகரத்திலும் இடமில்லை, குடும்பத்திலும் இடமில்லை, மனிதர்களின் நெஞ்சிலும் இடமில்லை என்னும் நிலை உருவாகிறது. துரதிருஷ்டவசமாக மீண்டும் அவனை காவல்துறை வேட்டையாடுகிறது. இந்த முறை அவர்களுடைய துப்பாக்கிக்குண்டுக்கு அவன் பலியாகிவிடுகிறான்.

நபுவுக்குக் கிடைத்த பாதுகாப்பு, நபுவின் பேரப்பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அப்படியென்றால் நாகரிகம் என்பதற்கு என்ன பொருள்? கல்வி, வளர்ச்சி என்பதற்கெல்லாம் என்ன பொருள்? நிறமாற்றத்தை சகித்துக்கொள்ள இயலாத குணத்தைத்தான் நாகரிகத்தின் பெயராலும் வளர்ச்சியின் பெயராலும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய கசப்பான உண்மை. அந்தக் கசப்பின் சிறுதுளி உல்லாசத்திருமணத்தில் திரண்டு நிற்கிறது. பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர் பாராட்டுக்குரியவர். சிக்கலான இடங்களில் கூட புழங்குதளத்தில் உள்ள சொற்களைக்கொண்டு மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். புனைவு நூலுக்குப் பொருத்தமான ஒரு மொழி அவருக்கு வசப்பட்டிருக்கிறது.

மனவளர்ச்சி குறைந்த கரீம் என்னும் சிறுவனுக்கு ஒரு பூனை கதை சொல்லும் தருணமொன்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பூனை ஒரு செல்வந்தர் வீட்டில் தங்கியிருந்தபோது நேரில் பார்த்த நிகழ்ச்சியை கதையாகச் சொல்கிறது. அந்தச் செல்வந்தர் ஊரிலேயே பெரிய மனிதர். பாஷா. பாஷாவுக்கு இளம்பெண்களை மிகவும் பிடிக்கும். அந்த ஊர் மரபின்படி ஒவ்வொரு முலூத் பண்டிகையின்போதும் கன்னி கழியாத ஒரு பெண்ணை பரிசாக அனுப்பிவைக்கவேண்டும். அது ஒரு கட்டாய விதி.

மெலிந்து, கச்சிதமான தோற்றத்துடன் நீண்ட கூந்தலுடன் கூடிய ஒரு இளம்பெண் பண்டியை தினத்தன்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள். நள்ளிரவை நெருங்கும் நேரத்துக்கு சற்றுமுன் பெரியதொரு ‘புயிர் நோஸ்’ என்னும் அரேபிய அங்கியை அணிந்துகொண்டு செல்வந்தரின் முன்னால் வந்து நிற்கிறாள் ஒரு பெண்.

அந்த அறையில் ஓரமாக ஒதுங்கியிருந்து அக்காட்சியைக் கண்டதாகச் சொல்கிறது அப்பூனை. அவளுடன் பேசிச் சிரித்து பொழுதுபோக்கி உறவு கொள்ள முற்படும் சமயத்தில் வந்திருப்பவள் பெண்ணல்ல என்பதையும், பெண்வேடத்தில் வந்திருக்கும் ஆண் என்பதையும் அப்பூனை பார்த்துவிடுகிறது. ஏதோ ஒரு தருணத்தில் பூனை தம்மைப் பார்ப்பதைப் பார்த்துவிடுகிறார் செல்வந்தர். உண்மைக்கு ஒரு சாட்சி உருவாவதை அவர் விரும்பவில்லை. உடனே அந்தப் பூனையை அடித்துத் துரத்திவிடுகிறார்.

மாளிகையைவிட்டு துரத்தப்பட்ட பூனை தெருவில் இறங்கி நடக்கத் தொடங்குகிறது. வழியில் ஓர் ஆங்கிலேயப்பயணி அந்தப் பூனையைக் கண்டு அதைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார். பயணி அந்தப் பூனையை நல்லபடியாகவே பார்த்துக்கொள்கிறார். எதிர்பாராத விதமாக ஒருநாள் அவர் இறந்துவிடுகிறார். அவருடைய உறவினர்கள் வந்து சேரும்வரை அப்பயணியை அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்கிறது பூனை. வந்தவர்கள் அவரை அடக்கம் செய்துவிட்டு அப்பூனையை விரட்டியடித்துவிட்டுச் செல்கிறார்கள்.

நாவலைப் படிக்கும் போக்கில் ஒரு வேடிக்கைக்கதை போல இந்தப் பூனைக்கதை தோற்றமளித்தாலும், நாவலின் மையத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு முக்கியக்குறிப்பை அது வழங்குகிறது. விரட்டப்படும் பூனை வெறுத்து, ஒதுக்கி, ஒடுக்கப்படும் இனத்தை அடையாளப்படுத்தும் படிமமாக நாவலில் விரிகிறது. இந்த நாவலில் நிறைந்திருக்கும் நிறவெறித் துன்பங்களையும் சதாகாலமும் மீண்டும் மீண்டும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்தை நோக்கித் துரத்தப்படும் வேதனைகளையும் புரிந்துகொள்ள இந்தப் பூனைக்கதை நமக்கு உதவியாக இருக்கிறது.

பூனைக்கதையைப் போலவே மற்றொரு இடத்தில் ஒரு பாம்புக்கதையும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பகலில் மனிதனாகவும் இரவில் பாம்பாக மாறி வேட்டையாடும் ஒருவனைப்பற்றிய கதை அது. விரட்டப்படும் பூனை ஒதுக்கப்படும் இனத்தினரைக் குறிப்பிடும் படிமமென நாம் எடுத்துக்கொண்டால், வேட்டையாடிக் கொல்லத் துடிக்கும் பாம்பு இனவெறி கொண்ட கூட்டத்தைக் குறிப்பிடும் படிமமாகும்.

பூனைக்கும் பாம்புக்குமான மோதல் ஒவ்வொரு கட்டத்திலும் வலுத்தபடியே செல்கிறதே, ஒரு தருணத்திலும் அது தீர்வை நோக்கி நகரவில்லை. பூனை பாம்பைக் கண்டு அஞ்சி ஓடுகிறது. ஓடிஓடி ஒளிவதே அதன் வாழ்க்கைவிதியாகிறது. தருணம் கிடைத்தால் பாய்ந்து பாம்பை ஒருமுறை கடித்துக் குதறவும் செய்கிறது. ஆனால் கூட்டமாக வந்து சூழ்ந்துகொள்ளும் பாம்புகளின் நஞ்சுக்கு இறுதியில் இரையாகி மடிகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைநிலையும் கிட்டத்தட்ட இதுபோலவே இருக்கிறது என்று சொல்லவேண்டும்.

தம் கருப்பு நிறத்தை மறைத்துக்கொள்ள முடியாத ஏழைகள் காலமெல்லாம் ஆதரவைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள், முடிந்தவரை எதிர்த்து நிற்கிறார்கள். மோதல் வலுக்கும்போது தோற்கடித்து கொல்லப்படுகிறார்கள். அவ்விதமாக கொல்லப்பட்ட ஓர் எளிய இளைஞனான சலீம் வாழ்க்கையை இந்த நாவலில் தஹர் பென் ஜெலூன் சித்தரித்துக் காட்டுகிறார்.

ஹஃபீத் என்னும் இளைஞன் கதையின் தொடக்கத்தில் இடம்பெறுகிறான். அமீருக்கு நெருங்கிய உறவினன் அவன். கினியா நாட்டுக்கு கொள்முதலுக்காகச் சென்றிருந்த அவன் தந்தை கினியா நாட்டிலிருந்து அழைத்து வந்திருந்த கருப்பு அடிமைப்பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்குப் பிறந்தவன் அவன். கலப்புக்குழந்தை. தூய இனவாதம் பேசும் மக்கள் பார்வையில் வெறுப்புக்கும் அவமதிப்புக்கும் ஆளானவன். தொடக்கத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அதிகாரபூர்வமற்ற வழிகாட்டியாக வேலை செய்து கிடைத்த வருமானத்தில் வாழ்ந்துவந்தான். எங்கும் தொடர்ந்து துரத்தும் இனவாதப் பிரச்சினை அங்கும் வந்து அவனை வெளியேற்றுகிறது. அவன் அந்த வழிகாட்டி வேலையை உதறுகிறான். வேறு சில்லறை வேலைகள் செய்து பொருளீட்டுகிறான். தன் தகுதியை வளர்த்துக்கொள்ள வீட்டிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தி ஏராளமான நூல்களைப் படித்து தன் அறிவை வளர்த்துக்கொள்கிறான். இறுதியில் வாய்ப்பு கிடைத்ததும் கடவுச்சீட்டு பெற்று நாடைவிட்டு வெளியேறி ஸ்டாக்ஹோமுக்குச் சென்றுவிடுகிறான். ஹஃபீத்தை உயிர்பிழைக்க வைத்தது அவனுடைய கல்வியும் நுட்பமான திட்டமிடலும். ஆவேசமும் மோதலும் மூர்க்கரின் முன்னால் எடுபடாது என்பதை அவன் தொடக்கத்திலேயே புரிந்துகொள்கிறான். உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் உள்ள இடம் தேடி பறந்துபோய்விடுகிறான். ஹஃபீத்தின் நிலைமைக்கும் சலீமின் நிலைமைக்கும் வேறுபாடு எதுவுமில்லை. ஹஃபீத் சென்ற பாதை வாழ்க்கையை நோக்கி அழைத்துச் சென்றது. சலீம் சென்ற பாதை மரணத்தை நோக்கி அழைத்துச் சென்றது. ஜெலூன் தன் நாவலில் எதைப்பற்றியும் தீர்ப்பு சொல்லவில்லை. மாறாக, தன் நாவலை வரலாற்றின் சாட்சியாக மாற்றுகிறார்.

(உல்லாசத்திருமணம். ஆப்பிரிக்க நாவல். தஹர் பென் ஜெலூன். பிரெஞ்சிலிருந்து தமிழில் சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர். தடாகம் பதிப்பகம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600041)

வத்திகுச்சி கோபுரம் – பாவண்ணன் சிறுகதை

அதோ பாருடா, அங்க ஒரு நந்தியாவட்டை மரம். பச்சை பெய்ண்ட் அடிச்ச வீடு. கல்யாணராமன் சார் சொன்ன அடையாளம். அதுவாதான் இருக்கும்.” என்று சுட்டிக்காட்டினான் அண்ணாமலை. நானும் இளங்கோவும் ஒரே நேரத்தில் அந்தப் பக்கம் பார்த்தோம். பேருந்து நிலையத்திலிருந்து பத்தே நிமிடத்தில் நடந்துவந்துவிட்டோம். அதைக்கூட கல்யாணராமன் போனிலேயே சொல்லியிருந்தார். “ஆட்டோவெல்லாம் வேணாம் தம்பி. புது ஆளுன்னு தெரிஞ்சிட்டா அம்பது குடு நூறு குடுன்னு கேப்பாங்க. ஸ்டேன்ட்லேருந்து வில்லினூரு பக்கமா ஒரே ரோடு. மூனாவது லெஃப்ட், ரெண்டாவது ரைட். நடக்கற தூரம்தான்அவர் சொற்கள் ஒவ்வொன்றும் இன்னும் காதில் ஒலிப்பதுபோல இருந்தது.

உற்சாகமாக நடக்கத் தொடங்கிய கணத்தில், இளங்கோ தடுத்தான். கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காட்டி, “நாம பத்து மணின்னுதான் சொன்னம். இன்னும் கால்மணி நேரம் இருக்குது. முன்கூட்டியே போய் நின்னு அவர சங்கடத்துக்கு ஆளாக்கிடக்கூடாதுஎன்று நிறுத்தினான். “போனா என்னடா? ஏன் சீக்கிரமா வந்திங்கன்னு கேப்பாரா?” என்ற அண்ணாமலையின் கண்களில் கேள்வி திரண்டு நின்றது. “ஏதாவது எழுத்து வேலையில இருந்தா, நம்மால கெட்டதா ஆவக்கூடாதுடா, புரிஞ்சிக்கோஎன்றான் இளங்கோ.

சாலைத் திருப்பம் வரைக்கும் மறுபடியும் நடந்துசென்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம். கேரளா பதிவெண்ணைக் கொண்ட ஒரு சுற்றுலாப் பேருந்து வாகன நெருக்கடிகளில் சிக்கி நின்றிருந்தது. திறந்திருக்கும் ஜன்னல்களில் அடுக்கிவைத்ததுபோல சிறுவர்சிறுமிகளின் முகங்கள். குட்மார்னிங் அங்கிள் என்று கையசைத்த அவர்களின் முகங்களில் சிரிப்பு வழிந்தது. நான் இரண்டு கைகளையும் தூக்கி அசைத்தேன். குழந்தைகள் என்னைச் சுட்டிக்காட்டி சிரிப்பதைப் பார்த்தேன். கல்யாணராமனின் நீலவானம் நாவலில் கடற்கரையோரமாக வந்து நிற்கிற ஒரு சுற்றுலா வாகனத்தைப்பற்றிய சித்திரம் இடம்பெறுவது எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே இளங்கோவிடம் அதைச் சொன்னேன். “நீல வானம் படிச்சதிலிருந்து உலகத்துல ஒனக்கு எதைப் பாத்தாலும் நீல வானத்துல இருக்கறமாதிரியே தோணுதுபோல” என்று சிரித்தான் அவன்.

சரியாகப் பத்து மணிக்கு கல்யாணராமன் வீட்டுக்கு வந்துவிட்டோம். சுற்றுச்சுவர் கதவிலிருந்து வீடு சற்றே தள்ளியிருந்தது. ஒரு பக்கம் நந்தியாவட்டை, எலுமிச்சை, நாரத்தை மரங்கள். மற்றொரு பக்கத்தில் வாழைகள், கத்தரிக்காய், தக்காளிச் செடிகள். வாழையைச் சுற்றி வெற்றிலைக்கொடி படர்ந்திருந்த்து.

கதவு திறந்தே இருந்தது. குனிந்த தலை நிமிராமல் ஒரு சிறுமி வத்திக்குச்சிகளை அடுக்கி இணைத்து ஏதோ ஓர் ஆட்டத்தில் மூழ்கியிருந்தாள். நாங்கள் நிற்பதை அவள் உணரவே இல்லை. அதற்குள் நைட்டியோடு பின்கட்டிலிருந்து வந்தவர் எங்களைப் பார்த்துவிட்டு வேகமாக வாசலுக்கு வந்துயாரு வேணும்?” என்று கேட்டார். அண்ணாமலை நிமிர்ந்து பார்த்துகல்யாணராமன்…..” என்று இழுத்தான். அதற்குள் அவர் கூடத்திலிருந்து உள்ளறையின் பக்கமாகச் சென்றுஎன்னங்க, யாரோ உங்கள தேடி வந்திருக்காங்கஎன்று தெரியப்படுத்திவிட்டு, அதே வேகத்தில் வாசலுக்கு வந்துவராரு. நீங்க உள்ள வாங்கஎன்றார். அப்போதுதான் அந்தச் சிறுமி எங்களைப் பார்த்தாள். “என்ன கண்ணு இது?” என்று பேசத் தொடங்கிவிட்டான் அண்ணாமலை. “வத்திக்குச்சி கோபுரம். நூறு குச்சியில செய்யணும். ஒரு குச்சி கூட அதிகமாகவும் ஆகக்கூடாது. கொறயவும் கூடாது. அதான் கண்டிஷன்என்றாள்.

கன்னி நிலம், வசந்தத்தைத் தேடி, கூடடையும் பறவைகள் நாவல்களின் அட்டைப்படங்களாக உள்ள மூன்று ஓவியங்களும் தேதி காலண்டருக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கின. அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு கைகளையும் சேர்த்து “வாங்க வாங்க. வணக்கம்” என்று வணங்கியபடியே கல்யாணராமன் வெளியே வந்துவிட்டார். “சரியா சொன்ன நேரத்துக்கு வந்துட்டிங்க. வழி கண்டுபிடிக்க ஏதாவது சிரமமிருந்ததா?” என்றபடி ஆவலுடன் எங்களோடு கைகுலுக்கினார். ”சார், நான் பிரபு. இவன் அண்ணாமலை. இவன் இளங்கோ. எல்லாருமே நெய்வேலிதான் சார்” என்று அறிமுகப்படுத்தினேன். ”எங்க எல்லாருக்குமெ உங்க நாவல்கள் ரொம்ப புடிக்கும். ரோசம்மா ட்ரையாலஜிய பத்தி நாங்க பேசாத நாளே இல்லை சார்”

அப்பா, கோபுரம் தயார், இங்க பாருங்க, ஒரு குச்சி கூட மிச்சமில்லை” என்றபடி கைகளை உயர்த்தி வெற்றிக்குரல் எழுப்பிய சிறுமியிடம் “சரி சரி, அகிலா, இங்க பார். இவுங்ககிட்ட பேசு” என்று அழைத்தார் கல்யாணராமன். எங்களிடம் “எங்க மகள்” என்றார். “நான்தான் மொதல்ல பேசனேன்” என்றாள் அவள். தண்ணீர் நிரம்பிய மூன்று தம்ளர்கள் வைத்த தட்டை எடுத்துக்கொண்டு வந்தவரிடம் “இவுங்க நெய்வேலிம்மா. புது வாசகர்கள்” என்று அறிமுகப்படுத்தினார். பிறகு எங்களிடம் “பரமேஸ்வரி. என் மனைவி” என்று சொன்னார். நாங்கள் வணக்கம் சொன்னோம். அவர் புன்னகையோடு “வணக்கம். எடுத்துக்குங்க. பேசிட்டே இருங்க. டீ போடறன்” என்று திரும்பினார்.

கல்யாணராமன் ஜன்னலோரமாக இருந்த கைபேசியை எடுத்து வத்திக்குச்சி கோபுரத்தை நாலைந்து கோணங்களில் படமெடுத்தார். பிறகு “சரி அகிலா, கலைச்சிட்டு வேற விதமா முயற்சி செய்றியா” என்று கேட்டார். அவள் உற்சாகமாகத் தலையைசைத்தபடியே உட்கார்ந்தாள். அப்போது அவள் தலையைத் தொட்டு புன்னகையோடு அசைத்தார் கல்யாணராமன். பிறகு அருகிலிருந்த மடிப்புநாற்காலிகளை எடுத்துக்கொண்டு “நாம் அப்படி மரத்தடிக்கு போயிடலாமா? பேச வசதியா இருக்கும்” என்றார். அவர் இரண்டை எடுக்க, நான் இரண்டை எடுத்துக்கொண்டு எலுமிச்சை மரத்தடிக்கு வந்தோம்.

நீங்க எழுதறீங்களா? ஏதாச்சிம் பத்திரிகைல வந்திருக்குதா?” என்று கல்யாணராமனே பேச்சைத் தொடங்கினார். “நாங்க வெறும் வாசகர்கள்தான் சார். இதுவரைக்கும் எழுதணும்னு தோணியதில்ல. ஒருவேள அப்படி ஒரு வேகம் வந்தா எதிர்காலத்துல எழுதலாம்……” கூச்சத்தோடு சொன்னான் இளங்கோ.

நான் கல்யாணராமன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். “எழுதற வேகம்லாம் அப்படித்தான் சுனாமிமாதிரி திடீர்னு வந்து ஆள இழுத்துட்டு போயிடும். எழுத்துல திட்டம் போட்டு செய்யறதுலாம் நடக்காத காரியம்” என்றார் அவர்.

எனக்கு நீல வானம் நாவலைப்பற்றி பேசவேண்டும்போல தோன்றியது. அதில் வரும் ராகவன் பாத்திரம் செய்கிற விவாதங்கள் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் பிடித்தவை. அதைப்பற்றி பேசத் தொடங்கியதும் சொற்கள் அருவிபோல பொங்கிப்பொங்கி வந்தன. கல்யாணராமன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “சார், அவன் அந்த நாவலை பத்து தடவைக்கு மேல படிச்சிட்டான் சார். விட்டா மனப்பாடமாவே ஒப்பிச்சிடுவான்” என்றான் அண்ணாமலை. கல்யாணராமனின் சதுரமுகத்துக்கு புன்னகை அழகாக இருந்தது.

இளங்கோ “எல்லாருமே கவிதை கதைனு தொடங்கி படிப்படியா நாவலுக்கு போகறததான் பாத்திருக்கேன். நீங்க எப்பிடி சார் நேரிடையா நாவலுக்குள்ள போயிட்டீங்க?” என்று கேட்டான்.

கல்யாணராமன் “எழுதணும்ங்கற வெறிதான் எனக்குள்ள எழுதற வேகம் உண்டாவறதுக்கு தூண்டுகோல். அப்படி ஒரு நெருக்கடி. அந்த காலத்துல அப்படி ஒரு வாழ்க்க. ஒரு மூட்ட கல்ல தூக்கி என் தலமேல வச்சமாதிரி இருக்கும் அப்ப. அந்த அளவுக்கு பாரம். முதுவுல வச்ச உப்புமூட்டய ஆத்துக்குள்ள உக்காந்து கழுத கரைச்சிக்கிற கத தெரியுமில்ல உங்களுக்கு. அந்த மாதிரி எழுத்துல கரைச்சிகிட்டேன் நான்…..” என்றார். அவருடைய பார்வை எங்களிடமிருந்து விலகி சில நொடிகள் தொலைவில் தெரிந்த வாழைமரங்களின் பக்கம் திரும்பி நிலைத்தது. பெரிய மரத்தைச் சுற்றி ஏராளமான சின்னச்சின்ன கன்றுகள். செய்தித்தாளைச் சுருட்டி வைத்ததுபோன்ற இலைச்சுருள்கள். சுருள்களுக்கிடையில் பறந்து தாவும் சிட்டுக்குருவிகள்.

ஒருகணம் எங்களை நோக்கித் திரும்பிய கல்யாணராமன் “நான் உங்களமாதிரி இருந்த காலத்துலேருந்து சொல்றேன். அப்பதான் எல்லாமே வெளங்கும்” என்றார். “சொல்லுங்க சார்” என்றபடி அவர் முகத்தையே பார்த்தோம் நாங்கள்.

எங்க அப்பாவுக்கு எங்க அம்மா ரெண்டாம்தாரம். கோவில்ல வச்சி மொறயா தாலி கட்டின கல்யாணம்தான். ஆனா தனியா வீடெடுத்து தங்க வச்சிருந்தாரு அப்பா. அம்மாவுக்கு தையல் தெரியும். மார்க்கெட்ல நாலஞ்சி கடையில தொடர்ச்சியா அவுங்களுக்கு ஆர்டர் குடுப்பாங்க. தச்சி முடிச்சதும் கொண்டும் போயி குடுத்துட்டு அம்மா பணம் வாங்கிவந்துடுவாங்க. அப்பா மார்க்கெட்ல ஒரு துணிக்கட வச்சிருந்தாரு. அப்படித்தான் ரெண்டு பேருக்குள்ள பழக்கம். அது கல்யாணம் வரைக்கும் இழுத்துவந்துட்டுது. அம்மாவுக்கு கூடப் பொறந்தவங்க, சொந்தக்காரங்கன்னு சொல்ல யாருமே இல்ல. அவுங்கம்மா மட்டும்தான் அவுங்களுக்கு. அவுங்களும் சின்ன வயசில ரெண்டாம்தாரமா வந்தவங்க. எல்லாம் விதி. வேற எப்படி சொல்லமுடியும்?”

கல்யாணராமனின் முகத்தில் திடீரென ஒரு இருள் வந்து கவிவதைப் பார்க்கமுடிந்தது. அதே நேரத்தில் “அப்பா டீ” என்றபடி இரு கைகளாலும் டீக்கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டைத் தாங்கியபடி அடிமேல் அடிவைத்து வந்து கொண்டிருந்தாள் அகிலா. அந்தக் குரல் கேட்டுத்தான் கல்யாணராமன் திரும்பினார். “நீ ஜூஸ் குடிச்சியா அகிலா?” என்றபடி கல்யாணராமன் ஒவ்வொரு கோப்பையாக எடுத்து எங்களுக்குக் கொடுத்தார். “இன்னும் இல்லப்பா” என்ற சிறுமியிடம் “சரி, அம்மாகிட்ட போய் ஜூஸ் வாங்கி குடி” என்று சொல்லி அனுப்பினார். ஆவி பறக்கும் கோப்பையையே ஒருகணம் பார்த்திருந்த கல்யாணராமன் முதல் மிடறை சூடாகவே பருகினார்.

சனி ஞாயிறுல மட்டும்தான் எங்க வீட்டுக்கு வருவாரு. மத்த நாள்ல பெரிய வீட்டுல இருப்பாரு. நானும் தங்கச்சியும் பொறந்தோம். அப்பா மெட்ராஸ்ல வேல செய்றவரு, லீவ் நாள்லதான் இங்க வந்துட்டு போவாருன்னு ஆரம்பத்துல எங்ககிட்ட அம்மா சொல்லி வச்சிருந்தாங்க. நானும் அதத்தான் உண்மைன்னு நம்பிட்டிருந்தேன். அப்பறம் படிப்படியா நானே புரிஞ்சிகிட்டேன். எல்லார் ஊட்டுலயும் அம்மா அப்பா சேந்து நிக்கறமாதிரி போட்டோ புடிச்சி வச்சிருக்காங்களே, நீங்க ரெண்டு பேரும் ஏம்மா புடிச்சி வச்சிக்கலைன்னு ஒருநாள் தெரியாத்தனமா கேட்டுட்டன். என்னைக்கும் கோவப்படாத அம்மா அன்னைக்கு கோவத்துல அடிஅடினு அடிச்சிட்டாங்க. முதுவுல தடிப்பு தடிப்பா ஆயிடுச்சி. அப்பறம் ராத்திரி அழுதுகினே வலிக்குதா கண்ணு வலிக்குதா கண்ணுனு தடவிக் குடுத்து மருந்துலாம் தடவனாங்க. எங்க கல்யாணத்தன்னைக்கு ஊருக்கே லீவ் நாளுடா. ஒரு கடையும் இல்ல. அதான் எடுக்கலை, புரிதான்னு பட்டும் படாம சொன்னாங்க. நானும் நம்பிட்டமாதிரி சரிம்மான்னு தலையாட்டிகினேன். அதுக்கப்பறம் எங்க அம்மாவ நான் சங்கடப்படுத்தனதில்ல.”

டீயை அருந்திவிட்டு கோப்பையை கீழே வைத்தார். நாங்களும் அருந்தி முடித்தோம்.

எங்க அப்பா கெட்டவரா நல்லவரானு நெனச்சி பாக்கற நெலயில நாங்க இல்ல. ஆனா அவுருதான் எங்க ரெண்டு பேரயும் படிக்க வச்சாரு. துணிமணி எடுத்துக் கொடுத்தாரு. அந்த நன்றிய நான் ஒருநாளும் மறக்கமாட்டேன். தங்கச்சி ப்ளஸ் டூ முடிச்சிட்டு ஒரு வருஷம் டீச்சர் ட்ரெய்னிங் படிச்சிது. யார்யாரயோ புடிச்சி அத ஒரு ஸ்கூல்ல டீச்சராக்கிட்டாரு அவரு. அம்மா அப்பவும் தச்சிட்டுதான் இருந்தாங்க. நான் டிகிரி முடிச்சிட்டு ஸ்டாஃப் செலக்‌ஷன், பேங்க் எக்ஸாம்னு மாத்தி மாத்தி எழுதிட்டிருந்தன். ஒன்னும் சரியா அமையலை. அந்த கம்பனி, இந்த கம்பனின்னு பேர் சொல்லி எங்கஎங்கயோ என்ன போன்னு அடிக்கடி சொல்வாரு அப்பா. எனக்கு அங்கல்லாம் போவ புடிக்காது. போவமாட்டன். கடைசியில அவனுக்கு சுயபுத்தியும் இல்ல, சொல்புத்தியும் இல்ல, நீயாச்சிம் எடுத்துச் சொல்லக்கூடாதான்னு அம்மாவ திட்டிட்டு போயிடுவாரு.”

கசப்பான ஒரு புன்னகை அவருடைய உதடுகளில் வந்து படிவதை நான் பார்த்தேன். ஒரு கணத்துக்குப் பிறகு அவர் மீண்டும் தொடங்கினார். ”என்னைக்கும் என்ன திட்டி பேசாத அம்மா ஒருநாள் மனசு நொந்து திட்டனாங்க. டெலிபோன் டிப்பார்ட்மெண்ட்க்கு எழுதி போட்டிருக்கேம்மா. இன்னும் ரெண்டு மூனு மாசத்துல பதில் வரும்மான்னு நான் சொன்னத, அவுங்க நம்ப தயாராவே இல்ல. இதே கதையைத்தான் நீ மூனு வருஷமா சொல்லிட்டிருக்க போடானு எழுந்து போயிட்டாங்க. நம்மளவிட வயசுல சின்ன புள்ள சம்பாதிச்சி கொண்டாந்து குடுக்கற பணத்துல சாப்படறமேன்னு ஒரு வெக்கம் வரணும்டா ஒனக்கு. உப்பு போட்டு சாப்படறவனுக்கு அதுதான் அடையாளம்னு அடுப்ப பாத்துகினே சொன்னாங்க. எனக்கு அப்படியே நாக்க புடுங்கிக்கணும்போல இருந்திச்சி.”

நாங்கள் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் தொடர்ந்து “ஒருநாள் அம்மாகிட்ட குடுக்கறதுக்காக துணிலோட் எடுத்தாந்தாரு அப்பா. என்கிட்ட ஒரு சீட்ட காட்டி இந்த அட்ரஸ்ல போயி பாரு. ஏதோ ஒரு அசிஸ்டெண்ட் வேணுமாம். நம்ம கட பேர சொல்லு. மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபா குடுக்கறம்னு சொன்னாங்கன்னு சொன்னாரு. ரெண்டாயிரம் ரூபா ரெண்டாயிரம் ரூபானு திருப்பித்திருப்பி சொல்லறத கேட்ட சமயத்துல எனக்கு தலையில சுத்தியால அடிக்கறமாதிரி இருந்தது. கவுர்மெண்ட் ஆபீஸ்ல அங்க குமாஸ்தா இங்க குமாஸ்தானு போனா கூட அதான் குடுப்பானுங்க தெரிமான்னாரு. நான் சீட்ட வாங்கி பாத்தேன். கம்பெனி மாதிரி தெரியலை. ஏதோ வீட்டு அட்ரஸ். நான் பதில் சொல்லாம சும்மா இருந்தன்.” என்றார்.

திடீர்னு அவர் அம்மா பக்கம் பாத்து சத்தமா பேசனாரு. பேசப்பேச குரல் உடைஞ்சி ஒரு கட்டத்துல அழ ஆரம்பிச்சிட்டாரு. அங்கயும் பசங்க பெரிசாய்ட்டெ இருக்காங்க, தெரியுமில்ல. அத புரிஞ்சிக்கணும். என்னைக்காவது ஒரு நாள் ஊட்ட விட்டு எங்கயும் போவக்கூடாதுனு என்ன புடிச்சி நிறுத்தி வச்சிட்டாங்கன்னா நான் என்ன பண்ணமுடியும். இல்ல, எனக்கே ஒன்னு ஆவுது, அப்ப நீ என்ன செய்வ? இவன ஒரு ஆளாக்கி நிக்க வச்சிட்டா நிம்மதியா இருக்கலாம்னு நெனைக்கறது தப்பா? இப்பிடி வீம்பு புடிச்சி அலயறானே ஒம் புள்ள. தான் இஷ்டத்துக்குத்தான் நடப்பேன்னு ஆளுக்கு ஆள் நெனைச்சாங்கன்னா, அப்பறம் இங்க நான் எதுக்குனு கேட்டுட்டு கண்ண தொடச்சிகினே வெளிய போயிட்டாரு…..”

கல்யாணராமன் என்னைப் பார்த்தபடி ”அம்மா என்கிட்ட ஒரு வார்த்த கூட பேசலை. மனசுக்குள்ள அது எனக்கு உறுத்தலா இருந்திச்சி. வீட்டுக்குள்ள இருக்கவே புடிக்கலை. வேகமா வெளிய வந்துட்டன். கையில பத்து பைசா கெடயாது. நெல்லித்தோப்புக்கு நடந்தே போனேன். அப்பா குடுத்திருந்த அட்ரஸ் சீட்டுல இருந்த வீட்ட கண்டுபிடிச்சன். பெரிய ஊடு. பிரான்ஸ்காரங்க இருக்கற ஊடு மாதிரி இருந்திச்சி. வாட்ச்மேன் தாத்தாகிட்ட விவரம் சொன்னேன். அவர் வாசல்லேர்ந்தே இன்டர்காம்ல தகவல் சொன்னாரு. அப்பறமா என்ன உள்ள போவ சொன்னாரு” என்றார்.

ஒரு காகம் வேகமாகப் பறந்துவந்து நாரத்தை மரக்கிளையில் அமர்ந்து சத்தம் போடாமல் எங்களையே சில நொடிகள் பார்த்தபடி அமர்ந்தது. பிறகு விர்ரென பறந்து போனது.

கூடத்துல ஒரு பிரம்பு நாற்காலியில தடியா ஒரு அம்மா உக்காந்து டிவி பார்த்துட்டிருந்தாங்க. சந்தனக்கடத்தல் வீரப்பன் யாரயோ கடத்திம்போயி காட்டுக்குள்ள வச்சிருக்கறதா செய்தி ஒடிட்டிருந்தது. அவுங்க உட்கார்ந்திருந்த எடத்துக்கு மேல சுவத்துல ஒரு பெரிய படம் ஆணியில மாட்டியிருந்திச்சி. சந்தனமாலை போட்டிருந்தாங்க. தெரிஞ்ச முகமாயிருக்குதேன்னு உத்து பாத்துகினே ஒரு நொடி யோசிச்சேன். ஏராளமான ஆட்கள் பேருங்க மனசுக்குள்ள முட்டி மோதிச்சி. யாரு யாருனு உருட்டிகினே இருந்தேன். சட்டுனு ஞாபகம் வந்திடுச்சி. முத்துசாமி நாயக்கர். பாண்டிச்சேரியில ஹரிஜன சேவா சங்கம் நடத்தனவரு. சுப்பையா கம்யூனிஸ்ட் கட்சிக்கு போயிட்ட பிற்கு சங்கத்தை அவர்தான் பாத்துகிட்டாரு. அந்த அம்மா பக்கமா திரும்பி இவர் முத்துசாமி நாயக்கர்தானன்னு கேட்டேன். ஆமாம்னு அந்த அம்மா தலயாட்டிகினே எங்க அப்பான்னு சொன்னாங்க. அப்பறமா என் பேரு, படிப்பு விவரம்லாம் கேட்டாங்க. எல்லாத்தயும் சொன்னேன். கடைசியா உனக்கு முருகேசன் என்ன வேணும்னு கேட்டாங்க. அப்பான்னு சொன்னேன்.”

நெய்வேலி என்பதாலோ என்னமோ எங்களுக்கு அந்தப் பெயர் அறிமுகமான பெயராக இல்லை. அதனால் அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். ”முத்துசாமி நாயக்கர தெரிஞ்சிருக்குதுன்னா ஒனக்கு ரோசம்மாவயும் தெரிஞ்சிருக்கணுமேன்னு சொல்லிட்டே அந்த அம்மா என்ன பாத்தாங்க. நாயக்கர் மனைவி, ரெட்டியார்பாளையம் கிறிஸ்து ஆசிரமம்னு சொன்னேன். எங்கம்மாதான் அதுன்னு சொன்னாங்க. சட்டுனு அவுங்க பேர்ல ஒரு மதிப்பும் மரியாதயும் என் மனசுல கூடுதலாச்சி. என் பேரு வெண்ணிலான்னு சொன்னாங்க. நான் கல்யாணராமன்னு சொன்னேன். அம்மாவுக்கு தொண்ணூறு வயசாவுது. இங்கதான் கீழ அந்த அறையில இருக்காங்க. பகல்ல பாத்துக்க ஒரு நர்ஸ், ராத்திரியில பாத்துக்க ஒரு நர்ஸ்னு தனித்தனியா இருக்காங்க அதெல்லாம் கவலயில்ல. அப்பா போயி பதினஞ்சி வருஷமாவுது. அதுலேருந்து அம்மாவுக்கு ஒரே பொழுதுபோக்கு பழைய டைரிங்கள எடுத்து படிக்கறதுதான். அப்பாவுடைய டைரி ஒரு அம்பது இருக்கும். அம்மாவே எழுதன டைரி ஒரு அம்பது இருக்கும். கைக்கு கெடச்ச டைரிய எடுத்து காலையிலேந்து படிச்சிட்டே இருப்பாங்க. அவுங்களா சிரிச்சிக்குவாங்க. அவுங்களா அழுவாங்க. என்னன்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டாங்க. படிச்சி படிச்சி அந்த பழைய காலத்த அவுங்க மறுமடியும் மனசுக்குள்ளயே உண்டாக்கிக்கறாங்கன்னு நெனைக்கறேன். அவுங்க இந்த காலத்துக்கே வர விரும்பலை. ரெண்டு பேரும் சேந்து ஒன்னா வாழ்ந்த காலம் மட்டுமே போதும்னு நிறுத்திட்டாங்க. சத்தியாகிரகம், சுதந்திரப்போராட்டம், ஆசிரமம்னு அந்த காலத்துக்குள்ளயே இருக்கணும்னு ஆசைப்படறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். ஒரு வகையில அதுவும் நல்லதுதான். இந்த காலத்துல புதுசா தெரிஞ்சிக்க என்ன இருக்குது. அடிதடி, குத்து, பதவிவெறி, பொறாமை அவ்ளோதானே.”

கல்யாணராமனின் குரலில் ஒருவித உற்சாகம் வந்து படிவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ”இந்த பத்து வருஷத்துல அம்மாவுக்கு மூனுதரம் ஆப்பரேஷன் நடந்திட்டுது. மேக்சிமம் பாய்ன்ட்டுக்கு போயிட்டுது பார்வை. லென்ஸ் வைக்கலாம்ன்னா இந்த வயசுக்கு தாங்காதுன்னு சொல்லிட்டாரு டாக்டரு. ஆனா அம்மாவால படிக்காம இருக்கமுடியலை. பார்வை கொறயுதுன்னு சொன்னதுமே லென்ஸ் வச்சி படிக்க பழகிட்டாங்க. ஆனா அது ஆபத்துன்னு சொல்றாரு டாக்டரு. கண்ணுல துணிய கட்டிகினு கொஞ்ச நாள் எதயும் பார்க்காம இருக்கறது நல்லதுன்னு சொன்னாரு அவர். இப்ப ஒரு பத்து நாளா அம்மாகிட்ட டைரிங்கள குடுக்கறதில்ல. அலமாரியில வச்சி பூட்டிட்டோம். ஆபீஸ் டைம் மாதிரி டென் டு சிக்ஸ். அம்மாவுக்கு நீங்க டைரி படிக்கணும். சிம்பிள். அவ்ளோதான். லஞ்ச் நீங்க இங்கயே சாப்ட்டுக்கலாம்னு சொன்னாங்க. பிறகு வாங்க, அம்மாவ பாருங்கன்னு உள்ள கூப்டும் போனாங்க. வதங்கிப் போன பூசணிக்கொடிமாதிரி ஒரு ஈச்சர்ல படுத்திருந்தாங்க ரோசம்மா. ஒரு காட்டன் நைட்டி. மடியில ஒரு சின்ன துண்டு. அவ்ளோதான்.”

பக்கத்துல ஒரு நர்ஸ் பொண்ணு இருந்தா. வெண்ணிலா மேடம் என்னை ரோசம்மா முன்னால நிறுத்தி டைரி படிச்சி காட்ட ஒரு தம்பி வந்திருக்காரு. ஒன்ன பத்தியும் அப்பாவ பத்தியும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்காருன்னு சொன்னாங்க. அப்படியே மெதுவா தலய நிமுத்தி உக்காந்தாங்க ரோசம்மா. ரெண்டு கைங்களையும் நீட்டினாங்க. உங்களத்தான் தேடறாங்க, புடிங்கன்னு சொன்னாங்க வெண்ணிலா மேடம். நான் கைய நீட்டி அவுங்க கைய புடிச்சேன். ஈர மணல்ல கைய வச்சமாதிரி எனக்கு சிலுத்து போச்சி. அவுங்க மெதுவா ஒன் பேரென்ன ராஜான்னு கேட்டாங்க. அந்தக் குரல கேக்கும்போது என்னமோ நெஞ்சயே அடைக்கிறமாதிரி இருந்தது. . நான் பேர சொன்னதும் ரெண்டு மூனு தரம் அதயே திருப்பித்திருப்பி சொன்னாங்க. சரிம்மா, நாளையிலேர்ந்து வருவாரு சரியான்னு எழுந்திருந்தாங்க வெண்ணிலா மேடம். நாளைக்கி வரைக்கும் எதுக்கு மேடம் தள்ளிப் போடணும். இப்பவே ஆரம்பிச்சிடலாம் மேடம். வீட்டுல போயி என்ன செய்யப் போறேன், சாய்ங்காலம்வரைக்கும் படிச்சிட்டு போறேன்னு சொன்னன். அவுங்களுக்கு ஒரே ஆச்சரியம். அம்மா, அவரு இப்பவே ஆரம்பிக்கறாராம். படிக்க சொல்லட்டுமான்னு ரோசம்மாகிட்ட கேட்டாங்க. அழகா சிரிச்சிகிட்டே சரின்னு தலயாட்டனாங்க ரோசம்மா. வெண்ணிலா மேடம் அலமாரிய தெறந்து கைக்கு கிடைத்த ஒரு டைரிய எடுத்து குடுத்தாங்க. 1947 டைரி. நானும் அதைப் புரட்டி தோராயமா ஒரு பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பிச்சேன். படிக்க படிக்கத்தான் ரோசம்மா அந்த பழைய டைரிங்கள ஏன் திரும்பித்திரும்பி படிக்கறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன். உண்மையிலயே அந்த பழைய காலம் கண்முன்னால் விரிஞ்சிது. சாயங்காலம் கெளம்பற சமயத்துல என்ன பக்கத்துல கூப்ட்டு கைய புடிச்சி காட் ப்ளஸ் யூ மை டியர் சைல்ட்னு சொன்னாங்க. ஏன்னு தெரியலை. என் கண்ணுலாம் கலங்கி போயிடுச்சி.”

கல்யாணராமனின் சொற்கள் வழியாக என்னால் அந்தக் காட்சியை கற்பனை செய்துகொள்ள முடிந்தது. எங்கள் கேள்விகளோ, சந்தேகங்களோ அவருடைய பேச்சின் ஒட்டத்தைத் தடுத்துவிடுமோ என அஞ்சி அமைதியாக அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தோம்.

டெலிபோன்ஸ்லேருந்து சீக்கிரமா லெட்டர் வந்துடும்னு நெனச்ச நான் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி வந்தா போதும்னு நெனைச்சிக்கற அளவுக்கு அந்த வேலை எனக்கு ரொம்ப புடிச்சிட்டுது. முதல் மாசம் சம்பளம் வாங்கியாந்த அன்னைக்கு அப்பா எங்க ஊட்ல இருந்தாரு. இப்ப திருப்திதான ஒங்களுக்குன்னு மனசுக்குள்ளயே நெனச்சிகினு நான் அவரு கையிலதான் அந்த பணத்த குடுத்தேன். அப்பா ஒரு நொடி என்ன நிமுந்து பாத்துட்டு சட்டுனு குனிஞ்சி தேம்பித்தேம்பி அழ ஆரம்பிச்சிட்டாரு. எனக்கு ஒடம்பே நடுங்கிட்டுது. அப்பா ஒன்ன பாழுங்குழியில தள்ளிட்டன்னு நெனச்சிக்காத கல்யாணராமா, என் காலத்துக்குள்ள நீ உன் கால்ல நிக்கறத பாக்கணும்னுதான் அப்பா நெனச்சேன். இனிமேல உன் உழைப்புல நீ எந்த உயரத்துக்கு போனாலும் சந்தோஷம்தாம்பான்னு சொல்லிட்டு அம்மாகிட்ட குடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கன்னு கைய காட்டனாரு. எனக்கும் அழுகையா வந்துட்டுது. ரெண்டு பேரயும் நிக்க வச்சி கால்ல உழுந்தன். ரெண்டு பேருமே எனக்கு தின்னூரு பூசிவிட்டாங்க.”

டைரிங்கள படிக்கப்படிக்க ரோசம்மாவ பத்தியும் நாயக்கர பத்தியும் நல்லா புரிஞ்சிகிட்டேன். இங்க கல்வே காலேஜ்ல இண்டர்மீடியட், அப்பறம் மெட்ராஸ்ல பி..வும் லாவும் படிச்சிருக்காரு. அப்பதான் தற்செயலா சைதாப்பேட்டைல ஆயிரக்கணக்குல செருப்பு தைக்கிற தொழில செய்யறவங்க கூடியிருந்த ஒரு கூட்டத்துல காந்தி பேசறத அவரு கேட்டிருக்காரு. எளிய மக்களுக்கான சேவை எந்த அளவுக்கு மகத்தானதுன்னு அன்னைக்கு அவருக்கு புரிஞ்சிது. அன்னைலேருந்து அவர் கதருக்கு மாறிட்டாரு. அவரு வக்கீலா தொழில் செஞ்ச காலத்துல அவருகிட்ட வந்ததுல நூத்துக்கு தொண்ணூறு கேஸ் வாய்க்கா தகராறு வரப்புத்தகராறு கேஸ். சாதித்தகராறு கேஸ். கந்து வட்டி கடனுக்கு நெலத்த எழுதி வைக்கற கேஸ். குடிபோதை கேஸ். அவுங்களுக்கு கல்வி அறிவு இல்லாதது ஒரு பெரிய குறைன்னு அப்ப அவருக்கு தோணுது. பாதிக்கப்பட்டவங்கள்ல பெரும்பாலான ஆளுங்க அடிமட்டத்துல இருந்தவங்க. ஒருநாள் அவுங்க இருக்கற எடத்துக்கே போயி வாங்க, வந்து படிக்க கத்துக்குங்கன்னு கூப்ட்டாரு. ஒரு மரத்தடியில லாந்தர் வெளக்கு வச்சிகினு எழுத்து சொல்லிக் குடுத்தாரு. அவருடைய ஆர்வம் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா வளந்தது. ”

அந்த ஆர்வம் சுப்பையா ஆரம்பிச்ச ஹரிஜன சேவா சங்கத்துகிட்ட கொண்டுவந்து சேத்துது. அவர் செஞ்ச அதே வேலையை கிறிஸ்து ஆசிரமத்துலேருந்து செஞ்சவங்க ரோசம்மா. ஒருத்தவங்க செஞ்ச சேவை இன்னொருத்தவங்களுக்கு புடிச்சிருந்தது. ரெண்டு பேருக்கும் மனசு ஒத்து போனதால ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க. ஒரு இந்துவும் ஒரு கிறிஸ்துவப் பெண்ணும் கல்யாணம் செஞ்சிக்கணும்ன்னா மதம் மாறணும்ன்னு சொல்றதுண்டு. ஆனா, மதமாற்றத்துக்கு இடமில்லாமலே ரெண்டு பேரும் சேந்து வாழ்ந்தாங்க.”

ஒரு டைரியில நாயக்கரு தன்னுடைய சின்ன வயசு அனுபவங்கள எழுதி வச்சிருந்தாரு. அவருடைய அப்பாவுக்கு அவுங்க அம்மா ரெண்டாம் தாரம். அம்மாவுக்கு அம்மாவும் ரெண்டாம்தாரம். அவருக்கு ஒரு தங்கச்சி இருந்தது. அந்த பொண்ண யாரோ ஒரு பிரான்ஸ்காரனுக்கு ரெண்டாம்தாரமா கட்டி வைக்கறாரு அவுங்கப்பா. பத்து காசி சம்பாதிக்க உனக்கு துப்பிருக்கானு அவரு அப்பா அடிச்ச அடியிலதான் வெறுத்து போயி ஒரு அனாத ஆசிரமத்துல வந்து சேந்து படிக்க ஆரம்பிக்கறாரு. அந்த எடத்த படிக்கும்போது மனசே உருகிட்டுது. ஒரு நிமிஷம் கலங்கி நின்னு யோசிக்கற சமயத்துல அவரு வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்னுபோலவே இருக்குதேன்னு தோணிச்சி. அவருடைய தொடர்ச்சிதான் நானோன்னு கூட ஒரு எண்ணம் வந்தது. அந்த டைரிகள் மீது திடீர்னு ஒரு பெரிய ஈர்ப்பு வந்துட்டுது.”

மதிய சாப்பாட்டுக்குப் பிறகு ரோசம்மா ஒரு ரெண்டு மணி நேரம் தூங்குவாங்க. அந்த ரெண்டு மணி நேரமும் நான் மறுபடியும் வருஷ வாரியா டைரிகளை படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு பேர் வாழ்க்கயையும் என்னால துல்லியமா புரிஞ்சிக்க முடிஞ்சது. ஒருதரம் ஏதோ ஒரு டைரிய படிச்சிட்டிருந்தேன். அது அவரு ஜெயில்ல எழுதன டைரி. அவரு ஜெயில்ல இருந்த சமயத்துல ரோசம்மா கர்ப்பிணியா இருந்திருப்பாங்க போல. ஒவ்வொரு நாள பத்திய குறிப்பிலயும் அவுங்கள பத்தி ரெண்டு வரி இருந்தது. அத நான் படிச்சிட்டு போவும்போது திடீர்னு ரோசம்மா ஏதோ பதில் சொல்றமாதிரி இருந்தது. முதல்ல அது என் கற்பனையோன்னு நெனச்சேன். அவுங்க உதடு அசைவதை கண்ணால பாத்த பிறகுதான் எனக்கே அது புரிஞ்சிது. சட்டுனு படிக்கறத நிறுத்திட்டு பக்கத்துல போய் அவுங்க சொல்றத கேட்டேன். சாம் சாம்னு சொன்னாங்க. முதல்ல எனக்கு ஒன்னுமே புரியலை. ஒரு நிமிஷத்துக்குப் பிறகுதான் தன்னுடைய டைரியில பல இடங்கள்ல மை டியர் சாம்னு அவுங்க எழுதி வச்சிருந்தத நெனச்சிகிட்டேன். அது நாயக்கருக்கு அவுங்க வச்சிருந்த செல்லப் பேர்.”

கிட்டத்தட்ட ஆறுமாசம் தெனமும் ரோசம்மா வீட்டுக்கு போயிட்டிருந்தேன். ரெண்டு பேருடைய வாழ்க்கையும் என் கண்ணு முன்னால நடக்கறமாதிரி இருந்தது. அது என்னமோ ஒரு பெரிய வரலாற்றயே தெரிஞ்சிகிட்டமாதிரியான அனுபவம். ஒருநாள் வழக்கம்போல டைரி படிக்க அவுங்க வீட்டுக்கு போயிருந்தன். வீட்டுல யாருமே இல்ல. வாட்ச்மேன்தான் இருந்தாரு. பெரியம்மா பாத்ரூம்ல வழுக்கி உழுந்துட்டாங்க. தலையில அடி, ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்கன்னு சொன்னாரு. உடனே அங்க ஓடனேன். வெண்ணிலா மேடம்தான் நின்னுட்டிருந்தாங்க. வழக்கமா ராத்திரி நேரத்துல வரக்கூடிய நர்ஸ் தூங்கிட்டிருந்தா. அவளுக்கு எதுக்கு தொந்தரவு தரணும்ன்னு அம்மா தானாவே பாத்ரூம் போயிட்டாங்க. திரும்பி வரும்போது கதவுல இடிச்சி தடுமாறி விழுந்திட்டாங்க. தலயில இடுப்புல தோள்பட்டையில எல்லா இடத்துலயும் அடின்னு சொன்னாங்க. அவங்க புருஷன் செக்ரடேரியட்ல பெரிய பதவியில இருக்கறவர். அவரும் அங்கதான் உட்கார்ந்திருந்தார். அவர்தான் என்ன ஐசியுவுக்கு அழச்சிம் போயி ரோசம்மாவ காட்டனாரு. ஏகப்பட்ட குழாய்ங்களுக்கு நடுவில அவுங்க ஒரு ஈரத்துணி மாதிரி கெடந்தாங்க.”

ஆபத்தான கட்டத்த தாண்டிட்டாங்க. ஆனா சுயநினைவே வரலை. ரெண்டு மூனு வாரம் ஆஸ்பத்திரிலேதான் இருந்தாங்க. எப்ப வேணும்னாலும் வரலாம்னு சொல்லிட்டாங்க டாக்டர்ங்க. அதனால அந்த நிலைமையிலயே ரோசம்மாவ வீட்டுக்கு அழச்சிட்டு வந்துட்டாங்க. அவுங்க அறையையே ஐசியுவா மாத்தி கூடுதலா ரெண்டு நர்ஸ் போட்டு பாத்துகிட்டாங்க. அவுங்கள பாக்கவே பாவமா இருந்தது.”

மேடம், ஒரு டைரிய எடுக்கறீங்களான்னு ஒருநாள் வெண்ணிலா மேடத்துகிட்ட கேட்டன். எதுக்குன்னு மேடம் என்ன குழப்பத்தோடு பாத்தாங்க. மேடம், நம்மள பாக்கவோ, நம்மளோட பேசவோதான் அவுங்க நினைவு அனுமதிக்கலையே தவிர, அவுங்களுடைய நினைவு அப்படியே உயிர்ப்போடுதான் இருக்கும் மேடம். நாம படிக்கற சத்தம் அந்த நினைவை நேரிடையாவே போய் நிச்சயம் தொடும்னு சொன்னன். அவுங்க குழப்பமா பாத்தாங்க. எடுங்க மேடம்னு அழுத்தி சொன்னதும் எடுத்து குடுத்தாங்க. நான் ஒரு பக்கத்த திருப்பி படிக்க ஆரம்பிச்சேன். அந்த மேடமும் சரி, அங்க இருந்த நர்ஸ்ங்களும் சரி, என்னை ஏதோ பைத்தியக்காரன பாக்கறமாதிரி விசித்திரமா பாத்தாங்க. ஆனா நான் அதை ஆத்மார்த்தமா செஞ்சேன். சாயங்காலமா வந்த டாக்டர் மட்டும் இதுவும் ஒரு ட்ரீட்மென்ட்மாதிரி இருக்கட்டும், பலன் கெடச்சா நல்லதுதானேன்னு சொல்லிட்டு போனார். அப்பறம்தான் அவுங்க அமைதியானாங்க.”

நான் மறுபடியும் டைரிகளை படிக்க ஆரம்பிச்சேன். முத்துசாமியையும் ரோசம்மாவையும் நெருக்கமா புரிஞ்சிக்கணும்ங்கறதுக்காக நான் ரோசம்மாவின் முதல் டைரியிலிருந்து தொடங்கினேன். என்னைக்காவது ஒருநாள் கண்ண தெறந்து கல்யாணராமான்னு கூப்புடுவாங்கன்னு நிச்சயமா எனக்கு நம்பிக்கை இருந்தது. ஒரு நாளைக்கு ரெண்டு டைரிய படிச்சேன். சில சமயத்துல மூனு கூட படிச்சிருக்கேன். மூனு மாசத்துல ரெண்டு பேருடைய மொத்த வாழ்க்கைய பத்தியும் எனக்கு ஒரு பிடி கெடைச்சிது.”

துரதிருஷ்டவசமா ரோசம்மா கண்ண தெறக்காமயே செத்துட்டாங்க. ஒருநாள் வழக்கம்போல படிக்க போன சமயத்துல அவுங்க வீட்டு முன்னால ஏகப்பட்ட கூட்டம் நின்னுட்டிருந்தது. அத பாத்து திகைச்சி நின்னுட்டன். உயிரில்லாத ரோசம்மா முன்னால நிக்கும்போது என்னால அழுகய கட்டுப்படுத்தவே முடியலை. அஞ்சலி செலுத்தறதுக்கு ஆயிரக்கணக்குல ஆளுங்க வந்து போனாங்க. நாலஞ்சி பாதிரியார்கள் வந்தாங்க. ரோசம்மாவ பெட்டிக்குள்ள வச்சி ப்ரேயர் செஞ்சாங்க. திடீர்னு வெண்ணிலா மேடம் என்னை பாத்து சைகை காட்டி கிட்ட வான்னு சொன்னாங்க. ஓடி போயி நின்னதும் மறந்தே போச்சு, போய் அந்த டைரிங்க எல்லாத்தயும் எடுத்துட்டு வான்னு சொன்னாங்க. மெதுவா எதுக்கு மேடம்னு கேட்டன். அந்த நினைவுகள் அவுங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவைன்னு உனக்கே தெரியும், அந்த நினைவுகளோடயே அவுங்க போறது நல்லதுதானேன்னு சொன்னாங்க. அதக் கேட்ட்துமே எனக்கு ஒடம்புல அனல்பட்டமாதிரி இருந்தது. எல்லா சடங்குகளும் அடங்குனதும் டைரிங்கள கேட்டு எடுத்துக்கலாம்னு நான் நெனச்சிட்டிருந்தேன். இப்ப வேற வழியே இல்ல. நெஞ்சு கனக்க எல்லா டைரிகளையும் எடுத்து வந்து ரோசம்மாவ வச்சிருந்த பெட்டிக்குள்ள வச்சேன். அன்னைக்கு சாய்ங்காலமே கல்லறையில புதைச்சிட்டாங்க.”

அடுத்த ரெண்டு வருஷத்துல எங்க குடும்பத்துல என்னென்னமோ நடந்துட்டுது. என் தங்கச்சி அவ கூட ஸ்கூல்ல வேலை செய்யற ஒரு கிறிஸ்துவ பையன கல்யாணம் பண்ணிகிட்டு போயிடுச்சி. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். பேரலலைஸ் அட்டாக். ரெண்டும் ஒரே சமயத்துல. எங்களால போய் பார்க்கக்கூட முடியலை. அந்த வீட்டுல யாருமே எங்கள சேக்கலை. ஒரு வருஷம் இழுக்க பறிக்க கெடந்து போய் சேர்ந்துட்டாரு. அம்மாவுக்கு ஏற்கனவே சக்கர இருந்தது. மாத்திரை சாப்ட்டுட்டுதான் இருந்தாங்க. ஆனா ஒருநாள் பெரிசா கால் வீங்கிட்டுது. ஆஸ்பத்திரில எடுக்கணும்னுட்டாங்க. அதெல்லாம் ஒன்னும் வேணாம், என்ன வீட்டுக்கு கூப்ட்டிட்டு போன்னு அம்மா புடிவாதம் புடிச்சாங்க. நான்தான் அவுங்கள கவனிச்சிகிட்டேன். நம்மள பெத்தவங்களுக்கு நாம செய்றம்னு நான் நெனச்சேன். ஆனா அவுங்களால அத ஏத்துக்க முடியலை. நான் இல்லாத நேரத்துல ஒருநாள் தூக்கு போட்டுகினு செத்துட்டாங்க. திடீர்னு உலகத்துல எல்லாருமே என்ன தனியா உட்டுட்டு போயிட்டமாதிரி இருந்தது. அப்ப எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம். டெலிபோன்ஸ்ல வேல கெடச்சதுதான்.”

அப்பறம் ஒரு ஆறேழு வருஷம் ஒன்னுமே செய்யலை. திடீர்னு ஒருநாள் ரோசம்மாவயும் நாயக்கரயும் நெனச்சிகிட்டேன். அந்த நூறு டைரிக் குறிப்புகளும் எனக்கு ஞாபகத்துலயே இருந்தது. ஒரு வேகத்துல எல்லாத்தயும் ராப்பகலா எழுதனன். அப்பறமா படிச்சி பாத்து நாயக்கர் சரித்திரம், ரோசம்மா சரித்திரம்னு தனியா பிரிச்சி தொகுத்து எழுதனன். எதுவும் சரியா வரலை. அப்படியே எடுத்து பரண்ல வச்சிட்டேன். ஒருநாள் டிவில ஏதோ ஒரு படம் பாத்துட்டிருந்தேன். ஒரு பொண்ணுக்கு கல்யாணமாகி குழந்தை பெத்துக்கறத புரியவைக்கற மாதிரி ஊட்டு வாசல்ல ஒரு மாமரத்த மொதல்ல காட்டனாங்க. அடுத்ததாக மரம் முழுக்க பூநிறைந்த காட்சி. அதற்கடுத்ததாக காய்கள் குலுங்கும் காட்சி. தொடர்ந்து பழங்களெல்லாம் பழுத்து தொங்கும் காட்சி. பாத்துட்டிருக்கும்போதே எனக்குள்ள ஏதோ மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்தது. நாயக்கர் சரித்திரத்துல நான் செய்யவேண்டியது என்னனனு எனக்கு ஒரு தெளிவு கெடைச்சிது. பூ, காய், கனி. அந்த சொற்கள் மனசில ஓடிட்டே இருந்தது. உடனே எழுந்து வீட்டுக்கு வந்துட்டேன். பரண்ல போட்டிருந்த கையெழுத்துப் பிரதிய எடுத்து மறுபடியும் படிச்சேன். ரெண்டு மூனு வாரம் படிச்சி ரெண்டு பேருடைய லட்சியவாதமும் ஓங்கியிருந்த காலகட்டம் வரைக்கும் ஒரு பகுதி, அவுங்க காதல் கல்யாண வாழ்க்கைன்னு ஒரு பகுதி, அவுங்க முதுமை கடைசி பகுதின்னு பிரிச்செடுத்தேன். அவுங்க வாழ்க்கைய சரியா பிரிச்சிட்ட மாதிரிதான் இருந்தது. ஆனாலும் திருப்தி இல்லை. மறுபடியும் சோர்ந்துபோய் அப்படியே மேசைமேல போட்டுட்டேன்.”

நாப்பது வயசுலதான் நான் பரமேஸ்வரிய கல்யாணம் செஞ்சிகிட்டேன். என் கூடவே டெலிபோன்ஸ்ல வேல செய்றவங்க. ஒருநாள் நான் இல்லாத நேரத்துல இந்த கையெழுத்துப் பிரதிகளை படிச்சிட்டு என்னங்க இது, நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களான்னு கேட்டாங்க. நான் இல்லையேன்னு சொன்னேன். அப்ப இது என்னன்னு கையெழுத்திப் பிரதிய காட்டி கேட்டாங்க. நான் நடந்ததயெல்லாம் அவுங்ககிட்ட சொன்னேன். அவுங்க வரலாறு முழுசா தெரியாம அவுங்களபத்தி நீங்க எப்படி எழுதமுடியும்னு கேட்டாங்க. அதனால்தான் பாதியில நிறுத்திட்டேன்னு சொன்னன். வரலாறாதான் நீங்க எழுதமுடியாதே தவிர, நாவலா நீங்க எழுதலாம்னு அவுங்க சொன்னாங்க. தெரிஞ்ச வரலாறுங்கறது ஒரு உண்மை. ஆண்டனாவ திருப்பி சேட்டிலைட் பக்கமா வைக்கறமாதிரி அந்த உண்மையை அதைவிட பெரிய உண்மையை நோக்கி இழுத்துட்டு போனா போதும். உங்க கற்பனையாலதான் அது முடியும்னு சொன்னாங்க. எவ்ளோ பெரிய விஷயத்த ரொம்ப அசால்ட்டா சொன்னமாதிரி இருந்தது.”

எல்லாத்தயும் எடுத்து வீசிட்டு மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். அந்த மாதிரி நாலு முறை எடுத்து வீசியிருக்கேன். அஞ்சாவதா தொடங்கி எழுதி முடிச்சதுதான் கன்னி நிலம், வசந்தத்தைத் தேடி, கூடடையும் பறவைகள் நாவல்கள். இத தனித்தனியாவும் படிக்கலாம். சேத்தும் படிக்கலாம். வாசகர்கள் எப்படியோ அதுக்கு ரோசம்மா ட்ரையாலஜின்னு பேர் குடுத்துட்டாங்க. சொல்லிசொல்லி அந்த பேரே இப்ப நெலச்சிபோச்சி.”

நாங்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தோம். வார்த்தைகளே வரவில்லை. பல நிமிடங்கள் கல்யாணராமனை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென எதையோ பேச நினைத்தவனாக நான் “இந்த அளவுக்கு சிறந்த நாவல்களா வரும்ன்னு நீங்க இத எழுதற காலத்துல நெனச்சிங்களா சார்?” என்று கேட்டேன். கல்யாணராமன் சிரித்துக்கொண்டே “சிறப்பா எழுதணும்னு மட்டும்தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதனாலதான் பல தரம் திருப்பித்திருப்பி எழுதனேன். ஒங்கள மாதிரியான வாசகர்கள் அந்த நாவல்களைக் கொண்டாடறத பார்க்கற சமயத்துலயும் புதுப்புது கோணங்கள்ல பேசறத கேக்கற சமயத்துலயும் மகிழ்ச்சியாதான் இருக்குது. என் முயற்சி எதுவும் வீண் போகலைங்கற திருப்தி இருக்குது. இந்த மூனு நாவல்களுக்குப் பிறகு கழுகுகள், ஊற்றுக்கண்கள், நீலவானம் மூனு நாவல்களை எழுதிட்டேன். இருந்தாலும் இன்னும் கூட ரோசம்மா ட்ரையலாஜிக்கு கெடைச்ச வரவேற்பு கொறயலை” என்று சொன்னார்.

அண்ணாமலை “நாவல்னா இப்படித்தான் இருக்கணும்னு ஒரு இலக்கணமே இதனால உருவாய்டுச்சி சார்” என்று ஒரு வேகத்தில் சொன்னான்.

அப்பா, புதுசா இன்னொரு கோபுரம் அடுக்கி முடிச்சிட்டேன். வந்து பாருங்க” என்றபடி எழுந்து நின்று கைதட்டி ஆடினாள் அகிலா. நாங்களும் கல்யாணராமனும் மரத்தடியிலிருந்து எழுந்து சென்று கோபுரத்தைப் பார்க்கும்போது சமையல்கட்டிலிருந்து கல்யாணராமனின் மனைவியும் வந்துவிட்டார். ஜன்னலோரத்தில் வைத்திருந்த கைபேசியை எடுத்து அந்த வத்திக்குச்சி கோபுரத்தைப் படம்பிடிக்க நல்லதொரு கோணத்துக்காக அங்குமிங்குமாக நகர்ந்தார் கல்யாணராமன்.

அபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் ‘நான் கண்ட மாமனிதர்கள்’ நூல் குறித்து பாவண்ணன்

1959இல் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பொருளாதாரத்துறையில் பட்டப்படிப்பை முடித்தார் ஓர் இளைஞர். போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு வேலைக்கு எளிதாகச் செல்லும் தகுதி அவருக்கு இருந்தது. ஆனால் அவருக்கு அரசு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அவருக்குள் ஊறியிருந்த எழுத்தார்வம் அவரைத் தடுத்தது. தன் மனத்துக்குப் பிடித்த எழுத்தாளரும் பேராசிரியருமான மு.வரதராசனாரை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்டார். வாழ்க்கையை நடத்த ஒரு வேலையை உறுதிப்படுத்திக்கொண்டு எழுதலாமே தவிர, எழுத்துத்துறையிலேயே வாழ்வது சரியல்ல என்று ஆலோசனை வழங்கினார் அவர். அப்போதும் அந்த இளைஞர் அரசு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து கல்லுப்பட்டி காந்திநிகேதனில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பெயர் மா.பா.குருசாமி.

கல்லுப்பட்டியில் தங்கியிருந்த ஜே.சி.குமரப்பாவின் தொடர்பு அவருடைய பொருளாதாரம் பற்றிய கருத்துகளை மெருகேற்றிக்கொள்ள உதவியது. அவர் எழுதிய பணம், வங்கி, பன்னாட்டு வாணிபம், பொதுநிதி இயல்கள் ஒரு முக்கியமான புத்தகம். கல்லுப்பட்டி ஆசிரமத்திலிருந்து அவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியச் சென்றார். மதுரைப்பல்கலைக்கழகம் காந்தியக்கல்வி என்னும் துறையைத் தொடங்கியபோது, அதில் பணியாற்றுவதற்காக மு.வ.வின் அழைப்பின் பேரில் சென்றார். அங்கிருந்தபடியே வள்ளலார் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று திருச்செந்தூர் கல்லூரிக்கே பேராசிரியராகத் திரும்பி வந்தார். அங்கேயே முதல்வராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். பணிக்காலத்திலும் அதற்குப் பிறகான ஓய்வுக்காலத்திலும் காந்தியம் சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதினார். காந்தியடிகளும் கார்ல்மார்க்சும் அவருடைய சிறந்த ஆய்வுநூல்.

நான் கண்ட மாமனிதர்கள் மா.பா.குருசாமியின் நூல்களில் மற்றொரு முக்கியமான நூல். அவருடைய நினைவலைகள் வழியாக விரிந்தெழும் பதினாறு ஆளுமைகளைப்பற்றிய சித்திரங்கள் இந்த நூலில் உள்ளன. காந்தியத்தில் தோய்ந்த ரா.குருசாமி, க.அருணாசலம், கோ.வேங்கடாசலபதி, ஜெகந்நாதன், வீ.செல்வராஜ், க.ரா.கந்தசாமி, ஜீவா, லியோ பிரவோ போன்றவர்களும் இப்பட்டியலில் அடக்கம். அவர்கள் தனக்கு அறிமுகமான விதத்தைப்பற்றிய சித்தரிப்போடு தொடங்கும் ஒவ்வொரு கட்டுரையும் அந்த ஆளுமைகள் செயல்பட்ட விதங்களையும் அவர்கள் ஆற்றிய சேவைகளையும் கோர்வையாகப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. இவர்களுடை வாழ்க்கை வரலாறுகள் தனிநூலாகவே எழுதப்பட வேண்டியவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டியவை. இவர்கள் வழியாகவே இலட்சியவாதம் அடுத்த தலைமுறைத் தொட்டு வளரவேண்டும்.

லியோ பிரவோ அபூர்வமான ஒரு ஆளுமை. பெல்ஜியத்தில் பிறந்து இந்தியாவுக்கு வந்து முப்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி மறைந்தவர். இங்கு வாழ்கிறவர்களே தமக்கு அருகில் வாழ்கிற சகமனிதர்களைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஒதுங்கி வாழ்கிற சூழலில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கு அவர்களைச் செல்லத் தூண்டிய விசைக்கு இலட்சியவாதம் என்னும் பெயரை அன்றி வேறெந்த பெயரைச் சூட்டமுடியும்? மா.பா.குருசாமி பிரவோ பற்றி எழுதியிருக்கும் நினைவலைகள் இந்த நூலின் மிகமுக்கியமான பகுதி.

லியோ பிரவோ பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால், அவருடைய கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய ஜோசப் ழீன் லான்சா டெல் வாஸ்டோவைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் இத்தாலியில் தத்துவ இயல் படித்தவர். கவிஞர். காந்தியடிகளைப்பற்றி ரோமன் ரோலண்ட் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு காந்தியடிகளைச் சந்திப்பதற்காக 1936இல் இந்தியாவுக்கு வந்தார். ஏறத்தாழ ஆறுமாத காலம் காந்தியடிகளோடு தங்கி, அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று, அவருடைய செயல்பாடுகளைக் கவனித்தார். காந்தியடிகள் அவருக்கு சாந்திதாஸ் என்று பெயரிட்டார். அகிம்சைப் போராட்ட வழிமுறைகளைப்பற்றி தனக்கெழுந்த ஐயங்களையெல்லாம் காந்தியடிகளுடன் உரையாடித் தெளிவு பெற்றுக்கொண்டு இத்தாலிக்கு திரும்பிச் சென்றார் சாந்திதாஸ். தன் இந்திய அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.

காந்திய வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த சாந்திதாஸ் ஆர்க் சமுதாயம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். அவர் நினைத்த அளவுக்கு அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எல்லாக் குறுக்கீடுகளையும் கடந்து ஒத்த சிந்தனையுடையவர்களைத் திரட்டி அந்தக் குழுவை அவர் ஏற்படுத்தி அகிம்சைப்போராட்ட வழிமுறையைப்பற்றிய நம்பிக்கையை மக்களிடையே விதைத்தார். 1954இல் மீண்டும் இந்தியாவுக்கு வந்து வினோபாவுடன் பூமிதான யாத்திரையில் கலந்துகொண்டார். 1957இல் அல்ஜீரியப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஆர்க் சமுதாயத்தின் சார்பில் மக்களுடன் இணைந்து கொடுமைக்கெதிரான அமைதிப்போராட்டத்தை முன்னெடுத்தார். காந்தியடிகளின் வழியில் பிரான்சு அரசு நிறுவ திட்டமிட்டிருந்த அணு உலைகளுக்கு எதிராக, கண்டனத்தைத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களிடையில் விழிப்புணர்ச்சியை உருவாக்கும் விதமாகவும் 21 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். போப் ஆண்டவர் போருக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருமுறை ரோம் நகரில் 40 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார்.

ஆர்க் சமுதாயத்தின் கிளைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. பெல்ஜியத்தில் அக்குழுவுடன் இணைந்த லியோ பிரவோ மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த தொண்டர் என்னும் பெயரைப் பெற்றார். அவருடைய தொண்டுணர்வைப் புரிந்துகொண்ட சாந்திதாஸ், அவரை இந்தியாவுக்குச் சென்று தொண்டாற்றும்படி கேட்டுக்கொண்டார். அவர் உடனே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். வார்தாவில் சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு கல்லுப்பட்டியில் உள்ள காந்திநிகேதனுக்கு வந்தார். ஓராண்டுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து காந்திய வழிகள் பற்றியும் ஆசிரம வாழ்க்கையைப்பற்றியும் கிராமப்பணிகள் பற்றியும் தெரிந்துகொண்டார். எல்லோரும் இன்புற்று ஒற்றுமையாக வாழ்கிற சர்வோதய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்னும் விருப்பம் அவருக்குள் எழுந்தது.

பூமிதான இயக்கத்துக்காக கடவூர் ஜமீன்தார் தன்னிடம் இருந்த 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருந்த நேரம் அது. அந்த இடத்தின் பெயர் சேவாப்பூர். அங்கு தங்கி ஏழை மக்களுக்கு உதவும்படி பிரபோவிடம் கேட்டுக்கொண்டார் கெய்த்தான். கல்லுப்பட்டி காந்தி நிகேதனிலிருந்து சேவாப்பூருக்கு வந்து சேர்ந்தார் பிரவோ. இன்ப சேவா சங்கம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் வழியாக சேவாப்பூரில் ஒரு சமத்துவபுரத்தைக் கட்டியெழுப்பினார் பிரவோ. சேவாப்பூரைப்போலவே அவர் அமைத்த மற்றொரு புதிய கிராமம் வினோபாஜிபுரம். இதற்கு வேண்டிய நிதியின் ஒரு பகுதியை அரசு வழங்கினாலும் பெல்ஜியத்தில் வசிக்கும் நண்பர்கள் வழியாகவும் தன் சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தின் வழியாகவும் பெரும்பகுதியான தொகையைத் திரட்டினார். ஏறத்தாழ முப்பதாண்டுக்காலம் ஏழை மக்களின் உயர்வுக்காக அந்தப் பகுதியிலேயே சேவையாற்றி மறைந்தார் பிரவோ.

காந்தியமே மக்கள் சேவைக்கான அடிப்படை விசை. க.அருணாசலம், கோ.வே., ரா.குருசாமி, ஜீவா போன்றோரைப்பற்றி எழுதியிருக்கும் நினைவலைகளிலும் இந்தப் புள்ளியை வெவ்வேறு கோணங்களில் தொட்டுக் காட்டுகிறார் மா.பா.குருசாமி. அவர் நினைவலைகள் வழியாக திரண்டெழும் ஜீவாவைப்பற்றிய சித்திரம் உயிர்த்தன்மையோடு காணப்படுகிறது.

ஜீவாவைச் சந்திக்கச் செல்லும்போது அவர் கல்லூரி மாணவர். சந்திரபோஸ் மணி என்பவர் அவருடைய கல்லூரி நண்பர். அவருடைய சித்தப்பா பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணி. ஒருநாள் தன் சித்தப்பாவைச் சந்திக்க மணி செல்கிறார். அப்போது அவருக்குத் துணையாக குருசாமியும் செல்கிறார். இருவரும் கட்சி அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். உள்ளே கட்சியின் உட்குழுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் வெளியே அமரவைக்கப்படுகிறார்கள். தற்செயலாக அந்த அலுவலக வளாகத்திலேயே ஜனசக்தி இதழின் அலுவலகமும் இருப்பதைப் பார்க்கிறார் குருசாமி. அதைப் பார்த்ததுமே அந்த இதழின் ஆசிரியர் ஜீவாவின் நினைவு அவருக்கு வருகிறது. உடனே ஜீவாவை இருவரும் பார்க்கச் செல்கிறார்கள். அறைக்கு வெளியே இருந்த தோழரிடம் தம் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். அவர் உள்ளே சென்று பார்க்கும்படி சொல்கிறார். உள்ளே யாருமில்லை. அந்தப் பக்கமாக வந்த ஒருவர் அவர் அச்சுக்கோர்க்கும் பகுதியில் இருப்பதாகவும் விரைவில் வருவார் என்றும் தெரிவித்துவிட்டுச் செல்கிறார். சிறிது நேரத்தில் அவரே வந்துவிடுகிறார். அற்புதமான ஓர் ஆளுமையான ஜீவாவின் அறிமுகம் அப்படித்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஒருமுறை கல்லூரி திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச ஜீவாவை அழைக்கிறார் குருசாமி. மகாகவி கண்ட கனவு என்னும் தலைப்பில் கையில் எந்தக் குறிப்புமின்றி அழகாக சொற்பொழிவாற்றுகிறார் ஜீவா. மற்றொரு முறை கம்பரைப்பற்றிப் பேச அழைக்கிறார். அப்போது அண்ணாவின் ‘கம்பரசம்’ வெளியாகி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேச்சுகள் எழுந்த நேரம். அரசியல் கலக்காமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறார் துறைத்தலைவர். கம்பன் பாடல்களின் பொதிந்திருக்கும் கவிநயத்தையும் கற்பனை வளத்தையும் சுட்டிக்காட்டி தன் உரையை முடித்துக்கொள்கிறார் ஜீவா.

மா.பா.குருசாமியின் காலத்தில் நல்ல எழுத்தாளராகவும் இலக்கியப் பேச்சாளராகவும் விளங்கியவர் ம.ரா.போ.குருசாமி. அவர் மு.வ.வின் நேரடி மாணவர். கோவையில் பணிபுரிந்து வந்தார். இருவருமே தமிழ்நாடு என்னும் இதழில் எழுதி வந்தனர். ஒருமுறை திருநெல்வேலி தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ம.ரா.போ.குருசாமியை தம் கல்லூரிக் கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களிடம் தொடர்பு முகவரி இல்லை. அதனால் அவர்கள் தமிழ்நாடு இதழுக்கு எழுதிக் கேட்டார்கள். அவர்களும் அனுப்பிவைத்தார்கள். ஆனால் அது மா.பா.குருசாமியின் முகவரி. அது தெரியாமல் அவரை கூட்டத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, அவருடைய வயதைப் பார்த்த பிறகே அவர்களுக்கு உண்மை புரிகிறது. உடனே அவருடைய தலைமையில் பேசமாட்டோம் என ஆசிரியர்கள் மறுக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கவிருக்கும் நேரத்தில் இது என்ன புதுக்குழப்பம் என்று நினைக்கிறார் மா.பா.குருசாமி. தக்க சமயத்தில் இடையில் புகுந்த துறைத்தலைவர் இவர்தான் தலைமை தாங்குவார், போய் அமருங்கள் என்று ஆணித்தரமாக தெரிவித்துவிடுகிறார். அன்றைய தலைமை உரையை மிகச்சிறப்பாக நிகழ்த்துகிறார் மா.பா.குருசாமி. அன்று அவரை சங்கடத்திலிருந்து மீட்ட துறைத்தலைவர் பேராசிரியர் நா.வானமாமலை. இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்குகிறது அவரைப்பற்றிய கட்டுரை.

இன்று வீட்டிலிருந்து தெருவில் இறங்கினால் ஒவ்வொரு நாளும் நடைபாதையில், பேருந்துகளில், புகைவண்டிகளில், சந்தைகளில், அரங்குகளில், பொழுதுபோக்கும் இடங்களில் என எண்ணற்ற இடங்களில் ஏராளமானவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களில் எத்தனை பேரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கிறோம், எத்தனை பேரிடம் உரையாடுகிறோம், எத்தனை பேரிடம் நட்புடன் இருக்கிறோம் என கணக்கிட்டுப் பார்த்தால் நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சூழலில் நட்பைத் தேடிச் செல்வதும் தொடர்வதும் ஒவ்வொரு நட்பும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதும் அபூர்வமான செய்திகள். அபூர்வமான மனிதர்களுக்கே அத்தகு அபூர்வமான வாய்ப்புகள் அமைகின்றன. மா.பா.குருசாமி அபூர்வமான மனிதர்களில் ஒருவர். தான் சந்தித்த மாமனிதர்களை தம் சொற்சித்திரங்கள் வழியாக நம்மையும் சந்திக்கவைக்கிறார்.

(நான் கண்ட மாமனிதர்கள். மா.பா.குருசாமி. சர்வோதய இலக்கியப்பண்ணை, மதுரை. விலை.ரூ70)